12/05/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 39 : தமிழ்த்தாய்!

"தனித்தமிழ் இயக்கத் தந்தை' மறைமலையடிகள்

 தமிழராகிய நாம் நாடோறும் பேசிவருந் தாய்மொழி தமிழேயாகும். நாம் சிறு குழவியாய் இருந்தபோது நம் அன்னையின் தீம்பாலைப் பருகிப் பசி தீர்ந்து அவள் மடியிற் கிடக்க, அவள் நம்மைக் கொஞ்சி முத்தம் வைத்து நம்மைப் பாராட்டிப் பேசியது தமிழ் மொழியிலன்றோ?

சிறு குழந்தையாய் இருந்த அந்தக் காலந்தொட்டு மறுபடியும் நாம் இந்த உலகை விட்டு அகன்று போகும் வரையில், நம் தாய்-தந்தையாரோடும், உடன் பிறந்தவரோடும், மனைவி மக்களோடும், நம் நாட்டில் உள்ளவரோடும் நாம் ஊடாடி உறவாடிப் பேசுவதும் நமதருமைத் தமிழ் மொழியிலன்றோ? இங்ஙனம் நமது உயிரோடும் உடம்போடுங் கலந்து நமதறிவைத் தன் வண்ணம் ஆக்கி, கனாக்காணுங் காலத்துங் கனவுலகில் உள்ளவரோடு நாம் பேசுகையில் அப்பேச்சோடும் உடன் வந்து நிற்பதாய்க் கிளர்ந்து விளங்குவது நமது இனிய செந்தமிழ் மொழியேயாய் இருத்தலின், நமதுயிர் இவ்வுலக வாழ்வைத் துறந்து மறுமையுலகில் சென்று உலவும்போதும், நமக்கு உற்ற துணையாய் நம்மோடு உடன்வந்து நிற்பது தமிழ்மொழியே யாகுமென்பது தெளிவாகப் பெறப்படுகின்றதன்றோ?

இவ்வாறு இம்மை மறுமை யிரண்டிலும் நமது உயிர்க்கு உற்ற துணையாய் இருந்து உதவுவது "தமிழ்மொழி' ஒன்றுமே யாகையால், நடுவே நாம் கற்கும் ஆங்கிலம், ஆரியம் முதலான மொழிகள் அதுபோல் நமக்கு எப்போதும் உதவியுந் துணையுமாய் இருந்து பயன்படமாட்டா என்றுணர்க.

நமது வயிற்றுப் பிழைப்புக்காகவும், வேறு சில காரணங்களுக்காகவும் ஆங்கிலம் சமஸ்கிருதம் முதலான மற்ற மொழிகளை நாம் வருந்திக் கற்க வேண்டுவது கட்டாயமாய்த் தோன்றினாலும், இவற்றின் பொருட்டு நமது இனிய செந்தமிழை மறப்பதும் அதனைப் பயிற்சி செய்யாமற் கைவிட்டிருப்பதும் நமதுயிரையே நாம் அழிப்பதாய் முடியும்.

தமிழ் முதலான மொழிகளுள் ஒன்றையேனும் அல்லது இரண்டு, மூன்றையேனுந் தமது குழந்தைப் பருவந்தொட்டுப் பேசிவருபவர், தாம் பேசும் அவ் இயற்கை மொழிகளையே மேலும் மேலுங் கற்றுத் தமது அறிவை வளப்படுத்தாமல் அவற்றைக் கைவிட்டு முற்றும் புதியவான ஆங்கிலம், ஆரியம் முதலியவற்றையே கற்றுப் பழகும் நம் நாட்டவர் பலர் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் பலவகை நோய்களாற் பிடிக்கப்பட்டு மாய்ந்து போகின்றனர்!

அறிவிற் சிறந்தவரான ஆங்கில நன்மக்கள் தமக்கு இயற்கையில் உரிய ஆங்கில மொழியை நன்றாகக் கற்ற பிறகுதான் வேறு மொழிகளைக் கற்கின்றார்கள்; தமது மொழியைக் கல்லாமல் வேறு மொழிகளைச் சிறிதுங் கற்கவே மாட்டார்கள். இப்படிப்பட்ட உயர்ந்த பழக்கம் அவர்களிடத்தில் இருப்பதனாலேதான் அவர்கள் தமது மொழியில் நிகரற்ற புலமையுடையவராய்ச் சிறந்து விளங்கி, நீண்டநாள் உயிர்வாழ்ந்து உலகத்திற்கு அளவிறந்த நன்மைகளையெல்லாம் விளைவித்து வருகின்றார்கள். நம்மவர்களோ தமக்குரிய செந்தமிழ் மொழியைச் சிறிதுங் கல்லாமலுஞ், சிறிது கற்றாலுந் தமிழ் நூற்பயிற்சி நன்கு நிரம்பாமலும், வயிற்றுப் பிழைப்புக்குரிய ஆங்கிலம் முதலான அயல் மொழிகளையே மிகுந்த பொருட் செலவு செய்து, பல ஆண்டுகள் அல்லும் பகலும் உழைத்துக் கற்றுக் கொள்கின்றார்கள்.

கற்றும் என்! நம் தமிழ்நாட்டுக்குரிய தென்னங்கன்றைப் பெயர்த்துக்கொண்டு போய்ப் பனிமிகுந்த ஆங்கில நாட்டில் வைத்தால் அஃது அங்கே வளராமல் அழிந்துபோவதுபோல, நமது செந்தமிழை விட்டு மற்ற மொழிகளையே தம் காலமெல்லாங் கற்ற அவர், அதனால் வலிவிழந்து மெலிந்து விரைவில் உயிர் துறக்கின்றனர். வயிற்றுப் பிழைப்புக்கென்றே முழுதுங்கற்ற மற்ற மொழி அவரது பிழைப்புக்கே இடையூறு விளைவித்து வருதலை நம்மவர் அறியாமல் வரவரத் தமது வாழ்வில் அருகிப்போவது நினைக்குந்தோறும் நமதுள்ளத்தை நீராய் உருக்குகின்றது. இந்நிலைமையைச் சிறிதாயினுங் கருதிப் பார்ப்பவர்கள் நமது தமிழ் மொழிப் பயிற்சி நம் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத அருமருந்தாமென்பதை உணராமல் போவரோ?

ஏழெட்டு நூற்றாண்டுகளாய் புதிதாய் முளைத்தெழுந்து, இப்போது ஆங்காங்கு வழங்கிவரும் பல வேறு மொழிகளையும் போல்வதன்று நமது தமிழ்மொழி; இது இன்ன காலத்திலேதான் தோன்றியதென்று எவராலுங் கட்டுரைத்துச் சொல்ல முடியாத பழமையுடையதாய், இத்தனை காலமாகியுந் தனது இளமை சிறிதுங் குன்றாததாய் உலாவி வருகின்றது. தமிழைப் போலவே பழமையுடையனவென்று சொல்லத்தக்க ஆரியம், கிரேக்கு, இலத்தீன், ஈபுரு, அராபி, சீனம் முதலான பல தேய மொழிகளெல்லாம் இப்போது உலக வழக்கில் இன்றி இறந்தொழிய, நம் செந்தமிழ் மொழி ஒன்றுமே எல்லாம் வல்ல இறைவனைப் போல் என்றும் இறவாத இளமைத் தன்மை வாய்ந்து இலங்குகிறது. இவ்வுண்மையை மனோன்மணீயம் தமிழ்த்தாய் வணக்கச் செய்யுளிலுங் கண்டுகொள்க.

பழமையில் இதனோடு ஒத்த ஆரியம் முதலான மொழிகளெல்லாம் இறந்தொழியவும், இதுமட்டும் இன்னும் இளமையோடு விளங்குகிறது எதனால் என்றால், தமிழ் அல்லாத மற்ற மொழிகளில் எல்லாம் மக்கள் இயற்கைக்கு மாறான உரத்த ஓசைகளும் பொருந்தா இலக்கண முடிபுகளுங் காணப்படுதலால் அவை வழங்குவதற்கு எளியனவாய் இல்லாமல், நாளடைவில் மாய்ந்துபோகத் தமிழில் இயல்பாற் பிறக்கும் அமைந்த இனிய ஒலிகளும் மிகவும் பொருத்தமான இலக்கண முடிபுகளும் இயைந்து, இது ஓதுதற்கு எளிதாய் இருத்தலினாற்றான் அங்ஙனம் இஃதின்னும் இளமை குன்றாமல் நடைபோடுகின்றதென்று உணர்ந்து கொள்க.

மொழியின் அமைப்பையும் மக்களியற்கை உலக இயற்கைகளையுந் திறம்பட விரித்துரைத்த தொல்காப்பியம் போன்ற மிகப்பழைய நூலை நமது செந்தமிழிலன்றி வேறு மொழிகளிற் காணல் இயலுமோ? அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளையும் முற்றும் எடுத்து விளக்கிய திருக்குறள், நாலடியார் போன்ற அரும்பெரு நூல்களை நம் செந்தமிழ் மொழியன்றி வேறு எந்த மொழியேனும் உடையதாமோ? சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் பெரும் பழந்தமிழ்க் காப்பியங்களோடு ஒத்தவை எம்மொழியிலேனும் உளவோ? உலக இயற்கை பிறழாது பாடிய பத்துப்பாட்டு, கலித்தொகை முதலான பழைய தமிழ் பாட்டுக்களுக்கு நிகரானவை வேறெந்த மொழியிலேனும் எடுத்துக்காட்டல் இயலுமோ? திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவை, தேவாரம், பெரியபுராணம் என்னுந் தெய்வத் தமிழ் நூல்கள், கன்னெஞ்சமுங் கரைந்துருகி எத்திறத்தவரும் இறைவன் அருட்பெருக்கில் அமிழ்ந்து இன்புருவினராய் நிற்குமாறு செய்தல்போல, வேறு எந்த மொழியில் உள்ள எந்நூலேனுஞ் செய்தல் கண்டதுண்டோ? மக்கள் முடிவாய்த் தெரிய வேண்டும் மெய்ப்பொருள்களை யெல்லாந் தெளிவித்துக்கூறி, முடிவு கட்டிய சிவஞானபோதம், சிவஞானசித்தி போன்ற மெய்ந்நூல்களும், அவற்றிற்கு மெய்யுரை விரித்த சிவஞான முனிவர் நுண்ணுரை போன்ற உரை நூல்களுந் தமிழிலன்றி வேறெந்த மொழியிலேனுங் காணப்படுவதுண்டோ?

இந்நூற் பொருள்களென்னுந் தீம்பாலை
 நமது உயிரெல்லாந் தித்திக்கக் குழைத்தூட்டும் நம் தமிழ்த்தாயை மறவாது பேணும் பெரும் பேற்றை நம் தமிழ் மக்கள் எல்லாம் பெற்றுச்
 சிறந்திடுவாராக!

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: