‏إظهار الرسائل ذات التسميات மேலாண்மை பொன்னுச்சாமி. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات மேலாண்மை பொன்னுச்சாமி. إظهار كافة الرسائل

தள்ளி நில்லு - மேலாண்மை பொன்னுச்சாமி


அவக் தொவக்கென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மகன் முருகையாவையே கூர்ந்து பார்க்கிற சங்காண்டியின் கண்களிலேயே கண் வைத்திருக்கிற சின்னப் பாண்டியின் மனசெல்லாம் பெருமிதத் ததும்பல்.

முருகையா முழுத்த இளவட்டம். முறுக்கேறிய உடம்பு. கருவேலமரத் தூர்மாதிரி வைரம் பாய்ந்து இறுகிய திரேகம். சோறும் குழம்பும் பிசைந்த வாசம் கும்பாவிற்கும் வெளியே மணக்கிறது. சாப்பிட்டுக் கொண்டே அம்மாவைத் துரிதப்படுத்துகிற முருகையா.

அம்மே தூக்குச் சட்டியிலே சோறு வைச்சுட்டீயா? வைச்சுட்டேன்ப்பா.

அஞ்சு லிட்டர் கேன்லே தண்ணி புடிச்சுட்டீயா?

புடிச்சுட்டேன்டா, துரட்டியையும் ரெண்டு அருவாள்களையும் பக்கத்துலே வைச்சுருக்கேன்ப்பா
தண்ணீர்ச் செம்பை மகன் பக்கத்தில் குனிநது வைக்கிற ராசம்மா, சங்காண்டியிடமும், சின்னப் பாண்டியிடமும் தேயிலை போட்டுக் கொதிக்க வைத்த பால்காப்பித் தம்ளர்களை நீட்டினாள். இந்தாங்கண்ணே மொதல்லே காப்பித் தண்ணி குடி.

வாய் கொப்பளிக்கணும். ஒரு செம்புலே தண்ணி குடும்மா.

தண்ணீர் கொண்டு வந்து தருகிற ராசம்மா. வாய்கொப்புளித்து, முகம் கழுவி, நாலு மடக்குக் குடித்துவிட்டு, ஆவி பறந்து கொண்டிருக்கிற தம்ளரை எடுப்பதற்கு முன்பாக, தோள்த் துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்ட சங்காண்டி.

ஏம்ப்பா சைக்கிள்லே காத்து கீத்தெல்லாம் இருக்குதுல்லே? சரி பாத்துட்டீயா? என்று குறுக்குக் கேள்வி கேட்ட சின்னப் பாண்டியின் ரகசியப் பார்வை, சங்காண்டி கண்ணில் உட்கார்ந்திருந்தது. சாப்பிட்டுக் கொண்டிருக்கிற முருகையாவையே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது, சங்காண்டியின் பார்வை.

முருகையாவுக்குத் தன் மகளைக் கொடுக்கலாம் என்றொரு நினைவு ஓடிக் கொண்டிருக்கிறது. சங்காண்டி குடும்பத்தில் தண்ணிவெண்ணி கலக்கணும் என்று சின்னப்பாண்டிக்கு ரொம்ப ஆசை. விவசாயக் குடும்பம். நிலபுலம் ஜாஸ்தி. வெள்ளாமை விளைச்சல் படு செழிப்பு. சங்காண்டி மகள் கருப்பாக இருந்தாலும் களையான முக லட்சணம். முறுக்கிப் பிழிந்த ஈரக் கூந்தல் மாதிரி இறுகலான திரேகம். களைப்பறியாமல் பாடுபடக் கூடிய உழைப்பாளி வம்சம்.

எம் பயலோட ஒம்ம பொண்ணை சேத்துவைச்சா சோடிப் பொருத்தம் கச்சிதமாயிருக்கும்.

ஏங்கிட்டே பொண்ணு கேக்கீரா?

கேட்டுக்கிட்டுதான் இருக்கேன்.

நா ஒம்ம மகனைப் பாக்கணும். ஒம்ம ஊரைப் பாக்கணும். எம் பொண்ணு வந்து, இருந்து, வாழப்போற ஊரையும், ஊரோட சுத்துவட்டாரத்தையும் பாக்கணும்.

எப்ப வாரீரு?

ம் அம்மாசி முடியட்டும். வர்ற வளர்பிறையிலே வர்றேன்.

வந்திருக்கிறார். முருகையாவையே கவனிக்கிறார். சாப்பிடுகிற ஒழுக்கம், வேலைக்குப் புறப்படுகிற மும்முரம், அம்மா மீது இருக்கிற ஒட்டுதல் எல்லாவற்றையும் பார்க்கிற சங்காண்டி. அவருக்குள் கூர்மையாகிற மனப்பார்வை. குணபாவங்களை எடைபோட்டுக் கணிக்கிற மனத் தராசு.
வெறகு வெட்டுறதுக்கு எங்க போறாக, மருமகப்புள்ளை?

வலையபட்டிக் காட்டுக்கு.

ஊரைஒட்டி செந்தட்டியாபுரம். தாண்டுனா ஆமர்நாடு. அதையும் கழிச்சுப் போனா சீமைக் கருவேலங்காடு. வலையபட்டி ஆளுகளுக்குச் சொந்தமான நெலம்.

சம்பளம்?

எரநூத்தைம்பது ரூவா

வெறகு வெட்டு இல்லாட்டா?

ஆமர்நாட்டு சம்சாரிகளோட காடுகரைகளுக்குக் கூலி வேலைக்குப் போகணும்.
கடைகண்ணிகள்லே அரிசி, பருப்பு வாங்கணும்னா?

ஆமர்நாடுதான் போகணும். அங்கதான் பெரிய பெரிய பலசரக்குக் கடைக இருக்கு.
ரெண்டு வடை திங்கணும், ஒரு டீ குடிக்கணும்னா, ஆமர்நாடுதான் போகணும்?

ஆமா அது பெரிய ஊரு. நிறைய தலைக்கட்டுக. நாலா சாதிச் சனமும் கலந்துருக்குற ஊரு.
ம் ம்

நாடாக்கமாரு, தேவமாரு, நாயக்கமாரு, ஆசாரிமாரு, சக்கிலியச்சனம், சாம்பாக்கமாரு எல்லாரும் இருக்காக. சண்டை சத்தமில்லாம ஒத்துமையாயிருப்பாக நம்ம ஊர்லே?
நம்ம ஆளுக மட்டும்தான். நமம தனி ராஜ்ஜியம்.

சங்காண்டி ஊருக்குள் சுற்றிப் பார்த்த ஞாபகம் வந்தது. மாடு வைத்து விவசாயம் பண்ணுகிற சில குடும்பங்கள். நிலம், காடு கரை வைத்திருக்கிற சில சம்சாரிகள். அப்புறம் பூரா ஜனமும் கூலி ஜனம்தான். ஆடு குட்டி மேய்ப்புத் தொழில்கள். வீடு வீட்டுக்குத் தாழ்வாரங்களும், எருமை மாடுகளும், பசு மாடுகளும்.

சின்னப்பாண்டி வீடு, பெரிய வீடுதான். ஒரு நடுத்தர சம்சாரி வீடு. கண்மாய்ப் பாசனத்தில் மூணு ஏக்கர் நஞ்சையும், பம்ப்ஷெட் மோட்டார் கிணற்றுப் புஞ்சையும் இருக்கின்றன. தனித்தாழ்வாரம். நாலு பசு மாடுகளும், சில வெள்ளாடுகளும், சில கிடாய்களும்.

சொநதப் புஞ்சையில் வேலையில்லாத நாளில் சும்மா இருக்காமல், கூலி வேலைக்குப் போகிற அக்கறை.

புளிச்ச தண்ணி பொங்கிப் பெருகுகிற பானை மாதிரியான செழித்த குடும்பம். தனது உழைப்பாளி மகளுக்கு ஏற்ற குடும்பம்தான்.

சங்காண்டிக்குள் நாலாதிசைகளிலும் ஓடிப் பாய்கிற நினைவுகள். ஆயிரம் காலத்துப் பயிர். ஆற அமர யோசிக்க வேண்டும். யோசனைகளின் நீட்சியில் ஒரு நெருடல்.

ஆமர்நாட்டை நம்பிய பிழைப்பு. நோய்நொடி என்றால் அங்குதான். கடைகண்ணிக்கும் அந்த ஊர்தான். பாடுசோலிகளுக்கும் அந்த ஊரையே நம்பின பாடு. எல்லாவற்றுக்கும் அதுதான். ஊர் வழி போவதென்றாலும் அங்குதான் போய் பஸ் ஏற வேண்டிய நிலைமை.

சண்டை சத்தமில்லாம, ஒத்துமையாயிருப்பாங்க இது ஒரு நல்ல அறிகுறி.

ராசம்மா சோறுவைத்து சாப்பிடச் சொன்னாள்.

அண்ணே சாப்புட்டுக்கிறீகளா?

ஆட்டும்மா

நானும் மாடுகன்னுக்கு ரெண்டு புல்லுபுளிச்சி பாத்துட்டு வரணும். காட்டுக்குப் போய் வந்தாத்தான், ஆடுகுட்டிகளுக்கு கொழை ஒடிச்சுட்டு வரலாம்.

சாப்பிட்டு முடித்தனர். சங்காண்டி ஒவ்வொன்றும் உற்றுப் பார்த்தார். சந்தேகமான மனசோடு யோசித்தார். சரி தங்கச்சி புஞ்சைக்குப் போய்ட்டு வரட்டும். நாம அப்படியே காலாற ஆமர்நாட்டுக்குப் போய்ட்டு வந்துருவோம்.

அங்க என்னத்துக்கு?

சும்மாதான். அந்த ஊருலே போய் ஒரு டீயடிச்சுட்டு வெத்தலைபாக்கு வாங்கிட்டு வந்துருவம்.
மாப்பிள்ளை பார்க்கிற மாதிரி, மாப்பிள்ளை வீடு, ஊர் பார்க்கிற மாதிரி அந்த ஊரையும் அளந்து பார்க்கவா? என்று யோசிக்கிற சின்னப்பாண்டி, சங்காண்டியின் முன்யோசனையை நினைத்து வியந்தான்.

நம்ம ஊரு பூராவும் நாம வைச்சதுதான் சட்டம். நானூறுக்கு மேலே தலைக்கட்டுக. நாம இங்க வலுத்த கூட்டமாயிருக்குறதுலே, சுத்துவட்டாரத்துக்கு நம்ம ஊராளுக்கு நல்ல மதிப்பு மருவாதி.
ம்ம்ம் அப்படியா?

அதுலேயும் ஆமநாடு, தங்கமான ஊரு. தங்கமான மனுசங்க நம்ம ஊரு ஆளுகளை தாயாபுள்ளைகளா மதிச்சு பாசத்தோட பழகுவாக. தள்ளிநில்லுன்னு ஒருத்தருகூட சொல்லமாட்டாக

டீக்கடைகளில் உட்காருகிற இடங்களில் வித்தியாசம் உண்டா, டீக் கிளாஸ்களில் வேறுபாடு உண்டா என்றெல்லாம் கேட்டு விசாரிக்கிற ஆர்வத்தை அடக்கிக் கொண்ட சங்காண்டி. அதான் போய், நேர்லேயே பார்க்கப் போறோம்லே?

செந்தட்டியாபுரம் கழித்து, குறுகலான தார்ரோட்டில் பொடிநடையாக கடந்து கொண்டிருந்தனர். ஏறுவெயில் சுள்ளென்று காந்துகிறது. வெள்ளை வெயிலின் வெக்கையில் கண்ணெல்லாம் கிடந்து உறுத்துகிறது.

ஊருக்குள் நுழைந்தவுடன் - வாயா, சின்னப்பாண்டி என்ன சௌக்யமா? கடைக்குப் போகவா, பஸ்ஸூக்கா?

ஆமய்யா பஸ்ஸூக்கெல்லாம் போகலே. சும்மா ஊருக்குள்ளேதான்.

ஏறக்குறைய எல்லாருமே மதிப்பு மரியாதையுடன் வரவேற்று, விசாரிக்கிறார்கள். நடுத்தர சம்சாரிக்குரிய மதிப்பு மரியாதை. சாதி வித்தியாசம் வார்த்தைகளில் தோன்றவில்லை.
அருஞ்சுனை பலசரக்குக் கடைக்குப் போனான். உற்சாகமாக வரவேற்கிற கடைக்காரர். அக்கறையான உபசரிப்புகள். இன்னின்ன சரக்குகள் வேணும் என்று சிட்டை சொல்லுகிறான்.
போட்டு வையுங்க நாங்க நடுத்தெரு போய்ட்டு வாரோம்

சரி ஒரு கலரு குடிச்சுட்டுப் போகலாம்லே? ஒடைக்கட்டா?

வேண்டாம்யா.

விருந்தாளு கூட வந்துருக்கு. ஒடைக்குறேன்.

ரெண்டு பேரும் கலர் குடித்து முடித்து ஏப்பம் விட்டனர். எதிர்க்களித்த கலர் நுரைகள் நரம்பெல்லாம் சுறுசுறுத்து இனித்தன.

நல்ல ஊருதான் மனுச மக்களை மதிக்கிற ஊருதான். சாதி வித்தியாசம் காட்டாத மனுசமக்கள். பொண்ணைக் குடுக்கலாம்னுதான் தோணுது

சங்காண்டிக்குள் கலர் நுரைகளாக மொறு மொறுக்கிற நினைவுகளின் தித்திப்பு.
எல்லாமே சிமெண்டு ரோடுகளாகிவிட்ட ஊர்த் தெருக்கள். வழிநெடுக விசாரிப்புகளும், வரவேற்புகளும், உபசரிப்புகளும், சங்காண்டிக்குள் பூத்தூவலாக பாதை நீண்டது.
டீக்கடையில் பெஞ்சில் உட்காரச்சொன்ன சமத்துவம். எல்லோருக்கும் போலவே கண்ணாடிக்கிளாஸில் டீ தந்த மரியாதை. சங்காண்டிக்குள் வியப்பாக இருந்தது.
இங்க எல்லா சாதிக்கும் ஒரே மாதிரிதான்

சாம்பாக்கமாரு, சக்கிலியருக?

அவுகளுக்கும் இப்படித்தான். பெஞ்சுலே உக்காந்து, கண்ணாடிக்கிளாஸ்லே டீக்குடிச்சுட்டு, சீரெட்டை ஊதிட்டுப் போகலாம்

ஆச்சரியமாயிருக்கே

சுடுகாடும், இடுகாடும்கூட இந்த ஊர்லே எல்லாருக்கும் ஒரே எடம்தான்.

பரவாயில்லையே

நம்ம பயக தண்ணியைப் போட்டுட்டு சலம்ப மாட்டாங்களா?

இப்பத்தான் டாஸ்மாக் வந்துருச்சு. எல்லாச் சாதிகள்லேயும் குடிச்சிட்டு சலம்புறவுக சில பேரு இருக்காக. அதனாலே, அதெல்லாம் சகஜமாயிருச்சு

சங்காண்டிக்கு இந்த ஊர் ரொம்ப புதுமையாக இருந்தது. எளிய சாதியை தள்ளி நில்லு என்று சொல்லாத ஊர். முருகையாவுக்கு மகளைத் தரலாம். சின்னப்பாண்டியின் குடும்ப மருமகளாக மதிப்பு மரியாதையோடு வாழ்வாள்.

பஸ் ஸ்டாண்டு பக்கம் போனார்கள். பால்பண்ணை வாசல்படியில் ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். கதர்வேட்டி, கதர்ச்சட்டை, கதர்த்துண்டு, வலது கை விரலிடுக்கில் புகைகிற சிகரெட். முகத்தில் இனம்புரியாத சிடுசிடுப்பு.

அண்ணாச்சி, ராசபாளையம் பஸ் எப்ப வரும்? அவரிடம் கேட்ட சங்காண்டி, ஏற இறங்கப் பார்த்த பெரியவர். வெள்ளை வேட்டி. வெள்ளைச் சட்டை. கைகளில் மோதிரம், கடியாரம், காலில் செருப்பு. மதிப்பு மரியாதைக்குரிய கண்ணியமான தோற்றம்.

பெரியவர் முகத்தில் கடுகடுப்பு. கண்கள் இடுங்குகின்றன. கோபத்தின் முக இறுக்கம்.

சின்னப்பாண்டி கூட வந்த ஆளா? உறவுக்காரவுகளா?

ஆமாண்ணாச்சி.

அண்ணாச்சின்னு என்னைக் கூப்புடுதீயே எப்படி? என்ன மொறையிலே? நீ எங்க அம்மா வவுத்துலே பெறந்தீயா? இல்லாட்டா உங்காத்தா ஒன்னை எங்கப்பனுக்குப் பெத்தாளா?
சுரீரிடுகிற தீ வார்த்தைகள். சொற்கங்குகள். உள்மனவெப்பத்தை -உயிர்ச்சூட்டை – சூடுசுரணையை – சுள்ளென்று எழுப்பிவிடுகிற சுடுசொற்கள். தடிப்பான வார்த்தைகளுடன் சீறத் தயாராகிவிட்ட சங்காண்டி.

நாலெட்டு பிந்தி வந்த சின்னப்பாண்டி, நிலவரக் கலவரத்தைச் சட்டென உணர்ந்து கொண்டு சங்காண்டியின் வலதுகை மணிக்கட்டைப் பற்றி அழுத்திய அழுத்தத்தில் ஓர் அர்த்தம் தொனித்தது.
வாயைத் திறக்காமல் பேசாமலிரு என்று உணர்த்துகிற கைப்பாஷை. தொடுதல் மொழி.
அய்யா அவரு வெளியூரு தப்பா எடுத்துக்கிடாதீக என்று மிருதுவான குரலில் கூறிவிட்டு, சற்றுத் தள்ளி சங்காண்டியை அழைத்துச் சென்ற சின்னப்பாண்டி.

தர்மசங்கடமான மௌனம் நீடித்தது. கொதித்துக் கொந்தளிக்கிற சங்காண்டி முகம். உயிர்க்களையிழந்து முகம் குறாவிப்போன சின்னப்பாண்டியின் முகக் கருமை.
அங்கு நீடித்த மௌனம், மனசுகளைக் கிழித்து, உரித்து, மிளகாய்த் தூளை அப்பியது.
சங்காண்டி மகள், சின்னப்பாண்டி மகனுக்கு வாழ்க்கைப்பட்டு வரவில்லை.

நன்றி - ஓம்சக்தி

விபரீத ஆசை - மேலாண்மை பொன்னுசாமி


முத்துப்பெருமாள் அருவாளைக் கண்டாலே சீமைக் கருவேல மரங்கள் பயத்தில் தருக் தருக் என்று கழியும். நீளவாக்கில் ஓடிக் கிடக்கிற முள் விளார்கள் தலை தாழ்த்தித் தலை தாழ்த்திக் கூழைக் கும்பிடு போடும். சீமைக் கருவேல முள், விஷமுள். அதைக் கண்டால் எல்லாரும் பயந்து சாவார்கள். காய்ந்த முள், கட்டையாக இரும்பாணி மாதிரி இருக்கும்.

தப்பித் தவறிக் காலை வைத்துவிட்டால், முள் ஏறுகிறபோதே வலியும் விஷமும் உச்சி மண்டைக்கு ஏறிவிடும். பன்னிக்குட்டி மாதிரி பாதம் அடித்து வீங்கிவிடும்.
முள் குத்துச்சுப்பா அவனும் அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு வைத்தியம் பாத்து, ஆன மட்டும் மல்லுக்கட்டிப் பாத்தான். விஷப்பய முள்ளு. சீமை முள்ளு. ஆளை மாய்ச்சிருச்சுப்பா போய்ச் சேந்துட்டான்.

இப்படிப்பட்ட பேச்சுக்களை அங்கே இங்கே என்று அடிக்கடி கேட்கலாம். ஆளைக் கொல்லுற விஷப்பய முள்ளு, முத்துப்பெருமாளைக் கண்டால் பயந்து சாகும்.

முத்துப்பெருமாள் மூட்டுப் பெருத்த ஆள். ஓங்கு தாங்காய் இருப்பான். தாட்டியமான திரேகம். வைரம் பாய்ந்த கருவேலங்கட்டை மாதிரி நிறமும், உடம்பும். கன்னங்கருப்பு. முறுக்கேறிய தசை முறுக்கம். ஆறடிக்குக் குறையாத வளர்த்தி தெரியாத அளவுக்குத் தசைத் திரட்சி. சைக்கிள் மிதிப்பான். இரண்டு முழங்கால்களையும் அகல விரித்துத்தான் மிதித்தான். சைக்கிள் பெடல் மிதித்து ஏற வேண்டியது வராது. அப்படியே நின்ற வாக்கில் காலைத் தூக்கிப் போட்டால், தொடை உயரத்துக்கும் தாழ்வாக சைக்கிள் நிற்கும். அப்படியே சீட்டில் உட்கார்ந்து வலது காலைப் பெடலில் வைத்து மிதித்தால் வண்டி உருளும்.

அவனது உள்ளங்கை இரும்புப் பலகை மாதிரி, மரத்துக் காய்ப்பேறிப் போயிருக்கும். பத்து வயதில் பிடித்த அருவாள். அருவாளும், துரட்டியும், கோடாரியும் மட்டுமே கைப்புழக்கம். சீமைக் கருவேல மரத்துக்கு எமனாக வந்து பிறந்திருக்கிறவன்.

ஆத்துப்பாலத்துக்கு வடக்கில் அஞ்சு குறுக்கம். சமுத்திரமாக விரிந்து பரந்த தரிசு. தரிசு மண் கண்ணுக்குத் தெரியாது. அம்புட்டு அடர்த்தியான சீமைக்கருவேல மரங்களின் வளர்ச்சி. வருஷக் கணக்காக அருவாள் படாமல் வளர்ந்த மரங்கள்.

முத்துப்பெருமாள் வெட்டிக் கொண்டே முன்னேறுகிறான். அவனுடன் ஏழெட்டுப் பேர் ஆண்கள். ரெண்டு பெண்கள். துரட்டியால் முள் விளார்களைக் கவ்வி சடக் சடக்கென்று இழுத்துப் போடுவான். இரும்பு நிறத்தில் கொப்புகள் நிற்கும். துரட்டிபட்டு இழுபட்ட இடத்தில் ஈரம் கசியும்.
இவன் துரட்டியால் இழுத்துப் போட்ட விளார்களைக் கவட்டைக் கம்பால் இழுத்து ஒதுக்குகிற பெண்கள். எல்லாருக்கும் வியர்த்து ஊற்றுகிறது. பொடிப்பொடி வேலிமர இலைகள் வேர்வைப் பிசுக்கில் ஒட்டி நிற்கின்றன. பழுத்த இலைகள் மஞ்சள் புள்ளிகளாக அப்பி நிற்கின்றன.

வெயில் பார்த்தறியாத நிலத்தில், வெயில் தொடுகிறது. கொடி வீசி, ஒன்றுடன் ஒன்றாகப் பின்னிக் கிடந்த வேலி மரங்களின் விளார்கள் தரைக்கு இருட்டையே தரும். சீமைக் கருவேல மரங்களின் ஆடையாகவும் தலையாகவும் இருந்த முள் விளார்கள் அகற்றப்பட்ட பிறகு தலையில்லாத அம்மண முண்டங்களாக நிற்கிற வேலிக் கொப்புகள். துரட்டியை ஓரிடத்தில் சாய்த்து நிறுத்திவிட்டு, அருவாளை எடுக்கிற முத்துப்பெருமாள்.

அடித்தூருக்கு மேலாக முத்துப்பெருமாளின் அருவாள் வெட்டு விழுகிறது. ஓங்கி, ஓங்கி உயர்த்திய அருவாளை, அழுத்தமாக இறக்குவான். ஈரச் சதைத் தெறிப்புகளாக வெண்துகள்கள். இரும்பு நிறத்தில் இருக்கிற மரக்கொப்பில் விழுகிற வெட்டு. நாலைந்து வெட்டிலேயே சாய்கிற கொப்பு. கொப்பு மீதுள்ள முள்களையெல்லாம் அருவாளால் பரசிச் சீவுகிறான். இடது கையால் கொப்பு பற்றி வெட்டுகிறான். துண்டு துண்டாகிற விறகுகளை ஒரே குவியலில் போடுகிறான். முத்துப் பெருமாளைப் போலவே, எல்லாரும். பேச்சும் சிரிப்புமாகக் கேலியும் எகத்தாளமுமாக வேலையின் மும்முரம்.

ஆனி முடிந்து, ஆடி பிறந்த பின்பும் காற்றுக் கிளம்பவில்லை. காற்றில்லாமல் அடிக்கிற வெயில், படு உக்கிரமாக இருக்கிறது. கோடை மழை எதுவும் மண்ணில் விழாததால், வெயிலின் வெக்கை, தீப்பிடித்த மாதிரி தகிக்கிறது.

முத்துப் பெருமாள் முன்பெல்லாம் மரம் வெட்டிப் பிழைக்கிற பிழைப்பாய்ப் போயிற்றே என்று குற்ற உணர்வு கொள்வான். மரங்கள் பூமியின் வரங்கள். மழைப் பிள்ளையின் கருக்கள். உயிர்க்காற்றின் சுரங்கம். உலக வாழ்வின் சுவாசம் என்றெல்லாம் டி.வி.யில் சொல்லப்படுவதைக் கேட்கிற போதெல்லாம், முத்துப் பெருமாளுக்கு மனசு கிடந்து கூசும். பிள்ளையைக் காலைப்பற்றி ஓங்கிச் சுழற்றிப் பாறையில் அடிக்கிற குரூரத்தைத் தான் செய்வதாக ஒரு குற்ற உணர்ச்சி.
மரத்தை வெட்டிப் பிழைக்கிற ஈனப் பொழைப்பாப் போச்சு நம்ம தொழில் என்று அடிக்கடி அங்கலாய்ப்பான்.

டீக்கடையில் தினசரிப் பேப்பரை வாசித்துக் கொண்டிருந்த பெரியவர், பீடியைப் பற்ற வைத்துக் கொண்டே பேசினார்.

நாட்டுக் கருவேல மரம் நாட்டுக்கேத்தது. மருந்துக்காகும். பல்லுக்காகும். ஆடு குட்டி காக்கும். மனுசருக்கு நல்லது பண்ணும். உரம் சேர்க்கும். உழவுக் கலப்பை செய்றதுக்காகும். சீமைக் கருவேல மரம் அப்படியில்லே

டீ குடித்து முடித்துவிட்டு வேலைக்குப் போகணுமே என்ற பரபரப்பில், பேச்சைக் கேட்டும் கவனிக்காமலிருந்த முத்துப்பெருமாள், சட்டென்று அவர் முகம் நோக்கித் திரும்பினான். மனசு, அவரது உதட்டசைவில் நங்கூரமிட்டது.

நம்ம நாட்டோட மழை வளத்தையும், மண்ணு வளத்தையும் நாசம் பண்ணுறதுக்காக அமெரிக்காக்காரன் அனுப்பி வைச்ச விஷ விதைதான், சீமைக் கருவேலம். அமெரிக்காக்காரன் அனுப்பி வைச்ச கோதுமையோட கலந்து அனுப்பிச்சுட்டான், இந்த விதைகளை. இங்க வந்து வெஷமாய்ப் பரவிருச்சு.

பெரியவர் முகமெல்லாம் நரை ரோமங்கள். உடைந்த ரெண்டு பற்கள் சொல்லைக் குதறிப் போட்டன. பீடியை முழுக்க இழுத்துவிட்டு நசுக்கியெறிந்தார். நாசித்துவாரங்களில் புகை சீறலாக வந்தது.

முத்துப்பெருமாள் டீ குடித்து முடித்தான். ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான். அவரது உதடுகளையே கவனிக்கிறான்.

சீமைக் கருவேலம் வறட்சியிலேதான் கொண்டாட்டமா வளரும். பரப்புற சல்லி வேருக, மண்ணோட உயிர்ப்பதத்தை உறிஞ்சிரும். நீண்டு வளர்ற முள் விளார்க, காற்றோட ஈரப்பதத்தை ஒட்ட உறிஞ்சிரும். இதுக பெருகிப் பரவுற எடங்கள்லே மழையோட அளவு சன்னஞ்சன்னமாகக் கொறைஞ்சு வரும். கால் மாட்டுல புல்லு புளுச்சியை –  செடி செத்தையை முளைக்க விடாது. கண்டங் கத்தரி, இண்டு, தூதுவளை, குப்பைமேனி, கொம்மட்டிச் செடி, ஆத்திச்செடி, ஆதாளை மாதிரியான காடுகரைகள்லே மானாவாரியா செழிச்சுக் கிடந்த அருமையான மூலிகைகளையெல்லாம் கண் காணாம ஒழிச்சுக் கட்டுனது, சீமைக் கருவேலந்தான்.
சீமையிலேயிருந்து வந்த இந்த முள்ளுச்செடி பூமியோட வரமில்லே, பெருஞ்சாபம். இந்த வெவரமெல்லாம் யாருக்குத் தெரியுது. எல்லாரும் புஞ்சைக் காடுகளைத் தரிசாப் போட்டுட்டு டவுனுப்பக்கம் போயிடுதாக. இங்க சீமைக் கருவேலி முளைச்சு நாட்டை நாசம் பண்ணுது.
முத்துப் பெருமாளுக்குள் புதிய கதவுகள் திறந்து கொண்டன. வெளிச்சமும், காற்றும் மனசை நிரப்பிற்று. மனசுக்குள் குத்திக் கொண்டு ரொம்ப நாளாக ரத்தம் கசிய வைத்த முள்ளை உருவிப் போட்டு விட்டார் பெரியவர்.

முத்துப் பெருமாள் கையில் பிடித்திருந்த அருவாள், விறகுகளை வெட்டிச் சரித்தது. துண்டு துண்டாக நறுக்கப்பட்ட விறகுகளைக் குவியலின் மீது எறிந்தான். குற்ற உணர்ச்சியுடன் வெட்டிக் கொண்டிருந்தவன், இப்போது கோப உணர்ச்சியுடன் வெட்டுகிறான். ஜென்மப் பகைவனை வெட்டிச் சாய்க்கிற மனவேகம். ஆவேசப் பெருக்கு.

தண்ணீர் பாய்ச்ச, குப்பையள்ளிவிட, கண்மாய் மண் லோடு பண்ண, பாத்திகட்ட, கரடு வெட்ட என்று காடுகரை வெள்ளாமைச் சோலிகளுக்கு யாராச்சும் கூப்பிட்டால், முன்பெல்லாம் போவான். விறகு வெட்டுற பாவத்திலிருந்து தப்பித்தால் போதும் என்று தெறித்தோடுவான்.
இப்போதெல்லாம் போவதில்லை. சீமைக் கருவேல மரவெட்டுக்கு மட்டுமே போவதை முழு வழக்கமாக வைத்துக் கொண்டான்.

ஒரு சமயம் கேரளாவிலுள்ள தட்டப்பாறைக்கு இந்த ஊரிலிருந்து நிறையப்பேர் வேலைக்குப் போனார்கள். சம்பளம் ஜாஸ்தி, வேலை மணிக்கணக்கு என்று ஆசைப்பட்டுப் பலபேர் பயணப்பட்டனர்.

ஏய் பெருமாள் நீ வரல்லியா?

வரல்லே

ஏம்ப்பா? சம்பளம் சாஸ்தி. டயப்படி வேலை

கறியை வைச்சுக்கிட்டு என்ன செய்யப் போறோம்? வேலை பார்க்கப் பயந்து என்னத்தை மிச்சம் பண்ணப் போறோம்?

சம்பளம் ஜாஸ்திப்பா

ஒழைக்குற மனசிருந்தா இங்கேயும் அதே சம்பளத்தைப் பாத்துரலாம்

அப்ப நீ வரல்லே?

வல்லே

ஊரில் பெரும்பகுதியோர் தட்டப் பாறைக்குப் போய்விட இவன் இங்கு ஜென்மப் பகைவனை வெட்டிச் சரித்துக் கொண்டிருந்தான். அமெரிக்கா அனுப்பி வைத்த தந்திரப் பகைவனை இவனால் இயன்ற அளவுக்குத் தீர்த்துக் கட்டுவதில் உக்கிரமாயிருந்தான், சூரியனைப் போல.
பருத்த விறகுகளையெல்லாம் சீறிப் பிளந்தான், முத்துப் பெருமாள். கூட வேலை பார்த்தவர்களில் சின்னப் பாண்டிதான் கேட்டான், சாப்ட்டுக்கிடுவோமா?

நேரமாச்சா?

வகுறு பசிக்கலியா?

சரி வாங்க, சாப்டுவோம்

ஐந்து லிட்டர் கேனிலிருந்த தண்ணீரைச் சாய்த்து வலது உள்ளங்கையை மட்டும் அலசிக் கொண்டான். மஞ்சணத்தி மரத்து நிழல், அலசலாக இருந்தது. அதில் உட்கார்ந்தனர்.
குத்துக்கால் வைத்து உட்கார்ந்த முத்துப் பெருமாள், தூக்குச் சட்டியைத் திறந்தான். மூடி முட்ட சோறு இருந்தது. புளி ஊற்றிக் காய்ச்சிய நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு வாசம் ஆளைத் தூக்கியது. குழம்பின் மஞ்சள் நிறமும், கருவாட்டின் வாசமும் மனசைத் துளைத்தது.
அந்த வாசமும், ருசியும் மனைவியை மனசுக்குள் கொண்டு வந்தது. ராசம்மா கருப்புதான். பவுடர் பூசின மாதிரியான ஒரு வெளிர் கருப்பு. லட்சணமாக முகவெட்டு. மனசைச் சுண்டியிழுத்து, மோகத்தீயை மூட்டுகிற கவர்ச்சியான திரேக வடிவமைப்பு. ரெண்டு பேரும் உள்ளூர்தான். கல்யாணத்துக்கு முந்தியே இவர்களுக்குள் ஓர் உறவு, தொடர்பு. அடிக்கடி சந்திப்புகள், கண்ணடிப்புகள், புன்னகைக் கள்ளம். கைசாடைகள், முகபாவனைகளில் மனமோகம்.
விடியற்காலம் நாலரை மணி. முன்னிரவின் தேய்பிறை மறைந்து, கனத்த இருட்டு கவ்வியிருந்த நேரம். முற்றம் தெளிக்க மாட்டுச்சாணி எடுப்பதற்காக இவன் தொழுவத்திற்குள் வந்த ராசம்மாவை, இவன் எடுத்துக் கொண்டான். அவள் மறுப்பும் மயக்கமும், சிடுசிடுப்பும் சிணுங்கலுமாகத் தத்தளிக்க காடிக்குள் அவளைத் தூக்கிப் போட்டு இவனும்
பசுமாடுகளின் தடதடப்பிலும், கன்றுக்குட்டிகளின் கதறலிலும் ஆட்கள் வந்து இவர்களைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொள்ள ஊர்ப்பஞ்சாயத்தில் கல்யாணமாகி கோவிலில் நாட்டாமை முன்னால் தாலி கட்ட

இப்படி கலாட்டா, களேபரம், கசா, புசாவில்தான் இவர்கள் தாம்பத்யம் ஆரம்பித்தது.
வருஷம் நாலாகி விட்டது. இன்னும் குழந்தை குட்டியில்லை. நேற்று ராத்திரி-
என்னவோ ஒரு கிறுக்குத்தனம் முத்துப் பெருமாளுக்கு. சாயங்காலமே இந்த எண்ணம் தோன்றி, கோணத்தனமான பாதைகளில் பயணப்பட்டது. வினோதமான மனமூர்க்கம்.
இவர்கள் வீடு ரெண்டு அறைகளும், ஒரு ஹாலும் கொண்டது. முன்பக்கம் தாழ்வாரச் சாய்ப்பு. அதற்கு இடையில் இரண்டு திண்ணைகள். வீட்டை ஒட்டிய மேற்கில் மாட்டுத் தொழுவம். பசுமாடுகளும், வெள்ளாடுகளும் சாண வாசமும், மூத்திர மணமும் நிரந்தரம்.
அடுப்பு ஜோலிகள் எல்லாம் முடித்துவிட்டு, குளித்த ஈரத்தோடும், சலவை வாச உடு மாத்துத் துணியோடும் பாய்க்கு வந்த ராசம்மாவிடம் குழைந்த முத்துப்பெருமாள்.
என்ன இன்னும் ஒறங்கலியா?

இல்லே

ஏன்?

ஓங்கிட்டே கொஞ்சம் வெளையாடணும்

என்ன வெளையாட்டு? வெறகு வெட்டி அலுத்த ஒடம்பு. ஒறங்கி எந்திரிங்க

எனக்கு ஒரு கிறுக்குத்தனமான ஆசை!

என்ன?

இன்னிக்கு நாம தொழுவுக்குள்ளே இருக்கணும். காடியிலே அவனது குறும்புச் சிரிப்பும் கண்ணடிப்பும் பழைய சம்பவங்களையும் உணர்வுகளையும் குப்பென்று எழுப்பி விட்டது. அவள் உயிர் பதற, பதைத்தாள். பயத்தில் தலையாட்டினாள்.

அதெல்லாம் முடியாது அன்னிக்கும் நாம பண்ணுனது கிறுக்குத்தனம். இன்னிக்கும் உங்க புத்தி போற போக்கிலே கேவலக்கூத்தாகிப் போயிரும்.

அவள் மறுக்க இவன் கெஞ்ச மருகித் தவித்து மன்றாட இவனே ஜெயித்தான். அரை மனசும், குறை உயிருமாகக் கூட வந்தாள்.

காடிக்குள் இருக்கும்போது

ஏழெட்டுப் பேர்கள் வந்து, தலைவாசல் கதவைத் தட்டுகின்றனர். இவன் பெயரைச் சொல்லிச் சொல்லி, கூப்பிட்டு, கதவைத் தட்டுகின்றனர். ஒட்டு மொத்தத் தெருவே விழித்தெழுந்து விட்டது.
எங்க அவுகளை எங்க அவுகளை என்று தெரு ஜனம் பூராவும் புலம்பித் தவித்தனர். காடிக்குள் கிடந்த இவர்களோ ஊமையன் கண்ட கேவலக் கனவாக மௌனமாகிக் கிடந்தனர். மனசெல்லாம் கிழிந்து கிடந்தனர்.

முத்துப்பெருமாள் விறகு வெட்டி விட்டுக் குளித்துவிட்டு, ஈரவேட்டியும் துண்டுமாக சைக்கிளில் வீடு வந்து சேருகிறபோது, மணி ஏழாகி விட்டது. நன்றாக இருட்டி விட்டது.
ஊர்ப்பஞ்சாயத்தாம் உங்களுக்காகத்தான் காத்திருக்காம் வெருசாப் போங்க.
பதற்றமும் வெட்க வேதனையுமாக ராசம்மா துடித்த துடிப்பில் ஒரு கண்டனத்தொனி உறுத்திக் கொண்டிருந்தது.

என்னவாம்?

தெரியலே

துணிமணியை மட்டும் மாற்றிக் கொண்டு பஞ்சாயத்துக்குப் போனான். ஊர் மடத்தில்தான் கூட்டம். மொத்த ஊரே திரண்டு நின்றது. இவனுக்குக் கல்யாணம் பண்ணி வைத்த நாட்டாண்மை நடுநாயகமாக உட்கார்ந்திருக்கிறார்.

பஞ்சாயத்து, விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பும் சொல்லப்பட்டு விட்டது. தீர்ப்பு இவனுக்கு நாட்டாமையால் அறிவிக்கப் பட்டது.

நேத்து மாரிமுத்து புஞ்சைத் தென்னை மரத்துலே இளநியாகக் கூட முத்தாத பிஞ்சுக் குலையைப் புடுங்கி நாசம் பண்ணிக் கிடக்கு. நேத்து ராத்திரியே முத்துப்பெருமாள் வீட்டுக்கு ஊராளுக தேடிப்போனா அவனையும் காணலே. அவன் பொஞ்சாதியையும் காணலே. நடந்துருக்கிறது, களவு இல்லே. அழிமானம். நாசம். அதுக்கு அவுக பொறுப்பேத்துக்கணும். இல்லேன்னா
நேத்து எங்கே போயிருந்தாகன்னு அவுக ருசிப்பிக்கணும்.

ஓங்குதாங்கானவன். மூட்டுப் பெருத்த ஆள். ஆறடிக்குக் குறையாத கரும்பாறைத் திரேகம். நாடே பயந்து சாகிற சீமைக்கருவேல முள் இவனைக் கண்டால் பயந்து சாகும்.

இவன் இந்தக்கணத்தில் - பூனையால் மறிக்கப்பட்ட சுண்டெலியாகப் பயந்து செத்துக் கொண்டிருக்கிறான். குன்றிக் கூனிக் குறுகிப்போய் நிற்கிறான்.

நன்றி - ஓம்சக்தி

இச்சிமரம் - மேலாண்மை பொன்னுச்சாமி


ஒன்பது வருஷமாயிற்று, இந்த ஊரைவிட்டுப் போய்! எட்டாப்பு முடித்தவுடன், சென்னைப் பக்கம் போனது. இலவச விடுதி வாசம். பொறியியல் படித்து, பொறியியல் கல்லூரியிலேயே லெக்சரராகப் பணி!

ஊரையும் தாத்தாவையும் பார்த்துவிட்டுப் போகலாமே என்று வந்த நேற்றிலிருந்து ஊரைப் பார்க்கப் பார்க்க இவனுக்குள் விநோதமான உணர்வுகள். புதிர்மயமான பிரமிப்புகள்... நீள நீள நினைவுகள்..!

ரொம்பவே மாறியிருக்கிற மாதிரியான தோற்றம்... மாறாமல் இருக்கிற மாதிரியும் ஒரு மயக்கம். கணுக்கால் வரை தவழும் கைலியும், அரைக்கை சட்டையுமாக வெளியே வந்தான்.

பால் பண்ணைக் கட்டடம் அப்போது மைதானத்தில் தனித்துப் பளிச்சென்று தெரியும். புதுப் பணக்காரர் வீடு போல இருந்த ஆடம்பரத் தோற்றம் மாறி, இப்போது நொடித்துப்போன பணக்காரர் வீடு போலக் கன்னங்கரேலென்று கிடக்கிறது. வெள்ளையடிக்கவும் விதியற்றுப் போன ஏழ்மை.

அதை மறைக்கிற மாதிரி, புதிதாகப் பெரிய பெரிய வீடுகள். மாடுகளை நிறுத்திப் பால் பீய்ச்சிய இடம் பூராவும் கூளப் படப்புகளும், வீடுகளுமாக இருக்கிறது. ஏர்க் கலப்பைகள் தெரியவில்லை. ஏகப்பட்ட டிராக்டர்கள் தெரிகிறது.

பஸ் வந்து திரும்புகிற இடத்தில், வேப்ப மரங்கள் நிறைய உருவாகி  இருக்கின்றன. புதிதாக மூன்று டீக்கடைகள் முளைத்திருக்கின்றன. டிபனும், வடையும், பால் பன்னும் எந்நேரமும் உயிர்ப்புடன் களை கட்டுகின்றன. வியாபார மும்முரம்.

முன்பெல்லாம் ஒரே ஒரு டீக்கடை மட்டும்தான் இருக்கும். டீ மட்டும்தான் கிடைக்கும். டீக்கும் சீனி போட மாட்டார்கள். காய்ச்சி வைத்திருக்கிற வெல்லப்பாகுதான் ஊற்றுவார்கள்.

இப்போது, டீக்கடைகள் ரொம்பத் தடபுடல். இதெல்லாம் முன்னேற்றமா? மாற்றமா? வளர்ச்சியா? இவனுக்குள் யோசனைகள்...

ஒரே ஒரு பஸ்தான் முன்பு வரும். இப்போது ஏழெட்டுத் தடவைகள் வந்து திரும்புகின்றன டவுன் பஸ்கள். அடிக்கடி மினி பஸ்கள் வேறு! இத்தனையையும் தவறவிட்டவர்கள், ஒரு சில நேரம் ஆட்டோவிலும் வருகிறார்கள்.

இவன் கூட நேற்று திருவேங்கடத்திலிருந்து ஆட்டோவில்தான் வந்தான். எண்பது ரூபாய் வாங்கிவிட்டார்கள்.

ஆட்டோவிலிருந்து இறங்கித் தரையில் கால் வைத்தபோது, மனசுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடியது. வெறுங்காலுடன் தெருப் புழுதியில் சுற்றித் திரிந்த அந்த நாள்..! இப்போது தெருப் புழுதியைக் காணோம். சிமென்ட்டுப் பாதையாகியிருந்தது தெரு!

டீக்கடைக்கு வந்தான். சுற்றி நிற்கிற பெரியவர்கள் விநோதமாக இவனைப் பார்க்கிறார்கள்.

''தம்பி யாரு தெரியுமில்ல... நம்ம மாடசாமி நாடாரு பேரன்..!''

''யாரு... செத்துப்போன செண்பகம் மகனா?''

''ஆமா! சின்னப் புள்ளையிலே இங்கதான் தாத்தா வூட்ல கஞ்சியைக் குடிச்சுக்கிட்டு, நம்ம ஊரு பள்ளிக்கூடத்துலதான் படிச்சுது..!''

''இப்ப எங்க இருக்கே, தம்பி?''

''மெட்ராஸ்ல!''

''என்ன செய்யறே?''

''இன்ஜினீயரிங் காலேஜ்ல வாத்தியாரா இருக்கேன்..!''

''உங்களையெல்லாம் வளர்க்குறதுக்கு அரும்பாடுபட்ட மனுசர் உங்க தாத்தா. தவங்குற காலத்துல, நீதான் அவரை நல்லபடியா பாத்துக்கணும்ப்பா..!''

''ஆகட்டும் ஐயா..!''

விசாரிப்புகளோடு அறிவுரையும் சொல்கிற கிராமத்து மனசு. உரிமை எடுத்துக்கொள்கிற அந்நியோன்னியம். 'எனக்கென்ன' என்று ஒதுங்கிக்கொள்ளத் தெரியாத வெள்ளந்தித்தனம்.

டீ ரொம்ப ருசியாக இருந்தது. சென்னையில் இப்படியான ருசியை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இப்படியான பாச விசாரிப்புகளையும் எதிர்பார்க்க முடியாது. இங்கே எல்லோரும் இவனை மதிப்பும் மரியாதையுமாகப் பார்க்கின்றனர்.

டீ கிளாஸை நீட்டினான். காசு தந்தான். எதிர்த்தாற்போல் சற்றுத் தள்ளியிருந்த இச்சி மரத்தைப் பார்த்தான். ரொம்பப் பெரிசாக வளர்ந்திருந்தது. இலைகளின் அடர்த்திக்குள் பசுமை இருட்டு பம்மியிருந்தது. மைனாக்களின் கீச்சிடல். சாம்பல் நிறப் பெண் குயில் ஒன்று, கிளை நுனியில் நின்று கூவுகிறது.

அவன் உதட்டில் மெல்லிய சிரிப்பு. 'மெட்ராஸ்ல போய் குயிலோட நெறம் சாம்பல்னு சொன்னா, ஒரு பய நம்ப மாட்டான்!' என்ற நினைவு மின்னல்.

இச்சி மரம் என்றதும், இவனுக்குள் சட்டென்று சோலைசாமி நினைவுக்கு வந்தார். தூசி படிந்த நினைவு. வளர்த்தியான ஆள். ஒல்லியான தோற்றம். காய்ந்த வாளைமீன் போல இருப்பார். மல் துணியில் தைத்த, கை வைத்த பனியன்தான் எந்நேரமும் போட்டிருப்பார்.

இச்சி மர நிழலில், பகல் முழுக்க முடி வெட்டுவார். சுருட்டி வைத்திருக்கிற பையை விரித்து நீட்டினால், கத்தரிக்கு ஒரு பை, கத்திக்கு ஒரு பை, தீட்டுக்கல்லுக்கு ஒரு பை, தீட்டு வாருக்கு ஒரு பை, முள்வாங்கிக்கு ஒரு பை என்று தைக்கப்பட்டுஇருக்கும். அதது, அததன் உறையில் மாட்டப்பட்டு இருக்கும். வெட்டுப்பட்ட ரோம இணுக்குகளும் ஒட்டியிருக்கும்.

இவனுக்கு அவரைக் கண்டாலே குலைநடுக்கம். பதறுவான். என்னவோ தெரியவில்லை, இனம் புரியாத பயம். சிறு வயது பயம்.

இத்தனைக்கும் அரட்ட மாட்டார். 'ராசா...' என்று மிருதுவான குழைவில்தான் அழைப்பார்.

முடி வெட்ட அவரிடம்தான் போயாக வேண்டும். பயந்துகொண்டேதான் போவான். யாருக்காவது முகச் சவரம் செய்துகொண்டு இருப்பார். 'என்ன ராசா, முடிவெட்டணுமா?' என்பார்.

'ம்...'

'சித்தே உக்காரும் ராசா... இதோ ஆச்சு!'

அவர் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருப்பார். பொழுது முழுக்க அப்படியே உட்கார்ந்துகொண்டு, வருகிறவர்களுக்கெல்லாம் முகச் சவரமும் முடிவெட்டுமாக இடை விடாத வேலை.

இவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். 'இம்புட்டு நேரமும் குத்துக்கால் வெச்சு உட்கார்ந்திருக்க முடியுதா? எரிச்சல் பத்தாதா? ரத்த ஓட்டம் நின்று போய், முள் முள்ளாய்க் குத்தாதா?'

குவிந்து உதிர்ந்துகிடக்கும் ரோமக் கற்றைகளை வலது கையால் கூட்டிப் பரசி அள்ளி, இச்சி மரத்தூரில் போடுவார், சோலைசாமி.

'ம்... உக்காருங்க ராசா!'

இவன் சம்மணம் கூட்டி உட்காருவான். அவர் பக்கத்தில் உட்கார்ந்தவுடன், ஒரு நெடி வரும். பீடி நாற்றமும் வேர்வை நாற்றமும் கலந்த ஒரு நெடி.

தலையில் தெளிக்கப்படுகிற தண்ணீர், காது வழியாகக் கீழே வழியும். கத்தரிப்பான் ஒரு கையில்; சீப்பு ஒரு கையில். முடிவெட்டுகிறபோது, கரிச்சான் சீச்சிடுகிற மாதிரி ஒரு சத்தம் லயத்துடன் வந்து கொண்டே இருக்கும். 'கர்ரிச்... கர்ரிச்... கர்ரிச்...'

சாணை பிடிக்காத கத்தரி, ரோமத்தைப் பறித்துப் பிடுங்கும். 'சுரீர் சுரீ'ரெனக் காந்தும்.

'ஸ்ஸ்ஸ் ஆஆ...' என்று வலி தாங்காமல் இவன் கத்துவான்.

'எதுக்கு ராசா, கத்துறீங்க? கத்தக்கூடாது. கத்துனா, காதைக் கத்தரிச்சிருவேன்!'

அம்புட்டுதான்... இவன் 'டர்ர்'ராகிவிடுவான். ஒண்ணுக்கு முட்டிக்கொண்டு வருகிற மாதிரி இருக்கும். பயத்தில் மனசு கிடந்து படபடக்கும். கழுத்தடியில் அச்ச வியர்வையின் நசநசப்பு!

கனிவான, குழைவான குரலில் வருகிற, 'கத்தரிச்சிருவேன்' என்கிற மென்கண்டிப்பு, நிஜம் போலத் தோன்றும். மனசுக்குள் ஆணிவேராக இறங்கிப் படரும். முடிவெட்டுக்குத் தோதாக தலையை ரெண்டு கையாலும் பற்றி, அங்கிட்டும் இங்கிட்டும் திருப்புவது, திருப்புகிறபோது குனிகிற முகத்தை வெடுக்வெடுக்கென நிமிர்த் துவது... எல்லாமே இவனுக்கு வலிக்கும். ஆனால், கத்த முடியாது. 'காது துண்டாகிவிடுமோ' என்கிற பதற்றம்... நடுக்கம்..!

அவனுள் மீண்டும் ஒரு மென் முறுவல். பாலக வயசு பயத்தை எண்ணிய மன மின்னல். அந்த அறியாமையின் அழகை நினைத்த மனசின் ஒளி.

'இப்பவும் சோலைசாமி இருக்காரா? இன்றும் முடிவெட்டுகிறாரா?' அவனுக்குள் குறுகுறுக்கிற கேள்வி.

யாரிடமாச்சும் கேட்கலாமா? இச்சி மரத்தின் அருகிலேயே போய்ப் பாத்துரலாமா?

நினைவு, நெஞ்சில் எழும் கணத்திலேயே, நினைவின் உருவமாக வருகிற சோலைசாமி.

அதே அழுக்கான பழுப்பு நிற வேட்டி, அதே மல்துணி பனியன், அதே ஒல்லித் தோற்றம். முதுமையில் வளைந்த முதுகு காரணமாக, சற்றே வளர்த்திக் குறைவு. தலையெல்லாம் நரை.

வேட்டியையும் கையையும் அடித்து, ஒட்டியிருந்த ரோம இணுக்குகளை உதறிக்கொண்டே வருகிற பெரியவர்.

பெஞ்ச்சுகளிலும் சேர்களிலும் உட்கார்ந்திருக்கிற மனிதர்களுக்கு மத்தியில், தரையில் குத்துக்கால் வைத்து உட்கார்கிற அதே சோலைசாமி. வெகு இயல்பாக, இவனது கால்மாட்டில் உட்கார்ந்திருக்கிறார்.

''ராசா... நீங்க..?'' கண் இமைகளில்கூட நரை மின்னல்.

''மாடசாமித் தாத்தா பேரன்..!''

''மெட்ராஸ்லதானே ராசா இருக்கீக? சின்னப் புள்ளையிலே பாத்தது. பெரியாளாகிட்டீக! ஆமா, எப்ப வந்தீக..?''

''நேத்து..!''

''உங்க நாவிதனை ஏதாச்சும் கவனிக்கக் கூடாதா?'' இயல்பான இரைஞ்சும் குரல்.

''ரெண்டு வடையும் டீயும் குடுத்துருங்க!'' என்றான் இவன், டீக்கடைக்காரரைப் பார்த்து.

''நீங்க மகராசா, நல்லா இருக்கணும்!'' நன்றியை ஆசீர்வாதமாகச் சொல்கிற அந்த எளிய மனசு. உயர் பண்பின் செல்வ மனசு.

சோலைசாமி வடை தின்று முடித்தவுடன்... டீ வந்தது, வெள்ளை வெளேரென்ற பிளாஸ்டிக் குவளையில்.

எல்லோருக்கும் கண்ணாடி டம்ளர். இவருக்கு மட்டும்..?

இவன் மனசு அதிர்கிறது. அதிர்வில் முணுமுணுத்தே விடுகிறான்...

''இதுலே மாறலியா?''

நன்றி - விகடன்