‏إظهار الرسائل ذات التسميات உ.வே.சாமிநாதையர். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات உ.வே.சாமிநாதையர். إظهار كافة الرسائل

செண்டலங்காரர் - உ.வே.சாமிநாதய்யர்

வில்லிபுத்தூரார் பாரதம் தமிழிலே சுவையுடையவர்களுக்கு இனிமை தரும் காவியங்களில் ஒன்று. சங்ககாலத்திலே பாரதம் ஒன்று இருந்தது. ஆனால், உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப் பெற்றமையின் சில செய்யுட்கள் மாத்திரம் இப்போது உயிர்தரித்து நிற்கின்றன. அதற்குப் பிறகு தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்தில் இயற்றப்பெற்ற பாரதம் ஒன்று உண்டு. அது முற்றும் கிடைக்கவில்லை. அதைப் படித்து இன்புறுவார் அரியர். பிற்காலத்தில் வில்லிபுத்தூரார் இயற்றிய பாரதம் தமிழர்களுடைய உள்ளத்தைக் கவர்ந்ததுபோல வேறு எந்தப் பாரதமும் கவரவில்லை. இப்பொழுதும் தமிழ்நாட்டுக் கிராமங்களிலே தமிழறிந்தோர் வில்லிபாரதப் பிரசங்கம் செய்வதைக் காணலாம். தமிழ்நூலை முறையாகப் பாடங்கேட்பவர்கள் வில்லிபாரதத்தைத் தவறாமற் கேட்பது வழக்கம்.

நான் இளமையிலே அந்நூலைப் படித்தகாலத்தில் அதிலுள்ள சந்த அமைப்பைக் கண்டு வியந்தேன். அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் உள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன. குதிரையின் கதியொலியும் தேரின் கடகடவோசையும் யானையின் முழக்கமும் அந்தச் சந்தங்களிலே இலிக்கும். வடமொழிச்சொற்களையும் தொடர்களையும் வில்லிபுத்தூரார் தடையின்றி மிகுதியாக எடுத்து ஆளுகின்றார்.


சபாபருவத்திலே சூதுபோர்ச் சருக்கத்தில் தரும புத்திரர் சகுனியுடன் சூதாடித் தோற்ற வரலாறு சொல்லப்படுகிறது. சூதாட்டம் முடிந்தபிறகு துரியோதனன் அரசவைக்குத் திரௌபதியை அழைத்து வரும்வண்ணம் தன தம்பி துச்சாதனனுக்குக் கட்டளையிடுகிறான். காந்தாரியோடு இருந்த திரௌபதியை அவன் வலியப் பிடித்து இழுத்து வருகின்றான்.


"தண்டார் விடலை தாயுரைப்பத்

      தாய்முன் னணுகித் தாமாரைக்கைச்

செண்டால் அவள்பைங் குழல்பற்றித்

      தீண்டா னாகிச் செல்கின்றான்

வண்டார் குழலு முடன்குலைய

      மானங் குலைய மனங்குலையக்

கொண்டா ரிருப்ப ரென்றுநெறிக்

      கொண்டா ளந்தோ கொடியாளே"


என்ற செய்யுளில், அவன் திரௌபதியைப் பற்றி இழுத்துச் செல்லும் செய்தி கூறப்படுகின்றது. தன்னுடைய தாயாகிய காந்தாரி, 'நீ போய் வா' என்று கூற, துச்சாதனன் அன்னை போன்ற திரௌபதியின் முன் சென்று தன் கையிலுள்ள செண்டால் அவளது கூந்தலை பற்றிச் செல்லலானான். கொடிபோன்ற திரௌபதி அந்தோ! தன் குழல் குலைய மானங்குலைய மனங்குலையத் தான் செல்லுமிடத்தே தன் கணவர் இருப்பர் என்ற தைரியத்தோடு சென்றாள் என்பது இச்செய்யுளின் பொருள்.


திரௌபதி அக்காலத்தில் தீண்டாத நிலையில் இருந்தாளென்று தெரிகின்றது. பின்னே ஓரிடத்தில், "தீண்டாத கற்புடைய செழுந்திருவை" என்று அந்நூலாசிரியரே குறிப்பிக்கின்றார். அதனால் தான் துச்சாதனன் அவளைக் கையாற் பற்றாமல் செண்டாற் பற்றிச் சென்றானென்று ஆசிரியர் கூறினார். இவ்விஷயங்களை யான் பலரிடத்தில் என் இளமையிலே கேட்டிருக்கிறேன்.


'கைச் செண்டால் அவள்பைங் குழல்பற்றி' என்ற இடத்தில் குறிக்கப்பெற்ற செண்டு என்பதற்குப் பூச்செண்டு என்றே பொருள் செய்து வந்தனர். 'துச்சாதனன் கையில் பூச்செண்டு ஏது?

அறிஞர் வ.த.சுப்பிரமணிய பிள்ளை - ரெங்கையா முருகன்


வ.த.சுப்பிரமணிய பிள்ளை 1871-ம் ஆண்டு மஞ்சக்குப்பம் வழக்காடு மன்றத்தில் மாவட்ட முன்சீப்பாகப் பணிபுரிந்த காலம் அது. சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தமான வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த வழக்கில் சாட்சிக் கூண்டில் நின்ற தீட்சிதர்கள் தங்களுடைய வாதத்தில் கோவில் உரிமை தீட்சிதர்களாகிய எங்களுக்கே என்று பொருள் தரக் கூடிய திருப்புகழ் பாடலை மேற்கோள் காட்டி வாதாடினர். அப்பாடலின் வரி;

“தாது மலர் முடியிலே வேத நன்முறை
வாளுவமே தினம் வேள்வி யாலிலில்
புனை மூவாயீர வேட்டியர் மிகவே பூசனை புரிகோவே

(கடவுளே வேத முறைகளில் கண்டிப்பாக இருந்தபடி பல்வேறு தியாகங்கள் செய்த மூவாயிரவர் என்ற பெருமை பெற்ற அந்தணர்களால் தினமும் துதிக்கப்படுபவரே நீங்கள்)

தீட்சிதர்கள் கூறிய வாசகத்தைக் கேட்டவுடன் வ.த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுக்கு அக்கணமே பொறி தட்டியது. அருணகிரி நாதர் பாடிய பதினாறாயிரம் பாடல்களில் ஒரு ஆயிரம் பாடல்களையாவது சேகரித்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டார்.

தலங்கள் தோறும் சென்று செல்லேறிப் போன பல வழுக்கள் பொதிந்திருந்த திருப்புகழ் ஓலைச்சுவடிகள் பலவற்றைச் சேகரித்து ஒத்துப்பார்த்து, பாட பேதங்களைக் கண்ணுற்று வெவ்வேறு சுவடிகளில் காணும் வித்தியாசங்களைப் பண்டிதர்களைக் கொண்டு திருத்தி அச்சிட்டுப் புத்தக வடிவில் யாவரும் எளிதில் பெறுமாறு செய்த ஏந்தல் வ.த.சுப்பிரமணிய பிள்ளை.

அரசாங்கப் பணிகளுக்கிடையில் தமக்குத் தெரிந்த பல நண்பர்களிடம் தொடர்பு கொண்டுத் திருப்புகழ் ஏட்டுச் சுவடிகளைத் தேடத் தொடங்கினார். ஆங்காங்கு அவை கிடைக்கத் தொடங்கின. 1876-ம் ஆண்டு ஆறுமுக நாவலர் எழுதிய சைவ வினா-விடையில் திருப்புகழின் ஆறு பாடல்கள் இருந்தன. 1878-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி அன்று காஞ்சிபுரம் புத்தேரி தெரு அண்ணாமலை பிள்ளை என்பவரிடமிருந்து 750 பாடல்கள் கொண்ட ஏட்டுச்சுவடிகள் கிடைத்தன. அதே வருடம் பின்னத்தூர் சீனிவாச பிள்ளையிடம் 450 பாடல்களும், பின்னர் அவரிடமே 150 பாடல்களும் கிடைத்தன. 20.03.1881-ல் கருங்குழி ஆறுமுக ஐயர் என்ற வீர சைவரிடமிருந்து 900 பாடல்கள் திருப்புகழ்ச் சுவடிகள் கிடைத்தன. 1903-ம் ஆண்டு திருமாகறல் என்ற ஊரில் 780 பாடல்கள் கிடைத்தன.

உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சாவிடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார். இதை உ.வே.சா, தனது ‘என் சரித்திரம்’ நூலில் பதிவுசெய்துள்ளார்.

ஓலைச்சுவடிகளின் குறைகளைக் களைந்து சீர் செய்வதற்கு மஞ்சக்குப்பம் பள்ளி ஆசிரியர் சிவசிதம்பர முதலியார், சேலம் சரவணப்பிள்ளை, ஆனந்த ராம ஐயர் போன்றவர்கள் ஆற்றிய பங்கு பெரிது.

திருப்புகழ் முதல் பதிப்பை 05.06.1891 அன்று சிவசிதம்பர முதலியார் செப்பம் செய்து சீர்திருத்தி வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டார். 9.04.1895-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட திருப்புகழ் பாடல்களை அச்சிற்குப் பதிப்பிக்கக் கொடுத்தார். திருப்புகழ் கட்டம் செய்யப்பட்டு அழகிய வடிவில் அச்சில் பதிப்பித்து முதன்முதலாக புத்தக வடிவில் பிள்ளையவர்கள் அப்போது பணிசெய்து கொண்டிருந்த திருத்துறைப்பூண்டிக்கு அனுப்பப்பட்டது. புத்தக வடிவில் திருப்புகழைக் கண்ட பிள்ளையவர்கள் பேரானந்தம் அடைந்தார். அதே சமயம் ஓலைச்சுவடியிலிருந்து பெயர்த்து எழுதிச் செப்பம் செய்து தந்த சிவ சிதம்பர முதலியார் அச்சு வடிவத் திருப்புகழ் புத்தகத்தைக் காணாமலேயே இறந்துபோய் விட்டார்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் திருப்புகழைப் புத்தக வடிவில் கண்ட அன்று தனது டைரிக்குறிப்பில் 09.04.1895-ம் ஆண்டு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். கடந்த 24 வருடங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட திருப்புகழ் பதிப்பு வேலை முடிய இவ்வளவு காலம் சென்றுள்ளது. இப்போதும் பாதி அளவே முடிந்துள்ளது என்று கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.

1909-ம் ஆண்டு சில திருத்தங்களுடன் இரண்டாம் பதிப்பு வெளிவந்தது. அதே ஆண்டு ஏப்ரல்-16-ம் தேதி இரவில் படுக்கைக்குச் சென்றவர் நள்ளிரவில் உயிர்துறந்துவிட்டார். வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் புதல்வர்கள் வ.சு.செங்கல்வராய பிள்ளை மற்றும் வ.சு.சண்முகம் பிள்ளையும் புதிய பாடல்களை இணைத்து திருப்புகழினைத் தொடர்ந்து வெளியிடலாயினர்.

வ.த.சுப்பிரமணிய பிள்ளையின் விருப்பப்படி அவருடைய சமாதி, திருத்தணி கோவிலை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது.


உ.வே.சாமிநாதையர் தமிழகமெங்கும் தமிழ் இலக்கிய ஏட்டுச் சுவடிகளைத் தேடிக்கொண்டிருந்த காலம் அது. வ.த.சுப்பிரமணிய பிள்ளையவர்கள், உ.வே.சா.விடம் தொடர்பு கொண்டு திருப்புகழ் சுவடிகளைக் கண்டால் தெரிவிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

நன்றி - தி இந்து 09 08 2014

கூந்தல் களைதலா? கூட்டி முடித்தலா? - முனைவர் ம.பெ.சீனிவாசன்


பாரதப் போர் நிகழாவண்ணம் தடுப்பதற்கு' என்ன உபாயம்? எனக் கண்ணபிரான் சகதேவனிடம் கேட்க, அதற்கு அவன், "" உன் திருவுளத்துக் கருத்து எதுவோ, அதுவே என் கருத்துமாகும். பாரதப் போரை நடத்திப் பூபாரத்தைத் தீர்க்க வேண்டும் என்ற சங்கல்பத்தோடு வந்தவன் நீ. அதை நடத்தும் நீயே அல்லாமல் தடுத்து நிறுத்த வல்லவர் எவரும் இல்லையே'' என்கிறான்.

கண்ணபிரான் அவனைத் தனியிடத்திற்கு அழைத்துச்சென்று வலியுறுத்திக் கேட்கவே, பாரதப் போர் பயிலா வண்ணம் மூன்று யோசனைகளை முன் வைத்தான் சகதேவன். அவை:

 * கன்னன் பாராள்வதற்கு ஏதுவாக அவனுடன் மாறுபட்டு நிற்கும் அருச்சுனனை முதலில் கொல்ல வேண்டும்.

 * அடுத்து, திரௌபதியின் கருநிறமுள்ள கூந்தலைக் களைய (அரிந்து நீக்குதல்) வேண்டும்.

 * உனக்குக் கால் விலங்கு பூட்டி, உன் கைகளையும் பற்றி, உன்னையும் கட்டிவைக்க வேண்டும்.

 இம்மூன்றும் நடந்தால் பாரதப்போர் நடக்காமல் தடுக்கலாம் என்றான் சகதேவன்.

 ""பாராளக் கன்னன் இகல் பார்த்தனை
 முன் கொன்று, அணங்கின்
 காரார் குழல் களைந்து''

என்னும் அடிகளில் திரௌபதியின் "குழல் களைந்து' என்று வருவதன் பொருளில் ஒரு மருட்சி காணப்படுகிறது.

குழல் களைதல் என்பதற்குக் "குழலை நீக்குதல்' என்றே இதுகாறும் பொருள் கூறப்பட்டு வந்திருக்கிறது. வில்லிபாரத உரையாசிரியர் மூதறிஞர் வை.மு.கோ.வும் இவ்வாறே பொருள் கூறியுள்ளார்.

"முடியை நீக்குதல்' அதாவது, தலையை மொட்டையடித்தல் என்பது ஒருவரை இழிவுபடுத்தும் அடையாளமாகும். பாஞ்சால நாட்டு அரசன் மகள் திரெபதியின் சபதம் இங்ஙனம் இழிவுபடுத்துவதற்கு உரியதா என்ன? கண்ணபிரானால் மதிக்கப்பட்ட மதிநுட்பமிக்க சகதேவன் அந்தப் பொருளில் சொல்லியிருப்பானா?

"களைதல்' என்பதை "விரித்த கூந்தலை முடித்தல்' என்னும் பொருளிலேயே அவன் கூறியிருக்க வேண்டும். "உன் கூந்தலை நானே முடிக்கின்றேன்' என்று கண்ணபிரான் சொன்னதையும் இங்கு நினைவுகூரவேண்டும். ஒரு நோக்கத்திற்காகத் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பவனை வலிந்தேனும் உணவுண்ணச் செய்து உயிர்காப்பது உலக வழக்கம். அதைப்போலவே, அவள் விரித்த கூந்தலை "முடித்து வைப்பது'தானே முறை?

இவ்வகைச் சிந்தனை உரையாசிரியர் வை.மு.கோ.வுக்கும் இருந்திருக்கிறது. அவர், "களைதல்' என்பதற்கு "முடியை நீக்குதல்' என்று உரை கூறியிருப்பினும் (கிருஷ்ணன் தூது, பா.35), அவ்வுரை நூலின் அரும்பத அகராதியில், "குழல் களைதல் - கூந்தலைக் கூட்டி முடித்தல் எனினுமாம்' என்று எழுதியிருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கருதுதற்கு ஆதரவாகத் தமிழ் நூல்களில் ஏதேனும் சான்று உண்டோ? என்ற கேள்விக்கு டாக்டர் உ.வே.சா.விடம் விடை கிடைக்கிறது.

ஐயனாரிதனார் எழுதிய "புறப்பொருள் வெண்பா மாலை'யில் ஒரு பாடல், இந்திரனை வென்ற முருகப்பெருமானின் செயலைப் பின்வருமாறு பேசுகிறது.

 ""பூந்தா மரையிற் பொடித்துப் புகழ்விசும்பின்
 வேந்தனை வென்றான் விறன்முருகன் - வந்து
 நெடுமதில் கொண்டு நிலமிசையோர் ஏத்தக்
 குடுமி களைந்தான் எங் கோ'' (209)

பாடாண் திணையுள் "குடுமி களைந்த புகழ் சாற்றுநிலை' என்னும் துறையுள் இடம்பெறும் பாடல் இது. இந்திரனை வென்ற பிறகு, குமரவேள் அவிழ்ந்த மயிர்முடியைக் கூட்டி முடித்த செயல் இதில் கூறப்பட்டுள்ளது.

"குடுமி களைந்தான் எம் கோ'' என்பதற்கு "மயிர்ச் சிகையைக் கூட்டி முடித்தான்'' என்று உ.வே.சாமிநாதையர் எழுதிய உரைக் குறிப்பாலும் இதை உணரலாம்.

இவ்வாறு, தமிழ் நூல்களில் நுட்பமாக நோக்கிப் பயிலத்தக்க இடங்கள் பல உண்டு.
அவை பயில்தொறும் கற்போர்க்குப் பேரின்பம் பயப்பனவாம்!

நன்றி - தமிழ்மணி

சிந்தாமணி ஆராய்ச்சி - தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர்

நச்சினார்க்கினியர் இடையிடையே மேற்கோளாகக் காட்டும் செய்யுட் பகுதிகள் இன்ன நூலைச் சார்ந்தவையென்று சீவக சிந்தாமணியை நான் ஆராய்ந்து வந்தபோது தெரிந்துகொள்ளவே முடியவில்லை. தொல்காப்பியச் சூத்திரங்களை மாத்திரம் தெரிந்து கொண்டேன். திருக்கோவையாரிலிருந்தும் திருக்குறளிலிருந்தும் சில செய்யுட் பகுதிகளை அவர் எடுத்துக் காட்டுகிறார். அவற்றையும் அறிந்து கொண்டேன். மற்ற மேற்கோள்களைப் படித்தபோது ஏதோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதாக இருந்ததே ஒழிய, இன்ன நூலில் உள்ளது, இன்ன விஷயத்திற்காக மேற்கோள் என்ற செய்திகள் தெளிவாகவில்லை.

வேறு பழைய தமிழ் நூல்கள்

சிந்தாமணியைப்போலத் தமிழ்நாட்டில் வழங்காத வேறு நூல்கள் என்ன என்ன உள்ளன என்ற ஆராய்ச்சியிலே என் மனம் சென்றது. இராமசுவாமி முதலியார் சென்னைக்குப் போகும்போது என்னிடம் சிலப்பதிகாரப் பிரதியைக் கொடுத்துச் சென்றார். சென்னைக்குச் சென்ற பிறகு நான் கேட்டுக் கொண்டபடி மணிமேகலைப் பிரதியை அனுப்பினார்.

பழைய நூல்களைத் தொகுத்துப் பார்க்கும் விஷயத்தில் கவனம் சென்ற போது திருவாவடுதுறைப் புஸ்தக சாலையின் நினைவு வந்தது. மடத்தில் என்ன என்ன பழைய நூல்கள் உள்ளனவென்று தேடிப் பார்க்க எண்ணி ஒரு சனி ஞாயிறு விடுமுறையில் நான் திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் என் கருத்தைத் தெரிவித்தேன். அவர், “எல்லாவற்றையும் பார்த்து வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளலாமென்று முன்பே சொல்லியிருக்கிறோமேஎன்றார்.

நான் அங்கிருந்த பழஞ் சுவடிக் கட்டுக்களைப் புரட்டிப் பார்க்கலானேன். ஏடுகளெல்லாம் மிகப் பழமையானவை; எடுத்தால் கையில் ஒட்டிக் கொள்ளக் கூடியவை. ஒரு கட்டில்ஏட்டுத் தொகைஎன்றும்சங்க நூல்போல் தோற்றுகிறதுஎன்றும் எழுதிக் குமாரசாமித் தம்பிரான் கட்டி வைத்திருந்தார். அதை எடுத்துப் பார்க்கையில் நற்றிணை முதலிய சங்க நூல்களின் மூலம் என்று தெரிந்தது. எட்டுத் தொகையென்பது தான் ஏட்டுத் தொகை ஆயிற்றென்று உணர்ந்தேன். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அக நானூறு, புறநானூறு என்ற எட்டு நூல்களும் எட்டுத் தொகையாகும். ஒரு பழைய பாட்டிலிருந்து அந்த எட்டின் பெயர்களும் எனக்குத் தெரியவந்தன. எல்லாவற்றின் மூலத்தையும் சேர்த் தெழுதிய ஏட்டுச் சுவடி ஒன்று அக்கட்டில் அகப்பட்டது. அதில் கலித்தொகையும், பரிபாடலும் இல்லை. எட்டுத் தொகையோடு பிள்ளையவர்கள் வைத்துக் கெண்டிருந்த வேறு ஓர் ஏட்டுச் சுவடி கிடைத்தது. அவர்கள் காலத்தில் அந்தச் சுவடியை எப்பொழுதாவது வெயிலில் எடுத்துப் போடுவார். முதலில் பொருநராற்றுப் படை என்று அதில் இருந்தது. “என்ன நூல் இது?” என்று கேட்டபோது, “இது திருமுருகாற்றுப் படையைப் போன்ற ஓர் ஆற்றுப்படைஎன்று மாத்திரம் ஆசிரியர் சொன்னார். அதற்கு மேலே என்ன என்ன உள்ளனவென்று பார்க்கும் முயற்சி அக்காலத்தில் உண்டாகவில்லை. அந்தப் பிரதி தான் மடத்துப் புத்தக சாலையிலிருந்து கிடைத்தது. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பத்து நூல்கள் சேர்ந்த தொகுதிக்குப் பத்துப் பாட்டு என்று பெயர். கடைச் சங்க காலத்தைச் சார்ந்த நூல்களுள் எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும் முக்கியமானவை. பத்துப் பாட்டு என்ற பெயரோ, அதில் அடங்கியவை இன்ன பாட்டுக்கள் என்பதோ அக்காலத்தில் தெரிந்து கொள்ள இயலவில்லை.

பொருநராற்றுப்படை என்று இருந்த சுவடியை நான் அதிகமாகப் பார்க்கவில்லை. பதினெண் கீழ்க் கணக்கு அடங்கிய அபூர்த்தியான சுவடி ஒன்றும் கிடைத்தது. சிந்தாமணிப் பிரதி பழையதாக ஒன்று இருந்தது. எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கும்பகோணம் சென்றேன்.

ஒரு தனிப் பிரபஞ்சம்

சீவகசிந்தாமணியை மாத்திரம் படித்து ஆராய்வதனால் அந்த நூலைப் பதிப்பிக்க இயலாதென்றும் மற்றப் பழைய நூல்களையும் படித்துத் தெரிந்து கொண்டால்தான் சிந்தாமணியின் பொருள் விளக்கமாகுமென்றும் நான் உணர்ந்தேன். சிந்தாமணி உரையில் காணப்பட்ட மேற்கோள்களைத் தனியே எழுதி வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பார்த்து வருவேன். அதனால்அவை மனப் பாடமாகவே இருந்தன. அவற்றிற் சில அந்தப் பழைய ஏடுகளில் காணப்பட்டன. அவற்றைக் கண்டபோது பெரிய புதையல் கிடைத்தது போன்ற சந்தோஷம் எனக்கு உண்டாயிற்று. மேலும் படிக்கத் தொடங்கினேன்.

படித்தால் எளிதில் விளங்கக்கூடிய நூல்களாக அவை தோற்றவில்லை. அவற்றில் உள்ளது வேறு ஒரு தனிப்பாஷை போலவே இருந்தது. ஆனாலும் நான் விடவில்லை. படித்துப் பார்த்தேன். தொல்காப்பிய உரைகளில் வரும் பல செய்யுட்கள் அவற்றில் இருந்தன. ‘இந்த நூல் தொகுதியே ஒரு தனிப் பிரபஞ்சம்என்ற எண்ணம் எனக்கு வரவர வலிவடைந்தது.

அகநானூற்றைப் படித்து அதில் உள்ள செய்யுட்களுக்கு இலக்கமிட்டு அவற்றிலுள்ள அரும்பதங்களையும் தொடர்களையும் தொகுத்து அகராதி வரிசையில் எழுதி வைத்துக் கொண்டேன். நச்சினார்க்கினியர் எங்கெங்கே என்றார் பிறரும்என்று எழுதுகின்றாரோ அங்குள்ள மேற்கோட் பகுதிகளிலுள்ள பதங்களையும் தொடர்களையும் அந்த அகராதியிலே பார்ப்பேன். ஒன்று இரண்டு கிடைக்கும். அந்தப் பாட்டை எடுத்துப் பார்ப்பேன். சிந்தாமணியில் நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரையால் அந்தச் செய்யுள் ஒருவாறு விளங்கும். அதிலே ஈடுபட்டு ஒரு முறை இரண்டு முறை மூன்று முறை படித்துப் பார்ப்பேன். சங்க நூல்களாகிய புதிய உலகத்தின் காட்சிகள் பனிமூடிய மலைபோல என் கண்ணுக்குத் தோற்றலாயின. பனிப்படலம் படர்ந்திருந்தாலும் மலையினுடைய உயரமும் பருமையும் கண்ணுக்குப் புலப்படுதல் போலத் தெளிவாக விளங்காவிட்டாலும் அந்தச் சங்க நூற் செய்யுட்கள் பொருளமைதியால், ‘நிலத்தினும் பெரியனவாகவும், வானிலும் உயர்ந்தனவாகவும், கடல் நீரினும் ஆழமுடையனவாகவும்தோற்றின. சிந்தாமணி உரையில், ‘என்றார் அகத்திலும்என்று முற்பகுதியில் வருகிறது. அங்கே உள்ள செய்யுட்பகுதி அகநானூற்றில் இருந்தது.

இப்படி ஆராய்ந்த போது எல்லாவற்றையும் ஒரு வகையாகத் தெரிந்து கொண்ட பிறகே சிந்தாமணியை அச்சிடத் தொடங்க வேண்டுமென்ற எண்ணம் உண்டாயிற்று. சிந்தாமணியைப் பல முறை திரும்பத் திரும்பப் படித்தேன்; மற்ற நூல்களை இடையிடையே படித்துக் குறிப்பெடுத்தேன்.

தஞ்சைப் பிரதி

சிந்தாமணி ஏட்டுப் பிரதிகள் வேறு கிடைக்குமாவென்று எனக்குத் தெரிந்தவர்களையெல்லாம் விசாரித்துக்கொண்டேயிருந்தேன். சந்தேகமான இடங்கள் பல இருந்தமையால் நல்ல பாட முள்ள பிரதி கிடைத்தால் பார்த்துப் பயன் பெறலாமேயென்ற கருத்தோடு பலரிடம் விசாரித்தேன்; பலருக்குக் கடிதம் எழுதினேன். தஞ்சாவூரில் பெரிய செல்வராக இருந்த விருஷபதாச முதலியாரென்பவர் வீட்டிற் பல பழைய ஏட்டுச் சுவடிகள் உள்ளனவென்று தெரிய வந்தது.சுவடிகள் தேடும் யாத்திரையை அப்பொழுது தொடங்கினேன்; இன்னும் ஓயவில்லை. தஞ்சாவூருக்குச் சென்று எனக்குத் தெரிந்த கனவான்களை உடனழைத்துக் கொண்டு முதலியார் வீட்டிற்குச் சென்றேன். அவர் ஜைனர். ஜைனமதக் கிரந்தங்கள் பல அவரிடம் இருந்தன. சீவக சிந்தாமணிப் பிரதியையும் வைத்துப் பூஜித்து வந்தார். நான் போய்க் கேட்டபோது முதலில் அதைப் பூஜையிலிருந்து எடுக்கக்கூடாதென்று சொல்லிவிட்டார். நான் மிகவும் பணிவாக வேண்டிக் கொண்டேன். “ஜைனர்களுக்குத்தான் கொடுப்பேனேயன்றி மற்றவர்களுக்குத் தரமாட்டேன்; அப்படித் தருவது எங்கள் சம்பிரதாயத்துக்கு விரோதம்; எவ்வளவோ ரகஸ்யங்கள் பொருந்திய சிந்தாமணியை வெகு சுலபமாக நீங்கள் படித்துப் பார்க்க முடியாது. ஆசாரியர்கள் மூலமாக உபதேசம் பெற்று விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அன்னிய மதத்தினராகிய உங்களுக்குக் கொடுப்பதனால் எங்களுக்கு பாவம் சம்பவிக்கும்என்றார்.

அவருக்கு என்ன என்னவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். தமிழுலக முழுவதும் படித்து இன்புறும் விஷயங்கள் சிந்தாமணியில் இருக்க, “ஒரு மதத்திற்கே உரியது, மற்றவர்கள் கண்ணிற் படக்கூடாதுஎன்று எண்ணி மூடி வைத்திருக்கும் இயல்பை உணர்ந்து நான் வருந்தினேன். “இப்படிச் சமய வேறு பாட்டால் மறைத்தமையால் உலகத்துக்கு வெளிப்படாத நூல்கள் எத்தனை இறந்து போயினவோ! தமிழுக்குப் பெருமை உண்டாக்கப் பெரியவர்கள் நூல்கள் இயற்றி வைத்திருக்க, அவற்றை மறைத்துத் தமக்கும் தம்மைச் சார்ந்தவருக்கும் சிறுமை உண்டாக்கிக் கொள்ளும் இயல்பினர் மனம் திருந்தும் காலம் வருமா?” என்று ஏங்கினேன்.

என்னுடன் வந்திருந்த ஒருவர் விருஷபதாச முதலியாரிடம், நான் கும்பகோணம் காலேஜில் வேலை பார்ப்பவனென்றும், திருவாவடுதுறை மடத்திற்கு மிகவும் வேண்டியவனென்றும் சொன்னார். என் நிலைமை தெரிந்து கொண்ட பிறகாவது முதலியார் சுவடியைக் கொடுக்கக் கூடுமென்பது சொன்னவரது அபிப்பிராயம். ஆனால் அது நேர் விரோதமாக முடிந்தது. “அப்படியா! சைவ மடத்திற் பழகினவருக்கு ஜைன கிரந்தங்களில் அன்பு ஏற்படுவதற்கு நியாயமே இல்லை. சைவர் ஜைனர்களைத் துச்சமாக எண்ணுபவர்கள். நான் கொடுக்கவே மாட்டேன்என்று அவர் சொன்னபோது, “ஏதடா விபரீதமாகப் போய் விட்டது!” என்று என் நண்பர் தம்மைத் தாமே நொந்து கொண்டார்.

மறுபடியும் வருவதாகச் சொல்லிவிட்டுத் தஞ்சையில் யாரைக் கொண்டு முயன்றால் முதலியாரின் பிரதியைப் பெறலாமென்று விசாரித்தேன். கடைசியில் துக்காராம் ஹோல்கார் என்னும் மகாராஷ்டிர தனவானாகிய என் நண்பரை அழைத்துக் கொண்டு மீட்டும் விருஷபதாச முதலியாரை அணுகினேன். நல்ல வேளையாக அவர் மனம் இளகியது. தம்மிடமிருந்த பிரதியை உதவினார். இவ்வளவு நயந்து வாங்கிய அப்பிரதி சிறந்த பிரதியன்று; விசேஷ உரையில்லாதது.

மயக்கம் தந்த விஷயங்கள்

இவ்வாறு பல வகையில் முயன்று தேடியதில் சிந்தாமணிப் பிரதிகள் 23 கிடைத்தன. அவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு பார்க்கலானேன். பார்க்கப் பார்க்கப் பல விஷயங்கள் தெளிவாயின. ஆனால் பாடபேதக் கடலுக்குக் கரைகாணவே முடியவில்லை. மனம் போன போக்கிலே எழுதிய கனவான்களால் விளைந்த விபரீதம் எவ்வளவோ ஏட்டில் உண்டு.

இது கொம்பு, இது சுழி என்று வேறு பிரித்து அறிய முடியாது மெய்யெழுத்துக்களுக்குப் புள்ளியே யிராது. ரகரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் சாபமாகத் தோற்றும், சாபம் சரபமாகத் தோற்றும். ஓரிடத்தில் சரடு என்று வந்திருந்த வார்த்தையை நான் சாடு என்றே பலகாலம் எண்ணியிருந்தேன், தரனென்பதைத் தானென்று நினைத்தேன். ‘யானை நாகத்திற்றோற்றுதலின்என்று ஓரிடத்தில் இருந்தது. யோசித்து யோசித்துப் பார்த்தேன். யானைகளில் வனசரம், நதிசரம் கிரிசரம் என்று மூன்று வகையுண்டென்று கேட்டிருக்கிறேன். நாகமென்பது மலையாக இருக்குமென்றும் கிரிசரமாகிய யானையைக் குறித்ததாகக் கொள்ளலாமென்றும் தோற்றியது. ஒரு நண்பர், “ஜைன சம்பிரதாயத்தில் நாகத்தின் வயிற்றில் யானை முதலில் பிறந்ததென்று இருக்கலாமோ என்னவோ!” என்று ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார். “அது நாகத்தில் பிறந்ததோ, அல்லது நரகத்திற் பிறந்ததோ, ஒன்றும் விளங்கவில்லையே!” என்று சொல்லிச் சிரித்தேன்.

யானை நரகத்தில் தோற்றுதலின் அதற்கு வணங்குதல் இயல்புஎன்று நச்சினார்க்கினியர் எழுதுகிறார். காந்தருவதத்தையோடு இசை பாடித் தோல்வியுற்றவர்களை நோக்கி, “இசையினி லிவட்குத் தோற்றாம் யானையால் வேறு மென்னின் இசைவதொன் றன்று கண்டீர்
என்று ஒருவன் சொன்னதாக வரும் சந்தர்ப்பத்தில், யானையால் வெல்லுதல் அரிது என்பதை விளக்குவதன் பொருட்டு நச்சினார்க்கினியர் அந்த வாக்கியத்தை எழுதியிருக்கிறார். ஆகவே அங்கே இசையோடு சம்பந்தமுடைய விஷயம் இருந்தால்தான் பொருத்தமாக இருக்கும். இவற்றையெல்லாம் யோசிக்கையில்யானை நாதத்தில் தோற்றுதலின்என்று இருக்க வேண்டுமென நிச்சயித்தேன். பல பிரதிகளில் தெளிவாகநாகத்தில்என்றே இருந்தது. ஒரு பிரதியில் மாத்திரம்நாதத்தில்என்ற பாடம் காணப்பட்டது.

இப்படியே குருதி என்பதைக் குந்தியென்றெண்ணித் தடுமாறினேன். ஓரிடத்திலே, ‘திருத்தங்குமார்பன், புனலாட்டிலே உயிர் போகின்ற ஞமலிக்குத் தானும் வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்தபடியும்என்று இருந்தது. ‘இது ஜைன நூலாயிற்றே; பஞ்சாட்சர மந்திரம் இங்கே எப்படிப் புகுந்துகொண்டது?’ என்ற சந்தேகம் வந்தது. மூலத்தில்ஞமலிக் கமிர் தீர்ந்தவாறும்என்று இருக்கிறது. ‘அமிர்துஎன்பதற்கு, ‘பஞ்சாட்சரமாகிய மந்திரம்என்பது உரையாக இருந்தது. ‘மந்திரத்தை யென்றிருந்திருக்க வேண்டும்: யாரோ பிரதியைப் பார்த்து எழுதின சைவர் பஞ்சாட்சரம் என்று சேர்த்தெழுதி விட்டார்என்று முதலில் கருதினேன். பின்னாலே வாசித்து வருகையில்ஐம்பத வமிர்த முண்டால்” (946) என்று வந்தது. வேறிடங்களில் உள்ள உரையால் பஞ்ச நமஸ்கார மந்திரமென்று தெரிந்தது. ஜைன நண்பர்களை விசாரித்தேன். அவர்கள் மிகவும் எளிதில், “அருகர், ஸித்தர், ஆசாரியர், உபாத்தியாயர், ஸாதுக்களென்னும் பஞ்ச பரமேஷ்டிகளை வணங்குதற்குரிய ஐந்து மந்திரங்களைப் பஞ்ச நமஸ்காரமென்று சொல்வது ஸம்பிரதாயம்என்று தெளிவுறுத்தினார்கள்.

இப்படித் தடுமாறித் தடுமாறிச் சிரமப்படுவதில் எனக்கு அலுப்புத் தோன்றவில்லை, மேலும், மேலும் உத்ஸாகமே உண்டாயிற்று. ஏதேனும் ஒரு மேற்கோளோ, ஒரு விஷயமோ, ஒரு பாடமோ தெரியாமல் மயங்கித் தவித்து நின்று பிறகு விளங்கினால் அதற்கு முன்பு பட்ட சிரமங்களெல்லாம் மறந்துபோகும்; பின்னும் பதின்மடங்கு ஊக்கம் ஏற்படும்.

இடையின ரகரத்துக்கும் வல்லின றகரத்துக்கும் பேதந்தெரியாமல் தடுக்கி நின்ற இடங்கள் பல. உரை இது, மூலம் இது, மேற்கோள் இது என்ற வேறுபாடு தெரியாமல் முட்டுப்பட்ட சந்தர்ப்பங்கள் பல. நச்சினார்க்கினியருடைய அன்வயத்திலே வரும் பாடற் பகுதிகளைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் மயங்கிய சமயங்கள் பல. ஓர் ஏட்டுக்கும் மற்றோர் ஏட்டுக்கும் இடையே உள்ள பாட பேதங்களால் அடைந்த கலக்கத்திலிருந்து மீள வழியின்றி மயங்கிய நிகழ்ச்சிகள் பல. உரைக்கு மூலமும் மூலத்துக்கு உரையும் கிடைக்காமல் பலமுறை இடர்ப்பட்டேன். மேற்கோள் எதற்காக உரையாசிரியர் காட்டுகிறாரென்பது விளங்காமல் பல தடவை தயங்கினேன். ஜைன விஷயங்களில் நுணுக்கமான சில செய்திகள் விளங்காமையால் மேலே வாசிக்க முடியாமல் பலகாலம் தடுமாறி நின்றேன். இலக்கணச் செய்திகளை அமைத்துக்கொள்ள வகை தெரியாமல் பலவாறு யோசித்துப் பல சமயங்களில் குழம்பினேன்.

இப்படிச் சிந்தாமணி யென்னும் காவியச்சோலையில் நான் சஞ்சாரம் செய்கையில் நேர்ந்த கலக்கங்களும் இடர்ப்பாடுகளும் தடைகளும் மயக்கங்களும் நாளடைவில் இறைவனருளால் சிறிது சிறிதாகத் தெளியலாயின. பதிப்பிக்கலாமென்ற எனது சங்கற்பம் நிறைவேறுமென்னும் நம்பிக்கை உறுதியாயிற்று.


- என் சரித்திரம் அத்தியாயம் 92

நன்றி - தஇக