வைகுண்டத்தில் நாரதரின் ‘ஜிப்ளி’ எஃபக்ட் - எஸ்.பாலாஜி


வைகுண்டம்! ஒளியால் ஆன ஓர் உலகம். அங்கே ஒவ்வொரு அணுவும் தெய்வீகமான ஒளியால் துடிப்புடன் மின்னிக்கொண்டிருந்தது. வண்ண ஒளிக்கதிர்கள் வானவில் போல் சிதறி, மிருதுவான வெளிச்சம் தந்து ஆழ்வார்களின் பாசுரங்களைப் போல் இனிமையாக பரவிக்கொண்டிருந்தது.


வைகுண்டத்தின் ஒவ்வொரு மூலையிலும் அழகிய தடாகங்கள் மின்னின. அந்தத் தடாகங்களில் தங்கமயமான தாமரைகள் பூத்துக் குலுங்கின. வாசலில் தொங்கிய சுவர்ண மணிகள் தென்றலில் ஆடி, கோபியரின் கோலாட்டம் போல் இனிமையான ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தன.


பாற்கடலின் நுரைபோல் வெண்மையான ஆதிசேஷனின் மேலே, ஸ்ரீமந்நாராயணன் இன்பமயமாக அமர்ந்திருந்தார். ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளை ஒருங்கே உயர்த்தி, வெண்மையான ஒளியால் பிரகாசித்துக் கொண்டிருந்தான். அவனது பச்சைநிற தோலில் பெருமாளின் நீல வண்ண தோற்றம் பிரதிபலித்து, அற்புதமான வண்ண ஜாலங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது.


தாயார் மகாலட்சுமி பெருமாளின் அருகில் அமர்ந்து, மெல்லிய குளிர்ச்சியான தன் செந்தாமரை கரங்களால் பெருமாளின் திருவடிகளை அழுத்திக்கொண்டிருந்தாள். அவளது முகத்தில் சாந்தமும் அன்பும் நிறைந்திருந்தது. அவளது கண்களில் பரம்பொருளின் மீதான பக்தியின் ஒளி தெரிந்தது. வைகுண்டம் முழுவதும் அமைதியும், பேரின்பமும் நிரம்பியிருந்தது.


இந்த பேரமைதியை கிழிப்பது போல், திடீரென நாரதர் வைகுண்டத்திற்குள் நுழைந்தார். அவரது கையில் வழக்கமான வீணைக்குப் பதிலாக ஒரு புதிய பொருள் இருந்தது. அதிலிருந்து அவரது 'சி' தம்புராவின் ஒலி சீராக ஒலித்துக் கொண்டிருந்தது.


"நாராயண நாராயண," என்ற மந்திரத்தை உச்சரித்தவாறே நாரதர் உள்ளே வந்தார். அவரது முகத்தில் ஒரு சிறுவனின் உற்சாகமும், புதிய விளையாட்டுப் பொருளைக் கண்டுபிடித்த மகிழ்ச்சியும் தெரிந்தது.


தாயார் லட்சுமியின் கண்கள் படபடப்பாகின. "ஆகா, நாரதர் இங்கு வருகிறார், ஏதோ கலகம் செய்யப் போகிறார்" என்ற கவலை தோய்ந்த பார்வையை பெருமாளிடம் வீசினாள். அவரோ "கவலை வேண்டாம், 'மா சுச'" என்று அர்ஜூனனுக்கு கீதோபதேசம் சொன்னது போல் கைகளை உயர்த்தி சமாதானப்படுத்தினார்.


இவையனைத்தையும் நாரதர் தன் ஓரக்கண்களால் கவனித்துக் கொண்டே, "தாயே, கவலைக் கொள்ளாதீர்கள்! நான் கலகம் செய்ய வரவில்லை. எனக்கு ஒரு அற்புதமான பொருள் கிடைத்தது, அதை பகவானிடம் சமர்ப்பிக்கவே வந்தேன்," என்றார் ஆர்வத்துடன்.


"என்ன நாரதா? எப்பொழுதும் ரொம்ப பீடிகை போட்டுப் பேசுவாய். ஆனால் இன்றோ எதுவுமில்லாமல் உடனே விஷயத்திற்கு வந்துவிட்டாய்," என்று பெருமாள் புன்முறுவலுடன் கேட்டார்.


"இல்லை ஸ்வாமி, நான் சமீபத்தில் பூலோகம் சென்றிருந்தேன். அங்கு இருந்த அனைவரின் கைகளில் ஒரு பொருள் இருந்து அவர்களை அல்லோலகல்லோலப் படுத்துகிறதோ என்று எண்ணினேன். ஆனால் இன்று அதன் பிடியில் நானே விழுந்துவிட்டேன். அதனை தங்களிடம் காண்பிக்கவே ஓடோடி வந்தேன் கண்ணா," என்றார் நாரதர்.


"ஆக, உன் கலகத்திற்கு பூலோகத்திலிருந்து ஏதோ கொண்டு வந்துள்ளாய். சரி, உன் விளையாட்டை ஆரம்பி. எங்கே அது? எனக்குக் காண்பி," என்றார் பெருமாள், ஆர்வம் தன் கண்களில் மின்ன ஒன்றும் தெரியாத சிறுவனாய் தாய் யசோதையிடம் மாட்டிக் கொண்டு நிற்பவர் போல.


"இதோ ஸ்வாமி, இதுதான் அது," என்று நாரதர் தன் கையில் இருந்த பொருளைக் காட்ட, அதிலிருந்து பளிச்சென்று வெளிச்சம் பரவியது.


சற்று நீளமாக செவ்வக வடிவில் இருந்த பொருளை ஆச்சரியமாக வாங்கினார் பெருமாள். அதன் பளபளப்பான மேற்பரப்பில் தனது பிரதிபிம்பம் தெரிவதைக் கண்டார்.


"என்ன இது நாரதா?" என்று கேட்டார் பெருமாள், அதன் விளிம்புகளை தடவியபடி.


"ஸ்வாமி, இதனை 'ஸ்மார்ட்போன்' என்கின்றனர் பூலோகத்தார்," என்றார் நாரதர் பெருமையுடன்.


"என்ன, ஸ்மார்ட்போனா? இதன் பயன் என்னவோ?" பெருமாள் அதன் பக்கவாட்டிலுள்ள பொத்தான்களை ஆராய்ந்தபடி கேட்டார்.


"ஸ்வாமி, இதை வைத்துக் கொண்டு ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், சிலர் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டும் கொள்கிறார்கள். சிலர் பைத்தியம் போல் கத்துகிறார்கள்," என்றார் நாரதர், இன்னும் பல வேடிக்கைகள் சொல்ல ஆயத்தமாக.


"நாரதா... நிறுத்து! இப்படிப்பட்ட மோசமான ஒன்றை எதற்காக இங்கு கொண்டு வந்தாய்?" கோபத்துடன் கேட்டாள் தாயார்.


"இல்லை தாயே, இதிலும் நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. அதனைக் கொஞ்சம் பார்ப்போமா?" நாரதர் கெஞ்சினார். 


பெருமாள் தன் அபய ஹஸ்தத்தை தாயாரிடம் காண்பித்து, “லட்சுமி, கவலைப்படாதே! நான் இருக்கிறேன்," என்று சமாதானப்படுத்தினார்.


"சரி ஸ்வாமி, நீங்கள் சொல்வதால் இந்த நாரதனை விட்டு விடுகிறேன். நாரதா, நீ வந்த வேலையை தொடங்கு!” என்றாள் தாயார், இன்னும் முழுமையாக சமாதானம் அடையாமல்.


"நாராயண நாராயண, ஸ்வாமி இதனை வைத்து பூலோகத்தில் உள்ள யாரிடமும் பேசிக் கொள்ளலாம். தங்களுக்கு யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டுமா?" என்றார் நாரதர் உற்சாகத்துடன்.


தாயார் கோபத்துடன் "நாரதா!" என்று கூப்பிட்டதும், நாரதர் வேகமாக தன் விளக்கத்தைத் தொடர்ந்தார்.


"இல்லை தாயே, நம் பெருமாள் கண்ணனாக அவதாரமெடுத்து தாய் யசோதாவிடமும் தேவகியிடமும் ஏதாவது பேசாமல் விட்டு வந்திருந்தால் தொடர்பு கொண்டு பேசலாமே என்று..." நாரதர் தன் வாக்கியத்தை முடிக்க முடியாமல் தவித்தார்.


"வேண்டாம் நாரதா, வேண்டாம். வேறு ஏதாவது இதனுள் இருக்கிறதா?" பெருமாள் சற்று ஆர்வத்துடன் கேட்டார், தாயாரின் கோபம் அதிகரிப்பதை உணர்ந்து.


"ஸ்வாமி, தற்சமயம் இதில் டிரென்டிங்காக ஒன்று உள்ளது, அதற்கு 'ஜிப்ளி எபக்ட்' என்று பெயர். நம் படத்தை இதனுள் கொடுத்தோமானால் அதனை நல்ல காமெடியான கார்ட்டூன் படமாக உருவாக்கிக் கொடுக்கும்," என்றார் நாரதர், கண்கள் மின்ன.


"ஆகா, நன்றாக உள்ளதே, இதனை வேண்டுமானால் செய்து பார்க்கலாம்," என்றார் பெருமாள், புன்னகையுடன்.


"இதோ ஸ்வாமி, நீங்களும் தாயாரும் சேர்த்தியாய் இருக்கும் இந்தப் படத்தை இதனுள் செலுத்துகிறேன், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். ஆனால் அதற்கு இங்கு வைபை வேண்டுமே... நம் ஆதிசேஷன் தான் இருக்கிறானே, அவனையே நெட் கொண்டு வரச் சொல்லலாம்," என்றார் நாரதர், ஆதிசேஷனை நோக்கிக் கை சைகை காட்ட.


ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளில் ஒன்றை உயர்த்தி, "நான் என்ன இன்டர்நெட் ரவுட்டரா?" என்று கேட்பதுபோல் பார்த்தான். 


உடன் நாரதர் "வேண்டாம், பூலோகத்தில் எலான் மஸ்க் என்ற ஒருவன் ஸ்டார்லிங்க் என்று வானிலேயே இன்டர்நெட் தொடர்பு கொள்ள வைத்திருக்கிறான் அதனை தொடர்பு கொள்ளலாம். இதோ கனெக்ட் ஆகிவிட்டது." 


"சரி, என்ன வருமென்று காட்டு! ஆர்வத்தைத் தூண்டி விட்டாய்," பெருமாள் சற்றே கோபமுடன் கேட்டார்.


"இதோ ஸ்வாமி, வருகிறது, வருகிறது, இதோ வந்தேவிட்டது. பாருங்கள். தாங்களும் தாயாரும் இருக்கும் சேர்த்தி படம் எப்படி வந்துள்ளது என்று பாருங்கள்," என்று நாரதர் காட்ட, இருவரும் ஆர்வமுடன் பார்த்தனர்.


ஆனால் தாயாரின் முகம் சற்றே வாடத் தொடங்கிவிட்டது. சற்று கோபத்துடன் நாரதரை பார்த்து, "நாரதா! என்ன காரியம் செய்துள்ளாய்? ஸ்வாமியின் அருகில் என் படத்திற்கு பதில் யாரோ ஒருத்தியின் படத்தை வைத்துள்ளாய்! மேலும் என்னை யாரோ அருகில் நிற்க வைக்கிறாய்! உன்னை சபிக்கப் போகிறேன்!" என்றாள் தாயார், கோபத்தில் பொங்க.


"இல்லை தாயே, கோபித்துக் கொள்ளாதீர்! நெட்வொர்க் இஷ்யு, இதோ சரி செய்து விடுகிறேன்," என்று நாரதர் படபடத்தார்.


"பரவாயில்லை நாரதா, என் அருகில் இருக்கும் அந்தப் பெண் யாரென்று தெரிந்து கொள்ளலாமா?" சற்றே ஓரப் புன்னகையுடன் பெருமாள் நாரதரிடம் கேட்டார், தாயார் அருகில் இருப்பதை மறந்து.


"ஸ்வாமி, அது வந்து இன்றைய இளைஞர்களின் கிரஷ் ராஷ்மிகாவின் படமது. திரைப்பட நடிகை அவர்," என்றார் நாரதர், தாயாரின் முகத்தில் படரும் ரோஷத்தைக் கவனிக்காமல்.


"ஓகோ, தமிழ் நடிகையா? சரி சரி, இருக்கட்டும். மற்றொரு முறை சரி செய்கிறேன் என்றாயே, இப்பொழுது எந்த ஹாலிவுட் நடிகை வருகிறார்கள் என்று பார்ப்போம்," என்றார் பெருமாள் சற்று நகைச்சுவையுடன், தாயாரின் கோபம் அதிகரிப்பதை உணராமல். 


"இதோ ஸ்வாமி, வந்துவிட்டது, பாருங்களேன்," என்று நாரதர் மீண்டும் காட்டினார்.


"ஆகா அருமை! என் ராமவதாரத்தில் எனக்கு துணை புரிந்த அனுமன் வந்திருக்கிறான். கூட ஒரு சிறிய பெண் வந்திருக்கிறாளே, அவள் யார்?" என்று பெருமாள் கேட்டார், முகம் மலர.


"ஸ்வாமி, மன்னிக்கவும், மறுபடியும் தவறு நேர்ந்துவிட்டது. இது சுட்டிக் குழந்தைகளின் நட்சத்திரம் டோரா மற்றும் அதன் நண்பன் புஜ்ஜி, ஸ்வாமி," என்றார் நாரதர், தலைகுனிந்து.


"போதும் நாரதா! இத்துடன் உன் விளையாட்டை நிறுத்து. கோமாளித்தனங்களை செய்து எங்களின் ஏகாந்த நேரத்தை வீணாக்காதே," தாயார் கடுமையாகக் கூறினாள், தனது மங்கலான முகத்துடன்.


"மன்னித்து விடுங்கள் ஸ்வாமி, நம் வைகுண்டம் பூலோகத்திலிருந்து வெகுதூரம் உள்ளதால் நெட்வொர்க் இஷ்யூ என்று நினைக்கிறேன்," என்றார் நாரதர், சமாளிக்க முயன்று.


"நான் அப்பொழுதே சொன்னேன், நாரதரை உள்ளே விடாதீர்கள் என்று. பாருங்கள், இன்று நம் இனிமையான நேரத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறான்," லட்சுமி தாயார் மிகுந்த கோபத்துடன் கூறினாள்.


"இல்லை லட்சுமி, சற்றுப் பொறு. அவன் நம்மிடம் புதிதாக வந்த ஒரு விஷயத்தைக் காட்டி ஏதோ நமக்கு எதுவும் தெரியாதென்று நினைத்து வந்துள்ளான். இதனை நாம் திட்டலாமா?" பெருமாள் சமாதானப்படுத்த முயன்றார்.


"பரவாயில்லை. என்ன ஆனாலும் உங்களுக்கு என்னைத் தவிர உங்கள் அடியார்கள் தான் முதல். நான் ஏதோ தொட்டுக் கொள்வதற்குத்தான் நான் வருகிறேன். என் பிறந்த வீட்டை நோக்கிப் போகிறேன்," என்றாள் தாயார், கண்ணீர் பொங்க.


தாயார் மிகுந்த கோபத்துடன் தன் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு, அவளின் பிறந்த வீடான திருப்பாற்கடலுக்குச் சென்றுவிட்டாள். அவள் செல்லும்போது, வைகுண்டத்தின் ஒளியே சற்று மங்கியது போல் தோன்றியது.


"நாரதா, நீ வந்த வேலை முடிந்ததா? இதற்குத்தானே ஆசைப்பட்டாய், நாரதா?" பெருமாள் சற்று வருத்தத்துடன் கேட்டார்.


"ஸ்வாமி, இல்லை, இல்லை! தாயார் இவ்வாறு கோபித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை. மன்னிக்கவும்," என்றார் நாரதர், உண்மையான வருத்தத்துடன்.


பெருமாள் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். சற்று நேரம் கழித்து, "நாரதா, இந்த ஸ்மார்ட்போன் என்பது மனிதர்களை எவ்வளவு எளிதில் பிரிக்கிறது பார்த்தாயா? எங்கள் இடையே கூட பிளவை ஏற்படுத்திவிட்டது. மனிதர்கள் இந்த சிறிய கருவியில் இவ்வளவு மயங்குவது எப்படி?" என்று கேட்டார்.


"ஸ்வாமி, அதுதான் இதன் மாயை. இது மனிதர்களை ஒன்றிணைக்கவும் செய்கிறது, பிரிக்கவும் செய்கிறது. அவர்கள் உண்மையான உறவுகளை மறந்து, இந்த சிறிய பொருளில் காட்டப்படும் போலி உலகில் வாழ்கிறார்கள்," என்றார் நாரதர்.


"சரி நாரதா, இனி நீ இந்த ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டு செல். நான் தாயாரை சமாதானப்படுத்த வேண்டும். உனக்கு நன்றி, ஒரு புதிய அனுபவத்தைத் தந்ததற்கு. ஆனால் எப்போதும் போல, அது ஒரு சிக்கலையும் உருவாக்கிவிட்டது," என்று பெருமாள் புன்னகைத்தார்.


நாரதர் தலை குனிந்து வணங்கி, தன் ஸ்மார்ட்போனை எடுத்துக்கொண்டு மெதுவாக வெளியேறினார். பின்னால் பெருமாள் தன் சக்கரத்தையும் சங்கத்தையும் எடுத்துக்கொண்டு, தாயாரை சமாதானப்படுத்த திருப்பாற்கடலை நோக்கிச் சென்றார்.


நாரதர் வெளியேறும் வழியில், "நாராயண நாராயண, பூலோக மனிதர்களுக்கு ஸ்மார்ட்போனால் வரும் சிக்கல்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல!" என்று சிந்தித்தார், தன் ஸ்மார்ட் போனில் தம்புராவை மீட்டியபடி, கைலாயத்தை நோக்கிப் பயணமானார்.


(யார் மனதையும் புன்படுத்தும் எண்ணம் எதுவுமில்லை)

வாசனை அறியா நாட்கள் (Days Without Scent) - எஸ்.பாலாஜி


இருளில் பாய்ந்து வந்த தெரு நாய் சட்டென வண்டியின் முன் குறுக்கிட்டது. ஆக்ஸை இறுக்கிப் பிடித்த விநோத் பதற்றத்துடன் திருப்ப முயன்றான், ஆனால் நேரம் தாமதமாகிவிட்டது. வேகமாக விரைந்துகொண்டிருந்த வண்டி திடீரென குறுக்கே வந்த நாயினால் பேலன்ஸ் செய்ய முடியாமல் சாலையோரத்து மரத்தில் மோதியது. 

"ஐயோ!" என்ற கூக்குரல் அவன் வாயிலிருந்து வெளிப்பட்டது.

சத்தம், இருள், சுழற்சி, வலி... அடுத்த நினைவு வந்தபோது அவன் மருத்துவமனை படுக்கையில் இருந்தான். மங்கலான வெளிச்சம் அவன் கண்களைக் குத்தியது. மயக்கமும் குழப்பமும் அவனை ஆட்கொண்டன.

விநோத், வயது 27. ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியர், எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளுடன் வாழ்ந்து கொண்டு வருவபவன். பெங்களூரில் ஒரு பெரிய ஐ.டி.  நிறுவனத்தில் வேலை செய்யும் அவன், தன் நண்பர்களுடன் வீக் எண்டுக்கு ஊட்டி செல்லும் வழியில்தான் இந்த விபத்து நேர்ந்தது.

"காலைல மழை பெஞ்சதால எல்லாரும் ஒரு நாள் லேட்டா வரோம்னு சொன்னாங்க. ஆனா நான் மட்டும் முன்னாடியே கிளம்பிட்டேன்... தப்புப் பன்னிட்டேன்.. தனிமையில் ஒரு ட்ரைவ் பன்னலாம்னு நினைத்தால் என்னவெல்லாமோ நடக்குது. இனிமே தனியா எங்கேயும் போக மாட்டேன்," விநோத் தனக்குள் முணுமுணுத்தான்.

கண் விழித்துப் பார்த்ததும் முகத்தில் ஒரு கட்டு, கையில் இரண்டு கட்டு, உடலெல்லாம் அங்கங்கே சிராய்ப்புகள் என்று பார்க்கவே பாவமாகத் தான் இருந்தான். அந்த நேரத்தில், ஒரு மருத்துவர் அவன் அறைக்குள் நுழைந்தார். நடுத்தர வயதுடைய அவர் கரிசனமான பார்வையுடன் விநோத்தை நோக்கினார்.

"நல்ல வேளை, தம்பி. பெரிய ஆபத்திலிருந்து தப்பிச்சுட்டீங்க," டாக்டர் அவனருகே வந்து சொன்னார்.

"என்னாச்சு டாக்டர்?" விநோத் பதற்றத்துடன் கேட்டான்.

மருத்துவர் அவனது ரிக்கார்டைப் பார்த்தபடி, "உங்களுக்கு மூக்குல சில நரம்பு உடைஞ்சிருக்கு, தலையில சின்ன அடி, உங்கள் மண்டையோட்டின் அடிப்பகுதியில் உள்ள சென்ஸ்க்கான நரம்பு கொஞ்சம் மேமேஜ் ஆயிருக்கு. ஆனா கவலைப்படாதீங்க, எல்லாம் சரியாகிடும். நல்லவேளை ஹெல்மெட் போட்டிருந்ததால தலைக்கு பெரிசா ஏதும் அடிபடல" 

விநோத் கவலையுடன் பெருமூச்சு விட்டான். ஆனால் மருத்துவரின் முகத்தில் ஏதோ கவலை தெரிந்தது.

"ஆனா... இதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு," மருத்துவர் தயக்கத்துடன் சொன்னார்.

"என்ன ஆச்சு டாக்டர்?" விநோத்தின் குரலில் பதற்றம் தெரிந்தது.

"உங்களுக்கு அனோஸ்மியா (anosmia) ஏற்பட்டுள்ளது," மருத்துவர் மெதுவாகச் சொன்னார். 

"மூக்கின் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஸ்மெல்லிங் திறனை நீங்கள் இழந்துவிட்டீர்கள்."

"என்ன சொல்றீங்க டாக்டர்?" விநோத் அதிர்ச்சியுடன் நம்ப முடியாமல் கேட்டான்.

"ஆமாம், முன்ன கொரோனா வந்தப்போ அதோட சிம்ப்டமா இந்த பிராப்ளமும் சேர்த்து வருமே..." மருத்துவர் விளக்கத் தொடங்கினார்.

"ஆனா அது கொஞ்ச நாளைக்கு அதாவது கொரோனா போனவுடன் சரியாயிடும் ஆனா இது... எவ்வளவு நாள் இருக்கும்?" விநோத் சந்தேகத்துடன் குறுக்கிட்டான்.

மருத்துவர் அவனைப் பார்த்து கருணையுடன் புன்னகைத்தார். 

"கொஞ்சம் கஷ்டம் தான். காலத்துக்கும் இப்படித்தான் இருக்கும். சிலருக்கு நாளடைவில் திரும்ப வரலாம். ஆனால் உங்க கேஸில் மூக்கின் ஆல் ஃபாக்டரி நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன."

அந்த வார்த்தைகளை விநோத் உள்வாங்கிக்கொண்டிருந்தபோது, அவற்றின் முழு தாக்கத்தை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவன் மெதுவாக தன் மூக்கைத் தொட்டுப் பார்த்தான்.

“என்னால எதையும் ஸ்மெல் பன்ன முடியாதா? எப்போதுமே?" அவன் குரல் நடுங்கியது.

"நாங்க என்ன செய்ய முடியுமோ செய்யறோம். தெரபி, மாத்திரைகள்  எல்லாம் தரோம். ஆனால் எதுக்கும் நீங்க பிரிப்பேரா இருங்க," மருத்துவர் அவன் தோளைத் தட்டிவிட்டு வெளியேறினார்.

அறையில் தனியாக விடப்பட்ட விநோத் சுற்றிலும் பார்த்தான். இரண்டு மூன்று நாட்களுக்குப் பின், அவன் வீட்டிற்குத் திரும்பலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். 

உடன் அம்மாவுக்கு போன் செய்தான். கூட சில நண்பர்களுக்கும் கால் செய்து நடந்ததை சொன்னான். 

முதல் சில நாட்கள் விநோத்திற்கு சற்று விசித்திரமாக இருந்தது, ஆனால் பெரிய பிரச்சனை என்று தோன்றவில்லை.

"பரவாயில்லை, ஸ்மெல் பன்ன முடியாவிட்டால் என்ன? பார்க்க முடிகிறது, கேட்க முடிகிறது, சுவைக்க முடிகிறது," என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் மருத்துவமனையில் இருந்தபோது.

பக்கத்து படுக்கையில் இருந்த நோயாளி  ராஜன், அவனிடம் பேசினார். "நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு விபத்துல காது கேட்கும் திறனை இழந்துட்டேன். முதல்ல ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா இப்போ காதுக்கு மெஷின் போட்டு பழகிட்டேன். அதனால பயப்படாத தம்பி நீயும் பழகிக்குவே."

"எப்படி சார் பழகினீங்க?" விநோத் ஆர்வத்துடன் கேட்டான்.

"நமக்கு ஒரு திறமை போனா, இன்னொரு திறமை வளரும். கவனமா பாருப்பா," ராஜன் புன்னகைத்தார்.

ஆனால் வீட்டிற்குத் திரும்பிய பின் தான், அவன் வாழ்க்கை எவ்வளவு மாறப்போகிறது என்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினான்.

மூன்று நாட்கள் போன பிறகு வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆனான். அம்மா ஆரத்தித் தட்டுடன் வீட்டிற்கு வரவேற்றாள். அந்த நாள் முழுவதுமாக ஓய்வு எடுத்து கொண்டான். 

மறுநாள் காலையில் அம்மா உற்சாகமாக சத்தமிட்டார்: "விநோத், எழுந்திரு! உனக்குப் பிடிச்ச இட்லி-சாம்பார் செஞ்சிருக்கேன்!"

"இதோ அம்மா, நான் வரேன்," என்றபடி பாத்ரூமுக்குச் சென்றான் விநோத். இயல்பாக காலையில் இருக்கும் ஷேவிங் க்ரீம், சோப், டூத்பேஸ்ட் - எதையும் இவனால ஸ்மெல் பன்ன முடியவில்லை. கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்தான்.

"சரி, இதுதான் புது வாழ்க்கை," என்று முணுமுணுத்தான்.

சாப்பிட உட்கார்ந்தபோது, தனக்கு மிகவும் பிடித்த உணவை ஸ்மெல் பன்ன  முடியாதது அவனை வேதனைக்குள்ளாக்கியது. அம்மா செய்த இட்லியும் அதோட சாம்பாரின் மணத்தையும் அவனால் உணர முடியவில்லை. ஆனால் சாப்பிடத் தொடங்கியதும், இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

"அம்மா, சாம்பார் ஏதோ வித்தியாசமா இருக்கு,” என்றான் விநோத், சிறிது சாப்பிட்டு விட்டு.

"எப்போதும் போலத்தான் செஞ்சிருக்கேன், ஒன்னும் மாத்தலடா,” அம்மா குழப்பத்துடன் பதிலளித்தார்.

"இல்ல அம்மா, சுவையே வேற மாதிரி இருக்கு, எனக்கு ஸ்மெல் தான் பன்ன முடியாதுன்னு சொன்னார் டாக்டர் ஆனா..." விநோத் தன் தட்டைப் பார்த்தபடி சொன்னான்.

அப்பா, பத்திரிகையிலிருந்து தலையை நிமிர்த்தினார். "டாக்டர் சொன்னார் இல்லையா, விநோத்? வாசனை உணர முடியாதபோது, சுவையும் பாதிக்கப்படும்னு. உணவின் சுவையில் 80 சதவீதம் அதன் மணத்தால் தான் வருகிறது."

விநோத்துக்கு அப்போதுதான் புரிந்தது. "ஓ... அப்படியா? அப்போ என்னால சுவைக்கவும் முடியாதா” அவன் அதிர்ச்சியுடன் கேட்டான்.

"சரி, சரி... விடு இதப்பத்தி பெரிசா நினைக்காத நீ எங்ககூட இருக்கறதே பெருசா நினைக்கிறோம்” அம்மா கண்கள் குளமாகி தன் முந்தானையால் கண்களை துடைத்துக் கொண்டு அவன் தோளைத் தட்டிக்கொடுத்தார். 

"உனக்குப் பிடிச்ச சாப்பாடெல்லாம் செய்யறேன். கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கலாம்."

அன்று முழுவதும் விநோத் தன் வீட்டைச் சுற்றி நடந்து, எதை ஸ்மெல் பன்ன முடியும், எதை முடியாது என்று சோதித்துப் பார்த்தான். 

அவன் விரும்பிய ஸ்ட்ராங் காபியின் வாசனை, வீட்டுத் தோட்டத்து மல்லிகைப் பூவின் மணம், அம்மா பயன்படுத்தும் கற்பூரம், அப்பாவின் அத்தர் பர்ஃப்யூம் - எதுவுமே அவனுக்கு தெரியவில்லை. உலகம் திடீரென்று வாசனையை இழந்ததைப் போல இருந்தது. சில சமயங்களில் மிகக் கவலையோடு அமர்ந்திருப்பான் பின் அம்மாவை நினைத்து கண்களை துடைத்துக்கொண்டு ஒன்றும் பாதிக்காதவனைப் போல் நடிப்பான்.

வாரங்கள் கடந்தன. விநோத் மீண்டும் அலுவலகத்திற்குச் செல்லத் தொடங்கினான். முதல் நாள், அவனுடைய நெருங்கிய நண்பன் கார்த்திக் அவனைப் பார்த்ததும் ஓடி வந்தான்.

"டேய், என்னடா ஆச்சு? இப்ப எப்படிடா இருக்கு பரவாயில்லையா வலியெதுவும் இல்லையே? கார்த்திக் கேள்விகளை அடுக்கினான்.

விநோத் தயங்கினான். "எல்லாம் சரிதான். ஆனா... என்னால இனிமே எதையும் ஸ்மெல் பண்ண முடியாது."

"என்னடா சொல்ற?" கார்த்திக் நம்ப முடியாமல் கேட்டான்.

"ஆமாம்டா. அனோஸ்மியா. வாசனையை உணர முடியாத நிலை. எப்போதும் இப்படித்தான் இருக்குமாம்," விநோத் துக்கத்துடன் சொன்னான்.

"அட கடவுளே! அப்படின்னா நீ நம்ம ஆபிஸ் நாத்தத்தை உணர முடியாதா?" கார்த்திக் சிரித்தபடி கேட்டான், சூழலை இலகுவாக்க முயற்சி செய்து.

விநோத் புன்னகைத்தான். "ஒரு வகையில நல்லதுதான்டா. எதுவுமே தெரியாது, நம்ம பிரியாவுடைய வியர்வை நாத்தம் கூட தெரியாது”

இருவரும் சிரித்தனர். ஆனால் அந்தச் சிரிப்புக்குப் பின்னால் விநோத்தின் வலி மறைந்திருந்தது.

அலுவலகத்தில் சக ஊழியர்கள் நெருக்கமாக வந்து பேசும்போது அவர்களின் நறுமணம், உடல் நாற்றம் எதையும் உணர முடியாமல் இருந்தது. அந்த அனுபவம் விநோத்தை சமூக உறவுகளிலிருந்து தனிமைப்படுத்தியது. சிலர் நல்ல பெர்ஃப்யூம் அடித்திருப்பார்கள், சிலர் வியர்வை நாற்றத்துடன் இருப்பார்கள் - ஆனால் அவனுக்கு எல்லோரும் ஒரே மாதிரிதான்.

"இப்போ எனக்கு ஆபீஸ் கேன்டீன் ஸ்பெஷல் வடை சாப்பிட்டாலும், விலையுயர்ந்த ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டாலும் ஒரே சுவை தான்," அவன் கார்த்திக்கிடம் புலம்பினான்.

"ஈஸியா எடைய குறைக்கலாம் போலருக்கே," கார்த்திக் கிண்டலாகச் சொன்னான்.

விநோத் வலிமையாகச் சிரித்தான், ஆனால் உள்ளுக்குள் அழுதான்.

நாட்கள் சென்றன, அலுவலகத்தில் அன்று நடந்த சம்பவம் அவனுக்கு அதிர்ச்சியளித்தது. மதிய உணவு நேரத்தில், அவனுடைய டீம் லீடர் விஜய் கேட்டார்:

"விநோத், என்ன சாப்பிடற சான்ட்விச்சா? எனக்கு கெட்டுப்போனா மாதிரித் தெரியுது.”

விநோத் குழப்பத்துடன் சான்ட்விச்சைப் பார்த்தான். அதன் காலாவதி தேதியைப் பார்க்க முயன்றான், ஆனால் அது தெளிவாகத் தெரியவில்லை.

"எனக்குத் தெரியவில்லை, சார்... என்னால எதையும் ஸ்மெல் பன்ன முடியாது" அவன் வெட்கத்துடன் சொன்னான்.

“ஐயையோ இப்ப ஆக்சிடென்ட் ஆச்சே அதனாலயா?” விஜய் கவலையுடன் கேட்டார்.

“ஆமாம் சார்” விநோத் பெருமூச்சு விட்டான். "நான் இப்ப எல்லாத்தையும் வெறும் பார்வையால மட்டும் தான் அறிய முடியும்."

“பாத்துக்கோ விநோத், எதையும் ஒருவாட்டி எக்ஸ்பையரி டேட் பாத்து சாப்பிடு“ விஜய் விநோத்தின் தோளினைத் தட்டி “எதுவும் பன்ன முடியாதாமா ஏதாவது ஆபரேஷன் அந்த மாதிரி“ என்றார்.

“இல்லை சார், டாக்டர்கிட்ட கேட்டேன் சில பேருக்கு நாளடைவில சரியாயிடுமாம் சிலருக்கு இல்லையாம்“ கவலையுடன் சொன்னான்.

“எதுக்கும் செகன்ட் ஒப்பினியன் பாரேன்“ விஜய் உற்சாகத்துடன்.

“ஓ கே சார், அதான் கார்த்திக்கும் சொன்னான், நாளைக்கு இன்னொரு ஹாஸ்பிடல் போகலாம்னு இருக்கோம்“ விநோத் தெனிவுடன்.

“டேக் கேர் விநோத், இங்க ஆபிஸ் பிராஜெக்ட் பத்திலாம் கவலைப்படாதே நான் பாத்துக்கறேன், நீ பர்ஸ்ட்டு உன் உடம்ப பாத்துக்கோ“ விஜய் கையசைத்து அந்த இடத்திலிருந்து சென்றவுடன் கார்த்திக் விநோத்திடம் ஓடிவந்து “டேய் முட்டை போண்டா  என்னடா சொன்னான்“ என்று சிரித்துக்கொண்டே.

“நல்லவருடா மச்சான் அப்படிலாம் சொல்லாத“ விநோத் கார்த்திக்கை தட்டியபடியே…

“நாளைக்கு ஜே.பி. நகரில ஒரு ஹாஸ்பிடல் போலாம்டா, செகண்ட் ஒப்பினியன் கேட்போம் காலைல லீவு சொல்லிடு“ என் கார்த்திக்கிடம் விநோத் சொன்ன மறுநிமிடம் “எதுக்குடா ஆஃப் டே ஃபுல் டே லீவு போட்டு எங்கயாவது சுத்துவோம்டா“

“மச்சான் இல்லைடா ஹாஸ்பிடல் போயிட்டு வந்திருவோம் ஏன்னா லீவு கொஞ்சம் வச்சுக்கனும்டா எப்ப என்ன நடக்கும்னே தெரிய மாட்டேங்குது“ விநோத் சொல்ல கார்த்திக் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினான்.

மறுநாள் ஹாஸ்பிடல் போய் அதே கருத்தை இந்த டாக்டரும் சொல்ல விநோத் கொஞ்சம் தயங்கினான். சரி தெய்வம் விட்ட வழி என்று ஆபிசுக்கு அவனும் கார்த்திக்கும் சோகமாகத் திரும்பினர். டீம் லீடர் விஜயிடம் சென்று நடந்ததை கூறினார்கள் விஜய் விநோத்தை தைரியபடுத்தி “விநோத் கடவுள் நம்ம கிட்டேருந்து ஒன்ன பறிச்சா இன்னொன்னு நல்லதா கொடுப்பான் நீ கவலைப்படாம உனக்கு எது சரினு படுதோ அதுப்படியே நடந்துக்க இங்க உனக்கு புல் சப்போர்ட் நான் தரேன் உன்னால ஏதாவது வொர்க் பன்ன முடியலையா சொல்லு நான் வேற யாரையாவது வெச்சு முடிச்சிடுறேன். ஆனா இந்த விஷயத்திற்காக மனசு உடைஞ்சிடாதே“ என்று தைரியப் படுத்தினார். கார்த்திக் விஜயை பார்த்தவாறு கண்கள் கலங்கினான்.

நாட்கள் சென்ற ஒரு நாள் ரூமில் நடந்த சம்பவம் அவனை அதிகமாக யோசிக்க வைத்தது.

அன்று காலையில் அவன் சமையலறையில் நுழைந்து தோசை ஊற்றி முடித்து பின் காஸ் அடுப்பை அனைக்காமல் ஹாலில் சென்று சாப்பிட்டு உட்கார்ந்திருந்தான். மறந்திருந்தான். எதேச்சையாக அவன் நண்பன் முரளி அங்கு வந்தான்.

"டேய், காஸ் லீக் ஆகுது உனக்குத் தெரியலயாடா?” முரளி பதற்றத்துடன் கத்தினான்.

அடுப்பில் இருந்து காஸ் கசிந்து கொண்டிருந்தது, ஆனால் விநோத் அதை உணரவில்லை. காஸ் ஸ்மெல் சுத்தமாக அவன் உணர முடியவில்லை!

"சாரிடா, எனக்கு தெரியலீயேடா," விநோத் திகைப்புடன் சொன்னான்.

"இது ரொம்ப ஆபத்து விநோத்! இனிமே கவனமா இரு" முரளி எச்சரித்தான், உடன் கதவு, ஜன்னல்களைத் திறந்து விட்டு.

அன்றுதான் விநோத்துக்கு புரிந்தது - மணம் என்பது ஒரு பாதுகாப்பு கருவியும் கூட. அது உணவு கெட்டுப்போனதை, ஆபத்தான வாயுக்கள் கசிவதை, தீ ஏற்படுவதை அறிய உதவுகிறது.

"இன்னிக்கு எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு இனி எப்படி உயிர் வாழப்போறேன்?" அவன் அன்றிரவு படுக்கையில் கிடந்து யோசித்தான்.

அடுத்த நாள், விநோத் பல காஸ் லீக் கண்டறியும் சாதனங்களை கேஸ் கடையில் கேட்டு வாங்கினான். அவற்றை தனது சமையலறையிலும் அடுப்பு அருகிலும் நிறுவினான். அவன் சமைக்கும் போதெல்லாம் அடுப்பை அணைப்பதை நினைவூட்ட டைமர்களை அமைக்கத் தொடங்கினான்.

"என் மூக்கு எனக்காக செய்தவற்றை மாற்றிட புதிய அமைப்புகளை நான் உருவாக்க வேண்டும்," என்று கார்த்திக்கிடம் கூறினான்.

மாதங்கள் கடந்தன. விநோத் புதிய வாழ்க்கைக்குப் பழகிக்கொண்டிருந்தான், ஆனால் அவனுடைய மனம் மரத்துப்போனது போல் உணர்ந்தான். கவிதை, சினிமா, உணவு - எல்லாவற்றிலும் ஏதோ ஒன்று குறைவாக இருப்பதாக உணர்ந்தான்.

அடிக்கடி அவன் தனக்கு பிடித்த கவிதைப் புத்தகங்களைப் படிப்பான். ஒரு கவிதையில் ரோஜாப்பூவின் மணம் பற்றிய வரிகள் இருந்தன. அவன் தன் தோட்டத்தில் இருந்த ரோஜாவைப் பறித்து, மூக்கருகே கொண்டு சென்றான். எதுவுமில்லை. வெறுமை.

"எனக்கு இனி கவிதைகளின் அழகை முழுமையாக உணர முடியாதா?" அவன் வருந்தினான்.

பிரகாஷ்ராஜின் உன் சமையறையில் திரைப்படம் பார்க்கும்போது உணவுகளின் மணத்தை உணர்ந்து ஆனந்தப்படும் காட்சிகள் வரும்போதெல்லாம், அவனுக்கு பொறாமையாக இருந்தது. 

"எத்தனை விஷயங்களை நான் இழந்துவிட்டேன்?"

ஒருநாள், அவன் மருத்துவமனைக்கு ஃபாலோ-அப் பரிசோதனைக்காகச் சென்றான். அங்கே, அவனுக்கு ஏற்பட்ட வேதனையை மீண்டும் அளவிட்டுப் பார்க்க ஒரு ஆல்ஃபாக்டரி டெஸ்ட் நடத்தப்பட்டது.

"ஸ்மெல் ஏதாவது தெரிகிறதா?" மருத்துவர் பல மாதிரிகளை அவனிடம் காட்டினார்.

"இல்லை டாக்டர், எதுவும் தெரியவில்லை," விநோத் சோர்வுடன் சொன்னான்.

"பரவாயில்லை, டோன்ட் கிவ் அப். சில நேரங்களில் இந்த நிலை மாறலாம்," மருத்துவர் ஆறுதல் சொன்னார்.

அப்போது ஒரு இளவயதுப் பெண் அறைக்குள் வந்தாள்.

"டாக்டர், இந்த டெஸ்ட் ரிசல்ட்ஸ்," என்று சில பேப்பர்களைக் கொடுத்தாள்.

"தேங்க் யூ, தீபா," என்றார் டாக்டர்.

தீபா. அவள் பெயர் தீபா. ஏதோ ஒரு காரணத்தால், விநோத் அந்த பெயரைக் கவனித்தான். அவள் புன்னகையும் அவனை ஈர்த்தது. டாக்டர் சென்ற பிறகு, அவள் அறையில் தனியாக இருந்த விநோத்தைப் பார்த்து சிரித்தாள்.

"நீங்க அனோஸ்மியா கேஸா?" தீபா கேட்டாள், அவனுடைய ரிகார்டுகளைப் பார்த்தபடி.

"ஆமாம்," விநோத் சுருக்கமாகப் பதிலளித்தான்.

"என் அக்காவுக்கும் இதே பிரச்சனை இருந்தது. ஆக்சிடென்ட்டுக்குப் பிறகு," தீபா சொன்னாள்.

விநோத் ஆர்வத்துடன் எழுந்து உட்கார்ந்தான். "உண்மையாவா? இப்ப எப்படி இருக்காங்க?"

"முதல்ல அவங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. ஆனா இப்போ ஓரளவுக்கு சரியாகிடுச்சு," தீபா சொன்னாள். "ஆனா அதுக்கு ரெண்டு வருஷம் ஆச்சு."

"அப்படின்னா எனக்கும் திரும்ப வருமா?" விநோத் நம்பிக்கையுடன் கேட்டான்.

தீபா தயக்கத்துடன் புன்னகைத்தாள். "ஒவ்வொருவருக்கும் வித்தியாசமா இருக்கும். சிலருக்கு முழுசா திரும்ப வரும், சிலருக்கு கொஞ்சம் கொஞ்சமா, சிலருக்கு..." அவள் வார்த்தைகளை முடிக்கவில்லை.

"சிலருக்கு வராது," விநோத் முடித்துக் கொண்டான், அவள் சொல்ல வந்ததை புரிந்து கொண்டு.

"ஆனா நான் ஒன்னு சொல்றேன்," தீபா அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள். “உங்களால ஸ்மெல் பன்ன முடியாவிட்டாலும், வாழ்க்கையின் மற்ற அனுபவங்களை நீங்க முழுமையாக உணரலாம். உங்க மற்ற சென்ஸ்களைக் கூர்மையாக்க முயற்சி செய்யுங்க."

விநோத் குழப்பத்துடன் அவளைப் பார்த்தான். "எப்படி?"

"உதாரணமாக, நீங்க சாப்பிடும்போது... வாசனை இல்லாமல் சுவை குறைவா இருக்குமே?"

"ஆமாம், எல்லாமே ஜீரோவா இருக்கு," விநோத் ஒப்புக் கொண்டான்.

"அப்போ நீங்க உணவோட டெக்ஸ்சரை கவனியுங்க. கரகரப்பா இருக்கா, மெத்துன்னு இருக்கா, நார்ச்சத்து உள்ளதா, எண்ணெய் கலந்ததா. நிறத்தைக் கவனியுங்க. வெப்பநிலையைக் கவனியுங்க," தீபா விளக்கினாள். "இசை கேட்கும்போது, கூடுதல் கவனம் செலுத்துங்க. ஒவ்வொரு வாத்தியத்தையும் தனித்தனியா கேட்க முயற்சி செய்யுங்க."

விநோத் அவள் சொன்னதை ஆழமாக யோசித்தான். "அப்படியா... அப்ப நான் இதை முயற்சி செய்யலாம்."

தீபா அவனுடைய கைப்பேசி எண்ணைக் கேட்டு வாங்கிக் கொண்டாள். "எனக்கு இந்த விஷயத்தில அனுபவம் இருக்கு. நீங்க எப்ப வேணும்னாலும் என்னை அழைக்கலாம்."

அன்று மாலை, விநோத் வீட்டிற்குத் திரும்பியபோது, தன்னுடைய சாப்பாட்டுத் தட்டை முன்பை விட கவனமாகப் பார்த்தான். சாதம், சாம்பார், காய்கறி கூட்டு - ஒவ்வொரு உணவின் நிறம், அமைப்பு, ஒன்றுடன் ஒன்று சேரும்போது எப்படி இருக்கின்றன என்பதை அவன் கவனித்தான்.

ஒரு வாரம் போனது, விநோத் அம்மாவை பார்க்க அவர்கள் வீட்டிற்கு போனான். வழக்கம்போல் அம்மாவும் அப்பாவும் அவனை வரவேற்று கட்டியணைத்தனர். “வாப்பா கண்ணு இப்ப எப்படிடா கண்ணு இருக்க" வாஞ்சையுடன் அவனின் முகவாயை பிடித்துக் கொண்டு அம்மா விசாரிக்க அவன் கண்கள் குளமாகின. “அம்மா இப்ப கொஞ்சம் பரவாயில்ல இரண்டு நாள் ஆபிஸ் லீவு அதான் புறப்பட்டு வந்துட்டேன், ரொம்ப பசிக்குதும்மா என்ன செஞ்சிருக்க சாப்பிட" கேட்ட அடுத்த நொடி “என்ன மன்னிசுடுடா கண்ணு சாப்பிட்டியான்னு கேட்கல இந்த சிறுக்கி, நீ போய் கை காலு கழுவிட்டு வா உடனே உனக்கு புடிச்சத செஞ்சுடுறேன் இந்த அம்மா" 

உடனே அவன் குளித்து விட்டு வருவதற்குள் அவனுக்கு பிடித்த முருங்கைக்காய் சாம்பார் கத்திரிக்காய் மசாலா செய்து தயாராய் இருந்தாள் அம்மா.

"இந்த சாம்பார் கொஞ்சம் கெட்டியா இருக்கு. அதிகமா வேக வச்சிருக்கீங்க போல," அவன் அம்மாவிடம் சொன்னான்.

அம்மா ஆச்சரியப்பட்டாள். "ஆமாம்டா கண்ணு, இன்னைக்கு கொஞ்சம் அதிக நேரம் வேக வச்சேன். உனக்கு எப்படித் தெரிஞ்சது?"

விநோத் சிரித்தான். “அம்மா இப்ப என்னால ஸ்மெல் பன்ன முடியலனாலும் மற்றத கவனிக்க ஆரம்பிச்சுட்டேன்."

அம்மா மிகவும் ஆனந்தப் பட்டாள் தன் மகன் மறுபடியும் சந்தோஷமாய் சாப்பிடுவதைக் கண்டு.

அன்றிரவு, தீபாவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான்: "உங்க யோசனை நல்லா இருந்தது. சாப்பாடு இன்னைக்கு கொஞ்சம் வித்தியாசமா இருந்தது நான் நல்லா சுவைச்சு சாப்பிட்டேன்.”

தீபா உடனே பதிலளித்தாள்: "👍 சந்தோஷம். இது புதிய பயணத்தின் தொடக்கம் மட்டும்தான்."

அடுத்த சில வாரங்களில், விநோத்தும் தீபாவும் அடிக்கடி பேசிக் கொண்டனர். அவள் அவனுக்கு மற்ற புலன்களை மேம்படுத்த பல குறிப்புகளைக் கொடுத்தாள். ஒரு நாள், அவள் அவனை ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் சென்றாள்.

"இங்கே வரும்போது எனக்கு எப்பவுமே மலர்களின் நறுமணம் தெரியும். ஆனா இப்போ..." அவள் சூழலை மாற்ற வார்த்தைகளைத் தேடினாள்.

"பரவாயில்லை. சொல்லுங்க" விநோத் புன்னகைத்தான்.

"ஆனா இப்போ ஓவியங்களின் அழகை, வண்ணங்களின் ஒளியை நான் கவனிக்கிறேன்" தீபா சொன்னாள்.

அன்று அவர்கள் ஓவியங்களை ஆழமாக ரசித்தனர். காட்சிகளை விவரித்தனர். விநோத்தின் பார்வை முன்பைவிட கூர்மையாகியது.

"நான் பார்க்கும் உலகம் முன்பைவிட வேறுமாதிரி இருக்கிறது" என்று விநோத் ஒருநாள் தீபாவிடம் சொன்னான். "ஒரு சென்ஸை இழந்தாலும், மற்ற சென்ஸ்லாம் கூர்மையாகிவிட்டன. நான் இப்போ கண்ணால் பார்ப்பதை, காதால் கேட்பதை, தோலால் உணர்வதை - எல்லாவற்றையும் முன்பைவிட தீவிரமாக அனுபவிக்கிறேன்."

"பார்த்தீங்களா?" தீபா புன்னகைத்தாள். "வாழ்க்கை ஒரு சென்ஸைப் பறித்துக்கொண்டாலும், மற்றவைகளின் அழகை உணர வாய்ப்பு கொடுக்கிறது."

நாட்கள் செல்லச் செல்ல, விநோத்தும் தீபாவும் நெருங்கினர். அவர்கள் ஒன்றாகப் பூங்காக்களுக்குச் சென்றனர், திரைப்படங்கள் பார்த்தனர், கலை நிகழ்ச்சிகளுக்குச் சென்றனர்.

எல்லாவற்றையும் விட, விநோத் உணவுகளை ருசிப்பதற்கான புதிய வழிகளைக் கண்டுபிடித்தான். சுவைக்கும் மொட்டுக்களை, சுவையின் வகைகளை - இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, துவர்ப்பு - ஆகியவற்றை நுகர முடியவில்லை என்றாலும் ஆழமாக அனுபவித்தான். உணவின் வெப்பநிலை, நெருப்பில் சமைத்த சுவை, பதம் - இவற்றில் கவனம் செலுத்தினான்.

"நான் இப்போது சாப்பிடும்போது, முன்பை விட அதிக கவனத்துடன் சாப்பிடுகிறேன்," அவன் தீபாவிடம் சொன்னான். "ஒவ்வொரு கவளத்தையும் ருசிக்கிறேன், சுவைக்கிறேன். முன்பு எல்லாவற்றையும் அவசரமாக சாப்பிட்டு முடித்துவிடுவேன்."

ஓராண்டு கடந்தது. விநோத்தின் வாழ்க்கையில் ஒரு புதிய சமநிலை உருவாகியது. தன் அனுபவங்களைப் பகிர, அவன் ஒரு புத்தகத்தை எழுதத் தொடங்கினான் - "நுகர்ந்தறியா நாட்கள்." 
ஒரு புலனை இழந்த பின் வாழ்க்கையை எப்படி மீண்டும் கட்டமைப்பது என்பதைப் பற்றிய அந்தப் புத்தகம், தன்னைப் போன்று அதே நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்றே எழுதினான்.

"நாம் இழப்புகளை எதிர்கொள்ளும்போது, அதை ஒரு முடிவாகப் பார்க்காமல், ஒரு புதிய தொடக்கமாகப் பார்க்க வேண்டும்," என்று அவன் எழுதினான். "ஒரு கதவு மூடப்படும்போது, மற்றொரு கதவு திறக்கப்படுகிறது. ஆனால் அந்தக் கதவைக் காண நாம் கவனமாக இருக்க வேண்டும்."

புத்தகம் வெற்றி பெற்றது. பல வாசகர்கள் அவனுக்கு எழுதினார்கள், அவர்களும் இதே போன்ற இழப்புகளை எதிர்கொண்டதாகவும், அவனுடைய அனுபவம் அவர்களுக்கு ஆறுதலளித்ததாகவும் தெரிவித்தனர்.

அந்த ஒரு வருட காலத்தில், தீபாவும் விநோத்தும் காதலில் விழுந்தனர். அவர்கள் ஒரு சிறிய சிக்கனமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். 

திருமண நாளன்று, விநோத் தீபாவிடம் சொன்னான், "உன் வாசனையை என்னால் நுகர முடியாது. ஆனால் உன் குரலின் இனிமையை, உன் கைகளின் வெப்பத்தை, உன் முகத்தின் அழகை நான் உணர்கிறேன். அது எனக்குப் போதுமானது."

தீபா புன்னகைத்தாள், அவன் கன்னத்தில் மென்மையாகத் தொட்டு, "வாழ்க்கை என்பது இழப்புகளைப் பற்றியது அல்ல, இழப்புகளுக்கு மத்தியிலும் நம்மால் கண்டுபிடிக்கப்படும் புதிய அர்த்தங்களைப் பற்றியது."

விநோத்தின் வாழ்க்கை நிறைவானதாக மாறியது. அவன் மீண்டும் வாசனைகளை உணரவில்லை, ஆனால் வாழ்க்கையின் மற்ற அனுபவங்களில் இருந்து அவன் பெற்ற அர்த்தம் ஆழமானதாக இருந்தது. அவன் இழந்தது ஒரு புலன், ஆனால் பெற்றுக்கொண்டது புதிய பார்வை.

"வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது," அவன் ஒரு நண்பனிடம் சொன்னான். "ஆனால் அந்த விஷயங்களுக்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை கட்டுப்படுத்த முடியும்."

இரண்டு ஆண்டுகள் கழித்து, தீபாவும் விநோத்தும் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றனர் - ஒரு அழகான பெண் குழந்தை. அவளுக்கு "அருந்ததி" என்று பெயரிட்டனர் - வானில் ஒளிரும் நட்சத்திரம் போல.

ஒரு நாள் காலையில், அருந்ததியை முத்தமிட குனிந்தபோது, விநோத் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்தான். ஒரு மென்மையான, இனிமையான... வாசனை. அது குழந்தையின் மென்மையான தலை மணமா? அவனால் நம்ப முடியவில்லை.

"தீபா!" அவன் ஆச்சரியத்துடன் அழைத்தான். "நான் ஏதோ ஸ்மெல் பன்றேன்னு நினைக்கிறேன்!"

தீபா ஓடி வந்தாள். "என்ன சொல்றீங்க?"

"குழந்தை... அவளுக்கு ஒரு ஸ்மெல் இருக்கு என்னால அத உணர முடிகிறது!” அவன் கண்களில் கண்ணீர் வழிந்தது.

"உண்மையாவா?" தீபா ஆச்சரியத்துடன் கேட்டாள். 

அடுத்த நாள் மருத்துவ பரிசோதனையில், மருத்துவர் உறுதிப்படுத்தினார்: விநோத்தின் ஸ்மெல்லிங் சென்ஸ் திறன் சிறிது சிறிதாகத் திரும்பி வருகிறது. இது முழுமையாக திரும்பி வருமா என்று கூற முடியாது, ஆனால் ஒரு நல்ல அறிகுறி.

"எப்படி இது நடந்தது?" விநோத் ஆச்சரியத்துடன் கேட்டான்.

"மூளை ஒரு அற்புதமான உறுப்பு," மருத்துவர் புன்னகைத்தார். "சில நேரங்களில் நாம் நினைப்பதை விட அது ரெகவர் ஆகிவிடும் திறன் கொண்டது. உங்கள் விஷயத்தில, குறிப்பிட்ட ஒரு ஸ்மெல்லை - உங்கள் குழந்தையின் மணத்தை - உணரும் திறன் திரும்பியுள்ளது. இது படிப்படியாக மேலும் மேம்படக்கூடும்."

தீபா விநோத்தின் கையைப் பிடித்துக் கொண்டாள், அவள் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. "இந்த மகிழ்ச்சியான செய்திக்கு உங்க புத்தகத்தில ஒரு கூடுதல் அத்தியாயம் எழுதணும். அத அடுத்த பதிப்புல வெளியிடனும்”

விநோத் தலையசைத்தான். "ஆமாம். ஆனால் எல்லா மணங்களும் திரும்பி வந்தாலும், வராவிட்டாலும், இந்த அனுபவம் என்னை ஒரு புதிய மனிதனாக மாற்றியிருக்கிறது. உலகத்தைப் பார்க்கும் என் பார்வையை மாற்றியிருக்கிறது."

ஒவ்வொரு காலையிலும் எழும்போது, விநோத் தன் மகளை மூக்கருகே கொண்டு சென்று, அவளது மணத்தை ஆழமாக உள்ளிழுப்பான். நாளுக்கு நாள், அவனால் புதிய மணங்களை உணர முடிந்தது - காப்பியின் வாசனை, மழைக்குப் பின் மண்ணின் வாசனை, தீபாவின் கூந்தலின் வாசனை.

புதிய வாசனைகளை உணரும் ஒவ்வொரு முறையும், அவன் ஒரு புதிய உலகத்தைக் கண்டுபிடிப்பது போல உணர்ந்தான். ஆனால் இழப்பு அவனுக்குப் போதித்த பாடங்களை அவன் ஒருபோதும் மறக்கவில்லை.

"சில நேரங்களில் நாம் வாழ்க்கையில் ஏதாவது இழக்கும்போது தான், நம்மிடம் இருப்பவற்றின் மதிப்பை உணர்கிறோம்," அவன் தன் புத்தகத்தின் இறுதி பக்கத்தில் எழுதினான். "ஆனால் இழப்புகளுக்கு மத்தியிலும், நாம் புதிய அர்த்தங்களைக் கண்டுபிடிக்கலாம் - ஒரு புதிய வாழ்க்கையைக் கட்டமைக்கலாம், ஒரு புதிய பார்வையைக் கண்டெடுக்கலாம், புதிய அழகுகளை அனுபவிக்கலாம். இதுதான் மனித அனுபவத்தின் அழகு."

சிறிய வளையல்களும் விற்பனைக்கு உள்ளன! - ச. சுப்புரெத்தினம்


இளம் பெண்களின் கைகளுக்கு அவர்கள் அணிந்திருக்கும் வளையல்கள் அழகூட்டுவனவாகும். அகத்திணைத் தலைவன் ஒருவன், தான் விரும்பிய தலைவியை ஊரறியத் திருமணம் செய்து கொள்ளக் காலம் தாழ்த்துகிறான். இதனால் அவனது தலைவியும் தலைவியின் தோழியும் வருத்தமுறுகின்றனர்.


இந்நிலையில், களவில் இரவு நேரத்தில் தலைவியின் இல்லத்தருகே வந்து தலைவியின் கண்ணில் படாமல் நின்று கொண்டிருக்கிறான் தலைவன். இதனையறிந்த தோழி, அவனது வருகையை அறியாதவள்போல் நின்றுகொண்டு, தலைவியின் இக்கட்டான நிலையை அத்தலைவனுக்குப் புலப்படும்படி தலைவியிடம் கூறுவாள்போல் பின்வருமாறு கூறுகின்றாள்:


'மழைக்கால ஆம்பல் மலர்போன்ற தோற்றத்தில் நின்று கொண்டிருக்கும் ஒரு கொக்கினது பார்வைக்கு அஞ்சித் துன்புற்ற நண்டு, அதனிடமிருந்து தப்பி, கட்டறுத்துக் கொண்டு விரைந்து செல்லும் எருதினைப் போன்று, அருகிலுள்ள தாழஞ்செடியின் வேருக்கு அருகேயுள்ள தனது வளையினுள் புகும்பொருட்டு விரைந்து செல்லும் அத்தகைய கடல்துறையை உடையவன் தலைவன். அவன் தலைவியாகிய உன்னைக் காண வாராதிருந்தாலும் இருக்கட்டும். ஏனென்றால், அவனது வருகை தொடர்பாக இரண்டு இடையூறுகள் உள்ளன.


முதலாவது, களவு ஒழுக்கத்தில் தலைவன் இங்கு வருதலென்பது, பிறரறிந்து தூற்றவும் பின்பு தலைவியாகிய உன்னை “இற்செறித்தல்” (வெளியே வரத் தடை விதித்து இல்லத்தே அடைத்து வைத்தல்) செய்யவும் காரணமாகி, அது நமக்கு இன்னலைத் தந்துவிடும். இரண்டாவது, அவன் வாராமலிருந்து விட்டாலோ, உனது தோள்கள் மெலிந்து, கைவளையல்களும் நெகிழ்ந்துவிடும்.


ஆக, இவ்விரண்டும் துன்பம் தரக் கூடியனவே ஆயினும், இவற்றுள் தலைவன் வாராத வழி, கைகளுக்கு மிகவும் பொருந்திய அளவிலான பெரிய வளையல்கள் உனது உடல்மெலிவால் கழன்று வீழ்ந்துவிட்டாலும் பரவாயில்லை. வளையல் விற்போரிடத்துச் சிறிய வளையல்களும் உள்ளன. அவற்றை வாங்கிச் செறிய அணிந்து கொண்டு உடல் மெலிவைப் பிறரறியாமல் தவிர்த்துவிட முடியும். தலைவன் வருகையைப் பிறர் அறியாமல் நாம் மறைத்தல் கூடாது. அதைவிடத் தலைவன் வாராதிருத்தலே நன்று!'' என்கிறாள் தோழி.


இதன்மூலம், களவுக்காலத்தில் இரவிலும் பகலிலும் வந்து செல்ல வேண்டாம். மாறாக, தலைவியை விரைந்து வரைதலே (திருமணம் செய்து கொள்ளுதல்) நல்லது என்று தலைவனின் மனத்தில் படும்படி குறிப்பாகச் சொல்கிறாள் தோழி.


குன்றியனார் என்ற சங்க காலப் புலவர் பாடிய குறுந்தொகைப் பாடல் இதுதான்.


மாரி ஆம்பல் அன்ன கொக்கின்


பார்வல் அஞ்சிய பருவரல் ஈர்ஞெண்டு


கண்டல் வேர்அளைச் செலீஇயர் அண்டர்


கயிறுஅரி எருத்தின் கதழும் துறைவன்


வாராது அமையினும் அமைக


சிறியவும் உளஈண்டு விலைஞர்கை வளையே


(குறுந்தொகை 117)


வானில் பறக்கும் பொழுது வெண்ணிறத்தில் தோன்றும் கொக்கு, நீர்நிலையில் இரைக்காகக் கூர்ந்து நோக்கிக் கூம்பி நின்றுகொண்டிருக்கும்பொழுது, கார்காலத்தில் கூம்பி நிற்கும். அல்லியின் மொக்குப் போன்ற உருவிலும் நிறத்திலும் இருக்கும் என்பது புலவரின் உவமை நயத்தைச் சுட்டுகிறது.


தலைவனை நெடுநாட்களாகச் சந்திக்கவில்லையெனில் தலைவியின் உடல் மெலிவதுண்டு. இம்மெலிவால் கையிலுள்ள வளையல்களும் கழன்று வீழ்தலும் இயல்புதான் என்பதை இப் பாடலாசிரியர் கூறுகின்றார். தலைவன் பிரிந்தமையைத் தனது முன்கையின் மணிக்கட்டிலிருந்து கழல்கின்ற வளையல்கள் பலரறியப் பழி கூறாது இருக்குமோ எனக் கூறி வருந்தும் திருக்குறள் தலைவியின் கூற்றும் (குறள் 1157) இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.


உடல் மெலிவால், தலைவியின் வளையல்கள் கழன்றுவிட்ட நிகழ்வினை மறைக்க வேண்டும். அதற்கு, சிறிய வளையல்களும் விற்பனைக்கு உள்ளன. அவற்றை வாங்கி, தலைவி செறிய அணிந்து கொள்ளலாம் என்பது தோழி அறிந்த நல்ல உளவியல் நுட்பமாகும்.


நண்டு விரைந்து சென்று அதன் வளையினுள் புக முயல்வது, "அலர்' வெளிப்படுமுன் கற்பு வாழ்க்கை நிகழ்த்தத் தலைவனின் இல்லத்திற்கு (வரைவுக்குப் பின்) விரைந்து சென்றுவிட வேண்டும் என்ற தோழியின் குறிப்பான செய்தியை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.


தலைவியின் உடல்மெலிவை மறைக்கச் சிறிய வளயைல்களே போதுமாதலால், சின்ன வளையல்களும் வளையல் விற்போரிடம் உள்ளன என்பது நல்ல இலக்கியநயம் ஆகும்.


நன்றி - தமிழ்மணி ஜூலை 2024


முத்திரைப் பதிவுகள் - 5 - பிரம்பின் நிழல்


பழங்காலத்தில் பாணர் ஒரு தனிக்குடியினராகக் கருதப்பட்டு வந்தனர். அவர்களுள் இசைக் கலையை வளர்த்துச் சிறப்போடு வாழ்ந்தவர் பலர். கலையுலகில் சிறப்புப் பெறாத சிலர் வேறு துறையில் காலத்தைப் போக்கி வாழ்ந்து வந்தனர். மருத நிலத்துப் பொய்கைகளில் மீன்களைப் பிடிப்பதில் காலத்தைப் போக்கியவர் சிலர். அதைத் தொழிலாகக் கொண்டவர் சிலர். அதைத் தொழிலாகக் கொண்டவர்கள் அதில் தேர்ச்சி பெறுதல் இயல்பே அல்லவா? அத்தகைய பாணன் ஒருவன் மீன் பிடித்த காட்சியை அக்காலத்துப் புலவர் ஒருவர் தம் பாட்டில் தீட்டியுள்ளார். மருதநில வளத்தைச் சிறப்பித்துப் பாடுமிடத்தில் இதைத் கூறியுள்ளார்.


இறைச்சி கொண்ட தோல் பையைத் தோளில் மாட்டிக்கொண்டு, நீண்ட மூங்கில் கோல் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டான் பாணன். ஒரு குளத்தின் கரையில் நின்று அந்த மூங்கிலின் முனையில் ஒரு கயிற்றை வலித்துக் கட்டினான். அந்தக் கயிற்றின் முனையில் வளைந்த தூண்டிலிரும்பைக் கட்டினான். அத்தூண்டிலில் இறைச்சித் துண்டு வைத்துக் கயிற்றினை நீரில் விட்டான். அவன் எதிர்பார்த்தபடியே ஒரு வாளை மீன் தூண்டிலில் இரையை நாடி வந்தது. வாயைத் திறந்து நெருங்கிய அந்த வாளை இரையைக் கெளவியது. தூண்டில் கயிறும் நடுங்கியது. ஆனால் இரை வாளையின் வாயில் அகப்பட்டதே தவிர, வாளை மீன் தூண்டிலில் அகப்படவில்லை. மீன் பிடிப்பதில் வல்லவனான பாணனுடைய முயற்சி தோற்றது. வாளை வென்றுவிட்டது.

 

பச்சூன் பெய்த சுவல் பிணி பைந் தோல்

கோள்வல் பாண்மகன் தலைவலித் தியாத்த

நெடுங் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொவீஇக்

கொடுவாய் இரும்பின் மடிதலை புலம்பப்

பொதி யிரை கதுவிய போழ் வாய் வாளை

(பெரும்பாணாற்றுப்படை 283-7)

 

புலவர் இவ்வாறு கூறுவதில் கற்பனைச் சிறப்பு ஒன்றும் இல்லை. தாம் கண்ட காட்சி ஒன்றை உள்ளபடி கூறுவதுபோல் உள்ளது. இது விரிவான வருணனையும் அல்ல. பாணன் மீன் பிடிப்பதைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். மீன் அகப்பட்டுக்கொண்டது என்று பாடியிருப்பாரானால், அது பாட்டில் அமைய வேண்டிய காரணமே இல்லை. சுவையற்ற எளிய நிகழ்ச்சியாகவே இருந்திருக்கும். ஆனால், 

கோள்வல் பாண்மகன் என்று அவனுடைய மீன் பிடிக்கும் திறமையைக் கூறிவிட்டு, தூண்டிலிரும்பு தனியே இருக்க, இரையை மட்டும் வாளை கௌவிக்கொண்டது என்று சொல்லுவதில் கற்பனைக்குரிய பகுதி அமைந்திருக்கின்றது. அதையும் இவ்வளவில் நிறுத்திவிட்டிருந்தால் "எத்தனையோ நாள் இவன் வெற்றி பெற்றான்; ஒரு நாள் தோற்றான். வாளை மீன் எப்படியோ தப்பியது' என்று எண்ணி அப்பால் செல்லவே தோன்றும்.


மருத நிலத்தைப் பாடும் புலவர் மேலும் அந்த வாளை மீனைப் பற்றிக் கூறுவதுதான் கற்பனை வளத்தைப் புலப்படுத்துவதாக உள்ளது.


அந்தப் பாணனும் அந்தக் குளத்தை விட்டு வேறு குளத்தை நாடிச் சென்றுவிட்டான். குளத்தில் வேறு யாரும் வந்து மீன் பிடிக்கவுமில்லை. தூண்டிலின் இரையை அங்காத்த வாயால் விழுங்கிவிட்டுத் தப்பித்துக்கொண்ட வாளை மீன் மட்டும் அந்தக் குளத்திலேயே இருந்தது. அதைப் பற்றிப் புலவர் மேலும் ஓரடியில் கூறுகின்றார். அந்தப் பகுதியில்தான் கற்பனை சிறப்புறுகின்றது.


முதலில் தூண்டிலின் இரையை விழுங்கிய மீன் எளிதில் தப்பித்துக்கொள்ளப் போராடியதா என்பதைப் புலவர் கூறவேயில்லை. ஆனால், வளைந்த இரும்பில் பொருந்தியிருந்த இறைச்சியை வாளை விழுங்கியபோது, ஒரு துன்பமும் அடையவில்லை என்று கூற முடியாது. இரையை விழுங்கியபோது, வளைந்த இரும்பின் முனை அதன் வாயில் உறுத்தியிருக்கும்; பொத்திப் புண்படுத்தியிருக்கும். ஆயினும், வாளைமீனின் வலிமையும் திறமையும் அந்தத் தூண்டிலின் முனையிலிருந்து தப்பி ஓடத் துணை செய்தன. ஓடிய பிறகும் அந்த இரும்பு முனை தன்னை வருத்திய துன்பத்தை வாளை மீன் மறந்துவிடுமோ? இன்னொரு முறை அந்தத் தூண்டில் தன் வாயைப் புண்படுத்துமோ? என்ற அச்சம் அந்த வாளை மீனின் உள்ளத்தில் குடிகொண்டதாம்.


வாளைமீனின் உள்ளத்தில் அச்சம் குடிகொண்டிருப்பதைக் கூறுவதன் வாயிலாகவே, அது பாணனுடைய தூண்டிலால் பட்ட துன்பத்தைப் புலவர் உணர்த்துகின்றார். அந்த அச்சத்தையும், வாளை மீன் பயந்து நீருள் ஒடுங்கியது' என்று வாளா கூறவில்லை. அதை உணர்த்தும் முறையில்தான் சிறந்த கற்பனை அமைந்திருக்கின்றது.


அந்தக் குளத்தின் கரையில் பிரம்புக் கொடி வளர்ந்திருக்கின்றதாம். விடியற்காலையில் பாணன் வந்து மீன் பிடித்த போது, நிழல் விழும் நிலைமை இல்லை. ஆனால், சூரியன் மேலெழுந்து வர வர, கரையில் வளர்ந்துள்ள பிரம்பின் நிழல் நீரில் விழுகின்றது. காற்றால் பிரம்பு அசையும் போது பிரம்பின் நிழலும் அசைகின்றது. நிழலின் அசைவுக்கு அதுமட்டும் காரணம் அல்ல; நீரின் இயல்பான அசைவே பெரிய காரணம். அலையலையாக நீர் அசையும்போது பிரம்பின் நிழலும் நீரில் அசைந்தசைந்து தோன்றும். இவ்வாறு அசையும் பிரம்பு நிழலை அந்த வாளைமீன் கண்டபோது, அதன் உள்ளத்தில் அடங்கியிருந்த அச்சம் வெளிப்பட்டது. விடியற்காலையில் ஏதோ ஓர் இறைச்சித் துணுக்கை விழுங்கியபோது தான் பட்ட பாட்டையும், அந்தத் துணுக்கு இருந்த தூண்டில் கயிற்றையும் வாளை நினைத்துக் கொண்டதாம். நீரில் விழுந்தசைந்த பிரம்பின் நிழலைத் தூண்டில் என்று எண்ணி அஞ்சியதாம். முன்பட்ட துன்பத்தை நினைந்து, வாளை மீன் மிக அஞ்சியதாம்.

 

பொதியிரை கதுவிய போழ்வாய் வாளை

நீர் தணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம்

நீத்துடை நெடுங் கயம்.

 

இதுவே கற்பனை சிறக்கும் பகுதி. வாளை மீனுக்கு நினைவாற்றல் உண்டா? முன்பட்ட துன்பத்திற்குக் காரணம் தூண்டில் என்று நினைத்து நடுங்கும் தன்மை உண்டா? பிரம்பின் நிழலைத் தூண்டில் என்று மயங்கி எண்ணியிருக்குமா? இவையெல்லாம் கற்பனையுலகத்திற்குள் அடங்காத ஆராய்ச்சிகள். புலவர் வாளை மீனாக இருந்து, தூண்டிலிரையை விழுங்கி வருந்தியது முற்பகுதி. பிரம்பின் நிழலைத் தூண்டிலென்று மயங்கி நினைத்து அஞ்சியது இரண்டாம் பகுதி. இவ்வாறு முன் நிகழ்ந்த துன்பம் பின் நிகழும் அச்சத்திற்குக் காரணமாவது மக்கள் வாழ்க்கையில் உண்டு.


அதனால் புலவர், மக்களின் மனப்பான்மையை வாளை மீனுக்குக் கற்பித்து, அதனை அஞ்சி ஓடுவதாகக் கூறுகின்றார். புலவரின் கற்பனையில் உயிருள்ளவற்றிற்கும் இல்லாதவற்றிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. உணர்வு உள்ளவற்றிற்கும் இல்லாதவற்றிற்கும் பெரிய வேறுபாடு இல்லை. ஆகையால், அழுகை, மகிழ்ச்சி, வெகுளி, அச்சம் முதலியவை மக்களுக்கே சிறப்பியல்புகளாக இருந்தாலும், புலவர்கள் மற்றவற்றிற்கும் அவை உள்ளன போல் கற்பனை செய்து பாடுவது உண்டு. இந்தப் பாட்டின் பகுதியில் வாளை மீன் அறிவு, நினைவு, அச்சம் எல்லாம் பெற்றிருப்பதாகக் கூறப்படுவதற்குக் காரணம் அதுவே.


(கடியலூர் உருத்திரங் கண்ணனார்) என்றோ ஒரு நாள் பாணனின் தூண்டிலை உற்று நோக்கியிருப்பார் புலவர். மற்றொரு நாள் பிரம்பின் நிழலை உற்றுப் பார்த்தபோது அவருடைய நெஞ்சம் மீனின் துன்பத்தையும் அச்சத்தையும் கற்பனை செய்து பார்த்தது. இந்தக் கற்பனைக்குக் காரணமான பிரம்பின் நிழலையே இந்தப் பாட்டின் பகுதியில் காண்கின்றோம்.


‘மு.வ.கட்டுரைக் களஞ்சியம்’ முதல் தொகுதி. 


நன்றி - தமிழ்மணி 2016