‏إظهار الرسائل ذات التسميات சடங்கு. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات சடங்கு. إظهار كافة الرسائل

நாச்சியார் கூறும் திருமணச்சடங்கு - மு.பாக்கியலட்சுமி

மனித சமுதாயத்தின் மதம், பண்பாடு, இனம், மனப்பாங்கு ஆகியவற்றிற்குத் தக்க மணமுறையும் மாறுபடும் தன்மையது. ஒரினத்தின் பண்பாட்டையும், பழமையையும் அவர்தம் நம்பிக்கைகளும், சடங்குகளும் வெளிப்படுத்துகின்றன. நாச்சியார் பாடல்களில் நாட்டுப்புறக் கூறுகளுள் ஒன்றான நாட்டுப்புறப் பழக்கவழக்கங்களில் காணப்படும் திருமணச் சடங்குகள் பற்றிய கருத்துக்களைப் பற்றியது இக்கட்டுரை.

பெரியாழ்வாருடைய வளர்ப்பு மகளான ஆண்டாள் அந்தணர் சமுதாயத்தில் வளர்ந்ததால் அவர் காலத்து நிலவிவந்த அந்தணர் சமுதாய திருமணச் சடங்குகளைத் தம் பாசுரங்களில் கூறுகின்றார். அவை இன்றும் தமிழர்தம் திருமணங்களில் பின்பற்றப்படுகின்றன.

மாப்பிள்ளை அழைப்பு:-

திருமணத்திற்கு முதல்நாள் நடைபெறும் இச்சடங்கிற்கு மணமகன் வெகுவிமரிசையாக அழைத்து வரப்படுவான். ஆயிரக்கணக்கான ஆனைகள் புடைசூழ தங்கக் குடங்களாகிய பூர்ணகும்பங்களில் மாவிலைக்கொத்தும் தேங்காயும் வைத்து மருமகப்பிள்ளையை எதிர்கொண்டு அழைத்து வந்தனர் இதை,

''வாரணமாயிரம் சூழ வலம் செய்து

நாரணண் நம்பி நடக்கின்றா னென்றெதிர்

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி நான்'' (பா.எண் 53)

என்று கூறகின்றார். பெண் வீட்டாரும் மணமகன் வீட்டாரும் திருமணத்தைப் பற்றித் தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டபின், திருமணத்திற்கு முதல் நாள் அதை உறுதிப்படுத்த சுற்றம் அறிய ''மணவோலை'' எழுதிவாசிப்பர். இந்நாளில் இச்சடங்கை நிச்சயதார்த்தம் அல்லது பரிசம் போடுதல் என்பர். இந்நிகழ்ச்சியை,

''நாளை வதுவை மணமென்று நாளிட்டு

பாளை கழுகு பரிசுடைப் பந்தற்கீழ்

கோளரிமாதவன் கோவிந்தனென் பான்ஓர்

காளைபுகுதக் கனாக் கண்டேன் தோழி நான்'' (பா.எண்.54)

பாளையும், கமுகும் கட்டப்பெற்ற அழகிய பந்தல், அதில் அமர்ந்து திருமணத்தை நிச்சயிக்கின்றனர்.

கோடியுடுத்தல்:-

மணப்பெண்ணுக்குப் புதிய புடவையைப் பரிசாக மணமகன் வீட்டார் அளிப்பர். இப்புடவையை மணப்பெண் கட்டிக் கொள்வதற்கு மணமகனின் உடன்பிறந்த சகோதரி உதவுதலுண்டு. தன்னைத் திருமணம் செய்து கொள்ளப்போகும் அப்பெருமானுடைய சார்பில் இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்ததாகப் பாடுகின்றார். மணமகனின் சகோதரி துர்க்கை மணப்பெண்ணுக்கு புதுப்புடவை உடுத்தி, மலர்மாலை சூட்டுவதாக கூறுகின்றார். இதை,

''இந்திரனுள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்

வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து

மந்திரக்கோடி யுடுத்தி மணமாலை

அந்தரிசூட்டக் கனாக்கண்டேன் தோழி நான்'' (பா.எண்-59)

வரவேற்பு:-

திருமண நாளில் மணமகள் இல்லத்தில் திருமணம் நடைபெறும் இடத்தில் மணமகன் நுழையுங்கால் வாழ்வரசிகள் குடத்துள் விளக்கை ஏற்றிய நிலையில், எதிர்கொண்டு வரவேற்கின்றனர்.

''கதிரொளி தீபம் கலசமுடனேந்தி

சதிரிளமங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள'' (பா.எண்.57)

என்று ஆண்டாள் குறிப்பிடும் இச்சடங்கு இன்றும் வழக்கில் உள்ளது. விளக்கு, நீர் இவற்றின் மூலம் திருஷ்டி கழிப்பது என்கிற முறையில் தம்பதிகளின் வாழ்க்கையில் பால் பொங்கவும், சகல மங்கலங்களும் கங்கை போல் பெருகவும், இன்பமும் ஆனந்தமும் தீப ஜோதிபோல் பிரகாசிக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தவே இச்சுபச்சடங்கு.

கைத்தலம் பற்றல்:-

திருமணத்தின் முக்கியச் சடங்காக கைத்தலம் பற்றல் நடைபெறுகிறது. மணமகன், மனமகள் கைப்பற்றி தீ வலம் வருதல் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை ஆண்டாள்,

''மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன்வந்து என்னைக்

கைத்தலம்பற்றக் கனாக்கண்டேன்.'' (பா.எண்.58)

மத்தளம் கொட்டப்படுகிறது. அழகிய சங்கு முழங்குகிறது. வேதியர் தீ வளர்த்து அதில் ''சமித்து'' எனப்படும் குச்சிகளை வைத்து ஆகுதியை வளரச் செய்து, வேத மந்திரங்களை ஒலித்த வண்ணம் இருக்கின்றனர். அந்நிலையில் மணமகன் மணமகளுடைய கைத்தலம் பற்றுகிறான். கைத்தலம் பற்றிய நிலையில் தீயை மணமகன் வலம் வருகிறான். இனிநான் உன்னைக் கைவிட மாட்டேன். இது சத்தியம். என்னுடைய நிழல் போன்ற உன்னை நான் என்றென்றும் கைவிடாமல் காப்பாற்றுவேன் என்று உறுதி எடுக்கிறான். இத்தகைய தீ வலம் வருதல் சிலம்பிலும் காணலாம். இந்நிகழ்ச்சியை ஆண்டாள்,

''காய்சினமா களிறன்னான் என்கைப் பற்றி

தீவலஞ் செய்யக் கனாக்கண்டேன்'' (பா.எண். - 59)

என்று குறிப்பிடுகின்றார்.

அம்மி மிதித்தல்:-

திருமணத்தில் உள்ள மற்றொரு சடங்கு அம்மி மிதித்தல். மணமகன் மணமகளுடைய காலைப்பற்றி ஏழு அடிகள் வைத்து மணமகளுடைய காலை அம்மியின் மேல் வைக்கிறான், இதை

செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி

அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி (பா.எண்.60)

என்கிறார் ஆண்டாள்.

பொரி அடுதல்:-

மணமக்கள் இருவரும் அவியுணவாக நெற்பொரிகளை தீயில் இடுவர். மணமக்கள் ஒருவர் கைகளின் மீது மற்றொருவர் கைகளையும் இணைத்துக் கொண்டு இச்சடங்கை இயற்றுவர்.

''அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என்கைவைத்துப்

பொரிமுகந்து அட்டக் கனாக் கண்டேன்'' (பா.எண்.61)

என்கிறார்.

வீதி வலம் வருதல்:-

நாச்சியார் காலத்தில் திருமணம் முடிந்த பின்பு மணமக்கள் இருவரையும் ஒருசேர அமரச்செய்து ஊர்வலமாக அழைத்துச்செல்வர் எனத் தெரிகிறது. குங்குமச் சாந்தும், சந்தனமும் உடலெங்கும் பூசப்பட்ட நிலையில், யானையின் மீது இருவரையும் ஒருசேர அமரச்செய்து வீதிவலம் வந்ததைப் பாடுகிறார் ஆண்டாள்.

குங்குமமப்பிக் குளிர்சார்ந்த மட்டித்து

மங்கலவீதி வலஞ்செய்து மணநீர்

ஆங்கு அவனோடும் உடன்சென்று அங்கு ஆனைமேல்

மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் (பா.எண்.1162)

இன்றும் கிராமபுறங்களில் இவ்வழக்கம் காணப்படுகிறது. குதிரை, யானை, போன்றவற்றில் இல்லை என்றாலும் ஒருசேர ஊர்வலமாக வருதல் என்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இன்றும் வடநாட்டில் திருமணத்திற்குப் பின்பு மணமக்கள் ஊர்வலமாகக் குதிரையின் மீதோ அல்லது வாகனத்திலோ அழைத்து வரப்படுவர்.

தமிழர் திருமணத்தோடு ஒத்துப்போதல்:-

ஆரிய மரபின்படி இன்றுவரை அந்தணர் சமுதாயத்தில் உள்ள திருமணச் சடங்குகளை ஒன்று விடாமல் தம்முடைய திருமொழியில் வரிசைப்படுத்திக் கூறுகிறார். அம்மி மிதித்தல், தீ வலம் வருதல் முதலிய சடங்குகளைக் குறிப்பிடும் ஆண்டாள் மங்கலவணி (தாலி) அணியப்படுதலைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

நம் பழம்பெறும் இலக்கியங்கள் திருமணத்தில் மணமகளுக்குத் தாலி அணிவிப்பதை எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால் திருமணமான மகளிர் மங்கல அணியை, அணிந்திருந்தனர் என்பதற்கு சங்க இலக்கியத்தில் சான்றுகள் அமைகின்றன.

''ஈகை அரிய இழையணி மகளிரொடு'' என்று புறநானூற்று பாடலில் மங்கலவணி குறிக்கப்படுகிறது.

''அகலுண் மங்கலவணி யெழுந்தது'' (சிலம்பு - பா - 47) என்றும்,

வேதவிதிப்படி நடைபெறும் ''இராமன்சீதை'' திருமணத்திலும் தாலி கட்டப்படுவது கூறப் பெறவில்லை. ஆனால் சில இடங்களில் தாலி என்ற பொருள்பட ''மங்கலநாண்'' என்ற சொல் எடுத்தாளப்படுகிறது.

நிலமகள் முகமோ! திலகமோ! கண்ணோ

நிறையெடு மங்கல நாணோ.

என்னுமிடத்தில் மங்கல நாணைக் குறிப்பிடுகிறார்.

தாம் கண்ட கனவுத் திருமணத்தில் தாலி கட்டப்படுவது குறித்து ஆண்டாள் எதுவும் குறிக்காத காரணத்தால் தாலி பற்றிய சிந்தனையே அவருக்கும் இல்லை என முடிவு செய்தல் பொருத்தமற்றது.

''காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர்''

என்று ஆய்ச்சேரி பெண்கள் மோர் கடையுங்கால் அணிந்திருந்த தாலியைப்பற்றி ஆண்டாள் குறிப்பிடுகின்றார். தம்முடைய கனவுத் திருமணத்தில் ஆரிய முறைப்படி மணம் நடந்ததைச் சொல்லும் அண்டாள். வேதங்களில் தாலி கட்டப்படும் சடங்கு குறிக்கப்படவில்லையென்பதால் அதைக் கூறாது விடுத்தார் எனலாம். அரியர் வழக்கத்தின்படி கைத்தலம் பற்றுதலே திருமணம் முழுமை பெற்றதைத் தெரிவிக்குமாதலால் ஆண்டாள் தம்முடைய பாசுரங்களில் கைத்தலம் பற்றலைக் கூறுகிறார் எனலாம். சங்க காலத்தில் ''கைத்தலம் பற்றுதலே'' மணம் முற்றுப் பெற்றதற்கு அடையாளமாகக் கருதப்பட்டது.

''நேரிறை முன்கை பற்றிநுமர்தர

நாடறி நன்மண மயர்கஞ் சின்னாள்

கலங்கல் ஓம்புமின் இழங்கிழை யீரென்'' ( குறிஞ் - 231-233)

எனும் சங்கப்பாடல் ''கைத்தலம் பற்றுதலையே நாடறி நன்மணம்'' எனக்கொண்ட கொள்ளையைப் புலப்படுத்துகிறது.

பழந்தமிழரின் திருமணச் சடங்கில் முக்கிய கூறாகப் பெண்ணைக் கையால் பற்றித் தமர் தருதலே சிறப்பானதாகக் கருதப்பட்டது என்பதைச் சங்ககால திருமண நிகழ்ச்சியை விளக்கும் அகநானூற்று பாடலால் அறியலாம். அதே வழக்கம் ஆண்டாள் காலத்திலும் நீடித்திருக்கிறது என்பதைப் பாசுரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் கிராமங்களில் பெண்ணின் திருமணத்தைப் பற்றிப் பேசுகையில் ''யாராவது ஒருத்தன் கையிலே ஒப்படைச்சுட்டா என் பொறுப்புக் கழியும்'' என்று கையில் ஒப்படைத்தலைத் திருமணத்திற்கு உரியதாக்கிப் பேசுதலைக் கேட்கலாம். எனவே தாம் வாழ்ந்து வந்த தமிழ்ச் சமுதாயத்தின் திருமண வழக்கத்தைக் கூறித் திருமணம் நிறைவு பெற்றதை ஆண்டாள் கூறுவதால் அவர் தமிழர் திருமண முறையையே பெரிதும் வலியுறுத்தியுள்ளார் என்று கூறலாம்.

நன்றி: வேர்களைத் தேடி.

விருந்தோம்பலின் சிறப்பு - ம. சரளா தேவி

தமிழ் மக்களின் பண்டைக்கால பழக்க வழக்கங்களில் விருந்தோம்பல் ஒன்று.

கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு

முன்தோன்றிய மூத்தகுடி (புறப் 35)

தமிழ்க்குடி என்று அனைவராலும் போற்றப்படும் தமிழ் மக்களின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்புமிக்கதாகும். ஆனால் இப்போது அதன் சிறப்பு குறைந்துகொண்டே வருகின்றது. அதனை எடுத்துக்கூறும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது.

விருந்தோம்பலின் சிறப்பை விளக்கும் வகையில் இலக்கண நூலான தொல்காப்பியம், சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களான நற்றிணை, புறநானுறு, பத்துப்பாட்டு நூலான சிறுபானாற்றுப்படை, நீதி நூலான திருக்குறள், காப்பிய நூலான சிலப்பதிகாரம் ஆகிய நூல்கள் இக்கட்டுரையில் இடம் பெறுகின்றன.

தொல்காப்பியம் கூறும் விருந்து

தொல்காப்பியம் புதியதாக வரும் எல்லா இலக்கியங்களையும் விருந்து என்ற பொருளில் குறிப்பிடுகின்றது.

விருந்தே தானும்

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே (பொருள் 1495)

இதனை அடிப்படையாகக் கொண்டே புதியதாக வருபவர்களை விருந்தினர் என்கிறோம்.

நற்றிணையில் விருந்தோம்பலின் சிறப்பு:-

தம் இல்லத்திற்கு விருந்தினர் வரவேண்டும் என்ற எண்ணத்தையும் அவ்விருந்தினருக்கு இனிய உணவு அளிக்க வேண்டும் என்ற விருப்பத்தையும் கொண்டிருப்பர். அதனால் மீன் வேட்டைக்குச் சென்ற கணவர் விரைவில் திரும்பி வரவேண்டும் என்று எதிர்நோக்கிக் காத்திருக்கும் செய்தியும் இரவில் விருந்தினர் வந்தாலும் மனைவியும் கணவனும் சேர்ந்து மகிழ்ச்சியுடன் வரவேற்று விருந்து படைக்கும் செய்தியும் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன.

''............................ மனையிலிருந்து

இருங்கழி துழவும் பனித்தலைப்பரதவர்

திண்திமில் விளக்கம் எண்ணும்'' (நற்:372)

''அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும்

முல்லை சான்ற கற்பின் மெல்லியல்'' (42, 9-18)

புறநானூற்றில் விருந்தோம்பலின் சிறப்பு:-

பெருங்குன்றூர்கிழார் இளஞ்சேட் சென்னியிடம் பரிசில் பெறச் சென்ற பொழுது எனக்கு எந்தக் குறையும் இல்லை என்றாலும் விருந்தினர் வந்தால் அவர்களை உபசரிப்பதற்குத் தேவையான செல்வம் இல்லாத வறுமைநிலை மட்டும் என்னிடம் இருக்கின்றது. அதனை மட்டும் தீர்த்து வைப்பாயாக என்று கூறுவதன் மூலம் விருந்தோம்பலின் சிறப்பு வலியுறுத்தப்படுகின்றது.

விருந்துகண் டொளிக்குந் திருந்தா வாழ்க்கைப்

பொறிப்புன ருடம்பிற் றோன்றியென்

அறிவுகெட நின்ற நல் கூர்மையே (புற:266)

என்ற பாடல் வரிகள் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் கூறுகின்றது.

இதைப் போன்று 213, 254, 265, 279, 306, 316, 369 ஆகிய பாடல்களிலும் விருந்தோம்பல் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன.

சிறுபாணாற்றுப் படையில் விருந்தோம்பலின் சிறப்பு:-

சிறுபாணாற்றுப்படை அரசர்களின் கொடைச் சிறப்பைக் கூறுவதுடன் விருந்தோம்பல் பற்றிய செய்திகளையும் கூறுகின்றது.

எயில்பட்டின பரதவப் பெண்கள் சூடான குழல் மீன் கறியையும், வேலூரில் இருக்கும் எயினர் குலப்பெண்கள் இனிய புளிக்கறி சேர்த்து சமைத்த சோற்றுடன் காட்டுப்பசு இறைச்சியையும், ஆழுரைச் சார்ந்த உழவர்களின் தங்கைகள், குற்றிச் சமைத்த சோற்றுக் கட்டியுடன் பிளந்த காலுடைய நண்டுக்கறியையும் விருந்தோம்பலுக்குப் பயன்படுத்துவர் என்று சிறுபாணாற்றுப்படை கூறுகின்றது.

எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு

தேமா மேனிச் சில்வளை ஆயமொடு

ஆமான் நாட்டின் அமைவரப் பெறுகுவீர் (சிறு 175 - 177)

சுவைப்பு மான் அரிசி அமலை வெண்சோறு

சுவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர் (சிறு 194-195)

விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் கூறுவதுடன் ஒவ்வொரு ஊரிலும் என்ன வகையான உணவுகள் விருந்துக்குப் பயன்படுத்தப்பட்டன என்பதையும் சிறுபாணாற்றுப்படை சுட்டிக் காட்டுகின்றது.

திருக்குறள் கூறும் விருந்தோம்பலின் சிறப்பு:-

திருவள்ளுவர் விருந்தோம்பலுக்கு என்று தனி அதிகாரம் (விருந்தோம்பல் 9) படைத்து அதில் உள்ள பத்து குறள்களில் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவையாவன:

1. மனைவியுடன் வீட்டில் இருந்து பொருள்களைப் பாதுகாத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவி செய்யும் தன்மையுடையதாகும்.

2. விருந்தாக வந்தவர் வீட்டின் வெளியே இருக்கத் தான் மட்டும் உண்பது, சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் அது விரும்பத்தக்கது அன்று.

3. நாள்தோறும் தன்னை நாடிவரும் விருந்தினரைப் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக்கெடுதல் என்பது என்றுமே இல்லாத ஒன்றாகும்.

4. முகமலர்ச்சியுடன் நல்ல விருந்தினரைப் போற்றுகின்றவனுடைய வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்.

5. விருந்தினரைப் போற்றி உணவிட்டபின் எஞ்சியதைத் தான் உண்ணுகின்றவனுடைய நிலத்தில் விதைக்காமலேயே பயன் விளையும்.

6. வந்த விருந்தினரைப் போற்றி இனிவரும் விருந்தினரை எதிர்பார்க்கின்றவன் வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.

7. விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவிலானது என்று கூற முடியாது. விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற தன்மை உடையதாக அமையும்.

8. விருந்தினரை மதித்து உபசரிக்கும் வேள்வியில் ஈடுபடாதவர் பின்னர் பொருளை வருந்திக் காத்துப் பயனை அடையாமல் போனோமே என்று வருந்தும் நிலையை அடைவர்.

9. செல்வச் செழிப்புடன் இருக்கும் காலத்தில் வறுமை என்பது விருந்தோம்பலைப் போற்றாத அறியாமையாகும் அது. அறிவில்லாதவர்களிடம் மட்டுமே காணப்படும்.

10. அனிச்சமலர் முகர்ந்தவுடன் வாடிவிடும் விருந்தினரோ விருந்தளிப்பவரின் முகம் மலராமல் வேறுபட்டுத் தோன்றிய உடனேயே வாடிவிடுவர்.

''இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு'' (81)

''மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து'' (90)

சிலப்பதிகாரத்தில் விருந்தோம்பலின் சிறப்பு:-

இளங்கோவடிகள் மனையறும் படுத்த காதையில் ''விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையைக்'' கூறும்போது கண்ணகியின் விருந்தோம்பும் திறனைக் குறைக்கவில்லை. கொலைக்களக்காதையில்,

''அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும்...''

என்ற பாடல்வரிகள் அறநெறிச் செல்வோர்க்கு உணவு, உடை, அளிப்பதும் மேலோர்களைப் பேணிப் பாதுகாப்பதும் தவ வாழ்வு மேற்கொண்டு ஒழுகுபவர்களை வரவேற்று உபசரிப்பதும் மிகச் சிறப்புடையதான விருந்தினர்களுக்கு உணவளித்துக் காப்பதும் போன்ற விருந்தோம்பல் முறைகளைக் கோவலன் பிரிவினால் கண்ணகி செய்யாதிருந்தாள் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.

விருந்தோம்பலின் சிறப்பு:-

புதியதாக வருகின்ற விருந்தினரை வரவேண்டாம் என்று கூறுவது தமிழர் பண்பாடு இல்லை. அதுபோன்று உண்ணும்நேரம் பார்த்து வந்த விருந்தினரை ஒழிந்து போகுக என்று கூறுவதும் குற்றமாகும். விருந்தோம்பலின் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

தொகுப்புரை:-

தொல்காப்பியம் ''விருந்து'' என்பதை புதியது என்ற பொருளில் குறிப்பிடுகின்றது.

விருந்தினரை எதிர்நோக்கும் பண்பும், இரவில் விருந்தோம்பும் முறையும் நற்றிணையில் கூறப்பட்டுள்ளன. வறுமையிலும் விருந்தோம்ப வேண்டும் என்ற செய்தி புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

விருந்தோம்பலுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒவ்வொரு ஊரிலும் வெவ்வேறு வகையான உணவைப் படைக்கும் செய்தி சிறுபாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது.

திருக்குறள் விருந்தோம்பலுக்கு உவமையாக அனிச்சமலரைக் குறிப்பிடுகின்றது.

சிலப்பதிகாரம், கணவனைப் பிரிந்த நிலையில் விருந்தோம்பல் பெறாது என்கின்றது.

விருந்தோம்பல் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது. சிறப்பு மிக்கது என்பதை நூல்களின் மூலம் அறிய முடிகின்றது. ஆனால் இன்றைய காலத்தில் விருந்தோம்பும் பண்பு குறைந்து கொண்டே வருகின்றது. இந்த நிலை மாறவேண்டும் என்பதை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

 

செயல்பாட்டியல் நோக்கில் உலக்கை - பா. நேருஜி

முன்னுரை:

நாட்டுப்புற வழக்காறுகளை, கலைகளை, சடங்குகளை பல்வேறு நாட்டுப்புறவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யும் போக்கு இன்று வளர்ந்து கொண்டு வருகின்றது. இவ்ஆய்வுகள் நாட்டுப்புறவியலுக்கும் நாட்டுப்புற வழக்காறுகளுக்கும் புதிய அர்த்தங்களையும் உள்ளடக்கங்களையும் ஆழமான சிந்தனைகளையும் வழங்கி வருகின்றன. நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை வழிபாடு மற்றும் சடங்குகளில் பயன்படுத்தப் பெறும் புழங்குபொருட்களும் இத்தகைய கோட்பாட்டு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு விளக்கங்களைப் பெற்று வருகின்றன.

''வாய்மொழிப் பண்பாட்டிற்குச் செயற்பாட்டுக் கோட்பாட்டைப் பயன்படுத்துவது போன்று புழுங்கு பொருள்சார் பண்பாட்டிற்கும் பொருத்திப் பார்க்க முடியும்'' என்கிறார் தே. லூர்து. மேலும், ''கிராமக் கட்டிடங்கள் (கூரை வீடுகள், கொட்டகைகள், செட்டி நாட்டு வீடுகள்), விவசாயக் கருவிகள், மீன் பிடிக்கும் கருவிகள் ( பத்தக்கட்டை, தூரி, கச்சா, வலைகள் ), வாய்மொழி வழக்காறுகள் போன்ற எல்லாவற்றையும் செயற்பாட்டு நோக்கில் ஆய்வு செய்யலாம்'' என்றும் கூறுகின்றார். (நாட்டார் வழக்காற்றியல் கோட்பாடுகள் - பக்கம் - 45. 2000). இதன் அடிப்படையில் வேளாண் மள்ளர்களின் வாழ்க்கை மற்றும் சடங்குச் சூழல்களில் பயன்படுத்தப் பெறும் புழங்கு பொருளான உலக்கை மள்ளரின் பண்பாட்டை எங்ஙனம் வெளிப்படுத்தி நிற்கின்றது என்பதை விளக்கச் செயல்பாட்டுக் கோட்பாட்டு ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு இக்கட்டுரையில் விளக்கப் பெறுகின்றது.

செயல்பாட்டியல் - விளக்கம்:

குறிப்பிட்ட ஓரின மக்களின் பண்பாட்டில் நாட்டுப்புற வழக்காறுகளின் பயன்பாடு பற்றியும் அவை வகிக்கும் பங்குகள் பற்றியும் அறிவதே செயற்பாட்டுக் கோட்பாட்டின் ஆய்வு நோக்கமாகும். அதாவது நாட்டுப்புற வழக்காறுகள் எவ்வாறு ஒரு சமூக நிறுவனத்தின் இன்றியமையாக் கூறுகளாகச் செயல்படுகின்றன என்று அறிந்து விளக்குவதும் செயல்பாட்டியலின் முக்கிய பணியாக அமைகின்றது.

''செயல் என்பது தேவைகளின் அடிப்படையில் நிகழ்வதாகவும் அனைத்துப் பண்பாட்டுக் கூறுகளும் செயல் தன்மை வாய்ந்தவையாக உள்ளன. என்றும் மாலினோவ்ஸ்கி கூறுகின்றார். (பக்தவச்சல் பாரதி பண்பாட்டு மானிடவியல், பக்.178. 1999) ராட்கிளிஃப் பிரௌன் செயற்பாட்டியற் கொள்கையை விவரிக்கும் போது செயலைவிட அமைப்பிற்கு முக்கியத்துவம் தருகின்றார். பிரான்சிஸ் போவாஸ், ரூத்பெனடிக்ட், வில்லியம் பாஸ்கம், பீட்டர் போகாதிரெவ் போன்ற அறிஞர்களும் செயற்பாட்டியல் நோக்கில் தம் ஆய்வுகளை மேற்கொண்டு அதன் பயன்பாடுகளைத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

சமுதாய நிறுவனங்கள் சமயச் சடங்குகள் முதலியவற்றிக்கு நாட்டுப்புற வழக்காறுகள் செல்வாக்கினையும் மதிப்பையும் தந்து வருகின்றன. எந்த ஒரு பண்பாட்டிலும் அதன் வழக்கங்கள் பயன்படும் பொருள்கள், கருத்துகள், நம்பிக்கைகள் போன்ற அனைத்துக் கூறுகளும் மனிதனின் தேவைகளை நிறைவு செய்வதாகவே உள்ளன. பின்னாளில் அவை சமூக நிறுவனத்தின் ஓர் அங்கமாகவும் பிரிக்க முடியாத கூறாகவும் விளங்கி நிற்கின்றன. இவ்வடிப்படையில் உலக்கையின் செயல்பாடு ஆராயப் பெறுகின்றன.

உலக்கை:

உலக்கை என்னும் சொல்லிற்கு தானியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும், முனையில் இரும்புப் பூண் பொருத்தப்பட்ட உருண்டை வடிவ, நீண்ட மரச் சாதனம் என்று பொருள் கூறப்பட்டுள்ளது. (க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, பக்.151. 2000) பழங்காலத்தில் ஆண்கள் வேட்டையாடச் சென்ற நிலையில் பெண்கள் இருப்பிடத்திலேயே விதைகளைக் கொண்டு உற்பத்தி செய்யப் பழகினர். உற்பத்திப் பொருள்களை உணவுப் பண்டமாக மாற்றப் பாறைகளின் சிறிய குழிகளை உரலாகவும் உருண்டையான நீண்ட மரக்கட்டைகளை உலக்கையாகவும் பயன்படுத்தினர். பிற்காலத்தில் கட்டையின் இரு முனைப்பகுதியிலும் இரும்புப் பூன் மற்றும் வெண்கலப் பூண்களைப் பூட்டினர். (பூண் - வளையம்). ஒரு முனையில் சமமானதும் மற்றொரு முனையில் சிறிது குழிந்த பூணும் பூட்டப்பட்டன. இதனால் முனைகள் சிதையாமலும், விரிசலடையாமலும் நீண்ட காலம் பயன்பட்டன.

ஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்தபுராணத்தில் முருகனின் பூதபடைத் தலைவனாக சிந்துமேனனை அவுணர் படைத் தலைவனாக அதிகோரன் (அசுரன்) இரும்புலக்கையால் தாக்கிய செய்தி காணப்படுகின்றது.

''அடித்தலோடும் அவுணர்கின்ற ஆனோன்

இடுக்கண் எய்தி இவன் ஆவியை இன்னே

முடிப்பன் என்று முசலம் கொடு மொய்ம்பில்

புடைத்தனன் உறுமு வீழ்வது போல.

என்று வரும் இப்பாடலில் ''முசலம்'' என்பது இரும்பு உலக்கை என்ற ஆயுதத்தைக் குறிக்கின்றது. (ஸ்ரீகச்சியப்ப சிவாசாரியார் அருளிய கந்த புராணம் - மூலமும் தெளிவுரையும், 6-ம் பகுதி, பக்-342 2000). மேலும், ''விசிகம்'' என்ற சொல்லும் இரும்பு உலக்கையைச் சுட்டுவதாக உள்ளது.

தானியங்களை உரலில் இட்டு இடிக்கவும் குற்றவும் பயன்படுத்தப்படும் உலக்கைகள் தேக்கு, மருதமரம், புளியமரம், கடம்பமரம் போன்ற உறுதியான மரத்துண்டுகளால் செய்யப்பட்டவைகளாக 4 முதல் 5 அடி நீளமுள்ளவைகளாகக் காணப்படுகின்றன. மஞ்சள், மிளகாய் வற்றல் போன்றவற்றை இடிக்கச் ''கழுந்துலக்கை'' பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 3 முதல் 4 அடி வரை நீளமுள்ளதாக பூண் பூட்டப்படாத நிலையிலும் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

தானியங்களை உரலில் இட்டு இடிக்கவும், குற்றவும் மட்டும் பயன்படுத்தாமல் வாழ்க்கை மற்றும் வழிபாட்டுச் சடங்குச் சூழல்களிலும் முக்கியத்துவம் கொடுத்து உலக்கையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

உலக்கை பற்றிய பாடல்:

உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குற்றும் பொழுது பெண்கள் தலைவனைப் புகழ்ந்து பாடுவதாகச் சிலப்பதிகார வாழ்த்துக் காதை கூறுகிறது. இது ''வள்ளைப்பாட்டு'' எனக் குறிப்பிடப்படுகின்றது. வள்ளை என்றால் உலக்கை எனவே ''உரற்பாட்டு, உலக்கைப்பாட்டு, அவலிடி, அம்மானை வள்ளை என்ற பெயர்களாலும் இப்பாடல் (குறுந்தொகை மூலமும் உரையும் ப.க.86, 1994 மு. சண்முகம் பிள்ளை) வழங்கப்படுகின்றது.

வள்ளைக் கூத்து குறித்துக் கூறும் நா. வானமாமலை புறநானூற்றுப் பாடலின் அடிப்படையில் பின்வரும் கருத்தை முன்வைக்கின்றனார்.

''வலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த

வாய் கரும்பின் கொடிக் கூரை

சாறு கொண்ட களம் போல

வேறு வேறு பொலிவு தோன்ற

குற்றானா உலக்கையால்

கலிச்சுமை வியாலங்கண்''

இப்பாடலில் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் நாட்டுப்புற மக்கள் நெற்கதிர் வரிந்த கூரை வீடுகளின் முன்பு கரும்பை வாசலில் தோரணமாகக் கட்டியுள்ளனர். தானியம் குவியலாகக் கிடக்கிறது. பெண்கள் உலக்கையைக் கழுவி அணி செய்து வைத்திருக்கிறார்கள். அது நெல் குற்ற அல்ல. வள்ளக் கூத்தோடு களத்தின் நடுவே கிடத்துவதற்காக வைத்திருக்கிறார்கள். இவ்விழாவில் வள்ளைக் கூத்து, நெல் குற்றுவது போல ஆடும் கூத்து ஆடப்படுகின்றது. உழவுத் தொழிலின் ஆரம்காலத்தில் மகளிர் அத்தொழிலில் ஈடுபட்டிருந்ததன் எச்சமாகவும் மகளிரின் பங்கை வலியுறுத்துவதாகவும் இக்கூத்து காணப்படுகின்றது என்கிறார் (தமிழர் வரலாறும் பண்பாடும், பக்.15,2001).

உலக்கையால் தானியம் குற்றும் பொழுது வள்ளைப் பாடல் பாடப் பட்டது என்பதனை,

''பா அடி உரல பகுவாய் வள்ளை

ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப...

மெய் இயல் குறுமகள் பாடினாள் குறினே''

என்ற குறுந்தொகையின் மருதத் திணைப் பாடல் வெளிப்படுத்துகின்றது. இதில் தலைவியானவள் பரந்த அடியையுடை உரலினது வட்டவடிவ வாயினிடத்தே உலக்கையால் தானியம் குற்றும்போது வள்ளைப் பாட்டைப் பாடிக் குற்றினாள் என்று கூறப்பட்டுள்ளது.

தாலாட்டுப் பாடும் பொழுது,

''பள்ளிதனைக் கூட்டி

பதமாக அவல் இடித்து

இடைச்சிதனைக் கூட்டி

இலைபோல அவல் இடித்து''

என்றும்,

சிறுவர் பாடல்களில்

''மழை வருது மழை வருது

நெல்லை வாருங்கோ

மூனுபடி அரிசிகுத்தி

முறுக்கு சுடுங்கோ

என்றும்,

''பச்ச நெல்லு கிச்ச நெல்லு

குத்தத்தான் வேனும்

பணியாரம் கிணியாரம்

சுடத்தான் வேணும்''

என்றும், காதல் பாடலில்,

''வீதியிலே கல் உரலாம்

வீசி வீசிக் குத்துராளாம்''

என்றும், தாய் இறந்த பொழுது மகள்பாடும் ஒப்பாரிப் பாடலில்,

''தங்க அரிசி குத்தி

தனிப்பாலம் சுத்தி வந்தேன்''

என்றும் உலக்கையைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதன் வாயிலாக நெல் குற்றுதல், அரிசி இடித்தல் போன்ற செயல்கள் மக்களின் வழக்காறுகளில் பாடல்களாக இடம் பெற்றுள்ளன என்பதை

அறியலாம்.

உலக்கை பற்றிய கதை:

உலக்கை பற்றிய வாய்மொழிக் கதைகளும் மக்கள் வழக்கில் உள்ளன. ''ஒரு ஊருல ஒரு புருசன் பொண்டாட்டி இருந்தாங்க. புருசன் தெனமு மதியத்துல ஏதாவது ஒரு சாமியார வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து பொண்டாட்டிகிட்ட சாப்பாடு போடச் சொல்லுவான். அப்படி சோறு போடுறது அவளுக்குப் பிடிக்கல. அதனால யோசனை பண்ணி ஒரு நாளு சாமியாருக்கு முன்னால எலயப்போட்டுட்டு கடுச்சுக்க ஏதாச்சும் கடையில் வாங்கிட்டு வான்னு புருசங்கிட்ட சொன்னாள் புருசங் கடைக்கிப் போன சமயத்துல சாமியாரு முன்னால உலக்கையத் தூக்கிப் போட்டா(ள்) சாமியாரு திடுக்கினு பாத்தப்ப, கையெடுத்துக் கும்பிட்டு ''சாமி சாப்பிடுறதுக்கு முன்னாடி எம்புருசன் உங்கள உலக்கையால் மூனு அடி அடிப்பாரு. அதுக்கும் பின்னால் நீங்க திருப்தியா சாப்பிடலாம்,'' அப்படின்னு சொன்னா. அவ சொன்னதைக் கேட்ட சாமியாரு சாப்பாடே வேணாம்னு எந்திருச்சு வெளியில ஓடிட்டாரு. கடைக்கிப் போயிட்டு வீட்டுக்குள்ளார வந்த புருசன் சாமியார் எங்கன்னு கேட்டப்ப, பொண்டாட்டி சொன்னா ''சாமியாரு இந்த உலக்கய'' கேட்டாரு, உங்கள கேட்டுட்டுத்தாந் தருவேன்னு நாஞ் சொன்னே, அதுக்குக் கோவிச்சுக்கிட்டு சாப்புடாம எந்திரிச்சு போயிட்டாரு'' அப்படீன்னா உடனயே உலக்கயக் கையில் எடுத்துக்கிட்டு சாமியாருட்ட குடுக்குறதுக்கு ஒடினா(ன்) நம்மள உலக்கய தூக்கிக்கிட்டு ஒடிவர்ரான்னு நெனச்சுக்கிட்டு சாமியாரு ஓடியே போயிட்டாராம் கடைசி வரைக்கும் சிக்கவே இல்லையாம்.

இக்கதையின் வாயிலாக உலக்கை நகைச் சுவைக்காவும் ஆயுதமாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம்.

பழமொழியில்,

அவலநெனச்சு உரல இடிக்காத''

என்றும்,

விடுகதையில்,

அக்காள் சப்பாணி தங்கை நர்த்தனப் பெண்

இந்த இருவரும் இல்லாவிட்டால்

குடித்தனப் பெண் சிணுங்குவாள்

(விடை, உரல் உலக்கை) என்றும் உலக்கை குறித்த செய்திகள் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கை வட்டச் சடங்குகள்:

மள்ளர் இன மக்கள் தங்கள் வாழ்க்கை வட்டச் சடங்குகளான பெயர் வைத்தல், பூப்பு, குடிசை கட்டுதல், சடங்கு கழித்தல், திருமணம், பொங்கல், துள்ளுமாவு, மாவிளக்குமாவு, இடித்தல், பேயோட்டுதல், இறப்பு, சத்தியம், செய்தல் போன்றவற்றில் உலக்கையைப் பயன்படுத்தி வருகின்றனர். இச் சடங்குகளின் மூலம் இவ்வின மக்களுடைய உலக்கைச் செயல்பாட்டையும், நம்பிக்கைகளையும் அறிய முடிகின்றது. இச் சடங்குகள் வழிபாட்டுச் சடங்குகளுடன் தொடர்புடையவையாக உள்ளன.

பெயர் வைத்தல் சடங்கு:

பச்சை நெல்லை உரலில் இட்டு உலக்கையால் குத்தி அரிசியாக்கி பொங்கல் வைத்தப் பின்னரே குழந்தைக்குப் பெயர் வைக்கின்றனர். இச் சடங்கிற்கு அரிசி குத்திப் பெயர் வைத்தல் என்கின்றனர். இச் சடங்கு குழந்தை பிறந்து முப்பது நாள் கழித்து குலதெய்வத்தின் கோவிலில் நடத்தப் படுகின்றது. இச் சடங்கில் உலக்கையால் குத்தப்பட்ட அரிசியே பயன்படுத்தப் படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

பூப்புச் சடங்கு:

பூப்படைந்த பெண்ணிற்கு பூப்படைந்த நாளன்று தாய் மற்றும் அண்டை வீட்டுப் பெண்கள் கூடி நீராட்டுகின்றனர். பின்னர் வீட்டு வாசலில் உலக்கையைக் கிடத்தித் தாண்டச் செய்து வீட்டிற்குள் அனுமதிக்கின்றனர். உலக்கையை வாசலில் கிடத்தி தாண்டுவதால் காத்துக் கருப்பு வீட்டின் உள்ளே வராது என்று நம்புகின்றனர்.

குடிசை கட்டுதல் சடங்கு:

பூப்படைந்த பெண்ணிற்காக அப்பெண்ணிற்கு உரிமையுடைய தாய்மாமன் அல்லது அவரது மகன்களால் குடிசை கட்டப்படுகிறது. குடிசை கட்டப் பச்சை கம்மந்தட்டை, சோளத்தட்டை, பச்சை தென்னங்கீற்றுகள் பயன்படுத்தப்படுகின்றன. குடிசைக்குள் பண்ணரிவாள், இரும்பு, பெருக்குமாறு, உரல், உலக்கை ஆகியவற்றை போட்டு வைக்கின்றனர். இதனால் காத்துக் கருப்பு அப்பெண்ணை நெருங்காது என்று நம்புகின்றனர்.

சடங்கு கழித்தல்:

பூப்படைந்த பெண்ணின் தலையில் தாய்மாமன் மனைவி தண்­ர் ஊற்றி நீராட்டுகிறார். பின்னர் ஏழு எருக்கிலை, ஏழுகாசு, உலக்கை ஆகியவற்றை தாண்டச் செய்த பின்னரே வீட்டிற்குள் அனுமதிக்கின்றனர். இதனால் தீட்டு என்ற நிலையும், ஊரார் கண்பட்டதால் ஏற்படவிருந்த நோயும் கழிந்து போவதாக நம்புகின்றனர். கண்ணேறு கழித்தலை அடிப்படையாகக் கொண்ட இச் சடங்கு 11-ம் நாள் அல்லது 16ஆம் நாள் நடத்தப்படுகின்றது.

திருமணச் சடங்கு:

தானியங்களைக் குற்றி உணவு சமைக்கப்பயன்படும் உலக்கையானது திருமணத்தின் போது தாய் வீட்டுச் சீதனமாகப் பெண்களுக்குக் கொடுத்தனுப்பப்படுகின்றது.

பொங்கல் சடங்கு:

இம்மக்கள் அனைத்து சடங்குச் சூழலிலும் பொங்கல் வைக்கின்றனர். திருவிழா, பெயர் வைத்தல், பூப்பு, திருமணம், பொங்கல், திருநாள், அறுவடை நாள் போன்ற நாட்களில் பொங்கல் வைக்கும் போது பச்சை நெல்லை உலக்கையால் குத்தி அரிசியாக்கிப் பெண்கள் பொங்கல் வைக்கின்றனர்

துள்ளுமாவு இடித்தல்:

பச்சரிசியை உரலில் இட்டு இடித்துத் துள்ளிச் சிதறும் நிலைக்கு வரும் பொழுது அதனுடன் வெல்லத்தையும் போட்டு இடிக்கின்றனர். இதனைத் ''துள்ளுமாவு'' என்று குறிப்பிடுகின்றனர். இடித்த மாவை சுளகு, முறம் மற்றும் பாத்திரங்களில் போட்டு மேலாக இரண்டு மூன்று வேப்பிலைகளைப் போட்டு கோவிலில் வைத்து வழிபட்ட பிறகு அனைவருக்கும் வழங்குகின்றனர். ஊரில் அம்மை போன்ற நோய்கள் வராமல் இருக்க தெய்வத்தை வேண்டி இச் சடங்கு செய்வதாகக் கூறுகின்றனர்.

மாவிளக்கு மாவு இடித்தல்:

உரலில் இட்டு இடித்த பச்சரிசி மாவை சல்லடையால் சளித்துக் காய்ச்சிய வெல்லப்பாகுடன் கலந்து அம்மியில் தட்டி உருண்டை பிடிக்கின்றனர். அதில் குழி செய்து எண்ணெய் ஊற்றித் திரியிட்டு விளக்கேற்றுகின்றனர். ஒரே உரலில் பெண்கள் இருவர் இரு உலக்கையைக் கொண்டு இந்த மாவைக் குற்றுகின்றனர். இதனை ''மாவிளக்கு மாவு குற்றுதல்'' என்று குறிப்பிடுகின்றனர்.

பேயோட்டுதல் சடங்கு:

''பேய் பிடித்த பெண்ணை உலக்கை துடைப்பம் போன்றவற்றால் கடுமையாக அடித்துத் துன்புறுத்துவதாக சு. சுண்முகசுந்தரம் குறிப்பிடுகின்றார் (நாட்டுப்புறவியல் ப.145. 1999). மேலும், பேயோட்டுதல் என்ற பெயரில் நோயுற்றவர்களுக்கு முரட்டு வைத்தியமாக இச்செயல் செய்யப்படுவதாகவும் கூறுகின்றார்.

பேய் பிடித்த பெண்ணிடமிருந்து பேயை விரட்டப் பூசாரி அல்லது பேயோட்டுபவர் ஈடுபடுகின்றார். உட்கார்ந்த நிலையில் தலைவிரி கோலமாக ஆடச் செய்து அப்பெண் கேட்கும் பொருள்களைக் கொடுத்து ஓடிவிடும்படி கூறுகின்றார். ஒத்துக் கொண்ட பின்பு தலையில் கல்லை வைத்து ஓடச் செய்கின்றார். ஆலமரம், புளியமரம், நாவல்மரம் போன்ற மரத்தடியில் கல் சுமந்தபடி நிற்கும் பெண்ணிடமிருந்து கல்லை கீழே போடச் செய்கின்றனர். மரத்தில் ஆணியை அடித்து பேய் பிடித்த பெண்ணின் உச்சந்தலை முடியை ஆணியில் சுற்றிய பின்பு முடியை கத்தரித்து மரத்தில் பொருத்துகின்றனர். பின்னர் அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து வாசலில் உலக்கையைப் போட்டுத் தாண்டச் செய்து உள்ளே அனுமதிக்கின்றனர்

இறப்புச் சடங்கு:

இம் மக்கள் இறந்தவர்களை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று புதைகின்றனர் அல்லது எரியூட்டுகின்றனர். சுடுகாடு வரை செல்லும் ஆண்களைப் பின் தொடந்து வரும் தீய ஆவிகள் வீட்டிற்குள் வராமல் இருக்க வீட்டு வாசலில் உலக்கையைத் தாண்டச் செய்து பின்பு உள்ளே அனுமதிக்கின்றனர். இதனால் வீட்டின் உள்ளே தீய ஆவிகள் வரமுடியாமல் திரும்பிச் சென்று விடுவதாக நம்புகின்றனர்.

சத்தியம் செய்தல்:

நாட்டுப்புற மக்களிடம் சத்தியம் செய்யும் வழக்கம் காணப்படுகின்றது. உண்மை என்பதைக் கூற சத்தியம் செய்கின்றனர். கை மீது கைவைத்தும், பெற்ற பிள்ளைகள் மீதும், கற்பூரத்தை அடித்தும், குழந்தையைத் தாண்டியும், துண்டைத் தாண்டியும், சத்தியம் செய்யும் வழக்கம் காணப்படுகின்றது. இம் மக்களிடம் உலக்கையைத் தாண்டி சத்தியம் செய்யும் முறையும் காணப்படுகின்றது. உலக்கையைத் தாண்டிப் பொய்ச்சத்தியம் செய்தால் தீமை ஏற்படும் என்று நம்புகின்றனர்.

சந்திர கிரகணம்:

கேது என்ற பாம்பு சந்திரனை விழுங்கி பின்பு வெளிவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுவதாகப் புராணங்கள் கூறுகின்றது. இதனை அறிய இம் மக்கள் உலக்கையைப் பயன்படுத்துகின்றனர். வெண்கலக் கும்பாவில் பாதியளவு நீரை ஊற்றி உலக்கையின் குழிந்த பூண் பகுதி கும்பாவிற்குள் வைத்து ஊன்றிய நிலையில் பிடித்துக் கொள்ளவேண்டும். நிலவின் ஓரப்பகுதியானது சிவப்பு நிறமாக மாறும் போது உலக்கை தானாகவே பிடிமானம் இல்லாமல் நிற்பதாகவும் நிலவின் ஓரம் மீண்டும் வெண்மை நிறமாக மாறும்போது உலக்கை விழுந்து விடுவதாகவும் கூறுப்படுகின்றது. உலக்கை விழாமல் நிற்கும் போது முழுச் சந்திரகிரகணம் நடைபெறுவதாக நம்புகின்றனர்.

வாயுப்பிடிப்பு:

உடலின் இடுப்புப் பகுதியில் நிமிர முடியாதபடி வலி ஏற்படுத்தக் கூடிய இந் நோயைப் போக்குவதற்கு இம் மக்கள் வெண்கலக் கும்பாவில் கால் பகுதிக்கு நீரை ஊற்றி வைத்து, பிறகு பழைய துணியில் தீயைப் பொருத்தி எரியவிட்டு துணி பாதி எரிந்து கொண்டிருக்கும் பொழுதே கும்பா நீரில் போட்டு உலக்கையில் குழிந்த பூண் பகுதியால் அழுத்த வேண்டும் என்றும் அப்பொழுது உலக்கையானது எந்தப் பிடிமானமும் இல்லாமல் நிற்கும் என்றும் உலக்கைவிழும் பொழுது வாயுப்பிடிப்பானது விட்டுவிடுவதாகவும் கூறுகின்றனர். உலக்கை சுமார் மூன்று நாள்வரை கூட நிற்பதாகத் தெரிவித்தனர்.

சுளுக்கு:

உடலில் கை, கால், கழுத்து, இடுப்பு, போன்ற உறுப்புகளின் நரம்பு புரளுதலை சுளுக்கு என்கின்றனர். இந்நோயை நீக்க உடலில் வலி உள்ள பகுதியில் உலக்கையின் குழியான பூண் பகுதியை வைத்து நிறுத்தும்போது உலக்கை பிடிமானம் ஏதுமின்றித் தானாகவே நிற்பதாகவும் தாங்க முடியாத வலியை ஏற்படுத்துவதாகவும் மேலும் உடலில் எப்பகுதியில் சுளுக்கு ஏற்பட்டிருந்தாலும் கால் பகுதியில் மட்டும் உலக்கை நிறுத்தி சுளுக்கை நீக்கலாம் என்றும் கூறுகின்றனர். இவ்வைத்தியத்தில் உலக்கையை ஒரு நிமிடம் வரை கூட நிறுத்த முடியாது என்றும் மூன்று நாட்களில் சுளுக்கு சரியாகிவிடுவதாகவும் கூறுகின்றனர்.

தொழில் பயன்பாடு:

உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளப் பெண்கள் தங்கள் வீட்டிலுள்ள நெல்லைத் தாங்களே உலக்கை கொண்டு குற்றி அரிசியாக மாற்றியுள்ளனர். சில இடங்களுக்கு நெல் குற்றல் என்னும் தொழிலுக்குச் சென்று கூலியாக நெல் அல்லது அரிசியைப் பெற்றுள்ளனர். பெரிய பெரிய இல்லங்களின் விசேசத்தின் பொழுது நெல்குற்ற கூலிக்குச் சென்றுள்ளனர்.

அவல் என்னும் சிற்றுணவு தயாரிக்கும் இடங்களுக்கு நெல் குற்ற கூலிக்குச் சென்றுள்ளனர். நெல் குற்ற உரலில் உலக்கை கொண்டு ஒரே பெண் ஈடுபடுவதையும், ஒரே உரலில் இரு பெண்கள் இரு உலக்கை கொண்டு மாறிமாறி குற்றுவதையும் காணமுடிகிறது.

நாட்டுப்புற மக்களின் பண்பாடுகளை அறிவதற்கு அவர்கள் பயன்படுத்தும் புழங்கு பொருட்கள் பற்றிய தரவுகள் அவசியமானதாகின்றன. மாறிவரும் சூழலுக்கேற்ப மக்களுடைய பழக்க வழக்கங்களும் புழங்கு பொருட்களும் மாற்றங்களைப் பெற்று வருகின்றன. மாற்றங்களை ஏற்படுத்தும் புதிய புழங்கு பொருட்களை ஏற்றுக் கொண்டாலும் பழைய புழங்கு பொருட்களே பண்பாட்டை பறைசாற்றும் எச்சங்களாக உள்ளன. கிராம மக்களுடைய புழக்கத்திலிருந்து மறைந்து கொண்டிருக்கும் பாரம்பரியப் புழங்கு பொருளான உலக்கையானது தானியங்களை உரலில் இட்டுக் குற்றவும் இடிக்கவும் மட்டும் பயன்படாமல் வாழ்க்கை வட்டச் சடங்குகளான பெயர் வைத்தல், பூப்பு, குடிசை, கட்டுதல், சடங்கு கழித்தல், திருமணம், பொங்கல், துள்ளுமாவு, மாவிளக்கு, மாவு இடித்தல், பேயோட்டுதல், இறப்பு, சத்தியம் செய்தல் போன்றவற்றில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

உலக்கையானது இம்மக்களுடைய சமூக நிறுவனங்களின் அங்கமாக இடம் பெற்று வருகின்றது என்பதை அவர்தம் வாழ்க்கை வட்டச் சடங்குகளின் வழி அறியமுடிகின்றது. இன்றைய நாகரீக வளர்ச்சிச் சூழலிலும் உலக்கையானது மள்ளரின் மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் புழங்கு பொருளாகத் திகழ்வதற்குச் சமூக நிறுவனங்களின் பிரிக்கமுடியாத கூறாக அது இடம் பெற்றுத் தன் செயல்பாட்டு முக்கியத்துவத்தை உணர்த்தி வருவதே காரணம் எனலாம்.

முடிவுரை:

1. வேளாண் மள்ளரின் மக்கள் தங்கள் வாழ்வியற் சடங்குகளான பெயர் வைத்தல், பூப்புச் சடங்கு, திருமணம், பொங்கல், துள்ளுமாவு, மாவிளக்கு, மாவு இடித்தல், பேயோட்டுதல், இறப்புச் சடங்கு ஆகியவற்றில் உலக்கையைச் சடங்குப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர்.

2. தீய ஆவிகளிலிருந்து பாதுகாக்கும் புனிதப் பொருளாகவும், தீட்டு கழிக்கும் பொருளாகவும் உலக்கை உள்ளது.

3.அவல் என்னும் சிற்றுணவு தயாரிக்கும் நெல்லடிக்கும் இடங்களுக்கு இவ்வின மக்கள் கூலிக்குச் சென்று நெல் அல்லது அரிசியைக் கூலியாகப் பெற்றுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

4. உலக்கையின் செயல்பாடு இன்றளவும் தொடர்வதற்கு அது சமூக நிறுவனங்களோடு பிரிக்க முடியாத கூறாக இணைந்துவிட்டதே காரணமாகும்.

 

செயல்பாட்டு நோக்கில் நெல் - மா. சண்முகவேலு

''நெல்லின மக்கள்" என்று அழைக்கப்பட்டு வரும் ''தேவேந்திரகுல வேளாளர்'' வாழ்க்கையில் பயன்படுத்தப் பெறும் முக்கிய புழங்கு பொருளான ''நெல்லைச் செயல்பாட்டு நோக்கில் இக்கட்டுரை ஆராய முயல்கிறது. வாழ்வியல் சடங்குகளைப் பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என்று நான்கு நிலைகளில் ஆராயலாம். இச்சடங்கு முறைகளில் பல்வேறு புழங்கு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேவேந்திரகுல வேளாளர் சடங்கு முறையில் நெல் முதன்மைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

பிறப்பு: குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையைக் குளிப்பாட்டி படுக்க வைத்து சேனைப்பால் தொட்டு வைக்கும் சடங்கு நடைபெறும். பின்னர் தாய்மாமன் ''தொட்டிக் கம்பு'' வாங்கிக் கொடுத்தல், பெயர் வைத்தல், காது குத்துதல் என்னும் சடங்குகள் நடைபெறுகின்றன. குழந்தை பிறந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து பெயர் வைக்கும் சடங்கு நடைபெறுகிறது. பெயர் வைக்கும் போது பச்சை நெல் குத்தி அரிசி எடுத்து குலதெய்வத்திற்குப் பொங்கல் வைத்து வழிபாடு செய்து பெயர் வைக்கின்றனர். இதனை ''அரிசி குத்திப் பெயர் வைத்தல்'' என்பர். குழந்தை பிறந்து ஓராண்டு முடிந்தவுடன் குழந்தைக்கு முடி இறக்கிக் காது குத்தும் சடங்கு நடத்துவர். இதனை ''காது குத்துக் கல்யாணம்,'' ''காதணிவிழா'' என்று குறிப்பிடுகின்றனர். இச்சமூகத்து மக்கள் தங்களது குழந்தைகளுக்கு மற்ற மக்கள் போன்று உலோகத்தைக் கொண்டு காது குத்தாது தங்களது வயல்களில் விளையும் ''நெல்மணிகளைக் கொண்டே காது குத்துகின்றனர். பேய் பிசாசுகளிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற காது குத்துவதாக இம்மக்கள் நம்புகின்றனர். தற்பொழுது இம்மக்களிடம் நெல் மணிகளைக் கொண்டு காது குத்தும் வழக்கம் மறைந்து வருகிறது.

பூப்புச் சடங்கு: பெண் திருமணம் ஆவதற்குத் தகுதி பெறுதலும், தாய்மை அடைவதற்கு உரிய உரிமையை அடைதலும் பூப்படைதல் ஆகும். இப்பூப்புக் காலத்தை ஒட்டிச் செய்யப்படும் சடங்குகள் பூப்புச் சடங்காகும். இம்மக்கள் இதனைப் பூப்படைதல், சடங்காதல், ஆளாதல், குமரியாதல், சமைதல், வயசுக்கு வருதல் என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். ஒரு பெண் பூப்படைந்தவுடன் அவளது தாய் மாமன் அல்லது அவனது மகன் தென்னை, பனை ஆகியவற்றின் ஓலைகளைக் கொண்டு வீட்டை விட்டுத் தனியே குச்சில் கட்டுவான். அக்குச்சிலின் உள்ளே ''பச்சை நெல்'' பரப்பி அதன்மேல் வைக்கோல் போர்த்தி அருகில் "நிறைபடி நெல்" வைத்து அவற்றில் வெற்றிலை சொருகி வைத்திருப்பார். அதன் பின்னரே பூப்படைந்த பெண்ணைக் குச்சிலின் உள்ளே இருக்க வைப்பர் பூப்படைந்த பெண்ணின் உறவினர்கள் பச்சை நெல் குத்தி அரிசி எடுத்து அதனை மாவாக்கி பணியாரம் மற்றும் களி செய்து கொடுப்பர். பூப்புக்காலங்களில் இரத்தப்போக்கு அதிகம் ஏற்படுவதால் உடலில் ஏற்படும் சோர்வைப் போக்கி வலுச் சேர்ப்பதற்கு இவற்றைத் தருவர். பூப்படைந்த பெண்ணிற்கு 11 அல்லது 15 வது நாளில் தலைக்கு தண்­ர் ஊற்றி தாய்மாமன் எடுத்து வந்த புத்தாடைகளை அணிவித்து அலங்காரம் செய்து முக்காலியில் வண்ணார் விரித்த வெள்ளைத்துணியின் மேல் அமரச் செய்வர். அப்போது அவளின் முன்னே ''நிறைபடி நெல்லில்'' வெற்றிலை சொருகி வைப்பர். பின்னர் நெல் நிரப்பிய கூடையில் பூப்பெய்த பெண்ணை அமரச் செய்து தாய்மாமன் மேலும், கீழம் மூன்று முறைத் தூக்கி வைப்பார். இச்சடங்கிற்கு வரும் உறவினர்கள் 7படி, 9படி, 11படி, 15படி, 17படி, ''பச்சை நெல்'' கொண்டு வருவர். இப்பூப்புச் சடங்கில் இடம்பெறும் ''நெல்'' பூப்படைந்த பெண் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் வளமையைப் பெற வளமையின் குறியீடாகச் செயல்படுகிறது.

திருமணம்: ஆணும், பெண்ணும் ஒன்றினையும் நிகழ்ச்சியே திருமணம். திருமணத்திற்கு முக்கியமாகத் தேவைப்படுவது ''தாலி'' ஆகும். இத் தாலியை ஆசாரியிடம் செய்யக் கொடுக்கும்போது இச்சமூகத்து மக்கள் நல்ல நாள், நேரம் பார்த்து நிறைபடியில் நெல் வைத்து அத்துடன் குங்குமம், மஞ்சள் முதலிய வழிபாட்டுப் பொருள்களை வைத்து வழிபாடு செய்து ''தாலி செய்வதற்கு உரிய தங்கத்தை ஆசாரியிடம் உருக்கச் சொல்லுவர். இதனை ''பொன் உருக்கிவிடுதல்'' என்று குறிப்பிடுவர். ''தாலி என்பது மங்கலப் பொருளாகும். அந்த மங்கலத்தின் குறியீடாக ''நெல்'' பயன்படுத்தப்படுகிறது.

திருமணத்திற்கு வீட்டில் முகூர்த்தக்கால் ஊன்றும் போது முகூர்த்தக்காலில் நெல், கம்பு முதலிய நவதானியங்களை மஞ்சள் தோய்த்த வெள்ளை துணியில் முடிந்து கட்டுவர். மணமேடையில் நெல்லைப் பரப்பியும் வைக்கின்றனர். திருமணம் முடிந்து வீட்டிற்குள் செல்லும் மணமக்களுக்கு மாப்பிள்ளையின் சகோதரி செம்பின் வெளிப்புறத்தில் பச்சரிசியை மாவாக்கிப் பூசி அதில் நெல்லையும் குண்டுமணியையும் பதித்து வாய்ப்பகுதியில் விளக்கேற்றி ஆரத்தி எடுப்பார். இதனை ''முத்து ஆரத்தி '' என்பர் இது இம்மக்களின் வேளாண் பண்பாட்டைக் காட்டுகிறது. திருமணம் முடிந்து மணமக்கள் பெண் வீட்டிற்கு முதல் முதலில் வரும் போது வண்ணார் மாத்து விரிக்க அதன் மேல் நெல்லைப் பரப்பி நடந்துவரச் செய்கின்றனர்.

இறப்பு: ஒரு மனிதன் இறந்தது முதல் செய்யப்படும் சடங்கினை ''இறப்புச் சடங்கு, ஈமச் சடங்கு, இறுதிச் சடங்கு'' என்று குறிப்பிடுகின்றனர். தேவேந்திர குல வேளாளர் ஒருவர் இறந்தவுடன் அவரைக் குளிப்பாட்டிப் படுக்க வைப்பர் அவரின் தலைமாட்டின் அருகே நிறைபடி நெல் அல்லது நின்ற மரக்கால் நெல், தேங்காய் பழம் வைத்து ஊதுபத்தி பற்ற வைத்து வழிபாடு செய்வர் பின்னர் இறந்தவரின் உறவினர்கள் சின்ன நார்ப்பெட்டியில் பச்சை நெல்லைக் கொண்டு வந்து பிணத்தின் கால் பகுதியில் குவித்து வழிபாடு செய்வர். இவ்வாறு ''நெல்'' கொண்டு வருவதை ''பச்சை கொண்டு வருதல்'' என்பர். ஒருவர் இறந்தவுடன் அவர் தெய்வ நிலையை அடைந்து விடுவதாக இம்மக்கள் நம்புகின்றனர். தெய்வத்திற்கு நெல்லும் பூவும் தூவி வழிபாடு செய்வது போன்று இறந்தவர்க்கு இம்மக்கள் நிறைபடி நெல்லும், கால் பகுதியில் நெல்லினைக் குவித்தும் வழிபாடு செய்து தமது நெல் பண்பாட்டை வெளிக்காட்டிக் கொள்கின்றனர்.

பிணத்தைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வதற்கு முன் பிணத்தைக் குளிப்பாட்டி வீட்டின் முன் வைக்கின்றனர். பிணத்தைச் சுற்றி நெல் போடப்படுகின்றது. பின்னர் இறந்தவர் மகனும், மருமகனும் கையில் நெல்லும் விளக்கும் வைத்துக் கொண்டு மூன்று முறை சுற்றி வருகின்றனர். மூன்றாவது முறை வரும் போது மாட்டுச்சாணி உருண்டையை நெல்லில் தோய்த்து பிணத்தின் கையில் வைத்து ''மூதேவி போய் சீதேவி வா'' என்ற மூன்று முறை கூறி வாங்குகின்றனர். வாங்கிய சாணி உருண்டையை வீட்டிற்குள் பிணம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் சுவற்றில் அப்பி வைக்கின்றனர். பின்னர் தினந்தோறும் அதன் மேல் தண்­ர் தெளித்து வருகின்றனர். நெல் முளைத்து தினந்தோறும் அதன் மேல் தண்­ர் தெளித்து வருகின்றனர். நெல் முளைத்து வளர்ந்து வந்தால் குடும்பம் சிறக்குமென்றும் இல்லையென்றால் ஏதோ தீங்கு உள்ளதாகவும் நம்பி வருகின்றனர்.

பிணத்தைக் குழியில் புதைத்தல் அல்லது எரியூட்டுதலுக்கு முன் பச்சை நெல்லில் இருந்து குத்தி எடுக்கப்பட்ட அரிசியை வைத்திருப்பர். பிணத்தின் வயிற்றுப் பகுதியில் வண்ணார் துண்டு விரித்திருப்பார். இத்துண்டில் சில்லறைக் காசுகளைப் போட்டு விட்டு அரிசியை எடுத்து மூன்று முறை பிணத்தின் மேல் போடுவர். இந்நிகழ்ச்சியை ''வாய்க்கரிசி போடுதல்'' எனக் குறிப்பிடுகின்றனர். இந்நிகழ்ச்சி பெண் மக்கள் குடம் உடைக்கும் ''இடுகாட்டிலும்'' பிணத்தைப் புதைக்கும் சுடுகாட்டிலும் நடைபெறுகிறது. இடுகாட்டில் பெண்களும், சுடுகாட்டில் ஆண்களும் நிகழ்த்துகின்றனர். சுடுகாட்டிற்கு பெண் மக்கள் வருவதற்கு அனுமதி இல்லாத காரணத்தால் இடுகாட்டிலேயே செய்கின்றனர். ''இடுகாடு'' என்பது ஊருக்கும் சுடுகாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

இறந்த மூன்றாவது நாள் ''குழி மெழுகுதல்'' என்ற சடங்கு நடைபெறுகிறது. சுடுகாட்டிற்குச் சென்று பிணத்தைப் புதைத்த குழியினைச் சமப்படுத்தி தண்­ர் ஊற்றி மெழுகுகின்றனர். பின்னர் குழிமேட்டின் தலைப்பகுதியில் பள்ளம் பறித்து பால் ஊற்றி அதன் மேல் ''நெல்லைத்'' தூவுகின்றனர். அந்நெல் நன்கு முளைத்து வந்தால் இறந்தவர் குடும்பத்தில் உள்ளோருக்கு நன்மை பயக்குமென்றும், முளைக்கவில்லையென்றால் தீமை பயக்குமென்றும் நம்புகின்றனர். ஒரு மாதம் கழித்து இறந்தவர் அணிந்த ஆடை. அவருடைய புகைப்படம். அவர் விரும்பிப் புழங்கிய பொருட்கள் அத்துடன் ''நிறைப்படி நெல்'' வைத்து வழிபடுகின்றனர். ''சீதேவி வாங்குதல்'' சடங்கில் மருமகள் வைத்திருந்த நிறைபடி நெல்லில் இருந்து அரிசி எடுத்து மாவாக்கி அதில் மாவிளக்கு செய்தும் வழிபடுகின்றனர்.

வழிபாட்டில் நெல்: உழவுத் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்ட இம்மக்கள் நெல், வாழை, கரும்பு ஆகியவற்றைச் சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றைப் பயிர் செய்ய தொடங்குவதற்கு முன் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் நல்ல நாள் பார்த்து உழவைத் தொடங்குகின்றனர். அப்போது வீட்டிலிருக்கும் அனைவரும் வழிபாடு செய்து ஏர், கலப்பையைப் பிடித்து சிறிது தூரம் உழுகின்றனர். பின்னர் வீட்டிலிருந்து ''விதை நெல்'' சிறிது கொண்டு வந்து வீட்டில் உள்ளோர் அனைவரும் மூன்று முறை அள்ளி விதைக்கின்றனர். இதனை ''விதை போடுதல்'' என்றும் ''ஏர் விடுதல்'' என்றும் அழைக்கின்றனர். இதனை ''பொன்னேர் பூட்டுதல்'' என்பர். நெல் சாகுபடி செய்யும் காலம் தொடங்கி விட்டது என்பதை அறிவிக்கும் விழாவாக இவ்விழா காணப்படுகின்றது. நெல் விளைந்தவுடன் அறுவடைக்கு முன்னர் நல்லநாள் பார்த்து வயலில் சிறிது நெல் கதிர்களை அறுத்து கோவிலில் வைத்து வழிபாடு செய்வர். இதனை ''நாள் கதிர் அறுத்தல்'' என்று குறிப்பிடுகின்றனர்.

''அலகு கதிர்'' என்பது அறுவடைக்கு முன் நல்லநாள் பார்த்து அறுக்கப்பட்ட நெல்கதிரின் தாளினை நன்கு பின்னித் திரித்து மணி மகுடம் போன்றோ வேல் போன்றோ தேர் போன்றோ செய்து கோவிலுக்கு காணிக்கையாக்கி வழிபாடு செய்வதே ஆகும். இவை பெரும்பாலும் பழநி, மதுரை, கோவை, மாவட்டங்களில் காணப்படுகிறது.

அறுவடை முடிந்து களத்து மேட்டில் நெல் குவிக்கப்பட்டவுடன் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்றனர். பின்னர் நிறை சுளகு நெல் எடுத்து வைப்பர். இந்த நிறை சுளகு நெல்லைத் தனது குலதெய்வத்திற்குக் காணிக்கையாக்குகின்றனர். குல தெய்வம் மட்டுமல்லாது திருச்செந்தூர் முருகன், பழநி முருகன், தாயமங்களம் முத்து மாரியம்மன் போன்ற கோவிலுக்கும் நெல்லைக் காணிக்கையாகப் படைகின்றனர். தன்னையும் தனது நெல் வேளாண்மையையும் காத்து செழிப்புடன் வளர்வதற்குத் துணையாக இருந்த தெய்வத்திற்கு நன்றி சொல்லும் வகையிலேயே இந்த நெல் காணிக்கையாக்கப்படுகிறது

தேவேந்திரகுல வேளாளர் வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை செய்யப்படும் அனைத்துச் சடங்குகளிலும் ''நெல்லே'' முதன்மைப் பொருளாக இடம் பெறுகிறது.

 

இறப்புச் சடங்கில் புழங்கு பொருட்கள் - பா. நேருஜி

மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகள் வளமும் நலமும் வேண்டி மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகையச் சடங்குகள் வாழ்வியல் சடங்குகள் எனப்படுகின்றன. பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, போன்றவை மங்கலச் சடங்குகள் என்றும் இறப்புச் சடங்கை அமங்கலச் சடங்கு என்றும் பகுத்துள்ளனர். சமுதாயத்தில் இறப்பு என்பது ஒரு துக்க நிகழ்ச்சியாகவும், இறப்பு நடந்த வீட்டார் தீட்டுப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். இத்தீட்டினைச் சடங்குகளால் மட்டுமே போக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் புனிதத் தன்மை வாய்ந்தவையாகவும் தனித்த அர்த்தமுடையவையாகவும் கருதப்படுகின்றன. இக் கட்டுரை மள்ளர் இன மக்களின் இறப்புச் சடங்கில் முக்கிய இடம் பெறும் புழங்கு பெருட்களின் செயல்பாடுகளை களப்பணியின் வழிப் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் விளக்க முற்படுகின்றது.

நெல் - பயன்பாடு:

இறந்தவரைக் குளிப்பாட்டி நற்காலியில் அமரவைத்த பின்னர் பிணத்திற்கு முன்பாக இடப்புறம் நிறை மரக்கால் நெல்லும் வலப்புறம் படி நிறைய நெல்லும் வைத்து வழிபடுகின்றனர். ஊர் மக்கள் சிறிய நார்ப் பெட்டியில் நெல்லைக் கொண்டு வந்து பிணத்தின் கால் பகுதியில் குவித்து வைத்து வணங்குகின்றனர். இவ்வாறு கொண்டு வருதலைப் ஊர்ப் பச்சை கொண்டு வருதல் என்கின்றனர். (தகவல் - பத்மாவதி - 63 - K. இராமநாதபுரம்) பிற ஊர்களில் இருந்து உறவினர்கள் நெல் கொண்டு வந்து கால் மாட்டில் குவித்து வணங்குகின்றனர். இவ்வாறு கொண்டு வருதலைப் பச்சை கொண்டு வருதல் என்கின்றனர்.

பிறந்த வீட்டுக் கோடி கொண்டு வருதல் என்னும் சடங்கின் போது உறவினர்களால் நெல், சீயக்காய், சிறிதளவுத் தண்­ர், கோடித் துணி போன்றவை இறந்தவரின் பிறந்த ஊரிலிருந்து உறவினர்களால் கொண்டுவரப்படுகின்றது. நெல்லை மட்டும் கால் மாட்டில் குவித்து வைத்து வணங்குகின்றனர். (தகவல் - கர்ணன் - 45 - முருகன்பட்டி)

நீர்மாலை எடுத்துவந்த நீரில் பிணத்தைக் குளிப்பாட்டிய பின்னர் வீட்டு வாசலில் பச்சைப் பந்தலின் கீழ் அமரவைத்து சீதேவி வாங்கும் சடங்கு நடத்தப்படுகின்றது. நிறை மரக்கால் நெல்லின் மீது மாட விளக்கை கையில் ஏந்தியபடி இறந்தவரின் மகனும் படி நிறைய நெல்லை ஏந்திய படி மருமகளும் பச்சைப் பந்தலை மூன்று முறைச் சுற்றி வந்து பிணத்தின் முன்பாக வைத்து வணங்குகின்றனர். பின்னர் பசுஞ்சாணியை நெல்லில் தொய்த்து உருண்டை பிடித்து பிணத்தின் கையில் வைத்து ''மூதேவி போயி சீதேவி வா'' என மூன்று முறைக் கூறியபடியே மருமகளின் முந்தானையில் போடப்படுகின்றது (தகவல் - பழனியம்மாள் - 55 - K. இராமநாதபுரம்) இவ்வாறுசெய்வதால் இறந்தவரின் வளமை முழுவதும் மருமக்களுக்கு வந்து விடுவதாக நம்புகின்றனர். பின்னர் சாணி உருண்டையை பிணம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரில் அப்பி வைக்கின்றனர். கருமாதிச் சடங்கு நடைபெறும் நாள் வரைத் தினந்தோறும் நீர்த் தெளித்து அதனைப் பாதுகாக்கின்றனர். சாணியில் வளரும் நெல்லின் திறனைப் பொறுத்து குடும்பம் சிறக்கும் அல்லது தீங்கு நேரும் என நம்புகின்றனர்.

சுடுகாட்டில் பிணத்தைப் படுக்கவைத்து மஞ்சள் தொய்த்த பச்சரிசியை ''சொக்கஞ்சோறு, வைகுண்டஞ்சோறு, கைலாசஞ்சோறு" என மூன்று முறைக் கூறிய படியே பிணத்தின் வாயில் மூன்று முறைப் போடுகின்றனர். இதனை வாய்க்கரிசி போடுதல் என்கின்றனர். (தகவல் - வேலுச்சாமி - 65 முருகன்பட்டி) இவ்வாறு வாய்க்கரிசி போடுதலை இறந்தவருக்குப் போடும் கடைசி உணவு என்று கூறுகின்றனர்.

இறந்தவருக்குச் செம்புத் தண்­ர் வைத்து மாரடித்து அழும் போதும் கருமாதியன்று பச்சைப்பந்தலைச் சுற்றி மாரடித்து அழும் போதும் மாரடித்து அழும் பெண்களுக்கு நீரில் ஊற வைத்த பச்சரிசியுடன் உப்பில்லாது அவித்த மொச்சை கலந்து உண்ணக் கொடுக்கின்றனர் ''மாரடித்தவர்களுக்கு மடியில பச்ச'' என்னும் பழமொழி வழக்கில் உள்ளது.

குழி மொழுகுதல் சடங்கின் பொழுது இறந்தவரைப் புதைத்த குழிமேட்டை நீர்த் தெளித்து மொழுகுகின்றனர். பின்னர் குழிமேட்டின் தலைப் பகுதியில் சிறிது பால் ஊற்றிவிட்டு அவ்விடத்தில் நெல்லைத் தூவிவிட்டும் பிரண்டைச் செடியையும் பதிக்கின்றனர். நெல் முளைக்கும் திறனைப் பொறுத்து குடும்பம் சிறக்கும் அல்லது தீங்கு நேரும் என நம்புகின்றனர். இச் சடங்கை ஆண்கள் செய்கின்றனர்.

''இறந்தவரைப் புதைத்தல் சடங்கு முறை வேளாண் நாகரிகத்தோடு உருவானதாகும். புதைத்தல் என்பது விதைகளை மண்ணுக்குள் புதைத்தல் என்பதற்கு இணையானதாகும். விதை முளைப்பது போன்று இறந்தவரும் மறுஉயிர் பெறுகிறார்'' என்ற (பக்தவச்சல பாரதி - தமிழர் மானிடவியல் ப.211) கருத்து இங்கு மனங்கொள்ளத்தக்கதாகும்

செம்பு - பயன்பாடு:

செம்பு என்னும் புழங்கு பொருள் நீர் அருந்தப் பயன்படுத்தும் உலோகப் பாத்திரம் ஆகும். இறந்தவரின் வீட்டிற்கு உறவினர்களால் கொண்டுவரப்படும் பொருட்களுள் செம்பு முக்கிய இடம் பெறுகின்றது.

நீர் மாலை எடுத்து வரும் சடங்கில் பிணத்தைக் குளிப்பாட்டுவதற்காக செம்பு, குடம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நீர் நிலைக்குச் செல்கின்றனர். நீர் நிரப்பிய செம்பு, குடம் போன்றவற்றின் கழுத்துப் பகுதியில் கதம்ப மாலை சுற்றப்படுகின்றது. நீரின் மேலாக கதம்பப் பூக்களும், திருநீறும் போடப்படுகின்றது. இதனால் நீர்மாலை நீரும், செம்பும் புனிதமாக மாற்றப்படுவதாகக் கூறுகின்றனர். தெய்வ நிலையை அடைந்துவிட்ட பிணத்தைக் குளிப்பாட்டக் கொண்டு வரப்படும் புனித நீரைக் கொண்டு வரப் பயன்படும் பாத்திரங்களாகச் செம்பும், குடமும் காணப்படுகின்றன.

செம்புத் தண்­ர் வைத்து அழும் சடங்கை கருமாதி நடைபெறும் நாள் வரைச் செய்கின்றனர். பிணத்தை வைத்திருந்த இடத்தில் மணலைப் பரப்பி அதன்மீது செம்பு நிறைய நீர் வைத்துப் பெண்கள் அழுகின்றனர். செம்பில் வைக்கப்பட்ட நீரை இறந்தவர் மண்டியிட்டு குடிப்பார் என்றும் அதற்கு அடையாளமாக செம்பில் வைக்கப்பட்ட நீர் சிறிது குறைந்தும் பரப்பி வைக்கப்பட்ட மணலில் இறந்தவரின் கை ரேகை பதிந்துவிடும் என நம்பிக்கைத் தெரிவித்தனர்.

இச்சடங்கின் மூலம் தெய்வநிலையடைந்து விட்ட இறந்தவரின் ஆவிக்கு, தாகத்திற்குத் தண்­ர் கொடுக்கப் பயன்படும் புனிதப் பாத்திரமாகச் செம்பு மதிக்கப்படுகின்றது. செம்பில் மீதமிருக்கும் நீரை சுவரில் அப்பி இருக்கும் சாணியின் மீது தெளிக்கின்றனர். அதிலும் எஞ்சிய நீரை வீட்டின் வெளியே ஊற்றுகின்றனர்.

கடவுளுக்குச் சிறப்புச் செய்வதற்கு செம்பில் நூல் சுற்றி நீர் நிரப்பி, மாவிலை, தேங்காய் வைத்து உள்ளங்கையில் ஏந்திச் செல்வதைக் கும்பம் எடுத்தல் என்கின்றனர். இறப்புச் சடங்கில் செம்பில் கதம்ப மாலை சுற்றி, மலர்கள் தூவி, திருநீறு போட்டு, புனித நீராக்கப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.

மண்குடம்:

இறப்புச் சடங்கின் போது சுட்ட களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய மண் கலயத்தைக் குடம் என்கின்றனர். பிணத்தை சுடுகாடு தூக்கிச் செல்லும் வழியில் இடுகாடு உள்ளது. இடுகாட்டில் பாடை சுடுகாடு நோக்கித் திருப்பி இறக்கி வைக்கப்படுகின்றது. இடுகாட்டில் இறந்தவரின் பெண் மக்கள் இடது தோளில் நீர் நிரம்பிய மண் கலயத்தை வைத்து மூன்று முறைப் பாடையை சுற்றச் செய்தும் ஒவ்வொரு முறை சுற்றும் பொழுதும் நாவிதன் அரிவாள் நுனியால் மண்குடத்தைத் துளையிடுகின்றார். இறுதியாக மண் குடத்தை வல பக்கம் கீழே போட்டு உடைத்த பின்னர் கோடித் துணி போட்டுத் திரும்பிப் பாராது அழைத்துச் செல்கின்றனர். இதே போன்று குழிமேட்டில் கொள்ளி வைக்கும் மகனால் கொள்ளிக்குடம் உடைக்கப்படுகின்றது. இவ்வாறு குடம் உடைத்தல் எனபதற்கு இம் மண்ணுலகில் தனக்கும் இறந்தவருக்கும் இடையேயான உறவு குடம் உடைத்தலோடு முடிந்துவிடுவதாகக் கூறுகின்றனர். மண் குடம் என்பது இருப்பவருக்கும் இறந்தவருக்கும் இடையே காணப்பட்ட உறவின குறியீடாக எண்ணப்படுகின்றது. சுட்ட மண்சட்டியைத் திரும்ப ஒட்ட வைக்க முடியாது என்ற வாங்கியத்தோடு தொடர்புபடுத்தபடுகின்றது. பணிக்குடம் உடைந்து குழந்தை பிறப்பது உறவை ஏற்படுத்துவது போலவும் நீர் நிறைந்த குடத்தை உடைப்பது இறப்புச் சடங்கில் உறவு முடிந்து விடுவதாகவும் எண்ணப்படுகின்றது.

கோடித்துணி:

புது வேட்டி, சேலை போன்றவற்றைச் கோடி என்று கூறுகின்றனர். (சி.பரமேஸ்வரி, மள்ளர் வாழ்வும் வழிபாடும் ப.33).

இறப்புச் சடங்கில் மாமன், மச்சன் உறவுடையோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கோடித்துணி, கொண்டு வருகின்றனர். நீர் மாலை கொண்டு பிணத்தைக் குளிப்பாட்டிய பின்னர் பிறந்த இடத்துக் கோடி அணிவிக்கப்படுகின்றது. பிறந்த இடத்துக் கோடியணிந்தே புதை குழியில் புதைக்கின்றனர். சீதேவி வாங்குதல் சடங்கின் போது மருமக்கள் தங்களது தாய் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சேலையை அணிந்து வாங்குகின்றனர். இடுகாட்டில் பெண் மக்கள் குடம் உடைக்கும் போதும் கோடித் துணி போடப் படுகின்றது. கொள்ளிக்குடம் உடைத்த ஆண் மகனுக்கு தாய் மாமனால் வேட்டி, துண்டு கொடுக்கப் படுகின்றன. கணவனை இழந்த பெண்ணுக்கு இறந்தவரின் அண்ணன், தம்பி கோடி கொடுத்த பின்னர் தாலியறுக்கும் சடங்கு நிகழ்த்தப் படுவதால் இதனை அறுப்புக் கோடிப் போடுதல் என்கின்றனர். உருமால் கட்டுதல் சடங்கின் போது ஆண் மக்களுக்கு கோடித்துணிகள் போடப்படுகின்றன. பிணத்தை புதுத் துணிபோட்டு புதைக்கவேண்டும் என்ற அடிப்படையில் கோடி கொண்டு வருதல் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகின்றது.

தொகுப்புரை:

இறப்புச் சடங்கில் இம்மக்கள் பயன்படுத்தும் முக்கியப் புழங்கு பொருட்களின் வழியாக இவர்களது வாழ்க்கை முறையை அறிய முடிகின்றது. நெல்லை சடங்குப் பொருளில் பயன்படுத்துவதன் வாயிலாக இவர்களது நெல் சார்ந்த வேளாண் பண்பாடு அறியப்படுகின்றது. செம்பை வைத்து புனித நீர் கொண்டு வந்து பிணத்தை குளிப்பாட்டி புனிதப்படுத்துகின்றனர். நீர் வைத்து அழுவதால் இறந்தவரை (முன்னோரை) வழிபடும் மரபினை உடையவர்கள் என்றும் கூறப்படுகின்றது. குடம் உடைத்தல், கோடி போடுதல் போன்றவை இறந்தவருக்கும் இருப்பவருக்குமான உறவு நிலையை சமுதாயத்திற்கு வெளிப்படுத்துவதா‘க அமைகின்றது. இறப்புச் சடங்கு நடத்தப் பயன்படுத்தும் பொருட்கள் இறந்தவருடைய ஆன்மா சாந்தியடையவும் இழவு வீட்டாரை தீட்டு நிலையிலிருந்து நீக்கி பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவைத்தல், உறவுகளை வலிமையடையச் செய்தல், உரிமை நிலைநாட்டல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.