04/06/2011

இருமொழியில் பழமொழி - துரைஸ்வாமி ரெத்தின தீட்சதர்

நாட்டுப்புறவியலில் பழமொழிகளுக்கு சிறப்பிடம் உண்டு. பழமொழிகள் சொற்செறிவும், பொருள் ஆழமும் நிறைந்தவை. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பவை. ஏழை எளிய மக்கள், செல்வந்தர், கற்றவர்கள், கல்லாதவர்கள் எல்லோராலும் பயன்படுத்தப்படுபவை. பழமொழிகள் கற்பனையாக அமையாமல் உண்மை வடிவங்களாகவே உள்ளன.

தொல்காப்பியத்தில் பழமொழி முதுசொல் என்றும் முதுமொழி என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் பழமொழி சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை, கம்பராமாயணம், பாரதம், நாலடியார் முதலிய நூல்களிலும் காணப்படுகின்றன.

தமிழ் பழமொழிகளை அளவு அடிப்படை, பொருள் அடிப்படை, அகரவரிசை அடிப்படை, அமைப்பியல் அடிப்படை, பயன் அடிப்படை என்று ஐந்து வகையாகப் பிரித்துக் காணலாம்.

பழமொழிகளை அளவு அடிப்படையில் ஓரடிப்பழமொழிகள், ஈரடிப் பழமொழிகள் என்று இருவகைப்படுத்தலாம். அவற்றையும் சொற்கள் அடிப்படையில் அமையும் பழமொழிகள் என்று பாகுப்படுத்தலாம்.

இரு சொற்களில் அமைந்தவை:-

1. எல்லாம் நன்மைக்கே.

2. உலகம் பலவிதம்.

3. நாடகமே உலகம்.

4. எம்மதமும் சம்மதம்.

மூன்று சொற்களில் அமைந்தவை:-

1. ஆசை வெட்கம் அறியாதது.

2. சுத்தம் சோறு போடும்.

3. ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு.

4. துறவிக்கு வேந்தன் துரும்பு.

நான்கு சொற்களில் அமைந்தவை:-

1. அடக்கம் ஆயிரம் பொன்பெறும்.

2. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும்.

3. பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

4. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

எதுகை நயம் பொருந்தியவைகள்:-

1. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

2. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்.

ஈரடிப் பழமொழிகள்:-

1. கூழுக்கும் ஆசை

மீசைக்கும் ஆசை

2. யானை வரும் பின்னே

ஓசை வரும் முன்னே

பொருள் அடிப்படையில் அமைந்த பழமொழிகளை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.

1. சமூகம், 2. பண்பாடு, 3. இயற்கை, 4. பல்பொருள் பற்றியவை.

1. சமூகம் - இப்பிரிவில் குடும்பம், பெண், காதல், மனித இனம், உறவு, கடவுள் ஆகியவை அடங்கும்.

குடும்பம் - பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க.

பெண் - 1. பெண்டிர்க்கு அழகு எதிர்பேசாதிருத்தல்.

2. தாயைப்பார்த்துப் பெண்ணைக் கொள்.

கடவுள் - 1. கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்.

2. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.

கல்வி - 1. இளமையிற் கல்.

2. கற்றது கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு.

இயற்கை பற்றிய பழமொழிகள்:-

1. ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.

நதி: 1. ஆறில்லா ஊரில் அழகு பாழ்.

2. ஆறில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.

பருவம்: 1. தை பிறந்தால் வழிபிறக்கும்

கடல்: அலை கடலுக்கு அணைபோட முடியுமா?

விலங்குகளும் பறவைகளும்:-

விலங்குகளின் இயல்புகளுடன் மனிதனை இணைத்துப் பார்ப்பதைப் பல பழமொழிகளில் காணலாம்.

1. எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல்.

2. கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.

3. குதிரை ஏறாமல் கெட்டது கடன் கேளாமல் கெட்டது

4. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா.

5. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

6. புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.

பணம்: 1. பணம் பத்தும் செய்யும்.

2. பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.

மருத்துவம்: 1. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

2. சுக்கைப் போல் மருந்து இல்லை.

3. வைத்தியனுக்குக் கொடுப்பதை விட வாணியனுக்குக் கொடு.

4. வாய்புளித்ததோ மாங்கா புளித்ததோ.

அமைப்பியல் அடிப்படை பழமொழிகள்:-

1. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

2. நாயைக் கண்டால் கல்லைக் காணோம் கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

3. பருவத்தே பயிர்செய்.

4. களவும் கற்றுமற.

5. பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

வேளாண்மை பழமொழிகள்:-

1. ஆடிப்பட்டம் தேடிவிதை.

2. பருவத்தே பயிர்செய்.

3. அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல்.

விதியைப்பற்றியவை:-

1. விதியை மதியால் வெல்லலாம்.

சோதிடம் - 1. பரணியிற் பிறந்தார் தரணியாள்வார்.

2. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.

இலக்கியத் தொடர்கள் - பழமொழிகள்:-

1. யாதும்ஊரே யாவரும் கேளீர்.

2. என் கடன் பணிசெய்து கிடப்பதே.

பழமொழிகள் என்பவை எல்லா மொழிகளிலும் காணப்படுகின்றன. தமிழிலும் சமஸ்கிருதத்திலும் கருத்து ஒற்றுமை உள்ள பல பழமொழிகள் உள்ளன. அவைகளில் சில பழமொழிகளைச் சிலவற்றை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

1. ஆறில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.

நதுயத்ரந வத்யதே தத்ர வாஸம் நகாரயேது.

2. தர்மம் தலைகாக்கும் தர்மோரக்ஷ்திர க்ஷ’த.

3. என் கடன் பணி செய்து கிடப்பதே.

கர்மண்யே வாதிகாரம்

4. உலகம் பலவிதம் லோகோ பின்னருசி

5. யாதும் ஊரே வஸா தைவ குடும்பகம்

6. கற்றவனுக்குச் சென்றமிட மெல்லாம் சிறப்பு

வித்வான் சர்வத்ரபூஜ்யதே

7. கூட்டத்தில் எள்ளுப் போட்டால் எள்ளுவிழாது

தலேயதேயுர்ன திலா விகீர்ணா.

8. வெள்ளை வேஷ்டியில்தான் அழுக்குத் தெரியும்.

ஸ’தேஹ’ ஜாயதே சிதே ஸ’ல கூயதர

9. கழுத்துவரை சாப்பிட்டவை அபீபிரா கண்டம் அபோஜி

10. முயற்சியுடையார் இகழ்சி அடையார்

யத்னேக்ருதேயதி நஸ’த்யதி

11. ஆசை வெட்கம் அறியாது

காமாதுராணாம் நபயம் நல்ஜ்ஜா.

பழமொழிகள் மக்களிடம் பழகிய மொழிகளாகவே விளங்கக் காண்கிறோம். மொழி வேறுபட்டாலும் மக்கள் எண்ணத்தால் ஒன்றுபட்டிருப்பதை தமிழிலும், வடமொழியிலும் பழமொழிகள் ஒத்திருப்பதின் மூலம் உணரமுடிகிறது.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: