இலக்கிய உத்திகள்

சங்ககாலப் புலவர்கள், சங்கப் பாடல்களில் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளைப் (நயங்களை) பயன்படுத்தி, மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். இவை இரண்டையும் "குறிப்புப் பொருள் உத்தி' எனவும் அழைப்பர்.

வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு வேறொரு பொருள் புலப்படுவதுபோல அமைப்பது உள்ளுறை உத்தியாகும். உள்ளுறை உத்தியில் உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இருக்காது. உவமிக்கப்படும் பொருள், தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும் என்பது இலக்கண விதி.

உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை உள்ளுறை உவமை என்றனர்.

உள்ளுறை உவமைக்கு நாற்கவிராச நம்பி தரும் இலக்கணம் பின்வருமாறு:
""ஆராய்ந்தறியும் பகுதியினையுடைத்தாய்ப் புள்ளொடும்
விலங்கொடும் பிறவொடும் தோன்றும் உள்ளுறை உவமை''
(ஒழிபியல்-28)

அவற்றுள், ""உள்ளுறையுவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் புள்ளொடும் விலங்கொடும் பிறவொடு புலப்படும்'' (ஒழி-29) இதற்கு எடுத்துக்காட்டுப் பாடலாக அமைவது,

""இழை விளையாடும் இளமுலை சாயற்கு இடைந்தமஞ்ஞை
கழை விளையாடும் கடிப்புனம் காத்தும் கலையகலாது
உழை விளையாடும் உயர் சிலம்பா! இன்னும் உன் பொருட்டால்
மழை விளையாடும் மதிற்றஞ்சை வாணன் மலையத்திலே
"மானைப் பிரியாது கழை விளையாடும்''

என்பதனால், நீயும் தலைவியைப் பிரியாது விளையாட வேண்டும் என்ற பொருள் உள்ளுறை உவமம், விலங்கொடு தோன்றிப் புலப்படுமாறு அமைந்துள்ளது.

தொல்காப்பியர், எல்லையற்ற இன்பம் தருவதே உள்ளுறை அமைப்பதன் நோக்கம் என்பதை,

""அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே''
(பொரு-48)

என்று கூறியுள்ளார். குறிப்புப் பொருள் சார்ந்து இவ்வுள்ளுறை ஐந்து வகைப்பட்டு வரும் என்பதை தொல்காப்பியர்,

""உடனுறை, உவமம், சுட்டுநகைச் சிறப்பென
கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே''
(பொரு-47)

என்று கூறியுள்ளார். உடனுறை உள்ளுறை, சுட்டு உள்ளுறை, சிறப்பு உள்ளுறை, உவம உள்ளுறை, நகை உள்ளுறை என்னும் ஐந்து உள்ளுறைகளைக் கூறிய அவர், உவம உள்ளுறையைப் பற்றியும் (தொல்.அகத்.49,51) சிறப்பு உள்ளுறையைப் பற்றியும் (தொல்.பொரு-50) சில கருத்துக் கூறி விளக்கியுள்ளார்.

இவ்வகை உள்ளுறைகளில் உவம உள்ளுறை நீங்கலாக, மற்றவை சங்க இலக்கியங்களுக்கு உரை வகுத்த உரையாசிரியர்களால் பாடல் உரையில் பொதுவாக விளக்கிக் காட்டப்படவில்லை.

நற்றிணைக்கு உரைவகுத்த பின்னத்தூர் நாராயணசாமியும், உவம உள்ளுறை என்பதையும் (இறைச்சி என்ற பெயரில்) வேறு உள்ளுறையையும் மட்டும் கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில், நற்றிணையில் ஐவகை உள்ளுறைகளும் பொருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.

உவம உள்ளுறைக்கு ஓர் எடுத்துக்காட்டு: தலைவனைத் தோழி வரைவு கடாவுகிறாள் (களவில் தோழி-தலைவனிடம் தலைவியை மணந்து கொள்ளும்படி வேண்டுதல்). ""கொல்லவல்ல ஆண்புலியானது, களிற்றியானையை நீர் அருந்தவரும் நீர்த்துறையிலே பிடியானை புலம்புமாறு தாக்கிக் கொல்லும் வெற்பனின் சொற்களை மெய்யெனத் தேறி, யாம் நடுஇரவிலும் உறங்கப்பெறாது, எமது நலத்தை இழந்துவிட்டோம். இப்பழி தூற்றும் ஊர், அலர் கூறும் பெண்களின் அம்பல் மொழியை மெய்யென நம்பி, மேன்மையிலாத் தீய சொற்களைப் பொதித்த ஒலியை உடையதாகத் தான் இழந்தது என்ன?'' (நற்றி-36) என்பது பாடலின் கருத்து.

""கொல்லவல்ல ஆண் புலியானது, களிற்றியானையை நீர் அருந்தவரும் நீர்த்துறையிலே, பிடியானை புலம்புமாறு தாக்கிக் கொல்லும் வெற்பன்'' என்பது குறிப்புப் பொருளை உள்ளடக்கி உள்ளது. இஃது உவம வகையால், கொடுமை நிறைந்த தலைவியின் தமர் (உறவினர்) தலைவியை நாடிவரும் இடத்திலே தலைவி புலம்புமாறு தலைவனுக்குத் துன்பம் இழைப்பர்-என்று குறிப்புப் பொருளைத் தோற்றுவித்தலின் உள்ளுறை உவமம் ஆயிற்று. இவ்வகையில் மேலும் சில இடங்களைச் சுட்டலாம்.

இறைச்சி:

இறைச்சி என்ற கோட்பாட்டினைத் தொல்காப்பியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. வடமொழியில் உள்ள "தொனி'-கோட்பாடுடன் இதனை இணைத்துப் பார்க்கும் போக்கு தமிழறிஞர்களிடம் காணப்படுகிறது. கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க, அதை உணர்த்த, வோறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சி.

""இறைச்சி தானே உரிப்புறத் ததுவே''
(தொல்.1175)

மக்களின் காதல் ஒழுக்கங்கள் உரி; பிற உயிர்களின் காதல் செயல்கள் உரிப்புறத்தன. எனவே இறைச்சி என்பது உரிப்புறத்தது. இது எந்த ஒரு குறிப்புப் பொருளையும் சுட்டித் தன்னுள்ளே வேறொரு பொருள் தருவது. இலக்கியங்களில் பாடப்படும் இறைச்சியின் பொருளுக்கும், விலங்கினம்-பறவையினம் போன்ற கருப்பொருளுக்கும் உள்ள தொடர்பைக் கூறுவது. உயிரினங்களின் அன்புச் செயல்களை மிகுவிப்பன "இறைச்சி' என்பர்.

தெய்வம் முதலாகிய கருப்பொருளின் கண்ணே பிறப்பதே ûறைச்சிப் பொருள் என்பது அகப்பொருள் வரையறை.
""கருப்பொருட் பிறக்கும்
இறைச்சிப் பொருளே'' (ஒழி-31)

கருப்பொருளின் வகைகளாக அகப்பொருள் பதினான்கு வகைகளைக் குறிப்பிடுகிறது. "ஆரணங்கு (தெய்வம்), உயர்ந்தோர், தாழ்ந்தோர் (அல்லாதோர்), புள், விலங்கு, ஊர், நீர், பூ, உணவு, பறவை, யாழ், பண், தொழில் எனக் கருவீரெழுவதைத் தாகும்' (அகத்-19). ஐந்து திணைகளுக்கு உரிய கருப்பொருள் இவையிவை என பொருள் தெளிவாகக் கூறுகின்றன.

வழியிடைக் காணப்படும் இயற்கையையும் அவற்றின் அன்புணர்வைத் தூண்டும் காட்சிகளையும், காதல் செய்திகளையும் குறிப்பது; சிறப்பான ஒருவகை உணர்வை அடிப்படையாகக் கொண்ட குறிப்புணர்வு என்றும் இறைச்சியைக் கூறுவர்இதை ஆய்வு நோக்கில், கருப்பொருள் இறைச்சி, தெரிபொருள் இறைச்சி, குறிப்புப்பொருள் இறைச்சி என மூன்று வகையாகப் பிரிக்கலாம். அது அன்பு, காதல், அருள், மனிதநேயம் ஆகியவற்றுக்குத் தூண்டுதலாக அமையும். மனிதனின் உள்ளுணர்வாகிய காதலைத் தூண்டும் புறச்சூழல்களே இறைச்சி என்றும் கூறப்படுகிறது.

தெரிபொருள் இறைச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு:

தெரிபொருள் இறைச்சியில் கருப்பொருள்களின் செயல்களும் அவற்றிற்கான முடிவுகளும் உடன் கூறப்படும்.
""விருந்தெவன் செய்கோ தோழி சாரல்
அரும்பர மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு
உரும்பின் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன் .....   ......''(நற்-112)

வினைவயிற் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்ததும், அவன் வராதது கண்டு ஆற்றாமையில் வாடிய தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, ""அடுக்கம் புலம்பக் களிற்று யானையைக் கொன்று சிங்கம் இயங்கும் மலைநாடன் உன் தலைவன். எனவே, அவன் உனது பசப்பு வருந்திக் கெட, உனக்கு உண்டான காமநோயைப் போக்கி உன்னைவிட்டு அகலாமல் இருப்பான்'' என்பது குறிப்பு. இந்தக் கருப்பொருளாகிய களிற்று யானையின் செயல்களும் அவற்றிற்கான முடிவுகளும் உடன் கூறப்பட்டதால் இது இறைச்சிப் பொருளானது. நற்றிணையில் மட்டுமே 165 பாடல்கள் இறைச்சிப் பொருளில் அமைந்துள்ளன.

காதல் உணர்வைக் குறிப்பதற்கும், தூண்டுவதற்கும் தலைவனை நெறிப்படுத்துவதற்குமே இறைச்சிப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்ககால மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும், மன வருத்தத்தையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூற, "உள்ளுறை உவமை' மற்றும் "இறைச்சி'யை இலக்கிய உத்திகளாகக் கையாண்டு கூறியுள்ளது நாகரிகத்தின் வெளிப்பாடு என்பதை விட உச்சநிலையைக் கடைபிடித்துள்ளனர் என்றே கூறத்தோன்றுகிறது.

நன்றி - தமிழ்மணி

1 கருத்துகள்

புதியது பழையவை