21/06/2020

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம் - புலவர் சு.தி.சங்கரநாராயணன்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் மரபுத் தொடர்களைத் தொகுத்து தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். அவருக்குப் பின் பல நூறு ஆண்டுகள் கழித்து வந்த இளம்பூரணரும், சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் தத்தம் உரைகளில் தொல்-சூத்திரங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தென்பாண்டி நாட்டு வழக்குச் சொற்களைத் தந்துள்ளனர். உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டிய அந்த மரபுத் தொடர்கள் இன்றும் நெல்லைச் சீமைப் பேச்சுவழக்கில் உள்ளன.


கேட்டையா - கண்டையா


உண்மையல்லாத ஒன்றைச் சொல்லும் ஒருவருடைய கருத்தை மறுக்கும்பொழுது, "அதை நீ... கேட்டையா... இல்ல... நீ கண்டையா...'' என்று பேசுவது தென்பாண்டி நாட்டின் சிற்றூர் மக்களிடையே இன்றும் கேட்கலாம்.

 

"கேட்டை என்றா நின்றை என்றா

காத்தை என்றா கண்டை என்றா

அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி

முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே.’'


(தொல்.சொல். எச்-சூ.30)


"கேட்டை எனவும், நின்றை எனவும், காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும் முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாக்கால் மேற்சொல்லப்பட்ட அசை நிலையாம். இவையும் கட்டுரைக்கண் (பேச்சு வழக்கில்) அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் வந்து ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய; இவை சிறுபான்மை வினாவொடு வருதலும் கொள்க''- இவ்வாறு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தந்துள்ளார்.


"நின்றை, காத்தை - என்பன இக்காலத்துப் பயின்றுவாரா'' - எனச் சேனாவரையர் கூறுகிறார். அதனால், அவர் காலத்தில் கேட்டை, கண்டை எனும் இரு சொற்கள் மட்டும் பயின்றனவாகக் கொள்ளலாம்.


ஆகவே, தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய கேட்டையா, கண்டையா எனும் மரபுச் சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பது வியப்புக்குரியது!

 

பெண்டாட்டி


உயர்திணைப் பெயர்களை வழங்கும் முறையைத் தொல்.சொல்.பெயரியல்-சூ.9 கூறுகிறது. அதில் வரும் "பெண்மை அடுத்த இகர இறுதி'' என்பதற்குப்பெண்டாட்டி" என்றே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் உரை விளக்கம் தந்துள்ளனர்.


அம்மூவனார் பாடிய ஐங்குறுநூறு, செய்.113-இல் உள்ள "ஊரார் பெண்டென மொழிப'' என்பதையும், மருதன் இளநாகனார் பாடிய கலித்தொகை, செய். 77-இல் உள்ள "என்னை நின் பெண்டெனப் பிறர் கூறும் பழிமாறப் பெறுகற்பின்'' என்பதையும் நச்சினார்க்கினியர் மேற்கோளாகத் தந்துள்ளார்.


நெல்லைச் சீமைச் சிற்றூர் மக்கள் இன்றும் தாம் சந்திக்கும் உறவினர்களிடம் "வீட்டிலே பெண்டு பிள்ளைகள் நல்லா இருக்காங்களா'' என நலம் கேட்பது சங்க இலக்கியத் தொடர்கள் அல்லவா! தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் வழங்கிய பெண்டு, பெண்டாட்டி எனும் சொற்கள் இன்றைய நாளிலும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது.

 

பெண் மகன்


"எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்

எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்

பெண்மை அடுத்த மகனென் கிளவியும்

அன்ன இயல என்மனார் புலவர்''

(தொல்.சொல்.பெயரியல்.சூ.10)


"புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப்பெண் மகன்என்று வழங்குப; பிறவும் அன்ன'' இவ்வாறு உரை தருகிறார் இளம்பூரணர். "கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை அடுத்து, நாணுவரை இறந்து, புறத்து விளையாடும் பருவத்தான் பால் திரிந்த பெண் மகன் என்னும் பெயர்ச் சொல்லும், பெண் மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் (தொல்காப்பியர் காலம்) அவ்வாறே வழங்கினராயிற்று. இங்ஙனம் கூறலின்'' - என விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்.


"புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோகத்தார் (கொற்கை சூழ்ந்த நாடு) இக்காலத்தும் பெண் மகன் என்று வழங்குப'' என விரிவுரை தந்துள்ளார் சேனாவரையர்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் கொற்கைக்கு வடக்கே கடற்கரையை அடுத்ததாக மேல்மாந்தை எனும் ஊர் உள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில்மாறாந்தை" எனும் ஊர் உள்ளது. இவை சங்க காலத்துக் கொற்கை சூழ்ந்த மாறோகம் எனும் பகுதியின் இன்றைய எச்சங்களாகும். இங்கேதான் பெண் மகன் என்ற மரபுத்தொடர் வழங்குவதாகச் சேனாவரையர் குறிப்பிடுகிறார். பெண்மையை வீரத்தின் விளைநிலமாக்கிய மகாகவி பாரதியாரும் மாறோகத்தாரே!


பெண்ணுக்குப் பெருமை சேர்த்தது தொல்காப்பியர் காலம். இன்றும் அவர் காலம் ஒளிவீசக் காண்கிறோம். ஆகவே, இந்திய வரலாற்றுப் பெண் மகன்களான ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு, விஜயலட்சுமிப் பண்டிட், இந்திரா காந்தி, ராணி மங்கம்மாள், தில்லையாடி வள்ளியம்மை முதலியோரையும் தொல்காப்பியர் கூறும் தமிழ் மரபு வழியேமாறோகத்தார்" எனும் தென்பாண்டி நாட்டாரின் வழக்கப்படி பெண்மகன்கள் என்று கூறி மகிழ்வோம்.


நன்றி - தமிழ்மணி 2012

கருத்துகள் இல்லை: