13/03/2011

உறவுப்பெயர்கள் - தொ. பரமசிவன்

உறவுப் பெயர்கள் தமிழில் இடம், சாதி, சாதிக்குரிய மண உறவு முறைகள் ஆகியவை காரணமாகப் பல்வேறு வகைப்பட்டு விளங்குகின்றன. பொதுவாகத் திராவிட மொழி பேசும் மக்கள் மண உறவுக்குரிய மாற்று உறவுகளைக் கொண்டுள்ளனர். எனவே உறவுமுறைச் சொற்களின் வகையும் பெருக்கமும் தமிழில் மிகுதியாகவே உள்ளன.

உறவுப் பெயர்கள் பொதுவாக விளிப்பெயர்களாகவே விளங்குகின்றன. அம்மை, அப்பன், மாமன், அக்கன், தாத்தன், ஐயன் ஆகிய பெயர்கள் அம்மா, அப்பா, மாமா, அக்கா, தாத்தா, ஐயா, எனவே வழங்கி வருகின்றன. இவற்றுள் அக்காவைக் குறிக்கும் ''அக்கன்'' என்ற பெயர் வழக்கு முற்றிலுமாக மறைந்து போய்விட்டது கல்வெட்டுக்களில் மட்டும் காணப்படுகிறது. ''அண்ணாழ்வி'' என்ற பெயர் வழக்கு அண்ணன், அண்ணாவி என மாறி வழங்குகிறது. சிறுமை அல்லது இளமை என்னும் பொருள் தரும் ''நல்'' என்னும் முன்னொட்டு, சில இடங்களில் மட்டும் ''நல்லப்பன்'' என்ற பெயரில் வழங்கி வருகிறது. இதற்குச் ''சிற்றப்பன்'' என்று பொருள். இப்பெயர் நேரிடையாக வழங்காத இடங்களிலும் ''நடக்க மாட்டாதவன் நல்லப்பன் வீட்டில் பெண் எடுத்தானாம்!'' என்று சொல்லடையாக வழங்கி வருகிறது. அதுபோலவே தம்+அப்பன் = தமப்பன் என்ற சொல் ''தகப்பன்'' என்று புழக்கத்தில் உள்ளது. தமப்பன் என்ற சொல் ''தகப்பன்'' என்று புழக்கத்தில் உள்ளது. தமப்பன் என்ற சொல்லே பெரியாழ்வார் பாசுரத்திலும், கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. தமக்கை என்ற சொல்லையும் தம் + அக்கை என்றே பிரித்துக் கொள்ள வேண்டும்.

அண்ணனைக் குறிக்க இலக்கியங்களில் வழங்கிவரும் ''தமையன்'' என்ற சொல்லையும் இவ்வாறே ''தம்+ஐயன்'' எனப் பிரிக்கலாம். மூத்தவனைக் குறிக்க ''முன்'' என்னும் சொல் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. அதுபோல பின் பிறந்த இளையவனைக் குறிக்க ''பின்'' என்னும் சொல் வழங்கியிருக்கலாம். ''தம் பின் '' என்ற சொல்லே ''தம்பி'' என மருவியிருத்தல் கூடும் என்பர். தங்கை என்னும் சொல் அக்கை என்னும் சொல்லின் எதிர்வடிவமாகப் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு பெயர்களும் ''அச்சி '' என்னும் விகுதி ஏற்று அக்கச்சி, தங்கச்சி என வழங்கப்பட்டியிருக்கின்றன. இப்பொழுது அக்கச்சி என்னும் வடிவம் கவிதைகளில் மட்டும் வழக்கத்திலிருக்கிறது.

அப்பனின் அப்பனைக் குறிக்க ''மூத்தப்பன்'' என்ற சொல் வழங்கி வந்திருக்கிறது. ''எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்'' என்பது பெரியாழ்வார் பாசுரம், இன்றும் மூத்தப்பன் என்னும் சொல் மலையாளத்தில் தாத்தாவைக் குறிக்கவே வழங்குகிறது. பந்தல்குடியில் கிடைத்த முதல் இராசராசன் காலத்து வட்டெழுத்துக் கல்வெட்டில் தாத்தாவையும் பாட்டியையும் குறிக்க ''முத்தப்பன்'' ''முத்தம்மை'' என்ற சொற்கள் ஆளப்பட்டுள்ளதைக் கல்வெட்டறிஞர் வெ. வேதாசலம் எடுத்துக்காட்டுகிறார். தமிழ் முசுலிம்களில் சிலர் ''மூத்தவாப்பா'' அல்லது ''முத்துவாப்பா'' என்று தாத்தாவை அழைக்கின்றனர். அத்தன் என்ற பழந்தமிழ்ச் சொல்லாலும் இவர்களில் சிலர் அப்பாவைக் குறிக்கின்றனர். அப்பா என்பதைப் போல விளியாக வரும் இன்னொரு சொல் அம்மா. இதன் மூல வடிவம் அம்மை என்பது தான். பிறந்த குழந்தையின் அழுகை விளியிலிருந்து இந்தச் சொல் பிறந்திருக்க வேண்டும். ''அம்மா'' என்ற சொல் ''கேட்பித்தல்'' என்னும் பொருளை உடையது. ''அம்ம கேட்பிக்கும்'' என்று தொல்காப்பியர் கூறுவதும் நோக்கத்தக்கது. தாங்கவியலாத வேதனை, வியப்பு, மகிழ்ச்சி, ஆகிய இடங்களில் தன்னை மறந்து ஒலிக்கும் அம்மா என்ற சொல், '' என்னைப் பாருங்கள், கேளுங்கள்'' என்ற பொருளில்தான் ஒலிக்கப்படுகிறது. குழந்தைகள் கேட்பதற்காகப் பாடப்படும் தாலாட்டிலும் மற்றையோர் கேட்பதற்காகப் பாடப்படும் ஒப்பாரி, கதைப் பாடல் ஆகியவற்றிலும் இந்தச் சொல், ''கேளுங்கள்'' என்ற பொருளில் தான் வழங்கி வருகிறது. பொதுவாகப் பெண்ணைப் பரிவோடு அழைக்கும் சொல்லாகவும் இது வழங்கி வருவதைக் காண்கிறோம்.

தாய் தந்தை என இப்பொழுது வழங்கிவரும் சொற்களின் மூல வடிவம் ஆய் அந்தை என்பதே. தாய் என்பதைத் தாயம் (உரிமை) என்னும் சொல்லோடு தொடர்புபடுத்தி உரிமையுடையவள் தாய் எனச் சிலர் விளக்கம் தருகின்றனர். ஆய் என்பதே மூலச் சொல். ஆயின் ஆய் (பாட்டி) ஆயா(ய்) என அழைக்கப்படுகின்றன. என் தாய், உன் தாய் என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் யாய், ஞாய் ஆகிய சொற்களைக் காண்கிறோம். தன் ஆய் தாய் ஆனது போலவே, தன் அந்தை தந்தையாகி இருக்கிறது. எந்தை, நுந்தை முதலிய இலக்கியச் சொற்களை என்+அந்தை, நும்+அந்தை என்றே பிரித்துக் காண வேண்டும். மரூஉ இலக்கணமாக ஆதன்+தந்தை-ஆந்தை எனக் கொள்ளுதும் தவறு. ஆதன் அந்தை எனக் குறிப்பதே சரி.

பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ந்த எல். அனந்த கிருஷ்ண ஐயர் தமிழகத்தின் தென்னெல்லைப் பகுதியான பத்மநாபபுரம் பகுதியில் வாழும் மலைவேடன் எனப்படும் பழங்குடி மக்கள், தந்தையை ''அந்தை'' என்றும், பெரியப்பாவை ''வலியந்தை'' என்றும் அழைப்பதைக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். மாமன், மாமி, நாத்தூண் நங்கை என வழங்கும் சொற்களின் மூலச் சொற்களைக் கண்டுபிடிக்க இயலவில்லை. அண்ணன் மனைவி அண்ணியானது போல மாமன் மனைவி மாமி ஆகியிருக்க வேண்டும். அம்மையுடன் பிறந்தவனைக் (தாய்மாமன்) குறிக்கும் சொல்லாக ''அம்மான்'' வழங்குகிறது. இச்சொல் இன்றும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களிடம் வழங்கிவருகிறது. ''அத்திம்பேர்'', ''அம்மாஞ்சி'' முதலியன பார்ப்பனர்கள் பயன்படுத்திவரும் சொற்களாகும். தந்தையுடன் பிறந்தவளான அத்தையின் மகனைக் குறிக்க ''அத்திம்பேர்'' என்ற சொல்லும், அம்மான் மகனைக் குறிக்க ''அம்மாஞ்சி'' என்ற சொல்லும், வழங்கிவருகின்றன. அம்மாஞ்சி என்ற சொல் அம்மான் சேய் என்பதன் திரிபு. அத்தையன்பர் என்பதே அத்திம்பேர் எனத் திரிந்ததாகச் சிலர் கருதுகின்றனர்.

மைத்துனன், மைத்துனி என வழங்கும் சொற்கள் மைதுன (பாலியல்) உறவின் அடிப்படையில் வந்ததாகும். ''மைதுன'' என்பது வடமொழி, இச்சொல் கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இராசராசன் கல்வெட்டுக்களில் ''நன்மச்சுனன்'' என்றே வழக்குச் சொல்லாக வருகிறது. மைத்துனன் நம்பி ''மதுசூதனன்'' என்று பாலியல் உறவுக்குரிய காதலனைக் குறிக்கிறது கி.பி. 7 ஆம் நூற்றாண்டு ஆண்டாள் பாசுரம். மைத்துனி என்ற சொல்லே தென் மாவட்டங்களில் ''மதினி'', ''மயினி'' என வழங்கி வருகிறது. திருவாங்கூர்ப் பழங்குடி பழங்குடி மக்களில் சிலரும் இன்றைய மலையாளிகளும் ''மைத்துனன்'' என்பதற்கு மாற்றாக ''அளியன்'' என்ற சொல்லை வழங்கி வருகின்றனர். இதற்குக் ''கனிவுக்கும் அன்புக்கும் உரியவன்'' என்று தமிழ் இலக்கிய மரபினை உணர்ந்தவர்கள் பொருள் கூறுகின்றனர். மைத்துனன் என்பதனைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்லாக இதனையே கொள்ள முடிகிறது.

 

கருத்துகள் இல்லை: