‏إظهار الرسائل ذات التسميات கு.ப.ராஜகோபாலன். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات கு.ப.ராஜகோபாலன். إظهار كافة الرسائل

தாயாரின் திருப்தி - கு.ப.ராஜகோபாலன்

பங்குனி மாஸத்து வெய்யில் சுள்ளென்று அடித்தது. தலை வெடித்துப்போகும் போன்ற தாபம். உச்சி கால வேட்கை மிகுதியால் உலகமே மயங்கியிருந்தது. காக்கை கூட வாயைத்திறந்துகொண்டு மௌனமாக உட்கார்ந்திருந்தன. நாய்கள் மட்டும் எச்சில் இலைகளுக்காக பிரமாதமாக ரகளை செய்துகொண்டிருந்தன. பிராமணர்கள் துடித்துக்கொண்டு நடந்துவந்து சோ்ந்தார்கள்

புரோஹிதர் கண்ணை மூடிக்கொண்டு மந்திரங்களை அர்த்தமில்லாமல் ஓட்டினார். “பிராசீநவிதி““பவித்ரம் த்ருத்வாஎன்பவைகளையும் மந்திரத்துடன் சேர்த்து ஒரு ராகத்தில் பாடிக்கொண்டே போனார். பிராமணர்களுக்கு வஸ்திரம் கும்பம் தட்சிணை இவைகள் கொடுக்கப்பட்டு சாப்பிட உட்கார்ந்தார்கள்.

சுந்ரரேசய்யரின் தாயாருக்கு அன்று சிரார்த்தம். அவர் நாஸ்திகருமல்ல ஆஸ்திரகருமல்ல. தென்னிந்திய ஆங்கிலம் படித்த பிராமணர்களின் திரிசங்கு கூட்டத்தைச் சேர்ந்தவர்.ஸ்நான சந்தியா வந்தருதிகள் விதிப்படி நடக்கவில்லை. ஆனால் தர்ப்பணமும் ஸ்ரார்தமும் மட்டும் தவறாமல் நடைபெறும்.அந்த தினங்களில் மட்டும் விபூதி பஞ்சகச்சம் இவைகள் பவித்திரத்தை சந்திக்கும். சுந்தரேசய்யரின் பஜனை ஒன்றும் விளங்கும். அவர் அதில் அசாத்திய மோகம் கொண்டவர். ராம சங்கீர்த்தனத்தில் உருகிக் கண்ணீர் விடுவார்.அதற்காக ஊரில் அவரை கொஞ்சம் கேலி கூடசெய்கிறதுண்டு. ஆனால் ஆடிமாத்தத்தில் வெகு சாதுவான பிரகிருதி. பிச்சைக்கராரனென்றாலும் ஏதாவது கொடுக்காமல் அனுப்ப மாட்டார்ஃ அதிலும் கூன் குருடென்றார் அரை, கால் என்று கொடுத்து விடுவார். இதற்காக அவரைப் பற்றி ஊரில் உலகம் தெரியாதவரென்றும் கொஞ்சம்கிறுக்குமநுஷ்யனென்றும் பேசிக்கொள்வதுண்டு.

பிராமணர்கள் சாப்பாடு முடிந்து பிண்டப்பிரதானமும் ஆய்விட்டது. பிராமணர்கள்திருப்திசொல்ல வேண்டிய கட்டம். சுந்தரேசய்யர் மூன்று வயதுக் குழந்தை வாசலில் விளையாடிக்கொண்டிருந்தவன் உள்ளே ஓடி வந்துஅப்பா வாசல்லே பாட்டி வந்திருக்கா. சாதம் வேணுமாம்என்றான்.

பாட்டி வந்திருக்காளா? அதார்ரா?” என்று கேட்டுக்கொண்டே சுந்தரேசய்யர் வாசலில் போய்ப் பார்த்தார்.

வாசற்படியில் கையில் தடியும் தரகரக் குவளையுமுள்ள ஒரு குறக்கிழவி சாய்ந்து கொண்டிருந்தாள்.

அந்தத் தவிப்பைப் பார்த்த சுந்தரேசய்யர் மனதில் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் ஏற்பட்டது. ஜாதியாசாரம் என்று சொல்லப்படும் மூடபக்தியை மனிதனின் ஸ்வபாவ குணமான இரக்கம் ஒரேயடியில் வென்றுவிட்டது. ஒரு நிமிஷத்தில் என்ன செய்ய வேண்டுமென்பதையும் தீர்மானித்து. அதற்கு மதநம்பிக்கைக்கு ஏற்ற சமாதானத்தையும் கொண்டார்.

சட்டென்று உள்ளே சென்று ஒரு பிண்டத்தையும் தன் தீர்த்த கலசத்தையும் எடுத்துககொண்டு வாசலில் வந்து உருண்டையைக் கரைத்துக் கிழவியின் குவளையில்பிடிஎன்று ஊற்றினார். அதை மடமடவென்று குடித்துவிட்டு கிழவிஅப்பாடா. உசிர் வந்திச்சு! மகாராசா நீ நல்லா இருக்கணும். உன்னைப் பெத்த வயிறு என் வயிரைப் போலே குளிரணும்என்று சொல்லி சிரமம் மேலிட்டு படியில் சாய்ந்துவிட்டாள்.

என்ன..என்ன!” என்று ஓடி வந்த பிராமணர்கள் இதைப் பார்த்துத் திகைத்துப் போய்அடாடாடா..என்ன அபசாரம்! சிரார்த்தம நஷ்டமாய் விட்டதே! என்ன அக்ரமம்! யார் இப்படி சிரார்த்தம் செய்யச் சொன்னார்கள்!” என்றார்கள்.

ஏன்?” என்றார் சுந்தரேசய்யர்.

வாயசத்துக்குக் கூட இன்னும பிண்டம் வைக்கவில்லை. பித்ருக்கள் காக்கையாக வந்து காத்திருப்பார்களே! ”

மனித ரூபத்துடன் வந்து என் தாயார் இதோ திருப்தியடைந்து விட்டாளே! காக்கையைக் காட்டிலும் மனித ஜன்மம் மேலல்லவா?”

உங்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. உம். இனிமேல் இங்கே ஜலபானம் செய்யக்கூடாது. ஓய் சாஸ்திரிகளே தாம்பூலத்தை இங்கேயே எறிந்து விடும்என்று சொல்லி பிராமணர்கள் வஸ்திரம் கும்பம் தட்சிணைகளை கைபடாமல் எடுத்துக்கொண்டு கீழே கால்வைத்துக்கூட நடக்காமல் சென்றார்கள்.

ஐயோ. இதென்ன இப்படிச் செய்து விட்டீர்களே!” என்று கவலையோடு மனைவி வெளியே வந்தாள்.

என்னடி அசடு! வாசலில் பார் அம்மா உருவெடுத்து வந்திருப்பதை!”

***

குபரா முத்திரைக் கதைகள்செல்லப்பா பதிப்பகம் முதற்பதிப்பு டிசம்பர் 2003

நன்றி - அழியாச்சுடர்கள்

நூருன்னிசா - கு.ப.ராஜகோபாலன்

நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். நான் கைகொண்டு செய்யக் கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. தேசிய இயக்கத்திலோ ஒரு தேக்கம்; காங்கிரஸ் நிர்மாணத் திட்டம் அப்பொழுதும் சிதைவுற்றுக் கிடந்தது.

தபாற்காரன் ஒரு கற்றைத் தமிழ்ப் பத்திரிகைகளுடன் ஒரு கவரையும் கொண்டு வந்து கொடுத்தான். தன்னந்தனியாக எனக்கு இவ்வுலகில் யார் கடிதம் எழுதக் கூடுமென்று எண்ணிக் கொண்டே அதை உடைத்துப் படித்தேன். பின்வருமாறு ஆங்கிலத்தில் அது எழுதப்பட்டிருந்தது.

மதராஸ்

குலாம் காதர் கான், எம்.ஏ.,

ப்ரோ. டிப்டி கலெக்டர்.

என் அருமைத் தோழா,

நீ என்னை மறந்திருப்பாயென நான் நினைக்கவில்லை. இத்தனை ஆண்டுகளாகக் கடிதம் எழுதாதற்குக் காரணம், எனக்கு நீ இருக்குமிடம் தெரியாததுதான். இப்பொழுதும், இந்தக் கடிதத்திற்கு மேலேற்படும் நமது சந்திப்பிற்கும் காரணம் என் தங்கை நூருன்னிசா. நாம் படித்தபொழுது நம்முடன் விளையாடினவள், நினைவு இருக்கிறதா ? தற்செயலாகச் சென்ற பத்தாம் தேதிப் பத்திரிகையில் உன் பெயரைக் கண்டு அதை எனக்குக் காட்டினாள். அவள் உன் 'இன்சியல் 'களைக் கூட நினைவில் வைத்திருந்ததால்தான் நீ என்று நிச்சயிக்க முடிந்தது. உடனே அவள் சொன்னதன் பேரில், உன் முகவரியைக் கேட்டு வேலூருக்கு, 'டெமி அபிஷியலா 'கத் தந்தி அடித்துப் பதில் வரவழைத்தேன். அது இன்று கிடைத்தது.

நமது பன்னிரண்டாவது வயதில், திருச்சியில் படிக்கும் போது, ஒரு சிறுபிள்ளை சபதம் செய்து கொண்டோமே, நினைவு இருக்கிறதா; நாம் ஒருவரை ஒருவர் அறியாமல் மணம் செய்து கொள்வதில்லை என்று ? அதை நிறைவேற்றுவதற்காகத்தான் இந்தக் கடிதம். சென்னையில் எனக்குத் திருமணம். பத்திரிகை இதனுடன் இருக்கிறது. நீ வந்தே தீர வேண்டும்.

உன் அன்புள்ள

குலாம் காதர்.

இந்தக் கடிதம் மின்னலைப் போல் என் மனத்தின் மறதி இருளை அப்பொழுது பளிச்சென்று போக்கிற்று. இந்த பத்து ஆண்டுகளாகப் பரதேசிபோல் திரிந்த பொழுதும், உப்பு சத்தியாக்கிரகம் காரணமாக ஆறுமாதம் சிறையில் இருந்தபொழுதும் அடிக்கடி என் மனத்தில் தோன்றித் தோன்றி என்னை மயக்கிய பெண் உருவம் யாருடையது என்று தவித்தேன்; அப்பா, அது நூருன்னிசாவுடையதுதான்!

ஒரு சிறுமியின் முக்காடிட்ட குற்றமற்ற முகம்; அதில் மை தீட்டிய இமைகளிடையே குறுகுறு என்று அசைந்தாடும் இரண்டு குறைகூறும் விழிகள். ரோஜாக்களினிடையே மல்லிகை போல கீழ் இதழைச் சற்றே கடித்து வெளியே தொற்றின பல்வரிசை. இத்தகைய உருவம் மோகினிபோல் என் மனத்தில் குடிகொண்டு ஆட்டி வைத்ததே - அது அவளுடையது!

அவளுடைய மனநிலையும் என் மனநிலையை ஒத்திருக்கக் கூடுமா என்ன! இல்லாவிட்டால் இக்கடிதத்திற்கு ஏன் காரணமாகிறாள்/ கூட்டத்திற் கலந்து திரியும் என்னைக் குறித்தல்லவோ அவள் கூப்பிடுவது போலிருக்கிறது!

2

குலாம் காதருக்கும் எனக்கும் இருக்கும் இந்த நட்பு தொடங்கியதே மிகவும் வேடிக்கையான செய்தி. எனது பத்தாம் வயதில் என்னை என் தகப்பனார் திருச்சியில் ஒரு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பில் சேர்த்தார். அங்கே குலாம் என் 'பக்கத்துப் பையன் '. பெண்சாயல் கொண்ட வளர்ந்த வாலிபன்.

ஒருநாள் கணக்குப் போடும்பொழுது குலாம் என் சிலேட்டைப் பார்த்துக் 'காப்பி ' அடித்து விட்டான். அது எப்படி வெளியாயிற்றென்றால், நான் பிசகாய்ப் போட்டிருந்த வழி அவனுடைய சிலேட்டிலும் காணப்பட்டது. உடனே, ஆசிரியர், நான் 'காப்பி ' அடித்தேனென்று என்னைப் பிரம்பால் அடித்தார்.

குலாம் அன்று மாலை வீட்டுக்குப் போகும்பொழுது என்னைக் கைதட்டிக் கூப்பிட்டான்.

'நீ ஏன் என்மீது குற்றஞ் சாட்டவில்லை ? ' என்று கேட்டான். நான் பதில் சொல்லவில்லை.

அவனுக்கு என்ன தோன்றிற்றோ தெரியாது.

'அடே, என்னோடு எங்க மோட்டாரில் எங்க வீட்டுக்கு வா. அப்புறம் உங்க வீட்டில் கொண்டு விடுகிறேன் ' என்றான்.

காரில் ஏறினோம். காரில் சவாரி செய்ய வேண்டுமென்ற என் விருப்பம் பூர்த்தியாயிற்று. பதினைந்து நிமிடத்தில் தென்னூரில் அரண்மனை போன்ற ஒரு வீட்டு வாசலுக்குக் கார் விர்ரென்று போய் நின்றது.

கயாசுதீன் சாகேப் ஒரு பெரிய வியாபாரி. ஆற்க்காடு நவாப் வம்சத்தைச் சேர்ந்தவராம். வீட்டின் முன் கூடத்தில் பெரிய வெல்வெட்டுத் திண்டுகள் போட்டுச் சாய்ந்து கொண்டிருந்தார். எதிரில் உக்காவும் பாத்திரம் ஒன்றும் இருந்தன. எங்கே பார்த்தாலும், நிலைக் கண்ணாடிகள், பெரிய பெரிய மொகலாயப் படங்கள், பளிங்கு மயில் ஒன்றில் செருகப்பட்டிருந்த ஊதுவத்திகளிலிருந்து வாசனை கம்மென்று வீசிற்று. காலுக்கு மெத்தின்றிருந்த ரத்தினக் கம்பளங்கள் தரையில் விரிக்கப்பட்டிருந்தன.

குலாம் குதித்துக் கொண்டு போய் அவரிடம் ஏதோ சொன்னான். திகைத்துப் போயிருந்த என்னைப் பார்த்து அவர், 'இங்கே வா! ' என்று கூப்பிட்டார். பிற்காலத்தில் நான் மெளலானா செளகத் அலியைப் பார்க்கும் போதெல்லாம் அவர் ஞாபகம் எனக்கு வரும். குலாம் என்னை அவரிடம் இழுத்துக் கொண்டு போனான். அவர் என்னைத் தடவிக் கொடுத்துக் கொண்டே தம் மனைவியைக் கூப்பிட்டார். உள்ளேயிருந்து அந்த அம்மாளும் அவளுடைய இரண்டு பெண்களும் வந்தார்கள். இப்பொழுது நினைவிலிருந்து சொல்லுகிறேன். அந்த அம்மாளுக்குச் சுமார் முப்பது வயசு இருக்கலாம். உயர்ந்து வளர்ந்த அழகான மாது. அவள் மெதுவாக ஒவ்வோர் அடி எடுத்து வைத்து வந்த பொழுதும் கால் சலங்கை கலீர் கலீரென்று சத்தம் செய்தது. மூத்த பெண் அலிமா குட்டையாயும் பருமனாயும் இருந்தாள். இளைய பெண் நூருன்னிசாவோ குலாமைப்போலவே இருந்தாள்.

அப்பொழுது அவளுக்கு எட்டு வயசு இருக்கலாம். இவ்வளவு விரிவாக எடுத்துச் சொல்லும் ஆற்றல் எனக்கு அப்பொழுது இருந்ததா என்ற சந்தேகம் வேண்டாம், கிடையாது. ஆனால் என் மனத்தில் 'போட்டோ ' பிடித்ததுபோல் பதிந்திருக்கிற அம்சங்களையே இப்போது எடுத்து எழுதுகிறேன்.

நூருன்னிசாவின் உருவம் என் மனத்தில் வரைந்த சித்திரம்போல் நிற்கிறது. நான் முதல்முதலில் பார்த்த அன்று அவள் சரிகை மயமாயிருந்த பச்சைப் பாவாடை உடுத்திருந்தாள். இலேசான மஞ்சள் பட்டு இரவிக்கையும், ரோஜாப் பட்டுத் தாவணியும் அணிந்திருந்தாள். காலில் காப்பு, பாதரசம், கையில் காப்புகள், விரல்களில் மோதிரங்கள், கர்நாடக முஸ்லீம்களைப் போல குருடு முதலியன இல்லை. முகம் என் மனத்தில் அப்படியே இருக்கிறது. நீண்ட புருவங்களும் தலைமுடியும் கன்னங்கறேலென்று இருந்தன. பின்னல் இல்லாமல் தலைமுடியை முடிந்திருந்தாள். அது அவளுக்கு மிகவும் அழகாக இருந்தது. அவளது உடலின் சிவப்புக்கு ஈடே சொல்ல முடியாது. அவளுடைய கண்கள் அவற்றின் தன்மையை எடுத்துச் சொல்ல முடியவில்லை. வேண்டுமானால் தாமரை இதழ்கள் போன்றவை, மீனுருவம் கொண்டவை என்று கவியைப்போல் சொல்லிக் கொண்டே போகலாம்.

கயாசுதீன் தம் மனைவியிடம் ஏதோ சொன்னார். அவள் என்னை ஒருதரம் பார்த்துவிட்டு அலிமாவிடம் ஏதோ சொன்னாள். அலிமா உள்ளே போய் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளைகள் நிறைந்த ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதை என்னிடம் கொடுத்தபோது குலாமின் தாயினது முகத்தில் தோன்றிய அன்புப் பார்வையை நான் மறக்கவே முடியாது. என் கன்னத்தை ஒருதரம் தாய்போல தடவிக் கொடுத்தாள்.

குலாம் என்னைக் கூட்டிக் கொண்டு காருக்குச் சென்றான். அதில் ஏறி உட்கார்ந்தோம். புறப்படும்பொழுது வாசற்பக்கம் கண்ணெடுத்துப் பார்த்தேன். நூருன்னிசா முக்காட்டைப் பல்லால் கடித்துப் பிடித்துக் கொண்டு என் முகத்தைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். என் கண்களைச் சந்தித்த நிமிடமே உள்ளே ஓடிவிட்டாள்.

அன்று முதல் நானும் குலாம் காதரும் இணைபிரியாமல் திரிந்தோம்; விளையாடினோம்; அரட்டைகள் அடித்தோம். ஆகாயக் கோட்டைகள் கட்டி மகிழ்ந்தோம். எந்நேரமும் நான் அவனுடைய வீட்டில்தன் இருப்பேன். நூருன்னிசாவும் எங்களுடன்தான் இருப்பாள். நாங்கள் செய்வதையும் பேசுவதையும் உற்றுக் கவனித்துக் கொண்டிருப்பாள். தானும்கூட விளையாடுவாள். தெரியாமல் பின்னால் ஒளிந்து வந்து, என் கண்களைப் பொத்துவதில் அவளுக்கு ஓர் ஆனந்தம். ஏன், எனக்குந்தான் ஒருவித மகிழ்ச்சி அப்பொழுது உண்டாகும். அவளுடைய கைகள், மென்மையாக ரோஜா மலர்போல இருக்கும். கைகளை எடுத்து விட்டுக் கலகலவென்று சிரிப்பாள். அவளுடைய கன்னங்கள் குழிவுபடும். அச்சமயம் என் மனம் என்னவோ நான் எடுத்துச் சொல்ல முடியாத ஒரு மகிழ்ச்சியை அடையும்.

நாலாம் பாரம் வரையில் நானும் குலாமும் இபடி இருந்தோம். திடாரென்று என் தகப்பனாரைத் திருச்சியிலிருந்து மாற்றி விட்டார்கள் பிறகு எனக்கும் குலாமுக்கும் சந்திப்பே கிடையாது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவனிடமிருந்து இந்தக் கடிதம் வந்திருக்கிறதென்றால் என் மகிழ்ச்சியை என்னென்பது ?

மறுநாள் இரவு வண்டியில் சென்னைக்குப் புறப்படேன்.

3

உறவினர்கள் நிறைந்த அந்தப் பங்களாவில் குலாம் என்னைத் தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டு பழைய நாட்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருந்தான். முகம்மது காசிம் என்ற பாடகரின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் ரோஜா மலர்கள்! அத்தரும் பன்னீரும் நீர் பட்டபாடாய் வழங்கப்பட்டன. குலாம் என்னைப் பங்களாவின் மேல் மாடியிலிருந்த ஓர் அறைக்கு அழைத்துச் சென்றான். வெகுநேரம் அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

குலாமின் தாய் மகனைத் தேடிக்கொண்டு அங்கே வந்தாள். நான் இருப்பதைப் பார்த்துச் சட்டென்று பின்வாங்கி முகத்தை மூடிக் கொண்டாள்.

'அம்மா யாரென்று எண்ணுகிறாய் ? நம்... ' என்று குலாம் பேச்சைத் தொடங்கினான்.

'ஆம். நினைவிருக்கிறது. நலந்தானே, தம்பி ? ' என்று கேட்டுக் கொண்டே மெதுவாக அந்த அம்மாள் முன் வந்தாள்.

'நலந்தான், அம்மா! '

'எங்கே இருக்கிறாய் ? '

'திருச்சியில் இருக்கிறேன். '

'திருமணம் ஆயிற்றோ ? '

'இல்லை! '

பேசும்பொழுதே அவ்வுருவிற்குப் பின்னால், இன்னும் ஓர் இளம் உருவம் நிழல் போல நிற்பது போன்ற பிரமை தட்டியது எனக்கு. ஒரு நிமிடம், நூருன்னிசாவே என் முன் தோன்றுவாளோ என்ற ஆசை! மறுநிமிடம், 'சே! அது எப்படி முடியும் ? அவள் பர்தாப் பெண் அல்லவா ? குலாமும் கடிதத்தில் எழுதினதைத் தவிர நேரில் அவளைப் பற்றிய பேச்சே எடுக்கவில்லையே ? ' என்ற நினைப்பு ஏற்பட்டது. அவளைப் பற்றிக் கேட்கக்கூட எனக்குத் தயக்கமாக இருந்தது. அவளை நிச்சயமாகப் பார்க்க முடியாதென்ற எண்ணம் ஏற்பட்ட பிறகுதான் குலாமுடன் வழக்கம் போல் பேசலானேன்.

இரவு பத்து மணிக்குக் குலாம் படுத்துக்கொள்ளச் சென்றான். எனக்கு ஒரு தனியறை ஒழித்துத் தந்திருந்தார்கள்.

என் தனியறையின் தனிமையில் நான் படுக்கையில் படுத்துப் புரண்டேன். மின்சார விளக்கின் வெளிச்சம் எனக்குத் தாங்க முடியாததாக இருந்ததால், அதை அணைத்துவிட்டுச் சாளரத்தைத் திறந்து வைத்தேன். அதன் வழியாக முழுநிலவு என் படுக்கையின் மேலே தன் ஒளியைப் பரப்பியது. படுக்கையில் உட்கார்ந்து கொண்டு எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணினேன்.

அதே வீட்டின் ஒரு பாகத்தில் 'அவளும் ' அப்பொழுது உலவிக் கொண்டிருந்தாளல்லவா!

என் இருதயத்தின் நிலைமையை அவள் அறிவாளோ ? முடியாது. பூவின் அவா மணமாக வெளியேறி உணர்வைத் தாக்குகிறது. நினைவில் புறப்படும் அலை எப்படி அவள் இருதயக் கரையில் போய் மோத முடியும் ? முடியாதுதான்! அக்கடிதத்தில் தன் சகோதரனைக் கருவியாகக் கொண்டு என்னை ஏன் இங்கு வரவழைத்தாள் பின்னே ? என்னிடத்தில் அவளுக்கு ஓர்... அதெப்படி நான் சொல்லுவது ?

இப்படி என் பேதை மனம் கேள்விகளும் மறுகேள்விகளும் போட்டுக் கொண்டு கடல்போல அலையலையாய்ப் பொங்கிக் கொண்டிருந்தது.

நடுநிசி ஆயிற்று. எனக்குத் தூக்கம் வரவே இல்லை. பட்டணத்தின் ஓசையும் அடங்கிவிட்டது. தூரத்திலிருந்து கடலின் ஓலந்தான் காற்றில் மிதந்து வந்தது. திடாரென்று மனத்தில் ஓர் ஆவல் மூண்டது. 'ஒருவேளை இப்பொழுது என்னை நூருன்னிசா பார்க்க வரக் கூடுமா ? அல்லது என்னைத்தான் எங்கேயாவது எதிர்ப்பார்க்கிறாளோ ? ' என்று நினைத்தேன்.

மெதுவான காலடிச் சத்தம் கேட்டது. ஆம், அது நூருன்னிசாதான்! வந்து எனக்கு அருகே இருந்த சாளரத்தின் அப்புறத்தில் நின்றாள். அதே உருவந்தான்! வயதிற்கு ஏற்ற வாட்டசாட்டம் மட்டுமே வேறாக இருந்தது. நிலவில் முகம் தெளிவாகத் தெரிந்தது. இன்னது சொல்கிறேன் என்று அறியாமல் எழுந்து நின்று, 'எண்ணினபடி ஆயிற்றே! ' என்றேன்.

ஒருவிரலால் தன் உதடுகளை அவள் பொத்திக் காட்டினாள். தன் மார்பில் வைத்திருந்த ஒரு கவரை எடுத்து என் கையில் கொடுத்தாள்.

'இதை ஊருக்குப் போய்ப் படி, நாளைக்குக் காலையிலேயே புறப்பட்டு விடு! பார்த்தாய்விட்டது. ஒரு நிமிடம் தாமதிக்கக் கூடாது ' என்று சொல்லித் திரும்பினாள்.

சிறிதுதூரம் சென்று திரும்பிப் பார்த்தாள்! நிலவின் வெளிச்சத்தில் அவளுடைய அழகான முகத்தில், கலவரத்தினால் முத்து முத்தாய் வேர்வை துளித்திருந்ததைக் கவனித்தேன். நான் தாவியோடி அவள் கையைப் பற்றினேன்.

ஒரு நிமிடம் அப்படியே நின்றோம்!

மறுநொடியில் மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு போய்விட்டாள்.

4

மறுநாள் காலை நான் பயணத்திற்குத் தயாராயிருந்ததைக் கண்டு குலாமிம் முகம் வாட்டமடைந்தது.

'என்ன சேதி ' என்றான்.

'அதுதான் ஒருநாள் இருந்தாயிற்றே; மற்றொரு சமயம் சந்திப்போம். எனக்குக் கொஞ்சம் அலுவல் இருக்கிறது ' என்றேன்.

அரைமணிக்குள் அந்தப் பங்களாவை விட்டு வெளியேறி விட்டேன்.

திருச்சியில் காவேரிக்கரை ஓரத்தில் என் அறையிலிருந்து சாளரத்தின் வழியாகத் திரும்பவும் அதே சந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தேன், எவ்வளவு மாறுபட்ட மனநிலையில்! கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பார்த்தேன்.

'இக்கடிதத்தை என் வாக்காகவும் என் அடையாளமாகவும் நீ வைத்துக் கொள்ளலாம். நாம் திருச்சியில் சிறு குழந்தைகளாக விளையாடினபோது என் மனத்தில் உன்னிடம் ஏற்பட்ட பற்று என்னை விட்டு இன்னம் அகலவில்லை. ஏனென்றால், உன் உருவம் எப்போதும் சிலைபோல என்முன் நிற்கிறது.

நான் என்றென்றும் இளமையோடு உன்னுடன் விளையாடுவது போலவே கனவு காண்கிறேன். உன்னை மற்றொரு முறை இந்தப் பிறவியில் பார்க்க வேண்டுமென்ற அவாவும் நிறைவேறி விட்டது. இனி என் நாட்களை முன்பு அவுரங்கசீப்பின் தங்கை ஜெபுன்னிசா கழித்ததுபோல கழிக்கப் போகிறேன். என் தாயிடம் உனக்குத் திருமணமாகவில்லை என்று நீ சொன்னது எனக்குத் திருப்தியைக் கொடுத்தது. இனிமேல் நீ வேறொரு பெண்ணிடம் ஈடுபடாமல் உன் வாழ்நாட்களை என் மனத்தோடு மட்டும் ஒன்றும்படி காலம் கழிப்பாயானால், நானும் சோர்வின்றி வாழ்வேன். அப்படியே செய்கிறேனென்று நீ எனக்குப் பதில் எழுத வேண்டாம். நீ செய்வாய் என்று எனக்கு ஒரு திடநம்பிக்கை இருக்கிறது. அதுவே என் உயிர்நாடி.

நான் மெய்ம்மறந்து உன்னையே நினைக்கிறேன். ஆனால் நாம் இருவரும் இவ்வுலகில் கணவன் மனைவியல்ல. எப்போதும், உடல் ஆசை வேண்டாம் நமக்கு. நினைவென்னும் வானத்தில் ஒளிரும் இன்பமெனும் முழுநிலவுக்குக் களங்கம் உண்டாக்காதிருப்போம்! சரிதானே.

நூருன்னிசா '

அவ்வொளி மயக்கத்தில் அவளே முழு மதியின் உருவில் வந்து என்னிடம் வாக்கு வாங்குவதுபோல் இருந்தது.

என் மனமோகினியின் கட்டளைப்படி நான் உலகவழிகளில் திரிந்து வருகிறேன். நான் செய்யும் எல்லாச் செயல்களிலும் நான் நினைத்ததும் என் முன் தங்கப் பதுமை போல வந்து நின்று என்னை ஊக்கி வருகிறாள். அவள் என் சோர்விலும் என் மனத்தின்முன் குதித்துக் கொண்டு வந்து நின்று எனக்கு ஆறுதல் தருகிறாள்.

நன்றி : கு.ப.ரா. எழுத்துக்கள் - தொகுதி ஒன்று - முதற்பதிப்பு: அக்டோபர் 2002 - அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடு.

திரை - கு.ப.ராஜகோபாலன்

தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான் ஒரு விதமாகவும் பிசகு செய்ததாக அவனுக்குத் தெரியவில்லை. ஆகையால் அவள் கோபித்துக் கொண்டிருப்பாள் என்பதற்கும் இடமில்லை. அதுவுமின்றித் திருமண மான பிறகு, முதல் முதலாக அப்பொழுதுதான் அவளைப் பார்க்க வந்திருந்தான். அதற்கு முன் நேரில் கண்டு பேசினதே இல்லை. ஆகையால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் அதற்குள் கோபித்துக் கொள்ள முடியாது.

ஒருவருக்கொருவர் இடைவிடாமல் கடிதங்கள் எழுதிக்கொண்டார்கள். அவற்றில் அவ்வளவு ஆர்வத்துடனும் உணர்வுடனும் எழுதிவிட்டு, நேரில் வந்தபோது ஏன் அவள் அப்படி இருந்தாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை. தின்பண்டம், பலகாரம், காப்பி எல்லாம் மாமியார் கொண்டுவந்து வைத்தாள். தாம்பூலம் மடித்து வந்தது, அதை யார் மடித்தார்கள்?

மாடி அறையில் அவன் தனியாக எவ்வளவு நேரந்தான் அவளை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பது? பகலெல்லாம் எதிர்பார்த்தான்; இரகசியமாக வருவாளோ என்று இரவில்கூட வெகுநேரம் விழித்துக் கொண்டு படுக்கையில் கிடந்தான்.

கடிதத்தில் வெகு துணிச்சலாக எழுதிவிட்டாள். நேரில் கண்டவுடனே வெட்கம் மேலிட்டு விட்டது போல் இருக்கிறது! ஒருவேளை அப்படி அசடுபோல் கடிதத்தில் எழுதி விட்டோமே என்று பயந்தே தன்னிடம் வராமல் இருந்தாளோ என்று எண்ணினான்.

என்ன சமாதானம் செய்து கொண்டாலும் அவள், அவ்வளவு அருகில், தன்னிடம் வராமல் இருந்ததன் காரணம் அவனுக்கு விளங்கவே இல்லை.

இரண்டாவது நாள் இரவு எட்டு மணி. தொலைவில் கோவிலிருந்து திருவிழாக் கொட்டு முழக்குச் சத்தம் கேட்டது. தெருவில் பெண்கள் கும்பல் கும்பலாகக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். சாளரம் வழியாக உள்ளே விழுந்த வெண் நிலவு அவனது இருதயத்தை வலைபோட்டு வெளியே இழுப்பதுபோல இருந்தது. வெளியுலகத்து இன்பம் அவனை 'வா, வா' என்று அழைத்தது. ஆனால் அப்பொழுது அவனுக்கு அதெல்லாம் காதில் ஏறவில்லை. அந்த அழகு அவன் கண்களில் படவில்லை. அவன் உள்ளம் முழுவதும் ராஜத்தின் மேல் இருந்தது. அவள் எழுதின கடிதங்களின் வாக்கியங்களும் அவளுடைய முகமும் கண்களுமே அவன் முன் நின்றன.

அன்றிராவாவது கட்டாயம் ராஜம் தன்னிடம் வருவாள் என்று எண்ணினான். நடுப்பகல் வேடிக்கையாக மைத்துனனைப் பார்த்து, "உன் அக்கா இந்த ஊரில்தானே இருக்கிறாள்?" என்று கேட்டான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாமியார்கூடக் கொஞ்சம் பதறிப் போய் ஏதோ குசுகுசுவென்று யாருடனோ பேசினாள். யாருடனோ என்ன, 'அவளுடன்' தான். ஆகையால் தன்னுடைய மனநிலையை ஒருவாறு அவர்கள் அறிந்திருந்ததால் அன்றிரவு கட்டாயம் வருவாள் என்றே எதிர் பார்த்தான். முதல் நாளிரவு பாவம், வெகுநேரம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிரமத்தால் தன்னை அறியாமல் தூங்கிப் போய்விட்டான். மறுநாள் காலையில் அவனுக்குக் கோபமும் துக்கமும் வந்து, காப்பி வேண்டாம் என்று சொல்லி விடலாமா என்றுகூட எண்ணினான்.

கீழே வீணை மீட்டும் சத்தம் கேட்டதும் சற்று நேரத்திற்கெல்லாம் சங்கராபரணத்தில் "தாரி சூசுசுன்னதி நீது ப்ரியா" என்ற ஜாவளியை யாரோ பாடிக்கொண்டே வாசித்தார்கள். வேறு யார்? அவள்தான்!

"உன் காதலி உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள், உன் வழி நோக்கிக் கொண்டிருக்கிறாள்" என்று பொருள்படத் தொடங்கிய அந்தப்பாட்டு, படுக்கையறையின் அலங்காரத்தைக் கவர்ச்சி கரமாகச் சித்தரித்தது. இசையும் பாட்டுமாகக் கலந்து அவனது உள்ளத்தை உருக்கின.

"ஆகா! நல்ல ரசிகையாக அல்லவா இருக்கிறாள் ராஜம்! ஏன் இருக்க மாட்டாள் அவளுடைய கடிதங்களே அவ்வளவு கதையாக இருந்தனவே! என்ன வாசிப்பு, என்ன சாரீரம். இதற்கு மேற்பட்ட இன்பம் கிடையா... ஆனால் இதோடு அவளுடைய வாய் வார்த்தை ஒன்றை, என் முன்பு, என் பக்கத்தில், நான் கேட்டால்... இன்பத்தின் மின்னொளியைப் பாய்ச்சும் அவளுடைய கைபட்டதும் எழும்பும் இனிமை என்னுள் பாய்ந்தால் என்ன பேறு பெறுவேன்! ராஜம் வேண்டுமென்றுதான் இப்படி ஏக்கத் தீயிட்டு என் உள்ளத்தை வாட்டுகிறாளோ? எதற்காக இந்தச் சோதனை? என் கடிதங்களில் காணவில்லையா அவள், என் உள்ளத்தின் வேட்கையை? பெண்ணின் கொடுமை உன்னிடங்கூடத்தான் இருக்கிறது. உன் இங்கிதமும், புத்தியும், தேர்ச்சியும், ஈரமும் எங்கே? உன் கடிதங்களிலேயே நின்றுவிட்டனவே அவை! இல்லை, இது சரியன்று. ராஜம் உடனே வீணையைக் கீழே வைத்துவிட்டு என்னிடம் வா! அந்த வீணை எதற்கு உனக்கு? என் இருதய வீணையை மீட்டி வாசி, சுருதி கலைந்து கிடக்கிறேன் நான். குழைவற்றிருக்கிறேன். உன் இழைக்கும் விரல்களால், என்னைச் சுருதி கூட்டிச் சரி செய்து, உன் விரல் விந்தையால், விண்ணொலி கொள்ளச் செய்" என்று உணர்ச்சி மேலிட்டவனாய்த் தனக்குள்ளேயே பிதற்றிக் கொண்டிருந்தான் அவன்.

"உன் காதலி வழி நோக்கிக் கொண்டு கத்திருக்கிறாள்" என்ற பல்லவி திரும்பத் திரும்ப ஓர் ஏக்கக் குரலாக வந்து அவன் காதில் தாக்கிற்று. அவனுக்கு அங்கே இருக்க முடியவில்லை. எழுந்து கீழே இறங்கிப் போனான்.

முற்றத்திலிருந்த மாடிப்படியின் உச்சியில் நின்று கொண்டு கூடத்தைப் பார்த்தான். அங்கே கையில் வீணையுடன் உட்கார்ந்திந்தாள்! ராஜம் அல்ல! அவளுடைய தமக்கையாகத்தான் இருக்க வேண்டும். ஆமாம் அவள் பிறந்த வீட்டில் இருப்பதாகத்தான் சொன்னார்கள். அவள் ஒரு வருஷத்திற்கு முன்பு கணவனை இழந்தவள், பாவம்! அவள் கதை ஒரு சோக நாடகம். எல்லோரும் கதை கதையாகச் சொன்னார்கள். நிரம்பக் கெட்டிக்காரி: அழகு என்றால் அப்படி; கணவன் ஒரு குடிகாரன்; ஈரல் வீங்கி இறந்தான். குடும்பம் என்று அவள் நடத்தி அறியாள்.

அவளா வீணை வாசித்தது! ஏன் அப்படி வாசித்தாள்? வீட்டில் மற்ற எல்லோரும் எங்கே? கோவிலுக்குத்தான் போயிருக்க வேண்டும் - ராஜம் கூட! ஒருவரும் வீட்டில் இல்லாதபொழுது, ஏன் இவள், அவன் கேட்கும்படி வீணையை எடுத்து வைத்துக் கொண்டு இப்படி உருக வேண்டும்?

திடீரென்று அவன் உலுக்கி விழுந்தான். ஒரு வேளை கடிதங்களெல்லாம் இவள் எழுதினவைதாமோ? ராஜத்தின் பெயரை வைத்து இவள்தான் அப்படி உள்ளத்தைக் கொள்ளை கொண்ட முறையில் எழுதினாளோ? ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும்! இல்லாவிட்டால் அவ்வளவு எழுதினவள் இப்போது அருகில்கூட வராமல் இருப்பாளா?

மடமடவென்று அவன் மாடிப்படி இறங்கினான். வீணையும் கையுமாக உட்கார்ந்திருந்த சரசுவதி சட்டென்று வீணையைக் கீழே வைத்துவிட்டு எழுந்திருந்தாள், உள்ளே போய் மறைந்து கொள்ள. அதற்குள் அவன் அவள் அருகில் வந்துவிட்டான். ஒன்றும் செய்யாமல் அப்படியே திகைத்து நின்றாள் சரசுவதி.

கூடத்து மின்சார விளக்கின் வெளிச்சத்தில் அவளது உருவம் நன்றாகத் தெரிந்தது. அவளது உடம்பும் உடையும் ஒரே வெள்ளையாக இருந்தன. தலைமயிரை அசிரத்தையாக முடிந்திருந்தாள். நெற்றியில் குங்குமம் இல்லாததால் அவளது முகம் காலை நேரத்துச் சந்திரன் போல வெளுத்த சோபையற்று இருந்தது. ஆனால் சிறிது நேரத்துக்கு முன்பு வாசித்த பாட்டால் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கில் அதில் இருந்த சோகம் கொஞ்சம் மறைந்து சற்றே ஒளிர்ந்தது.

"நீதானா கடிதங்கள் எழுதினது?" என்று அவன் உடனே கேட்டான்.

"இல்லை, - அவள்தான் எழுதினாள் - அதாவது" என்று ஒன்றும் மேலே சொல்ல முடியாமல் திகைத்தாள் சரசுவதி.

"உண்மையைச் சொல்லிவிடு!"

"அதாவது அவள் சொன்னாள் - நான் எழுதினேன்" என்று அவள் இழுத்தாள்.

"நிஜமாக!"

"அவள் உள்ளம் சொல்லிற்று, நான் பார்த்து எழுதினேன்."

"எப்படித் தெரியும்?"

"எப்படியா -" என்று கேட்டுச் சற்றுத் தயங்கினாள் சரசுவதி.

பிறகு திடீரென்று அவள், "எப்படியா? நான் நினைத்தது போலத்தானே அவள் நினைத்திருக்க வேண்டும்? ஆகையால் அப்படியே எழுதிவிட்டேன்" எனச்சொல்லிவிட்டு, சொல்லக்கூடாததைச் சொல்லிவிட்டது போலவும் கதிகலங்கினவள் போலவும் நாலு புறமும் பார்த்தாள்.

"மாப்பிள்ளை! நீங்கள் இங்கே நிற்கக்கூடாது. மாடிக்குப் போய்விடுங்கள். அவர்கள் வந்து விடுவார்கள். குடி முழுகிப்போகும்" என்று கெஞ்சினாள் பிறகு.

அவன் தீர்மானமாக அங்கே நின்றான். "என்னை ஏன் கூப்பிட்டாய்?" என்று ஏக்கப் பார்வையுடன் கேட்டான்.

"கூப்பிட்டேனா! ஐயோ! இல்லையே! தெரியாமல் செய்திருந்தால் மன்னியுங்கள் - இல்லை - கூப்பிடவில்லை. பிசகு!" என்று சரசுவதி நிலை தவறினவள் போல் பதற்றத்துடன் பேசினாள்.

"ராஜத்தின் மூலமாக -" என்று அவன் ஆரம்பித்தான்.

"இல்லை - வேண்டாம் - எல்லாம் மறந்துவிடுங்கள் தவறு"

"எப்படி மறப்பது சரசுவதி? மறக்கும்படியாகவா எழுதியிருந்தாய் நீ?"

"மன்னியுங்கள்; பிசகு செய்துவிட்டேன் இப்படி ஆகுமென்று தெரியாது!"

"நான் கட்டை என்று எண்ணினாயா?"

"தப்பிதம், தப்பிதம்!" என்று வெறி பிடித்தவளைப் போல சொன்னாள்.

"தப்பிதம் இல்லை; சரசுவதி, உண்மையை எழுதினாய், அல்லவா?"

அவள் குற்றவாளியைப்போல் நடுநடுங்கினாள், உணர்ச்சி மேலிட்டு அழலானாள்.

"சரசுவதி! பயப்படாதே, அம்மா! நீ ஒன்றும் குற்றம் செய்யவில்லை. உண்மையாகவே கட்டைபோல இருந்த என்னைச் செப்பனிட்டு வாத்தியமாக்கி விட்டாய்!"

"இல்லை, இல்லை. அப்படிச் சொல்லாதேயுங்கள்! ராஜந்தான்! நீங்கள் அவள் சொத்து. அவள்தான் உங்களை உருக்க உரிமை பெற்றவள். அவள் எழுதியதாகவே எண்ணுங்கள்."

"இந்தப்பாட்டு -"

"அவள் பாடியதுதான். தேர்ச்சி இருந்தால், அறிந்திருந்தால், அவளே இப்படிப் பாடியிருப்பாள்."

"பாடியிருப்பாள்! - தேர்ச்சியிருந்தால்தானே? சரசுவதி, தைரியமாக நீதான் அவற்றை எழுதினது சொல்லேன், என்ன பிசகு?"

"ஐயோ, கூடாது."

"ஏன்?"

"நான் - நான் - எனக்குக் கை ஏது எழுத? எனக்கு வாய் ஏது - பாட? அவள்தான் என் கை, அவள் தான் என் வாய். அவள் மூலந்தான் எனக்கு வாழ்க்கை. அவள் மூலந்தான் என் உயிர்."

"இன்னும் வேறொன்றும் இல்லையா?" என்று அவன் இளகிக் கொண்டான்.

"உண்டு - அதையும் சொல்ல வேண்டுமா என் வாய் திறந்து?" என்று சரசுவதி ஒருவிதமான அமைதியுடனும் ஏக்கத்துடனும் தன்னையே மறந்து கேட்டுவிட்டாள்.

கோவிலுக்குப் போயிருந்தவர்கள் திரும்பி வந்து வாசற் கதவைத் தட்டினார்கள்.

அவன் மாடிக்குப் போனான். அவள் உள்ளே போனாள்.

இருவருக்கும் நடுவில் மறுபடியும் திரை வந்து கூடிற்று.

ஆனால் திரை என்ன அறியும்?

"ராஜம்! மாடிக்குப் போ!" என்றாள் சரசுவதி, சற்று நேரம் கழித்து.

 

ஆற்றாமை - கு.ப.ராஜகோபாலன்

‘உட்காரேண்டி! போகலாம். என்ன அவசரம்’ என்று சாவித்திரி புரண்டு படுத்துக்கொண்டு சொன்னாள்.
‘இல்லை. அவர் வருகிற நேரமாகிவிட்டது. போய் காபிக்கு ஜலம் போட்டால் சரியாயிருக்கும்!’ என்று எழுந்து நின்றாள் கமலா.

‘ஆமாம், காபி போடுவதற்கு எத்தனை நாழியாகும்? வந்த பிறகு கூடப் போகலாம். உட்கார். எனக்குப் பொழுதே போகவில்லை.’

 

அப்பொழுது ‘கமலா’ என்று கூப்பிட்டுக்கொண்டே ராகவன் வந்துவிட்டான்.

‘பார்த்தாயா. வந்துவிட்டார்!’ என்று சொல்லிவிட்டு கமலா தன் அறைபக்கம் ஓடினாள்.

சாவித்திரி படுத்தபடியே தலைநிமிர்ந்து பார்த்தாள்; ராகவன் மனைவியைப் பார்த்து சிரித்துக்கொண்டே உள்ளே நுழைந்தான். கமலா, ‘அதற்குள் நாழியாகிவிட்டதா?’ என்று கேட்டுக்கொண்டே பின்னால் போனாள்.

அறை சற்று தூரத்திலிருந்தபோதிலும் கொஞ்சம் சாதாரணமாகப் பேசினால் காதில் விழாத தூரத்தில் இல்லை. இளம் தம்பதிகளுக்கு அக்கம் பக்கம் ஞாபகம் சில சமயங்களில் இருக்கிறதே இல்லையல்லவா?

‘போங்கள்; இதென்ன விளையாட்டு. யாராவது வரப் போகிறார்கள்!’ என்று கமலா மகிழ்ச்சியுடன் சொன்னது அரை குறையாக சாவித்திரி காதில் பட்டது. அந்த அறையில் பொங்கிய இன்பம் ஏறிய காற்று சாவித்திரியிடம் வந்தபொழுது அவள் மூச்சு திணறிற்று. வேதனை உள்ளத்தையும், உடலையும் ஏதோ செய்ய, பெருமூச்சு விட்டுக்கொண்டு குப்புறப்படுத்துக்கொண்டாள்.

சாவித்திரியின் புருஷன் வடக்கே எங்கோ மிலிடரி சர்வீஸில் இருந்தான். சாஸ்திரத்துக்காக சாந்தி முகூர்த்தம் நடந்த மூன்று நாள் இருந்துட்டு அவசர அவசரமாகப் போய்விட்டான். வருஷம் இரண்டாயிற்று. கடிதங்கள் வந்தன. ஆள் வரக்காணோம்.

சாந்திமுகூர்த்தம் ஆகாமல் வைத்திருந்தால் நாலுபேர் ஏதாவது சொல்லுவார்கள் அல்லவா? அதற்காக சம்பந்திகள் இருவரும் சேர்ந்து முகூர்த்தத்தை நடத்திவிட்டார்கள். பிறகு பெண்ணை விட்டுவிட்டுப் பையன் எவ்வளவுக் காலம் இருந்தாலும் பாதகமில்லை. நாலு பேர் பிறகு வாயைத் திறக்கமாட்டார்கள்.

ஆனால், அந்தச் சாந்திமுகூர்த்தம் சாவித்திரிக்கு யமனாகத்தான் பட்டது. உள்ளத்தை அவள் ஒருவிதமாக முன்போலவே அடக்கி ஒடுக்கிவிட்டாள். உடல்தான் ஒடுங்க மறுத்தது. ஒடுங்கின உள்ளத்தையும் தூண்டிவிட்டது. அந்த மூன்று நாள் அனுபவித்த ஸ்பரிச சுகத்தை அதனால் மறக்க முடியவில்லை. வாய்விட்டு அலறிற்று.

சாவித்திரி நல்ல சரீரக்கட்டு படைத்த யுவதி. இளமைச் செருக்கு அவள் உடலில் மதாரித்து நின்றது. அதன் இடைவிடாத வேட்கையை அவளால் சகிக்கமுடியவில்லை.

‘இந்த கமலாவுக்கு எவ்வளவு கொழுப்பு! அகமுடையான் அருகில் இருந்தால் இப்படியெல்லாமா குதிக்கச் சொல்லும்? என்னிடம் வந்து என்ன பீத்திக்கொள்வது வேண்டியிருக்கிறது? நான் கிடக்கிறேன் வாழாவெட்டி போல. என்னிடம் வந்து என்ன கும்மாளம்! இல்லை. வேண்டுமென்றுதான். நான் பார்த்து வேதனைப்பட வேண்டும் என்றுதான் இப்படியெல்லாம் செய்கிறாள் போலிருக்கிறது! சதா இவள் அகமுடையான் சொன்னது என்ன பிரதாபம்! இவள்தான் அகமுடையானைப் படைத்தவளோ?... ஏன் தலைகீழா நிற்கமாட்டாள். உடனொத்தவள் நான் தனியாகக் கிடந்து சாவதைப் பார்த்து நாம் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறோமே என்று அவளுக்குப் பெருமை! நான் நொந்துகிடக்கிறேன், நொந்துபோயிருப்பேன் என்று கொஞ்சமாவது அவளுக்குத் தோன்றினால் _ எப்படித் தோன்றும்? பட்டால் அல்லவா தெரியும் அவளுக்கு.’

சாவித்திரி பொருமிக்கொண்டே படுத்திருந்தாள்.

‘ஏண்டி, ஏந்து குழாய் ஜலம் எடுத்துக்கொண்டு வந்து வைக்கப்படாதோ, இந்தா காபி!’ என்று அவள் தாயார் வந்தாள்.

‘எல்லாம் ஆகட்டும். அதற்குத்தானே பெத்தே என்னை. செய்கிறேன். போ!’

‘இதோ இருக்கு காபி. நான் அந்த தெருவுக்குப் போயிட்டு வரேன். ராத்திரிக்கு வரமுடியாதோ என்னவோ...’ ‘நீ வந்து இங்கே என்ன செய்யப்போறே. உங்கண்ணா ஆத்துலேயே இருந்துட்டுவா!’

‘ராத்திரி ஜாக்கிரதையா கதவைத் தாப்பா போட்டுண்டு...’

‘ஆகட்டும், ஆகட்டும் போ!’

அவள் தாயார் நார்மடிப் புடவையைச் சரிபடுத்திக்கொண்டு விபூதி இட்டுக்கொண்டு அந்தத் தெருவுக்குப் புறப்பட்டுப் போனாள். சாவித்திரியின் பக்கத்திலிருந்த காபியின் சூடு ஆறிவிட்டது. சாவித்திரியின் உள்ளத்திலிருந்த சூடு ஆறவில்லை.

புருஷன் ஆபீஸ் போனதும் கமலா வந்தாள். ‘அம்மாமி காபி சாப்பிடல்லயா?’

சாவித்திரி அவளை அசூயையுடன் பார்த்துக்கொண்டு ‘ஆறிப் போய்விட்டது, சாப்பிடவில்லை!’ என்றாள்.

‘நான் தரட்டுமா? அவருக்குச் சாயந்திரத்திற்குப் பிளாஸ்கில் போட்டு வைத்திருக்கிறேன். தரேனே, பிறகு போட்டால் போச்சு!’

‘வேண்டாம், எனக்கு வேண்டியிருக்கவில்லை. நெஞ்சைக் கரிக்கிறது.’

‘இன்னிக்கி சினிமாவுக்குப் போவோமான்னேன், நாளைக்கு ஆகட்டும்னார். நீங்களும் வர்ரேளா அம்மாமி?’

‘நன்னாயிருக்கு, நீங்க இரண்டுபேரும் தமாஷா போகிறபோது நான் நடுவில்...’

‘போங்க அம்மாமி!’ என்று சந்தோஷத்துடன் கூறினாள் கமலா. சாவித்திரிக்குக் கமலாவின் பூரிப்பு விஷமாக இருந்தது.

‘என்ன அம்மாமி, உடம்பு ஒரு மாதிரி இருக்கேளே?’

‘எனக்கென்ன கேடு, ஒன்றுமில்லை.’

‘கருகிய மொட்டு’ என்று ஒÊரு நாவல் கொண்டு வந்திருக்கிறார். படிக்கலாமா?’ என்று சொல்லி, கமலா எழுந்துபோய் புத்தகத்துடன் வந்து உட்கார்ந்தாள்.

மேல் அட்டையில் சித்திரம் ஒன்று. அதை கமலா வெட்கத்துடனும் சிரிப்புடனும் சாவித்திரிக்குக் காட்டினாள்.

ஒருவன் நாற்காலியில் உட்கார்ந்து ஆழ்ந்து யோசனையிலிருக்கிறான். கையிலிருந்த புத்தகம் கீழே விழுந்து கிடக்கிறது. பின்னால் மனைவி வந்து புன்னகையுடன் நிற்கிறாள். அவனுக்குத் தெரியாமல்.

‘இதற்கு என்ன அர்த்தம் அம்மாமி?’ என்று கமலா கேட்டாள்.

‘புருஷன் ஏதோ கவலைப்பட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறான். தருணம் தெரியாமல் அசட்டுமனைவி சிரித்துக்கொண்டு வந்து நிற்கிறாள்போல் இருக்கிறது.’

கமலாவின் புன்னகை மறைந்துவிட்டது.

‘அப்படியா இருக்கும்?’

‘வேறென்ன இருக்கப்போகிறது?’ என்று சாவித்திரி சிரித்துக்கொண்டே குரூரமாகச் சொன்னாள்.

‘இருக்காது, அம்மாமி!’

‘பின் எப்படி இருக்கும்?’

‘வந்து, வந்து புருஷன் அவளை, நினைத்துக்கொண்டே படிக்கிறான். மெய்மறதியில் புத்தகம் கீழே விழுகிறது. அவள் வெகு நேரம் வரவில்லை. கடைசியில்...’

‘அதுதான் இருக்கவே இருக்கே!’

‘படிக்கலாமா?’

‘படியேன்.’

கமலா படித்தாள் வெகுநேரம். சாவித்திரி காதில் எவ்வளவு விழுந்ததோ?

‘ஐயோ, நாழியாகிவிட்டதே! படித்துக்கொண்டே இருந்துவிட்டேன். போகிறேன்!’ என்று கமலா மாலை ஐந்து மணிக்கு எழுந்து தன் வீட்டிற்குப் போனாள்.

சாவித்திரி எழுந்திருக்கவில்லை. வீடு கூட்டுகிறவள் வந்தாள். ‘நான் கூட்டிக்கொள்கிறேன் போ!’

பூக்காரி வந்தாள்.

‘இன்னிக்கிப் பூ வாண்டாம்!’

இருட்டிவிட்டது. இருட்டி வெகுநேரம் ஆகிவிட்டது. ராகவனும் கமலாவும் கொட்டம் அடித்தது அவளுக்குச் சகிக்கவே இல்லை. வீட்டில் அயலார் இருப்பதுகூட அவர்களுக்கு நினைவில்லையா? ஆத்திரத்துடன் எழுந்து மின்சாரவிளக்கைப் போட்டுவிட்டு மறுபடியும் படுத்துக்கொண்டாள்.

‘இலை போட்டுவிட்டேனே வாருங்களேன்!’ என்றால் கமலா.

‘அதற்குள்ளா... இப்பவே சாப்பிட்டுவிட்டு...’

‘எனக்குத் தூக்கம் வருகிறது.’

‘தூக்கம் வருகிறதா!’ என்று ராகவன் சிரித்தான். சாவித்திரி காதில் எல்லாம் விழுந்தது.

கமலா இலையை வாசலில் கொண்டு போட்டுவிட்டு கம்பிக் கதவையும், ரேழிக் கதவையும் தாழ்ப்பாளிட்டுக்கொண்டு திரும்பினவள் எதிர்த்த உள்ளில் சாவித்திரி மயங்கி மயங்கிப் படுத்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, ‘அம்மாமி, சாப்பிட்டாச்சா?’ என்றாள்.

‘ஆச்சு!’

கமலா உள்ளே போய்த் தாளிட்டுக் கொண்டாள்.

கலியாணக்கூடம் போட்ட வீடு. இரண்டு பக்கங்களிலும் குடி. இரண்டு பக்கக்கூடத்து உள்ளுகளுக்கும், ரேழியிலும் கதவுகள்.

இரவு எட்டே மணிதான் இருக்கும். ஊர் ஓசைகூட அடங்கவில்லை. கமலாவின் பக்கத்தில் ஓசை அடங்கிவிட்டது. சாவித்திரிதான் எழுந்திருக்கவே இல்லை.

‘ராகவன்!’ என்று வாசலில் மெதுவான குரல் கேட்டது.

முதலில் சாவித்திரி வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டாள். பிறகு Êஏதோ நினைத்துக்கொண்டு எழுந்து மெதுவாக ரேழிக்கதவைத் திறந்துகொண்டு திண்ணையண்டை போனாள்.

வாசலில் ராகவன் வயதுள்ள வாலிபன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

‘ராகவன் இருக்கிறாரா?’

‘இருக்கார்!’ என்று சாவித்திரி கம்பிக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே திரும்பினாள்.

வாலிபன் ரேழிக்கு வந்து தயங்கினான்.

சாவித்திரி சற்று மெதுவான குரலில் ‘அந்த ரேழிக்கதவைத் தட்டுங்கள்!’ என்றாள் ஜாடையுடன்.

வாலிபன் திரும்பவும் தயங்கினான்.

‘வெறுமனே தட்டுங்கள், திறப்பார்!’ என்றாள். ஒருவிதமான குரூர ஆனந்தத்துடன் சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் போய் உட்கார்ந்து கொண்டு, ஆவலுடன் நடைபெற போவதை எதிர்பார்த்தாள்.

வாலிபன் ‘ராகவன்’ என்று கதவைத் தட்டினான்.

சிறிது நேரங்கழித்து ‘யார்?’ என்ற உறுமல் கேட்டது.

‘நான்தான்!’

‘நான்தான் என்றால்?’ என்று சீறிக்கொண்டு ராகவன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே இருந்தபடியே எட்டிப்பார்த்தான்.

‘நான்தான் சீனு, மதுரை.’

‘ஓ, வாருங்கள்!’ என்று ராகவன் பலதரப்பட்ட உள்ளக்கலவரத்தில் கதவைத் திறந்தபடியே விட்டுவிட்டு ரேழியில் நுழைந்து சீனுவை வாசலுக்கு அழைத்துக்கொண்டு போனான்.

ஒரு வினாடி சீனுவின் கண்களில் ஒரு காட்சி தென்பட்டது. மின்சார விளக்கு எரிந்துகொண்டிருந்தது. வாசற்படிக்கு எதிரே கமலா ஆடை நெகிழ்ந்த நிலையில் படுத்திருந்தவள் ராகவன் உடம்பு கதவு திறந்த இடத்திலிருந்து விலகினதும் சடாரென்று எழுந்து கட்டிலை விட்டுக்குதித்து சுவரோரம் ஓடினாள்.

சாவித்திரி இன்னும் கொஞ்சம் நன்றாகப் பார்த்தாள். கமலா தலையில் கட்டுப்பூ தொங்கிக்கொண்டிருந்தது. அறையிலிருந்து மல்லிகை வாசனையும் ஊதுவத்தி வாசனையும் கம்மென்று வெளியேறின.

அந்தரங்கம் திறந்துகிடந்தது போன்ற அந்த அறையை அதற்கு மேல் அவளால் பார்க்கமுடியவில்லை. ஏகாந்தம் ஆடையற்று நின்றது போன்ற அந்த ஒளி அவள் கண்களுக்குக் கூச்சத்தைக் கொடுத்தது. சத்தப்படாமல் அறைக்கதவைச் சாத்திக்கொண்டாள்.

திடீரென்று ஒரு வருத்தமும், பச்சாதாபமும் தோன்றி அவளைத் தாக்கின.

‘என்ன காரியம் செய்தேன்!’ என்ன பாவம் செய்தோ, யாரைப் பிரித்துவைத்தோ இப்பொழுது இப்படித் தனியாகக் கிடந்து தவிக்கிறேன். ஐயோ...’

அளவற்ற ஆவலில் ஒன்றையொன்று கவ்விக்கொண்டு கலந்த இரண்டு உள்ளங்கள் ஒரு கணத்தில் சிதறி தூரத்தில் விழுந்தன. கமலா கண்ணீர் பெருகாத தோஷமாக, மகாகோபத்துடன் ஆடையைச் சீர்திருத்திக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டுப் படுக்கையில் படுத்தாள்.

சீனுவை அனுப்பிவிட்டு ராகவன் உள்ளே வந்தான்.

மெதுவாகக் கட்டிலில் ஏறிக் கமலாவைத் தொட்டான். கமலா அவன் கையைப் பிடுங்கி உதறி எறிந்தாள்.

‘இன்னொரு கதவையும் நன்றாகத் திறந்து விடுகிறதுதானே!’

‘ஓ, ஞாபகமில்லை கமலா!’

‘ஞாபகம் ஏன் இருக்கும்?’

‘சின்ன விஷயத்துக்கு ஏன் பிரமாதப் படுத்துகிறாய்?’

‘சின்ன விஷயமா? என் மானம் போய்விட்டது.’

ராகவனுக்கு அதுவும் இதுவுமாக எரிச்சல் கிளம்பிற்று.

‘எவ்வளவு போய்விட்டது?’ என்று சீறினான்.

‘போதும் வாயை மூடுங்கள். அண்டை அயல் இருக்கிறது!’ என்று அவளும் சீறினாள்.

சாவித்திரியின் காதில் இதுவும் விழுந்தது. குப்புறப்படுத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.

‘பாவியை என்ன செய்தால் என்ன?’ என்று புலம்பினாள்.

கமலா மூக்கைச் சிந்தும் சத்தம் கேட்டது.

‘திருப்திதானா பேயே!’ என்று சாவித்திரி தன்னைத் தானே உரக்கக் கேட்டுக்கொண்டாள்.

கனகாம்பரம் - கு.ப.ராஜகோபாலன்

1

‘மணி!’ வாசலில் நின்று கொண்டே ராமு கூப்பிட்டான். நண்பன் வீட்டில் இருக்கிறானோ இல்லையோ என்று அவனுக்குச் சந்தேகம்.

‘எங்கேயோ வெளிலே போயிருக்கா. நீங்க யாரு?’ மணியின் மனைவி கதவண்டை நின்றுகொண்டு மெல்லிய குரலில் கேட்டான்.

ராமுவுக்குக் கொஞ்சம் தூக்கி வாரிப்போட்டுவிட்டது.

மணியும் அவனும் கலாசாலையில் சேர்ந்து படித்தவர்கள். மணியின் மனைவியைப் பற்றி அவனுக்கு அதிகமாகத் தெரியாது. அவளை அவன் அதுவரையில் பார்த்ததுகூட இல்லை. புதுக்குடித்தனம் நடத்த அவள் சென்னைக்கு வந்து ஒரு மாதந்தான் ஆகியிருந்தது. அந்த மாதம் முழுதும் ராமு சென்னையில் இல்லை. அதற்கு முன் சாரதாவும் அவனைப் பார்த்ததில்லை.

ராமுவும் மணியைப் போல மிகவும் முற்போக்கமான கொள்கைகள் உடையவன்தான். கலாசாலை விவாதங்களிலும் சர்ச்சைகளிலும் பேசியபொழுது, ஸ்தீரி புருஷர்கள் சமானர்களாகப் பழக வேண்டுமென்றும், பெண்களின் முன்னேற்றம் மிகவும் அவசியமான சீர்திருத்தமென்றும் ஆவேசத்துடன் கர்ஜித்து வந்தான். ஆனால் அநுஷ்டானத்தில் அந்தக் கொள்கைகள் சோதனைக்கு வந்தபொழுது அவன் கலவர அடைந்துவிட்டான். முன்பின் பரிச்சயமின்றி மணியின் மனைவி தன்னுடன் பேசியது அவனுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் அதைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ‘வீட்டில் மணி இல்லாவிட்டால் பதில் வராது. கொஞ்சநேரம் நின்று பார்த்துவிட்டுப் போய் விடுவோம்’ என்றே அவன் ஒரு குரல் கூப்பிட்டுப் பார்த்தான்.

மணியின் மனைவி சாரதா படித்த பெண்ணும் அல்ல; அசல் கிராமாந்தரம்; எந்தப் பக்கத்திலும் ரெயில் பாதைக்கே இருபது  மைல் தூரத்திலுள்ள ஒரு சோழ தேசக் கிராமத்துப் பெரிய மிராசுதாரின் பெண். அவளுடைய நடை உடை பாவனைகளிலும், அந்தச் சில நிமிஷங்களில் அவன் கண்களில் பட்டமட்டில் ஒரு விதப் புதுமாதிரியான சின்னமும் காணவில்லை.

விலையுயர்ந்த பெங்களூர்ப் பட்டுச் சேலையை நேர்த்தியாகக் ‘கொசாம்’ விட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம் கொண்ட பழையமாதிரி ரவிக்கைதான் அணிந்திருந்தாள். தலைமயிரை நடுவே வகிரெடுத்துத்தான் பின்னிக் கொண்டிருந்தாள். பின்னல்கூட, நவநாகரிகப் போக்குப்படித் ‘தொள தொள’வென்று காதை மூடிக் கொண்டு இருக்கவில்லை. பின்னலை எடுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். நெற்றியில் பூர்ணசந்திரன் போலப் பெரிய குங்குமப்பொட்டு இருந்தது. உடம்பின் மேலிருந்த வைரங்கள் பூத்துக்கொட்டிக் கொண்டிருந்தன. மூக்கில் புலாக்கு இருந்தது. கைக்காரியமாக இருந்தவள், அவசரமாக யாரென்று பார்த்துப் பதில் சொல்ல வந்தாள் என்பது அவள் தோற்றத்திலிருந்து தெரிந்தது. அப்பேர்ப்பட்டவள் தன்னுடன் வந்து பேசினதும் ராமு மனம் தடுமாறிப் போனான்.

ஒரு பெண் வந்து தன்னுடன் பேசிவிட்டாள் என்பதால் அவன் கூச்சமடையவில்லை. கலாசாலையிலும் வெளியிலும் படித்த பெண்கள் பலருடன் பேசிப் பழகினவன் தான் அவன். அது அவனுக்கு சகஜமாயிருந்தது. இந்தப் படிக்காத பெண் தன்னுடன் பேசினதுதான் அவனுக்குக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. படித்த பெண்கள் கூடப் புது மனிதர்களிடம் பேசுவது கஷ்டமாயிற்றே! அப்படியிருக்க, நவநாகரிக முறையில் ஆண்களுடன் பழகுவது என்பதே அறியாத பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த பெண் பிற புருஷனுடன் பேசுவதென்றால், அது ராமுவுக்கு விபரீதமாகப்பட்டது. ஆனால் அவள் சொன்ன வார்த்தைகள் மெல்லிய தொனியுடன்தான் வெளிவந்தன. அவன் முகத்தைப் பார்த்துக்கூடப் பேசவில்லை அவள். தலைகுனிந்த வண்ணமாகவே இருந்தாள். இருந்தாலும் அவன் மனம் என்னவோ சமாதானப்படவில்லை.

‘நான் - நான் - மணியின் சிநேகிதன் - ‘ என்று சொல்லி மேலே என்ன சொல்லுவது என்பது தெரியாமல் தத்தளித்தான்.

‘இதோ வந்துடுவா உள்ளே வந்து உட்காருங்கோ’ என்றாள் சாரதா.

அதைக் கேட்டதும் உண்மையிலேயே ராமு திகைத்துப் போனான். தலை கிர்ரென்று சுற்றிற்று. ஏதோ தப்புச் செய்துவிட்டவன்போலச் சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரு சிறு தனிவீட்டில், தனியாக இருக்கும் இளம்பெண் தன்னை உள்ளே வந்து உட்காரச் சொன்னாள்! - அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

‘இல்லை, அப்புறம் வரேன்’ என்று அரைகுறையாகக் கூறி தலையெடுத்துப் பார்க்காமல் வெகு வேகமாய்ப் போய்விட்டான்.
2

ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் இலையும் காய்கறியும் வாங்கிக்கொண்டு மணி உள்ளே நுழைந்தான்.

'உங்க சிநேகிதராமே? - வந்து தேடினார்’ என்று சாரதா குதூகுலமாகக் குதித்துக்கொண்டு அவனை எதிர்கொண்டு போய்ச் சொன்னாள். அவள் மேனியும் குரலும் ஒரு படையெடுப்புப்போல் அப்பொழுது அவனைத் தாக்கின. மணி புதுக்குடித்தனத்தின் தொல்லைகளிலும் தன்னை வந்து தாக்கிய அந்த இன்ப அலையை அநுபவித்து ஆறுதல் அடைந்தான்.

‘யார் அது?’ என்று அவளுடைய கன்னத்தைக் கிள்ளிக்கொண்டு கேட்டான்.

‘யார்னு கேக்கல்லே’ என்று சொல்லிக்கொண்டு வலி கொண்டவள் போலப் பாசாங்கு செய்து, ‘ஹா!’ என்றாள்.

திடீரென்று மணியின் முகம் சிவந்தது, கோபம் பொங்கி எழுந்தது.

‘எவ்வளவு தரம் சொல்லுகிறது உனக்கு? யார் என்று கேட்கிறது என்ன கேடு உனக்கு? ஒரு வார்த்தை கேட்டுவிட்டால் என்ன மோசம்? உன் கையைப் பிடிச்சு இழுத்துடுவாளோ?’ என்று வார்த்தைகளை வீசினான்.

ஒரு வாரத்திற்கு முன்புதான் இப்படி ஒரு சம்பவம் நடந்து மணி சாரதாவைத் தாறுமாறாகக் கோபித்துக் கொண்டான். ‘பட்டணத்தில் நண்பர்கள் அடிக்கடி தேடுவார்கள்; பதில் சொல்லாமல் உள்ளே நுழைந்து கொண்டு கதவைச் சாத்திக்கொள்ளக் கூடாது; பட்டணத்தின் நாகரிகத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும்’ - இந்த மாதிரி உபதேசங்கள் செய்து முடித்தான். அதன் காரணமாக இருவரும் இரண்டு நாள் பேசாமல்கூட இருந்தார்கள்.

இந்தத் தடவை, தான் சொல்லப்போகிற பதில் மணிக்கு மிகவும் சந்தோஷத்தை உண்டாக்கப் போகிறது என்ற நிச்சயமான எண்ணத்தில், ‘வேண்டிய மட்டும் பேசட்டும்’ என்று சாரதா வாயை மூடிக் கொண்டிருந்தாள். பிறகு அவன் ஓய்ந்ததும் சாவதானமாகப் பதில் சொன்னாள்.

‘யாருன்னு கேட்டேன். சிநேகிதன்னு சொன்னார். பேர் சொல்லல்லே. ‘உள்ளே வந்து உக்காருங்கோ; வந்துடுவா’ன்னேன். அப்புறம் வரேன்னு போய்ட்டார்’.

சாரதா ஆவலுடன் மணியின் முகத்தைக் கவனித்தாள். அதில் எவ்விதமான சந்தோஷக் குறியும் தோன்றாததைக் கண்டு அவள் முகம் சுண்டிப் போய்விட்டது. சடக்கென்று திரும்பி உள்ளே போய்விட்டாள்.

மணியோ அந்த மாதிரிப் பதிலை அவளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. முதலில் அவனுக்கு முகத்தில் அடித்தாற்போல் இருந்தது அவள் பதில்; பிறகு தான் சொன்னதற்கு மேலாக, அதியாக அவள் நடந்து கொண்டுவிட்டது அவனுக்கு அதிருப்தியை உண்டாக்கிற்று. அதன் பிறகு ஏன் அப்படிச் செய்தாள்? நாம் சொன்னதற்காகக் கீழ்படிந்து நடந்த மாதிரியா அது? அல்லது... என்று கொஞ்சம் அவன் மனம் தடுமாற ஆரம்பித்தது. எல்லாம் சேர்ந்து அவன் வாயை அடக்கிவிட்டன. சாரதாவும் அவனைச் சாந்தப்படுத்தவோ பேச்சில் இழுக்கவோ முயலவில்லை. அவளுக்கும் கோபம்.

சாப்பாடு முடிந்து வெளியே போகும்வரை மணி ஒருவார்த்தை கூடப்பேசவில்லை. தெருவழியாகப் போய்க்கொண்டே என்ன என்னவோ யோசித்தான். அவன் மனம் சொல்லமுடியாத வேதனையை அடைந்தது. சாரதா அவ்வளவு தூரம் போய்விடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. படித்த பெண் அம்மாதிரி செய்திருந்தால் அதில் ஒன்றும் விசேஷம் இராது. ஒரு கிராமாந்தரப் பெண், முகம் தெரியாதவனை உள்ளே வந்து உட்காரச் சொன்னது மிகவும் அநாகரிகம். சிநேகிதன் என்ன நினைத்திருப்பான்? ‘என்ன தைரியம் இந்தப் பெண்ணிற்கு?’ என்றோ, அல்லது ‘சுத்த அசடு!’ என்றோ நினைத்திருப்பான் அல்லது....

இம்மாதிரி யோசித்துக்கொண்டே போய்க் கொண்டிருந்தான்.

எங்கேயோ போய்விட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்த ராமு, தெருவில் மணி எதிரே வருவதைக் கண்டு மிகவும் சங்கடமடைந்தான். அப்பொழுது மணியைக் கண்டு பேசுவதா வேண்டாமா என்று கூட அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. வீட்டுக்கு வந்திருந்ததாகச் சொல்வதா வேண்டாமா? அவன் மனைவி சொன்னதைச் சொல்வதா வேண்டாமா? இப்பேர்ப்பட்ட பிரச்சினைகள் எழுந்தன. ஒருவேளை மணியின் அநுமதியின் பேரில் அவ்வளவு சகஜமாகப் பேசியிருந்தால் சரியாய்ப் போய்விடும். இல்லாவிட்டால் தான் சொல்லுவதால் அந்தப் பெண்ணின் அசட்டுத்தனமோ, அல்லது அறியாமையோ மணிக்குக் கோபத்தை உண்டாக்கினால்? அவர்களிடையே பெருத்த மனத்தாங்கல் ஏற்பட்டால்? யார் கண்டார்கள்? மனித சுபாவம் எது வேண்டுமானாலும் நினைக்கும். அந்த மாதிரி மனஸ்தாபத்திற்குத் தான் காரணமாகக்கூடாது. அவள் தானாக மணியிடம் முழுவதும் சொல்லியிருக்கிறாள் என்பது என்ன நிச்சயம்? சொல்லியிராவிட்டால் அசட்டுத்தனம் ஆபத்தாக அல்லவோ முடியும்?

இவ்விதம் எண்ணியவனாய், ராமு, சடக்கென்று ஒரு சந்தில் திரும்பி மணியின் கண்ணில் படாமல் தப்பினான். ஆனால் அன்று காலையில் நடந்த சம்பவத்தைத் தன் மனத்தைவிட்டு அகற்ற அவனால் முடியவில்லை. அந்தப் பால்வடியும் புதுமுகத்தின் களங்கமற்ற பார்வை; தடங்கல், திகைப்பு, பயம் இவையற்ற அந்தத் தெளிவான சொற்கள்! ‘இதோ வந்துடுவா!’ என்றாள் அவள். அதில் என்ன நேர்மை! என்ன மரியாதை! இன்னும், தன்னை உள்ளே வரும்படி அழைத்ததில் என்ன நம்பிக்கை! - தன் புருஷனின் நண்பன் என்றதால் ஏற்பட்டது! ‘சே, சே, அந்த நாலு வார்த்தைகளில் அவள் எவ்வளவு அர்த்தத்தை வைத்து விட்டாள்! நமையும் நம்பினாள்... அவளா அசடு? அதனால்தான் எனக்கு அந்தக் கலவரம் ஏற்பட்டது.  மணியை மாலையில் கண்டு அவனிடம் சொல்ல வேண்டும்’. இந்த மாதிரி எண்ணிக்கொண்டு ராமு நடந்தான். ஆனால் தான் முதலில் அந்தப் பேச்சை எடுப்பதற்கு முன்பு, நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டுமென்று தீர்மானித்தான். மாலை ஏழு மணிக்குச் சென்றால் அவன் நிச்சயம் வீட்டிலிருப்பான் என்று எண்ணினான்.
3

மாலை ஆறு மணி இருக்கும். சாரதா வீட்டுக்காரியங்களைச் செய்து முடித்துவிட்டு அறையில் தலையை வாரிப் பின்னிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். பக்கத்தில் ஒரு தட்டில் தொடுக்கப்படாத கனகாம்பர புஷ்பங்கள், எதிரே முகம் பார்க்கும் கண்ணாடி, ரிப்பன், சீப்பு, வாசனைத் தைலம் முதலியவை இருந்தன.

உள்ளே நுழைந்த மணிக்கு இவற்றையெல்லாம் பார்த்ததும் ஏதோ ஒரு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது.

‘இது என்ன பூவென்று இதை நித்தியம் வாங்கித் தலையில் வைத்துக் கொள்ளுகிறாய்?’ என்று அவன் அவலை நினைத்துக்கொண்டு உரலை இடித்தான்

ஆனால், கனகாம்பரத்தைத்தான் அவன் சொல்லுகிறான் என்று நினைத்துச் சாரதா, அந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவனது பட்டண நாகரித்தை இடித்துக் காட்ட வேண்டுமென்று தீர்மானித்தாள்.

‘பட்டணத்துலே எல்லோரும் இதைத்தானே வச்சுக்கறா? சங்கீத வித்வத்சபைலே கூட இதைத்தானே தலைதாங்காமெ வச்சுண்டு வந்தா?’ என்று சாரதா சொன்னாள்.

‘எல்லாம் பட்டணத்துலே செய்யறாப்பலே செய்யணும்னு யார் சொன்னது? அப்படி  கட்டாயமா? பட்டணத்துப் பெண்கள் மாதிரிதான் இருக்கு, அவர்கள் வைத்துக் கொள்ளுகிற கனகாம்பரமும். வாசனையில்லாத பூவை எங்கேயாவது தலையில் வைத்துக்கொள்வதுண்டா? காக்கரட்டான் பூவைத் தலையில் வச்சுக்கற பெண்களுடைய வாழ்க்கை ரஸனையும் அப்படித்தான் இருக்கும்.’

’நீங்கதானே நான் பட்டணத்துப் பெண் மாதிரி இருக்கணும்னேள்? இல்லாட்டா ஒங்களுக்கு வெக்கமா இருக்கும்னேளா?’ என்று சாரதா மணியின் முகக்குறியை ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொண்டு கூறினாள்.

‘அதுக்காக மூணாம் மனுஷனைப் போய் ஆத்துக்குள்ளே வந்து உக்காருங்கறதோ?’ என்று மணி ஆத்திரத்தில் கொட்டிவிட்டான்.

சாரதாவின் முகம் சட்டென்று மாறுதல் அடைந்தது. என்ன கிராமாந்தரமானாலும் அவள் பெண்; அளவு கடந்த கோபத்துடன் மணியின் முகத்தை ஒரு நிமிஷம் ஏறிட்டுப் பார்த்தாள். அவன் எண்ணங்கள் அவன் முகத்தில் அவளுக்குப் பட்டவர்த்தனமாகத் தெரிந்தன. தனக்கு - தன் பெண்மைக்கு -அவன் செய்த அவமரியாதையை அறிந்தவள் போல அவளுடைய முகத்தில் ஓரு ஆழ்ந்த வெறுப்புக்குறி தோன்றிற்று. பாதி போட்ட பின்னலை அவிழ்ந்து முடிந்துகொண்டு கனகாம்பரப்பூவைத் தட்டுடன் அப்படியே எடுத்து அலமாரியில் வைத்துவிட்டுச் சமையலறைக்குள் போய்விட்டாள்.

இந்த மகத்தான கோபத்தின் முன்பு மணி அயர்ந்து போனான். அடிபட்ட நாய்போல மௌனமாக அறைக்குப் போய் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு ஒரு புத்தகத்தைப் படிப்பதாகப் பாசாங்கு செய்தான்.

ஏழு அடிக்கும் சமயத்தில் ராமு வந்தான். மணி கலகலப்புடன் பேச முயற்சி செய்தும் பயன்படவில்லை. வந்ததும் வராததுமாய் ராமு, ‘மணி, நான் காலையில் வந்திருந்தேன். நீ எங்கே போயிருந்தாய்?’ என்றான்.

‘நீயா வந்திருந்தாய்?’ என்று கேட்டுவிட்டு மணி மௌனத்தில் ஆழ்ந்தான்.

‘மணி, எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தில் என் பெயரைக் கூடச் சொல்ல மறந்து போனேன்.’.

ராமுவின் தொண்டை அடைபட்டது. மணி தலை குனிந்து கொண்டான்; அவனால் பேசவே முடியவில்லை. நண்பர்கள் இருவரும் சில நிமிஷ நேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். ராமு நிலைமையை ஊகித்துவிட்டான். திடீரென்று எழுந்தான்.

‘மணி, நான் போய்விட்டு வருகிறேன். இதைச் சொல்லத்தான் வந்தேன்.’

‘இங்கேயே சாப்பிடேன், ராமு?’

‘இல்லை. இன்று வேண்டாம்!’
4

இரவு சாப்பாடு பேச்சில்லாமல் முடிந்தது. ஜன்னல் வழியே பாய்ந்த நிலவைக் கவனிப்பதுபோல மணி ஏங்கிப்போய் உட்கார்ந்து கொண்டிருந்தான். சாரதா பால் டம்ளரை எடுத்து வந்து மௌனமாக நீட்டினாள்.

அதுவரையில் அவளுடைய முகத்தைப் பார்க்கக்கூட அவனுக்குத் தைரியம் வரவில்லை. அப்பொழுதுதான் தலையெடுத்துப் பார்த்தான். அவள் முகத்தில் தோன்றிய துக்கக் குறியைக் கண்டு அவன் பதறிப் போனான்; எழுந்து அவள் தோளைப் பிடித்துக்கொண்டான்.

‘சாரதா!’ என்று சொல்லி மேலே பேச முடியாமல் நிறுத்தினான்.

‘வேண்டாம்!’ என்று சாரதா அவன் முகத்தைத் தடவினாள்.

‘நான் சொன்னது-’ என்று மணி தன் மனத்தை வெளியிட ஆரம்பித்தான்.

‘கனகாம்பரம் எனக்குப் பிடிக்காதே! நீங்கள் சொன்னதில் தப்பென்ன?’ என்று சாரதா, பெண்களுக்கென்றே ஏற்பட்ட சாதுரியத்துடன் பேச்சை மாற்றிவிட்டாள்.

விடியுமா? - கு.ப.ராஜகோபாலன்

தந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது.

‘சிவராமையர் - டேஞ்சரஸ்-’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.

என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்து விட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.

ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப் போய் உட்கார்ந்திருந்தாள்.

எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. ‘இருக்காது!’, ’ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்’ என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. ‘இருக்கும்!’ என்ற கட்சி, தந்தியின் பலத்தில் வேரூன்றி வலுக்க வலுக்க, ‘இருக்காது!’ என்ற கட்சி மூலைமுடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.

தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்துதான் வந்திருந்தது. சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள். குஞ்சம்மாள் பேருக்குத்தான்! தவறு எப்படி நேர்ந்திருக்க முடியும்?

ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு சௌகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?

என் தமக்கையும் நானும் சாயந்தரம் ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப்  போகும் முதல்வண்டி.

புறப்படுவதற்கு முன் நல்லவேளை பார்த்துப் ‘பரஸ்தானம்’ இருந்தோம். சாஸ்திரிகள், ‘ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும், அவ்வளவுதான்!’ என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக் கூடவிடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு, மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைத்தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைப் பாக்கு க்ஷேமதண்டுலம் எல்லாம் மறந்து போகாமல் மடி நிறையக் கட்டிக்கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று. புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள்.

குஞ்சம்மாள், இயந்திரம்போலச் சொன்னதையெல்லாம் செய்தாள்; ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு!’ என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள்.

அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவள் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு, முதல் தடவையாக அன்று, எங்கோ அடங்கிவிட்டது.

அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்த்தாள். திவ்யமான சகுனம். காவேரியிலிருந்து அடுத்தவீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள்.

‘ஒண்ணும் இருக்காது! நமக்கேன் அப்படியெல்லாம் வரது? நாம் ஒருத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே’ என்றெல்லாம், அம்மா அடிக்கடி தன்னையும் பிறரையும் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.

ரெயில் ஏறுகிறபோது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும், கலக்கலுங்கூட மட்டுப்பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம்.

‘நீ புறப்படுகிறபோது ஒன்றுமே’ இல்லையே, அக்கா?’ என்றேன், ஏதாவது பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று.

‘ஒண்ணுமில்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?’ என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள்.

‘அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!’

எது எப்படியானாலும், மனசைச் சில மணி நேரங்களாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தது போலப் பேச்சு வெளிவந்தது.

‘நான், இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல், போயிருக்காமல் போனேன்!’

’ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்துவிட்டாரோ?’

‘ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?’

’ஆஸ்பத்திரி பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக் கூடாதா?’

‘அப்படி அடிக்க முடியுமோ?’ குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது.

‘ஏன் முடியாது? தந்தியாபீஸில் - ‘

‘ஒருவேளை அப்படி இருக்குமோ?’ என்று கேட்டபொழுது குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது.

‘அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தா நாள் தானே கடிதாசு வந்தது?’

‘ஆமாம்! அதில் ஒடம்பெப் பத்தி ஒண்ணுமே இல்லையே?’

‘தந்தி அடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால் கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரி பேரை வைத்து அடித்திருக்கிறார்’.

‘அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி? அப்படியிருக்குமா?’ என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள்.

அவள் அப்படிக் கேட்ட பொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ?

‘நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப் போகிறார்’ என்றேன்.

மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒரு தரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரமடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.

சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?

ரெயில் வண்டி வெறி பிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.

துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம்போல தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்று கொண்டிருந்தது.

சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப் போலப்பின் தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப் போல, அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூட வராது! சென்னையில் காலைதான்! - இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருந்தது.

குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.

எங்களவர்க்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்கு தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு.

அன்று என்னவோ, இன்னும் அதிகமாக, அவள் ஒளிர்ந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் என்று முதல் முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவள் அழகு மிளிர்ந்து தோன்றினாள்.

குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யாரு கேலி செய்தாலும் லட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக் கொள்ளுவாள். ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக் கொண்டிருந்த பூவைப்போல, அது என்றும் சோபித்ததில்லை என்று என் கண்களுக்குப் பட்டது. வெற்றிலைக்காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்ததுபோல இருந்தது.

சோர்வில்தான் சௌந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது-? கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு-? இல்லை! இல்லை!

குஞ்சம்மாள் அன்று என்னவோ அப்படி இருந்தாள்.

வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, ‘அம்பு, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்றாள் குஞ்சம்மாள்.

அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.

‘என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? - என் வாழ்வே அழுகையாக-’ என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.

‘எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது!’

இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தோம். ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை.

நல்ல நிசிவேளை. வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள், மௌனமாகப் பிசாசுகள் போல. அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், ‘இதென்ன ஸ்டேஷன்?’ என்று தலையை நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி வழிந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும்.

சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய் நின்றது. அதுவரையிலும் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும் கூக்குரலும் அதிகமாயின. அது வரையில் காலியாகவே வந்த எங்கள் பலகையில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண் குழந்தையும் புட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

அவள் அணிந்திருந்த முதல் தரமான வைரங்களுடன் அவள் முகமும் ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப்பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள்.

வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி; ‘எங்கிட்டுப் போறீக அம்மா?’ என்று கேட்டாள்.

என் தமக்கை சுருக்கமாக, ‘பட்டணம்’ என்றாள்.

’நானும் அங்கேதாம்மா வாரேன்!’ என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள்.

என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, ‘கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!’ என்று சொன்னதுபோல எண்ணினாள்.

அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக் கொண்டு வந்தவள். உடனே இளகி, அவளிடம் சங்கதி பூராவும் சொன்னாள்.

‘மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!’ என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டுவிட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்ச நேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.

திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. ஏதோ பெருத்த குற்றம் செய்தவள் போலத் திகிலடைந்தாள். ‘ஐயையோ! பைத்தியம் போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிக் கொண்டிருக்கிறேனே!’ என்று எண்ணினவள்போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.

ஆனால் எவ்வளவு நேரந்தான் கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம்.

துக்கத்தில், நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு சிறு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?

வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம். வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக்கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு குக்கிராமத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்தபொழுது கோழி கூவியதுகூடக் காதில் வந்துபட்டது.

‘அப்பா! விடியுமா?’ என்கிற நினைப்பு ஒருபக்கம்.

‘ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.

இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவதுபோல் இருந்தது.

எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

‘செங்கற்பட்டில் பல் தேய்த்துக்கொண்டு காபி சாப்பிடுவோமா?’ என்று கேட்டேன்.

‘எல்லாம் பட்டணத்தில்தான்!’ என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள். பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

‘இதோ ஆயிற்று, இதோ ஆயிற்று!’ என்று சொல்வதுபோல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.

ஆனால் எங்களுக்கு என்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வண்டி வேண்டுமென்றே ஊர்வதுபோல இருந்தது.

எழும்பூர் வந்தது கடைசியாக.

ஸ்டேஷனில் யாருமில்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை - எல்லோரு இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வரவேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று.

வீட்டுக்குப் போனோம். வீடு பூட்டியிருந்தது.

உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை இப்பொழுது!

ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணி நேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.

‘நீங்கள் கும்பகோணமா?’ என்றார்.

’ஆமாம்-’ என்றேன்.

‘நோயாளி - நேற்றிரவு - இறந்துபோய்விட்டார்’ என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்.

’இறந்து-? அது எப்படி? அதற்குள்ளா?’ அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை.

‘சிவராமையர்-?’

’ஆமாம், ஸார்!’

‘ஒருவேளை-’

‘சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.

கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம்.

அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!

ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.

பிறகு-?

விடிந்துவிட்டது.