27/01/2011

காரணங்கள் அகாரணங்கள் - பிரபஞ்சன்

கூட்டத்தைப் பார்த்துத் திகைத்துப் போனார் கேசவன். அந்தக் கோயிலுக்குப் பெரும் கூட்டம் வரும் என்பது அவருக்குத் தெரியும். சில வருஷங்களுக்கு முன் அங்கு வந்திருந்தபோது, அவரே கூட்டம் கண்டு வியந்திருக்கிறார். இப்போது அவர் கண்ட கூட்டத்தைக் கற்பனை செய்திருக்கவில்லை அவர்.
ஊரிலிருந்து புறப்பட்டுச் சமதளத்தில் பேருந்து பயணம் செய்து, பிறகு வேறொரு பேருந்தில் ஏறி மலையின் விலாவில் சுற்றிச் சுற்றிப் பயணம் செய்து, கோயில் இருக்கும் சமதளத்துக்கு வந்து சேர்ந்திருந்தார். கோயில் நிர்வாகம் நடத்தும் சுத்தமான விடுதியில் குளித்துத் துவைத்து இஸ்திரி போட்ட ஆடையுடன் வந்தார். சன்னதிக்குச் செல்லும் வரிசை, கண்ணுக்கெட்டிய தூரம் தெரிந்து பிறகு மறைந்தும் போயிற்று. சூனியத்திலிருந்து தோன்றிச் சூனியத்துக்கே போய் மறைகிற வரிசை உலக உருண்டையைச் சுற்றி நிற்க வைத்தாலும், பக்தர்கள் மேலும் எஞ்சுவார்களாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். வரிசையில் நின்று தரிசனம் முடித்த ஒருவர் தான் பத்து மணி நேரம் நிற்க நேர்ந்ததாகச் சொன்னார் என்று யாரோ ஒருவர் யாரோ ஒருவரிடம் சொல்வதை இவர் கேட்டார்.
கேசவன் பலவிதமான யோசனைகளில் தடுக்கப்பட்டார். வரிசையில் அவரும் நிற்கிறார். முன்னால் இருப்பவர் இவர் மேல் சாய்கிறார். பின்னால் இருப்பவர் அவரை முன்பக்கம் தள்ளுகிறார். முன்பக்கமும் பின்பக்கமும் அவர் இடிபடுகிறார். வரிசையில் முன்னாலோ பின்னாலோ பெண் பக்தர்கள் இருக்க நேர்ந்தால் விஷயம் விபரீதமாகவும் ஆகக்கூடும்... அவருக்கு அண்மைக் காலமாக வேளை, நேரம் இல்லாமல் இயற்கையின் அழைப்பு வந்து விடுகிறது. வரிசையைக் குலைத்துவிட்டு அதற்கென்று எங்கு போவது. களைப்புக்காகக் காபி சாப்பிட முடியாது. காபி சாப்பிட்டதும் ஒரு வில்ஸ் சிகரட் வேண்டி இருக்கும். அது இந்த இடத்தில் அபசாரமாகும்.
வெயில் சுள்ளென்றது. அடிக்கடி வானம் மூடிக்கொண்டு குளிர்ந்த காற்றும் வீசியது. கூட்டத்துக்கே உரிய குழப்பமான ஒலிகளில், வெளிகளின் நீட்சி நடுங்கும்போல் தோன்றியது. வரிசையில் நின்று தரிசனம் செய்யும் எண்ணத்தைக் கைவிட்டார். அந்த எண்ணம் தோன்றியவுடனே, தத்துவபரமாகவும் அவர் சிந்திக்கலானார். கேசவனின் தேகரீதியான சிரமம், கடவுள் அறியாததல்ல. அறியாமல் இருப்பாரேயாகில் அவர் தெய்வமாக இருக்க முடியாது. பத்து மணி நேரம் வரிசையில் நின்று பார்க்க கடவுள் அவ்வளவு தூரத்திலா இருக்கிறார். புத்தகத்தில் இருந்து பிரசங்கம் செய்யும் தெய்வீக வாக்காளர்வரை எல்லோருமே கடவுள் உனக்குள் இருக்கிறார் என்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிகிற கலாச்சாரம்தான் பின், எதற்காக இந்த மலைச்சாமியைப் பார்க்க மலை ஏறி வருகிறார்கள். நூறு, ஆயிரம் என்று செலவு செய்துகொண்டு எதற்காக வரவேண்டும்.
பயணம் பண்ணுவதில் மக்களுக்கு இருக்கும் உள்ளார்ந்த ஆர்வமாக இருக்கக்கூடும். புதுப்புது இடங்கள், புதிய காட்சிகள், புதிய முகங்கள் காணும் அவாவாக இருக்கலாம். பல மகான்கள், பல பெரியோர்கள், பல புண்ணியஸ்தர்கள் மிதித்த மண்ணைத் தாமும் மிதிக்கிறோம் என்ற எண்ணமாக இருக்கலாம். கூட்டத்தின் திரளில் தம் தனிமை அச்சத்தை விரட்டும் நோக்கமாக இருக்கலாம். இருண்ட ஒளிபுகாக் காடுகளில் வாழ நேர்ந்த காலத்தின் சதா நிகழும் உயிர்ச்சத்தை, மரணம் கையெட்டும் தூரத்திலேயே நின்று மருட்டிய பயத்தை வென்றதன் கொண்டாட்டமாக இம்மலைப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டிருக்கலாம்.
மூச்சு முட்டுவதாக இருந்த கூட்டத்தைவிட்டு வெளியேறினார் கேசவன். அவருக்கும், சாமியிடம் சொல்வதற்கு ஒரு வேண்டுதல் இருந்தது. சொந்த வேண்டுதல் இல்லை. அலுவலகப் புரமோஷன் போன்ற சமாச்சாரங்கள் இல்லை. அவர் காரணம் என்றும் முழுதாகச் சொல்ல முடியாது. அவர் காரணம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. ஒரு இக்கட்டான நிலைமை.
நேற்று முன்தினம், அவர் சொந்த ஊருக்குப் புறப்பட வேண்டி இருந்தது. அழகர்குளம் பேருந்து நிலையத்துக்குப் போய்த்தான், அவர் ஊருக்குப் போகும் பேருந்தைப் பிடிக்க வேண்டும். வழியில் அதை நிறுத்தி ஏறிக் கொள்ளலாம்தான். உட்கார இடம் கிடைப்பது என்பது சாத்தியம் இல்லை. நின்றுகொண்டே ஏழு, எட்டு மணி நேரம் பயணம் செய்வது என்பதை அவர் நினைத்துப் பார்க்க முடியாது. அதற்கான உடல் தெம்பை இழந்து பல காலம் ஆகிவிட்டிருந்தது. மேலும் அது இரவு நேரம். ஆகவே, பேருந்துகள் புறப்படும் அழகர் குளம் நிலையத்துக்கே போய்விட முடிவு செய்தார்.
நேரமும் அதிகம் இல்லை. ஒன்பது மணி வண்டியைப் பிடிக்க ஏழரை மணிக்கே புறப்பட வேண்டும். இரண்டு வண்டிகள் மாறி அழகர்குளத்தை எட்டரைக்குள் சேர்ந்துவிடலாம். அவரும், ஏழு மணிக்குப் புறப்படும் நோக்கத்தோடுதான் ஆறரைக்குள் குளித்து முடித்து ஆயத்தமானார். அந்த நேரம் பார்த்து மூர்த்தி வந்து சேர்ந்தார். அவரும் ஒரு பிரச்னையுடன் வந்திருந்தார். அவருடைய மாமனாருக்கும் புகழ்பெற்ற இருதய நோய் நிபுணர் சத்தியானந்திடம் நேரம் குறித்துச் சந்திக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் அவசரம் என்றார் மூர்த்தி. முந்தின நாள் இரவு மூச்சத் திணறலில் அவரால் உறங்க முடியாமல் ஆகிவிட்டிருந்தது. சத்தியானந்த், கேசவனுக்கு மிகவும் வேண்டியவர். தொலைபேசியில் அவருடன் பேசி நேரம் வாங்கித் தரவேண்டும் என்று மூர்த்தி கேசவனிடம் கேட்டுக் கொண்டார். நீண்ட கால நண்பர் மூர்த்தி அறிமுகமே அற்றவராக இருந்தாலும் கூட இதை அவர் செய்வதுதான் முறை. கேசவன் சத்தியானந்துக்குத் தொலைபேசி செய்தார். அவருடைய துணையாளர் சுசிலாதான் எதிர்முனையில் கிடைத்தார்.
‘சுசீலா, டாக்டர்கிட்டே, ஒரு அப்பாயிண்ட்மென்ட் விஷயமாக பேசியாகணுமே.’
சில நிமிஷங்களுக்குப் பிறகு சுசிலா மீண்டும் பேசினாள். கேசவன் அழைப்பை டாக்டரிடம் அவள் சொன்னாள். டாக்டர் ஒரு அவசர நோயாளியைக் கவனித்துக் கொண்டிருந்தார். முடிந்ததும் அவரே கேசவனை அழைப்பார்.
ஆக கேசவன் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நேரம் கடந்து கொண்டிருந்தது. அவர் இரண்டு பேருந்துகளைப் பிடித்துப் பேருந்து நிலையம் போக முடியாது. மூர்த்தி அவருடைய மாமனாரின் இருதயம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். பொதுவாக மனித இருதயங்களின் செயல்பாடு, அவற்றின் அருமை, பெருமை பற்றியெல்லாம் மூர்த்திக்குச் சொல்ல ஏராளமான தகவல்கள் இருந்தன. ‘நெட்டில்’ அவர் இதுபற்றித்தான் அண்மைக் காலங்களில் அதிகமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்.
டாக்டர் போன் செய்தார். விஷயத்தைக் கேட்டுக் கொண்டார். நேரமும் அளத்தார்.
‘நல்லது மூர்த்தி. மாமனாரை டாக்டரிடம் அழைத்துப் போங்கள். எல்லாம் சரியாகிவிடும். நான் ஊருக்குக் கிளம்புகிறேன்.’
மூர்த்திக்கு இதயம் பற்றித் தான் அறிந்தவைகளை இன்னும் எடுத்துச் சொல்ல வேண்டியிருந்தது. கேசவனின் அவசரத்தை உணர்ந்தவராக விடைபெற்றனர்.
இனிமேல் இரண்டு பேருந்துகளைப் பிடிக்க முடியாது. அவர், வழக்கமாக ஆட்டோவில் பயணம் செய்ய நேர்கிறபோது, அம்பாள் கபே வாசல ஸ்டாண்டில் இருக்கும் மைதீன் ஆட்டோவைத்தான் பிடிப்பார். முதல் சில அனுபவங்களுக்குப் பிறகு மைதீன் அவருக்குத் தோதானவர் என்பதை அறிந்துகொண்டார். அனாவசியமாக ஊரைச் சுற்றிக் காட்டுவதில்லை. அதிகமாகக் கேட்பதில்லை. அடாவடித்தனமும் அவரிடம் இல்லை. காத்திருக்கச் சொன்னால் முகம் சுளிப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலே மனித மதிப்பைப் புரிந்தவராக இருந்தார்.
தன்னைக் கடந்து செல்கிற அல்லது குறுக்கே வருகிற எவனையும் வைகிற பழக்கமும் அவரிடம் இல்லை. ஒரு வகையான சினேகமும் அவரிடம் ஏற்பட்டிருந்தது. ஆகவே, ஓட்டலில் காபி சாப்பிட்டுவிட்டு ஆட்டோ பிடித்து ஊருக்குப் போகலாம் என்ற எண்ணமுடன் பையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். உணவு விடுதிச் சுவரை ஒட்டி நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் அந்த ஆட்டோ இல்லை. மைதீன் சவாரி போயிருப்பார் என்று கேசவன் நினைத்துக் கொண்டார். அவர் நிற்கும் இடத்துக்கும் அழகர்குளம் பேருந்து நிலையத்துக்கும் ஆட்டோச் சத்தம் எண்பது ரூபாய் ஆகும். மைதீன் அதை அடைந்தால் கேசவனுக்குச் சந்தோஷமாக இருக்கும். வேறு ஆட்டோக்காரர் நூறு ரூபாய் கேட்பார். வெளியூர்க்காரர் என நினைத்து இருநூறு ரூபாய்க் கேட்ட ஆட்டோக்காரர்களும் உண்டு. ஆட்டோக்காரர்களில் பேருந்து நிலையத்துக்கு வெளியேயே நிறுத்திவிட்டுக் காசை எடு என்பவர்களும் இருந்தார்கள். வெளிப்புற வாசலுக்கும், உள் வாசலுக்கும் சுமாராக ஒரு பர்லாங் தூரம் இருந்தது. பைச் சுமையுடன் அந்த தூரம் நடப்பதில் இப்போதெல்லாம் கேசவனுக்குச் சிரமம் இருந்தது.
சுரத்தில்லாமல் காபி குடித்துவிட்டுத் தெருவுக்கு வருகையில் மைதீன் ஆட்டோ அதன் இடத்துக்கு வந்து நின்றது.
‘பஸ் ஸ்டாண்டுக்குப் போகணுமே மைதீன்’ என்றார் கேசவன்.
‘அழகர் குளம் ஸ்டாண்டுக்கா சார்’
‘உம்’
‘ஐயோ, ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்டை ஏத்திக்கிட்டு வரணும் சார். அவங்களுக்கு பாஷை தெரியாது. என்னைத்தான் நம்பி ஏறுவாங்க. எட்டரை மணிக்கு வர்றேன்னுட்டேன்... என்ன பண்றது?’
கேசவனுக்கு முகம் தொங்கிப் போயிற்று.
‘பரவாயில்லை. நான் வேறு ஆட்டோவைப் பிடிச்சுக்கிறேன்’ அவருடைய குரல் அவரக்கே சுரத்தில்லாமல் ஒலித்தது.
‘சார் கேட்டு வரலைன்னு சொல்லக்கூடாது... மணி என்ன சார் இப்போ’
‘எட்டேகால் ஆகுது’
‘போய்த் திரும்ப முக்கால் அவர், ஒன் அவர் ஆகுமே சார்’
மைதீனை அந்தச் சூழலில் நிறுத்தி இருக்கக்கூடாதுதான். மைதீனின் ஆட்டோவில் பேருந்து நிலையம் போனால்தான் பிரயாணம் சௌகர்யமாக இருக்கும் என்பது போன்ற பாவனையை அவர் ஏற்படுத்தியவராக இருந்தார்.
‘சரி சார். பரவாயில்லை. வாங்க.... ஒரு அரை ‘அவர்’ அந்தப் பெண் காத்திருக்கும் வாங்க.’
மொழி தெரியாத பெண் காத்திருக்கவும் அவசியம் இல்லாமல், மைதீனுக்கும் நெருக்கடி தராமல் கேசவன் போயிருக்கலாம். மைதீன் போகலாம் என்றதும் உடனே ஏறி அமர்ந்துகொண்டார். மைதீன் அவருக்கு இயல்பு இல்லாத வேகத்துடன் ஓட்டிக்கொண்டு போனார். இரண்டு பையன்கள் ‘டபுள்சில்’ வந்த ஒரு சைக்கிளை ஏற்றிவிட இருந்தார். பையன்களுக்கு ஆயுள் கெட்டியாக இருந்தது. ஒரு கார் டிரைவர் மைதீனின் அம்மாவை வைதார்.
‘கொஞ்சம் பொறுமையா போகலாமே’ என்று கேசவன் பயத்துடன் சொன்னார்.
‘சீக்கிரமே திரும்பணும் சார். பாவம் தனியா நிக்கும் அந்தப் பெண். திருவான்மியூருக்குப் போகணுமே’
பேருந்து நிலையம் வந்து சேர்ந்து, பணத்தை எண்ணாமலேயே சட்டைப் பையில் போட்டுக்கொண்டு சீறிக்கொண்டு புறப்பட்ட மைதீனை, ஆட்டோவைப் பார்த்துக்கொண்டு நின்றார் கேசவன்.
ஊர் வேலை முடிந்து உடனடியாகத் திரும்பினார். காபி சாப்பிட்டுவிட்டு, பழக்கம் காரணமாக ஆட்டோ ஸ்டாண்டை நோக்கினார். மைதீன் வண்டி இருந்த இடத்தில் வேறு ஒரு ஆட்டோவும் டிரைவரும் இருந்தார்கள். கேசவனைப் பார்த்ததும் அந்த டிரைவர் தானாகவே முன்வந்து செய்தியைச் சொன்னார்.
‘தெரியுமா சார்..... பஸ் ஸ்டாண்டு சவாரியை இறக்கிவிட்டுட்டுத் திரும்பும்போது ஆக்சிடெண்ட் ஏற்பட்டுடுச்சி சார்... மைதீன் ஆஸ்பத்திரியில்தான் இருக்கான்.’
நேரம் ஆகஆக மலையில் கூட்டம் அடர்த்தியாகிக் கொண்டிருந்தது. மனிதர்களை உராய்வதும் இடித்துக் கொள்வதும் சங்கடமாக இருந்தது. அத்தனை பேரும் ஏதோ ஒன்றினுக்குக் காரணம் ஆகித் தான் காரணம் இல்லை என்று ஒப்புதல் பெற்றுக்கொள்ள வந்தவர்கள் போலத் தோன்றியது. மலையிலிருந்து சமதளத்துக்கு வந்து மீண்டும் ஒரு பேருந்தைப் பிடித்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.
மைதீன் விபத்துக்குள்ளானதுக்குத் தான் காரணமா அல்லது யார் காரணம்? அவர் அழைத்து மைதீன் வந்தார். வேறு வேலை இருக்கிறது என்று அவர் சொன்னதும், வேறு ஆட்டோவைப் பிடித்திருக்கலாம் அவர். மனத்தளவில் மைதீனுக்கு நெருக்கடி தந்திருக்கிறார் அவர். மூர்த்தி புறப்படும் நேரம் பார்த்து வருவானேன்? அந்த நேரம் பார்த்தா டாக்டரிடம் அந்த அவசர நோயாளி வரவேண்டும். எல்லாம் எழுதி வைத்தது போல் நடந்து கொண்டிருக்கிறது. அவர் பேருந்தைப் பிடிக்கக்கூடாது என்பதற்காகவும், ஆட்டோ பிடித்தே விரைய வேண்டும் என்பதுக்காகவுமே சந்தர்ப்பங்கள் உருவாக்கப்பட்டன போலல்லவா இருக்கிறது.
நான் இந்த ஊருக்கே மாற்றலாகி வந்து இருக்கக்கூடாது. இந்த ஏரியாவுக்கே வந்து இருக்கக்கூடாது. இந்தத் துறையை எடுத்துப் படித்திருக்கக்கூடாது. வலைகள் வலைகளாக அவர் தன்னை உரித்துக்கொண்டே போனார். நான் பிறந்திருக்கவே கூடாது என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்.
கேசவன் தலையைக் குலுக்கிக்கொண்டார்.
பேருந்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் போட்டு வைத்த சாலையில் போய்க்கொண்டே இருந்தது.

 

கருத்துகள் இல்லை: