21/09/2014

சொல் வேட்டை - நீதியரசர் வி. இராமசுப்பிரமணியன் - 5

எடுத்த எடுப்பில் நான் இரு செய்திகளை உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும். ஒன்று, நான் கனவிலும் எதிர்பார்க்காத அளவில், இந்தச் சொல் வேட்டை எங்கெங்கோ தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் குறியீடாக இந்த வாரம் புழல் சிறையிலிருந்து ஒரு சிறை வாசி (அவரைக் கைதி என்று சொல்ல மனம் ஒப்பவில்லை) நான்கு சொற்களை எழுதி அனுப்பியிருக்கிறார். நான் நெகிழ்ந்து போனேன். இரண்டாவது, சொல் வேட்டையில் பங்கேற்கும் வாசகர்கள் ஆங்காங்கே அவரவர்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து வட்டார வழக்காக இருந்து, இன்று வழக்கொழிந்து போன அல்லது போய்க்கொண்டிருக்கும், சொற்களையும் தேடிப்பிடிக்கலாம். உண்மையில் சொல்லப்போனால், வழக்குச் சொற்களுக்கு தமிழ் மொழியில் தனி இடம் உண்டு.

கம்பன் தன் காப்பியத்தில் முதலில் பாடிய பாட்டு "குமுதனிட்ட குலவரைக் கூத்தரில்'' என்றும், அப்பாட்டில் வரும் "துமி' என்ற ஒரு வழக்குச் சொல் ஒரு சர்ச்சையைக் கிளப்பியது என்றும், கலைவாணியின் அருளால் அந்த சர்ச்சை முடிவுற்றது என்றும் ஒரு கதை உண்டு. எனவே, வாசகர்கள் பண்டைய இலக்கியங்களில் வேட்டை நடத்தும்போதே, கூடவே வழக்குச் சொற்களைத் தேடுவதும் நலம் பயக்கும் என்று கருதுகிறேன். இனி இந்த வார வேட்டைக்கு வருவோம்.

நான் மேலே கூறியது போல் புழல் சிறையிலிருந்து தே.புதுராஜா, தனது கடிதத்தில் "பாரநோய' என்ற சொல்லுக்கு தன்னிலை அறியாக் குறைபாடு, அவ நம்பிக்கை, தொடர்புத் திறன் குறைபாடு, வேண்டா பயம் குறைபாடு என்னும் நான்கு சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

சென்னை சேத்துப்பட்டிலிருந்து மு.கேசவராமன், "பாரநோய' என்ற சொல்லுக்கு மன மாயை, கற்பனை, பொய்த் தோற்றம், கற்பனை நினைப்பு, கானல், எதிர்மறை ஏற்பு, அச்சம், பீதி, மன மயக்கம் ஆகிய சொற்களைப் பரிந்துரைத்திருக்கிறார்.

கிழவன் ஏரியிலிருந்து புலவர் செ.சத்தியசீலன், திருக்குறளைச் சான்றாகக் காட்டி "பாரநோய' என்ற சொல்லுக்கு "மிகை அச்சம்' என்பது பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

நங்கநல்லூர் டி.வி. கிருஷ்ணசாமி, "மனப்பிரமை' என்ற சொல்லையும், புதுச்சேரி தே. முருகசாமி, வீண் குழப்பம், தற்சார்பின்மையுடன் கலங்கி மருகுவது ஆகிய சொற்களையும் எடுத்துரைத்துள்ளார்கள்.

அண்ணாநகர் ஆனந்தக்கிருஷ்ணன், மனப்பிறழ்வு, மனச்சிதைவு ஆகிய சொற்களையும், திருப்பத்தூர் புலவர் விமலாநந்தன், "கற்பனையான அச்சம்' அல்லது "புதிரான அச்சம்' என்ற சொற்களையும் எழுதியிருக்கிறார்கள்.

பாடியிலிருந்து மு.அரங்கசுவாமி, தமிழ் லெக்சிகன்-இல் "பாரநோய' என்ற சொல் குறிப்பிடப்படவில்லை என்றும், ""மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்'' என்ற பழமொழியை அடியொற்றி பாரநோய என்ற சொல்லுக்கு "மருள்' அல்லது "மருளி' சரியான தமிழ்ச் சொல்லாக அமையும் என்றும் கூறுகிறார்.

வில்லிவாக்கம் சோலை.கருப்பையா, கானல் கற்பனை பீதி, கானல் உணர்வு அச்சம் அல்லது கற்பிதவாதம் என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

புலவர் அடியன் மணிவாசகன், "பாரநோய' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியிலிருந்து "அறிவுப்பிறழ்ச்சி' அல்லது "தருக்கியல்', "சித்தப்பிரமை' ஆகிய சொற்கள் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், நல்ல மனநலக் குறைவினால் ஏற்படும் நோயாக இது இருப்பதால் "மனநோய்' என்று கூறுவதே மருத்துவத்தை நாடும் அறிவு திரிபுக்கும், மூளை கலக்கத்திற்கும் செயல் மாறாட்டத்திற்கும் பொருந்தி வரும் என்றும் உரைத்திருக்கிறார்.

திருச்சி தி.அன்பழகன், தெளிவின்மையைக் குறிக்கும் தமிழ்ச்சொல் "ஆசு' என்பதால், "பாரநோய' என்ற மனநோய் அல்லது மனக்கோளாறை "ஆசுள்ளம்' என்று அழைக்கலாம் என்கிறார்.

கோயம்புத்தூர் கோவில்பாளையம் முனைவர் வே.குழந்தைசாமி, திருவருட்பாவில் வள்ளலார் பல இடங்களில் "மருள்' என்ற சொல்லை (மருளுடைய மனப்பேதை நாயினேன்) குறிப்பதாலும், திருவாசகத்தில் மணிவாசகப் பெருமானும் ""மருளனேன் மனத்தை மயக்கு அற நோக்கி'' என்றும், நம்மாழ்வார் ""மருளே இன்றி உன்னை என் நெஞ்சத்து இருத்தும் தெருளே'' என்றும் கூறுவதால், "மருள்' என்ற சொல் சரியாக இருக்கலாம் என்கிறார். மேலும், திருவருட்பாவில் "மருட்பகை தவிர்த்து' என்ற சொல்லால் மருளையும், பகை அச்சத்தையும் வள்ளலார் சுட்டிக் காட்டுவதால், மருட்பகை அல்லது மருள் என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

ஆலந்தூரிலிருந்து புலவர் இரா.இராமமூர்த்தி, தியங்குதல், வெருவருதல், திகைத்தல் ஆகிய சொற்களையும், வி.ந.ஸ்ரீதரன், மன மயக்கம் அல்லது மதி மயக்கம் என்ற சொற்களையும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இவற்றைப் பார்க்கும்போது சென்னைப் பல்கலைக்கழக அகர முதலியில் குறிப்பிட்டிருக்கும் "தருக்கியல்', "சித்தப்பிரமை' என்பது பொருத்தமாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது. அதை விட, "மனப்பிறழ்வு என்பது பொருத்தமாக இருக்கும்.

சொல் வேட்டை தொடரும்...

நன்றி - தமிழ்மணி 09 12 12

கருத்துகள் இல்லை: