23/07/2011

நாட்டுப்புறப் பாடல்களில் பெண்கள் - முனைவர் கோ. சரோஜா

நாட்டுப்புறப்பாடல்கள் எளிய, இனிமையான நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களைக் கொண்டவை. மக்கள் அனுபவித்து மீண்டும், மீண்டும் பாடுவதால் இவற்றில் மனித வாழ்க்கையின் பண்புகளையும் மரபுகளையும் காண முடிகிறது.

 

நாட்டுப்புறக் கதைகள் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக அமைப்பில் உள்ள நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளையே பெரும்பாலும் கொண்டுள்ளன. அவற்றுள் சில பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், கூட்டுக்குடும்பம் பேணல் போன்ற நிலவுடைமை மதிப்பீடுகளைத் தூக்கி நிறுத்துவதும், வீரம், காதல் போன்ற நிலைகளில் வெளிப்படும் ஆணின் சாகச் செயல்களை வெளிப்படுத்துவதும் ஆகும் என்பார் திரு. கேசவன் நாட்டுப்புறப்பாடல்களில் பிறப்பு முதல் இறப்பு வரை பெண்களின் நிலை பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

 

தாலாட்டுப் பாடல்கள்:-

 

தாலாட்டுப் பாடல்கள் தாய்க்குலம் வளர்த்த தமிழ் இலக்கியமாகும். பெண்ணுக்கே உரிய தாய்மை உணர்ச்சியின் ஆழம், குழந்தை பற்றிய வருங்காலக் கற்பனை, உயர்ந்த சிந்தனை ஆகியவற்றைத் தாலாட்டுப் பாடல்கள் வெளிப்படுத்தும்.

 

''வைகையாம் பொய்கை - நீ பிறந்த

மதுரையாம் வானெறியாம்

வானெறியும் தேடி

வழிதேடி நிற்கையிலே

தானறிய நாணுமென்று

தவம் பெற்று வந்தாளோ''

 

என்ற பெண் குழந்தை பற்றிய தாலாட்டுப் பாடலும் உண்டு.

 

விளையாட்டுப் பாடல்கள்:-

 

பெண்கள் விளையாட்டுகளாக அஞ்சாங்கல் ஆடுதல், கழற்சி ஆடுதல் ஆகியன சிறப்பாகக் கூறப்படுகின்றன. பெண் குழந்தை கைகொட்டி விளையாடுவதைக் கண்டு தாய் மகிழ்வாள்.

 

''ஓரி உலகெல்லாம் உலகெல்லாம் தண்ணியிலே

தண்ணிக் கரையிலே தவந்த மணலிலே

முல்லைக் கொடியிலே பிள்ளைக் கழுகிறாள்''

 

என கழற்சி விளையாட்டு, நாட்டுப்புறப் பாடலாகிறது.

 

தொழில்பாடல்கள்:-

 

உழவுத்தொழிலில் உழுதல், நாற்று நடுதல், நீர்ப்பாய்ச்சுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல், கதிர் சுமத்தல், கதிரறுத்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் பொழுது பெண்கள் பாடுகின்றனர்.

 

''கண்ணாடி வளையல் போட்டுக்

களையெடுக்க வந்த புள்ளே

கண்ணாடி மின்னலிலே

களையெடுப்புப் பிந்துதடி''

 

என்ற பாடல் பெண்களால் பாடப்படுகிறது. சாந்து இடித்தல், உப்பு எடுத்தல், தேயிலை பறித்தல், போன்ற தொழில்களைச் செய்யும் பொழுது, பெண்கள் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள்.

 

காதல் பாடல்கள்:-

 

கூடல், ஏங்கல், ஊடல், இரங்கல், பிரிதல் ஆகிய பாடல்களோடு கைக்கிளை, பெருந்திணைப் பாடல்களிலும் பெண்கள் பேசப்படுகின்றனர்.

 

''மஞ்சளறைச்சுக் குளிக்கையிலே

மதிலேறிப் பார்த்த மச்சான்!

கண்ணைக் கொடுத்தாயே!

கணக்கறிஞ்சு சிரிச்சாயே!

பாடிக் கெடுக்காதே! - ஏ மச்சான்

வாடியே போயிடுவேன்''

 

என்ற பாடல் மூலம் பெண்ணின் மெல்லிய மன உணர்வினைக் காணமுடிகின்றது.

 

''ஈக்கு முத்தி இடை சிறுத்து

ஏழு வருசம் குமரியிருந்தேன்

பாக்கு முத்திப் பருவம் தப்பிச்சிறு

பாலனுக்கோ கைகொடுத்தேன்''

 

என்ற பாடல் பொருந்தாமணத்தை வெளிக்காட்டுக்கிறது.

 

திருமணப்பாடல்கள்:-

 

திருமணத்தில் சடங்குப் பாடல்களும், கேலிப்பாடல்களும் பாடப்படும். மணப்பெண் கிண்டல், மணப்பெண் அழகு, சீதனச்சிறப்பு, ஆகியன பாடல்களாகப் பாடப்படும். வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் சீதனமாகத் தரப்பட்டதை

 

''சீலை அறுபதென்பாள்

சிற்றாடை முப்பதென்பாள்

சீலை குறைச்சலென்று

சிணுங்குறாளாம் ஒலையக்கா''

 

என்ற பாடல் பெண்களே பிறந்த வீட்டிலிருந்து பொருட்கள் பெற்றுக் கொண்டதைத் தெரிவிக்கிறது.

 

சடங்குப் பாடல்கள்:-

 

கன்னிப்பெண்கள் கன்னிமார் பூசையும், பூ நோன்பும் கொண்டாடும் பொழுது பாடல்கள் பாடுவது மரபு. விளக்கு ஏற்றும் பொழுதும், குறிகேட்கும் பொழுதும், மழை வேண்டும் பொழுதும் பெண்கள் பாடல்கள் பாடுகின்ற பழக்கம் இருந்திருக்கிறது. திருமணநலுங்கின் பொழுது பெண்கள் பிறரைக் கேலி செய்து பாடுவர்.

 

''கோவைப் பழம் போல

எங்கள் பெண்ணழகு - இந்தக்

கோண மூஞ்சி மாப்பிள்ளைக்கு

நலங்கிட வாரும்''

 

என்ற பாடல் பெண்களின் நகைச்சுவை உணர்விற்குச் சான்றாகிறது.

 

தெய்வப்பாடல்கள்:-

 

மாரியம்மன், பகவதி, உலகம்மன், கண்ணாத்தா, இசக்கி அம்மாள் ஆகிய பெண் தெய்வங்கள் நாட்டுப்புறப் பாடல்களில் கூறப்பட்டுள்ளன. கோடையிலிருந்தும் அம்மை நோயிலிருந்தும் பாதுகாப்பதற்காக மாரியம்மனை வேண்டி நேர்த்திக் கடன் செய்துள்ளனர். பிற ஆண் தெய்வங்களைப் போன்று மாரியம்மன் வழிபாடும் அதிக மக்களால் பின்பற்றப்பட்டிருக்கிறது.

 

ஒப்பாரிப் பாடல்கள்:-

 

ஒப்பாரிப் பாடல்களைப் பெரும்பாலும் பெண்களே பாடுவர். கணவனை இழந்த பெண், மகனை இழந்த தாய் ஆகியோர் புலம்பிப் பாடுகின்றனர். இளம் விதவை கைம்மைக் கோலத்துடன் அனுபவிக்கும் கொடுமைகளை நெஞ்சை உருக்கும் விதத்தில் பல பாடல்கள் கூறுகின்றன.

 

''தாலிக்கு அரும்பெடுத்த தட்டானும் கண்குருடோ?

சேலைக்கு நூலெடுத்த சேணியனும் கண் குருடோ?

பஞ்சாங்கம் பார்க்க வந்த பார்ப்பானும் கண் குருடோ?

எழுதினவன் தான் குருடோ எழுத்தாணி கூர் இல்லையோ''

 

என்ற பாடல் விதவை அனுபவித்த கொடுமையோடு, விதி பற்றிய நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

 

கதைப்பாடல்கள்:-

 

அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, நல்லதங்காள் கதை, கண்ணகி கதை, திரௌபதி கதை ஆகியன கதைப் பாடல்களாகப் பாடப்பட்டன. குணமாலை, சுகுணாங்கி, அணிமாலை, கருங்குழலி போன்ற அரசியர் பாத்திரங்களும் வத்சலை, பொன்னி, பசுங்களி ஆகிய குடிமக்கள் பாத்திரங்களும் கதைப்பாடல்களில் வந்துள்ளன. அகலிகை, மேனகை, திரௌபதி, சத்தியவதி, தாரை ஆகிய இலக்கியப் பாத்திரங்களையும் நாட்டுப்புறப் பாடல்களில் காணலாம்.

 

சமயம் சார்ந்த புராணக்கதைகள் தவிர சமயம் சாராத புராணக் கதைகளாகிய தாய் குழந்தையை இழந்தது, ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி, கொல்லிப் பாவை, அன்னி மிஞ’லி ஆகிய கதைப்பாடல்களும் பெண்களைப் பற்றியதாக அமைந்துள்ளன.

 

ஆட்டமும், கலைகளும்:-

 

பொழுதுபோக்கிற்காகவும், இறை தொடர்பான விழாக்களிலும், சடங்குகளிலும், நாட்டுப்புற ஆட்டங்கள் நடைபெறும். அவற்றுள் கும்மியாட்டம், கோலாட்டம், காமட்டா ஆட்டம் ஆகியன பெண்கள் ஆடுகின்ற ஆட்டங்களாகும். பச்சைக் குத்துதல், பொம்மை செய்தல், கூடை, முறம் பின்னுதல் போன்ற நாட்டுப்புறக் கலைகளில் ஈடுபடும் பொழுது பெண்கள் பாடல்கள் பாடுகின்றனர்.

 

நம்பிக்கைகள்:-

 

திருமணச் சடங்குகளில் சுமங்கலிகள் மட்டுமே பங்கு கொள்ளலாம், மாதவிலக்கான பெண் பூ வைத்தல் கூடாது. பெண்கள் இரவில் அழக்கூடாது. பெண்கள் இரவில் மல்லாந்து படுக்கக்கூடாது போன்றவை பெண்கள் பற்றிய குறிப்பிடத்தகுந்த நம்பிக்கைகளாகும்.

 

ஒழுக்கம்:-

 

கணவனோடு வாழும் ஒரு பெண்ணின் கூடா ஒழுக்கத்தை

 

''கறுப்பு துணி அறிவாள்

கள்ளவழி தானறிவாள்

கணவன் சரியாய் இருந்தால்

கள்ளவழி நடப்பாளோ?''

 

என்று கண்டிக்கிறது. ஆடவனைப் பொடி போட்டு வசியம் செய்பவர்களாகவும், சில இடங்களில் சூனியக்காரிகளாகவும் கூறப்பட்டுள்ளனர். வைப்பாட்டி, வேசி ஆகிய இழி சொற்களும் வழக்கத்தில் இருந்திருக்கின்றன.

 

இயல்பு வாழ்க்கையை வெளிப்படுத்துகின்ற இலக்கியமென்பதால் பிறப்பு முதல் இறப்பு வரை அமைந்துள்ள, பெண்களின் பல்வேறு நிலைகளை நாட்டுப்புற பாடல்கள் விளக்குகின்றன. பெண்களின் உழைப்பும், குடும்பத்தோடு இணைந்த வாழ்க்கை முறையும் சிறந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: