‏إظهار الرسائل ذات التسميات இந்திரா பார்த்தசாரதி. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات இந்திரா பார்த்தசாரதி. إظهار كافة الرسائل

எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்! - இந்திரா பார்த்தசாரதி


வாசல் கதவைத் தட்டிவிட்டுப் போய்விட்டான் எமன். நாடகத்துக்கு முதல் விசிலா?

டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டார்கள் ‘‘இவ்வளவு பெரிய அட்டாக் நீங்கள் தப்பிச்சது மிராக்கிள்தான்!’’

தப்பித்தது எதற்காக என்று யோசித்தார் நடேசன்.

உலகத்தில் நடப்பன அனைத்துக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று சிலர் சிலர் சொல்கிறார்கள்; யதேச்சையாக அமைகின்ற ஒற்றுமையை வைத்துக்கொண்டு, அதைக் காரணம் என்று குழப்பிக்கொள்வது முட்டாள் தனம் என்று கூறுகிறவர்களும் இருக்கிறார்கள்.

காரணம் இருக்கிறது என்று நம்பினால், தப்பித்தது அவர் இருப்புக்கு ஓர் அர்த்தம் கற்பித்து, அவருக்கு ஓர் அடையாளத்தைத் தருகிறது.

இனிமேல் என்ன சாதனை சாத்தியம், எண்பது வயதுக்கு மேல்? சரி, இதுவரையிலும் தான் என்ன சாதித்திருக்கிறேன் உண்பது, உறங்குவது, இனப் பெருக்கம் தவிர? என்று சிந்தித்தார் நடேசன்.

நல்லவேளை, இனப் பெருக்கம் ஒன்றோடு நின்றுவிட்டது. இதுவே மனித சமுதாயத்துக்குப் பெரிய உதவி இல்லையா?

அவர் தப்பித்தது, எதேச்சையாக நிகழ்ந்துவிட்ட ஓர் ஒற்றுமையாக இருக்கக்கூடும். எமன் ஒரு முக்கியமான ஃபைலைக் கொண்டு வர மறந்திருக்கலாம். எடுத்து வரத் திரும்பிப் போயிருப்பானோ என்னவோ!

“அறுவை சிகிச்சை செய்ய இயலாது. நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னது, எதுவும் எப்பொழுது வேண்டுமானாலும் நிகழலாம் என்ற காரணத்தால் என்பது இப்போது புரிகிறது. ஒரே வாரிசு, போன மாதம் அமெரிக்காவிலிருந்து மூன்று வார விடுப்பில் வந்தபோது, ஆரோக்கியமாக இருந்துவிட்டு, அவன் திரும்பிப் போனவுடன் அவருக்கு இப்படி மாரடைப்பு வந்தால், மகன் மனத்தில் ஓடும் எண்ணங்களை என்னவென்று சொல்ல முடியும்?

“போன மாதம் நான் வந்திருந்த போதே இது வந்திருக்கக் கூடாதா? மறுபடியும் நான் இப்பொழுது ‘லீவ் எடுத்தாக வேண்டும்!

அப்படி அவன் நினைத்தாலும் தப்பில்லை. அவன் ‘பாஸ் எப்படிப் பட்டவனோ?

ரயில், விமானம் இவற்றுக்குக் கால அட்டவணை இருப்பது போல், மனிதனுடைய பிறப்புக்கும் இறப்புக்கும் ஒரு அட்டவணை ஏன் இருக்கக் கூடாது? வெளிநாடுகளில் இருக்கும் மகன்களும் மகள்களும் ‘லீவ் எடுத்துக்கொண்டு வர எவ்வளவு சௌகர்யமாக இருக்கும்? இரண்டாம் தடவை லீவில் வந்திருக்கிறான், பாவம் அவருடைய பிள்ளை!

ஆனால், டாக்டர்களாலேயே எதுவும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை! கால அட்டவணை இருந்தால் நிச்சயமற்ற தன்மையும், காலனின் வருகையில் ஒரு சஸ்பென்ஸூம் இருக்காது! அல்லது, பீஷ்மருடைய அதிர்ஷ்டம் இருந்தால், அவர் உத்தராயணம் வரை மரணத்தை தள்ளிப் போட்டது போல், மகனுடைய விடுமுறையை ஒட்டி அவர் தம்முடைய மரணத் தேதியைத் தள்ளிவைத்துக் கொள்ளலாம்.

நான் பத்து வருஷத்துக்கு முன்னாடியே சொன்னேன்-, அம்மா போனவுடனே- எங்ககூட அமெரிக்காவுக்கு வந்துடுங்கன்னு. நீங்க பிடிவாதமா கேக்கலே! என்றான் அவர் மகன் பிரபு, மருந்து மாத்திரையை அவரிடம் கொடுத்துக்கொண்டே.

என்ன ஆகியிருக்கும் அங்கேஅட்டாக் வந்திருக்காதா? என்றார் நடேசன்.

வந்திருக்கலாம். ஆனா, உதவிக்கு நாங்க கூடவே இருப்போமே? டாக்டர் இப்போ உங்ககூட ஒரு ஆள் இருந்துண்டே இருக்கணும்கிறாரே?

அமெரிக்காவில், கூடவே ஆள் இருந்திருக்க முடியுமா? கணவன், மனைவி இருவரும் வேலைக்குப்போகிறார்கள். அவர்களுடைய இரண்டு மகள்களும் வெளியூர் கல்லூரிகளில் படிக்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால், இதற்கு பதில் கூற இயலாமை அவன் மனச் சங்கடத்தை அதிகரிக்கும்.

அவனும் இதைப் பற்றி யோசிக்காமல் இருந்திருக்க மாட்டான். தன் மனச் சமாதானத்துக்காக இப்படி ஏதோ சொல்லிக்கொள்கிறான்.

இப்போ என்ன செய்யறதுன்னு தெரியலியே! பத்து வருஷத்துக்கு முன்னாடியே வந்திருந்தீங்கன்னா, இந்நேரம் அமெரிக்கன் சிட்டிஸனாகவே ஆகியிருக்கலாம்! என்றான் பிரபு.

அப்போ புஷ்ஷுக்குப் பயந்துண்டு ‘ஹார்ட் அட்டாக் வந்திருக்காதா?

அப்பா உங்க குதர்க்கத்துக்கு என்னால பதில் சொல்ல முடியாது. நீங்க இனிமே தனியா இந்த வீட்டிலே இருக்க முடியாது. அமெரிக்காவுக்கு என்கூட வர்றதும் சாத்தியமில்லே. டோன்ட் யூ ரியலைஸ் தி சிச்சுவேஷன்?

நீ சொல்றது புரியுது. ஆனா, சொல்யூஷன் என் கையிலே இல்லியே! உனக்கே இப்போ புரிஞ்சிருக்கும். எவ்வளவு பெரிய அட்டாக்! அண்ட் ஐ ஹவ்ஸர் வைவ்ட்!

மறுபடியும் ஆரம்பிச்சுட்டீங்களா? குற்ற உணர்வினாலே நான் கஷ்டப்படணும்னே பேசறீங்களா?

நோ! இப்போ என்ன செய்யணும்கிறே சொல்லு, கேக்கறேன்!

அவன் சோபாவில் உட்கார்ந்தான். சிறிது நேரம் பேசாமல் உத்தரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தான். சொல்லத் தயங்குகிறான் என்று தோன்றிற்று நடேசனுக்கு.

சொல்லு, என்ன யோசிக்கிறே?

“ரிட்டையரிங் ஹோம்ஸ் பத்தி என்ன நினைக்கறீங்க? ஸம் ஆஃப் தெம் ஆர் ரியலிகுட்!’’

“சரி, இந்த வீட்டை என்ன செய்யறது?

பூட்டி வெச்சுக்கலாம். வாடகைக்கு விடலாம். விக்கணும்னாலும் விக்கலாம் வீடு ஒரு பெரிய விஷயமில்லை!’’

மூணு தலைமுறை இந்த வீட்லே இருந்திருக்கு!

இது உங்களோட சென்டி மென்ட்டல் சப்ஜெக்ட்! நான் அதைப் பத்திப் பேச விரும்பலே. உங்களைப் பத்திதான் என் அக்கறை!

அவருக்கு எது நல்ல ஏற்பாடு என்பதைப் பற்றி அவன் ஏற்கெனவே தீர்மானித்துவிட்டான் சில இடங்களைப் பார்த்துவிட்டும் வந்திருக்கிறான் என்று தெரிந்தது.

நான் நம்ம வீட்டிலேயே இருக்கிறதிலே உனக்கென்ன ஆட்சேபனை? என்றார் நடேசன். எழுந்து, சோம்பல் முறித்துக்கொண்டே உலாவ ஆரம்பித்தார்.

வீட்டை மேனேஜ் பண்ணறது அவ்வளவு சுலபமில்லே, அப்பா! அந்த ‘ஸ்ட்ரெஸ் உங்க ஹார்ட்டுக்கு அவ்வளவு நல்ல தில்லேங்கிறார் டாக்டர். “ஹோம்லே நீங்க நிம்மதியா இருக்கலாம். வேளச்சேரியைத் தாண்டி ஒரு இடத்திலே ஒரு பியூட்டிஃபுல் ஹோம் இருக்கு. அஞ்சு நட்சத்திர ஓட்டல் வசதி. இதைத் தவிர வசதி வேணும்னாலும் நாமே பண்ணிக்கலாம். மொஸைக் தரை, கார்ப்பெட் இல்லே! போட்டுக்கலாமான்னு கேட்டேன். சரின்னுட்டான். உங்களுக்கு என்ன புத்தகம்தானே படிக்கணும்? உங்க ‘பர்சனல் லைப்ரரியை அங்கே ‘மூவ் பண்ணிக்கலாம். இப்பெல்லாம் கம்யூனிகேஷன் பத்திக் கவலையே இல்லே. இன்டர்நெட், வீடியோ கான்ஃப்ரன்ஸிங் அது, இதுன்னு வந்தாச்சு.. வி கேன் ஆல்வேஸ் பி இன் டச்! உங்களுக்கு என்ன ஆச்சோன்னு எங்களுக்கும் கவலையில்லாம இருக்கும். ‘கம்யூனிட்டி லைஃப், ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியும். யோசிச்சுச் சொல்லுங்க. எனக்கு நாலு வாரம்தான் ‘லீவு. அதுக்குள்ள ஏதானும் ஏற்பாடு செய்தாகணும்!

நான் என்ன யோசிக்கிறதுக்கு இருக்கு? எனக்காக நீ நிறைய யோசிச்சு வெச்சிருக்கே போல் இருக்கே?

அங்கே முழு நேர டாக்டர் ஒருத்தர் இருக்கார். இரண்டு நர்ஸ். கிளினிக், பார்மஸி எல்லாம் இருக்கு. ஸ்பெஷலிஸ்ட் டைப் பார்க்கணும்னாலும் உடனே ஏற்பாடு செய்து தருவா. நீங்க இடத்தைப் பாருங்க, யூ வில் லைக் இட்!’’

நடேசன், உலவிக்கொண்டு இருந்தவர், சோபாவில் உட்கார்ந்தார். கண்களை மூடிக் கொண்டார்.

என்னப்பா சொல்றீங்க? என்றான் பிரபு.

இன்னும் இருக்கிற மூணு வாரத்துல இந்த வீட்டை உன்னால வித்துட முடியுமா?

ஏன் முடியாது? ஷகரான இடம், பெரிய வீடு, போட்டி போட்டுண்டு வருவாங்க!’’

யாரையானும் பாத்து வெச்சிருக்கியா?

“என்னப்பா இப்படிப் பேசறீங்க, நீங்க ‘யெஸ்னு சொல்லாம நான் விக்கிறதுக்கு ஆளைப் பார்ப்பேனா? என்றான் பிரபு சற்று கோபத்துடன்.

உன் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, வாழ்ந்த வீட்ல இருக்கணும்கிற ஆசையே இல்லையா உனக்கு? என்றார் அவர் கண்களைத் திறந்துகொண்டே.

அப்பா, நாம கொஞ்சம் பிராக்டிகலா பேசுவோம். நான் திரும்பி வந்து இங்கே இருப்பேனான்னு எனக்கு இப்போ தெரியலே. உலகம் மாறிண்டே இருக்கு. உங்க சென்டிமென்ட் எனக்குப் புரியறது. அதே சமயம் என்னையும் நீங்க புரிஞ்சுக்கணும்..

நடேசன் ஒன்றும் கூறாமல் அவனையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்தார். ‘சென்டிமென்ட்டைக் கொன்றுவிடு, அல்லது மூச்சை நிறுத்திவிடு என்று பாரதி பாடியிருக்க வேண்டும்.

பிரபுவின் நிலையில் நின்று பார்த்தால் அவனைப் புரிந்துகொள்ள முடிகிறது.

“நாளைக்கு நான் சொன்ன இடத்தைப் பாக்கலாமா, அப்பா? என்றான் பிரபு.

அவர் ‘சரியென்று தலை அசைத்தார்.

நகரத்தை விட்டுத் தள்ளி இருந்தாலும் துப்புரவாக இருந்தது அந்த இடம்.

பிரபு சொன்னது போல எல்லா வசதிகளும் இருந்தன. ஏ.சி, டி.வி, ஃபர்னிச்சர், எல்லாம் முதல் தரத்தில் இருந்தன. நூல் நிலையத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிரபல பத்திரிகைகள் எல்லாம் இருந்தன. புத்தகங்களும் இருந்தன. ‘குறுகிய காலத்தில் வெற்றி பெறுவது எப்படி? என்ற புத்தகத்தை நடேசனின் வயதுள்ள ஒருவர் படித்துக் கொண்டு இருந்தார்.

இந்த நம்பிக்கை தமக்கும் வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் வந்ததும் புன்னகை செய்தார் நடேசன்.

ஒரு கோயில் இருந்தது. சிவன், விஷ்ணு, முருகன், பிள்ளையார், துர்க்கை ஆகிய எல்லா தெய்வங்களுக்கும் சந்நிதி. நவக்கிரக வழிபாட்டுக்கும் வசதி இருந்தது. அவர்கள் போனபோது ருத்ர ஹோமம் நடந்துகொண்டு இருந்தது.

மாதிரி இல்லத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக நிர்வாகி, அவர்கள் இருவரையும் ஒரு அப்பார்ட்மென்ட்டுக்கு, அங்கிருப்பவரின் அனுமதி கேட்டு அழைத்துச் சென்றார்.

அவருக்கு 85 வயது இருக்கும். முதுகு கூனியிருந்தது. கூர்மையான பார்வை. “வாங்கோஎன்று முகமெல்லாம் புன்னகையாக வரவேற்றார்.

கொள்ளுப் பேத்தி அழுதுண்டிருந்தா நீங்க வந்தேள் என்றார் அவர்.

நடேசன் சுற்றுமுற்றும் பார்த்தார். யாருமில்லை.

என்ன பார்க்கறேள், யாரையுமே காணோம்னா? இதோ பாருங்கோ என்று சொல்லிக் கொண்டே கிழவர் கையிலிருந்த ரிமோட்டை இயக்கினார்.

டி.வி&யில் படங்கள் வந்தன. ஒரு குழந்தை தொட்டிலில் இருந்தது.

அதைச் சுற்றிச் சிலர் குனிந்து அதைப் பார்த்துக்கொண்டு இருந்தனர். “வலது பக்கம் நிக்கிறானே, அவன்தான் என் பிள்ளை. அவன் பக்கத்திலே என் பேரன். இந்தப் பக்கமா நிக்கறது, என் மாட்டுப் பொண்ணு. அவ பக்கத்திலே அவ மாட்டுப் பொண்ணு. தொட்டில்லே என் கொள்ளுப் பேரன். சவுண்ட் போடட்டுமா? என்றவாறு ரிமோட்டை அழுத்தினார் அவர். குழந்தை காலை உதைத்துக்கொண்டு அழுதது. “என் பிள்ளையும் இப்படித்தான் அழுவான், சின்ன வயசிலே என்றார் கிழவர். அவர் கண்கள் கசிந்திருந்தன.

அவர்கள் வீட்டுக்குத் திரும்பியதும், பிரபு கேட்டான் ‘‘எப்படிப்பா இருக்கு?

குட்! ஆனா, இது ‘அப்பர் மிடில் கிளாஸ§’க்குதான்னு நினைக்கிறேன். சரி தானே? என்றார் நடேசன்.

அஃப்கோர்ஸ் முக்கால்வாசிப் பேரின் குழந்தைகள் வெளிநாடுகள்ல இருக்காங்க. அந்தக் கிழவர் வீட்டுக்குப் போனோமே, அவர் எவ்வளவு சந்தோஷமா இருக்கார் பார்த்தீங்களா? அதுதான் அவருக்கு ‘ரியாலிட்டி இல்லியா? என்றான் பிரபு.

நடேசன் பதில் ஒன்றும் கூறவில்லை.

உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டேன் நீங்க பதிலே சொல்லலியே?

நம்ம நாட்டிலேயே இருக்கிற வசதி இல்லாத ஏழை அப்பா, அம்மா எல்லாரும் என்ன பண்ணுவா? மாட்டுப்பொண்ணு போட்டதுதான் சோறுன்னு இருப்பாளா? என்றார் நடேசன்.

நீங்க என்ன கேக்கறேள்னு எனக்குப் புரியலே. நான் கேட்டதுக்கும் நீங்க சொல்ற பதிலுக்கும் என்ன சம்பந்தம்? என்றான் பிரபு சற்று உரத்த குரலில்.

சம்பந்தம் இருக்கு. நீயே சொன்னே நம்ம வீடு பெரிசு, வாங்குறவங்க கொத்திண்டு போயிடுவாங்கன்னு. வீட்டை விக்கணும்னு அவசியமில்லே! என்று சொல்லிவிட்டு நிறுத்தினார் நடேசன்.

ஓ.கே! விக்க வேண்டாம் என்ன பண்ணணும்கிறீங்க?

‘‘நம்ம வீட்டையே ‘ஹோம் ஆக்கப் போறேன். நாலு ஏழைக் குடும்பம் தாராளமா இங்கே இருக்கலாம். துணக்குத் துணையும் ஆச்சு நீயும் அமெரிக்காவிலே உன் அப்பாவைப் பத்திக் கவலைப்படாம இருக்கலாம்.

நான் இந்தத் தடவை ஹார்ட் அட்டாக்லேர்ந்து ஏன் தப்பிச்சேன்னு எனக்கு இப்போ புரியறது. எல்லாத்துக்கும் காரணம் இருக்கத்தான் வேணும். அது ஈஸ்வர சித்தமோ என்னவோ என்னன்னு எனக்குச் சரியா சொல்லத் தெரியலே.

இன்னொரு விஷயம் உனக்குப் பேரனோ பேத்தியோ பொறந்தா, வீடியோ எடுத்து அனுப்பு..! மறந்துடாதே! என்றார் நடேசன்.

குருதட்சணை! - இந்திரா பார்த்தசாரதி

அது பசுபதிக்குப் பிடித்தமான ‘பேன்ட். தமிழில் என்ன சொல்வார்கள் ‘பேன்ட்டுக்கு? ‘இகந்த வட்டுடை என்று மணிமேகலையில் வருகிறது. ‘இகந்த என்றால், ‘தொளதொள என்றிருப்பது. பைஜாமாவாக இருக்கலாம். அப்படியென்றால், வட்டுடை என்பது பேன்ட்டைக் குறிக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழர்கள் பேன்ட் போட்டுக்கொண்டு இருப்பார்களா என்று பசுபதி ஒரு கணம் யோசித்தார். வட்டுடை என்றால் யாருக்குப் புரியப்போகிறது? கால்சட்டை என்பதே சரி!

இப்போதைய பிரச்னை, அவருக்கு மிகவும் பிடித்த மெரூன் நிற கால்சட்டையில், அதை இடுப்பில் நிறுத்தி வைப்பதற்கு உதவும் இரண்டு ஊக்கிகள்! அவர் கால்சட்டையைப் போட்டுக்கொள்ள முயன்றபோது, அந்த ஊக்கிகள் பிய்ந்து கீழே விழுந்துவிட்டன. அவர் சுற்று முற்றும் பார்த்தார்.

அவை கண்ணுக்குத் தென்படவில்லை. கட்டிலுக்குக் கீழே விழுந்திருக்கலாம். சரீரத்தையே முழுவதும் குறுக்கிக் குனிந்து கட்டிலுக்குக் கீழே பார்ப்பதென்பது, அவருக்கு இந்த வயதில் இயலாத காரியம். அரசியலில் இருந்திருந்தால், அப்படி வளைந்து பார்ப்பதற்கான பயிற்சி அவருக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். 

பசுபதி கட்டிலைப் பிடித்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தார். குனிந்து கட்டிலுக்குக் கீழே நோக்கினார். இருட்டாக இருந்தது. ஊக்கிகள் கண்ணுக்குப் புலப்படவில்லை. இடுப்புப் பிடித்துக்கொண்டதுதான் மிச்சம். மிகவும் கஷ்டப்பட்டு எழுந்து நின்றார். அப்படியே ஊக்கிகள் கிடைத்தாலும் அவரால் என்ன செய்திருக்க முடியும்? அவருக்குத் தைக்கத் தெரியாது. அவருக்குப் புத்தகங்களுக்கு அட்டைப் போடக் கூடத் தெரியாது.

ஊக்கிகள் இல்லாத காரணத்தால், அந்தக் கால்சட்டையை அவர் தியாகம் செய்ய விரும்பவில்லை. அவர் மனைவி போய்ச் சேருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னால், அவருடைய பிறந்த தினப் பரிசாக அளித்தது அது. அவர் அதைப் போட்டுக்கொண்ட நாட்கள் எல்லாம் அதிர்ஷ்ட நாட்கள். போஸ்ட் ஆபீஸ் போனால், ‘க்யூ இருக்காது. மெஸ்ஸிலிருந்து சாப்பாடு, சரியான நேரத்துக்கு வந்துவிடும். எதிர்த்த வீட்டு பத்மநாபன், நாட்டு நடப்புகள் பற்றிப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களைப் படித்துக் காண்பிக்க மாட்டார். இந்த மாதிரிச் சின்னச் சின்ன அதிர்ஷ்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

பசுபதி கால்சட்டையை போட்டுப் பார்த்தார். அது இடுப்பில் தங்க மறுத்தது. பதினைந்து வருஷங்களுக்கு முன்பு வாங்கியது. இந்தக் காலத்தில், இந்த மாதிரி ஊக்கிகள் தைப்பது போன்ற சின்ன வேலைகள் செய்ய தையல்காரன் எங்கு கிடைப்பான்? பிராண்ட் பெயர்களுடன், பெரிய பெரிய தையல் கடைகள்! அமிதாப் பச்சனுக்கும் பியர்ஸ் பிராஸ்னனுக்கும் ‘டிஸைனர் சூட் தைத்துக் கொடுக்கும் அவை, பழைய பேன்ட்டுக்கு ஊக்கிகள் தைத்துக் கொடுக்குமா?

வாசல் மணி ஒலித்தது. பசுபதி கதவைத் திறந்தார். பத்மநாபன்! அவர் கையில் காகிதம் ஏதுமில்லை. பசுபதிக்கு ஆறுதலாக இருந்தது.
வெளியிலே கிளம்பிட்டிருக்கீங்களோ?

போகலாம்னுதான் இருக்கேன். உங்களை ஒண்ணு கேட்கணும். என் பேன்ட்டுக்கு ‘பக்கிள் போயிடுச்சு. அதைத் தைக்க யாரானும் கிடைப்பானா? என்றார் பசுபதி.

எந்த உலகத்திலே இருக்கீங்க, சுவாமி? கத்திக்குச் சாணை பிடிக்கிறவன், ஈயம் பூசறவன் எல்லாம் முன்னே தெருவிலே வந்திட்டிருப்பாங்களே, இப்போ பார்க்க முடியுதா? உலகம் மாறிட்டிருக்கு. ஒண்ணு, நீங்களே அதைத் தெச்சுக்குங்க. இல்லேன்னா, வாசல்ல இருக்கிற வாட்ச்மேனுக்குக் கொடுத்துடுங்க. இப்படிப் பழசைத் தெச்சு தெச்சுப் போட்டுட்டிருந்தா, நாம எப்போ வெஸ்டர்ன் எகானமியோட போட்டி போடறது? என்றார் பத்மநாபன்.

பசுபதி பேசாமல் பத்மநாபனையே சிறிது நேரம் பார்த்தார். தான் அவ்வாறு பதில் சொன்னது பசுபதிக்குப் பிடிக்கவில்லையோ என்று நினைத்த பத்மநாபன், சமாதானம் செய்பவர் போல, “பேன்ட் புதுசோ? என்றார்.

இல்லே. பதினஞ்சு வருஷமாறது அதை வாங்கி!

பதினஞ்சு வருஷமா? மை காட்! ஏதாவது சென்டிமென்ட்?

ரொம்பச் சரி! அதை எனக்குப் பரிசாக் கொடுத்தவ போய்ப் பதினஞ்சு வருஷமாச்சு!

ஐ ஆம் வெரி ஸாரி, பசுபதி! எனக்கு இப்போ புரியுது. ஒண்ணு பண்ணுங்க... ஜார்ஜ் டவுன் போனா அங்கே இதைத் தைக்கிறதுக்கு ஆள் கிடைக்கலாம். ஆனா, நீங்க பஸ்ஸிலே போக மாட்டீங்க. ஆட்டோவிலே போயிட்டு வர செலவுக்கு ஒரு புது பேன்ட்டே வாங்கிடலாம். வேணுமானா, அதை உங்க சென்டிமென்ட்டுக்குத் தர்ற விலையா நினைச்சுக்கிட்டுப் போயிட்டு வந்துடுங்க! என்றார் பத்மநாபன்.
அவர் போன பிறகு, ஒரு துணிப் பையில் கால்சட்டையை எடுத்துக்கொண்டு புறப்பட்டார் பசுபதி. காலியாகச் சென்ற ஒரு ஆட்டோவை நிறுத்தினார். ஆட்டோக்காரரும் அவரைப் போல் வயதானவராகத் தெரிந்தார்.

டவுனுக்குப் போயிட்டு வரணும்!

ஆட்டோக்காரர் பசுபதியை ஏற இறங்கப் பார்த்து, “எவ்வளவு கொடுப்பீங்க? என்றார்.

இருநூத்தம்பது..?

மேல அம்பது ரூபா போட்டுக் கொடுங்க... ஏறுங்க!

பசுபதி ஏறிக்கொள்ள, ஆட்டோ புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும், ஆட்டோக்காரர் தூங்குகிறாரோ என்ற சந்தேகம் பசுபதிக்கு ஏற்பட்டது. அவ்வளவு மெதுவாக வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றார் அவர்.

ஏன் இவ்வளவு மெதுவா போறீங்க?

சின்ன வயசுலதான் நேரம் பத்தாம, கால்ல றெக்கையைக் கட்டிக்கினு பறக்கிறோம். இப்பதான் வயசாயிடிச்சில்லே? இன்னும் கொஞ்ச நாள்தானே இருக்கப் போறோம்? உலகத்தை நிதானமா பார்த்துட்டுப் போவோமே! அவசரத்தைக் குறைச்சா, நம்ம நேரம் இன்னும் கூடுதில்லே? என்று கூறிவிட்டுச் சிரித்தார் ஆட்டோக்காரர்.

ஒரு ஆட்டோக்காரர் தத்துவம் பேசுவாரென்று பசுபதி எதிர்பார்க்கவில்லை.

எனக்குப் பரவாயில்லே. வயசாயிடுச்சு. நானும் உங்களை மாதிரி உலகத்தை நிதானமா பார்க்கத் தயார். ஆனா, ஆபீஸ் போற சின்னவங்க உங்க வண்டியிலே ஏறினா என்ன செய்வீங்க?

‘‘அவங்க ஏறி உட்கார்றப்பவே சொல்லிடுவேன், ‘இதோ பாருங்க, வண்டி கொஞ்சம் நிதானமாதான் போவும். உங்களுக்கு அவசரமா இருந்தா வேற வண்டியிலே போயிடுங்கன்னு!’’

பசுபதி சிரித்தார். “சரி, நீங்க இந்த வயசிலே ஏன் வண்டி ஓட்டணும்? பசங்க யாருமில்லியா?

நானாவது ஆட்டோ ஓட்டறேன். என்னைவிட வயசானவங்க நல்ல வெயில்ல, வேர்க்க விறுவிறுக்க பொதிவண்டி இளுத்துக்கினு போறாங்களே, பார்த்திருக்கீங்களா? இந்தியா பணக்கார நாடா ஆயிக்கினுருக்குன்னு பேப்பர்லே அவன்பாட்டுக்குப் போடறான். பணக்காரன்தான் இன்னும் பெரிய பணக்காரனா ஆவுறான். ஏளை இன்னும் ஏளையாதான் போய்க்கினுருக்கான். ஏளை விவசாயி நிலத்தைப் பிடுங்கிக் கம்ப்யூட்டர் பார்க் கட்டிக்கினுருக்காங்க படுபாவிக. இல்லாட்டி, ஏன் இத்தனை விவசாயிக தற்கொலை செய்துகிட்டுச் சாவுறாங்க? வறுமைதாங்க காரணம். இந்த நிலைமை எனக்கும் வரக் கூடாதுன்னுதான் என் கையை நம்பிப் பொளைச்சுக்கினுருக்கேன். வண்டி ஓடற மட்டும் ஓடட்டும். என்ன சொல்றீங்க?

நீங்க சொல்றது சரிதான் என்றார் பசுபதி. குழந்தைகள் உண்டா என்ற கேள்விக்கு ஆட்டோக்காரர் பதில் சொல்லவில்லை. ஆனால், பசுபதி மீண்டும் கேட்க விரும்பவில்லை. அதன் பின் ஆட்டோக்காரர் பேசவில்லை. வண்டி அதன் இயல்பான வேகத்தில் ஓடியது.

டவுன் வந்தாச்சுங்க. எங்கே போகணும்? என்று ஆட்டோக்காரர் கேட்டபோதுதான், தான் உறங்கிவிட்டதைப் பசுபதியால் உணர முடிந்தது. கண்களை விழித்துச் சுற்றுமுற்றும் பார்த்தார்.

அட்ரஸ் இருக்குதுங்களா? என்றார் ஆட்டோக்காரர்.

பசுபதி துணிப் பையிலிருந்து கால்சட்டையை எடுத்துக் காட்டி, “இந்த பேன்ட்டுக்கு ஊக்கி போயிடுச்சு. இதைத் தைக்கணும். இந்தச் சின்ன வேலையைச் செய்யற தையல் காரன் யாரானும் இங்கே இருப்பானா? என்று கேட்டார் பசுபதி.

அட, இதுக்காகவா ஆள்வார்பேட்டையிலேர்ந்து இம்மாந்தூரம் வந்தீங்க? என்று அவரை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டே கேட்டார் ஆட்டோக்காரர்.

சின்ன வேலை செய்யற தையல்காரங்க இப்போ எங்கே இருக்காங்க? எல்லாம் பெரிய பெரிய கடைங்க. சின்ன கடைகள் டவுன்ல இருக்கலாம்னு என் ப்ரெண்ட் சொன்னார் என்றார் பசுபதி.

ஆள்வார்பேட்டைலயும் மயிலாப்பூர்லயும் சின்ன வேலை செய்யற தையல்காரங்க உங்க கண்ணுக்குத் தென்படலைன்னுசொல்லுங்க. எல்லோராலயுமா சிட்டி சென்டர்லயும், ஸ்பென்ஸர் பிளாஸாலயும் ரெடிமேட் துணி வாங்க முடியும்? எட்டாவது மாடியிலேர்ந்து, தரையிலே ஊர்ந்து போற எறும்பைப் பார்க்க முடியுமா? நீங்க எட்டாவது மாடியிலே இருக்கிறவங்க. உங்க கண்ணுக்கு ஆள்வார்பேட்டையிலே சின்ன வேலை செய்யற டெய்லர் யாரும் தெரியலே, அவ்வளவுதான்!

நீங்க வேற! நான் எட்டாவது மாடியிலே இருக்கிறவன் இல்லே. எப்பவோ பார்த்த வேலைக்குப் பென்ஷன் வாங்கிட்டிருக்கிறவன். இந்த மாதிரி பழைய கால்சட்டைக்குப் பிஞ்சு போன ஊக்கியை வெச்சுப் போட்டுக்கிறவன்! சரி, ஆழ்வார்பேட்டையிலே உங்களுக்குத் தெரிஞ்ச டெய்லர் இருந்தா சொல்லுங்க, திரும்பிப் போயிடுவோம்! என்றார் பசுபதி.

வந்ததுதான் வந்தோம். இங்கே இருக்காரானு பார்ப்போம் என்றார் ஆட்டோக்காரர்.

கொஞ்ச தூரம் சென்றதும்... “அதோ ஒரு கடை இருக்கு, பாருங்க!

பெரிய கடையா இருக்கும் போலிருக்கே, தைப்பானா? என்றார் பசுபதி.

கேட்டுப் பாருங்க. கேக்கறதிலே என்ன தப்பு?’’

பெரிய கடைதான். உள்ளே புகுந்ததும் குளிர்க் காற்று வீசிற்று. வாடிக்கைக்காரர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். மற்றவர்கள் நடுத்தர வயதினர். சூட்டோ, ஷெர்வானியோ தைத்துக்கொள்ள வந்திருப்பவர்கள் போல் தோன்றியது. ட்ரிம்மாக உடை தரித்து, இன்முகத்துடன் வரவேற்கும் கடைக்கார இளைஞனிடம் சென்று, துணிப்பையிலிருந்து பழைய பேன்ட்டை எடுத்து, ஊக்கி தைத்துத் தர முடியுமா என்று கேட்பதற்கு அவருக்குக் கூச்சமாக இருந்தது. திரும்பிப் போய்விடலாமென்று தீர்மானித்தார். அதற்குள், அந்தக் கடையைச் சேர்ந்த நடுவயதுக்காரர் ஒருவர், அவரை “வாங்க என்று வரவேற்றார்.

பசுபதி மிகுந்த தயக்கத்துடன், “என்னுடையது பெரிய வேலை இல்லே! ரொம்பச் சின்ன வேலை என்று சொல்லிவிட்டுத் துணிப் பையிலிருந்து கால்சட்டையை எடுத்துக் காட்டிக் கேட்டார்... “இது ரொம்பப் பழைய பேன்ட். ஆனா, எனக்கு சென்டிமென்டல் வேல்யூ! இதுக்கு இடுப்பிலே ‘பக்கிள் போயிடுச்சு. வெச்சுத் தர முடியுமா?

அவன் அவரைப் பார்த்துப் புன்னகை செய்தான். அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குப் பசுபதி முட்டாள் இல்லை. பேன்ட்டைத் துணிப்பைக்குள் வைத்துக்கொண்டு, “சரி, நான் வரேன் என்றார். அதற்கும் அதே புன்னகைதான் பதில்!

அவர் ஆட்டோக்காரரை அடைந்தபோது, அவர் சாப்பிட்டு முடித்துக் கை கழுவிக்கொண்டு இருந்தார். “ஐயா! நீங்க சாப்பிட்டப்புறந்தானே புறப்பட்டீங்க? என்றார் ஆட்டோக்காரர்.

ஆமாம்!

போன காரியம் என்ன ஆச்சு?

என் துணியை வெளியிலே எடுத்தவுடனேயே கடைக்காரன் சிரிச்சான். நான் வந்துட்டேன் என்றார் பசுபதி. ஆட்டோக்காரர் புன்னகை செய்தார்.
இந்த வயசான காலத்திலே, பழைய பேன்ட்டுக்கு ஊக்கி போட இந்த வேவாத வெயில்ல அலைஞ்சுக்கினுருக்கீங்களே, எனக்கு வேற முந்நூறு ரூபா! இது உங்களுக்கு வேடிக்கையா இல்லே?’’

அதான் சொல்றேனே... இது பழசா இருக்கலாம். ஆனா, என் வீட்டுக்கார அம்மா என் பொறந்த தினப் பரிசா பதினஞ்சு வருஷத்துக்கு முன்னாலே கொடுத்தது. அவ போயும் பதினஞ்சு வருஷமாகுது. இப்போ புரிஞ்சுதா? என்றார் பசுபதி.

சில விநாடி அமைதிக்குப் பின், “நீங்க போறப்போ இந்த பேன்ட்டையும் கொண்டு போக முடியுமா? பந்தம் பாசம் எல்லாத்தையும் பார்த்தவன்தான் நானும். அந்த ஆடம்பரம் எல்லாம் நமக்குக் கட்டிவராதுன்னு தீர்மானிச்சுட்டேன். இப்பொ நானா தேடிக்குனு இருக்கிற இந்த வாள்க்கையிலே ஒரு சிக்கலும் இல்லே! என்று சொல்லிக்கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தார் ஆட்டோக்காரர்.

இப்போ நீங்க என்ன சொல்றீங்க? இந்தப் பழைய பேன்ட்டைத் தெருவிலே கடாசிடலாம்கிறீங்களா? என்றார் பசுபதி.

கடாச வேணாம்! பளசா இருந்தாலும் கிளியலே, கண்டிஷனா இருக்கு. தகுதியா இருக்கிறவங்க யாருக்காச்சும் கொடுங்களேன். ஊக்கி தெச்சுப் போட்டுப்பான். உங்க வீட்டுக்கார அம்மா எங்கே இருந்தாலும் அவங்க மனசும் குளிரும் என்றார் ஆட்டோக்காரர்.

சிறிது நேரத்துக்குப் பிறகு, பசுபதி சொன்னார்... ‘நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா ஒண்ணு சொல்லட்டுமா?

சொல்லுங்க!

நீங்களே இதை எடுத்துக்குங்களேன்!

ஆட்டோக்காரர் முகச் சலனம் ஏதுமில்லாமல் பசுபதியைத் திரும்பிப் பார்த்தார். ஒன்றும் கூறவில்லை. பசுபதிக்கு தான் அவ்வாறு சொல்லியிருக்கக்கூடாதோ என்று தோன்றிற்று. வீடு வந்து சேரும் வரை ஆட்டோக்காரர் எதுவும் பேசவில்லை. வண்டியிலிருந்து இறங்கியவுடன், பசுபதி சொன்னார்... “ஸாரி! நான் உங்ககிட்டே அப்படிச் சொன்னது தப்புதான். யோசிக்காம பேசிட்டேன். மன்னிச்சுடுங்க!

“‘பேன்ட்டைக் கொடுங்க என்றார் ஆட்டோக்காரர். “நான் பேன்ட்டை எடுத்துக்கறேன். ஆனா, ஒரு கண்டிஷன்! நீங்க எனக்கு முந்நூறு ரூபா கொடுக்க வேணாம். அதான் விலை. நான் யார்கிட்டேர்ந்தும் எதையும் தானமா வாங்கினதில்லே. உங்க உணர்ச்சியை விலை பேசறேன்னு நினைக்க வேணாம். சும்மா வாங்கிக்கினு போனேன்னா, எனக்கு நைட்டு தூக்கம் வராது. இது நான் என் தூக்கத்துக்குக் கொடுக்கிற விலை என்றார் ஆட்டோக்காரர்.

இது தானம் இல்லே. தட்சணை. நீங்கதான் என் குரு. உங்ககிட்டேர்ந்து நான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டிருக்கேன் என்றார் பசுபதி.
கால்சட்டையை வாங்கிக்கொண்டு, பசுபதி கூறியது காதிலேயே விழாதவர் போல் வண்டியைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார் ஆட்டோக்காரர்.

வண்டி முன்னைக்குச் சற்று வேகமாகப் போவது போல் பசுபதிக்குத் தோன்றிற்று!

நன்றி - விகடன்

தொலைவு - இந்திரா பார்த்தசாரதி

 ஜன்பத் போக்குவரத்துத் தீவு. பச்சை ஒளி தந்த அநுமதியில் அதுவரையில் சிலையாய் நின்ற ராட்சஸ பஸ்கள் சீறிக்கொண்டு புறப்பட்டன.

"அப்பா, அதோ "*ஸ்கூட்டர்..." என்று கூவியவாறே வாசுவின் பாதுகாப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு சிவப்பு ஒளியையும் பாரா மல் வீதியின் குறுக்கே ஓடினாள் கமலி.

"கமலி!" என்று கத்தினான் வாசு.

அவள் ஏமாற்றத்துடன் திரும்பிப் பார்த்தாள். வாசு அவள் கையைப் பற்றி வேகமாகப் பின்னால் இழுத்துக்கொண்டு வந்தான்.

"வாக்'னு வந்தப்புறந்தான் போகணும்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? வயது ஏழாச்சு. இது கூடத் தெரியலியே?"

"அந்த ஸ்கூட்டர் காலியாயிருக்கு. யாரானும் ஏறிடுவாப்பா." "ஏறிட்டுப் போகட்டும். ரோடை இப்போ கிராஸ் பண்ணக் கூடாது." --------------- *தில்லியில் ஆட்டோ ரிக்ஷாவை "ஸ்கூட்டர்" என்று குறிப்பிடுவது வழக்கம்.

"அதோ எல்லாரும் பண்றாளேப்பா!"

"ஒத்தர் தப்புப் பண்ணினா எல்லாரும் பண்ணணுமா?"

கமலிக்கு அப்பாவின் பேரில் கோபம் கோபமாக வந்தது. அரை மணி நேரமாக இருவரும் ஸ்கூட்டருக்காக அலைகிறார்கள். ப்ளாசாவி லிருந்து அவளை இதுவரை நடத்தியே அழைத்து வந்துவிட்டான் வாசு.

அவர்கள் பஸ்ஸில் போயிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பஸ்ஸிலும் கூட்டம் பொங்கி வழிந்தது. குழந்தையையும் இழுத்துக் கொண்டு முண்டியடித்து ஏற முடியுமா? - வாசுவால் இதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. டாக்சியில் போகலாமென்றால் அதற்கு வசதியில்லை. லோதி காலனி போவதற்கு நாலு ரூபாய் ஆகும். இடைக்கால நிவாரணம் கொடுக்கப் போகிறார்கள்; வாஸ்தவந்தான். போன மாதம் அக்காவுக்கு உடம்பு சரியில்லை என்று அவன் பம்பாய் போய் வரும்படியாக ஆகிவிட்டது. அதற்கு வாங்கிய கடன் தீர வேண்டும். கடன் வாங்குவது என்பது அவனுக்குப் பிடிக் காத காரியம். ஆனால் திடீர் திடீரென்று செலவுகள் ஏற்படும்போது அவற்றை எப்படிச் சமாளிப்பது?

"அப்பா, அந்த ஸ்கூட்டரிலே யாரோ ஏறிட்டா" என்று அலுத்துக் கொண்டே சொன்னாள் கமலா.

குழந்தையின் எரிச்சல் அவனுக்குப் புரிந்தது. ஆனால் என்ன செய்ய முடியும்? சாயந்திரம் ஐந்து மணிக்கு மேல் ஆகிவிட்டால் ஒரு ஸ்கூட்டர் கூடக் கனாட் பிளேசில் கிடைக்காது. கிடைப்பதும், கிடைக்காமல் இருப்பதும் ஒவ்வொருவருடைய அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

தனக்கு என்றுமே அதிர்ஷ்டம் கிடையாது என்று நினைத்தான் வாசு. அவன் மெடிக்கல் காலேஜில் சேரவேண்டுமென்று ஆசைப் பட்டான். அதற்கு வேண்டிய நல்ல மார்க்கும் வாங்கியிருந்தான். ஆனால் இண்டர்வியூவில், "மத்திய ஆப்பிரிக்காவில் இரண்டாண்டு களுக்கு முன் எவ்வளவு அங்குலம் மழை பெய்தது?" என்று கேட்ட போது, அவனுக்குப் பதில் தெரியவில்லை. ஆகவே, அதற்கு அடுத்த வருஷம், "உலகம் நெடுக எங்கெங்கு மழை பெய்கிறது? எப்படி வெயில் காய்கிறது?" என்பவை பற்றியெல்லாம் அலசி ஆராய்ந்து விட்டு, இண்டர்வியூவுக்கு போனான். 'மெக்ஸிகோவில் மத்தியான வேலைகளில் மக்கள் என்ன செய்கிறார்கள்?" என்று கேட்டார்கள். அந்த வருஷமும் அவனுக்கு இடம் கிடைக்கவில்லை. பி. . படித்து விட்டுத் தில்லியில் மத்திய அரசாங்கத்தில் வேலை செய்ய வேண்டு மென்று அவன் தலையில் எழுதியிருந்தது - அப்படித்தான் அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

"அப்பா, 'வாக்'னு வந்துடுத்து."

"சரி, கையைப் பிடி. ஓடாதே!" ஸிந்தியா ஹவுஸ் பக்கம் போய் இருவரும் நின்றார்கள்.

"காலை வலிக்கிறது" என்றாள் கமலை. மரீனா ஹோட்டலருகே நின்று கொண்டிருந்த ஸ்கூட்டரில் ஏறியிருந்தால் இத்தனை நேரம் அவர்கள் வீட்டுக்குப் போயிருக்கலாம். அந்த ஸ்கூட்டர்காரனும் லோதி காலனிப் பக்கம் போக வேண்டியவன்தான் போல் இருக்கிறது. வாசுவை ஏற்றிக்கொள்ள இணங்கினான். ஆனால் ஒரு பெண் கோபமாக வந்து, அந்த ஸ்கூட்டரைத் தானே முதலில் கூப்பிட்டதாகச் சொன்னாள். ஸ்கூட்டர்காரன் அவள் எங்கே போகவேண்டுமென்று கேட்டான். அந்த பெண் கர்ஸன் ரோட் போகவேண்டும் என்றாள். நடந்தே போய்விடலாம் என்று யோசனை சொன்னான் ஸ்கூட்டர்காரன். அந்தப் பெண் முதலில் கூப்பிட்டிருந்தால் அவள் கோபம் நியாயமானது என்றே பட்டது வாசுவுக்கு. அவளை அழைத்துப் போகும்படி சொல்லிவிட்டு விலகிக்கொண்டான். அந்த பெண் நன்றியைச் சொல்லாமல் உரிமைப் போராட்டத்தில் வெற்றி அடைந்தது போல் ஏறிக்கொண்டாளே என்ற வருத்தம் இல்லாமல் இல்லை. நியாயத்தைப் பற்றி அப்பொழுது அவன் அவ்வளவு கவலைப்படாமல் இருந்திருந்தானானால் கமலிக்கு இப்பொழுது காலை வலித்திருக்காது.

வாழ்க்கையில் அடிப்படையான சில விஷயங்களுக்கு மதிப்பு அளிக்காவிட்டால், சமுகத்தில் வாழ்ந்து என்ன பிரயோசனம்? சிக்கலாகிக்கொண்டு வரும் சமுதாயத்தில் இது சாத்தியமா?

பிளாசா அருகே மூன்று ஸ்கூட்டர்கள் காலியாக நின்றுகொண்டிருந்தன. வாசு கமலியின் கையைப் பிடித்துக்கொண்டு பரிதாபமாக நின்றான். ஒருவராவது அவனை ஏறிட்டுப் பார்க்கவில்லை. வாசு, கால் மேல் கால் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்துச் சொன்னான்: "ஸ்கூட்டர் வேண்டும்."

அவன் வாசுவைப் பார்க்காமலே கேட்டான்: "எங்கே போக வேண்டும்?"

"லோதி காலனி."

அவன் பதில் சொல்லவில்லை. சிகரெட்டைப் பலமாக இழுத்துப் புகையை விட்டான். இன்னொருவன் வாசு செங்கோட்டை வருவதாக இருந்தால் அங்கு அழைத்துப் போவதாகப் கூறினான். லோதி காலனிக்குப் பதிலாகச் செங்கோட்டைக்கு அருகில் தான் இருந்திருக்கக் கூடாதா என்று வாசுவுக்குத் தோன்றிற்று. அப்பொழுது சுவரருகே நின்றுவிட்டுப் பைஜாமாவை இருக்கக் கட்டிக்கொண்டே வந்த ஒருவன், நாலு ரூபாய் கொடுப்பதானால் லோதி காலனிக்கு வருவதாகச் சொன்னான். டாக்ஸிக்கே நாலு ரூபாய்தான் ஆகும். அந்த வசதி இருந்தால் ஸ்கூட்டருடன் எதற்காகப் பேரம்? - வாசுவுக்கு மிகுந்த கோபம் வந்தது. யார் மீது என்று அவனுக்கே புரியவில்லை.

"அப்பா, அதோ ஸ்கூட்டர்" என்றாள் கமலி.

மேற்புறம் திறந்து வெயிலுக்குச் சௌகரியமாய், காற்றோட்டமாய் இருந்தது அந்த ஸ்கூட்டர். சார்ட்டைப் பார்க்கவேண்டிய அவசியமில்லாமல் புதிதாகப் பொருத்தப்பட்டிருந்தது கட்டண மீட்டர். வாழ்க்கையின் லட்சியமே கைகூடி விட்டாற்போல் ஓடினான் வாசு. ஆனால் இரண்டு தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன் பதில் சொல்லவில்லை. மூன்றாம் தடவை கேட்டும் ஸ்கூட்டர்காரன் பதில் சொல்லவில்லை. சீறி விழுந்தான். "ரேடியேட்டர் சூடாகிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரத்துக்கு எங்கும் போவதாக இல்லை." ரேடியேட்டரைக் காட்டிலும் அவன்தான் சூடாயிருந்தான் என்று வாசுவுக்குத் தோன்றிற்று.

தனக்கு மிகவும் பிடித்திருந்த ஸ்கூட்டர் கிடைக்கவில்லையே என்று எரிச்சலாக வந்தது, வாசுவுக்கு. புதிய கட்டணம் அமலுக்கு வந்து ஆறு மாதமாகிறது. முக்கால்வாசி ஸ்கூட்டர்களில் சார்ட் தான் தொங்குகிறது; கணக்குப் பார்த்துக் கொடுப்பதற்கு ஒருவன் தன் சிந்தனை முழுவதையும் ஒருமைபடுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றி விடுவார்கள். புதிய மீட்டரில் பழைய மீட்டரைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்தாலும் பரவாயில்லை. பழைய மீட்டரில் ஏமாறாமலிருப்பதுதான் தீய எதிர்ச் சக்திகளினின்றும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது போலாகுமென்று நினைத்தான் வாசு. தில்லி போன்ற நகரங்களில் ஒருவனுக்குத் தான் ஏமாறாமல் இருக்கவேண்டுமென்ற ஜாக்கிரதை உணர்வே முழு நேரக் காரியமாக இருந்தால், அவன் ஆக்கப் பூர்வமாக வளர்வது எப்படி?

"டாக்ஸியிலே போகலாமாப்பா?" என்று கேட்டாள் கமலி. அவளுக்குக் கால் வலிக்கிறது என்ற பிரத்தியட்ச உண்மையைத் தவிர, மாதத்துக் கடைசி வாரத்தில் மத்திய சர்க்கார் அஸிஸ்டெண்டால் இதைப் பற்றி யோசித்துப் பார்க்க முடியுமா என்ற பொருளாதாரப் பிரச்னையைப் பற்றிக் கவலையில்லை. இப்போது அவனால் அது முடியாது என்பது இருக்கட்டும்; மாத முதல் வாரத்தில் கூட என்றைக்காவது குற்ற உணர்ச்சி இல்லாமல் அவனால் டாக்ஸியில் போக முடிவதில்லை. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இயந்திர பூர்வமாகிவிட்ட சமுகத்தின் ஒழுக்க நியதிகள், ஒருவனைக் குற்ற உணர்ச்சியால் அவஸ்தைப்படும் நிலைக்குக் கண்டிஷன் செய்துவிடுகின்றன போல் இருக்கிறது.

"ஸ்கூட்டரே கிடைக்காது"என்று சாபம் கொடுப்பது போல் சொன்னாள் கமலி.

"அவசரப்படாதே, கிடைக்கும்."

"பஸ்ஸிலே போகலாமே!" அப்பா தன்னை டாக்ஸியில் அழைத்துச் செல்ல தயாராக இல்லை என்பது அவளுக்குப் புரிந்து விட்டது.ஸ்கூட்டரே குறிக்கோளாகய் அலைவதைக் காட்டிலும் பஸ்ஸில் போகலாமே என்று அவளுக்குத் தோன்றிற்று.

"கூட்டத்திலே ஏற முடியுமா உன்னாலே?"

"பின்னாலே என்னதான் பண்றது? ஆத்துக்குப் போகாமலேயே இருக்கலாங்கறேளா?"

இக்கேள்வி ஒரு பயங்கரமான எதிர்காலத்தை அவன் மனக் கண் முன்பு நிறுத்தியது. ஸ்கூட்டரே கிடைக்காமல் ஸ்கூட்டரைத் தேடி இருவரும் வாழ்நாள் முழுவதும் கனாட் பிளேஸில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவன் கிழவனாகி விடுகிறான். கமலியும் வளர்ந்து பெரிய பெண்ணாகி விடுகிறாள். ஸ்கூட்டர்க்காரர்களின் அடுத்த தலைமுறையும் அவர்களை ஏற்றிச் செல்ல மறுத்துவிடுகிறது.

" அப்பா, இதோ பஸ் காலியா வரது.போயிடலாம்."

வாசு திரும்பிப்பார்த்தான், பஸ் காலியாகத்தான் இருந்தது. ஆனால் லோதி காலனி செல்லும் பஸ் அல்ல; அது மதராஸ் ஹோட்டலுடன் நின்றுவிடும். அதனால்தான் கூட்டமே இல்லை.

" இந்தப் பஸ் லோதி காலனி போகாது" என்றான் வாசு.

"ஏன் எல்லாப் பஸ்ஸையும் லோதி காலனிக்கு விடமாட் டேங்கறா?"

இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்லுவது? லோதி காலனி ரோம் அல்ல, எல்லா சாலைகளும் அங்கே செல்ல. அரசாங்கம் பஸ் போக்குவரத்து நடத்துவதன் நோக்கம் என்ன என்று கமலிக்கு விளங்க வைக்க முடியுமாவென ஒரு கணம் யோசித்தான். சமூகத்தைப் பற்றிக் கவலைப்படும் சர்க்காருக்குத் தான் தனி மனிதனைப்பற்றி அக்கறை இல்லை. தனி மனிதன் தன் உரிமைகளைத் தியாகம் செய்யத் தயாராக இருந்தால்தான் சமூகம் என்ற கருத்துப் பிறக்கிறது. இது கமலிக்குப் புரியுமா?

அவளுக்கு என்ன, இது யாருக்குத்தான் புரிகிறது? தனிமனிதன் சமூகத்துக்குள் புகுந்துகொள்வதே, சமூகம் என்ற மானசீகத்தைத் தனக்குச் சௌகரியமாகப் பயன்படுத்திக் கொள்ளத்தான் என்று தோன்றுகிறது. இதில் வெற்றியடையும் சிலரே தங்களை அத்தகைய 'ஃப்ராங்கென்ஸ்டீன்' பூதமாக்கிக்கொண்டு தனி மனிதனை மேய்ந்து வருகிறார்கள்.ஆனால் தன்னளவில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடங்கி,சமூகத்தில் ஒழுக்க விதிகளைப் பின்பற்றுவதே இந்த ஸ்தாபனத்தின் யந்திரக் குரூரத்தை ஓரளவு எதிர்த்துப் போராடு வது போல்தானே?ஹரிச்சந்திரன் உண்மையைத் தவிர வேறு பேசுவதேயில்லை என்பதைக் கண்டதும் விசுவாமித்திரனுக்கு எவ் வளவு எரிச்சல்,ஆத்திரம்!

"அப்பா,அதோ மூர்த்தி மாமா போறா!"

வாசு திரும்பிப் பார்த்தான்.கமலியின் குரலைக் கேட்டதும், மூர்த்தி காரை நிறுத்தினான்.அவன் வாசுவோடு படித்தவன்.கல் லூரியில் படிக்கும் போது அவன் பெயர் கோபாலன்.பெயர் வைத்த தோஷமோ என்னவோ,வெண்ணெய்க்குப் பதிலாக அவன் மற்ற மாணவர்களின் சைக்கிள்களையெல்லாம் திருடி விற்றுவிடுவது வழக்கம்.ஒரு நாள் அகப்பட்டுக் கொண்டான்.அவனும் நாதன் என்ற இன்னொரு பையனுமாகச் சேர்ந்து அந்தக் களவைச் செய்து வந்தார்கள்.இரண்டு பேருக்கும் ஆறுமாதச் சிறைத் தண்டனை கிடைத்தது.நாதன் இப்போது சென்னையில் பிரபல கிரிமினல் வக்கீல்.கோபாலனோ மூர்த்தியாகி, தில்லியில் ஒரு கம்பெனியில் லையாசான் ஆபீஸராக இருந்து வருகிறான்.

இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னர் மூர்த்தியை உத்தியோக் பவனில் வாசு பார்த்தான்."கோபாலன்"என்று கூப்பிட்டதும் ஓரளவு திடுக்கிட்டு அவன் திரும்பிப் பார்த்தான்.பிறகு வாசுவைத் தெரிந்த மாதிரியே அவன் காட்டிக்கொள்ளவில்லை."என் பெயர் மூர்த்தி, கோபாலன் இல்லை;யூ ஆர் மிஸ்டேக்கன்"என்றான்.வாசுவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது.இப்படி உருவ ஒற்றுமை சாத்தியமா? இரண்டு நாள் கழித்து வாசுவின் வீட்டைத் தேடி வந்து அவன் சொன்ன பிறகுதான் விஷயம் புரிந்தது."என் பெயர் இனிமேமூர்த்தி தான்;கோபாலனை மறந்துடு.இங்கே ஏதோ நல்லபடியா இருக் கேன்.கிட்டத்தட்ட காலேஜ்லே செஞ்சிண்டிருந்த வேலை மாதிரி தான்.ஆனா அப்போ நாதன் பார்ட்னர்.இப்போ கவர்ன்மென்ட்டு.... கார் வெச்சிண்டிருக்கேன்.சுந்தர் நகர்லே வீடு.ஆத்துக்கு வாயேன் ஒரு நாள்."

உத்தியோக் பவனில் வேலை பார்க்கும் தன்னைப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறான் என்பது வாசுவுக்கு அவன் வீட்டுக்குப் போன பிறகுதான் புரிந்தது.போவதை நிறுத்திவிட்டான்.ஆனால் அவன் வாசுவின் வீட்டுக்கு ஐந்தாறு தடவை வந்து போயிருக்கிறான்.

"ஹல்லோ,வாசு!எங்கே போகணும்,வீட்டுக்கா?"

"ஆத்துக்குத்தான்"என்று சொல்லிக் கொண்டே வாசுவை நம் பிக்கையுடன் பார்த்தாள் கமலி.

ஸ்கூட்டர் கிடைக்கவில்லையே, இவனுடன் போய்விடலாமா என்று ஒரு கணம் சிந்தித்தான் வாசு. கூடாது: தான் அவனுக்கு ஒரளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வு தனக்கு ஏற்படக் கூடாது. இந்த உணர்வே சால்ஜாப்பாக, அவனிடமிருந்து வேறு பல சௌகரியங்கள் எதிர்பார்க்கக்கூடிய இச்சை ஏற்படக்கூடும். தனக்கு அப்படி ஏற்படவேண்டும் என்றுதான் மூர்த்தி எதிர்பார்க்கிறான். ஓருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வதுதான் சமுகம் என்ற கருத்து, எப்படி ஒருவரையொருவர் பயன்படுத்திக் கொண்டு சமுகம் தரும் வாய்ப்புக்களை யெல்லாம் தங்களுக்கு உரிமையாக்கிக் கொள்வது என்று ஆகிவிட்டது! -மூர்த்தியுடன் போனால் தானும் இந்தக் கருத்துக்கு உடன்பட்டது போலாகும். உடனடியான சௌகரியத்துக்காகக் கொள்கையைத் தியாகம் செய்யலாம?- கூடவே கூடாது.

"நான் வல்லே, நீ போ" என்றான் வாசு.

"லோதி காலனிப் பக்கந்தான் நான் போறேன், வா!"

"நீ எதிர்த் திசையிலே போறே, லோதி காலனிப் பக்கந்தான் போறேங்கிறேயே?"

"இங்கே ஒத்தரைப் பார்த்துட்டு, லோதி காலனி போகணும், வா."

"நீ சுந்தர் நகரிலே இருக்கே. லோதி காலனி வழியாச் சுத்திண்டு போகணுமா? - நீ போ. தாங்க் யூ!"

"என்ன இவ்வளவு 'பிகு' பண்ணிக்கிறே? - உத்தியோக் பவனுக்கு வந்து உன்னைத் தொந்தரவு பண்ணமாட்டேன், சரிதானே? நோ லாட்ஸ் ஆஃப் அதர் பீபிள் இன் உத்யோக் பவன்."

எதற்காக இதைச் சொல்லுகிறான்? - 'நீ உன் ஆபிஸில் அற்ப மானவன். உன் உதவி தேவையில்லை' என்பதற்காகவா? அல்லது, 'யார் யாருக்கோ நான் பணம் தரத் தயராக இருக்கும்போது என்னுடன் படித்த நீ ஏன் இப்படி அப்பாவியாய் இருக்கிறாய்?' என்று சுட்டிக்காட்டவா? பணத்தினால் எதைத்தான் சாதிக்க முடியாது? - இதோ, இப்பொழுது இவனுடைய அந்தரங்கத்தை ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. டாக்ஸியில் போயிருக்கிலாம். ஏன், சொந்தக் காரே வைத்திருக் கலாம்.

"என்ன யோஜிக்கிறே? கம் ஆன், ஏறு."

"நோ... ப்ளீஸ்..." கமலியின் கையை இழுத்துக்கொண்டு வேகமாக நடந்து சென்றான் வாசு.

கமலி கோபத்தில் வாசுவின் கைகளை உதறினாள். "எனக்கு நடக்கத் தெரியும்."

வாசு அவள் கோபத்தைப் புரிந்து கொண்டான்.ஒன்றும் சொல்லவில்லை.

'ஸிந்தியா ஹவுஸ்'எதிரே இரண்டு ஸ்கூட்டர்கள் நின்று கொண்டிருந்தன.ட்ரைவர்களைக் காணவில்லை.ஒரு ஸ்கூட்டரின் அருகே போய் நின்று சுற்று முற்றும் பார்த்தான் வாசு.அப்பொழுது கமலி 'ஹார்ன்' அடித்தாள்.

"நோ.அப்படியெல்லாம் அடிக்கக்கூடாது."

எங்கிருந்தோ ஒரு டிரைவர் அப்பொழுது அங்கே திடீரென்று தோன்றினான்."எங்கே போக வேண்டும்?"என்றான்.

"லோதி காலணி."

"திரும்பி வர வேண்டுமா?"

"இல்லை."

டிரைவர் பதில் கூறாமல் பீடியைப் பற்றவைத்துக்கொண்டான்.

"என்ன ஸ்கூட்டர் வருமா? வராதா?"

"என் நம்பர் இப்பொழுது இல்லை.அந்த ஸ்கூட்டர்காரனைக் கேளுங்கள்."

"அந்தஸ்கூட்டர்காரன் எங்கே?"

"தெரியாது."

இதற்குள் ஐந்தாறு பேர்கள் ஸ்கூட்டருக்காக அங்கு ந்து விட்டார்கள்.எல்லாருக்கும் ஒரே தில்தான்.

அந்தஸ்கூட்டர்காரன் கால்மணி ழித்து ந்தான். வாசு அவனிடம் ஓடினான்."லோதி காலனி போகவேண்டும்." என்றான்.

அப்பொழுது ஓர் அழகானப் பெண்.ண்களால் சிரித்துக் கொண்டே கேட்டாள்."காக்கா ர் போகவேண்டும்.

ஸ்கூட்டர்காரன் அந்தப் பெண்ணை ஏறச்சொன்னதும் வாசு கூறினான்:"நான் இங்கே கால்மணி நேரமாகக் காத்துக்கொண் டிருக்கேன்.இந்தஸ்கூட்டர்காரரைக் கேளுங்கள்...."

அந்தஸ்கூட்டர்காரன் ன்னைச் சாட்சிக்கு அழைத்ததும் வேறு க்கம் திரும்பிக்கொண்டு விட்டான்.வாசு விடவில்லை. "யார் முதலில் ந்தார்கள்?"என்று அவனைக் கேட்டான்.

"யார் ந்தால் என்ன‌?அதோ அவள்* கிளம்பிப் போய்விட் டான்*."என்று சிரித்துக் கொண்டே சொன்னான்,அந்தஸ்கூட்டர்க் காரன்.

அந்தப் பெண் 'டாடா,பைபை'சொல்லாதகுறை! ஸ்கூட்டர் போய்விட்டது.அவன் உடம்பு கோபத்தால் ஆடியது. அங்கிருந்தஇன்னொரு ஸ்கூட்டரையும்,டாக்சி ஸ்டாண்டிலிருந்தடாக்சிகளையும்,தெருவில் போய்க்கொண்டிருந்தகார்களையும், பஸ்களையும் - எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிவிட வேண்டுமென்ற வெறி வந்தது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குப் போவதற்கு அவன் பத்து வருஷத்துக்கு முன்னால் பஸ்ஸையோ, ஸ்கூட்டரையோ அல்லது டாக்சியையோ எதிர்ப்பார்த்துகொண்டா இருந்தான்? - தன்னால் இப்பொழுது கமலியைத் தூக்கிக்கொண்டு லோதி காலனிக்கு நடந்துபோக முடியாதா?

கமலி தூக்கக்கூடாது என்று முரண்டு பிடிக்கலாம். அவளைச் சமாதானப்படுத்தித் தூக்கிக்கொண்டு போகலாம் என்றாலும், அவனுக்குப் பைத்தியக்காரன் என்ற பட்டந்தான் கிடைக்கும். சிக்கலாகிவிட்ட சமூகத்தில் ஒருவன், 'சமுகம் என்றால் தன்னைத் தவிர மற்றவர்கள்' என்ற பிரக்ஞையோடு அவர்கள் அபிப்பிராயத்துக்கு இசைந்து வாழவேண்டியிருக்கிறது. ஆனால் இதை எதிர்த்துப் போராட வேண்டும்.

"கமலி வா, நடந்தே போயிடலாம்" என்றான் வாசு.

"நடந்தேவா?" என்று அவள் திகைத்தாள்.

"நடக்க முடியலேன்னா சொல்லு, தூக்கிண்டு போறேன்" என்றான் வாசு.

வரிசை வரிசையாகக் கார்களும், டாக்ஸிகளும் விரைந்துகொண்டிருந்தன.

வாசுவும் கமலியும் இன்னும் வெகுதூரம் போகவேண்டும்.

நன்றி - மதுரைத்திட்டம்