‏إظهار الرسائل ذات التسميات தற்காலத் தமிழ். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات தற்காலத் தமிழ். إظهار كافة الرسائل

தற்காலத் தமிழ்ப் புனைகதையின் இன்றைய நிலை - பிரம்மராஜன்

தமிழ்ப்புனைகதையின் போக்குகளைக் கூர்மையாகக் கவனித்து வந்திருப்பவர்கள் 1990களின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை அது அடைந்திருப்பது முன்னேற்றமா, தேக்கமா, சீரழிவா என்பதைத் தீர்மானிக்க முடியும். முனைப்பாகவும், வெளிப்படையாகவும், பகட்டாகவும் இந்தப் பத்தாண்டுகளில் எழுதி வந்தவர்களில் பெரும்பான்மையோர் பிரகடனம் செய்து வந்திருப்பவர்களாக இருப்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக இதில் சிலர் யதார்த்த வகை புனைவுகளுக்கு தாங்கள் மாற்று எழுத்துக்களைத் தந்துவிடப் போவதாக அறிவித்துக் கொண்டு எழுதினார்கள். இதன் பொருட்டு இவர்கள் புதிய வகை எழுத்து மொழியை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டும் எழுதினார்கள். யதார்த்த வகை எழுத்துக்கு மாற்றாக இருக்க முடியும் என்று அவர்கள் சொன்னது ''வனமந்திரக் கதாச் சுருள்களும்'' பாண்டஸ’ வகை எழுத்துக்களும். இதில் அவர்கள் செய்த மிகப் பெரிய புரட்சி என்னவென்றால் மொழிக் கட்டமைப்பின் மீது குறைந்தபட்சம் கவனம் கூட இல்லாமல் எழுதித் தள்ளியதுதான். யதார்த்த வகை எழுத்திலும் சரி, புனைவு வகை எழுத்திலும் சரி - கவனக்குறைவான வாக்கியங்களை எழுதுபவர்களுக்கு எந்த மன்னிப்பும் கிடையாது. நேரடியாகப் பொருள் கொள்ளக் கூடிய தெளிவான வாக்கியங்களைக் கோரும் யதார்த்த வகை எழுத்துக்களையே ஒழுங்காக எழுதத் தெரியாதவர்கள் புனைவு வகை எழுத்துக்களை எழுத இயலுமா? இதை வாசகர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த மாதிரி பிரகடனங்கள் முன்மொழிந்து கொண்டு யதார்த்தவகை எழுத்துக்களுக்கு மாற்றுப் புதினங்களை எழுதுகிறேன் என்று எழுதிக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் ஒரு விதமான கலங்கலான, உருவகங்களால் நிரம்பிப் போன, கவிதை மாதிரி தெரிகிற ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். இத்தகைய கலங்கலான, கவிதை மாதிரித் தோற்றமளிக்கும் ஒரு உரைநடையைக் கையாள்வதால் வாசகன் அதில் ஏதோ இருக்கிறது என்று நம்பி ஏமாறுகிறான்.

இந்த இடத்தில் கவிதை மொழி மற்றும் உரைநடை மொழிக்கான வேறுபாடுகள் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை முன் வைக்கிறேன். காரணம், புனைகதையின் சகலவிதமான விமர்சனக் கேள்விகளுமே இறுதியில் புனைகதை பயன்படுத்தும் மொழியின் அடிப்படைக் கேள்விகளாக மாறுகின்றன. மேலும் ''வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்பது அடிப்படையில் அர்த்தங்களைக் கையாள்வது தான்'' என்ற குறைந்தபட்ச அடிப்படைக் கருத்துக்கு மரியாதை தருபவர்களாக புனைகதை எழுதுபவர்கள் இருக்க வேண்டும். ஒரு மகத்தான கருத்தினை ஒரு புனைகதையாசிரியரின் மனதில் வைத்திருக்கலாம். ஆனால் அந்த மகத்தான கருத்தின் அர்த்தத்தையும், மதிப்பீடுகளையும் அவனுடைய வாசகர்களுக்கு அவன் தெளிவு படுத்துவதற்கு முன்னர், அவன் தனக்குத் தானே தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. ஒரு மகத்தான ஐடியாவைத் தனது புனைகதைக்குள் வைத்திருக்கிறேன் என்று சொல்வது மட்டும் போதாது. புனைகதை எழுதும்போது கவிதையின் அம்சங்களைக் கொண்ட மொழிநடையையும் பல நாவலாசிரியர்கள் கையாள்கிறார்கள். இன்று சற்றே புராதன நாவலாசிரியர் போலத்தோன்றும் ஹென்றி ஜேம்ஸ் ஒரு தீவிர உதாரணம் என்றால் பின் நவீனத்துவக் காலத்தில் அதிகம் பேசப்படும் விளாதிமிர் நெபக்கோவ் மற்றும் யூலிகோ கோர்த்தஸார் பிற உதாரணங்கள். கவிதையின் யத்தனங்கள் ஒரு புனைகதைக்குள் இருந்தாலும் அவை இறுதியில் உரைநடையின் தர்க்க ஒழுங்குக்குள் ஒருமைப்பட்டுவிட வேண்டிய அவசியமும் கட்டாயமும் இருக்கிறது. அல்லது கவித்துவ மொழிநடைக்கும் தர்க்கரீதியான சீர் ஒழுங்கினைக் கோரும் உரைநடை மொழிக்கும் இடையே ஒரு சமன்நிலை அடையப்பட வேண்டிய அத்யாவசியம் இருக்கிறது. கவித்துவ மொழி நினைவிலி மனதினை ஆராய்கிறது. உரைநடைமொழி புத்தியின் அம்சங்களை ஆராய்கிறது. நினைவிலி மனதினை ஆராயும் கவிதை மொழிநடையை வைத்து இன்று ஒரு புனைகதை எழுதினால் அது வாசகனின் பொறுமையைச் சோதிக்கக் கூடியதாகத்தான் இருக்கும். ஏனெனில் உலக இலக்கிய வரலாற்றில் ஒரே ஒரு ஜேம்ஸ் ஜாய்ஸ்தான் இருக்க முடியும். ஒரே ஒரு பின்னகன்ஸ் வேக் தான் இருக்க முடியும்.

சுந்தரராமசாமியின் ''பல்லக்குத்தூக்கிகள்'' சிறுகதைகளில் அதிகமாகவே இடம் பெறுகிறது. ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலின் பல பகுதிகளிலும், ஆனால் அக்கதையின் வெற்றி அவை இறுதியில் உரைநடையின் தர்க்கத்திற்குள் ஒன்றுபட்டு சமன் செய்து கொண்டுவிடும் தன்மையே. வண்ணநிலவனின் சில கவிதைகளில் இத்தன்மையைப் பார்க்கலாம் (பிணத்துக்காரர்கள், பாம்பும் பிடாரனும்). ந. முத்துச் சாமியின் சிறுகதைகளிலும் இந்தக் கவித்துவ அம்சம் நனவோடை உத்தியில் சாதிக்கப்பட்டு இறுதியில் உரைநடையின் தர்க்க மொழிக்குள் சமன்பட்டுவிடுகிறது. இவர்கள் எழுதிய எந்தக் கதையிலும் கவனக்குறைவான வாக்கியங்களையோ அசட்டுத்தனமான, விவரணைக்கு அவசியமற்ற கவித்துவ யத்தனங்களையோ பார்க்க முடியாது.

வாழ்வின் யதார்த்தம் பற்றிய ஒரு மாயத் தோற்றத்தைத் தரவேண்டிய கட்டாயத்திலிருந்தது புனைகதை. கவிதைக்கு அப்படி இல்லை. கவிதை கவிதையாகவே இருக்கலாம். தொடர்நிகழ்வுகளையோ நிகழ்ச்சி அடுக்குகளையோ வாழ்க்கை போலவே தெரியும்படி அடுக்க வேண்டிய கட்டாயத்தில் கவிதை இல்லை. பால் வெலேரியின் ஒரு மேற்கோளை இங்கு தருவது பயனுள்ளதாக இருக்கும்.

Thus understood, poetry is radically different from all prose: in particular, it is clearly opposed to the description and narration of events that tend to give the illusion of reality, that is to the novel and the tale when their aim is to give the force of truth to stores, portraits, scenes, and other representation of real life. (Paul Valery, Remarks on Poetry [(from the art of poetry: tr. Denise Folliot 1958)]

இன்னும் ஒரு முக்கிய கவனிப்பை இங்கே வாசகர்களுக்கு முன் வைக்க வேண்டிய அவசியமிருக்கிறது. இந்த நவீனத்துவத்தை (நான்லீனியர், மொட்டாஃபிக்ஷன், மேஜிகல் யதார்த்தம், இத்யாதி) அரைகுறையாகப் புரிந்து கொண்டு எழுதிக் கொண்டிருக்கும் கதாச்சுருள்காரர்களும், புதுவகை எழுத்து மொழிக்காரர்களும் எப்பொழுதுமே முதலில் நம் ஆதர்ச எழுத்தாளர்களாக முன் வைப்பது போர்ஹேவையும், மார்க்வெஸ்ஸையும். போர்ஹேவை ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கு முதலில் ஒன்று தெரியும். அவர் மொழிநடை தெள்ளத் தெளிவானது. அரைவேக்காடு வாக்கியங்கள் இல்லாதது. உருவகப் படிமங்களால் அடைசலூறாதது. மார்க்வெஸ்ஸைப் பொறுத்தவரை அவர் மொழி ஆங்காங்கே கவிதையைக் தொட்டுச் செல்லும் தன்மையை உடையதாய் இருப்பினும் மிகச் சிறந்த கதைசொல்லியாக விளங்குபவர். கதை சொல்வதற்குப் பதிலாக வெறும் மொழிச்சட்டகத்தை வைத்துவிடுபவர் அல்லர்.

ஆனால் இன்றைய தமிழ்ப் புனைகதை ஆசிரியர்களில் சிலர் மொழிச்சட்டத்தை பிரதியின் மையத்தில் வைத்துவிட்டு அதுதான் புனைகதை என்று சொல்கிறார்கள். இந்தப் புனைகதைகளில் கதை ஒரு புள்ளியிலிருந்து வேறு ஒரு புள்ளிக்கு நகர்த்திச் செல்லப்படுவதில்லை. அரைகுறையாகவும், அவசரத்திலும் பிரமிக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்திலும் குப்பையாகத் தகவல்கள் அள்ளி வாசகனின் மூளைக்குள் கொட்டப்படுகின்றன. தகவல்களிலோ ஏகப்பட்ட பிழைகள் நிறைந்து கிடக்கின்றன. தனக்குத்தானே ஒரு புனைக்கதையாசிரியன் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று முன்பே குறிப்பிட்டோம். ஆனால் இன்றைய நிலைமை படுமோசமாக இருக்கிறது. எழுதுபவர்கள் தாங்கள் எழுதியது தங்களுக்கு புரிந்ததா என்று கேள்வி கூட கேட்டுக் கொள்ளாமல் நிறைய செலவு செய்து எழுதி வெளியிடப்படும் இந்தப்புனைகதை எழுத்துக்கள் வாசகனை மறுப்பவையாகவே வந்து சேர்ந்திருக்கின்றன. வாசகன் தன்னுடைய பிரதியை உற்பத்தி செய்து கொள்ளும் வெளி இந்தப் புதினங்களில் மறுக்கப்படுகிறது. தங்களைத் தாங்களே குழப்பிக் கொள்ளும் பிரதிகளாக இருப்பதால் இப்புதினங்கள் வாசக மறுப்புப் பிரதிகளாக உருவாவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

மேலும் ரோலான் பார்த் (Rolland Barthes) குறிப்பிட்ட "பிரதியின் சந்தோஷங்கள்" இவற்றில் தேடினாலும் கிடைப்பதில்லை. குறிப்பாக கோணாங்கி மற்றும் கௌதம சித்தார்த்தன் போன்றோரின் பிரதிகளைப் படிப்பதென்பது வாசகனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகவே இருக்கிறது. இவர்களின் நண்பர்களே கூட முழுமையாக இவர்களின் பிரதிகளைப் படித்திருப்பார்களா என்பது சந்தேகமே. (சிலரிடம் கேட்ட பொழுது இல்லை என்று நேர்மையாக பதிலளித்தார்கள்) வலிந்து வரவழைத்துக் கொண்ட புதிய எழுத்துமொழி இவர்கள் இருவருடையதும். உதாரணமாக பெண் என்ற வார்த்தையைப் பிரயோகிப்பதற்குப் பதிலாக ஸ்தீரீ என்ற சொல்லையே பயன்படுத்துவார்கள். நாசம் என்ற சொல்லுக்குப் பதிலாக ஒரிஜினல் சமஸ்கிருதச் சொல்லான விநாசம் என்பதையே பயன்படுத்துவார்கள். ஆனால் இதில் ஒரு ஒழுங்கு இருக்காது. இடையில் பெண் என்ற சொல்லும் வந்துவிடும். வாக்கியங்கள் ஒருமையில் தொடங்கி பன்மையில் முடியும் அல்லது பன்மையில் தொடங்கி ஒருமையில் முடியும். மூன்று, நான்கு வாக்கியங்கள் ஒரே வாக்கியத்தில் இணைக்கப்பட்டு தொடக்கம் என்ன முடிவு என்ன என்பது தெரியாமல் செய்யப்பட்டிருக்கும். இது பிரதியாசிரியனின் கவனக்குறைவும் குழப்பமுமே தவிர வாசகனின் இயலாமை அல்ல.

கோணங்கியின் ஆதர்ச லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான மார்க்வெஸ்ஸை ஏன் அவருக்குப் பிடிக்கிறது என்றால் மார்க்வெஸ்ஸ’ன் மாஜிகல் ரியலிசத்தின் ஒரே காரணமாகத்தான். மற்றதெல்லாம் கோணங்கிக்கு பொருட்டல்ல. அவரையும் கூட கோணங்கி தெரிந்து கொண்டது (புரிந்து கொண்டது) அவருடைய நண்பரான நாகார்ஜூனனின் தப்பும் தவறுமான மொழிபெயர்ப்பின் மூலமே. கோணங்கி எழுதுகிறார்:

"கிணத்தின் சறுக்கத்தில் நல்லதங்காள் என்ற சோக விநோதத் கதைப் பாடலில் அவள் பதினாறடிக் கூந்தல் இறந்த பின்னும் கிணற்று நீர் சுழலில் சுழன்று நீள்வதைக் காப்ரியேல் கார்ஸ’யா மார்க்வெஸ’ன் கடைசி நாவலான பலியான கன்னியில் கூந்தல் அலையை எழுதிய கதையில் காண நேர்ந்ததால் ஸ்பானியக் கதைப் பாடலுக்கும் நல்லதங்காளின் பதினாறடிக் கூந்தலுக்கும் பக்கம் பக்கமாக ஒரே சமயத்தில் கூந்தல் வளர்வதை தமிழின் வாய்வழிக் கதை மரபாகக் கொள்ள வெள்ளையம்மாள் கிழவியின் குடலுக்குள் இரைந்து கொண்டிருக்கும் கதைச் சுருளை என்னவென்று காணமுடியாத உள்ளுரைகளை உணர்கிறேன்". (உப்புக் கத்தியில் மறையும் சிறுத்தை: பக். 18)

கோணங்கியின் திட்டத்தை ஒரு வித மானுட ஆய்வியல் ஒப்புநோக்கு என்று பாராட்டிவிடலாம் என்றாலும் கூட சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. முதல் சிக்கல் கோணங்கி மார்க்வெஸ்ஸ’ன் நாவல் தலைப்பைப் புரிந்து கொண்டதிலேயே ஏற்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இவர் குறிப்பிடும் மார்க்வெஸ்ஸ’ன் நாவலின் பெயர் of Love and other Demonies இவ்வாறு இருக்கிறது. நாவலோ முடிவளர்வது பற்றியதல்ல. நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும். பலியான கன்னி என்பது எப்படி சரியான மொழிபெயர்ப்பாகும் என்று மொழி வல்லுநர்கள் தான் நமக்குச் சொல்லவேண்டும். கன்னி எதற்கு பலியானாள்? கோணங்கிக்குத் தெரிய நியாயமல்ல. கன்னியான Sieria Maria வுக்கு நாவலில் 12 வயது தான் ஆகிறது. வெறி நாய்க்கடிக்கு (வெறி நாய்க்கடி அவளை ஒன்றும் செய்வதில்லை. அவள் இறப்பது காதலினால்) மருந்து இல்லாத காலத்தில் அவளை வெறிநாய் கடித்து விடுவதால் கிறித்துவப் பாதிரிகள் அவளைப் பேய் பிடித்து இருக்கிறது என்று பேயோட்டச் சொல்லி ஒரு இளம் பாதிரியை (34 வயதான பாதிரியின் முழுப்பெயரை சொல்ல மூச்சு வாங்கும் : Gayetano Alcino del Espiritu Santo Delaura Y Escudero) அனுப்புகிறார்கள். அவளை அடைத்து வைத்திருக்கும் கடலோரத்தில் அமைந்த சான்ட்டா கிளாரா கன்னிகாஸ்தீரிகள் மடத்திற்கு. டெலவ்ரா என்று சில சமயங்களிலும் கேயடெனோ என்று சில இடங்களிலும் (ரஷ்ய நாவலாசிரியர்கள் செய்வது போல) இந்தப் பாத்திரத்தை மாற்றி மாற்றிக் குறிப்பிடுகிறார் மார்க்வெஸ். இதனாலும் கூட கோணங்கிக்கும் அவருடைய நண்பருக்கும் குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். கான்வென்ட்டில் இருக்கும் பொழுதே அந்தச் சிறுமியின் போர்ட்ரெய்ட்டை ஒரு ஓவியர் வரைகிறார். அதில் அவள் தேவதை போலவும் அவளுடன் சில கீழ்ப்படிதல் உள்ள அசுர கணங்களும் இருப்பது போலவும் தீட்டுகிறார். அந்த சிறுமிக்கும் பாதிரிக்கும் இடையிலான காதல் தான் இந்த நாவலில் மையமாக அமைந்து இருக்கிறது. அவளுக்கு நீண்ட முடி இருக்கிறது. உண்மை. ஆனால் நாவல் முடிவளர்வது பற்றி அல்ல. ஒரு கட்டத்தில் அந்தச் சிறுமிக்கு கோபம் ஏற்பட பாதிரியின் முகத்தில் காறித் துப்புகிறாள். அதற்கு டெலவ்ரா மறுகன்னத்தை காட்டுவது மட்டுமன்றி ஒவ்வொரு காறித்துப்பலுக்கும் ஒரு வித பாலுணர்வு திருப்தி அடைகிறார். நாவலில் பேய் பிடித்திருப்பது அந்தச் சிறுமிக்கு மட்டும் அல்ல. காதல் என்ற பேய் அந்த இளம் பாதிரியையும் பிடித்து விடுகிறது. பென் பைத்தியக்காரிகளுக்கான விடுதிகள், அடிமைகளின் இல்லங்கள், குஷ்டரோகிகளின் இல்லங்கள் ஆகிய இவற்றின் பின்னணியில் புத்தகப் பிரியனாகவும், கவிதை ரசிகனாகவும், காதலன் ஆகவும் இருக்கிற அந்த இளம் பாதிரியே இந்த நாவலின் பிரதான பாத்திரம். அந்தச் சிறுமியின் நீண்ட முடி நாவலின் ஒரு கட்டத்தில் ஒட்ட வெட்டப்பட்டு எரிக்கப்படுகிறது.

சில தமிழ் மார்க்சீயர்கள் ஜோதிடத்தை மார்க்சீயத்துடன் சுமூகப்படுத்த வேண்டும் என்று சொன்னது போல கோணங்கியும், நல்லதங்காளையும் ஸ்பானியக் கதைப்பாடலையும் இணைத்து சந்தோஷப்படுகிறார். -- எரிந்திராவை மணிமேகலையுடன் இணைந்தது போலவே. (பார்க்க: கல்குதிரை, காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சிறப்பிதழ் பக். 143 -144). இந்த ஒவ்வொரு இணைப்பின் மூலமும் அதிகப் பயனடைபவர் கோணங்கிதான். ஏனென்றால் கூடுதலாக ஒரு கதையை அவரால் உண்டு பண்ணமுடியும். கோணங்கியின் மேற்கோளில் காணப்படும் ''ஸ்பானியக் கதைப்பாடல்'' மூலத்தில் இல்லை. எனவே கோணங்கியின் இலக்கியக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாக அதை வைக்கலாம்.

அர்த்தமிழந்த சுற்றி வளைத்தல்களையும், கதை சொல்லத் தேவையற்ற இரட்டிப்புகளையும் விலக்கி விட்டு எழுதினால் கோணங்கியின் ''பாழி'' நாவல் 50 பக்கங்களுக்கு மேல் வருவது சந்தேகமே. தேவதாசிகள் ராகம் உண்டாக்குகிறார்கள் என்று அர்த்தம் வரும்படி எழுதுவதற்காக எவ்வளவு வார்த்தைகள் விரயமாக்கப்படுகின்றன என்று பாருங்கள்.

உடல் இல்லாத தேவதாசிகள் கட்டில் காலில் தோன்றி மச்சக்கந்தி உருவில் நீர்யாழியில் அலைவுற்ற ராக லெட்சணம் வளைவுகள், கமகங்கள், சுரங்களைப் பிடிக்கும் வழியில் அனுசுரங்கள் ஒருங்கு சேர்ந்து ராகமுண்டாக்கினர் தாசியர் (பாழி: பக். 180)

கோணங்கியின் பிதற்றல் என்று சொல்லும்படியான விவரித்தலுக்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு. (வாசகர்கள் மன்னிக்க வேண்டும்)

''இடைவிடாத மோனத்திலிருந்து பாம்பு நெளிவு மோதிரத்தால் எட்டாவது பஞ்சமும், ஒன்பதாவது கோமளதைவதமும் சுருதி நுட்பம் கூட யாளி முகத்தில் உருக்கொண்ட துயர் ராப்பாடி பறவையென குரல் அதிர்ந்து கண்ணாடிப்பந்தாக சுருள் கொள்ளும் பிரதியொலி கீழ்ப்பாய்ந்து கோமள ரிஷபமும் தீவிர காந்தாரமும் ஆறாவது தீவிர மந்திமமும், தந்திகள் தழுவி எதிரெதிர் ராகமும் நாத பேத ஆதாரம், கால பருவங்கள் சுற்றிப் புலர் பொழுதுகளின் குளிரையும் உதிரும் தெருவையும் வெளிப்படுத்தியது''. (பாழி: பக். 175 - 176)

கோணங்கிக்கு சங்கீதம் பற்றி எதுவும் தெரியுமா என்று கோணங்கிக்கு நன்றாக தெரியும். ஆனால் இவ்வளவு டெக்னிகலாக ஏதோ எழுதியிருக்கிறாரே அவருக்குத் தெரியாமல் இருக்க முடியுமா என்று வாசகர்கள் வியக்கலாம். சங்கீதம் தெரிந்த யாரும் க என்ற சுரத்தை சாதாரண காந்தாரம், சுத்த காந்தாரம், அந்தர காந்தாரம் என்ற தான் இன்று வரை சொல்லி வந்திருக்கிறார்கள். ஆனால் கோணங்கி புனைகதையில் ஏற்படுத்திய புரட்சிக்கு சமமானதொரு புரட்சியை சங்கீத செயற்பாடுகளில் ஏற்படுத்த விரும்பி விட்டதால் இனிமேல் புதியதாக தீவிர காந்தாரம் என்கிற புதிய செமிடோன் ஒன்று தோற்றுவிக்கப்பட்டுவிடும். கோமள ரிஷபம் என்று கர்நாடக சங்கீதத்தில் யாரும் குறிப்பிடமாட்டார்கள். இந்த வார்த்தை பிரயோகம் ஹ’ந்துஸ்தானி இசையில் மாத்திரம் புழங்குகிறது. மேலும் ஒரு வியப்பு வாசகனுக்கு வரவேண்டும். அப்படியானால் கோணங்கி இந்துஸ்தானி இசையிலும் பெரிய விற்பன்னராகி விட்டரா? பாழியைப் படித்தால் அப்படித் தான் தோன்றுகிறது நமக்கு. எனினும் கர்நாடக இசை, கர்நாடக இசைக்கு முந்திய தமிழ் இசை, ஹ’ந்துஸ்தானி இசை இவற்றின் வரையறைச் சொற்களை எடுத்து எடுத்து இந்த அத்தியாயத்தில் வாகான இடங்களில் செருகி வைத்திருக்கிறார். உருவான வகையிலும், பாடப்படும் வகையிலும் மூன்றுமே (ஹ’ந்துஸ்தானி, தமிழிசை, கர்நாடக இசை) தனித்தன்மை கொண்டவை. ஒன்றுடன் ஒன்றைப் போட்டுக் குழப்ப முடியாது. சங்கராபரணம் என்ற ராகம் ஹ’ந்துஸ்தானியில் பிலாவல் என்று அழைக்கப்படுகிறது. தமிழிசையில் செம்பாலை என்று சொல்லப்படுகிறது. பல தள இசை (பாலிஃபொனி) என்ற ஒன்றை மேற்கத்திய இசையில் வரையறைப்படுத்துவார்கள். அப்படிப்படட பாலிஃபொனி போன்று அமைந்த நாவலை மிலன் குன்தேரா எழுத முயன்று இருக்கிறார். கோணங்கியால் ஏன் முடியாது என்று நீங்கள் நினைக்க வேண்டும்?.

கோணங்கிக்குப் பிடித்த வினைச்சொல் கீறுதல். எழுதுவதற்குப் பதிலாகக் கீறுகிறார். கீறித்தான் அவரால் எழுத முடிகிறது. இந்தக் கீறுதல் உப்புக்கத்தியில் குறைவாகவும் பாழியில் அளவுக்கு அதிகமாகவும் காணப்படுகிறது. இப்படி கோணங்கியிடம் படாதபாடுபடும் மற்றொரு வார்த்தை அலாதி. நமக்கு லெக்ஸ’கள் சொல்வதுபடி அலாதி என்ற வார்த்தைக்கு அர்த்தம் எந்த ஒன்று தனியானதோ அது. கோணங்கியின் சொல்லாட்சிக்கு சில சிறந்த உதாரணங்கள்.

அதைக் கண்டதுமே ஸ்தீரிகள் அலாதி அடைகிறார்கள். (உப்புக்கத்தி)

தமிழர் வாழ்க்கையில் சமகால பிரதிபலிப்பு இல்லாத பாழி நாவல் பெரும்பாலும் உப்புக்கத்தியில் அளவாக குறிக்கப்பட்ட சில விஷயங்களின் விரிவாக்கமாகவே இருக்கிறது. ஒரு அகழ்வாராய்ச்சியின் ரிப்போர்ட் போல. அனால் தகவல் அறிக்கைகளின் தெளிவு கைவரப் பெறாமல் நிற்கிறது பாழி.

நவீன புனை கதையாளர்களில் பலருக்கு இல்லாத துணிச்சல் கோணங்கிக்கு இருக்கிறது. தகவல்களை உறுதி செய்து கொள்ளாமல் எடுத்து பயன்படுத்திக் கொள்வதில் அவர் சமர்த்தர். கோணங்கியின் பாழி நாவலின்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கிலோ சாக்ஸன் மொழியில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. எடுத்துக்காட்டு.

''ஆங்கிலோ சாக்ஸனில் எழுதப்பட்டிருந்த விக்டோரிய சரித்திர ஆசிரியர்களின் காலனிய அடிமை மனவெளி பொங்கி செடி கொடி படர்ந்து சீசாக்கள் நிரம்பி வழிகின்றன''. (பாழி: பக். 321)

ஆனால் ஆங்கிலோ சாக்ஸன் என்று அழைக்கப்படும் பழைய ஆங்கிலம் 8ஆம் நூற்றாண்டில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை தான் பயன்பாட்டுக்கு உள்ளாயிற்று. சற்றே முற்பட்டவரான சாசர் என்ற கவிஞரையே நாம் நவீன ஆங்கிலத்தில் எழுதுபவராகத் தான் குறிக்கிறோம். ஆனால் யாரை வைத்து கோணங்கி எழுதினாரோ அவரைக் கேட்டால் தான் நமக்குத் தெரியும் எப்படி 19ஆம் நூற்றாண்டில், வரலாறு ஆங்கிலோ சாக்ஸனில் எழுதப்பட்டதென்று.

கதாபாத்திரத்தை சிருஷ்டிப்பது, அதிலும் பெண்களைச் சிருஷ்டிப்பது என்பது எவ்வளவு எளிது என்பதை கோணங்கியின் பாழி நாவலைப் படித்தால் தெரியும். எந்த ஒரு பெயரின் விகுதியில் வேண்டுமானாலும் ஒரு ள் அல்லது அள் சேர்த்து விடுங்கள். உங்களுக்கு ஒரு பெண் பாத்திரம் கிடைத்து விடுகிறாள். பாத்திரம் தேவையில்லையா, அந்த அத்தியாயத்தின் இறுதியில் அவளைப்பற்றிக் குறிப்பிடுவதை நிறுத்திவிடுங்கள். அந்தப் பாத்திரம் காலி. அவ்வளவு எளிது. பழைய வாசனை அடிக்கக்கூடிய பெயர்களாக வரவேண்டுமென்றால் ராகங்களின் பெயர்ப்பட்டியல் உள்ள புத்தகம் ஒன்றினைப் புரட்டி யதேச்சையாக தேர்ந்தெடுங்கள். ஏறத்தாழ பாழியின் பெண் கதாபாத்திரம் ஒன்று உங்களுக்குக் கிடைத்து விடும் என்று அர்த்தம்.

வானம்பாடிகள் நாவல் எழுதவில்லை. ஒரு வேளை எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும். பாழி நாவலைப் போல் இருந்திருக்கும். புரியும்படியாகக் கூட இருந்திருக்கலாம். ரசிக்கும் படியாகக்கூட இருந்திருக்கலாம்.

ஒரு டூரிஸ்டின் மனோபாவத்தை எழுத்தில் வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு கோணங்கியால் ஆரம்பத்திலிருந்து (கொல்லனின் ஆறு பெண் மக்கள் தொகுப்பில் தொடங்கி விட்டது.) முடியவில்லை. நான் எங்கு எல்லாம் போயிருந்தேன் தெரியுமா என்பது தொனிக்கும்படியாக பாழியில் நின்ற இடங்கள் இருக்கின்றன. வாசகனுக்கு பயன் இருக்கும் என்ற நல்ல நோக்கில் கோணங்கி எழுதியிருப்பார் என்று நம்பலாம் (ஒரு இலக்கியவாதியின் டூரில் என்னென்ன இடங்கள் இடம் பெற வேண்டும்?)

டேரட் கார்டுகள் ஒரு பீதிக் கனவு போல கோணங்கியைத் துரத்தி வருகின்றன. உப்புக்கத்தியில் குறைவாக இருந்த இவை பாழியின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம் பெறும்படி இன்றியமையாதவையாக, வாசகன் தவிர்த்துச் சென்று விடாதபடிக்குச் செய்திருப்பது நாவலுக்கு ஒரு வெற்றி என்று தான் சொல்லவேண்டும். ஆமாம் டேரட் கார்டுகள் என்றால் என்ன? கோணங்கியிடம் கேட்டால் தனிப்பட்ட முறையில் ''கல்சாவி தருவார்'' அதைப் போட்டுத் திறந்தால் உங்களுக்கும் தெரியும். நான் குறிப்பிடுவது அதிகப்பட்சமாகத் தோன்றக் கூடாது. இன்னின்ன அத்தியாயங்களை இப்படி இந்த வரிசையில் நீங்கள் படியுங்கள் என்று வாசகர்களுக்குக் கடிதம் எழுதுகிறாராம். ''பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் சாமத்தில் 3,5,6,2,7,9,1,4,8 என்ற வரிசையில் கதைகளைப் படியுங்கள். உப்புக்கத்தியில் மறையும் சிறுத்தையில் 2,5,6,7,8,10,9,1,2,4,11 என்ற வரிசையில் கதைகளைப் படியுங்கள். அப்போது கதைகளை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.'' (நன்றி: க. பூரணசந்திரன்: தொடரும் எழுத்தும் தொடர்ச்சியுறும் எழுத்தும், சொல், புதிது, ஜனவரி - மார்ச் 2000) இது எவ்வளவு பெரிய முன்னேற்றம்? இவை நவீன எலக்ட்ரானிக் யுகத்தில் பயன்படும் ''பாஸ்வோர்ட்'' என்ற ஒன்றைத் தெரிந்தவர்கள் இன்னும் சீக்கிரம் புரிந்து கொள்வார்கள்.

இந்த மாதிரி அயர்ச்சியூட்டும், அதிருப்தி தரும், எரிச்சலூட்டும் பாழி போன்ற பிரதிகளை படித்த பிறகு தி. கண்ணன் போன்றோரின் பிரதிகளைப் படிப்பது ஒரு வித ஆறுதலாக இருக்கிறது. இருப்பினும் நவீனத்துவ - பின் நவீனத்துவ மோஸ்தர்களினால் வரக்கூடிய பக்க விளைவுகளை அதிகபட்சமாகக் கொண்ட பிரதிகளாகவே தி.கண்ணனின் (கல்வெட்டுச் சோழனின் டிசம்பர் -2000 ) சிறு கதைகளும் இருக்கின்றன என்று குறிப்பிட்டாகவேண்டும். காகித வேதாளம் கதையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் உருமாற்றங்களும், மந்திரத் தன்மைகளும் கதையின் நம்பகத்தன்மையையும், ஒருமையையும் குலைக்கின்றன. மந்திரத்தன்மை நம்பப்படவேண்டுமானால் அது குறைவாகவே பிரயோகிக்கப்படவேண்டும். இது தொடர்பான போர்ஹேவின் மேற்கோளை இங்கு தருவது பல நவீனத்துவவாதிகளுக்கு உபயோகமாக இருக்கும்.

''.........நம்ப முடியாப் புனைவுக் கதை வாசகனால் ஏற்றுக் கொள்ளப்படும்படியாக இருக்க வேண்டுமானால் நம்பமுடியாத புனைவுக் கதைகளில் ஒரு சமயத்தில் ஒரேயொரு நம்புவதற்கியலா அம்சம் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். [அலெஃப் சிறுகதை பற்றி போர்ஹே எழுதிய குறிப்புகள். போர்ஹே கதைகள் : பக். 250]

தி.கண்ணன் கதையில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்கள் இடையூறாகத் தெரிவது மட்டுமன்றிக் கதையின் தீவிரத்தன்மையை குறைத்து விடுகின்றன. இதனால் இறுதியில் கதை வெறும் நையாண்டியாகத் தான் மிஞ்சுகிறது. கதையின் நீளமும் இதற்கு ஒரு காரணம். கற்பனையின் செயற்கை மூலம் ஏற்படுத்தப்படும் பான்டஸ’களில் தி.கண்ணன் நம்பிக்கை வைத்திருக்கிறார். இது அவ்வளவு வெற்றிகரமாகத் தமிழில் இதுவரை (புதுமைப்பித்தனைத் தவிர) சாதிக்கப்பட்டிராத ஒரு பிரதேசம். தி.கண்ணனின் மொழிநடையில் இருக்கும் Flippancy காரணமாக இந்தக் கதைகளில் பொருட்படுத்திப் படிக்க வேண்டாமோ என்கிற மனநிலை வாசகனுக்கு வந்துவிடும் ஆபத்து இருக்கிறது. தி. கண்ணனின் மொழிநடையின் தெளிவை எந்த அளவு மனமார ஏற்கிறோமோ அதே அளவு அவருடைய Flippancy யை கண்டனம் செய்ய வேண்டியிருக்கிறது. நொண்டிக்காளியும் வெள்ளிச் சூலமும் இந்த வகைமையில் சேரக்கூடிய கதைதான். நீலமுகமூடி கதையின் நீளம் குறைவாக இருப்பதால் அதைப் படிப்பதும் எளிதாக இருக்கிறது.

தி. கண்ணனின் வெற்றிகரமான கதைகள் எதுவும் கற்பனையின் சேர்க்கை மூலமாக விளைந்தவை அல்ல. அவருடைய தனிமனித அனுபவங்களில் இருந்து உருப்பெற்று இருக்கிற ஆறாம் நாள் மற்றும் அன்னார் ஆகிய இரண்டு கதைகளை தொகுதியின் வெற்றிகரமான கதைகள் என்று சொல்லலாம். இதைத் தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருக்கும் பிற கதைகள் அப்பா, கனவு மற்றும் ஒரு கதை மற்றும் உத்தரகிரியை, சதுரம் வெளி: எதிர் உருவம் என்ற கதை எல்லா ஆரம்ப காலக் கதைகளைப் போலவே பலவீனங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

மெட்டாஃபிக்ஷன் (கதை மீறும் கதை) வகையில் அமைந்த அன்னார் இத்தொகுதியின் ஆகச் சிறந்த கதை என்று கூறமுடியும். அதனுடைய விவரணையிலும் பாத்திரப் படைப்பிலும் நல்ல நேர்த்தி காணப்படுகிறது. அன்னார் பின்புலமும் ஒருவித நோஸ்டால்ஜியாவில் Nostalgia மையமிட்டிருக்கிறது. நோஸ்டால்ஜியா கடந்து போனவற்றுக்கான வெறும் ஏக்கமாய் இல்லாமல் கதையில் வேறு பரிணாமம் கொள்கிறது. இந்த வகையில் தி. கண்ணன் கோணங்கியை விட நல்ல எழுத்தாளர் என்று சொல்லலாம். ஏனெனில் அவர் கதையில் பாத்திரங்கள் உணர்கிற உணர்வுகளை வாசகர்கள் உணர்கிற அளவுக்கு எழுதியிருக்கிறார்கள். புனை கதையின் மூலம் ஒருவருக்கு மரணம் வரவழைக்கும் நிகழ்ச்சியை கதைக்கான கருவாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தி.கண்ணன். ரசிகர் மன்றங்கள், திரைப்படங்கள், திரைப்பட ஆளுமைகள் எந்த அளவுக்கு தமிழனின் உணர்வு நிலையைப் பாதித்திருக்கின்றன என்கிற சமூகவியல் அம்சம் இந்தக் கதையின் நவீனத்துவத்தை மிஞ்சி விடுகிற பலமாக அமைந்திருக்கிறது.

மேஜிகல் பான்டஸ’யாக எழுதப்பட்டிருக்கும் ஆறாம் நாள் என்ற சிறுகதை அதன் கதைக் கருவாலேயே மிக விநோதக் கதையாகிறது. பான்டஸ’ என்ற தளத்தில் சஞ்சரிக்கும் கதை சாதாரன, பகிர்ந்து கொள்ளப்படக் கூடிய யதார்த்தத்திலும் பிரவேசிக்கிறது. (அய்யர்களுக்கும், பறையர்களுக்குமிடையிலான மீறப்பட்ட உறவுகள் மற்றும் ஏற்கப்பட்ட பகைகள்). கதையின் தாக்கம் வாசகனின் மூக்கைத் தாக்கக்கூடிய பிணவாடையாக இருக்கிறது. பிராமணர்களின் வீட்டில் இறந்து போகும் ஒரு பறையனைப் பற்றிய ஒரு தீர்க்கமான கதை. விவரணை முழுவதுமே நாசியின் மூலமாக சாத்தியப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த மாதிரி ஒரு கதை அனுவம் எதையுமே கோணங்கியின் சவடால் மிகுந்த புனைவுகளில் பார்க்க முடியாது. காரணம் கோணங்கி தன் கதை வறட்சியையும் அனுபவ வறட்சியையும் பிசகான விவரணை மொழியை வைத்து மூடாக்கு போட்டுக் கொள்வதுதான்.

புனைவு மொழிக்கும் யதார்த்த விவரணைக்குமிடையிலான ஊசலாட்டம் உத்தரகிரியை கதையை இறுதியில் சிதைத்து விடுகிறது. ஆறாம் நாள் கதையில் காணப்படக்கூடிய செய்நேர்த்தி இதில் குறைகிறது. இந்தக் கதையையும் சேர்த்து மரணத்தைப் பேசுபொருளாகக் கொண்ட நான்கு கதைகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. சில விவரணைகள் மிகப் பொருத்தமான கவித்துவத் தன்மைகள் கொண்டவையாக இருக்கின்றன.

''உஷ்ணக் கை மருதாணியாய் ஆழப்பதிந்து அகல மறுக்கும் கனவு'' (உத்தரகிரியை, பக்.49)

''பின் மாயா மாளவ கௌளவிலிருந்து கிளம்பும் இசைச் சாயல்களைப் போல் மணம் ''என்ஸைம்'' வாடையை அடித்தளமாகக் கொண்டு பல அதீத வாடைகளைச் சுமந்து கொண்டு விஷத்தைக் கக்கலாயிற்று'' (ஆறாம் நாள், பக். 90)

ஒப்பீட்டளவில் பார்க்கும் போது அப்பா, கனவு மற்றும் ஒரு கதை, உத்தரகிரியை கதையை விட சிறப்பாக உருவாகி இருக்கிறது. கதையம்சம் என்று பார்க்கையில் கிரிக்கெட் விளையாட்டும், சீட்டு விளையாட்டும் பல கதைகளில் திரும்பத்திரும்ப வந்தாலும் அப்பா கதையில் அது இடையூராக இல்லாமல் கதை மற்றும் விவரணையோட்டத்தில் இணைந்து விடுகிறது. சீட்டாட்டமே கூட இந்தக் கதையில் பாண்டஸ’யின் முக்கிய அம்சமாக ஆரம்பத்திலிருந்து ஆகிவிடுவதை வாசகன் கவனிக்கலாம். அப்பா கனவு மற்றும் ஒரு கதையை படிக்கும் போது ஜ“. முருகனின் சில பாண்டஸ’ கதைகள் நினைவுக்கு வருகின்றன. பாண்டஸ’யை உறுத்தல் இல்லாமல் சிறு கதைகளில் பயன்படுத்திக் கொண்டிருப்பவர் ஜ“. முருகன். (சாயுங்காலம்) ஜ“. முருகனின் ஆற்றோடு போனவன் என்ற கதையையும் தி. கண்ணனின் அப்பா கதையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

கோணங்கியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ரமேஷ் பிரேம் எழுதியதெல்லாம் மிகவும் விரும்பிப் படிக்க வேண்டியதாக ஆகிறது. (கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்) மொழி நடை அளவிலும் சரி கதை சொல்லும் முறையிலும் சரி. ரமேஷ் பிரேம் எழுத்துக்களைப் பாராட்டியே ஆக வேண்டும். அளவிடமுடியாத ஒரு பொறுமையின்மையையும் வாசிப்பின் மீதான வெறுப்பையும் நம்பிக்கையின்மையும் நமக்குள் தோற்றுவித்து விடுகிறது கோணங்கியின் எழுத்துக்கள். கோணங்கி நன்றாக எழுதிக் கொண்டிருந்தவர் தான் என்று அவருடைய ''மதினிமார்களி''ன் கதையைப் படித்தவர்கள் அறிவார்கள். போஸ்ட் மாடர்னிசக் கொழுந்து என்று அவரை கொம்பு சீவிவிட்டு இன்று வேடிக்கை பார்க்கும் அவருடைய விமர்சக நண்பர்(கள்) தான் அவருடைய இன்றைய நிலைக்குக் காரணம். போஸ்ட் மாடர்னிசம் என்றாலே இப்படித்தான் இருக்கும். சலிப்பூட்டும், அயர்ச்சியூட்டும், எரிச்சலூட்டும், பொறுமையைச் சோதிக்கும், வாசித்த திருப்தி தராது. வாசகனின் வெளி மறுக்கப்பட்டிருக்கும் என்று கோணங்கியையும் கௌதம சித்தார்த்தனையும் வைத்து முடிவெடுக்காமலிருக்க வேண்டிய அவசியம் உண்டு. உத்திகள் துரத்தித் தெரியாத, ஆற்றொழுக்கான, தெள்ளத்தெளிவான மொழிநடையுடன் சொல்லப்பட்டிருக்கிற ''பா. வெங்கடேசனின் மழையின் குரல் தனிமை'' (காலச்சுவடு), ''ஆயிரம் சாரதா'' (புது எழுத்து), ''நீல விதி'' (கையெழுத்துப்பிரதி) போன்ற குறுநாவல்களைப் படித்துப்பார்க்க வேண்டும். எம். யுவனின் 23 காதல் கதைகள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான ஒரு படைப்பு. சமீபத்தில் வந்த ரூமியின் சிறுகதைத் தொகுதியையும் இங்குக் குறிப்பிடலாம். (குட்டியாப்பா) எம்.ஜி. சுரேஷ’ன் நாவல்களைக் குறிப்பிட வேண்டும் (அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன், அலெக்சாண்டரும் ஒரு கோப்பை தேநீரும்)

இறுதியாக தமிழின் நவீன புனைகதை பற்றிய ஆர். முத்துக்குமாரின் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோளுடன் இந்தக் கட்டுரையை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறேன். (முத்துக்குமாரனின் முழுக்கட்டுரையும் அவசியம் படிக்கப்பட வேண்டியது).

கோணங்கியின், ஜெயமோகனின் மொழிநடை ஒற்றைத்தன்மை கொண்டதாகும். மிகை உணர்ச்சி--- அசட்டுணர்ச்சி-- லட்சியமார்க்கங்கள் கொண்ட மொழிநடையே இருவரதும். ஆனால் நம் கேள்வி ஏன் இந்த இலக்கிய இறந்த கால கலாச்சார இறந்த கால மையம் என்பதே.

(ஆர். முத்துக்குமார், நாவல் உரையாடல் வடிவம் - முன்வரலாறு குறித்த ஒரு வரையறை முயற்சி, நவீன விருட்சம்: இதழ் 51, ஜனவரி - மார்ச் 2001)

நன்றி: திறனாய்வு சில புதியதேடல்கள்.

2005

பின் நவீனத்துவ கவிதை - முனைவர் க. நாகநந்தினி

தமிழ்க் கவிதை மரபு மிக நீண்டது. சங்கக் காலப் பாடல்கள் அனைத்தையும் தொடங்கிச் சிற்றிலக்கியம் வரை வடிவமாற்றம் அனைத்தையும் உள்ளடக்கியது கவிதை மரபு. இம்மரபில் சொல் புதிது, சுவை புதிது, சோதி மிக்க நவகவிதை படைக்கத் துடித்த பாரதியார் தான் புதிய வசன கவிதையாய்ப் படைத்தார்.

நவகவிதை, யாப்பற்ற கவிதை, விடுபா, கட்டற்றயாப்புக் கவிதை, வசன கவிதை என்று பல்வேறு பெயர்களுடன் எழுதப்பட்ட கவிதை வடிவம் மரபான பார்வையாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ''மணிக்கொடி'', ''எழுத்து'', ''நடை'' போன்ற பத்திரிகைகள் தமிழில் கவிதை வடிவம் பெறுவதற்கான சூழலை விமர்சனங்கள் எழுந்தபோதும் உருவாக்கித்தந்தன.

வசனம் நடந்தால் உரைநடை, நடனமாடினால் கவிதை என்றும், அழகிய சொற்கள் அழகிய வரிசையில் நிற்றல் என்றும், உணர்ச்சிகளின் பிரவாகம் என்று கவிதை பல்வேறு நிலைகளில் விளக்கப்பட்டது என்றாலும் கவிதை எழுதப்பட்ட போது அதற்கான காரணம் பின்வருமாறு கூறுப்பட்டது.

''வசனமும் கவிதையும் வெவ்வேறு வகையைச் சோர்ந்தவைதான். வசனம் நமக்குச் செய்தியைத் தெரிவிக்கிறது. தம்முடைய அறிவுக்கு உணவாகப் புதிய விசயங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. எனவே தபாலைப்போல் இயங்குகிறது. கவிதை நம்முடைய அறிவுடன் தொடர்பு கொள்ள முயல்வதில்லை. நம்முடைய உணர்வுடன் உறவாட முயல்கிறது. தனக்குள் எரியும் சுடர்கொண்டு மற்றொரு மனத்தையும் சுடர் கொள்ளச் செய்கிறது. வசனம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது. கவிதை மன நெகிழ்ச்சியை, மன அசைவை அடிப்படையாகக் கொண்டது. என்ற ந. பிச்சமூர்த்தி அவர்களின் கருத்து இங்கு குறிப்பிடத்தக்கது. மனதுடன் தொடர்புடைய அகவய அனுபவமாக வெளிப்பட்ட கவிதை மரபில் ந. பிச்சமூர்த்தி, சி. மணி, எஸ். வைத்தீஸ்வரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட அவநம்பிக்கை, மனமுறிவு, வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம் புறநிகழ்வால் தன் வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்ட ஆற்றாமை, இதுவரை கட்டிக்காத்த மதிப்பீடுகளின் சரிவு, மேற்கத்திய இலக்கியம் ஏற்படுத்திய பாதிப்பு தமிழ்க்கவிஞர்களையும் எழுதத் தூண்டியது.

''வாழ்வின் வினையேதும்

அறியாத இருள் ஊடே

உலகத்தின் சாலையில்

ஊடாகும் சாலையில்

ஊடாகும் நிழல்கள்'' - ந. பிச்சமூர்த்தி

''திருமனிதா

தெருவில் சாவோலம்

மிக நெருங்கி வருகிறது.

ஓடு இருட்டுக்கு காட்டுக்கு

எங்காகிலும் ஓடு

உலகத்தைவிட்டு - எஸ். வைத்தீஸ்வரன்

பின்னாலும் போகவில்லை

முன்னாலும் போகவில்லை

நடுக்கிணற்றில் நிகழ்காலம் - ச. மணி

வாழ்க்கையின் மீது கொண்ட இத்தகைய நம்பிக்கையின்மை, எங்கிருந்து பெறப்பட்டது? என்ற கேள்வி எழுகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரெஞ்சுக் கவிஞர் வெல்லேன் கூறுகிறார்.

''நம்பிக்கை

அது

இருண்டவானத்திற்குள்

ஓடி ஒளிந்துகொண்டது''

உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட நம்பிக்கை வறட்சியே இதற்குப் பதிலாகும்.

அதன்பிறகு வானம்பாடி இயக்கம் முதல் கவிதை வெகுஜன மக்களுக்கும் புரியும் வடிவமானது. வானம்பாடி பாரதியாரை முன்னோடியாகக் கொண்டு கவிதை எழுதுவதாக அறைகூவியது.

''இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம்'' எனத் தன் சமகால விடுதலை விரும்பிகளுக்கு வருங்காலப் பொதுமை விரும்பிகளுக்கும் வெடிப்புறப் பேசியும், நயம்படச் சொல்லியும், அறைகூவல் விடுத்த தமிழ்ச்சாதியின் நிர்மாணச் சிற்பியும், ஆசியாவின் ஒப்பற்ற மனிதாபிமானிகளுள் ஒருவனும் இருபதாம் நூற்றாண்டின் உலகமாக கவிஞர்களுள் ஒருவருமான பாரதிக்கு, அவன் விட்ட பயணத்தைத் தொடர வந்த பறவைகள்'' என்று வானம்பாடிக் கவிதை இயக்கம் தொடங்கியது.

நம்

கரங்களின் உழைப்பைக்

காலம் அலட்சியப் படுத்தும் போது

நிறங்களின் சிவப்பையே

நாம்

நிச்சியக்கமுடியும்''

என்ற சிலப்புச்சிந்தனை, பொதுவுடமை கொள்கை முழக்கமாக வெளிப்பட்டது கவிதை. அதன் பிறகு படிமக் கவிதை, உருவக் கவிதை, எள்ளல் கவிதை என்று கவிஞர்களின் தனித்தன்மை வெளிப்பாடாக கவிதை உருவெடுத்தது.

எண்பதுகளில் நடுவில் கவிதை என்பது பாரதி எழுத்து ரீதியான ஒரு பொருள் என்று சொல்கிற நிலையில் புரிந்து கொள்ளப்பட்டது. இந்நிலையில் கவிஞன் என்ற மனிதன் ஆளுமை கொண்டவனாக தரிசனம் மற்றும் உள்ளொளி கொண்டவனாக சித்தரிக்கப்படவில்லை. படைப்பாளியை விட படைப்பே முக்கியத்துவம் பெற்றது. எனவே, படைப்பு மொழி பற்றிய சிந்தனையும் மாறியது. தினசரி மொழியின் பெரும்பாலான கூறுகள் பத்திரிக்கைச் செய்தி, விளம்பர மொழி, சின்னத்திரை, பெரியதிரை, நாடகம், நகைச்சுவைமொழி, வெகுஜன வார மாத இதழ்கள், பாக்கெட் நாவல்கள் என்ற பல்வேறு தளங்களில் மொழி தன் கூர்மை மழுங்கிய நிலையில், இந்த மொழி எனக்குத் தேவையில்லை என்றனர் சில படைப்பாளிகள், தன் சுயம் இழந்த மொழித்தளத்தை மீறிய மொழித்தளத்தில் கவிதை எழுத நினைத்த இவர்கள் சாதாரண வாசகரின் பங்கு பற்றி சிந்தனை மறந்துபோய் கவிதையை சிக்கலான மொழியில் எழுதினர். அமைப்பியல் ஆய்வாளர் கூறுவதன்படி கவிதைமொழி சொல்லாடல்களாக உருவாகிறது. கவிதை மொழியைப் புதைநிலையில் புரிந்துகொள்ளக்கூடிய வடிவமாக எதிர்கவிதை, காண்கவிதை தொடர்பற்ற வார்த்தை வடிவம் சொல்லாக்க கவிதை வடிவம் போன்ற மாற்றங்கள் கவிதை வடிவத்தில் ஏற்பட்டன.

இதற்கடுத்த காலகட்டத்தில்தான் பின்நவீனத்துவ மரபு எழுகின்றது.

கவிதையில் மையமிழந்த தன்மையும் (ஆசிரியன் இறந்துவிட்டான்) பல குரல்களும், வாசிப்பு அனுபவத்தை பல்வேறு அனுபவங்களுக்கு இட்டுச் செல்கின்றன. கவிதை என்பது ஒரு கட்டமைப்பு என்றே பார்க்கப்படும். ஒரே கவிதையில் ஒன்றுக்கொண்று முரணான உணர்வுகளும் தர்க்கங்களும் தூண்டப்படலாம். அவை இயைப்பிக்கப்பட வேண்டிய அவசியமிராது.

கவிதை என்பது பல்வேறு படிமங்கள் அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள அமைப்பு அவ்வளவுதான் என்று நவீன கவிதை இயல்பு குறித்த விவாதங்கள் முன் வைக்கப்பட்டன.

கவிதை வேறெதையும் குறிக்கவில்லை

தன்னையே குறித்துக்கொள்கிறது. அர்த்தம்

சொற்களால் உருவாகவில்லை. சொற்களின்

இடைவெளியில் - மௌனங்களில் தோன்றியது

என்று விளக்கம் தரப்பட்டது.

''புதைமணல் கனவை போலத் தான் துழாவுகிறது

நிஷ்சிந்தையில் மலரும் ராட்சதக் காளான்

மௌனநிறம் போல

என் மூளையின் பின்னாலே நினைவூட்டாது

ஏதுமின்றி

என் மேலதீத நானிடமே

துமில்லாமல்...'' ஞாபகச்சிற்பம்

என்ற கவிதை தொகுப்பிலுள்ள கவிதைகள் எழுதிய பிரம்மராஜன் கதைத்தளத்தை திறந்த வெளிக்கு எடுத்துச் செல்கிறார். அதாவது கவிதைகளின் அர்த்தங்கள் குறுகாமல் விரிவடைந்து இவைபேசும் பொருட்கள், நிலைகள், மௌனங்கள் ஆகியவை சிதையாமல் அமைவதற்கு இவற்றின் திறந்தவெளி அமைப்பே காரணமாகும். இப்படிப்பட்ட கவிதைகளை வாசித்துப் புரிந்து கொள்ள பிறதுறை அறிவும், பயிற்சியனுபவமும் தேவையாகவுள்ளது. இத்தகைய முயற்சிகளை புரியாத கவிதையென்று ஒதுக்க முடியாது.

நன்றி: தற்கால தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்

 

தற்காலக் கவிதைகளில் நவீனத்துவக் கூறுகள் - சு. ஜெயசீலா

ஆரம்ப கால கட்டத்தில் இலக்கியங்கள் கவிதை நடையில் தான் தோன்றின. இவ்வகைக் கவிதைகள் உவமை, உருவகம், மோனை, எதுகை, இயைபு, அணி, பாவகை போன்றவற்றைப் பெற்று வந்தன. இம்முறையிலிருந்து இன்று மாறி மரபுக் கவிதைக்குரிய எதையும் பின்பற்றாமல் தற்கால கவிதைகள் வெளிவருகின்றன. வளர்ந்து வரும் இன்றைய கவிதைகள் நவீனத்துவத்தைப் பின்பற்றி வருகின்றன. ''நவீனத்துவம் என்பது அரசியல், தத்துவம், பொருளியல், அறிவியல், கலை, இலக்கியம் எனச் சகல துறைகளையும் ஒரே சமயத்தில் பிரமிக்கத்தக்க விதத்தில் பாதித்த ஒன்று. நவீன அரசமைப்பு, சனநாயகம், தேசியஉருவாக்கம், நகரநிர்மாணம், மத்தியதரவர்க்க உருவாக்கம், நீதிவழக்குமுறை, கல்வி, மருத்துவம், குடும்ப அமைப்பு என நவீனத்துவம் பாதிக்காத துறைகளே இல்லை'' எனலாம்.

(அ. மார்க்ஸ் - உடைபடும் புனிதங்கள் - பக். 7,8)

தற்காலக் கவிதைகள் பின்வரும் நவீனத்துவக் கூறுகளைப் பெற்று வருகின்றன:-

1. கவிதை மரபைப் புறக்கணித்தல்.

2. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு.

3. வாசகனுக்கு சிந்திக்க இடம் அளித்தல்.

4. பூடகத்தன்மை.

கவிதை மரபைப் புறக்கணித்தல்:-

தற்காலக் கவிஞர்கள் தனக்கென்று விதிக்கப்பட்டிருந்த உவமை, உருவகம், அணி, பாவகை, எதுகை, மோனை இயைபு போன்ற மரபுகளை நீக்கி கவிதை இயற்றுகின்றனர். உரைநடையைச் சிதைத்துக் கவிதையாக எழுதுகின்றனர். நேரில் பேசுவது ஒரு நேர்முகத்தன்மையுடன் இருக்கிறது. இன்றைய நவீனக் கவிஞர்கள் பலரும் இம்முறையைப் பின்பற்றி எழுதுகின்றனர்.

''என் வீடு

ரொம்பச் சின்னது

யாராவது நண்பர்கள் வந்தால்

தங்க வைக்க முடியாது'' (விக்ரமாதித்தன் - உள் வாங்கும் உலகம்)

இக்கவிதை வரிகள் ஆசிரியர், வாசகர்களிடம் நேரிலே பேசுவது போன்று உள்ளன. இதில் கவிஞருக்குரிய மரபு இலக்கணங்கள் எதுவுமில்லை. வீடு மிகச் சிறியது. யாரு வந்தாலும் தங்குவதற்கு முடியாது என்பதை அப்படியே உரைநடையைப் பிரித்துக் கவிதையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு:-

படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் மரபுக் கவிதைகளில் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். நவீனக்கவிதைகளில் இடைவெளிக் குறைகிறது. கவிஞன் தன் குடும்ப நிலையையும், தன்னையும், குடும்பத்திலுள்ளவர்களையும் கூறுவதன் மூலம் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இடைவெளி மிகவும் குறைந்து விடுகின்றது.

''அம்மா சொன்னாள்

ஐம்பது ரூபாய் ரேஷனுக்குப் புரட்ட முடியாத

நீயென்ன பிள்ளை?

வீட்டுக்காரி கேட்டாள்

எப்படி வாழப்போகிறீர்கள் (விக்கிரமாதித்தன் - உள் வாங்கும் உலகம்)

என்ற இக்கவிதை வரிகளில் கவிஞரின் வறுமை பற்றியும், வீட்டிலுள்ளோர் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு கவிஞன் தன் நண்பருடைய வீட்டினைப் பற்றி இவ்வாறு கூறினார்.

''கறுப்பேறிப் போன

உத்திரம்

வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு

கையெட்டும்

உயரத்தில்'' (கலாப்ரியா - உலகெங்கும் சூரியன்)

பொதுவான பிரச்சனையை விடத் தனிமனிதனது நிலையினைக் கூறுவதால் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமாகிறது.

வாசகனுக்குச் சிந்திக்க இடமளித்தல்:-

படைப்பாளன் ஒரு மையத்தினை வைத்துக் கூறி வாசகன் அதை அப்படியே அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைமாறி படைப்பிலிருந்து எந்தவொரு கருத்தினைக் கொண்டும் வாசகன் மையத்தைச் சிந்திக்க முடியும். என்பதன் மூலம் வாசகனுக்கும் படைப்பில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

''வாடாமல்லிப்பூ மாலைக்கு

வசீகரமில்லை

தனிப் பூவுக்கோ

தாங்க முடியாத அழகு

மண் புழுக்களை நேசிக்கிற

மனம்

இன்றும் இருக்கிறது'' (கல்யாண்ஜி - முன் பின்னில்)

இவைகளிலிருந்து வாசகன் நேரடியான மையத்தினைப் பெற முடியும். அல்லது வாசகனின் மனநிலைக்கு ஏற்ப வேறொரு மையத்தைப் பெற இடமளிக்கிறது.

''அந்தி (போன்ற) நேரங்களில்

மிகச் சுறுக்காகவும்

கறுக்காகவும்

அடிக்கடி திருப்பிக் கொண்டும்

தினந்தோறும் - அது

பறக்கக் காண்கிறேன்'' (கலாப்ரியா - உலகமெலாம் சூரியன்)

இக்கவிதையில் படைப்பாளன் குருவியைப் பற்றிக் கூறினாலும் வாசகன் வேறு பலவற்றைச் சிந்திக்க முடியும்.

பூடகத் தன்மை:-

நேரடியாக மையத்தினைப் பெற முடியாமல் மறைமுகமாகப் பெறுவது, ஏதாவதொரு குறியீட்டின் மூலமாக உணர்த்துவது பூடகத்தன்மை எனலாம்.

''ரத்தம் சுண்டிய

கரப்பான்களும்

ஒட்டுப்பூச்சிகளும்

ஏலக்காய்ச் செடிகளைக்

கெட்டியாய்ப் பற்றிக் கொண்ட

வெளிரிப் போன பல்லிகளும்

இன்னும் சில

ஜ“வராசிகளும்

கூட்டணிகள் அமைத்துப்

போராடத் தயாராயின

ஓட்டுச் சீட்டைக்

கையில்

தயாராய் வைத்துக் கொண்டன'' (ஆத்மநாம் - ஆத்மநாம் கவிதைகள்)

''வகுப்புக்கு வரும் எறும்புக் கூடு'' என்னும் கவிதையில் வரும் மேல்கண்ட வரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் இதன் மையத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உற்று நோக்கிப் பார்த்தால்தான் இதன் கருவைப் புரிந்து கொள்ள முடியும். இன்றைய சமூகத்திற்குச் சட்டத்தை மதித்து நடக்கும் மக்கள் தான் தேவை. அநியாயத்தை எதிர்த்துக் கேட்கும் எளியவர்கள் நசுக்கப்படுகின்றனர். எனும் கருத்தை மையமாகக் கொண்டு இக்கவிதை உள்ளது.

இவ்வாறு நவீனத்துவக் கவிதைகள் மரபுக்கவிதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. எந்தவொரு சிறு விசயத்தைப் பற்றி கூறுவதற்கும் இடமளிக்கின்றது. வாசகனும் ஒரு படைப்பாளன் நிலைக்குச் சிந்திக்க இடமளிப்பதால் தற்கால கவிதைகள் வரவேற்பைப் பெறுகின்றன.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்

 

புதினம் - பெ. தேவி

புதினம் இலக்கிய வகை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் தோன்றியது. வசன காவியம் என்ற சொற்றொடர் ''Prose Epic'' என்னும் தொடர் மொழியின் தமிழாக்கமாகும். புதினத்தின் கருத்து வடிவம் ஆங்கிலத்தில் இருந்து பெறப்பட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கில நாவலுலகில் சிறந்து விளங்கியவருள் ஒருவரான ஹென்றிபீல்டிங் என்பாரை ஆங்கில வசன காவியத்தின் தந்தை என்றழைப்பர் இவர் தனது படைப்புக்களான ''A Comic Epic Poem in Prose'' என்றே எழுதுவார் வசனத்தில் எழுதப்படும் வேடிக்கையான காவியம் என்று பொருள் மீதுயர் கருத்தும் விழுமிய நடையுங் கொண்ட பழைய காவியங்களின் வேறுபட்ட தன்மையை புதினம் பெற்றிருக்கும் உண்மையைக் குறிப்பிடவே ''வேடிக்கையான காவியம்'' என்றார். மேலை நாட்டார் புதினத்தை பண்பு விளக்கப் புதினம், நிகழ்ச்சிப் புதினம் என இரண்டாகப்பகுப்பார்.

தமிழில் புதினத்தின் தோற்றம்:-

புதினம் என்னும் இவ்வுரைநடை இலக்கியத்தைப் பற்றி தொல்காப்பியர் குறிப்பிடுகையில்,

''பாட்டிடைவைத்த குறிப்பினாலும்

பாவின்றி எழுந்த கிளவியானும்

பொருளோடு புணர்ந்த நகைமொழி யானும்

பொருளோடு புணர்ந்த பொய்ம்மொழியானும்

உரைவகை நடையே நான்கென மொழிப (தொல் - செய் - 171)

பாவின்றி எழுந்த கிளவி என்று ஆசிரியர் குறிப்பது உரைநடைநூல். பொருளோடு புணராப் பொய்ம்மொழி பொய்ப்புதினம் எனவும், பொருளோடு புணர்ந்த நகை மொழி புதினம் என்றும் வழங்கப்பெறுகின்றன.

தமிழில் தனிச் செய்யுட்கள் தொடர்நிலை செய்யுட்களும் கதை பொதிந்தனவாயிருந்தன. இப்படிமுறை வளர்ச்சி சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம் தோன்றிய கால கட்டத்தில் உச்ச நிலை அடைந்தது. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் காவியம் கதை சொல்லும் சிறப்பியல்லை இழக்கத் தொடங்கியது என்று எஸ். வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுவார்.

காவிய நெறியின் வீழ்ச்சியானது பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் வீழ்ச்சியடைகிறது. இங்கிலாந்தில் கதைப்பாடல்கள் உள்ளூரக் குன்றியமையால் நாவலிலக்கியம் தோன்றுவதற்கு ஏதுவாக அமைந்தது என்று, டாக்டர் டில்யார்ட் படிப்போரைப் பிணைக்கவல்ல நெடுங்கதைகள் செய்யுளில் அமையும் நிலை காணப்படவில்லை. அக்காலத்தில் சிறப்புற்று விளங்கிய டிரைடன் என்பார் எழுதிய ''Fables'' என்ற கதைப்பாடற் தொகுதியும் போப் என்பவர் (1688 - 1744) யாத்த இலியாது காவியமும் மொழிப்பெயர்ப்புகள் ஆகும்.

தெய்வங்கள், அரசர்கள், உயர்குடித்தலைவர்கள் ஆகியோரை மையமாகக் கொண்டு காவியங்கள் படைக்கப்பட்டன. ஐரோப்பாவில் ஏற்பட்ட பல்வகைச் சமூக மாற்றங்களில், நிலமானியச் சமூகம் சிதைந்து முதலாளியச் சமூகம் ஏற்பட்டது. அந்நிய இயந்திரங்களின் வருகையால் கல்வி பரவலாயிற்று. கலை இலக்கியங்கள் அனைவரையும் உட்கொண்டு படைக்கப்படும் சூழல் தோன்றியது. காப்பியக் கதை சொல்லும் மரபு சிதைந்து புதினம் தோன்றியது.

ஆங்கிலத்தில் நாவல் என்பதை ''Fiction'' என்ற பொதுப்பிரிவிற்குள் கற்பனைக் கதைகள் என்று வழங்குகின்றனர். புதினம் மனிதனை மனிதனாக பிரதிபலிக்கச் செய்கிறது. உலக வாழ்வோடு ஒட்டி அமையும் பண்பையும், அடித்தள மக்களின் வாழ்வியல் சூழலை பிரதிபலிக்கும் பிம்பமாகவும், சூழ்ச்சி (அ) சதி பாத்திரங்கள், உரையாடல், காலம், இடம், நடை வெளிப்படையாகவோ, குறிப்பாகவோ காட்டப்பட்டுள்ள வாழ்க்கை தத்துவத்தை மையமாக வைத்து எழுதப்படும் இவற்றை நெடுங்கதை என்றும் குறிப்பிடுவர்.

தமிழில் முதல் மூன்று புதினம்:-

மயிலாடுதுறை வேதநாயகம் 1876 இல் பிரதாப முதலியார் சரித்திரத்தில் பெண்மானம், பெண்கல்வி, பெண் தலைமையும் பல கிளைக்கதைகளையும் பழமொழிகளையும் காணமுடிகிறது. இரண்டாவது புதினம் பி.ஆர். ராஜம் ஐயர் எழுதிய கமலாம்பாள் சரித்திரத்தில் குடும்ப வாழ்க்கையில் உருவாகும் உறவுச் சிக்கலை இயல்பாக குறிப்பிடப்படுகிறது. மூன்றாவது புதினம் மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரத்தில் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் சடங்கினால் பிணைக்கப்பட்டுள்ளதை சாடுகிறார்.

துப்பறியும் புதினம்:-

இருபதாம் நூற்றாண்டின் முதல் முப்பதாண்டுக் காலம் துப்பறியும் படைப்புகள் பெருகின 1902 இல் ச.ம. நடேச சாஸ்திரியின் தீனதயாளுவும் பவானந்தரின் ஆபூர்வ சாமர்த்தியங்கள் 1909 இல் வெளியிடப்பட்டது. கொலை எப்படி நடந்தது என்பதை மையமாக வைத்து எழுதப்பட்டதாகும். பிரணதார்த்தி ஹெரிசிவா எழுதிய அனுமான்சிங் அல்லது கொலைகளவுத் திறவுகோல், ங.ந. கிருஷ்ணசாமி அய்யர் எழுதிய வேலியின்கூலி அல்லது கள்வர் கவர்ந்த கல்யாணப் பெண் (1912) இல் எழுதப்பட்டது. துப்பறியும் நிபுணரான சுந்தரமய்யரின் அன்பின் வலிமை காணமற்போன மரண சாசனம் என்ற புதினம், வடுவூர் துரைசாமி ஐயங்கார் சமயச்சஞ்சீவியும் பெண் நாவலாசிரியரில் வை.மு. கோதைநாயகி அம்மாள் தான் எழுதிய ராஜமோகன், கடமையின் எல்லை என துப்பறியும் நாவலை எழுதினார்.

சுப்பிரமணியத்தின் அறுவடை, சட்டிசுட்டது, பொய்த்தேர்வு போன்ற நாவல்களில் பணம், பதவி, புகழ், இன்பம் இவற்றில் குறிக்கோளாக உடையவர்களின் வாழ்க்கை பொருளற்று போய்விடும் என்றும், ஆர். சண்முகசுந்தரத்தின் நாகம்மாள் என்னும் நாவல் கள்ளம் கபடுமில்லாத பெண்ணின் வாழ்வில் குடும்ப உறவுச் சிக்கலை மையமாக வைத்து எழுதியுள்ளார். மனிதர் மண், பொன், பெண்மீது அளவுக்கு அதிகமாக ஆசை வைக்கும் போது எவ்வளவு அலைக்கழிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதை நடேசன் என்னும் சங்கரராமின் மண்ணாசை நாவலில் காணமுடிகிறது. சுதந்திரத்தின் பயன் எளியவர் வாழ்விலும் மாற்றத்தை தரவேண்டும் என்று முருகன் ஓர் உழவன் என்ற நாவலும் தேசபக்தன், கந்தன், விடுதலை போராட்ட நாவலாகவும் கே.எஸ் வேங்கடரமணி எழுதியுள்ளார்.

பெண்ணிய புதினம்:-

பெண் உரிமையும், பொதுவுடமை சிந்தனைகளையும் குடும்பசிக்கலை மையமாக வைத்தும், ராஜம் கிருஷ்ணனின் ''வேருக்கு நீர்'', ''குறிஞ்சித்தேன்'', ''அலைவாய்க் கரையில்'', ''சேற்றில் மனிதர்கள்'' போன்ற நாவலின் வழி அறிய முடிகிறது. பெண்ணுக்கு உரிமைக்குரல் கொடுத்த புரட்சிநாவலாக விந்தனின் பாலும் பாவையும் ஆண் பெண் இருவருக்கும் கற்புக்கோட்பாட்டை வலியுறுத்தப்பட்டுள்ளது. திரிபுர சுந்தரி என்கிற லட்சுமி எழுதிய பெண் என்னும் நாவலில் இன்றைய பெண்கள் கல்வி கற்று வீட்டிலும், வெளியிலும் அடிமை மனோபாவத்துடன் வாழ்வதையும், சந்திரா என்னும் பெண் புதுமைப் பெண்ணாக வாழ முயலும் போது எதிர் கொள்ளும் போராட்டங்களையும், வைரமூக்குத்தியில் ஆணாதிக்கத்தை கொண்டவன் கணவன், அவனது குடும்பத்து உறுப்பினர்களால் துன்பம் அடைவதைச் சாடுகிறார்.

சமூக சிக்கலை மையமாக கொண்ட புதினம்:-

பொருந்தாத திருமணத்தால் தோல்வியும், துயரமும் ஏற்படும் என்பதை மு. வரதராசனார் 1950 - இல் தாம் எழுதிய அல்லி, பாவை, கரித்துண்டு, வாடாமலர், கள்ளோகாவியமோ, பெற்றமனம், மண்குடிசை, செந்தாமரை, ஆகிய புதினங்களில் விளக்கியுள்ளார். நெஞ்சில் ஒரு முள், கயமை, மண்குடிசை, அகல்விளக்கு ஆகியன பரிசு பெற்ற நாவல்களாகும்.

வரலாற்றுப் புதினம்

தில்லி, ஆக்ரா, பஞ்சாப் முதலிய இடங்களில் விடுதலைப் பெற்ற காலகட்டத்தில் நிகழ்வுகளை குறிப்பெடுத்து அலையோசையை வரலாற்று புதினமாக எழுதியுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், ஆகிய வரலாறு தழுவிய புதினங்களை கல்கி எழுதியுள்ளார். கலைஞர் மு. கருணாநிதியின் உரோமபுரி பாண்டியன், தென்பாண்டிசிங்கம் குறிப்பிடத்தக்க வரலாற்று புதினமாகும்.

பட்டாளி மக்களின் அவல நிலையும், போராட்டமும்:-

நெசவாளர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டு, அந்நிய நாட்டு மூலதனத்தாலும், உள்நாட்டுத் துணி உற்பத்திக் கொள்கையாலும், நசிந்துபோன கைத்தொழிலாலும், பட்டாளி மக்களின் அவல வாழ்க்கை சிதம்பர ரகுநாதனின் பஞ்சும் பசியும், நாவலின் வழி அறிய முடிகிறது.

அகிலனின் கயல்விழி, பெண், சிநேகிதி, நெஞ்சின் அலைகள், வேங்கையின் மைந்தன், பாவை விளக்கு போன்ற நாவல்களை எழுதியுள்ள இவர் ஞானபீட பரிசும் பெற்றுள்ளார். இவரது படைப்புகள் சமுதாயச் சிக்கல்களை எதிர்கொள்வதும் உளவியல், சமூகவியல், நோக்கில் படைக்கப்பட்டுள்ளது. கலைஞனது வாழ்க்கை சமுதாய மேம்பாட்டுக்கு பயன்படவேண்டும் என்று உணர்த்துமாறு ஐம்பதுகளின் இறுதியில் எழுதப்பட்டன.

1970 களில் தி. ஜானகிராமனின் மோகமுள், உயிர்த்தேன், செம்பருத்தி, அமிர்தம், அம்மா வந்தாள், அன்பே ஆரமுதே, மரப்பசு, நளபாகம் போன்ற நாவல்களில் அடிமனத்து ஆழங்களையும், சமூக உறவுச் சிக்கல்களையும் கண்டறிந்து எழுதப்பட்டுள்ளது. தலைமுறை இடைவெளிகளால் முரண்பாடுகள் ஏற்படுவதை ஹப்சியா ஏசுதாசனின் புத்தம் புது வீடு, ஆனாதை, ஆர். சண்முக சுந்தரத்தின் சட்டி சுட்டது, நாகம்மா, நாஞ்சில் நாடனின் அன்பிலாதனை, ஆ. மாதவனின் மாமிசப்படைப்பு போன்றவற்றை எம்.வீ. வெங்கட்ராமனின் அரும்பு என்ற புதினத்தில் மனிதன் எண்ணங்களால் ஆக்கப்பட்டவன் என்பதையும், நித்திய கன்னி, கேள்வித்தீ ஒரு பெண் போராடுகின்றாள், இருளும் ஒளியும் போன்றவை இவரது படைப்புக்களாகும்.

ல.ச இராமாமிர்தம் எழுதிய பத்ரா, அபிதாவும் தத்துவ நோக்குடன் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க புதினமாகும். நீலபத்மநாபனின் தலைமுறைகள், பள்ளி கொண்டபுரம், மின் உலகம், தேரோடும் வீதி, முதலான புதினங்கள் நனவோடைக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவையாகும். டி. செல்வராஜ் எழுதிய மலரும் சருகும் வர்க்கப்பார்வை அணுகுமுறையையும், இந்திரா பார்த்தசாரதியின் தந்திரபூமி, மாயமான் வேட்டை, தீவுகள், வெந்து தணிந்தகாடுகள் மற்றும் தந்திரபூமியின் முதலாளித்துவ ஆளுமையையும், ச. கந்தசாமியின் சாயாவனம் என்ற நாவலில் எளிய மனிதர்களது மரபுசார்ந்த மதிப்பீடுகளையும், போராட்டங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலித்திய புதினம்:-

பொன்னீலனின் கரிசல் முதலாளித்துக் கொடுமைகளையும் ஒருங்கிணைந்த போராட்டங்களையும் அறிய முடிகிறது. ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்க்கரையில் மீனவத் தொழிலாளர்களது உரிமைப் போராட்டத்தை மையமாகவும், சேற்றில் மனிதர்கள் என்ற புதினம் அடித்தள கூலி விவசாய மக்களைப் பற்றியும் தொழிலாளரது வாழ்வின் துன்பதை ''கரிப்புமணிகள்'' புதினத்தின் வழி அறியலாம்.

ஜ“. நாகராசன் எழுதிய நாளை மற்றொருநாளே பிறரின் பலவீனத்தைப் பயன்படுத்தி பிழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்ற மனிதனின் கதையாகும். பூமணியின் பிறகு, வெக்கை புதினங்கள் செருப்பு தைக்கும் தொழிலாளியின் வாழ்க்கை மையமாக வைத்து எழுதப்பட்டவையாகும். சிவகாமியின் பழையன கழிதலும், ஆனந்தாயி, பாமாவின் கருக்கு, சங்கதி ஆகிய நடப்பில் வாழ்வியல் உண்மைகளை சித்தரிக்கும் புதினங்கள். இமயம் எழுதிய கோவேறு கழுதைகள், ஆறுமுகம், ஆதிக்க சாதியின் கொடுமையினையும் விபச்சாரத்தில் ஈடுபடும் தாயை நேரில் பார்த்த மகனின் மனநிலை, தாயின் மனநிலையையும் சித்திரிக்கும் புதினமாக அமைகிறது.

நகர வாழ்வியல் சூழலை வாழ்க்கைப் போராட்டங்களை ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள். சில நேரங்களில் சில மனிதர்கள், சுந்தரகாண்டம் முதலியன சமூக உளவியல் கண்ணோட்டத்தில் படைக்கப்பட்ட புதினமாகும். சு. சமுத்திரத்தின் வேரில் பழுத்த பலா கட்டிடத் தொழிலாளரின் வாழ்வையும், முட்டம் இந்து முஸ்லீம் மதக்கலவரத்தைக் கதைக் கருவாக கொண்டும், பாலைப்புறா எயிட்ஸ் நோயாளியின் வாழ்வியல் நிலையைப் பதிவு செய்தும் வெளிவந்துள்ளன.

தொகுப்புரை:-

நிகழ்காலச் சூழ்நிலை புதின எழுத்தாளர்களின் படைப்புகள் ஆரவாரம் மிக்க நகரச் சூழ்நிலைகளைப் பின்புலனாகக் கொண்டும், சமுதாயக் கொடுமைகளை சாடியும், தனிமனித உணர்வுகளை முன்னிறுத்தியும், சீர்திருத்த வாதங்களை அறிவுறுத்தியும் எழுதப்பட்டுள்ளன.

அவ்எழுத்தாளர்கள் டேவிட், சிந்தையா, வண்ணநிலவன், திலகவதி, பொன்னீலன், முகமதுமீரான், பிரபஞ்சன், ஜெயமோகன், அழகிய பெரியவன், பூமணி, பாமா, சிவகாமி, கோணங்கி, தமிழவன் ஆகியோர் வேதநாயகம் பிள்ளையில் தொடங்கி இன்று வரை காலத்தால் அழியாத சிறந்த தமிழ்ப் புதினங்களை தமிழ் இலக்கிய உலகிற்கு கொணர்ந்துள்ளனர்.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்

 

ஹைக்கூ கவிதைகளில் சமுதாயம் - த. ராஜ்குமார்

உலகில் நாம் காணுகின்ற காட்சிகளைக் கவிஞனின் கவிதை உள்ளமானது புதிய கோணங்களில், புதிய முறைகளில் காண்கிறது. அத்தகைய வேறுபட்ட பார்வையினால் தான் கவிஞனின் உள்ளத்தில் கவிதை வெளிப்படுகின்றது. அந்த அனுபவத்தினைப் பகிர்ந்து கொள்ள அந்த அனுபவத்திற்கு உருவங்கொடுப்பதே கவிதையாகின்றது. தமிழில் இன்று மிகுதியாகப் பேசப்படும் புதுக்கவிதை வடிவம் ஹைக்கூ எனலாம்.

ஹைக்கூ:-

ஹைக்கூ என்பது ஜப்பானியக் கவிதை வகையினுள் ஒன்றாகும். ஹைக்கூ என்பதை ஐக்கூ என்று தமிழில் மாற்றி அதற்குச் ''சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்'' என்ற பொருளைத் தருகிறார் கவிஞர் அமுதபாரதி. மேலும் ஐக்கூ என்பதற்கு ஐ-கடுகு, கூ-பூமி, ஐ+கூ=ஐக்கூ என்று விளக்கம் தருகிறார். அதாவது கடுகளவுள்ள பாடல் நிலமளவுள்ள பொருளைத் தருகிறது என்பதால் ஐக்கூ எனலாம் என்னும் இவரது கருத்து பொருத்தமுடையதே. அவ்வகையில் சமுதாய நிகழ்வுகள் ஹைக்கூ கவிதைகளில் வெளிப்படும் பாங்கினைக் காண்போம்.

வரதட்சனை:-

பெண்ணுக்கு, பெற்றோர் கொடுக்கும் பொருட்களை இன்று கட்டாயமாகக் கேட்டுப் பெறுகின்ற நிலை வந்துள்ளது. அது மட்டுமல்லாது மாப்பிள்ளையின் படிப்பு, வேலை, சொத்து போன்றவற்றிற்கு ஏற்றவாறு விலைபேசும் நிலை வருந்தத்தக்கதாகும்.

''அம்மி மிதித்தவளை / திரும்பி மிதித்தார்கள்

கிரைண்டர் வராததால்'' (ந.முத்து, எடை குறைவாய்)

''துளித்துளியாய்ச் சேமிப்பு / சேர்ந்தது பெருந்தொகை

சீச்சீ.... வரதட்சணைக் கொள்கை'' (அமுதபாரதி, ஐக்கூ அந்தாதி)

மேற்கண்ட கவிதை வரிகள் வரதட்சணைக் கொடுமையைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. இதனால் பல பெண்களின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாவதை இன்றும் காணமுடிகிறது.

விதவை நிலை:-

சமுதாயத்தில் இன்றளவும் விதவைப் பெண்கள் ஒதுக்கி வைக்கப்படுகின்ற நிலையைக் காணமுடிகின்றது. அவர்களை வேதனைப்படுத்தி வேடிக்கை பார்க்கின்ற கூட்டம் இன்னும் இருந்து கொண்டுதான் உள்ளது.

''பூக்களால் / அலங்கரிக்கப்பட்டது

விதவையின் பிணம்'' (ந. முத்து எடை குறைவாய்)

வாழ்கின்ற காலத்தில் அவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் வாட்டி வதைக்கும் சமூகம், இறந்த பின்பு செய்கின்ற இத்தகைய செயல்களால் எவ்விதப் பயனும் இல்லை என்பதை அறியமுடிகின்றது.

உறவுநிலை:-

இன்றைய நாகரிக உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து சீரழிந்து வருகின்றன. ஒரு காலத்தில் தகவல் தொடர்பு சாதனங்களால் மிகுந்த பயன் இருந்து வந்தது. ஆனால் இன்று அவை மனிதர்களின் பண்புகளைப் பாழடையச் செய்து வருகின்றன.

''டிவி பார்க்கும் நேரம் / விருந்தினர் வருகை விசாரிக்க

வராமலா போகும் விளம்பரம்'' / (ந. முத்து, எடை குறைவாய்)

விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் விருந்தோம்பலில் சிறந்தவர்கள் என்ற சிறப்பு சீரழிந்து வருகின்ற நிலையைச் சுட்டுகின்றது. அன்டை அயலாருடன் நல்லதொரு உறவு வைத்து இன்ப துன்பங்களில் கலந்து கொள்ளும் பொழுது உறவுகள் மேம்படும். அதை விடுத்து அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களை எண்ணி மகிழ்வது சிறப்பன்று.

''இரட்டிப்பு மகிழ்ச்சி / இப்படியே இருக்கட்டும்

பக்கத்து வீட்டுக்காரன் துக்கம்''/ (சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சம் சென்ரியு)

மேற்கண்ட வரிகளின் மூலம் மக்களின் மனநிலை மாறுபட்டு வருகின்றதையும் உறவுகள் சிதையும் நிலையும் அறியமுடிகின்றது.

கல்வி நிலை:-

சந்தையில் தரம் பிரித்து விற்கும் பொருட்களைப் போன்று இன்றைய கல்வி மாறிவிட்டது. மேற்படிப்புக்களைப் படிக்க பணம் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. இன்று தரமான கல்வி என்ற பெயரில் பிஞ்சுகளின் நெஞ்சைப் பதம் பார்த்து, வருமானத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கும் கல்வி முறையைச் சாடும் விதமாக

''புல்லாங் குழலுக்குள்/

புழுதிக் காற்றுநர்சரி பாடம்'' (ந.முத்து, எடை குறைவாய்)

''அறிவின் துளிர் / சுமக்க முடியவில்லை

புத்தகச் சுமை'' / (சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் சென்ரியு)

''வலிக்கிறது நெஞ்சம் / எத்தனை புத்தகங்கள்

சுமக்கும் குழந்தை முதுகு'' (அமுத பாரதி, ஐக்கூ அந்தாதி)

மேற்கண்ட கவிதை வரிகள் குழந்தைகளின் நிலையைக் கூறுவதோடு, இன்றைய கல்வி முறையையும் சாடுவதாக அமைந்துள்ளது.

அரசியல்:-

அன்றைய ஆட்சி முறைகள் மக்களை நல்வழிப்படுத்தி நல்வாழ்வு வாழ வழி செய்தது. ஆனால் இன்றோ அது தலை கீழாகி விட்டது. கட்சி என்ற பெயரில் மக்களுக்குள் சாதிப்பிரிவினைகளை ஏற்படுத்தி சமுதாயமும் அரசியலும் சாக்கடையாக மாறியுள்ளன.

''சன்னலைத் திறந்தேன் / செய்தித்தாள்

சட்டசபை அசிங்கம்'' / (அமுத பாரதி, ஐக்கூ அந்தாதி)

மக்களின் குறைகளைப் போக்க நல்ல திட்டங்களை நிறைவேற்றி நாட்டு வளத்தைப் பெருக்க வேண்டிய அரசியல் வாதிகள் தங்களின் போட்டி பொறாமைகளை சட்டசபையில் அரங்கேற்றி வருவது பற்றி இக்கவிதை குறிப்பிடுகின்றது.

''புதுக் கட்சி தொடக்கம் / ஜாக்கிரதை

கோவணம்'' (ந.முத்து, எடைகுறைவாய்)

கட்சித் தலைவர்கள் தங்களின் ஆக்கப்பூர்வச் செயல்களால் மக்களின் தேவையை நிறைவேற்றி அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டுமே தவிர கட்சி, சேவை என்ற பெயரில் அவர்களை வேதனைக்குள்ளாக்குவது சுட்டப்படுகின்றது.

ஊழல்:-

நியாய விலைக் கடை என்ற பெயரில் மக்களின் நலனைச் சுரண்டிக் கொண்டிருக்கும் சிலரைப் பற்றிக் கீழ்க்காணும் கவிதை குறிப்பிடுகின்றது.

''ரேசன் கடைக்காரருக்கு / குழந்தை பிறந்தது / எடை குறைவாய்'' (ந. முத்து, எடை குறைவாய்)

விலைவாசி:-

நாள்தோறும் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறதே தவிர குறைந்த பாடில்லை. இன்றைய நடைமுறை எதார்த்தத்தை கீழ்க்காணும் கவிதை மிகவும் கடுமையாக வெளிப்படுத்தப்படுகின்றது.

''விலை வாசி குறைந்து விட்டதாம்/சிரித்தது/மலவாய்'' (ந.முத்து, எடை குறைவாய்)

அறிவியல்:-

அறிவியல் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே உள்ளது. புதிய புதிய கண்டுபிடிப்புகள் புதுமையான ஆய்வுகள் என்று அறிவியல் உலகம் விரிந்து கொண்டே செல்கின்றது. ஆனால் இவையெல்லாம் ஆக்கப்பூர்வமாக இல்லாமல் அழிவைத் தருகின்றன என்பது வேதனைக்குரியது.

''ஜெட்டுக்குள் பறந்தான் / சுட்டு சுட்டு வீழ்த்தினான்

சீச்சீ ..... அமைதிக்காம்'' (அமுதபாரதி, ஐக்கூ அந்தாதி)

அமைதிக்கான முயற்சி என்று மனிதர்களை கொன்று குவிப்பதால் என்ன பயன். எனவே அறிவியல் வளர்ச்சி ஒரு பக்கம் ஆக்கத்தை ஏற்படுத்தினாலும் மறுபக்கம் அழிவைத் தேடிக் கொடுக்கிறது எனலாம்.

சுற்றுச்சூழல்:-

உலகம் முழுவதும் இன்றைய மிக முக்கியத் தேவையாக இருப்பது சுற்றுச் சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சீர்கேட்டினால் ஏற்படும் விளைவுகளை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். இருந்த போதிலும் எதிர்கால வாழ்வை எண்ணிப் பார்க்காமல் செயல்படுவது அழிவிற்கான பாதையை அமைப்பது போல் ஆகின்றது.

''அலறியது காற்று / ஒளிய இடமில்லை

வாகனப்புகை'' (சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் சென்ரியு)

வாகனங்களின் பெருக்கத்தாலும், எரிபொருட்களின் கலப்படத்தாலும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை காற்றை மாசுபடுத்துகிறது. இதனால் சுகாதாரக் கேடு உண்டாகிறது. மேற்கண்ட கவிதை வரிகள் இனி தூய்மையான காற்றை விலை கொடுத்தும் வாங்க முடியாது என்பது போன்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.

சோளக் கொல்லை பொம்மை / காணக்கிடைக்கவில்லை

கான்கிரீட் கட்டிடங்கள்'' (சென்னிமலை தண்டபாணி, கொஞ்சம் ஹைக்கூ கொஞ்சம் சென்ரியு)

இயற்கையின் மாறுபாட்டால் விவசாயம் தோற்றுப் போனதால் விளை நிலங்களெல்லாம் வீட்டு மனைகளாக மாறி நிற்கின்றன. அடுக்கு மாடிக் கட்டிடங்களைக் கட்டி நிலத்தைப் பாதிப்புக்குள்ளாக்குகின்றனர். மழையின் பாற்றாக்குறை, வறட்சி, நீர் நிலத்தில் புகமுடியாத படி கட்டிடங்கள் ஆகியவற்றால் அழிவுகள் ஏற்படலாம். இதனைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளாவிடில் சுற்றுச்சூழல் முற்றிலும் பாதிப்படையும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறாக நீண்ட நெடிய கவிதை வரிகள் விளக்க வேண்டிய கருத்துக்களை சில வரிகளில் விளங்க வைக்கும் தன்மை கொண்ட ஹைக்கூ கவிதைகளின் மூலம் சமுதாய நிகழ்வுகள் சுட்டிக் காட்டப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்

 

சிறுகதைகளில் மனித நேயம் - ப. தமிழரசி எம்.ஏ., எம்ஃபில்

அளவில் சிறியதாக இருப்பது சிறுகதை. சிறுகதை என்பது வாழ்க்கையில் நிகழும் ஓர் கற்பனையின் அடிப்படை உணர்ச்சியைக் கருவாகக் கொண்டு பின்னப்படுவதாகும். ஒரு கதையைப் படித்து முடிக்கும்போது அதில் ஒரு முழுமையும், நிறைவும் இருத்தல் வேண்டும். ஏர்வாடி இராதாகிருஷ்ணன், சுஜாதா ஆகியோரின் சிறுகதைகளில் காணப்படும் மனித நேயம் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வறுமையின் சூழலில் அன்பு:-

சாவித்திரியின் குடும்பம் வறுமையில் வாடினாலும் குழந்தைச் செல்வத்திற்குப் பஞ்சமில்லை. அவர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கே சிரமப்படும் வேளையில் அவளது ஒன்றுவிட்ட அக்கா ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளக் கேட்கிறாள். பணம் தருவதாகவும் கூறுகிறாள். அவளும் தன் கணவனிடம் கேட்டுவிட்டுச் சொல்கிறேன் என்கிறாள். இரவு வீடு திரும்பும் கணவனிடம் சொல்ல நினைக்கிறாள். ஆனால் குழந்தைகள் தூக்கத்தில் சிணுங்குவதைக் கவனிக்காமல் அவர் மாறி, மாறி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்த கணவனைப் பார்த்ததும் எதுவுமே சொல்ல முடியவில்லை. வறுமை நிலையிலும் குழந்தைகள் மீது பாசம் வைத்திருக்கும் தந்தையின் மன உணர்வை சுஜாதாவின் இக்கதை உணர்த்துகிறது.

குடும்ப வறுமை காரணமாக அபூர்வமான ஆர்.எச். நெகடிவ் வகை இரத்தத்தை பணக்காரர் ஒருவரின் ஆபரேசனுக்காக தானம் செய்கிறாள். கோமதி, அவளே அடிபட்டு இரத்தம் இழந்து உயிருக்குப் போராடும் நிலையில் அவளுக்கு இரத்தம் தர யாரும் முன்வரவில்லை. இதனால் இறக்கிறாள். ஏனென்றால் அவள் ஏழை பணத்துக்காக மனிதனின் நேயம் விலை பேசப்படுவதை ஏர்வாடி அவர்களின் ''ரத்த தானம்'' கதை உணர்த்துகிறது.

இல்வாழ்க்கையின் இடர்பாடுகள்:-

கோவிலுக்குச் சென்ற இடத்தில் சோமசுந்தரம் - ஈஸ்வரி தம்பதிகள் ஒரு பிச்சைக்காரக் கிழவியை அவள் கூறிய சோகக் கதையைக் கேட்டு வீட்டு வேலைக்கு சென்னைக்கு கூட்டிவர நினைக்கிறார்கள். அப்போது சைக்கிளில் வந்த தாடிக்காரன் ஒருவன் அவர்கள் கூறியது பொய் என்றும், அந்தப் பெண் ஒரு ஏமாற்றுக்காரி என்றும் கூறுகின்றான். அது உண்மையா? பொய்யா? என்று புரியாத நிலையில் இந்த அம்மா வேலைக்கு வேண்டாம் என்று காரில் புறப்படுகிறார்கள். அந்த அம்மா கெஞ்சியபடியே பின் தொடர்ந்து வருகிறாள். கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு என்று கூறிக் கதையை முடிக்கிறார் சுஜாதா.

இந்தியா, ஏதோ ஓர் ஊர்... என்று கதை தொடங்குகிறது. கடை அடைப்பு என்ற பெயரில் ரவுடிகள் கூட்டம் ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்தும் அட்டகாசத்தை அப்பட்டமாகத் தோலுரிக்கிறது ''இளநீர்'' என்னும் சிறுகதை. புதுமணத் தம்பதிகள் தங்களது தேனிலவை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் ரவுடிக் கும்பலிடம் அகப்படுகிறார்கள். அவர்கள் அவனை எந்த மாநிலம்? என்று கேட்கிறார்கள் நான் இந்தியன்! என்று கூறுகிறான். அந்தக் கும்பல் அவர்களைத் துப்பாக்கியால் சுடுகிறது. எங்கே போயிற்று மனித நேயம்? என்று கேட்கத் தோன்றுகிறது. சுஜாதாவின் ''இளநீர்'' என்னும் சிறுகதை.

''நகரம்'' சிறுகதையில் வள்ளியம்மாள் தனது 12 வயது மகள் பாப்பாத்திக்கு வைத்தியம் பார்க்க மதுரை பெரியாஸ்பத்திரிக்கு வருகிறாள். மருத்துவமனையில் அவளை அலைக்கழிக்கும் நிலை பரிதாபமாக உள்ளது. இன்றைய அரசு மருத்துவமனைகளின் அவலநிலையைக் காட்டுகிறது. இறுதியில் மனம் நொந்து அவள் மனித சக்தியை வெறுத்து, தெய்வசக்தியை நினைத்து ஊருக்குத் திரும்புகிறாள். ''பாப்பாத்திக்குச் சரியாகிப் போனால் வைதீஸ்வரன் கோவிலுக்கு இரண்டு கை நிறையக் காசு காணிக்கையாக அளிக்கிறேன். என்று வேண்டிக் கொள்கிறாள் எனக் கதையை முடிக்கிறார் சுஜாதா.. மனித நேயம் அற்றுப்போனது. காசு கொடுத்துக் கடவுளிடம் மனித நேயம் விலை பேசுகிறது இக்கதை.

''பாவ புண்ணியம்'' சிறுகதையில் பதவியில் இருக்கும் போது ஒருவருக்கு ஏற்படும் மரியாதைகளையும், அவன் பதவி இழந்தபோது ஏற்படும் அவமரியாதைகளையும் சுட்டுகிறார். மனிதர்களின் மனங்களில் ஏற்படும் மாற்றத்தை அழகாக கூறியுள்ளார். ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள்.

''மேல்மட்டங்கள்'' என்னும் சிறுகதையில் வரும் கதிரேசன் காண்டீன் காண்டிராக்டர் ஆறுமுகம் பிள்ளை தன் ஊழலை மறைக்க லஞ்சம் கொடுக்க முன் வந்தும், அதனை மறுத்த சுந்தர் நியாயத்தை தொழிலாளர் பிரதிநிதிகளிடம் எடுத்துச் சொல்ல, அதனை மறுத்த அவர்கள் அவனையே சாடுகிறார்கள்.

''மேடையில் சில மங்கல நிகழ்ச்சிகள்'' கதையில் வரும் ஆறுமுகம் தனது மகளின் திருமணத்தை அமைச்சர் தலைமையில் நடத்தத் திட்டமிட்டு செலவு செய்கிறார். அமைச்சர் வரக் காலதாமதம் ஏற்படவே ஆறுமுகத்தின் அம்மா மாப்பிள்ளை, பெண்ணை அழைத்து கோவிலில் வைத்துத் திருமணத்தை நடத்துகிறார். தனது பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காக அமைச்சரை அழைத்த ஆறுமுகம் இறுதியில் வருந்துகிறார். இல்வாழ்க்கையின் இடர்பாடுகளை எஸ். இராதாகிருஷ்ணன் இவ்வாறு விளக்குகிறார்.

''இனி அவர்கள் வரமாட்டார்கள்'' என்னும் கதையில் வரும் ராமநாதனும், அவரது இளைய மனைவி கல்யாணியும் வயது வித்தியாசம் அதிகமிருந்தாலும் மற்றவர்களின் கேலிகளுக்கு இடையே மனமொத்து வாழ்ந்த அவர்கள் புனிதப் பயணம் சென்ற இடத்தில் ராமநாதன் உயிர் நீங்க, கல்யாணியும் அவரது உடலை அணைத்துக்கொண்டே கோதாவரி ஆற்றில் உயிர் விட்டதன் மூலம் அவர்களிடையே இருந்த அன்பின் பூரணத்துவத்தை ஏர்வாடி அவர்கள் நிலைநாட்டுகிறார்.

மனித நேயத்தின் சிறப்பு:-

''நியாயங்கள்'' சிறுகதையில் வரும் இன்ஸ்பெக்டர் வீரபத்ரையா கைதிகளை அடிப்பதற்குக் கூறும் நியாயமான காரணங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. கதையின் நாயகனைப் போலப் பதில் சொல்ல முடியாமல் திணற வைக்கின்றன.

பஸ் நிலையம், இரயில் நிலையம் போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் திருடிவிட்டு அதுமட்டுமில்லாமல் சிறிதுகூட மனிதாபிமானமே இல்லாமல் அவர்களது கழுத்தை, காதை என நகைகளுக்காக அறுத்துவிட்டு ஓடிவிடும் திருடர்களுக்கு தண்டனை தேவை. அந்த வலியைத் திருட்டுக் கைதிகளும் உணரவேண்டும் என்ற கருத்தை இன்ஸ்பெக்டர் வீரபத்ரையா மூலம் உணர்த்துகிறார். நீதிபதி அளிக்கும் தண்டனை போதாது, சிறையில் அவனுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு, சோப்புக்கட்டி! இப்படி வசதியுடன் அவர்களுக்குக் கொடுக்கும் தண்டனை பத்தாது. எனவே தான் இவனை அடித்து நொறுக்குகிறேன் என்று கைதிகளை அடிப்பதற்கு நியாயமான காரணத்தைக் கூறுகிறார். இங்கு இன்ஸ்பெக்டர் மனதில் உள்ள மனித நேயத்தை சுஜாதா உணர வைக்கிறார்.

''தீர்வு'' என்னும் சிறுகதையில் அதிக சப்தத்தை எழுப்பிக் கொண்டு பாடிக்கொண்டு இருக்கும் கல்யாண மண்டபத்தில் லவுட் ஸ்பீக்கர் அக்கம் பக்கத்தினருக்குத் தீராத தலைவலியாக இருந்ததோடு அல்லாமல் குழந்தைகளின் படிப்பையும் கெடுப்பதாக வேதாச்சலம் நினைக்கிறார். எங்கு புகார் கொடுத்தும் செல்லுபடி ஆகாத நிலையில் மண்டபத்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து தீர்வு காண்கிறார். மற்றவர் நலனுக்காகத் தன் உயிரையே தந்து பாடம் புகட்டுகிறார், மனித நோயத்தின் சிறப்பை எஸ். இராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விதவையும், ஊமையுமான அழகம்மாவை அந்த ஊர்ப் பெரியவர்களே விபச்சாரி ஆக்குகிறார்கள். அவளது பெண்ணால் தங்களது மகன்கள் கெட்டுவிடக் கூடும் என்று கருதி அவர்களை ஊரைவிட்டுத் தள்ளி வைக்கிறார்கள். அந்த ஊரிலே வெட்னரி டாக்டராக வேலை பார்க்கும் சுந்தர் அவளையே திருமணம் செய்து மீண்டும் ஊருக்கே திரும்பி வருகிறான். மனித நேயம் சிறிதுமின்றி ஊரை விட்டுத் தள்ளிவைக்கும் பெரிய மனிதர்களிடையே மனித நேயத்தில் உயர்ந்து நிற்கிறார் டாக்டர் சுந்தர். ''குற்றவாளிக்கே தீர்ப்பு வழங்குகிறார்கள்'' என்ற கதையில் ஏர்வாடி அவர்கள் இவ்வாறு மனித நேயத்தை உணர்த்துகிறார்.

''அவள் வித்தியாசமானவள்'' சிறுகதையில் வரும் கல்யாணி திருமணத்திற்கு முன்பே நிச்சயிக்கப்பட்ட ராசேந்திரன் இறந்ததை அறிந்து விதவைக் கோலம் பூணுவதைக் கண்டதும் அவள் தாய் மட்டுமல்ல, நாமும் அதிர்ச்சியடைகிறோம். அவள், அவன்மீது வைத்திருந்த காதலின் ஆழத்தையே நமக்கு எஸ். இராதாகிருஷ்ணன் அவர்கள் காட்டுகிறார்கள்... கல்யாணி இராணுவ விதவைகளின் நலவாழ்வுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்ததில் அவளது சமுதாய நேயம் புலனாகிறது.

தன் மனைவியின் ''கற்பைச் சூறையாட நினைத்த பண்ணையாரை வெட்டிச் சாய்த்துவிட்டு முதலிரவன்றே சிறைக்குச் செல்லும் ஆறுமுகம் பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற கருத்துடன் திரும்பி வந்து பண்னணயார் மனைவியை கெடுக்க முயல, அங்கே வந்த ஆறுமுகத்தின் மனைவி, பண்ணையார் மனைவி தனக்கு துணையாக இருந்ததைக் கூறி மன்னிப்புக் கேட்கச் செய்கிறாள்.

தன் கணவனைக் கொன்றவனின் மனைவியையே பாதுகாத்த பண்ணையார் மன€வியின் மனிதநேய பெருந்தன்மையை ''ஆறுமுகத்தின் வேறுமுகம்'' கதை மூலம் ஏர்வாடி அவர்கள் உணர்த்துகிறார்.

ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய ''மனிதர்கள்'' என்னும் சிறுகதையில் வரும் நேசமணி என்னும் கொலைகாரன் தான் கொன்ற சுகுணாவின் காதலன்தான் தற்போது ஃபாதராக உள்ள மரியதாஸ் என்பதையும் அறியாமல் பாவமன்னிப்பு கேட்கிறான். இதனால் ஃபாதர் மரியதாஸ் கொலை செய்யும் நோக்கத்துடன் வருகிறார். வந்த ஃபாதரை பாவியாக்காமல் தானே தற்கொலை செய்து கொள்வதாகக் கூறி கொலைகாரனின் நேயத்தை உணர்த்துகிறார்.

வாழ்வியல் மேன்மை:-

சாந்திக்கு தான் வேலை செய்யும் வீட்டு முதலாளி ஐயாவும், அம்மாவும் தன்னிடம் காட்டும் அன்பைக் கண்டு பெருமைப்பட்டாள். சாந்தியின் கல்யாணத்திற்காக மாதம் இருபது ரூபாய் அவள் பெயரில் ரெக்கரிங் டெபாசிட் போட்டதைக் கூறியபோது நெகிழ்ந்த சாந்தி அது தன் மேல் வைத்த அன்பால் போடவில்லை. எங்கே சம்பளம் அதிகமாகக் கிடைத்தால் வேறுபக்கம் ஓடிவிடுவாளோ என்று பயந்து அவர்கள் டெபாசிட் செய்ததை தெரிந்து கொண்ட போது மனிதர்களுக்குள் இத்தனை ஈனத்தனமான எண்ணங்களா? என வருந்துகிற அவள் சூதுவாதில்லாமல் நல்ல இடத்திலே சம்பளம் குறைவாக இருந்தாலும் வேலை செய்வதாகக் கூறி தனது தன்மானத்தை நிலைநிறுத்துகிறாள். ''சாந்திக்குச் சம்மதமில்லை'' என்னும் சிறுகதையில் ஏர்வாடி இராதாகிருஷ்ணன் அவர்கள் வாழ்வியலின் மேன்மையை இவ்வாறு உணர்த்துகிறார்.

இறை உண்டியலில் விழும் பணம் வெடிகளுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும், செலவாகிறது. அதைவிட அப்பணத்தை ஏழை மாணவனின் படிப்பிற்குச் செலவிட்டோம் என்ற மனநிறைவோடு செல்லும் சம்பத் பற்றி ''செலவல்ல மூலதனம்'' கதையில் எஸ். இராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

சமூகப் பணி என்ற போர்வையில் தன் குடும்பத்தையும், குழந்தைகளையும் புறக்கணித்து விளம்பரத்துக்காக சேவை செய்வது போல் நடிக்கும் பெண்களையும், அதை தைரியமாகக் தட்டிக் கேட்கும் பெண்ணாக வரும் விஜியின் துணிவையும் ''சேவையா... தேவையா... '' என்ற கதையில் ஏர்வாடி அவர்கள் உணர்த்துகிறார்.

''இனிவரும் நாள்களில்..''. கதையில் கிராமமே தேர்தலை புறக்கணிக்க நினைக்க அதனை தமிழ்நேசன் என்னும் இளைஞன் தேர்தலைப் புறக்கணிப்பது ஜனநாயகத்தைக் கொச்சைப்படுத்துவது ஆகும் என்று கூறி தேர்தலில் பங்குபெற வைக்கிறான். தமிழ்நேசன் போன்ற இளைஞர்களின் தேசப்பற்று மூலம் எஸ். இராதாகிருஷ்ணன் நம்மை வியக்க வைக்கிறார்.

எந்த வேலையும் கேவலமில்லை உழைப்பே உயர்ந்தது என்று உணர்ந்த இளைஞனின் கதையைச் சொல்கிறது. எஸ். இராதாகிருஷ்ணன் வேலை (ளை) வந்துவிட்டது சிறுகதை.

எல்லா மனிதர்களிடத்தும் மனித நேயம் என்பது மனதின் ஓர் ஓரத்தில் இருந்து கொண்டே தான் இருக்கும். அது வெளிப்படும் இடமும், வெளிப்படுத்தும் விதமும் வெவ்வேறாக இருக்கும் என்பதையும், மனித நேயம் என்பது நம் மனதில் இல்லாவிட்டால் ஏற்படும் அவல நிலையையும் சுஜாதா, ஏர்வாடி இராதாகிருஷ்ணன் இருவருமே தங்களது படைப்பின் மூலம் உணர்த்தியுள்ளனர்.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்.

 

துறைதோறும் தமிழ் - திருமதி. சரஸ்வதி கிருஷ்ணா எம்.ஏ., எம்ஃபில்

மொழி என்பது காலந்தோறும் மாறக்கூடிய ஒன்று. அதற்குத் தமிழ் மொழியும் விதிவிலக்கன்று. தமிழ் என்பது இலக்கியத் தமிழ் என்ற வரையறைக்கு மட்டும் அடங்காது. காலத்திற்கேற்றவாறு மாறி வந்துள்ளது. தற்கால அறிவியல் வளர்ச்சியை எம்மொழி உள்வாங்கித் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறதோ அம்மொழியே காலப்போக்கில் நிலைபெறும். தமிழ் மொழியும் வளர்ந்து வரும் அறிவியல் புதுமைகளுக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. ஆனால் இந்த மாற்றத்தைத் திட்டமிட்டு செய்தால் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு தமிழை நாம் உருவாக்க முடியும். தமிழ் என்பது இலக்கியத் தமிழ் என்ற வரையறையுடன் நின்று விடாது. பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று வந்தாலும் தற்போது இவ்வளர்ச்சியானது போதுமானதாக இல்லை என்பதே உண்மை.

இலக்கியத்தின் பயன்:-

காலத்திற்குக் காலம் மாறிவரும் மரபுகளையும், வரலாறுகளையும் தொகுத்து தரும் பேழையாக இலக்கியங்கள் இருக்கின்றன. பழங்கால மனித வாழ்விலிருந்து மலர்ந்த இலக்கியம், அடுத்து வரும் மனிதனின் வாழ்வைப் பண்படுத்துகிறது. ஒவ்வொரு கலையும் மனிதனின் வாழ்வைப் பண்படுத்தவே உள்ளன. மாந்தரின் வாழ்வை உயர்த்தவும், பண்படுத்தவும், இன்பம் தரவும், போராடுவதற்கு ஊக்கம் தரவும் இலக்கியங்கள் உதவ வேண்டும். நம் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் நம் பண்பாட்டிற்கும் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.

உலகும் இலக்கியமும்:-

உலகம் எவ்வளவு முன்னேறியதாக இருந்தாலும் அடிப்படை உணர்வுகள் மாறாததாகவே இருக்கின்றன. வீரம், காதல், தியாகம், பொறுமை, அன்பு, பண்பு, கயமை போன்ற உணர்வும் மாறாததாகும். இவற்றின் மெய்பாடுகளும் மாறாததாகவே இருக்கும். உலக மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அந்த உணர்வுத் தொகுப்புகளே இலக்கிய வடிவம் பெறுகின்றன. உணர்வு, கற்பனை இரண்டும் இலக்கியப் படைப்பிற்கு இன்றியமையாதனவாகும்.

கணிப்பொறி மொழியியல்:-

இருபதாம் நூற்றாண்டில் மனிதர்களுக்கு மின்சாரம் எவ்வாறு அடிப்படையானதும், பிரிக்க முடியாததுமாக ஆகிவிட்டதோ, அதே போன்று கணிப்பொறியும் நம் வாழ்வில் பிரிக்க முடியாத இன்றியமையாத ஒன்றாக மாறிவருகிறது. கணிப்பொறியின் தோற்றம் என்பது ஏறக்குறைய சில ஆண்டுகளுக்கு முன்பு தான். ஆனால் அதன் வளர்ச்சி என்பது அசுரவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் மணிக்கணக்கில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை ஒரு சில மணித்துளிகளில் கணிப்பொறி செய்து முடிப்பது தான்.

மொழி ஆய்வும் தமிழும்:-

தமிழ்மொழி தனக்கே உரிய கட்டுக்கோப்பான இலக்கணங்களை உள்ளடக்கிய திட்டமிட்ட மொழி. நன்னூல், தொல்காப்பியம் முதலிய அனைத்துத் தமிழ் இலக்கண நூல்களும் மொழி ஆய்விற்கு பெரிதும் பயன்படும். கணிப்பொறி உருவாக்கத்திலிருந்து இலக்கண உருவாக்கத்திற்கு நம் முன்னோர்கள் படைத்துள்ள சொத்து என இதனைக் கூறலாம். இலக்கணங்கள் விதிகளாகச் சொல்லப்பட்டுள்ள விதம் இத்துறைக்குப் பெரிதும் பயன்படும். மேலும் தமிழ் ஒட்டுநிலை மொழியாக உள்ளதால் பிரித்துக் காட்டுவதற்கும் எளிமையாக இருக்கும் பகுதி - விகுதி - சந்தி - சாரியை என்ற மரபு சார்ந்த அணுகு முறையும் சிந்திக்கத் தகுந்த ஒன்றாகும். தமிழும், கணிப்பொறியும் ஒன்றிணைந்து ''தகவல் யுகப் புரட்சியே'' உலகத் தமிழ் மக்களிடையே ஏற்படுத்தி வருகிறது.

பொருள் தரும் மிகச் சிறிய அலகான தமிழ் எழுத்துக்களை நன்னூல் விதிகளைக் கொண்டு சரியா, தவறா என நிர்ணயித்தல், நன்னூல் விதிகளைப் பதிவுச் செய்வதற்கு ரோமன் எழுத்துக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில் சொற்கள் தமிழ் மரபுப்படி உள்ளதனா? என்றும் பிறகு உயிர் எழுத்துக்களை அடையாளம் காணல் என அமைகின்றன.

ஆங்கில மொழியில் பிழைதிருத்தர் இருப்பது போலவே தமிழுக்கும் பிழைதிருத்தர் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதற்கு ''சேது பிழைதிருத்தர்'' என்று பெயரிட்டனர். அது ஆவணத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டி அப்பிழையைத் திருத்துவதற்கான விளக்கத்தையும் கொடுக்கிறது.

ஒப்பாய்வியல் திருநீலகண்ட நாயனாரும் குறுந்தொகையும்:-

திருநீலகண்ட நாயனார் நாள்தோறும் சிவபெருமானின் பாதங்களை வாழ்த்தி வழிபடும் இயல்பினர். சைவ சமயப் பெருநெறியே உண்மையான பொருள் நெறி என்பதையுணர்ந்து பொய் சொல்லாமல் அறநெறியில் வாழ்ந்தார். சிவனடியார்களுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்து வாழ்ந்தார். அவ்வாறு வாழ்ந்து வந்த காலத்தில் பரத்தையரிடத்தில் உறவு கொண்டு திரும்பிய அவரிடம் திருமகளைப் போன்ற அழகுடைய அவரின் மனைவி ஊடல் கொண்டார். மனைவியின் ஊடலைத் தீர்க்கத் திருநீலகண்டர் பலவாறு கூறினார். அமைதி பெறாத தம் மனைவி ''தீண்டுவீராயின் எம்மைத் திருநீலகண்டம்'' என்று வெறுத்துத் தடுத்தார்.

குறுந்தொகை 191 பாடலில் மரக்கிளையில் தத்தம் துணைகளோடு கூடியிருந்த பறவைக் கூட்டங்கள், துணையைப் பிரிந்திருப்போர் வருந்துமாறு தம் இனிய குரலினாலே அகவும், அதனைக் கேட்டும் திரும்பி வராத தலைவர் நமக்கு அன்னியர் ஆனார். அதனால் அவர் மீண்டும் வந்தால், எம் கூந்தலைத் தொட்டு ஒப்பனை செய்யாதே எம்மையும் தொடாதே என்று கூறுவேன்.

குறுந்தொகைத் தலைவி ''என்னைத் தொடாதே'' என்று தலைவனைப் பார்த்துக் கூறுவேன் எனத் தோழியிடம் கூறுகிறாள். திருநீலகண்டரின் மனைவியோ தன் கணவரிடத்திலேயே ''என்னைத் தொடாதீர்'' என்று கூறுகிறாள்.

திறனாய்வியல்:-

விருந்தோம்பல்:-

''விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும்

பிறவும் அன்ன கிழவோன் மாண்புகள்''

என்று தொல்காப்பியம் குடும்பத் தலைவியின் பண்புகளைக் குறிப்பிடுவதிலிருந்து விருந்து போற்றுதல் மகளிர் கடமைகளில் தலையாய ஒன்றாய் இருந்தது என்பது தெரிகின்றது. அமுதத்தைத் தன் சுவையால் வெல்வதும் நல்ல தாளிப்பு மணம் கொண்டதும் உண்ண உண்ணத் தெவிட்டாதது தான் உணவை, வந்த விருந்தினர்க்கு வரையாது வழங்கி வாழ்கின்ற மகளிர் என்ற புறநானூறு இலக்கியமானது விருந்து போற்றும் இல்லற மகளிரைப் போற்றுகின்றது.

சிலப்பதிகாரமும் இல்லற வாழ்வின் பெருமைக்குக் காரணமான விருந்தோம்பலின் சிறப்பினைக் கூறுகிறது.

விருந்துபுறந் தீருஉம் பெருந்தன் வாழ்க்கையும்

-(சிலப்பதிகாரமும்)

கம்பரும் கோசல நாட்டுப் பெண்களின் விருந்தாற்றும் பண்பைப் போற்றுகின்றார்.

''................... ஈதலும் வைகலும்

விருந்தும் அன்றி விளைவன யாவையே''

- (கம்பராமாயணம்)

பாவேந்தர் பாரதிதாசன் தம்முடைய ''குடும்ப விளக்கு'' என்னும் நூலில் விருந்தோம்பல் என்று ஒரு தலைப்பையே படைத்துக் காட்டியுள்ளார்.

சமூகவியல்:-

தமிழ் என்பது இலக்கியத் தமிழ் என்ற வரையறையுடன் நின்றுவிடாது, பொறியியல் தமிழ், சட்டத்தமிழ், மருத்துவத் தமிழ், கணினித் தமிழ் என்று பல்வேறு படி நிலைகளில் வளர்ச்சி பெற்று வருகின்றது.

இலங்கையில் மருத்துவப் படிப்பு தமிழ் வழியில்தான் கற்பிக்கப்படுகின்றது. தமிழ் வழியாக மருத்துவம் பயின்ற மாணவர்கள் உலகம் போற்றும் மருத்துவர்களாகப் பரவி இன்றும் மருத்துவத் தொண்டாற்றி வருகின்றனர். மருத்துவப் படிப்பைத் தமிழ்வழி பயில்வதற்குரிய பல அடிப்படை மருத்துவ நூல்களை இலங்கையில் மொழியாக்கம் செய்துள்ளனர். ஆனால் அதைப் பயன்படுத்துவதற்குத் தமிழ் நாட்டில் தடையாக இருப்பதற்கு முக்கிய காரணம் தமிழை மழலையர் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை பயிற்று மொழியாக நடைமுறைப்படுத்தாமல் இருப்பதுதான். ''எங்கும் தமிழ் எதிலும் தமிழ்'' என்ற நிலையை அனைத்து துறையிலும் தாய்மொழித் தமிழை நடைமுறைப்படுத்துவதே இதற்குத் தீர்வாக அமையும்.

வரலாறு:-

வரலாற்றுக்கு முற்பட்ட காலங்களில் மனிதனின் வாழ்வுநிலையை அறிஞர்கள் செம்புக் காலம், செம்புகற்காலம், இரும்புகாலம் என்று மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்.

செம்புக்காலமும் சங்க இலக்கியமும்:-

சங்க இலக்கியத்தில் செம்பு பற்றிய குறிப்புகள் பலவாறு காணக்கிடக்கின்றன.

''செம்பொற் புனை கலந்து அம்பொரிக் கலத்தை

பாலும் பல உண்ணாள்''

என்ற குறுந்தொகைப் பாடலில் செம்பொன்னாகிய கலத்திலே பொரிபோட்டு கலக்கப்பெற்ற பாலும் மிகுதியாக உள்ளது. அதைத் தலைவி உண்ணாதவளாக இருந்தாள் என்று குறிக்கப்படுகிறது.

''செம்பு இயன்றன்ன செய்உறி நெடுஞ்சுவர்''

மதில்களில் செம்பினைப் பொருத்துவது பற்றிய குறிப்பு நெடுநல்வாடையில் காணப்படுகிறது.

சங்க இலக்கியத்தில் ''செம்பு'' என்று குறிக்கப்படுவது தனித்த உலோகத்தை மட்டுமே! ''செம்பொன்'' என்பது செம்பும் தங்கமும் கலந்த நிலையைக்குறிக்கும். தென்னிந்தியாவில் செம்பு அதிகமாகக் கிடைக்கும்'' கனிமமாகும். சங்க இலக்கியங்களில் ''செம்புலப் புறவு'', செம்புலப் பெயல் நீர்'' என்றும் குறிக்கின்றன. பொதிய மலைக்கு செம்மலை என்ற ஒரு பெயரும் உண்டு.

வெண்கலப் பயன்பாடு:-

தமிழ் மக்கள் வாழ்வில் வெண்கலத்தின் பயன்பாடு பிரிக்க முடியாத ஒன்றாகும். புதுமணமான தம்பதியருள் மணமகனுக்கு முதல் உணவு வெண்கலக் கும்பாவில் கொடுப்பது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். வெண்கலத்தைத் தட்டினால் ''கிண்'' என்று ஓசை வரும்.

''செல்வச் சீறா அர் சீறடிப் பொருந்த

போலஞ் செய் கிண் கிணி''.

என்று குறுந்தொகைப் பாடலில் வெண்கலத்தைப் பற்றிய ஓசைக்குறிப்பு உள்ளது.

இரும்புக் காலம்:-

சங்க இலக்கியங்களில் இரும்பைப் பற்றியப் பல குறிப்புக் காணப்படுகின்றன. எஃகு என்ற சங்க இலங்கியங்கள் இரும்பைக் குறிக்கின்றன.

''பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்ந்து

திருந்து இலை எஃகும் போல'' என்றும் அகநானூற்றில் இரும்பு பற்றிக் குறிப்புகள் உள்ளன.

கல்வெட்டியியல்:-

தமிழ்ப் பிராமி கல்வெட்டு:-

பிராமி கல்வெட்டு என்பவை ''பிராமி'' என்ற எழுத்து வடிவத்தால் எழுதப்பெற்ற கல்வெட்டுகள். இந்தியா முழுவதும் பரவியிருந்த எழுத்து வடிவம் இது. கி.மு 3 நூற்றாண்டு முதல் இவ்வெழுத்துக்களில் எழுதப்பெற்ற தமிழ் பாகதம் மொழியில் அமைந்த கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. நில அடிப்படையில் இவ்வெழுத்தினை மூவகையாகப் பிரிக்கலாம்.

1. வடநாட்டுப் பிராமி

2. மத்திய பிராமி

3. தென் பிராமி

தமிழ்ப் பிராமி என்ற பாகுபாடு கி.மு. 500க்கு பின்னர்தான் தோன்றியிருக்க வேண்டுமென்பது அறிஞர்கள் கருத்து. வட பிராமியில் பயிலப்படாத சில வடிவங்கள் தமிழ்ப் பிராமியில் தமிழ் மொழிக்கே உரிய சிறப்பு எழுத்துக்களுடன் அமைந்திருக்கின்றன. அவை ழ, ற ன என்பவை. அசோகர் பொறித்த கல்வெட்டுகள் எல்லாம் பிராமி எழுத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளன.

திரு. ஐராவதம் மகாதேவன் என்பவர் ''தமிழ் பிராமிக் கல்வெட்டுகள்'' என்ற தலைப்பில் பழைய கல்வெட்டுப் படிகளும், அவற்றைத் தொடர்ந்த முடிவுகளும் தவறானவை என்று சுட்டிக்காட்டித் தக்க முறையில் சான்று காட்டித் தன் முடிவுகளை நிலை காட்டினார். பேராசிரியர் மீனாட்சி சுந்தரனார் தமது தமிழ்மொழி வரலாற்றில் பிராமிக் கல்வெட்டுக்களின் மொழியமைப்பைத் தொகுத்து தந்துள்ளார்.

இக்கட்டுரையில் கணிப்பொறி மொழியியல் என்ற வளர்ந்து வரும் புதுத்துறை பற்றியும் ஒப்பாய்வு இல்லையென்றால் தமிழகம் உலகத்தாரால் புறக்கணிக்கப்படும். ஆகையால் அத்துறை பற்றியும் திறனாய்வுத்துறையில் தமிழர்கள் பழங்காலந்தொட்டு இருந்து வருவதால் அத்துறை பற்றியும், சமூகவியல் துறையில் தமிழ்வழிக் கல்வி பற்றியும் நமது வரலாற்றினை அறிந்து கொள்ள வரலாற்று துறையினைப் பற்றியும் தமிழர்களுக்கு சான்றாதாரங்கள் தேவை என்ற நோக்கில் கல்வெட்டியியல் பற்றியும் சில சான்றுகளை இக்கட்டுரையானது விளக்குகின்றது.

நன்றி:- தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்

 

சென்ரியு கவிதைகளில் சமுதாயச் சிந்தனை - ஏ. பால்பிரபுசாந்தராஜ்

தமிழ் இலக்கிய உலகில் கவிதை இலக்கியம் காலந்தோறும் புதுப்புது மாற்றங்களைக் கண்டுவந்துள்ளது. சமூகப் பொருளாதார அரசியல் சூழல்களே இம்மாற்றங்களுக்குப் பெரிதும் காரணம் எனலாம். அறிவியலின் நவீன வளர்ச்சி உலகின் பரப்பை சுருக்கிவிட்டது. இந்த நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் மொழிபெயர்புக் கலையின் வளர்ச்சியினாலும் பிற நாட்டு இலக்கியக் கொள்கைகள், திறனாய்வுகள், வடிவங்கள் போல் வன தமிழில் தலை எடுக்கத் தொடங்கின. இவ்வகையில் தமிழுக்குக் கிடைத்த புதிய இலக்கிய வடிவம் தான் ''சென்ரியூ'' கவிதை வடிவம்.

''சென்ரியூ'' - தோற்றம்

சென்ரியூ கவிதைகளின் தோற்றம் குறித்துப் பொதுவாகச் சொல்வதெனில் இஃது ஹைகூ கவிதையிலிருந்து தோன்றியது என்று கூறிவிடலாம் என்றாலும் ஹைகூவிலிருந்து சென்ரியு தன்னைத் தனித்துவப்படுத்திக் கொண்டதற்கு ஒரு நீண்ட கால வரலாறு உண்டு. 1980 ஆம் ஆண்டு ''அன்றாடமை'' என்னும் தலைப்பில் சென்ரியூ அங்கதக் கவிதைகளின் தொகுப்பு வெளியானது. இதன் தொகுப்பாசிரியர் மேரி கேசல் என்பவர் இந்நூலின் முன்னுரையில் ''ஹைகூவின் அங்கத வடிவம் சென்ரியூ. ஹைகூ இயற்கை உலகில் பார்வை செலுத்துகிறது எனில், மக்கள், பொருள்கள், சம்பவங்கள் ஆகியவற்றின் மீது பார்வையைக் குவிப்பது சென்ரியூ. 5+7+5=17 என்னும் அசைகள் அமைப்போடு ஒழுங்கு வகைப்பட்டு ஒவ்வொரு கவிதையும் இருக்கும்'' என்று பொதுவான கருத்தை மட்டும் வெளியிட்டிருக்கிறார். இதில் சென்ரியூவின் தோற்ற வரலாறு தெளிவாகப் புலப்படவில்லை. எனினும் ஹைகூ கவிதையிலிருந்து தோன்றியதே சென்ரியூ என்பது மட்டும் புலப்படுகிறது.

ஹைகாய் - நொ - ரெங்கா என்னும் இணைப்புக் கவிதை அல்லது தொடர் கவிதையிலிருந்து தான் ஹைகூ தோன்றியது. இதேவிதக் கவிதையிலிருந்து தோன்றியதே சென்ரியூ வகைக் கவிதையும். இதன் வரலாற்றை நோக்கும் போது இதனை ஒரு கவிதை விளையாட்டு என்றே கூறலாம். இக்கவிதைகள் பெரும்பான்மையும் நகைச்சுவை உயர்வுமிக்கதாகவே இருக்கும். ஹைகாய் - நொ - ரெங்கா எனப்படும் நகைச்சுவை இணைப்புக் கவிதைகளில் ''பாஷோ'' என்பவர் முதன்மைப்பெற்று விளங்கினார்.

தேநீர் கடைகளிலும் மதுக்கடைகளிலும் இக்கவிதைகள் எழுதப்பட்டன. ''கவிதையின் இவ்வகைமையில் வள்ளலார் என்று முத்திரை பதித்த ஒருவர் - இத்தகைய கவிதைகளை ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் திறமை பெற்றவர் என்று புகழ் பெற்ற ஒருவர் - இதற்கெனப் பணியில் அமர்த்தப்படுவர் அவருக்கு ஜப்பானிய மொழியில் ''டென்யா'' என்று பெயர். அவர் தான் - தேநீர், மதுக்கடைகள் பக்கம் ''மாக்கூ'' என்னும் முன் கவிதைகளை (போட்டிக்கு அழைக்கும் அறைகூவல் வரிகளை) ஒரு திங்களின் சில வாரங்களில் எடுத்துக் கொண்டு போய்க் கொடுப்பார். அடுத்த சுற்று - அக்கடைகளுக்குச் சென்று அவரோ அவருடைய முகவரோ - மாக்கூ கவிதைகளுக்குப் பதிலாக வந்த கவிதைகளைத் திரட்டி வருவார். இவ்வாறு கொடுக்கப்படும் பதில் கவிதைகளுக்கு ''இட்சுகேகூ'' என்று பெயர். அப்போதே அடுத்த சுற்றுக்கான முன் கவிதைகளை அக்கடைகளில் ஒப்படைப்பார். பதில் வரிகளைத் தருபவர்கள் கூடவே சிறிதளவு கட்டணம் செலுத்துவர். ''இட்சுகேகூ'' கவிதைகளில் சிறந்தவை தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றுக்குப் பரிசு தர அந்தத் தொகையைப் பயன்படுத்திக் கொள்கிற பழக்கம் கவிதைக் கலைக்குச் சாமரம் வீசுவது போல் அமைந்திருக்கிறது.

வெற்றி பெற்ற கவிதைகளை அச்சிட்டு - அப்போதே அக்கடைகளில் விற்பனைக்கு எனக் கொடுத்து விடுவார்கள் 2. இப்படிப்பட்டத் தொடர் கவிதைகளில் பதிலாக வந்த கவிதைகளில் சிறந்ததை எடுத்துத் தொகுத்து வெளியிட்டனர். அவ்வாறு வடிவத்திலேயே சென்ரியு தொகுப்பட்ட கவிதைகளே ஹைகூ கவிதைகளும், சென்ரியு கவிதைகளும் ஆகும். ஹைகூ கவிதை வடிவத்திலேயே சென்ரியு கவிதைகளும் எழுதப் பெற்றன என்றாலும், இரண்டின் உள்ளடக்கங்களும் எதிர் எதிரானவையாகும். எனவே ஹைகூ வேறு சென்ரியு வேறு.

ஹைகூ - சென்றியு

ஹைகூ வடிவத்தில் சென்ரியு அமைந்திருந்தாலும் இரண்டும் வெவ்வேறானவை. ஹைகூ - சென்றியு இவற்றிற்கு இடையேயுள்ள வேற்றுமைகளாக முப்பத்து மூன்று வேற்றுமைகளைச் சுட்டுகின்றார். நிர்மலா சுரேஷ் ''ஒரு வண்டி சென்ரியு'' என்னும் நூலின் முன்னுரையில் தானும் தமிழன்பனும் வேறுபடுவதைக் குறிப்பிடுகின்றார். இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஹைகூ - சென்ரியு இரண்டும் ஒன்றல்ல என்று உணரலாம்.

ஹைகூவைப் போன்றே சென்ரியுவும் ஜப்பானில் முகிழ்த்ததுதான். ஹைகூ அழமானது. சென்ரியு மேலோட்டமானது. ஹைகூ இயற்கையைப் பற்றியும் ஆழ்நிலைத் தத்துவங்களைப் பற்றியும் பேசும். சென்ரியு மனிதனைப் பற்றியும் மனித உணர்வுகளைப் பற்றியும் பேசும். ஹைகூ கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. சென்ரியு கட்டுப்பாடற்றது. ஹைகூ முழுக்க முழுக்கக் கவிதை. சென்ரியு கவிதையாக இல்லாமலும் இருக்கும். இது போன்றே வடிவத்தைத் தவிர்த்து எல்லா வகையிலும் ஹைகூவும் சென்ரியுவும் வெவ்வேறானவை என்பது உணரத்தக்கது.

''சென்ரியு'' என்னும் உச்சரிப்பு:

''சென்ரியு'' கவிதைகளின் தாயகம் ஜப்பான். ''சென்டியு'' என்பதுதான் ஜப்பானி ஒலி உச்சரிப்பு. ஆங்கிலத்தில் ந்ங்ய்ழ்ஹ்ன் ''த'' சேர்வதைப் பார்த்து அதனைத் தமிழில் சென்ரியு என்று ''ரி'' ஒலியோடு உச்சரிக்கத் தொடங்கினோம். உண்மையில் ''த'' என்பது ஜப்பானிய மொழியில் மௌனம் கொண்டது. அது தமிழின் ''க'' என்பது போலவே அங்கு ஒலிக்கப்படுகிறது. மற்றொன்று இறுதி எழுத்தாகிய ''ம'' வின் ஒலி நீட்டம். ஆங்கிலத்தில் ம விற்கு மேல் ஒரு சிறிய கோடிட்டு, ம என அதனைப் புலப்படுத்துகிறார். ஜப்பானிய மொழியில் ''சென்டியு'' என்பதே சரியான உச்சரிப்பு நிலை ஆங்கில மொழியாக்கம் பெற்று மீண்டும் தமிழுக்கு வரும்போது ''சென்ரியு'' என்ற உச்சரிப்பைப் பெற்றது.

சென்ரியு - பெயர்க்காரணம்:-

சென்ரியக் கவிதைகள் ஜப்பானில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்களால் எழுதப்பட்டு வருகிறது. சென்ரியூ என்றால் ''ஆற்றோரத்து வில்லோ மரம்'' என்று பொருள். சென்ரியு ''காரைஹாச்சிமோன் என்னும் கவிஞரின் புனைப் பெயராகும். 1718 - 1790 வரை வாழ்ந்த அவர் காரைசென்ரியு என்று புனைப் பெயர் சூட்டிக்கொண்டார். காரையின் தந்தையார் நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். அவருக்குப் பின் காரை அப்பணியில் அமர்ந்தார். கவிதை எழுதும் ஆற்றல் கைவரப் பெற்ற இவர் 1757 - இல் ''மேகுசுகு'' என்னும் கவிதையின் தேர்வாளர் ஆனார். இப்பணி செய்கின்றவர்களை ''ஆசான்'' என்றும் ''டென்யா'' என்றும் அழைத்தனர். இவர் ஆயிரக்கணக்கான கவிதைகளைப் பதிப்பித்து வெளியிட்டார். இவர் பதிப்பித்து வெளியிட்ட கவிதைகள் இவர் பெயரிலேயே சென்ரியு கவிதைகள் என வழங்கலாயின.

தமிழில் சென்ரியு:-

ஜப்பானில் சென்ரியு கவிதைகள் அடங்கிய முதல் தொகுப்பு 1765 ஆம் ஆண்டு வெளியானது. இதன் பெயர் யானாகிதாறு என்பதாகும். அதன்பின்பு ஏராளமான கவிதைத் தொகுப்புகள் ஜப்பானில் வெளிவந்து விட்டன. இன்று ஜப்பானில் சென்ரியு கவிதைகளுக்கென்றே இதழ்கள் நடத்தப்படுகின்றன. மனநலத்திற்கு உரிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்றாக, கணினி இணையம் சென்ரியுவைச் சேர்த்திருக்கிறது. தமிழில் ஹைகூ பரவிய அளவுக்கு சென்ரியு பரவவில்லை என்ற உண்மை ஒத்துக்கொள்ளப்பட வேண்டியதே. தனித்தனிக் கவிதைகளாகப் பலர் எழுதி வருகின்றனர். நூல் தொகுப்பாக வெளிவந்திருப்பது மிகச் சிலவே. 2001 ஆம் அண்டு கவிஞர் ஈரோடு தமிழன்பன் முழுக்க முழுக்க சென்ரியூ கவிதைகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டார். ''ஒரு வண்டி சென்ரியு என்னும் இந்நூலே தமிழில் முதல் சென்ரியு கவிதை நூலாகும். இந்நூலின் கவிதைகளே இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

சென்ரியு கவிதைகளில் சமுதாயச் சிந்தனை:-

ஹைகூ கவிதையின் அங்கத வடிவம் தான் சென்ரியு என்னும் மேலோட்டமான கருத்து ஏற்புக்குரியதன்று. தொடக்க காலத்தில் அங்கதச் சுவை கொண்ட கவிதைகளே எழுதப்பட்டதனால் இக்கருத்து உருவானது. இன்றைய நிலையில் சென்ரியுவில் சமுதாயச் சிந்தனைகள் பெருமளவில் காணப்படுகின்றன. என்றாலும் இதற்கே உரிய பண்பான நகைச்சுவையை இக்கவிதை வடிவம் விட்டுக்கொடுக்கவில்லை. எதைச் சொன்னாலும் அதில் கொஞ்சம் நகைக்சுவை கலந்து சொல்லும் நிலை நிலைத்துவிட்டது. போலி மருத்துவம், போலி பாசம், கல்வி நிலை போன்ற சமுதாயம் சார்ந்த கருத்துக்கள் சென்ரியு கவிதைகளில் இடம் பெற்றுள்ளன.

வறுமை:-

வறுமை என்பது ஒரு காலத்தில் இந்தியாவின் தேசிய அடையாளமாகவே இருந்தது. வறுமை இல்லாத நாடே உலகில் இல்லை எனலாம். தனது தேசத்து வறுமையைப் பற்றி கவலைப்படாதவன் கவிஞனே இல்லை. சென்ரியு கவிதைகளில் வறுமை நயமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகனைக் கல்லூரிக்கு அனுப்பிப் படிக்க வைக்கும் அப்பாவிற்கு விடுதியிலிருக்கும் மகன் எழுதும் கடிதம் வருகிறது. தந்தை படிக்கிறார். இந்த ஒரு நிகழ்ச்சியிலேயே வறுமை மிகவும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லூரியிலிருந்து / மகன் கடிதம்

கடன்களால் படிக்கும் அப்பா (ப.15) யு/ஏராளமாகக் கடன் வாங்கி மகனைப் படிக்க வைக்கிறார் தந்தை. மகனிடமிருந்து கடிதம் வந்தால் படிக்கும் போது கடன் தான் முன்வந்து நிற்கிறது.

சமூக அவலம்:-

நாம் வாழும் சமுதாயம் பல துறைகளாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு இயங்கும் எல்லாத் துறைகளிலும் சீர்கேடுகள் உள்ளன என்பதை சென்ரியு குறிப்பிடுகிறது. ஆயிரமாயிரம் நீதி நூல்களைப் பாடி வைத்திருக்கும் நம் இந்திய மண்ணில் குறிப்பாகத் தமிழ் மண்ணில் சாராய வியாபரம் கொழுத்திருக்கிறது என்பதை தகுந்த குறியீடுகள் விளக்குகின்றன.

பசுவின் மடியில்:-

சாராயம்/நீதி நூலுக்கும் ஓர் ஆழாக்கு (ப.18)

அரசு அலுவலகங்கள் சோம்பிக் கிடப்பதைப் பின்வரும் கவிதை சித்தரிக்கிறது.

மூன்று வருடங்களுக்குப் பின் / யுமுதல் ஓய்வு ஊதியம்/ ஈமக் கடனுக்கு (ப.19)

ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அவர்கள் வாழும் போது அவர்களுக்குப் பயன்படாமல், அவர்களது ஈமச் கடனுக்குப் பயன்படுமளவிற்குக் காலதாமதமாய்க் கிடைக்கிறது. இது அரசு அலுவலகங்களின் காணும் அவலம். நமது கிரிக்கெட் தேர்வுக் குழுவிலும், பயிற்சிக் குழுவிலும் தகுதியற்றவர்களுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது இங்கு நகைச்சுவையோடு சுட்டப்படுகிறது.

எட்டுப் பந்தயங்களில் /பூச்சியம் போட்டவன்/ கிரிக்கெட் பயிற்சியாளன் (ப.23) எந்தத் துறை எப்படி இருந்தாலும் நீதித் துறை பழுதில்லாமல் இருக்க வேண்டும். அப்படிப்பட்டத் துறையே இன்று அவலநிலை அடைந்திருக்கிறது.

நீதிபதி சொன்னபடி நின்றது / நீதி சொன்னபடி நிற்காத / தராசு முள்(ப.26)

நமது ஊர்களில் நூலகங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்துவோர் வெகு சிலரே. பெரும்பாலோருக்கு நூலகம் என்ற ஒன்று இருப்பதே தெரியாது. நூலகத்திலும் படிப்பவர்களைவிட தூங்குபவர்களே அதிகம். நூல்வாசிக்கும் வழக்கம் இல்லாதது ஒரு சமுதாயத்தின் மிகப் பெரிய அவலம் இது.

வாசகர் நூலகம் / தூக்கம் / விழித்திருக்கும் நூல்கள் (ப.43)

அரசியல்:-

அரசியலைச் சாக்கடை என்று சொல்லுவாரும் உண்டு, புனிதமானது என்று சொல்லுவாரும் உண்டு. எப்படியிருந்தாலும் அரசியல் விமர்சனத்திற்கு உரியதாகவே இருந்து வருகிறது. சென்ரியுவின் விமர்சனம் நகைச்சுவையானது.

பக்தர்களிடம் / கடவுள் கேட்ட வரம் / அரசியலுக்கு இழுக்காதீர்கள் (ப.21)

கடவுளே கண்டு அஞ்சும் நிலையில் அரசியல் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பதவி இழந்த அமைச்சர் / அறிக்கை / இனிநாட்டுக்கு உழைப்பேன்(ப.63)

அமைச்சர் பதவியிலிருந்த வரை நாட்டுக்கு உழைக்கவில்லை. இனி நாட்டுக்கு உழைப்பேன் என்கிறார். அது வராவிட்டால் இது / இது வராவிட்டால் அது / எதுவும் வராவிட்டால் அரசியல் (ப.66)

மக்கள் நிலை:-

வாழ்கின்ற காலத்தில் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் இருக்கின்றனர். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற எண்ணமுடையவர்களும் இருக்கின்றனர். இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கொள்கையோடு வாழும் மனிதனை உலகம் போற்றுகிறது. மற்றவர்களைத் தூற்றுகிறது. எப்படியும் வாழலாம் என்கிற மனிதரை கேலியோடு பார்க்கிறது சென்ரியு.

பணம் / எதையும் செய்யும் தெரிந்தவர்கள் / பணம் செய்தார்கள் (ப.26)

அதிகாரி பிறந்த நாள் / வீடு முழுக்க / இலவச அலங்காரம் (ப.60)

கை நீட்டி வாங்காத / அதிகாரி மனைவி / கை நிறைய வளையல்கள் (ப.46)

இக்கவிதைகள் மனிதனின் தவறான வாழ்க்கை முறையினைக் காட்டுகின்றன.

பக்தி:-

கடவுள், கோயில் இவற்றைப் பற்றிய உயர்வான எண்ணம் சமூகத்தில் நிலவுகின்றது. அவ்வாறு இருப்பினும் சில விரும்பத்தகாத செயல்களும் நடைபெற்றுக் கொண்டு தானிருக்கின்றன. ஆதலால் கடவுள், பக்தி கடவுள் பக்தி இவற்றைக் குறித்த ஒரு எதிர் விமர்சனம் கவிதைகளில் இடம் பெறுகின்றது.

அதர்மங்கள் / அஞ்சிய கடவுள் / அவதார நிறுத்தம் (ப.32)

இப்போதெல்லாம் இறைவனின் அவதாரம் நிகழ்வதில்லை. காரணம் அதர்மங்கள் அதிகமாகிவிட்டன என்கிறது இக்கவிதை. கடவுள் சிலைகளைத் திருடுகிற இந்த நாட்டில், கடவுள், பக்தி இவைகளைப் பற்றிய கேலியும், நகைச்சுவையும் கவிதைகளில் இடம் பெறுகின்றது.

சிலைக்கு வெளியே போய் வந்த / கடவுள் சிலையாய் நின்றார் / சிலையைக் காணோம் (ப.40)

பூசாரி கையில் கட்சி / வெளியேற்றப்பட்டார் / கடவுள் (ப.48)

கோயில் கூட அரசியல் கலந்துவிட்ட பரிதாபநிலையைக் காட்டுகிறது. இது இன்றைய பூசாரிகளிடம் இருந்து பக்தியும் போய் நலமும் போய் சுயநலம் வந்துவிட்டது இக்கவிதை எடுத்துக்காட்டு.

குழந்தை வளர்ப்பு:

தாய், தந்தை இருவரும் பணியில் இருக்கும் குடும்பங்களில் குழந்தைகள் கவனிப்பாரற்றுத் தவிக்கின்றனர். அதோடு கருவிகளின் தொழில் நுட்பம் பெருமளவில் வளர்ந்துவிட்டதால் குழந்தைகளிடம் பொம்மைகள் பேசிக் கொண்டிருக்கின்றன.

குழந்தையோடு:-

யாரும் பேசவில்லை / பேசும் பொம்மை (ப.38)

உண்மைக் குழந்தைகளை விட பொம்மைகள் கவனத்தைக் கவரும் வகையில் இருப்பதால் ஒரு குழந்தை

அம்மா! / இந்தப் பாப்பாவை விற்றுவிட்டு / வேறு பொம்மை வாங்கலாம் (ப.40)

என்று சொல்கிறது. அந்த அளவிற்கு உண்மையை நிழல் விழுங்கிக் கொண்டிருக்கிறது.

மீட்டுருவாக்கம்:-

அகலிகை, சீதை போன்ற தொன்மங்கள் சிறு கதைகளிலும் புதுக்கவிதைகளிலும் மீட்டுருவாக்கம் செய்யப்படுவது போல் சென்ரியூவிலும் செய்யப்பட்டுள்ளது.

அடடே! / இந்த பழம் இனிக்கும் / ஏணியுடன் அதே நரி (ப.45)

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்த நரிக்கதை இங்கே மறுவாசிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளது. சென்ரியு கவிதை அங்கதங்களை மட்டும் சொல்வதாக இல்லாமல் சமுதாயத்தில் பல்வேறு துறைகளில் புரையோடிப் போயிருக்கும் அவலங்களை சுட்டிகாட்டுகிறது. மென்மையான நகைச்சுவையோடு சமூகத்தின் ஆழ்ந்த அவலங்களை எடுத்துக் காட்டும் சென்ரியு கவிதை வடிவம் இச்சமுதாயத்தைப் புணரமைப்புச் செய்யத் தமிழன்னையின் கையில் கிடைத்திருக்கும் ஒரு புதிய ஆயுதம் என்றே சொல்லலாம்.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்.

 

தற்காலக் கவிதைகளில் நவீனத்துவக் கூறுகள் - சு. ஜெயசீலா

ஆரம்ப காலகட்டத்தில் இலக்கியங்கள் கவிதை நடையில் தான் தோன்றின. இவ்வகைக் கவிதைகள் உவமை, உருவகம், மோனை, எதுகை, இயைபு, அணி, பாவகை போன்றவற்றைப் பெற்று வந்தன. இம்முறையிலிருந்து இன்று மாறி மரபுக் கவிதைக்குரிய எதையும் பின்பற்றாமல் தற்கால கவிதைகள் வெளிவருகின்றன. வளர்ந்து வரும் இன்றைய கவிதைகள் நவீனத்துவத்தைப் பின்பற்றி வருகின்றன. ''நவீனத்துவம் என்பது அரசியல், தத்துவம், பொருளியல், அறிவியல், கலை இலக்கியம் எனச் சகல துறைகளையும் ஒரே சமயத்தில் பிரமிக்கத்தக்க விதத்தில் பாதித்த ஒன்று. நவீன அரசமைப்பு, சனநாயகம், தேசிய உருவாக்கம், நகரநிர்மாணம், மத்தியதரவர்க்க உருவாக்கம், நீதிவழக்குமுறை, கல்வி, மருத்துவம், குடும்ப அமைப்பு என நவீனத்துவம் பாதிக்காத துறைகளே இல்லை'' எனலாம்.

தற்காலக் கவிதைகள் பின்வரும் நவீனத்துவக் கூறுகளைப் பெற்று வருகின்றன:-

1. கவிதை மரபைப் புறக்கணித்தல்.

2. படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு.

3. வாசகனுக்கு சிந்திக்க இடம் அளித்தல்.

4. பூடகத்தன்மை.

கவிதை மரபைப் புறக்கணித்தல்:-

தற்காலக் கவிஞர்கள் தனக்கென்று விதிக்கப்பட்டிருந்த உவமை, உருவகம், அணி, பாவகை, எதுகை, மோனை இயைபு போன்ற மரபுகளை நீக்கி கவிதை இயற்றுகின்றனர். உரைநடையைச் சிதைத்துக் கவிதையாக எழுதுகின்றனர். நேரில் பேசுவது ஒரு நேர்முகத்தன்மையுடன் இருக்கிறது. இன்றைய நவீனக் கவிஞர்கள் பலரும் இம்முறையைப் பின்பற்றி எழுதுகின்றனர்.

''என் வீடு

ரொம்பச் சின்னது

யாராவது நண்பர்கள் வந்தால்

தங்க வைக்க முடியாது'' (விக்ரமாதித்தன் - உள் வாங்கும் உலகம்)

இக்கவிதை வரிகள் ஆசிரியர், வாசகர்களிடம் நேரிலே பேசுவது போன்று உள்ளன. இதில் கவிஞருக்குரிய மரபு இலக்கணங்கள் எதுவுமில்லை. வீடு மிகச் சிறியது. யாரு வந்தாலும் தங்குவதற்கு முடியாது என்பதை அப்படியே உரைநடையைப் பிரித்துக் கவிதையாக எழுதியுள்ளார் ஆசிரியர்.

படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு:-

படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் மரபுக் கவிதைகளில் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். நவீனக்கவிதைகளில் இடைவெளிக் குறைகிறது. கவிஞன் தன் குடும்ப நிலையையும், தன்னையும், குடும்பத்திலுள்ளவர்களையும் கூறுவதன் மூலம் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையே இடைவெளி மிகவும் குறைந்து விடுகின்றது.

''அம்மா சொன்னாள்

ஐம்பது ரூபாய் ரேஷனுக்குப் புரட்ட முடியாத

நீயென்ன பிள்ளை?

வீட்டுக்காரி கேட்டாள்

எப்படி வாழப்போகிறீர்கள் (விக்கிரமாதித்தன் - உள் வாங்கும் உலகம்)

என்ற இக்கவிதை வரிகளில் கவிஞரின் வறுமை பற்றியும், வீட்டிலுள்ளோர் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு கவிஞன் தன் நண்பருடைய வீட்டினைப் பற்றி இவ்வாறு கூறினார்.

''கறுப்பேறிப் போன

உத்திரம்

வீட்டின் வளர்ந்த பிள்ளைகளுக்கு

கையெட்டும்

உயரத்தில்'' (கலாப்ரியா - உலகெங்கும் சூரியன்)

பொதுவான பிரச்சனையை விடத் தனிமனிதனது நிலையினைக் கூறுவதால் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் நெருக்கமாகிறது.

வாசகனுக்குச் சிந்திக்க இடமளித்தல்:-

படைப்பாளன் ஒரு மையத்தினை வைத்துக் கூறி வாசகன் அதை அப்படியே அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைமாறி படைப்பிலிருந்து எந்தவொரு கருத்தினைக் கொண்டும் வாசகன் மையத்தைச் சிந்திக்க முடியும். என்பதன் மூலம் வாசகனுக்கும் படைப்பில் முக்கியத்துவம் தரப்படுகிறது.

''வாடாமல்லிப்பூ மாலைக்கு

வசீகரமில்லை

தனிப் பூவுக்கோ

தாங்க முடியாத அழகு

மண் புழுக்களை நேசிக்கிற

மனம்

இன்றும் இருக்கிறது'' (கல்யாண்ஜி - முன் பின்னில்)

இவைகளிலிருந்து வாசகன் நேரடியான மையத்தினைப் பெற முடியும். அல்லது வாசகனின் மனநிலைக்கு ஏற்ப வேறொரு மையத்தைப் பெற இடமளிக்கிறது.

''அந்தி (போன்ற) நேரங்களில்

மிகச் சுறுக்காகவும்

கறுக்காகவும்

அடிக்கடி திருப்பிக் கொண்டும்

தினந்தோறும் - அது

பறக்கக் காண்கிறேன்'' (கலாப்ரியா - உலகமெலாம் சூரியன்)

இக்கவிதையில் படைப்பாளன் குருவியைப் பற்றிக் கூறினாலும் வாசகன் வேறு பலவற்றைச் சிந்திக்க முடியும்.

பூடகத் தன்மை:-

நேரடியாக மையத்தினைப் பெற முடியாமல் மறைமுகமாகப் பெறுவது, ஏதாவதொரு குறியீட்டின் மூலமாக உணர்த்துவது பூடகத்தன்மை எனலாம்.

''ரத்தம் சுண்டிய

கரப்பான்களும்

ஒட்டுப்பூச்சிகளும்

ஏலக்காய்ச் செடிகளைக்

கெட்டியாய்ப் பற்றிக் கொண்ட

வெளிரிப் போன பல்லிகளும்

இன்னும் சில

ஜ“வராசிகளும்

கூட்டணிகள் அமைத்துப்

போராடத் தயாராயின

ஓட்டுச் சீட்டைக்

கையில்

தயாராய் வைத்துக் கொண்டன (ஆத்மநாம் - ஆத்மநாம் கவிதைகள்)

''வகுப்புக்கு வரும் எறும்புக் கூடு'' என்னும் கவிதையில் வரும் மேல்கண்ட வரிகளை மேலோட்டமாகப் பார்த்தால் இதன் மையத்தைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும். உற்று நோக்கிப் பார்த்தால்தான் இதன் கருவைப் புரிந்து கொள்ள முடியும். இன்றைய சமூகத்திற்குச் சட்டத்தை மதித்து நடக்கும் மக்கள் தான் தேவை. அநியாயத்தை எதிர்த்துக் கேட்கும் எளியவர்கள் நசுக்கப்படுகின்றனர். எனும் கருத்தை மையமாகக் கொண்டு இக்கவிதை உள்ளது.

இவ்வாறு நவீனத்துவக் கவிதைகள் மரபுக்கவிதைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன. எந்தவொரு சிறு விசயத்தைப் பற்றி கூறுவதற்கும் இடமளிக்கின்றது. வாசகனும் ஒரு படைப்பாளன் நிலைக்குச் சிந்திக்க இடமளிப்பதால் தற்கால கவிதைகள் வரவேற்பைப் பெறுகின்றன.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்.

 

தமிழ் நவீன நாடகங்களில் - நடப்பியல் - பா. குமார்

முன்னுரை:-

மேலை நாட்டார் நமக்குத் தந்த இலக்கிய கொடை ''நவீன இலக்கியம் - ''நவீனம்'' என்ற சொல் பழமையின் நிராகரிப்பு என்று பொருள் கொள்ளாமல், புதிய சமூக மாற்றத்திற்கான புதிய கூறுகளின் தோற்றம். பழைய கூறுகளின் உதிர்வு என்று பொருள் கொள்ள வேண்டும். இது காலத்தின் சிருஷ்டி, கலை இலக்கிங்கள் அனைத்துமே அவ்வக்கால வாழ்வின் சித்தரிப்புக்கள் என்பதால் நாடகமும் அது தோன்றும் கால வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும் என் நவீன நாடக ஆசிரியர்கள் கருதுகின்றார்கள்.

அவர்கள் வாழ்வின் போலித்தனங்களையும், அதீத கற்பனைகளையும் வெறுப்பது, அவற்றை மேடையேற்றுவது, அவற்றை பார்வையாளருக்கு உணர்த்திக் காட்டுவது. இம்முயற்சியில் உறுதியாக இருக்கின்றார்கள். நாடகத்திற்கு மேடை, ஒப்பனை, வண்ணவிளக்குகள், காட்சி நிர்மாணம், மேடைப் பொருட்கள் போன்ற அவசியமற்ற ஆராய்ச்சிகளில் இறங்குவதில்லை.

நடப்பியல்:-

நடப்பியல் இயக்கம் இலக்கியத்தை மரபாகிய அடிமைத்தளையின்றும் விடுவிப்பதற்காகத் தோன்றியது. அன்றாட வாழ்க்கை அனுபவங்களை விளக்கி, இயற்கைத் தன்மையை வலியுறுத்துகின்றது என்பர். (1.142) நடப்பியல் படைப்பில் மிகை நவிற்சி அளவாகவே பயன்படுத்தப்படும். ஏதாவது ஒரு உணர்ச்சியையோ, பாத்திரத்தின் தன்மையையோ, அழுத்தமாகப் பதியவைக்க இந்த உத்தி பயன்படுத்தப்படும்.

சோசலிச நடப்பியல்

தனிமனித உணர்வு மாற்றங்களைச் சித்தரிப்பது மட்டுமல்லாமல், சமுதாயத்தை மாற்றவல்ல, சமுதாய உணர்வு மாற்றங்களைச் சித்தரிப்பது சோசலிச நடப்பியலின் தொடக்கம். நடப்பியல் உலகைச் சித்தரிப்பதற்கு நிகழ்காலத்தில் காலூன்றி நின்று உலகை நோக்க வேண்டும். வருங்கால வளர்ச்சியைக் காட்ட, மனித குலத்தின் கனவுகளில் இருந்தும் காட்சிகளில் இருந்தும், கலைக் கூறுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனை நடப்பியலை விட்டு விலகுவதாகவோ, கற்பனை உலகில் சஞ்சரிப்பதாகவோ எண்ணக் கூடாது

நடப்பியலும், குறிக்கோள் கலையும்

இவ்விரண்டும் கவிதை, நாடகம், காவியம், புதினம் முதலிய பல இலக்கிய வகைகளோடு தொடர்புடையன. கலைப்படைப்பின் இயல்பிற்கு ஏற்ற வண்ணம் இவை மிகுந்தோ, குறைந்தோ காணப்படும் என்கிறார் நா. பிச்சமுத்து.

நடப்பியலின் சிறப்புத்தன்மை என்று வரும்போது 1. சுவையாகப் படைக்க முயலுதல் 2. நடைமுறை வாழ்வின் பல பகுதிகளையும் சுவையாக்கிக் கொண்டு விளக்குதல் 3. நிகழ்கால நிலையைக் காட்டுதல் எனக்கூறலாம்.

தமிழ் நவீன நாடகங்களில் - நடப்பியல்

தமிழ்க்கலைகளை - தமிழ்மரபை - அந்தக் காலச் சமூக பொருளாதார பிண்ணனியில் புரிந்து கொண்டு, மாறி வரும் காலச் சூழலுக்கு ஏற்பத் தமிழ் கலைகளை வளர்ப்பதும், அதை நவீனப்படுத்துவதுமான ஒரு பார்வை தமிழுக்குத் தேவைப்படுகின்றது. அது இன்று நவீன நாடகத்துறையில் உணரப்பட்டிருக்கின்றது.

நீதித்துறை விமர்சனம்

''ஞானி'' அவர்கள் எழுதிய ''பலூன்'' நாடகத்தில் நீதித்துறையில் ஏற்படும் முறையற்ற விசாரிப்புக்களை முன்வைத்து தன் கோபத்தை வெளிக்காட்டி இருக்கின்றார். ''வேலியே பயிரை மேய்ந்த கதையாக'' இதை கருத நேரிடுகிறது. மக்களின் அடிப்படை உரிமையைக் கோரும் போராட்டம் நடக்கின்றது. அதில் காவலரின் கட்டு மீறிய அடக்குமுறையால் கலவரத்தைத் தூண்டியவர்கள் இவர்களே என சிங்காரம், ரகு, சத்யன், ஆனந்தன், சபாபதி, உஷா ஆகியோர் நீதி மன்றத்திற்கு வரவழைக்கப்படுகின்றார்கள். இங்கு கேட்கப்படும் வினாக்களுக்கு நேரடியான விடைகளைத் தராமல் தங்கள் அத்துமீறிய கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் ஒரு சான்று.

அரசாங்க வக்கீல் - மேடம் நீங்க சிகரெட் பிடிக்கிறதுண்டா?

உஷா - நான் சாதாரண சிகரெட் பிடிக்கிறதில்ல. கஞ்சா போட்டுத்தான் பிடிப்பேன். அதுதான் என்கேரக்டர்....

ஜட்ஜ் - ஸ்டாப் தன் நான்சென்ஸ், பிஹோப் பிராப்பர்லி திஸ் இஸ் ய கோர்ட் ரூம்

உஷா - தென் வாட்? என் கேரக்டரையும் பிகேவியரையும் பத்தி இவர் என்ன எஸ்டா பிளிஸ் பண்ணப் போறார்? ஒரு சாதாரண பஸ்பேர் ஹைக்காக் கண்டிச்சு ஒரு மிடில் கிளாஸ் பொண்ணு வந்துட்டா, அதை உங்களால பொறுத்துக்க முடியல, இல்ல? ஒங்க வீட்டுப் பொண்ணு ஒங்க பேச்சை மீறிட்டமாதிரி பயம் வருது இல்ல, உங்க டாட்டர்சை மாதிரி நானும் பத்தினிதான். அவங்க வெளியில வரல. நான் வந்திருக்கேன்.

எனும் பகுதியில் நியாமும் தார்மீகக் கோபமும் வெளிப்படுகின்றது. சாதாரண மனித மனத்திற்குத் தோன்றும் நடைமுறையில் உள்ளதை உள்ளபடி காட்டும் சிந்தனைக் கலைக் கூறே நடப்பியல். இங்கு இயல்பான மனித மனக்கோபம் வெளிப்படுவதைக் காட்டியிருக்கின்றார்.

தனி மனிதக் கொடுமை

சென்னைக் கலைக்குழுவால் ''கண்ணகி'' என்னும் நாடகம் உருவாக்கப்பட்டது. உண்மைக் கதையை வைத்து எழுதப்பட்டது. இந் நாடகம் ஒரு காவல் நிலையத்தில், காவல் அதிகாரிகளாலேயே கற்பழிக்கப்பட்ட ஒரு அவலப் பெண்ணின் வாழ்க்கையையும், அதற்குப் பின் அவள் ஒரு புரட்சிப் பெண்ணாக மாறிய எழுச்சியையும், இந்நாடகம் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. நவீன அரசியலில் நவீன மனிதனுக்கு ஏற்படும் கொடுமைகள், சீர்கேடுகள், அவளின் அன்றாடப் பிரச்சினைகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு இக்கலைக்குழு நாடகங்களைத் தயாரித்து சமூகத்தில் நிகழ்த்திக் காட்டுகின்றது.

அரசியல்

மக்கள் நலனைப் பற்றி சிறிதும் அக்கறை கொள்ளாமல், தமக்குள் தாமே ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு, அரசியலை ஒரு பொழுதுபோக்காக்கி, அவரவர் வெற்றி தோல்விகளையே குறிக்கோளாகக் கொண்டு, அப்பாவி மக்களை ஓட்டுப் போடச் சொல்லி, அவர்களைப் பலிகடாக்களாக்கும் அரசியல் வாதிகளின் இயல்பினைச்சுட்டும் வகையில் ந. முத்துச்சாமி அவர்கள் ''நாற்காலிக்காரர்'' எனும் நாடகத்தில் கதைப்பொருளாக்கி இருக்கின்றார். ''சீட்டுக்கட்டு குழு ஒன்று, கோலிக்குண்டு குழு ஒன்று, இரு குழுவினரும் நட்பாகவும் பகையாகவும் ஆட்டம் ஆடுகின்றனர். ஆட்டங்கள் பின்னர் மாற்றிக் கொண்டே செல்கின்றனர். கோஷம் போடற ஆட்டம், வாழ்க - ஒழிக ஆட்டம் தொடர்கிறது. இதில் வெற்றி தோல்வி கண்டுபிடிக்க முயல்கிறார்கள். தொடர்கிறது இறுதியில் பறவை விளையாட்டு ஆடலாம் என முடிவாகிறது.

கூஜாவில் உள்ள குறைந்த அளவு தண்­ரில் கல்லைப்போட்டு தண்­ர் மேலெழும்புவதைக் காணும் ''காக்கை விளையாட்டு'' எட்டுத் திக்கும் சென்று முழுங்குகிறார்கள். கூழாங்கல்லைக் கொடுத்து விரும்பிய வண்ணம் போடச் செய்கிறார்கள். இறுதியில் ஒரு கல் இருக்கிறது அதனை நாற்காலிக்காரரைக் கொண்டு போடச் சொல்கின்றார்கள்.

''சீட்டுக் கட்டுக் கோஷ்டியை எனக்கும் பிடிக்காது. அது நம்ம தேசத்து மரபில்லை, நம்ம தேசத்து விளையாட்டு இல்லை. அது மனிதனை அடிமையாக்குகின்றது. சூதாடியா ஆக்கிடுது. கோலிக்குண்டு நம்ம ஆட்டம், நம்ம தேசத்து கல்தோன்றின காலத்திலேயே அந்த ஆட்டமும் தோன்றியிருக்கனும் அதனாலே நம்ம தேசத்து விளையாட்டாக கோலிக்குண்டு கோஷ்டிக்குத்தான் என் கல் என்று கூறி அந்தக் கல்லைக் கோலிக்குண்டு குழுவினரின் கூஜாவில் போடுகிறார். வெற்றி பெற்ற குழு ஊர்வலம் செல்கின்றது. தோற்ற குழு கூஜாவை உடைத்துவிட்டு, ஒழிக குரலிட்டு, ஒருவரை ஒருவர் உதைத்து அங்குமிங்கும் ஓடுகிறார்கள். இறுதியில் கலவரத்தில் நாற்காலிக்காரர் விக்கி கூக்குரலிடுகிறார். இந்நாடகத்தில் இடம்பெறும் சீட்டு, கோலி, கூஜா, கூழாங்கல் அனைத்தும் குறியீடுகளாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அழுக்கடைந்த சமுதாயத்தைக் காட்டுவது நடப்பியலுக்கு ஒத்தது. அனைத்துலகப் பார்வை இங்கு அமைவதைக் காணமுடிகின்றது.

தலித்தியப் பார்வை

ஒடுக்கப்பட்ட சமூகம் இன்று தன்முகம் காட்டத் தயங்கியுள்ள நிலையில் அவர்களின் உள்ளக் குமுறல்களை நவீன நாடகங்கள் வெளிக்காட்டுகின்றன. ஞானியின் ''பலூன்'' கதையில் அறுவரில் ஒருவன் தாழ்த்தப்பட்ட இனத்தவன். இருபத்தெட்டு வயது இளைஞன் பேசுகிறான்.

''என் பேரு சிங்காரம். நான் ஒரு பறையன். பறையன்னு சொல்லிக்கிடறதுல எனக்கொன்னும் வெக்கம் இல்ல. நான் எதுக்கு வெட்கப்படணும்? ஹரிஜன், கிரிஜன்னு சொல்றதெல்லாம் பிராடு, பறையனும் பள்ளனும் கடவுளோட புள்ளைன்னா அந்தக் கடவுள் ஏன் கோவில விட்டு வெளியே வந்த எங்க நிலைமைய பாக்கல? அப்ப நாங்க என்ன கடவுளோட வெப்பாட்டிக்குப் பொறந்த புள்ளைங்களா? என்று வாதிடுகிறான். ''சுரண்டப்பட்ட வர்க்கச் சார்பினை விளக்குவது'' என்ற நடப்பியல் கோட்பாட்டை இங்கு முன்வைக்கிறார்.

சாதி - மதப் போராட்டம்

சென்னையில் இயங்கிவரும் ''பல்கலை அரங்கம்'' என்னும் நாடகக்குழு ''தீனிப்போர்'' என்ற நாடகத்தை நிகழ்த்திக் காட்டியது. காட்டில் வாழும் குள்ளநரி ஒன்று, காட்டில் உள்ள விலங்குகளையே வேட்டையாடிச் சலிப்புற்று, நாட்டில் உள்ள விலங்குகளைப் பதம் பார்க்க நாட்டு எல்லைக்கு வருகிறது. அத்தருணத்தில் நாட்டிலே வாழ்ந்து சலிப்புற்று, காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாட நாட்டு நாய் ஒன்று காட்டு எல்லைக்கு வருகின்றது. அந்த எல்லையில் முயல் கூட்டங்கள் மேய்வதைக் கண்ட நரியும், நாயும் அவற்றின் மீது பாய, ஒன்றோடு ஒன்று மோதி சண்டையிட்டுக் கொள்கின்றன. இதன் விளைவு காட்டு விலங்குகளுக்கும் நாட்டு விலங்குகளுக்கும் பெருத்த போர் நிகழ்கின்றது. போரின் முடிவில் இவ்விருவகை விலங்குகளும் சைவம் - அசைவம் என்று பிரிகின்றது. இது நாடகத்தின் கதை - இதில் காட்டு விலங்குகளும், நாட்டு விலங்குகளும் சமுதாயத்தின் குறியீடுகள். நம்முடைய சமுதாயத்தில் நிகழும் சாதி மாத போராட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இந்நாடகம் அமைந்திருக்கிறது. இதில் சாதி, மதம், பேதங்களைச் சாடும் சமத்துவச் சமுதாயத்தைக் காண விழைகின்ற மனித நேய நடப்பியல் சிந்தனையைக் காண முடிகிறது.

பெண்ணின் கதை

இந்திராப் பார்த்தசாரதியின் ''கொங்கைத் தீ'' எனும் நாடகம் பெண்ணின் கதையைப் பற்றிப் பேசுகின்றது. இதனைச் சொல்லும் போது

''இச் சமுதாயத்தின் போலிதர்மத்தைச்

சுட்டெரிக்கும்

பெண்மைக் கனல்தான்

கொங்கைத் தீ''

எனக் கதைப் பொருளாகத் தெளிவுப்படுத்துகின்றார். கோவலனைப் பற்றி தேவந்தி சொல்லும் போது

அவரவர் குணமே அவரவருக்கு விதி இது வாழ்க்கையின்

சட்டம்

மாற்ற இயலாது

நிலை கொள்ளா உள்ளம், கோவலன் இயல்பு

என்கிறார். இறுதியில் ''கண்ணகி'' மதுரையை எரிப்பதோடு கதை மடிகின்றது. மீட்டுருவாக்கம் செய்து நவீன இலக்கியப் பாங்கில் இதனை அமைத்திருக்கின்றார். இது போலவே பிரமிள் ''நட்சத்திரவாசிகள்'' எனும் நாடகத்தில் பெண்ணியம் பற்றிச் சொல்லிக் சொல்கின்றனர்.

நகர வாழ்க்கை - நரக வாழ்க்கை

சென்னைக் கலைக்குழுவின் ''மாநகரம்'' என்ற நாடகத்தில் சென்னை வாழ்க்கையின் சீர்கேடுகளைக் கோர்வையாக்கி, நிகழ்ச்சிகளாக மாற்றியிருக்கின்றார்கள். நகர வாழ்க்கையில் போதிய வசதியில்லாமல் அவதிப்படும் ஏழை மக்களின் அவல நிலைகளை நாடகம் உள்ளடக்கமாகக் கொண்டு அமைகின்றது.

அது போல் இவர்களின் ''உரம்'' எனும் நாடகம் ஒரு ஏழை விவசாயிக்கு விவசாயத் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகள், அவனுக்கு உதவுகிறோம் என்று வரும் அரசாங்கத்தால் ஏற்படும் தொல்லைகள் பற்றி நாடகம் பேசுகின்றது. இங்கு அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சனைகளும், நிகழ்வுகளும் விளக்கும் நடப்பியல் தன்மை பேசப்படுகின்றது.

சுற்றுப்புறச் சூழல்

மதுரை நிஜநாடகக் இயக்கத்தினரின் ''சுற்றுப்புறச் சூழல்'' என்ற நாடகம் நகரங்களில் வாழும் மக்கள் சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளால் என்னென்ன அவதிக்குள்ளாகிறார்கள். அதனால் என்னென்ன நோய்கள் வருகின்றன என்ற கருத்தை நாடகம் புலப்படுத்துகின்றது. குறிப்பாக நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள், சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஆகியவை வெளியேற்றும் புகை மண்டலங்களால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதைச் சொல்கின்றது. இது நவீன உலகம் இன்று எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனையாகும். இங்கு சமூக நிகழ்வு இந்நாடகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவரொட்டிகள்

தற்காலச் சடங்குகளில் ஒன்றினைப் பின்பற்றி ''சுவரொட்டிகள்'' என்ற நாடகம் துவங்குகின்றது. ''நோட்டீஸ் ஒட்டக்கூடாது'' என்று எச்சரிக்கை செய்தும், மீறி அதில் ஒட்டுவது என்பது தினசரி நாம் காணும் நிகழ்வாகும். இந்தக் காலத்து சுவரொட்டிகள் உண்மைகளை, உணர்த்துவதற்கு மாறாக உள்ளதைக் குழப்பும் வாசகங்களாக இருக்கின்றது என்பதை இந்நாடகம் காட்டுகின்றது. வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்ட ''சுவரொட்டிக் கலாச்சாரத்தை'' இந்நாடகம் காட்டுகின்றது.

சான்று

முகமூடிய தீட்டிய சுவரொட்டிக்கு அருகே ஏணியில் முகமூடியுடன் ஒருவன் நிற்க, தரையில் தலையாட்டும் பொம்மைகளாக மற்றவர்கள் நிற்பது சமூகத்தை வேலிக்குள்ளாக்குவதாக அமைகிறது. இங்கு சாதாரண ஒரு சுவரொட்டிக் கலாச்சாரம் கதையாக்கப்பட்டு சமூக அவலங்களை பிரதிபலித்துக் காட்டுமுகமாக அமைவது சிறப்பு.

மனநோயாளி

''ருத்ரன்'' என்பவர் எழுதிய ''விசாரணை'' எனும் நாடகம் நடுத்தரவர்க்க திருமணமாகாத இளைஞன் ஒருவன் ஒரு அலுவலகத்தில் தட்டச்சராக வேலை பார்த்து வருகின்றான். அவன் விடுதியில் தங்கி இருக்கின்றான். அவன் விடுதியிலிருந்து புறப்பட்டு அலுவலகம் செல்வது, வேலை பார்ப்பது, மாலையில் அங்கிருந்து விடுதிக்குச் செல்வது. இப்படியே தின வாழ்க்கை ஓடுகிறது. பின்னர் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதால் சமுதாயத்தின் முன் குற்றவாளியாகிறான். அவனது கனவில் அவன் குற்றங்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகின்றது. இறுதியில் அவன் மனநோயாளி என்று நாடகம் உறுதி செய்கிறது.

இவ்வாறு சமுதாயத்தில் மக்கள் ஏதாவது ஒரு வகையில் மனநோய்க்கு சம்மந்தப்பட்டவர்களாகவே உள்ளனர் என்பதை இந்நாடகம் உணர்த்துகின்றது. உளவியல் அடிப்படையில் இந்நாடகம் அமைகின்றது.

நவீன நாடகங்களில் கதைப் பொருள்கள்

நிகழ்கால வாழ்வில் மக்களிடையே ஏற்படும், தற்கொலை, விரக்தி, தோல்வி, தனிமை, நோய், துன்பம், மன உளைச்சல், தியாகம் அறிவுத்தாகம், பெண்ணுரிமை போர், நம்பிக்கை, ஒற்றுமையுணர்வு, அரசியல் போன்றவைகள் இன்றைய நாடகங்களின் கதைப் பொருளாகத் திகழ்கின்றன. நவீன நாடகக்குழுக்கள் எடுத்துக் கொள்ளும் கதைப் பொருட்கள் என்று எடுத்துக்கொண்டோமானால்

1. மனித வாழ்க்கையிலுள்ள அபத்தங்களை வெளிக்கொணர்தல்

2. சமகாலப் பிரச்சனைகளைப் பேசுதல்

3. தற்கால அரசியல் - சமூகச் சீர்கேடுகளைச் சொல்லல்

4. தனிமனிதம் - சமுதாயப் போராட்டங்களின் உரிமை பற்றிப் பேசுதல்

5. மனநோயாளிகளின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல்

6. பழைய புராண - இதிகாச - வரலாற்றுக் கதைகளைச் சமகாலப் பிரச்சனையோடு ஒப்பிடல் என்று அமைகிறது.

முடிவுரை

காலத்தின் தேவையறிந்து அவ்வக்கால மக்களின் விழிப்பிற்கும், மேம்பாட்டிற்கும் எது உதவுவதாக இருக்கின்றதோ அது அக்காலத்தில் நவீனமாகிறது. நடப்பியல் நெறி நவீன நாடகங்களில் வரப்பெறத் துவங்கிவிட்டன. யதார்த்தம் சார்ந்த காலத்தின் தேவைகளை நிறைவேற்றுவதாக இருப்பதால் இதுவே இன்றைய ''நவீனத் தமிழ் நாடக'' மாக இருக்கிறது. இங்கு இயங்குதல், குழுக்கள் தங்களுக்குகென்று ''கருத்துகளை'' வைத்துக் கொண்டு அதனடிப்படையில் நாடகங்கள் நடிக்கப் பெற்று வருவது போற்றுதலுக்குரியது.

நன்றி: தற்காலத் தமிழ் இலக்கியத்தின் புதிய போக்குகள்