12/05/2012

பெண் என்னும் சுமைதாங்கி – தொ.பரமசிவன்

இரண்டு அகலமான கற்களை நெட்டுக்குத்தாக நட்டு, அவற்றின் மீது கிடைவசமாக மற்றொரு கற்பலகை வைக்கப்பட்ட அமைப்பை சாலை ஓரங்களில் பார்த்திருக்கலாம். இதுதான் சுமைதாங்கிக்கல். தரையிலிருந்து சுமார் 4ல் இருந்து 4.5அடி உயரத்தில் கிடைவசக்கல் பொருத்தப்பட்டிருக்கும். போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் தலைச்சுமையாக பொருட்களைக் கொண்டு செல்பவர்கள் பிறர் உதவியின்றி இந்தச் சுமைகளை இறக்கி வைத்து, பின்னர் யாருடைய உதவியுமின்றி தலையில் ஏற்றிக் கொள்வார்கள். இப்படி இளைப்பாறும் நேரத்தில் சுமையைத் தாங்குவதற்காக உருவான கற்களே சுமைதாங்கிக் கற்கள். வயிற்றுச்சுமை தாங்காமல் இறந்த பெண்ணின் மன ஆறுதலுக்காக, மற்றவர்களின் சுமையை பகிர்ந்து கொள்ளுதல் என்ற மனிதாபிமான நோக்கமே இதற்குப் பின்னிருக்கும் அம்சம்

மகப்பேற்றின்போது வயிற்றுச்சுமை தாங்காமல், இறந்த பெண்களின் நினைவாகவே சுமைதாங்கிக் கற்கள் நடப்படுகின்றன. சாதாரணமாக இவைகளில் கல்வெட்டுகள் இருப்பதில்லை. விதிவிலக்காக ஒன்றிரண்டு கற்களில் இறந்த பெண்ணின் பெயர் பொறிக்ப்பட்டுள்ளது.

ஆணாதிக்கச் சமுதாயத்தில் பெண் ஒரு சுமைதாங்கி என்பதை இந்த ஓர் இடத்தில் மட்டும் ஆண் சமுதாயம் ஏற்றுக்கொண்டுள்ளது. பழைய தமிழ் இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் சுமைதாங்கிக் கற்கள் பற்றிய குறிப்பு இல்லை. எனவே, இந்த வழக்கம் விசயநகர ஆட்சிக்காலத்திலும் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் பெருகி இருப்பதாகத் தெரிகிறது

தொன்மையாக சுமைதாங்கிக் கற்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. சுமைதாங்கிக் கற்கள் பொதுவாக ஊர் எல்லையும் நெடுஞ்சாலையும் சந்திக்கும் இடத்தில் நிழல் தரும் மரத்தடிகளில் அமைக்கப்படுகின்றன.
சுமைதாங்கிக் கற்களின் வடிவத்தைப் பொறுத்தமட்டில் கிடைவசத்தில் அமைக்கப்பட்ட கற்பலகையே இறந்த பெண்ணின் நினைவிற்குரியதாகும். அதனைத் தாங்க நிறுத்தப்பட்ட இரண்டு கற்களும் மகப்பேற்று உதவியாளர்களைக் குறிக்கும். இந்தியா முழுவதும் மகப்பேற்றுச் சிற்பங்களில் இரண்டு பெண் உதவியாளர்கள் காட்டப்பெறுவது ஒரு மரபாகவே இருந்து வருகிறது. நாட்டார் மரபில் இந்தப் பெண் உதவியாளர்களை தொட்டுப் பிடித்தவர்கள் என்பர்.

கிராமப்புறங்களில் ஓரளவு பொருள் வசதி உடைய குடும்பத்தவரே இந்தச் சுமைதாங்கிகளை நிறுவியுள்ளனர். பொதுவாக மகப்பேற்றின்போதும் சுமங்கலியாகவும் இறந்த பெண்களை மாலையம்மன், வாழவந்தாள், சேலைக்காரி ஆகிய பெயர்களில் வணங்குவது தமிழக நாட்டார் மரபாகும். பொருள் வசதி குறைந்த வீட்டில் மாலையம்மனுக்கு நினைவு நாளில் படைத்த புதுச்சேலையினை ஓலைப் பெட்டியில் வைத்து உத்திரத்தில் கட்டித் தொங்கவிட்டிருப்பார்கள். மறு ஆண்டு நினைவுநாளில்தான் அந்தச் சேலையினை மற்றவர் எடுத்து உடுத்துவர்.

மகப்பேற்றில் இறந்த பெண்களைப் போல கன்னியாக இறந்த பெண்களும் வழிபாட்டுக்கு உரியவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்கள் நினைவுக்கு சேலை படைப்பதில்லை. ‘கன்னிசிற்றாடைமட்டுமே படைப்பர். இன்றளவும் கிராமப்புறத்துத் துணிக்கடைகளில் கன்னி சிற்றாடைகள் விற்பனைக்கு உள்ளன.

விசயநகர மன்னர் ஆட்சிக்காலம் தொடங்கி தமிழ் மக்களின் உணவு, உடை, சடங்குகள், திருவிழாக்கள் ஆகியவற்றில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மகப்பேற்றில் இறந்த பெண்ணின் நினைவாக சுமைதாங்கிக்கல் அமைக்கும் வழக்கமும் அக்காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். இதுவன்றி, தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் சுமைதாங்கிக்கல் குறித்த குறிப்புகள் ஏதும் இல்லை.

சந்திப்புஎஸ்.கார்த்திகேயன்.

நன்றி - புதியதலைமுறை 19 ஜனவரி 2012

பண்பாடு, நாட்டுப்புறவியல், வைணவம், இலக்கியம் என பல துறைகளிலும் தன்னுடைய கருத்துக்களை அற்புதமாக பதிவு செய்து வரும் பேராசிரியர் தொ.பரமசிவன் புதியதலைமுறை பொங்கல் சிறப்பிதழில் சுமைதாங்கிக்கல் குறித்து கூறிய இந்தப் பதிவு மிகவும் முக்கியமானது.

நன்றி - சித்திரவீதிக்காரன்

கருத்துகள் இல்லை: