01/09/2011

வேளாண்மையில் வழக்குச் சொற்கள் - முனைவர் ந.மாணிக்கம்

முன்னுரை

அறிவியல் தொழில் நுட்பக் கருவிகள் இன்று பெருமளவில் வேளாண்மையில் பயன்படுத்தப்படுகின்றன. பயிரிடுவதும், அறுவடை செய்வதும் இயந்திரத் தன்மையாக்கப்பட்டுவிட்டன. இடுபொருட்களும் இரசாயன உரங்களும் ஆங்கிலச் சொற்களைத் தாங்கி உள்ளன. வழிவழியாக வேளாண்மை செய்த முறைகள் மாற்றம் அடைந்து விட்டன. இச்சூழலில் வேளாண்மை முறைகளில் பயன்படுத்தப் பெற்ற சொற்களே இன்று எஞ்சி உள்ளன. அந்தச் சொற்களைத் தொகுத்துக் கொள்வதும், காத்துக் கொள்வதும் இந்நிலத்திற்கே உரிய வேளாண்மை முறைகளை அறிந்து கொள்ள உதவும். அந்த வகையிலே இங்கு வேளாண்மை சார்ந்த சொற்கள் தொகுக்கப் பெற்று விளக்கம் தரப்பெறுகின்றன.

வேட்டைச் சமூகத்திலிருந்து வேளாண் சமுதாயம் தோன்றியது. தொடக்க கால வேளாண்மைச் சமுதாயம் ஆற்றோரங்களின் நீர்நிலைக்கருகிலும் தோன்றியிருக்கக் கூடும். அன்று உழுது உண்டு வாழ்ந்த குடிகள் தொடர்ந்து நிலைபெற்றிருக்கின்றனர். அம்மக்களின் பண்பாடும் வாழ்வும் இன்றும் நாட்டுப்புற மக்களிடையே இருந்து வருகிறது. தொடக்கத்தில் ஆறுகளையும் மழை நீரையும் தேக்கிப் பயிரிட்டார்கள் பின்னர் பாசன முறைகளைப் பல வகையாக மாற்றிக் கொண்டனர். ஏரி, குளம், குட்டை, கண்மாய், பள்ளம், கிணறு என்றவாறு பாசனத்திற்குரிய சூழலைக் கண்டார்கள்.

பருவ மழை பெய்கின்ற காலங்களில் இந்நீர்நிலைகள் பெருகிவிடும். நீர்வரத்தைப் பெருக்குவதற்கு மக்கள் ஒன்று கூடி கால்வாய்களைச் சீரமைத்துக்கொள்வர். பாசனத்திற்கு நீரைத் திறந்து விடும் பகுதிக்கு மடை, குழுமி என்று பெயருள்ளன. இதன் வழியாக நிலங்களுக்குச் செல்லும் வாய்க்காலை நாட்டுவாய்க்கால் என்பர். நெல் பயிரிடுதல் சார்ந்த முறைகளில் உள்ள சொற்கள் இங்கே விளக்கப்படுகின்றன.

தண்­ர் பாய்ச்சுதலில் முறை வைத்தும் பாய்ச்சுதல் உண்டு. நீர்நிலைகளில் தண்­ர் குறையும் பொழுது இம்முறையைப் பயன்படுத்துகின்றனர். முறை வைத்துத் தண்­ர் பாய்ச்சுவதற்கு ஒருவரை நியமிப்பர். இவரே முன்நின்று இத்தொழிலை மேற்கொள்வார். காலையில் தொடங்கி மாலை வரை காவல் பணியில் ஈடுபடுவார். ஒவ்வொரு நிலமாகப் பாய்ச்சி மாலையில் நிறுத்திவிடுவார். இம்முறையில் வேறு எவரும் மடையைத் திறப்பதற்கோ, மூடுவதற்கோ வழியில்லை. தண்­ர் இருக்கும் வரை காவல்காரர் ஒருவரே இதனை மேற்கொள்வார். இவருக்குக் கூலியாக அறுவடையின் போது நெற்களத்தில் ஒவ்வொருவரும் தக்கவாறு நெல்லை அளந்து கொடுப்பர். கால்நடைகள் மேய்ந்து விடாமல் மேப்பாளரைக் கண்காணிப்பதும் இவர் கடமையாகும்.

நடவு செய்த நிலத்தில் முதலில் விடும் தண்­ரை எடுப்புநீர் என்றும், உயிர் நீர் என்றும் அழைக்கின்றனர். தண்­ர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது பள்ளம். குட்டைகளிலிருந்து பாய்ச்சிக்கொள்வர். இம்முறையில் தண்­ர் பாய்ச்சுவதற்கு ''இறைபெட்டி''யை பயன்படுத்துவர். ''இறைபெட்டி'' என்பது கயிரைக்கட்டி இருவர் நின்று இழுத்து ஊற்றுவதற்குப் பயன்படுத்தப்பெறும் பெட்டியாகும். ஏற்றம் அமைத்து தண்­ர் இறைத்தனர். இம்முறையில் ஒருவர் மேல் நின்று இதனை மேற்கொள்வர். கிணற்றுப் பாசனத்தில் மாடு கட்டி தண்­ர் இறைத்தனர். இதனைக் ''கவலை ஏற்று'' அல்லது ''கமலை ஏற்று'' என்று குறிப்பிடுகின்றனர். இதில் வடக்கயிறு, வால்கயிறு, தோப்பரை, சால், பெரலிக்கட்டை, உருளைக்கட்டை ஆகிய தளவாடங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உழவு

உழவில் தரிசு உழவு, புழுதி உழவு, தொழி உழவு என்றுள்ளன. மரக்கலப்பை அல்லது கொழுக்கலப்பை, இரும்புக்கலப்பை, நுகத்தடி, அல்லது மேழி, கலப்பைக் கயிறு, தும்பு, சாட்டைக்குச்சி முதலியன உழவுக்கருவிகள். உழவில் முதலில் நிகழ்வது விலாப் போடுதல் ஆகும். இதனையே ''படச்சால்'' என்றும் கூறுவர். ஏரில் பூட்டும் காளையை உழவு மாடு என்றும், உழுவதற்குக் கலப்பையை இழுத்துக்கட்டுதல், தூக்கிக்கட்டுதல், இழுத்து வைத்தல் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

தொழி உழவில் கட்டிமிதித்தல், தூக்கித் தள்ளுதல் ஆகியனவற்றைச் செய்வர். கலப்பையில் மாட்டிய புல் பூண்டுகளைத் தூக்கித் தள்ளுவதற்கு பொன்னத் தள்ளுதல், பொன்னி மிதித்தல் என்று கூறுவர். நடவு வயலில் வரப்பு வெட்டுதல், அணைத்துக் கட்டுதல், கழித்துப்போடுதல், அரிந்து வெட்டுதல் ஆகிய சொற்களுக்குரிய செயல்கள் நடைபெறும். நடவு செய்யும் வயலைப் பண்படுத்தும் முதல் கட்டத்தை ''நடவு சேர்'' அடித்தல் என்பர். இடைவெளியில்லாமல் உழுவதை இடைக் கட்டு இல்லாமல் உழுதல் என்பர்.

நாற்றங்கால்

விதைபோடும் வயலிற்கு நாற்றங்கால் என்று பெயர். நாற்றங்காலை நன்கு உழுது, எரு, இலைகள் பரப்பி தொழியடிப்பர் விதை போடுவதற்கு முன்னர் நாற்றங்காலை ''பரம்பு பலகை'' யால் சமன் செய்வர். விதை ஆழப்போய் விடாமல் இருக்க சேற்றை உறைய வைப்பர் இதற்கு ''இஞ்ச விடுதல்'' என்பர். தண்­ர் வடிவதற்கு ஏதுவாகக் கையால் விலக்கி விடுவதை ''சீந்தி எடுத்தல்'' என்கின்றனர். விதையைத் தண்­ரில் வைப்பதற்குச் சாற வைத்தல் என்கின்றனர், சாற வைத்த விதையைத் தூக்கி மேலே வைப்பதற்கு ''வடிய வைத்தல்'' என்கின்றனர். நாற்றங்காலில் அந்திப் பொழுதில் விதைக்கின்றனர். நன்கு தேர்ச்சிப் பெற்றவிதை (தெளிவாகப் போடுபவர்) கொண்டு விதையைத் தூவுவர். காலைப் பொழுதில் தண்­ரை வடித்து விடுவர். தண்­ர் வடிப்பதால் நாற்று பச்சை விடும் என்கின்றனர். இவ்வாறு மூன்று நாட்களுக்குத் தண்­ர் வடிப்பர். நாற்று வளர்ந்து விட்டதை ''மொழி விடுதல்'' என்கின்றனர்.

நடவு நாற்றைப் பறித்துக் கட்டுவதை ''முடி'' என்பர். இதை ''விளைமுடி'' என்று கூறுவதும் உண்டு. நூறு முடியை ஒரு கட்டு என்பர். நடவு வயலில் நாற்றைப் பரப்பி விடுவதை விளம்புதல் என்பர்.

நடவைக் காற்றடிக்கும் திசையிலிருந்தோ அல்லது சனி மூலையிலிருந்தோ தொடங்குவர். நடும் பெண்களை ''நடவாள்'' என்பர் நடும் பொழுது பெண்கள் குலவை போடுவர். குலவை போடுவதற்குத் தனியாகப் பணம் தருவதும் உண்டு. உறவுக்கார ஆண்கள் வரப்பில் வரும்பொழுது விளைமுடியை வைத்து விடுவர். அவர்கள் அதனைத் தாண்டிச் செல்லும் முன் பணம் வைத்து தாண்டிச் செல்ல வேண்டும். நடும் பெண்களுக்கு உணவிட்ட வெற்றிலையில் பூவும், குங்குமமும் தருவர். பூவைத் தலையிலும், தாலிக் கயிற்றிலும் வைத்துக் கொள்வர். நடவு வயலிலிருந்து ஒரு முடியை வீட்டிற்கு எடுத்துச் சென்று வெண்கலப் பானையில் வைத்துத் தண்­ர் விட்ட கூரையில் வைத்து விடுவர். காலையில் அதனை எடுத்து வீட்டுக்காரப் பெண்கள் வயலில் நட்டுவிடுவர்.

நடவுப் பயிர் தண்­ர் இல்லாமல் காய்ந்துப் போவதை ''சாவியாப் போச்சு'' என்பர். விளைந்த பயிரை ''பூட்டு பறிந்தது'' என்பர். பசுங்கதிரை ''பால் பிடித்தது'' என்றும் குறிப்பிடுவர். நடவு வயலில் பயிர்கள் கருகிப்போன இடத்தை சூரக்கட்டை விழுந்திடுச்சு என்றும், விளைந்த கதிர் சாய்ந்தால் ''படுத்திருச்சு'' என்றும் கூறுவர்.

விளைந்த கதிரை அறுவடை செய்வதற்குப் பயன்படும் அறிவாளை கதிர் அரிவாள் என்றும் கதிரைக் கட்டுவதற்குப் பயன்படும் கயிரைப் பிரி என்றும், அறிந்து போடும் கதிரை அரி என்றும் குறிப்பிடுவர்.

கதிரைக் கட்டுவதைக் ''கதிர்க்கட்டு'' என்பர். அதைக்களத்தில் சேர்ப்பர். கதிரை அடிப்பதற்குப் பயன்படும் கோட்டுப் பழுதையை நெல்தாளில் இருந்து திரித்துக் கொள்வர். தாள் எடுத்துப் போடுதல் என்று கதிரைக் குறிப்பர். தாளை வைக்கோலாக்குவதற்குத் ''தாள் மேய்தல்'' என்பர். அன்றோ, மறுநாளோ தாளைப்பிரித்து விடுவதை சுத்த விடுதல் என்பர் இதை மாட்டினைப் புனைந்து சுற்றி வரச் செய்வர். இதனை ''வைக்கோல் துவையை விடுதல்'' என்றும் கூறுவர். பிறகு நெல்லையும், வைக்கோலையும் பிரிப்பர். இதனைப் போரடித்தல் என்கின்றனர். முதலில் அடிப்பதை ''தலையடி'' என்றும் மாட்டினால் சுற்றவிடுவதை ''போரடி'' என்றும் கூறுவர். நெல்லில் முறையே தலையடி நெல், போரடி நெல் என்று தனித் தனியாகச் சேர்ப்பர். தலையடி நெல்லில் பதர் இல்லாமல் இருக்கும், போரடி நெல்லில் பதர் கலந்து இருக்கும் இப்படி இருப்பதைத் ''தூற்றிப்பரிப்பர்''. இதனைக் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற முதுமொழியில் அறிந்து கொள்ளலாம்.

வைக்கோலிலிருந்து நெல்லைப் பிரித்து எடுத்த பின் நெற்களத்தில் நெல்லைத்தூற்றுவர். கூடையில் சுமந்து தலையில் வைத்துக்கொண்டு காற்றடிக்கும் திசை நோக்கி கையால் தள்ளிவிடுவர். இதில் தூசிகள் படிந்துவிடும், நெல்லைப் பொழிகட்டுவர். பொழியில் கோட்டுப்பழுதையை வைத்து வணங்குவர். இதனையே ''பொலி'' போடுதல் என்பர். லாபம் என்று கூறி கூடையில் போடுவர். பின்னர் அதிலிருந்து அனைவருக்கும் கூலி முதலானவற்றைக் கொடுப்பர். மீதமுள்ள நெல்லைத் தங்கள் இல்லங்களில் நெற்களஞ்சியங்களில் சேர்த்துக்கொள்வர்.

முடிவுரை

இன்றைய வாழ்வு மண்ணைக் கைவிட்டதாக இருக்க மண்ணும் மனிதனைக் கைவிட்ட நிலை தோன்றிவிட்டது. பழைய வாழ்க்கை முறையையும் நாகரிகத்தையும் புதுமையாக்க விரும்பி உழவால் வந்த வளவாழ்வை மனிதன் குலைத்துக்கொண்டான். அதனால் இச்சொற்களை நினைப்பதன் மூலம் பழைய வேளாண் முறையின் சிறப்பையும் பயனையும் அதன் தேவையையும் உணர்ந்து கொள்ளும் ஒரு வாய்ப்பைப் பெறுகிறோம்.

நன்றி: வேர்களைத்தேடி

கருத்துகள் இல்லை: