29/05/2012

தோல்பை - சத்யானந்தன்

அவள் அழைப்பு மணியை அழுத்தினாள். வாயிற் கதவின் சாவியிலொன்று அவளிடம் கொடுக்கப்பட்டிருன்தது. இருந்தாலும் அழைப்பு மணிக்குப் பிறகு கதவு சற்று நேரம் திறக்காவிட்டால்தான் அவள் சாவியைப் பயன் படுத்துவாள்.

லிஃப்டின்கிறீச்சிடும் மின்சார மணி ஒலி தொடர்ந்து கேட்டபடி இருந்தது. ‘லிஃப்டின்அருகே சென்று அதன் மடிபடும் கிராதிக் கதவைப் பின்னே இழுத்துப் பிறகு அறைந்து மூடினாள். ஒலி நின்றது. இன்னும் ஒரு நிமிடம் தாமதிக்கலாம். அன்தஃப்ளாட்டின் வாயிற்கதவை ஒட்டிய ஜன்னல் மூடியிருந்தது. உள்ளே விளக்கெரியும் மங்கலான வெளிச்சம் தெரிந்தது.

முதல் நாள் இரவு நல்ல மழை. புடவை சேறாகியிருந்தது. உதறினாள். ஈரமண் உதிரவில்லை. அப்போது தான் பெண்கள் அணியும் ஒரு ஜோடி தோல் செருப்புக் கண்ணில் பட்டது. சற்று விலையுயர்ந்தது தான். அந்த வீட்டுக்கு உரியதில்லை.

விடியற்காலை வந்து பாத்திரம் மட்டும் கழுவிப் போவது இன்று முடியவில்லை. மழையின் போது மின்சாரம் நின்று குழன்தைகள் தூக்கம் கெட்டு இவளும் சரியாகத் தூங்கவில்லை.

கதவைத் திறந்து, சாவியைப் பர்ஸுக்குள் வைத்து, பர்ஸை எப்போதும் கொண்டு வரும் வயர் கூடைக்குள் போட்டாள். சில நாட்களில குப்பென்று அடிக்கும் சிகரெட் வாடை தணிந்து தெரிந்தது.

முதலில் தேய்க்க வேண்டிய பாத்திரங்களை ஊறப் போட்டால், வீட்டைப் பெருக்கித் துடைத்து, துணிகளை ஊறப் போட்டு, பாத்திரம் துலக்கி, இறுதியாகத் துணி துவைத்தால் நேரம் மிச்சம். யாரும் இருந்தாலும், இல்லா விட்டாலும் இந்த வீட்டில் இப்படிப்பட்ட வரிசைச் சுதந்திரம் அவளுக்கு உண்டு. மற்ற வீடுகளில் வரிசை மாறி நேரம் வீணாகும்.

வரவேற்பறையைத் தாண்டி நடையில் வலது பக்கம் கழிப்பறையும் குளியலறையும் ஒன்று சேர்ந்ததானபாத்ரூம். அதே போன்று ஒன்று அறைக்குள்ளேயும் இருந்தது. சமையலறையில் நுழையும் முன் காலைக் கழுவிக் கொள்ள வேண்டும் என்ற பாடம் இரண்டு வருடம் முன் வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவளுக்குக் கடுமையாக பழக்கப் படுத்தப் பட்டது இவ்வீட்டில். காலை கழுவும் போது பாவாடைக் கிழிசல் கண்ணில் பட்டது. பழைய பாவாடை ஒன்று கேட்டு வாங்க வேண்டும்.

பால்கனியில் இருந்த கால் துடைக்கும் தேங்காய் நார்த் தடுக்கில் சேற்றுப் புண் வலி இன்னும் அதிகமாய்த் துளைத்தது. களிம்பு போட்டுக் கொள்ள ஒழியவில்லை.

சமையலறையில் பாத்திரம் கழுவும் பேசின் நிரம்பியிருந்தது. குவியலுக்கு மேலே பிடி வைத்த அலுமினிய டீ போடும் பாத்திரம். அதனுள்ளே டீ வடிகட்டி டீத்தூளுடன் இருந்தது. வடி கட்டியில் இளஞ்சூடு தெரிந்தது. அதை கீழேயுள்ள குப்பைத் தொட்டியில் கவிழ்த்தாள். குப்பைக் கூடையில் வெங்காயத் தோல்களும், வெண்டைக்காய்த் தலைகளும், கத்திரிக்காய்க் காம்புகளும், ரொட்டியைச் சுற்றி வரும் பிளாஸ்டிக் கவரும், பால் கவரும் கிடந்தன. குப்பைக் கூடைக்கு அருகே ஒரு டிபன் பாக்ஸில் எஞ்சிய சாதமும், ஒரு பாட்டிலில் கத்திரிக்காய் சாம்பாரும் இருந்தன. அவளுக்காக.

கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா?

ஓடிப் போயிக் கல்யாணந்தான் கட்டிக்கலாமா?”

திடீரென்று ரேடியோ சத்தம். அறைக்குள்ளேயிருந்து வருகிறது என்று தோன்றியது.

பேசினிலிருந்து குக்கரை முதலில் வெளியே எடுத்து, சிறிய கிண்ணங்கள், மதிய உணவு டிபன் பாக்ஸின் சகோதர பிளாஸ்டிக் டப்பாக்கள், கரண்டிகளை உள்ளே போட்டு, தண்ணீரை ஊற்றினாள். அடுப்பின் மேல் குடிநீர் கொதிக்க வைத்த பாத்திரம் இன்னும் சூடு ஆறாதிருந்தது. எவர்சில்வர் அடுப்பு நன்கு துடைத்துப் பளபளக்கும்கிரானைட்சமையல் மேடையில் அதன் பிம்பம் தெரிந்தது. சாமிஷெல்ஃபில் முருகன் படத்துக்குப் பூப்போட்டு ஏற்றிய விளக்கு இன்னும் சுடர் விட்டுக் கொண்டிருந்தது.

அவள் திருமணமாகி சென்னைக்கு வந்த புதிதில் வீடுகளில் தேங்காய் நார்தான் பாத்திரம் தேய்க்க. ஆனால் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் சாக்கடைக் குழாய் அடைத்துக் கொள்வதால் மெல்லிய நைலான்வயர்பிரஷ்கள் வந்து விட்டன.

அடுப்பின் அருகே வெளிர் நீலப் பின்னணியில் சிவப்பு ரோஜாப் படம் போட்ட ரெக்ஸின் பை இருந்தது. பகலில் அது வீட்டில் இருக்காது. மதிய உணவு கொண்டு போகும் பை ஆயிற்றே? ‘ஜிப்பைத் திறந்து உள்ளே பார்த்தாள். எவர்சில்வர் டிபன் பாக்ஸும்குடி தண்ணீர் நிரம்பிய பாட்டிலும் இருந்தன. டிபன் பாக்ஸில் ஜாம் தடவி குறுக்கே வெட்டிய ரொட்டித் துண்டுகள். காலையில் சமைக்கவில்லை போல. அவசரத்தில் இதுவும் விட்டுப் போய் விட்டிருக்கிறது.

ஒரு நிமிடம் ஹாலுக்குள் எட்டிப் பார்த்தாள். தோல் பை இல்லாவிட்டால் எளிய சமையலோ சமையலே இல்லாமலோ என்று நாள் ஓடும். ஆனால் தோல் பை இருக்கிறதே. ‘ஷோ கேஸின்கீழே உள்ள ஷெல்ஃப் முழுவதையும் அடைத்தபடி அந்தத் தோல் பை வீற்றிருக்கிறது.

ஒரு நிமிஷத்திலே தொண்ணூறு பழத்தை ஜூஸ் பண்ண முடியுங்க

எப்படி ஸார்?”

மூணு ஆரஞ்சை மிக்ஸியிலே போடுங்க

ஸார் .. நல்லாவே கடிக்கறீங்க. இந்தப் பாட்டை யாருக்கு டெடிக்கேட் பண்றீங்க?” எஃப் எம் தொடர்ந்து அலறியது.

காதல் பிசாசேகாதல் பிசாசே…”

சமையலறைக் கதவிடுக்கில் இருக்கும் பூந்துடைப்பத்தை எடுத்து ஹாலுக்குள் வந்ததும் அதை ஓரமாகக் கீழே போட்டாள்.

ஆங்கில தினசரி உணவு மேசை மீதும் தரையில் சில பக்கங்களுமாய் இறைந்து சிதறிக் கிடந்தது. இந்த குறைந்த பட்ச ஒழுங்கீனம் கூட பிற நாட்களில் இருக்காது. தோல்பை இருக்கும் நாட்களில் மட்டுமே எதாவது இடம் மாறியோ அலட்சியமாக எறியப்பட்டோ கிடைக்கும்.

தினசரியின் முதல் பக்கத்தில் விபச்சாரத்துக்காகக் கைது செய்யப்பட்ட நடிகையின் படம் வந்திருந்தது. பத்திரிக்கையுள்ளே வண்ணங்களிலும் கோடுகளிலும் பல படங்கள் இருந்தன. பல பக்கங்களில் வெறும் ஆங்கில எழுத்துக்களே இருந்தன. ஒரே ஒரு படத்தின் உருவம் மட்டும் பிடிபட்டது. ஒரு பெண்ணின் படம். அவளின் நீளமான கூந்தல் முறுக்கிப் பாம்பாகப் படம் எடுத்தது. மார்பகங்களின் இடத்தில் ஒரு கைவிலங்கின் இரு பக்கக் காப்புகள். தொடைகளின் நடுவிலிருந்து தொடங்கிய சங்கிலி அவளின் கால்களைப் பிணைத்திருந்தது. அவள் தலை மீது ஒரு சிவலிங்கம்.

அந்தப் பத்திரிக்கையையும் அந்தலேடீஸ் பர்ஸ்ஸையும் தினசரிக்கும் மேலே பாரமாக வைத்தாள். அந்த பர்ஸ் இந்த வீட்டுக்கு உரியதல்ல. அந்தப் பத்திரிக்கையுந்தான்.

ஆனால் அவள் வேலைக்குச் சேர்ந்த புதிதில் பால்கனியில் ஸ்கூலில் கரும் பலகை வைக்கும் மரஸ்டேன்ட்போல ஒன்று இருந்தது. அதில் பெரிய வெள்ளை அட்டையில் இதே மாதிரிப் படங்களைப் பார்த்திருக்கிறாள். பால்கனியை அடைத்தபடி இருக்கும் அந்த ஸ்டாண்ட் மழை நாட்களில் உள்ளே ஹாலுக்கு வந்து விடும். சில சமயம் துண்டு துண்டான பிளாஸ்டிக் போர்டுகளில்டூத் பேஸ்ட்விளம்பரமோ, முழுதாக எப்படி வரப் போகிறது அல்லது வேறெதுவோ என்று ஆவலைத் தூண்டும் படி வளரும். ஒரு முறை பால்கனியில் துண்டு துண்டாக வரைந்ததெல்லாம் இணைந்து மெயின் ரோடில் சினிமா விளம்பரமாக வந்ததைப் பார்க்க அவளுக்குப் பெருமையாயிருந்தது.

ஷூ ஸ்டாண்ட்டுக்குக் கீழே தரையில் கருப்புஷூஜோடிசாக்ஸ்பிதுங்கக் கிடந்தது. அதை உள்ளே வைத்தாள். ஷோ கேஸை தூசு தட்டிக் கீழே உள்ள தோல் பையை நகர்த்தும் போது அதன் கனம் தெரிந்தது.

பால்கனியில் இருந்த மரச் சட்டம், பெயிண்ட், பிரஷ் எல்லாம் இந்தத் தோல் பை வந்த பிறகு காணாமற் போய் விட்டன. இந்தப் பைக்குள் என்ன இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும்.

மருந்து மாத்திரைகள், குழந்தைகள் இருமலுக்கான டானிக், ஏன்? இன்று நேரம் ஒழிந்தால் போட்டுக் கொள்ளக் கொண்டு வந்திருக்கும் சேற்றுப் புண் களிம்பு கூட இதிலிருந்து தான் கிடைத்தது.

அக்கம் பக்க வீடுகளில் வேலை செய்யும் பெண்கள் கூட இவளிடம் கேட்டு நினைவு படுத்தி மாத்திரைகள் வாங்கிக் கொண்டதுண்டு.

ஹாலை சுத்தம் செய்த கையோடு பழக்கம் காரணமாக அறைக் கதவின் மீது கையை வைத்தாள். உள்ளே தாளிட்டிருந்தது. பிற இடங்களில் பெருக்கி அள்ளியவற்றை சமையலறையில் உள்ள குப்பைப் பையில் போட்டு மறக்காமல் எடுத்துச் செல்ல அதை வாசல் கதவின் மீது சார்த்தி வைத்தாள்.

பாத் ரூமில் இருந்த சிறிய பிளாஸ்டிக் பக்கெட்டில்பினாயில்துளிகளை விட்டுத் தண்ணீர் நிரப்பி துடைக்கும் துணியை அதில் அலசும் போது அறைக்குள் உள்ள பாத்ரூம் கதவு மூடும் சத்தம் கேட்டது. ரேடியோ சத்தம் மெலிதாயிருந்தது.

ஹாலைத் துடைத்து மின் விசிறியை இயக்கி நடையைத் துடைக்கும் போது அறை வாசலில் உள்ள பிளாஸ்டிக் குப்பைக் கூடையில் சிகரெட் பாக்கெட் தவிர ஒரு சிறிய அட்டைப் பெட்டி இருந்தது. ஆணுறை இருந்த டப்பா. இரவு விளக்கு எரிவது அறைக்கதவின் கீழ் இடைவெளி வழியே தெரிந்தது.

வாசல் மணி அடித்தது. இஸ்திரி. “யாரும் இல்லே. பணம் அப்புறம் வாங்கிக்க.’ என்றாள். துணிகளை மேசை மீது வைத்தாள்.

துவைத்த துணிகளை பாத்ரூமிலேயே வடிய விட்டு பால்கனியில் காலை நீட்டி அமர்ந்தாள். இறங்கும் வெய்யில் பாதி பால்கனி வரை விழுந்திருந்தது. அதில் கால் விரல்களை விரித்துக் காட்டினாள். சேற்றுப் புண் களிம்பை விரலிடுக்குகளில் அப்பினாள்.

பக்கத்து வீட்டு பால்கனியில் காயும் துணிகளை வைத்து குடித்தனக்காரர்கள் மாறி இருப்பது தெரிந்தது.

பக்கத்து வளாகங்களுக்கிடையே சாலையில் அலையும் வாகனங்களும் ஆட்களும் தெரிந்தார்கள். ஒரு பிரம்மாண்டமான விளம்பர போர்டில் மீசையில்லாத சினிமா நடிகர் செல் போனுடன். இன்னொன்று கார் விளம்பரம்.

நகரின் பல இடங்களிலும் இது போன்ற பிரம்மாண்டமான விளம்பரத் தட்டிகளை அவள் பார்த்திருக்கிறாள். மேம்பால உயரத்துக்குக் கூட அவை வருகின்றன.

ஒரு போட்டோவை எப்படி இவ்வளவு பெரியதாக்குகிறார்கள்? முன்னர் பால்கனியில் வரையப்பட்ட மாதிரி துண்டு துண்டு போட்டோக்கள் எடுப்பார்களா? இல்லை அவ்வளவு பெரிய போட்டோ ஸ்டூடியோ இருக்கிறதா?

அவளுடைய அப்பா செத்துப் போன போது அவளிடம் அவருடைய போட்டோ கூட இல்லை. அவள் கல்யாணத்தின் போது அவளை புருஷனுடன் மாலையும் கழுத்துமாய் ஸ்டூடியோவில் வைத்து ஒரு போட்டோ எடுத்தார்கள். அக்காள் கல்யாணத்தில் விருந்தினர் யாரோ எடுத்தகுரூப்போட்டோவில் அப்பாவும் இருந்தார். அவரை மட்டும் பெரிதாக்க ஒரு ஸ்டூடியோவில் நூற்றி ஐம்பது ரூபாய் கேட்டான். அத்தோடு அது விட்டுப் போயிற்று.

வாசற் கதவை மூடும் சத்தம் கேட்டுக் கண் விழித்தாள். வெய்யில் இறங்கி இருந்தது.

அறைக்கதவு திறந்திருந்தது. உள்ளே யாருமில்லை. டீ குடித்துக் காய்ந்து போயிருந்த இரண்டு டம்ளர்களை எடுத்துத் தேய்த்தாள்.

அறையைப் பெருக்கும் போது கட்டிலுக்கு அடியிலிருந்து பூப்போட்ட கைக்குட்டை ஒன்று கிடைத்தது. அந்த வீட்டில்லேடீஸ் கர்ச்சீஃப்தனியாகக் கிடையாது. அந்தக் கைக்குட்டையில் வீசிய மணம் கட்டிலின் மீதும் வீசுவதாகத் தோன்றியது. அதைக் கட்டிலின் மீது வைத்து விட்டு அறையைத் துடைத்தாள்.

பால்கனியில் காய்ந்திருந்த துணிகளை மடித்து வைத்து பாத்ரூமில் தண்ணீர் வடிந்த துணிகளை பால்கனியில் காயப் போட்டாள்.

ஹாலில் மேசை மீதிருந்த பர்ஸ், பத்திரிக்கை, ஷூ ஸ்டாண்டில் இருந்த கருப்பு ஷூ, தோல் பை எல்லாம் போயிருந்தன. இஸ்திரி செய்ததில் இருந்த ஆண் துணிகளும்.

சமையலறையில் தனக்கென வைத்திருந்த உணவைவயர்பையில் வைத்து மறு கையில் குப்பைப் பையை எடுக்கும் போது ஆணுறை பாக்கெட் அதற்குள் வைக்கப் பட்டிருந்தது கண்ணில் பட்டது. வீட்டைப் பூட்டி விட்டுக் கிளம்பினாள்.

லிஃப்ட்க்கான பொத்தானை அழுத்த ஓரிரு நிமிடத்தில் அது வந்தது.

அதில் ஏறாமல் மறுபடி வீட்டைத் திறந்து அறைக்குள் நுழைந்து பூப்போட்டகர்ச்சீஃபைகுப்பைப் பையில் போட்டாள். தலையணையுறைகள், மெத்தை விரிப்புகளை உருவி பால்கனியில் உள்ள துவைக்க வேண்டிய துணிக்கானபிளாஸ்டிக் டப்பில் போட்டாள். சலவை செய்த தலையணையுறைகள், விரிப்புகள் ஒப்பனை மேசையின் கீழ் இழுப்பறையில் இருந்தன. படுக்கையைச் சரி செய்தாள்.

தரையில் அமர்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

நன்றி - கனவு அக்டோபர் 2004

கருத்துகள் இல்லை: