‏إظهار الرسائل ذات التسميات அம்பை. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات அம்பை. إظهار كافة الرسائل

பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள் - அம்பை


மரத்துப்போன பசு, மரத்தால் ஆன பசு, என்று பால் வற்றிப் போன உபயோகமற்ற மிருகமாயும், உயிரே இல்லாத பொம்மை மிருகமாயும் இரு பொருள் படும்படி பெண்ணை உவமித்து கூறும் மரப்பசு என்ற தலைப்பு மேற்கொண்ட பாதை பெண்பாலை பற்றிய பாரபட்சம், பூடக அவமதிப்பு, பொய்மை நிறைந்த மதிப்பீடுகள் இவற்றால் கட்டப்பட்ட பாதை.

இந்த பாதை இந்த நாவலில் எப்படி எல்லாம் புகுந்து புறப்படுகிறது, இதன் அடித்தளம் என்ன என்று தெரிந்து கொண்டால்தான் இத்தலைப்பையும், அதன் விளக்கத்தையும், இந்த நாவலிலையும் நாம் புரிந்துகொண்டு விவாதிக்க முடியும்.

பெண்ணின் பால்தன்மை பற்றி ஆணித்தரமாகக் கூறக்கூடியவர்கள் ஆண்கள்தான் என்ற நிலைமை ஆரம்பகாலத்திலிருந்தே இருக்கிறது.

அரசன் நகர்வலம் வரும்போது எந்தெந்த வயதுப் பெண்கள் எப்படி எப்படி மோகித்தார்கள், காமுற்றார்கள், பிச்சியானார்கள் என்று உலாக்கள் எழுதியிருப்பது ஆண்கள்தான்.
அது மட்டுமல்ல பெண்ணாக மாறி ஆண்கடவுள்கள் மேல் மோகமும், காதலும், பக்தியும் கொள்ளுமளவு பெண்ணின் பால்தன்மை சுலபமாக யூகித்து எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்திருக்கிறது.

பெண் ஆண் பக்தராக மாறி எந்தப் பெண் கடவுளையும் மோகித்ததாகச் சரித்திரம் இல்லை. அதனால் பெண்ணின் பால்தன்மை, அவள் தேடல் இது பற்றி தன்மை நிலையில் எழுத ஒரு ஆண் எழுத்தாளருக்குச் சரித்திரத்தின் பின்புலன் இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் பெண்ணின் பால்தன்மையை விளக்கி, விளக்கத்தினுள் அதைக் குறுக்கிய ஆண் முயற்சிகளின் பின்னே பெண்ணின் பால்தன்மையின் வீச்சு பற்றியும், அது அடையக் கூடிய 'விபரீத எல்லைகள் ' பற்றிய ஒரு பயம் இருந்தது என்று சொல்லலாம்.

இது ஒரு நிரந்தர சரித்திர பயமாக இருந்து வந்திருக்கிறது. 'புகையிலை விரிச்சா போச்சு, பொம்பளை சிரிச்சா போச்சு ' போன்ற சாதாரணமான பழமொழியிலிருந்து வரையறுக்கப்பட்ட எல்லைகளை மீறும் பெண்களுக்கான தண்டனைகள் பற்றிய மாதர் ஹிதோபதேசங்கள் வரை இந்த பயத்தின் பிரதிபலிப்பைக் காணலாம். இந்த பயத்தை உள்ளடக்கிய நாவல்தான் மரப்பசு.

தன்மை நிலையில், ஒரு பெண் தன்னைப் பற்றி நினைத்துக் சொல்வது போல அமைந்திருந்தாலும், இந்த நாவல் ஒரு பெண்ணின் குரலாக்கிச் சொல்வது ஆணின் பயங்களைக் குறித்து; பெண்ணின் பால்தன்மை பற்றிய அஞ்ஞானத்தையும், குறுகிய நோக்கையும், ஆண் என்ற நிலையிலிருந்து எழும் அப்பட்டமான ஆயத்தங்களையும், கோணல்களையும் குறித்து.

எதிர்மறை உணர்வுகளின் மேல் நிறுத்தப்பட்ட பெண்ணின் பால்தன்மை பற்றிய இந்த பாரபட்சமான விவரிப்புகள் மேனி நிறத்தில் தொடங்கி, மைதுனம் வரை எட்டி, பின்னர் அவள் வாழ்க்கையின் அர்த்தம், அவள் தேடல், அவள் வியாபிக்கும் இடம், அவள் பேணும் மொழி எல்லாவற்றின் மேலும் வலை போலப் படர்ந்து கொள்கிறது. ஹிந்து பத்திரிக்கையில், படித்த பையனுக்கு சிவப்பான அழகான பெண் கேட்டு வரும் திருமண விளம்பரங்களின் நிறம் பற்றிய பாரபட்ச நோக்கு மரப்பசுவின் ஆரம்பப் பக்கங்களிலேயே வந்து விடுகிறது.

அம்மணமாக நிற்கும் பெண் பைத்தியம். கறுப்பு. 'கறுப்பு அம்மணத்துக்கே இத்தனை ஈர்ப்பு என்றால்... ' (ப. 12) என்று கறுப்பு நிறத்துக்கே ஒரு சொட்டை சொல்லியாகி விடுகிறது. பிறகு கடைசி பக்கங்களில் மரகதம் வருகிறாள். கண்ணை பறிக்கும் கறுப்புடன். கோபாலி சொல்கிறார் பச்சையப்பனிடம் - அவள் மாத்திரம் இந்த நிறத்தில் இல்லாவிட்டால் பார்ப்பவர்கள் கொத்திக் கொண்டு போயிவிடுவார்கள் என்று( ப 247). மரகதம் அழகுதான். மலைக்க வைக்கும் அழகு. ஆனால் கறுப்பு. கறுப்பு சிவப்பு பேதங்களிலும் ஆண்-பெண் பாகுபாடு உண்டு. ஆண் கறுப்பு என்றால் அவன் கறுப்பண்ணசாமி (மலர் மஞ்சம் ப. 205). இதை இகழ்ச்சியாக ஒரு சிவப்பான பிராம்மணப் பையன் சொன்னாலும், திடமான, வலிய உடல் படைத்த அந்தக் கதாபாத்திரத்தின் ஆண்மை அழகுக்கு மெருகூட்டும் விஷயமாகிப் போகிறது அந்தக் கறுப்பு. பிறகு நெஞ்சில் காம உணர்வைக் கிளறும் தேவி சொரூபமாகப் பெண் பாத்திரங்களை படைப்பவர்கள் கூட, 'கறுப்பு ஆனால் அழகு ' என்ற வர்ணனைக்குப் புறம்பானவர்கள் அல்ல. இத்தகைய வர்ணனைகளை வழக்கமாகப் படித்துப் படித்து அதை ஒரு அழகுக்கான அளவுக் கோலாக கொண்டுவிட்டதனால் இதை நாம் ஒதுக்குவதற்கில்லை. காரணம் இந்த மொழி ஒரு பெண்ணிடமிருந்து பிறப்பதாக இருக்கிறது.
அதுவும் அவளிடம் குழந்தையிலிருந்தே- இயற்கையான மொழி போல.. இருப்பதுபோல் காட்டப்படும் மொழி, சிவப்பு மேல் அதீத விருப்பம் உள்ள குழந்தை. கண்டு சாஸ்திரிகளின் மஞ்சள் ஓடிய வெள்ளை நிறத்தால் கவரப்படும் குழந்தை அவள் வெள்ளை வெளேர் உடம்புக்கு ஏற்பு இல்லாத உள்ளங்கால் அழுக்கைத் துடைக்க விரையும் பெண் குழந்தை.

அம்மணி மரகதத்தை பார்ப்பதும் ஒரு ஆணின் கண்ணோட்டத்துடன் தான். ஒரு பெண் இன்னொரு பெண்ணின் அழகைக் கண்டு வியப்பதும் அதை ரசிப்பதும் சகஜமான ஒன்றுதான். அது சாதாரணமாக நடை பெறுவதுதான். பார்க்கப் போனால் உடலிலிருந்தும், அதன் மேல் சுமத்தியுள்ள ஆணாதிக்க மதிப்பீடுகளிலிலிருந்தும் விடுபட உடலையே ஒரு பிரதி போல் பாவித்து மறு வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மறுவாசிப்பின் மைய முயற்சியாக இருப்பது வாழ்க்கை, தன் தடங்களை பதித்துள்ள பெண் உடலை அதன் மேல் ஏற்றியுள்ள அர்த்தங்களின் சுமைகளை அகற்றிப் பார்ப்பதுதான். அழகு - அழகின்மை, கறுப்பு - சிவப்பு, இளமை - முதுமை போன்ற மதிப்பீடுகளிலிலிருந்தும் நீங்கி உலக வாழ்வில் ஆழ்த்தப்பட்டிருக்கும் உடலை நேரிடையாக தைரியமாக கோணல்கள் இல்லாமல் பார்ப்பது. அம்மணி மரகதத்தைப் பார்ப்பது இப்படி இல்லை. ஒரு ஆணை கிறங்க வைக்கும் அழகு, அவனை காமமுற வைக்கும் அழகு என்றுதான் பார்க்கிறாள். அது மட்டுமில்லை, அவள் கணவன் அவளை அனுபவிக்க தகுதியுடையவன்தானா, அவர்கள் எப்படி கூடி முயங்குவார்கள் என்றெல்லாம் அவள் சிந்தனை போகிறது.

இந்த ஆண் நோக்கு மிகும் போது- கிட்டத்தட்ட அவள் மரகதத்தை உடலால் அடைய நினைக்கிறாளா என்று ஐயம் பிறக்கும் போது - அதற்கு சால்ஜாப்பு, சப்பைக்கட்டு எல்லாம் தேவைப்படுகிறது; தனக்கு ஓரினச் சேர்க்கையில் விருப்பமில்லை என்று அவள் தெரிவு படுத்த வேண்டியிருக்கிறது (ப. 245).

எது மீறல், எதற்காக மீறல் என்பதில் தி.ஜாவுக்கு நிறையக் குழப்பங்கள் உள்ளன. இந்தக் குழப்பங்களை எல்லாம் பூசிக் கொண்டு வளைய வருகிறாள் அம்மணி. ஒன்று வீட்டில் உழழும் பத்தினி, அல்லது தாசி என்ற அப்பட்டமான இரு எதிர்நிலைகளில்தான் அவரால் பெண்னைப் பார்க்க முடிகிறது. அதனால்தான் கோபாலி அம்மணியிடம் 'நீ பிராமண தாசியாகிவிடு ' என்கிறார். இதிலுள்ள முதல் சறுக்கல் தேவதாசிகளைப் பற்றியது,. முதலாவது இது தேவதாசிகளை ஒரே முகம் கொண்டவர்களாகக் காண்கிறது. தேவதாசிகள் பலதரப்பட்டவர்கள். பல வகைகளில் இயங்கியவர்கள். தேவதாசிகள் எல்லோருமே கலைஞர்கள் அல்லர். கலைகளுக்குரிய ஞானமும், சிரத்தையும் உள்ளவர்கள் மட்டுமே கலைஞர்கள் ஆனார்கள். மற்றவர்கள் கோயில் பூசைகளில் மட்டும் பங்கு கொண்டனர். உறவுகளைப் பொறுத்தவரை சிலர் ஒரே ஆணின் வைப்பாட்டியாக இருந்தனர். சிலர் கை மாறினார்கள்; சிலர் வெவ்வேறு பல ஆண்களுடன் ஓர் இரவுக்கு மட்டுமேயான உறவுகளை மேற்கொண்டனர். உறவுகளைத் தேர்ந்தெடுப்பதிலோ, முறிப்பதிலோ ஒரு வயதுவரை எந்தத் தேவதாசிக்கும் சுதந்திரம் இருக்கவில்லை. ஒரு பேராசைக்கார அம்மாவோ, உறவுக் கூட்டமோ அதிகப் பணத்தைக் காட்டும் நபரிடம் ஒரு தேவதாசியைப் பிணைக்கலாம்.

உயர்ந்த கலைஞர்களாக இருந்த தேவதாசிகள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இத்தகைய உறவுகளை முறித்துக் கொண்டு,கலையில் பூரணமாக ஈடுபட்டார்கள். ஆகவே காமத்தையும், காமம் சார்ந்த உறவுகளையும் விலக்க ஒரு தேவதாசிக்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சுதந்திரம் இருந்தது. தேவதாசி என்பவள் உடலுறவில் ஈடுபடுபவள் என்ற நிலையில் இருந்து கொண்டே அதை விலக்கும் சுதந்திரத்தையும் அவள் பெறுகிறாள். ஒரு தேவதாசியும் பல வயதுகளைக் கடக்கிறாள். இப்படிப் பாராமல், எல்லாத் தேவதாசிகளையும் வேசிகளாகப் பார்த்ததால்தான், தேவதாசிகளை உறவுக்காரர்களின் கைப்பொம்மையாகாமல் தடுக்கும் உயரிய நோக்கத்துடன் பிறந்த தேவதாசித் தடைச்சட்டம், அவர்கள் கலை முகங்களையும் அழித்துவிட்டது, களையை அறுக்கும் அரிவாள் பயிரையும் வெட்டியதுபோல. இது சரித்திரம். நுண்ணுணர்வு உள்ளவர்கள் மறக்கக்கூடாத சரித்திரம். இந்த சரித்திரத்தில் எல்லாம் தி.ஜாவுக்குச் சிரத்தை இல்லை. அவரைப் பொறுத்தமட்டில் தாசி என்பவள் வைப்பாட்டியாக இருக்கும் 'சுதந்திரம் ' உள்ளவள். அம்மணியின் மீறல் உணர்வுகளுக்கு ஒரு பெயர் கொடுத்தாக வேண்டி இருக்கிறது. அதாவது ஒருத்திக்கு ஒருவன் என்ற நியதியை மீற நினைத்தால் தாசியாவதைத் தவிர வேறு வழியில்லை. வைப்பாட்டியாகும் தாசி.

இரண்டாவது சறுக்கல் மீறல்/சுதந்திரம் என்ற கோட்பாடு பற்றியது. திருமணம் எனும் பந்தத்தில் இருக்க விரும்பவில்லை அம்மணி. தான் புணர வேண்டும் என்று அவள் நினைக்கிறாள். ஒரு ஆவேசப் புணர்ச்சி. இப்படி நினைக்கும் முதல் பெண் இல்லை அம்மணி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர், 'ஆயிரம் யோனிகள் உடையவள் நான் ' என்று தன் உடலின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டு, உருவக ரீதியில் உலகைப் புணர்ந்து திகம்பரியாக வளையவந்தவள் அக்கமகாதேவி என்னும் சிவபக்தை. நவீன உலகில் இந்த உடலின் பந்தங்கள் வேறு வகையில் முறிக்கப்படுவது ஏற்க வேண்டியதே. இழுத்துக் கட்டப்பட்ட ஒன்று விடுபடும்போது நிலை கொள்ள அவகாசம் எடுப்பது போல.

உடலால் ஒடுக்கப்பட்டவர்கள், உடலுக்கு இடப்பட்ட எல்லைகளை உடைக்க உடலையே பயன்படுத்துவது பீறிடலின் ஆரம்பக்கட்டம்தான். விடுபடும் குதிரை பாய்ந்து ஓடிப் பின்னர் சாவதானமாக நடப்பது போல இதுவும் ஒரு கட்டம்தான். இலக்கு அது அல்ல. இந்தக் கட்டத்திலிருந்து உடல் வெகு எளிதாக வெளிப்பட்டுவிடுகிறது. ஒரு ஆண், பெண் உடலுக்கு அலைவது போன்றது இல்லை இது. இது தேடலின் ஒரு கட்டம். உடம்பையும், தன்னையும், உலகையும், விண்ணையும், வானையும் புரிந்து கொள்ளும் ஒரு கட்டம். இப்படி எல்லாம் இதைப் பார்க்க தி.ஜாவுக்கு முடியவில்லை. காரணம் இவர் எல்லாவற்றையும் ஏற்கெனவே உள்ள கச்சிதமான அமைப்புகளுக்குள் போட விரும்புகிறார். மனைவி அல்லாத மற்ற பெண்களுடன் தொடர்பு கொள்ளும் ஆண் கோபாலி போன்ற கலைஞன். கணவனே வேண்டாம் என்னும் பெண் பரத்தையாகத் தான் இருக்கமுடிபும் தி.ஜாவைப் பொறுத்தவரை. அவலை வைப்பாட்டியாக வைத்துக் 'கெளரதை ' யைத் தருவது ஆண்தான். இப்படிப்பட்ட சுதந்திரத்தைத் தான் அம்மணிக்கு அளிக்கிறார் தி.ஜா. இதில் என்ன சுதந்திரத்தை அம்மணி காண்கிறாள் என்று தெரியவில்லை. இளம் விதவையான தன் மகளை மொட்டையடிக்கும் கண்டு சாஸ்திரிகளை வெறுக்கும் அவள்பதினைந்து வயதில் தன் பெண்ணைத் திருமணம் திருமணம் செய்து தந்துவிட்ட, ஒரு ஆணைப் பொறுத்தவரை சமூகம் அங்கீகரிக்கும் உறவுகளில் தப்பாமல் ஈடுபடும் கோப்பாலியை, எப்படி தன்னை ஆதரிப்பவராக ஏற்க முடியும் ? கோபாலி ஏற்பாடு செய்த வீட்டில், அவர் ஆதரவில் வாழ்வது எந்த வகையில் அம்மணியைச் சுதந்திரப்படுத்தியது என்று புரியவில்லை. கோபாலி அவளை உடலளவில் திருப்தி செய்கிறாரா என்று கூடத் தெளிவாகப் புரியவில்லை. அம்மணியைச் சுருதி கூட்டி விட்டு மீட்டாத ஆசாமியாக இருக்கிறார் அவர். (ப. 105) எல்லோரிடமும் அவளைத் தன் பெண் போல என்று கூறிக்கொண்டு, இரவில் அவளிடம் உறவை விழையும் நபராகவும் இருக்கிறார். இந்த நிலை அம்மணியின் தேடலின் தரத்தை வெகுவாகக் குறைக்கிறது. எந்த உள்நோக்கமும் இல்லாமல், உறவுகளை மேற்கொள்ளும் சுதந்தரியாக இல்லாமல், ஒருவனைப் பயன்படுத்துபவளாக அவளைக் காட்டுகிறது. இது இத்தகைய தேடலையே இழிவு படுத்தி, இத்தகைய பெண்களை குழப்பம் நிறைந்தவர்களாகக் காட்டுகிறது. இதைவிட வாகான பெண் 'சுதந்திரம் ' - ஆண்களுக்கு வாகானது - கற்பனை செய்யமுடியுமா என்ன ? ஆண்கள் அலைந்தால் அவர்கள் இசை மும்மூர்த்திகளைப் பூசை செய்யும், ஆத்மாவைத் தொடும்படி பாடும் கோபாலி போன்ற பாடகர்களாக இருக்கலாம். ஜொலிக்கும் உடலும், முகமும் உள்ள அருணகிரி நாதர், பட்டிணத்தடிகளாகலாம். ஆனால் பெண் பெறுவது தண்டனைதான். அந்த மோகத்தால் சிவந்து, மேடிட்ட கன்னங்களும், வெளுத்த கூந்தலும், ஒரு ஆணின் ஆதரவு தேவை என நினைக்கும் அம்மணியாகும் தண்டனை. அவளுக்கு முற்றிலும் எதிரான மரகதம் அவள் ஆதர்சமாகிப் போகிறாள்.

இதில் முதுமை பற்றியும் சில சிக்கல்கள் உள்ளன. நாவலின் ஆரம்பத்தில் அம்மணிக்கு, கோபாலியுடன் உறவை மேற்கொள்ளும்போது இருபது வயது. கோபாலிக்கு நாற்பத்தேழு வயது. இருபத்தேழு வய்து வித்தியாசம். நாவலின் முடிவில் கோபாலிக்கு அறுபத்தோரு வயது. அம்மணிக்கு முப்பத்து நாலு இருக்கவேண்டும். ஆனால் தி.ஜா முப்பத்தெட்டாக்கி, கிழவியும் ஆக்கிவிடுகிறார். திஜாவுக்கு கணக்கு தெரியாது என்றில்லை. முப்பதை ஒரு பெண் தாண்டியபிறகு, முப்பத்து நாலானால் என்ன, முப்பத்தெட்டானால் என்ன என்ற எண்ணம்தான். முப்பதைத் தாண்டிய பெண்கள் தமிழ்க் கதைகளில் 'முதுமை 'யை எட்டுவது எந்தப் புதுமையும் இல்லை. பல நாடுகளுக்குச் சென்று பயணக் கட்டுரை எழுதும் எழுத்தாளர் அவர்களை 'ஊசிப் போன பண்டம் ' என்றே கூறியிருக்கிறார். கடைசியில் அம்மணிக்கு ஞானம் பிறப்பது இந்த 'முதுமை ' வந்து தாக்கும்போதுதான். உடனே அவளுக்குப் பட்டாபியின் உடமையாகவேண்டும், அவன் அவள் உடமையாகவேண்டும் என்று தோன்றிவிடுகிறது. இதுதான் தி.ஜா. அம்மணிக்கு அளிக்கும் ஞானம். அவள் வாழ்க்கையின் குழப்பங்களுடன் கூடிய தேடல், அவள் மீறல் எல்லாவற்றையுமே இல்லாமல் செய்துவிடும் இறுதித் தண்டனை. புணர்ச்சியில் பெண் மேலேயும், ஆண் கீழேயும் இருந்த நிலை மாறியதால்தான் பெண்ணின் நிலை இழிபட்டது என்று வாதிடும் ஒரு பெண் மூப்பையும், நரைத்தலையும் கற்பனையே செய்யாததுபோல கலங்குகிறாள். முடிவில் அவளிடம் எந்தக் கேள்விக்கும் பதிலில்லை. 'பட்டாபியைக் கேட்டுச் சொல்கிறேன் ' என்பதுதான் அவள் முடிவாகச் சொல்வது. 'ஏதோ குதித்தாயே ? பறந்தாயே ? வீழ்த்தினேன் பார்த்தாயா உன்னை ? ' என்ற ஒரு ஆணின் கொக்கரிப்பு என் காதில் ஒலித்தது முடிவில்.

இவை எல்லாம் நாவலில் உள்ள பாதைகள். மரப்பசு என்ற தலைப்பு இந்த பாதைகள் இட்டுச் செல்லும் இலக்கு. சரி பசுவைப் பற்றி பார்ப்போம். பசு பால்தரும் என்பதுதான் ஒரு குழந்தை முதலில் கற்பது. பால் தராத பசுவைப் பற்றி நினைக்கமுடிவதில்லை. பால் தரும் பசு நல்ல பசு. பால் தராத பசு கெட்ட பசு. தன் ரத்தத்தை பாலாக்கி தருவது பசு. வேதங்களில் அகிலம் ஒரு பசு. அது நல்ல பாலையும் கெட்ட பாலையும் தருகிறது. பால் தராத பசு இயற்கையை மீறுவதாகவே கருதப் படுகிறது. விஷ்ணு புராணத்தில் அகிலப் பசு ஒரு முறை பால் தர மறுக்கிறது. தாக்கப்பட்ட பிறகுதான் அது பாலைத் தருகிறது. காமதேனுப் பசு பாலைப் பொழியும் தாயாகவே காணப்படுகிறது. பாலைத் தருபவள் நல்ல தாய். பாலை உடம்பிலிருந்து வெளியேற்றாமல் இருப்பவள் கெட்ட தாய்.

பூதனை கிருஷ்ணனுக்கு முலையில் விஷத்துடன் பாலூட்ட வருகிறாள். கிருஷ்ணன் அவளை அழிக்கிறான். ஆனால் அவள் செல்வது சொர்க்கத்துக்கு. பாலூட்டும் கெட்ட பெண்களுக்குக் கூட மோட்சம் உண்டு. ஆனால் ஏற்கெனவே முடியாதவர்கள் தாயல்லாதவர்கள். அம்மணி தாயாக மறுக்கிறாள். இதற்குத் தான் அவளுக்குத் தண்டனை. தாயாவது இயற்கை; பெண்ணுக்கு இயற்கையாகவே உள்ள விழைவு என்று கூறும் உலகில் அவள் தாய்மையை மறுக்கிறாள். தாயாவது இயற்கை மட்டுமல்ல, ஒரு பெண்ணின் பால்தன்மையே தாய்மையை மையமாக்கியதுதான் என்று பொதுவாகக் கருதப்படும்போது, இன்கு பசுவின் மடிப்பால், பெண்ணின் முலைப்பால் இரண்டுமே, வெறும் பாலாக மட்டுமல்லாமல் கருப்பை வளப்பத்துக்கும், காம உணர்வுக்கும் குறியீடாகிறது. பெண்ணின் பால்தன்மை அவள் உடலில் இரு அங்கங்களிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. அவள் யோனியிலும்,முலைகளிலும். பசுவின் மடியும், அதிலிருந்து பொழியும் பாலும் இவ்வாறே இரு தன்மை உடையதாய், ஆண்குறிக்கு ஈடான பெண்குறியாய் கருதப்படுவதை நாம் பல புராணக் கதைகளிலும் காணலாம். ஸ்கந்த புராணத்தில் ஒரு பசு லிங்கத்தின் மேல் தன் மடிப்பாலைப் பொழிகிறது. ஒரு அரசன் பசுவை அம்பால் கொல்ல வருகிறான். பசு அவனைத் தாக்கிக் கொல்கிறது. ஆனால் இந்தக் களேபரத்தில் லிங்கத்தைத் தன் காலால் உதைத்து உருக்குலைத்து விடுகிறது பசு. வெண்மை நிறத்தில், உருகின மெழுகுவர்த்தி போல ஆகிவிடுகிறது லிங்கம். லிங்கத்துக்குக் கோபமே வரவில்லை. பசு தன்னைத் தொட்டது குழந்தை முத்தம் போல அதற்கு இனிக்கிறது. இதே கதையின் இன்னொரு வடிவில், சிவன் லிங்கத்தினின்றும் தோன்றி , பசுவின் கொம்பாலும், குளம்பாலும் ஏற்பட்ட வடுக்களை உமையின் முலைகளும், வளையல்களும் ஏற்படுத்திய காயங்களை ஏற்றுக் கொண்ட அதே ஆனந்தத்துடன் நான் ஏற்கிறேன் என்கிறார். இதில் பால்பாலாக மட்டும் இல்லாமல் பால் தன்மையாகவே கொள்ளப்படுகிறது. பசுவையும் பெண்ணையும் இணைக்க இப்படிப் பல பக்திப் புராணக் கதைக் குறியீடுகள் உண்டு. பெண் உடலின் 'இயற்கை ' என்று கருதப்படும் இத்தகைய பால்தன்மையை மீறும் பெண்கள் நம் பழங்கதைகளில் ஆண் முனிவர்களைப் போல உடலைத் தாண்டாமல், உடலையே துறக்க வேண்டியிருக்கிறது. அதற்குப் பல அற்புதங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வையார் இளமை உடலைத் துறந்து முதுமையை மேற்கொள்கிறார். காரைக்கால் அம்மையாரோ உடலின் சதை, தோல், திரவங்கள் எல்லாவற்றையும் துறந்து எலும்புக் கூடாகி விடுகிறார்.
அம்மணி பசுவைப் பற்றி கற்பனை செய்கிறாள். இவ்வளவு தெளிவான, பசுவின் பாலையும் அவள் பால்தன்மையையும் இணைக்கும்படியான நேரடி உவமையுடன் கூடிய, விவரமான கற்பனை வருவதற்கான எந்தச் சாத்தியக் கூறுகளும் அவள் கதாபாத்திரத்தில் இல்லை. அதனால்தான் ப்ரூஸ் என்ற ஆணின் கண்ணோட்டத்தில் அதைக் காண வேண்டியிருக்கிறது. தெளிவில்லாவிட்டாலும் தன் சுய உணர்வுடன் உறவுகளில் ஈடுபட்ட அவள் எவ்வாறு தன்னைப் பசுவுடன் உவமித்துக் கொள்ள முடியும் ? பசுவின் பால் வற்றியதும் அது விலக்கப்படுவதைப் போல, அவள் பால்தன்மையின் ஒரு கட்டம் தாண்டியதும் அவளும் தெருவோரத்தில் கிடப்பாள் என்று அவள் எப்படி நினைக்க முடியும் ? அப்படியானால் இந்த உறவுகளில் அவள் ஒன்றுமே அடையவில்லையா என்ன ? மற்றவர்களுக்காகவே தன் பால்தன்மையை அவள் வெளிப்படுத்தினாள் என்றால், இந்த அதீத 'தியாகத்துக்கு ' அவளைத் தூண்டியது எது ? அதனால்தான் ப்ரூஸ் கற்பனையின் மூலாதாரமாக வருகிறான். தி.ஜா அம்மணியின் பாத்திரத்தை அணுகும் விதத்தில், இப்படிப் பட்ட கற்பனை/கனவு வருவதைத் தவிர வேறு வழியில்லை. பெண்ணைப் பற்றியும் பசுவைப் பற்றியுமான இந்தப் பிம்பம் உள் மனதில் கலாச்சாரத் தாக்கமாய் புதைந்து கிடக்கிறது. பாலைப் போல வழங்கப்படும் ஒன்றுதான் பெண்ணின் பால்தன்மை. ஒரு பெண்ணின் தேடலை ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் இப்படித்தான் பார்க்க முடியும். வாழ்க்கையில் முப்பது வயதைத் தாண்டியவுடன் அம்மணி தன் பால்தன்மையை பசுவின் பாலுக்கு ஈடாக்குகிறாள். பசு பால் தருவது போல இவளும் பால் தன்மையை வெளிப்படுத்தியதாக - தந்ததாக - நினைக்கிறாள். திடாரென சுயதேடல், உலகை அறியும் விளைவு, பிணைப்புகள் இல்லாத உறவுகளை நாடுவது எல்லாமே, எந்தப் பலனையும் எதிர்பாராமல் பால் தரும் பசுவின் தியாகமாகி விடுகிறது. தான் உபயோகப்படுத்தாத ஒன்றாக அவள் நினைக்கிறாள். அதுவும் தெருவில், யாரும் சீந்தாத ஒரு மிருகமாய்.

அவள் பால்தன்மையின் ஒரு அங்கம்தான் காமம். முதுமை அதன் வேகத்தைக் குறைத்தால் அவள் நிலை குலைய வேண்டியதில்லை. சாவு பயத்தால் பீடிக்கப்பட வேண்டியதில்லை. ஆனால் அவ்வளவுதான் அம்மணி. உடம்பை மட்டுமே ஒட்டியது அவள் தேடல். உடம்பு மாறியதும் அத்தனையும் சரிகிறது. அவள் இருவகையில் சபிக்கப்பட்டவள். முதலாவது, பசு பால் தருவது போல் அவள் தன் பால்தன்மையை காட்டும் தாராளத்துக்கு ஒரு சாபம். இரண்டாவது தன் உடலின் நிஜமான பாலை - முலைப்பாலை - அவள் எந்தக் குழந்தைக்கும் ஊட்டாததற்கான சாபம்.
வெறும் மரப்பசுவாக - மரத்தால் ஆன பசுவாக - இருந்திருந்தால் தான் இப்படிச் சீந்துவாரின்றி இருக்கவேண்டாமே என்று நினைக்கிறது தெருவில் செத்த பசு. செத்தபிறகு ஏது நினைவு ? சரி. அது அப்படி நினைப்பதாக அம்மணி நினைக்கிறாள். அது மட்டுமில்லை. தானும் மரத்தால் ஆன பசுவாக இருந்தால் காலத்தின் எந்த தொடலும் இன்றி மேசை மேல் வைக்கும் அலங்காரப் பொருளாக இருந்திருக்கலாமே என்று நினைக்கிறாள். கடைசியில் ஒரு ஜடப் பொருளாகவா இத்தனை ஓட்டம் ?

மகிஷனைக் கொல்ல முக்கடவுள்களும் தங்கள் மூவரின் சக்தியையும் ஒன்று திரட்டி, அதன் வடிவாய்க் காளியை உருவாக்குகிறார்கள். மகிஷனிடன் காளி, தான் பெண் உருவில் இருந்தாலும் தான் பெண் அல்ல என்கிறாள். எல்லா வகை அநீதியையும் குலைக்க வரும் காளி போலக் கிளம்பும் அம்மணியும் கோபாலி, பட்டாபி, புரூஸ் என்ற மூவரால் உருவாக்கப்படுபவள்தான். ஆனால் அவள் எந்த சம்ஹாரத்தையும் செய்யாமல் விட்டுவிடுகிறாள்.

பெண்ணின் தேடல், அவள் உடல், உலகம், வாழ்க்கை இவற்றிலிருந்து எழும் கேள்விகளின் உருவமான மகிஷன் அவளால் சம்ஹாரம் செய்யப்படாமல் நிற்கிறான். தெருவில், செத்து நாறிக்கிடக்கும் பசுவாக தன்னை பார்த்துக் கொள்பவளாகத்தான் அம்மணியை உருவாக்க முடிகிறது தி.ஜாவால். இதையெல்லாம் மீறி, ஒரு ஜீவனுள்ள பெண் பாத்திரத்தை கற்பனை செய்யவும், படைக்கவும் நமக்குத் தேவைப்படுவது பெண் என்ற விஷயத்தை புரிந்து கொள்ளும் முதலடியாய், காலம் காலமாக நம்முள் ஊறிக் கிடப்பவற்றைத் துறக்கும் செருக்கின்மை. அதை ஒட்டி வரும் அடக்கம்.

***

இலக்கு - மே 1996 

***

நன்றி - திண்ணை


மிலேச்சன் - அம்பை

ஊரின் ஒதுக்குப்புறத்தில், பிறரின் தொடல்களுக்கு அருகதையற்ற கீழ்ஜாதி ஆத்மாவாய்த் தன்னை உணர்ந்தான் சாம்பு அந்த இடத்தில்; அந்தச் சமயத்தில்.

அவனைச் சுற்றிலும் பேச்சு நடந்துகொண்டிருந்தது. அவன் பங்கேற்காததைப் பற்றிக் கவலைப்படாத பேச்சு. அவன் அங்கே யிருந்த நாற்காலிகளில் ஒன்றாக இருந்திருக்கலாம். ஸவிதா, அவ ளுக்கும் அவள் பெற்றோர்களுக்குமிடையே உள்ள அபிப்பிராய பேதங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள், காலை சிற்றுண்டி யின் போது. "அவர்களுக்கு நான் பெரிய பிசினஸ் எக்ஸிக்யூடிவைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசை. எனக்கு அப்படியில்லை. அறிவு பூர்வமாக நான் ஒருவனை விரும்பவேண்டும். அவனுக்கு மற்றவர்களின் துன்பங்களில் பங்கேற்கத் துடிப்பு இருக்க வேண்டும்."

அவனுக்கு ஏனோ அவன் தங்கை இந்துவின் நினைவு வந்தது. ஸவிதா, உனக்குத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கிறது. உன் அப்பா பெரிய வர்த்தகர். ஓர் அறிவு ஜீவியை நாடக்கூட உன் போன்ற வர்களுக்குத்தான் உரிமை. ஆனால் இந்து? அவள் காலையில் எழுந்து அம்மாவிடம் ஆயிரம் திட்டுகள் கேட்டவாறே இயங்கி, அவளே கஞ்சி போட புடைவை ஒன்றை உடுத்தி, குட்டி டிபன்பாக்ஸில் மத்தியான்னத்துக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு பஸ் பிடிக்க ஓடுவாள். பஸ்ஸில் இடம் விடும் முதல் ஆள் அவள் கவனத்தைக் கவர்ந்துவிடுவான். புன்சிரிப்புப் பூக்கும். அவள் மனம் குளிர ஓர் ஆண் முகம் போதும். தர்க்கரீதியாக இயங்குவது இல்லை அவள் மனம். அவள் வெறும் உணர்ச்சிகளின் கலவை. தியாகம், பாசம், தூய்மை, தேசபக்தி, அன்பு, காதல் போன்ற சொற்கள் அவள் மனத்தின் தந்திகளை மீட்டுபவை. அவளிடம் கல்யாணத்தைப் பற்றிப் பேசி ஒருவனைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் அவள் மிரண்டுவிடுவாள். காலம் காலமாய் அவள் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு இல்லாத, இருந்து பழக்கமில்லாத உரிமை அது. அவள் காதலித்தாலும் சினிமா கூட்டிப் போக, புடைவைகள் வாங்கித் தர, அடிக்காமல் அன்பு செலுத்த (அப்பாவிடம் வாங்கிய பெல்ட் அடிகளின் எதிரொலி) ஒருவனைத்தான் காதலிப்பாள். கல்யாணம் செய்துகொண்டு, பிள்ளைகள் பெற்றுச் சினிமாப் பார்க்கும் திருப்தியிலும் பண்டிகைகள் கொண்டாடும் பக்தியிலும் வாழ்க்கையைச் செலவழித்து விடுவாள். தனக்கு நிராகரிக்கப்பட்டது எது என்பதை அவள் அறியமாட்டாள். அந்த மட்டும் திருப்தி. அவன் அதை உணரும்போதுதான் சிக்கல்கள்.

"மதராஸி இன்று ரொம்ப யோசிக்கிறார்" என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டுச் சிரித்தாள் ஸவிதா. புன்னகை செய்தான் சாம்பு.

"ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவியைப் பற்றி என்ன நினைக்கிறாய் சாம்பு?" என்று கேட்டாள் ஆங்கிலத்தில்.

"நான் கூட ஒரு கொள்கைக்குக் கட்டுப்பட்ட அறிவு ஜீவி தான். என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்றான் பதிலுக்கு.

அவள் கடகடவென்று சிரித்தாள்.

"நல்ல ஜோக்" என்றாள்.

"ஏன்?" என்றான்.

"உன் கொள்கை என்ன?" என்றாள் உதடுகளை மடக்கிச் சிரித்தபடி.

"உன்னைப் போன்ற ஓர் அறிவு ஜீவியை மணப்பதுதான்" என்றான் பட்டென்று.

அவள் திடுக்கிடவில்லை. ஒரு நாளில் பத்து முறைகளாவது இவளை மணக்க விரும்புவது பற்றித் தெரிவிக்கும் ஆண்கள் அவள் தோழர்கள். சாம்பு சொன்னதுதான் அவளை வியப்பில் ஆழ்த்தியது.

"குடித்திருக்கிறாயா இத்தனை காலையிலேயே?" என்றாள்.

சாம்பு மேஜையை விட்டு எழுந்தான்.

சென்னை வீதிகளில் உலவும் மனிதர்களை வெறுத்து, மூச்சு முட்டும் அதன் கருத்துகளைப் பகிஷ்கரித்து அவன் டில்லியை வந்தடைந்தான். ஒரு நாள் விடிகாலை, எம்.. பரீட்சை முடிந்த நிம்மதியில் நடக்க அவன் கிளம்பினான் சென்னையில். கோலம் போட்டவாறே அவனை ஊடுருவி நோக்கும் சந்தியா; (காதலை அவள் நம்புகிறாள், மடப்பெண்!) வயதுக்கு வந்துவிட்ட தன் பேத்தியை மனத்தில் இருத்தி அவனை நோக்கும் எதிர் வீட்டுத் தாத்தா; யுகம் யுகமாய்ச் சிகரெட் கடன் தந்த பெட்டிக்கடை நாயர்; தெரு ஓரத்தில் எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட மண்ணில் புரண்டு, சேற்றில் உளைந்து பக்கெட் பக்கெட்டாய் மூத்திரம் கொட்டும் எருமை மாடுகள்; வளைந்து குறுகி, பின் அகன்று மீண்டும் சுருங்கிக்கொண்ட, கோலங்கள் பூண்ட அந்த வீதி - எல்லாமே அந்த விடிகாலை வேளையில் ஓர் அந்நியக் கோலம் பூண்டன. திடீரென்று பெருங்கரம் ஒன்று அவனைத் தூக்கி அங்கே கொண்டுவந்து நிறுத்தியது போலத் தோன்றியது. அவன் சாம்பமூர்த்தி அல்ல. கள்ளிக்கோட்டையில் வந்திறங்கிய வாஸ்கோடகாமா போல், ஒரு மிலேச்சனின் கண்களோடு அந்த வீதியை நோட்டமிட்டான். அவனுக்கு மூச்சு முட்டியது.

அவனுக்குரிய இடமில்லை அது என்று தோன்றியது.

பாராகம்பாத் தெரு மரங்களின் நிழலில், இந்தியா கேட்டின் பரந்த புல்லில் பி.எச்டி பட்டத்துக்குப் படிக்கும் அறிவு ஜீவிகளின் சிந்தனையில் தன்னைக் கலந்துகொள்ள அவன் முயன்றான்.

"ஹலோ சாம்பு! இன்னிக்கு வராய் இல்லையா?" மணி கேட்டான். "எங்கே?"

"இன்னிக்கு ஸ்டிரைக். காம்பஸுக்குப் போகணும்." "எதுக்காக ஸ்ட்ரைக்?" "விலைவாசி ஒசந்ததுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க."

"அரிசி என்ன விலை விக்கறதுன்னு தெரியுமா உனக்கு? டேய், பீர் விலை ஒசந்ததுன்னாதானேடா உனக்கு உறைக்கும்?"

"இதோ பாரு. உன்னோட பேச எனக்கு நேரமில்லை. நான் பிஸியா இருக்கேன். வரயா இல்லையா?"

"வரேன்."

"விலைவாசியை இறக்கு."

"இந்திரா ஒழிக."

"மாதாஜி முர்தாபாத்."

"டவுன் வித் ப்ளாக்மார்க்கடியர்ஸ் அண்ட் ஹோர்டர்ஸ்."

"சாம்புவைப் பாரேன். என்ன ஆக்ரோஷமாய்க் கத்தறான்."

"இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்லேதான் ஒருத்தனோட அடங்கிக்கிடக்கிற மூர்க்கத்தனம் வெளியே வரது. கூட்டத்திலே அவன் ஒருத்தன் ஆயிட்டான் இல்லையா?"

சாம்பு பக்கத்தில் வந்தான்.

"காலையில் என்ன சாப்பிட்டாய்?"

"என்ன விளையாடறயா?"

"சொல்லு."

"முட்டை டோஸ்ட், ஜாம், காஃபி, வாழைப்பழம்."

"பயத்தம்பருப்புக் கஞ்சின்னு கேள்விப்பட்டிருக்கிறாயா?"

"ஏன்?"

"அதுதான் எங்க வீட்டுலே கார்த்தாலே சாப்பிட. மிராண்டா ஹவுசில் படிக்கிறாளே உன் தங்கை, கெரஸின் க்யூன்னா என்ன, அதுலே நிக்கற அநுபவம் எப்படீன்னு தெரியுமா அவளுக்கு?"

"நீ சொல்றது தப்பு, சாம்பு. ஒரு விஷயத்தைப் பற்றி என் எதிர்ப்பைத் தெரிவிக்கக் கஷ்டப்படறவனை நான் பார்த்து அதைப் புரிஞ்சுண்டாப் போதும். நானே அதை அநுபவிக்க வேண்டிய அவசியமில்லை. கான்ஸரை ஆபரேஷன் செய்யற டாக்டர் அதோட கொடுமையைப் பார்த்துப் புரிஞ்சுண்டாப் போதும் - அவனுக்கே கான்ஸர் வரவேண்டிய அவசியம் இல்லை."

"இது வியாதி இல்லை."

"இதுவும் ஒரு வியாதிதான், சமூகத்தைப் பீடிக்கிற வியாதி."

"அப்படியே வைச்சிப்போம். நான் அதை அநுபவச்சிருக்கேன்."

"என் சின்னத் தம்பிக்குத் தூங்கறப்போ கதை சொல்லறச்சே, 'அதுதான் ராமராஜ்யம் ஒரே பாலும் தேனும் ஓடும், ரத்னங்கள் வீட்டுலே இறைஞ்சு கிடக்கும்' அப்படி எல்லாம் சொன்னா, ராம ராஜ்யத்துலே கெரோஸின் நிறையக் கிடைக்குமோ அப்படீன்னு அவன் கேள்வி கேக்கறப்போ எந்தப் பின்னணியிலேந்து அது பொறந்ததுன்னு எனக்குப் புரிகிறது. அம்மா கரண்டியைச் சாதத்துலே வெக்கறபோதே ரொம்பச் சமத்தா 'அம்மா, எனக்குப் பசிக்கலே; ஒரே ஒரு கரண்டி போதும்'னு என் கடைசித் தங்கை சொல்லறபோது அரிசி விளைவோட பாரம் என் நெஞ்சிலே ஏறிக்கறது."

பக்கத்தில் நின்றவாறு சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த ஸவிதா பெரிதாகச் சிரித்தாள்.

கோஷங்கள் மாலையில் முடிந்தன.

மீண்டும் ஹாஸ்டலுக்கு வரும் வழியில் ஆரதி பானர்ஜி அவனுடன் நடந்து வந்தாள். மென்குரலில் ஆங்கிலத்தில் கூறினாள்.

"உங்கள் கருத்துடன் எனக்கு உடன்பாடுதான். ஏனென்றால் நீங்கள் கூறும் அநுபவங்கள் என் வீட்டில் புதிதல்ல" என்றாள்.

"நீ பி.எச்டி. செய்யாமல் வேலைக்குப் போயிருந்தால் உன் வீட்டிற்கு அது பயன்பட்டிருக்கும் இல்லையா?"

அவள் புன்னகை செய்தாள்.

"ஆமாம். ஆனால் என் கனவுகள் என்னை இங்கே அழைத்து வந்தன."

"எந்த மாதிரிக் கனவுகள்?"

"மூன்று வருடங்களில் பி.எச்டி. முடித்துவிடலாம். பின்பு பெரிய வேலை. ஒருவேளை என் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்து வைக்க ஒரு பணக்காரக் கணவன் கூடக் கிடைக்கலாம். நிஜத்தில் நடந்தது வேறு. பி.எச்.டி.யின் முடிவில் கூடிய வயதும் மனம் பிடிக்காத வேலையும் நித்தியக் கன்னி பட்டமுந்தான் எஞ்சும் போல் இருக்கின்றன."

"உன் மனசுக்குப் பிடித்த யாரும் இங்கில்லையா?"

அவள் அவனைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். பட்டென்று சொன்னாள்: "என்னிடம் உள்ள மொத்த புடைவைகள் ஐந்து."

"புரியவில்லை."

"ஓபராய் போய்க் காஃபி குடிக்கவோ, அக்பர் ஹோட்டல் போய்ச் சாப்பிடவோ அணிந்துகொள்ளக் கூடிய புடைவைகள் என்னிடம் இல்லை. பெரிய ஹோட்டல்களில் நுழைந்தவுடனேயே என் கண்கள் விரிந்து நாவடைத்துப் போய் விடுகிறது. என் முந்நூறு ரூபாய் ஸ்காலர்ஷிப்பில் நூறு ரூபாய் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன். மரியாதைக்குக் கூட என்னால் எங்காவது வெளியே போனால் 'நான் பில் தருகிறேன்' என்று சொல்ல முடியாது. எனக்கு இந்த மனநிலையில் ஏற்படும் எந்த அன்பும் காதல் என்ற பட்டம் பெற முடியாது. அது சுயநல எண்ணங்களோடு திட்டமிட்டுப் பின் நடைமுறையில் செய்யப்படும் வியாபாரந்தான். காதல் என்ற சொல்லுக்கே நம் வாழ்க்கை முறையில் இடம் இல்லை. இது குறிப்பிட்ட சிலரின் ஏகபோக உரிமை."

"ம்."

"ஒரு நிமிஷம்" என்று அப்பால் சென்றாள்.

"ஏய் சாம்பு, ஆரதியிடம் ஜாக்கிரதை. அவள் ஒரு கணவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். விழுந்து விடாதே."

பின்னால் கனைத்தாள் ஆரதி.

"ஆரதி, நான் ஒன்றும்..."

"பரவாயில்லை கோவிந்த். நீ டெல்லியின் நாற்றச் சந்துகளில், விளக்குக் கம்பம் புடைவை கட்டிக்கொண்டு வந்தால் கூடப் பின்னால் போகிறாய் என்று கேள்விப்பட்டேன். நான் உன்னை விடத் தேவலை இல்லையா?"

கோவிந்துக்குப் பலமான அடிதான்.

அதன்பின் மௌனமாகவே நடந்தனர்.

ஹாஸ்டலில் இந்துவின் கடிதம் வந்திருந்தது.

வைரத் தோடாம் அண்ணா. அப்பா முடியாது என்று கூறிவிட்டார். அண்ணா நீ பி.எச்டி. முடித்ததும் நமக்கு இந்த மாதிரி தொல்லை இல்லை. நீ புரொபஸராகிவிடுவாய். அண்ணா நீ நன்றாகப் படி. எனக்கு ஆஃபிஸில் வேலை ஜாஸ்தி. புது ஆஃபீஸர் ரொம்ப டிக்டேஷன் தந்துவிடுகிறார். நாங்கள் எல்லாருமாகநேற்று இன்று நாளைபோனோம். எனக்குப் பிடித்தது.”

இந்து, இந்து உன் உலகம் எவ்வளவு வித்தியாசமானது. என்னுடையதை விட?

பி.எச்டி. முடித்தால் புரொபஸராகி விடுவேனா? இந்த பி.எச்டி.யை எப்போதுதான் முடிப்பது? புரொபஸர் கருணையின்றி பி.எச்டி. வாங்க முடியுமா? அவர் ஜீனியஸ்தான். அதுதான் தொல்லை. பத்து வருடங்களுக்கு குறைந்து அவரிடம் பி.எச்டி. வாங்க முடியாது. தீஸிஸ் விஷயமாகப் போனால் மிக அழகாக ரெயில்வே ஸ்டிரைக் பற்றிப் பேசுவார். ஜோன் பேயனின் ஸெக்ஸி குரல் பற்றிப் பேசுவார். நிக்ஸன் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றிச் சொல்வார். ஜெரால்ட் ஃபோர்டு எதற்கும் பயனில்லை என்பார். யாரும் நினைவு வைக்க முடியாத சரித்திர சம்பவங்களை நினைவு கூர்ந்து ஜோக் அடிப்பார். ஒன்றரை மணி நேரம் ஆகிவிடும்.

ஸார், என் சாப்டர்...”

என்ன சாப்டர்?”

ஒன்றாவது ஸார்.”

வீட்டுலே குடுத்தியா ஆஃபிஸிலியா?”

வீட்டுலேதான்.”

இன்னொரு காப்பி உண்டா?”

ம். ஸார்.”

நாளைக்குக் கொண்டாயேன். பார்க்கலாம்.”

சாரி, ஸார்.”

இரண்டு வருடங்களாக இதுதான் நடக்கிறது, இந்து. உங்களுக்கு எல்லாம் இது எப்படிப் புரியும்?

என்ன சாம்பு, லவ் லெட்டரா?” தேஷ்பாண்டே கேட்டான்.

இல்லை தேஷ்பாண்டே.”

கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்களா வீட்டில்?”

சிரித்தான் சாம்பு, “ம்ஹூம்.”

சரி, இன்னிக்கு வெச்சுக்கலாமா?”

வேண்டாம் தேஷ்பாண்டே.”

டேய், நீ ஒரு முட்டாள் மதராஸி, வாழ்க்கையை ரசிக்கத் தெரியாத மதராஸி.”

"இருக்கட்டும்."

"உனக்குத் தைரியம் இல்லை. ஒரு பெக் சாப்பிட்டா நீ டவுன் தான்."

"என்னைச் சாலஞ்ச் பண்ணாதே."

"சும்மா பேச்சுத்தான் நீ. அம்மா திட்டுவாளா?"

"சரி, இன்னிக்கு வெச்சுக்கலாம்."

சாயங்காலம் தேஷ்பாண்டேயின் அறையில் ஐந்தாறு நபர்கள் கூடினர். சுடச்சுடத் தொண்டையில் இறங்கிப் பின் சூடு உடம்பில் பரவியது. ஸிக்கிம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று யானை பலம் வந்தது போலிருந்தது. குறுக்காகத் தொப்பி வைத்துக்கொண்ட நெப்போலியன் தான் எனத் தோன்றியது. பிரஷ் மீசை வைத்த ஹிட்லராக மாறி யூதர்களைக் கூட்டம் கூட்டமாக அழிப்பது போல் தோன்றியது. வேஷ்டி சட்டையுடன் அண்ணாதுரை, ஒரு கூட்டத்தில் பேசுவது போல் தோன்றியது. சிவாஜி கணேசன் முகம் கொண்ட ராஜராஜ சோழன் தான் என்று மார் தட்டிக்கொள்ள அவா எழுந்தது. இழைய முடியாத டில்லி சூழ்நிலை. டைப் அடித்து அடித்து விரல்களைச் சொடுக்கிக் கொள்ளும் இந்து, பாத்திரத்தின் அடியில் இருக்கும் சாதத்தைக் கரண்டியின் சுரண்டல் ஒலி இல்லாமல் எடுக்கும் அம்மா, எல்லாம் மறைந்து அவனே பூதாகாரமாய் ரூபமெடுத்து அத்தனையையும் அடித்துக்கொண்டு மேலெழுந்து வருவது போல் உணர்வு தோன்றியது.

"ஸிக்கிமை ஆக்ரமிக்க வேண்டும்" என்று உரக்கச் சொன்னான்.

"ஏய் சாம்பு, என்ன ஏறிடுத்தோ நன்னா?" மணி கேட்டான்.

"சேச்சே, அதெல்லாம் இல்லை."

"ஜாக்கிரதை, ஒரேயடியாக் குடிக்காதே. மெள்ள மெள்ள."

"நான்ஸென்ஸ். நான் சரியாத்தான் இருக்கேன். ஸவிதா வரலியா?"

"ஸவிதா இங்கே எங்கேடா வருவா?"

"ஏன் வரக்கூடாது? நான்தான் அவ தேடற துடிப்புள்ள இளைஞன். நான் நடுத்தரக் குடும்பம்னா அவ என்னை லவ் பண்ணக்கூடாதா? நான் ஒரு துடிப்புள்ள இளைஞன்."

ஸிக்கிம் பற்றிய பேச்சு நின்றது.

சாம்பு பேசிக்கொண்டே போனான்.

"ஸவிதாவை எனக்குப் பிடிக்கறது. ஆனா இந்த உலகமே வேற. அரசியல், ஆராய்ச்சி, வெளிநாட்டுத் தொடர்பு பற்றிப் பேசற அக்கறை இல்லாத உலகம் இது. தேஷ்பாண்டே, இங்கே ஓட்டை போட்டுண்டு வந்த எலி நான். இங்கே இருக்கிற யார் மாதிரியும் நான் இல்லே. நான் ஒரு துரத்தப்படும் எலி. பூனைகள் உலகத்துலே அகப்பட்டுண்ட எலி. ஸவிதாவை நெருங்க முடியாத எலி. என் தங்கை இந்து இருக்கிற உலகத்துலேயும் நான் இல்லே. கோலம், கோபுரம், புடைவை, சினிமா, கற்பு, கணவன், அம்மா, அப்பா இவர்கள் எல்லாருக்கும் நான் அந்நியமாப் போய்விட்டேன். , எங்கே?" என்று எழுந்து கால்களை உதறி அறை முழுவதும் தேடி ஓடினான்.

"ஹே, எதைத்தான் தேடுகிறாய்?"

"என் வேர்கள், என் வேர்கள்" என்று ஆங்கிலத்தில் கூறி அழுதான் சாம்பு.

திடீரென்று எழுந்து, "எனக்கு எங்கேயும் இடம் இல்லை" என்று கூறி ஓட ஆரம்பித்தவன் முறித்துக்கொண்டு கீழே விழுந்தான். அறை முழுவதும் வாந்தி எடுத்த நெடி.

"தேஷ்பாண்டே, இதெல்லாம் உன் தப்பு. ஹோல் ஈவினிங் கில்... ஸ்பாயில்ட்."

"ஏய், இவன் முழிக்கமாட்டேன் என்கிறானே?"

"முகமெல்லாம் வெளுத்துவிட்டது."

"குட் லார்ட்! டாக்ஸி கொண்டுவா. வெலிங்டன் ஹாஸ்பிடலுக்கு ஓடலாம்."

கண்ணை விழித்தபோது தேஷ்பாண்டேயின் முகம் தெரிந்தது.

" ஆம் சாரி."

"இட்ஸ் கே! எத்தனை பெக் குடித்தாய்?"

"ஒன்பது."

"ஜீஸஸ்!"

"எனக்கு அத்தனையும் தேவைப்பட்டது, தேஷ்பாண்டே! தேஷ்பாண்டே நான் இந்த இடத்தில் இருக்க வேண்டியவன் இல்லை. ஏழு வருஷம் பி.எச்டி. பண்ண என்னால் முடியாது. என் தங்கை கல்யாணம் ஆகாமல் தவித்து விடுவாள். என் அம்மா உருக்குலைந்து போய் விடுவாள். அறிவுஜீவியாவது கூட எனக்கு ஓர் ஆடம்பரமான விவகாரந்தான். அங்கேயும் நான் ஓர் அந்நியன் தான். ஆனாலும் அங்கே நான் தேவைப்படறேன்."

"டேக் ரெஸ்ட், சாம்பு."

தலை திரும்பியபோது ஆரதி வருவது தெரிந்தது.

தேஷ்பாண்டே எழுந்தான். ஆரதியைப் பார்த்து மரியாதைக்குப் புன்னகை செய்துவிட்டுப் போனான்.

"என்ன சாம்பு, இது என்ன இப்படிப் பண்ணிவிட்டீர்கள்?"

கண்களில் நீர் பெருகியது.

"ஆரதி, நான் ரொம்பத் தனியனாக இருக்கிறேன்."

"ம்."

"என்னால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை."

"ம்."

"உனக்கும் இந்த அனுபவம் உண்டா?"

கையிலிருந்த பையைப் பார்த்தவாறே ஆரதி பேசினாள்.

"ம், உண்டு. இதை விட உண்டு. உங்களுக்கு வீட்டுக்குத் திரும்பிப் போக முடியும். அங்கே மூத்தபிள்ளை என்ற அந்தஸ்து உண்டு. எனக்குத் திரும்பிப் போக முடியாது. என் குடும்பம் நான் இல்லாமல் இருக்கப் பழகிவிட்டது. நான் அங்கே போகும்போதெல் லாம் வெளியாளாய் உணர்கிறேன். அவர்களைப் பொறுத்தவரை பிரச்னைகள் இல்லாத ஒரு பெண். அந்த எண்ணத்தை மாற்ற நான் விரும்பவில்லை. இரண்டு உண்மைகளை நான் உணர்வதால் என் நிலைமையை என்னால் ஏற்க முடிகிறது. ஒன்று, வேலை செய்து தான் வாழவேண்டும் என்ற சமூகப் பிரக்ஞையால் பிறக்கும் உணர்வு. இரண்டு, நாம் எல்லோருமே ஒவ்வொரு வகையில் தனியாள்தான் என்ற உணர்வு."

"நான் ஸவிதாவை விரும்புகிறேன்."

ஆரதி புன்னகை செய்தாள். "எனக்குத் தெரியும்."

"நான் பைத்தியக்காரன் என்று நினைக்கிறாயா?"

"ம்ஹூம். உண்மைகளைப் பார்க்காதவர்."

"புரியவில்லை."

"ஸவிதாவை நீங்கள் விரும்புவது நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவன் என்ற தாழ்மையுணர்ச்சியால்தான். அந்த வர்க்கத்து உணர்வுகளிலிருந்து விடுபட விரும்பும் வேகத்தால்தான். இந்த உணர்வே ஒரு தப்பிக்கும் முயற்சிதான். ஏணி மேல் ஏறி, எந்த வர்க்கத்தை ஏளனம் செய்கிறீர்களோ அதே வர்க்கத்தை நீங்கள் எட்டிப் பார்க்கிறீர்கள். கீழேயும் உங்களுக்கு இடம் இல்லை. மேலே யும் உங்களுக்கு இடம் இருக்காது."

"கோபிக்காதே. நீ என்னை விரும்புகிறாயா?"

அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

"மற்றவர்கள் நினைப்பதுபோல் நான் ஒரு கணவனை நிஜமாகவே தேடி அலையவில்லை. உண்மையான பரிவுணர்வைக் காட்ட என் போன்றவர்களுக்கும் முடியும்."

" ஆம் ஸாரி."

"டோண்ட் பி" என்று கூறிவிட்டு எழுந்தாள்.

அவள் போனபின் வெகுநேரம் நெஞ்சில் பல உணர்ச்சிகள் குழம்பித் தவிக்க வைத்தன. வேர்களற்ற நான் யார்? என்னை எந்த அநுபவங்களோடு நான் ஒன்றிப் போகவைக்க முடியும்? ஆராய்ச்சி செய்ய நேரமோ, பணமோ அவனிடம் இல்லை. அது ஒரு நீண்டகாலத் திட்டம். அவன் போன்றோர்களிடம் இல்லாத ஒரு போகப் பொருள்; காலத்தை அலட்சியம் செய்யும் மனப் பான்மைதான். அவன் காலத்துடன், ஒன்று, அதனுடன் சண்டை யிட்டு, அதனிடம் மண்டிபோட வேண்டியவன். இல்லாவிட்டால் இந்துவின் வாழ்வு குலைந்துவிடும். தம்பியின் எதிர்காலம் இருளடை யும். எங்கும் புகுந்து எப்படியும் வாழும் எலிகளில் அவன் ஒருவன். புரிந்தது. ஆனால் ஏற்க முடியவில்லை. குப்பைத் தொட்டியின் மேல் மல்லாக்கப் படுத்து இறந்து, காக்கை தன் வயிற்றைக் குத்திச் சதை யைப் பிடுங்கும் எலியாய்த் தன்னை உணர்ந்தான். அவன் வித்தியாச மாக எதையும் செய்ய முடியாது. அவனுக்கு நிராகரிக்கப்பட்ட உரிமை அது. அவன் எதிர்வீட்டு ஸந்தியாவை மணக்கலாம். அவ ளுடன் நல்ல கணவனாகப் படுக்கலாம். அவள்மேல் ஆதிக்கம் செலுத் தலாம். குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம். பணம் இல்லாமல் தவிக்கலாம். ரிடையர் ஆகலாம், இறக்கலாம். குப்பைத் தொட்டி மேல் செத்த எலி போல, இதுவே அவனுக்கு விதிக்கப்பட்ட வரம்புகள்.

வரம்புகள், வரம்புகள், வரம்புகள்!

ஆஸ்பத்திரியின் கட்டிலில்; அதன்மேல் அவன், கோபாலை யரின் மகன் சாம்பமூர்த்தி. அவனே அவனுக்கு அந்நியமானவனாகப் பட்டான்.

அவன் திரும்பிப் போவான். கோலங்களின் ஓரமாக எருமைகளைத் தாண்டி அந்தத் தெருவில் நடப்பான்; ஆனால் அதுவல்ல அவன் இடம். அத் தெருவின் மண்; அதன் மீது பஸ் பிடிக்க ஓடும் இந்து; சைக்கிளில் போகும் அப்பா; புத்தகப் பையுடன் போகும் தம்பி; எல்லாரும் எலிகள்; பொந்து போட ஓடும் எலிகள். வரம்புகளைக் கட்டிக்கொண்டு அதனுள் ஓடும் எலிகள்.

பல்லாயிரக்கணக்கான எலிகள், மாறுபட்ட அவனைக் கோரைப் பற்களால் சுரண்டி வால்களால் அவனைத் தாக்கி அவன் மேல் ஆக்கிரமிப்பது போல் உணர்ந்தான். திடீரென்று கோடிக்கணக்கான பூனைகள் எலிபோல் தோன்றிய அவனை நகங்களால் கீறி வாய்க்குள் அடைத்துக்கொள்வதைப் போல் தோன்றியது.

சாம்பு வீரிட்டான்.