கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

ஆசாரக் கோவை - சாமி. சிதம்பரனார்

நூலின் பெருமை

ஆசாரம், கோவை என்னும் இரண்டு சொற்கள் சேர்ந்து ஆசாரக்
கோவை என்று ஆயிற்று. ஆசாரம் வடமொழி; கோவை தமிழ்ச் சொல்.
ஆசாரம் என்றால் பின்பற்றக் கூடியவை; கோவை என்றால் தொகுப்பு.
பின்பற்றக் கூடிய ஒழுக்கங்களைத் தொகுத்துக் கூறுவது என்பதே ஆசாரக்
கோவை என்பதன் பொருள்.

இன்ன காரியங்களைச் செய்; இன்ன காரியங்களைச் செய்யாதே; என்று
கட்டளையிடும் நூல்களுக்கு வடமொழியிலே ஸ்மிருதிகள் என்று பெயர்.
இந்த ஆசாரக் கோவையும் ஒரு ஸ்மிருதி போலவே காணப்படுகின்றது.
இன்னின்ன செயல்கள் செய்யத்தக்கவை; இன்னின்ன செயல்கள்
செய்யத்தகாதவை; என்று கண்டிப்பாக உத்தரவு போடுவதுபோலவே பல
பாடல்கள் காணப்படுகின்றன.

வடமொழி ஸ்மிருதியில் உள்ள பல கருத்துக்களை இந்நூலிலே
காணலாம். இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட நூல்
ஆதலால் இதில் கூறப்படும் ஒழுக்கங்களிலே சிலவற்றை இக்காலத்தார்
பின்பற்ற முடியாமலிருக்கலாம்.

வடமொழியில் உள்ள ஸ்மிருதிகளிலே இன்னின்ன வருணத்தார்,
இன்னின்ன ஆசாரங்களைப் பின்பற்றவேண்டும் என்று சொல்லப்
பட்டிருக்கின்றன. இந்த ஆசாரக் கோவையிலே சாதிக்கொரு நீதியென்று
பிரித்துக் கூறப்படவில்லை. மக்கள் அனைவரும் ஆசாரத்தைப் பின்பற்றவேண்டும் என்றே பொதுவாகக் கூறப்படுகின்றது. இந்த முறையே தமிழுக்குள்ள ஒரு தனிச்சிறப்பு.

சாதிக்கொரு நீதி கூறும் முறையைத் தமிழ் நூலார் பின்பற்றவில்லை.
பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த எல்லா நீதி நூல்களும் பெரும்பாலும்
எல்லோர்க்கும் பொதுவான நீதிகளையே கூறுகின்றன; அறங்களையே
அறிவிக்கின்றன. ஒரு சில பாடல்களில் மட்டும், அந்தணர், அரசர், வணிகர்,
வேளாளர் கடமைகளைத் தனித்தனியே வலியுறுத்துக்கின்றன.

ஆசாரக்கோவையை ஒரு பொதுச் சுகாதார நூல் என்றே
சொல்லிவிடலாம். எல்லா மக்களும் நோயற்ற வாழ்வு வாழ்வது எப்படி?
ஊரும், நாடும், பொது இடங்களும் சுகாதாரக் கேடின்றி இருப்பது எப்படி?
என்பவைகளை இந்நூலிலே காணலாம். புறத்திலே தூய்மையுடன் வாழ்வதற்கு வழி கூறுவதோடு மட்டும் நின்று விடவில்லை. அகத்திலே அழுக்கின்றி வாழ்வதற்கும் வழி காட்டுகின்றது இந்நூல். இது இந்நூலுக்குள்ள பெருமை.

இந்நூலாசிரியர் பெயர் பெருவாயின் முள்ளியார் என்பது. இவர்
வடமொழியிலும் புலமையுள்ளவர். ஆயினும் இவர் பாடல்களிலே வடமொழிச் சொற்கள் அதிகமாகக் கலக்கவில்லை; வெண்பாக்கள் நீரோட்டம் போலவே சரளமாக அமைந்திருக்கின்றன. இரண்டடி முதல் ஐந்தடி வரையில் உள்ள வெண்பாக்கள் இதில் காணப்படுகின்றன. ஆசாரக் கோவையில் உள்ள
வெண்பாக்களின் எண்ணிக்கை நூறு.

ஆசாரத்திற்கு விதை

மக்களுடைய நல்லொழுக்கங்களுக்கு அடிப்படையான குணங்கள்
இவைகள்தாம் என்று முதற் பாட்டிலே கூறப்படுகின்றது. ‘‘ஆசாரத்திற்கு
விதை எட்டுக் குணங்கள்; அவைகளைப் பின்பற்றுவோரே ஒழுக்கந் தவறாமல் வாழ முடியும்; அவைகள் தாம் நல்லொழுக்கத்தை வளர்க்கும்’’ என்று விளம்புகிறது அச்செய்யுள்.

 ‘‘நன்றி அறிதல்; பொறை உடைமை; இன்சொல்லோடு;
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை; கல்வியோடு;
ஒப்புரவு ஆற்ற அறிதல்; அறிவுடைமை
நல்இனத்தாரோடு நட்டல்; இவை எட்டும்

சொல்லிய ஆசார வித்து.

பிறர் தனக்குச் செய்த நன்மையை மறவாமல் இருத்தல்; அறியாமை
காரணமாகப் பிறர் செய்யும் துன்பங்களைப் பொறுத்துக்கொள்வது; யாரிடமும்
கடுஞ்சொற் கூறாமல் எல்லோரிடமும் இனிமையாகப் பேசுதல்; எந்த
உயிர்களுக்கும் அவை வருந்தும்படி தீமை செய்யாதிருத்தல்; சிறந்த
கல்வியை மறக்காமல் கற்றல்; உலக நடையை அறிந்து அதைத் தவறாமல்
பின்பற்றுவது; எதைப்பற்றியும் தானே சிந்தித்து உண்மை காணும்
அறிவுடைமை; கல்வி, அறிவு, நல்லொழுக்கமுள்ள கூட்டத்தாரோடு சேர்ந்து
வாழ்தல்; ஆகிய இந்த எட்டுக் குணங்களும் நல்லொழுக்கத்தை வளரச்
செய்யும் விதைகளாகும்.’’ (பா.1)

இந்த எட்டுப் பண்புகளையும் பெற்றவர்கள் எந்நாளும் சிறந்து
வாழ்வார்கள். இது எக்காலத்திற்கும் ஏற்ற உண்மையாகும்.

ஒன்றையும் விடவில்லை

காலையில் எழுந்தது முதல் இரவில் படுக்கையில் படுப்பது வரையில்
என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்நூல் கட்டளையிடுகிறது. பல்
விளக்குவது எப்படி? வெளிக்குப்போவது எப்படி? குளிப்பது எப்படி?
உடுத்துவது எப்படி? உண்பது எப்படி? படிப்பது எப்படி? யார் யாருக்கு எவ்வெவ்விதம் மரியாதை காட்டுவது? யார் யாருக்கு உதவி செய்ய
வேண்டும்? யார் யாரிடம் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
படுக்கையிலிருந்து எழும்போது என்ன செய்யவேண்டும்?
படுக்கப்போகும்போது தான் என்ன செய்யவேண்டும்? என்பவைகளை
யெல்லாம் ஒன்றுவிடாமல் தொகுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றது இந்நூலிலே.

இதைப் படிக்கும்போது நமக்கு வியப்புண்டாகும். ஆயிரக் கணக்கான
ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்த மக்கள் பின்பற்றிய ஒழுக்கம், இன்றைய
விஞ்ஞான முறையோடு ஒத்திருப்பதைக் கண்டால் யார்தான்
வியக்கமாட்டார்கள்?

‘‘விடியற்காலமாகிய நாலாம் சாமத்திலேயே தூக்கத்திலிருந்து விழித்தெழ
வேண்டும்; அதாவது கதிரவன் புறப்படுவதற்கு முன்பே கண்விழிக்க
வேண்டும். அன்றைக்குத் தான் செய்யவேண்டிய நல்லறங்களைப்பற்றியும்
பொருள் தேடும் முயற்சிக்கான வேலையைப் பற்றியும் சிந்தித்து
முடிவுசெய்துகொள்ள வேண்டும்; அதாவது இன்றைக்கு இன்னின்ன
காரியங்களைச் செய்வது என்று திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். பிறகு
தந்தை தாயரை வணங்கித் தன் காரியங்களைப் பார்க்கத்
தொடங்கவேண்டும்’’ (பா.4)

இவ்வாறு படுக்கையை விட்டு எழுந்தபின் செய்ய வேண்டியவைகளைப்
பற்றி கூறுகிறது.

‘‘படுக்கும்பொழுது தம் வழிபடு தெய்வத்தைக் கைகூப்பி வணங்கவேண்டும்; வட திசையிலோ, மூலைகளிலோ தலைவைத்துப் படுக்கக்கூடாதுபோர்வையால் போர்த்திக் கொண்டு படுக்கவேண்டும்’’(பா.30)

இவ்வாறு படுக்கவேண்டிய முறையைப் பற்றிக் கூறுகின்றது. இன்றும்
பலர் இம்முறையைப் பின்பற்றி வருகின்றனர்.

‘‘உண்ணும்போது இனிப்பான பண்டங்களை முதலில் உண்க; கசப்பான
கறிகளை இறுதியில் உண்க; ஏனைய சுவையுள்ள பண்டங்களை இடையில்
உண்க’’ (பா.25)

என்று சாப்பாட்டைப் பற்றி உத்தரவு போடுகிறது ஒரு செய்யுள்.
காலையிலே எழுந்தவுடன், வீட்டு வேலையை எந்த முறைப்படி
செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது ஒரு செய்யுள்.

‘‘காலையிலேயே துயில் எழவேண்டும்; வீடு விளங்கும்படி வீட்டைக்
கூட்டிச் சுத்தம் பண்ணவேண்டும்; பாத்திரங்களைத் துலக்கவேண்டும்;
பசுவின் சிறுநீரைத் தெளித்து வீட்டைப் புனிதமாக்க வேண்டும்; தண்ணீர்ச்
சாலுக்கும், குடத்துக்கும் பூச்சூட்டவேண்டும்; இதன் பிறகுதான் அடுப்பிலே தீ
மூட்டிச் சமைக்கத் தொடங்க வேண்டும்; இப்படிச் செய்யும்
இல்லங்களில்தான் நன்மை நிறைந்திருக்கும்’’. (பா.46)

குடித்தனம் பண்ணும் பெண்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறது
இச்செய்யுள்.

‘‘தலையிலே தடவிக்கொண்ட எண்ணெயால் வேறு எவ்வுறுப்பையும்
தொடக்கூடாது. பிறர் கட்டிக்கழித்த அழுக்குத் துணியையும் தொடக்கூடாது.
எவ்வளவு அவரசமானாலும் பிறர் தரித்த செருப்பை மாட்டிக் கொண்டு
நடத்தல் கூடாது.’’ (பா.12)

இவ்வாறு கூறுகிறது ஒரு செய்யுள், சுகாதாரத்தை வலியுறுத்தும் சிறந்த
செய்யுள் இது.

தலையிலே தடவிக்கொண்ட எண்ணெயை வழித்து எந்த இடத்தில்
தடவிக்கொண்டாலும் சுகாதாரக் கேடுதான்.

தலையின் அழுக்கும் எண்ணெயுடன் கலந்து உடம்பிலே படியும். பிறர்
உடுத்த அழுக்காடையைத் தொடுவதால் அவர் நோய் நம்மையும் பற்றும்.
பிறர் செருப்பை மிதித்தால், அவர் காலிலிருந்து அச்செருப்பிலே
படிந்திருக்கும் அழுக்கு நமது காலிலும் படியும். இது நோய்க்கு இடமாகும்.
இக்கருத்துடன்தான் இம்மூன்று செயல்களும் தடுக்கப்பட்டிருக்கின்றன.

நீராடும்போது என்னென்ன காரியங்களைச் செய்யக்கூடாது என்று
கட்டளையிடுகிறது ஒரு செய்யுள்.

 ‘‘நீராடும் போழ்தில் நெறிப்பட்டார் எஞ்ஞான்றும்
நீந்தார், உமியார், திளையார், விளையாடார்,
காய்ந்தது எனினும் தலைஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவி னவர்.

ஒழுக்க நெறியிலே நின்றவர்கள் தினந்தோறும் குளிக்கும்போது,
தண்ணீரிலே நீந்த மாட்டார்கள்; நீரை வாயில் கொப்பளித்து உமிழ
மாட்டார்கள்; நீரைக் கலக்க மாட்டார்கள்; நீரிலே விளையாட மாட்டார்கள்;
உடம்புக்குக் காய்ச்சலாயிருந்தாலும் தலை முழுகாமல் உடம்பு மட்டும்
குளிக்கமாட்டார்கள்’’. (பா.14)

இச்செய்யுள் நகர மக்களுக்குத் தேவையில்லை. பெரும்பாலும் குளத்தில்
குளிக்கும் கிராம மக்கள் பின்பற்ற வேண்டிய செய்யுளாகும். குளிப்போர்
குளிக்கும் நீர் நிலையைத் தூய்மையாக வைத்துக் கொள்வது எப்படி
என்பதே இச்செய்யுளில் கூறப்பட்டுள்ளது. இதில் ‘‘காய்ந்தது எனினும்
தலைஒழிந்து ஆடாரே’’ என்பது மருத்துவ நூலார்க்கு மாறுபட்டதாகும்.
தலையை நனைத்துக் கொள்ளாமல் உடம்பு மட்டும் குளிக்கலாம் என்பது
மருத்துவர் முடிபு. இதைக் ‘‘கண்ட ஸ்நானம்’’ என்பர்.
தம் அழகு கெடாமல் இருக்க வேண்டுவோர் என்ன செய்யவேண்டும்
என்று ஒரு செய்யுள் குறிப்பிடுகின்றது.

 ‘‘மின்ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும்
தம்ஒளி வேண்டுவோர் நோக்கார்; பகல் கிழவோன்
முன்ஒளியும் பின்ஒளியும் அற்று.

மின்னல் ஒளியைப் பார்க்கக்கூடாது; எரிந்து விழுகின்ற நட்சத்திரத்தைப்
பார்க்கக் கூடாது; விலைமாதர்களின் அழகிலே ஈடுபட்டு விடக்கூடாது;
இவைகளைப் போலவே காலைக் கதிரவன் ஒளியையும், மாலைக் கதிரவன்
ஒளியையும் காணக்கூடாது. தம் உடல் வனப்பு கெடாமலிருக்க விரும்புவோர்
இவ்வாறு செய்வார்கள்’’. (பா.51)

இன்றும் பல மக்கள் இச்செய்யுளில் கூறியிருப்பதை நம்புகின்றனர்.
மின்னலைப் பார்த்தால் கண் பார்வை குன்றும்; எரிந்து விழும்
நட்சத்திரத்தைப் பார்த்தால் மறதி உண்டாகும்; வேசையர்களின் கோலத்தை
உற்று நோக்கினால் மனம் அவர்கள்பால் செல்லும்; காலைக் கதிரையோ
மாலைக் கதிரையோ கண்களால் உற்று நோக்கினால் கண்ணொளி குறையும்.
இவ்வாறு நம்புகின்றனர். ஆகவே இச்செய்யுளில் கூறுவன இன்னும்
வழக்கத்தில் இருப்பதைக் காணலாம்.

ஆசாரத்தைப் பின்பற்றுவோர் யார்?

சோம்பேறிகள் ஆசாரம் உள்ளவர்களாயிருக்க முடியாது. அவர்கள்
எக்காரியத்திலும் வெற்றிபெற மாட்டார்கள். அவர்கள் வாழ்க்கையே துன்ப
வாழ்க்கையாகத்தான் இருக்கும். முயற்சியுள்ளவர்களே எல்லாவற்றிலும்
வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையிலும் இன்பம் பெறுவார்கள். ஆதலால்
ஒவ்வொருவரும் தங்கள் கடமையை உணரவேண்டும். அக்கடமையைத்
தவறாமல் ஊக்கத்துடன் செய்யவேண்டும். இவர்களிடந்தான் ஆசாரம்
நிலைத்து நிற்கும். இச்செய்தியை உதாரணத்துடன் உரைக்கின்றது ஒரு
வெண்பா.

‘‘நந்தெறும்பு தூக்கணம்புள் காக்கை என்றிவைபோல்
தம்கருமம் நல்ல கடைப்பிடித்துத்-தம் கருமம்
அப்பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எப்பெற்றி யானும் படும்.

சுறுசுறுப்புள்ள எறும்பு, தூக்கணங்குருவி, காக்கை என்ற இவைகளைப
போல் ஒவ்வொருவரும் தங்களுடைய நல்ல கடமைகளைப் பின்பற்றி
அவைகளைச் சோர்வில்லாமல் செய்யவேண்டும்; தமது கடமைகளை
அவ்வாறு செய்பவர்களிடந்தான் எவ்வகையிலும் ஆசாரம் பெருகி நிற்கும்.’’
 (பா.96)

ஒவ்வொருவரும் தங்கள் காரியங்களை எறும்பைப்போல் சுறு
சுறுப்புடன் முயன்று முடிக்கவேண்டும். தூக்கணங்குருவி தன் கூட்டைத்
திறமையுடன் கட்டும்; கூடுகட்டத் தொடங்கினால் அரைகுறையாக
விட்டுவிடாது; முடித்தே தீரும். காக்கை கூடி வாழும் குணம் உள்ளது;
தனித்துண்ணாது; தன் இனத்தையும் கரைந்து அழைத்து ஒன்றுகூடி
உண்ணும். இந்த மூன்று பிராணிகளின் பண்பை மக்கள் பின்பற்றவேண்டும்.
சுறுசுறுப்பு, தொட்டதை நிறைவேற்றுதல், ஏனை மக்களுடன் இணைந்து
வாழ்தல், இந்த முக்குணமும் பொருந்தியவர்களிடமே ஆசாரம் வளரும்.

ஆசாரத்திற்கு விலக்கானவர்கள்

யார் யார் ஆசாரத்திற்கு விலக்கானவர்கள்; ஆசாரத்தைப் பின்பற்ற
முடியாதவர்கள்; என்று இந்நூலின் இறுதி வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.
ஆசாரத்தைப் பின்பற்ற முடியாதவர்கள் ஒன்பது பேர். அவர்கள்; அந்நிய
நாட்டான், வறியவன், மூத்தோன், சிறுவன், உயிர் இழந்தோன்,
பயந்தவன்,அளவுக்குமேல் உண்பவன், அரசாங்க அலுவல் பார்ப்போன்,
மணமகன், ஆகிய இவர்கள்.

அறியாத தேயத்தான், ஆதுலன், மூத்தான்,
இளையான், உயிர் இழந்தான், அஞ்சினான், உண்பான்,
அரசன் தொழில்தலை வைத்தான், மணாளன், என்று
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான
ஆசாரம் வீடு பெற்றார்                   (பா.100)

இந்த ஒன்பதின்மரும் ஆசாரத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள்.

இந்த நாட்டு ஆசாரங்களை அறியாத அந்நிய நாட்டான் இந்த நாட்டு
ஆசாரங்களை அறிந்து பின்பற்ற முடியாது.

வறுமையுள்ளவனும் இந்நூலிலே கூறப்பட்டுள்ள ஆசாரங்களைப்
பின்பற்ற முடியாது. வயிற்றுப் பிழைப்பிற்காக உழைப்பதற்கே அவனுக்கு
நேரம் போதாது.

மறதி, உடல்சோர்வு, சுறுசுறுப்பாக நடந்து காரியம் செய்ய முடியாமை.
இவைகள் எல்லாம் வயதேறியவன் இயல்பு. இவைகள் முதுமையின்
துணைகள். ஆகையால் முதியவனாலும் ஆசாரத்தைப் பின்பற்ற முடியாது.

ஆசாரம் இன்னது, அநாசாரம் இன்னது என்று பகுத்தறிய முடியாத
சிறுவர்களாலும் ஆசாரத்தைப் பின்பற்ற முடியாது.

உயிர்போன பிணத்தினால் எந்த ஆசாரத்தைத்தான் பின்பற்ற முடியும்?

பயந்தாங் கொள்ளியும், ஆசாரத்தைக் கைவிட்டு விடுவான். அவனால்
ஒன்றையும் உருப்படியாகச் செய்ய முடியாது.

மிகுதியாகச் சாப்பிடுகின்றவன் எப்பொழுதும் உண்பதிலேயே நாட்டங்
கொண்டிருப்பான். உணவு கிடைத்தால் போதும். ஆசாரங்களைப் பற்றி
அவனுக்குக் கவலையில்லை.

அரசாங்க வேலையில் ஈடுபட்டிருப்பவனுக்கும் போதுமான ஓய்வு
கிடைக்காது. ஆதலால் அவனாலும் ஆசாரத்தைப் பின்பற்ற முடியாது.

மணமகனாக இருப்பவனும், ஆசாரத்திலே கருத்தைச் செலுத்த முடியாது.
மற்றவர்கள் விருப்பப்படிதான் ஆடவேண்டும்.

இவ்வாறு ஒன்பது பேரை ஆசாரத்தைப் பின்பற்ற முடியாதவர்கள்;
ஆசாரத்திலிருந்து விடுதலை பெற்றவர்கள்; என்று குறித்திருப்பது மிகவும்
பொருத்தமானதாகும்.

இந்த நூலில் கூறப்படும் ஒழுக்கங்களில் ஒரு சிலவற்றைத் தவிர
மற்றைவையெல்லாம் உண்மையானவை; பின்பற்றக்கூடிறயவை. இதில் ஐயம் இல்லை. ஆனால் இக்காலத்தில் எல்லா மக்களும், ஆசாரக் கோவையில் சொல்லுகிறபடியே நடக்க முடியாது. ஓயாது உழைப்பவர்களுக்கு ஆசாரத்தைப் பற்றி நினைக்க நேரம் ஏது? நகரில் வாழ்வோர் பலர்க்கு ஆசாரக் கோவையின் உரைகள் ஒத்துவராமல் இருக்கலாம். ஆயினும்இந்நூலில் உள்ளவைகளிலே பல, விஞ்ஞானத்திற்கு ஒத்துவருவனஇவ்வுண்மையை ஆசாரக் கோவையை ஒரு முறை படித்தாலே உணர்ந்து கொள்ளலாம்.

கருத்துகள்

T.K.Theeransamy,Kongutamilarkatchi இவ்வாறு கூறியுள்ளார்…
அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ