24/06/2020

ஆவாரம்பூ... ஆக்காட்டி! - முனைவர் விமலா அண்ணாதுரை

தமிழ்நாட்டில், இன்று கணந்துள் பறவையை எங்கே காணலாம்? என்று கேட்டால் என்ன பதில் வருமோ தெரியாது. ஆனால், ஆள்காட்டிப் பறவை என்றால், அந்தப் பறவையைக் காட்டிக் கொடுக்கப் பெரும்பான்மையோர் முன்வரக்கூடும். ஏனென்றால், இந்தப் பறவைகளின் குரல், ஆளைக் காட்டிக்கொடுக்கும் இயல்புடையது. இவை சிவப்பு ஆள்காட்டி, மஞ்சள்ஆள்காட்டி என இரு நிறங்களில் காணப்படுகின்றன. ஆள்காட்டிப் பறவைகள், இனப்பெருக்கக் காலத்தில், எதிரிகள் தொலைவில் வரும்போதே இனம் கண்டுகொண்டு, கூட்டையும் குஞ்சுகளையும் காக்கக் கடுங்குரல் எழுப்புகின்றன. இவற்றின் அபயக்குரலைக் கேட்டு அருகிலிருக்கும் பிற பறவைகளும் விலங்குகளும் அந்த இடத்திலிருந்து விலகிவிடுகின்றன.


கணந்துள் பறவைதான், ஆள்காட்டிப்பறவை என்று பி.எல். சாமி எழுதியுள்ள சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம் (பக்-147-157) என்ற நூலில், பறவையியலின் அடிப்படையில் மிகத்தெளிவாக விளக்குகிறார்.


நற்றிணை 212-ஆவது பாடலிலும், குறுந்தொகை 350-ஆவது பாடலிலும் இரு செய்திகள் கணந்துளைப் பற்றி ஒரேமுறையாகக் கூறப்பட்டுள்ளன. கணந்துள் பறவைக்கு கால் நீளம் என்பது "நெடுங்கால்" என்று இரு பாடல்களிலும் கூறுவதிலிருந்து தெரிகின்றது. இரு பாடல்களிலும் கணந்துள் பறவை ஓசையிடுவது குறிப்பாகக் கூறப்பட்டுள்ளது. நற்றிணை "புலம்புகொள் தெள்விளி" என்று கூறியுள்ளது. குறுந்தொகையில் கணந்துளின் ஆளை அறிவித்துக் காட்டும் குரல் குறிப்பிடப்பட்டுள்ளது.


குஞ்சு பொரித்துள்ள காலகட்டத்தில் இவை வாழுமிடத்தில் விலங்குகளோ, மனிதரோ சென்றால் திரும்பத் திரும்ப கடுங்குரலிட்டு, சுற்றச்சுற்றிப் பறந்து பாய்ந்து, ஆரவாரம் செய்யுமாம். சிவப்பு ஆள்காட்டிக் குருவி குரலிடுவது ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற், ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற் என்று திருப்பித் திருப்பி ஆங்கிலத்தில் கத்துவது போல் இருக்குமென்று கூறுவர். அதனால் ஆள்காட்டிக் குருவியை ஈண்க்-ட்ங்-க்ர்-ண்ற் குருவி என்றும் கூறுகின்றனர்.


ஆள்காட்டிக் குருவியை நாட்டுப்புற மக்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆனால், தற்கால நகர நாகரிகத்தில் மூழ்கி உள்ளவர்களுக்கு ஆள்காட்டி என்றால் அது என்ன ஓர் ஆளோ, இயந்திரமோ என்று மயங்குவர். ஆள்காட்டிக் குருவியைப் பற்றி நாட்டுப் பாடல்கள் தமிழகத்திலும், ஈழநாட்டிலும் வழங்குகின்றன. ஆள்காட்டிக் குருவியுடன் பழகிய நாட்டு மக்கள் தங்களுடைய இன்ப-துன்பங்களைக்கூட ஆள்காட்டிக் குருவிமேலேற்றிப் பாடிய, அழகு போற்றத்தக்கது.


"ஆக்காட்டி ஆக்காட்டி ஆவாரம்பூ ஆக்காட்டி

 எங்கே எங்கே முட்டை யிட்டாய்

 கல்லுத்துளைத்துக் கடலோரம் முட்டையிட்டேன்

 இட்டது நாலுமுட்டை பொரித்தது மூணுகுஞ்சு

 மூத்த குஞ்சுக்கிரை தேடிமூணுமலை சுற்றிவந்தேன்

 இளைய குஞ்சுக்கிரை தேடி ஏழுமலை சுற்றிவந்தேன்

 பார்த்திருந்த குஞ்சுக்கு பவளமலை சுற்றிவந்தேன்

 புல்லறுத்தான் புலவிற்குக் காய்தின்ன போகையிலே

 மாயக் குறத்திமகன் வழிமறித்துக் கண்ணிவைத்தான்

 காலிரண்டும் கண்ணியிலே சிறகிரண்டும் மாரடிக்க

 நான் அழுதகண்ணீரும் என்குஞ்சு அழுதகண்ணீரும்

 வாய்க்கால் நிறைந்து வழிப்போக்கர்க் கால்கழுவி

 குண்டு நிறைந்து குதிரைக் குளிப்பாட்டி

 இஞ்சிக்குப் பாய்ஞ்சு இலாமிச்சுக்கு வேரூண்டி

 மஞ்சளுக்குப் பாய்ஞ்சு மறித்துதாம் கண்ணீரே


இந்த நாட்டுப்பாடல் மாடு ஓட்டும் சிறுவர் பாடுவது.


ஆவாரம்பூ காணப்படும் இடம் வறட்சியான நிலம். அத்தகைய நிலத்தின் சூழ்நிலையில் காணப்பட்ட ஒரு செடியின் பூவை அதே நிலத்தின் சூழ்நிலையில் வாழும் பறவையின் ஒரு பகுதி நிறத்திற்கு ஒப்பிட்டது நாட்டு மக்களின் இயற்கை அறிவை நன்கு எடுத்துக்காட்டுகின்றது. ஆள்காட்டியின் முட்டையைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினமென பறவை நூலோர் கூறுவர்.


சிறு கற்களும் காய்ந்த புற்களும் சூழ்ந்த இடத்தில் அதே சுற்றுச் சார்புடைய நிறத்துடன் கூடிய முட்டைகளை ஆள்காட்டி இடுவதால் யார் கண்ணுக்கும் முட்டைகள் புலப்படுவதில்லை. செயற்கையாகக் கூடு கட்டாமல் கல்லின் இடையே குழி செய்து முட்டைகளை இடுவதால் கல்லைத் துளைத்து முட்டையிட்டதாக நாட்டுப் பாடலில் கூறப்படுகின்றது. இட்டது நாலு முட்டை என்பதும் உண்மையே. நாலு முட்டைகளையே மஞ்சள் ஆள்காட்டி இடுகின்றது என்றும் பறவை நூலோர் கூறுவர்.


இந்தப் பாட்டு ஈழ நாட்டிலே "மன்னார்" நாட்டில் பாடுவதாகக் கூறப்பட்டுள்ளது. இதே பாட்டு கொங்கு நாட்டிலும், சோழ நாட்டிலும் சிறிது மாற்றத்துடன் மாடு மேய்க்கும் சிறுவர்களால் பாடப்படுகின்றது. மேற்கூறிய நாட்டுப்புறப் பாடலில் குறத்தி வலையை வைத்துப் பிடித்ததாகக் கூறியது நற்றிணை 212-ஆவது பாடலில், வேட்டுவன் வலையை வைத்துப் பிடிக்கப் பார்ப்பதுடன் ஒத்துள்ளது.


"கணந்துள்" என்ற இதன் சங்ககாலப் பெயரைப் பிற்காலத்தில் மறந்து விட்டனர். ஆனால், இப்பறவையின் ஆளறிவிக்கும் அபாய அறிவிப்புக் குரலை சங்க நூல் கூறியதைப் போலவே நேரில் கண்டுணர்ந்த நாட்டு மக்கள் "ஆள்காட்டி" என்று அழைத்தனர்.


"ஆள்காட்டிக் குருவிகள்" சிறுசிறு கூட்டமாகக் காணப்படுவதை குறித்ததாகலாம். "கணநரி" என்ற பெயர் இயற்கையில் கூட்டமாக நரிக்கூட்டம் இருப்பதைக் குறிக்கும் குறிப்புகள் சங்க நூல்களில் உள்ளன. அதுபோலவே, "கணநாதன்" என்ற சொல்லும் இதே பொருள் அடிப்படையில் காணப்படுகிறது


ஆள்காட்டிக் குருவி நீர் அருகில் காணப்படினும் நீர்ப்பறவை அன்று. வறட்சியான சூழ்நிலையை விரும்பி இவை அப்பகுதியில் அதிகம் வாழ்வதால் இப்பறவையைப் பாலை பறவையாகக் கொண்டனர்.


நன்றி - தமிழ்மணி மார்ச் 2020


கருத்துகள் இல்லை: