சாதுலாலின் முகத்தை அவனால் பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவரது வலது இமையை அவன் பார்க்க முயற்சிசெய்தான். சாதுலாலைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் முதலில் தெரிவது, அவருடைய வலது இமையும் அதன் மேல் இருக்கும் மருவும்தான். சாதுலாலுக்கு பிறவியிலே வலது கண் இமைக்கு மேலாக மரு ஒன்று இருந்தது, அவருடைய அழகுக்குக் காரணமாக அமைந்தது. வயதான காலத்தில் அந்த மரு, பழுத்தக் கனி ஒன்று மரத்தின் கிளையில் இருந்து தொங்கிக்கொண்டிருப்பதுபோல, அவருடைய இமையில் இருந்து பூமியைப் பார்த்தபடி அல்லது சாதுலாலின் பெருவிரலைப் பார்த்து தலை குனிந்திருப்பதை, அவன் இரண்டு முறை பார்த்திருக்கிறான்.
ஹரிக்கு இரண்டு முறை சாதுலாலை அருகே சென்று பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு முறையும் அவன் சாதுவின் முகத்தைப் பார்க்காமல், அந்த மருவை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிட்டான்.
`சாதுவை முதன்முதலில் பார்க்கிறவர்கள் இப்படித்தான். நான் சாதுவின் முகத்தைப் பார்ப்பதற்கு ஒரு வருஷத்துக்கு மேலானது என்றால் என்ன சொல்வது...' என்று ராம் சொன்னதை அவன் நினைத்தான். ராம்தான் அவனை சாதுவிடம் அழைத்துச் சென்றது. ராமை பஜனை நடந்துகொண்டிருக்கும் இடத்தில் தேடினான். ராம் தனது குடும்பத்துடன் பஜனைக்கு முன்கூட்டியே வந்து அமர்ந்துகொள்வார்.
ஒருமுறை, சிவப்பான அவருடைய முகத்தில் கருநிறத்தில் இருந்த அந்த மருவை, அறுவைசிகிச்சை செய்து அகற்றிவிடவேண்டும் என ராம் கேட்டுக்கொண்டபோது சாதுலால் மறுத்து விட்டார். `தனிமையில் இருக்கும்போது நானும் எனது இமையின் மேல் இருக்கும் மருவும், பல விஷயங்களைப் பேசிக்கொள்வோம். அதையும் என்னிடம் இருந்து நீக்கிவிட்டால் நான் யாருடன் பேசுவேன்?’ என குழந்தையின் பிஞ்சுவிரல்களை நீவிக்கொள்வதுபோல அந்த மருவைத் தடவிக் கொண்டு சொல்லிவிட்டார். சிறிய கருநிறமான அந்த மருதான் அவரை அதிர்ஷ்டசாலி ஆக்கியது என்று, பலரும் பேசிக்கொள்வதை ஹரி கேட்டிருக்கிறான். சாதுலாலைப் பற்றி பலரும் பலவிதமாகப் பேசிக்கொள்கிறார்கள். எது உண்மை எனத் தெரியவில்லை.
சாதுலால் எங்கு இருந்து வந்தவர் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், பத்து வருடங்களுக்கு முன்பாக, ஐப்பசி மாத மழைக்காலத்தில் ஜவுளிக்கடையின் வாசலில் குளிருக்கு நடுங்கிக் கொண்டிருந்தவரை, அந்தக் கடைக்காரர் பார்த்த தாகவும், அவருக்குப் பழைய சேலைத் துணியைக் கொடுத்துப் போத்திக்கொள்ள சொன்னதாகவும் ஜவுளிக்கடை பஜாரில் பேசிக்கொள்வார்கள்.