‏إظهار الرسائل ذات التسميات புறநானூறு. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات புறநானூறு. إظهار كافة الرسائل

குடும்பம் - மரபும் மாற்றமும்! - முனைவர் அரங்க. பாரி

வையகமே ஒரு குடும்பமாக வேண்டுமென்பது சான்றோர் கருத்தாகும். "யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என உலகைத் தன் உள்ளத்துள் வளைத்துக் கொண்டது தமிழியம். மனிதன் கண்ட அமைப்புகள் யாவற்றிலும் சிறந்தது குடும்பம் என்னும் நிறுவனமேயாகும். இந்த நிறுவனத்தில் குறைகள் இருப்பினும் இதனை விட்டுவிட முடியாது.  இதுவே மனிதப் பண்பாட்டுப் பரிணாமத்தில் பழுத்த கனி; இதுவே மனிதநேய மாண்பின் சின்னம். இந்தக் குடும்ப அமைப்பு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. விழுமியங்களின் இருப்பிடமாவது குடும்பம். இது நேற்று எப்படி இருந்தது, இன்று எப்படி உள்ளது, நாளை எப்படி இருக்கும் எனக் காண்போம்.


குடும்ப அமைப்பும் உறவுமுறையும்:


பண்டைக் காலத்தில்  கூட்டுக் குடும்ப அமைப்பே பெரிதும் இருந்துள்ளது. தலைவன் - தலைவி தனித்து வாழும் குடும்ப  அமைப்பும் அறியப் பெறுகின்றது. புறநானூற்றில் பெருஞ்சித்திரனாரின் குடும்பம் கூட்டுக் குடும்ப அமைப்பைச் சித்தரிக்கின்றது. "என் தாய் கோல் கொண்டு மெல்ல நடப்பவள்; சிலந்தி வலை போலச் சுருக்கம் மலிந்த முகத்தினள். என் மனைவி வறுமையில் மெலிந்தவள்; என் குழந்தை தாயின் மார்பில் பால் பெறாது வருந்துவது', (புறம். 159) எனக் கூறும்போது, தாயுடன் வாழும் கூட்டுக் குடும்ப அமைப்பு அறியப்படும்.


"மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன் ஐ

யானை எறிந்து களத்தொழிந்தனனே' (புறம். 279)


என்பதில் தந்தையும் குடும்ப உறுப்பினன் என்றறியப்படும். பாட்டன் உறவு முறை கூறும் பகுதியும் அறியப்படுகின்றது.


"நுந்தை தந்தைக் கிவன்தந்தை தந்தை

எடுத்தெறி ஞாட்பின் இமையான்' (புறம். 290)


எனப் போர் வீரர் குடியில் பாட்டன், தந்தை, மகன் என மூன்று தலைமுறைகள் நடக்கக் காணலாம். குடும்ப அமைப்பில், பல பிள்ளைகள் உடைமையினைப் புறநானூறு காட்டும் (159). அதே போல, குடும்பத்தில் ஒரே மகனுடைய நிலையையும் புறநானூறு காட்டும் (279). "ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்' என்னும் புறப்பாட்டுப் பகுதி (183) அண்ணன்- தம்பி உறவு முறைகளைச் சொல்லும். உறவிலேயே திருமணம் அமைவதை, "சுடர்த்தொடீஇ கேளாய்' எனத் தொடங்கும் கலித்தொகை காட்டும் (கலி. 50). முன்பு தொடர்பற்ற இருகுடிகள் புதுவதாக மணவினைத் தொடர்பு கொள்வதை "யாயும் ஞாயும்'  எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் விளக்கும்.


கணவன் - மனைவி உறவு:

பழந்தமிழ் இலக்கியத்தில் கணவன்- மனைவி உறவு வேறு எம்மொழி இலக்கியங்களிலும் கூறப்படாத அளவு பிரிவில்லா ஒருமைப்பாட்டுடன் விளங்குவதாகக் கூறப்படுகிறது.


"இம்மை மாறி மறுமை யாயினும்

நீயாகியர் என்கணவனை

யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே (குறுந். 49)


என்று தலைவி "எல்லாப் பிறப்புகளிலும் நாமே கணவனும் மனைவியும் ஆவோம்' என உரைக்கக் காண்கிறோம்'. "நாம் இரண்டு பேராகப் பிறந்தோம்; பூ இடைப்பட்டாலும் பல ஆண்டுகள் கழிந்தாற் போலத் துயருறுகின்ற அன்றில் பறவைகளென வாழ்ந்தோம். நம் உயிர் எப்போதும் பிரிவின்றி இருந்து போகும் காலத்தில் ஒன்றாகப் போவோம் (குறுந். 57) எனத் தலைவி கூறுகிறாள். பண்டைக்காலத் தலைமக்களின் இல்லறம், பிறவி தோறும் தொடர்வதாகவே கருதப்பட்டது.  கணவன் - மனைவி இருவரும் இணைந்து பேணும் இல்லறத்தைக் "கற்பு வாழ்வு' எனக் குறித்தனர் நூலோர். இந்த இல்லறத்தில் இருவருக்கும் கடமைகள் (குறுந். 135) இருந்தன.


பல்லாண்டுகளின் இல்லறம் இளமை தீர்ந்து முதுமை எய்தியக் கண்ணும் அன்பகலாத துணைமையொடு தொடரும். 


இடையில் கொழுநன் இறந்துபடின் தலைவி ஆற்றாத் துயரும் தனிமையும் எய்துவள். அவளுடைய கைம்மை கொடுந்துயர் தருவது

 (புறம். 246).


மனைவி இறப்பின் கணவனது துயரும் எல்லையின்றிப் போகும். 


"என் துணைவி இன்னே மறைந்தனள்; நான் இன்னும் வாழ்கின்றேனே' எனக் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக்கோதை புலம்பக் காண்கிறோம்

(புறம். 245).


மரபு மாற்றங்கள்:


மேற்குறித்த குடும்ப இலக்கணங்கள் காலப் போக்கில் மாறியுள்ளன. இன்று பாலுணர்வு வரையறைகள் நெகிழ்ந்துள்ளன.  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவற்றை இன்றைய பெண் பண்டைக் கால அளவில் கொள்ள இயலாது. பெண் பணிக்குச் செல்ல வேண்டும்; காவற்பணி பூண வேண்டும்; துப்பாக்கி ஏந்த வேண்டும்; வானூர்தி இயக்க வேண்டும்; சட்டங்கள் இயற்ற வேண்டும்; சமுதாயத்தை ஆளும் அரசியல் தலைமை பூண வேண்டும். இந்நிலையில், பெண்மை என்பதன் இலக்கணம் பெரிதும் மாறியிருக்கிறது.


பெண்ணின் உரிமை இன்று அவளைப் பல புதிய உலகங்களைக் காணத் தூண்டியுள்ளது. விதியே என்று வாழ்ந்த வாழ்க்கைக் கட்டுப்பாடுகளை உதறிச் சமஉரிமை மறுக்கப்படினும், உடம்பு உடைமைகளுக்கு ஊறு ஏற்படினும் மணவிலக்குப் பெறும் நிலையில் இன்றைய பெண் மகள் உரிமைக் கொடி ஏந்துகிறாள். கைம்மை வேலியை அகற்றி மறுமணத் தோட்டத்திற்குள் புகுகின்றாள். வாழ்க்கை முழுவதும் ஒருவன்- ஒருத்தி என்ற அறம் இன்று மாற்றம் எய்தியிருப்பினும், பெரும்பான்மைச் சமூகம் அந்த நெறியில்தான் சென்று கொண்டிருக்கிறது. மணமுறிவு, மணவிலக்கு என்பன இடம்பெறாத தமிழ்ச் சமூகத்தில் மேலை நாகரிகத் தாக்கத்தால், இவை இடம் பெற்றிருக்கின்றன. ஊர் மன்றங்களும் நீதி மன்றங்களும் உச்சநீதிமன்றமும் ஏராளமான மணவிலக்கு முறையீடுகளை ஆய்ந்து கொண்டிருக்கின்றன. குடும்பத் தகராறு கொலுமண்டபம் ஏறியிருக்கிறது. பல்பிறவிகளிலும் மாறாத இணை என்பது மாறிப் பணிவாய்ப்புகளில் தற்காலிக நிலை என்பது போலவே மணவாழ்க்கையிலும் நிலையாமை குடிகொண்டுவிட்டது.


திருமணச் சடங்குகள் பழைய முறையில் கட்டாயமானதாகவும், சமூகம் தழுவியதாகவும் இன்று இல்லை. நிலத்தைப் பத்திரப்பதிவு செய்வது போலத் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளும் வழக்கம் உண்டாகியிருக்கிறது. 


உறவுக்கிளைகள் மலிந்த குடும்பம் என்ற நிலைமாறி கணவன் -மனைவி, பிள்ளைகள் என்ற முக்கோண வாழ்க்கை முறை தோன்றியதில் சிவப்பு முக்கோணம் குடும்ப நடைமுறையாகி உள்ளது.  இதனால் அண்ணன் தம்பிகளைக் காணோம்; மாமன் மாமி, சிற்றப்பா, பெரியம்மா, சின்னம்மாக்கள் அரிதாகி வருகின்றனர்.


சுருங்கக் கூறின், தமிழ்க் குடும்பம், மேலை வண்ணமும் வடிவமும் பெற்றுவிட்டது. உறவுக் கிளைகள் தோன்றாத தனிச் செடியாக உருவாகியுள்ள இன்றைய குடும்பத்தில் தமிழர்க்கே உரிய ஒப்புரவு விருந்தோம்பல், மனிதநேயம், மதநல்லிணக்கம் போன்ற பண்புப்பூக்களைக் காணோம். தமிழ்க் குடும்பம் ஒன்றைப் பார்த்துத்தான் தீரவேண்டுமென்றால்,  மட்டக்களப்புக்கோ டொரண்டோவுக்கோ போகலாம்.


நன்றி - தமிழ்மணி 2019






"கண்ணகி போன்ற வீர தேவதை"

(புறநானூற்று பாடல் 282ஐ அடிப்படையாகக் கொண்ட கதை)

மலையமான் திருமுடிக்காரியின் அரண்மனையில் ஒரு மாலைப்பொழுது. மன்னன் தன் படைத்தலைவர்களுடன் போர் திட்டங்களை ஆலோசித்துக்கொண்டிருந்தான். அப்போது வாயிற்காவலன் ஓடி வந்தான்.

"அரசே! சேர மன்னன் பெரும்படையுடன் நம் எல்லையை நெருங்குகிறான்!" என்றான் பதற்றத்துடன்.

திருமுடிக்காரி அமைதியாக எழுந்தான். "நம் வீரர்களைத் திரட்டுங்கள். இன்றிரவே களத்திற்குச் செல்வோம்" என்றான்.

அவன் மனைவி அமுதன் தேவி கவலையுடன் அருகில் வந்தாள். "நாதா! சேர மன்னனின் படை மிகப் பெரியது. மேலும் உங்கள் உடல்நிலை சரியில்லை. போரை தவிர்க்க முடியாதா?"

"வீரத்தின் விதை"

பாண்டிய நாட்டின் மதுரையை ஆண்டு வந்த நெடுஞ்செழியன் காலத்தில், சிற்றூர் ஒன்றில் வாழ்ந்த வீரன் வல்லவன். அவன் தந்தை பகைவர் படையெடுப்பில் வீரமரணம் அடைந்தவர். வல்லவன் சிறுவயது முதலே வேல் எறிதல், வாள் வீசுதல், குதிரையேற்றம் என அனைத்து போர்க்கலைகளிலும் தேர்ச்சி பெற்றவன்.

ஒருநாள், அவன் ஊருக்கு வந்த பாணர் ஒருவர் பாடிய புறநானூற்று பாடல் ஒன்று அவனை பெரிதும் பாதித்தது:

"உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவ தாயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே முனிவிலர் துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்"

இந்த வரிகள் வல்லவனின் உள்ளத்தை உலுக்கின. தனிமனிதனாக இருந்தாலும் நேர்மையுடன் வாழ வேண்டும், பிறர் அஞ்சுவதற்கு அஞ்சி வாழக்கூடாது என்ற கருத்து அவனை ஆட்கொண்டது.

சில நாட்கள் கழித்து, அவன் ஊரை நோக்கி வடநாட்டு கொள்ளையர் கூட்டம் வருவதாக செய்தி வந்தது. ஊர் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். ஆனால் வல்லவன் தன் வீரத்தோழர்கள் சிலரை திரட்டி, கொள்ளையரை எதிர்கொள்ள முடிவு செய்தான்.

"வேள்பாரியின் வீர காவியம்"

பறம்பு மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்தது பாரியின் அரண்மனை. கருங்கற்களால் கட்டப்பட்ட அவ்வரண்மனையின் முற்றத்தில் எப்போதும் புலவர்களும், பாணர்களும், கூத்தர்களும், ஏழை மக்களும் கூடி நிற்பர். அவர்கள் அனைவருக்கும் வேள்பாரி தன் செல்வத்தை வாரி வழங்குவான்.

மலை நெடுகிலும் பசுமையான காடுகளும், வயல்களும், அருவிகளும் நிறைந்திருந்தன. பாரியின் ஆட்சியில் மக்கள் வறுமையின்றி வாழ்ந்தனர். அவனது இரு பெண் மக்கள் - அங்கவை, சங்கவை - தந்தையின் கொடைப் பண்பைக் கற்றுக்கொண்டு வளர்ந்தனர்.

ஒரு குளிர்கால மாலையில், பாரி தன் தேரில் பறம்பு மலையைச் சுற்றி வந்தபோது, பனியில் நடுங்கிக்கொண்டிருந்த முல்லைக் கொடிகளைக் கண்டான். உடனே தன் பொற்றேரை நிறுத்தி, "இக்கொடிகள் படர்வதற்கு என் தேரே துணையாகட்டும்" என்று கூறி, தேரை அங்கேயே விட்டுச் சென்றான். நடந்தே அரண்மனை திரும்பினான்.

இச்செய்தி கேட்ட கபிலர், "பாரியின் கொடைக்கு நிகர் பாரியே" என்று பாடினார். அவரது புகழ் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவின. இதனால் பொறாமை கொண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் நாட்டைக் கைப்பற்ற எண்ணினர்.

தமிழ் இலக்கியத்தில் பேய்! - சி.இராஜாராம்

இந்த உலகை இயக்கி, நம்மை வாழவைக்கும் இயற்கைக்குப் பெண்ணின் பெயர்களை வைத்து அழகு பார்த்த மனிதன் (ஆண்), உயிரை எடுப்பதாக நம்பப்பட்ட பேயை, பெண்ணின் வடிவமாகவே பார்க்கிறான். பெண்ணின் மீது ஆண் செலுத்திய ஆதிக்க மனோபாவமும், வன்முறை வெறியாட்டமும் அவள் இறந்தவுடன் பழியெடுக்கக்கூடும் என்ற பய உணர்வுமே அவள் பேயாய் வருவதாக நம்பினான்.

கடைச்சங்க காலத்தில் பேயனார், பேய்மகள் இளவெயினி, பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனப் புலவர்களுக்கும் அருளாளர்களுக்கும் பெயர்கள் வழங்கி வந்துள்ளன.

"பேய்' என்னும் சொல் அச்சுறுத்துவது, அஞ்சுவது என்னும் பொருள்படும். அலகை, அள்ளை, இருள், கடி, கருப்பு, காற்று, குணங்கு, கூளி, மண்ணை, மயல் (மருள்) என்பன பேயின் பொதுப் பெயர்கள். பேய்களுள் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு. குறளி (கருங்குட்டி), பேய், கழுது, பூதம், முனி(சடைமுனி) அரமகள், அணங்கு எனப் பேய் இனம் பலதிறந்ததாகச் சொல்லப்படும். குறளியைக் குட்டிச்சாத்தான் என்பர். 

பேய்களில் காட்டேறி, தூர்த்தேறி முதலிய பலவகைகள் இருப்பதாகக் கூறுவர். பூதங்கள் குறும்பூதம், பெரும்பூதம் என இரு வகை உண்டு. சூர், சூர்மகளிர், சூர்அர மகளிர், வரை அரமகளிர், வான் அரமகளிர் முதலிய பெயர்களில் குறிப்பிடப்பட்டவை எல்லாம் அணங்கும் சக்திகளாகும். இவற்றின் பெயரால் சூள் (சத்தியம், ஆணை) உரைத்த வழக்கமும் அன்று இருந்துள்ளது. சூள் பொய்த்தால் சூள் உரைத்தவரையும் தவறு செய்வோரையும் அந்தத் தெய்வம் தண்டிக்கும் என்ற அச்சம் இருந்தது. இதுவே பின்னர் "பூதம்' என்று அழைக்கப்பட்டது. ""குண்டைக் குறப்பூதம்'' என்கிறது தேவாரம் ( 944:1).

அக்காலத்தில் போரில் புண்பட்ட மறவரைப் பேய்கள் அண்டாதவாறு, பெண்களும், உறவினரும் வேப்பந் தழையை வீட்டில் செருகியும், மையிட்டும், வெண் விறுகடுகு தூவியும், நறும்புகை காட்டியும், காஞ்சிப்பண் பாடியும் காத்தனர் என்பதை இலக்கியங்கள் வாயிலாக அறியமுடிகிறது.

சதுப்பு நிலங்களில் அழுகிய பொருள்களிலிருந்து கிளம்பும் ஆவியும் (Gas), இரவில் ஒளிவிட்டு எரிவதுண்டு. அதைக் கண்டு "கொள்ளிவாய்ப் பேய்' என்பது மக்களின் அறியாமையே ஆகும்.
நீர் நிலைகளெல்லாம் வற்றி, வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக்கற்ற பாலை நிலம், போர்க்களங்களும் ஆறலைப்பால் விழுந்த பிணங்களும் நிறைந்த பாழுங்காடாதலால், பிணந்தின்னும் பேய்களுக்குத் தலைவியாகிய காளியே அவற்றுக்குத் தெய்வமானாள். இதைச் சிலப்பதிகார வேட்டுவ வரியாலும், காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது என்னும் கலிங்கத்துப்பரணிப் பகுதிகளாலும் அறியலாம்.

""ஈமவிளக்கின் பேஎய் மகளிரொரு
அஞ்சு வந்தன்று அம்மஞ்சுபடு முது காடு''
(புறநா. 356)

என்று பிணம் எரியும் சுடுகாட்டிலும் பேய்ப் பெண்டிர் இருந்ததாக நம்பினார்கள்.
 ""பேயரசு செய்தால், பிணந்தின்னும் சாத்திரங்கள்'' என்றார் பாரதியார் (பாஞ்சாலி சபதம்). இக் கூற்றிலிருந்து பேய்க்கும் பிணத்துக்கும் ஒரு தொடர்பு கூறப்படுகிறது. ""பெருமிழலைக் குரும்பர்க்கும் பேயர்க்கு மடியேன்'' என்று காரைக்கால் அம்மையாரைப் போற்றுகிறது திருத்தொண்டத் தொகை.

""வயங்குபன் மீனினும் வாழியர் புலவென
உருக்கெழு பேய்மக ளயர்''
(புறநா.371:25-26)

என்று புறநானூற்றுப் புலவர் கல்லாடனார், "அரசன் பல்லாண்டு வாழ்வானாக' என்று அச்சம் பொருந்திய பேய்மகள் பாடிக் குரவைக் கூத்தாடுவதைக் கூறியுள்ளார். இத்தகைய செய்திகள் சங்க இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகின்றன. மேலும், "காடுபடர்ந்து கள்ளி மிகுந்து பகற்காலத்திலும் கூகைகள் கூவும் சுடுகாட்டிலே பிணஞ்சுடு தீ கொழுந்து விட்டெரியும். அங்கு அகன்ற வாயையுடைய பேய் மகளிர் காண்போர்க்கு அச்சம் உண்டாகும் முறையில் இயங்குவர்' என்றும் பாடியுள்ளார் (புறநா.356:1-4) கதையங்கண்ணனார் என்னும் புலவர்.

""பேஎய் மகளிர் பிணந்தழூஉப் பற்றி
விளரூன் றின்ற வெம்புலான் மெய்யர்''
(புறநா.359:1-8)

என்று சுடுகாட்டில் நிகழ்வதைச் சித்திரமாகத் தீட்டிக்காட்டுகிறார் காவிட்டனார்.
போரிலே வீழ்ந்த நல்ல தந்தங்களை உடைய யானை பிணங்களின் குருதியைக் குடித்து, சிதறிக் கிடந்த குறை தலைப்பிணம் எழுந்து தன்னோடு ஆடும்படி பேய்மகள் துணங்கைக் கூத்தாடுவாள் என்று பாடியுள்ளார் (மதுரைக்காஞ்சி.24-28) மாங்குடி மருதனார்.

பெரியபுராணத்தில் காரைக்காலம்மையார் பெற்ற பேய் வடிவத்துக்கு விளக்கம் கூறும் உரைக்காரர் சி.கே.சுப்பிரமணிய முதலியார், ""காரைக்காலம்மையார் பாசமாம் பற்றறுத்துச் சிவனருளால் பெற்ற உடம்பு இயலும் இசையும் பாடுதற்குரிய, வாக்கு முதலிய புறக்கரணங்களையும், மனம் முதலிய உட்கரணங்களையும் உடைய திருவடிவம்'' என்கிறார்(காரைக்காலம்மையார் புராணமும் அவரது அருநூல்களும் பக்.52). ஆனால், சாதாரணமான பேய்களோவெனின், வடிவற்ற வாயு உடம்பு அல்லது சூக்கும உடம்பு உடையன என்பது கருத்தாகும்.

பேய் மகள் கொண்டிருந்த தோற்றத்தையும், அவளது கொடிய செயலையும் கண்டு அக்கால மக்கள் அஞ்சினர் என்பதும், சில நம்பிக்கைகள் கொண்டிருந்தனர் என்பதும் சங்கப் பாடல்களினின்றும் நன்கு புலனாகிறது.


நன்றி - தமிழ்மணி 30 06 2013

‘கிழார்' போற்றுதும்… - சிவமானசா

சங்க காலத்தில் ‘கிழார்' எனும் சிறப்புப் பெயர் உழுவித்து உண்ணும் வேளாண் மக்களைக் குறிக்கும் பட்டம் என்பது அறிஞர்கள் கருத்து. இதை, உ.வே.சாமிநாதையரின் சங்கப்பாடல் பதிப்பிலும், ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி நூலிலும் காணலாம். பிற்காலத்தில் கல்வெட்டுகள் முதலியவை பல சமூகத்தினரைக் குறித்தது என்று கூறுகிறது. ஆனால், சங்க காலத்தில் வேளாண் மக்களையே குறிப்பதாகக் கூறுவர்.

பாண்டிய மன்னன் வேளாண்குடி மக்களுக்கு வழங்கிய பட்டத்தின் பெயர் "காவிதி' என்பது அறிஞர்கள் கூற்று. அத்தகைய ‘கிழார்'கள் பலர் அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்துள்ளனர். அவர்களுள் சிலரைக் காண்போம்.

அரிசில் கிழார் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடி எண்பத்து நூறாயிரம் பொற்காசுகளைப் பெற்றவர் இவர். வையாவி கோப்பெரும் பேகனையும், அவனுடைய இல்லத்தரசியான கண்ணகியையும் இணைத்து வைத்தவர். குறுந்தொகையில் 193, புறம்-146, 230, 281, 285, 300, 304, 342 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆலந்தூர் கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், நலங்கிள்ளியையும் பாடியுள்ளார். குறு.112, 350, புறம்.34, 36, 69, 225, 324 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆவூர்க்கிழார் : உறையூர் அருகிலுள்ள ஆவூரைச் சேர்ந்தவர். புறம்-322வது பாடலைப் பாடியவர்.

கண்ணனார் கிழார் : இவர் ஆவூர்க்கிழாரின் மகனார். அகம்-202-ஆம் பாடலைப் பாடியவர்.

ஆவூர் மூலங்கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார். அகநானூற்றில் 24, 156, 341, புறநானூற்றில் 38, 166, 177, 196, 261, 301 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

பெருந்தலைச் சாத்தனார் கிழார் : இவர் ஆவூர் மூலங்கிழாருடைய மகன். நற்றிணையில் 262, அகம்.13, 224, புறம் 151, 164, 165, 205, 208, 294 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

இடைக்குன்றூர் கிழார் : இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியவர். புறம்.76-79 (4 பாடல்கள்) வரை உள்ள பாடல்களைப் பாடியவர்.

உகாய்க்குடி கிழார் : குறுந்தொகையில் 63-ஆம் பாடலைப் பாடியவர்.

பரங்கொற்றனார் கிழார்: இவர் உமட்டூர் கிழாரின் மகனார். அகநானூற்றில் 69-ஆம் பாடலை இயற்றியுள்ளார்.

ஐயூர் மூலங்கிழார் : இவர், பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் பாடியவர். புறம் 21-ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

கயத்தூர் கிழார் : இவர் குறுந்தொகையில் 354-வது பாடலைப் பாடியுள்ளார்.

கருவூர்க்கிழார் : இவர் குறுந்தொகை 170வது பாடலைப் பாடியவர்.

காரிக்கிழார் : இவர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். புறம் 6-வது பாடலைப் பாடியவர்.

கிள்ளி மங்கலங்கிழார் : குறுந்தொகையில் 76, 110, 152, 181 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

குறுங்கோழியூர் கிழார் : சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாராட்டிப் பாடியுள்ளார். புறம் 17, 20, 22-வது பாடலைப் பாடியவர்.


நன்றி - தமிழ்மணி 19 8 12

சங்ககால சறுக்கல் சிந்தனைகள் - அ.ப.பாலையன்

காலந்தோறும் புதிய புதிய கருத்துகள் உண்டாக்கப்பட்டு பரப்பப்படுகின்றன. உருவானவற்றில் விழுமியவையும் மானுடத்தை மேம்படுத்துபவையும் எவ்வளவு காலமானாலும் நிலைத்து நிற்கின்றன. சில பிற்போக்காகவும் சுயநலத்தோடு தோன்றியவையாகவும் இருந்து மக்களில் ஒரு சாரார்க்கு மட்டுமே பயன்படுபவையாக அமைந்துவிடுதல் உண்டு. வலுவாகப் பரவிய பல கருத்துகளுக்கு வலுவான பின்னணியும் இருக்கும். ஆனால் கருத்துகளில் கவனம் செலுத்தும் மக்கள் அக்கருத்து தோன்றிய பின்னணியை மறந்துவிடுதல் இயற்கை.

இக்கட்டுரையில் சங்க காலத்தில் நடைமுறையில் இருந்த சில கருத்துகளையும் அவை தோன்றியதற்கான பின்னணியையும் பார்ப்போம்.

பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் தோன்றிய பழங்காலத்தில் பெண்கள் உரிமையற்ற இரண்டாம் தர மக்களாகவே நடத்தப்பட்டனர். ஆண்களுக்கு அடங்கியவராக இருந்தனர். சில விதிவிலக்குகளும்கூட இருந்தன. கணவனை இழந்த பெண்டிர் எத்துணை துயரங்களைத் தாங்கியிருந்தனர் என்பதற்குப் பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு (புறம் 246) பாடிய பாடலே சான்று.

பெண்கள் சமூகத்தால் மிகவும் தாழ்வாக நடத்தப்பட்ட போதிலும் ஒரு சில சமயங்களில் அவர்கள் வெகுவாகப் பாராட்டப்பட்டும் உள்ளார்கள். ஆண் மக்களைப் பெற்று வளர்த்து போருக்கு அனுப்பிய பெண்கள் "மூதின் மகளிர்' என வாயாரப் புகழப்பட்டு உள்ளனர்.
சான்றாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன் ஐ
யானை எறிந்து களத்து ஒழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்
பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாலுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே. (புறம் 279)

இவளது எண்ணம் கெடுக. (வாழ்க எனப் பொருள்) இவள் பெண்களில் சிறந்தவள். முதல்நாள் போரில் இவள் தந்தை யானையைக் கொன்று மடிந்தான். அடுத்தநாள் இவள் கணவன் பசுக் கூட்டத்தை எதிரிகளிடமிருந்து காத்து மாண்டான். போர் தொடர்ந்தது. தன் ஒரே மகனை அழைத்து ஆடை உடுத்தித் தலைவாரி விட்டு கையிலே வேலைக் கொடுத்து வென்று வா என அனுப்பினாள் அத்தாய்.

இப்பெண் வாழும் நாட்டு மன்னனுக்கும் அடுத்த நாட்டு அரசனுக்கும் மண்ணாசை மீதுரப் பெற்றதால் போர் நடக்கிறது. அப்போருக்கு இவள் தன் ஒரே ஆண் மகனைப் போருக்கு அனுப்புகிறாள்.

இப்படி இப்பெண் தன்னைக் காப்பாற்ற இருக்கும் ஒரே மகனான சிறுவனையே தன்னைப் பற்றிய கவலையின்றி அரசனின் மண்ணாசைக்குப் பலி கொடுக்க அனுப்புகிறாள்.

இதனால் இவள் வாழ்க எனவும் மிகவும் துணிச்சல்காரி எனவும் மூதின் மகளிர் எனவும் அளவு கடந்து பாராட்டப்படுகிறாள்.

பெண்ணுக்குப் போதுமான உரிமை அளிக்காமலும் ஆண் செய்யும் அடாவடிச் செயலைத் தட்டிக் கேட்காமலும் அடக்கப்பட்ட பெண்கள் போருக்கு மகனை அனுப்பும்போதும் ஆண் மகனைப் பெற்றுத் தரும்போதும் (புறம் 312) பலபடப் பாராட்டப்படுவதும் புகழப்படுவதும் எதனால்?

அங்கேதான் அக்கால ஆண்கள் உண்டாக்கிய சூட்சுமமான கருத்து இருக்கிறது.

சங்கச் சமூகம் போரும் பூசலும் நிரம்பிய சமூகம். அரசர்கள் தமக்குள்ள மண் போதாதென்று தம் மக்களைப் பலிகொடுத்து அவர் பெண்டுகளை விதவை களாக்கியும் பிள்ளைகளை அனாதைகளாக்கியும் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்ட காலம் அது.

அதனால்தான் அக்காலத்திய புலவர் பெருமக்கள் "ஒருவரை ஒருவர் அடுதல் புதுவதன்றே' எனப் போரிடும் அரசர்கள் செயலை ஏற்றித் தாளம் போட்டனர்.

மன்னர்கள் தம் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள பலம் வாய்ந்த வீரர்கள் தேவை; வீர மறவர்களைப் பெற்று மனம் கோணாமல் போருக்கு அனுப்பும் பெண்களும் தேவை. 

வீரர்களை அனுப்பும் பெண்கள் பாராட்டப்படவும் மதிக்கப் படவும் வேண்டும். அத்தகைய கருத்தை சமுதாயத்தில் பரப்பிக் காத்தலும் வேண்டும். அப்போதுதான் நினைத்தபோதெல்லாம் பெண்கள் எவ்வளவு துன்ப துயரங்களை ஏற்றாலும் பாராட்டுக்கு மயங்கி கணவர்களையும் பிள்ளைகளை யும் போருக்கு அனுப்பிக்கொண்டே இருப்பார்கள்.

அரச மரபினரின் ஆசைக்கு அவர்களின் விசுவாசி களால் உண்டாக்கிப் பரப்பப்பட்ட இக்கருத்து பெண்களை மயக்கிய கருத்துப் பரப்பல் என அறிதல் வேண்டும்.

அரசனுக்காக வீரர்கள் போரிட்டு மடிவர்; அப்படி மடிபவர்கள் மகிழ்ச்சியோடும் புகழ் போதை யோடும் மடிய வேண்டும் என்பதற்காகவே ஒரு கருத்து உண்டாக்கப்பட்டு நம்பிக்கையாக வளர்க்கப்பட்டிருந்தது அன்று; இன்றும் அக்கருத்து வேறு வடிவில் தொடர்கிறது.

ஓடல் செல்லா பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கை பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது? படினே
மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப.
(புறம் 287)

"போர்க்களத்தில் அஞ்சிப் புறம் கொடுக்காதவர் மறவர். மருத நிலத்து ஊர்களைக் கொடையாகப் பெறுவது அவர்களுக்குப் பெருமை அன்று. போரில் விழுப்புண்ணோடு மடிந்து மேலுலகம் புகுந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவதே அவர்களுக்குப் பெருமை' என்பது சாத்தந்தையார் எனும் புலவரின் கருத்து.

போரில் வீரர்கள் சாவது இயற்கை. செத்தவர்கள் சொர்க்கம் (மேலுலகம்) புகுவர் என்பதும் புகுந்தவர் தேவகுல மகளிரையே மணப்பர் என்பதும் உண்மைக்கு மாறானவை என்று அறிந்திருந்தும் இக்கருத்துகளைப் பரப்பி வந்துள்ளனர் புலமை உடையோர், ஏன்?

இல்லாத ஒன்றை அடைவதில்- நம்புவதில் மனிதர்க்கு எப்போதும் போதை உண்டு. நன்னீரை விடக் கானல் நீரைப் பருகத் துடிப்பவர்கள் உண்டல்லவா? மேலும் தேவகுலப் பெண்களை மணக்கும் பாக்கியம் வேறு கிடைக்கிறது.

இவ்விரண்டையும் அடைய அவாவிய வீரர்கள் சாரை சாரையாகப் புறப்பட்டால்தானே மன்னனுக்கு வெற்றி கிடைக்கும். அவன் வெற்றிபெற மறவர்க்கு ஏற்றப்பட்ட போதையே மேலுலகமும் தேவமகளிரும் என அறிதல் வேண்டும்.

மேலுலகத்தை ஒத்துக்கொண்ட வள்ளுவர் ஓரிடத்தில் மேலுலகத்தை மறுத்துவிடுதலையும் இவன் நினைக்கலாம். "மேலுலகம் இல் எனினும்' (குறள் 222) என்பது அது.

இப்பாடலுக்கு விளக்கம் எழுதிய உரை வேந்தர் ஔவை. சு.துரைசாமிப் பிள்ளையவர்கள் "போர்க்களத்து உயிர் கொடுக்கும் மறவர் துறக்க உலகை அடைந்து தேவ மகளிரை மணந்து இன்புறுவர் என்பது பண்டையோர் கொள்கை' என்று எழுதினார். (புறநானூறு- கழகப் பதிப்பு. பா. 287)

நடுகல்லில் இறந்துபட்ட வீரனின் சிற்பம் செதுக்கப்பட்டிருக் கும். அச்சிற்பத்திற்கு மேலே வானர மகளிர் மலர் தூவி அவனை வரவேற்பது போலவும் சிற்பம் இருக்கும்.

இந்நடுகல் சிற்பத்தையும் புறப்பாடல் கருத்தோடு ஒப்பிட்டு ஒரே கருத்து இருவேறு முறைகளில் இருப்பதை உணரலாம்.

பண்டைக் காலத்தில் மன்னன் சில வீரர்க்கு மட்டும் தனியே சிறப்புகளைச் செய்யும் வழக்கமும் இருந்திருக்கிறது. அவ்வீரர்கள் உடல், பொருள், ஆவியைத் தரும் விசுவாசிகளாய் இருப்பர் போலும்!

ஓர் அரசன் ஒரு வீரனுக்கு மட்டும் தனியே கள்ளைக் கொடுத்துப் பாராட்டி இருக்கிறான். ஆனால் போரில் அவன் சாகவில்லை.

இதனை நினைத்து அவனைப் பெற்றவள் ஏங்குகிறாள்; அழுகிறாள்.

"என் மகன் போரிலே மடிந்திருந்தால் 
அரசன் கண்ணீர் மல்க அவனைப் பாடையிலே கிடத்தி 
அவன் மேலே தூய வெள்ளாடை போர்த்தி மரியாதை செய்திருப்பானே. 
அப்பேறு அவனுக்குக் கிட்டாமல் போயிற்றே' 
என வருந்துகிறாள். இதோ பாடல்.
பலர்மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
தூயவெள் அறுவை போர்ப்பித் திலதே.
(புறம் 286)

அரசன் செய்யும் இச்செயலுக்குப் பின்னணி யில் வீரர்கள் இப்பேறு பெற போருக்கு விரும்பிச் செல்லும் ஆசை உண்டாக்க வேண்டும் எனும் உந்துதல் மறைந்திருப்பதைக் காணமுடியும்.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை. எந்தக் கருத்தும் தோன்றுவதற்கு வலுவான பின்னணி இல்லாமல் தோன்றுவதில்லை. இன்று மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் பொருளற்ற மூட நம்பிக்கைகளாகிய சொர்க்கம், நரகம், மறுபிறவி, தலையெழுத்து, வானுலகம் போன்ற அனைத்தும் தோன்றிய பின்னணியும்கூட இப்படித்தான் இருக்கும்.

ஒரு கருத்துப் பரவிய பிறகு, மக்கள் கருத்தை மட்டுமே உடும்புப் பிடியாகப் பற்றி நிற்பர்; பின்னணி கால வெள்ளத்தில் கரைந்து போகும். கருத்துகளின் பின்னணியை ஆராய்வ தால் அக்கருத்துத் தோற்றத்தின் மூலத்தை அறியலாம். சமூகத்திற்குப் பண்டு தோன்றிய கருத்துத் தேவையெனின் பின்பற்றலாம்; தீமை தருமெனின் நிராகரிக்கலாம்.


நன்றி - இனிய உதயம்

தமிழ் இலக்கியங்களில் ஓசோன் - கா.மு.சிதம்பரம்


தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றாக ட்ரோஸ்பியர், ஸ்ட்ரோட்ஸ்பியர், மெúஸôஸ்பியர், தெர்மாஸ்பியர், எக்úஸôஸ்பியர், நத்திங்னஸ் என அவை அமைந்துள்ளன.

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்குதான் இருக்கிறது.

இன்றைக்கு ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன.


""இருமுந்நீர்க் குட்டமும்

வியன்ஞாலத்து அகலமும்

வளிவழங்கு திசையும்

வறிதுநிலைஇய ஆகாயமும்''

(புறநா-20)

  என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.


""செஞ்ஞாயிற்றுச் செலவும்

அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

சூழ்ந்த மண்டிலமும்

வளிதரு திசையும்

வறிதுநிலை காயமும்''

(புறநா-30)

  என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


""மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக

இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய

வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்''

(புறநா-365)


என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவற்றுள் திசை என்னும் பகுதியில் காற்று இருக்கும். ஆகாயம், நீத்தம் என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. நீத்தம் என்பது இன்றைய அறிவியலார் கூறும் வெறுமை (நத்திங்னஸ்) என்னும் பகுதி.

புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான ஸ்ட்ரோட்ஸ்பியர் என்னும் பகுதியில்தான் ஓசோன் எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது.

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?


""நிலமிசை வாழ்வர் அலமரல் தீர

தெறுகதிர் வெம்மை கனலி தாங்கி

காலுண வாக சுடரொடு கொட்கும்

அவிர்சடை முனிவரும் மருள''

(புறநா-43)


என்னும் பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம் மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்' என்பதாகும்.

மேலும், முருகக் கடவுளின் ஒருகை, ""விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது'' என்று திருமுருகாற்றுப்படை(107)யிலும், ""சுடரொடு திரிதரும் முனிவரும் அமரரும் இடர்கெட அருளிநின் இணையடி தொழுதேம்'' என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி-18) இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவு வாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்றுதான் என்று சொல்லக் கூடும்.

முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று.

கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நம் அனைவரையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறதல்லவா?

நன்றி - தமிழ்மணி

நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்!


சங்க காலத்தில் புலவர்களுக்கும் அரசர்களுக்கும் இடையிலான தொடர்பு வெறும் புலவனுக்கும் அரசனுக்கும் உள்ள தொடர்பாக மட்டும் அமைந்திருக்கவில்லை. புலவர்கள், அரசர்களின் உயிருக்குயிரான நண்பர்களாகவும் அரசியல் ஆலோசகர்களாகவும் இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது.

மக்களிடமிருந்து திரைப்பொருளை நல்வழியில் பெறச் செய்வது, அதன் மூலம் நாட்டில் நல்லாட்சி நிலவச் செய்வது, அரசன் செங்கோன்மையிலிருந்து பிறழுங்காலத்து இடித்து அறிவுரை கூறுவது, பழி பாவங்கள் ஏற்பட்டால் அரசனைக் காப்பது முதலிய  அருஞ்செயல்களிலும் புலவர்கள் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய புலவர்கள், அரசர்கள் வீரம் முதலிய பண்புகளில் சிறந்து விளங்கிய காலத்து அவர்களைப் புகழ்ந்துரைக்கவும் தவறியதில்லை. அங்ஙனம் வெளிப்படையாகப் புகழ்வதோடு, குறிப்பாகப் புலப்படுமாறு புகழாப் புகழ்ச்சியாகவும் அமைத்துப் பாடத் தவறியதுமில்லை.

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் ஒருவர், ஏனாதி திருக்கிள்ளி என்னும் மன்னனைப் புகழ்ந்துள்ளமையைக் காணலாம். ஏனாதி திருக்கிள்ளி, போரைக் கண்டுவிட்டால் உடன் அப்போரை வென்று, பகைவர் படையை விலக்கி எதிர்த்து நிற்பவனாதலால், அவனது உடல் முழுவதும் வாளால் ஏற்பட்ட விழுப்புண்கள் நிறைந்துள்ளன. எனவே, அவனது உடலோ காண்பதற்கு இனியதல்ல. அவனது பகைவர்கள் அவனைக் கண்ட அளவிலேயே புறங்காட்டி ஓடிவிடுகின்றனர். அதலால், அவர்கள் ஊறு அறியாத அழகிய யாக்கையோடு காட்சிக்கு இனியராக (அழகானவராக) உள்ளனர். புறங்கொடுத்த கீழ்மையால் அவர்கள் கேள்விக்கு இனியரல்லர். புலவர் இவ்வாறு உரைத்துவிட்டு அடுத்ததாக ஏனாதி திருக்கிள்ளியிடம் தம் ஐயத்தை எழுப்புகிறார்.

நீயும் ஒன்றில் இனியவன்; நின் பகைவரும் ஒன்றில் இனியவர்; அவரோடு ஒவ்வாதன வேறு எவை உள்ளன. ஆனால், உன்னை மட்டும் இவ்வுலகம் வியந்து போற்றுகிறதே; அதன் காரணம் யாதென்று எமக்கு உரைப்பாயாக என்று நயம்பட வினவுவதாக அப்பாடலை, வாகைத் திணையில், அரசவாகைத் துறையில் அமைத்துள்ளார்.

""நீயே, அமர்காணின் அமர் கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கையொடு,
கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!
அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின்,
ஊறு அறியா மெய் யாக்கையொடு
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்றினியர்;
ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!
நின்னை வியக்கும் இவ்வுலகம்; அஃது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே''
(புறம்-167)

நன்றி - தமிழ்மணி

பண்டைத்தமிழ் இலக்கியங்களில் கரும்பு - வெ.பெருமாள்சாமி

உலகமெங்கும் வெப்ப நாடுகளில் கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சங்க காலத்திலேயே கரும்பு பயிரிடப்பட்டு வந்துள்ளது. கடையெழு வள்ளல்களில் ஒருவனான அதியமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர்களில் ஒருவன் கடல் கடந்த நாடு ஒன்றில் இருந்து கரும்பைக் கொண்டுவந்து தமிழ் நாட்டில் பயிரிடுவதற்கு ஏற்பாடு செய்தான் என்று புறநானூறு(99) கூறுகிறது.

அமரர்ப் பேணியும் ஆவுதி யருத்தியும்

அரும்பெறல் மரபிற் கரும்பி வட்டந்தும்

நீரக விருக்கை யாழி சூட்டிய

தொன்னிலை மரபின் நின் முன்னோர்

(தேவர்களைப் போற்றியும் வேள்விக்கண் ஆவுதியை அருந்துவித்தும் பெறுதற்கரிய கரும்பை விண்ணுலகத்தில் இருந்து இவ்வுலகத்துக்குக் கொண்டுவந்தும் நிலவுலகத்தில் சக்கரத்தை (ஆட்சியை) நடத்திய நின்முன்னோர்) என்றும்,

`அந்தரத்

தரும்பெறல் அமிழ்தமன்ன

கரும்பி வட்டந்த பெரும் பிறங் கடையே

கடலுக்கு அப்பால் உள்ள நாட்டினின்றும் அமிழ்தம் போன்ற கரும்பை இந்நாட்டுக்குக் கொண்டுவந்தவனது வழித்தோன்றல்) என்றும் புறநானூறு ( 392) கூறுகிறது.

கரும்பை அரைத்துச் சாறு பிழிந்தெடுக்கும் ஆலைகளும் சங்ககாலத்தில் செயல்பட்டன. கரும்புச் சாற்றில் இருந்து கருப்புக்கட்டி, சர்க்கரை, கற்கண்டு முதலியனவும் செய்யப்பட்டன. இது குறித்து ஏராளமான செய்திகளைச் சங்க நூல்கள் கூறுகின்றன.

மழை விளையாடும் கழை வளரடுக்கத்து

அணங்குடை யாழி தாக்கலிற் பலவுடன்

கணஞ்சால் வேழம் கதழ்வுற்றா அங்கு

எந்திரஞ்சிலைக்கும் துஞ்சாக் கம்பலை

கரும்பின் தீஞ்சாறு விரும்பினர் மிசைமின்

(யாழி தாக்கியதால் யானைகள் அச்சமுற்றுப் பிளிறியதுபோலக் கரும்பு அறைக்கும் இயந்திரங்கள் இரைச்சலிடுகின்றன. இயந்திரங்களால் பிழியப்பட்ட கரும்புச்சாற்றை மிகுதியாகக் குடித்து, பின் ஆலைகளில் காய்ச்சிக் கட்டியாக செய்த கருப்புக் கட்டியை மிகுதியாகத் தின்பீராக) என்று, தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்று மீளும் பாணன் ஒருவன், அவனிடம் பரிசில் பெறச் செல்லும் மற்றொரு பாணனிடம் கூறினான் என்று பெரும்பாணாற்றுப்படை (257-62) கூறுகிறது.

வான் பொய்ப்பினும் தான்பொய்யா

மலைத்தலைய கடற்காவிரி

புனல்பரந்து பொன் கொழிக்கும்

விளைவறா வியன் கழனிக்

கார்க் கரும்பின் கமழாலைத்

தீத்தெறுவிற் கவின்வாடி

நீர்ச்செறுவின் நீள் நெய்தல்

பூச்சாம்பும்

(மேகம் பொய்த்து வற்கடமாயினும் பஞ்சமாயினும் தான் பொய்யாமல் காலம் தோறும் வருகின்ற, குடகுமலையிடத்தே தலையினையுடையதும் கடலிடத்தே செல்கின்றதுமான காவிரியாறு நீர் பரந்து கரையிலே பொன்னைப் போடுகின்ற சோழ நாட்டில் விளைதல் தொழில் மாறாத அகற்சியையுடைய கழனியிடத்தில் பசிய கரும்பின் கமழும் பாகை அடுகின்ற கொதிக்க வைக்கின்ற கொட்டிலில் நெருப்பிற்புகை சுடுகையினாலே நீரையுடைய வயலில் பூத்த நீண்ட நெய்தற்பூ அழகுகெட்டுவிடும்) என்று பட்டினப்பாலை ( 5-12) கூறுகிறது.

கரும் பின் எந்திரஞ் சிலைப்பின் அயலது

இருஞ்சுவல்வாளை பிறழுமாங்கண்

கண்பணை

(கரும்பு ஆட்டும் ஆலை ஒலிக்குமாயின் அயலதாகிய நீர்நிலையில் உள்ள பெரிய பிடரையுடைய வாளை மீன்கள் துள்ளிப்பாயும் அழகிய ஊர்) என்று நீர் வளம் மிக்க மருத நிலத்தில் கரும்பு விளைவிக்கப்பட்டதுடன் ஆலைகளில் அரைக்கப்பட்ட செய்தியையும் புறநானூறு (322) கூறுகிறது.

கரும்பின் எந்திரம் களிற்றொடு பிளிறும்

என்று கரும்பு ஆலையில் இட்டு அரைக்கப்பட்டமை குறித்தும் அரைக்கும் எந்திரங்கள் களிற்றின் பிளிறல் போல ஒலி எழுப்பின என்றும் ஐங்குறு நூறு (55) கூறுகிறது.

கரும்பிற் bறுாடுத்த பெருந்தேன் சிதைந்து

சுரும்பு சூழ் பொய்கைத் தூநீர் கலக்கும் என்றும்

கழனிச் செந்நெல் கரும்பு சூழ் மருங்கு என்றும் வயல்களில் கரும்பும் நெல்லும் பயிரிடப்பட்டமை குறித்துக் கூறிய சிலப்பதிகாரம்,

பொங்கழி யாலைப் புகையொடு பரந்து

மங்குல் வானத்து மலையிற் றோன்றும்

(தூற்றித் தூய்மை செய்யப்படாத நெற்பொலியானது உயரமாகக் குவிக்கப்பட்டிருக்கும். கரும்பாலைகளில் கரும்புப் பாகைக் காய்ச்சுகின்ற புகை வெளிப்பட்டுப் பரவி அருகில் உள்ள நெற்பொலியைச் சூழும். புகையால் சூழப்பட்ட நெற்பொலியானது, மேகம் சூழ்ந்துள்ள மலைபோலத் தோன்றும்) என்று, கழனிகளில் விளைந்த கரும்பு ஆலைகளில் ஆட்டிக்காய்ச்சப்பட்ட நிகழ்வைச் சுவைபடக் கூறுகிறது.

நன்றி - தீக்கதிர்

புறநானூற்று ஆராய்ச்சி – தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர்

புறநானூற்றை அச்சிடுவதாக நிச்சயம் செய்தவுடனே, பதிப்பு முறையைப் பற்றி யோசிக்கலானேன். வர வரப் புதிய துறைகளிலும் புதிய முறைகளிலும் விஷயங்களைச் சேர்த்து நூல்களைப் பதிப்பிக்க வேண்டுமென்ற விருப்பம் எனக்கிருந்தது. ஆங்கிலம் தெரியாத எனக்கு அப்பாஷையிலுள்ள சிறந்த பதிப்புக்களைப் பார்த்து மகிழவோ. அவற்றைப் போலச் செய்து பார்க்கவோ சக்தியில்லை. சங்கநூலைப் படிக்கவோ, படித்தபின் ஆராய்ச்சி செய்யவோ, அதன் பின் பதிப்பிக்கவோ இறைவன் திருவருள்தான் துணையாக இருந்தது முன் பழக்கம் அவற்றில் இல்லாத நான் எந்த எந்த விதத்தில் ஆராய்ந்தால் அழகாக இருக்குமென்று தோற்றுமோ அவ்வவ்விதத்தில் முயன்று வரலானேன்.

புதிய முறை

கும்பகோணம் காலேஜில் சரித்திர ஆசிரியராக இருந்த கே.ஆர். துரைசாமி ஐயரென்பவர் தம் கையில் பெரிய இங்கிலீஷ் புஸ்தக மொன்றை ஒரு நாள் வைத்திருந்தார்.
என்ன புத்தகம்?” என்று கேட்டேன்.
பைபிள்என்றார்.
பைபிள் சிறியதாக அல்லவா இருக்கும்? இது மிகப் பெரியதாக இருக்கிறதே!” என்றேன்.

இது பைபிளில் ஒரு விசேஷப் பதிப்பு. பைபிளிலுள்ள விஷயங்களைத் தொகுத்து வகைப்படுத்தி ஒரே மாதிரியான சொல்லும் கருத்தும் உள்ள பகுதிகளை அங்கங்கே காட்டிப் பதிப்பித்திருக்கிறார்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நடுவிலே தனியே இந்த ஒப்புமைப் பகுதி இருக்கிறது. இதை, ‘கன்கார்டன்ஸ்’ (Concordance) என்று இங்கிலீஷில் சொல்வார்கள்என்று சொல்லி அதைப் பிரித்துக்காட்டினார்.
அந்த ஒப்புமைப் பகுதிகளில் பலவகை எண்கள் காணப்பட்டன.
அப்புத்தகத்தில் அதைத் தொகுத்தவர் படமும் அவருக்கு உதவியாக இருந்தவர் படமும் இருந்தன.
இந்த ஒப்புமைப் பகுதியால் என்ன பிரயோசனம்?” என்று கேட்டேன்.
பைபிளில் ஒரே செய்தி பல இடங்களில் வருகிறது. ஒரே விதமான சொற்றொடர்களும் வருகின்றன. அவற்றைத் தொகுத்து வைத்து ஆராய்ந்தமையால் சில விஷயங்களின் உண்மையான பொருளும் சில சொற்களின் திருத்தமான உருவமும் புலப்பட்டனவாம். பைபிளில் ஏறியிருந்த பிழையான பாடங்கள் இந்தச் சோதனையினால் திருத்தமடைந்தனவாம்என்று அவர் எனக்கு விளக்கினார். அப்போது எனக்குப் புறநானூற்று ஆராய்ச்சியில் புது முறை ஒன்று தோற்றியது. புறநானூற்றிலுள்ள விஷயங்களையும் சொற்களையும் முதலிலே அகராதியாகச் செய்துகொண்டு ஆராய்ச்சி செய்தால் உண்மையுருவத்தைக் கண்டு பிடிப்பது சுலபமாக இருக்குமென்று அறிந்தேன். அங்ஙனமே செய்து வைத்துக் கொண்டேன். ஆராய்ச்சிக்குரிய கருவிகள் ஒரு நூலைத் திருத்தமாகப் பதிப்பிக்க வேண்டுமென்றால் பல வகையான கருவிகளை முதலில் அமைத்துக் கொள்ளவேண்டும். ஏட்டுச் சுவடிகள் கிடைப்பது மட்டும் போதாது. ஏட்டில் இருப்பது அவ்வளவும் திருத்தமாக இராது. பல காலமாகப் பிழையாகவே வழங்கி வந்த பாடங்களை அவற்றிற் பார்க்கலாம்; அவற்றுள் இதுதான் சுத்த பாடம் என்று தெரிந்து கொள்வதற்குப் படும் சிரமந்தான் மிகவும் அதிகம். நூலில் உள்ள கருத்துக்களுக்கும் சொற்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொள்வது மட்டும் போதாது. புறநானூற்றில் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அப்புலவர்களுடைய பாடல்கள் வேறு நூல்களிலும் இருக்கின்றன. அந்தப் பாடல்களைப் பார்த்தால் அப்புலவர் வாக்கின் போக்கையும், அவருக்கு விருப்பமான கருத்துக்களையும், நடையையும் உணர்ந்து கொள்ளலாம். அந்த ஆராய்ச்சியிலிருந்து சில திருத்தங்கள் கிடைக்கும் ஆகவே சங்கப் புலவர்கள் பெயர்களை வரிசையாக எழுதிக்கொண்டு அவர்கள் இயற்றிய பாடல்கள் எந்த எந்த நூல்களிலுள்ளனவென்று தெரிந்து தொகுத்துப் படித்தேன். சங்க காலத்து நூல்களில் வழங்கிய மரபை அறிவதற்கு அவை அனைத்தையுமே ஆராயவேண்டும். சங்க நூல்களவ்வளவும் சேர்ந்து ஓர் உடம்பு போன்றவை. அவ்வுடம்பு முழுவதும் ஒரு வகையான நாடி ஓடும், ஆகையால் அவற்றை முற்றப் பயின்றால்தான் அந்த மரபு தெளிவாக விளங்கும். இதை உத்தேசித்து என்னிடமுள்ள எல்லாச் சங்க நூல்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொண்டேன்.

புறநானூற்றை ஆராய்ச்சி செய்வதற்குச் சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்குப் பன் மடங்கு இன்பம் உண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று. பலபேருடைய உதவியை நாடவேண்டியது இன்றியமையாததாக இருந்தது. உதவி புரிந்தோர் என்னுடன் இருந்து திருமானூர் . கிருஷ்ணையரும். . வீ. இராமானுஜாசாரியரும் இந்த விரிந்த ஆராய்ச்சியில் உதவி செய்து வந்தார்கள். அக்காலத்தில் என்னிடம் தமிழ் நூல்களைப் பாடங்கேட்டு வந்த ஸ்ரீ சொக்கலிங்கத் தம்பிரானும் இவ் வாராய்ச்சியில் துணை செய்தார். ஏம்பல் பொன்னுசாமி பிள்ளை என்பவரும் காலேஜ் மாணாக்கர்கள் சிலரும் தங்கள் தங்களால் இயன்ற உபகாரங்களைச் செய்து வந்தார்கள்.

மேற்கோள் விளக்கம்

புறநானூற்றுச் செய்யுட்களையும் செய்யுட் பகுதிகளையும் இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். அந்தப் பகுதிகளையும் மேற்கோள் காட்டவேண்டிய காரணத்தையும் ஆராய்ந்தால் பாடம் திருந்துவதோடு பாட்டின் கருத்தும் விளங்கும். பிரயோகங்களைத் தொகுப்பதற்கு எல்லா உரைகளையும் முற்றும் படித்துப் புறநாநூற்றுப் பகுதி வருகின்றதா என்று பார்க்கவேண்டும். அச்சிட்ட புஸ்தகங்களில் பிரயோக விளக்கம் பெரும்பாலும் இருப்பதில்லை. ஏட்டுச் சுவடிகளிலோ மேற்கோட் செய்யுளைக் கண்டு பிடிப்பதே கஷ்டம். நூல்களைப் பாடங் கேட்பவர்கள் தம் ஆசிரியர் கூறும் விஷயங்களை அங்கங்கே சுவடிகளில் இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைப்பதுண்டு. ஏடுகளில் உள்ளவற்றை உள்ளவாறே பிரதி செய்து அதற்குரிய ஊதியம் பெற்று ஜீவனம் செய்பவர்கள் அந்தக் குறிப்புக்களையும் பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதி விடுவார்கள். ஆராய்ச்சி செய்யும்போது அவற்றைத் தனியே பிரித்தறிவது சில சமயங்களில் மிகவும் சங்கடமாக இருக்கும். உரைகளைப் படித்து வரும்போது அங்கங்கே வரும் மேற் கோள்களில் எனக்குத் தெரிந்தவற்றிற்கு ஆகரம் அங்கங்கே குறித்து வைப்பது எனது வழக்கம். அச்சிடப்பட்ட தொல்காப்பிய உரைகளிலும், திருக்குறள் உரையிலும், வேறு உரைகளிலும், கண்ட மேற்கோள்கள் பலவற்றின் இடங்களை என் கைப்புத்தகங்களில் குறித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சியில் அந்தப் பதிப்புக்களிலுள்ள பிழையான பாடங்கள் எனக்குப் புலப்பட்டன. என் பதிப்புக்களில் அவற்றின் திருந்திய வடிவத்தை மட்டும் அமைப்பதையன்றி, “இது பிழைஎன்று சுட்டிக் காட்டும் வழக்கத்தை நான் கொள்ளவில்லை.

இப்படி மேற்கோளாராய்ச்சிலே சென்ற காலம் மிக அதிகம். பிரயோகங்களைத் தொகுத்து வகைப்படுத்துவதிலே உண்டான சிரமம் எவ்வளவோ மிகுதியாக இருந்தாலும் ஒரு முறை பட்ட கஷ்டம் பல நூற்பதிப்புக்கு உபயோகமாக இருந்தது. அக்காலத்தில் நான் செய்து வைத்துக்கொண்ட பலவகை அகாராதிகளே இன்றும் எனக்கு மூல நிதியாக உதவுகின்றன. அவற்றைக் காணும்போதுஎவ்வளவு காலம், எவ்வளவு அன்பர்களுடைய உழைப்பு இவற்றில் சென்றிருக்கின்றன?’ என்று எண்ணி வியப்புறுவேன். அவற்றின் அருமை பெருமையை அச்சிட்ட புத்தகங்களைப் படிப்பவர்கள் சிறிதும் அறியார். மிக உயர்ந்த அலங்காரமான மாளிகையைக் கண்டு அதன் அழகில் ஈடுபடுபவர்கள் அம்மாளிகை எந்த அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்பட்டதென்பதைக் கவனிப்பதில்லை. மிகவும் ஜாக்கிரதையாகப் போட்ட அந்த அஸ்திவாரம் பூமிக்குள் மறைந்து கிடக்கின்றது. தொல்காப்பியப் பொருளதிகார உரையில் பல இடங்களில் புறநானூற்றுச் செய்யுட்கள் மேற்கோளாக வந்துள்ளன. என் கையிலிருந்த புறத்திரட்டில் பல செய்யுட்கள் இருந்தன. இவற்றைக் கொண்டு என்னிடமிருந்த புறநானூற்றுப் பிரதிகளில் கிடைக்காத பல குறையான பகுதிகளை நிரப்பிக் கொண்டேன். புறநானூறு 400 செய்யுட்களடங்கியது. நான் செய்த சோதனையின் முடிவில் 267, 268-ஆம் பாடல்கள் எங்கும் கிடைக்க வில்லை பல பாடல்களுக்கு முதல் இல்லை; பலவற்றிற்கு இறுதிப் பகுதி இல்லை; பலவற்றில் இடையிடையே சில பகுதிகள் காணப்படவில்லை.

உரை

என்னிடமுள்ள புறநானூற்றுப் பிரதிகளில் சிலவற்றில் பழைய உரை ஒன்று இருந்தது. அவ்வுரையாசிரியர் இன்னாரென்று புலப்பட வில்லை. அவ்வுரையும் முதல் 260 பாடல்களுக்கே இருந்தன. 242-ஆம் பாடலுக்கு மேல் உள்ள உரையோ இடையிடையே சிதைந்து மாறியிருக்கிறது. அவ்வுரையாசிரியர் பதப் பொருளை இனிது விளக்கி உரிய இடங்களில் சொற்களை முடித்துக் காட்டி இலக்கணக் குறிப்பையும் திணை துறைகளையும் ஆங்காங்குள்ள பழமொழிகளையும் அணியையும் சொல்நயம் பொருள் நயங்களையும் புலப்படுத்துகிறார். இடையிடையே சில வாக்கியங்கள் அவ்விடத்திற்குப் பொருத்தமில்லாதனவாகத் தோற்றின. அவர் சில இடங்களில் சில விஷயங்களை மறுத்திருக்கிறார். அதனால் புறநானூற்றுக்குப் பழைய உரை ஒன்று இருந்திருக்கலாமென்ற எண்ணம் உண்டாகிறது.

திணையும் துறையும்

ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் திணையும் துறையும், பாடினோர் பெயரும், பாடப் பட்டோர் பெயரும் உள்ளன. நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் ஓரிடத்தில், “தத்தம் புது நூல் வழிகளால் புறநானூற்றுக்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டு மென்றறிகஎன்று எழுதியிருக்கிறார். அவர் கருத்து அவ்வாறு இருந்தாலும் பிரதிகளில் உள்ள திணை துறைகளையே கொள்ளுதல் நெடுங்காலமாக வந்த வழக்கமாகி விட்டது. அவை பெரும்பாலும் பன்னிரு படலமென்ற பழைய புறப்பொருள் இலக்கணத்தின் படி அமைந்திருத்தல் கூடுமென்று தோற்றியது. அப்பழைய நூல் அகப்படவில்லை. ஆனாலும் அதன் வழி நூலாகிய புறப்பொருள் வெண்பா மாலை மூலமும் உரையுமுள்ள ஏட்டுச் சுவடி அப்போது என்னிடமிருந்தது. அதனை ஆராய்ந்து திணை துறைகளின் இலக்கணங்களுக்குட் பெரும்பாலானவற்றைத் தெரிந்து கொண்டேன். ஆயினும் சில துறைகளுக்கு விளக்கம் அந்நூலினாலும் தெரிந்து கொள்ள இயலவில்லை.

சரித்திரச் செய்திகள்

பாடினோர் பாடப்பட்டோர் பெயரைக் குறிப்பிடும் வாக்கியங்களில் சரித்திரச் செய்திகள் இருந்தன. சங்க காலத்துச் சரித்திர ஆராய்ச்சிக்கு அவை மிகவும் பயன்படுவன. அவ்விருவருடைய பெயர்களிலும் பலவகையான பாட பேதங்கள் இருந்தன. அவற்றைத் தனியே தொகுத்து வைத்துக் கொண்டு பிற நூல்களில் அப்பெயர்கள் வந்துள்ள இடங்களை ஆராயலானேன். இந்தச் சரித்திர ஆராய்ச்சி பெரிய சமுத்திரமாக இருந்தது. சமுத்திரத்திற்காவது ஒரு பக்கம் கரையுண்டு; இதற்கு எந்தப் பக்கத்திலும் கரையே இல்லை. சரித்திர ஆராய்ச்சியில் வல்லவர்களைக் கொண்டு அவ்விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமென்றெண்ணி இராசாங்கத்துச்சிலாசாசனப் பரிசோதகராக இருந்த ராவ்பகதூர் வி. வெங்கையருக்குச் சில அரசர் பெயர்கள், சில ஊர்ப்பெயர்கள் முதலியவற்றை எழுதி அவை சம்பந்தமாகத் தெரிந்த செய்திகளைத் தெரிவிக்கும்படி வேண்டினேன். அதியமான், கரிகால்வளவன் முதலியவர்களைப் பற்றியும் வெண்ணி, மிழலை முதலிய ஊர்களைப் பற்றியும் அவர் சில குறிப்புக்களை எழுதியனுப்பினார். தபால் இலாகாவில் ஸூபரிண்டெண்டெண்டாக இருந்த ஸ்ரீ வி. கனகசபைப் பிள்ளை என்பவர் தமிழ் நூல்களிலும் தமிழ் நாட்டுச் சரித்திரத்திலும் ஈடுபட்டவர். தமிழர் சரித்திரம் எழுத வேண்டுமென்ற கருத்தோடு அவர் ஆராய்ந்து பல செய்திகளைத் தொகுத்து வந்தார். அந்த முயற்சியின் விளைவாகப் பிறகு அவர் ஆங்கிலத்தில் “1800 வருஷங்களுக்கு முந்திய தமிழர்என்ற அரிய புத்தகத்தை எழுதி வெளியிட்டார். அவர் எனக்கு நண்பர். தம்மிடமுள்ள சில ஏட்டுப் பிரதிகளை உதவியிருக்கிறார். என்னுடைய தமிழ்நூற் பதிப்பைப் பற்றி அடிக்கடி விசாரித்து ஊக்கமூட்டுபவர்களில் அவரும் ஒருவர்.

துஞ்சியஎன்னும் சொல்

அவருக்கும் சில விஷயங்களை விளக்க வேண்டுமென்று எழுதினேன். முக்கியமாகப் புறநானூற்றிலுள்ள அரசர் பெயர்களில் வரும்துஞ்சியஎன்னும் வழக்குக்குப் பொருள் கேட்டேன். காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை, சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திரு மாவளவன் எனவரும் பெயர்களில் துஞ்சிய என்பதற்கு இறந்த வென்று பொருள் கொள்ளலாமென்று தோற்றினாலும், ‘ஓர் அரசனைச் சிறப்பித்துப் பாடும் பாடலுக்குக் கீழே அவன் இறந்த செய்தியைக் குறிப்பார்களா?’ என்ற சந்தேகம் எழுந்தது. ஓர் உதாரணம் காட்டுகிறேன்.

புறநானூற்றில் 34-ஆம் பாட்டு, கிள்ளி வளவனென்ற சோழ அரசனை ஆலத்தூர் கிழாரென்ற புலவர் பாடியது. அதில் அவர்,
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே
என்று வாழ்த்துகிறார்.
பாட்டின் இறுதியில்சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியதுஎன்ற குறிப்பு உள்ளது. பாட்டு அரசனை வாழ்த்துகிறது; குறிப்பிலோ அவன் துஞ்சிய செய்தி விசேஷணமாக அமைந்திருக்கிறது. பிற்காலத்தில் செய்யுட்களைத் தொகுத்தவர்கள் எழுதிய குறிப்புக்கள் அவை. அரசர்களை இன்ன இடத்துத் துஞ்சினாரென்று குறித்தல் ஒரு சம்பிர தாயம். அதனை அக்காலத்தில் அறிந்து கொள்ளாமல் இருந்த எனக்கு, ‘துஞ்சியஎன்பதற்குஇறந்தஎன்ற பொருள் கொள்ளுவது உசிதமாகப்படவில்லை. இந்தவிஷயத்தை கனகசபைப் பிள்ளை தெரிவித்தார். துஞ்சியவென்பதற்கு இறந்தவென்றே பொருள் கொள்ள வேண்டுமென்று அவர் எழுதினார். அதற்கு ஆதாரமாகச் சிலப்பதிகாரம், தேவாரம் என்பவற்றை எடுத்துக் காட்டினார். ‘இப்படியே அரசர்கள் இறந்த காலத்தை அவர்கள் பெயர்க்கு விசேடணமாக்கிக் கூறுதல், கோழிக் கோட்டு ஸாமூதிரி அரசரின் பரம்பரை வழக்கம்; திருவனந்தபுரத்தரசரின் வழக்கமும் இதுவேஎன்று பிறவிடங்களிலுள்ள வழக்கத்தையும் தெரிவித்தார். இறுதியில், ‘இந்த அருமையான புறநானூறு வெளிவந்தால் தமிழ் நாட்டார் பல ஆச்சரியமான செய்திகளை உணர்ந்து கொள்வார்கள் தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சியைப் பலர் மேற்கொள்வார்கள். விரைவில் பதிப்பித்து நிறைவேற்ற வேண்டும்என்றும் எழுதினார். இப்படிப் பல பல முறையிலே சேகரித்த பலவகைக் குறிப்புக்களை வைத்துக் கொண்டு ஆராய்ந்து புறநானூற்றை ஒருவகையாகச் செப்பம் செய்து அச்சுக்குக் கொடுப்பதற்காகச் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றேன்.

- என் சரித்திரம் அத்தியாயம் 117
நன்றி - தஇக