‏إظهار الرسائل ذات التسميات தமிழ்ப் புத்திலக்கியம். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات தமிழ்ப் புத்திலக்கியம். إظهار كافة الرسائل

க.நா.சு. உருவாக்கிய புரட்சி - தமிழவன்


என்போன்றோர் பரவலாக அன்று படிக்கக் கிடைத்த நாவல்களைத்தான் படித்தோம். முக்கியமாகப் படிக்கக் கிடைத்தது அகிலன், நா.பார்த்தசாரதி, சாண்டில்யன், கல்கி, மு.வரதராசன் ஆகியோரின் நாவல்கள். ஜனரஞ்சகமான நாவல்களுக்கும் கலைத்தரமான நாவல்களுக்கும் வித்தியாசமுண்டு என்று தெரியாது.

இது நடந்தது 1965 வாக்கில். தி.மு.க. அலை அப்போது இளைஞர்களை வசீகரித்தது. சிறுநகரங்களில் இருந்து பெருநகரங்கள் வரை தி.மு.க. பேச்சாளர்களின் பெயர்கள் எல்லோருக்கும் பரிச்சயம். ஒவ்வொரு இரவிலும் பிரச்சாரக்கூட்டங்கள். ‘அண்ணா என்பது ஒருமாயமந்திரச்சொல். ஆனால் என் போன்றோர் படித்த கல்லூரிகளில் காங்கிரஸ் பரவியிருந்ததால் பல இளைஞர்கள் காங்கிரஸ் சார்பில் வாதாடினார்கள். அவர்களின் விவாதமும் கவர்ச்சியாகத்தான் அமைந்திருந்தன. பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டம் காங்கிரஸ் கோட்டை. அப்பகுதிகளில் காங்கிரஸ் கொள்கை பரவியிருந்தது. இளைஞர்களிடமும் காங்கிரஸ் பரவியிருந்தது. இந்த இளைஞர்கள் அதிகம் உணர்ச்சிவயப்படாதவர்களாய்க் காணப்பட்டனர். இவர்களிலும் நிறைய மேடைப்பேச்சாளர்கள் இருந்தனர்.

என்றாலும் நான் படித்த கல்லூரியில் வை.கோபாலசாமியும் வலம்புரி ஜானும்தான் பட்டிமன்ற இரட்டையர்கள். எந்தத் தலைப்பிலும் வெட்டியும் ஒட்டியும் பேசும் இரட்டையர்கள். காங்கிரஸ் இளைஞர்களுக்கு இவர்கள் முன் நிற்கும் திறமை இருக்கவில்லை.

எங்கள் ஆசிரியர்கள் எல்லோரும் தி.மு.க. சார்பாளர்கள்தாம். எனவே மு.வரதராசன்தான் அவர்களின் சிறந்த நாவலாசிரியர். இரவில் இரண்டு மூன்று மணி என்று கண்விழித்து மு.வ. நாவல்களைப் படித்தோம். அந்த வயசில் எங்களைக் கவர்ந்தவை காதல் சார்ந்த நாவல்கள் என்பதால் அந்த மு.வ.பாணி நாவல்களைப் படித்தோமா, அல்லது அந்த நாவல்களில் வரும் இலட்சியத்திற்காகப் படித்தோமா என்று தெரியவில்லை.

அதுபோல்தான் நா.பார்த்தசாரதியின், பூரணி, அரவிந்தன் என்ற இரண்டு பெயர்களைத் தெரியாத நாவல் வாசகர்கள் யாரும் எங்கள் மத்தியில் இல்லை. ஒருவித லட்சியம், தூய்மை, உணவுக்கட்டுப்பாடு (மறைமுகமாக பாலியல் கட்டுப்பாடும்) போன்றன இந்த நாவல்களில் பரப்பப்பட்ட கருத்துகள்.

இரண்டு ஆண்டுக்குள் இந்த இலக்கிய உலகமும் அதன் கருத்துகளும், இலட்சியங்களும் தகர்ந்து போகும் என்று அறிந்திருக்கவில்லை.

தகர்த்தவரின் பெயர் க.நா.சு.

நான் க.நா.சு. வை எண்பதுகளில்தான் சந்தித்தேன். ஆனால் ‘எழுத்து தொடங்கி எல்லாச் சிறு பத்திரிகைகளும் அவர் பெயரை உச்சரித்தன. போதாக்குறைக்கு க.நா.சு. வின் ‘இலக்கியவட்டம் என்ற இதழ் 60களில் என் கைக்குக் கிடைத்தது. பாதுகாப்பாய் பைண்ட் செய்யப்பட்ட ‘இலக்கிய வட்டம் இதழ்கள். என் 22-ஆம் வயதில் இலக்கிய வட்டம் புரியவேயில்லை. ஆனால் எனக்கு அந்த இதழ்களில் ஒரு கவர்ச்சி இருந்தது.

இன்று தமிழ் படிக்கவரும் 22-ஆம் வயது மாணவ மாணவிகளிடம், எனக்கு புத்திலக்கிய ஈடுபாட்டை ஏற்படுத்த முடிந்ததேயில்லை. ஒருவேளை சுமக்க முடியாத அளவு பக்தி இலக்கியம், தொல்காப்பியம் அது இது என்று சுமையைக் கொடுப்பதால் அவர்களுக்கு அந்த வயதில் வரக்கூடிய புதியதைக் கண்டால் தோன்றும் ஆர்வம் மங்கிவிட்டதா? தெரியவில்லை.

க.நா.சு.வுக்கும் தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் மெதுமெதுவாக க.நா.சு. வின் இலக்கியக் கருத்துகளை அறிய அறிய அவர் ஒரு பெரிய புரட்சிக்காரர்போலத் தென்பட்டார். தி.மு.க. பரப்பிய கருத்துப்புரட்சி ஒருவிதமென்றால் க.நா.சு. பரப்பிய கருத்துப் புரட்சி முற்றிலும் மாறுபட்டது.

அகிலன் எழுத்தாளர் அல்ல என்றார் க.நா.சு. என் கற்பனை இலக்கிய உலகம் ஒரே அடியாய் தகர்ந்தது. க.நா.சு. ஒரு தகராறு பேர்வழி என்று நான் நினைக்கவில்லை. மற்றவர்கள் ஒன்று சொன்னால், தான் இன்னொன்றைச் சொல்லி கவனத்தைத்தன் பக்கம் திருப்பும் ஆசை கொண்டவரல்ல என்று ஏனோ மனதில் உறுதியாகப் பட்டது.

அடுத்ததாக, நா.பார்த்தசாரதி எழுதுவது நாவல் அல்ல என்றார். எனக்கு ஒரே குழப்பம்; அப்படியென்றால் நாவல் என்றால் என்ன? ஒரே கலவரம் என்னைப் பிடித்தாட்டத் தொடங்கியது.

இன்னும் ஒரு போடு போட்டார். மு.வரதராஜனுக்கு நாவல் எழுதத் தெரியாது.

என் புரிதல் உலகம் கொஞ்சம் கூட மிச்சமில்லாம் தகர்ந்தது. அப்படியென்றால் நானும் என் போன்ற பிற இளைஞர்களும் மோசடி செய்யப்பட்டுவிட்டோமா?

எங்கள் தமிழாசிரியர்கள், நாங்கள் படித்த இலக்கிய வரலாறுகள் எல்லாம் வெறும் பொய்யா? பொய்தான் என்று அடித்துச் சொன்னார் க.நா.சு.

இங்குக் கவனிக்க வேண்டியது க.நா.சு. சொன்ன சிந்தனைகளின் பின்னால் அமைந்திருந்த தத்துவம். அவற்றைக் க.நா.சு. அவரின் வாழ்க்கை முழுவதும் பரப்பிக் கொண்டிருந்தார். இவரளவுக்கு ஆழம் இல்லாவிட்டாலும் சி.சு.செல்லப்பா முக்கியமான காலகட்டத்தில் ஒரு பத்திரிகையை நடத்தியதால் இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான இலக்கிய ஆளுமையாக இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யப்படுவார். க.நா.சு.விடம் வேதாந்த விசாரம் உள்ளோட்டமாய் இருந்தது என்று ஒரு பெரிய தாக்குதலைச் செய்து ஒருநூல் எழுதியிருந்தார் க. கைலாசபதி. தனிப்பட்ட முறையில் க.நா.சு.வை அது பாதித்தது. ஒருமுறை பெங்களூருக்கு க.நா.சு. வந்தபோது சுமார் 8 மணிநேரம் ‘படிகள் சிறு பத்திரிகைக்காக நாங்கள் ஒரு பேட்டி எடுத்து நாடாவில் பதிவு செய்தோம். அதிலிருந்து சில பகுதிகளை அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘படிகளில் பிரசுரித்தோம்.

மார்க்சியர்கள் க.நா.சு.வை வெறுக்கத் தேவையில்லை என்பதே அந்தப் பேட்டியின் அடிநாதமாக இருந்தது.

அதுவரை இடதுசாரியினர் க.நா.சு.வை அகில உலக சுதந்திர காங்கிரஸ் என்ற வலதுசாரி இலக்கிய அமைப்பைச் சார்ந்தவராகவே பார்த்தார்கள். ஆனால் க.நா.சு. எனக்கு மார்க்சியம் தெரியாது, பின் எப்படி நான் மார்க்சிய எதிரியாக இருக்கமுடியும் என்று கேட்டார். இதனை நாங்கள் படிகள் இதழில் பதிவு செய்தோம்.

அது உண்மைதான். மார்க்சிய எதிரியாக இருக்கவேண்டுமென்றால் நிரம்ப படித்திருக்க வேண்டும். சமீபத்தில் நான் உம்பர்த்தோ எக்கோவின் (Umberto Eco) இலக்கியத்தின்மீது (On Literature) என்ற கட்டுரைத் தொகுப்பைப் படித்தேன். அதில் மார்க்ஸின் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை என்ற பிரச்சார நூல், இரண்டு நூற்றாண்டுகளைப் பாதித்து மாற்றியது என்கிறார் எக்கோ. அவ்வளவு பெரிய சிந்தனை இயக்கத்தை வெள்ளை கதர் சட்டையும் கதர் வேட்டியும் அணிந்து கறுப்புக் கண்ணாடியுடன் அலைந்து கொண்டிருந்த ஒரு வயதான பிராமணர் மறுக்கமுடியுமா? அவருடன் பேசிப் பார்த்ததில், கநாசுவுக்கு ஆங்கிலம் மூலம் படைப்பு இலக்கியம் பற்றி ஆழ்ந்த படிப்பு இருந்த அளவு மார்க்சியம் பற்றி இல்லை எனத் தெரிந்தது. படிகளில் வெளிவந்த பேட்டி க.நா.சு. மீது அதிக மதிப்புகொண்ட ச.கந்தசாமி போன்ற இலக்கியவாதிகளைக் கவர்ந்தது.

ஆனால் மார்க்சிய கம்யூனிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு என்ற இரு பிரிவினரையும் அதிகமாக ஈர்க்கவில்லை. அதற்கான காரணம் க.நா.சு. தமிழிலக்கியம் பற்றிச் சொல்லிக்கொண்டு வந்த கருத்துகளை ‘கசடதபற போன்ற பத்திரிகைகள் பெருவாரியாக தமிழில் நிலைநாட்டிய கட்டம் அது. பெரும்பாலும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள்ளும் க.நா.சு.வின் இலக்கியக் கருத்துகள் பரவியிருந்தன. எழுபதுகளின் ஆரம்பத்தில தமிழில் கம்யூனிஸ்டு கட்சிக் கருத்துகள் ஒருவகையாகவும் எண்பதுகளின் இறுதியில் கம்யூனிஸ்டு தோழர்களின் கருத்துகள் வேறு வகையாகவும் அமைந்தன.

அதிர்ச்சி அடையத்தக்க உண்மை என்ன என்றால் தமிழகத்தில் இலக்கியக் கருத்துகள் மிக விரைவில் மாறிவிட்டன. ஒரு இருபது வருடங்களில் இலக்கியம் தமிழில் மாறிவிட்டது. ‘ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள் என்ற மாந்திரிக எதார்த்தவாத நாவல் வந்தபோது பெரியவர் தி.க.சி.யும் சில இடதுசாரி நண்பர்களும் எதிர்த்தார்கள். இன்று அவர்களின் கட்சியினர் மாந்திரிக எதார்த்த வாத நாவலை எழுதுகிறார்கள்; பாராட்டி விமரிசனம் எழுதுகிறார்கள்.

அதாவது க.நா.சு.வின் இலக்கியக் கருத்துகள் இன்று இடதுசாரிக் கட்சிப் படைப்பாளர்களால் பின்பற்றப்படுகிறது. படைப்பில் கருத்து வெளிப்படையாக வரக்கூடாது என்பது க.நா.சு.வின் கொள்கை. சோசலிச எதார்த்தவாதம் என்ற பெயரில் பிரச்சார எழுத்தைத் தமிழக கம்யூனிஸ்டுகள் எழுத ஊக்கப்படுத்தப்பட்டனர். இதில் வேடிக்கை என்னவென்றால் மார்க்சும் எங்கெல்சும் கூட பிரச்சாரமாக கலைப்படைப்பு அமையக்கூடாது என்றே கூறுகிறார்கள். அதாவது க.நா.சுவும் மார்க்சிய மூலவர்களும் இவ்விஷயத்தில ஒரே கருத்தைத்தான் கொண்டிருந்தார்கள். ஆக மார்க்சியர்கள் மற்ற வர்களின் இலக்கியப் போக்குகளைப் பின்பற்ற ஆரம்பித்துள்ளார்கள். இது ஆரோக்கியமான போக்கு. தமிழ்மொழிதான் நல்ல மார்க்சிய இலக்கியம் பற்றி அறிவுறுத்தமுடியுமே தவிர, தமிழ் தெரியாத ஏதோ மொழிபேசும் கட்சித் தலைவர்கள் அல்ல.

அன்று க.நா.சு. அகிலனையும் நா.பார்த்தசாரதியையும் மு.வரதராஜனையும் தாக்கித் தகர்த்ததால் இலக்கியம் பல்வகையாகப் பரவ வாய்ப்பு ஏற்பட்டது என்பதை க.நா.சு. விளம்பரப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் மொழியில் இன்று நடக்கும் அதிவேக மாற்றங்கள் புதிது புதிதாக இலக்கியப் படைப்புகளைத் தமிழுக்குத் தந்துகொண்டிருக்கின்றன.

இங்கு நடந்த மாற்றங்களைக் கவனிக்கும்போது பொதுவாக ஒரு கருத்தைச் சொல்லலாம். இலக்கிய வடிவம் என்பது ஒரு மண்ணெண்ணெய் டப்பா போன்றதல்ல; இலக்கியக்கருத்து என்பது டப்பாவில் ஊற்றும் மண்ணெண்ணெய் அல்ல. வடிவம்கூட ஒரு செய்திதான். உள்ளடக்கம்கூட ஒரு வடிவம்தான் என்பது இப்போது தமிழில் உறுதிப்பட்டுவருகிறது.

க.நா.சு. சொல்லிவந்த கருத்துகள் இவைதாம் என்று கூறலாம். மேடைகளில் உரக்க, அடுக்கு மொழியில் கருத்துகள் கருத்துகளாக எல்லோரும் பேசிக் கொண்டிருந்த தருணத்தில், க.நா.சு. அன்று புறக்கணிக்கப்பட்டார். ஆனால் தொடர்ந்து அவர் புறக்கணிக்கப்படமுடியாது. அவரது படைப்புகள் பற்றி வேறுபட்ட கருத்து உள்ளவர்கள்கூட அவரது இலக்கியம் பற்றிய கருத்துகளைப் புறக்கணிக்க முடியாது.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் க.நா.சு.வின் கருத்துகளைவிட அரூபமான இலக்கியக் கருத்துகள் இன்று களத்திற்கு வந்துவிட்டன. அந்த அளவு தமிழ் வேகமான மொழி ஆகிவிட்டது.

நன்றி - உயிரோசை

அண்மையில் இரு யதார்த்த நாவல்கள் - ந.முருகேச பாண்டியன்

சிறுபத்திரிக்கை வட்டாரத்தில் எங்கு பார்த்தாலும் இதே பேச்சு. எல்லாம் முடிந்தது. நேற்றுத்தான் ''பால் தெளிப்பு''. புதைகுழி மீது துளசி துளிர்விட ஆரம்பித்துவிட்டது. யதார்த்தக் கதைகளின் காலம் முடிந்து விட்டது. விண்ணைத் தொடும் உரத்த முழக்கம் ''ஆந்த்ராக்ஸ்'' பீதி போல படைப்பாளிகளை யதார்த்தப் பீதி பற்றிக் கொண்டுள்ளது. சிலர் உறைந்து போய் விட்டனர். குப்பிகள் பொங்கி வழியும் இரவுக் கொண்டாட்டங்களிலும் வெள்ளென விடிந்த பின்னரும் எங்கும் இடைவிடாத பேச்சு. யதார்த்தம் ''அவுட்''. புதிதாக எழுதத் தொடங்கிய கத்துக்குட்டிப் படைப்பாளர்கள் இனம் புரியாத பயத்தில் தட்டையாயினர். அன்றாட நடப்பில் எதிர்கொண்ட அனுபவங்களை வட்டார மொழியில் புனைக்கதையாக்கினால் பெருவியாதியஸ்தரைப் போல ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம்.

இளைஞனே! இரவானதும் வீடு திரும்ப அச்சமா? என்ற டாக்டர் காளிமுத்து பிராண்ட் தாது புஷ்டி லேகிய விளம்பரம் போல பேனாவைத் தொடவே கை நடுங்கும் எழுத்தாளர்களுக்கு ஏதாவது விளம்பரம் வெளியானால் தேவலை என்று தோன்றுகிறது. ஏனெனில் எதார்த்தக் கதை பற்றிய சரியான புரிதல் அற்ற சில படைப்பாளிகள், நாளடைவில் எதுவும் செய்யவியலாமல், மறைந்து போகின்றனர். புதுவகைப்பட்ட தமிழ்ப் படைப்பு என்னிடமிருந்தே தொடங்குகிறது என்ற சண்டமாருதப் பிரசங்கம் வேறு ஆங்காங்கே ஒலிக்கத் தொடங்கியவுடன் அப்பாவி வாசகன் நடுநடுங்கிப் போகிறான். வாழையடி வாழையாக வரும் வாசகனுக்காக எழுதுவதாக நம்பிக் கொண்ருக்கும் சீனியர் எழுத்தாளர்களும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது மிகைப்படுத்தப்பட்ட காட்சியல்ல; இன்றைய சிறு பத்திரிக்கை உலகின் குறுக்குவெட்டுத் தோற்றம். நிற்க.

இத்தகைய சூழலில் பெருமாள் முருகனின் ''கூள மாதாரி'', யூமா வாசுகியின் ''இரத்த உறவு'' ஆகிய இரு யதார்த்த வகை நாவல்கள் களத்திற்கு வந்துள்ளன. யதார்த்த நாவல் எழுத இந்த ஆசாமிகளுக்குத் துணிவு எப்படி வந்தது என்று வியப்பாக இருக்கிறது. உண்மையில் யதார்த்தக் கதைகளின் நிலை யாதுவென ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. யதார்த்தச் சித்தரிப்பில் மிகவும் மோசமாக மொழியைக் கையாளும் சூழல் தமிழில் உள்ளது. அதுவே பல யதார்த்த நாவல்களில் தோல்விக்குக் காரணமாகும். மொழியின் அற்புதங்கள் மூலம் வடிவமைக்கும் கதை சொல்லல் எப்பொழுதும் அதற்கான ஸ்தானத்தில் நிலைத்திருக்கும். நவீன தமிழ்ப் படைப்பாளிகள் மொழியின் போதாமையினால் அல்லல்படுகின்றனர். சொல், தேர்வு, சொல் பயன்பாடு நைந்து போய் அர்த்தமிழந்த நிலையில், சொற்கள் மூலம் சித்தரிக்கப்படும் கதையுலகு அலுப்பூட்டுகிறது.

சங்க காலப் படைப்புகளிலிருந்து சிற்றிலக்கியம் வரை பயன்படுத்தப்பட்ட மொழிவளம், புதியதான சிந்தனையை வெளிப்படுத்தும் புதிய சொற்கள், குறிப்பிட்ட குழுவினருக்கே உரித்தான மொழி வழக்கு ஆகியவற்றின் மூலம் படைப்பாளி தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முடியும். நடைமுறை வாழ்க்கைப் பரப்புகளை நுணுக்கமாக அவதானித்துக் கற்பனை தோய்ந்திட, அடிப்படையான கேள்விகளுடன் தர்க்கத்தையேற்படுத்தும் படைப்பு யதார்த்தப் பண்புடையதெனினும் நவீனமானதாகும். நேர்கோட்டுக் கதை சொல்லலில், பம்மாத்தும் பாசாங்கும் நிரம்பி வழியும் படைப்புகளில் புதிய உத்திகள் கையாளப்பட்டிருப்பினும், அவை கிழித்துக் குதறப்பட்ட கந்தல் துணிகள் போன்றவை. இந்நிலையில் யதார்த்தப் படைப்புகள் மரித்துவிட்டதென்ற ஓயாத கூச்சல், இலக்கியத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத நிலையையே சுட்டுகின்றது.

யூமா, வாசுகி எழுதியுள்ள ரத்த உறவு நாவலினை வாசிக்கத் தொடங்குகையில் மறுபடியும் குடும்பக் கதையா என்று முதலில் அலுப்பேற்படுகிறது. கதை அறிமுகப்படுத்தும் குடும்பத்திற்குள் பயணிக்கையில், இது நாவலா அல்லது சுயவரலாறா என்ற சந்தேகம் தோன்றுகிறது. இந்த மனிதர்களுக்கு என்ன ஆச்சு? ஏணிப்படி நடக்கிறது? இதற்கான தாத்பர்யம், முகாந்திரம் என்ன? போன்ற கேள்விகள் வாசிப்பில் ஏற்படுகின்றன. குடும்பம் என்ற நிறுவனம் எங்கு மையம் கொள்கிறது? குடும்பத்திற்குள் மனித உறவுகளின் இருப்பு யாது? தனி மனிதனின் சீரழிவு / உன்னத இருப்பினுக்கப்பால் குடும்பம் என்ற அலகு எல்லாவிதமான அபத்தங்கள் / மேன்மைகளும் உள்ளடக்கியதாக இருக்கிறது. குடும்பத்தில் ஆணின் இடமானது அதிகாரத்துவமானதாகவும் கொண்டு செலுத்துலாகவும் உள்ளது. பெண்ணோ ஒவ்வொரு புள்ளியிலும் தன்னை குடும்ப மனுஷ’யாக அடையாளப்படுத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. சமூக ரீதியில் பெண் எதிர்கொள்ளும் வலிகளை விட குடும்பத்திற்குள் மன ரீதியில் படும் கொடூரங்கள் ஏராளம்.

அதிலும் யூமா, வாசுகி சித்தரிக்கும் மரபு வழிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் வாழ நேரிடும் பெண் அடையும் பாதிப்புகள் இன்னும் கூடுதல், கணவன், மாமியார், கொழுந்தன்கள், கொழுந்தன்களின் மனைவிகள்... என அதிகார மையங்கள் ஆங்காங்கை வலுப்பெறுகின்றன. ஆணின் அதிகார மொழி போலவே, பெண்ணின் அதிகாரக் குரலும் நடப்பில் உச்சமடைவது எளிதில் புறக்கணிக்கக் கூடியதல்ல. நாவலின் தீமையின் ஒட்டுமொத்த வடிவமாக வெளிப்படும் தாய், பால்பேதமற்ற நிலையில் ஒடுக்கு முறையைப் பெண்கள், குழந்தைகளின் மீது பிரயோகிக்கிறாள். மகன்கன் குடித்து விட்டுச் சீரழியும் நிலையிலும், அவள் தொடர்ந்து அதிகாரத்துடன் கலங்காமல் இருப்பது, மரபு வழிப்பட்ட ''தாய்'' பிம்பத்தைச் சிதைக்கிறது. அவளால் நசுக்கப்பட்ட உடல்களின் வேதனை வெளியெங்கும் உறைந்து இருக்கிறது. சக உயிர்கள் மீது அன்பற்ற அணுகு முறையால், வாழ்வின் கொடூரங்களுக்குள் கதையாடல் வாசகனை இட்டுச் செல்கிறது. துயரத்தின் பரப்பில் அறிவு பூர்வமான கேள்விகளை இழந்து, இதுவெல்லாம் இப்படியாக இருக்கிறது என்ற அழுத்தமான காட்சிகளின் சித்தரிப்பினால் திகைக்க வைத்துள்ளது யூமா, வாசுகிக்குக் கதை சொல்லலில் கிடைத்த வெற்றியாகும்.

சித்ரவதைகளினால் நசுக்கப்படும் அம்மா, அடக்கியொடுக்கும் பாட்டி, அப்பா, அப்பாவின் தம்பி, ஒடுக்கு முறைக்குள்ளாகும் அண்ணன், அக்கா, தம்பி....என கதைப் பரப்பு முழுக்க வன்முறையின் மீது கட்டமைக்கப்பட்டு உள்ளது. வெறுப்பு உமிழும் கண்களுடன் சதா யாரையாவது திட்டிக் கொண்டிருக்கும் பாட்டி பற்றிய சித்தரிப்பு தமிழில் இது வரை காணக்கிடைக்காதது. காளை மார்க் சுருட்டு குடிப்பது, மகன்களுடன் சேர்ந்து ராவாக சாராயம், ரம் குடிப்பது, குழந்தைகளின் மீது வெறுப்பைக் கக்குவது, எதையாவது தின்று கொண்டிருப்பது, யாரையம் எடுத்தெறிந்து கேவலமாகப் பேசுவது, யார் மீதும் ஒட்டு உறவற்றுத் திட்டிக் கொண்டிருப்பது, பிறர்படும் சித்ரவதைகளைப் கண்டு மகிழ்ச்சியடைவது, மகன் இறந்த போது கூட அதைப் பொருட்படுத்தாமலிருப்பது.... என்ற பாட்டி பற்றிய பதிவுகள் நுட்பமானவை.

உயிரான ஆமையை நீருள்ள பாத்திரத்தில் போட்டு அடுப்பிலிட்டுக் கொதிக்க வைத்துக் கொன்று தின்னும் பாட்டியின் செயற்பாடு குறியீட்டு நிலையில் பாட்டியை அவதானிக்க உதவிகிறது. அடக்கியொடுக்கும் கணவன், மாமியாரின் நெருக்குதலுக்குள்ளான பாட்டி இயல்பிலே கசப்பும், கொடூரமும் ததும்பிட, கண்களில் சலிப்பும் கோபமும் கொப்பளித்திட காட்சி தருகின்றாள். வாசிப்பில் அதிர்வுகளைத் தோற்றுவிக்கும் பாட்டியின் இருப்பு குறித்து மாய்ந்து மாய்ந்து விவரிக்கும் யூமா, வாசுகி கதையோட்டத்தில் எவ்விதமான நிலைபாட்டினையும் எடுக்காமல், வாசகரிடத்து வேறுபட்ட விவாதங்களைத் தோற்றுவிப்பது சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

இடைவிடாமல் குடிக்கும் அப்பாவின் வருகைக்கென ஊரின் ஒதுக்குப்புறத்தில் எந்நேரமும் காத்திருக்கும் சாராயக்கடைகள். குடித்து விட்டுத் தெருவோரம் வீழ்ந்து கிடப்பதும், அப்பாவியான அம்மாவை அடித்துக் காயப்படுத்துவதும் சிறிய குற்றங்களுக்குக்கூட குழந்தைகளைச் சித்ரவதைப்படுத்துவதும் தான் அப்பாவின் முழுநேரப்பணி. வீட்டில் அப்பாவின் இருப்பு ''சர்வாதிகாரி'' என்ற பிம்பம் பொதுப்புத்தியாக இன்று வரையிலும் நிலவுகிறது. வரன்முறையற்று ஒடுக்குமுறையைப் பிரயோகிக்கும் அப்பா, தன்னுடைய தாயிடம் மட்டும் பணிந்து போவது என்பது குழப்பத்தையேற்படுத்துகிறது. அம்மாவுடன் சேர்ந்து சாராயம் குடித்துப் போதையேறி வீழ்ந்து கிடக்கும் மகன்கள் உள்ள குடும்பத்தில் மெல்லிய உணர்ச்சிகளுக்கோ வாழ்வு பற்றிய விழுமியங்களுக்கோ இடமேது? முப்பது பவுன் நகைகளுடன் வீட்டுக்கு வந்த மருமகளைப் பார்த்தவுடன், அதையெல்லாம் பறித்து அழித்து விடு என்று மகனுக்கு ஆணையிடும் பாட்டியின் மனவோட்டம் வக்கிரத்தின் உச்சமாகும்.

தரையில் விழுந்த மாம்பழத்தை எடுத்த அண்ணனை மரத்தில் கட்டி வைத்துச் சித்ரவதை செய்தல்.

மனைவி / குழந்தைகளை அடித்து உதைப்பதற்காக திருக்கை வாலினைப் பதப்படுத்தும் அப்பா.

அண்ணனைத் தலை கீழாகக் கட்டித் தொங்கவிட்டுக் கீழே நெருப்பிலிட்டு, அதில் மிளகாய் போட்டு நெடியேற்றுதல்.

விரல் நசுங்கி ரத்தம் வந்தாலும் தம்பியின் பம்பரத்தை அம்மியில் உடைக்கும் பாட்டி.

தெருவில் விரட்டியடித்து அம்மாவின் மண்டையை அடித்து நொறுக்கும் அப்பா, சித்தப்பா.

மான்கொம்பு / குத்து விளக்கு மூலம் அம்மாவை அடித்து நொறுக்கும் அப்பா.

இராணுவத்திலிருந்து திரும்பி வந்து குடித்துவிட்டுச் சாக்கடைக்குள் புரளும் பெரியப்பாவை அடித்து நொறுக்கும் சித்தப்பா, பெரியம்மா, அவரது பிள்ளைகள்.

இப்படி கதைபாடல் முழுக்க வன்முறைகளின் தொகுப்பாக விரிகிறது. அடி தாங்காமல் மாமா வீட்டிற்கு அம்மா ஓடியதால், குழந்தைகளின் தலையில் எண்ணைய் வைத்துத் தானும் தலைக்கு எண்ணைய் வைத்துத் தலைமுழுகும் அப்பா, பாட்டியின் செயற்பாட்டினை வன்முறையின் வெளிப்பாடாகத் தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நாவலில் குடும்பம் மட்டுமல்ல; ஒரு பெரிய ஊரில் பல்வேறு காட்சிகளும் உள்ளன. குடும்பத்தில் நிகழ்த்தப்படும் வன்முறைகளைச் சரியென நம்பும் ஊரார், ஒடுக்குமுறைக்காக அனுதாபப்படும் ஊரார் என இரு வேறுபட்ட கருத்துக்கள் இருப்பினும் எல்லாம் குடும்பம் என்ற அலகிற்குள் முடித்துக் கொள்ளப்படவேண்டுமென்ற வாதமே சூட்சமமாக முன்னிறுத்தப்படுகிறது.

சொந்த உடல்களின் மீது உரிமையற்ற குழந்தைகள், பெண்கள் மீது இடைவிடாமல் அதிகாரம் செலுத்தி நசுக்கி, எப்பொழுதும் ஒரு விதமான பயத்திற்குள் வைத்திருக்கும் குடும்பச் சூழலைச் சித்தரிப்பதில் யூமா, வாசுகியின் நோக்கம் நிறைவேறியுள்ளது. வெறும் புனைவு என்ற நிலைக்கப்பால் சம்பவங்களின் விவரிப்புத் தரும் அதிர்வுகள் முக்கியமானவையாக உள்ளன. ஒரு குடும்பம் என்ற தளத்தினை மையமாக்கிக் கொண்டு இண்டு இடுக்கிகளிலும் நுழைந்து, வாழ்க்கையின் விசித்திரங்களையும், சிதைவுகளையும் புனைகதையாக்கியுள்ள யூமா, வாசுகி, யதார்த்தக் கதை சொல்லலை உயரிய மட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். இதுவே அவரைச் சாதனையாளராக்குகிறது.

பெருமாள் முருகன் எழுதியுள்ள ''கூளமாதாரி'' நாவல், கவுண்டர்களிடம் பண்ணையத்துக்கிருக்கும் சக்கிலியச் சாதியைச் சார்ந்த சிறுவர் சிறுமியரைச் சுற்றி விரிகிறது. இணையகங்களின் ஆதிக்கத்தில் சகலமும் தவவமைக்கப்படும் இன்றைய பூகோள கிராமச் சூழலில், ஆடு மேய்க்கும் சிறார்களின் வாழ்க்கை விசித்திரமாக இருக்கலாம். அடுத்த வேளைக் கூழுக்காக அதிகாலை எழுந்து தொழுவத்து வேலையை முடித்து அத்துவானக் காட்டில் ஆடுகளை மேய்த்து, மாலையில் வீட்டிற்கு ஓட்டிவரும் சிறுவர்களை எங்கு பொறுத்துவது? இப்படியெல்லாம் நடக்கிறதா என்று நகரிய கனவான்கள் கேட்கலாம். நுனிநாக்குகள் கான்வெண்டுகளில் ஆங்கிலம் பேசிட அமெரிக்க உணவுகளுடன் பிள்ளைகளை வளர்க்கும் தனவான்களுக்கு எல்லாம் வேடிக்கையாக இருக்கும். ஆனால் நடப்பில் எங்கும் கசப்பும் வெறுப்பும் பொங்கி வழியும் சூழலில் வாழ நேர்ந்திட்ட சிறுவர்களின் அவலம் நம் முகத்திற்கு எதிரே ஆயிரமாயிரம் கேள்விகளை முன்னிறுத்துகின்றது. எழுபதுகளில் கி.ரா. தொடங்கி வைத்த கிராமியச் சித்தரிப்பு, இடையில் நீர்த்துபோன நிலையில், பெருமாள் முருகள் ஆடு மேய்க்கும் சிறார்களின் உலகைச் சித்தரிப்பதன் மூலம் புதிய சிகரத்தை அடைய முயன்றுள்ளார்.

பெருமாள் முருகன் விவரிக்கும் கதையுலகு யதார்த்தக் கதை சொல்லலுக்கு நெருக்கமானது. சின்னச் சின்ன சம்பவங்களின் தொகுப்பாக விரியும் பரப்பினுள் நுழைகையில், ரத்தமும் சதையுமான அனுபவங்களைச் சந்தித்த அனுபவமேற்படுகிறது. ஆடு மேய்க்கப் பயன்படும் அத்துவானக் காட்டின் விவரிப்பு ஒரு நிலையில் அச்சந்தருவதாக உள்ளது. குத்துச் செடிகள், மரங்கள், பறவைகள், ஆடுகள், பூச்சிகள் உலவிடும் நிலப்பரப்பில் ஒற்றையாகச் சிறுவர்கள் தனிமையில் அலைந்து கொண்டிருக்கின்றனர். கொதிக்கும் வெயில், அனல் காற்று, வெக்கை, புழுதி, மழை, சூறைக்காற்று..... எங்கும் சூழலைச் சலனப்படுத்திக் கொண்டே இருக்கிறது. விசித்திரக் குள்ளர்களைப் போல சிறுவர் சிறுமியர் ஆடுகளுடன் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டு, வேடிக்கையும் விநோதமும் கலந்த விளையாட்டு உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நுணுக்கமாக இயற்கையைச் சித்தரிப்பதில் பெருமாள் முருகன் கையாண்டுள்ள மொழியானது பல்வேறு காட்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. கதை சொல்லலுக்குப் பின்புலமாக அமைந்துள்ள அத்தவானக் காடு கூட, கதையாடலில் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஆளரவற்ற அத்துவான வெளியில் சின்னஞ்சிறிய புள்ளிகளாக நகரும் ஆடுகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் கோவணம் கட்டிய சிறுவர்களுக்குச் சமூகம் காட்டும் கருணைதான் என்ன?

சாதியரீதியில் ஆடு மேய்க்கும் சக்கிலியச் சிறுவர்கள் படும் வேதனையைக் விட அன்றாட உணவிற்காகச் சகித்துக் கொள்ள வேண்டிய துயரங்கள் நாவல் முழுக்கப் பதிவாகியுள்ளன. ஒவ்வொரு கணமும் விழிப்போடிருக்க வேண்டிய நிலை; ஆடுகள் காணாமல் போய்விடலாம்; ஆடுகள் சோளத்தட்டையைத் தின்று வயிறு மந்தமாகி சாக நேரிடலாம்; கவுண்டர் / கவுண்டச்சி இடும் ஒவ்வொரு ஏவலையும் கட்டாயம் செய்திட வேண்டிய அவலம். இளவயதிற்கேயுரிய குறும்புகளையும் துருதுருப்பான செயல்களையும் ஒதுக்கி வைத்துவிட்டுப் பெரிய மனிதராகப் பாவித்து மந்தையை வழிநடத்தும் பொறுப்பு ஏற்பது மிகவும் சிக்கலானது. எனவே தான் ஆடு மேய்க்கும் கூளையன் வயதுக்கு மீறிய ஜாக்கிரதை உணர்வுடன் செயல்படவேண்டியுள்ளது. எங்காவது பிசிறு தட்டினால் கவுண்டரின் சித்ரவதைக்குள்ளாக வேண்டும்; கொடிய தண்டனை எப்பொழுதும் காத்திருக்கிறது. ஆடு மேய்க்கையில் விளையாட்டாக தேங்காய் பிடுங்கியதற்காகக் கூளையனைத் தலைகீழாகக் கிணற்றுக்குள் தொங்க விட்டுக் கவுண்டர் தந்த தண்டனை, பலவீனமான உடல் மீது நடத்தப்படும் அதிகாரத்தின் கோரத் தாக்குதல், காலந்தோறும் உடல் மீது எவ்வித உரிமையுமற்ற அடக்கியொடுக்கப்பட்ட உடல்களின் மீது நடைபெறும் வன்முறைகள், அத்துமீறல்களின் தொடர்ச்சியாகத் தான் கூளையனுக்கு நேர்ந்த கொடூரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கோவணத்துடன் பசித்திருந்து ஆடு மேய்க்கும் சிறுவர் சிறுமியரின் உலகு பற்றிய புனைவு பல்வேறு தகவல்களால் நிரம்பி வழிகின்றது. இவை மிகப்படுத்தப்பட்ட சம்பவங்கள் என்ற நினைவையழித்து நுணுக்கமான விவரங்களும் மொழியின் வெளிப்பாடும் வாசிப்பில் நம்பிக்கையைத் தருகின்றன. இளம் பருவத்திலே சொல் கதைகள் மூலம் வடிவமைக்கப்படும் சிறார்களின் மனம், நடப்பில் சக தோழர்களுடன் விளையாட்டு, சண்டை மூலம் சமனடைகிறது. அத்துவான வெளியான நிலப்பரப்பில் குறுக்கும் நெடுக்கிலுமாக அலைந்து திரிந்து வேடிக்கை பார்ப்பதற்கான தோதுவைக் கதைப் பரப்பெங்கும் பெருமாள் முருகன் சாத்தியப்படுத்தியுள்ளார்.

கிராமியப் புனைவில் மனிதனுக்கும் அமானுஷ்ய சக்திக்குமான இடைவிடாத உறவு நுட்பமானது. ஒவ்வொரு கணத்திலும் ஏதாவது நிகழலாம். சந்துகள், மரங்கள், நீர் நிலைகள், தோப்புகள் தெரு முக்குகள்..... இப்படி சகல இடங்களிலும் துடியான தெய்வங்களும் முனிகளும் பேய்களும் உறைந்துள்ளன. அவற்றுக்கான வேலை, வழிமுறை எல்லாம் ஒழுங்காக நடைபெற வேண்டும். ஒவ்வொரு முடுக்கு பற்றியும் திகிலூட்டும் / பயமுறுத்தும் வாய்மொழிக் கதைகள் மூலம் தொடர்ந்து புனையப்படும் புனைவுகள் சாதாரண மனிதனின் புலனுக்கு அப்பாற்பட்டவை. கிராமத்தில் வாழும் சிறுவன் வீட்டை விட்டு வெளியே வருகையில் நனவிலி மனதில் பதிந்துள்ள புனைவுகள் தொடர்ந்து வேட்டையாடிக் கொண்டே இருக்கும். யாரும் தப்பித்தல் இயலாது. கடவுள் நம்பிக்கையை விட கோபங் கொண்ட தெய்வங்கள் கிராமிய வெளியையே தகவமைக்கின்றன.

பொட்டல் காட்டில் இரவு வேளையில் கிடைக்குக் காவல் இருக்கும் கூளையனிடம் முனியப்பன் வானத்துக்கும் பூமிக்குமாக நடந்து வந்து வழியை மறித்துக் கிடைபோட்டதற்காக கோபப்படும்போது, சாமிக்கு நேர்ந்து விட்ட கிடா வீரன் முன்னே வந்து அவனைக் காப்பாற்றுகிறது. எது புனைவு எது யதார்த்தம் என்ற எல்லை தகர்ந்து போய் கதையின் தளம் வேறுதளத்திற்குள் நுழைகிறது. தெய்வம் பற்றிய பயமே கிடாவீரனையும் தெய்வத்தின் அங்கமாக மாற்றுகிறது. எனினும் வீரன், முனியப்பனுக்காகப் பலியிடப்படும்போது கூளையனுக்கு ஏற்படும் உணர்வுகள் அன்பில் தோய்ந்தவை. அமானுஷ்ய சக்தியை விட உயிர் என்ற நிலையில், வீரன் பற்றிய பிம்பமானது கூளையனுக்கேற்படுத்தும் எண்ணங்களே கதையோட்டத்தில் முக்கியமானவை.

கூளையன், வவுறி, செவிடி, நெடும்பன், மொண்டி போன்ற பெயர்கள் சக்கிலியச் சிறார்களுக்கும் மணி, செல்வன் ஆகிய பெயர்கள் கவுண்டர் சிறுவர்களுக்கும் சூட்டப்பட்டிருப்பது எளிதில் புறக்கணிக்கக் கூடியதல்ல. பன்னெடுங் காலம் பரம்பரை பரம்பரையாகப் பண்ணையம் பார்க்கும் சக்கிலியக் குடும்பத்தில் விடிவு இல்லை என்பதை பெயர்களும் சுட்டுகின்றன.

ஆடு மேய்க்கும் சிறுவர்கள் பற்றிய நுட்பமான தகவல்கள் அடங்கிய நாவல், இருநூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் விரிந்தாலும் முடிவில் ஏனோ குறுநாவல் வாசித்த உணர்வே ஏற்படுகிறது. புனைவின் மையம் முழுக்க ஆடு மேய்க்கும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் சம்பவங்களின் தொகுப்பாக விரிவதனால் வாசிப்பில் வேறுபட்ட அனுபவங்கள் ஏற்படவில்லை. எனினும் நாவல் தரும் அசலான அனுபவங்கள் யதார்த்தக் கதை சொல்லலில் முக்கிய இடம் பெறுகின்றன. அவை வாசகனை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இந்நிலையில் பெருமாள் முருகனின் எழுத்து தனித்துவமுடையது.

''ரத்த உறவு, கூள மாதாரி'' ஆகிய இரு நாவல்களும் புதியதான உள்ளடகத்துடன் செறிவான மொழியின் மூலம் சிறந்த யதார்த்தப் படைப்புக்குச் சான்றாக விளங்குகின்றன. அநேர் கோட்டுத் கதையாடலுக்குப் பழக்கப்பட்ட சான்றாக விளங்குகின்றன. அநேர் கோட்டுக் கதையாடலுக்குப் பழக்கப்பட்ட வாசகராலும் வாசித்து அனுபவிக்கவியலும் படைப்புகள் இவை. சிறந்த படைப்புக்கு உத்திகள் இரண்டாம் பட்சமானவை என்பதை வெளிப்படுத்தும் இவ்விரு நாவல்களும் அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான படைப்புகள். அவை வாசிப்பில் பெரும் சலனத்தை ஏற்படுத்தக்கூடியன; மாறுபட்ட விவாதங்களைத் தோற்றுவிப்பதன் மூலம் யதார்த்த நாவல் வாசிப்பின் புதிய சிகரங்களை எட்டியுள்ளன. இதுவே இவ்விரு நாவல்களின் ஆகப் பெரிய பலம்.

நன்றி: திறனாய்வு சில புதிய தேடல்கள் 2008

புதுக்கவிதைகளில் நம்பிக்கை - சி. அருண்மொழிச் செல்வி

வாழ்க்கையில் ஏற்படும் இடர்கள் இடந்தெரியாமல் போக ஒவ்வொரு மனிதனுக்கும் ஊன்றுகோலாக இருப்பது நம்பிக்கையே. வாழ்வின் வளர்ச்சிப்பயிருக்கு நம்பிக்கையே வேர்; முயற்சியே நீர். துன்பம் ஏற்படும்போது துவண்டுவிடாமல் நம்மைக்காப்பது நம்பிக்கை. வாழ்வின் வெற்றிக்குக் காரணமான நம்பிக்கை பற்றி புதுக்கவிதைகள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்றும், மனிதகுலத்தை மேம்படுத்துகின்றன என்று ஆராய்ந்தறிதலே இக்கட்டுரையின் குறிக்கோளாகும். அப்துல்ரகுமான், மு.மேத்தா, வைரமுத்து ஆகிய மூன்று கவிஞர்கள் கூறும் கருத்துக்கள் இதில் மூலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மனிதனுக்குள் இருக்கும் நம்பிக்கை என்ற சுடர் அவனை வழிநடத்துகையில் அவனது பாதை தெளிவாக அமைகின்றது. மனிதனிடமுள்ள இரு பண்புகளான தன்னைச் சுற்றியிருப்போரை நம்புதல், தன்னைத்தானே நம்புதல், என்பவை அன்பின் சாரமாகவே அமைகின்றன.

துன்பத்திலும் இன்பம்:

வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இணைந்த தொடர்பயணம். அதை உணர்ந்து நம்பிக்கையோடு வாழ்தலே வாழ்வின் வெற்றியாகும் எனக் கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகின்றார். சேற்றுக்குள் சிக்கிச் சிதையாமல் அழகாகக் காட்சி தரும் தாமரை மலரின் மூலம் வாழ்வினைக் கவிஞர் உணர்த்துகிறார் அதனை,

''கீழே சேறு

மேலே பாசி

தன்னைச் சுற்றிலும் தவளையர் கீதம்

ஆனாலும்

தண்­ர்த் தீயாய் பூத்திருக்கும்

தாமரைக்குத்தான்

என்னவொரு சௌந்தர்ய கம்பீரம்''

என்ற அடிகளினால் அறிய முடிகிறது.

தோல்வியின் மூலமே மனிதன் தனது குறைகளைக் களைந்து உண்மை வாழ்வின் போக்கினை உணர்ந்துகொள்கிறான். தோல்வியின் எல்லையில் வெற்றிகிட்டும் என்றும், அது மனிதனைச் சீர்ப்படுத்துவது என்றும் அப்துல்ரகுமான் குறிப்பிடுகிறார். மனிதனைப் பண்படுத்துவது தோல்விதான் என்பதை,

''தோல்வியே! நீ பரிணாமச் சிற்பி

மனிதனைச் செதுக்குவது

நீயல்லவா?

தோல்வியே!

நீ சுட்டுத் தொலைத்ததால் அல்லவா

நான் புல்லாங்குழல் ஆனேன்''

என்ற அடிகள் தெளிவுறுத்துகின்றன. வாழ்வில் ஏற்படும் காயங்கள்தான் வாழ்வை அணிவிக்கும் ''பதக்கங்கள்'' எனக் கவிஞர் அப்துல்ரகுமான் குறிப்பிடுகின்றார். கல் சிலையாவதும் மூங்கில் கானம் பாடுவதும் காயத்தால்தான் எனக்கூறித் துன்பத்தைக் கடத்தலே இன்பம் என நம்பிக்கையூட்டுகிறார்.

ஊக்கமே ஆக்கம்:

வாழ்வில் ஏற்படும் இறந்தகாலத் துயரங்களை எண்ணி வேதனையுறுதல் வளர்ச்சியைத் தடைசெய்வதாகும். நிலவில் தோன்றும் இருளும், ஒளியும் போல துன்பமும் இன்பமும் கலந்த முரண்பட்ட போக்கே வாழ்வு. அதை கவிஞர் மு.மேத்தா ''வாழ்க்கை'' என்ற கவிதையில் குறிப்பிடுகிறார். கவிஞர் வைரமுத்து வாழ்க்கையில் சங்கீதம் மட்டுமல்ல, கண்­ரும், அழுகையும் நிரம்பியிருக்கிறது என்ற கருத்தின் வாயிலாக வாழ்வு முரண்பட்டது எனக் குறிப்பிடுகின்றார். இத்தகைய நிலையில் நம்பிக்கையே சிக்கலைப் போக்கி, வளர்ச்சிக்கு வழிகோலும் தன்னம்பிக்கை பல்வேறு இன்னல்களையும் கடந்து வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்பதை ''போட்டி'' என்ற கவிதையில் அப்துல்ரகுமான் குறிப்பிடுகிறார். வானத்திற்கும் மனிதனுக்கும் போட்டி ஏற்படுகிறது. இறுதியில் மனிதனின் முயற்சி வென்று விடுவதை,

''இறுதியில் நான்

புதுப்புது இலட்சியங்களை

நோக்கி நடக்கும்

என் பாதங்களை எடுத்து வைத்தேன்

வானம் தோற்றது''

என்ற வரிகளினால் வெளிப்படுத்துகிறார். பகவத்கீதையில் கூறப்படும், மனிதன் அவனுடைய நம்பிக்கையாலே உருவாகின்றான். எதை நம்புகிறானோ அதுவாகவே மாறுகிறான் என்ற கருத்து ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

போராட்டத்தில் வெற்றி:

வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற துணிவும், நம்பிக்கையும் தேவை. அத்தகு ஊக்கம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காணப்படுகிறது. விதை ஒன்றின் செயல் மூலம் வைரமுத்து மனித மனத்திற்கு நம்பிக்கையூட்டுகிறார். ''நம்பிக்கை விதை'' என்ற கவிதையில் பல இன்னல்களுக்கு ஆட்பட்ட விதை முட்டிமோதி வெளிவருவது நம்பிக்கையால்தான் என்பதை,

''மரணம்போல் ஒன்று வந்தும்

மரிக்காதிருந்தேன்

உயிரில் நம்பிக்கை

ஊற்றி வைத்தேன்

நம்பிக்கையில் உயிரை

ஊற வைத்தேன்''

என்ற அடிகளினால் கவிஞர் சுட்டிக்காட்டுகின்றார். மனிதனுக்குள் மறைந்திருக்கும் நம்பிக்கையின் தன்மை பற்றி தத்துவச் சிந்தனையாளரான ஓஷோ, ''வாழ்விற்குத் துணிவே தேவை; துணிவு ஒவ்வொருவருள்ளும் விதையைப் போல் மறைந்துள்ளது'' எனக் கூறும் கருத்து பொருத்தமாக அமைகிறது.

விளக்குகளின் ஒளியையும், பயன்பாட்டையும் பற்றிக் கவிஞர் அப்துல்ரகுமான் ''விளக்குகளே'' என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார்.

''இருட்டு என்ற ராட்சஸ எதிரியை

அஞ்சாமல் எதிர்த்துப் போராடும்

சின்னஞ்சிறு வீரர்களே!

உங்கள் போராட்டக் குணத்தை

எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள்''

எனக் கூறி துன்ப இருளைப் போக்கும் முயற்சி நம்மிடையே வேண்டும். எனச் சுட்டிக்காட்டுகின்றார். எமர்சன் என்ற அறிஞர், ''நாம் நம்பிக்கையுடனேயே பிறந்திருக்கிறோம். மரம் கனிகளைச் சுமப்பதைப் போல மனிதன் நம்பிக்கைகளைச் சுமக்கிறான்'' எனக் கூறும் கருத்து எண்ணத்தக்கதாகும்.

நம்பிக்கையே வாழ்க்கை:

மாண்புடைய மனிதப்பிறவியை சோர்வுடன் கழிக்காமல், நம்பிக்கையோடு துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும்; அவற்றை நீக்கவும் வழிகாண வேண்டும். காலத்தினை வென்று வாழ வழிகாட்டுவது நம்பிக்கை என்பதைப் பற்றிக் கவிஞர் மு.மேத்தா,

''காலக் குதிரையின்

கடிவாளத்தைக் கொண்டுவந்து

நம் கையில் கொடுக்கும்

நம்பிக்கை''

என்பதன் வாயிலாக ஊக்கப்படுத்துகிறார். கவிஞர் வைரமுத்து ''புதிய ஏற்பாடு'' என்ற கவிதையில் இழிந்தவர்க்கும் பணிவு காட்டுதல் துயரத்திலும் நன்மை காணுதல், நலிந்தபோதும் நம்பிக்கைக் கொள்ளுதல், அடக்கமான அறிவு, ஆசை துறந்த மனம், சுயமாக நிற்கும் வாழ்வு, இலக்கைத் தொடும் முயற்சி, சிரமம் தாங்கும் தோள் முதலிய வாழ்வியல் கூறுகளைக் குறிப்பிடுகின்றார். முயற்சியில் வெற்றிபெறும் வரை துவண்டு விடக்கூடாது என்ற நம்பிக்கையை,

''முயற்சியே!

இலட்சியத்தோடு

இலக்கு தொடு

பயணத்தின் இறுதிவரை

கூடு துறந்துவிடாத

நத்தையைப் போல''

என்பதனால் அறியமுடியாது கவிஞரின் இக்கருத்து ஆங்கிலக் கவிஞர் டென்னிசனின் ''டபுலிசிஸ்'' கவிதையில் இடம்பெறும் எத்தகைய துன்பத்தையும் எதிர்கொண்டு தான் எண்ணியதை விடாமுயற்சியோடு தேடி, அதை அடையும்வரை மனந்தளராமல் இருக்கவேண்டும். என்ற சிந்தனையோடு ஒப்புநோக்கத்தக்கது. கவிஞர் மு.மேத்தாவும் இதே முயற்சியின் தன்மையைப் பற்றி ''படகுக்காரன்பாட்டு''

''கடல்நடுவே துடுப்பிழந்தால்

கையிரண்டும் துடுப்பாகும்!

கரை எனது கண்அருகே

காலமும் என் கையருகே''

என்பன பாடல் அடிகள் டால்ஸ்டாய் கூறும், ''நம்பிக்கையே வாழ்வின் உந்துசக்தி'' என்ற கருத்து கவிஞர் தம் கருத்தில் நிறைந்திருக்கிறது.

பயனே வாழ்வின் சிறப்பு:

''உன்னைக் கேட்பவர்களுக்கு

உன்னை முழுமையாகத்தர

ஒப்புக்கொள்

நீயும் மழையாவாய்''

என்ற அடிகளின் மூலம் பிறருக்குப் பயன்படுதலே வாழ்வின் சிறப்பு என்கிறார். துன்பத்திலும் அதைத் தாங்கி அன்புணர்வோடு மற்றவர்க்குத் துணையாக வேண்டும் என்பதை,

''தோளே!

இன்னும் இன்னும் சிரமம் தாங்கு

ஊருக்கு நிழல் வழங்க

தன் தலையில் வெயில் தாங்கும்

விருட்சம் போல''

என்ற அடிகளின் வழி கவிஞர் வைரமுத்து எடுத்துக் காட்டியுள்ளார்.

இக்கட்டுரையின் மூலம் பெறப்பட்ட வாழ்வின் கூறுகள்:

மனித வாழ்வு செம்மையுடையதாக அமைய அன்பு, நம்பிக்கை, ஒழுக்கம், பணிவு, இன்னா செய்தார்க்கும் இனியன செய்யும் இயல்பு போன்ற இனிய பண்புகளை மனிதன் பெற்றிருக்க வேண்டும். நம்பிக்கையே மனிதனின் உந்துசக்தியாக விளங்கி இப்பண்புகளை ஒளிரச் செய்கிறது. மனதி வாழ்வு இன்பமும், துன்பமும் இணைந்த ஒன்று என்பதை அறிந்து துன்பத்தில் துவண்டுவிடாத உள்ளத்தை மனிதன் பெறவேண்டும். முரண்பட்ட போராட்ட வாழ்வில் வெற்றி பெற ஊக்கமே துணையாகின்றது. மனிதமனம் பண்படுவது துன்பத்தினால்தான்; அதையறிந்து அத்துன்பத்தைக் கடந்து முயற்சியோடு முன்னேறுதலே வாழ்வின் சிறப்பாகும். வாழ்வின் பாதையில் ஏற்படும் இடர்களைப்போக்கத் தன்னம்பிக்கை இன்றியமையாததாகும். இத்தகு நம்பிக்கை உணர்வோடு செல்லும் வாழ்க்கையின் பயன் பிறருக்குத் துணைநின்று வளம்சேர்ப்பதே ஆகும்.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்

 

பாரதியின் சக்தி - ஜெயஇருதயநாத் ஸ்டெல்லாசி சேரன்

மனித மனம் எல்லாவற்றிலும் தன் மனதை இலயிக்க வைத்தாலும் தனக்கென விருப்பமுடைய ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதன்மீது மிகுந்த பற்று கொண்டிருக்கும். இறைப்பற்று உள்ள மனிதன் தனக்கென ஓர் இஷ்ட தெய்வத்தைக் கொண்டிருப்பான். அதுபோலவே பாரதியும் சக்தியின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அந்த ஈடுபாட்டின் காரணமாக, பாரதி படைப்பில் சக்திக்கென தனியிடம் அளித்துள்ளார்.

சக்தி வழிபாட்டின் பழமை:

சக்தி வழிபாடு எந்தக் காலத்தில் தொடங்கியது என்பதை வரையறை செய்து கூறமுடியாது.

சக்தியானவள் வேதங்கள் தோன்றிய காலத்திற்கு முன்னமே எழுந்தவள். வேதங்களின் தலைமையாக வாழ்பவள். இக்கருத்தைப் பாரதியார்,

''............................ஆதி

வேதத்தின் முடியினிலே விளங்கும் சக்தி'' (நெஞ்சோடு சொல்வது)

எனக் குறிப்பிட்டுள்ளார். சக்தி வழிபாடு, வேதங்கள் தொடங்கிய காலத்திற்கு முன்பே இருந்துள்ளது. தமிழ் நூல்களிலே மிகவும் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் ''கொற்றவை'' என்று சக்தி அழைக்கப்படுகிறாள். கலிங்கத்துப்பரணியில் கொற்றவை வழிபாடு பேசப்படுகின்றது. அதுமட்டுமின்றி இரட்டைக் காப்பிய நூல்களிலும் அகம் பற்றிப்பேசும் அகநானூற்றிலும், புறம் பற்றிப்பேசும் புறநானூற்றிலும் சக்தியைப் பற்றிப் பலவாறு கூறப்பட்டுள்ளது.

நம் நாட்டில் மட்டுமல்லாமல் அயல் நாடுகளிலும் சக்தியின் வெளிப்பாடு உண்டு என்பதைப் பாரதியார் தம் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

''மாகாளி பராசக்தி உருசியநாட்

டினிற் கடைக்கண் வைத்தாளங்கே

ஆகாவென் றெழுந்தது பார் யுகப் புரட்சி'' (புதிய ருஷ்யா)

வேத காலங்களுக்கெல்லாம் முற்பட்டு விளங்கும் மஹாசக்தி இவ்வுலகிற்கு ஆதி மூலமாகத் திகழ்கிறாள். பராசக்தி எப்படி தோன்றினாள் என்பது யாருக்கும் தெரியாது. அவளே தானாய் உருவாயினாள். அவள் யார் என்று விளங்கிக் கொள்ள முடியாதவள்.

பராசக்தி முத்தொழில் தெய்வங்களுடனும் உறவுக் கொண்டிருப்பவள். இதைப் பாரதி,

''பிரமன் மகள் கண்ணன் தங்கை

சிவன் மனைவி கண்ணன் மனைவி

சிவன் மகள் பிரமன் தங்கை

பிரமனுக்கும் கண்ணனுக்கும் சிவனுக்கும் தாய்'' (வசன கவிதை/சக்தி)

எனத் தம் கவிதையில் குறிப்பிட்டுள்ளார். சக்தி மும்மூர்த்திகளுடன் கொண்டுள்ள உறவுகளை வைத்து அவள் இத்தகையவள் என விளங்கிக் கொள்ள முடியாது.

பராசக்திக்கு அவளின் அவதாரங்கள் கொண்டு பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பல பெயர்கள் வழங்கினும் சக்தி ஒன்றே. பராசக்தி அனைத்திற்கும் ஆதிமூலமாக விளங்குபவள். வேதத்தின் தாயாகவும் இருப்பவள். இக்கருத்தினை,

''வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே'' (நவராத்திரி பாட்டு)

என்று குறிப்பிட்டுள்ளார். வேதங்களுக்கெல்லாம் தாயாக சக்தி இருப்பதால் சக்தி வழிபாடு மிகவும் தொன்மை வாய்ந்தது ஆகும்.

அனைத்திற்கும் ஆதாரம் சக்தி:

சக்தி உலகில் உள்ள அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குபவள். சக்தியில்லாமல் இவ்வுலகில் எதுவும் இயங்காது. இந்த உலகம் முழுவதையும் படைத்து அளிப்பவள் மஹாசக்தி ஆவாள்.

உலகில் அனைத்துப் பொருள்களும் சக்தியின் ஆக்கத்தால் எழுந்தவை ஆகும். சக்தியில்லாமல் சிவன் இல்லை. சிவனுக்கே ஆதாரமாக விளங்குபவள் சக்தி. சிவனே என்று சும்மாகிட எனக் கூறுவார்கள். சக்தியில்லாமல் சிவன் கூட எதுவும் செய்ய முடியாது. சக்தியினால்தான் இவ்வுலகம் இயங்குகின்றது. சக்தி எல்லாவற்றிற்கும் மூலமாய் அமைந்தவள்.

''சக்தி அநந்தம் எல்லையற்றது முடிவற்றது'' (வசனகவிதை/சக்தி)

சக்தியானவள் சிவனில் இரண்டறக் கலந்திருப்பவள். இவள் உயிர்களை உருவாக்கம் செய்கின்றாள். முத்தொழில் செய்யும் மும்மூர்த்திகளின் தேவியாகவும் அவர்களின் அன்னையாகவும் விளங்குபவள் சக்தியேயெனப் பாரதி சக்தியின் நிலையினை விளக்குகின்றார்.

''பத்துப்படைகொளும் பார்வதிதேவியும்

கமலத்திகழ்களிற் களித்திடும் கமலையும்

அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ'' (ஜாதீய கீதம்)

உலக உயிர்களைப் படைத்தவள் சக்தி என்பதை வசன கவிதையில் குறிப்பிட்டுள்ளார். உலக இயக்கங்கள் முதல் உயிர் இயக்கங்கள் வரை அனைத்தையும் இயக்குவது சக்தியின் தொழில் ஆகும். சக்தி என்னும் தலைப்பில் அமைந்த வசன கவிதையில் சக்தியின் மகத்துவத்தைத் தெளிவாகக் கூறியுள்ளார். ''சக்தி முதற்பொருள் பொருளில்லாப் பொருளின் விளைவில்லா விளைவு'' (வசன கவிதை/ சக்தி)

சக்தியே அனைத்துப்பொருளுக்கும் முதற்பொருளாக விளங்குகிறாள். எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவளும் அவளே. அண்டத்தில் உள்ள உயிர்கள் முதல் விண்மீன்கள் வரை அனைத்தையும் படைத்துக் காப்பாற்றுபவள்.

''மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் (நவராத்திரி பாட்டு)

யாதுமாகி நின்றாய் - காளி

எங்கும் நீ நிறைந்தாய்........'' (காளி பாட்டு)

சக்தியை வணங்குவதால் கிட்டும் நன்மை:

அனைத்துப் பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சக்தியை வணங்குபவருக்குச் சகல நன்மைகள் வந்து சேரும். நாம் கேட்கும் வரங்களைப் பராசக்தி தருவாள் என்பதை,

''..................வரம்

ஈவள் பராசக்தி யன்னைதான்'' (முருகன் பாட்டு)

எனக் குறிப்பிட்டுள்ளார் பாரதி. சக்தியின் அருள் அடைந்தவர்களுக்கு இந்த உலகத்தில் உள்ள எல்லாம் வசமாகிவிடும். தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டும் அருளைப் பொழிவதால் உலகம் வசப்பட்டுவிடும் என்பதை,

''ஆதி பராசக்தி தேவியடா! இவள்

இன்னருள் வேண்டுமடா! - பின்னர்

யாவுமுலகில் வசப்பட்டு போமடா'' (மூன்று காதல்/காளிகாதல்)

எனப் பாரதி பாடுகின்றார். சக்தியையே சரணம் என்று அவள் அடிசேர்வோருக்கு முக்தி நிலை கிட்டும். எல்லாத் தீங்குகளும் கவலைகளும் நோய்களும் தீரும்,

சக்தியிடம் அனைத்தையும் உடைமையாக்கினால் நன்மை பல கிட்டும் என்பதை பாரதி, ''சக்திக்கு ஆத்மஸமர்ப்பணம்'' என்னும் பகுதியில் கூறியுள்ளார். பாரதி சக்தியிடம் வரங்கள் கேட்கிறார். சக்திதான் நாம் இம்மண்ணில் வரக் காரணமானவள். அத்தகையவளானச் சக்தியிடம் பாரதி காணி நிலம் வேண்டுகிறார். அந்த இடத்தில் தான் விரும்பிய வண்ணம் வசதிகள் வேண்டும். அத்துடன் சக்தியின் துணையும் வேண்டும். இவை அனைத்தும் தன் நன்மைக்காக அன்றி தான் பெறும் வசதிகள் மூலம் நல்ல பாட்டுக்கள் இயற்றி இந்த உலகத்தைப் பாலித்திட எண்ணியே இவ்வாறு வேண்டுகிறார். அது மட்டுமல்லாது மஹாசக்திக்கு விண்ணப்பம் ஒன்றை விடுக்கின்றார் பாரதி அதில்,

''எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவை யெண்ணல் வேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்.

தெளிந்த நல்லறிவு வேண்டும்'' (மஹாசக்தி விண்ணப்பம்)

என வேண்டுகோள் விடுக்கிறார். சக்தியேகதியென்று சரண்புகும்போது அவள் அதிகமான வரங்களை நமக்குத் தருவாள் எனப் பாரதி பாடுகிறார்.

''நம்பினோர் கெடுவதில்லை நான்குமறை தீர்ப்பு

அம்பிகையைச்சரணடைந்தால் அதிகவரம் பெறலாம்...'' (தேசமுத்துமாரி)

என உறுதியுடன் கூறுகின்றார். ''மஹாசக்தி அருள் பெறுதலே வாழ்தல்'' எனப் பாடுகின்றார். சக்தியைப் பற்றுக்கொண்டு வாழ்வதாலே நாம் நலமாய் வாழ்கிறோம் எனப் பாரதி விளக்குகின்றார்.

பாரதிக்கு சக்தியின் மீதுள்ள ஈடுபாடு:

பாரதி சக்தியின் மீது மிகுந்த ஈடுபாடு உடையவர். பாரதியின் படைப்புகள் அனைத்தையும் கூர்ந்து நோக்கும்போது, அதில் சக்தி தத்துவமே மேவி நிற்கும். அவர், எங்கும் எதிலும் நிறைந்திருக்கும் சக்தியைத் தன் முழுமூச்சாகக் கொண்ட காரணத்தைப் பாரதி தம் படைப்புகளில் வெளிப்படுத்தியுள்ளார்.

பாரதியின் படைப்புகள் அனைத்திற்கும் காரணம் சக்தியே. சக்திதான் தன் மனதினுள் நின்று தம்மை எழுதத் தூண்டுகின்றாள் எனக் கூறுகின்றார்.

''மனதினிலே நின்றிதனை யெழுது கின்றாள்

மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி'' (பாரதி அறுபத்தாறு)

என்று பாடுகிறார் பாரதி. எந்த மாற்றமும் இன்றிப் பராசக்தியின் புகழ் பாடுகின்றேன் எனக் குறிப்பிடுகின்றார். பாரதி சக்தியின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் தம்மை சக்திதாசன் எனக் கூறிக்கொண்டார். இவர் சக்திதாசன் என்பது பாரதி மாதர் தலைப்பில் அமைந்த பெண் கட்டுரையில் இடம் பெறுகின்றது.

பாரதி தன் நெஞ்சை சக்தியின் வசப்படுத்துகின்றார். அதனால் ''நமோ நம ஓம் சக்தியென நவிலாய் நெஞ்சே'' எனப் பாடுகிறார். சக்தியின் மீதுள்ள ஈடுபாட்டிலேயே அவர் படைப்புகளில் சக்திக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவர் படைப்புகளில் சக்தி, பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளாள். பாரதியை அவரின் பால்ய பருவத்திலேயே சக்தி கவர்ந்துவிட்டாள். இதனால் பாரதி தன் இளம் பருவத்திலேயே சக்தியை முழு ஈடுபாட்டுன் வணங்கினார்.

''எந்த நாளும் நின்மேல் - தாயே

இசைகள் பாடி வாழ்வேன்'' (காளிஸ்தோத்திரம்)

என்று சக்தி மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாகப் பாடுகின்றார். பாரதி சக்தியின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டைப் போலவே சக்தியும் பாரதிமேல் கொண்ட அன்பின் காரணத்தால், அவரின் கவிதைகள் அனைத்தையும் தனக்கெனக் கேட்கின்றாள். இவ்வாறு பாரதி சக்தியின் மீதும், சக்தி பாரதியின் மீதும் அன்பு கொண்டு விளங்குகின்றனர்.

பாரதம் சக்தியின் வடிவம்:

சக்தி என்பவள் பெண். பாரதி பாரதத்தைப் பெண்ணாகப் பாவிக்கின்றார். சக்தி எல்லா வடிவங்களாக இருக்கிறாள். இதனை நம் பாரத நாட்டிற்கு ஒப்பாகக் கூறுகின்றார்.

''முப்பது கோடி முகமுடையா ளுயிர்

மொய்ம்புற வொன்றுடையாள் - இவள்

செப்புமொழிபதி னெட்டுடையாள் - எனிற்

சிந்தனை யொன்றுடையாள்'' (எங்கள் தாய்)

பாரதத்தைத் தாயாக பாவித்து அவள் எழுச்சி கொண்டு எழச்செய்ய திருப்பள்ளியெழுச்சியினைப் பாடுகின்றார்.

''மாதர் கோடி வந்தாலும் - கணம்

மாய்த்துக் குருதியிற் றிளைப்பாள்'' (வெற்றி கொண்ட தாய்)

எனக் கூறுவதன் மூலம் கொற்றவையின் வடிவாகப் பாரதத்தைக் காண்பது புலனாகின்றது. வெற்றி கொள்ள பாரதத்தாய் ''கொற்றவை'' போலே செயல்படுவாள் என்கிறார்.

பராசக்தி எவ்வாறு தம்மைநாடி வருபவர்களுக்கு அருள் புரிந்து அவர்களுக்கு நன்மைகள் செய்வாளோ, அதுபோலவே பாரதத் தாயும் நம்மை நாடி வருபவர்களுக்கு நலன்களை வழங்குகின்றாள். இதை,

''அறுபது கோடி தடக்கை களாலும்

அறங்கள் நடத்துவள் தாய் - தனைச்

செறுவது நாடி வருபவ ரைத்துகள்

செய்து கிடத்துவள் தாள்'' (எங்கள் தாய்)

எனக் குறிப்பிடுகின்றார். சக்தி வேதங்களுக்கெல்லாம் முன்தோன்றி பழமையானவளாக விளங்குகின்றாள். அதுபோலவே பாரதமும் மிகப்பழமை வாய்ந்த நாடு ஆகும்.

''பாரத நாடு பழம்பெரு நாடே'' (எங்கள் நாடு)

பாரதியார் பாரதத்தைச் சக்தியின் வடிவமாகக் காண்பதால்,

''வந்தே மாதரம் என்போம் - எங்கள்

மாநிலத் தாயை வணங்குது மென்போம்'' (பாரத நாடு)

என்று பாடுகின்றார். வேதங்களை வழங்கியவள் சக்தி. அவளின் வடிவமே பாரதம். பல வேதங்களைத் தந்தவள் பாரதத்தாய் என்பதை,

''நன்று பல்வேதம் வரைந்தகை பாரத

நாயகி தன் திருக்கை'' (பாரத மாதா)

என்று பாடுகின்றார். பாரதியார் சக்தியின் மீது கொண்ட ஈடுபாடும், தேசத்தின் மீது கொண்ட பற்றும் சேர்ந்து பாரதத்தைச் சக்தியின் வடிவமாகக் காணச் செய்தது. அனைத்தும் சக்திமயமாக இருக்கும்போது பாரதமும் சக்தியின் வடிவமாக பாரதி படைத்ததில் தவறொன்றும் இல்லை.

பாரதியின் படைப்பில் சக்திக்கெனத் தனியிடம் உள்ளது. சக்தி வழிபாடானது காலங்கள் கடந்து நிற்கின்றது. பாரதிக்குச் சக்தியின்மேல் கொண்ட ஈடுபாடே பாரதத்தைச் சக்தியின் வடிவமாகக் காணச்செய்தது. இதனால் தான் பாரதத்தைப் பாஞ்சாலியாகப் பாவித்து சபதத்தைப் படைத்தார் பாரதி. சக்தியே அனைத்திற்கும் மூல காரணமாய் அமைபவள். சக்தியே எல்லாயிடங்களிலும் நிறைந்திருப்பவள். அவள் இன்றி எதுவும் நிகழாது என்பது உறுதி.

நன்றி: தமிழ்ப்புத்திலக்கியம்.

 

பாரதியின் படைப்பாக்கத் திறன் - க. செல்வராணி

மகாகவி என்று போற்றப்படும் பெருமைக்குரியவர் பாரதியார். நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான போராட்டத்தில் வெறும் பார்வையாளனாக மட்டும் நின்றிராமல், அந்தப் போராட்டக்களத்தில் தானும் குதித்து பங்கு தாரனாகவும் விளங்கியவர். தேசிய வாதியாகவும், அதே சமயம் சர்வதேசிய வாதியாகவும், இந்திய மக்களின் விடுதலைக்காக மட்டுமல்லாது, மனித குலம் அனைத்தின் விடுதலைக்கும் பாடியவர். போர்க்குணம் மிக்க மனிதாபிமானியாகவும், ஜனநாயகவாதியாகவும், மலர்ந்த ஒரு கவிஞனைத் தமிழ் இலக்கியம் பாரதிக்கு முன்னாள் என்றுமே கண்டதில்லை எனலாம். இத்தகு சிறப்பு மிக்க பாரதியாரின் படைப்பாக்கத்திறனைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

''புவி அனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்து

தமிழ் மொழியைப் புகழில் ஏற்றும்

கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லையெனும்

வசை என்னால் கழிந்த தன்றே''

இவ்வாறு 1919 இல் எட்டயபுரத்து மன்னனுக்குத் தாம் எழுதிய பாட்டில் தன்னைப் பற்றியே பாரதி பாடியுள்ளார்.

பாரதியின் பெண் விடுதலை:

''பெண்ணின் பெருந்தக்க யாவுள'' என பெண்மையை வியந்து போற்றியது தமிழ்நாடு. ஆனால் பிறசமயங்கள் வந்து புகுந்ததால், ''பெண் பாவப் பிறவி'' என்றும், ''பெண்ணாகி வந்ததொரு மாய பிசாசாம்'' என்றும், பெண்ணைப் பழிக்கும் இழிநிலை ஏற்பட்டது. மனித வாழ்வின் உயிரோட்டமான பெண்களை இழித்தும், பழித்தும் ஒதுக்கி வைத்த சிறுமையை பாரதியாரால் பொறுக்க முடியவில்லை. ''தையல் சொல் கேளேல்'' என்ற ஒளவையின் ஆத்திசூடி பாரதிக்குப் பொருளற்றதாகப்பட்டது. அதனால் ''தையலை உயர்வு செய்'' என்று புதிய ஆத்திசூடி பாடினார் பாரதி.

''கண்கள் இரண்டினிலே ஒன்றைக் குத்தி

காட்சி கெடுத்திடலாமோ

பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்

பேதமை அற்றிடும் கா­ர்''

என்று கூறியதோடு ''மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வம்'' என்றால், மனையாளும் தெய்வமன்றோ? என்று வினவி பெண்மையைப் போற்றி, பெண் விடுதலைக்காகப் போராடினார்.

சமுதாய விடுதலை:

சாதிப்பாகுபாடு இல்லாத சமதர்ம சமுதாயத்தைப் படைக்க விரும்பினார் பாரதி. ''சமத்துவம்'', ''சகோதரத்துவம்'' என்பது தான் பாரதியின் தலையாய கொள்கை. இக்கொள்கைகளின் அடிப்படையிலேயே புதிய சமுதாயத்தைக் காண விரும்பிய பாரதி சமுதாயத்தில் நடக்கும் பல கொடுமைகளைச் சாடி பல பாடல்களை எழுதியுள்ளார். மனித நேயம் இருந்தால் சாதிக்கொடுமை இருக்காது. இந்த உண்மையை உணர்ந்த பாரதி,

''சாதிக் கொடுமைகள் வேண்டாம் அன்பு

தன்னில் செழித்திடும் வையம்

ஆதரவுற்று இங்கு வாழ்வோம் - தொழில்

ஆயிரம் மாண்புறச் செய்வோம்.''

என்கின்றார். எந்தத் தொழிலையும் இழிவாகக் கருதக்கூடாது என்பது பாரதியின் கொள்கை. இவ்வுலகில் சாதி ஒன்றே, அது மனித சாதி என்பது, பாரதியின் அசைக்க முடியாதக் கருத்து.

''மனிதரில் ஆயிரம் சாதி என்ற

வஞ்சக வார்த்தையை ஒப்புவதில்லை''

என்றும் கூறுகிறார். இறை இன்பம் பெறுவதற்கு சாதித்தடை இல்லை என்றும் கூறுகின்றார்.

பொருளாதார விடுதலை:

பொருளாதார விடுதலைப் பற்றியும் பாரதியார் ஆழ்ந்து சிந்தித்துள்ளார். பொருளாதார விடுதலை எனில் தனிமனிதன் ஒருவன் உண்ணும் உணவிற்கும், உடுக்கும், தங்கும் வீட்டிற்கும், பிறர்க்கு அடிமைப்பட்டு வாழும் இழிநிலை கூடாது என்ற எண்ணம் தான் பொதுவாகத் தோன்றும்.

''மனிதர் உணவை மனிதர் பறிக்கும்

வழக்கம் இனி உண்டோ?

மனிதர் நோக மனிதர் பார்க்கும்

வாழ்க்கை இனி உண்டோ?''

என்று பொருளாதார விடுதலையோடு பாடி, சுதந்திர இந்தியாவைக் கண்டு மகிழ்ந்தவர் பாரதியார். பொது உடமைச் சமுதாயமே ஒப்பில்லாத சமுதாயம் என்பதைப் பாரதியார் தெளிவுபடுத்தியுள்ளார்.

தேசிய ஒருமைப்பாடு:

செந்தமிழ் நாட்டின் மீதும், அதனை உள்ளடக்கிய பாரதநாட்டின் மீதும் பற்றுடையவர் பாரதி. அதனால், ''பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு'' என உரிமை கொண்டு பாடியுள்ளார். இந்த நாட்டில் உள்ள இமயத்தையும், கங்கையையும் முறையே, எங்கள் மலை, எங்கள் ஆறு, என உரிமையுடன் மகிழ்ந்து பாடினார் பாரதி. இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும், உணவின்றித் தனி ஒருவன் வாடுகின்ற நிலை இருந்தால், அந்தச் சமுதாயம் அழிக்கப்பட வேண்டிய சமுதாயம் என எச்சரிக்கின்றனர்.

''இனி ஒரு விதி செய்வோம் - அதை

எந்த நாளும் காப்போம்

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில்

ஜகத்தினை அழித்திடுவோம்''

என்று சமத்துவ சமுதாயத்தை நெறிபடுத்துகின்றார் பாரதியார்.

பாரதியின் மொழிப்பற்று:

பாரதியின் பாடல்கள் வாயிலாகத் தமிழ் மொழியின் இனிமை, பெருமை, சிறப்பு இவைகளை அறிவதோடு, தமிழ் இலக்கியங்களின் சிறப்பினையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. ''இனிமையும் நீர்மையும் தமிழ் எனல் ஆகும்'' என்று ''பிங்கல நிகண்டு'' கூறுகிறது. இவ்வுண்மையை நன்கு உணர்ந்த பாரதியார் தமிழின் சுவை எத்தகையது என்பதைத் தம் அனுபவத்தின் வாயிலாக உணர்ந்து, உணர்ந்தவாறே கவிதையில் வெளிப்படுத்தியுள்ளார்.

''தெள்ளுற்ற தமிழ் அமுதின் சுவை கண்டார்

அமரர் சிறப்பு கண்டார்''

என்று தமிழ் சுவை அமுதத்திற்கு நிகரானது என்கின்றார்.

பாரதியார் தமிழ், தெலுங்கு, ஹ’ந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு முதலான பல மொழிகளை நன்கறிந்த புலவன், பல்வகை மொழிகளிலே இனிமையான மொழி தமிழ் மொழி என்பதை,

''யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல்

இனிதாவது எங்கும் காணோம்''

என்று கூறுகின்றார். மேலும் தமிழைத் ''தேமதுரத் தமிழ்'' என்றும் கூறுகின்றார்.

''யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்

வள்ளுவரைப் போல், இளங்கோவைப் போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை''

என்று பாடி தமிழ்க்கவிஞர்களின் தனித்தன்மையை எடுத்துக் கூறும் பாரதியார், தமிழ் மொழிப் பற்றின் காரணமாக மட்டுமல்லாது, தம் கூற்று முற்றிலும் உண்மை எனவும் ஆணித்தனமாகக் கூறியுள்ளார்.

இறைநோக்கு:

பாரதியின் தெய்வ பக்திப் பாடல்கள் மிகப்பழமையானவை. ஆழ்வார்களும், நாயன்மார்களும் முன்னரே கூறிச் சென்றாலும், அவற்றுள்ளும் புதுமையைப் புகட்டி, இலக்கியச் சுவையுடன் பாடி உள்ளார். பாரதியின் பக்திப் பாடல்களில், ''தோத்திரப் பாடல்கள்'', ''ஞானப்பாடல்கள்'', என இருவகை தன்மையில் அமைந்துள்ளன. ''உண்மையே தெய்வம்'' என்கிறார். அதனால் தான்,

''உண்மையின் பேர்தெய்வம் என்போம் - அன்றி

ஓதிடும் தெய்வங்கள் பொய்யெனக் காண்போம்''

என்று கூறுகின்றார். பாரதியார் கணபதி, முருகன், சக்தி, சங்கரன், காளி, முத்துமாரி மட்டுமல்லாது இயேசு, அல்லா என அனைத்துச் சமயக் கடவுள்களையும் புகழ்ந்துள்ளார். எனவே பாரதியாரைச் ''சர்வ சமய சமரச சன்மார்க்க ஞானி'' என்று தெளிவாக உணர்ந்து போற்றுவோம்.

இசைப்புலமை:

மனிதன் உடம்பால் பறக்காவிடினும், உள்ளத்தால் பறக்கின்றான். அப்போது இயற்கையிலே பாட்டு தோன்றுகிறது என்று இசையின் தோற்றத்தைப் பற்றிப் பாரதியார் கூறுகின்றார். எண்வகை மெய்ப்பாட்டுடன், நடுநிலைமையையும் கூறி இவற்றில் ஒன்றோ, பலவோ கலந்தால் உண்மையான இசைப்பாடல் தோன்றும் என்கின்றார்.

குயில் பாட்டில் பண்ணின் சிறப்பையும், நாதத்தின் மேன்மையையும் சுட்டிக்காட்டினார்.

நாட்டுப்புறப்பாடலில் பாரதியின் ஈடுபாடு:

நாட்டுப்புறப் பாடல்களில் உண்மையையும், உயிர் துடிப்பையும் உணர்ந்தவர் பாரதி, எனவே அப்பாடல்களைப் போற்ற வேண்டும் என்று கூறியதோடு மட்டுமின்றி, தன்னுடைய கவிதைகளிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் பல்வகையான நாட்டுப்புறப் பாடல்களைப் பயன்படுத்தியுள்ளார்.

பாரதியாரின் கவிதைகளில் காணப்படும் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கத்தை வடிவம், நடை, பொருள் என்னும் மூன்று வகையாகத் திறனாய்வாளர்களின் பாகுபடுத்தியவர். பாரதி இயற்றிய அம்மாகண்ணுபாட்டு, வண்டிக்காரன் பாட்டு, புதிய கோணங்கி, பண்டாரப்பாட்டு, கும்மிப்பாட்டு, மறவன் பாட்டு என்பன சிறப்பு மிக்க நாட்டுப்பாடல் வடிவில் அமைந்துள்ளன.

ஒளவையின் ஆத்திசூடி பாரதியின் ஆத்திசூடி

1. ஆறுவது சினம் ரௌத்திரம் பழகு

2. ஙப்போல் வளை கிளைபல தாங்கேள்

3. தையல் சொல் கேளேல் தையல் உயர்வு செய்

4. தொன்மை மரவேல் தொன்மைக்கு அஞ்சேல்

5. பொருள்தனைப் போற்றிவாழ் திருவினை வென்று வாழ்

6. போர்த் தொழில் புரியேல் போர் தொழில் பழகு

இது போன்ற பல இடங்களில் ஒளவையின் கருத்துக்கள் பாரதியின் புதிய ஆத்திசூடியில் எதிர்மறைப் பொருளுடன் இடம் பெற்றுள்ளன.

குழந்தை இலக்கியம்:

எளிய நடை, சந்தம், பதங்கள், பொது சனங்கள் விரும்பும் மெட்டு, இவற்றினை உடைய காவியம், தற்காலத்தில் செய்து தருவோன், நமது தாய் மொழிக்கு புதிய உயிர் தருவோன் என்று கூறிய பாரதியின் புரட்சி மனப்பான்மை, அவருடைய பாடலில் தெளிவாகிறது. பாப்பா பாட்டில், சாதி வேறுபாடு கூடாது என்பதை உணர்த்தும் நோக்கில் குழந்தைகளுக்காக,

''சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்''

என்கின்றார்.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்

 

சிவகாமியின் சபதத்தில் நாகநந்தி அடிகள் - அ. சிவசுப்பிரமணியன்

கல்கியின் பாத்திரங்களில் மிகச்சிறந்த படைப்பு நாகநந்தி. நாவல் இலக்கிய உலகில் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார் இவர். சிவகாமியின் சபதம் நாவலின் எதிரன் இவரே. இப்பாத்திரத்தின் படைப்பில் கல்கியின் பாத்திரங்களைப் படைக்கும் திறன் வெளிப்படுகிறது. கற்பனைக் கதை மாந்தரானாலும் நாகநந்தி கல்கியால் புதுமுறையில் படைக்கப்பட்டுள்ளார். இவரும் புலிகேசியும் ஒத்த உருவமுடையவர்கள். பல அற்புதச் செயல்களை இவரைக் கொண்டு செய்விக்கிறார் கல்கி. மூலிகைகளின் துணையால் உடலை நஞ்சாக்கி, கலைகளை இரசிப்பதில் சிறந்த கலைஞராகி, துறவி உடை அணிந்து திரியும் இந்த புத்தபிட்சு பல இடங்களில் நம்மை பிரமிக்க வைத்திருக்கிறார்.

தம்பியிடம் கொண்ட அன்பு:

புலிகேசியின் அண்ணன் நாகநந்தி, அவரது இயற்பெயர் நீலகேசி. இருவரையும் இரட்டைக்குழந்தைகளாகப் படைத்துள்ளார் கல்கி. நாகநந்தி தன் தம்பியிடம் அளவற்ற பாசமும் கொண்டிருந்தார். தங்களது நாட்டைச் சிற்றப்பன் மங்களேசனிடமிருந்து மீட்டு அரசைத் தன் தம்பியிடம் ஒப்படைத்துவிட்டுப் புத்தபிட்சுவானார். பல்லவ நாட்டைத் தன் தம்பிக்கு அடிபணிய வைக்கத் துறவறம் பூண்டு நாகநந்தி என்ற புனைபெயருடன் ஒற்றனாகக் காஞ்சிக்கு வந்தார். வரும் வழியில் பரஞ்சோதியைப் பாம்பிடமிருந்து காப்பாற்றினார். இன்னொரு தருவாயில் அவனையே பல்லவர் சிறையிலிருந்து காப்பாற்றினார். அவர் தன் தம்பி மீது கொண்ட பாசமும் அவரின் மனித நேயமுமே அவரின் இச்செயல்களுக்குக் காரணம். இம்மனித நேயச் செயல்கள் வாசகர்களிடம் அவரைக் குறித்து நல்ல எண்ணத்தையும் மதிப்பையும் தேடித்தந்து விடுகிறது.

உடலிலும் நஞ்சு செயலிலும் நஞ்சு:

நாவலின் கதை வளர வளரத்தான் நாகநந்தி எப்படிப்பட்டவர் என்பது விளக்கம் பெறுகிறது. ''ஒட்டி உலர்ந்த தோற்றம், கொடிய விஷப்பாம்புகளும் அஞ்சி ஓடும் நஞ்சு உடல், பாம்பின் சீற்றம் என மூச்சுவிடும் இயல்பு, அன்பையோ பக்தியையோ உண்டாக்காத படமெடுத்தாடும் பாம்பினைப் போன்ற முகம்'' என்று நாகநந்தியின் தோற்றத்தை வர்ணிக்கிறார் கல்கி.

ஆயனர் படைத்த சிற்பங்களைக் கண்டு நாகநந்தி அவரிடம் நட்புக் கொண்டார். ஆயனாரின் மனதில் அஜந்தாவின் வர்ண ஆசையை ஊட்டி அவரைத் தன்வயப்படுத்த முயலுகிறார். புலிகேசியின் வெற்றிக்கு முதல் தடையாக இருப்பது மகேந்திரரே என்பதை உணர்ந்த நாகநந்தி பல்லவ நாட்டை வெல்லப் பல சூழ்ச்சி வலைகளைப் பின்னுகிறார். ஆனால் அவரின் சூழ்ச்சி மகேந்திரரிடம் பலிக்கவில்லை. நாகநந்தி செய்கின்ற சூழ்ச்சிகளுக்கெல்லாம் எதிர் சூழ்ச்சி செய்து அவரது முயற்சியை முறியடிக்கிறார் மகேந்திரவர்மர். அவர் மட்டும் நாகநந்தி புலிகேசிக்குக் கொடுத்தனுப்பிய ஓலையை மாற்றியிராவிட்டால் பல்லவ நாடே சாளுக்கியர்களுக்கு அடிபணிந்திருக்கும். ''ஆகா! நான் நினைத்ததைக் காட்டிலும் மகேந்திரவர்மர் கெட்டிக்காரன். நெடுகிலும் நம்மை ஏமாற்றி வந்திருக்கிறான்.'' என்று கூறுகிறார். ஆனால் இந்த ஏமாற்றங்களால் நாகநந்தி சிறிதும் அசையவில்லை. பல்லவ நாட்டைச் சாளுக்கியரின் ஆட்சிக்கு கீழ்க் கொண்டுவர அரும்பாடுபட்டார். ஆனால் அவரின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியுறும் வண்ணம் மகேந்திரர் மலைபோல் இருந்தார். அவர் செய்த ஒவ்வொரு சூழ்ச்சியும் பல்லவ மன்னனின் முன் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறாமல் போயின. நாகநந்தி பேராற்றல் படைத்தவர். ''புகை புகா வாயிலும் புகும் பேராற்றல் அவருக்கு இருக்கிறது'' மகேந்திரவர்மரின் அரசியல் தந்திரங்களுக்குமுன் அவரின் திட்டங்களெல்லாம் தவிடு பொடியாயின. அதையுணர்த்தும் நாகநந்தி மகேந்திரவர்மரை ஏமாற்ற முனைகிறார். சிவகாமியிடம் மகேந்திரவர்மர் கொடுத்த சிங்க இலச்சினையை அபகரித்துக் கொண்டு காஞ்சி சென்று பல்லவ அரசவைக்குள்ளே நுழைந்து தன்னைத் தூதுவனாக அறிமுகப்படுத்தி, புலிகேசி மகேந்திரவர்மரைக் கைது செய்துவிட்டார். மாமல்லர் உடனே படையெடுத்து வந்துத் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று மகேந்திரர் கூறியதாகச் சொல்லுகிறார். அவரின் சூழ்ச்சியும் துணிவும் நம்மை வயப்பில் ஆழ்த்துகிறது. மாமல்லர் படையெடுத்துச் சென்றால் வாதாபியின் பெரும்படையிடம் தோற்றுவிடுவார் என்பதை நன்கறிந்தவர் நாகநந்தி, அவர் திட்டப்படியே மாமல்லரும் போருக்கு எழுகிறார். ஆனால் மகேந்திரவர்மரின் தந்திரத்தை அறியாதவர் நாகநந்தி. சிவகாமியிடம் அவர் எதற்காகச் சிங்க இலட்சினையைக் கொடுத்தார் என்பதைப் புரியாதவர். அவரைப்பின் தொடர்ந்து வந்த மகேந்திரவர்மர் அவரைக் கைது செய்கிறார். வாதாபியின் திறமைசாலி ஒற்றன் கைது செய்யப்பட்டபோது மகேந்திரரே ''சேனாபதி, வாதாபியின் மிகவும் கெட்டிக்காரனான ஒற்றனை சிறைப்படுத்தியாகிவிட்டது. பாதி யுத்தத்தை நாம் ஜெயித்தது போலத்தான்'' என்று கூறுகிறபோது நாகநந்தியின் திறமை வெளிப்படுகிறது.

கலையும் காதலும்:

அஜந்தா விவகாரங்களில் வளர்ந்த தனது இருபது வயதுவரையும் பெண்களைக் காணாத நாகநந்தி அடிகள் அஜந்தா ஓவியங்களில் இருந்த மாதர்களைக் கண்டு மௌன மொழிப் பேசி அவைகளோடு ஒன்றி மகிழ்கிறார். அவ் ஓவியங்களில் நாட்டியமாடும் ஒரு பெண்ணின் ஓவியத்தைக் கண்டுத் தம்மை இழக்கிறார். அவரின் உள்ளம் அந்த ஓவியக் கன்னியைத் தேடியது. ஆயனச் சிற்பியின் சித்திரகூடத்தில் அந்தச் சித்திரப் பாவையைக் கண்டுதம்மை இழக்கிறார். அவரைக் கவர்ந்த அஜந்தா ஓவியம் உயிர்பெற்று வந்ததைப் போன்று திகழும் சிவகாமியைக் காண்கிறார். காதல் கொள்கிறார். புலிகேசிக்கு எழுதிய ஓலையில் காஞ்சி சுந்தரியை நீ எடுத்துக் கொள், சிவகாமி சுந்தரியை எனக்குக் கொடுத்துவிடு என்று எழுதுகிறார்.

சிவகாமியிடம் அவர் கொண்ட காதல் அவளின் உடலழகைக் கண்டல்ல. அவளின் கலையழகைக் கண்டுதான். ''காதல், பிரேமை, மோகம் என்னும் வார்த்தைகளை இந்த உலகம் தோன்றிய நாள் முதல், கோடானு கோடி மக்கள் எத்தனையோ கோடி தடவை உபயோகித்திருக்கிறார்கள். ஆனால் அந்த வார்த்தைகளின் மூலம் நான் குறிப்பிடும் உணர்ச்சியை அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். என்னுடைய காதலில் தேகதத்துவம் என்பது சிறிதும் கிடையாது'' என்று அவரே புலிகேசியிடம் கூறுகிறார். சிவகாமியிடம் காதல் கொண்ட பின் அவரின் ஒவ்வொரு செயலும் நடனமங்கையை அடையும் நோக்கத்தையே நடுநிலையாகக் கொண்டு இயங்குகிறது. சிவகாமியை வாதாபிக்குக் கொண்டு செல்வதற்காகவே ஒரு போரினை உண்டாக்குகிறார் புத்தபிட்சு. ஆனால் சிவகாமி தற்செயலாக சிறைப்பட, அவளை வாதாபிக்குக் கொண்டு செல்கிறார். புலிகேசி சிவகாமியை நாற்சந்தியில் நடனமாட வைக்கிறான். அதைக்கண்ட புத்தபிட்சுவின் கண்கள் கோபக்கனலில் திளைக்கின்றன. ''கலையுணர்ச்சியில்லாத நீர் மூடப்புலிகேசி'' என்று தன் தம்பியைச் சாடுகிறார். சிவகாமியிடம் நடந்த தவறுக்கு மன்னிப்புக் கோருகிறார்.

மாமல்லரிடமிருந்து காப்பதற்காகவே சிவகாமியை வாதாபிக்குக் கொண்டு வந்ததாகக் கூறும் நாகநந்தி, அவளை ஆயனச் சிற்பியிடம் அப்போதே சேர்த்துவிடுவதாகக் கூறுகிறார். புலிகேசி இறந்து, வாதாபி அழியும் வரை இங்கிருந்து போகமாட்டேன் என்று சபதம் செய்கிறார். இந்த பயங்கரமான சபதத்தைக் கேட்ட நாகநந்தியின் முகத்திலே புன்னகை தோன்றியது. ''தம்முடைய சூழ்ச்சி மீண்டும் பலித்துவிட்டது என்று எண்ணி அந்தப் பொல்லாத பிட்சு உள்ளுக்குள் உவகையடைந்தார் போலும்'' என்கிறார் கல்கி. சிவகாமி இப்படி ஒரு சபதம் செய்ய வேண்டும் என்று நினைத்தே மாமல்லரை அவர் இழிவாகப் பேசினார் என்று கல்கியின் கூற்று உணர்த்துகிறது.

சிவகாமி புலிகேசியின் காலில் விழுந்து மன்னிப்புக் கோருவதாக அஜந்தா குகைச்சுவரில் தீட்டச் செய்த ஓவியம் நாகநந்தியின் கோபத்தை அதிகரிக்கச் செய்தது. அவர் சிவகாமியின் கலையின் மீது கொண்ட அளவற்ற மோகம் சாபமாக உருவெடுக்கிறது. ''அவளை அவமானப்படுத்திய நீயும் உன் சக்திகளும் சர்வ நாசமடையப் போகிறீர்கள்'' என்று எந்த தம்பியின் வளர்ச்சிக்காக பாடுபட்டாரோ அந்தத் தம்பியைத் தூற்றுகிறார். அந்த ஓவியம் தீட்டியவரையும் கொன்று பழிதீர்க்கிறார். கலைக்காதலில் மூழ்கியதால் பல்லவ மன்னன் படையெடுத்து வருவதைக்கூட புலிகேசியிடம் சொல்லவில்லை. ''நன்றியில்லாத பாதகனாகிய உனக்குத் தண்டனை கிடைக்கும் பொருட்டே உன்னிடம் சொல்லவில்லை'' என்று புலிகேசியிடம் கூறும் நாகநந்தியைப் பார்க்கிறோம். நாகநந்தி சிவகாமிக்காகச் சாளுக்கிய நாட்டின் அழிவுக்கே வழி செய்கிறார். புத்த சங்கத்திலிருந்து விலக்கப்படுகிறார். வாதாபி தீக்கிரையாகவும் புலிகேசி இறக்கவும் அவரே காரணம். தன் காதலியின் சபதம் ''சிவகாமியின் சபதம்'' நிறைவேற வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அனைத்தையும் அதற்காகவே செய்கிறார். இந்நாவலின் இயக்குநர் நாகநந்தியே. அவரே இந்நாவலின் கதையைத் தமதாக்கி நிறுத்தும் ஆற்றல் மிக்க தூணாக விளங்குகிறார். ''இந்நூலின் ஆரம்பம் தொடங்கி இறுதிமட்டும் இருபெண்களையும் (ஒருத்தி அவர் காதல் கொண்ட சிவகாமி மற்றொருத்தி அவர்மீது காதல் கொண்ட ரஞ்சினி) இரு நகர்களையும் (வாதாபி, காஞ்சி) இருப்பேரரசுகளையும் (சாளுக்கியப் பேரரசு, பல்லவப் பேரரசு) அஜந்தா மாமல்லபுரம் ஆகிய இரு கட்டிடங்களையும் அவற்றின் கலைகளையும் இணைத்துக் கதையை இயக்கும் கருவி நாகநந்திதான்'' என்கிறார் தனிநாயக அடிகள். நாவலின் இறுதியில் சிவகாமியோடு தப்பி ஓட முயன்ற நாகநந்தி அடிகள் பல்லவ சேனாதிபதி பரஞ்சோதியின் பிடியில் சிக்குகிறார். அவ்வேளையில் அவர் விஷக்கத்தியை எறிந்து சிவகாமியைக் கொல்லத் துணிகிறார். பரஞ்சோதியின் வாள் அவரின் கையை வெட்டி எறிந்து நஞ்சுக் கத்தியை எறிந்தது. சிவகாமியைக் கொல்லத்துணிந்தது அவள் பேரில் அவர் கொண்ட காதலின் கடைசிப் பரிசு என்கிறார் நாகநந்தி அடிகள்.

கொடிய அரக்கர்:

நாகநந்தி திருப்பாற்கடல் ஏரியை உடைத்து பெருவெள்ளம் உண்டாக்கும் கொடுமைக்காரர். காஞ்சி மாநகரின் குடீதண்­ரில் நஞ்சுக்கலந்து அந்நகர மக்களைக் கொல்லத் திட்டமிட்டக் கொடிய அரக்கர். ''நாகநந்தி மனிதனேயல்ல. மனித உருவத்திலுள்ள அரக்கன், விஷம் ஏற்றிய கத்தியை உபயோகிக்கும் பாதகன்'' என்று மகேந்திரவர்மரே குறிப்பிடுகிறார். நாவலின் தொடக்கத்தில் பரஞ்சோதியைக் காப்பாற்றிய நாகநந்தியின் கை பரஞ்சோதியாலே வெட்டப்படுகிறது. அப்போதும் தன் கையை வெட்டிய பரஞ்சோதியை நோக்கி, ''அப்பனே பரஞ்சோதி நீ நன்றாயிரு நீ மிக்க குணசாலி மிக்க நன்றியுள்ளவன் உன்னை ஒரு சமயம் நாகப்பாம்புத் தீண்டாமல் இந்தக் கை காப்பாற்றியது. உன்னைப் பல்லவன் சிறையிலிருந்து இந்தக் கை விடுதலை செய்தது. நீ ஆசானாகக் கொணட ஆயன சிற்பியரின் உயிரை இந்தக் கை இரட்சித்தது. அப்படிப்பட்ட வலக்கையை நீ வெட்டிவிட்டாய் அடியோடு துண்டித்துவிட்டாய். ஆ ரொம்ப நன்றியுள்ள பிள்ளை நீ என்று சொல்லும் போது அவரின் அற்புதப் படைப்பு இலக்கிய உலகில் நீங்காத இடத்தைப்பெற்று விட்ட காரணத்தை உணரமுடிகிறது. ஒற்றைக் கையோடு தப்பிய நாகநந்தி அடிகளை ''பார்த்திபன் கனவில்'' நீலகேசியாக சந்திக்கிறோம்.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்.

 

புதுமைப்பித்தன் சிறுகதைகளில் நடை - ஓர் ஆய்வு - கோ. இரவிச்சந்திரன்

தமிழ்ச் சிறுகதை இலக்கியப் பரப்பை ஆழ்ந்து நோக்கும் போது ''மணிக்கொடி''க்கால எழுத்தாளரான புதுமைப்பித்தன், வலிவும், பொலிவும் மிக்க சிறுகதைகளைப் படைத்திருக்கின்றார். புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்றவுடன் படிப்பவர் மனதில் பளிச்செனத் தோன்றுவது அவரது நடைச்சிறப்புதான். அவருடைய கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் சலிப்பு ஏற்படாமைக்குக் காரணம் அவருடைய நடையாளுமையே எனலாம். நடை ஓர் ஆசிரியனின் தனித்தன்மையை வெளிப்படுத்தவல்லது. படைப்பாளனை இனம் கண்டுகொள்ளும் வகையில் தெளிவுபடுத்துவது. இது, காலத்திற்குக் காலம் மாறுபடக்கூடியது. ''நடை என்பது, கதை சொல்லப்படும் முறையும் கருத்து வெளியீட்டிற்குப் பயன்படுத்தும் சொல் - தொடர் அமைப்புகளும் ஆகும். முன்னதில் சுருக்கம் வேண்டும்; பின்னதில் பொருத்தம், தெளிவு, குறிப்பு ஆகியன வேண்டும்.'' என்று மீனாட்சி முருகரத்தினம் கூறியுள்ளது இதற்குச் சான்றாக அமைகிறது. இவ்வகையில், புதுமைப்பித்தன் தமது ''சிறுகதைகளில்'' பயன்படுத்தியுள்ள நடை ஆளுமையை ஆய்வதே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.

கதைசொல்லும் முறை: கதை சொல்லும் முறை என்பது தொடக்க காலம் முதல் இன்றைய காலம் வரை ஒரு மரபாகப் பின்பற்றக்கூடிய ஒன்றாகக் கருதப்படுகிறது. இப்போக்கினைப் புதுமைப்பித்தன் மேற்கொண்டுள்ளார் என்பதை அவரது படைப்புகள் உணர்த்துகின்றன. இவரது கதைகளைப் படிப்போர், கதைகளை விடக் கதை சொல்லும் முறையிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள். நடை வேறுபாடுகளில் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்த்தவர் புதுமைப்பித்தன். ''கருத்தின் வேகத்தையே பிரதானமாக்கிக் கொண்டு வார்த்தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித்தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத்தேன். அது நானாக எனக்கு வகுத்துக் கொண்ட ஒரு பாதை அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது''. என்று புதுமைப்பித்தன் கூறியுள்ளார். தன் மூலம் ஒரு நடையே உருவாக்கிப் பின்பற்றியுள்ளார் என்பது சிந்திக்கத்தக்கது.

தவளைப் பாய்ச்சல் நடை: இந்நடையானது துண்டு துண்டாக நின்று பொருள் தரும். இந்நடையை இக்காலப் படைப்பாளர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நடையை அனைத்து படைப்பாளர்களும் பின்பற்றியுள்ளார்கள். இந்நடையினைப் புதுமைப்பித்தனும் கையாண்டுள்ளார். ஒரு நேர்கோட்டில் ஒரு தொடரிலிருந்து மற்றொரு தொடருக்குச் சொற்கள் தாவிச் சென்று, நின்று பொருளைத் தருவது தவளைப் பாய்ச்சல் நடையாகும். ''வாக்கியம் என்பது எழுவாயும் பயனிலையும் வேற்றுமையேற்ற சொற்களும் அடங்கியது. நடையில் (வழி கதை நடை) ஒன்று எழுவாய் இருக்கும்; பயனிலை இருக்காது. எழுவாயால் பயனிலை உய்த்துரைப்படும். ஒன்று ஒன்று இல்லாமையால் நடை தாவிச் தாவிச் செல்லுவது போன்றிருக்கிறது; அது நடையல்ல ''ஓட்டம்'' இந்த நடையில் புதுமைப் பித்தனின் சிந்தனை வேகம்தான் புலப்படுகிறது அவர் கருத்துக்களைக் கொட்டுவது தெரிகிறது''. என்று தி.முருகரத்தினம் தவளைப் பாய்ச்சல் நடைக்கு விளக்கம் கூறியிருப்பது ஈண்டு எண்ணத்தக்கதாகும்.

''கானப்பிரியன் உள்ளே வருகிறான். இயற்கையின் நிமிர்ந்த நடை, நேர் நோக்கு - கண்களிலே ஏதோ தோன்றி மறைந்த ஒரு கனவு. சபையைப் பார்க்கிறான். செயற்கையின் திறன், பெருமிதம் இறுமாப்பு - எல்லாம் சற்று மலைப்பு உண்டு பண்ணுகின்றன.'' என்ற அடிகள் துண்டு துண்டாக நின்று பொருளைத் தருகின்றன.

செந்நடை: தொடக்கக் காலத்தில் செந்நடை சிறப்பாகப் பேசப்பட்டது. அக்கால கட்டத்தில் பேச்சு வழக்கில், இந்நடையை மக்கள் மிகுதியாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதை இவரது படைப்புகள் பறை சாற்றுகின்றன. அக்காலகட்ட மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளை இக்கால மக்களோடு பொருந்துவதாகப் புதுமைப்பித்தனின் நடை அமைந்திருப்பது நோக்கத்தக்கது. ''தமிழ்ச் சிறுகதையுலகில் தன்னேரில்லாத் தலைவனாகத் தனது படைப்பால் உயர்ந்துள்ளவர்''. என்று ஜெயகாந்தன் ''சோதனைக் கதைகள்'' என்னும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது இதற்குச் சான்றாக அமைகிறது. இவரது ''அன்று இரவு'' கதையில் செந்நடையைப் பயன்படுத்தியுள்ளார்.

''நான்மாடக் கூடலில் அன்றிரவு மூவர் உறங்கவில்லை, அதில் ஒருவன் சொக்கேசன். மனிதனுடன் மனிதனாக நடமாடி, அவர்களுடைய சுகதுக்கங்களைப் பகிர்ந்து கொண்டு வளையல் விற்று, சாட்சி சொல்லி சங்கப் புலவர்கள் கருவமடக்கி, வாழையடி வாழையாக ஆண்டு வரும் பாண்டியர்களுக்கு மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய்க் கைகொடுத்து வரும் சொக்கேசன் - அழகன் உறங்கவில்லை. பிறவா நெறி காட்டுவோனுக்கு உறக்கம் ஏது? ஊன்ஏது? அடுத்த ஆள் ஓர் அரசன்; பாண்டியன் அரிமர்த்தன பாண்டியன். இமையா நாட்டம் பெற்றவன் போல, சயனக்ருஹத்தில் மஞ்சத்தில் அமர்ந்து நினைவுக் கோயிலில் நடமாடி வந்தான். அறிவை அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை வாலுடன் தலையிணைத்துக் காட்டி நகரின் வரம்பமைத்த பாம்பு மாதிரி அறிவு சக்ர வியூகம் போட்டது'' என்ற அடிகளில் செந்நடையைக் காண முடிகிறது.

உணர்ச்சி நடை: படைப்பாளன் தன் மனதில் உருவாக்கும் உள்ளத்து. வெளிப்பாட்டைக் கதைப் பாத்திரத்தின் வாயிலாக வெளிப்படுத்திப் படிப்பவர் மனதில் பதிய வைக்கும் ஒரு வகை மொழிப் பாங்கு உணர்ச்சி நடை எனலாம். இந்நடையினைப் பல கதைகளில் வெளிப்படுத்தியுள்ளார் புதுமைப்பித்தன். ''எடுத்துக் கொண்ட ஒரு விஷயத்தை உயிரோடு, உணர்ச்சியோடு பிரதிபலிக்கும் ஆற்றல் வாய்ந்த நடை, கையாளும் நடையின் பெருமிதத்துக்கு ஏற்ப மிக ஆழ்ந்த விஷயம்; கதையின் உருவமும் பூரணத்துவம் பெற்றது; உருவமும் கதைப் போக்கும் தனித்தன்மை பெற்றவை''. என்று கு.அழகிரிசாமி புதுமைப்பித்தனின் கதைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ''பொன்னகரம்'' என்னும் கதையில்,

''ஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகலவென்று உயிர்பெற்று இருக்கும். அப்பொழுதிலிருந்து தான் அவ்வூர்ப் பெண்கள் தங்கள் வேலையை செய்வார்கள், சாராய வண்டிகள், தண்­ர் எடுக்க வரும் பெண்கள்! அங்குத் தண்­ர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர்.

என்ற பகுதியில் உணர்ச்சி நடையினைக் காண முடிகிறது''.

வடமொழி, ஆங்கில, அங்கத நடை: புதுமைப்பித்தன் நடையானது, தனிச்சிறப்பு பெற்ற நடையாகும். இவரது அனைத்துக் கதைகளிலுமே மேற்கூறப்பட்ட மூன்று நடைகளும் மிகுதியாக அமைந்துள்ளன. இருப்பினும், இவரது நடையில் எவ்வகை நடையானாலும் செயற்கைத் தன்மையே தோன்றுவதில்லை. இவர் தேவையின்றி வேற்று மொழிச் சொற்களையும் கலப்பதில்லை. சில இடங்களில் அவற்றை விதிவிலக்காகப் பயன்படுத்தியுள்ளார். கதையின் போக்கினை அறிந்தே பயன்படுத்தியுள்ளார். ''புதுமைப்பித்தன் வடசொற்களையும் பிறசொற்களையும் ரொப்பி வைத்தவரும் அல்ல; அவற்றை அறவே புறக்கணித்தவரும் அல்ல. இவ்வகையில் அவருக்கு ''மொழித் தேசியம்'' இல்லை. மொழி அவருக்கு ஒரு கருவியே''. என்று முருகரத்தினம் கருதுகிறார்.

''காளிக்கோவில்'' என்னும் சிறுகதையில் ''இருள், நட்சத்திரங்களும் அற்ற மேக இருள், வானத்திருளை வெட்டி மடிக்கும் மின்னல்கள், இருளுடன் இருளாக நகரும் நதி. படிகளில் மோதி எழுப்பும் அலைகளினால் அன்றித் தெரியாது''. என வரும் அடிகளில் அங்கத நடையினைக் காண முடிகிறது. ''கட்டில் பேசுகிறது'' கதையில் வரும், ''கவர்மெண்டு ஆஸ்பத்திரியில், அந்தக் கிழக்கு வார்டுப் படுக்கையில், எனது வியாதிக்கு என்னமோ ஒரு முழுநீள லத்தின் பெயர் கொடுத்து என்னைக் கொண்டு போய்க் கிடத்தினார்கள்''. என்ற பகுதியில் புதுமைப்பித்தன் ஆங்கில சொற்கலப்பு நடையினைக் கையாண்டிருப்பதை உணர முடிகிறது.

இவரது ''ராமனாதனின் கடிதம்'' என்னும் கதையில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். ''யாருக்கு எழுத.... எல்லோருக்கும் தான்..... நாளைக்கு இந்நேரம்.....''சற்றுப் புத்தி சுவாதீனமில்லாத பொழுது பிராணத்யாகம் செய்து கொண்டான்'' என்ற தீர்ப்புக் கூறியாகி விடும். எனவரும் பகுதியில் வடமொழி நடையினைக் காண முடிகிறது.

இவ்வாறு புதுமைப்பித்தன், தமது சிறுகதைகளில் வெவ்வேறு நடை வகைகளைக் கையாண்டு தமது சமுதாய நோக்கினையும், சீர்திருத்தக் கோட்பாட்டினையும் உணர்த்தியுள்ளார்.

முடிவுகள்:

1. புதுமைப்பித்தனின் தனித்தன்மை என்பது நடைச்சிறப்பாகும்.

2. இவரது நடை கேலியும் கிண்டலும், குத்தலும் குமுறலும் நிறைந்தது.

3. புதுமைப்பித்தன் நடையாளுமையை மொழியியல் மூலம் தெளிவுப்படுத்தமுடியும்.

4. பொருள் புணரும் வகையில் இடத்திற்கேற்றாற் போல் நடை ஆளுமையை வெளிப்படுத்திக்காட்டியுள்ளார்.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்

 

பாரதிதாசன் கவிதைகளில் யாப்பு - ம. தேவகி

முன்னுரை:

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சிறந்த கவிஞர் பாரதிதாசன். நல்ல ஆசிரியராக சமுதாயச் சீர்திருத்தவாதியாக சிறந்த இதழாசிரியராக விளங்கியவர். பன்முகப் பாங்குக்கொண்ட பாவேந்தர் தொட்ட துறைகளிலெல்லாம் புகழ் நாட்டியவர். இத்தகைய சிறப்புடைய பாவேந்தரின் கவிதைத் தொகுப்புகளிலுள்ள கவிதைகளின் யாப்பு வடிவங்களைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

பாவேந்தர் கவிதைகளில் யாப்பு:

பாவேந்தர் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்குக் கற்றறிந்தவர். இவர்

''இலக்கணமும் இலக்கியமும்

தெரியாதான் ஏடெழுதல்

கேடு நல்கும்''

என்கிறார். ஆகவே பாவேந்தர் தன்னுடைய கவிதைத் தொகுப்புகளில் யாப்பு வடிவங்களைக் கையாண்டு இருப்பார் என்று ஆராய்ந்தபொழுது

1. பாக்கள், 2. பாவினங்கள், 3. இசைப்பாடல்கள், பாக்கள், பாவினங்கள், இசைப்பாடல்கள் ஆகிய இம்மூன்றும் கலந்த படைப்புகள் என்று அவருடைய கவிதை வடிவங்களை வகைப்படுத்த முடிகிறது.

பாக்கள்:

பாவேந்தர் நால்வகைப் பாக்களுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா ஆகிய மூன்றுபாக்களை மட்டும் கையாள்கிறார்.

வெண்பா:

பாரதிதாசனின் நான்கு கவிதைத் தொகுதியிலுள்ள மொத்தப்பாடல்கள் 561. அவற்றுள் 11 கவிதைகள் மட்டுமே வெண்பாயாப்பினால் அமைந்துள்ளன. இக்கவிதைகளும் முற்றிலுமாக வெண்பாயாப்பில் அமைந்துள்ளன என்று கூறவியலாது. ''வகையுளி'' அதிகமாகப் பயன்படுத்த வேண்டியுள்ளது. தளைவேறுபாடு உள்ள இடங்களில் குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஆய்தம் அலகு பெறாது. இக்கருத்தும் இவரது கவிதைகளில் பயன்படுகிறது. மேலும் பின்னால் வந்த புலவர். குழந்தை, அ.கி.பரந்தாமனார் தளைதட்டக்கூடிய இடத்து ''ஒற்று நீக்கி'' அலகிடலாம் என்கிறார்கள். மெல்லின இடையின ஒற்றுக்கள் மட்டுமே நீக்கப்படும். இருப்பினும்

''பின்னும் மலைதூக்கும் மனிதன் பிறப்பதில்லை''

''அச்சோ மழைதான் மழையேதான் அத்தான் அச்சேதி''

''தோலும் எரியும் தோய்கலவை மேலும்''

''என்றாள் எதிர்வந்தாள் எடுத்துக்கொள் கத்தி என்றாள்''

என்ற அடிகளிலுள்ள சீர்கள் வெண்பாவிற்குரியனவாக அமையினும் தளைவேறுபாடு காணப்படுகின்றன. மேலும் வெண்பாவின் இறுதியடியானது சிந்தடியாக அமையவேண்டும். ஆனால் ''இன்றைக்கு ஒத்திகை'' என்ற கவிதையில்

''ஒத்திகை இன்றைக்கு நாளைக்குக் கூத்து''

என்று அளவடியாக அமைந்துள்ளது. மேலும் 7 கவிதைகள் 12 அடிக்குமேல் 49 அடி வரை வேறுபட்ட அடிவரையறைகளைக் கொண்டுள்ளன. கதவுபேசுமா -12, தேன்கவிகள் தேவை-65, செந்தமிழ்நாடு-17, சஞ்சீவி பர்வதத்தின் சாரல்-419, சிரிப்போ குத்தகைச் சீட்டு-27, பள்ளிக்குப்போகும் புள்ளிமான்-28, இன்றைக்கு ஒத்திகை-24, பச்சைக்கிளி-72

12 அடிக்கு மேற்பட்ட அடிகளையுடைய கவிதைகளைப் பஃறொடை வெண்பா என்கிறார் அமிர்தசாகரர். வீரசோழியத்தாரும், புலவர் குழந்தையும் இதனைக் ''கலிவெண்பா'' என்கிறார்கள். மூன்று கவிதைகள் நேரிசை வெண்பாவினால் ஆனது. ஒரு கவிதை சவலை வெண்பாவினால் ஆனது(வீரசோழிய இலக்கணப்படி)

ஆசிரியப்பா:

பாரதிதாசன் கவிதைகளில் 42 கவிதைகள் ஆசிரியப்பாவினால் ஆனது. இக்கவிதைகளில் சில இடங்களில் வகையுளியும், ஜகாரத்தைக் குறுக்கமாக்கியும் தளைதட்டக்கூடிய இடங்களில் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஆசிரியப்பாவானது ஏ,ஓ,ஈ,ஆய்,என்,ஐ, ஆகிய எழுத்துக்களை ஈற்றடியின் இறுதிச் சீராகக் கொண்டு முடியும். ''அகத்தியன் விட்ட புதுக்கரடி'' என்ற கவிதையில்

''அகத்தியம் பிறந்ததே அருந்தமி ழகத்தில்''

என்று மாறியமைந்துள்ளது. நேரிசையாசிரியப்பாவின் இலக்கணப்படி 30 கவிதைகளும், இணைக்குறள் ஆசிரியப்பாவின் இலக்கணப்படி 9 கவிதைகளும், நிலைமண்டில ஆசிரியப்பாவின் இலக்கணப்படி 3 கவிதைகளும் அமைந்துள்ளன.

கலிப்பா:

பாரதிதாசன், கவிதைத் தொகுதியில் 2 கவிதைகள் மட்டுமே கலிப்பாவிற்குரியனவாக அமைந்துள்ளன. இக்கவிதைகளிலும் தளைதட்டக்கூடிய இடத்து, வகையுளியும், ஐகாரத்தைக் குறுக்கமாக்கியும் பயன்படுத்த வேண்டியுள்ளது. கலிப்பாவில் மாச்சீர்கள் மற்றும் விளங்கனிச்சீர்கள் இடம்பெறக்கூடாது. ஆனால்

''அருகு மடவார் அடைகாய் தரவும்''

''இறப்போம் உறுதி இதுவாகும் என்பீர்''

''சேற்றில் முளைத்திட்ட செந்தா மரைபோலும்''

''சாற்றுதல் கேனீர் தமிழை வடநாட்டார்''

''ஒழுக்கம் கெடுக்கும் உணர்வை ஒடுக்கும்''

என்ற அடிகளில் இவ்வாறு மாச்சீர்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு கவிதைகளும் வெண்டளையால் அமைந்த இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பாவினால் ஆனது.

பாவினங்கள்:

பாரதிதாசன் ஆசிரியப்பாவிற்குரிய இனமான ஆசிரிய விருத்தத்தையும் கலிப்பாவிற்குரிய இனமான கலிவிருத்தத்தையும் கட்டளைக் கலித்துறையையும் பயன்படுத்தியுள்ளார்.

ஆசிரியவிருத்தம்:

பாரதிதாசன் 28 கவிதைகளை எண்சீர்விருத்தத்தாலும், 7 கவிதைகளை அறுசீர் விருத்தத்தாலும், 1.கவிதையைப் பதினான்குசீர் விருத்தத்தாலும் ஆக்கியுள்ளார். இப்பாவினங்களுக்குச் சீர் தளை வரையறை இல்லை. ஆனால் கழிநெடிலடியாக அமையுமென்ற அடிவரையறை உள்ளது. இம்முறையிலிருந்து ஒரு கவிதையானது மாற்றமடைந்துள்ளது.

எ.கா.: ''எங்கள் திருநாட்டில் எங்கள்நல் ஆட்சியே

பொங்கிடுக வாய்மை பொலிந்திடுக என்றே நீ

செங்கதிர் சீர்க்கையால் பொன்னள்ளிப் பூசிய

கங்குல் நிகர்த்த கருங்குயிலே கூவாயே''

இவ்வாறு அளவடியாக அமைந்துள்ளன. கலிவிருத்தம் என்றுரைக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது.

கலிவிருத்தம்:

நாற்சீரடி நான்காய் வருவது கலிவிருத்தமாகும். ஒரு கவிதையானது இவ்வாறு அமைந்துள்ளது. இப்பாவினத்திற்கும் சீர், தளை வரையறை கிடையாது. (எ.கா)

''மெய்வண்ண வீடுகட்ட உனைத்தொங்க விடுகின்றார்கள்

செய்வண்ண வேலைசெய்து திருமாடம் முடிக்கின்றாய் நீ

பொய்வண்ண பூசணிக்காய் கறியுனைச் செய்துண்டேன் உன்

கைவண்ணம் அங்குக்கண்டேன் கறிவண்ணம் இங்குக்கண்டேன்''

என்ற பாடலில் ''முடிக்கின்றாய் நீ'' ''இங்குக் கண்டேன்'' என்று வகையுளியாக்கினால் இக்கவிதை கலிவிருத்தமாகும்.

கட்டளைக்கலித்துறை:

அடிதோறும் வெண்டளை பிறழாது ஐந்து சீர்களைக்கொண்டு முடியும். ஐந்தாம் சீர் விளங்காய்ச் சீராக வரும். மேலும் நேர் எனற அசையில் தொடங்கும் அடியானது ஒற்று நீங்கலாக 16 எழுத்துக்களைக் கொண்டும், நிரை என்ற அசையில் தொடங்கும் அடியானது ஒற்றுநீங்கலாக 17 எழுத்துக்களைக் கொண்டும் முடியும். பாரதிதாசன் கவிதைகளில் 2 கவிதைகள் கட்டளைக் கலித்துறையினால் ஆனது. ''வள்ளுவர் வழங்கிய முத்துக்கள்'' என்ற கவிதையில் ஒரடி மட்டும் இவ்விலக்கணத்திலிருந்து பிறழ்ந்துள்ளது. எ.கா,

''தொன்னூற் படியில்லை

திராவிடர் தூய கலைஒழுக்கம்''

வெண்டளையானது பிறழ்ந்து கலித்தளை இடம் பெற்றள்ளது. நேர் என்ற அசையில் ஆரம்பிக்கக்கூடிய இவ்வடியானது 17 எழுத்துக்களைக் கொண்டுள்ளது.

இசைப்பாடல்கள்:

பாவேந்தர் தம்முடைய கருத்துக்களை வெளியிட மரபுவழிப்பட்ட யாப்பு வடிவங்கள் போதுமானவை அல்ல என்று கருதிப் பாமரர்க்கும் புரியும்படியான இசைப்பாடல்களைக் கையாண்டார். இவர் 1.சிந்து 2.கும்மி 3.கண்ணி 4.கீர்த்தனை ஆகியவற்றைக் கையாண்டுள்ளார்.

சிந்து:

பாரதிதாசன் கவிதைகளில் 13 கவிதைகள் சிந்து என்று குறிக்கப்பட்டிருந்தாலும் அம்முறைப்படி அமையாத கவிதைகளே மிகுதி. இச்சிந்துப்பாக்கள் இடம்பெறும் சீர்களின் அடிப்படையில் வியனிலைச்சிந்து, சமனிலைச்சிந்து என்று பிரிக்கப்பட்டுள்ளது. 5 கவிதைகள் சமனிலைச்சிந்தாக உள்ளன. 2 கவிதைகள் இருசீரிரட்டையாகவும், 2 கவிதைகள் முச்சீரிரட்டையாகவும் 1கவிதை நாற்சீரிரட்டையாகவும் அமைந்துள்ளன. 2 கவிதைகள் வியனிலைச்சிந்தாக அமைந்துள்ளன. 1 கவிதை நாலிருசீரிரட்டையாகவும், மற்றொரு கவிதை சநாலுச்சீரிரட்டையாகவும் அமைந்துள்ளன. ஏனைய 6 கவிதைகள் இவ்விலக்கண முறையிலிருந்து சிறிது வேறுபட்டுள்ளது. இவற்றை வியனிலைச்சிந்து என்ற இசைப்பாடலில் சேர்க்கலாம் என்ற எண்ணமானது தோன்றுகிறது.

கும்மி:

பாரதிதாசன் கவிதைகளில் 3 கவிதைகள் கும்மி என்றுக் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை கும்மிக்குரிய இலக்கணப்படி அமையவில்லை. எழுசீர்களைக் கொண்டுள்ளன. ஆனால் வெண்டளையானது பிறழ்ந்துள்ளது. (எ.கா)

''தோட்டத்து வாசல் திறக்கும் தினம்

சொர்ணம் வந்தால் கொஞ்ச நேரம்மட்டும்''

கண்ணி:

கண்ணியானது 1.நூலின் உறுப்பாக வரும் கண்ணி 2. தனிச்செய்யுளாக வரும் கண்ணி 3. இசைப்பாட்டாக வரும் கண்ணி என்று பிரிக்கப்பட்டுள்ளது. முதல்வகையினைப் பயன்படுத்தி 2 கவிதைகளையும், இரண்டாவது வகையினைப் பயன்படுத்தி 1 கவிதையினையும், மூன்றாவது வகையினைப் பயன்படுத்தி 17 கவிதைகளையும் படைத்துள்ளார்.

கீர்த்தனை:

பாரதிதாசன் கவிதைகளில் 2 கவிதைகள் கீர்த்தனையின் இலக்கணப்படி அமைந்துள்ளன.

பாக்கள், பாவினங்கள், இசைப்பாட்டுகள் கலந்து வரல்:

பாரதிதாசன் ''புரட்சிக்கவி'' ''கடற்மேற் குமிழிகள்'' என்ற 2 காவியங்களிலும் இம்முறையைப் பயன்படுத்தியுள்ளார். ''வீரத்தாய்'' என்ற காவியத்திலும் ''புரட்சித்திருமணத்திட்டம் நடத்தும் முறை'' என்ற கவிதையிலும் பாக்களும் பாவினங்களும் விரவிவந்துள்ளன. சிலப்பதிகார காவியத்தில் சிறிது விருத்தப்பாக்களும், சிறிது இசைப்பாடல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பாரதியார் தன்னுடைய ''குயில் பாட்டு'' என்ற படைப்பிலும் இம்முறையைப் பயன்படுத்தியுள்ளார்.

இம்முறையினைப் பின்பற்றியே பாரதிதாசன் இப்படைப்புகளை உருவாக்கியுள்ளார்.

முடிவுரை:

பாரதிதாசன் தன்னுடைய தொடக்கக் கால கவிதைகள் மரபிற்குட்பட்டுப் படைத்துள்ளார். கவிஞன் என்பவன் சமகாலப் பிரச்சனைகளைப் பாமர மக்களுக்கும் புரியக் கூடிய வகையில் கூறவேண்டும் என்பதற்காக இசைப்பாடலான புதிய யாப்பு வடிவங்களைக் கையாணடார். கவிதையின் கருத்து வெளியீட்டிற்கு இந்த யாப்பு வடிவங்கள் தடையாக இருந்தபொழுது அவற்றினை மீறவும் அவர் தயங்கவில்லை என்பதனை இக்கட்டுரையின் வழி அறிய முடிகிறது.

நன்றி: தமிழ்ப்புத்திலக்கியம்

 

'சிற்பியின் கவிதைகளில் தொன்மக்கூறுகள்' - கோ. ரேவதி

கவிஞர் சிற்பியின் கவிதைத் தொகுப்பான ''சர்ப்ப யாகம்'' என்ற நூலில் குறிப்பிடப்படும் தொன்மக் கூறுகளை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம். இதிகாச, புராணக் கதைகளையும், கதை மாந்தர்களின் பெயர்களையும் இன்றைய காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப கவிஞர்கள் கவிதைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆதாம் - ஏவாள்: உலகில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் இருப்பதைப் பார்த்துக் கவிஞர் வியப்புக் கொள்கிறார்.

''அன்றைக்கு ஒரு நாள்

ஆரம்பித்து வைத்தானே ஆதாம்

அவனுக்கு

ஏவாள் கொடுத்த

இனிய ஆப்பிளில்

இத்தனை விதைகளா?'' (ச.யா. ப.15)

மனித குலத்தில் முதலில் தோன்றியவன் ஆதாம். அவன் மனைவி ஏவாள். அவர்கள்தான் மனித குலம் தழைத்தோங்க காரணமாக இருந்தார்கள் என்பதை ''தொடக்கம்'' என்ற கவிதை தலைப்பில் குறிப்பிடுகின்றார்.

மணிமேகலை: இரட்டைக் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியத்தில் இடம்பெறும் அட்சய பாத்திரம் என்னும் வற்றாது உணவு வழங்கும் பாத்திரத்தின் தன்மையினைக் கூறும் பொழுது

''அலுமினிய அட்சய பாத்திரம் திறக்க அடிவாரத்தில்

பத்தினிப் பெண்ணாய்க் கண்சிமிட்டும்

பழைய சோற்றுப் பருக்கைகள்'' (ச.யா. ப.24)

அட்சய பாத்திரத்தில் என்றுமே சுவையான உணவு நிறைந்து இருக்கும். ஆனால் வறியவர்களின் வீட்டில் உள்ள அட்சய பாத்திரமான அலுமினியப் பாத்திரத்தின் அடியில் பழைய சோற்றுப் பருக்கைகள்தான் என்றுமே காணப்படும் என்பதையே ''அலுமினிய அட்சய பாத்திரம்'' என்று கூறுகிறார்.

மணிமேகலை சிறைச் சாலையினை அறச் சாலையாக மாற்றி அமைத்தாள் என்பதை ''பேசாத பொருள் பேசினால்...'' என்ற தலைப்பில்,

''மணிமேகலைக்கு ஒரு

அறச்சாலை'' (ச.யா. ப.55)

என்று சிறைச்சாலை பேசுவது போல அமைத்துள்ளார்.

சகுந்தலை: ''ஓ சகுந்தலா'' என்ற தலைப்பில் சகுந்தலையின் கதை முழுவதையும் கூறி இன்றைய பெண்கள் பழைய சகுந்தலைகள் போல் அல்ல. அவர்கள் புதுமைப் பெண்கள் என்பதை,

''காளிதாசனின் மானசிக புத்ரியே!

வசந்த உற்சவத்துக்கு

முதல் தாம்பூலம் வாங்கி

இலையுதிர் காலத்தில் வாய்

கொப்புளித்து உமிழும்

விசுவ எத்தர்களும்

துரோக துஷ்யந்தர்களும்

இன்னும் எங்களில் இருக்கின்றார்கள்

ஆனால் எமது சகுந்தலைகள்

இப்போது தொலைப்பது

மோதிரங்களை அல்ல - பொருந்தாத

காதலரை! (ச.யா. ப.36)

புராணக்கால சகுந்தலை மோதிரத்தை தொலைத்துவிட்டு, காதலன் முன் தன்னை ஏற்கும் படி மன்றாடினாள். ஆனால் இன்றைய புதுமைப் பெண்கள் காதலன் பொருந்தாதவன் என்று தெரிந்தால் காதலனைத் தொலைப்பதற்கு தயங்குவது இல்லை என்பதைக் கவிஞர் தெளிவாக எடுத்துரைக்கின்றார்.

சிவன்: சிவனின் கோபத்தினால், நெற்றிக் கண்ணுக்கு இரையான மன்மதனும், நக்கீரனும் தங்களுக்குத் திரும்ப வேண்டும். எனவே அவர்களை எரித்த சிவனின் நெற்றிக்கண் தூர்ந்து போகட்டும் என்று ''சிவனுக்கு ஒரு சாபம்'' என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார்.

''ஓகோ! சிவனாரே!

சாம்பல் பீழை படிந்து

தூர்ந்து போகட்டும்

உமது நெற்றி கண்!

எங்களுக்கு

மனுக்குலம் தழைக்க

மன்மதனும் வேண்டும்

எதேச்சதி காரத்தின் முகத்தில்

காறியுமிழ

நக்கீரனும் வேண்டும்'' (ச.யா. ப.47)

பரமபத ஆட்டம்: பரமபதப் படத்தினைத் தேசமாகவும், அதிலுள்ள பாம்புகளை அரசியல்வாதிகளாகவும், தாயம் உருட்டி விளையாடுபவர்களை மக்களாகவும் எண்ணிக் கவிஞர் ''சர்ப்ப யாகம்'' என்ற கவிதையினைப் பாடியுள்ளார். பரமபத ஆட்டத்தை கொண்டு இன்றைய அரசியல் ஏற்றத்தாழ்வுகளைப் படம் பிடித்துள்ளார் கவிஞர் சிற்பி

''தலை மேல் பூமியை

வைத்தால் சுமக்கும்

ஆதி(க்க) சேடர்களே

சுற்றி வளைத்தால்

சமுதாயப் பாற்

கடலின் அலைநடுவே

இலாபம் கருதிச்

சுழலும் மந்திர

மலையின் தோள்களிலே

கடை கயிறாகிக்

கதையை நடத்தும்

வாசுகிப் பாம்புகளே

நடுங்கி நடுங்கித்

தாயக் கட்டைகள்

உருட்டிக் காத்திருந்தால்

பரம பதத்தை

ஒரு நாளும் நீர்

அடைந்திட விட மாட்டீர்

அதனால்

நாகங்கள் அழிக்கும்

யாகங்கள் தொடங்கினோம்

கொடிய சர்ப்ப யாகம்'' (ச.யா. பக்.52,53)

எங்கோ உள்ள சில ஏணிகளைப் பிடித்து நாம் முன்னேறினாலும் அரசியல்வாதிகளான பாம்புகளின் விஷநாக்கால் தீண்டப்பட்டு மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே நாம் வந்துவிடுகிறோம். எனவே நாம் அரசியல்வாதிகளான பாம்புகளை அழிக்க, ஒரு புதிய யாகம் தொடங்கி அதில் அப்பாம்புகளை அழித்து அந்த சாம்பலில் புதிய பரமபதத்தினைச் சமைப்போம் என்று அழைக்கின்றார் கவிஞர் சிற்பி. பாம்புகள் தொங்குவது போலே கவிதையின் தலைப்பினையும் அமைத்துள்ளார்.

பேசாதன பேசுதல்: ''பேசாத பொருள் பேசினால்'' என்ற தலைப்பில் நஞ்சு, சிறைச்சாலை ஆகியவை பேசுகையில் புராணக் கதைகள் இடம்பெறுகின்றன. நஞ்சு தன்னுடைய பெருமையினைப் பற்றி பேசுகையில் அரக்கர்களும், தேவர்களும் திருபாற்கடலைக் கடைந்த பொழுது தான் பிறந்ததாகவும், தேவர், நரகர், மக்கள் இவர்களைக் காக்கும் பொருட்டு நஞ்சை உண்ட சிவனின் திருநீல கண்டமே தன்னுடைய புகுந்த இடம் என்று புராணக் கதையினைக் கூறுகின்றது நஞ்சு,

''நான்

பிறந்த இடமோ பெரிய இடம்

அரக்கன் உறங்கும் திருப்பாற்கடல்

புகுந்த இடமோ புனித இடம்

சிவபெருமான் திருநீலகண்டம்'' (ச.யா. ப.54)

''சிறைச்சாலை'' என்ற பொருள் பேசுகையில் கண்ணபிரான் சிறைச்சாலையில் பிறந்தான் என்பதைக் கூறுகின்றது.

''கண்ணனுக்கு ஒரு

பிரசவக் கூடம்'' (ச.யா. ப.55)

துச்சாதனன்: பாரதக்கதையில் இடம்பெறும் துச்சாதனன், பாஞ்சாலியைத் துகில் உரித்தக் காட்சியை ''சிநேகலதா சிரித்துக் கொண்டிருக்கிறான்'' என்ற கவிதையில் அரசியல்வாதி விலைமாதுவை துகில் உரிவதைப் பற்றிக் குறிப்பிடும்போது,

''துச்சாதனத் தொடக்க விழாவின்

அடையாளமாய்

அவள் மனம் போல்

சுருண்டு கிடந்த

மானம் பார்த்த சேலை''. (ச.யா. ப.78,79)

என்று கூறுகிறார் கவிஞர் சிற்பி.

தேவமறைக் கருத்துக்கள்: ஏசு பெருமான் சிலுவை சுமந்து சென்ற வரலாற்று நிகழ்ச்சியை எடுத்துக்கூறி

''எந்தாய் இன்னதென

அறிகில்லார் இவர் பிழையை

மன்னியும்....'' (ச.யா. ப.74)

என்ற வேதக் கருத்தினை ''துயரச் சிலுவைகள்'' என்ற கவிதையில் கூறுகின்றார். சிலுவை மரத்தில் ஏசு பெருமான் தொங்க விடப்பட்டதால் அது கொடிமரம் ஆயிற்று, சிலுவை மரத்தினை தூக்கிச் சுமந்ததில் அது தூக்கு மரமாகவும், சிலுவை மரத்தில் ஏசு இரு கரம் நீட்டி நிற்பது கி.மு, கி.பி என்ற இருகாலத்தைக் குறிப்பதால் அது கைகாட்டி மரமாகவும், இவர்கள் செய்யும் பிழைகளை மன்னியும் என்று ஏசு பிரான் சிலுவை மரத்திலிருந்து தத்துவம் பேசியதினால் அது விளக்கு மரமாகவும் விளங்கியது என்று கவிஞர் கற்பனை செய்கின்றார்.

முடிவுரை: இவ்வாறு கவிஞர் தன்னுடைய கவிதைத் தொகுப்பில் மணிமேகலை, சகுந்தலை, சிவன், கண்ணன், துச்சாதனன், ஆதாம் ஏவாள், ஏசுபிரான், ஆகிய இதிகாச புராணப் பாத்திரங்களைக் கொண்டு கவிதைகளைப் படைத்து அதன் மூலம் இன்றைய சமுதாய நிலைமையையும், பிரச்சினைகளையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்