13/03/2011

நாட்டுப்புற இலக்கியம் - பாலின வேறுபாடு - வே. சிவக்குமார்

இயற்கையின் அற்புதமான கண்டுபிடிப்புகளில் ஒன்று மனித இனமாகும். பன்னெடுங்காலமாகப் பரிணமித்துச் செழித்து வளர்ந்ததன் விளைவாக இன்றைய வளர்ச்சியை நாம் கண்டுள்ளோம். இயற்கைப் பொருட்கள் அனைத்தும் இணை எதிர்த் தன்மை உடையனவாக அமைந்துள்ளதாகவும் அவற்றிற்கு இடையிலான உறவுகளும் முரண்களும் இயக்கத்திற்குக் காரணமாகின்றன என்றும் அறிவியல் கட்டமைக்கிறது. ஆண் பெண் என்பது இணைஎதிர் தன்மை உடையது என்ற புரிதலின் அடிப்படையில் மனித சமூகம் சார்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம். அதே நேரத்தில் இணை எதிர் என்பதனை சமமான எதிரெதிர் குணமும் பண்பும் அமைப்பும் உடையது எனக் கொள்ளலாம். அந்தச் சமமான தன்மை வரலாற்றுப் போக்கின் அடிப்படையில் இன்றைய நிலையில் மாறியுள்ளது அல்லது மாற்றப்பட்டடுள்ளது என்பதைக் கருதுகோளாகக் கொண்டு இச்சிறு ஆய்வு அமைகிறது.

ஆண், பெண் என்பதை பால், பாலினம் என்கிறோம். சமுதாயத்தில் பாலினம் பண்பாட்டுக் கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. பாலினம் ஆண், பெண் என்று உருவாக்கப்பட்டாலும் உயர்வு, தாழ்வு என்ற முரண்களிலேயே இருக்கின்றதை - இயங்குகின்றதை காணலாம். ''நாட்டுப்புறவியலானது மனித சமுதாயம் எதை அனுபவித்ததோ, எதைக் கற்றதோ, எதைப் பயிற்சியால் பெற்றதோ, அவற்றைக் குவித்து வைத்திருக்கும் சேமிப்பு அறையாகும்'' என்பர் ஒளரலியா எம். எஸ்பினோசா (மேற்கோள்: சண்முகசுந்தரம், நாட்டுப்புறவியல் ப.3) இக்கூற்றுக்கு ஏற்ப மனித இனித சிலவற்றைப் பொதுவாக அனுபவித்து, கற்று, பயிற்சியால் பெற்றிருந்தாலும் கூட, ஆண் பாலினம் உடல் வலிமை உடையது என்ற கருத்தாக்கமே நாட்டுப்புறவியலிலும், பெண் பாலினம் வலிமையால் குன்றியது எனவுமே வழங்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.

தாய்வழிச் சமூக அமைப்பு சிதைந்து தந்தை வழிச் சமூக அமைப்பு உருவான சூழலின் பாலின மரபிலும் மாற்றமும் வேறுபாடும் ஏற்படத் தொடங்கின எனலாம். இம்மாற்றம் பொது வாழ்க்கை முறையில் மட்டுமில்லாமல் கலை இலக்கியங்களிலும் காலூன்றியது எனலாம்.

இதற்குச் சான்றாக பெண்களின் கற்பு, மாத விலக்கு தொடர்பான மதிப்பீடுகள் நாட்டார் கலை இலக்கிய நிகழ்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள விதத்தினையும் அறிய முடிகிறது.

கலைகள் என்பவை மனித சமூக வாழ்வைப் பிரதிபலிக்கும் ஊடகங்களாக அமைபவையாகும். சமூக பண்பாட்டினை வெளிக்காட்டி நிற்பவை கலைகள் எனலாம். இவற்றுள் நிகழ்த்து கலை உடல்மொழி மற்றும் உடல் உழைப்பை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. உடல் அமைப்பில் வலுவுள்ளவர்களாக ஆண்கள் சித்தரிக்கப்பட்டதாலேயே உடல் உழைப்பை செலுத்தி நிகழ்த்தும் கலைகளிலும் நெடுநேரம் நிகழ்த்தும் கலைகளிலும் பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர். இன்னும் சில கலைகளில் பெண்கள் தவிர்த்து ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பதையும் காண முடியும்.

இவ்வாறு சமுதாயத்தில் நிகழ்த்து கலைகளில் மட்டுமில்லாது வாழ்க்கை முறையிலும் பாலின வேறுபாடு அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்தபொழுது தாலாட்டுப் பாடப்பெறுகின்றன. பெண்களே இதனை செய்கின்றனர். பாடலுடன் கூடிய நிகழ்த்து கலையாகவே நடத்தப்பெறும் இவை பெண்களுக்கு உரியதாகக் கொள்ளப்படுகிறது. பாடப்பெறும் சூழலும் பாடல் பொருளும் பாலின வேறுபாட்டைக் காட்டுவதாகவே அமைகின்றன.

''கழிந்தோர் தேஎத்து கழிபடர் உறீஇ

ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை''

எனும் தொல்காப்பிய நூற்பா இறந்தோருக்காக அழுதுபுலம்பும் வழக்கத்தை (ஒப்பாரியை)ச் சுட்டுகின்றது. ஆனால் இதை யார் பாடவேண்டும் (ஆண்/பெண்) என்ற வரையறை தொல்காப்பியத்தில் இல்லை. பொதுவான வழக்காகவே இது காட்டப்படுகிறது. ஆனால் இன்று ஒப்பாரி வழக்கம் பெண்மீதே சுமத்தப்படுகின்றது.

கணவனை இழந்த பெண் விதவை. கைம்பெண் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் மனதின் ஆசைகளையும் உணர்வுகளையும் தவிர்க்கவியலாது என்பது உடற்கூறு இயல் உண்மையாகும்.

தச்சன் உலை நெருப்பு

தணியும் ஒரு சாமம் - என்

தங்க மடி நெருப்பு

தணிவது எக்காலம்?

என ஒரு பெண் புலம்புவதாக அமையும் இப்பாடல் பெண்ணின் மன உணர்வு (காமம்) வெளிப்படுகிறது.

இன்றைய சூழலில் ஒரு பெண் தன் காதல் உணர்வினை உடல் தேவையை வெளிப்படுத்துவதற்கான உரிமையும் வாய்ப்பும் சூழலும் இருக்கின்றனவா என்பது ஆராயத் தக்கதாகும் இதுபோன்று தான் கற்பு கோட்பாடும் ஆகும்.

பெண்ணின் கற்பு தீக்கு உவமையாகக் கூறப்பட்டிருப்பதை சமூக இலக்கிய வரலாற்றின் வழி அறியக் கிடைக்கிறது. தீயின் தன்மையினை பெண் கற்புக்கு ஏற்பக் கூறும் விதமும் பாலின ஏற்றத்தாழ்வின் வெளிப்பாடாகவே அமைந்துள்ளது.

இதனோடு கூட ஆணின் வழியாகத் துன்பங்கள் அனுபவிப்பது ஒருபுறமாகவும் மற்றொரு புறமாக பெண் வழியாகவும் துயரங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. கணவன் இறந்தபின்பு பிறந்த வீட்டிற்கும் செல்ல இயலாமலும், புகுந்த வீட்டில் மாமியாரின் கொடுமைக்கும் பெண்கள் ஆளாகின்றனர். இவ்வாறு கருவறை தொடங்கி கல்லறை வரையிலும் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டே வருகின்றன.

''ஆத்தோட போற அத்த

அரிசிக் கணக்கச் சொல்லிப் போங்க''

என்பது மாதிரியாக அமையும் வரிகளுள் பெண் தன் சக பாலினத்திற்குள்ளேயே முரண்பட்டு நிற்பதைக் காண முடிகிறது.

பெண், தன் இழிநிலைக்குக் காரணமாக அமையும் பெற்றோரையும் சுற்றத்தாரையும் பழி தூற்றுவதாக அதிகமான பாடல்கள் காணப்பட்டாலும், பெரும்பாலும் தன்னைச் சார்ந்த ஆணினத்தையே பழி தூற்றுகின்றனர்.

தாலிக்கு அரும்பெடுத்த

தட்டானும் கண் குருடோ........?

சேலைக்கு நூலெடுத்த

சேனியனும் கண் குருடோ.....?

பஞ்சாங்கம் பார்த்துக் சொன்ன

பார்ப்பானும் கண் குருடோ.....?

எனத் தன்னுடைய நிலைக்கு ஆணாதிக்கமே காரணம் என்னும் கருத்து நிலை பாடலின் வரிகள் மூலம் வெளிப்படுவதை அறிய முடிகிறது. குறி, கோடங்கி, சோதிடம், நல்லநேரம், சகுனம் போன்ற நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் ஆணின் மூலமாகப் பெண்ணுக்கு வலுவில் திணிக்கப்பட்டு, அதைக் கட்டாயம் பெண் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் மரபினையும் நாட்டுப்புறப் பாடல்கள் வெளிக் கொணர்கின்றன.

நாட்டுப்புற மக்களிடையே பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்வில் நிகழ்வில் பாலின வேறுபாடுகள் மிகுந்தே காணப்படுகின்றன. இவ்வேறுபாட்டினைப் போக்கும் தன்மை உடைய பாலின சமத்துவம் அல்லது மாற்று பாலின மரபு தோன்ற வேண்டும்.

இன்றைய தமிழகச் சூழலில் பண்பாட்டு படையெடுப்புகள் தொடர்கிற நிலையிலும் நாட்டுப்புற கலைகள் உயிர்ப்புடன் இருப்பதைக் காணமுடியும். தப்பாட்டம் என்பது சாதிய அடிப்படையில் கீழ்நிலையில் உள்ளவர்கள் பின்பற்றப்படுவதால் இழிவாகக் கருதப்படுகிறது. இதற்கு அந்த கருவியின் செய்முறையும் அதை இசைக் கருவியாகப் பயன்படுத்தும் சடங்கும் (சாவு) பயன்படுத்தும் மக்களின் பிறப்பு குறித்து கூறப்பட்ட கருத்துக்களும் காரணமாகின்றன. மாறாக, இக்காலத்தில் நிகழ்த்து கலை இசைக்கருவி எனும் நிலையில் இதர சாதியினரும் பழகி வருகின்றனர். குறிப்பாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் கள்ளர்இனத்தவர் பறையர்களிடமிருந்து இக்கலையினைக் கற்றுக்கொள்கின்றனர். அதுபோலச் சில சாதியரிடம் மட்டுமே காணப்படும் ஆட்டம், பாடல்கள், ஒப்பனைகள், கலைகள் எனும் நிலைக்கு வரும்போது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நிலையினைக் காணமுடிகிறது. காட்டாக தேவராட்டம் என்பது குறிப்பிட்ட சாதியார் (கம்பளத்து நாயக்கர்) ஆடுகிற ஆட்டமாக இருந்தாலும் கலை என்ற நிலையில் பிறரும் அதை பயின்று ஆடுவதைக் காணலாம். ஆனால் இவ்வாட்டங்களில் பெண்களின் பங்கெடுப்பு இல்லை. அதாவது இங்கு ஆண் பெண் பாலின வேறுபாடே பின்பற்றப்படுகிறது.

கலைகள் எனும் நிலையில் நாட்டுப்புற ஆடல்கள், பாடல்கள் பொதுமைத் தன்மை உடையனவாயிருந்தாலும் கலைஞர்கள் என்ற நிலைக்கு வரும்பொழுது மிகப்பெரிய அளவில் ஆண் பெண் வேறுபாடு காணப்படுகிறது. இன்றும் கூட நாடகம், கரகம் போன்ற கலைகளில் பறையர், சக்கிலியர் போன்ற இனத்தைச் சேர்ந்த பெண்களே கலைஞர்களாக உள்ளனர். காரணம் சமுதாயத்தில் நிகழ்த்தப்படும் இதுபோன்ற கலைகள் செவ்வியல் தன்மை உடையதாகப் பார்க்கப்படுவதில்லை. மேலும் இரண்டாம்பட்சமான பாலினமாக பார்க்கும் நிலையாகும் ( ஊதியம் பெண் கலைஞர்களே அதிகமாக பெறுகின்றனர் என்றபோதிலும் கூட இவர்கள் சமுதாயத்தில் ஒதுக்கப்படுகிறார்கள்.

இன்று கலை இரவுகளில் தப்பாட்டம் அனைத்துச் சாதியினரும் ஆடுவது போலவே பெண்களும் ஆடும் நிலை தோன்றியுள்ளது. அதாவது சாதி மற்றும் பாலின வேறுபாடு மறைந்து அனைவரும் நிகழ்த்து கலையாக இது மாறியுள்ளது. பாலின மாற்று மரபு, நிகழ்த்து கலைகளின் சில அம்சங்களை தனதாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றது என புரிந்து கொள்ள வேண்டும்.

காலந்தோறும் பெண் பாலினம் தாம் கற்றுக்கொண்டவைகளை பாடமாக்கிக் கொண்டு வந்து இன்றைய சூழலில் மாற்று மரபினை உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது எனலாம். இன்று நம்மிடம் உள்ள கலை வடிவங்களில் உள்ள ஆண் பாலின மரபினை மறுப்பதாக வேலி மீறுவதாகவோ பெண் பாலின மரபு தோற்றுவிக்கப்பட்டாலும் வரவேற்கத்தக்கதுதான். ''இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்'' என்ற கருத்தை எல்லா தளங்களிலும் முன் வைத்து படைப்பையும் ஆய்வையும் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை இவ்வாய்வு உணர்த்துகிறது.

 

கருத்துகள் இல்லை: