04/06/2011

திருவிளையாடற் புராணத்தில் பழமொழிகள் - முனைவர் பா. சிவநேசன்

நாட்டுப்புறவியல், பல்வேறு கூறுகளை உள்ளடக்கித் திகழ்கின்றது. இதன் கூறுகளுள் பழமொழியும் ஒன்று. இம்மொழி நாட்டுப்புற மக்களின் அனுபவ முதிர்ச்சியில் வெளிப்பட்டது. ஆகவே ஆய்வாளர்கள் இதனை நாட்டுப்புறவியலின் இதயமாகக் கருதுகின்றனர். உணவிற்கு உப்பு போன்று, பேச்சிற்குப் பழமொழி அவசியம். இது பேச்சிலே மிகுதியாக ஆளப்பட்டு, எழுத்திலும் பதிவாயிற்று.

பழமொழியும் புராணமும்:-

பழமொழி போன்றே புராணமும் நாட்டுப்புறவியலின் ஒரு கூறு. பழமொழி - பழைமையான மொழி. புராணம் - பழைமையான வரலாறு. புராணங்கள் வரலாறுகளைக் குறிக்கையில், பழமொழிகளை இடையிடையே புகுத்தி விளக்கம் அளித்துள்ளன. இந்த இரண்டிற்கும் ஓரளவு இயைபிருக்கிறது. புராணங்களில் பழமொழிகள் மாற்றம் பெறாமை, சிறிய மாற்றம், பொருள் மட்டும் இடம் பெறும் என்ற நிலைகளில் அமைந்திருக்கின்றன.

முனிவர் மொழிந்தவை:-

பரஞ்சோதி முனிவர் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் திருவிளையாடற் புராணத்தை இயற்றினார். அதில் அவர், இறையருளோடு மக்களின் வாழ்வியலையும் பாடியுள்ளார். ஆகவே புராணத்தில் பழமொழிக்கு உரிய இடம் உண்டாயிற்று.

1. பழமொழி - விளக்கம்:-

பழமொழியைத் தொல்காப்பியம், ''குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம், ஏது நுதலிய முதுமொழி'' (1425) என்று குறிப்பிடுகிறது. அகநானூறு, தொன்றுபடு மொழி (101) என்கிறது. திருவிளையாடற் புராணம், மிக்கவர் எடுத்துக் கூறுவது பழமொழி (47.22), ''பலர் மொழிவது'' (44.43) என்று விளக்கம் தருகிறது. பெரியோர் கூறிய உயர்மொழிகள் வழக்கில் ஆளப்படும் பொழுது அது வழக்காறு எனப்படுகிறது. இப்புராணம் வழக்காறு என்ற சொல்லையும் குறித்துள்ளது.

2. வகைப்பாடு:-

பழமொழிகளை, சு. சக்திவேல், சு. சண்முகசுந்தரம் முதலிய ஆய்வாளர்கள் பொருள், வடிவம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு செய்துள்ளனர். அவ்வகையில் திருவிளையாடற் புராணத்தில் அமைந்துள்ள பழமொழிகளைப் பகுக்க முடிகிறது. பழமொழிகளை அவை தரும் பொருள் முடிவின் அடிப்படையில் ஆகும், உண்டு, இல்லை என்னும் மூன்றாக்கலாம். இவையன்றி உவமையாக விளங்கும் மொழிகளும், ஐயமாக அமையும் மொழிகளும் இந்நூலில் உள்ளன.

2.1 ஆகும்:-

புராணத்தில் ஆகும் என்னும் பொருள் முடிவு கொண்டதாக ஒரு பழமொழி உள்ளது. இந்திரன் சாபநீக்கம் வேண்டி, துருவாசரைத் துதிக்கிறான் அப்பொழுது அவர்,

''தலைமட் டாக வந்தது முடிமட்டு ஆக'' (2.18)

என்று அருளிச் செய்ததாகப் புராணம் குறிக்கிறது. ''தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று'' எனும் பழமொழி சிறிது மாற்றத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. ''தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்'' என்ற பழமொழியும் இதனோடு தொடர்புடையதாய் வழங்கி வருகிறது.

2.2 உண்டு:-

புராணத்தில் உண்டு என்னும் பொருள் முடிவு தரவல்ல பழமொழிகள் இரண்டு உள்ளன. ஈழ நாட்டுப் பாடினிக்கும், பாணபத்திரன் மனைவிக்கும் இசைப்போட்டி நடந்தது. சபையினர் முன்பு பாணன் மனைவியின் இசையைப் புகழ்ந்தனர். இராசராசபாண்டியன் ஈழநாட்டுப் பாடினியைப் பாராட்டியதாகக் கண்டதும் பின்பு பாடினியைப் பாராட்டினர். இச்செய்தியை விளக்குவதற்குப் பரஞ்சோதியார் ஒரு பழமொழியினை ஆண்டுள்ளார்.

''முன்னவன் அருளைப் பெற்று மும்மையும் துறந்தோரேனும்

மன்னவன் சொன்னவாறே சொல்வது வாக்காறன்றோ'' (44.18)

இது ''அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி'' என்னும் பழமொழியை உட்கொண்டிருக்கிறது.

கரிக்குருவிக்கு உபதேசித்த படலத்தில் நாட்டுப்புறப்பழமொழி ஒன்று பதிவாகியுள்ளது. அக்குருவி தன்னைப்போலவே, தன் இனமும் வலியனவாய் விளங்குவதற்கும் அருள் பெற்றது. இது புராண வரலாறு,

''தக்கன் ஒருவன் வாழத் தன்கிளை வாழ்வதென்ன

மிக்கவர் எடுத்துக்கூறும் பழமொழி விளக்கிற்றன்றே'' (22)

என்பது அப்பழமொழி அமைந்த பகுதி. இதில் வாழ்தல் உண்டு என்னும் முடிவு கிடைக்கிறது. ''தக்கவன் ஒருவன் வாழ அவன் கிளை வாழும்'' என்னும் பழமொழி அப்படியே வந்துள்ளது.

2.3 இல்லை:-

புராணத்தில் இல்லை என்னும் பொருள்வகையிலான பழமொழிகள் இரண்டு காணப்படுகின்றன. பாண்டியன் இசைப்போட்டியின் முடிவினைச் சிவனருளால் அறிவிக்கின்றான். இதனைப் பாண்டியன்,

''மன்னவர்வலிகள் எல்லாம் தெய்வத்தின் வலிமுன்நில்லா

வன்னமாதெய்வம் செய்யும் வலியெலாம் அரண்மூன்றஅட்ட

முன்னவன் வலிமன் நில்லாஎனப் பலர்மொழிவதெல்லாம்

மின்ன பாண்மகளிற் காணப்பட்டது.'' (44:43)

என்று கூறுவதாகப் பாடியுள்ளார் முனிவர். இப்பாடல் ''சிவத்திற்கு மேல் தெய்வமில்லை'' என்னும் பழமொழியை விவரிப்பதாய் உள்ளது.

பன்றிக்குட்டிகளுக்கு முலை கொடுத்த படலத்தில் ஒரு அருமையான பழமொழி அமைந்திருக்கிறது. பன்றியரசன் பன்றியரசியிடம் பாண்டியனோடு போர்புரிவது உறுதி என்று உரைக்கிறான். அதில் அவன்,

''பொய்த்திடும் உடம்பேயன்றிப் புகழுடம்பு அழிவதுண்டோ'' - 86 என்று கூறுகிறான். இதில் ''பூத உடல் அழிந்தாலும் பொன்னுடல் அழியாது'' என்னும் முதுமொழியின் கருத்து இடம் பெற்றிருக்கிறது.

3. உவமைப் பழமொழிகள்:-

தமிழில் உவமைகளும் பழமொழிகளாக வழங்குவதுண்டு. உவமஉருபை நீக்கிவிட்டால், அது பழமொழியாகிவிடும். புராணத்தில் உவமைப் பழமொழிகள் மிகுதியாக உள்ளன.

''அராவுண்ண மாசுண்டு பொலிவுமாழ்கும் திங்கள் அனையான்''

''பணிவாயிற் பட்ட தேசுண்ட தீந்தண்மதிபோல்'' (40-10)

எனவருவன திங்களைப் பாம்பு கொண்டற்று என்ற கருத்தைக் குறிப்பிடுகின்றன.

வரகுணன் பிரமகத்தியினால் துன்புற்றதை முனிவர், ''மா புண்ட வெள்ளில் போல'' (40-10) ஆனான் என்கிறார். இது ''யானை உண்ட விளங்கனி போல'' என்னும் பழமொழியின் இலக்கியவடிவம்.

''வான் பயிர்க்கு எழுகளை என்ன'' (17.1)

''இல்லார்க்குக் கிழியீடு நேர் பட்டாலென'' (23.14)

''பருந்தொடு நிழல் போக்கென்ன'' (40.36)

''அகங்கை நெல்லிக்கனி போல'' (42.20)

இவை உவமையாக அமைந்த பழமொழிகளாகும்.

4. பழமொழித்தன்மை:-

மக்கள் மத்தியில் பழமொழியாக வழங்கப்படவில்லையாயினும் நீதிமொழிகள் சில பழமொழியின் தன்மையினைப் பெற்றிருக்கின்றன. திருவிளையாடற் புராணத்தில் இது போன்ற மொழிகள் மிகுதியாக உள்ளன.

''அற்பரான வர்க்குச் செல்வம் அல்லதுபகை வேறு உண்டோ'' (1.65)

''உடையவன் இடையூறு உற்றால் அடுத்தவர்க்கு உவகை உண்டோ'' (15.27)

''ஈவதே பெருமை அன்றி இரக்கின்றது இழிபே அன்றோ'' (17.86)

''வான்செய்யும் நன்றிக்கு வையகத்தோர்

செய்யும்கைம் மாறு ஒன்று உண்டோ'' (17.86)

''குலந்தரு நல்லோர் செல்வம் குன்றினும் தம்பால் இல்லென்று

அலர்ந்தவர்க்கு உயிரை மாறியாயினும் கொடுப்பர் அன்றோ'' (52.17)

''அலமரும் வறியோர் வைத்தநிதி கண்டால் அகல்வரேயோ'' (52.69)

இவற்றை ஐயமாக அமையும் பழமொழிகள் என்றும் கூறலாம்.

திருவிளையாடற்புராணத்தில் பழமொழிக்கு விளக்கம் இருக்கின்றது. மக்களிடம் பெருவழக்கில் உள்ள பழமொழிகளைப் பரஞ்சோதி முனிவர் எடுத்துக் காட்டியுள்ளார். உவமையாகவும், ஐயமாகவும் அமைந்த பழமொழிகள் புராணத்தில் காணப்படுகின்றன. முனிவர் இவ்வகையில் பழமொழிகளைப் பதிவு செய்து நாட்டுப்புறவியலுக்குத் தன் பங்களிப்பை ஆற்றியுள்ளார்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: