‏إظهار الرسائل ذات التسميات அ.முத்துலிங்கம். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات அ.முத்துலிங்கம். إظهار كافة الرسائل

பூமாதேவி - அ.முத்துலிங்கம்


இங்கே என்னடா என்றால் சமயலறைக் கேத்தில் கூட என்னை விசில் அடித்துக் கூப்பிடுகிறது! அவ்வளவு மரியாதை! 

என்னுடைய அப்பா மிகவும் கண்டிப்பானவர். நான் சிறுவனாய் இருந்தபோது அவர் வீட்டில் இருக்கும் சமயங்களில் எல்லாம் மெள்ள மெள்ள அடிவைத்துத்தான் நடக்க வேண்டும். உரத்துப் பேசக் கூடாது; குஷ’யான சமயங்களில் பாடுவதற்கும் ஏலாது. ஏன் விசிலடிக்கக்கூட முடியாது. அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வளர்ந்தவன் நான். ஆனால் இங்கே...! 

நான் அமெரிக்காவுக்கு வந்து மிக வேகமாக முன்னேறியது இந்தத் தேநீர் போடும் துறையில்தான். இந்த அதிகாலையில் என் மகளுக்காக தேநீர் போட்டுக் கொண்டிருந்தேன். நேற்று எனக்கும் மகளுக்கும் கொஞ்சம் சண்டை. அதைச் சமாளிப்பதும் ஒரு நோக்கம். என் மகள் குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். நான் மற்றப் பக்கம் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நின்றேன். கைகளைக் குவித்து என் முதுகிலே ஒரு பொய் அடி வைத்தாள். பெருத்த சத்தத்தோடு சண்டை முற்றுப்பெற்றது என்று இதற்கு அர்த்தம். திரும்பிப் பார்த்தபோது நெளிந்து கொண்டே ஓடினாள். 

சண்டைக்கு பெரிதாய் ஒரு காரணமும் இல்லை. அவவுடைய 'போய் பிரண்டின்' பிறந்த நாளை நான் மறந்து விட்டேனாம். எப்படி இருக்கிறது சங்கதி? தன் மகளுடைய நண்பர்களின் பிறந்த தினங்களை எல்லாம் மனனம் செய்வதுதான் ஒரு தகப்பனாருடைய தலையா கடமையா? வேலை நிமித்தமாக மகள் நியூஜேர்ஸ’யில் தங்கி இருக்கிறாள். நான் நியூயோர்க்கிலிருந்து அவளைப் பார்ப்பதற்காக விழுந்தடித்து நேற்றுத்தான் வந்திருந்தேன். இன்று என்னவென்றால் தன் நண்பனைப் பார்ப்பதற்கு அவ ஓகஸ்டாவுக்கு போகிறாளாம். இதற்கிடையில் நான் இந்த சரித்திரப் பிரசித்தமான தேதியை மறந்துவிட்டேன் என்ற குற்றச்சாட்டு வேறு மருட்டு விழிகளை இன்னும் கொஞ்சம் அகலத் திறந்து, ஒரே சமயத்தில் கெஞ்சலாகவும், றாங்கியாகவும் இந்தத் தூரப் பயணத்திற்கு என்னையும் தனக்குத் துணையாக வரும்படி அழைக்கிறாள். பிறந்தநாளுக்கு வருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறாளாம். ஒப்பந்தங்களை காப்பாற்ற வேண்டுமென்று சிறுவதிலேயே நான் அவளுக்கு கற்றுக் கொடுத்த பாடம் தானே! 

அமெரிக்காவில் காரில் ஏறியவுடன் சீட் பெல்ட்டைக் கட்டுவது ஒரு முக்கிய சடங்கு. இத்தனை வருடங்களாகியும் நான் இந்தக் கலையில் பரிபூரண தேர்ச்சி பெறவில்லை. இதற்கு சாமர்த்தியமும், தந்திரமும் சரிசமமான அளவில் தேவைப்படும். அதிலும் இந்த விவகாரம் காருக்கு கார் மாறுபடும். சீட் பெல்ட் இப்படித்தான் இருக்கும் என்கிற உத்திரவாதமும் இல்லை. ஆனபடியால் எங்கள் செயல் முறைகளை நாங்கள் காருக்குத் தகுந்தபடி மாற்றியமைக்க வேண்டும். 

நண்பர் ஒருவருடைய கார் கொஞ்சம் அவசரபுத்தி கொண்டது. சீட்டில் ஏறி உட்கார்ந்த உடனேயே அது தன்பாட்டுக்கு வந்து உங்களை ஆரத்தழுவிக் கட்டவிடும். ஒருமுறை தெரியாமல் தலையைக் கொடுத்து அது என்னை கொஞ்ச நேரம் மூச்சுத் திணற வைத்துவிட்டது. இன்னொரு சாதி சீட்பெல்ட், அதைக் கட்டும் வரைக்கும் 'கீ, கீ' என்று இரைந்து கத்திக்கொண்டே இருக்கும். கட்டி முடிக்கும் வரைக்கும் காரை நகர்த்த முடியாது. 

என்னுடைய மகளின் காரில் சாதாரண சீட் பெல்ட்தான். வில்லங்கம் என்னவென்றால் குளிருக்கு எதிர்ப்பைக் காட்ட அணிந்திருந்த ஸ்வெட்டர், மப்ளர், ஓவர்கோட் என்று கூட்டத்துடன் ஒரே சமயத்தில் ஏறி காரிலே அமர்வது ஒரு பிரம்மப் பிரயத்தனமான காரியம். அப்பொழுதே கார் நிறைந்துவிடும். சிரமம் என்னவென்றால் வலது பக்கம் திரும்பி சீட்பெல்ட்டின் நுனியைக் கண்டுபிடித்து இழுத்தால் அதை மாட்டும் ஓட்டை மறைந்துபோகும். இவ்வளவு நேரமும் இங்கேதான் இருந்தது, சனியன்! இப்போது காணவில்லை! மறுபடியும் ஓட்டையைக் கண்டுபிடித்து சீட்பெல்ட்டைத் தேடினால் மாட்டுக் கன்று அறுத்துக்கொண்டு ஓடுவதுபோல நுனி இழுத்துக் கொண்டு போய்விடும். பழையபடி zero pointல் இருந்து தொடங்க வேண்டும். கடைசியில் ஒரு வழியாக பெல்ட்டைக் கட்டிமுடித்து காலை நீட்டிச் சாயும்போது பாதி தூரத்தைக் கடந்து விட்டிருப்போம். 

ஆனால் என் மகளைப் பார்க்க வேண்டும். அர்ஜுனன் பாணம் எடுப்பதும், விடுப்பதும் தெரியாது; எதிரிகளின் தலைகள் உருளுவதுதான் தெரியுமாம். அதுபோலத்தான். அவள் சீட் பெல்ட்டை இழுப்பதுவோ, அணிவதுவோ கண்ணுக்குத் தெரியாது. 'க்ளிக்' என்று ஒரு சத்தம் கேட்கும், அவ்வளவுதான். இந்த அதிசயத்தை நான் பொறாமையுடன் கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பேன். 

இவள் கார் ஓட்டும் அழகு தனியானது. நாலு வயதில் என் கைவிரல்களை இறுக்கிப் பிடித்தபடி மிரள மிரள வந்தவளா? நம்ப முடியவில்லை! நெற்றியில் விழுந்ததிருக்கும் இரண்டொரு கேசங்களைத் தவிர அவள் உடம்பில் வேறு ஆபரணம் ஒன்றுமில்லை. இந்த வயதிலேயே தனியார் கம்பனி ஒன்றில் உயர் பதவி வகிக்கிறாள். மிகப்பெரிய அதிகாரிகளையெல்லாம் முதற்பெயர் சொல்லி அழைக்கிறாள். நூற்றுக்கணக்கான தொலைபேசி எண்கள் அவள் ஞாபகத்தில் இருக்கின்றன. கடுகதியாக காரில் செல்லும்போதே செல்லுலரில் விளிக்கிறாள். ஸ்டிக்கர் பொட்டை ஓட்டுவதுபோல ஒற்றைக் கையால் நம்பர்களை ஒத்திக் கொள்கிறாள். காரின் நாலு மூலைகளிலுமிருந்தும் ஒலிக்கும் மேற்கத்திய இசைக்கு மனதைப் பறிகொடுக்கிறாள். என்னுடைய ஆரம்ப கால வாழ்க்கை இந்த அமெரிக்காவில் இப்படியா இருந்தது? 

அந்தக் கம்பனியில் நான் சேர்ந்தபோது எனக்காக ஒதுக்கப்பட்ட இடம் 'பேஸ்மென்டில்' ஒரு நகல் எடுக்கும் மெசினுக்கும், கோப்பி percolator-க்கு இடையில் இருந்தது. மேலே அலுவலக அறை, வரவேற்பறை எல்லாம். கீழே நிலவறையில்தான் ஏற்றுமதி சம்பந்தமான வேலைகளும், கணக்கு வழக்குகளும் ஒப்பேறின. கோப்பிக் கடையை மொய்க்கும் கூட்டம், நகல் மெசின் கிரக முறைப்படி எழுப்பும் சத்தங்கள், சிப்பம் கட்டுவோரின் ஆரவாரம், கம்புயூட்டரின் விசை ஒலிகள் எல்லாம் ஒரே கோலாகலம்தான். இது தவிர, நகல் எடுக்கும் மெசின் அவ்வப்போது ஒருவித வாசனையை என்பக்கமாக வீசிக்கொண்டே இருக்கும். 

கடைந்தெடுத்த முட்டாள்கள் அமெரிக்காவிலும் சரிசமமான அளவில் உற்பத்தியாகும் விஷயம் எனக்கு கனகாலமாகத் தெரியாது. நான் இங்கே இருப்பவர்கள் எல்லோரும் அறிவுஜுவிகள் என்றுதான் எண்ணியிருந்தேன். உண்மை என்னவென்றால் எங்கள் ஊர் 'ஆனாப் படிச்ச சுவானாதர்கள்' இங்கேயும் இருந்தார்கள். 

எனக்குப் பக்கத்தில் கம்புயூட்டரில் ஒட்டிக்கொண்டிருந்தவள் அமெரிக்காவின் பள்ளிக்கூட எல்லையைத் தாண்டமுடியாமல் highschool drop out என்று சொல்கிற பெருமையைப் பெற்றவள். சிற்றின்பத்துக்காகவே கடவுளால் படைக்கப்பட்ட உடம்பு; கலிபோர்னியா திராட்சை போன்ற கண்கள். ஒன்றில் நடனமாடியபடியே வருவாள், அல்லது முகத்தை உம்மென்று தூக்கிவைத்துக் கொண்டிருப்பாள். பெண்டுலம் போன்று அவள் மூட் இந்த எல்லைக்கும் அந்த எல்லைக்குமாக ஊசலாடிக்கொண்டே இருக்கும். 

அவளுடைய வாழ்க்கையின் இரண்டு பிரதான அம்சங்கள் காதலும், விரக தாபமும்தான். இவளுக்காகவே டெலிபோன்கள் அடித்து அடித்து ஓய்ந்து போகும். அவளுக்கு ஒரே சமயத்தில் நாலு காதலர்கள் இருப்பார்கள். ஒருநாளைக்கு ஒருவர் என்று மிகச்சில சமயங்களில் ஒருவரும் அகப்படாவிட்டால் உலகம் கவிழ்ந்ததுபோல சோக காவியமாக மாறிவிடுவாள்; மற்ற நேரங்களில் காற்றில் மிதந்தபடி தன் கையால் கோப்பி ஊற்றி எல்லோரும் தருவாள். 

கம்பனி அதிபருக்கு இந்தக் கோப்பியில் ஒர் அளவுகடந்த மோகம். 'தாம் தாம்' என்று நிலம் அதிர கீழ் தளத்திற்கு ஒரு நாளைக்கு நூறு தடவை வருவான், கோப்பி குடிப்பதற்கு. அவன் அகராதியில் மூன்று வார்த்தைகள் மிகவும் பிரசித்தி வாய்ந்தவை. அவன் என்ன வசனம் பேசினாலும் இந்த வார்த்தைகளில் ஒன்றாவது அங்கே வந்து சேர்ந்து கொள்ளும். அந்த மூன்றும் இடுப்புக்கு கீழே சம்பந்தப்பட்டவை வார்த்தைகள் அவற்றை நீக்கிவிட்டு அவனை யாராவது பேசச்சொன்னால் பாவம் தத்தளித்து விடுவான். ஒரு கோப்பி வேண்டுமென்றாலும் அந்த வார்த்தையிலேதான் கேட்பான். ஒரு கோப்பு தொலைந்து போனாலும் அந்த வார்த்தையிலேயே திட்டுவான். இவன் எல்லாம் வீட்டிலே எப்படி மனைவி, பிள்ளைகளோடு சம்பாஷ’ப்பான்? 

மூடர்களின் மூடன், அதிமூடன் என இரண்டு வகைகள் உண்டு அல்லவா? இவன் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவன். எங்கள் இதிகாசங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்ததில் மூடர்களுக்கெல்லாம் மூடன் கம்சன்தான் என்பது என் கணிப்பு. அல்லாவிடில் தன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தைதான் தனக்கு யமனாவான் என்று தெரிந்திருந்தும் தேவகியையும், வாசுதேவரையும் ஒரே சிறை அறையில் பூட்டி வைத்திருப்பானா? எங்கள் கம்பனி அதிபர் இந்தக் கம்சனிலும் பார்க்க ஒரு ஸ்தாயி மேலே என்றுதான் சொல்ல வேண்டும். 

தங்கத் தாம்பாளத்தை தட்டுவதுபோல் தன் நெஞ்சிலே விரல்களால் விளையாடியபடியே பேசுவான். ஒரு விஷயத்தை சொல்லவந்தால் படு விஸ்தாரமாக பிரட்டிப் பிரட்டி சொல்லுவான். சிலருக்கு வயிற்றுப்போக்கு இருப்பதுபோல் இவனுக்கு வாய்ப்போக்கு. விளக்கி முடிந்த பிறகு பார்த்தால் எருமை கலக்கிய குட்டை போல விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரியும். 

எங்கள் நாட்டில் urgent, ordinary, rush என்று எழுதிவைத்திருக்கும் கோப்புகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் குப்பைக் கூடைகளில் இரண்டு விதமான கூடைகளை இவன் வைத்திருப்பதை இங்கேதான் கண்டேன். ஒரு கூடையில் ordinary என்று எழுதியிருந்தது. இன்னொன்றில் urgent என்று எழுதியிருந்தது. குப்பையில் கூட urgent என்று தரம் பிரித்து வைத்திருப்பவனை என்ன செய்ய முடியும்? 

'நான் செய்த ஊழ்வினை காரணமாக இப்படி வந்து மாட்டிக் கொண்டேனே' என்று வருந்தாத நாட்களில்லை. 

ஆனால் இந்த அலுவலக அவலங்களும், இடிபாடுகளும் எதிர்வரும் சகிக்கிழமைகளில் மாயமாக மறைந்துபோகும். ஒவ்வொரு சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நானும் என் நாலு வயது மகளும் கைகோத்தபடி கதைத்துக் கொண்டே சலவைத் துணிகளைப் பையில்போட்டு சுமந்தபடி சலவைக் கூடத்துக்கு போய் வருவோம். இந்தச் சனிக்கிழமை நேரங்களை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். என் மகளும் அப்படியேதான். அந்தப் பத்து நிமிட நடைக்கிடையில் ஆயிரம் கேள்விகள் கேட்பாள். நானும் அவளுக்கு புரிகிறதோ, இல்லையோ எனக்குத் தெரிந்தவரைக்கும் சரியான பதில்களைச் சொல்லிச் சமாளிப்பேன். 

அந்தச் சலவைக்கூடத்தில் ஏறக்குறைய முப்பது மெசின்கள் இருந்தன. நாங்கள் எங்கள் குலதெய்வமான Maytag 22 என்ற மெசினில்தான் எங்களுடைய உடுப்புக்களைக் கழுவுவோம். நாலு காசுக் குற்றிகளைத் துளையில் போட்டு தள்ளியவுடன் அந்த ராட்சச மெசின்கள் 'உஸ், உஸ் என்று மெதுவாகத் தொடங்கி பின் வேகமாகச் சுழலுவது பார்க்க வடிவாக இருக்கும். நாற்பது நிமிடம் இப்படி அலசோ அலசென்று அலசிவிட்டு ஓய்ந்துபோகும். நாங்கள் காத்திருந்து துணிகளை எடுத்து உலரியில் போட்டு மேலும் இருபது நிமிடங்கள் ஓடவிடுவோம். துணிகள் பளபளவென்ற மினுக்கத்துடனும், ஒரு மிருதுத்தன்மையுடனும் சுகந்தமான வாசனையைப் பரப்பியபடி வந்துவிழும். இந்த மறக்கமுடியாத காத்திருப்பு நேரங்களில் மகளிடம் என் அன்னியோன்னியம் மிக நெருக்கமாக இருக்கும். 

அங்கேயிருக்கும் தானியங்கி யந்திரத்தில் காசு போட்டு விதவிதமான இனிப்பு வகைகளை எடுக்கப் பழகிக் கொண்டாள். ஒவ்வொரு முறையம் அது வந்து விழும்போது சப்பாத்து நுனியில் நின்று தன் சின்னக் கைகளைத்தட்டி மகிழ்ச்சியைக் காட்டுவாள். எவ்வளவு தரம்தான் இப்படிச் செய்தாலும் அவளுக்கு அலுப்பதில்லை. அதுவும் ஒரு வழக்கமான சடங்காகிவிட்டது. 

என்னுடைய மகளின் குணவிசேஷங்களில் ஒன்று கண்­ர் எப்பவும் தழம்பி கரையை உடைக்க ரெடியாக இருப்பதுதான். என்ன சின்ன விஷயமாக இருந்தாலும் அவள் வாய் திறந்து சொல்லுமுன் கண்­ர் அணையை உடைத்து பிரவாகமாகப் பொங்கும். ஒரு நாள் நாங்கள் அந்தக் கூடத்துக்கு வந்தபோது Maytag 22-ல் ஒரு கிழவி சலவைக்கு போட்டுவிட்டு ஏதோ பின்னல் வேலையில் இருந்தாள். அடிக்கடி பின்னலை நிற்பாட்டி விட்டு இந்த மெசினை அவள் பார்ப்பதும், அது பயபக்தியுடன் வேலை செய்வதுமாயிருந்தது. இந்தக் காட்சியை என் மகளால் தாங்க முடியவில்லை. 

'அப்பா! அப்பா! ஆரோ எங்கட மெசினை பிடிச்சிட்டினம்' என்று அழுதாள். அந்தக் கிழவியை ஒரு குரோதத்துடன் பார்த்தாள். 

என்பாடு பெரிய பாடாகப் போய்விட்டது. அந்த மெசினை நாங்கள் ஏதோ குத்தகைக்கு வாங்கிவிட்டதாக அவள் அவ்வளவு நாளும் நினைத்திருந்தாள். நான் விளக்கிய பிறகுதான் அதை ஒரு மாதிரி ஒப்புக் கொண்டாள் என்றாலும் அந்தக் கிழவியை அவளுக்கு துண்டாய் பிடிக்கவில்லை. 

ஆனால் என் வாழ்நாளிலேயே என் மகளை மிகவும் குதூகலத்தில் ஆழ்த்திய சம்பவம் ஒன்று விரைவிலேயே நடந்தது. அப்படியான சந்தோஷத்தை நான் அவள் முகத்தில் அதற்கு முன்பும் கண்டதில்லை; பின்பும் கண்டதில்லை. 

வழக்கம்போல ஒரு சனிக்கிழமை காலை நாங்கள் சலவையை முடித்துவிட்டு வந்து மனைவியிடம் துணிகளை கணக்குக் கொடுத்துவிட்டு கைகட்டி நின்றோம். என் மனைவிக்கு கண்பார்வை இருபத்து இருபது. முதல் வேலையாக என் மனைவி 'எங்கை, இந்த சோடியில் ஒன்றைக் காணேல்லையே?' என்றாள். மனைவிகளை இதற்காகத்தானே கடவுள் படைத்திருக்கிறார்! அவ்வளவுதான். என் மகளுக்கு சுவிட்ச் போட்டதுபோல கண்­ர் கொட்டத் தொடங்கியது. நிற்கவேயில்லை. மெசினிலிருந்து எடுக்கும்போது எங்கேயோ தவறிவிட்டது. கால் காசு பெறாத சமாச்சாரம் அது. உயிரைக் கொடுத்ததுபோல என் மகள் விக்கினாள். நான் எவ்வளவு தேற்றியும் நிற்கவில்லை. 

அடுத்த சனிக்கிழமை எங்களுக்கு அந்தச் சலவைக் கூடத்தில் ஒர் அதிசயம் காத்திருந்தது. அங்கேயிருந்த விளம்பரப் பலகையில் என் மகளுடைய ஒரு கால் சொக்ஸ் தொங்கிக் கொண்டிருந்தது. அதற்குக் கீழே 'என்னுடைய சோடியை யாராவது கண்டீர்களா!' என்று எழுதியிருந்தது. அதைக் கண்டதும் என் மகள் குதி குதி என்று குதித்தாள். அந்தச் சின்ன விஷயம் அவள் முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சியைத் தோற்றுவித்தது! என்னால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. 

இப்படியான ஒரு சனிக்கிழமை சேத்திராடனத்தின் போதுதான் Maytag 22-க்கு நாங்கள் 'பூமாதேவி' என்றபேரைச் சூட்டினோம். அந்த முறை கொண்டுவந்த உடுப்புகள் அளவு கூடிவிட்டது. மெசினை நிறைத்தபிறகு இன்னும் கொஞ்சம் மீதி இருந்தது. அதை நான் திருப்பி எடுத்துப்போய் அடுத்த முறை கொண்டு வருவது என்று தீர்மானித்தேன். என்னுடைய மகளோ 'இன்னுமொருமுறை போடுவோம்' என்று அடம்பிடித்தாள். அப்போது எங்களிடையே பெரிய வாக்குவாதம் நடந்தது. 

'நாங்கள் சலவையில் பாவிக்கும் கழிவுநீர் எங்கோ பூமியில் போய்ச் சேருகிறது. இதனால் சுற்றுச்சூழலுக்கு அவலம் ஏற்படுகிறது. ஒரு முழு மெசினை ஓட்டினால் அதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அரை மெசினை ஓட்டி சுற்றுச்சூழலைக் கெடுப்பது தவிர்க்கக் கூடியது. மிகப் பெரிய சுயநலம். 

'பூமாதேவி மிகவும் நல்லவள். நாங்கள் அவளுக்கு இழைக்கும் ஆக்கினைகள் எல்லாவற்றையும் மறந்து எங்களுக்கு அள்ளி அள்ளித் தருகிறாள். அவளுடைய குணங்களில் மிகச் சிறந்தது இந்த மறதிதான். நாங்கள் திருப்பித் திருப்பி செய்யும் கொடுமைகளை மறந்து ஒரு தாயின் அரவனைப்போடு எங்களுக்கு நன்மையே செய்கிறாள். இப்படிப்பட்ட தாய்க்கு தேவைக்கு மேல் கேடு விளைவிக்கக் கூடாது. இல்லையா?' என்றேன். புரிந்ததோ, 

இல்லையோ நான் சொன்னதற்கு தலையைப் பெரிதாக ஆட்டிக் சம்மதம் தெரிவித்தாள். பூமியைப் போல எங்கள் வசதிக்காக மாசுபடும் அந்த மெசினுக்கும் 'பூமாதேவி' என்று பேர் சூட்டினோம். அதற்கு பிறகு எங்கள் வீட்டில் கொஞ்ச காலமாக யார் எதை மறந்தாலும் 'பூமாதேவி, பூமாதேவி, என்று சொல்லி பகடி பண்ணுவது வழக்கமாகிவிட்டது. 

இப்படியான ஒரு நாளில்தான் நான் என்னுடைய நாலு வயது சின்ன மகளுக்கு 'ஒப்பந்தம்' பற்றியும் அதை மீறாமல் இருப்பதன் முக்கியத்துவம் பற்றியும் போதிக்கவேண்டி வந்தது. பூமாதேவியின் முன்பு சலவையை முடிப்பதற்காக நாங்கள் காத்திருந்த அந்த நாற்பது நிமிடங்களில்தான் இது நடந்தது. 

என் சின்ன மகளுக்கோ அன்று பெறும் கவலை; முகம் நீண்டுபோயிருந்தது. அதுவும் ஒரு வடிவுதான். விஷயம் இதுதான். கீழ்வீட்டு பையனுக்கு அன்று பேர்த் டே விழா. என்னுடைய மகள் விழாவுக்கு வருவதாக வாக்களித்திருந்தாள். ஆனால் அதிலே எதிர்பாராத ஒரு கஷ்டம் சேர்ந்து கொண்டது. 

எனது நண்பர் ஒருவர் அன்று பின்னேரம் நாய்க்குட்டி ஒன்று தருவதாகச் சொல்லியிருந்தார். இதைக் கேள்விப்பட்டதும் மகள் பிறந்தநாள் விழாவுக்கு போகாமல் எங்களுடன் நாய்குட்டியை எடுக்க தானும் வரவேண்டும் என்று அடம்பிடித்தாள். விம்மி விம்மி அழுகை கரை முட்டிக்கொண்டு நின்றது. அப்பொழுதுதான், கடகடவென்று சத்தம்போடும் சலவை யந்திரங்களும், உலர்த்திகளுக்கும் நடுவே இருந்துகொண்டு என்மகளுக்கு உன்னதமாக சலவைக்காரர் ஒருவருடைய கதையைச் சொன்னேன். 

திருக்குறிப்பு நாயனார் என்று ஒருவர். சிவபக்தர்களுடைய துணிகளைச் சலவை செய்வதே அவர் தொண்டு. கிழ வேதியர் ஒருவருடைய ஆடையை சலவை செய்வதற்கு ஒப்புக்கொண்டார். அந்தக் கிழவனார் 'எனக்கு ஒரேயொரு கந்தைதான் உள்ளது. இதை நீ தோய்த்து, உலர்த்தி அந்திபடுமுன் தரவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். நாயனாரும் இதற்கு உடன்பட்டு கந்தையைப் பெற்றுத் தோய்த்து காயப்போட்டார். அப்பொழுது பார்த்து 'திசையடங்கி வெளியடைத்து' மழை பிடித்துக் கொண்டது, நிற்கவேயில்லை. இரவாகிவிட்டது. கிழவர் தன்னுடைய ஆடையைக் கேட்டு குளிரில் வெவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தார். ஒப்பந்தம் என்னவென்றால் தோய்த்து, உலர்த்தி தரவேண்டுமென்பதுதான். தோய்பபது இவர் கடமை, ஆனால் உலர்த்துவது சூரியனுடைய வேலை அல்லவோ? என்றாலும் வாக்குக் கொடுத்துவிட்டாரே! 

அந்தக்காலத்தில் இப்போதுபோல் சலவை யந்திரங்களும் இல்லை; உலர்த்திகளும் கிடையாது. என்ன செய்வார்? பாவம். தன் தலையை தூணிலே முட்டி சிவபிரானிடம் இரந்தார். அப்போது சிவபெருமான் வந்து சங்கடத்தைத் தீர்த்து வைத்தார் என்பதுதான் கதை. 

மகளுக்குகதை நன்றாகப் பிடித்துக்கொண்டது. மறுபேச்சு பேசாமல் பிறந்தநாள் விழாவுக்கு போனாள். அந்தச் சிறுவயதில் சொல்லிய கதையில் அடங்கிய கருத்தை இன்றுவரை அவள் மறக்கவில்லை. கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றிவிடுவாள். 

நான் வேலை பார்த்து வந்த கட்டிடத்தில் கணப்பு வசதிகள் மிகக் குறைவு. அதிலும் அது பூமிக்குக் கீழே உள்ள அறை; குளிரின் ஆதிக்கம் தாங்கமுடியாது. அடுத்த கெடுவுக்குள் முடிக்க வேண்டிய வேலைகள் என்முன் வந்து குவிந்தவண்ணமே இருக்கும். நான் கிரிசாம்பாள் பரம்பரை. ஆகவே எதிர்த்துக் கதைக்கும் திராணி இல்லை. விரகதேவதையின் மிச்ச சொச்சங்களும் என் மேசையிலே வந்து விழும். நான் வேலைகளை முடிக்க சில சமயங்களில் இரவு பதினொரு மணியாகிவிடும். அகதியாக வந்து சேர்ந்த அந்த ஆரம்ப நாட்களில் குளிரைத் தாங்கும் உடைகளை அணியும் வசதியும் இருக்கவில்லை; அதற்கேற்ற அறிவும் இல்லை. 

'கையது கொண்டு மெய்யது பொத்தி 
காலது கொண்டு மேலது தழுவி 
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழையான்' 

ஆக வேதனைப் படுவேன். என் வரவையே கண் விழித்துக் காத்திருக்கும் மனைவியை நினைப்பேன். இப்படி நாடுவிட்டு நாடு வந்து படும் இன்னல்களையும், சிறுமைகளையும் எண்ணி கண்­ர் வரும் நேரங்களிலெல்லாம் என்னுடைய சின்ன வயது மகளை நினைத்துக் கொள்வேன். இந்த சமயங்களில் பல்லைக் கடித்துக்கொண்டும், மூக்கைப் பிடித்துக்கொண்டும், விரபதேவதை தாபம் மேலிட்ட நாட்களில் கண்களை மூடிக்கொண்டும், என் காலத்தைக் கழித்துவந்தேன். 

அப்போதுதான் ஒருநாள் கடவுள் கண்விழித்தார். 

என் தகுதிக்கு ஏற்ற வேலை ஒன்று முற்றிலும் எதிர்பாராமல் எனக்கு கிடைத்துவிட்டது. அதுமாத்திரமல்ல ஊரும், வீடும்கூட மாற்றலாகியது. எங்கள் வாழ்க்கையில் திசையும் திரும்பியது. 

ஆனால் பெரிய சோகம் என்னவென்றால் புதிய வீட்டில் சலவை மெசின் இருந்தது. அத்துடன் அந்த அற்புதமான சனிக்கிழமை காலை வேளைகள் மறைந்து போயின. என் மகளுடன் தனித்திருந்து சம்பாஷ’க்கும் அந்த மகத்தான தருணங்களும் அருகிவிட்டன. அமெரிக்க வாழ்க்கையில் அந்த முதல் ஒன்பது மாதங்கள் இப்படியாக என் மனதில் மறக்க முடியாததாக பதிந்துவிட்டது. என் மகளும் மெல்ல மெல்ல விலகி தன் உலகத்தில் வாழத் தலைப்பட்டாள். 

'எக்ஸ’ட் 241, எக்ஸ’ட் 241'என்று பாராயம் செய்தவாறே வந்தேன். இந்த எக்ஸ’ட்டில் திரும்பினால் நல்ல கோப்பியும், அருமையான 'டோநாட்டும்' கிடைக்கும். அமெரிக்காவில், காரிலே ஒரு பயணிக்கு மேல் இருந்தால் அவர்கள் போவதற்கென்று பிரத்தியேகமாக பாதை இருக்கும். அதிலே போனால் விசையாகப் போய்ச் சேர்ந்து விடலாம். நளனுடைய தேர் போல எங்கள் கார் இந்தப் பாதையில் வாயுவேகம் மனோவேகமாகச் சென்றுகொண்டிருந்தது. 'எக்ஸ’ட் 241' என்று நான் கத்துவதற்கிடையில் கார் அந்த இடத்தைக் கடந்து விட்டது. 'மேலாடை வீழ்ந்த தெடுவென்றான், அவ்வளவில் நாலாறு காதம் நடந்ததே' என்பது போல காரும் கடந்து போய்விட்டது. 

எனக்கு ஏமாற்றமாகிவிட்டது. ஒரு திருப்பத்தை விட்டால் மீண்டும் திரும்ப வருவது இடியப்பக் கூந்தலின் ஒரு நுனியைப் பிடித்து மற்ற நுனிக்கு வருவதுபோல. அவ்வளவு கஷ்டம். இந்த டோநட் என்ற சமாச்சாரம் எங்கள் ஊர் வடையைப் போன்றது. அதிலும் 'கிளேஸ்ட் டோநட்' என்பது பளபளவென்று மினுங்கும். வாயில் போட்டால் உடனுக்குடன் கரைந்து இதயத்தில் போய் விழும் இதைச் சாப்பிட ஐம்பது மைல் தூரத்தில் இருந்துகூட ஆட்கள் வருவார்களாம்! அவ்வளவு பிரக்கியாதி பெற்றது. 

மகள் என் பக்கம் திரும்பி 'sorry அப்பா' என்றாள். இனி என்ன செய்வது? அடுத்த வந்த திருப்பத்தில் மறக்காமல் காரைத் திருப்பினாள். சீஸ் பேகரும், காப்பியும் ஓடர் பண்ணினோம். எனக்கோ பசி. மகள் 'அப்பா! அப்பா!' என்று கத்துவதற்கு முன்பாக நான் உறிஞ்சியால் சுடு கோப்பியை உள்ளே இழுத்துவிட்டேன். வாய் வெந்துபோனது. இப்படி எத்தனை முறை எனக்கு நடந்துவிட்டது? அப்படியும் புத்தி வரவில்லையே! திருப்பித் திருப்பி மறந்துவிடுகிறேனே! வேகமான அந்த உணவகத்தில் இப்படியாக நாக்கை வேகவைத்துக்கொண்டு வெளியேறினேன். என் மகள் பிளாஸ்டிக் குவளைகளை சிவப்பு குப்பைத் தொட்டியிலும், மற்றவற்றை வெள்ளைத் தொட்டியிலும் போட்டுவிட்டு வந்தாள். என் அவஸ்தையைப் பார்த்து செல்லமாக என்னை இடித்துவிட்டு இதழ் விரிக்காமல் சிரித்தாள். 

பிள்ளைத் தமிழில் செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், அம்புலிப் பருவம், அம்மானைப் பருவம் என்று வரும் அல்லவா? அதுபோல இந்த அமெரிக்காவிலும் பல வருவங்கள் வந்து வந்து போகும். அவளுடைய முதல் பருவம் 'பாபி டோல்' பருவம்தான். ஒரு காலத்தில் இந்தப் பாவைகள் வீட்டிலே 'நீக்கமற நிறைந்து' கிடந்தன. இந்த பேதைப் பருவம் மிகவும் சந்தோஷமானது. ஒரு தனி உலகம். மணிக்கணக்காக இந்த 'பாபிகளை' வைத்து விளையாடிக் கொண்டிருப்பாள். 

பதினொரு வயது என்று நினைக்கிறேன். அப்பொழுது தான் முதன்முதலாக நாலுநாள் 'காம்பிங்' போனாள். எங்களை விட்டு இதற்குமுன் ஒருநாள்கூட பிரிந்து இருந்ததில்லை. ஆவலோடு எதிர்பார்த்து இருந்தவள் அந்த நாள் வந்ததும் தயக்கம் காட்ட ஆரம்பித்துவிட்டாள். நாங்கள் தேற்றி அனுப்பி வைத்தோம். நாலாம் நாள் இரவு திரும்பி வந்ததும் எங்களைக் கட்டிக் கொண்டாள். அந்த நாலு நாள் கதைகளையும் இரண்டு நாட்களாக சொன்னபடியே இருந்தாள். அந்தக் குழந்தை அனுபவித்த பிரிவுத் துயரும், பிறகு திரும்பியவுடன் அடைந்த குதூகலமும் மறக்க முடியாததாக இருந்தது. 

சங்கீதப் பித்து தலைக்கேறியது இதற்குப் பிறகுதான். 'டீன் ஏஸ்' என்ற மடந்தைப் பருவம். 'பொப் மார்லி' என்ற பாடகன் அப்ப பிரபலம். அவனுடைய ஒலிப்பேழைகளை எல்லாம் வாங்கிச் சேர்த்தாள். வீட்டிலே அவனுடைய பாடல்கள் ஐந்தரைக்கட்டை சுருதியில் அதிர்ந்து கொண்டிருக்கும். 'விரிந்த சடையும் வெறும் மேனியுமாக' அவனுடைய பிம்மாண்டமான படங்கள் அவளுடைய அறையை முழுக்க முழுக்க அலங்கரித்தன. டெலிபோன் வாயைப் பொத்திக்கொண்டு, நாங்கள் அந்த இடத்தைவிட்டு அகலும் வரை காத்திருக்கும் வழக்கம் இந்த வதில்தான் அவளிடம் ஆரம்பமாகியது. 

நான் சாடையாகக் கண்ணயர்ந்து விட்டேன். கார் ஒரு பெற்றோல் கூடத்தில் நின்று கொண்டிருந்தது. அது தானியங்கி பெற்றோல் கூடம். காரில் பெற்றோல் நிறைந்ததும் தானாகவே நின்றுவிடும். மறக்காமல் 'லெட்' இல்லாத பெற்றோலையே போட்டாள். கடன் அட்டையைக் கொடுத்து கணக்கை சரிசெய்தாள். முன்பின் தெரியாத அந்த இளம் ஊழியர் ஏதோ சொன்னான். இவள் விழுந்து விழுந்து கண் பொங்கச் சிரித்தாள். 'நல்ல நாளாகட்டும்' என்று சொல்லி அவன் அட்டையைத் திருப்பினான். இவள் 'உமக்கும் அப்படியே' என்று கூறி வாங்கிக் கொண்டாள். அந்தக் கணத்தில் இவள் முற்றிலும் ஓர் அமெரிக்கப் பெண்ணாக மாறிவிட்டதுபோல் எனக்கு காட்சியளித்தாள். 

ஒருமுறை சற்று வளர்ந்து, அமெரிக்கக் கலாச்சாரம் கொஞ்சம் உரஞ்சுப்பட பிறகு, பகவான் கிருஷ்ணருடைய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தேன். பலராமனுடைய பிறப்பைப் பற்றி வர்ணிக்கும்போது கொஞ்சம் தடங்கல் வந்துவிட்டது பலராமன் வாசுகியினுடைய வயிற்றிலே உண்டாகி, மாயையினால் ரோகிணியின் கருப்பைக்கு மாறிய வரலாற்றில்தான் சிக்கல். நான் 'வாசுகிதான் பலராமனுடைய உயிரியல் அன்னை; ரோகிணி வெறும் கர்பையில் காவிய தாய்தான்' என்று கூறினேன். அவளுக்கு அர்த்தமாகவில்லை. சிறிது யோசித்துவிட்டு ஏதோ புரிந்து கொண்டவள் போல் 'ஓ, surrogate mothe' என்றாள். எங்கள் புராணங்களைக்கூட அமெரிக்கன் நடைமுறையில் விளக்கினால்தான் புரியும் என்ற நிலை வந்தபோது நான் என் மகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டு வருவதுபோல எனக்குப்பட்டது. 

ஒப்பந்தத்தை காப்பாற்றுவதற்காக 400 மைல் தூரம் போக ஒப்புக் கொண்டிருக்கிறாள். கார் இப்போது பொஸ்டன் நகரத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இங்கேதான் நான் என்னுடைய அமெரிக்க வாழ்க்கையின் முதல் ஒன்பது மாதங்களைக் கழித்தேன். இங்கேதான் நிலவறையின் குளிரில் நடுங்கிக்கொண்டே அமெரிக்காவின் தொழில்முறை அரிவரிகளை கற்றுக்கொண்டேன். இங்கேதான் என்னுடைய மறக்கமுடியாத இன்பமான சனிக்கிழமை காலைகள் வந்து வந்து போயின; மகளுடைய பிஞ்சு விரல்களைப் பிடித்தபடி சலவைக்கூட யாத்திரை போனேன். அகலத் திறந்த அவள் விழிகளைப் பார்த்தபடி பூமித்தாய் பற்றியும், நாயன்மார் பற்றியும், நாங்கள் விட்டு ஓடிவந்த எங்கள் அருமை யாழ்ப்பாணத்தின் பாரம்பரியம் பற்றியும் கதைகள் பேசினோம். 

அப்போது தீடீரென்று நாங்கள் போய்வந்த, எங்கள் இருதயத்துக்கு மிகவும் நெருங்கிய, சலவைக்கூடம் தென்பட்டது. நான் ஒரு சிறு பையனின் ஆர்வத்தோடு `அங்கை பார்! பூமாதேவி' என்று கத்தினேன். 

என் மகளுக்கு நான் கத்தியது அர்த்தமாகவில்லை. தலையை அவள் திருப்பக்கூட இல்லை. `என்னப்பா பூமாதேவி? what do you mean?" என்றாள். 

சலவைக்கூடம் அப்படியேதான் இருந்தது. விளம்பரப் பலகை கொஞ்சம் மங்கலாகி விட்டதுபோலப் பட்டது. அங்கே இப்போது முப்பது சலவை மெசின்களும், முப்பது உலர்த்திகளும் வேகமாகச் சுழன்று இந்த மனிதப்பிறவிகளின் உய்வுக்காக பூமாதேவியை மேலும் கொஞ்சம் மாசுபடுத்திக் கொண்டிருக்கும். 

கார் விரைந்துகொண்டிருந்தது. 

'என்னப்பா, suddenly you are quiet? என்றாள் என் மகள். 

மனித மனத்தின் விசித்திரத்தை பற்றி யார் என்ன சொல்வது? நான் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தேன். எங்கள் ஊரில் ஒரு கிழவி, செல்லாச்சி என்று பேர். கணக்கெடுக்க முடியாத வயது. தொண்டுக்கிழம் என்று சொல்வார்களே, அந்தப் பருவம். 

சிலவேளைகளில் என்ன நினைத்துக் கொள்வானோ 'முக்கித்தக்கி' எழும்பி அலமாரியைத் திறப்பாள். பிறகு அதற்குள்ளே இருக்கும் தைலாப்பெட்டியை எடுத்து பூட்டை நீக்கி மூடியைத் திறப்பாள். பிறகு அவளுக்கு எதற்காக பெட்டியைத் திறந்தோம் என்பது மறந்துவிடும். அப்படியே கொஞ்சநேரம் இருந்து யோசித்துவிட்டு மறுபடியும் பூட்டிவைப்பாள். 

ஆனால் நாற்பது வருடங்களுக்கு முந்தி வேலாயுதபிள்ளை இருபது ரூபா அவளிடம் கடன் வாங்கி ஏமாற்றியதை இன்னும் மறக்கவில்லை. சொல்லிச்சொல்லி திட்டியபடியே இருப்பாள். 

மகள் மறுபடியும் 'என்னப்பா?' என்றாள். 

'ஒன்றுமில்லை' என்றேன். 

அந்தக்கார், ஒருவருக்கு மேற்பட்ட பயணிகள் போவதற்காக ஏற்படுத்தப்பட்ட அந்தப் பிரத்தியேகமான, வளைவேயில்லாத நெடுஞ்சாலையில், நளனுடைய தேர்போன்று வாயுவேகம் மனோவேகமாக, அமெரிக்காவின் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பு ஸ்பீட் வேகத்தையும் தாண்டி, கட்டிடங்கள், வாகனங்கள், மரங்கள், மனிதர்கள், பழைய ஞாபகங்கள் எல்லாவற்றையும் பின்னே தள்ளிவிட்டு, ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

* * * 

நன்றி - மதுரைத் திட்டம்

ராகு காலம் - அ.முத்துலிங்கம்


திங்கட்கிழமைகளை எனக்குப் பிடிக்காதென்று சிலர் நினைக்கிறார்கள். உண்மையைச் சொல்லப் போனால் திங்கட்கிழமைகளில் எனக்கு ஒருவித மனஸ்தாபமும் இல்லை. இவை வரும்போது பின்னால் இன்னும் நாலு நாட்களை இழுத்துக்கொண்டு வருவதுதான் எனக்குப் பிடிக்காது. அடுத்த சனி, ஞாயிறு நாட்கள் வெகு து}ரத்தில் இருந்தன. அதுதான் வில்லங்கம், இதைத்தவிர எனக்குக் திங்கட்கிழமைகளில் தனிப்பட்ட விரோதம் எதுவும் கிடையாது.

 இப்படிப்பட்ட ஒரு திங்கட்கிழமை காலை நான் அலுவலகத்திற்கு விரைந்துகொண்டு இருந்தேன். விரைந்து என்பது தவறு. நைரோபியில் எட்டு வீதிகள் கொண்ட பிரதானமான கிரோமா ரோட்டில் காலைச் சந்தடியில் கார்கள் ஊர்ந்தன. ரேடியோவில் அப்போது பிரபலமான ஆப்பிரிக்கப் பாடல் ஒன்று ஒலித்துக் கொண்டிருந்தது.

என்னுடைய மார்புளைத் தொடாதே,
 புதியவனே!
 அவை இன்னும் இளசாகவே இருக்கின்றன.
 கொஞ்சம் பொறுத்திரு,

 காட்டு கத்தாளைபோல உடம்பு வலுவாகட்டும்,
 அதன் பிறகு உன் கைகள் சொல்வது
 எனக்குப் புரியும்.

 அதுவரைக்கும் என் மார்புகளைத் தொடாதே,
 புதியவனே!

 இந்தப் பாடலுக்கு ஏற்ப ஒரு காரியம் என் அலுவலகத்தில் அந்தச் சமயம் நடப்பது தெரியாமல் நான் சாவகாசமாக சவாரித்துக் கொண்டிருந்தேன்.

 நைரோபியில் வேலை செய்வதென்றால் ஒன்றில் ஒரு ஷாவிடம் அல்லது  பட்டேலிடம் வேலை செய்யவேண்டும். அது தவிர மிக நுட்பமாக biodata (தகைமைத் தரவு) எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இங்கே வேலைகள் கிடைப்பது இந்த தகைமைத் தரவு தயாரிப்பவரின் கெட்டித்தனத்தில் தான் தங்கியிருக்கிறது. அதனாலே இங்கு எல்லோரும் வெகு சகஜமாக வில்லை வளைப்பார்கள்; மற்சயத்தை அறுப்பார்கள்; மலையைத் தூக்குவார்கள். நானும் பெரிதாக ஒன்றும் செய்யாமல் சப்த சமுத்திரத்தையும் உருட்டிக் குடித்ததாகப் புனைந்து இந்த வேலையைச் சம்பாதித்திருந்தேன்.

 என்னுடைய முதலாளி ஒரு பட்டேல். பல தொடர்வீடுகளுக்கு சொந்தக்காரர். இவரிடம் நான் மேலாளராக வேலை பார்த்தேன். வீடுகளை மேற்பார்வை செய்வது, ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது, கணக்குகளைக் காப்பது இவைதான் என்னுடைய வேலை. தோல்வி வெற்றிக்கு முதல்படி என்ற முதுமொழியில் எனக்கு இருந்த பற்றுக் காரணமாக இந்த வேலை தொடர்ந்தது. ஒரு விளையாட்டு அரங்கம் கட்டப் போதுமான படிகள் என்னிடம் சேர்ந்திருந்தன.

 அலுவலகம் திறந்து ஓர் அரைமணி நேரம் பிந்தித்தான் நான் தினமும் வருவேன். அன்று எப்படியோ சீக்கிரமாக வந்துவிட்டேன். நான் முயற்சி பண்ணாமலேயே நடந்த காரியம் அது. இப்படி தப்பிதங்கள் சிலசமயம் நடப்பதுண்டு.

 எங்கள் தொடர் வீடுகளை உயரமான மின்சார வேலியும், இரட்டை கேட்டில் நின்ற காவலர்களும் பாதுகாத்தனர். மிமோசா விருட்சங்களின் உச்சியில் இருந்து அடாடா பட்சிகள் காலை ஒலிபரப்பை நிகழ்த்தின. அறுத்துக்கொண்டு ஓடிவிடுமோ என்று ஐயப்பட்டதுபோல மோட்டார் சைக்கிள்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு வேலி ஓரத்தில் நின்றன. நான் வேகமாக என் அறையை நோக்கி நடந்தபோது இன்னும் வேகமாகக் காவலாளிகள் என்னைப் பின்தொடர்ந்தனர். அவர்களுடைய முகங்கள் கலவரமாகக் காணப்பட்டன. என்னுடைய அறைக்கதவு சிறிது திறந்து ஆடியபடி நின்றது. என்னுடைய லேட்டாக வரும் பழக்கத்தில் மகத்தான நம்பிக்கை வைத்து அங்கே ஒரு காரியம் நடந்துகொண்டிருந்தது. கதவைத் திறந்தபோது நான் அப்படியான காட்சியை எதிர்பார்க்கவில்லை.

 அவன் முகம் பழக்கமானதாக இல்லை. முப்பத்தைந்து வயது மதிக்கக்கூடிய நல்ல உடல்வாகு இருந்தது. தசைகள் முறுகிக் கிடந்தன. முதுகில் வியர்வை துளிர்த்து நீராக வழுக்கிக்கொண்டிருந்தது. முன்னறிவிப்பின்றி வந்த என்னை மிகவும் குற்றமாகப் பார்த்தான். அந்தப் பெண் ஒரு கையால் தன் உடைகளை எடுத்துக்கொண்டு மறுகையால் ஒரு மார்பை மறைத்துக்கொண்டு ஓடினாள். பின்பு இன்னொருமுறை வந்து தன் காலணிகளை மீட்டுக்கொண்டு திரும்பினாள்.

 இவள் துப்புரவுப் பணிப்பெண். தினமும் அதிகாலை வேளைகளில் கைக்காசு கொடுத்துக் கோடுபோட்டு அழகு படுத்திய கேசத்துடன் வருவாள். சுத்தமாக வெளுத்த உடையோடு ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டுக் காட்சியளிப்பாள். போறணையில் இருந்து இறக்கிய பாண்போல மொரமொரவென்றும், இளஞ்சூட்டோடும் ஒருவித மணத்தோடும் இருக்கும் இவளைத்தான் அவன் வந்து இரண்டு நாட்களுக்கிடையில் வளம் பண்ணிவிட்டான்.

 சில நாட்கள் முன்பு புதிதாக குடிவந்த டொன்னின் டிரைவர்தான் இந்த மாரியோ ங்கோமா. சாரத்தியம் தவிர வேறு வேலைகளும் பார்த்தான் என்பது அன்று காலைதான் எனக்குப் புரிந்தது. ஒரு காலத்தில் ஹறாம்பி உதை பந்தாட்டக்குழுவில் பிரபலமாக இருந்தவன் என்று பின்னால் தெரிந்துகொண்டேன். தொடைகள் அரைய, என்னைத் திரும்பிப் பார்த்தபடியே மிக மெதுவாக அவன் அசைந்து போனான். நான் இவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்தான் போலத் தெரிந்தது.

 இப்படித்தான் எனக்கு மாரியோவிடம் முதன்முதலில் பரிச்சயம் ஏற்பட்டது.

 ஒரு வாரம் முன்பு மிஸ்டர் டொன் என் அலுவலகத்திற்கு வந்திருந்தார். வீடு பிடித்திருப்பதாகச் சொன்னார். இவர் ஒரு மொரிஸியஸ்காரர். கட்டையான மனிதர். எந்த விதமான வீட்டிலும், எப்படிப்பட்ட வாசலிலும் குனியும் சிரமம் இல்லாமல் போகும் வசதி பெற்றவர். சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியாக நைரோபியில் பதவியேற்று இருந்தார். இவரிடம் அசிரத்தையாக பழகமுடியாது என்பது எனக்கு உடனேயே புரிந்துவிட்டது. சொற்களுக்குக் காவல் போட்டுக்கொண்டு பேசினார்.

 வீட்டுப் பத்திரம் கையொப்பம் இடுவதற்கு ரெடியாக இருந்தது. தன் தொழில் பழக்கத்தால் நான் தயாரித்து வைத்திருந்த ஒப்பந்தத்தை இவர் வாசிக்க முற்பட்டார். ஒருதலைப் பட்சமான ஒப்பந்தங்கள் இங்கு வெகு பிரசித்தம். இது எல்லோருக்கும் தெரியும், புதிதாக வந்திருக்கும் இவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
 எறும்பின் கண்களுக்கு மாத்திரம் சாத்தியமான சிறிய எழுத்துக்களில் நாங்கள் ஒப்பந்தத்தில் அடிக்குறிப்புகள் இடுவோம். மிக அபூர்வமான சரத்துக்களை எல்லாம் இப்படித்தான் நுழைத்து விடுவோம். இவர் அவற்றை எல்லாம் படிக்க மிகவும் ஆசைப்பட்டார். தலையைச் சொறிந்துகொண்டு வெகுநேரம் யோசித்தார். ஓர் IMF பத்திரத்தில் கையெழுத்து வைக்கச் சொன்னதுபோல மனதை மிகவும் குழப்பிக்கொண்டார்.

 “ஐயா, இது இரும்புப் பட்டறையில் தயாரித்த பத்திரம். இதில் ஒரு வரி, ஒரு வார்த்தை, ஓர் எழுத்து, ஏன் ஓர் இடைவெளியைக் கூட உங்களால் மாற்ற முடியாது. வேண்டுமானால் இன்னொரு நாளைக்கு வந்து பாருங்கள்” என்றேன். மிகவும் யோசித்தபின் பேனையை கையிலெடுத்து Velay Don என்று தன் பெயரை வரைந்தார்.

 இவருடைய மனைவியைக் கண்ட பிறகுதான் இவர் தமிழராக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எனக்கு உதித்தது. மோசமான பல தமிழ் வார்த்தைகளுக்கு இவர் சொந்தக்காரராக இருந்தார். இவருடைய  உச்சரிப்பு அச்சுறுத்தலாக இருக்கும். வேலாயுதன் என்ற பெயர்தான் இன்னும் சுத்திகரிக்கப்பட்டு Velay Don என்று மாறியிருந்தது.

 மாரியோ முதல் தடவையாக ஒரு வெளிநாட்டுக்காரரிடம் வேலை பார்த்தான். அதனால் அவனுக்கு அடிக்கடி சம்சயங்கள் வந்தன. டொன்னுடைய பழக்க வழக்கங்கள், விருப்பு வெறுப்புகள் ஒன்றுமே அவனுக்கு முதலில் புரிபடவில்லை. அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் தெரியவில்லை. அவன் படித்த முதல் பாடம் காலையில் காரை எடுக்கும்போது பின்னோக்கி எடுக்கக்கூடாது என்பதுதான். புதிய கார் ஒன்றை வாங்கி டொன் செய்த புதிய காரியம் இவனைப் பிரமிக்க வைத்தது. பூசணிக்காய் ஒன்றைக் கார் சில்லின் கீழ் வைத்து நசித்து கார் ஓட்டியதைக் கூறி அதற்குக் காரணம் கேட்டான். நான் எனக்குத் தோன்றிய மாதிரி அர்த்தம் சொன்னதும் மிகவும் கலவரப்பட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

 அந்த அம்மா இரண்டு அடையாளம் (பொட்டு) வைத்திருக்கிறாளே! ஒன்று நெற்றியிலே, மற்றது உச்சியிலே. அவர்களுடைய மகளுக்கு மட்டும் ஓர் அடையாளம். அது ஏன் என்ற கேள்வியுடன் இன்னொரு நாள் வந்தான். அதற்கும் பதில் தயாராக வைத்திருந்தேன். இப்படித்தான் மாரியோ, சுவரைத் தொட்டு கரியாக்கியபடி, அடிக்கடி என்னிடம் வரத்தொடங்கினான்.

 அந்த அம்மா மிகவும் ஆசாரமானவள். சேலை கட்டி குளிரைத் தடுக்க ஒரு வேலைப்பாடு செய்த போர்வையும் போர்த்தியிருப்பாள். வான்கோழி போல கழுத்திலே சுருக்கங்கள் விழுந்து கிடக்கும். ஒரு காலத்தில் செழித்திருந்த கேசத்திற்குப் போதிய சான்று இருந்தது. தலையில் வெள்ளைக் கோடுகள் படர்ந்து முகத்திற்கு ஓர் அழகையும் கண்ணியத்தையும் கொடுத்தன.

 மாரியோ அந்த அம்மாமீது மிகவும் மரியாதை வைத்திருந்தான். அவள் சொல்வதுதான் அவனுக்கு வேத வாக்கு. நவராத்திரி, தீபாவளி போன்ற மங்கல நாட்களில் உற்சாகத்தோடு கலந்துகொள்வான். அவற்றின் விபரங்களை ஆச்சரியத்தோடு கேட்டுக் கிரகிப்பதில் ஆர்வம் காட்டுவான். அவர்கள் பழக்க வழக்கங்கள், உணவு வகைகள்கூட அவனுக்குச் சீக்கிரத்தில் அத்துப்படியாகிவிட்டன.

 போகப்போக அவர்களுடைய சம்பிரதாயம், பழக்க வழக்கங்கள் பற்றி மாரியோ என்னிடம் அர்த்தம் கேட்பது குறைந்துவிட்டது. மாறாக, சுமங்கலி பூசை பற்றி எனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் அதை அவனே தீர்த்து வைப்பான் போல இருந்தது. அந்த அம்மா கடுமையான விரதங்களைப் பிடிக்கும்போது இவனும் பிடித்தான். அவற்றினுடைய பலாபலன்களையும் அவன் தெரிந்து வைத்திருந்தான்.

 ஆனால் வெகு காலமாகியும் மாரியோவுக்குப் பிடிபடாத விஷயம் ஒன்று இருந்தது. அதுதான் ராகு காலம்.
 ஒரு நாள் பதட்டமாக வந்து சேர்ந்தான். டொன் அவனைக் கடுமையாகத் திட்டிவிட்டதாகச் சொன்னான். காரணம் அவன் பத்து நிமிடகாலம் தாமதமாக வந்ததுதான். அன்று அவர் வெளிநாட்டுப் பயணத்திற்காக விமான நிலையம் செல்வதற்கு இருந்தார். அது ஒரு வெள்ளிக்கிழமை. பிளேன் பின்னேரம் இரண்டு மணிக்குத்தான் புறப்படுவதாக இருந்ததாம். டொன் என்றால் காலை பத்து மணிக்கு முன்பே வீட்டை விட்டுக் கிளம்புவதற்குத் தயாராய் இருந்தார். அன்று பார்த்து மாரியோ லேட்டாக வந்ததால், ராகு காலம் தொடங்கி விட்டதாக அவனைக் கண்டித்து, பயணத்தையே கான்ஸல் பண்ணி விட்டார்.

 ஓர் ஆபிரிக்க டிரைவருக்கு ராகு காலத்தின் சூட்சுமம்பற்றி விளக்குவது எவ்வளவு கடினம் என்பதைக் கற்பனை திறன் உள்ளவர்களிடம் விட்டுவிடுகிறேன். மாரியோவின் முகத்தைப் பார்த்த பிறகு எப்படியும் இந்த ராகு கால மர்மத்தை இவனுக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்று தீர்மானித்தேன்.

 விஷ்ணு எப்படி மோகினியாக மாறி அமிர்தம் பங்கிட்டாரென்றும், அதை ராகு, தேவ உருவத்தில் பெற முயற்சித்ததையும், சூரிய சந்திரர் இதை அறிந்து விஷ்ணுவுக்குக் கோள் சொல்லியதால் ராகுவுக்கும் சூரிய சந்திரருக்கும் தீராப் பகை ஏற்பட்டதையும் விவரித்தேன். ராகுவின் பழி தீர்க்கும் படலம் இன்றும் தொடர்கிறது. சூரிய சந்திரர் இயக்கத்தில் பிறக்கும் ஒவ்வொரு நாளிலும் ஒரு சில மணி நேரங்களை ராகு பீடித்துக் கொள்கிறான். அதுதான் ராகு காலம், அந்தக் காலங்களில் என்ன செய்தாலும் அது உருப்படாது என்று விளக்கினேன்.

 ஒரு சிறு பிள்ளையின் குதூகலம் அப்போது மாரியோவுக்கு ஏற்பட்டது. விளக்கம் இவ்வளவு சுலபமாக இருக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை போலும். எந்த நாட்களில் எவ்வளவு மணி நேரங்களை ராகு பாதிப்பான் என்று அவன் கேட்டதற்கும் என்னிடம் ஒரு சூத்திரம் தயாராக இருந்தது.

 Mother Saw Father Wearing The Turban Surely. இந்த வசனத்தை அவனை மனப்பாடம் செய்ய வைத்தேன். இந்த ஏழு வார்த்தைகளும் ஏழு நாட்களைக் குறிக்கும். முதலாவது வார்த்தை Monday என்றால் இரண்டாவது வார்த்தை Saturday மூன்றாவது Friday இப்படியே கடைசி வார்த்தை Sundayஐ குறிக்கும். இந்த முறைப்படி முதலாம் நாள் ராகு காலம் காலை ஏழரை முதல் ஒன்பது வரை நீடிக்கும், இரண்டாம் நாள் ஒன்பது முதல் பத்தரை, மூன்றாம் நாள் பத்தரை முதல் பன்னிரெண்டு இப்படியே விரியும் என்று விளக்கினேன். அவனும் புரிந்ததுபோல பெரிதாகத் தலையை ஆட்டினான்.

 அவனுக்கு எவ்வளவு தூரம் இது அர்த்தமாகியது என்பது தெரிய நான் வெகுகாலம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் அப்போது அது எனக்குத் தெரியவில்லை.

 டொன் தம்பதியருக்கு ஒரு மகள். பதின்மூன்று, பதினாலு வயதிருக்கும். மிக அழகான ஒரு பெண்ணாக வருவதற்குத் திட்டம் போட்டிருந்தாள். தலைமயிர் அடர்ந்து உச்சி பிரிக்காமல் இருக்கும். எப்படி வரிந்து இழுத்தாலும் அவளால் அந்த முகத்து வசீகரத் தன்மையைக் குறைக்க முடியாது. எப்பொழுது பார்த்தாலும் நீச்சல் தடாகத்தில் இரு பாதி குளியல் உடையில், சம வயது ஆப்பிரிக்கப் பெண்களுடன் விளையாடிக்கொண்டு இருப்பாள். ஒரு நாள் பார்த்த போது யாமா சோமா இறைச்சியை அவர்களுடன் பகிர்த்து உண்டு கொண்டிருந்தாள். எனக்குத் திகைப்பாயிருந்தது.

 நான் மாரியோவைக் கேட்டேன். “என்ன மாரியோ, இந்தப் பெண் இப்படிப்போய் சுட்ட இறைச்சியைச் சாப்பிடுகிறாளே. அவர்கள் சுத்த சைவம் அல்லவா?” என்றேன்.

 “ம்பவானா, அதை ஏன் கேட்கிறீர்கள்? பள்ளிக்கூடம் போகும் வழியில் யாயா சென்டரில் மட்டன் கட்லட் வாங்கிச் சாப்பிடுகிறாள், வீட்டுக்குத் தெரியாமல். இலையான் அடித்தால் ஓணான் ரத்தம் வருகிறது.” என்றான்.
 “சின்னப் பெண்தானே! செய்துவிட்டு போகட்டும்.”

 “இல்லை, ம்பவானா, மாமிசம் சாப்பிடுவதை நான் சொல்லவில்லை. பெற்றோருக்குத் தெரியாமல் கள்ளமாகச் சாப்பிடுவதைச் சொல்கிறேன்.”

 டொன்னின் உலகம் தனி உலகம். அளவுக்கு அதிகமான பட்டன்கள் வைத்த கோட்டை அணிந்துகொண்டு அடிக்கடி என் அலுவலகத்துக்கு முறைப்பாடுகளைக் கொண்டுவருவார். வீட்டிலே சாயமடித்து வளர்த்த தலைமயிர் என்றபடியால் கீழ்பாதி ஒரு நிறமாகவும் மேல்பாதி இன்னொரு நிறமாகவும் இருக்கும். உலகத்தைப் பார்க்கும் கண்களால் இவருக்குப் பக்கத்தில் இருக்கும் காதைப் பார்க்க முடியவில்லை. இவரிடம் மகளைப் பற்றிச் சொல்லுவோமா என்று நான் பலதடவை யோசித்தது உண்டு.

 அந்தச் சிறுமி ஆப்பிரிக்கச் சநேகிதிகளின் சகவாசத்தால் முற்றிலும் மாறி வர, மாரியோவோ தன்னுடைய இயல்பான குணத்தையும், பழக்க வழக்கங்களையும் துறந்துவிட்டான். அந்த அம்மாவின் மேல் அவனுக்குப் பற்றுதல் அதிகமானது. சிறிது சிறிதாக மாமிசம் சாப்பிடுவதையே விட்டுவிட்டு அவர்களுடைய இட்லி, சாம்பார் தோசைக்கு அடிமையானான். அது மாத்திரமல்ல, சிவராத்திரி, கந்தசஷ்டி பற்றி யெல்லாம் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்திருந்தான்.

 மகளைப் பற்றித் தாயாரிடம் சொல்வதா விடுவதா என்ற மனப் போராட்டம் மாரியோவுக்கும் இருந்தது. நல்ல காலமாக முடிவெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு நேரவில்லை. விதி வேறு விதமாகத் தீர்மானித்தது போலும்.

 சதுர்த்தி விரதத்தில் இவர்கள் தீவிரமாக இருந்தபோது டொன்னுக்கு திடீர் என்று மாற்றல் உத்தரவு வந்தது. வழக்கமான நாலு வருடங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை. டொன்னுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலும் பார்க்க மாரியோவுக்கு அதிகமான ஏமாற்றம். அவர்களை மிகவும் பிடித்துப்போய் அவனுடைய வாழ்க்கை ஓர் ஒழுங்குக்கு வரும்போது இப்படி நடந்துவிட்டதே என்று புலம்பினான்.

 டொன் போகுமுன் பல பரிந்துரை கடிதங்களைக் கொடுத்திருந்தார். அப்படியும் மாரியோவுக்கு ஒரு வேலையும் கிடைக்கவில்லை. அவன் மனம் உடைந்து இருக்கும் போது ஸ்வீடன் தூதரகத்தில் ஒரு சாரதி அவசரமாகத் தேவைப்படுவதாகக் கேட்டிருந்தார்கள். மாரியோவை அடுத்த நாளே போய் அவர்களைப் பார்க்கும்படி கடிதம் கொடுத்து அனுப்பினேன். அத்துடன் மாரியோ என் வாழ்வில் இருந்து மறைந்துவிட்டான்.
 பல மாதங்கள் கழித்து ஒரு சனிக்கிழமை யாயா சென்டருக்குச் சென்றிருந்தேன். இரட்டைப் பின்னல் கட்டிக்கொண்டு என்னுடைய சிறிய மகளும் வந்திருந்தாள். அது பசி வியாபித்திருக்கிற ஒரு மத்தியான நேரம். எங்கேயும் பசி தெரிந்தது, இருந்தபடி சிலர் சாப்பிட்டார்கள். நின்றபடி சிலர், இன்னும் சிலர் நடைபாதையிலேயே நடந்தபடி சாப்பிட்டார்கள்.

 வழக்கம் போல ஐஸ்கிரீம் கடையைக் கண்டவுடன் என் மகளுடைய நடை தளர்ந்தது. வெட்டுக்கிளியை முகர்ந்த நாய்க்குட்டி போல கால்களைப் பரப்பிக்கொண்டு அசைய மறுத்துவிட்டாள். எத்தனை நூறு புதிய சுவைகள் வந்தாலும் வனில்லா போல் வருமா? அந்த மணம் அங்கே பரவியிருந்தது.

 தூரத்தில் மாரியோ வந்துகொண்டிருந்தான். ஓர் ஒட்டைச்சிவிங்கி போல கால்களை அகட்டி வைத்து நடந்து வந்தான். அளவுக்கு அதிகமாக தொங்கிய கோட்டின் பகுதிகள் செட்டை போல இரண்டு பக்கமும் விசிறி அடித்தன. மெலிந்துபோய் இருந்தான். நூலிலே கோத்து வைத்ததுபோல அவன் உடம்பின் அங்கங்கள் தனித்தனியாக ஆடின. நெற்றியிலே திருநீறு பூசி அதிலே குங்குமப் பொட்டு.

 அவனை இந்தக் கோலத்தில் பார்த்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என் மகள் பின்னால் நகர்ந்து என் கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டாள்..

 ‘மிஸூரி.’
 ‘மிஸூரி சான்.’
 “எங்கே மாரியோ இந்தப்பக்கம்?”
 “கோவிலுக்குப் போயிருந்தேன். ம்பவானா, புரட்டாசி சனியில்லையா”
 “இன்று வேலைக்குப் போகவில்லையா”
 “வேலையா? இப்ப ஆறு மாசமாக அதைத்தானே தேடிக்கொண்டிருக்கிறேன்.”
 “ஆறு மாசமா? ஏன் அந்த ஸ்வீடன் தூதரக வேலைக்கு என்ன நடந்தது?”
 “அதை விடுங்க, ம்பவானா? நாணல் புல் குழலை ஊதினாலும் கொஞ்சம் ஆறத்தானே வேண்டும், முகத்தைச் சொறிய” என்றான்.
 “ஏன், என்ன நடந்தது?”
 “நேர்முகத் தேர்வுக்கு புதன்கிழமை பன்னிரெண்டு மணிக்குக் கூப்பிட்டிருந்தார்கள். எப்படி போக முடியும்?”
 “நீ போகவில்லையா?”
 “சரியான ராகுகாலம், வேலை கிடைக்கவா போகிறது?”

 முழுங்கால்கள் தனித்தனியாக ஆட, வேகம் குறையாமல் மாரியோ தன் பாட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான்.
 நான் அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன், வெகு நேரம்.

 “ம்பவானா, இதோ இரண்டு வனில்லா” என்றான் கடைக்காரன்.

கறுப்பு அணில் - அ.முத்துலிங்கம்


ஒரு நாள் தற்செயலாகத்தான் அது ஆரம்பமானது.

வேலை முடிந்து மாலை பஸ் தாப்பில் இறங்கி வீட்டுக்கு வரும் வழியில் அவன் ஒரு கார் பாதுகாப்பு நிலையத்தை கடப்பான். பட்டனை அமுக்கி டிக்கட்டை இழுத்து கார்கள் உள்ளே நுழைவதையும், திரும்பும்போது காவலனிடம் காரோட்டிகள் கட்டணம் செலுத்துவதையும் பார்த்திருக்கிறான். சாரதி கண்ணாடிக் கதவை திறந்து காசைக் கொடுப்பான். மீதி சில்லறை வழங்கப்பட்டதும் மஞ்சளும், கறுப்பும் பூசிய தடுப்பு மரம் மறுபடியும் உயர கார் வெளியே சென்றுவிடும்.

அன்று அந்த நிலையத்தை தாண்டும்போது தடுப்பு மரத்துக்கு கீழே சில்லறைக் காசுகள் சிதறிக் கிடந்தன. அவன் அதை பொறுக்கி பக்கட்டுக்குள் வைத்துக்கொண்டான். ஆயிரம் கார்கள் போகும் இடத்தில் ஒரு சிலர் சில்லறைகளை தவறவிட்டு விடுவார்கள். பரம லோபிகளைத் தவிர மற்றவர்கள் சீட் பெல்ட்டைத் தளர்த்தி, கதவைத் திறந்து, கீழே இறங்கி அவற்றை பொறுக்கமாட்டார்கள்.

இந்தச் சில்லறையைதான் கொண்டுபோய் அவன் தன் அறையிலே காலியான ஒரு வாய் அகலமான போத்தலில் போட்டு வைத்துக் கொண்டான்.

அதற்கு பிறகு அதுவே வழக்கமாகிவிட்டது. அந்த நிலையத்தை தாண்டும்போது அவன் குனிந்து சில்லறைகளை தேடுவான். எல்லாமே 25,10,5, 1 சதக்குற்றிகளாக இருக்கும். அபூர்வமாக டொலர் குற்றிகளும் கிடைக்கும். அவற்றை அவன் தவறாமல் அந்த போத்தலில் போட்டு மூடியையும் திருகிவிடுவான்.

இவன் வேலையில் சேர்ந்த அந்த முதல் நாள் லோரா என்ன டிரஸ்ஸில் வந்தாள் என்று கேட்டால் மிகச் சாியாக பதில் சொல்லிவிடுவான். கறுப்பு நீள ஸ்கர்ட், கறுப்பு தொளதொள பிளவுஸ். அதற்கு மேல் ஒரு ரத்தச் சிவப்பு ஸ்வெட்டர், பொிய பட்டன்கள் வைத்து முன்புறமாக திறக்கும் வசதியுடன் இருந்தது. தலை மயிர் இவ்வளவு குவியலாக பொன் நிறமாக இருந்ததை அவன் முதன்முதலாக பார்த்தது அப்போதுதான்.

அன்றைய வேலை நிரல்களை அவள் நின்றபடி டிக் செய்து இரண்டு இடங்களில் முத்திரை குத்தி அவர்களிடம் நீட்டினாள். இவனுடைய முறை வந்தபோது இவன் முகத்தை அவள் பார்க்கவில்லை. பார்க்க முயலவுமில்லை. இவனுடைய பாரத்தில் முத்திரையை அளவுக்கு அதிகமான பலத்துடன் குத்தி அதை மேசை மீது தள்ளிவிட்டாள். அது மேசையின் விளிம்பை தாண்டி வேகம் குறையாமல் போகும்போது இவன் ஒரு பறவையை பிடிப்பதுபோல பிடித்தான். மற்றவர்களுடையதைப்போல அந்த நிரலை கையிலே கொடுக்கலாம் என்ற சாதாரண அறிவு அவளுக்கு தோன்றவில்லை என்பதில் அவனுக்கு வருத்தம்.

தன் பெயர் தொியாமல் அவள் பாரத்தை மாற்றிக் கொடுத்துவிடலாம் என்ற பயத்தில் இவன் 'என்னுடைய பெயர் லோகிதாசன். இன்றைக்குத்தான் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறேன் ' என்று முனகினான். இடைக்கு மேலே உள்ள பாகத்தை மட்டும் இவனுக்கு எதிரான திசையில் திருப்பி வைத்து அலட்சியமாக அடுத்த தாளில் முத்திரை பதிப்பதில் அவள் சிரத்தையானாள்.

அவளுடைய நீண்ட வெண்மையான கழுத்திலிருந்து எப்படிப்பட்ட ஒலி வரும் என்று ஊகிப்பதில் அவனுக்கு அன்று இரவு முழுக்க செலவழிந்தது. அந்தக் கவலை அடுத்த நாள் காலையே தீர்ந்தது. லோரா பக்கத்தில் இருந்தவளிடம் சோகமாக ஒரு முறைப்பாட்டை வைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பொிய மஞ்சள் பூ போட்ட கவுனை சலவைக்காரன் பாழாக்கிவிட்டானாம். இந்த அழகான பெண்ணின் மனது இப்படி நொந்துபோனதே என்று இவனுக்கு கோபமாக வந்தது. ஒரு கன்றுக்குட்டி பார்ப்பதுபோல அவளைப் பார்த்தான். அவளுக்கு தேறுதல் சொல்வதற்கு அவனிடம் போதிய ஆங்கில வார்த்தைகள் அப்போது சேர்ந்திருக்கவில்லை.

அவளுடைய அலங்காரம் அன்று முற்றிலும் மாறியிருந்தது. ஆழமான கழுத்துடன், இறுக்கமான மஞ்சள் பிளவுஸில் வந்திருந்தாள். வேப்பம்பழ சைஸ் செயற்கை முத்துக்களால் செய்த மாலை ஒன்று அவள் ஸ்தனங்களுக்கிடையில் சிக்கிக் கிடந்தது. இதை போடுவதற்கு அவள் மிகுந்த சிரமப் பட்டிருக்கவேண்டும். இதைக் கழற்றும்போது இன்னும் சிரமமிருக்கிறது. ஒன்றிரண்டு முத்துக்கள் அறுந்து விழுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தன.

எந்த ஏரியா அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டாள். இவன் 'சாவிக்னோன் ' என்று கூறினான். மிகவும் செலவு வைக்கக்கூடிய ஒரு அபூர்வமான ஒப்பனைக்காரியால் செதுக்கப்பட்ட மெல்லிய புருவங்களை உயர்த்தி சுழித்தபடி, அந்த வார்த்தையின் சரியான உச்சரிப்பை கூறினாள். மேலும் பேப்பரை இழுத்து மிகக்கச்சிதமாக இரண்டுதரம் குத்தினாள். அன்றைக்கும் அவனுடைய முகத்தை அவள் பார்க்கவில்லை.

சாதாரண ஊழியன் என்ற முறையில் அவன் அதிபரை சந்திக்க முடியாது. காலாண்டுக் கூட்டங்களில் அவருடைய சொற்பொழிவை கேட்டிருக்கிறான். 'தூசி எங்கள் எதிரொலி ' என்று பேச்சை தொடங்குவார். முக்கோண தாடையுடன், அடர்ந்த புருவங்களுடன், மிக நேர்த்தியாக வாரிய சிகையுடன் சிவப்பு நிறத்தில் அவர் இருப்பார். உலர் சலவை செய்த அவருடைய உயர்தர ஆடையின் மடிப்புகள் அவர் அசையும்போது அலையாக எழும்பி அதே இடத்தில் விழும். அவர் பேசத் தொடங்கும்போது அவருடைய குரல்கூட சுத்திகாிக்கப்பட்ட பின்பே வெளியே வரும். அவனுக்கு எங்கே தான் விடும் சுவாசக் காற்றின் மிச்சத்தை அவர் சுவாசித்துவிடுவாரோ என்ற பயத்தில் மூச்சுமுட்டும்.

மிகப் பாரமான தூசி உறிஞ்சிகளை மெலிந்த தோள்களில் காவியபடி அவன் ஆயிரம் மாடிப்படிகள் ஏறி இறங்கினான். ஆயிரம் கம்பளங்களை உறிஞ்சி எடுத்தான். மெல்லிய மருந்து நெடி கொண்ட கிருமி நாசினிகளால் கழிவறைகளை கழுவினான். உரஞ்சி, உரஞ்சி துடைத்த அவை தானாகவே ஒளிவிட்டன. கண்ணாடிக் கதவுகளையும், சாளரங்களையும் விண்டெக்ஸ் மாயசக்தியால் பளபளப்பாக்கினான். அவற்றில் தொியும் முகங்கள் சொந்தக்காரர்களின் முகங்களிலும் பார்க்க பிரகாசம் கூடியவையாக இருந்தன. படுக்கை விாிப்புகள் வெள்ளை நிறத்தில் நறுமணம் பரப்பி ஒரு சுருக்கு விழாமல் உறுதியாக படுக்கைகளை மூடின. புரூஸ் லஸ்ரர் மினுக்கி போட்டு துடைத்து வழுவழுப்பாக்கிய மேசைகளும், கதிரைகளும், சோபா கைப்பிடிகளும் தூசிகள் எப்படி இருக்கும் என்பதை மறக்கவைத்தன.

வெள்ளை வெளேரென்று சுத்தமான தூசிகள் அகற்றப்பட்ட ஒரு சுகந்தமான உலகத்தை தயாாிப்பதில் அவன் தீவிரமாக ஈடுபட்டிருந்தான்.

அலுவலகங்களை சுத்தப்படுத்துவதற்கும் வீடுகளை சுத்தப்படுத்துவதற்கும் பல வேறுபாடுகள் இருந்தன. அலுவலகங்கள் பெரிசாக இருந்தாலும் வேலையை சீக்கிரமாக முடித்துவிடலாம். கையைக் காலை நீட்டி வேலை செய்ய தாராளமாக இடம் இருக்கும். தரையோடு ஒட்டிய கம்பளங்கள், மேசைகள், கதிரைகள் என்று துப்புரவு செய்வது சுலபம்.

வீடுகள் என்றால் நெருக்கமான சூழ்நிலை. கார்ப்பட்டுகளில் கால்கள் புதையும். படுக்கை விாிப்புகளை மாற்றவேண்டும். அலங்காரப் பொருட்களை தூசி தட்டி குசினிகளை பளபளப்பாக்க வேண்டும். இந்த வீட்டு எசமானிகளை சமாளிப்பது மகா கஷ்டம். முறைப்பாடுகள் வந்தபடியே இருக்கும்.
என்றாலும் அவனுக்கு வீடுகள்தான் பிடிக்கும். அவனும், அவனுடைய சகாவும் வேலையை படுக்கை அறை, இருக்கும் அறை, நிலவறை, கழிவறை, குசினி என்று பிரித்துக் கொள்வார்கள். துப்புரவு செய்யும்போதே அந்த வீட்டில் வாழ்பவர்கள் பற்றியும், அவர்களுடைய குணாதிசயங்கள் பற்றியும் அவனுடைய கற்பனைகள் விரியும்.

வேலை முடிந்த சில நேரங்களில், முற்றிலும் தூசி நீக்கிய, கைப்பிடிகள் மினுக்கிய, வெள்ளை வெளேரென்ற மிருதுவான சோபாவில் அவன் சாய்ந்ததும் கனவுகள் உண்டாகும். அவனுடைய வீடு வெண்ணீல வர்ணத்திலும், திரைச்சீலைகள் விடியல் நிறத்திலும் இருக்கும். அலுவலகத்தில் இருந்து அவன் களைத்து வந்து கதவைத் திறந்ததும் நல்ல வாசனை வரும். பிரபல இத்தாலியன் டிசைனர் Georgio Armani உருவாக்கிய, ஒரு வயதேயான ஆட்டுக்குட்டியின் மெல்லிய சருமத்தினால் தயாரித்த கதகதப்பான மேலங்கியை கழற்றிவிட்டு, கணுக்கால்கள் புதையும் கார்ப்பட்டில் நடந்துபோய், அமர்ந்ததும் அரையடி கீழே பதியும் சோபாவில் கால்களை நீட்டி உட்காருவான். கணப்பு அடுப்பில் புகை தராமல் சிறு மணத்துடன் எரியும் பேர்ச் விறகுகளை மெல்லத் தள்ளிவிடுவான். இரண்டு கைகளை அகட்டி விரித்தாலும் விளிம்புகளைத் தொடமுடியாத அகலமான தட்டை கண்ணாடி வியில் 55 வது சானலை திருப்பி வைப்பான்.

அன்று அவன் வீடு திரும்பும்போது இரவு பத்து மணிக்கு மேல் ஆகிவிட்டது. 14 மணி நேரம் தொடர்ந்து வேலை. அதில் இரண்டு மணி நேர சம்பளத்தை லோரா வெட்டிவிட்டாள். மெல்லிய பனிப்புயல் தொடங்கிவிட்டது. குளிர் காலத்துக்கு பொருத்தமில்லாத சப்பாத்துகளை அவன் முடிச்சுப்போட்டு நீட்டிய லேஸ்களால் கட்டியிருந்தான். பனித்தூள்கள் உள்ளே போய் கால்கள் ஈரமாகிவிட்டன.

அந்த வீட்டின் நிலவறையை அமைத்தவன் மிகவும் விவேகமானவனாக இருந்திருக்கவேண்டும். இருட்டிலே வந்து அவன் துழாவி சாவியை போட்டு கதவை திறப்பான். அதற்கு பிறகு பத்தடி தூரம் தடவித்தடவி போய் ஸ்விட்சை கண்டுபிடித்து போடுவான். எலிகளை மிதிக்காமல் தந்திரமாக நடக்க பழகிக்கொண்டான். சிறு வயதில் பிறந்த நாள் விழாக்களில் கண்ணை கட்டிவிட்டு கழுதையின் படத்துக்கு வாலை சாியான இடத்தில் பொருத்திய பயிற்சி அப்போது அவனுக்கு மிகவும் உதவியது.

அவனுக்கு கடிதங்கள் வருவதில்லை. மாதம் ஒருமுறை வரும் அம்மாவின் கடிதம் நீல உறையில், பென்சிலால் விலாசம் எழுதப்பட்டு, மூன்று நாட்களாக உடைக்கப்படாமல் கிடந்தது. அன்றைக்கு அதை திறப்பதாக இருந்தான். அதில் இருக்கும் தகவல்களை தாங்கிக்கொள்ளும் பலத்தை அவன் இன்னும் சேகாிக்கவில்லை.
அவனுடைய பச்சை குளிர்பெட்டி அறையின் நடுவில் இருந்தது. மடகஸ்கார் கறை படிந்த சாரம் அவன் கழற்றி விட்ட இடத்திலேயே கிடந்தது. அவன் இல்லாத நேரத்தில் மாயக்குள்ளர்கள் வந்து அறையை சுத்தம் செய்து நறுமணம் பரப்பி வைக்கவில்லை. 'தூசி எங்கள் எதிரொலி ' என்று கறுப்பு எழுத்தில் எழுதிய மஞ்சள் வானில் துப்பரவுப் பணியாளர்கள் வந்து சுத்தம் செய்யவும் இல்லை. தரையில் விரித்த மெத்தை அவன் காலையில் விட்டமாமாதிரியே ஒரு எஸ்கிமோவின் இக்ளூ போல தடித்த போர்வையில் ஒரு துளை கொண்டதாக அவனுடைய உடம்பு திரும்பவும் நுழைவதை எதிர்பார்த்து கிடந்தது.

பிரிட்ஜின் கதவை திறந்து பார்த்தான். முந்தாநாள் சாப்பிட்டு மீதம் வைத்த பீட்ஸா துண்டு ஒன்றிருந்தது. ஹைனக்கன் பியர் கான் ஒன்று விசேட தினமொன்றில் குடிப்பதற்காக காத்துக் கிடந்தது. வேறு ஒன்றுமே இல்லை.

மறுபடியும் பனி கொட்டத் தொடங்கிவிட்டது. அவனுக்கு பசித்தது. இன்னும் ஒரு முறை சப்பாத்து அணிந்து, கோட்டை மாட்டி, தொப்பி போட்டு வெளியே போகும் சக்தி அவனுக்கில்லை. பீட்ஸாவை சாப்பிடுவோம் என்று யோசித்தான். ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. அதை அவன் உண்ண முன்பே நித்திரையால் கவரப்பட்டு விாிப்புகள் இழுத்து மூடப்படாத அந்தப் படுக்கையில் விழுந்து அப்படியே தூங்கிவிட்டான்.
அவனுடைய பக்கத்து வீட்டில் குடியிருந்தது ஒரு வசதியான சீனக்குடும்பம். பொிய வீடு. இரண்டு இருக்கும் அறைகள்; இரண்டு கார்கள்; இரண்டு பிள்ளைகள்; இரண்டு நாய்கள். எல்லாமே பணக்காரருக்கான அறிகுறி. பத்து கியர் வைத்த சைக்கிளில் பையன் ஓடித்திாிந்தான்; அவள் பதினேழு வயது பள்ளி மாணவிபோல காணப்பட்டாள்.

மாலை வேளைகளில் அந்த நாய்கள் அவளுடன் உலாத்தப்போகும். அந்த தருணங்களை எதிர்பார்த்து அவன் பல நாட்கள், பல மணி நேரங்கள் காத்திருப்பான். ஒரு நாள் அவள் பெயரை கேட்கவேண்டும் என்று நினைத்தான். அன்றும் அவள் நாய்களுடன் உலாத்தச் சென்றபோது இவனும் அவள் திரும்பி வரும் பாதையை ஊகித்து அதற்கு எதிராக போனான்.

பனித்திவலைகளை தாங்கும் இமைகளும், நுனி சிவந்த நாக்கும், தோளில் தொட அனுமதி மறுத்து உச்சியில் சுருட்டி வைத்த முடியும், சிறிய மூக்கை நோக்கி மேடாக வளைந்து, பார்த்த கணத்தே காமத்தை தூண்டும் சொண்டுமாக அந்தப் பெண் சடை நாய்கள் முன்னே போக பின்னால் செல்லமாக அசைந்தாள். பக்கத்து வீட்டில் அவன் குடியிருக்கிறான். ஒரு 'ஹாய் ' சொல்லுவாள் என்று எதிர்பார்த்தான். அவளுக்கு அந்த எண்ணம் இருக்கவில்லை.

நாய்களுக்கு இருந்ததாகவும் தெரியவில்லை. கறுப்பு தோல் பூட்ஸ்கள் பனியிலே புதைய மறைந்து போனாள்.
இந்த நாட்டில் அவனுக்கு முகமன் கூறுவதற்கு யாருமேயில்லை. அவனுடன் வேலை செய்யும் டானியல், உயரமாக, உறுதியான உறுப்புகளுடன் துப்புரவுப் பணிக்கே படைக்கப்பட்டவன்போல இருப்பான். கயானா நாட்டுக்காரன். அவனைப் போலவே கள்ளமாக வந்தவன்; அவனைப் போலவே தனிமையானவன். அவனைப்போலவே வசதிகள் குறைந்த ஒடுக்கமான நிலவறையில், வீட்டுக்கு உடமைக்காரன் உஷ்ணத்தை கூட்டி வைக்கப்போகும் நல்ல தருணத்துக்காக ஏங்கி இருப்பவன்.

கறுப்பு எழுத்துகள் பொறித்த மஞ்சள் நிற வாகனத்தில் அன்று சாமான்களை ஏற்றும்போது டானியல் 'ஹாய் ' என்றான். இவன் வாய் திறக்கவில்லை. 'என்ன அந்த நெட்டை கொக்கு இன்றைக்கும் உன்னை ஏசினாளா ? '
'இல்லை, மூன்று நிமிடம் ஆகிவிட்டது. இதுவரை தப்பிவிட்டேன். '

'ஒரு நாளைக்கு சொல்லிவிடு. '

'என்னத்தை சொல்ல ? '

'நான் என்ன பாம்பா ? நீ மெக்ஸிக்கோ தேசியக்கொடி கழுகா ? எப்ப பார்த்தாலும் என்னை கொத்துகிறாயே! அப்படிச் சொல்லு. அவளுடைய மூதாதையர்கள் மெக்ஸிக்கோவிலிருந்து வந்தவர்கள். விளங்கிக்கொள்வாள். '
'எனக்கு அவ்வளவு தைரியமிருந்தால் உள்ளாடைகளை நான் மாற்றவே தேவையில்லை. ' அவன் முகம் இருண்டு கண்கள் ஈரமாகத் தொடங்கின. அதற்கு பிறகு வேலை முடியும்வரை அவர்கள் பேசவேயில்லை.
அன்றைக்கு பனிக்காலத்து அயனம் (solstice ) என்று அறிந்திருந்தான். வடபாதி உலகத்தின் மிக நீண்ட இரவு, குறைந்த பகல். அவன் நீண்ட நித்திரையில் இருந்தபோது வானம் சோம்பலாக இருக்கவில்லை. இரவு முழுக்க பனி பெய்துகொண்டே இருந்தது. ஜன்னல் வழியே பார்த்தபோது கார்கள் எல்லாம் வெள்ளித்தொப்பிகள் அணிந்திருந்தன. தரை உயர்ந்துகொண்டே வந்தது. பிரகாசம் கண்ணை அடித்தது. அவனுக்கும் உலகத்துக்கும் இருந்த ஒரே தொடர்பு அந்த ஜன்னல்தான். அதுவும் அரைவாசி பனியில் மூழ்கி இன்னும் சிறிது நேரத்தில் கல்லறைபோல ஆகிவிடும்.

அன்றைக்கு வேலைக்கு போவதா, விடுவதா என்பதை அவனால் தீர்மானிக்க முடியவில்லை. பாதைகள் சீரானால் ஒழிய பஸ்கள் ஓடாது. லோரா வேலை பாரங்களையும், முத்திரை குத்திகளையும் வைத்துக் கொண்டிருப்பாள். அன்று அவனுடைய சீட்டை மிகவும் சந்தோசத்தோடு கிழிக்க தயாராவாள். ஒரு பிங்க் கலர் தாளில் அவனுடைய பேரை எழுதி, வேலை நீக்கும் காரணத்தை குறித்து, தேதியையும் போட்டு அவனிடம் நீட்டுவாள். அப்பொழுதுகூட அவனுடைய முகத்தை பார்க்கமாட்டாள்.

மாலைவரை அவன் அசையவில்லை. பனிப்பொழிவும் அசையவில்லை. ஒரு பனிச்சிறையில் அகப்பட்டதுபோல அவனுக்கு மூச்சு முட்டியது. வாய்விட்டு கத்தவேண்டும் அல்லது கூரையை பிய்க்கவேண்டும் என்று தோன்றியது. அந்த மாலை குப்பை பைகளுக்கான மாலை. அந்த வீதியிலே குப்பை பைகள் எல்லாம் நிரையாக அடுக்கப்பட்டிருந்தன. எல்லா வீட்டு முகப்புகளிலும் அந்தந்த வீட்டு தராதரத்தை காட்டுவதுபோல நாலு, ஐந்து, மூன்று என்று குப்பை பைகள் கட்டப்பட்டு கிடந்தன. அடுத்த நாள் அதிகாலையிலேயே அவை மறைந்துவிடும்.
இவை அந்தஸ்தை குறிப்பவை. அவனுடைய வீட்டின் முன் ஒரு பை மாத்திரமே கிடந்து வீட்டுக்காரருடைய வறுமையை பறை சாற்றியது. பக்கத்து சீனக்காரர் வீட்டில் வழக்கம்போல ஆறு கறுப்பு தடித்த பொலிதீன் பைகள் சிவப்பு நாடாவினால் கட்டி இறுக்கப்பட்டு கிடந்தன. அதை பார்க்க பார்க்க எரிச்சலாக வந்தது.
அதற்கு முன்பு வராத ஒரு எண்ணம் அவனுக்கு தோன்றியது. ஆறு கறுப்பு பொலிதீன் பைகளை நிரப்புவது மாதிரி அப்படி என்ன குப்பை அவர்கள் சேர்க்கிறார்கள். அப்பொழுது இரவு பதினொரு மணியாகிவிட்டது. வீதியில் நடமாட்டம் குறைந்துபோய் இருந்தது. பனிப்பொழிவு நின்றுவிட்டது ஆனால் சந்திர ஒளியில் பனி நிலம் பகல்போல ஜொலித்தது.

இவன் தன்னுடைய கறுப்பு ஓவர்கோட்டை அணிந்து வெளியே போய் ஒரு குப்பை பையை உள்ளே தூக்கி வந்தான். அந்தப் பையை நடு அறையில் வைத்து அதற்கு மேல் ஏறி நின்றான். ஓங்கி உதைத்தான். துள்ளி மிதித்தான். அதன் பக்கங்களெல்லாம் பிாிந்து கொட்டத் தொடங்கியது. முட்டைகோசின் மணமும், அழுகிய தோடம்பழத்தோலின் நெடியும் அறையை நிறைத்தது. பிரசவ காலத்துக்கு முன்பாகவே கர்ப்பிணியின் பன்னீர்குடம் உடைந்ததுபோல குப்பை நாலு பக்கமும் வழிந்தது.

பெரும் ஓட்டத்திற்கு பிறகு இரையைப் பிடித்த விலங்கு மாதிரி அவனுடைய மூச்சு பெரிதாக வந்தது. வியர்வை பெருக்கெடுத்தது. மறுபடியும் பையைக் கட்டி அதே இடத்தில் வைத்துவிட்டு திரும்பியபோது அவனுடைய கையிலே எப்படியோ ஒரு பழைய கழித்துவிட்ட நீல ரிப்பன் காணப்பட்டது. அது சரசரவென்று ஒரு சிறு பாம்பைப்போல குளிர்ந்தும், மிருதுவாகவும் இருந்தது. அவளுடைய சருமமும் அப்படித்தான் இருக்கும் என்று அவன் மனம் ஊகித்தது.

அயனம் முடிந்து நாலு நாள் ஆகியும் அவளைக் காணவில்லை; நாய்களையும் தவறவிட்டுவிட்டான். இந்த நாய்கள் ஒரே ஜாதியில், ஒரே வயதுடையவை. இரண்டுமே ஓவல்டின் கலரில் சிறிது சடை வைத்து நீண்ட உடம்புடன் பழுப்பு நிறக் கண்களுடன் இருந்தன. அவற்றின் கழுத்துப் பட்டைகள் பதப்படுத்தப்பட்ட தோலினால் கறுப்பாக செய்யப்பட்டிருந்தன. வேண்டிய தூரம் நீளக்கூடியதும், சுருங்கக் கூடியதுமான தடித்த நைலோன் நாடாவின் நுனியில் அவை பிணைக்கப் பட்டிருந்தன. அதன் அடுத்த நுனி அவள் கையில் இருந்தது. அந்த நாய்கள் ஏற்கனவே பழக்கப்பட்ட சாலையில் துள்ளிக்கொண்டு முன்னால் பாய்ந்தும், ஓடியும், நின்றும், பனித்தரைக்கு மேலாக தொியும் ஒரு சில செடிகளை மோந்து பார்த்தும் விளையாடின.

அந்த சீனப்பெண்ணின் முகம் மஞ்சள் நிறத்தில் இருந்தது. சூரிய ஒளியில் இருந்து பல வருடங்கள் மறைத்து வைக்கப்பட்டதில் கிடைத்த வர்ணம் இது. அவளுடைய கீற்று கண்கள் இயற்கையாகவே பச்சையாக இருந்தன. உதடுகள் ரத்தச் சிவப்பு. இப்படியாக பச்சை, சிவப்பு, மஞ்சள் ஆகிய மூன்று சிக்னல் விளக்கு வர்ணங்களுடனும் இருந்த அவள் அவனுக்கு வேண்டிய சமிக்ஞையை தருவதற்காக காத்திருந்தான்.
அம்மாவுக்கு அனுப்புவதற்காக அவன் சேமித்து வைத்திருந்த காசை ஏற்கனவே எடுத்துவிட்டான். அதிலே குளிரில் இருந்து பாதுகாப்பதற்கு உத்திரவாதமளித்த அந்த புதிய ஓவர்கோட்டை வாங்கியிருந்தான். அதை அணிந்தபோது என்றும் இல்லாதமாதிரி அவனுடைய உடம்பு கதகதப்பு நிலையை அடைந்தது. அவளைக் கண்டதும் ஓவர்கோட்டை தாடைவரை இழுத்துவிட்டு, மூக்கும், கண்களும், வாயும் மாத்திரம் தொியும் விதமாக நின்றுகொண்டு, தற்செயலானதுபோல 'ஹாய் ' என்று சொன்னான். அவளும் பதிலுக்கு போதிய இடைவெளிகூட விடாமல் 'ஹாய் ' என்று திருப்பி கூறினாள். அப்படியே நாய்கள் வேகமாக இழுக்க பென்ஹர் குதிரைகள் ஓட்டிச் சென்றதுபோல நிமிடத்தில் மறைந்துபோனாள். அவள் போனபிறகு அந்த நடைபாதை அநியாயத்துக்கு சும்மா கிடந்ததை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

தீவிரமாக யோசித்துப் பார்த்தான். அவள் சீன மொழியில் நாய்களுடன் பேசியிருக்கலாம் என்றும் பட்டது.
அவனுடைய அம்மாவின் நீல உறைக் கடிதம் அன்றும் பிாிக்கப்படவில்லை. மண்ணெண்ணை விளக்கில் மணிக்கணக்காக குனிந்திருந்து, வயலட் கலர் பென்சிலால் அடிக்கடி நாக்கை தொட்டு, அதை எழுதியிருப்பாள். மாதாமாதம் பயணக் கடன் தீர்க்க அவன் அனுப்பும் காசு அந்த மாதம் கிடைக்கவில்லை என்று புலம்பியிருப்பாள். பக்கத்து வீட்டு பத்மனாபன் பணம் கிரமமாக அனுப்பி அவர்கள் காணியை மீட்டுவிட்டதை புளகாங்கிதத்தோடு அறிவித்திருப்பாள். இப்பவெல்லாம் தென்னையிலிருந்து தேங்காய் விழுவதில்லை; வானத்தில் இருந்து மழை விழுவதில்லை; ஆகாயத்தில் இருந்து குண்டுகள் விழுகின்றன என்றும் எழுதியிருப்பாள்.

கடைசி பாராவில் தன்னுடைய வியாதி பற்றிய குறிப்புகளை குணுக்கி, வியாதி உச்ச நிலையை அடைய கிட்டத்தட்ட எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை ஆதாரங்களோடு விளக்கியிருப்பாள். எந்த விரதம் முடிந்தது, எது ஆரம்பமாகிவிட்டது போன்ற விபரங்களும் ஞாபகமாக குறிக்கப்பட்டிருக்கும்.

வேலைக்கு போகத் தேவையில்லை. விடுமுறை. ஒரு நாள் சம்பளத்தை வெட்டும் சந்தோசம் லோராவுக்கு கிடையாது. பனிப்பிரதேசம் சூரிய ஒளியில் பளீரென்று கண்ணாடி வழியாக தெரிந்தது. அன்று காலையில் இருந்து அதையே பார்த்தவாறு இருந்தான்.

புசுபுசுவென்று சடை வைத்து கொழுத்த கறுப்பு அணில் ஒன்று எங்கிருந்தோ தோன்றியது. பனிக்குள் கால்கள் புதைய புதைய மீட்டுக்கொண்டு விரைந்தது; தொியாத இடத்துக்கு அவசரப்பட்டு வந்துவிட்டது போல திகைத்து இரண்டு கால்களிலும் நின்றது. கண்களில் மிரட்சியுடன் முன்னங்கால்களால் பனியை அகற்றியது. பின் தன் செய்கையின் அசட்டுத்தனத்தை யாராவது கவனிக்கிறார்களோ என்று அங்குமிங்கும் பயத்துடன் பார்த்தது. பிறகு சறுக்கிக்கொண்டு போனது. வெகுதூரத்துக்கு. வெள்ளிப் பனியில் கறுப்பு புள்ளி பாய்ந்து பாய்ந்து மறைந்து போனது.

அந்தக் காட்சி அவனை என்னவோ செய்தது. திடாரென்று அந்த மூன்று கால் கதிரையை தள்ளிவிட்டு எழுந்தான். அவனுடைய பச்சை நிற குளிர் பெட்டியின் மேல் அந்த மூடி திருகிய போத்தல் இருந்தது. அதை முக்கல்வாசி நிறைத்து, அவன் கார் தாிப்பு நிலையத்தில் மஞ்சளும், கறுப்பும் பூசிய தடுப்பு கம்புக்கு கீழே பொறுக்கிய சில்லறைக் காசுகள் கிடந்தன. அவற்றை திறந்து உடனேயே எண்ணிப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

இரண்டு நாள் பழசான தினசரி பேப்பரை தரையிலே விரித்து போத்தல் காசுகளை அதிலே கொட்டினான். கொட்டிவிட்டு அவற்றை வகைப்படுத்தி எண்ணத் தொடங்கினான்.

கனடாவுக்கு வந்த நாளில் இருந்து அவனை அலைக்கழித்த விஷயம் ஒன்றிருந்தது. பத்துசதக்குற்றி சிறிய வெள்ளி வட்டமாக இருக்கும். ஐந்து சதக்குற்றியோ பெரிய வெள்ளி வட்டமாக இருந்தது. இது கனடிய அரசாங்கம் விட்ட பாரதூரமான பிழை என்ற கருத்து அவனுக்கிருந்தது. பெரிய வட்டமான குற்றி சிறிய வட்டத்திலும் பார்க்க உண்மையில் மதிப்பு குறைந்தது என்பதை அவனுடைய மனது ஏற்க சரியாக ஒரு வருடம் பிடித்தது. 25 சதக்குற்றிகள் மிகையாக இருந்தன. மீதி எல்லாம் 10,5,1 சதக் குற்றிகளே. லூனி என்று சொல்லப்படும் ஒரு டொலர்கூட இரண்டு இருந்தன. ரூனி, அதாவது இரண்டு டொலர் குற்றி, ஒன்றும் இருந்தது. ஆறுமாதக் கடும் உழைப்பில் அவனிடம் 48.19 டொலர் சேர்ந்திருந்தது.

மனதினால் ஒரு கணக்கு போட்டுப் பார்த்தான். இன்னும் சரியாக எண்பத்தி மூன்று வருடங்களில் ஒரு ரொயோட்டா கார் இரண்டாம் கையாக வாங்கும் அளவுக்கு அவனிடம் காசு சேர்ந்துவிடும்.
அந்த எண்ணத்தில் அவனுடைய மனது பூரித்தது. இந்த சந்தோசத்தை எப்படியும் கொண்டாடிவிட வேண்டும் என்ற ஆசையேற்பட்டது. நேராக நடந்து பழைய நீல ரிப்பன் பாதி ஒட்டி வைத்திருக்கும் பச்சை குளிர்பெட்டியின் கதவை திறந்தான். அங்கே நடுநாயகமாக அவன் ஒரு விசேட தினத்துக்காக பாதுகாத்துவந்த ஹைனக்கன் பியர் கான் இருந்தது. அதைக் கையிலே எடுத்துக்கொண்டு கதவை சத்தத்துடன் சாத்தினான்.

மூன்று கால்கள் மட்டுமே விசுவாசமாக உழைக்கும் அந்த நாற்காலியில் அவன் சாய்ந்திருந்து, ஆள்காட்டி விரலை வளைத்து பியர் கானைத் திறந்து, அதை ஒரு கிளாஸில் ஊற்றிக் குடிக்கும் பொறுமைகூட இன்றி, வலது கையால் தூக்கி உயரப்பிடித்து வாய்வைத்து இரண்டு கடவாய்களிலும் ஒழுக குடித்தான். அப்பொழுது அவனது இடதுகை 55 வது சானலை தேடியது.

நன்றி - திண்ணை

ஒட்டகம் - அ.முத்துலிங்கம்


சோமாலியாப் பெண்கள் அப்படித்தான். உலகத்தை பிரட்டிப் போட்டாலும் மாறமாட்டார்கள். அவசரமில்லாத நடை. ஒரு காலை ஊன்றி, மறு காலை நிதானமாக வைத்து நடப்பார்கள். 

மைமுனும் அப்படித்தான் நடந்துகொண்டிருந்தாள். கபில நிறம். நீள்வட்ட முகம். உயர்ந்த கழுத்து. ஓட்டகம்போல நடை உரசி உரசி வந்துகொண்டிருந்தாள். 

அவள் மொட்டாக்கு இட்டிருந்தாள். அந்தத் துணி தலையை முற்றிலும் மறைத்து மார்பு வழியாக வந்து முதுகிலே சென்று மறைந்தது. அவள் தலை மயிரைப் பற்றி அறியும் ஆவலையும் அது தூண்டிவிட்டது. 

அவள் முதுகிலே வெறுமையான தண்­ர் குடம் ஒன்று தொங்கியது. காட்டுப் புல்லினாலும் நாரினாலும் இறுக்கிப் பின்னிச் செய்தது. பள்ளிப் பிள்ளைகளைப் போல அவள் அதை முதுகிலே கட்டிக்கொண்டிருந்தாள். அது முதுகோடு ஒட்டிக்கொண்டு அவளுக்கு வழித்துணையாக வந்து கொண்டிருந்தது. 

அவள் எட்டு மைல் தூரம் போய் தண்­ர் பிடித்து வரவேண்டும். போக வர பதினாறு மைல்கள். ஏதோ மேய்ச்சலுக்குப் போவதுபோல நித்திய நியமமாக அவள் அதைச் செய்து கொண்டிருந்தாள். இன்று அவள் வேண்டுமென்றே கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாள். அவள் சிநேகிதிகள் முன்போ போய்விட்டார்கள். 

வழிநெடுக அகாஸ’யா முள் மரங்கள். ஆள் உயர கத்தாளைகள்; உயரமற்ற புதர் மரங்கள். பயந்த சுபாவம் கொண்ட பற்றைகள். மைமுன் தன் பாதையை அந்த வழியில்லாத காட்டில் இலகுவாகக் கண்டுபிடித்து நடந்து கொண்டிருந்தாள். 

வழக்கம்போல் அதிகாலையில் ஹைனாவின் கூவல் அவளை எழுப்பிவிட்டது. 

களிமண்ணினாலும், மெல்லிய மரத்தடிகளினாலும் கட்டிய வீடு அது. புல்லினால் வேய்ந்த கூரை. குளிரைத்தடுக்கும் வல்லமை இல்லாதது. அந்த காலைக் குளிரில் ஒட்டகத்தின் ரோமத்தில் செய்த சௌகரியக் குறைவான பாயில் கண்களை விழிக்காமல் சுருண்டு படுப்பதற்கு அவளுக்கு மிகுந்த ஆசையாக இருக்கும்.

ஆனால் ஹைனா முதலாவது எதிரி என்றால் அவளுடைய தாயார் இரண்டாபது எதிரி. மைமுன் எழும்பும்வரை அவள் தாயார் காயம் பட்ட விலங்குபோல கத்தியபடியே இருப்பாள். இந்த காலை நேரத்து சுகத்தை தினமும் இப்படி கெடுப்பது மைமுனுக்கு மகா கொடூரமாகப் பட்டது. தண்­ருக்காக இந்த அலைச்சல் படவேண்டி இருந்தது. அவள் தாயாருக்குகூட அவள் படும் இம்சை புரியவில்லை. இதில் மைமுனுக்கு நிறைய வருத்தம். 

அவள் தகப்பனர் நூர் அந்த ஊர் குடித்தலைவர், நபதூன். அவரிடம் ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள் என்று எல்லாம் இருந்தன. பொதி சுமப்பதற்கு கழுதைகள் கூட நிறைய இருந்தன. பலபலவென்று விடியுமுன்பாகவே அவையெல்லாம் மேய்ச்சலுக்குப் போய்விடும். ஒரு கழுதையை அனுப்பி தண்­ர் பானைகளை நிரப்பி வந்தால் அவளுக்கு வேலை மிச்சம். அப்படித்தான் சால்மா வீட்டில் செய்கிறார்கள். கழுதைகளை அனுப்பி வைக்கும்படி அவள் தாயார் அடிக்கடி கேட்டுக் கொள்வாள். ஆனால் மைமுனின் தகப்பனார் மிகக் கவனமாக அதை மறந்து விடுவார்.

அவருக்கு இரண்டு மனைவிகள் அவருடைய மேச்சல் வட்டம் ஐம்பது மைல் தூரம் இருக்கும். அந்த எல்லைக்கு மந்தை மேய்ச்சலுக்கு போகும்போது அவர் அங்கேயே இரண்டாவது மன€வியோடு தங்கிவிடுவார். இப்படி வருடத்துக்கு இரண்டு மாதங்களாவது காணாமல் போய்விடுவார்.

மதியம் இரண்டும் மணி ஆகிவிட்டதென்றால் நூர் அகாஸ’யா மரத்தை தேடி வந்துவிடுவார். அங்கே அவருடைய கூட்டாளிகள் காத்திருப்பார்கள். ச்சாட் என்று சொல்லப்படும் போதை இலையை கொடுப்பிலே எல்லோரும் இடுக்கிக் கொள்வார்கள். அந்தச் சாறு தொண்டையிலே இறங்க இறங்க அவர்கள் மேலே மேலே போய் மிதப்பார்கள். 

இந்த நேரத்தில் சோமாலியாவில் எல்ல ஆண்களும் அப்படித்தான் இருப்பார்கள். பின் மதியத்தில் தொடங்கி இரவு படுக்கப்போகும் வரைக்கும் இது தொடரும். உள் சுவாசம், வெளி சுவாசம் என்று விட்டபடி கைகால்களைப் பரப்பி அவர்கள் இந்த போதை சாம்ராஜ்யத்தில் தங்களை மறந்து சஞ்சரிப்பார்கள். 

ஐ.நா.சிறகம் இப்படித்தான் ஒரு சாயங்கால வேளையில் அவர்களிடம் வந்தது. நூரும் ஊர் மூப்பர்களும் அப்போது ச்சாட் போதையில் இருந்தார்கள். ஐ.நா. ஊழியர்கள் ஒவ்வொரு கிராமமாக வந்து அவர்கள் தேவைகளை விசாரித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் ஆழ்கிணறு தோண்டித் தரும்படி வேண்டினர். சிலர் வாய்க்கால் கேட்டனர். சிலர் பம்புசெட் என்றார்கள். இவர்களுடைய முறை வந்தது. பெண்கள் ஆழ்கிணறு வேண்டுமென்று கெஞ்சினர். ஆனால் ஊர்ப்பெரியவர்கள் கூடி மசூதி ஒன்று கட்டித் தரும்படி கேட்டார்கள். அவ்வளவு பணவசதி இந்தக் கிராமத்து கக ஒதுக்கப்படவில்லை. 'நீ மசூதியை கட்டித்தா, மீதியை அல்லா பார்த்துக்கொள்வார்' என்று ஊர் மக்கள் சார்பாக நூர் அடித்துச் சொல்லிவிட்டார். வாழ்க்கையில் அவர் செய்த மிகச் சிறந்த பிழை இதுதான். 

அந்த ஊழியர்கள் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து இவர்கள் சொல்வதை ஏற்பார்கள் என்று நினைத்தார். அவர்கள் என்றால் பக்கத்து கிராமத்துக்கு போய்விட்டார்கள். அங்கே தூர்ந்து கிடந்த கிணற்றை பழுதுபார்த்து இன்னும் ஆழமாக்கினார்கள். வருடம் முழுவதும் நீர் சுரக்கிறது. தினம் தினம் எட்டு மைல் தூரம் அவள் தண்­ருக்காக அங்கேதான் போகிறாள்.

சூரியன் மேலே மேலே வந்துகொண்டிருந்தான். மைமுன் தனக்குத் தெரிந்த ஒரு குறுக்குப் பாதையில் இறங்கினார்கள். அங்கே பார்த்த இடமெல்லாம் ச்சாட் பயிரிட்டிருந்தார்கள். வேப்பம் செடிகள் போல அவை கூர்மையாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருந்தன. ஆடுகள் மேயாமலிருக்க முள்வேலி போட்டிருந்தார்கள். ஆடுகள் மேய்ந்தால் அவைவேறு போதையில் துள்ளித் திரிந்து கலகம் விளைவிக்கும். 

வழியிலே ஒட்டகம் ஒன்று முன்னம் கால்கள் இரண்டையும் மடித்து, தொழுகையில் இருப்பதுபோல படுத்திருந்தது உணவும், உடையும், உறைவிடமும் தருவது. அதனுடைய கழுத்து ஆடாமல் அசையாமல் மிதந்துகொண்டு நின்றது. அண்ணாந்து பார்த்தாள். நதி நகர்வதுபோல கண்ணுக்குத் தெரியாமல் ஒரு உருண்டை அதனுடைய கழுத்தில் மேலே ஏறிக்கொண்டிருந்தது. பெண் ஒட்டகம். இடது செவியின் நுனி வெட்டப்பட்டு இருந்தது. அதற்கு முன் நின்று மரியாதை செய்ய வேண்டும் போல தோன்றியது. அப்படியே நின்று செய்தாள். 

அந்த மரத்தை கடக்கும்போது அவளுடைய இதயம் கொஞ்சம் வேகமாக அடித்துக்கொள்ளும். அது ஒரு குர்ராமரம். பெரிய நிழல் தரும் மரம். ஒட்டகத்தின் தடித்த உதடுகளக்கு எட்டாத உயரத்தில் அது படர்ந்திருந்தது. கனகாலமாக இந்த இடத்தில் ஒரு தாயின் எலும்புக் கூடும், ஒரு குழந்தையின் எலும்புக்கூடும் கிடந்தன. தாயின் எலும்புக்கூட்டை இப்பொழுதெல்லாம் காணவில்லை. பிள்ளையின் எலும்புக்கூடு மாத்திரம் எஞ்சிக் கிடந்தது. 

இந்த எலும்புக் கூடுகளின் கதை ஊரில் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. நாலு வருடத்திற்கு முன்பு மழை இல்லை; பயங்கரமான வறட்சி. தண்­ர் நிலைகள் எல்லாம் வற்றிவிட்டன. இந்தத் தாயும் கைக்குழந்தையும் குடிக்கத் தண்­ர் தேடி அலைந்தார்கள். பத்து மைலுக்கப்பால் ஒரு ஆழ் கிணறு இருந்தது. அதிலே தண்­ர் கிடைக்கலாம் என்று அவ்வளவு தூரம் நடந்து வந்தார்கள். அங்கே வந்து பார்த்தால் அதிலேயும் தண்­ர் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் வந்த வழியே திரும்பினார்கள். மேலிட்டு இந்த குர்ரா மரத்தின் நிழலில் தங்கினார்கள். 

யார் முதலில் இறந்தது என்று தெரியவில்லை. முதலில் குழந்தை போயிருக்கலாம். அழுது அழுது தாய் பிறகு உயிரைவிட்டிருப்பாள். ஒருவேளை தாய் முதலில் இறந்து பிறகு பிள்ளை செத்திருக்கலாம். அந்தக் குழந்தை தாயைப் பிடித்து இழுத்து, இழுத்து அழுது களைத்துப்போய் இறந்திருக்கலாம். 

மைமுன் கிட்டவந்து அந்தக் குழந்தையின் எலும்புக் கூட்டைப் பார்த்தாள். பெண் குழந்தையா, ஆண் குழந்தையா என்று தெரியவில்லை. உள்ளங்கையில் அடங்கும் அந்தச் சிறிய மண்டை ஓட்டில் ஒரு சிறிய துணி ஒட்டிக்கொண்டு இருந்தது. அது பூப்போட்ட துணிபோல தெரிந்தது. அது பெண்குழந்தையாக இருக்கலாம் என்று ஊகித்துக் கொண்டாள். 

இப்ப சில நாட்களாக அவளுக்கு தனிமை தேவைப்பட்டது. அதுதான் அமீனாவை முன்னாலே போகவிட்டு இவள் பின்னாலே வந்துகொண்டிருந்தாள். தனிமையில் சிந்திப்பதற்கு அவளிடம் நிறைய சங்கதிகள் இருந்தன. இந்த யோசனையில் பெரும் இடத்தை அலிசாலா பிடித்துக் கொண்டிருந்தான். அவனுடைய முகம் அவளுக்கு அடிக்கடி தோன்றியது. பதினைந்து வயதுப் பிராயத்தவளுக்கு இது புதுமையாக இருந்தது. 

மைமுன் என்றால் வசப்படுத்தியவள் என்று அர்த்தம். இப்படி அவள் தன் எதிர்காலத்தை வசப்படுத்தும் எண்ணத்தில் தனிமையில் நடந்து கொண்டிருந்தாள். அதேநேரத்தில் மைமுனின் தகப்பனார் அவளுடைய த€லைவிதியை நிர்ணயிக்கும் ஒரு காரியத்தில் இறங்கியிருநதார். அது அவளுக்கு தெரியாது. 

பளபளவென்று மின்னும் நாள் அது. தூரத்திலே ஒரு ஒட்டகக் கூட்டம். அவன் வந்து கொண்டிருந்தான். வெள்ளையாக ஈமாத் துணியில் ஒரு தலைப்பா. கையிலே ஒட்டகக்குச்சி. ஒட்டகக் கயிற்றை முன் எடுத்து தோள்பட்டையில் மாட்டிக் கொண்டிருந்தான். ஒட்டகத்துக்கு முன்பு மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். ஒட்டகத்தின் நீண்ட கழுத்தும் அந்தத் தலையும் மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தது. அந்தக் காட்சி மிகவும் அழகாக இருந்தது.

சோமாலியாவில் மனிதர்களைப் பார்க்கிலும் ஒட்டக எண்ணிக்கை அதிகம். பொதி சுமப்பதற்குதான் ஒட்டகம். அதன் பின்னே செல்வார்கள்; அல்லது முன்னே போவார்கள். பயணம் செய்வது என்பது கிடையாது. அலிசாலாவும் அப்படித்தான் அதன் முன்னே மிக்க மரியாதையுடன் நடந்து வந்துகொண்டிருந்தான். 

அவனுடைய முகம் தெரிந்தது. தயக்கமான கண்கள்; இன்னும் தயக்கமான தாடியும், மீசையும் முளைப்பதா, வேண்டாமா என்ற தயக்கம். எதையோ சொல்ல விரும்புவது போன்ற முகம். ஒல்லியாக இருந்தாள். அவன் அருகில் வந்ததும் இவள் நடப்பதை நிறுத்திவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இருதயம் ஓர் அலகு வேகம் கூடியது. 

அது விவகாரமான ஒட்டகம். அவர்கள் சம்பாஷனையில் குறுக்கிடாமல் நின்றது. ஒரு நூறு வருடங்கள் அப்படியே நிற்கப்போவது போன்ற ஆயத்தங்களுடன் கால்களை அகட்டி வைத்து கழுத்தை உயர்த்தி நின்றது. 

'அஸ்ஸலாம் அலைக்கும்.'

'அலைக்கும் ஸலாம்.'

'சமாதானம் உண்டாகட்டும்'

'சமாதானம் உண்டாகட்டும்.'

'நான் உன்னைப் பார்க்கிறேன்'

'நான் உன்னைப் பார்க்கிறேன்'

'புதினங்கள் உண்டா?'

'புதினங்கள் அநேகம்'

'இன்று தாமதமாக வந்துவிட்டாயே!'

'அதற்கு நான் என்ன செய்ய; சூரியன் தாமதமாக அல்லவோ இன்று எழுந்திருந்தான், கவனிக்கவில்லையா?'

'உண்மைதான், சூரியனும் சோம்பலாகிக்கொண்டு வருகிறான் உன்னைப்போல'

நான் ஒன்றும் சோம்பலில்லை பார், எவ்வளவு தூரம் போய் வருகிறேன். ஒரு ஹான் தண்­ர் சுமக்கிறேன். உன்னைப்போல ஒட்டகத்துக்கு முன்னே கைவீசிக்கொண்டு நடக்கிறேனா?'

முகம் பார்த்து பதில் சொன்னாள். வலது கையை இடது இடுப்பில் வைத்து ஒரு காலில் சரிந்து நின்றாள். மற்றக்கை மொட்டாக்கு துணியை நளினமாக பிடித்தபடி இருந்தது.

அப்பொழுது அவள் மந்தையில் எதையோ பார்த்து அருண்டாள். அவள் கண்களில் ஒரு புதுவிதமான இரக்கம் தெரிந்தது. 

'மறுபடியும் அந்த ஒட்டகக் குட்டியை கட்டிப்போட்டு விட்டாயே!'

அந்த மந்தையிலே ஒரு சின்ன ஒட்டகம். அடிக்கடி மந்தையை விட்டு ஓடிவிடும். அதன் முன்னங்கால்களை இணைத்து இடைவெளி விட்டு ஒரு கட்டு. அந்தக்குட்டி கால்களை தடக் தடக் என்று சிரமத்துடன் எடுத்து வைத்து மந்தையுடன் சேர்ந்து கொண்டிருந்தது. 

'நான் என்ன செய்ய. அது பொல்லாத குட்டி எப்பவும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதைப் பார்ப்பதற்கு எனக்கு நேரம் போதாது. இன்னொரு ஆள் தேவை நீ வந்துவிடு.'

'அதைப் பிறகு பார்க்கலாம். இப்ப அவிழ்த்து விடு.'

அவள் குரல் சிணுங்கலாகவும் இருந்தது; அதிகாரமாகவும் இருந்தது. அலிசாலாவின் மனது இளகிவிட்டது. உனக்காக செய்கிறேன் என்று சைகையால் காட்டியபடி அதன் கால்களை அவிழ்த்து விட்டான். அந்தக் குட்டி கால்களை உதறி துள்ளி தன் சந்தோஷத்தைக் காட்டிக்கொண்டது. 

அவள் அறியாச் சிறுமியாய் இருந்த காலத்தில் ஒட்டகக் கூட்டத்தோடு திரிவாள். பொதி ஏற்றும்போது அவர்கள் பாடுவார்கள். ஒவ்வொரு பொதிக்கும் ஒவ்வொரு பாட்டு. ஒட்டகத்தை ஏமாற்றும் பாட்டு சிறுமிகளின் பாட்டு. 

ஒட்டகமே ஒட்டகமே
என் ஆசை ஒட்டகமே
இந்த விறகுகட்டை மாத்திரம் சுமந்து வருவாயா
உனக்கு நிறைய புல்லுக்கட்டு தருவேன். 

ஒட்டகமே ஒட்டகமே 
என் ஆசை ஒட்டகமே
என் படுக்கைகளை மாத்திரம் சுமந்து வருவாயா
உனக்கு முதுக தேய்த்து விடுவேன். 

ஒட்டகமே ஒட்டகமே 
என் ஆசை ஒட்டகமே
என் ராசகுமாரனை மாத்திரம் சுமந்த வருவாயா
உனக்கு கட்டி முத்தம் கொடுப்பேன். 

இந்தக் காட்சி வரிகள் அவளாகவே சேர்த்துக் கொண்டது. அடிக்கடி அவள் இந்தப் பாடலை பாடுவாள். தனிமையில் இருக்கம்போது கடைசி வரிகளை உரத்து சொல்லுவாள். அது அவள் காதுகளுக்கு கேட்க இனிமையாக இருக்கும். 

அலிசாலா வேறு பிரிவைச் சேர்ந்தவன். அவன் வந்து பெண் கேட்டால் அவள் தகப்பனார் நிச்சயமாக சம்மதிப்பார். வேறு பிரிவில் பெண் எடுப்பது அவர்கள் வழக்கம். அந்த இனம் பகமையை விடுத்து சிநேகமாகிவிடும் என்ற நம்பிக்கை. இவனுடைய பெயர் வீட்டிலே அடிக்கடி பேசப்படுகிறது. இவர்கள் 'பறவை தின்னிகள்' என்ற ஒரு குறை மாத்திரம் இருந்தது. இருபது ஒட்டகங்கள் சீர்கொண்டு அலிசாலா வருவதில் சிரமம் இருக்காது என்று எதிர்பார்த்தார்கள். 

கிணற்றடியில் ஒரே பெண்கள் கூட்டம். பச்சைப் பசேல் என்று மரங்கள். பார்ப்பதற்கு கவனப் பூங்கா போன்று குளுமையாக இருந்தது. கிணற்று கட்டிலே அமீனா சாய்ந்தபடி காணப்பட்டாள். தொடையிலே ஒரு கை தொட்டுக்கொண்டு இருந்தது. மற்றக்காலை ஒய்யாரமாக விசிறியபடி இருந்தாள். 

மைமுன் முக்காட்டை எடுத்து விட்டாள். அவளுடைய சிகை வசீகரத் தண்மையுடன் இருந்தது. கைகளை விட்டு அவற்றைக் கலைத்து காற்றை வெளியே விட்டாள். தண்­ரை முகத்தில் அடித்து ஆசை தீர பருகிக்கொண்டாள். அவள் கண்கள் பிரகாசமாகின. 

இரு சிநேகிதிகளும் முகத்தை திருப்பிக் கொண்டார்கள். ஒன்றுமே பேசவில்லை. தண்­ர் குடத்தை எடுத்து முதுகிலே மாட்டுவதற்கு மட்டும் அமீனா உதவி செய்தாள். இருவரும் புறப்பட்டார்கள். குடத்திலிருந்து தண்­ர் கொஞ்சமும் கசிவது போல மைமுனுக்கு பட்டது. அடுத்த நாள் மறக்காமல் பானைக்கு அலஸ” மரத்து பிசின் தடவவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். 

வறுமையில் வாடிய இரண்டு தங்க நரிகள் நிலத்தை மணந்தபடி அவர்களைத் தாண்டி ஓடின. ஒரு மஞ்சள் குருவி 'உய்க், உய்க்' என்று சத்தம் செய்தது. மைமுனுக்கு திடீரென்று சிறுநீர் கழிப்பதற்கு பேரவா பிறந்தது. நெளிந்தபடி அமீனாவை ஒரு அரைக்கண் பார்வை பார்த்தாள். அவளும் மைமுனின் உடல் மொழியை புரிந்துகொண்டு தலையை அசைத்தாள். 

தண்­ர் பானையை மெதுவாக இறக்கி வைத்தார்கள். இரண்டு கற்களை எடுத்து உரசி சத்தம் செய்தபடியே பற்றை மறைவில் ஒதுங்கினார்கள். மைமுன் காலை அகட்டி குந்திய சிறிது நேரத்திலே ஒருவித உற்சாகத்துடன் நீர் பிரிந்தது. பாம்பு சீறுவது போன்ற சத்தத்துடன் அது நிலத்தை அடைந்தது. மைமுனுக்கு பெரும் சுமை ஒன்று இறங்கிய சுகம். அந்த நேரத்தில் அலிசாலாவின் நிச்சயமற்ற கண்கள் நினைவுக்கு வந்தன அவனைத் தீவிரமாக காதலிக்கலாமா என்ற எண்ணம் அவளுக்கு மறுபடியும் தோன்றி மறைந்தது. 

'உன்னுடைய ஆள் அங்கே சுற்றிக்கொண்டு இருந்தானே', இப்படிச் சொல்லி அமீனா அவர்களுக்கிடையே இறுகிப் போன காற்றை மெல்ல உடைத்தாள். பிறகு சிநேகிதிகள் இருவரும் கலகலவென்று பேசத்தொடங்கினார்கள். அவர்கள் அந்நியோன்யம் தானாகவே பற்றிக்கொண்டது. அமீனா அவளுடைய வழக்கமான புலம்பலைத் தொடங்கினாள். 

'இவனை நம்பி இராதே. இவன் உனக்கு மஹர் கொண்டு வரப்போவதில்லை. வேறு ஆளைப் பார். இவன் பெண்கேட்டு வரும்போது உனக்கு நாற்பது வயது தாண்டி விடும். அதற்குப் பிறகு உனக்கு எப்படி பிள்ளை பிறக்கப் போகிறது.'

'பிள்ளை கிடக்கட்டும். ஒரு நாளைப்போல் ஒட்டகம் செய்யாத வேலையெல்லாம் செய்கிறேன். என்னைப்போய் சோம்பல் என்று சொல்கிறானே.

மைமுனுடைய தாயார் இருபது வருடங்களில் பதினொரு பிள்ளைகளை பெற்றவள். ஒட்டகங்களில் கூட பத்து பத்து குட்டிகள் ஈன்றதும் அவற்றின் இடது காது நுனியை அடையாளமாக வெட்டி விடுவார்கள். அந்த ஒட்டகம் அதற்குப் பிறகு இளைப்பாற அனுமதிக்கப்படும். அந்தச் சலுகை கூட பெண்களுக்கு இல்லை. அவர்கள் சாகுமட்டும் பெற்றுக்கொண்டே இருக்கவேண்டும். 

மைமுன் உதடுகளை விரிக்காமல் கறுப்பு புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.

'அமீனா, என் இனிய சிநேகிதியே! நான் என்ன செய்யப்போகிறேன் என்று உனக்கத் தெரியுமா? என்னை அவ்வளவு சுலபத்தில் அடிமைப்படுத்த முடியாது', இப்படிச் சொல்லிக் கொண்டே அவள் அருகில் வந்து அமீனாவின் காதுகளில் ஏதோ ரகஸ்யம் சொன்னாள். இருவரும் ஒரு சதியாலோசனையை முடித்த திருப்தியோடு விழுந்து விழுந்து சிரித்தார்கள். கண்ணில் நீர் பொங்க சிரித்தார்கள். தண்­ர் குடம் குலுங்கச் சிரித்தார்கள். வீடு வரும்வரை இப்படிச் சிரித்துக் கொண்டே வந்தார்கள். 

வீட்டிலே இன்னும் நிறைய வேலைகள். தண்­ர் குடத்தை இறக்கி வைத்தாள். அவளுடைய தாயார் வழக்கம் போல சந்தைக்கு போய்விட்டாள். காட்டிலே போய் விறகு பொறுக்கி இரவுச் சமையல் செய்யவேண்டும். பிறகு மீதமிருக்கும் ஒட்டகப் பாலை சந்தைக்கு எடுத்துப்போகவேண்டும். 

இரவுச் சமையலை விரைவாக முடித்தாள். பாலிலே உதிர்ந்த சோளத்தைப் போட்டு காய்ச்சினாள். நம்பிக்கை ஊட்டும் நறுமணத்துடன் அது பொங்கியது.

சுரைக்குடுவையை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். ஒட்டகம் அவளுக்காக பொறுமையுடன் நின்று கொண்டிருந்தது. இடது காலில் நின்று வலது காலை மடித்து முழங்காலில் ஊன்றிக்கொண்டாள். உறுதியான வடிவம் கொண்ட வலது தொடைக்கும் மெலிந்த வயிற்றுக்கும் இடையில் குடுவையை வைத்தாள். அது அங்கே கச்சிதமாகப் பொருந்தி நின்றது. பாலைக் கறக்கத் தொடங்கினாள். சரி கணக்காக அது குடுவையை போய் ஒரு வித கதகதப்புடன் நிறைத்தது. முழங்கையை நக்கியபடி குடுவையை எடுத்துக் கொண்டு சந்தைக்கு விரைந்தாள். 

ஊரடங்கி நிசப்தமானபோது அவள் படுக்கச் சென்றாள். அடுத்தநாள் அதிகாலையை நினைக்கும்போது அவளுக்கு பயமாக இருந்தது. இந்த ஹைனாவும் அவளுடைய அம்மாவும் அவளுக்கு விரோதம் செய்கிறார்கள். விடியுமுன்பாகவே அவளை எழுப்பிவிடுவார்கள். ஆசை தீர நித்திரை கொள்ளும் சுகம் எப்படி இருக்கும் என்று அவளுக்கு தெரியாது. அந்த அதிகாலை நித்திரைக்காக அவள் எதுவும் செய்யத் தயாராயிருந்தாள். இந்த சிந்தனைகளுக்கிடையில் அவள் இமைகள் ஒன்றையொன்று தீண்டின. 

அடுத்த நாள் அவளுடைய விடியற்கால அவலங்கள் ஒரு முடிவுக்கு வந்தன. 

ஹைனாவின் தொந்திரவு இல்லை. அம்மாவும் மௌனமாகி விட்டாள். தூரத்தில் மேய்ப்பர்களின் மேய்ச்சல் ஓசைகள் மாத்திரம் கேட்டன. இவ்வளவு அழகான விடியலை அவள் கண்டதில்லை. 

பக்கத்து ஊரில் இருந்து பெருங்கூட்டம் ஒன்று வந்திருந்தது. பலபலவென்று விடியும்போதே வந்துவிட்டது. நூரும் ஊர்ப் பெரியவர்களும் கிராமத்து எல்லையிலே நின்று அவர்களை வரவேற்றார்கள். அவர்கள் வழக்கப்படி வேரோடு பிடுங்கிய சோளப் பயிர்களை கைகளிலே தூக்கி அசைத்து அசைத்து அவர்களை அழைத்துக்கொண்டு வந்தார்கள். ஒரு சைன்யம் திரண்டு வருவதுபோல அது இருந்தது. 

மைமுனைப் பெண்கேட்டு வந்திருந்தது. அந்தக் கூட்டம் ஒருநாள் பயணத் தொலைவில் இருந்து வந்திருந்தார்கள். அந்த ஊர் நபதூன் அவர். ஐம்பது வயதுக்காரர். மூன்றாம் தாரமான மைமுனை மணக்கச் சம்மதம் தெரிவித்திருந்தார். ஐம்பது ஒட்டகங்களை சீர் கொடுப்பதாக பேசிக் கொண்டார்கள். ஊர் முழுக்க இந்த அதிசயத்தை பார்க்க திரண்டு வந்திருந்தது. 

மைமுனின் தாயார் தட்டையாக மறுத்துவிட்டாள். இவ்வளவு தூரத்தில் மகளைக் கட்டிக்கொடுத்தால் பின்பு அவளைப் பார்ப்பது என்பது நடக்காத காரியம். அலிசாலா பெண்கேட்டு வருவான் என்று எதிர்பார்த்தாள். மைமுன் அவனிலே எத்தனை ஆசை வைத்திருந்தாள் என்பது அவளுக்கு தெரியும்.

நூர் அப்போது ச்சாட் போதையில் இல்லை. இறையச்சம் உடையவர். ஆதலால் மறு வாசிப்பில் ஐம்பது ஒட்டகங்களுக்காக மகளை விற்பதா என்று தயங்கினார். தாயும் தகப்பனுமாக மகளிடம் வந்தார்கள். சிக்கல் இல்லாத சொற்களை தெரிவு செய்து அவளிடம் யோசனை கேட்டார்கள். எப்பவும் மைமுனிடம் அதிசயிக்க வைக்கும் சில நிமிடங்கள் கைவசம் இருக்கும். அவள் தயங்காமல் சம்மதம் தெரிவித்துவிட்டாள். பிடிவாதமாகக் கூட இருந்தாள். அவர்களுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. 

நிக்காஸ் முடிந்த கையோடு மைமுன் தன் கணவன் வீட்டுக்க புறப்பாட்டாள். அவர்கள் கொண்டு வந்திருந்த ஒட்டகங்களும், கழுதைகளும் பயணத்திற்கு தயாராக இருந்தன. 

அந்தச் சமயம் பார்த்து அவளுடைய பிராண சிநேகிதி அமீனா வந்து சேர்ந்தாள். அவள் காதுகளில் மைமுன் ரகஸ்யம் பேசிவிட்டு வீடு வந்து சேரும் வரை சிரித்தது ஞாபகத்துக்கு வந்தது. 'இவள் உண்மையாக அல்லவோ சொல்லியிருக்கிறாள்., பாவி' என்று அமீனா நினைத்துக் கொண்டாள்.

'நான் ஒரு ஐம்பது வயதுக் கிழவனை மணக்கப் போகிறேன். அவனுக்கு மூன்றாவது மனைவியாக அவன் ச்சாட் சாப்பிடுபவனாக இருக்கவேண்டும். அந்த மயக்கத்தில் அவன் என்னை அதிகம் அணுகமாட்டான். மிஞ்சிப் போனால் இரண்டு குழந்தைகளுடன் தப்பி விடுவேன்.' இப்படிச் சொல்லிவிட்டு அவள் ஓவென்று சிரித்தாள். பரிகாசம் என்றுதான் முதலில் அமீனா நினைத்திருந்தாள். அப்படியில்லை. இவள் உண்மையாகத்தான் கூறியிருக்கிறாள். 

அமீனாவுக்கு சொல்லாத இன்னொரு காரணமும் இருந்தது. அதுவும் சீக்கிரத்திலேயே அவளுக்கு தெரியவரும். 

புறப்படும் சமயம். திடீரென்று மைமுன் அழத் தொடங்கினாள். காரணம் தெரியவில்லை. 'ஹுயா, 'ஹுயா' என்று அழைத்து தாயாரைக் கட்டிக்கொண்டு விக்கி விக்கி அழுதாள். 

'அடி, பாவிப்பெண்ணே! எதற்காக இப்படி அழுகிறாய். சொல்லித் தொலை. உன் விருப்பப்படித்தானே ஒது முழு நாள் பிரயாண தூரத்தில் இருக்கும் இந்தச் சின்ன ஊரில் உன்னக் கட்டிக்கொடுக்கச் சம்மதித்தோம். நீ இங்கே ராசாத்தி மாதிரி இருந்திருக்கலாமே! பாதகத்தி, இப்ப போய் அழுகிறாயே!'

மைமுனால் அப்பவும் அழுகையை அடக்க முடியவில்லை. மாலை மாலையாகக் கண்­ர் வழிந்தது. விம்மியபடியே சொன்னாள். 

'உண்மையான காரணத்தைச் சொல்லட்டுமா, ஹூயா'.

'கூறுகெட்டவளே, சொல்லடி, இப்பிடி குயை கெடுத்துவிட்டாயே!'

'ஹுயா, அந்த ஊரில் தண்­ர் கொட்டி கொட்டி வருமாம். வருடம் முழுக்க வற்றாதாம். தினம் தினம் பதினாறு மைல் தூரம் நடக்கத் தேவையில்லை.'

இதைச் சொல்லிவிட்டு மைமுன் தன் தாயின் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள். பார்த்துவிட்டு இன்னொருமுறை அழத்தொடங்கினாள். 

(இந்தக் காட்சி இங்கே முடிந்துவிட்டது) 

* * * 

மைமுனின் தகப்பனாருக்கு முதலில் கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனாலும் தேற்றிக்கொண்டார். ஒரு நாள் பயணம்தானே, மகளை அடிக்கடி பார்க்கலம் என்று நினைத்தார். ஆனால் அப்போது அவருக்கு தெரியவில்லை. அதுதான் அவளைப் பார்ப்பது கடைசித் தடவை என்று. 

விரைவில் அவரது மனைவி இறந்துபோவாள். ச்சாட் போதையில் உடல்நிலை கெட்டு மனம் குலைந்து எஞ்சியிருக்கம் நாட்களை அவர் மற்றவர்கள் தயவில் கழிக்க நேரிடும். அந்த நேரங்களில் எல்லாம் அவர் மைமுனின் சிந்தனையாகவே இருப்பார். 

ஒருவரும் பார்க்கவில்லை என்ற அந்தரங்கமான சமயத்தில் அவள் அகாஸ’யா மரத்தின் கீழ் கல்லிலே குந்தியிருந்தது ஞாபகத்துக்கு வரும். ஓர் உடைந்துபோன கண்ணாடித் துண்டில் முகத்தைப் பார்த்து தலையை வாரியதையும், அவளாகவே இட்டுக்கட்டிய குழந்தைகள் பாட்டை அவள் குரல் மெல்லியதாக முணுமுணுத்ததும் நினைவுக்கு வரும்.

ஒட்டகமே ஒட்டகமே
என் ஆசை ஒட்டகமே
என் ராசகுமாரனை மாத்திரம் சுமந்து வருவாயா
உனககு கட்டி முத்தம் கொடுப்பேன். 

அலிசாலாவில் அவள் எவ்வளவு காதல் வைத்திருந்திருப்பாள். அவ்வளவையும் ஒரு கணத்தில் தூக்கி எறிந்து விட்டாளே. அதிகாலையில் தண்­ருக்கு போய் வருவதை அவள் எவ்வளவு தூரம் வெறுத்திருக்க வேண்டும். 

ஒருவேளை ஐ.நா. சிறகம் கேட்டபோது கிணறு வேண்டும் என்று கூறியிருந்தால் மைமுன் அலிசாலாவை மணமுடித்து அவருடைய ஊரிலேயே தங்கி இருந்திருக்கக் கூடும் வெகுகாலத்திற்கு பிறகு அவர் மனதில் இந்தச் சிந்தனைகள் எல்லாம் திருப்பி திருப்பி ஓடும். 

ஆனால் அப்போது அவருக்கு அது தெரியவில்லை. 

- முற்றும் -

நன்றி - நூலகம்