‏إظهار الرسائل ذات التسميات சமூக விஞ்ஞானம். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات சமூக விஞ்ஞானம். إظهار كافة الرسائل

தமிழக வேளாண்மை அன்றும் இன்றும் - பாமயன்

பண்டைத் தமிழர்களின் வேளாண்மைக் காலத்தை மிகக் குறிப்பாக அறுதியிட்டுச் சொல்ல முடியாதெனினும், நாகரிகம் என்று இப்போது ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிற காலத்திற்கும் முந்தையது என்பதில் சிறிதும் ஐயமில்லை. உலகிலேயே வாழ்நிலப் பகுதிகளை திணை மண்டலங்களாகப் பகுத்து அதை இலக்கணப்படுத்தியவர்கள் தமிழர்களே என்பது பல ஆய்வாளர்களின் ஆணித்தரமான கருத்தாகும். இது இன்று அறிவியலாளர்கள் பகுக்கின்றன திணைமவியல் (Ecological Zones) பகுதிகளுக்கு சற்றும் குறைந்ததன்று.

குறிஞ்சி எனப்படும் மலையும் மலை சார்ந்த நிலமும்,

முல்லை எனப்படும் காடும் காடு சார்ந்த நிலமும்

மருதம் எனப்படும் வயலும் வயல் சார்ந்த நிலமும்

நெய்தல் எனப்படும் கடலும் கடல் சார்ந்த நிலமும்

நாநிலம் என்று அழைக்கப்பட்டது. இதற்கடுத்தாற் போல் வறட்சிக் காலத்தில் முல்லை, குறிஞ்சி என்ற பகுதிகளை பாலை என்று பிரித்தனர். ஆனால் இதற்கு ஏனைய நிலத்தைப்போல் நிலையான நிலம் கிடையாது. எந்த இடத்தையும் இயற்கை பாலையாக ஆக்குவதில்லை என்பதற்கு மிக அறிவியல் வகைப்பட்ட பார்வையாக இஃது உள்ளது.

குறிஞ்சி நில வேளாண்மை மிகவும் பழமையானது. ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்து - அது அடர்ந்த காடாக இருந்தால் - அதைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு அந்த இடத்தில் விதைகளைத் தூவிவிடுவார்கள். (அல்லது காட்டுப் பன்றி மண்ணைக் கீறி கிழங்குகளைத் தின்றுவிட்டுப் போன இடங்களில் விதைப்பார்கள்) தவசங்கள் இயல்பாக விளைந்து விடும். குளிர்ந்த காடுகளாக இருப்பதால் எப்போதும் மழை இருக்கும். ஆகவே குறிஞ்சி நில மக்கள் ஏர் கொண்டு உழாமல் வேளாண்மை செய்தனர். இதை மலைபடுகடாம் என்ற கடைச்சங்க நூல், ''தொய்யாது வித்திய துளர்பாடு துடவை'' என்று குறிப்பிடுகிறது. அதாவது ''உழாது விதைத்த நல்ல விளைநிலம்'' என்று பொருள். வளப்பமான அந்தக் குறிஞ்சி நிலத்தில் உழவேண்டிய தேவை இல்லை. அங்கு பற்றாக் குறையாக இருப்பது சாம்பல் ஊட்டம் (பொட்டாசியம்) மட்டுமே. அதற்காக அம்மக்கள் எரிந்துவிட்டு விதைக்கிறார்கள். இன்று உலகம் முழுமையும் பேசப்படுகிற அறிஞர் ஃபுகோகா கூறுகின்ற உழாத வேளாண்மையை அன்றைய தமிழர்கள் மிக இயல்பாகச் செய்திருக்கின்றனர். மேலும் குறிஞ்சி நிலத்தில் முதன்மை விளைபொருள் ஐவன வெண்ணெல்லும் தினையும் ஆகும். நன்செய் நிலத்தில் உள்ளது போன்ற சம்பா நெல் அங்கு இல்லை.

முல்லை நிலத்தில்தான் கலப்பையின் வருகை தொடங்குகிறது. அந்தக் கலப்பைகூட எளிய கலப்பைதான்.

பெரும்பாணாற்றுப்படை என்ற நூல்,

''பிடிக்கணத்து அன்ன குதிருடை முன்றில்

களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர்

குறுஞ்சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி'' (196-199)

என்று தவசங்களைத் சேர்த்து வைக்கின்ற குதிர்களையும் கலப்பையையும் குறிப்பிடுகின்றது.

இதே கலப்பை மருத நிலத்திற்கு வரும்போது அகன்று விரிந்து ஆழ உழும் திறன் மிக்கதாய் ஆக்கப்படுகின்றது. பெரும்பாணாற்றுப் படையில்,

''குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்

நடைநவில் பெரும்பகடு புதவில் பூட்டி

பிடிவாய் அன்ன மடிவாய் நாஞ்சில்

உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றி''

என்று பெண் யானையின் வாயைப் போன்று மடிந்து அகன்று இருக்கின்ற பெரிய கலப்பையான நாஞ்சில் கலப்பை மருத நிலத்தில் வருகின்றது. இதை ஆழமாக ஊன்றி இழுப்பவை வலிமையான பகடுகள் எனப்படும் பெரிய மாடுகள். இவை எவ்வளவு பள்ளம் இருந்தாலும் மண்டி போட்டு இழுக்கும் ஆற்றல் பெற்றவையாம். இதை வள்ளுவப் பெருமான் ''மடுத்தவாயெல்லாம் பகடன்னான்'' என்று மிகுந்த முயற்சி உடையவனுக்கு இணையாகப் பகடைக் கூறுகிறார். வலுவான மாடுகள், அகன்ற கலப்பைகள் என்று வேளாண்மை மருத நிலத்தில் புதிய வடிவம் எடுக்கின்றது. விளைந்த தவசங்களைச் சேர்த்து வைக்க மிகப் பெரிய குதிர்களை அன்றைய மக்கள் வடிவமைத்திருந்தனர். ''ஏணி எய்தா நீள் நெடு மார்பின்'' (பெரும்-245) என்று மிக உயரமான குதிர்களைக் குறிப்பிடுகின்றது.

விளைந்த விளைச்சலும் மிக அதிகமாகவே இருந்திருக்கின்றது. பொருநர் ஆற்றுப்படை என்ற நூல்

''சாலி நெல்லின் சிறைகொள் வேலி

ஆயிரம் விளையுட்டு ஆக'' என்று குறிக்கின்றது.

வேலி நிலம் ஆயிரம் கலம் விளைந்தது என்பதற்கு இது ஒரு சான்று.

இதேபோல ஒரு கைப்பிடியில் ஏழு எள் காய்கள் இருக்குமாறு விளைச்சல் திறன் இருந்துள்ளது. அவ்வளவு திறட்சியான காய்கள் இருந்துள்ளன. அதில் இருக்கும் எண்ணெயின் அளவும் அதிகமாக அதாவது கையில் வைத்துப் பிழிந்தாலே ஒழுகும் வண்ணம் இருந்துள்ளது.

''கௌவை போகிய கருங்காய் பீடியேழ்

நெய்கொள வொழுகின''

என்று மலைபடுகடாம் (102) கூறுகிறது.

மிகப் பண்டைய இலக்கணமான தொல்காப்பியம். ''ஏரோர்களவழி'' என்ற ஒரு குறிப்பைத் தருகிறது. ஏறத்தாழ கி.மு.800 ஆண்டைச் சார்ந்த இந்நூல் தொழில் பகுப்பை வைத்து இலக்கணம் வகுத்துவிட்டது. இதில் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்ற தொழில் பிரிவுகளையும் குறிப்பிட்டு உழவுத் தொழில் செய்பவர்களை ஒரு பிரிவாகப் பதிவு செய்கிறது. ஆயினும் இதில் வேளாண்நுட்பங்கள் பற்றி அதிகம் இல்லை. ஆனால் கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக் கால இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை உழவுத் தொழிலை மிக விரிவாக 196-240 வரிகளில் விளக்கியுள்ளது.

உழவின் பெருமை பற்றியும் அதன் இன்றியமையாமை பற்றியும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் யாவையும் தவறாமல் குறிப்பிடுகின்றன. வேத (வைதீக) நூல்கள் மண்ணைக் கீறுவது பாவம் என்று உழவுத் தொழிலை குறித்தபோது தமிழிய நூல்கள் உழவைப் பெருமைக்குரியதாகக் கருதின.

''உழுதுண்டு வாழ்வாரே வாழவார் மற்றெல்லாந்

தொழுதுண்டு பின்செல்வர்'' என்றும்

''பலகுடைநீழலும் தன்குடைக் கீழ் காண்பர்'' என்றும் குறள் சொல்கிறது. உழவர்கள் போர் செய்யும் உரிமையும் கொண்டனர் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

''வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும் வாய்த்தனர் என்ப அவர்பெறும் பொருளே'' (தொல்: 626) (பொருளதிகாரம் மரபியல்)

வேளாண்மை என்ற சொல் விருப்பத்துடன் பிறரைப் பேணுதல் என்ற பொருள் கொண்டதாகும். (வேள்-விருப்பம்).

கம்பர் உழவுத் தொழிலை மிகவும் உயர்த்திக் கூறுகிறார். அதைத் ''திருக்கை வழக்கம்'' என்று சிறப்பிக்கிறார். மற்றோர் இடத்தில் மன்னர்களையே தூக்கி எறிந்து உழவர்களை உயர்த்திப் பேசுகிறார்.

''மேழி பிடிக்கும் கை வேல்வேந்தர் நோக்குங்கை

ஆழிதரித்தே அருளும்கை-சூழ்வினையை

நீக்குங்கை என்றும் நிலைக்கும்கை நீடுழி

காக்கும்கை'' என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

இதையே பெரும்பெண் புலவர் ஒளவையார் வேறு மொழியில் கூறுகிறார்,

''ஆற்றங்கரையின் மரமும் அரசுஅறிய

வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றோ-ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறோர் பணிக்கு'' என்று நல்வழியில் கூறுகிறார். இத்தகைய சிறப்பான தொழில் இன்று சிதைந்து சிறுத்துப் போய்விட்டதை நினைத்தால் நெஞ்சம் கனக்கும்.

உலகிற்கு அரிசியை அறிமுகம் செய்த பெருமை தமிழர்களைச் சாரும். அலெக்சாண்டர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்புவரை அரிசியைப் பற்றி ஐரோப்பியர்களுக்குத் தெரியாது. அலெக்சாண்டருடன் வந்த அரிஸ்டாட்டில் அன்றைய சிந்தாற்றின் (Indus river) தென்புறமுள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பெரியதொரு குழுவினருடன் வந்து திரட்டிச் சென்றுள்ளார். அதில் ஒன்றுதான் அரிசி. தமிழிசையும் அவ்வாறு ஐரோப்பா சென்றுள்ளதை அறிஞர்கள் நிறுவியுள்ளனர்.

மேலும் பல மேல்திசை, கீழ்திசை நாடுகளுக்கெல்லாம் அரிசி அரேபிய வணிகர்களால் கொண்டு செல்லப்பட்டது. கி.மு. 300-களில் அரிசி, ஆப்பிரிக்கக் கடலோர நாடுகளுக்கு (எகிப்து, எத்தியோப்பியா, பாரசீகம்-இன்றைய ஈரான்) கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் தோன்றிய பேரரசான ரோமப் பேரரசின் (இன்றைய இத்தாலி) கீழ் இருந்த சிசிலி வழியாக அரிசி ஸ்பெயின் தேசம் சென்றது.

அரபி மொழியில் - அல்ருஸ் (al-ruz)

ஸ்பானிய மொழியில் - அராஸ் (arroz)

இலத்தின் மொழியில் - ஒரைசா (oryza)

இத்தாலியில் - ரைசே (riso)

பிரெஞ்சு மொழியில் - ரிஸ் (riz)

ஜெர்மனியில் - ரெய்ஸ் (reis)

ஆங்கிலத்தில் - ரைஸ் (rice)

இப்படியாக படிப்படியாக ஒலி மாற்றம் பெற்றது அரிசி. ஆனால் இன்று ஆங்கில அகராதிகளில் இதை இலத்தின் சொல் என்று போட்டு விட்டு, கீழைத் தேசத்துத் தோற்றம் என்றும் தோற்றம் தெரியாதவாறு குறித்துள்ளனர். என்னே இன்றைய தமிழர்களின் விழிப்புணர்வு!

எவ்வாறு அரிசியை உலகிற்கெல்லாம் கொடுத்தார்களோ அதேபோல உலகின் பிற பகுதிகளில் இருந்து வேறு சில பயிர்களைத் தமிழகத்திற்கு பண்டைத் தமிழர்கள் கொண்டு வந்துள்ளனர். கரும்பு என்பது பலராலும் இன்று விரும்பப்படும் பயிர். ஆனால் அது நமது பழம்பண்டைப் பயிரன்று. வெளியில் இருந்து வந்தது. நமக்கென்று இனிப்பைப் கொடுத்து வந்தது பனையாகும். அதியமான் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னனின் முன்னோர்கள் கிழக்காசிய நாடுகளில் இருந்து கரும்பைக் கொண்டு வந்ததாக இலக்கியக் குறிப்பு உள்ளது. கரும்பின் தோற்றகத்தை இன்று பயிரியல் அறிஞர்கள் கிழக்காசியா என்றே கூறுகின்றனர்.

''அரும்பெறல் அமிழ்த மன்ன

கரும்பிவட்டந்தோன் பெரும் பிறங்கடையே'' என்று அதியமானின் மகன் பொகுட்டெழுனியைப் பார்த்து ஒளவைப் புலவர் கூறுகிறார். (புறம்:392)

மாமழை போற்றுதும்

வேளாண்மைக்கு அடிப்படை நீர். ''நீரின்று அமையாது உலகு'' என்பார் வள்ளுவர். பண்டைத் தமிழ் மக்கள் நீரின் மீது வைத்திருந்த மதிப்பீடுகளும் நம்பிக்கைகளும் நமக்கும் வியப்புத் தருவன. ஆனால் அந்த மரவில் வந்த இன்றைய மக்கள் நீரை எவ்வளவு மோசமாகப் பயன்படுத்துகின்றனர் என்பது அதைவிட வியப்புக் கலந்த வேதனை உண்மையாகும்.

''மாமழை போற்றுதும் மாமழைபோற்றுதும்'' என்பார் இளங்கோவடிகள். மழைப் பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத் தமிழர் முன்பே அறிந்து கொண்டுள்ளனர். கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையைக் கொண்டுவந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டு விட்டது. பட்டினப்பாலையில் ''வான்முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடற்பரப்பவும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது இந்தப் பூவுலகில் உள்ள நீரின் அளவு மாறுபடாதது என்ற அறிவியல் உணமையையும் அவ்வரிகள் குறிப்பிடுகின்றன.

இதேபோல, ''மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை

பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்'' (நற்றிணை-99)

என்ற பாடல் வரிகள் நீர் பொழியும் அறிவியலைக் கூறுகிறது.

அகநானூறு, ''மாக்கடல் முகந்து மாதிரத்து இருளி ............

பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை'' என்று கூறுகிறது.

ஆனால் அந்தக் கால மேலைநாட்டு அறிஞர்கள் குறிப்பாக கிரேக்க நாட்டு ஞானிகளான ''தேல்ஸ்'' மற்றும் இன்றைய அறிவியல் உலகம் கொண்டாடும் ''அரிஸ்டாட்டில்'' போன்றோர் கடலுக்கு அடியில் உள்ள நீரூற்றுதான் எல்லாத் தண்­ருக்கும் ஆதாரம் என்றும் நிலம் அதை உறிஞ்சி மேலே கொண்டு வந்து ஆறாக ஓட விடுகிறது என்றும் கூறியுள்ளார். மேலும் இப்படிக் கடல் நீரை உறிஞ்சும்போது அதன் உப்பு மண்ணில் கரைகிறது. வானத்தில் உள்ள காற்று குளிர்ந்ததும் அது மழையாகிறது என்றும் கூறியுள்ளனர் (Hydraulies and hydraulic Research-A Historical Review) இதுதான் கி.பி. 1500 வரை அவர்களுக்கு இருந்த கருத்து. திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ''மாறாநீர்'' (குறள்:701) பற்றி தெளிவுபடக் கூறியுள்ளார். இதற்கு முன்பே சங்க இலக்கியங்கள் கூறியதை நாம் பார்த்தோம்.

மழையை உலகத்தின் அச்சாணியாகப் பார்த்துள்ளனர்,

''உலகிற்கு ஆணியாகப் பலர் தொழப்

பலவயின் நிலைஇய குன்றின் கோடு தோறும்

.........

இரவுப் பெயல் பொழிந்து உதவியோயே'' (நற்:139)

என்ற வரிகள் மழையை மக்கள் பார்த்த பார்வையைக் கூறுகிறது. ஆனால் நமது தமிழ்க் குழந்தைகள் இன்று ஆங்கிலப் பள்ளிகளில் ரெயின் ரெயின் கோ அவே (rain rain go away) அதாவது ''மழையே, மழையே! போ, போ!'' என்று பாடுகின்ற அவலத்தைக் காணுகின்றோம்.

வேறுபாடு இல்லாமல் எல்லாரையும் சமமாகப் பாவிக்க வேண்டியது மன்னனின் பண்புகளில் தலையாயது என்பது பண்டைத் தமிழர்களின் கோட்பாடு, சாதிக்கொரு நீதி என்பது தவறு என்பது அதன் அடிப்படை, இதைக் கூறவந்த புலவர் அதற்கு எடுத்துக் காட்டாக மழையைக் கூறுகின்றார்.

''அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்

உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்

வரையா மரபின் மாரி'' (புறம்:142)

வற்றிப் போய்விட்ட குளத்தை நிரப்பியும் அதேபோல வேறுபாடு இல்லாமல் அகன்ற வயல்களின் மீது பொழிந்தும் விளைச்சலே தராத உவர்நிலப் பகுதிகளிலும் நீரைச் சொரிந்தும் பாகுபாடு இன்றிக் கொடுக்கும் மழை என்பது இதன் பொருள்.

மாரி (மழை) என்பது தமிழகத் தாய்த் தெய்வத்தின் பெயர்.

வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வள்ளுவர் படைத்துள்ளார். ''உணவாகி, அப்படியான உணவிற்கும் உணவாகும்'' மழை பற்றி (துப்பார்க்கு துப்பாகி....) அவர் இயற்றியுள்ள அதிகாரம் அனைவரும் நன்கு அறிந்ததே.

மழைபற்றிய அறிகுறிகளை பண்டை மக்கள் மிகக் கவனமாகக் பதிந்தள்ளனர். விண்மீன்களும் கோள்களும் அமையும் அமைப்பை வைத்தே மழை பொழியும் வாய்ப்பைக் கணித்துள்ளனர்.

''வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர

வறிதுவடக்கு இறைஞ்சிய நீர்சால் வெள்ளி

பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்பக்

கவிழுங் கருவியொடு கையுற வணங்கி

மன்னுயிர் புரைஇய வலனேர்பு இரங்கும்

கொண்டல் தண்டளிக் கமஞ்சூல் மாமழை''

கதிரவன் வானில் வரும்போது வடக்கிருந்து ஒளிமிக்க வெள்ளியானது ஆநியம் எனப்படும். மூலத்தில் இருக்க நல்ல மழை கிடைக்கும் என்ற செய்தி உள்ளது.

இதேபோல முக்கூடல் பள்ளு,

மழை வருவதற்கான குறிகளாக, நண்டுகள் சேற்றைக் குழைந்து வளைகளை அடைப்பதும், மரக்கிளைகள் சுழன்று காற்று அடிப்பதும், மேற்கிலும் தெற்கிலும் மின்னல் சூழ்ந்து வெட்டுவதும், வானம்பாடிகள் மழைக்காக வானத்தில் பறப்பதும் கூறப்படுகின்றன. ஆற்று வெள்ளம் றாளை வர.... என்ற பாடல் இதை நன்கு விளக்கும்.

மழைநீரைச் சேர்த்து வைத்து வேளாண்மை செய்ய வேண்டும். என்ற நிலை குறிஞ்சி நிலத்தில் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு அருவி நீரும் சுனை நீரும் எப்போதும் குறைவின்றிக் கிடைத்து வந்தன. அது மட்டுமல்லாது அவர்களது வேளாண்மை முறையானது மழைப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டது. மேலும் உயர்ந்த மலைகளில் போதுமான மழைப் பொழிவு அப்போது இருந்ததால் அவர்கள் எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் திணை விதைப்பதும், ஐவன வெண்ணெல் விதைப்பதும் அறுப்பதுமாக இருந்தனர். இந்த மழைப் பாசன மக்கள் காடுகளை உயிர்போலக் காத்தனர். இவர்களது தேவை மிகக் குறைவு. எனவே இயற்கை இவர்களுக்கு வேண்டிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்து கொண்டே இருந்தது. தலைவி தலைவனது வருகைக்காக காத்திருந்து மழை வந்ததும் அதற்கு நன்றி சொல்வாள். என் இனிய மழையே உனக்கு நன்றி. எனது தலைவனை விரைவில் வரச் செய்த உனக்கு நன்றி என்று சொல்வாள். அதே சமயம் மற்றொருத்தி ''அட மழையே ஏன் இப்படி என்னை வாட்டுகிறாய்? என் தலைவன் இன்னும் வரவில்லை. நீயோ அதற்குள் வந்து என்னை இன்னலில் ஆழ்த்துகிறாயே! என்று திட்டுவாள். ஆக மக்களின் உணர்வோடும் வாழ்வோடும் ஒட்டிப் போன இந்த மழை முல்லைநிலத்திலும் அதே போலப் பார்க்கப்பட்டது. மாடுகளும் ஆட்டு மந்தைகளும் மழையில் நனைந்து கொண்டு நடுங்குவதும் கோவலர்கள் குழலை மறந்து நடுக்கத்தில் பல்லால் இசைப்பதும் சுவையான பதிவுகள்.

மருத நிலம்தான் பாசனத்தில் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்திவிட்டது. ஓடும் ஆற்றின் போக்கைத் தடுத்து அதை வேண்டிய இடத்தில் வேண்டிய முறையில் பயன்படுத்த முனைந்த இந்தச் சாதனை மாந்தர்குல வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவே அமைந்து விட்டது. சுமேரிய, எகிப்து, சிந்து நாகரிகங்கள் தோன்றுவதற்கும் இதைப் போன்ற வேறு பல நாகரிகங்கள் கால் கொள்வதற்கும் இது வழிகாட்டிற்று. மெசபடோமியாவில் பண்டைய மக்கள் செய்த அணைக்கட்டுமானங்கள் அவர்களுக்கு விளைச்சலை அதிகம் கொடுத்ததோடு மட்டுமல்லாது, அடிக்கடி ஏற்பட்ட வெள்ளச் சேதத்தையும் குறைத்துள்ளது. ஊர், என்ற இடத்தில் அவர்கள் அமைத்த நீர்த் தடுப்புகள் பற்றிய செய்திகளை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.

எகிப்து மக்கள் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பே நைல் ஆற்றில் நீர் வரும் அளவைக் குறிக்க ஒரு அளவுமானியை நிறுவியுள்ளனர். அதன் பெயர் நைலோமீட்டர் என்பதாகும். இவர்கள் களிமண் போன்ற எளிதில் கரையாத மண்ணைக் கொண்டு அணைகளை அமைத்துள்ளனர். சிந்துச் சமவெளி மக்கள் அணைகளை அமைத்து நீரைத் தேக்கி பாசனத்தை விரிவாக்கியுள்ளனர். இவர்கள் கட்டிய அணைகளை ஆரியர்கள் எனப்படும் கால்நடை மேய்த்துக் கொண்டு வந்த மக்கள் உடைத்துள்ளனர். இதைத் தங்களது நூலான ரிக் வேதத்தில் குறித்துள்ளனர்.

''நதிகளை விடுவித்த காரணத்தால் இந்திரன் மீண்டும் மீண்டும் போற்றப்படுகிறான். வான் மேகமாகக் குவிந்துள்ள நீரை அவன் விடுவிக்கிறான். இந்திரனால் விடுவிக்கப்பட்ட நதியில் செயற்கையான தடுப்புகளைப் போட்டு நீரோ‘ட்டத்தைத் தடுத்துள்ளனர். அசுரனாகிய விரித்திரன் ஒரு பாம்புபோல மலைச்சரிவில் படுத்துக் கிடக்கிறான். அவனை இந்திரன் கொன்றதும் வண்டிச் சக்கரங்களைப் போல கற்கள் உருண்டன. இந்த அரக்கனின் மூச்சற்ற உடலின் மீது நீர் பிரவாகமாக ஓடிற்று'' என்று குறிப்பு உள்ளது.

இவ்வாறு பண்டைச் சமூகங்கள் ஆறுகளின் மீது அணைக்கட்டுவதும் அவர்களை எதிர்க்க முனையும் மற்றொரு குழுவினர் அதைச் சிதைப்பதும் காணப்படுகிறது. ஐரோப்பியர்கள் பாசனம் பற்றி பண்டைக் காலத்தில் அறிந்திருக்கவில்லை. நைல் ஆற்று அணைகள் மிகப் பழமையானது என்ற போதிலும் உலகின் பழமையான இன்றும் பயன்பாட்டில் உள்ள அணைக்கட்டு கரிகாலன் கட்டிய கல்லணை ஆகும். கல்லணை கி.பி., 2 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது சிலப்பதிகார காலம் எனலாம். இதற்கும் முன்பே தமிழகத்தில் பாசனக் கட்டுமானங்கள் பல இருந்துள்ளன. தமிழகத்தில் இன்றுவற்றிப் போய்விட்ட ஆறுகள் பல அன்று தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தன. வைகையைக் கடக்க கோவலனும் கண்ணகியும் படகில் வந்ததை சிலப்பதிகாரம் கூறுகிறது.

இந்த ஆறுகளைத் தவிர்த்து மிக அதிக அளவில் செயற்கைக் குளங்களை அமைத்திருந்தனர். ஏனெனில் தமிழ்நாட்டில் ஆற்றுப்பாசனப் பகுதிகள் மிகவும் குறைவு. ஆகவே பரந்துபட்டு வேளாண்மை செய்ய வேண்டுமாயின் நீரைச் சேமிக்க வேண்டும். அதற்காக பல்வேறு அமைப்புகளை உருவாக்கினர். படுகர், தாங்கல், கேணி, பல்வலம், படு, பட்டம், மடு, உவளகம், பண்ணை, வாவி, வட்டம், தடம், கயம், பயம், தடாகம், குளம், குட்டம், கிடங்கு, சூழி, அலந்தை, குண்டம், பங்கம், இலஞ்சி, கோட்டம், பொய்கை, ஏல்வை, ஓடை, ஏரி, கண்மாய் என்று 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் இருந்துள்ளன. இது தவிர சுனை, பொழில் போன்ற இயற்கை நீர் நிலைகள் தனி. நீரோட்டத்தை உருவாக்கியுள்ளனர். அது வாரம், பாரம், போடு, வரை, அணை, கூலம், தீரம் என்று பெயர் பெற்றுள்ளன. இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் தனித் தன்மை கொண்டவை. இவற்றிற்குள் வேறுபாடுகள் உண்டு.

இப்படிப்பட்ட கட்டுமானங்களை எல்லா மன்னர்களும் செய்துள்ளனர். அவர்களது நோக்கம் இடம் விட்டு இடம்பெயராமல் வேண்டுமளவு விளைச்சல் எடுக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் தங்களது பெருமையையும் புகழையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதினர். தங்களைக் பாடும் புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்தனர். பாசனத்தைப் பெருக்குவதன் மூலம் விளைபொருள் மீத்தம் அதிகமாயிற்று. இதனால் அண்டை நாட்டு மன்னர்களைவிட தான் உயர்ந்தவன் என்று காட்டிட ஏதுவாயிற்று. எனவே மன்னர் ஒருவரை விஞ்சி ஒருவர் பாசனத்தை விரிவாக்குவதில் முனைப்பாக இருந்தனர். கலைகளும் தொழில்களும் பல்கிப் பெருக இந்த பாசனமே அடிப்படையாயிற்று. இன்னும் மாந்தர்குல வரலாற்றில் பாசனத்தில் பிடிமானம் தளரவேயில்லை. பல்வேறு உலக நாடுகள் இன்று நாடுவிட்டு நாடு பாயும் ஆறுகளைத் தடுத்து பாசனக் கட்டுமானங்களை நிறுவி வருகின்றன. காலங்காலமாக இருந்த பாசன உரிமைகள் மறுக்கப்படுகின்றன. காவிரியில் கர்நாடகம் தமிழ்நாட்டின் உரிமையை தொடர்ந்து மீறி வருவதை நாம் அறிவோம். உச்ச நீதிமன்ற ஆணையையும் மீறுகின்றனர். நீதிமன்ற ஆணையையும் மீறுகின்றனர். நீதிமன்ற அவமதிப்புச் செய்த பின்னும் அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. இவ்வாறு பாசனம் என்பது போர்களுக்கான பொருளாக அன்றும் இன்றும் இருந்து வருகிறது.

கரிகாலன்

பட்டினப்பாலையும், பொருநராற்றுப் படையும் புகழ்ந்துபேசும் பெருமைக்குரிய மன்னன் கரிகாலன். இவன் வழக்கமான மன்னர்களைப் போல போர்களில் ஈடுபட்டாலும் வடநாட்டு அசோகனுக்கு இணையாக மரம் நடுவது, குளம் வெட்டுவது என்பதோடு கால்நடைகளுக்கான மருத்துவமனைகளையும் ஏற்படுத்தியுள்ளான்.

''தண்கேணித் தகைமுற்றத்து

பகட்டெருதின் பலசாலை''

என்ற பட்டினப்பாலை வரிகள் இதைக் கூறுகின்றன.

இவனது மிகப்பெரும் பணிகளின் ஒன்று காவிரியில் கல்லணை கட்டியது.

இவன் வேளாண்மையைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றியவன். வடநாட்டு அசோகனுக்கு இணையாக வைத்துப் போற்றப்பட்ட வேண்டியவன்.

''அரிகாலின் கீழுகூஉ மந்நெல்லே சாலும்

கரிகாலன் காவிரிசூழ் நாடு'' (பொருநர்)

என்று இவனைப் பாடுகின்றன இலக்கியங்கள்.

கி.பி. முதல்நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கரிகால் பெருவளத்தானின் மற்றொரு பெயர் திருமாவளவன். இவன் தொடர்ந்து வெள்ளச் சேதம் ஏற்படுத்திவந்த காவிரிக்கு அணைபோட்டான். அந்த அணை இயற்கையின் போக்கை உணர்ந்து கட்டப்பட்ட அணை. இந்த அணை கட்டப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை வியந்து போற்றுகிறார் ஆங்கிலேய நாட்டுப் பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் என்பவர். இவர் தனது தொப்பியைக் கழற்றி ''ஓடும் நீரில் அணை கட்டும் தொழில் நுட்பத்தை எனக்கு விளக்கிக் காட்டியுள்ள இந்தக் காவிரி அணை கட்டிய முன்னோர்களை நான் வணங்குகிறேன்'' என்றாராம். ஏனெனில் ஓடும் நீரின் மீது அணை கட்டுவது என்பது மிகவும் கடினமான பணி. காரையோ சுண்ணாம்போ கரைந்துகொண்டே போய்விடும். அல்லது நீரை வேறுபக்கம் திருப்பிவிட்டு அணையைக் கட்டிய பின்பு பாதை மாற்றவேண்டும். ஆனால் இது காவிரியில் இயலாது. வெள்ளக் காலங்களில் இப்போதே நொடிக்கு 2 லட்சம் கனமீட்டர் நீர் பாயும் ஆற்றைத் திருப்புவது கடினம். அன்றைய காலத்தில் கன்னட நாட்டினர் அணை ஏதும் கட்டாதபோது, இப்போதை விட மிகப் பெரிய அளவில் காட்டு வளம் உள்ளபோது எவ்வளவு தண்­ர் வரும் என்று நாம் கணக்கிடலாம்!

இதனால் பண்டைத் தமிழர்கள் மிக அருமையான நுட்பத்தைக் கடைப்பிடித்தனர். நாம் நீரோடும் ஆற்றங்கரையிலோ அல்லது அலைவந்து விழும் கடற்கரையிலோ நின்றோமென்றால் நீர் வந்து பாயும்போது நமது கால்கள் மண்ணில் மெல்ல மெல்ல பதிவதைக் காணலாம். அதாவது நீரோட்ட மணலை அரித்துக் கொண்டுபோக கனமான நமது கால்கள் மண்ணுள் பதியும். இந்த நுட்பத்தைத்தான் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஓடும் நீரோட்டத்தின் மீது பெரிய பாறைகளை வைப்பர். அது மெல்ல மெல்ல மணலுள் பதிந்து அடியில் பாறைப் பகுதியை அடையும். அதன்பின்னர் அதே இடத்தில் மற்றொரு பாறைத்துண்டை வைப்பர். அதுவும் கீழே சென்று தங்கும். இவ்வாறு வைக்கும்போது இரண்டு பாறைகளுக்கிடையில் ஒருவகையான கரையாத தன்மை கொண்ட களிமண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். தஞ்சைப் பகுதியில் பெரும்பாறைகள் கிடைப்பது மிகவும் கடினம். புதுக்கோட்டையில் இருந்தோ அல்லது அதைவிடத் தொலைவில் இருந்தோதான் கல் கொண்டுவர வேண்டும். இத்தகைய இடர்ப்பாடுகளைத் தாண்டி கல்லணை கட்டப்பட்டதை நினைத்தால் நமக்கு வியப்பாகவும் பெருமையாகவும் உள்ளது. இந்த அணையை பேயர்டு சுமித் என்பார் தென்னிந்திய பாசனம் (Irrigation in South India) என்ற நூலில் இது ஒரு மிகச் சிறந்த சாதனை என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் ஆற்றுப்படுகையில் அணைகட்டும் தொழில்நுட்பம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியால்தான் கண்டறியப்பட்டது. ஆர்தர் காட்டன் இந்த அணையை ''பெருமித அணை'' (Grand Anaicut) என்று பெயரிட்டழைத்தார். இப்பெயர்தான் இன்று உலகெங்கும் அழைக்கப்படுகிறது.

ஏன் இந்த அணை அன்று கட்டப்பட்டது என்றால் திருவரங்கம் எனப்படும் தீவுப்பகுதியில் காவிரி பிரிந்து கொள்ளிடம் என்றும் காவிரி என்றும் ஓடி மீண்டும் கல்லணைப் பக்கம் இணைகிறது. பொதுவாக காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளும் இடம் கொள்ளிடம் என்று கூறுவார்கள். திருவரங்கம் அருகே கொள்ளிடத்தின் அமைப்பு நிலமட்டத்தைவிட உயர்வாக உள்ளது. அதே சமயம் கல்லணைப் பக்கம் வந்தவுடன் அதன் நிலமட்ட உயரம் குறைகிறது. இதனால் அந்தக் காலத்தில் அடிக்கடி காவிரி உடைந்து பெரும் வெள்ளச் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தடுக்கும் பொருட்டு உடைக்கின்ற இடத்தில் ஆற்றின் போக்கை மிக இயல்பாக அணை ஒன்று கட்டி திருப்பிவிட்டுள்ளனர். இதனால் வெள்ளச் சேதம் குறைந்ததோடு வேளாண்மையும் பெருகிற்று.

பல்லவர் தந்த பாசனம்

சங்ககாலத்திற்குப் பின்வந்த களப்பாளர்கள் எனப்படும் களப்பிரர்கள் பற்றிய செய்திகள் குறிப்பாக வேளாண்மை பற்றிய செய்திகள் அவ்வளவாக இன்னும் ஆய்வாளர்களால் முன் வைக்கப்படவில்லை. இப்பகுதி இன்னும் ஆய்வுக்கான களமாகவே உள்ளது. இவர்களை அடுத்து அரியணைக்கு வந்தவர்கள் பல்லவர்கள். ஆனாலும் காஞ்சியில் ஒரு பெரிய அரசன் இப் பல்லவர்களுக்கு முன்னமே இருந்துள்ளான். சிம்மவிஷ்ணு என்று கூறப்படும் ஒருவன் திடீரெனப் பல்லவப் பேரரசை கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமைப்பதற்கு முன்பாக இந்த புகழ் பெற்ற அரசன் இருந்துள்ளான். இவன் கரிகால் பெருவளத்தான் எனப்படும் திருமாவளவனைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்பவரால் பாடப் பெற்றுள்ளான். இவன் பெயர் இளந்திரையன். இதிலிருந்தே இவனது பெருமை காணக்கிடைக்கிறது.

இளந்திரையன் கரிகாலனின் பேரன் என்ற செய்தியும் உள்ளது. இப்படியான இந்தத் தமிழ் மன்னன் மிக அருமையாக பாசனப் பணிகளை மேற்கொண்டவன். இவன் அமைத்த ஏரி தென்னேரி என்றழைக்கப்படும் திரையன் ஏரி ஆகும். இந்த ஏரி காஞ்சிபுரத்திற்கு தெற்கு 10 மைல் தொலைவில் உள்ளது. நந்திவர்மனின் காசாக்குடிச் செப்பேடு இந்த திரையன் ஏரியைப் பற்றி குறிப்பிடுகின்றது.

பல்லவர்கள் பல்வேறு வகையான பாசனக் கட்டுமானப் பணிகளைச் செய்துள்ளனர். இவர்கள் பல வாரியங்களை அமைத்துள்ளனர். இவர்களைப் பற்றிய செய்திகள் இலக்கியங்களில் குறைவாக இருந்தாலும், செப்பேடுகள், கல்வெட்டுகளின் இவர்களைப் பற்றிய செய்திகள் உள்ளன.

இவர்கள் தமிழரல்லாத இனத்தவர்கள் ஆயினும் பின்னர் தமிழோடு இரண்டறக் கலந்து விட்டனர். இவர்கள் நிறையக் காடுகளை வெட்டி வயல்களாக மாற்றியுள்ளனர். தமிழகத்தின் வடபகுதியில் இவர்கள் செய்த பாசனப் பணிகளால் இன்றும் அங்கு வேளாண்மை சிறப்பாக நடைபெறுகிறது.

கூரம் செப்பேடு ''வித்யா விநீத பல்லவ பரமேச்சுர கரம் எடுத்து ஏரி தோண்டி'' என்று குறிக்கிறது. மகேந்திரவாடிக் கல்வெட்டு மகேந்திர தீர்த்தம் என்ற குளத்தைப் பற்றிய செய்திகளைக் கூறுகிறது. உத்திரமேரூர் கல்வெட்டு வைரமேகத் தடாகம் என்ற குளத்தை உருவாக்கியதற்கான செய்தியைக் கூறுகிறது. இது தவிர நாட்டுக்கால், ஆற்றுக்கால் என்ற இரண்டு வாய்க்கால் கட்டுமான முறை பற்றிய குறிப்புகள் உள்ளன. இது ஆற்றிலிருந்து நேரடியாக நீரை வயலுக்கு கொண்டு வரக்கூடிய அமைப்புகள் மற்றும் ஏரிக்கு நீர் கொண்டு வரும் அமைப்புகள் என்று தெரிகிறது. இது தவிர நீரூற்று வாய்க்கால்கள், ஊற்றுக்கால் என்று கூறப்படுகின்றன. இதை ஒளவையார் குறிப்பிடும் ''ஊற்றுக்காலால் உலகூட்டும்'' என்ற தொடர் நினைவூட்டுகிறது. பாலாற்றில் இருந்து நீரானது பல ஏரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவை தவிர கூற்றன் வாய், வா(ய்)த்தலை, தலைவாய், முகவாய் என்று பெயருள்ள பாசனக் கட்டுமானங்கள் ஆற்றிலிருந்து நீரை வயலுக்கு கொண்டு செல்லப் பயன்பட்டுள்ளன. திருச்சி அருகே உள்ள வா(ய்)த்தலை, போன்ற ஊர்கள் இதற்கு நல்ல சான்று. இவற்றைப் பராமரிக்க நிலமானியங்கள் வழங்கப்பட்டிருந்தன.

சிற்றூர்களில் குடியாட்சி முறை நன்கு நிலவியிருந்தது. முறையான தேர்தல்கள் நடந்துள்ளன. தன்னாட்சியுடன் கூடிய நிர்வாக அமைப்பு இருந்தது. இந்த சிற்றூராட்சியின் கீழ் அலுவல் முறைப்படி பல சிறு குழுக்கள் இருந்தன. இவற்றுக்கு வாரியங்கள் என்று பெயர். இன்றைய அரசு அமைந்துள்ள வாரியங்களுக்கு முன்னோடியாக அன்றைய பல்லவ நாட்டு மக்கள் முன்னோடியாக இருந்ததை அறிய முடிகிறது. அவை

1. சம்வத்சர வாரியம் - பொது வாரியம்

2. தோட்டவாரியம் - தோட்டக்கால் பயிர்களைப்பற்றியது.

3. ஏரி வாரியம் - ஏரிகள் பராமரிப்பு, ஏரிப் பாசனம்

4. கழனி வாரியம் - மருத நில வயல்களைப் பற்றியது.

5. பஞ்ச வாரியம் - வரிவசூல் பற்றியது

6. கணக்கு வாரியம் - ஏர், மதகு, அணைக்கட்டு, கலிங்கு போன்றவற்றை நிர்வகிப்பது.

7. தடிவழி வாரியம் - வயல், பாத்திகளுக்கு செல்லும் பாதைகளைப் பற்றியது.

இவ்வளவு நுட்பமான அறிவியல் முறையில் மேலாண்மை அமைப்பை உருவாக்கியமை இன்றும் வியப்பாகவே உள்ளது. இந்த வாரியங்கள் கிராமசபையின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வந்துள்ளன.

கொடிக்கால், தோட்டந்தோப்புகள் ஆகியவற்றின் வேலிகளைக் கவனிப்பதற்கு வேலிநாயம் என்ற அலுவலர் இருந்துள்ளார்.

ஏரிகள் உடைப்பெடுத்தபோது உடனடியாக அதைச் செப்பனிட்ட செய்திகள் கல்வெட்டுக்களில் பதியப்பட்டுள்ளன. சோமங்கலக் கல்வெட்டு ''சோமங்கலமான பஞ்சநதி வாணச் சதுர்வேதி மங்கலத்து ஏரி இத்தேவர்க்கு பன்னிரண்டாவது பெருவர்ஷம் பெய்து ஒரு நாளே ஏழிடத்தில் பெருமடையாய் உடைத்த இது திருச்சுரக் கண்ணப்பந் திருவேங்கம்பமுடையான் காமன் கண்டவானன் இம்மடை ஏழும் அடைப்பித்து .....'' என்று குறிபிட்டுச் செல்கிறது.

பிற்காலச் சோழர்கள்

தமிழகப் பாசன வரலாற்றில் பிற்காலச் சோழர்களின் காலம் பொற்காலம் எனக் கூற முடியும். சங்ககாலச் சோழர்களின் வரலாறு கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவிலேயே முடிந்து விடுகிறது. ஆயினும் சிற்றரசர்களாக ஒரு சிலர் இருந்துள்ளனர். பல்லவர்களுக்குப் பின்பு இரண்டாவது சோழப் பேரரசு கி.பி. 846 இல் தொடங்குகிறது. விசயாலய சோழன் இதைத் தொடங்குகிறான். இவன் கி.பி. 871ஆம் ஆண்டுவரை தனது ஆட்சியை நடத்தினான். இவனே தஞ்சையை தலைநகராக வைக்கின்றவன். பண்டைச் சோழர்களுக்கு காவிரி பூம்பட்டினமும் உறையூருமே தலைநகர்கள். இவனது மகன் முதலாம் ஆதித்த சோழன் பல்லவர்கள், கொங்கு நாட்டவர்களை வென்று தனது ஆட்சியை விரிவாக்கினான். இவனது மகன் முதலாம் பராந்தக சோழன் மேலும் பல வெற்றிகளை ஈட்டுகிறான். பாண்டியர்கள் முதல் கங்கர்கள்வரையான மன்னர்களை வெல்கின்றான். ஈழநாட்டின் மீதும் படை நடத்துகிறான். இதற்கிடையில் இளவரசனான இராசாதித்தியன் ராட்டிரகூடர்களால் தக்கோலத்தில் கொல்லப்படுகிறான். இதன் பின்னர் 25 ஆண்டுகாலம் சோழப் பெருமை மங்கிக் கிடந்தது. இதன் பின்னர் ஐந்து மன்னர்கள் ஆட்சிக்கு வந்தனர். அவர்கள் கண்டராதித்தியன், அரிஞ்சயன், இரண்டாம் பராந்தகன் (சுந்தர சோழன்), ஆதித்திய கரிகாலன், மதுரகாந்தகன் ஆகியோராவர். இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாவது மகனே அருண் மொழித் தேவன் எனப்படும் இராசராச சோழன், இவனது மகன் இராசேந்திர சோழன்.

ஏறத்தாழ 430 ஆண்டுகாலம் மிக நீண்ட ஆட்சியைச் சோழர்கள் செலுத்தியுள்ளனர். இவர்கள் வடக்கே கங்கை முதல் தெற்கே இலங்கை மற்றுமல்லாது தென்கிழக்கு ஆசியாவரையிலும் தமது பேரரசை நிறுவியுள்ளனர். பண்டைய சேர, சோழ, பாண்டியப் பேரரசுகளைக் குறிப்பிடத் தயங்கும் வரலாற்றாய்வாளர்கள் கூட பிற்காலச் சோழப் பேரரசின் விரிவைச் சொல்லிவிடுகின்றனர். பல்வேறு வெற்றிகளை ஈட்டிய அருண்மொழித் தேவன், பாண்டியர்களையும், சேரர்களையும் வெற்றி கொண்டதால் மும்முடிச் சோழன் என்ற கீர்த்தியைப் பெற்றான். இவன் மிக நீண்ட போர்களைச் செய்து முடித்து பின்னர் எதிரிகள் இன்மையால் மிக அமைதியான சூழலை நாட்டில் ஏற்படுத்தினான். மிக அருமையான பாசனத் திட்டங்களை வடிவமைத்துச் செயல்பட்டுள்ளான். பண்பாட்டுத் துறையில் இவன் செய்த சாதனையாக, மறைக்கப்பட்ட சைவ சமய மறையான தேவாரத்தை மீண்டும் வெளிக் கொணர்ந்தது கூறப்பட்டாலும், வேளாண்மையில் இவனது பணி மிக விரிவானது.

பிற்காலச் சோழ மன்னர்கள் காலத்தில் 20 பெரும் நீர்க்கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்பது கட்டுமானங்கள் மன்னர்களின் பெயர்களைக் கொண்டவை. அரசியின் பெயரால் அமைந்தவை மூன்று. அமைச்சர்கள், அதிகாரிகள், குழுக்கள் பெயரில் அமைத்தவை எட்டு.

அரசர் பெயரில் அமைந்தவை

கண்டராதித்தன் - கண்டராதித்த ஏரி

சுந்தரசோழன் அல்லது இரண்டாம் பராந்தகன் - சுந்தரசோழன் வாய்க்கால்

இராசராசன் - இராசராசன் வாய்க்கால்

முதலாம் இராசேந்திரன் - முடிகொண்ட சோழப் பேராறு

வீரராசேந்திரன் - வீரராசேந்திரப் பேராறு - இராசகேசரி வாய்க்கால்

முதலாம் குலேத்துங்கன் - புத்தாறான குலோத்துங்கச் சோழப் பேராறு - சுங்கம் தவிர்த்த சோழன் வாய்க்கால்

இராசாதிராசன் - இராசாதிராசன் வாய்க்கால்

அரசியர் பெயரில் அமைந்தவை

செம்பியன் மாதேவி வாய்க்கால்

பராந்தகன் மாதேவி வாய்க்கால்

மாதேவடிகள் வாய்க்கால்

அதிகாரிகள், பிறர் பெயரில் அமைந்தவை

தாமோதர வாய்க்கால்

தென்பூமி வாய்க்கால்

தரமி வாய்க்கால்

அம்மையப்பன் வாய்க்கால்

திருவாஞ்சியத்தேவன் வாய்க்கால்

சோமநாதன் வாய்க்கால்

முன்னூற்றுவன் வாய்க்கால்

மூவாயிரவன் வாய்க்கால்

இவ்வாறு அமைக்கப்பட்ட ஆற்றுப் பாசனத் திட்டங்கள் தவிர பல்வேறு ஏரிகளையும் பிற்காலச் சோழர்கள் உருவாக்கினார்கள். தஞ்சையைவிட்டு தனது தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றிக் கொண்டான் இராசேந்திரன். இவன் தனது தந்தையைக் காட்டிலும் மிகத் துணிச்சலான வெற்றிகளை ஈட்டியவன். கடாரம் எனப்படும் (மியான்மர்) பர்மாவரையிலும் தனது கொடியைப் பறக்கவிட்டவன். இவன் கங்கைவரை தனது பேரரசை விரித்தவன். இதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பெயரும் பெற்றான். சங்ககாலத்தில் இருந்த கரிகாலன், சேரன் செங்குட்டுவன், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆகியவர்களுக்குப் பிறகு வடநாட்டு மன்னர்களைத் தோற்கடித்தவன் இவனே என்றால் அது மிகையாகாது. தனது வெற்றியின் பெயரால் ஒரு தலைநகரை உருவாக்குகிறான். அதன பெயர்தான் கங்கை கொண்ட சோழபுரம், இந்நகர் தஞ்சையைக் காட்டிலும் எள்ளவும் குறைந்துவிடக்கூடாது என்பதற்காக அனைத்து வசதிகளையும் செய்விக்கிறான். அதில் ஒன்றாக குடிநீர் மற்றும் பாசனத்திற்காக சோழப் பேரேரி எனப்படும் சோழகங்கம் என்ற ஏரியைக் கட்டுவிக்கிறான்.

இவன் மைசூர்ப் பகுதியில் ஏரி ஒன்று அமைத்ததற்கான செய்தியை மாலூர்பட்டனா கல்வெட்டுக் கூறுகின்றது.

உய்யக் கொண்டான் வாய்க்கால் ஒரு சமமட்டக் கோட்டு வாய்க்கால் (Contour Canal) ஆகும். இந்த வாய்க்கால் அமைந்துள்ள பகுதி மேடும் பள்ளமும் அமைந்தது. ஆற்றுநீர் அறுத்து முறையற்று இருக்கும் இடம். இங்கு சமமட்டக் கோட்டு வாய்க்கால் அமைக்கும் நுட்பம் அப்போதே இருந்தமை மிகவும் வியப்பிற்குரிய ஒன்று. ஏனெனில் நீரியல் கோட்பாடுகள் வளர்ந்தது 18ஆம் நூற்றாண்டுக் காலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சோழர்கள் காலத்தில் இருந்த குடியாட்சி முறையும் அதை நடத்துவதற்கான குடவோலை முறையும் மிகவும் சிறந்த ஆட்சிமுறை அமைப்பாகும். இதற்குச் சான்றுகளாக பின்வரும் கல்வெட்டுகள் உள்னன.

உத்திமேரூர் கல்வெட்டு, தென்னேரி, மானூர், பிரம்மதேசம், காமரசவல்லி, திரிபுவனி, சம்பை, பொன்னமராவதி, விரிஞ்சிபுரம், திருமுக்கூடல், அரகண்டநல்லூர் முதலிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள் விளக்குகின்றன. கிராமசபை என்ற ஊரவை மிகவும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது, ஆனால் இப்போது உள்ளபடி அனைவரும் ஊர் அவையில் வாக்களிக்க முடியாது. அதற்கு தகுதி உள்ள சில விதிமுறைகள் இருந்துள்ளன. இது நிதி, நீதி போன்ற பல காரியங்களை கவனித்துக் கொண்டது. அதில் மிக முதன்மையானதாக ஏரிப் பராமரிப்பு இருந்திருக்கிறது.

திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள திருவெறும்பூர் ஊர் மேம்பாட்டிற்காக விதிக்கப்ட்ட தீர்வைப்பற்றி பத்தாம் நூற்றாண்டு ஆவணம் பின்வரும் தகவலைக் கூறுகிறது.

........... திருவெறும்பூர் சிவன் கோவிலை தீர்மானித்த செம்பியன் வடிவேலன் என்பவர் அக்கிராமத்து ஏரியை ஆழப்படுத்த 45 களஞ்சு தங்கம் அளிக்க முன்வந்தார்..... என்று விரிவாகக் கூறிச் செல்கிறது. இக்‘கலம் இராசராசன் காலமாகும்.

இதேபோல குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டு உடைந்துபோன ஏரியைப் பராமரிப்பது பற்றி விரிவாகச் சொல்கிறது. இது ஏரி அடைக்க பொற்காசுகள் அளித்த செய்தி கூறுகிறது. இக்கல்வெட்டு கி.பி.1192 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. ''......... செயங்கொண்ட சோழமண்டலத்து புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டுக் குன்றத்தூர் நாட்டுச் சேர்மங்கலமான பஞ்சத்தியான சதுர்வேதி மங்கலத்து ஏரி....... உடைந்ததும் அடைப்பித்து இவ்வேரி பதினாலாவது நிலை நின்றபின்பு இம்மடைகளும் கரையும் பகுமை செய்கைக்கு.......... கல்லிக் கரைசெய்யக் கடவோமாகவும் இப்படிச் சம்மதித்து பழங்காசு நாற்பதும் பொலியூட்டாக கைக்கொண்டோம் இவ்வூர் மகாசபையோர்.....''

இவ்வாறாக மன்னர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் நீரிப்பாசனப் பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளியல், இந்த வேளாண்மையை வைத்தே இயங்கியது. பல்வேறு முறைகளில் வரிவிதிப்பை உருவாக்கியிருந்தனர்.

நீர்வரி விளைநிலங்களுக்கு நீரைப் பாய்ச்சிக் கொள்வதற்கான வரியாகும். இதுவே ஏரி, குளம் பாய்ச்சலாக இருந்தால் அதன் பெயர் நிலை நீர்ப்பாட்டம் எனப்படும். ஆற்றுப்பாய்ச்சலுக்கு ஒழுகுநீர்ப்பாட்டம் என்று பெயர். அத்துடன் விளைநிலம் என்றும் விளையாநிலம் என்றும் பிரித்து வரி தண்டப்பெற்றது. விளையாநிலம் ஊர்ப்பொதுநலம் என்றும் பட்டப்பாழ் (தரிசு) என்றும் பிரிக்கப்பட்டது. இவற்றுக்கு வரி கிடையாது. எனவே இது இறையிலி என்று அழைக்கப்பட்டது.

விளைநிலம் என்பது நீர்நிலம், கொல்லை, காடு என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டது. நிலவரி தீர்வை என்றும் வாரம் என்றும் பிரிக்கப்பட்டது. தீர்வை என்பது குறிப்பிட்ட அளவை ஆண்டு தோறும் தர வேண்டும். வாரம் என்பது விளைச்சலில் ஒரு பங்கு என்று வாங்கப்பட்டது. தீர்வை நிலம் தீர்வைப் பற்று என்றும் வார நிலம் வாரப்பற்று என்றும அழைக்கப்ட்டது. வாரத்தையே பணமாகச் செலுத்தினால் அதன் பெயர் கடமைப்பற்று எனப்பட்டது. நன்றாக விளைந்த நிலத்தில் மட்டுமே வரி தண்டப்பெற்றது. விளையா நிலங்களில் வரி வாங்கப்படவில்லை. களஞ்சியத்தில் விளைபொருட்களும் கருவூலத்தில் பணமும் சேமித்து வைக்கப்பட்டன. இவை இரண்டிற்கும் பண்டாரம் என்று பெயர். ஊரளவு இருக்கும் பண்டாரத்தில் உள்ளூர் செலவு போக எஞ்சியவை. தலைநகரில் உள்ள மூலப் பண்டாரத்திற்கு அனுப்பப்படும்.

வேளாண்மையும் அதற்கு மூலமான பாசனமும் பிற்காலச் சோழர்களின் இன்றியமையாகப் பணியாக இருந்துள்ளது.

பண்டைய வரலாற்றைத் தன்னகத்தே கொண்ட பாண்டியர்களின் பாசனப் பணி என்பது வையை ஆற்றோடும், பொருநை என்ற தாமிர பரணியோடும் நெருக்கமானது. வையை மேற்கு மலைத் தொடரில் தோன்றும் ஆறு. கண்ணகியும் கோவலனும் கடும் கோடை காலத்தில் மதுரைக்குள் நுழைகின்றபோது படகுகள் ஓட்டும் அளவிற்கு நீரோட்டத்தைக் கொண்டிருந்தது.

இந்த ஆற்றில் பாண்டியர்கள் கட்டிய அணைகள் பற்றிய செய்திகள் முதலில் ''கல்வெட்டு வடிவில் கிடைப்பது சேந்தன் செழியன் காலத்தியது. இது கி.பி.620-650. சேந்தன் செழியன் வைகையில் மதகு அமைத்த செய்தி இதில் அமைந்துள்ளது. இதேபோல அரிகேசரி என்ற கால்வாயையும் வெட்டியுள்ளான். தென்பாண்டிச் சீமையில் பாயும் பொருநையில் சிறு சிறு மண்ணணைகள் மட்டுமே பண்டைய நாட்களில் செய்யப்பட்டுள்ளன. பிற்காலப் பாண்டியர்களே நிறைய அணைகளைக் கட்டியுள்ளனர்.

திருக்கோவிலூர் அணை உள்ள இடத்தில் ஒரு மதகு அமைத்து வாய்க்கால் பிரித்ததை விக்கிரம பாண்டியன் கல்வெட்டுக் கூறுகிறது. பவானி ஆற்றில் உள்ள காலிங்கராயன் கல்வெட்டு பிற்காலப் பாண்டியனான சடையவர்மன் குலசேகரன் காலத்தியது. இவனது பட்டப் பெயர் காலிங்கராயன். மாறவர்மன் சுந்தரபாண்டியனது அமைச்சர் ஒருவருக்கு காலிங்கராயன் என்ற பட்டம் இருந்தது. கொங்கு மண்டலத்தில் இவர் பணியாற்றியபோது இவர் கட்டிய பாசனக் கட்டுமானம் இது.

இது தவிர கோடைமேல் அழகியான் அணை, நதியுண்ணி அணை, கன்னடியன் அணை என்று பல அணைக் கட்டுகள் கட்டப்பட்டன. நாஞ்சில் நாட்டில் பழையாற்றின் குறுக்கே பாண்டியன் அணை கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பாசன வரலாற்றில் இருப்பைக் குடி கிழவன் என்ற சிற்றரசனுக்கு மிகச் சிறந்த இடம் உண்டு. இவன் சிறிமாற சிறிவல்லபன் என்ற பாண்டிய அரசனுக்கு உட்பட்டவன். இவனது காலம் கி.பி. 815 முதல் 862 வரை. இவன் வாழ்நாளில் பெரும்பகுதியை பாசனப் பணிகளுக்காகவே செலவிட்டான். சாத்தூர், கோவில்பட்டி, முதுகுளத்தூர், விளாத்திகுளம் ஆகிய பகுதிகளைக் கொண்டது இருஞ்சோணாடு, இப்பகுதியை ஆட்சி செய்தவன் இவன்.

''ஏரிநூலிட்டு ஏறுவித்தல்'' என்ற செப்பமான அணைக்கட்டுமூ தொழில்நுட்பம் இவனது காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவன்தான் நீர் அறுவடை என்று இன்று கூறப்படும் நுட்பத்தின் தந்தை எனலாம். பாண்டிய மண்டலம் முழுமையும் ஏரிகளை உருவாக்கி பெய்யும் மழையைப் பிடித்து வறண்ட பகுதிகளை வளமாக்கினான். கிழவனேரி, திருமால் ஏரி, மாறனேரி, திருநாராயணன் ஏரி, பெருங்குளம் என்று பெருமளவு ஏரிகளை அமைத்துள்ளான்.

ஆற்றின் மட்டத்திலிருந்து உயரமான இடத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் தொழில் நுட்பத்தை இவர்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.

எங்கெல்லாம் ஒரேஒரு கால்வாய் பிரிகிறதோ அங்கெல்லாம் ''ட'' வடிவத்திலும், இருபுறத்திலும் கால்வாய் பிரியும் இடத்தில் குதிரைலாட வடிவில் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இதை அறியாத ஆங்கிலேயர் பாறையின் போக்கிலேயே இது கட்டப்பட்டதாக கருதினர். இதனால் அவர்கள் கட்டிய அணைகள் உடைப்பெடுத்தன.

மருதூர் அணையிலும் திருவைகுண்டம் அணையிலும் இத்தகைய உடைப்புகள் நடந்தன. பின்னர் இதை அறிந்து வேண்டிய திருத்தங்களை ஆங்கிலேயர் செய்தனர்.

இதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நாயக்க மன்னர்களும் பாண்டியர்களைத் தொடர்ந்து பாசனப் பணிகளைச் செய்துள்ளனர். தாமிரபரணி ஆற்றிலுள்ள அரியநாயகியும் அணைக்கட்டு தளபதி அரியநாதரால் கட்டப்பட்டது. பாளையன் அணைக்கட்டு, மருதூர் அணைக்கட்டு, சுத்தமல்லி அணைக்கட்டு போன்றவை நாயக்கர் காலத்தில் கட்டுமானங்கள், கும்பகோணம் மகாமகக் குளத்தை தஞ்சையில் வாழ்ந்தநாயக்க மன்னர்களின் அமைச்சரான கோவிந்த தீட்சிதர் அமைத்தார். இவர் ஐயன் குளம், ஐயன் வாய்க்கால், ஐயன்கடை என்ற பாசனப் பணிகளைச் செய்துள்ளார்.

பாண்டியர்கள் தொடங்கி வைத்த சங்கிலித் தொடர் ஏரிகள் இன்றும் பலரை வியப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது.

இவ்வாறான நீண்ட வரலாற்றைக் கொண்ட வேளாண்மை கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் மிகப் பெரும் வீழ்ச்சியை எட்டியிருப்பதைக் காணலாம். உணவில் தன்னிறைவு கண்டுவிட்டோம் என்று மார்தட்டியவர்கள் இன்று கோதுமையை அதிக விலைக்கு இறக்குமதி செய்கின்றனர். மண் மலடாகி விட்டது. நீர் நஞ்சாகிவிட்டது. மக்களோ அன்றாடம் புதுப் புது நோய்களுக்கு இலக்காகின்றனர். பசுமைப் புரட்சி என்று உழவர்களின் வாழ்வில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு இப்போது புதிய பசுமைப் புரட்சி என்று பேசுகின்றனர். முற்றிலும் கும்பணிகளை (கும்-குழுவாக பணி- செயலாற்றுவது) முன்னேற்றுவதற்கான வேளாண்மைத்திட்டங்களை பரிந்துரை செய்து நாட்டின் தற்சார்பிற்கு உலை வைத்து வருகின்றனர்.

ஏறுத்தாழ 56 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கருத்தரங்கம் ஒன்று இந்திய வேளாண்மை தற்சார்பை உள்னதாக மாற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது. குறிப்பாக நிலங்களைப் பகிர்ந்தளிப்பது, நில உச்சவரம்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முனைவது என்று அதன் போக்கு சீனாவை ஒத்ததாக இருந்தது. 1961-இல் ராக்பெல்லர் நிறுவனம், போர்டு நிறுவனம் உலக வங்கி இவற்றின் துணையோடு அதற்கு எதிரான திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் வேதியுரங்கள் கொடுக்கப்பட்டன. அவர்கள் ''இந்நாட்டு உழவர்கள் மிகவும் பழமையான முறையில் வேளாண்மை செய்கின்றனர்'' ''விளைச்சலைப் பெருக்க முடியாது'' என்று கூறி மக்களை திசை திருப்பினர்.

அமெரிக்க நிதி உதவியோடு வேதி உரங்கள் கொடுக்கப்பட்டன. ஒரு மூட்டை உரம் வாங்கினால் ஒரு வண்டிப் பட்டை கிடைக்கும் என்று பரப்புரை செய்யப்பட்டது. இதன் பின்னர் வேதியுரங்களை ஏற்றுக் கொள்ள முடியாத நாட்டு பயிர்கள் அதிகமாக வளர்ந்து சாய்ந்தன. இதனிடையில் நார்மன் போர்லாக் என்பவர் குட்டை வகைப் தவசப் பயிர்களை அறிமுகம் செய்தார். 1960ஆம் ஆண்டு வேளாண்மைக் கொள்கை முற்றிலும் இந்த மாயவிதைகளை விரிவாக்கம் செய்யத் தூண்டியது. இதன் பின்னர் கொல்லைப்புற வழியாக முற்றிலுமாக பசுமைப் புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது. அயல்நாட்டு ''வீரிய'' விதைகளை எதிர்த்த ரிச்சாரியா என்ற வேளாண் அறிஞர் வெளியேற்றப் பட்டு எம்.எஸ்.சாமிநாதன் வேளாண்துறைத் தலைமைப் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். இதன் பின்னர் மிக வேகமாக வேலைகள் நடைபெற்றன. நமது நாட்டின் உள்ளூர் விதைகள் முற்றிலும் அழிந்து போயின. சிறு சிறு உழவர்களால் ஆங்காங்கே அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொதுவான உழவர் கூட்டத்திடம் இருந்து அவை போய்விட்டன. இந்தியாவில் உணவுப் பஞ்சம் வந்துவிட்டது. அதனால்தான் பசுமைப் பரட்சியை அறிமுகம் செய்வதாகக் கூறினர். ஆனால் இதை அமர்த்தியாசென் போன்ற அறிஞர்களின் ஆய்வு தவிடுபொடியாக்கி விட்டுள்ளது. அதாவது எப்பொழுதெல்லாம் இந்தியாவில் பஞ்சம் வந்தததோ அப்போதெல்லாம் பிற நாடுகளுக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆகியுள்ளன என்று அவர் தனது ஆய்வில் நிறுவியுள்ளார். எனவே முறையான பகிர்வு இல்லாததால்தான் பஞ்சம் வந்ததேயொழிய இயற்கையாக வரவில்லை என்பது விளங்கும்.

இவ்வாறாக வலிந்து திணிக்கப்பட்ட பசுமைப் புரட்சி 50 ஆண்டுகளுக்குள் தனது உயிரை விட்டுவிட்டது. இப்போது இரண்டாம் பசுமைப் புரட்சியைப் பற்றிப் பேசுகின்றனர். அதே சுவாமிநாதன் இப்போது மரபீனி மாற்றப் பயிர்களின் தேவையை விரிவாகப் பேசுகிறார். இவர் இயற்கை வேளாண்மையைப் பரப்புவதும் தமது கடமை என்று பகர்கிறார். இயற்கை வேளாண்மைச் சான்றளிப்பவர்கள் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை முற்றிலும் எதிர்க்கின்றனர். இவர் எப்படி இயற்கை வேளாண்மையை பரிந்துறைக்கிறார் என்று தெரியவில்லை. மரபீனி மாற்றத் தொழில் நுட்பம் முற்றிலும் உழவர்களை வேளாண்மையில் இருந்து அகற்றிவிட்டு ஒரு சில கும்பணிகளிடம் ஒப்படைக்கும் நோக்கமேயன்றி வேறு எதுவும் இல்லை.

தமிழக உழவர்கள் மிகக் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டுள்ளனர்.

இடுபொருள் செலவு அதிகமாகிக் கொண்டே வருகிறது.

விளைபொருள் விலையோ உரியவாறு உயரவில்லை.

ஆறுகளில் நீர் வளம் குறைந்து வருகிறது.

அண்டை மாநிலங்களின் அடம்பிடிப்பு.

உழவர்கள் தங்களது நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு கூலிகளாக மாறுகின்றனர்.

கும்பணிகள் நிலங்களை வாங்கிக் குவிக்கின்றன.

தமிழகத்தில் வேளாண்மையின் பங்கு 1.6 விழுக்காட்டிற்கும் குறைவாகப் போய்விட்டது.

தோட்டப் பயிர் சாகுபடி பன்மடங்கு அதிகமாகி உணவுப் பயிர் சாகுபடி பன்மடங்கு குறைந்துள்ளது.

தமிழகத்தின் உணவு உறுதிப்பாடு கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்தச் சூழலில் நாம் என்ன என்ன செய்வது? தமிழக வேளாண்மையை எவ்வாறு காப்பது? என்ற வினாக்கள் எழுகின்றன.

நமது குறிக்கோள் தற்சார்பை வலுவுறுத்துவதாக இருக்க வேண்டும். அதாவது நாட்டின் தற்சார்பை மட்டுமல்லாது உழவரின் தற்சார்பை வலியுறுத்தும் வகையில் இருக்க வேண்டும்.

''தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை

வாளாண்மை போலக் கெடும்'' என்பார் வள்ளுவர். தாளாண்மை என்பதை நாம் புதிய பொருளில் (தாள் - கால், ஆண்மை - மேலாண்மை) தனது காலில் நிற்கும் திறமை என்று கொள்ளலாம். இது உயிர்ம நேயத்தை அடிப்படையாகக் கொண்டது.

''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' இந்த உலகில் வாழுகின்ற பூச்சிகள், மரங்கள், விலங்குகள் யாவற்றையும் கொன்றொழித்துவிட்டு மாந்தர் மட்டுமே வாழ முடியாது. எனவே பிற உயிர்களின் வாழுமையை உறுதி செய்யும் வகையிலும் நமது வேளாண்மை இருக்க வேண்டும்.

இதை அடைய,

1. எளிய தொழில்நுட்ப மேம்பாடு

2. உழவர்களின் ஒன்றிணைவு

3. உள்ளூர் சந்தைகளை உருவாக்குதல்

என்ற மும்முனை வேலைப்பாடு நமக்குத் தேவைப்படுகிறது.

நன்றி: தமிழர் கண்ணோட்டம்

திராவிட மற்றும் இந்திய தேசிய இயக்க இதழ்களின் வெற்றி தோல்விகள் - சாவித்திரி கண்ணன்

திராவிட இயக்க இதழ்கள்

திராவிட இயக்கங்கள் சாதாரண மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை சாத்தியப்படுத்தும் சக்தி கொண்டவைகளாக வெளிவந்தன. மன்னர் ஆட்சி மகாத்மியங்களிலும், நிலப்பிரபுக்களின் அதிகாரவரம்புக்குள்ளும், புராணங்கள் இதிகாசங்கள் தோற்றுவித்த மயக்கங்களிலும் இந்திய தேசபக்த வெறியிலும் உழன்று வந்த தமிழ்ச் சமூகம் திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் புதிய சமூக சிந்தனைகளைக் பெற்றது.

படிப்பையும் அதன் பலன்களையும் ஒரு குறிப்பிட்ட சமூகமே குத்தகை எடுத்துக் கொண்டாட்டங்களை அனுபவித்து வந்த சூழலை பிரிட்டிஷ் ஆட்சி மாற்றியது. பிராமண சமூகம் தவிர்த்து மற்ற சமூகங்களிலும் படித்தவர்கள், பண்டிதர்கள் உருவாயினர். ஆயினும் மூன்று சதவிகிதத்தினரான பிராமணர்களே பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரமையப் பதவிகளில் 93 சதவிகிதத்தை ஆக்கிரமித்தனர்.

இதன் எதிர்வினையாக திராவிட இயக்கத்தின் முதல் நாளிதழாக 1914இல் வெளிவந்தது ''திராவிடன்''. திராவிடன் ஏற்றிய தீப்பந்தம் பல தீபங்களை ஒளிவீசச் செய்தது. திராவிட இயக்கத்தின் தாக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றிதழ்களையும் வெகுஜன இதழ்களையும் பிரசவித்தது. 1916இல் நிறுவப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பிராமணரல்லாதார் இயக்கம் என்ற பெயரில் பேசப்பட்டது. இந்த இயக்கத்தின் சார்பில் ''ஜஸ்டிஸ்'' என்ற ஆங்கில இதழ் வெளிவந்தது.

இந்த இதழின் பெயரே இவ்வியக்கத்தின் பெயராக ''ஜஸ்டிஸ் கட்சி'' என்றும் ''நீதிக்கட்சி'' என்றும நிலைப் பெற்றது.

1925இல் முதன் முதலில் குடிஅரசு பத்திரிகையை இந்திய தேசியத்திற்கான இதழாகக் கொண்டு வந்த பெரியார், காங்கிரசிலிருந்து விலகியபிறகு அதனை திராவிட மக்களுக்கான சுயமரியாதை இதழாக நடத்தினார். வியாபார நோக்கமின்றி கொள்கைக்காக வெளியான குடியரசு இதழ் ஆயிரத்து சொச்சம் சந்தாதாரர்களைப் பெற்று, தொடர்ந்து பொருளாதார சங்கடங்களிலே எட்டாண்டுகள், தின, வார, மாத, இதழ் என மூன்று வடிவங்களில் நடத்தப்பட்டு, அரசு அடக்கு முறையால் நின்றுபோனது.

நீதிக்கட்சியின் திராவிடன் இதழை பொறுத்தவரை அதற்கு நிலப்பிரபுக்கள், தொழிலதிபர்கள் உதவி கிடைத்தது. ஆளும் கட்சி ஆன நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் புரவலர்களாக இருந்து வளர்த்தார்கள். இப்படி இலட்சக் கணக்கில் பணத்தை விழுங்கிய நிலையிலும் ''திராவிடன்'' ஒரு திடகாத்திரமான இதழாக சொந்தக்காலில் நிற்க முடியாத ஒன்றாகவே இருந்தது. நீதிக்கட்சியாரின் வற்புறுத்தலினால் நடுவே சில காலம் பெரியார் இவ்விதழுக்கு பொறுப்பேற்று பல்லாயிரக்கணக்கில் பணம் இழந்தது தான் கண்ட பலனாயிருந்தது. ஆகவே அப்பொறுப்பிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டார்.

இதேபோல திராவிடக் கொள்கைகளுக்கு எதிராக பிராமணர்கள் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதி அவை அகில இந்திய அளவில் கவனம் பெற்றுவருவதை அறிந்த பெரியார் 1928இல் ரிவோல்ட் (Revolt) என்ற ஆங்கில இதழை ஆரம்பித்தார். அறிவுக் களஞ்சியமாக, புரட்சியின் அம்சமாக வெளியானது ரிவோல்ட். இதில் டாக்டர் முத்து லெட்சுமி, செல்வி குஞ்சிதம், செல்வி ஞானம், செல்வி இந்திராணி போன்ற பெண்கள் எழுத்துலகில் பிரவேசிக்கும் வாய்ப்பு அமைந்தது. இரண்டாண்டு வீச்சுக்குப் பிறகு ரிவோல்ட் நின்றுவிட்டது. மீண்டும் 1933-இல் ''புரட்சி'' என்ற பெயரில் பெரியார் ஒரு பத்திரிகை தொடங்கினார். கடுமையான அரசாங்க அடக்குமுறையால் ஓராண்டிற்குள்ளேயே மூன்று முறை ''புரட்சி'' இதழ் முடக்கப்பட்டது. நீதிமன்றம், வழக்கு, ஜாமின் அபராதம் என அலைக்கழிக்கப்பட்ட புரட்சி ஓராண்டு காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

ஒன்றரை அணா விலையில் ''பகுத்தறிவு'' என்ற பெயரில் பெரியார் கொண்டு வந்த மாத பத்திரிகை ''குடி அரசு''ம், ''புரட்சி''யும் விட்டுச் சென்ற பணிகளை முன்னிலும் வீரியத்துடன் முன்னெடுத்தது. இதில் அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி போன்றோரின் கட்டுரைகள் பரவலான வரவேற்பைப் பெற்றன. நான்கைந்து ஆண்டுகள் பகுத்தறிவு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதழ்களின் விற்பனையில் பெரும் அக்கறை காட்டினாலும், விற்பனையை வைத்து இதழ் பணியையோ, எழுத்துப் பணியையோ நிர்ணயித்துக் கொள்ளவில்லை பெரியார். ''நான் எழுதியதை நானே அச்சுகோத்து நானே அச்சிட்டு நான் மட்டுமே படித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் ''குடி அரசை'' வெளியீட்டு என் கருத்துக்களை வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்வது என் கடமை'' என பிரகடனப்படுத்தியவர் பெரியார்.

நின்று போன குடிஅரசு இதழை 1935இல் மீண்டும் துவக்கினார் பெரியார். இம்முறை சுமார் 14 ஆண்டு குடியரசு தாக்குபிடித்து கோலோச்சியது. நீதிக்கட்சிக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட ''விடுதலை'' வாரம் இருமுறை இதழ் 19 மாதங்களுக்குப் பிறகு பெரியார் கைக்கு வந்தது. முதலில் அரையணா விலையில் விற்பனையான விடுதலையை நாளிதழாக மாற்றி காலணா விலைக்குத் தந்தார் பெரியார். சரியாகச் சொல்ல வேண்டுமானால் மூன்று சல்லிக்காசுகள், 1973இல் பெரியார் மறைந்த போது விடுதலை நாளிதழ் விலை 12 காசுகளே.

விடுதலை நாளிதழுக்கு மணியம்மையாரை ஆசிரியராகவும் குத்தூசி குருசாமி அவர்களை பொறுப்பாசிரியராகவும் கொண்டு பெரியார் நடத்தினார். அறிஞர் அண்ணாவும் சில காலம் இதன் பொறுப்பாசிரியராக இருந்துள்ளார்.

இக்காலங்களில் விடுதலை சுமார் 44,000 பிரதிகள் விற்பனையைத் தொட்டது. அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி தி.மு.க. தொடங்கிய காலத்தில் விற்பனை சரிபாதியாக சரிந்தது. 1958இல் ''நாத்திகம்'' என்ற பெயரில் வெளியான வார இதழ் பெரியார் கொள்கை விளக்க ஏடாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இது காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்தும், தி.மு.க.வை எதிர்த்தும் பரபரப்போடு வெளியாகி சுமார் 75,000 பிரதிகள் வரை விற்பனை வளர்ச்சி அடைந்தது.

1975இல் வே.ஆனைமுத்து அவர்களால் ''சிந்தனையாளன்'' மாத இதழ் பெரியார் சிந்தனைகளைத் தாங்கி கொண்டு வரப்பட்டது. பெயருக்கு ஏற்றார்போல் தீவிர சிந்தனைத் தளத்தில் செயல்பட்டுவரும் இவ்விதழ் இடையே சில பொருளாதார நெருக்கடிகளால் சிறிது காலம் தடைப்பட்டாலும் இன்றளவும் சுமார் 4,000 பிரதிகளோடு வெளிவந்து கொண்டுள்ளது.

இவை தவிர பெரியார் குரல், பெரியார் சிந்தனை என்று பெரியார் பெயரைத் தாங்கி வந்த வரிசையில் பத்துக்கு மேற்பட்ட பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. திராவிட அரசு, திராவிட ஏடு போன்று திராவிடத்தை தாங்கி சுமார் முப்பது பத்திரிகைகள் வெளி வந்துள்ளன ''தமிழ்'' என்ற பெயரை அடியொற்றி தமிழ் அமிழ்தம், தமிழ் இன்பம், தமிழ் உலகம் என்பதாக நூற்றுக்கு மேற்பட்ட இதழ்கள் வந்தன.

கொள்கை சார்ந்து இயக்கங்கள் செயல்பட்ட காலகட்டத்தில் அந்தந்த கொள்கைகளால் ''பற்றிக் கொள்ளும் நெருப்பு'' போல இருந்த தொண்டர்கள் படையை வழிநடத்த இயக்க இதழ்கள் வெளிவந்தன.

அந்தந்த இயக்க இதழ்களை படிப்பதற்கென்றே கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை கட்சி அமைப்புகள் ''மன்றம்'', ''பாசறை'', ''படிப்பகம்'', ''அறிவகம்'' போன்ற பெயர்களில் கூரைவேய்ந்த சிறு அறைகளில் இயக்க இதழ்களை வாங்கி வைத்து படித்து விவாதித்தனர்.

இந்த இயக்க இதழ்கள் பற்பல பிரச்சினைகளில் தங்கள் இயக்கத்தின் நிலைபாட்டை தொண்டர்களுக்கு உணர்த்தவும், எதிர்கொள்கை கொண்ட இயக்கத்தவர்களின் குறைபாடுகளை, தவறுகளை சுட்டிக் காட்டவும் பயன்பட்டன. குறிப்பாக எதிர் நிலையிலுள்ள கட்சிகளின் குற்றங்களை, தவறுகளை அம்பலப்படுத்தும் பிரச்சாரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

திராவிட இயக்க இதழ்கள் பெரும்பாலும் அதன் முன்னணி தலைவர்களாலே நடத்தப்பட்டன. அறிஞர் அண்ணா ''திராவிட நாடு'', ''ஹோம்லேண்ட்'', ''காஞ்சி'' போன்ற இதழ்களையும், கலைஞர் கருணாநிதி ''முரசொலியையும், பேராசிரியர் க.அன்பழகன் ''புதுவாழ்வு'' என்ற இதழையும், நாவலர் நெடுஞ்செழியன் ''மன்றம்'' என்ற இதழையும் சி.பி.சிற்றரசு ''தீப்பொறி இதழையும் என்.வி. நடராஜன் ''திராவிடர்'' இதழையும் கவிஞர் கண்ணதாசன் ''தென்றல்'' இதழையும் ஒரே காலகட்டத்தில் நடத்தினார்கள். 1959-இல் ஏ.வி.பி. ஆசைத்தம்பி ''தனி அரசு'' இதழைக் கொண்டுவந்தார்.

தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக வந்த ''நம்நாடு'' இதழுக்கு முதலில் கலைஞர் அண்ணா ஆசிரியராகவும் பிறகு நெடுஞ்செழியன், சி.பி.சிற்றரசு, இரா.செழியன் போன்றவர்கள் ஆசிரியராகவும் இருந்துள்ளனர்.

தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக 1953முதல் 1972வரை தான் நம்நாடு வெளிவந்தது. லாபகரமாக நடத்த முடியாத நிலையில் தொடர்ந்து நஷ்டப்படத் தயாரின்றி நம்நாடு 1972 டிசம்பரில் நின்றுவிட்டது. இந்த நம்நாடு இதழை மீண்டும் வரை இதழாக 1978இல் கருணாநிதி ஆரம்பித்து தி.மு.க.வின் வார ஏடு என அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆயினும் வெற்றிகரமாக இதனைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

தி.மு.க. ஆட்சியைப்பிடித்தது. செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. ஆயினும் அது எந்த கொள்கையைப் பேசி வந்ததோ அதிலிருந்து விலகியது. நீர்த்துப் போனது என்பதற்கு அவ்வியக்கத்தின் இதழியல் தோல்விகளே சாட்சிகளாகின்றன.

இந்நிலையில் 1977இல் திரு.கே.பி. கந்தசாமி ''தினகரன்'' என்ற பெயரில் தி.மு.க.வை ஆதரிக்கும் ஜனரஞ்சகமான நாளேடு ஒன்றை ஆரம்பித்தார். இந்த பத்திரிகையின் துவக்கவிழாவை கருணாநிதியைக் கொண்டே நடத்தினார். இந்த நாளேட்டில் தி.மு.க. தலைவரின் செய்திக்குப் பெரும் முக்கியத்துவம் தந்ததோடு காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர் போன்றவர்களின் அறிக்கைகள், பேட்டிகள் போன்றவற்றையும் கே.பி.கந்தசாமி பிரசுரித்தார். தி.மு.க.வின் ஐம்பெருந்தலைவர்களாலும் கலைஞர் கருணாநிதியாலும் பெற முடியாத வெற்றியை கே.பி.கந்தசாமி பெற்றார். சுமார் மூன்று லட்சம் பிரதிகளைக் கடந்து விற்பனையாகுமளவுக்கு தினகரன் வீரியத்துடன் வெளியானது. தி.மு.க. ஆதரவு மனப்போக்குள்ளவர்களால் தான் தினகரனுக்கு இந்த வெற்றி கிடைத்தது. கட்சி செய்தியை மட்டுமின்றி ''தினத்தந்தி'' பாணியில் பொதுவான செய்திகளையும் குறையில்லாமல் படிக்கும் வாய்ப்பு தினகரன் வாசகர்களுக்கு வழங்கப்பட்டதே தினகரனின் வெற்றிக்கு காரணமாகும்.

கலைஞர் கருணாநிதி வல்லமை மிக்க எழுத்தாளராக, பேச்சாளராக, செல்வாக்கான தலைவராக அறியப்பட்ட நிலையிலும், சினிமாவின் செல்வாக்கு அவருக்கு சேர்ந்த போதிலும், திராவிட இயக்க சிந்தனை போக்குள்ள, தொண்டர்களும் திரளாக இருந்த நிலையிலும் முரசொலியை அவரால் இன்றுவரை வெற்றிகரமான இதழாகக் கொண்டுவர முடியவில்லை. இடையே, ''பெரும் பொருளாதாரச் சுமை ஏற்பட்டு விட்டது முரசொலியை நிறுத்தப் போகிறேன்'' என அவர் ஓர் அறிவிப்பு வெளியிட அதைத் தொடர்ந்து பெரும் நிதியை கட்சிக்காரர்கள் திரட்டித்தந்து முரசொலிக்கு புத்துயிர் தந்தனர். தி.மு.க. ஆட்சியில் முரசொலிக்கு கிடைத்த அரசு விளம்பரங்கள் அவ்விதழை தொய்வில்லாமல் தூக்கி நிறுத்தியது என்று சொல்ல வேண்டும்.

அறிஞர் அண்ணா தொடங்கி நெடுஞ்செழியன், அன்பழகன், சிற்றரசு, என்.வி.நடராஜன் போன்ற பலர் தொடங்கி நடத்திய இதழ்களும் விரல்விட்டு வாசிக்கும் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை வசீகரித்தன.

இவ்விதழ்கள் இரண்டனாவிலிருந்து அதிகபட்சம் நாலணாவரை விற்கப்பட்டன. அந்தக் காலத்தில் மக்களின் வாங்கும் சக்தி குறைவாயிருந்தது. பொதுவாக உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகளுக்குப் பிறகே மக்கள் அறிவுவளர்ச்சிக்கோ, தகவல்களை தெரிந்து கொள்வதற்கோ செலவிடுகிறார்கள்.

செய்தி பத்திரிகைகள் காசு செலவழித்து வாங்குபவர்களை விடவும் இரவல் பெற்று இலவசமாக படிப்பவர்களே அக்காலத்தில் அதிகமாக இருந்தனர். இதனால் குறைவான பிரதிகள் விற்பனையான நிலையிலும் ஒவ்வொரு இதழையும் ஐந்து முதல் 25 பேர் வரை படித்தனர்.

நீண்ட காலமாக கட்சிப் பத்திரிகையாக முரசொலியை நடத்தி வந்த கருணாநிதியும், முரசொலிமாறனும் கட்சி அல்லாத பத்திரிகையாக ஒரு ஜனரஞ்சகமாக வார இதழாக ''குங்குமத்தை'' கொண்டுவந்தனர். இந்த இதழுக்கு திராவிட இயக்க கருத்துக்களுக்கு நேர் எதிரிடை கருத்து கொண்ட பிராமண சமூகத்ததவரான சாவியை ஆசிரியராக்கினர். அதோடு வாசிக்கும் பழக்கம் அதிகமுள்ளவர்களைக் கொண்ட பிராமண சமூகத்தவர்களை வாடிக்கையாளர்களாக பெறவேண்டி அதற்கேற்றாற் போன்ற கட்டுரைகள், கதைகள் அதிகமாகப் பிரசுரிக்கப்பட்டன. குங்குமம் தி.மு.க.வின் சாயல் இல்லாத, திராவிட இயக்க படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிக்காத, பிராமண சமூகத்துப் படைப்பாளிகளுக்குப் பிரதான இடம் தந்த ஒரு வார இதழாக சுமார் ஒன்றரை லட்சம் பிரதிவரை விற்பனையானது. பிறகு அவ்வப்போது அதில் கட்சி அடையாளம் அதிகம் தெரியத் தொடங்கியதைத் தொடர்ந்து மெல்ல, மெல்ல விற்பனை சரிந்து 60,000 பிரதிகள் வந்து நின்றது. தற்போது சன்தொலைக்காட்சியில் சளைக்காமல் விளம்பரம் தந்து, இலவச பொருள்களை இதழோடு இணைத்து தந்து வெளிவந்தாலும் கூட குங்குமம் இதழ் ஆனந்தவிகடனையோ, குமுதத்தையோ விஞ்சமுடியவில்லை. இப்போதும் தி.மு.க.வின் மீது அனுதாப மனப்போக்குள்ளவர்களின் வெகுஜன ரசனைப் போக்கிற்குத் தீனிபோடும் பத்திரிகையாத் தான் குங்குமம் வெளிவந்து கொண்டுள்ளது.

எம்.ஜி.ஆர். இயக்க மற்றும் அ.தி.மு.க. இதழ்கள்

1954இல் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றங்கள் அவருடைய விருப்பத்தின்‘ல் அவருடைய ரசிகர்களால் உருவாக்கப்பட்டன. அப்போது தொடங்கி திராவிட இயக்க எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் தனக்கான ஆதரவாளர்களாக மாற்றும் முயற்சிகளை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர். செல்வாக்கின் உச்சத்தில் இருந்த 1961இல் ''மக்கள் திலகம்'' என்ற பெயரில் ஒரு இதழ் வெளியானது. ஆனால் எம்.ஜி.ஆர் படங்களைப் பெருவெற்றி பெற வைத்த அவரது ரசிகர்கள் அவரது பெயரில் வெளியான இதழுக்கு அப்படி ஒன்றும் ஆதரவு தந்துவிடவில்லை. பிறகு ''புரட்சி ஏடு எம்.ஜி.ஆர். ''மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இதயக்கனி எம்.ஜி.ஆர் போன்ற இதழ்கள் ஏதோ சுமாரான விற்பனையில் வெளியாகின. எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இதழ்கள் எதுவுமே பல்லாயிரக்கணக்கிலோ, லட்சத்தை தொடுமளவோ விற்பனையாகவில்லை. ஆனால்

''அலை ஓசை'' என்ற பெயரில் வேலூர் நாராயணன் அவர்களால் நடத்தப்பட்ட மாலை நாளிதழ் ஒரு தி.மு.க. எதிர்ப்பு இதழாக 30 ஆயிரம் பிரதிகளில் வெளிவந்து கொண்டிருந்தது. அவ்விதழ் எம்.ஜி.ஆர், தி.மு.க.வை விட்டு வெளியேறிய போது எம்.ஜி.ஆரை ஆதரிக்கும் நிலையினை எடுத்தது. ஆனால் அ.தி.மு.க. நாளிதழாக மாறவில்லை.

அலை ஓசை எம்.ஜி.ஆர் தரப்பு நியாயங்களை- எம்.ஜி.ஆரே சிந்திக்காத விதத்தில் - அழகான வாதங்களை அடுக்கி வெளியிட்டது. தி.மு.க. அரசின் முறை கேடுகளை தைரியமாக வெளியிட்டது. அந்நாளில் அலை ஓசை காட்டிய துணிச்சல் இதழியல் தளத்தில் வேறெவரும் காட்டியிராத ஒன்றாகும். இதனால் அலைஓசைக்கு அமோக ஆதரவு பெருகியது. இதழின் விற்பனை சுமார் ஒன்றரை லட்சம் வரை உயர்ந்தது.

அதற்கு மேலும் விற்பனை அனுகூலமிருந்த நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி எட்டியிராத அந்த காலகட்டத்தில் அச்சுக் கோத்து எடுத்துச் சென்று அச்சடிக்க வேண்டிய சூழலில் ஒரு லட்சத்து ஐம்பத்தாராயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிட முடியவில்லை. தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளுக்கு இருந்த அச்சகவசதி அலைஓசைக்கு அமைந்திருக்குமானால் அது பல லட்சம் பிரதிகள் விற்பனை கண்டிருக்கும்.

12 பைசாவிற்கு விற்பனையான மாலை நாளிதழ் அலைஓசைக்கு அதன் வாசகர்கள் காலையிலேயே கடைக்காரர்களிடம் காசு கொடுத்து பதிவு செய்து அடையாள அட்டை வாங்கிச் செல்லும் பழக்கமெல்லாம் இருந்துள்ளது. இவ்விதழ் கிடைக்காதவர்கள் ரூ.15 கொடுத்து இதனை பிளாக்கில் வாங்கியதாகவும் பேச்சு அடிபடுகிறது. அலை ஓசையிலிருந்து பிரிந்த ஆசிரியர் குழுவினர் டி.ஆர்.ராமசாமி, எம்.சண்முகவேல், சோலை போன்றோர் எம்.ஜி.ஆரை முழுக்க, முழுக்க ஆதரித்து ''மக்கள் குரல்'' என்ற மாலை நாளிதழை தொடங்கினர்.

அப்போது எம்.ஜி.ஆர் தன் தொண்டர்களிடம் ''அலை ஓசை படிக்க வேண்டாம். மக்கள் குரல் படியுங்கள்'' என பகிரங்கமாக சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆரின் பேச்சு அலைஓசையின் விற்பனையில் சுமார் பத்து சதவிகித பாதிப்பையே ஏற்படுத்த முடிந்தது. என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசி, முசிறி புத்தன் அவர்களால் நாடோடி மன்னன், மன்றமுரசு போன்ற எம்.ஜி.ஆர். ஆதரவு இதழ்கள் வெளிவந்தன. அவை பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

கலைஞர் கருணாநிதிக்கு ஒரு சாவி கிடைத்தது போல எம்.ஜி.ஆருக்கு மணியன் கிடைத்தார். இவர்கள் இருவரும் ஆனந்த விகடன் ஆசிரியர்களாக இருந்து அந்த வளாகத்திலிருந்து வந்தவர்கள். மணியன் 1978இல் ''இதயம் பேசுகிறது'' என்ற வார இதழை தொடங்கி அதனை ஒரு வெற்றிகரமான இதழாகக் கொண்டு வந்தார். இதயம் பேசுகிறது முழுக்க, முழுக்க எம்.ஜி.ஆர் ஆதரவு பத்திரிகையாக வெகுஜனதளத்தில் வெற்றி பெற்றது என்றே சொல்லவேண்டும். கருணாநிதியின் ''இந்துவிரோத பேச்சுகளாலும், பிராமண எதிர்ப்பு கருத்துகளாலும்'' அதிருப்தியுற்றிருந்த படித்த, உயர்மற்றும் நடுத்தரவர்க்கத்து வாசகர்களை நிரந்தரமாக எம்.ஜி.ஆர் வசம் கொண்டு சேர்த்ததில் மணியனுக்கும் அதற்கு அடுத்ததாக துக்ளக் சோவிற்கும் பங்குண்டு.

முதலில் ''சோ'' எம்.ஜி.ஆரின் அரசியலை அங்கீகரிக்காமல் அவரையும் அவரது அரசில் அறவையும் படுகிண்டல் செய்துவந்தார். ஆனால் 1980இல் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். அரசை அராஜகமாக கலைத்தபோது எம்.ஜி-ஆரை தீவிரமாக ஆதரிக்கத் தொடங்கினார் சோ.

எழுத்தாளர் வலம்புரிஜானின் வசீகரமான எழுத்தாற்றல் காரணமாக வார இதழான ''தாய்'' நல்ல வரவேற்பு பெற்றது. மணியனைவிடவும் எம்.ஜி-ஆர் புகழ் பாடுவதில் வல்லவரானாலும் வலம்புரிஜானின் இதழியல் அணுகுமுறைகளும் இலக்கியப் பார்வைகளும் ''தாய்''க்கு தனி முத்திரை பெற்றுத் தந்தது.

எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மட்டுமே ஒரு இதழின் வெற்றிக்கு முழுப் பங்களிப்பு ஆற்றிவிட முடியாது. முறையான நிர்வாகம் இல்லையேல் எவ்வளவு வரவேற்பு பெற்ற இதழும் காலப்போக்கில் காலாவதி ஆகிவிடும் என்பதற்கு ''தாய்'' மற்றும் ஆசிரியர் சாவியின் ''சாவி'' போன்ற இதழ்களே உதாரணம்.

1985இல் வலம்புரிஜான் ஆசிரியராக பொறுப்பேற்று ''தினச்செய்தி'' வெளியானது. 1991இல் திரைச்செல்வி என்று ஜெயலலிதா புகழ்பாட இரா. ரவிசங்கர் என்பவர் கொண்டு வந்த இதழும் வந்த சுவடு தெரியாமல் மறைந்தது.

வலிமையான எழுத்தாற்றலுக்கு பெயர் பெற்ற முரசொலியில் தயாரான அடியார், நீரோட்டம் என்ற பெயரில் நடத்திய நாளிதழ் ஒரு பேசப்பட்ட இதழாக முக்கியத்துவம் பெற்றது. பொருளாதார ரீதியில் இது அடியாருக்கு அனுகூலம் சேர்க்கவில்லை.

''இதயக்கனி'' என்ற பெயரில் 1974இல் எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்காக தொடங்கப்பட்ட திரை இதழ் நடுநடுவே நின்றுபோய் இப்போதும் எம்.ஜி.ஆரின் திரையுலகப் புகழ்பாடும் இதழாக எஸ்.விஜயன் என்பவரால் மாத இதழாக வந்து கொண்டுள்ளது.

1976இல் எம்.ஜி.ஆர். ''அண்ணா'' என்ற பெயரில் தன்னையே ஆசிரியராக அறிவித்து ஓர் நாளிதழைக் கொண்டு வந்தார். இதன் வெளியீட்டாளர் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி. முதலமைச்சரான பிறகு அண்ணாவின் ஆசிரியராக ராமன் என்பவரும் பிறகு இரவீந்திரன் என்பவரும் பொறுப்பேற்றனர். இந்த இதழ் அ.தி.மு.க.வினரிடம் அப்படி ஒன்றும் வரவேற்பைப் பெற்று விடவில்லை.

எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு 1988இல் எழுத்தாளர் பி.சி.கணேசனை ஆசிரியராகக் கொண்டு ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட நாளிதழ் ''நமது எம்.ஜி.ஆர்.'' இவ்விதழ் தொடர்ந்து வரமுடியாமல் இடையே சில காலம் நின்று போனது. 2001இல் பாவைச் சந்திரன் என்ற பிரபல இதழாளரை ஆசிரியராகக் கொண்டு நமது டாக்டர் எம்.ஜி.ஆர் என்று பெயர் மாற்றம் பெற்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.

இந்த இதழ் சாதாரணமாக கடைகளில் கிடைப்பதில்லை. அ.தி.மு.க. நிர்வாகிகளிலேயே பலர் இந்த நாளிதழ் படிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

எந்த ஒரு கொள்கையோ, தெளிவான பார்வையோ இல்லாமல் ஒரு இயக்கம் வெகுஜனத்தில் வெற்றிபெறலாம். ஆனால் அந்த இயக்கத்தின் பத்திரிகை அதன் தொண்டர்களை கூட வென்றெடுக்க முடியாது என்பதற்கு தி.மு.க., அ.தி.மு.க., வின் அதிகாரபூர்வ நாளேடுகளே சாட்சியாகும்.

இந்திய தேசிய இயக்க இதழ்கள்

இந்தியாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வருகையும், சுதந்திரத்திற்கான சிந்தனைகளும் பத்திரிகையின் தேவையை மக்களுக்கு உணர்த்தின. குறிப்பாக மகாத்மா காந்தியின் சத்யாக்கிரக, ஒத்துழையாமை இயக்கங்களும், அதற்கு எதிரான ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகளும் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை மக்களிடம் தூண்டின.

பொதுவாக கடவுள், மதம், புராண, இதிகாச சொற்பொழிவுகள், கதாகாலட்சேபம், தெருக்கூத்து, பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் இவற்றிலே தான் மக்கள் கவனம் குவிந்திருந்தது. வறுமை, பசி, நோய் இவற்றால் உண்டாகும் மரணங்கள், துன்பங்கள்.... போன்ற எல்லாவற்றக்குமே மக்கள் கடவுளிடம் மட்டுமே விடைதேடினார்கள். தாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியால் அடிமைப் படுத்தப்பட்டிருப்பதை பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு ஏற்படாததற்குக் காரணம் அவர்கள் ஏற்கெனவே வர்ணாசிரமத்தின் அடிப்படையிலும், ஜமீன்தாரர்கள், மிராசுதார்களுக்குக் கீழேயும் ஓர் அடிமை வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்ததுதான்! இந்தியாவில் பெரும்பாலான மன்னர் ஆட்சி சமஸ்தானங்களும், நிலச்சுவான்தார்களும் ஆங்கிலேயர்களின் அதிகாரத்திற்கு அடிபணிந்து தங்களுக்கு கீழிருக்கும் மக்களை மேன்மேலும் ஆங்கிலேயர்களுக்கும் சேர்த்துச் சுரண்டிக் கொடுமைப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் வெளிநாடு சென்று படித்து வந்த இளந்தலைமுறையினரால் தான் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், மக்களாட்சி போன்ற சிந்தனைகள் மெல்ல, மெல்ல துளிர்விட்டன. இந்த சிந்தனைகளை மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் நோக்கம் தான் இந்தியாவில் இதழியல் துறைக்கான இயக்குசக்தியாக விளங்கிற்று.

இதனால்தான் மக்களை வழி நடத்தும் தலைவர்களாக இருந்த அனைவருமே இதழியலை ஒரு தவிர்க்க முடியாத, அத்தியாவசியமான ஆயுதமாகக் கையிலெடுத்தனர்.

அன்னபெசன்ட் அம்மையார், உ.வே.சு.ஐயர், சே.ப.நரசிம்மலு, மகாத்மா காந்தி, திலகர், ராஜகோபாலச்சாரியார், சுப்பிரமணியசிவா, வ.உ.சிதம்பரனார், திரு.வி.க. மறைமலை அடிகள், ப.ஜ“வானந்தம், ம.பொ.சிவஞானம், ஈ.வெ.ராமசாமி..... போன்ற பல தலைவர்கள் பத்திரிகைகளை நடத்தினார்கள். இயக்கங்கள் வளர்வதற்கு இயக்கக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்கு இயக்கத்திலுள்ளோரின் உறவுகளைப் பலப்படுத்துவதற்கு பத்திரிகைகள் பயன்பட்டன. இயக்கத் தலைமைக்கும் தொண்டர்களுக்குமான பலமான பாலமாக பத்திரிகைகள் விளங்கின.

ஆனால் இவ்வித இயக்க பத்திரிகைகளின் வரலாற்றைப் பார்த்தால் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை நஷ்டமாகவே நடத்தப்பட்டுள்ளன. இந்த நட்டத்தின் காரணமாக தொடர்ந்து நடத்தவியலாமல் பெரும்பாலானவை நின்று போயுள்ளன. ஆட்சி அதிகார பலம் கைகொடுத்தும் கூட பல பத்திரிகைகள் தொடர்ந்து வரமுடியாமல் தள்ளாடி நின்று போயின. ஆட்சி அதிகாரம், செல்வாக்கு காரணமாக சில பத்திரிகைகள் தொடர்ந்து லாபமில்லாவிட்டாலும் அல்லது வாசகர் பலம் இல்லாவிட்டாலும் இன்றும் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஜி.சுப்பிரமணிய ஐயரால் நடத்தப்பட்ட ''சுதேசமித்திரன்'' தான் முதன் முதல் காங்கிரஸ் என்ற கட்சியை - படித்தவர்கள் மட்டுமே அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டால் போதும் என் நினைத்திருந்த கட்சியை - பாமர மக்களிடம் கொண்டு சேர்த்து காங்கிரஸ் கட்சியில் சராசரி மக்களையும் சங்கமிக்க வைத்தது. எவ்வளவு சிறப்பாக வெளிவந்த போதிலும் சுமார் ஆயிரத்து சொச்சம் பிரதிகள் வரை மட்டுமே விற்பனை கொண்ட சுதேசமித்திரன் தொடர்ந்து வரஇயலாமல் துவண்டுபோனது.

பாரதியார் என்ற அக்னிகுஞ்சு சுமார் 18 ஆண்டுகாலம் இதழியல் துறைக்குத் தன்னையே அர்ப்பணித்து, அளப்பரிய பங்களிப்புகள் தந்தபோதிலும், பொருளாதார ரீதியில் இதழியல் பணிகள் பாரதியாருக்கு லாபத்தை குவிக்கவில்லை.

தன் முழு ஆற்றலையும் அர்ப்பணித்து பாரதியார் நடத்திய ''இந்தியா'' பத்திரிகை வாயிலாகத்தான் அவர் கவிதைகள் பட்டி தொட்டியெங்கும் பரவின. ஆயினும் ஆயிரம் பிரதிகள் என்ற இலக்கையே அடைய முடிந்தது.

பாரதியார் காலத்திற்குப் பிறகு தான் மகாத்மாகாந்தியின் வெகுஜனப் போராட்டங்கள் வீரியம் பெற்றன. உப்புச் சத்தியாகிரக போராட்டமும். இரண்டாம் உலகப்போரும் தான் பத்திரிகைகளின் விற்பனையை அதிகப்படுத்தின.

காந்தியின் தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், மது ஒழிப்பு போராட்டங்கள் மக்களிடையே பரவவும், வரவேற்புப் பெறவும் வெற்றிபெறவும் பத்திரிகைகளே பெரிதும் பங்காற்றின.

விடுதலைப் போராட்டத்தின் போது சுதந்திரத்திற்கான லட்சியங்கள் இதழியலின் இயங்கு சக்தியாயின. இதில் அதிகபட்ச வெற்றியை ஈட்டிய பத்திரிகை ''சுதந்திர சங்கு'' (1930-38). இது ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையைத் தொட்ட முதல் தமிழ்ப் பத்திரிகையாகும். எனினும் லட்சியத்தில் காட்டிய தீவிரத்தை பத்திரிகை நிர்வாகத்தில் சிறிதும் காட்டாததாலும் பத்திரிகையில் வந்த லாபமனைத்தையும் சற்றும் முன் யோசனையின்றி சுதந்திர போராட்டத்திற்கே அர்ப்பணித்துவிட்டதாலும் பத்திரிகை ஒரு கட்டத்தில் நிற்க வேண்டியதாயிற்று.

திராவிட இயக்கங்களுக்கு எதிரான கருத்துகளை பலப்படுத்தும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட ''தேசபக்தன்'' நாளேட்டிற்கு ஆசிரியர் பொறுப்பேற்றவர் திரு.வி.க.வே சொந்தமாக நடத்திய இதழ் ''நவசத்தி''. 21 ஆண்டுகள் இவ்விதழை ஓரளவு பாதிப்பில்லாமல் பக்குவமாக கொண்டுவந்த திரு.வி.க. அதற்குப் பிறகு இராசாமணி அம்மையாரிடம் ஒப்படைத்துவிட்டார். திரு.வி.க.வின் தேசபக்தனில் தயாரானவர்களே வெ.சாமிநாதசருமாவும், கல்கியும். தேசபக்தனின் எழுத்து நடைக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஒத்த வராமலே கல்கி அதிலிருந்து வெளியேறினார். சமஸ்கிருதக் கலப்பும் ஆங்கிலக் கலப்பும் மிகுந்திருந்த அன்றைய ஊடகங்களுக்கு ஒரு மாற்று ஊடகமாக நவசக்தி திகழ்ந்தது. டாக்டர் பி.வரதாராஜூலுவின் ''தமிழ்நாடு'' முதலில் வார இதழாக வெளியாகி பிறகு வெற்றிகரமான நாளிதழாக பரிமாணம் பெற்றது. காங்கிரஸ் கொள்கைகளை தீவிரமாக ஆதரித்த இவ்விதழ் அரசாங்கதோடு தீவிரமான மோதல் போக்கை கொண்டதால் பல சிரமங்களுக்கு ஆளானது.

இந்நிலையில் டாக்டர் பி.வரதராஜூலு காங்கிரசில் பிராமண ஆதிக்கம் நிலவுவதாகக் குமுறி காங்கிரசிலிருந்து விலகி காங்கிரசை விமர்சிக்கத் தொடங்கினார். இதனால் இதழின் விற்பனையில் பலமான சரிவு ஏற்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தனக்கென்று ஒரு நாளிதழ் வேண்டுமென்று கருதியது. இதற்காக அன்றைய காங்கிரஸ் ஆந்திரகேசரி பிரகாசம் ''சுயராஜ்யா'' என்ற இதழை வ.ரா.சுத்தானந்தபாரதியார், எம்.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோரை ஆசிரியர் குழுவில் நியமித்து வெளிக்கொண்டு வந்தார்.

இவ்வளவு சிறப்பான ஆசிரியர் குழு இருந்த நிலையிலும் அன்றைய காங்கிரசில் நிலவிய கோஷ்டிபூசல்கள் மற்றும் நிர்வாகத் தவறுகள் காரணமாக சுயராஜ்யா தொடர்ந்து வெளிவரவில்லை. பேனா மன்னர் என புகழப்பட்டவர் டி.எஸ்.சொக்கலிங்கம். தீவிர தேசபக்தர். ''காந்தி'' (1931) என்ற பெயரில் காலணா விலையில் இவர் ஒரு இதழ் கொண்டு வந்தார். இவ்விதழ் பெரிதும் பேசப்பட்டது ஆயினும் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அவர் தினமணி ஆசிரியராகி தினமணிக்குப் புகழ்சேர்த்தார்.

தினமணி நிர்வாகத்துடன் கருத்து வேறுபட்டு வெளியேறி இவர் ''தினசரி'' என்ற நாளிதழ் (1944) தொடங்கினார். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா போன்றவர்களை துணை ஆசிரியர்களாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராசர் தீவிரமாக ஆதரித்த தினசரி மிகச் சிறப்பான நாளிதழாகப் பேசப்பட்ட போதிலும் பொருளாதார ரீதியில் வெற்றிகாண முடியாமல் நின்றுவிட்டது.

இராம்நாத் கோயங்காவால் நடத்தப்படட தினமணி சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்த நாளிதழ். ஆயினும் அரசங்கத்தை தீவிரமாக பகைத்துக் கொள்ளாமல், நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, சிறந்த நிர்வாக ஆளுமையுடன் செயல்பட்டதால் தொடர்ந்து தொய்வில்லாமல் வந்தது.

டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற பத்திரிகை உலக ஜாம்பவான்கள் தினமணி ஆசிரியர் குழுவிலிருந்த முக்கியமானவர்களோடு வெளியேறிய நிலையிலும் தினமணி சமாளித்துவிட்டது. சொக்கலிங்கத்தால் உருவாக்கப்பட்ட ஏ.என்.சிவராமன் தினமணியை தூக்கி நிறுத்திவிட்டார். எழுத்தாளர் கல்கி ஆனந்தி விகடனில் அச்சாணியாக கருதப்பட்டவர். அவர் விகடனில் எஸ்.எஸ்.வாசனுடன் கருத்து வேறுபட்டு வெளியேறினார். ஆயினும் சிறந்த நிர்வாகியான எஸ்.எஸ்.வாசன் ஆனந்த விகடனை எந்த சேதாரமும் இல்லாமல் மேன்மேலும் வெற்றிகரமான இதழாகக் கொண்டுவந்தார்.

கல்கி அவர்கள் சதாசிவத்துடன் இணைந்து ராஜாஜி ஆதரவுடன் ''கல்கி'' வார இதழ் தொடங்கினார். கல்கி எழுத்துப் பணியையும், சதாசிவம் நிர்வாகப்பணியுமென பிரித்துக் கொண்டனர். கல்கி இதழ் நின்று நிலைத்துவிட்டது. ஆனால் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இன்றுவரை சுமார் 40,000 பிரதிகளோடு வெளிவந்து கொண்டிருக்கிறது.

கவியரசு கண்ணதாசன் தி.மு.க. விலிருந்து வெளியேறி காங்கிரசில் இருந்த நேரம் ''கடிதம்'' என்ற நாளிதழை சிறிதுகாலம் நடத்தினார். காங்கிரஸ் கட்சியில் ''நவசக்தி'' என்ற பெயரில் இயக்க இதழ் நடத்தப்படட்து. காமராசர் காங்கரஸ் தலைவராக இருந்த கால கட்டத்தில் பெரும் தொண்டர் படையுடனும், ஜெயகாந்தன், பி.சி.கணேசன், சின்னக்குத்தூசி போன்ற எழுத்தாளர்கள் பலத்துடனும் பரபரப்பாக இவ்விதழ் வெளிவந்தது. தி.மு.க.விற்கும் சவால்விடும் அனல்பறக்கும் செய்தி, விமர்சனக்கட்டுரைகள், இதில் வெளியாயின. எனினும் சுமார் 30,000 பிரதிகளே நவசக்தி விற்பனை கண்டது. தொடர்ந்து லாபகரமாக இதை நடத்தமுடியவில்லை. நாத்திகம் ராமசாமி அவர்களை நவசக்தியை நடத்தும்படி கூட காமராஜர் கேட்டுப் பார்த்தாரம். நாத்திகம் இராமசாமி நவசக்தி ஆசிரியர் குழுவோடு தனக்கு ஒத்துப்போகாது என்று மறுத்துவிட்டாராம்.

1980களின் இறுதியில் மூப்பனாரும், ப.சிதம்பரமும் ஜெயகாந்தனை ஆசிரியராக்கி தினசரியைக் கொண்டுவந்தனர். இந்த இதழும் மிக சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. இறுதியில் இதில் பணியாற்றியவர்களுக்கு கூட சம்பளம் தரவழியில்லாமல் நிறுத்தப்பட்டு விட்டது.

1990களின் இறுதியின் மீண்டும் நவசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தார் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கோபண்ணா. அப்போதும் இதன் விற்பனையை ஐயாயிரம் பிரதிகளுக்குமேல் அதிகரிக்க முடியவில்லை! இப்படியாகக் பலமான இயக்கங்களாயிருந்தாலும் பிரபலமான எழுத்தாளர்களாயிருந்தாலும் அவை இதழியல் விற்பனைக்கு பெரிய பங்களிப்பு ஆற்றிவிட இயலாது என்பதே யதார்த்தமான உண்மையாகவுள்ளது.

வெகுஜனமக்களின் ரசனையை, மனப்போக்குகளை அனுமானிக்கத் தெரிந்த ஆசிரியர் தலைமையுக், உறுதியான நிர்வாக பலமும் சேர்ந்து அமையும் போதுதான் இதழியலின் வெற்றி பிரகாசமடைகிறது. இந்த இரண்டில் எந்த ஒன்று பலவீனமென்றாலும் வெற்றி கேள்விக்குறியே!

நன்றி: தமிழர் கண்ணோட்டம்

தமிழ் மரபில் அழகியல் - தி.சு. நடராசன்

அழகு என்பதற்கு வரையறைகள் ஆயிரம் உண்டு. அவற்றில் மிக முக்கியமான ஒன்று, ருசிய அறிஞர் செர்னிஷேவ்ஸ்கி கூறுவது: ''அழகே, வாழ்க்கை (beauty is life) இது தான் அழகு பற்றிய உண்மையான வரையறை; அழகான பொருள் என்பது, ஒரு மனிதனுக்கு வாழ்க்கையை நினைவுபடுத்துவதாகும்.''

இந்த வரையறை, அழகுக்கும், வாழ்க்கைக்கும் மற்றும் அழகுக்கும் மனிதனுக்கும் உள்ள நெருக்கத்தைக் குறிப்பிடுகிறது. இந்த அழகு, அடிப்படையில் ஒரு பண்புநிலையாகும். அழகைச் சுவைப்பது அழகின் ஆற்றலில் ஈடுபடுவது, மனிதனுடைய அடிப்படையான ஓர் உந்துதல் ஆகும். சூழ்நிலை, வயது, வர்க்கம் முதலியவற்றின் காரணங்களினால் அழகைக் காண்பதிலும் அதனைப் புரிந்துகொள்வதிலும், அதனோடு உறவு கொள்வது அல்லது செயல்படுத்துவதிலும் வேறுபாடுகள் உண்டெனினும், ஏதேனும் ஒரு வகையில் எல்லா மனிதர்களும் அழகில் ஈடுபடவே செய்கிறார்கள். எனவே, இது மனித உணர்வு நிலையில் முக்கியமான இடம் பெறுகிறது.

இது, மனிதன், இயற்கை மற்றும் அம்மனிதன் படைத்த படைப்புக்கள் எனும் இவற்றில் காணப்படுகின்ற ஒரு சாராம்சமான பண்பு; அது பற்றிய ஓர் உணர்வு நிலை; பொருள்களின் ஒழுங்கமைவுகளிலும் அவற்றின் புலப்பாட்டுத் திறன்களிலும் மற்றும் அவை எதிர் கொள்ளப்படுகின்ற முறைகளிலும் காணப்படும் ஒரு நேர்த்தி, ஒரு பொருள், தன்னை அழகினால் வெளிப்படுத்திக் கொள்கிறது; அழகினால், பரஸ்பரம் தொடர்பு கொள்கிறது; ஒரு பொருளில் இயல்பாக உள்ள தன்மையாக மட்டுமின்றி, அதனைக் காண்போர் அல்லது கேட்போரின் உணர்வினையும் சார்ந்ததாக அமைவது அழகு. இது, இயற்கையின் உள்ளார்ந்த ஓர் இயல்பாக இருந்தாலும், மனிதனுடைய மனதினாலும் உழைப்பினாலும் படைப்பாற்றலினாலும் உருவாகின்ற கலையில் இது ஒரு பெரும் சக்தியாக விளங்குகின்றது. பல சமயங்களில், கலை என்பதே அழகு என்பதைக் குறிப்பதாகவும் அமைகிறது.

அழகியல் (Aesthetics) இந்த அழகை இன்னது, இத்தகையது என்று கண்டறிந்து விளக்குகிறது. அழகு எவ்வாறெல்லாம் இருக்கிறது என்பதைவிட, எவ்வாறெல்லாம் அது பற்றிய பார்வைகளும் கருத்தியல்களும் இருக்கின்றன என்பதில் அதிகம் கவனம் செலுத்துவது, அழகியல். பொதுவாக இவ்வழகியல், கலைகளின் மீது கட்டமைக்கப்படுகின்ற ஒரு கருத்தமைவு ஆகும். மேலும், ஓவியம், இசை, ஆடல் முதற்கொண்டு இலக்கியம் வரை பலவிதமான கலைகளுக்கும் அழகியலே, ஆதாரமான சக்தியாக விளங்குகிறது. ஆதலின் இவ் அழகியல், கலை - இலக்கியக் கோட்பாடாகவே கொள்ளப்பட்டு வருகிறது. மேலை நாடுகளில், இலக்கியக் கோட்பாடு பற்றி எழுதுகிறவர்களும், அதே மாதிரி, அழகியல் கோட்பாடும் அதன் வரலாறும் பற்றி எழுதுகிறவர்களும் அரிஸ்டாட்லின் கவிதையியலிலிருந்தே (Poetics) தொடங்குகிறார்கள்; அதுபோலவே, வடமொழியில் இத்தகைய முயற்சிகளில் ஈடுபடுகிறவர்கள், கலை இலக்கியக் கோட்பாட்டையும் அழகியலையும் ஒன்றெனவே கொண்டு எழுதுகிறார்கள். வரலாற்று நிலையில் தமிழிலும், அழகியலையும் கலை - இலக்கியக் கோட்பாட்டையும் காண்பதற்குரிய மூலாதாரங்கள் பொதுவானவையாகவே இருக்கின்றன: தொல்காப்பியம், சங்க இலக்கியம், சிலம்பு.

மேலும், இது தொடர்ந்து பல சிந்தனையாளர்களால், தத்துவவியலின் (Philosophy) ஒரு பகுதியாகவும் விளக்கப்படுகிறது. ஏனெனில், இது முக்கியமாக:-

1) மனிதனுக்கும், அதாவது, அவனுடைய உணர்வு நிலைக்கும் அவனுக்குப் புறவயமாக இருக்கின்ற பொருள்களுக்கும் அழகு என்பதை மையமாகக் கொண்ட - உறவுகளையும் அந்த உறவுகளின் விளைவுகளையும், வெளிப்பாடுகளையும் பேசுகிறது.

2) ஒரு நாகரிகம், ஒரு மரபு என்பதன் வெளிப்பாடாக அழகியல் இருக்கிறது; அந்த நாகரிகத்தின் ஒரு அடையாளமாக இருக்கிறது.

3) மனிதனுடைய அடிப்படை ஆற்றலாகிய ஆக்கத்திறனை / படைப்புத் திறனை (Creative energy) புலப்படுத்துவதாக அது இருக்கிறது.

4) அழகியல் என்பது, ஒரு வாழ்நெறியும் ஆகும்.

தமிழில் அழகியல் கோட்பாடு சொல்லிக் கொள்ளும் வகையில், இதுகாறும் உருவாக்கம் பெறவில்லை. ஆனால் இதற்குரிய மூலாதாரங்கள் (sources) தமிழ் மரபில் நிறையவே இருக்கின்றன; பரவலாகவும் தொடர்ச்சியாகவும் அவை காணக் கிடைக்கின்றன. தொன்மை நூலாகிய தொல்காப்பியம், ஒரு முக்கியமான ஆதாரமாகும். அது, முக்கியமாக, மொழியின் இலக்கணம் பற்றிப் பேசுவதாகவே அறியப்படுகிறது என்றாலும், அதன் நோக்கங்களில் / வழி முறைகளில், முக்கியமானது, கவிதைக்கோட்பாடு (poetics) பற்றிப் பேசுவதாகும், கவிதைக் கோட்பாடு என்பது அழகியலின் அடிப்படையான பகுதி; அதனுடைய தொடக்க காலக் கருத்தமைவு, கிரேக்கம், சமஸ்கிருதம் உள்ளிட்ட தொன்மையான செவ்வியல் மொழிகளில் எல்லாம், அவ்வாறே அது அறியப்பட்டும் வந்திருக்கிறது. தொல்காப்பியத்தின் பின், பிற இலக்கண நூல்கள் தொல்காப்பிய மரபைப் பின்பற்றினாலும் அவற்றுள் பல மாற்றங்கள் உண்டு. மேலும் முக்கியமாகச் சிலப்பதிகாரத்தின் அரும்பதவுரைகாரரும் அடியார்க்கு நல்லாரும் தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் உள்ளிட்ட பல உரையாசிரியர்கள், கலை இலக்கியக் கோட்பாடு சார்ந்த அழகியல் சிந்தனைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளனர். அடுத்து, சங்க இலக்கியப் பாடல்களும் சிலம்பும் (முக்கியமாக அதன் அரங்கேற்றுகாதை) தமிழ் அழகியல் மரபைக் கட்டமைப்பதில் முக்கியமான ஆதாரங்களாக விளங்குகின்றன. கம்பன் உள்ளிட்ட பிற இலக்கியங்களிலும் பலதரவுகளைக் காண முடியும்.

நூல்கள் வழியாகக் கிடைக்கும் ஆதாரங்கள் ஒருபக்கம் இருக்கத், தமிழர் தம் இசைமரபு, ஆடல் அல்லது நாட்டியமரபு, குடைவரைக் கோயில், மகாபலிபுரம், தஞ்சை, தாராசுரம், மதுரை, திருவில்லிபுத்தூர் முதலியவற்றின் கோயில்கள், கோபுரங்கள், சிற்பங்கள் முதலியனவும் மற்றும் நடராசர் சிலை வடிவம், சித்தன்னவாசல் ஓவியம் முதலியனவும் தமிழர்தம் அழகியலை அறிந்து கொள்ளவும் கட்டமைக்கவும் உதவும் மூலாதாரங்களாகும்.

வளமான மூலாதாரங்களும் தரவுகளும் இருந்தாலும், அவற்றிலிருந்து அழகியலைக் கட்டமைக்கின்ற முயற்சி, தமிழில் மிகவும் குறைவு. ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் ஆனந்தகுமாரசாமியும் (Dance of Siva) விபுலானந்த அடிகளும் (யாழ் நூல்) இத்துறையில் குறிப்பிடத்தக்க முன் முயற்சிகள் எடுத்தனர். பின்னர், மயிலை சீனி வேங்கடசாமி, தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் பற்றிய பொதுவான வரலாற்றுக் குறிப்புக்களைத் தந்தார். ஆனால், தொடர்ந்து பல பரிமாணங்களையும் பல தளங்களையும் கொண்ட தமிழ் அழகியலை ஆராயவும் கருத்தியல்களை உருவாக்கவும் போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

இக்கட்டுரை, தமிழ் அழகியலைக், கட்டுரை என்ற வரையறுக்கப்பட்ட எல்லையிலிருந்து, முக்கியமான சில பண்புகளையும் சில பகுதிகளையும் வரைந்து காட்டுவதோடு அமைதியடைகிறது. மேலும் இதில் ஆராய்வதற்கு நிறைய இடமிருக்கிறது. தேவையிருக்கிறது - என்பதை இங்கே சொல்லித்தர வேண்டியதில்லை.

அழகியல் கோட்பாட்டைக் கட்டமைப்பதற்குத் திருக்கோவையார் என்ற சைவ இலக்கியப் பனுவலுக்கு அமைந்துள்ள உரையின் தொடக்கம் சிறந்த தளம் அமைக்கின்றது. திருக்கோவையார் என்ற பெயரிலுள்ள ''திரு'' என்ற அடைமொழிக்கு விளக்கம் சொல்லுகிற நோக்கில் அது அழகு பற்றிய சிந்தனையை முன் வைக்கிறது. ''திரு'' என்பது அழகே எனச் சொல்லி அதற்கு ஏர், எழில், வனப்பு முதலிய பல சொற்கள் வழங்குகின்றன என்று சொல்லி, அழகுக்கு விளக்கம் தருகிறது; ''திரு என்பது கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கம் என்றது அழகு. இஃதென் சொல்லிய வாறோயெனின், யாவனொருவன் யாதொரு பொருளைக் கண்டானோ, அக்கண்டவற்கு அப்பொருள் மேற்சென்ற விருப்பத்தோடே கூடிய அழகு. அதன் மேல் (அவற்கு) விருப்பஞ் சேறல், அதனிற் சிறந்த உருவும் நலனும் ஒளியும் எவ்வொன்றானும் பிறிதொன்றிற்கில்லாமையால், திரு என்பது அழகுக்கே பெயராயிற்று''. கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்ற தொடரை, மேலும் சில வரிகளில் திரும்பவும் சிலமுறை, கையாளுகிறது, அந்த உரை.

இந்த உரையிலிருந்து நமக்குக் கிடைப்பது:-

1) அழகு பற்றிய பொது வரையறை, மற்றும்

2) அழகு, இயங்கியல் (Dialectics) தன்மை கொண்டது என்பது.

3) அது, உணர்வு நிலையோடும் விருப்பத்தோடும் சார்புகொண்டது என்பது.

திருக்கோவை உரை, அழகிற்கு மூன்று ஆதாரங்கள் (premises) அல்லது பரிமாணங்கள் உண்டு என்கிறது. அவை, உரு, நலன், ஒளி என்பன. இவற்றுள் உரு என்பது (Shape and measurement) விகிதாச்சார முறையில் உறுப்புக்கள் அல்லது பகுதிகள் ஒழுங்கமைவு பெற்றிருக்கின்ற ஒரு பொருளின் தோற்றமுழுமையைக் குறிக்கின்றது. மேலும், இந்த உரு, (உருவாதல், உருக்கொள்ளுதல்) ஒருவகையான செயல்நிலையையும் விளைவையும் குறிப்பிடுகின்றது. அவ்விதத்தில், ஏனைய இரண்டு ஆதாரங்களான நலனும் ஒளியும், இந்த உருவின் வெளிப்பாடுகளாகவும், பயன்பாடுகளாகவும் இருப்பவை ஆகும். அடுத்து, நலன் என்பது, பொருளின் இசைவான ஒழுங்கமைவின் (harmony) சிறப்பினைக் குறிக்கின்றது. பொருத்தம் அல்லது தகவுடைமையையும் (appropriateness) மற்றும் ஏற்புடைமையையும் (relevance) குறிக்கின்றது. இனி, ஒளி (light, radiant energy that stimulates visual perceptions) என்பது, ஒரு பொருளின் கட்புலனாகும் தோற்றத்திறனையும் உணர்வோரின் உணர்வினை ஈர்க்கின்ற தன்மையினையும் குறிக்கின்றது. ஒளி இன்றேல் காட்சி ஏது? மேலும் ஒளி, தெளிவையும், பிற பண்புகளின் ஒரு மொத்தப் பயனை (effect)யும் குறிக்கின்றது.

இவ்வாறு, அழகு என்பது உரு, நலன், ஒளி ஆகிய மூன்று ஆதாரங்கள் கொண்டு அமைகிறது; தன்னுடைய இந்த மூன்று பண்புகளின் வழி, அது காண்போரையும் கேட்போரையும் விருப்பங் கொள்ளச் செய்கிறது. இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்திய தத்துவஞானியும் அழகியலாளருமாகிய மார்சிலோ ஃபிசிநோ (Marsilo Ficino) உலகின் இருத்தலுக்கு, அழகியல் முறையிலான ஒரு விளக்கம் தருவார். அது போது, அவர், ஒரு பொருளின் அழகுக்குக் காரணமாக மூன்று ஆதாரங்களைக் குறிப்பிடுகிறார்: கவர்ச்சி, விருப்பம், நிறைவு (attraction, desire, fulfilment) என்பன அவை. இவை திருக்கோவை உரைகளும் பண்பு நிலைகளோடு ஒத்துப் போகின்றன என்பது இங்கே அறியத்தகுந்தது.

அடுத்து, அவ் உரை வலியுறுத்திக் கூறுகின்ற கருத்து நிலையின்படி - அழகு என்பது ஒரே நேரத்தில் பொருள் பற்றியதும் அப்போது பார்ப்பவன் உணர்வு பற்றியதும் ஆகும் என்பது. அதாவது, அழகு என்பது தனியாக ஒரு பொருளின் பண்போ அல்லது பார்ப்பவரின் அகவயமான உணர்வு நிலையோ அல்ல. ஒரு பொருள் அப்பொருளைக் காண்பது - அதன் மேற்செல்லும் விருப்பம். அழகு இவ்வாறு அவ்வுரையாசிரியரால் விளக்கப்படுகிறது. புறவயமான பொருளும் (Object), அகவயமான உணர்வும் (Subject) இணைந்த ஒரு பரஸ்பர செயலுறவே அழகுக்கு அடிப்படையென்பது, இயங்கியல் சார்ந்த கருத்து நிலையேயாகும். அழகியலின் தளம், இந்த அடிப்படையிலிருந்து எழுப்புவதற்குரியது.

இத்தகைய கருத்து நிலை, தமிழில் பல்வேறு ஆசிரியர்களிடம் காணப்படுகின்றது. பொருளுக்கும், பொருட் புலப்பாட்டிற்கும், உணர்வுக்கும் உள்ள உறவுகளின் இன்றியமையாமையைத் தொல்காப்பியரும் காட்டியிருக்கிறார். ஒப்பு, உரு, சாயல், ஏர், எழில், ஆகியவை அழகியல் பண்புகள்; கற்பு, நாண், மடன் ஆகியவை சமூக மதிப்புக்கள்; வெறுப்பு, நோய், வேட்கை, நுகர்வு ஆகியவை மன உணர்வுகள். இவை, அவர் கூறுவன. இந்தச் சொல்வழக்குகள் எல்லாம், கட்புலனாகக் காட்டக் கூடிய பொருட்கள் அல்ல; (அதாவது தூலமானவையல்ல) என்றும் நாட்டிய (நாட்டப்பெற்ற) மரபின் நெஞ்சு கொள்வதற்குரியனவே என்றும் அவர் சொல்லுகிறார். குறிப்பாக ஒப்பு, உரு, சாயல், ஏர், எழில், ஆகியவற்றை ''நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள'' என்று அவர் சொல்லியிருப்பதும் இன்னொரு சூழலில், சொல்லின் பொருள்படு தன்மை கூறவந்த அவர், ''உணர்ச்சிவாயின் உணர்வோர் வலித்தே'' என்று சொல்லியிருப்பதும் இங்கே ஒருசேரக் கவனத்திற்குரியன.

இவ்வாறு, காண்போரின் விருப்பத்தோடு கூடிய உணர்வு நிலை கொண்டு, இயற்கை, மற்றும் செய் கலைகள் முதலியவற்றின் உரு, நலன், ஒளி ஆகிய பண்புகளின் ஆற்றலாக அழகு வெளிப்படுகின்றது. இத்தகைய அழகினைக் கண்டு, ஆராய்ந்து அது பற்றிய கருத்தமைவுகளைக் கட்டமைக்கிறது அழகியல்.

அழகின் தளங்களில், இயற்கை, புராதனமானது; எங்கெணும் நிறைந்து கிடப்பது; சக்தி நிறைந்தது. இயற்கையின் குழந்தையாக, இயற்கையோடு வளர்ந்தவன், மனிதன்; எனவே அதனுடைய ஆற்றலும் அழகும் மனிதனுடைய புறவய வாழ்க்கையிலும் அகவய உணர்வுகளிலும் படிந்து கிடக்கின்றன; அவற்றில் தொடர்ந்து அவன் ஈடுபடுகிறான்; தொடர்ந்து அவற்றோடு எதிர்வினை கொள்கிறான். விதம் விதமாய் அழகைப் பொதிந்து வைத்திருக்கும் இயற்கை, பாரதிதாசன் வியந்து சொன்னது போன்று,

விரிந்த வானே வெளியே - எங்கும்

விளைந்த பொருளின் முதலே

திரிந்த காற்றும் புனலும் - மண்ணும்

செந்தீ யாவும் தந்தோய்

தெரிந்த கதிரும் நிலவும் - பலவாச்

செறிந்த உலகின் வித்தே

புரிந்த உன்றன் செயல்கள் - எல்லாம்

புதுமை! புதுமை! புதுமை!

உலகின் வித்தாக - எல்லாம் புதுமையாக - இருக்கிற, இந்த இயற்கை, ஆற்றலுக்கும் அழகுக்கும் ஊற்றுக்கண்ணாய் இருக்கிறது. குறிப்பாக, உற்பத்திக் கருவிகளும் மனித உழைப்புத் திறனும் வளர்ச்சிப் பெற்றிருக்காத காலப் பகுதிகளில் இயற்கையின் ஆற்றலே மனித உணர்வின் ஊற்றுக்கண்ணாக இருந்தது; தொடர்ந்து, தொழில் குழும முதலாளித்துவம், சந்தைப் பொருளாதாரம், உலகமயமாக்கல், முதலியவற்றின் காரணமாக இயற்கையையும் சுற்றுப்புறச் சூழல்களையும் சீரழிக்க முயற்சிகள் நடந்தாலும் இன்னும் இயற்கையின் ஆற்றலும், உள்பொதிந்து கிடக்கும் அதன் அழகும் அவற்றின் தேவையும் மனித குலத்தினால் உணரப்பட்டு வருகிறது.

இயற்கை, ஆற்றலுடையதாகவும் அழகுக்குரியதாகவும் தமிழ் மரபில் தொடர்ந்து வருணிக்கப்பட்டு வந்திருக்கிறது. செடி, கொடி, மரம், அவற்றின் பூ, இலை, கனி; ஆறு, அருவி, ஏரி, கடல் முதலிய நீர்நிலைகள்; மான், புலி, யானை, மயில், குயில் முதலிய விலங்கினங்கள் புள்ளினங்கள்; வெண்ணிலவும் விண்மீனும், வைகறையும் அந்தியும் எழிலியோடு (மேகத்தோடு) கூடும் அகண்ட வானம் - இவை அழகுக்குரிய இயற்கைப் பொருட்கள். சங்க இலக்கியங்களிலும் பிற இலக்கியங்களிலும் இந்த இயற்கை, அழகுக்கும் ஆற்றலுக்கும் உரிய இடமாகி வருணிக்கப்படுவது எவ்வாறு?

1) இயல்பாகி; அதாவது அதன் அழகு பலவிதமான கோணங்களுடனும் பரிமாண வளர்ச்சிகளுடனும் இடச் சூழ்நிலைகளுடனும் சித்திரிக்கப்படுவது. நேர்முகமாகவோ, உவம வாயிலாகவோ வருவது.

2) மனித ஆற்றலாக; அதாவது, மனிதனுக்குரிய சக்தியையும் உணர்வையும் இயற்கைப் பொருள்களின் மேல் ஏற்றிச் சொல்லுவது. அழகு சிரிக்கிறது என்று பாரதிதாசன் சொன்னாரே, அதுபோல், கண்ணகியும் கோவலனும் மதுரை வருகிறபோது, நுழைவாயிலில் கொடி ஆடுவது, ''வாரல்'' (வராதே) எனச் சொல்லுவது போலிருந்தது என்று இளங்கோ சொன்னாரே அதுபோல், கடலும் கானலும், விலங்கும், மரமும், புள்ளும் (பறவையும்), புலம்புறு பொழுதும் - ''சொல்லுந போலவும் கேட்குந போலவும் சொல்லியாங்கு அமையும்'' என்று தொல்காப்பியர், இந்த வகையான ஆற்றலை அல்லது ஒரு கற்பனையைச் சொல்லியிருப்பார். இது, இயற்கையை உயிருடையது போல் உணர்வுடையது போல் (animated / humanized) நெருக்கமுறக் காண்பது.

3) புனைந்துரையாக, இல்லாததைச் சொல்லுவது அல்ல - ஆனால், இருப்பதைத் தொகுத்தும், வேறிடத்து நிகழ்வதாகக் காட்டியும் சொல்வது. குற்றாலக் குறவஞ்சியில், ''தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகு... மந்திசிந்து கனிகளுக்கு வானரங்கள் கெஞ்சும்'' என்று சொல்லுவது போன்றது, இது.

4) தெய்வங்களைக் காணுதல்; அதாவது இயற்கையின் ஆற்றல், தெய்வீக ஆற்றலாக உருமாற்றம் பெறுகிறது. இடி, மின்னல், பிறை, ஆறு, மயில், காளை முதலியவை. மேலும் இயற்கை உடன் தெய்வங்கள் இருப்பது - கானுரை தெய்வம், காடமர் செல்வி, குன்றுதோறு ஆடும் குமரன். மேலும், மீமனித ஆற்றலோடு (supernatural) சொல்லுதல் - காவியங்களிலும் புராணங்களிலும் போல.

இனி, அழகின் வெளிப்பாடாக அல்லது அதற்குரிய இடமாக, இயற்கை கண்டறியப்படுகிறதென்றால், அது, எவ்வெச் சூழ்நிலைகளோடு, எவ்வெக் காரணங்களோடு அவ்வாறு அறியப்படுகிறது? இதனை இரண்டு வகைகளில் சொல்ல வேண்டும். ஒன்று - காதல் உள்ளிட்ட வாழ்நிலைகள் / அனுபவங்கள். இரண்டு - புவியியல் வரைவுகள் மற்றும் வாழிடங்கள் அல்லது இருப்புக்கள் பற்றியன.

முதலில் - வாழ்நிலைகள் அல்லது அனுபவங்களை மையமிட்ட அல்லது அவற்றை உணர்த்துவதற்கு உதவுகிற இயற்கை பற்றிய அழகியல் பார்வை, மிகவும் அடிப்படையானதாகும். தமிழ் மரபு கூறும் திணைப் பாகுபாடு இதனை மையமாகக் கொண்டே அமைகிறது. திணை என்பது ஒரு குறிப்பிட்ட இயற்கைச் சூழலும் அதே போது அது சார்ந்த மற்றும் அதனை இலச்சினையாகக் கொண்ட ஒழுக்கமும் ஆகும். ஐங்குறு நூறு ஆகட்டும் அகநானூறு ஆகட்டும், அகத்திணைப் பாடல்களில் சொல்லப்படும் இயற்கையெல்லாம், வனமோ, வயலோ, மேய்ச்சல் காடோ, மணல் வெளியோ சங்கும் மீனும் ஒதுங்கும் கடலோரமோ - கூடுதல், ஊடுதல், பிரிதல் முதலிய காதல் நிலைகளுக்குப் பின்புலங்களாகவும் தூண்டு களங்களாகவும், இலச்சினைகளாகவும் அமைந்திருக்கின்றன. அதுபோல, இன்னும் சற்று நுட்பமாகக், காதலையும் வேண்டப்படும் திருமணத்தையும் குறிப்பால் உணர்த்தப் பயன்படும் உள்ளுறையுவமும் இறைச்சியும் இயற்கையின் மூலமே புலப்படுத்தப்படுகின்றன.

இயற்கையும், மனிதனும் பரஸ்பரம் நெருங்கிச் சார்ந்திருப்பதின் வெளிப்பாடு, இது. ஆனால், காலம் பின்செல்ல, மனிதத் தொகை கூடி, மனித மூச்சுக்கள் கூடிய ஊர்களும் வெளிகளும் கூடி, காடும் மேடும் கழனியும் குறைய, மனிதனுக்கு இயற்கையோடு கூடிய நெருக்கமும் குறைவது இயல்பே. எனவே இன்பமும் ஏக்கமும் கூடிக் குழையும் காதலும் மிக நெருக்கமாக இருப்பதைச் சங்க இலக்கியத்திற்குப் பின்வந்த இயற்கை மீதான பார்வை, குறைத்துக் கொண்டு விடுகிறது. இயற்கையோடு இயல்பாய் நிற்கும் உள்ளுறை, இறைச்சி முதலிய இலக்கிய உத்திகள் பிற்காலத்தில் காணாமல் போனதற்கு இது ஒரு காரணம்.

அடுத்து - இயற்கை பற்றிய காட்சி வடிவங்கள், மனித வாழ்வின் இருப்பிடங்களைச் சொல்லுவதற்கும் புவியியல் வரைவுகளைக் (Geographical locations) காட்டுவதற்கும் பயன் கொள்கின்றன. இனக்குழு வாழ்க்கை நிலைக்குப் பிறகு, ஆநிரை மேய்ப்பும் பயிர் தொழிலும் மீன் பிடிப்பும் பண்ட மாற்றும் என்ற வாழ்க்கை முறைக்கு வந்துவிட்ட பிறகு ''இடம்'' பற்றிய வரையறைகளும் உரிமையுணர்வுகளும் மனிதனை வந்தடைகிறபோது, சாலைகளும் பயணங்களும் முறைமைகளையும் திட்டங்களையும் உட்கொள்ளுகிறபோது, புவியியல் வரைவுகள் - அவை பற்றிய அறிவுகள் - அவனுக்குத் தேவைப்பட்டன. இயற்கை பற்றிய பார்வையும் இவற்றை ஓட்டி அமைகிற பான்மையை அடைகிறது.

தேர் ஊர்ந்து செல்ல உடன் வண்டிகளும், சாத்துகளும் செல்ல, பாணரும் விறலியும் இரவலரும் செல்ல என்று அமைந்த பாதைகளை வருணிக்கிற சங்க இலக்கியப் பாடல்கள் அதிகம். மேலும், அன்றையத் தமிழகத்துப் புவியியல் வட்டாரங்களை இணைக்கின்ற காரியத்தை ஆற்றுப்படைப் பாடல்கள் செய்தன. இயற்கை பற்றிய பார்வை, அந்த முறையிலேயே அவற்றில் அமைந்துள்ளன. முக்கியமாகச் ''சிறுபாணாற்றுப்படை''யில் இதனைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. 269 அடிகள் கொண்ட இப்பாடல், ஒரு சில அடிகள் தவிர்ந்து, முழுவதுமே இயற்கையின் அழகு பற்றிப் பேசுகிறது. ஆற்றுப்படைப் பாடல்களின் பின்னணியில், சிலப்பதிகாரத்தில் கண்ணகி - கோவலன் பூம்புகாரிலிருந்து மதுரை வந்த பிரயாணத்தையும் இயற்கைச் சூழல்களையும் பார்க்கலாம். பின்னால் வந்த தேவாரம் முதலிய பக்தி நூல்களிலும் அதன் பிறகு வந்த தல புராணங்களிலும், இயற்கை இது போன்ற தளங்களை இனங்காட்டும் நோக்கிலேயே இடம் பெறுகின்றது. எனினும், பலபோது, இது, மரபுமுறையில் வாய்பாடுகளாகவே (Stereotyped formulae) இத்தகைய நூல்களில் இடம்பிடித்திருக்கின்றது என்பதையும் சொல்லியாக வேண்டும். பின்னால் வந்த கவிஞர்களில் கம்பனே இயற்கையின் அழகில் (தவிர, இராமன், சீதை, உள்ளிட்ட மனிதர்களின் அழகிலும்தான்) அதிகம் ஈடுபாடு காட்டுகிறான். இயற்கையை உயிரோட்டம் கொண்டதாகவும் மனித ஆற்றல் மற்றும் பல சமயங்களில் மீமனித ஆற்றல் படைத்ததாகவும் அவன் காட்டுகிறான். இன்றைய இலக்கியத்தில் பாரதி, பாரதிதாசனுக்குப் பிறகு, எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் கவனத்தை இயற்கை பற்றிய அழகியல் ஈர்க்கவில்லை. மேலும், நவீனத்துவம் - அதன் அழகியல் - (Aesthetics of Modernity) இயற்கைச் சூழலிலிருந்து சற்று விலகி ஒதுங்கிப் போய்விட்டது.

நாம், முன்னர்க் கூறியிருக்கிறோம் - அழகியலின் தளம், முக்கியமாக மூன்று என்பதை, அவை; மனிதன், இயற்கை மற்றும் மனிதனால் ஆக்கப்பட்ட செயற்கை அல்லது செய்கலை, மனிதனைப் பற்றிய அழகியல், அவனுடைய ஆளுமையையும் உட்கொண்டதுதான் என்றாலும், அத்தகைய ஆளுமைப் பண்புகளைத் தனியே, அழகு, எனக் குறிப்பிட்டுப் பேசுவது அரிதாகவே இருக்கிறது.

எழில்மிக வுடைய தீங்கனிப் படூஉம்

திறவோர் செய்வினை அறவதாகும்.

திறன் படைத்தோர் செய்கின்ற தீங்கனி போன்ற நல்ல செயல்களை எழில் மிகவுடையன என்று சேந்தம்பூதனார் அடையாளம் காட்டுகிறார். மற்றபடி இவ்வாறு குறிப்பிட்டுக் கூறும் வழக்கு மிக அரிதே. மனிதனின் தோற்றப் பொலிவு சார்ந்த அழகியலுக்கு விசாலமான தளத்தைச் சங்க இலக்கியம் தருகின்றது.

அழகு என்பது, ஒருவரையொருவர் நெருங்குவதற்குரிய உணர்வுபூர்வமானதொரு சாதனம். அவ்வகையில் அது ஒரு தகவலியல் தொடர்பையும் செய்கின்றது. உடல் அழகும், உடலின் அங்க அசைவுகளும் ஒருவகையான உடல் மொழியை (body language) உருவாக்குகின்றன. பிரதிநிதித்துவப்படுத்துகின்றன எனலாம்.

மனிதனின் தோற்றப் பொலிவு அல்லது உடல் அழகு பற்றிய கண்ணோட்டம், அழகியல் தளத்தில் முக்கியமானதொரு பகுதியாகும். மேலும், தமிழ் என்ற ஒரு இனத்தின் அழகு பற்றிய பார்வையை மட்டுமல்லாமல் அந்த இனத்தின் இன அடையாளத்தை (ethnic identity) உணர்த்தக்கூடியதாகவும் இது விளங்குகிறது. உடல் அழகு பற்றிய கருத்தோட்டத்தில், தமிழ் மரபில் ஐந்து அடிப்படைகள் இருப்பதாகக் கொள்ள முடியும்.

1) இளமை, வறுமை, நலமான உடல், அந்த உடலின் வலிமை ஆகியவற்றையும் விருப்பத்தோடு கூடிய உணர்வு நிலையையும் சார்ந்ததாகவே உடல் அழகு பற்றிய கருத்தியல் அமைகிறது.

வயோதிகர் பற்றியோ நோயால் உடல் மெலிந்தவர் பற்றியோ வருணிப்பது இல்லை; சிறிய குழந்தைகள் பற்றிய அழகுகூட அதிகம் கவனம் கொள்ளப்படவில்லை. குழந்தைகள் பற்றிக் குறிப்பிடும் சில பாடல்களும் கூடப் பெண் குழந்தைகளைப் பற்றித் தொடுவதில்லை. குழந்தைகள் அழகு - பற்றி ஓரளவாவது பேசுவது, கண்ணன் பற்றிப் பேசும் ஆழ்வார் பாடல்களில்தான்; அதுவும் பெண் குழந்தை பற்றி ஒன்றும் இல்லை. பின்னால், பிள்ளைத் தமிழ் நூல்களில்தான் குழந்தைகளின் அழகு விரிவாகவும் சிறப்பாகவும் பேசப்படுகிறது. மேலும் பெண் குழந்தைகள் பற்றிய பேச்சும் அழகும் அங்கே உண்டு. (அதுவும் கூடத், தெய்வக் குழந்தைகள் என்பதனாலா?)

2) தமிழ் மரபில் உடலியல் சார்ந்த அழகியல், பெண் உடலை - இளமை கொண்ட பெண்ணுடலை - மையமிட்டதாகவே அமைகிறது.

ஆணாதிக்க சமுதாயத்தில் அனுபவிப்பதும் ரசிப்பதும் அவனை முன்னிட்டே நடப்பதால், பெண்ணே - அதுவும் இளம் பெண்ணே - அழகுடையவளாகக் காட்டப்படுகிறாள். சில சமயங்களில், ''மலைச் செஞ்சாந்தின் ஆர மார்பினன்'' என்றும் ''யாவருங் காணலாகா மாண்எழில் ஆகும்'' என்றும் அந்த ஆணின் மார்பு அழகு பேசப்பட்டாலும் ''மார்பு புணையாக ஆடும் வம்மே காதலந் தோழி'' என்று சொல்லுகிற வழக்குத்தான் - நோக்கந்தான் - அதிகம் காணப்படுகிறது. ஆனால், சிற்பக் கலையில் ஆண் - உடல் கவனத்திற்குள்ளாகியிருக்கிறது. மேலும், கடவுளர்கள் பற்றிய பாடல்களில் ஆண்மை, இளமை, காதல் ஆகிய படிமங்கள் கொண்ட முருகனும் கண்ணனும் போட்டி போட்டுக் கொண்டு அழகுடையவர்களாக வருணிக்கப்படுகிறார்கள்.

பெண், அதிகம் உயரமில்லாதவள் - ''குறுமகள்''; கரிய நிறமுடையவள் - ''மாயோள்'' இவளுடைய அழகுடைய உறுப்புக்களென அதிகம் பேசப்படுவன: முலை, அல்குல், மற்றும் கண், தோள், கூந்தல், நுதல் ஆகியவை. ''முகிழ்த்துவரல் இளமுலை'', ''நெருங்கல் வெம்முலை'', ''நுண்நுசுப்பின் அகன்ற அல்குல்'', ''பணைப் பெரும் தோள்'', ''வாங்கமைபுரையும் வீங்கிறைப் பணைத்தோள்'', ''அல்கு படர் உழந்த அரிமதர் மழைக்கண்'', ''கலிமயிற் கலாவத் தன்ன ஒலிமென் கூந்தல்'', ''செம்பொறி திருநுதல்'' என்பன. பெண் - உடல் அழகு பேசும் சில தொடர்கள். இவை, கவர்ச்சியையும், பாலியலையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டவையல்ல; அவையும் உண்டெனினும், அவளுடைய உடல் திறன், நலம், பயன் ஆகியவற்றையும் அவை முக்கியமாகக் கொண்டவை. முக்கியமாகத், ''தோள்'' பற்றிய அழகு. பருத்த தோள் என்று பன்முறை பேசப்படுகிறது. இது உழைப்பின் அடையாளமாக வந்த அழகேயாகும்.

3) உடலழகு, இயற்கைப் பொருளோடு இணைத்துக் காணப்படுகிறது; ஒன்றில் - உடலுக்கு, இயற்கைப் பொருள் உவமமாக அல்லது ஒப்பீடாகக் கூறப்படுகிறது; அல்லது - இயற்கைப் பொருளுக்கு உடல் அழகு உவமமாகவோ ஒப்பீடாகவோ கூறப்படுகிறது.

சிறுபாணாற்றுப்படையில், விறலி (ஆடு களமகள்)யின் கொங்கை வருணிக்கப்படுகிறது; அப்போது, அதனுடன், கோங்கு மலர் இணைத்துக் கூறப்படுகிறது. முதலில், கொங்கைக்கு, அந்தக் கோங்கு மலர் மொக்கு, உவமமாகக் கூறப்படுகிறது.

யாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப்

பூணகத் தொடுங்கிய வெம்முலை.

முலையின் அழகைக் கோங்கு மொக்குகளைக் காட்டி உணர்த்துகிறார். அடுத்துச், சில வரிகள் கழிந்து, உவமமும் பொருளும் இடம் மாறுகின்றன. இப்போது இயற்கைப் பொருளாகிய மலர் மொக்குகளின் அழகைச் சொல்ல வேண்டும். அதற்குக் கொங்கையின் வடிவம் உவமமாகிறது.

வருமுலை யன்ன வன்முகை யுடைந்து

திருமக மவிழ்ந்த தெய்வத் தாமரை

இவ்வாறு இயற்கையும் உடல் அங்கமும், ஒன்றற்கு இன்னொன்று, போன்மையாகி அல்லது பதிலியாக அமைகின்றன. அழகியல் பார்வைக்கு இயற்கையே அடிப்படை ஆதாரம்; மனித வாழ்வும் அந்த வாழ்வின் கண்ணோட்டங்களும் இயற்கையின் வழியோடு இணைந்திருக்கின்றன. இது போன்ற எடுத்துக்காட்டுகள் பல, இவ்வுண்மையைச் சொல்லுகின்றன.

4) உடல், இயல்பாக அன்றி ஒப்பனையோடும் புனைவோடும் அழகு செய்யப்படுகின்றது.

ஒப்பனை என்பது ஒரு கலை. தன்னுடைய உடல் பற்றிய உணர்வும், அழகாகத் தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வும் ஒப்பனையை ஒரு தேவையாக ஆக்குகின்றன. ஆணின் மார்பு, சந்தனம் பூசிக் கொண்டதாகும். மலர் மாலை அணிந்து கொண்டதாகவும் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. பெண் உடல் சார்ந்த அழகுக்கு ஒப்பனையும் ஒரு பகுதியாகக் கூறப்படுகிறது. ஒப்பனையாக அல்லாமல், ஆனால், பிரிவு முதலியவற்றின் காரணமாகத் தேமல், சுணங்கு அல்லது திதலை, பெண்ணின் உடலில் தோன்றுவது சங்கப் பாடல்களிலும் திருக்குறளிலும் பன்முறை பேசப்படுகிறது. அடுத்து உடலில், முக்கியமாகக் கொங்கையில், தொய்யில் எழுதுவதும் குறிப்பிடப்படுகிறது; இழை (நகை), யணிவதும் கூறப்படுகிறது.

வனை புனை எழில் முலை

என்று, மலைபடுகடாம் கொங்கையின் அழகிற்கு மூன்று அடைமொழிகள் தருகின்றது. ஒன்று இயல்பானது - எழில், மற்றும் ஒப்பனையாக வினை - புனை - என்ற இரு செயல்கள் கூறப்படுகின்றன. மேலும்,

உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும்

தழையணிப் பொலிந்த ஆயம்...

என்று இப்பெண்கள் செய்கிற சில ஒப்பனைகளைத் தொகுத்துச் சொல்கிறது ஒரு பாடல். இவ்வளவு ஒப்பனைகள் செய்தும் இவர்களைப் ''புனையா ஓவியம்'' என்று சங்க இலக்கியங்கள் வருணிக்கின்றன. பெண்டிரின் அணிநலன்களைப் பிற்கால இலக்கியங்களும் விரிவாகச் சொல்லுகின்றன. சிற்பங்களிலும் சிலைகளிலும் பெண்கள், பெரும்பாலும் கழுத்திலே, காதிலே, கரத்திலே என்று அணிகளுடன் காட்சி தருவதே பெரும்பான்மை.

5) மிகை கற்பனையும் புராணிக மரபும் என்ற சூழல்களில், மனித உடல் அழகு, யதார்த்தத்திலிருந்து மாறுபட்டு, மீமனிதப் புனைவுகளுடன் சித்திரிக்கப்படுகிறது - சமய ஆதிக்கம் வந்த பின்னைய காலத்தில்.

கம்பனின் உடல் அழகு பற்றிய மீமனித - இயற்கையிகந்த - புனைவுகள் மற்றவர்களினும் அதிகமாகவே உள்ளன. கோயில் சிற்பங்களிலும் இத்தகைய புனைவுகள் கணிசமாகவும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்துடனும் விளங்குகின்றன. சிலம்பில் கண்ணகியின் உடல் அழகு, முதலிரவில் உலவாக் கட்டுரையாகக் கோவலன் மூலம் புனைந்துரைக்கப்படுகிறது. அவளுடைய உடல், மீமனித வடிவமெடுக்காவிட்டாலும் அந்த உடல் உறுப்புக்கள், கடவுளர்களால் கொடைகளாகக் கொடுக்கப்படுகின்றன என்று புராண மரபோடு சொல்லப்படுகிறது. பிறை போன்ற நெற்றியைச் சிவன் கொடுக்கத், தன்னுடைய கரும்புவில்லை இரண்டாக ஒடித்துக் காமன், இருபுருவங்கள் தர, முருகன், தனது கூரிய வேல் தன்னை இரண்டாக்கி இரு விழிகள் தந்தானாம். இளங்கோவடிகள் சமணராகக் கருதப்படுகிறவர். ஆனாலும் அன்றைத் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்ட வைதீக சமயத்தோடு இப்படி அவர் சமரசப்படுத்திக் கொள்கிறார்.

''இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்'', ''செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்'' என்று தொல்காப்பியம் கூறும். இயற்கை போன்றே செயற்கையும் கவனிப்புக்கு உட்பட்டு வந்திருக்கிறது என்பதனையே இது காட்டுகிறது. மனிதனின் (செய்)கைபட்டு வெளிப்படும் ''செயற்கை'' குறிப்பிட்ட தோற்றத்தையும் குறிப்பிட்ட ஒரு செய்தியையும் கொண்டிருக்கிறது. இதனுள்ளும், மனிதனுடைய உள்ளார்ந்த படைப்பாக்கத் திறனையும் அறிவான்ற திட்ட முறையினையும் உழைப்பினையும் கொண்டதாக விளங்குகின்ற செய்கலை, அழகியலின் முக்கிய பகுதியாக விளங்குகிறது. இயற்கையின் அழகு நுண்மையானது; அறுதியிட்டுச் சொல்லுவதற்கு அது அதிகம் இடம் தருவதில்லை. ஆனால் கலை, இன்னும் சற்றுத் துல்லியமாகவும், தெளிவாகவும் அறுதியிட்டுக் சொல்லக் கூடியதாகவும் (ஆனால் எல்லாம் ஓர் ஒப்பீட்டளவில்தான்) அமைந்திருக்கிறது. எனவே, அழகியல் சிந்தனையாளர்கள், இயற்கையின் அழகிலோ, உடலின் அழகிலோ கொள்கிற கவனத்தை விடக் கலையின்பால் அதிகக் கவனம் கொள்கின்றனர். கலைகள் பல திறத்தின; பலவகையின; எனவே, துலாம்பரமாக இன்னது இத்தகையது இன்ன அளவிலானது என்று அறிய முடியும் என்று கருதுகின்றனர். எனவே, பல சமயங்களில், அழகியலே கலையியல் கோட்பாடு தான் என்று பலர் கருதவும் செய்கின்றனர்.

இயற்கையோடு இணைந்து வாழ்கிற மனிதன், அந்த இயற்கையிலிருந்து கற்றுக் கொண்டவற்றைத்தான் கலை வடிவமாக ஆக்கிக் கொள்கிறான். இயற்கையின் ''மாதிரி''யாகவே (model) கலை அமைகிறது என்று கலைக் கோட்பாளர்கள் கூறுகின்றனர். மேலும், இயற்கையை அப்படியே நகல் எடுப்பது போல் ''போன்மை''ப் (imitation)படுத்தி அதன் பதிலியாக ஆக்கி - அப்படித்தான் கலை உருவாகிறது என்று சிலர் சொல்லுவர்; ஆனால் அது பொருந்தாது என அறிக. ஏனெனில் மனித அனுபவம் விசாலமானது; உறவுகளும் சிந்தனைகளும் இயற்கையையும் தாண்டி விசாலமானவை. எனவே, கலை வெறுமனே பதிலியாக அல்ல; மனிதப் படைப்பாற்றலின் - அவனுடைய கற்பனைத் திறனின் - ஒரு பகுதியாக விளங்குகிறது.

மனித உடலிலே தொய்யில் வரைவது, கண்ணிலே மை எழுதுவது முதலிய புனைவுகளும், ஆரமும் பூணும் வளையும் மலரும் முதலிய அணிகளும் உள்ளிட்ட ஒப்பனைகள் முதல், கால அளவை, இட அளவை ஆகிய தளங்களின் வழி எழுந்த ஒவியம், இசை, கட்டிடம் முதலிய பல்வேறு கலைகளும் அவை பற்றிய குறிப்புக்களும் செய்திகளும் பழங்காலத்தும் பின்னர் தொடர்ந்தும் தமிழில் உண்டு. எனினும் தமிழில், கவிதைக் கலைக்கு எழுந்த விளக்கமான கோட்பாடு, ஏனைய கலைக்கு அமைந்திருக்கவில்லை; எனினும், ஆங்காங்கே முக்கியமான பல இடங்களில் வெவ்வேறு சூழல்களில் கலைகள் பற்றியும் அவற்றின் பண்புகள், செயல்பட்ட நிலைகள் பற்றியும் அவற்றிற்கிடையே அமைந்த உறவுகள், பற்றியும் கூறப்பட்டிருக்கின்றவை. கலைகள் புலப்படுத்தும் அழகியலைக் கட்டமைக்க உதவக் கூடியவை.

கலைகளின் வரலாற்றை அல்லது வகைகளைத் தேடுவதோ, கலைகளின் அழகியலை விளக்குவதோ, இந்த கட்டுரையின் எல்லைக்குள் உள்ளிட்ட நோக்கமல்ல. இருப்பினும் இதனைச் சுருக்கமாகவேனும், ஒரு கட்டுக்குள் நின்று தொட்டுக் காட்டுவது அவசியம்தான். முக்கியமாகச் சங்ககாலப் பகுதியில் கிடைக்கிற தரவுகளைத் தொகுத்துக் காணுகிறபோது, ''செய்வது நேர்த்திபடச் செய்வது - கலைவயப்படுத்துவது - ஆக்குவது அல்லது படைப்பது'' என்ற அடிப்படையில் சிறப்பியலான ஒரு பத்தி நிலைக்களன்களை இனம்பிரித்துக் காணமுடிகிறது.

I) மனித உடம்புகளை எழுதி அணி செய்வது; மை எழுதுவது; கூந்தலைப் பின்னி அலங்கரிப்பது; புனைவு அல்லது ஒப்பனை

II) அந்த உடம்புகளில் - மார்பு, கழுத்து, காது, இடை, கால், கை முதலியவற்றில் அணிகள், இழைகள், பூண்கள், குழைகள், மற்றும் வளை, கழல் முதலியவற்றைக் கலைப் பொருள்களாகச் செய்வது, அணிவது.

III) மட்கலம், அருங்கலச் செப்பு, பலவகைப்பட்ட பாவைகள், பாவை விளக்கு, படுக்கைக் கட்டில், எழினி அல்லது படாம் போன்ற கலைப்பொருள்கள்.

iV) ஏர், புனை, தேர், கூர்வேல் முதலிய உற்பத்திக் கருவிகள்.

V) இயற்கையெழிலை ஒத்ததாக அமைக்கிற ஓவம் அல்லது ஓவியம்.

VI) மாடம், எழுநிலை மாடம்; அம்மாடங்களிலும் சுவர்களிலும் செய்யப்படுகின்ற கதைப் - புனைவுகள் மற்றும் தெருவீதிகள் அமைப்பு.

VII) விறல்பட ஆடுதல் (விறலியர்), வேடமிட்டு ஆடுதல் (பொருள்), கூத்து அல்லது நாடகம்.

VIII) பறை, துடி, முரசு, குழல், யாழ் முதலிய கருவிகள் வழிப்பட்ட இசை / பண்.

IX) பாட்டு, இசை, கூத்து மூன்றும் கூடி, ஒன்றாய் நிகழ்த்துகிற (Performing Art) கலை வடிவ நிகழ்வு; வேத்து அவை, பொது அவை என்று வேறுபட்ட சூழல்களில் நிகழ்த்தப்பெறும் நிலைப்பாடு.

X) மொழியோடு கூடிய கலை வடிவங்கள். பண்ணோடு கூடிய மொழி - பாட்டு; செய்யுள், உரை, நூல், அம்மை, தொன்மை, தொடர் நிலைச் செய்யுள் - எனும் இலக்கியக் கலைவடிவங்கள்.

இவை, பொதுவான கலை வெளிப்பாடுகள், கலை வடிவங்கள். இவற்றுள் பல சங்க காலச் சமுதாயத்திலேயே வளர்ச்சி பெற்றுமிருந்தன. இவையன்றியும், சங்ககாலச் சமுதாய வீழ்ச்சிக்குப் பின்னால், உற்பத்தியுறவுகளில் ஏற்பட்ட மாற்றம், நிறுவனவயப்பட்ட அரசுருவாக்கம், வைதீக சமய எழுச்சி, வேற்றுப்புலத்தார் வருகை ஆகியவற்றின் காரணமாக, ஏற்கனவே இருந்த கலை வடிவங்களை மாற்றங்கள் ஏற்பட்டதன்றியும் கோயில்கள் மையமிட்டு எழுந்த கட்டிடக் கலை மற்றும் சிற்பக் கலை ஆகிய பெருநிலையான கலைகளும் வளர்ச்சி பெற்றன. தனித்துவம், தமிழ் இன/மரபு அடையாளம், அதனைத் தாண்டிய சமய, புராண அடையாளங்கள் அவற்றிற்குரிய வரையறைகள் ஆகியவற்றோடு வளர்ச்சி பெற்ற இந்தக் கலைகள் தமக்குள் பல வடிவங்களையும், வகைகளையும், செய்திகளையும், நோக்கங்களையும் கொண்டிருக்கின்றன. எல்லாக் கலைகளுக்கும் அதனதன் அளவில் முக்கியத்துவமும் சிறப்பும் உண்டு; இழையோடும் அழகியல் பண்புகளும் உண்டு. இவற்றையெல்லாம் வகைதொகையாக விளக்குவது கலைகளின் வரலாற்றுக்கு உதவும் என்றாலும், அழகியல் கோட்பாட்டுக்கு, இதுகாறும் நாம் விளக்கியவாறு, கலைகளின் பொதுத்தன்மைகளை அறிந்து கொள்வதே அடிப்படையாகும்.

மனிதன், சமூக பொருளாதார நிலைகளில் வளர்கின்றபோது, அவன் நாகரிகப்படுவதும் சேர்ந்தே வளர்கிறது. நாகரிகத்தின் ஆழமான பதிவுகளோடும், மனித வாழ்வுகளின் மனநிலைகளோடும் அவனுடைய உழைப்பின் ரகசியத்தோடும் சம்பந்தப்பட்டது. அழகியல் தமிழ் மரபில் அழகியலை நாம் கண்டறிந்தோம் என்பது இந்த நிலையிலிருந்துதான்.

நன்றி: சமூக விஞ்ஞானம்