‏إظهار الرسائل ذات التسميات ஆய்வுக்கோவை. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات ஆய்வுக்கோவை. إظهار كافة الرسائل

கருப்பும் கறுப்பும்! - தமிழண்ணல்

கருப்பு

கரிய நிறத்தை நேர் பொருளாய்க் குறிக்கும் சொல் "கருப்பு' என்பதே.
கறுப்பு - சினம், வெறுப்பு. அவன் எந்த நேரமும் கறுவுகிறான். கறுத்தோர் - பகைவர், கறுப்பு என்பதற்கு நேர் பொருள் "நிறம்' அன்று. சீற்றத்தால் கறுகறு என்று முகம் கறுத்தலும் சிவத்தலும் உண்டு. அவை நிழற் பொருளாக அரிதிற் பயன்பட்டன.

"கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' - என்ற இலக்கண உதாரணத்திற்கு, அட்டக் கறுப்பிலும் ஓர் அழகுண்டு என்பதாம்.
உரிச்சொல் இலக்கணத்தில்,

""... ... பயிலாதவற்றைப் பயின்றவை சார்த்தி
தத்தம் மரபிற் சென்றுநிலை மருங்கின்
எச்சொல்லாயினும் பொருள் வேறு கிளத்தல்'' (782)

பயிலாதவை - அடிக்கடி பயன்படுத்தாத அருஞ்சொற்கள். அவற்றை அடிக்கடி பயன்படுத்தும் சொற்களுடன் சார்த்தி, எச்சொல்லாயினும் வேறு நிழற் பொருள்களையும் தருதல் பாவலர்க்கு இயல்பு.
கருப்பு என்பது - கரிய நிறம். "வெளிப்படு சொல்லே கிடைத்தல் வேண்டா...'' என்பார் தொல்காப்பியர் (783).

கருப்பு நிறம் என்பது உலகறிந்த பொருள். துங்கக் கரிமுகத்துத் தூமணியே, கரு நெடுங்கண்ணி, கருவிழி, கரிகாலன், கருங்கனி நாவல், கருங்கார் குறிஞ்சி, கருங்குழலி, கார்வண்ணன், கரிது, கரி, காரி இவற்றில் எல்லாம் வல்லினத்தைப் போட்டுப் பாருங்கள். தொடர்புடைய சொற்கள் எல்லாம் கருப்பு என்பதிலிருந்தே கிடைக்கின்றன. 

கறுப்பு

"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' (தொல்.855)

வெகுளி - கடுங்கோபம். இது சினத்தல், பகைத்தல். நிற்கறுத்தோர் அரணம் போல' - பகைத்தவரின் கோட்டை போல. "நீ சிவந்து இறுத்தி' (பதிற்-13) நீ சினந்து முற்றுகையிட்ட. "நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப' (856) நிறத்து உரு - நிறம் வேறுபடல் (கோபத்தால்). சீற்றத்தால் நிறமாற்ற மேற்படல் இயல்பு. கறுத்தோர் - பகைவர். மேகம் வானில் திரண்டு கறுப்பதுண்டு. நிறம் மாறி, கறுத்துக்கொண்டு வரும். "வானம் மாமலை வாழ்சூழ்பு கறுப்ப' (குறிஞ்சி-22) இது கருநிறம் மட்டுமன்று; மிக முற்றிய கருநிறம். "கவ்வை கறுப்பு' (அகம்.366) எள்ளின் இளங்காய் முற்றிய நிலை. அது கருநிறமாய் மாறிவருவது காட்டும். கவ்வை - எள்.

சினம் முற்றிய நிலையில் முகம் கறுத்துப் போகும். அல்லது கண்ணும் கன்னமும் எல்லாம் சிவந்து போகும். பயிர் முற்றிய நிலையில் நிறம் மாறிக் காட்டும். இது கருப்பு அன்று என்பதற்கே ஆசான் "நிறத்துஉரு' என்று குறிப்பிட்டுள்ளார். "எச் சொல்லாயினும் வேறு பொருள் கிளத்தல்' என்றபடி வந்தது இது. இது இடமும் சூழலும் நோக்கிக் கொள்ளப்பட வேண்டியது.

கருநிறத்தைக் குறிக்கும் கருப்பு நிலையானது. கறுப்பு, சிவப்பு இடம், சூழல் போன்றவற்றால் "நிறத்துரு' - தோற்றம் பெறும்; பிறகு மாறிவிடும். கறுப்பணசாமி என்றது கடுங் கோபக்காரச் சாமி என இடம் நோக்கிப் பொருள் கொள்ளவே ஆகும்.

"நின் புதல்வர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனை என்னுடன் அனுப்பு' என்றுதான் விசுவாமித்திரர், தயரதனிடம் கேட்கிறார்.

இன்றைய நிலையில் கருப்புப் பணம் என்பதற்கு இடையின "ரு' போடுவதுதான் பொருத்தமாக அமையும். "கறுப்புப் பணம்' என்று எழுதினால் உண்மையான பொருள் பொருந்தி வராது.

நன்றி - தமிழ்மணி

21-ஆம் நூற்றாண்டிலும் தொல்காப்பியம் - புலவர் சு.தி.சங்கரநாராயணன்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழரின் மரபுத் தொடர்களைத் தொகுத்து தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார். அவருக்குப் பின் பல நூறு ஆண்டுகள் கழித்து வந்த இளம்பூரணரும், சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் தத்தம் உரைகளில் தொல்-சூத்திரங்களுக்கு எடுத்துக்காட்டுக்களாகத் தென்பாண்டி நாட்டு வழக்குச் சொற்களைத் தந்துள்ளனர். உரையாசிரியர்கள் சுட்டிக்காட்டிய அந்த மரபுத் தொடர்கள் இன்றும் நெல்லைச் சீமைப் பேச்சுவழக்கில் உள்ளன.

கேட்டையா - கண்டையா

உண்மையல்லாத ஒன்றைச் சொல்லும் ஒருவருடைய கருத்தை மறுக்கும்பொழுது, ""அதை நீ... கேட்டையா... இல்ல... நீ கண்டையா...'' என்று பேசுவது தென்பாண்டி நாட்டின் சிற்றூர் மக்களிடையே இன்றும் கேட்கலாம்.

""கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல்வழி
முன்னுறக் கிளந்த இயல்பா கும்மே.''
(தொல்.சொல். எச்-சூ.30)

""கேட்டை எனவும், நின்றை எனவும், காத்தை எனவும் கண்டை எனவும் வரும் அம்முன்னிலை வினைச்சொல் நான்கும் முன்னிலைப் பொருளை உணர்த்தி நில்லாக்கால் மேற்சொல்லப்பட்ட அசை நிலையாம். இவையும் கட்டுரைக்கண் (பேச்சு வழக்கில்) அடுக்கியும் சிறுபான்மை அடுக்காதும் வந்து ஏற்புழி அசைநிலையாய் நிற்கும். இவையும் இக்காலத்து அரிய; இவை சிறுபான்மை வினாவொடு வருதலும் கொள்க''- இவ்வாறு நச்சினார்க்கினியர் உரை விளக்கம் தந்துள்ளார்.

""நின்றை, காத்தை - என்பன இக்காலத்துப் பயின்றுவாரா'' - எனச் சேனாவரையர் கூறுகிறார். அதனால், அவர் காலத்தில் கேட்டை, கண்டை எனும் இரு சொற்கள் மட்டும் பயின்றனவாகக் கொள்ளலாம்.

ஆகவே, தொல்காப்பியர் சுட்டிக்காட்டிய கேட்டையா, கண்டையா எனும் மரபுச் சொற்கள் இன்றும் பேச்சு வழக்கில் இருப்பது வியப்புக்குரியது!

பெண்டாட்டி

உயர்திணைப் பெயர்களை வழங்கும் முறையைத் தொல்.சொல்.பெயரியல்-சூ.9 கூறுகிறது. அதில் வரும் ""பெண்மை அடுத்த இகர இறுதி'' என்பதற்குப் "பெண்டாட்டி' என்றே இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் உரை விளக்கம் தந்துள்ளனர்.

அம்மூவனார் பாடிய ஐங்குறுநூறு, செய்.113-இல் உள்ள ""ஊரார் பெண்டென மொழிப'' என்பதையும், மருதன் இளநாகனார் பாடிய கலித்தொகை, செய். 77-இல் உள்ள ""என்னை நின் பெண்டெனப் பிறர் கூறும் பழிமாறப் பெறுகற்பின்'' என்பதையும் நச்சினார்க்கினியர் மேற்கோளாகத் தந்துள்ளார்.

நெல்லைச் சீமைச் சிற்றூர் மக்கள் இன்றும் தாம் சந்திக்கும் உறவினர்களிடம் ""வீட்டிலே பெண்டு பிள்ளைகள் நல்லா இருக்காங்களா'' என நலம் கேட்பது சங்க இலக்கியத் தொடர்கள் அல்லவா! தொல்காப்பியரும் உரையாசிரியர்களும் வழங்கிய பெண்டு, பெண்டாட்டி எனும் சொற்கள் இன்றைய நாளிலும் நம்மிடையே வழக்கத்தில் உள்ளது.

பெண் மகன்

""எல்லாரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
எல்லீரும் என்னும் பெயர்நிலைக் கிளவியும்
பெண்மை அடுத்த மகனென் கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்''
(தொல்.சொல்.பெயரியல்.சூ.10)

""புறத்துப்போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண்பாலரைப் "பெண் மகன்' என்று வழங்குப; பிறவும் அன்ன'' இவ்வாறு உரை தருகிறார் இளம்பூரணர். ""கட்புலன் ஆயதோர் அமைதித் தன்மை அடுத்து, நாணுவரை இறந்து, புறத்து விளையாடும் பருவத்தான் பால் திரிந்த பெண் மகன் என்னும் பெயர்ச் சொல்லும், பெண் மகன் என்பது அத்தன்மையாரை அக்காலம் (தொல்காப்பியர் காலம்) அவ்வாறே வழங்கினராயிற்று. இங்ஙனம் கூறலின்'' - என விளக்கம் தருகிறார் நச்சினார்க்கினியர்.

""புறத்துப் போய் விளையாடும் பேதைப் பருவத்துப் பெண் மகளை மாறோகத்தார் (கொற்கை சூழ்ந்த நாடு) இக்காலத்தும் பெண் மகன் என்று வழங்குப'' என விரிவுரை தந்துள்ளார் சேனாவரையர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டத்தில் கொற்கைக்கு வடக்கே கடற்கரையை அடுத்ததாக மேல்மாந்தை எனும் ஊர் உள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் "மாறாந்தை' எனும் ஊர் உள்ளது. இவை சங்க காலத்துக் கொற்கை சூழ்ந்த மாறோகம் எனும் பகுதியின் இன்றைய எச்சங்களாகும். இங்கேதான் பெண் மகன் என்ற மரபுத்தொடர் வழங்குவதாகச் சேனாவரையர் குறிப்பிடுகிறார். பெண்மையை வீரத்தின் விளைநிலமாக்கிய மகாகவி பாரதியாரும் மாறோகத்தாரே!

பெண்ணுக்குப் பெருமை சேர்த்தது தொல்காப்பியர் காலம். இன்றும் அவர் காலம் ஒளிவீசக் காண்கிறோம். ஆகவே, இந்திய வரலாற்றுப் பெண் மகன்களான ஜான்சி ராணி, சரோஜினி நாயுடு, விஜயலட்சுமிப் பண்டிட், இந்திரா காந்தி, ராணி மங்கம்மாள், தில்லையாடி வள்ளியம்மை முதலியோரையும் தொல்காப்பியர் கூறும் தமிழ் மரபு வழியே "மாறோகத்தார்' எனும் தென்பாண்டி நாட்டாரின் வழக்கப்படி பெண்மகன்கள் என்று கூறி மகிழ்வோம்.

நன்றி - தமிழ்மணி

தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? - முனைவர் தெ.தேவகலா

ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்

தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள்.   அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம்.  உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.

புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த  சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.

சிந்துவெளி நாகரிகம்:

சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.

சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:

ஆரியர் நகர  வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர்.  நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர்.  கிணறு, குளியலறை,  கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.

2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது.  சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது.  கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன.  ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.

3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும்             பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது.  சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன.  ஆனால்             தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.

4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.

5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.

6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.

7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது.  சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)

9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.

10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை.  ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )

11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது.           ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.

12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர்.  ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.

‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.

கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).

சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.

அண்மைக் காலங்களில்.   டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.

சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (ndian Express - Madras - 5 August 1994)

Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த  நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.

தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.

சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.

பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும்  உலக நாடுகளில் காணப்படும்  தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும்  எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்)  அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”
புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்

'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.

சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.

புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.

சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும்.  அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.

எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.

சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.

பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,

வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது.  கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.

எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.

நதிகள், மலைகளின் பெயர்கள்

நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai),  புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.

கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.

பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.

தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.

இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.

இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும்  பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:

2 - பூம்புகார்

அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.

18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.

''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.

கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.

இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.

இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.

இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.

இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.

சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.

மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.

மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.

சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்

கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2.  மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.

3.  சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.

4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)

5.  குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.

6.  கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.

7.  புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.

8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.

9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.

10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.

11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.

12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.

13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆய்வுகளின் நம்பகத் தன்மை:

இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.

2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.

3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.

4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.

5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க,  ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.

6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.

7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.

ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.

2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.

3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில   தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.

4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர்     கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

6.  தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில்             வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.

7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.

8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.

9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.

10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.

11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.

13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.

14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.

15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.

16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.

17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.

18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல்             பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார்.  இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).

19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.

(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.

ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.

மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)

நன்றி - கீற்று மார்ச் 2011

கண்ணகி மானுடப் பெண்ணல்ல கட்டுரைக்கு மறுப்பு - மரபின்மைந்தன் முத்தையா


ஓம் சக்தி டிசம்பர் – 2011 இதழில் பேராசிரியர் திரு.இராம.இராமநாதன் அவர்கள் எழுதிய “கண்ணகி மானுடப்பெண் அல்ல என்னும் கட்டுரை, பொறுப்பாசிரியரின் பலத்த பீடிகையுடன் வெளியாகியுள்ளது.
முன் முடிவுகளுடன் சிலப்பதிகாரத்தை அணுகி, காவிய ஆசிரியரின் இயல்பான வெளிப்பாடுகளுக்கும் கட்டுரையாசிரியர் வலிந்து பொருள் கொண்டிருக்கிறார். மாநகர்க்கீந்தார் மணம் என்பது ஊர்மெச்ச நடந்த திருமணம்தானே தவிர, ஊருக்காக நடந்த திருமணம் அல்ல.

காரைக்காலம்மையார் வரலாற்றைப் பாடுங்கால் தெய்வச் சேக்கிழார்,

தளிரடிமென் நகைமயிலைத் தாதவிழ்தார் காளைக்குக் களிமகிழ் சுற்றம் கூரக் கல்யாணம் செய்தார்கள்
என்று குறிப்பால் உணர்த்தியிருப்பார். அது பொருந்தாத் திருமணம். கண்ணகி- கோவலன் திருமணம் அப்படியல்ல. அவர்கள் இருவரும் தீவலம் செய்வதைக் காண்பார் கண்கள் தவம் செய்திருக்க வேண்டும் என்கிறார் இளங்கோவடிகள்.

கண்ணகியின் விருப்பத்திற்குரிய கணவனாகவே கோவலன் இருந்ததை,

கய மலர்க் கண்ணியும் காதல் கொழுநனும் என்னும் சொற்றொடரால் அறியலாம்.
கையற்று என்ற சொல்லைக் கட்டுரையாசிரியர் பொருள் கொள்ளும் விதம் பொருந்தாது என்பதை அப்பாடலின் அடுத்த வரியே புலப்படுத்தும்.

தீராக் காதலின் திருமுகம் நோக்கி என்கிறார் இளங்கோவடிகள்.

கதிர் ஒருங்கிருந்த காட்சி போல என்பதோ ஒருபுடை உவமை. கதிரும் நிலவும் சேருமா என்ற கேள்வி இங்கே எழ வாய்ப்பில்லை. அவ்வாறாயின் கண்ணனை, “கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் என ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் பாடுகிறாரே இது தவறா?

குறியாக்கட்டுரை என்பது துறவியாகிய இளங்கோவடிகளின் கவிக்கூற்றேயன்றி வேறல்ல.

கோவலன் கண்ணகி மாலைகள் கசங்கியது “கூடும் இன்பத்திற்கான முயற்சி என்று பொருள் கொள்வது விசித்திரத்திலும் விசித்திரம். “மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு? கட்டில் மேலே நசுங்கத்தான் என்றொரு திரைப்பாடல் கூட உண்டு.

கண்ணகியும் கோவலனும் பேசிக் கொள்ளவில்லையெனில்
அளிய தாமே சிறு பசுங்கிளியே
குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின

என்று கோவலன் கூற்றாக இளங்கோவடிகள் பாட வேண்டிய அவசியமென்ன?

இருவரும் இணைந்து இன்பம் துய்த்ததை “தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள் என்ற வரிகளால் இளங்கோ தெளிவுபடுத்துகிறார். கணவனைச் சற்றும் மறவாத அன்புடன் இல்லறக் கடமைகளைக் கண்ணகி ஆற்றி சில ஆண்டுகள் குடும்பம் நடத்தினாள் என்பது இளங்கோவடிகள் வாக்கு.

மறப்பருங் கேண்மையோ டறப்பரி
சாரமும் விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்
வேறுபடு திருவின் வீறுபெறக் காண
வுரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க
யாண்டுசில கழிந்தன விற்பெருங் கிழைமயிற்
காண்டகு சிறப்பின் கண்ணகி

இந்த வாழ்க்கை நிலையில்லாததென்பதால் இருக்கும் போதே அனுபவிக்க வேண்டுமென்பது போன்ற வேகத்தில் இருவரும் இன்பம் துய்த்தனர் என்கிறார் இளங்கோவடிகள்.

தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து – நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல்
நிலையாமை கண்டவர் போல் நின்று.

கூட்டம் நடந்திருந்தால் இருவரும் உறங்கியிருப்பார்களே என்று பேராசிரியர் சொல்வது வேடிக்கை. அது கூட்டத்துக்கு முந்தையதாகிய முன்னிகழ்வின் அங்கம் (Foreplay).

சாலினித் தெய்வம் ஆவேசித்து அவளை “கொங்கச் செல்வி குடமலையாட்டி என்கிற இடத்தை வைத்துக் கொண்டு, “உலகில் மற்றவர்களுக்கெல்லாம் கண்ணகி தெய்வமாகவே தெரிவதாக அடிகள் சுட்டுவர் என்பது அடிப்படையே இல்லாத தகவல். சாலினித் தெய்வம் மட்டுமே சொல்வது எப்படி உலகத்தவர் எல்லாம் சொல்வதாகும்?

கண்ணகி கோபத்துடன் வருவதைப் பார்க்கும் காவலன் பேசுவது அவளுக்குள் இருக்கும் தெய்வாம்சத்தை உணர்ந்ததன் விளைவல்ல. இன்றும் கோபமுற்ற பெண்களை “பத்திரகாளி போல என்கிறோம். ஊரார் அவளைத் தெய்வம் என்றது அவளுக்குள் இருந்தெழுந்த ஆவேசத்தின் எழுச்சி கண்டுதான். அதுவரை மானிடப்பெண்ணாக இருந்த கண்ணகி தன்னுள் இருந்த தெய்வாம்சத்தைப் படிப்படியாக உணர்கிறாள். அது வஞ்சிக் காண்டத்தில் முற்றுப் பெறுகிறது.

கோவலன் இறப்பின் பின்னரே அந்தப் படிநிலை எழுச்சி காணப்படுகிறது. புகாரில் குடும்பம் நடத்தும்போது இயல்பான மானிடப் பெண்ணாகவே கண்ணகி இருக்கிறாள்.

கன்னிப் பெண்தான் கடவுளாக முடியும் என்கிற கருத்து பிற்போக்குத் தனமானது. கன்னிமைக்கும் கடவுட்தன்மைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. வாழ்வாங்கு வாழ்பவர்களை மற்றவர்கள் தெய்வமாக்குவார்கள்.
கண்ணகி அப்படி வாழ்ந்தவள். மற்றபடி கண்ணகிக்கு பேராசிரியர் செய்து முடித்திருக்கும் கன்னிமைப் பரிசோதனை ஆதாரமில்லாதது. அவசியமில்லாததும் கூட.

நன்றி - ஓம் சக்தி ஜனவரி 2012

கண்ணகி மானுடப் பெண் அல்ல! - பேரா. இராம. இராமநாதன்


சிலப்பதிகாரத்தின் முதன்மைத் தலைவன் கோவலனே. முதன்மைத் தலைவி கண்ணகியே. இக்காப்பியம் இருவரின் குடும்ப வாழ்க்கையையே அலசுகிறது. குடும்ப வாழ்க்கை தொடங்கும்போது கோவலனின் வயது பதினாறை நெருங்கிக் கொண்டிருந்தது எனச் சிலம்பு பதிவு செய்கிறது. பதினாறு வயதிற்கு முந்திய இளமை வாழ்க்கையைச் சிலம்பு காட்டவில்லை. குடும்ப வாழ்க்கை தொடங்கி அவ்வப்போது நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளின் வழியாகவே கோவலனின் இளமை வாழ்க்கையை, ஆய்ந்து பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இக்காப்பியம் வரலாறு கூறுவதால்தான் அதன் பிறப்புத் தொடங்கி, வளர்ப்புப் படிநிலைகளைச் சொல்ல வேண்டியதாக உள்ளது. சில உயர்ந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்தத் திட்டமிட்டுச் செய்த காப்பியம் இது. ஆதலால் நாடகப் பாங்கில் தொடங்கி, அறிவூட்டுவதற்கு வேண்டிய நிகழ்ச்சிகளை நிரல் படுத்தாமல் ஆர்வத்தைத் தூண்டுமாறு ஆங்காங்கே வளர்த்து இளங்கோவடிகள் பின்னியுள்ளார்.
எனவே நிகழ்ச்சிகளின் வழி அறியும் செய்திகளிலிருந்து கோவலன் & கண்ணகி இளமை வாழ்க்கையைப் பற்றி ஊகப்படுத்தியே அறிய வேண்டியுள்ளது.

கி.பி. 2&ஆம் நூற்றாண்டு சிலப்பதிகாரம் தோன்றிய காலம் என்று ஆராய்ச்சியாளர்களால் கூறப்பட்ட காலத்தையே எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலத்தில் தமிழகம் எவ்வாறு இருந்தது? தமிழ் மக்கள் ஒழுகலாறுகள் எவ்வாறு இருந்தன? சிலப்பதிகாரத்தில் உள்ள பல பழக்க வழக்கங்கள் இன்றளவும் தமிழ் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. என்றாலும் இளங்கோவடிகள் தெரிவிக்க விழைந்த சில அடிப்படை உண்மைகள் மறக்கப்பட்டோ அல்லது உணரப் பெறாமலோ உள்ளனவோ என்ற எண்ணம் என்னுள் எழுவது உண்டு. அவற்றைப் பற்றியும் சிந்திக்க எண்ணுகின்றேன்.

போகநீள் பூகழ் மன்னும் புகார் நகரில் வான்நிகர் வண்கை மாநாய்கன் குலக்கொம்பாகக் கண்ணகி தோன்றினாள். பன்னிராண்டு வயதுடையவள். திருமகளைப் போன்ற வடிவுடையவள். இவள் நிறம் அருந்ததியை ஒத்தது. இவள் பெயர் பெருங் குணங்களாலேயே நிலைபெற்று விளங்கிற்று. இவளுடைய இளமை வாழ்க்கை பற்றி அடிகள் பதிவு செய்யவில்லை. எவ்வாறு பெற்றோர்களால் வளர்க்கப் பெற்றாள் என்றும் தெரியாது. கல்வி உண்டா? தெரியவில்லை. ஆனால், ஒன்றுமட்டும் உறுதி. குடிமைப் பண்பும், குலக்குணமும் நிறைந்து விளங்குமாறு இவள் வளர்க்கப்பட்டுள்ளாள் என்பது மட்டும் உறுதி.
கோவலன் கண்ணகி திருமணம் பெற்றோர் முடிவு செய்து சடங்குகளுடன் நடந்துள்ளமை குறிக்கத் தக்கது. ஒருவரை ஒருவர் பார்த்து ஒருமைப்பட்டுப் பெற்றோரிடம் தெரிவிக்க நடந்த திருமணம் என்றுகூறக் குறிப்பேதும் இல்லை. மாநகரில் சடங்குகளை நடத்தி மணம் ஈந்தார் பெற்றோர் என்பது மட்டுமே பதிவாகியிருக்கிறது. பெற்றோர் கற்பு நெறிப் படுத்தியுள்ளனர் என்பதும் தெளிவு. இதனைத் தொல்காப்பியர் கற்பியலில், கற்பெனப்படுவது கரணமொடு என்று சுட்டுவார்.

சிலப்பதிகாரக் காலத்தில் கடவுள் நம்பிக்கை என்ற கருத்துண்மையை முதலாவதாக எடுத்துக் கொள்ளலாம். அடிகளே கடவுள் நம்பிக்கை உடையவராகவே தெரிகின்றார். சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவி என்று கண்ணகியை அடிகள் யாண்டும் எடுத்துக் கூறவில்லை. அறிமுகப்படுத்தும் முதற்பாத்திரமாகத்தான் கண்ணகியை அவர் புலப்படுத்துகின்றார். இயல்பாகவே கடவுள் வாழ்த்து என்ற தொடக்கத்தை அடிகள் பின்பற்றவில்லை. சிலப்பதிகாரக் காப்பியத்திற்கு முன்பு பல காப்பியங்களும் நூற்களும் தமிழில் இருந்திருத்தல் வேண்டும். அவற்றில் கடவுள் வாழ்த்து இருந்தமை அறிய முடியவில்லை. சங்க இலக்கியத்திற்குப் பின்னர் வந்த பனம்பாரனார் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த்ததாகக் கூறுவர். ஆனாலும், இளங்கோவடிகளுக்குக் கண்ணகியைத் தெய்வமாகவே அறிமுகப்படுத்தும் பாங்கு இங்கு நினைக்கத் தக்கது.

அவளுந்தான், போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும் பெயர்மன்னும் கண்ணகி என்று கண்ணகியை பெண்கள் வழிபடும் ஓர் ஒப்பற்ற தெய்வமாகவே கூறுவது இங்கு நன்குச் சிந்திக்கத் தக்கது. பெண்கள் அழகைப் பாராட்டலாம். அவள் அறிவைப் பாராட்டலாம். ஆனால், அடிகளோ பெண்கள் அவளைப் பார்த்தவுடன் கையால் தொழுது வணங்கினர் என்பது தமிழகத்தில் சிறுதெய்வ வழிபாட்டிற்குத் தொடக்கமாகக் கருத இடம் தருகின்றது. இளங்கோவடிகள் கண்ணகியைக் கோவலன் மனைவியாகக் கூறினாலும் கோவலனும் அவளைத் தன் மனைவி என்று கருதி முதலிரவில் அவளோடு இன்பம் துய்க்க முயன்றான் என்பதும் சிலப்பதிகாரத்தில் மனையறம்படுத்த காதையில் சொல்லப்படுகிறது. ஆனாலும் கண்ணகிபால் கோவலன் தான் விரும்பிய கூட்டத்தைப் பெற முடியவில்லை என்பதும் அடிகளால் இலைமறைக் காயாக உணர்த்தப்படுகிறது. இங்கு, அடிகளின் சொற்களை நாம் கூர்ந்து பார்த்தல் இன்றியமையாதது. கண்ணகியின் பெற்றோரும் கோவலனின் பெற்றோரும் தாங்களாகவே விரும்பித் தங்கள் குடும்பங்களுக்குள் ஓர் ஒத்த உறவை ஏற்படுத்திக் கொள்ளவே இவர்கள் திருமணம் ஊர்மெச்ச நடந்தது என்பதை, இருபெருங் குரவரும் ஒரு பெரு நாளால் மணவணி காண மகிழ்ந்தனர் என்றும், மாநகர்க்கீந்தார் மணம் என்றும் அடிகள் கூறுவதும், இத்திருமணம் மனம் ஒத்த மணமக்களுக்காக நடந்ததாகக் கூறாமையும் கருதத்தக்கது. கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணத்திற்கு முன்பு தொடர்பு இருந்ததாகக் கூறப் பெறவில்லை. திருமணம் முடிந்த முதல்நாள் இரவுதான் இருவரும் தனியாகச் சந்திக்கின்றார்கள். மனமொத்த மணமக்களாய் இருந்தால் இருவரிடையேயும் ஏதாவது கருத்துப் பரிமாற்றம் இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இங்குக் கோவலன் மட்டுமே பேசுகின்றான். கண்ணகி மறுமொழி ஏதும் கூறவில்லை. இதனை நம் ஆராய்ச்சியாளர்கள் அது பெண்மையின் அடக்கம் என்று பெருமையாகக் குறிப்பிடுகின்றனர். இக்கூற்றும் மனையறம்படுத்த காதையும் மீள்பார்வைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.

கோவலன் கண்ணகியிடம் கூறுவன அனைத்தும் குறியாக் கட்டுரை என்றும் உலவாக் கட்டுரை என்றும் அடிகள் கூறுகின்றார். மாசறு பொன்னே, வலம்புரி முத்தே என்று தொடங்கிக் கோவலன் பேசியவை அனைத்தையும் இங்கு நோக்குதல் வேண்டும். நடைபெற வேண்டியது புது மணமக்களின் மண வாழ்க்கைத் தொடக்கம். கவிஞர் கண்ணகியையும் கோவலனையும் அந்த இன்பமான நேரத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை கதிர் ஒருங்கிருந்த காட்சி போல என்று சூரியனும் நிலவும் ஒன்றாக இருப்பது போல இருந்தனர் என்று கூறுகின்றார். அதாவது எது உலகில் நடவாதோ, அதாவது சூரியனும் நிலவும் ஒரு காலத்தும் இணைந்து ஒரே இடத்தில் இருக்காது. அதனைக் கண்ணகி & கோவலன் இணைந்திருப்பதற்கு உவமையாகக் கூறுவதிலிருந்து நடக்க இயலாத ஒன்றினை உவமையாகக் கூறுவதால், மணமக்கள் இருவரும் இணைந்திருக்கப் போவதில்லை என்பதைக் குறிப்பால் விளக்குகிறார் எனலாம்.

அடுத்து நடைபெற வேண்டிய கூடும் இன்பம் எனும் கூட்டம் பற்றிய செய்தி சொல்லப்படுகிறது.
கோவலன் அணிந்திருந்த மாலையும், கண்ணகி அணிந்திருந்த மாலையும் நன்றாகக் கசங்கிப் போயின என்று தெளிவாகக் கூறுகிறார். கோவலனும் கண்ணகியும் கூடும் இன்பத்திற்குப் பெரிதும் முயன்றிருக்கின்றார்கள் என்று தெரிகிறது. இருவரும் கட்டிப் புரண்டதால் இருவரும் அணிந்திருந்த மாலைகளும் நன்றாகக் கசங்கிப் போயின என்று தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால், மணமக்கள் இருவரும் புணர்ச்சி நிறைவுற்று மனம் மகிழ்ந்தனரா? என்றால், இங்குதான் கூட்டம் நிகழவில்லை என்பதை அடிகள் கையற்று என்ற ஒரு சொல்லால் விளக்குகின்றார். கையறு நிலை என்றால், ஒன்றை இழத்தலால் தோன்றும் இயல்பு ஆகும். இங்கு என்ன இழக்கப் பெற்றது என்றால், கோவலன் கண்ணகி கூட்டம் (இன்பம்) இழக்கப் பெற்றது என்பதே ஆகும். அந்திமாலைச் சிறப்புச் செய் காதையிலும் கண்ணகியைக் குறிப்பிடும்போது கையறு நெஞ்சத்துக் கண்ணகி என்றே இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

கோவலன் தன் காதல் வேட்கை தீராமையால்தான், அதைத் தணிக்கும் பொருட்டுக் கண்ணகியைப் பார்த்துப் பேசித் தன் நிறைவேறாத காதலைப் போக்கிக் கொள்ளுகின்றான். இதனால்தான் கோவலன் கண்ணகியை நோக்கிப் பேசியவை அனைத்தும் உலவாக் கட்டுரை என்றும், அவன் பேசி முடிக்கும்போதும் குறியாக் கட்டுரை என்றும் அடிகள் தெளிவுபடக் கூறுகின்றார். இதனைத் தொல்காப்பியமும் …கைக்கிளைக் குறிப்பே என்று புலப்படுத்தும்.

மனையறம் படுத்த காதையுள் இருவருக்கும் கூட்டம் நடந்திருந்தால் மணமக்கள் இருவரும் அயர்ந்து உறங்கியிருப்பார்களே தவிர நீண்ட உரையாடல் நிகழ வாய்ப்பில்லை என்பதும் அறிவியலார் துணிபும் ஆகும். மேலும் கோவலன் கண்ணகி இருவரின் இல்லற வாழ்க்கை பற்றி நாம் நூலுள் விரிவாக அறியுமாறு இல்லை. குறிப்பாகச் சில செய்திகள் நாம் உய்த்துணரத்தக்க வகையில் உள்ளன. இருவரது திருமண வாழ்க்கையில் சில ஆண்டுகள் கழிந்தன என்பதால், அந்த மண வாழ்க்கை மகிழ்ச்சிக்கு உரியதாகத் தோன்றவில்லை. கண்ணகி என்னவோ படைப்பால் மானிடப் பெண். அதற்குரிய இயல்பான நடைமுறைகளை உடையவளாகவே வருணிப்பார். மணமக்கள் இருவரையும் தனி வீட்டில் வேறு வைக்கிறார்கள். பதினெட்டு வயதுக் கோவலன் புணர்ச்சி வேட்கையின் பொருட்டு நடன மங்கை மாதவியைச் சேருகின்றான். கண்ணகி தனியளாய்த் தன் வீட்டில் வாழும்போது கோவலனின் பெற்றோர் அவளைப் பார்க்க வரும்போது வாயால் முறுவல் செய்தனள் என்று கூறுவார். உண்மையில் அவளுக்கு இன்பமான வாழ்க்கை இல்லை என்பதையே இக்குறிப்பும் உணர்த்துகின்றது. கோவலனோடு மெய்யுறு இன்பம் கண்ணகி பெற்றிருந்தால், நூலுள் எங்காவது அவள் சுட்டியிருப்பாள். கண்ணகிக்குத் தேவந்தி என்றொரு தோழி இருந்தாள். தன் தோழி தேவந்தியிடம் நள்ளிரவில் தான் கண்ட கனவு பற்றிக் குறிப்பிடும்போது, கோவலனைத் தன் கைப் பற்றியவன் என்று மட்டும் குறிப்பிடுவதோடு என் மனம் பற்றியவன் என்று குறிப்பிடாமையும் அவளுடைய தொடர்பு, அவனைத் தன் பெற்றோர் மணம் செய்து வைத்த உறவு மட்டுமே என்பது, மானுட வாழ்க்கை வாழ்வதால் இக்கால மரபிற்கேற்ப ஒரு குடும்பப் பெண் எப்படியெல்லாம் நடக்க வேண்டுமோ அப்படியெல்லாம் நூல் முழுவதும் வாழ்ந்து காட்டுகிறாள். ஊருக்காகச் செய்யப்பட்ட திருமணம் என்பதைத் தவிர, மணமக்கள் கோவலனும், கண்ணகியும் ஒரு நாளாவது இன்பம் துய்த்தனர் என்றோ, கண்ணகியோ அல்லது கோவலனோ யாண்டும் இருவரும் மீண்டும் கூடி வாழ்ந்து இல்லற இன்பம் துய்க்க விரும்பியதாக, எண்ணியதாகக் கூடக் குறிப்பேதும் இல்லாமை நோக்கத்தக்கது.

தான் ஒரு பத்தினித் தெய்வம் என்றோ, தன்னிடம் அளவற்ற ஆற்றல் உண்டு என்றோ அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தான் மதுரைக்குச் சென்று பொருளீட்டி, இழந்த பொருளை மீட்க எண்ணும் கோவலன் கண்ணகியோடு மதுரையில் குடும்பம் நடத்தி மகிழ விரும்பியதாகவும் கூறாமை நோக்கத் தக்கது.
இவ்வாறு தாமரை இலைத் தண்ணீராக வாழ்க்கை நடத்த வேண்டிய நலைக்குக் காரணம் என்ன? முன்பு குறிப்பிட்டவாறு கண்ணகியைப் பெண்கள் தொழுது ஏத்தினர் என்பதும், வேட்டுவ வரியில் தெய்வம் ஏறிய வேட்டுவ மங்கை கண்ணகியைப் பார்த்து, இவளோ கொங்கச் செல்வி, குடமலையாட்டி, தென்தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து, ஒரு மாமணியாய் உலகிற்கோங்கிய திருமாமணி என்று தெய்வம் வந்துரைக்க என்று அடிகள் குறிப்பிடுவார். உலகில் மற்றவர்களுக்கெல்லாம் கண்ணகி தெய்வமாகவே தெரிவதாக அடிகள் சுட்டுவர். அழற்படு காதையில் மதுராபதித் தெய்வம் கண்ணகியைத் தெய்வம் என்று உணர்ந்து அவள் முன்வர அஞ்சிப் பின்புறமாக நின்று பேசியதாகக் குறிப்பிடுவார். மதுரை மாநகரத்து மக்கள், கையில் தனிச் சிலம்போடு அரற்றி வரும் கண்ணகியைத் தெய்வம் என்று உரைக்கின்றார்கள். வழக்குரை காதையில் வாயிற் காவலன் கண்ணகியைக் காளி என்றுகூட அரசனிடம் கூறுகின்றான். இவ்வாறு பல திறப்பட்ட மக்களும் கண்ணகியை மானுடப் பெண்ணாகவே பார்க்கவில்லை. இளங்கோவடிகளின் விருப்பம் கண்ணகி மாசு மருவற்ற பெண்ணாகவே, ஒரு சாதாரண மனிதனுக்கு மணம் செய்து வைத்தாலும் மரபுகளுக்கேற்ப வாழ்ந்து, தெய்வ நிலையை எய்த வேண்டும் என்ற தம் குறிக்கோளைக் காப்பியத்துள் மிகவும் நயமாகக் கையாண்டுள்ளமை வியக்கத்தக்கதாகும்.

சுருங்கச் சொன்னால் சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் பங்கு முதன்மையானது. அவள் தீது இலாதவள். முதிரா முலையள். அளியள். தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி. தன்னைக்காத்துக் கொண்டவள். தற்கொண்டவனைப் பேணியவள். தகைசான்ற சொல் காத்தவள். சோர்விலாதவள். பொறாமையற்றவள். கற்புடைய மனைக் கிழத்தி. சிறுமை கண்டு பொங்குபவள். கணவனுக்குக் கட்டுப்பட்டவள். பிறர் புகழின் நாணுபவள். நல் நோக்குடையவள். பேச்சுவன்மை உடையவள். நீதிக்குப் போராடுபவள். வாதிடும் வழக்கறிஞர். பிறர்மனை நயவாத பேராண்மை உடையவள். கோவலன் போற்றா ஒழுக்கத்திற்கு, மாதவியைக் காரணமாக்காதவள். ஊழ்வினையை நம்புபவள். அஞ்சாத நற்பண்புடையவள். மக்களும், மன்னரும், அமரரும், கடவுளும் போற்றி வணங்கும் சிறப்புத் தன்மை உடையவள். சேரன் செங்குட்டுவனால் வடபுலத்தில் கல் எடுத்துக் கங்கையில் நீராட்டிக் கோயில் எழுப்பிய பெருமைக்குடைய மா பத்தினி கண்ணகி நல்லாள். மனிதப் பிறப்பு எடுத்து ஓர் ஆண் மகனுக்கு வாழ்க்கைப் பட்டாலும் தெய்வச் சிறப்பிற்குரிய மாசு மருவற்ற கன்னிமைத் தன்மை கழியாதவளாகவே இளங்கோவடிகள் சிறப்பாகப் படைத்துள்ளார் என்ற முடிவு சான்றோர் தம் ஆய்விற்குரியது என்பது என் கருத்தாகும்.

------------

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் ஓய்வுபெற்ற தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் இரா. இராமநாதன் அவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்குத் தமிழ்மொழியைக் கம்ப்யூட்டர் மூலமாகக் கற்றுக் கொடுத்து வரும் ஆசிரியர்களில் ஒருவர். மிடுக்கான அவருடைய தோற்றத்தை இந்த வயதில் பார்த்தால், இளமைக் காலத்தில் எப்படி எடுப்பாக இவர் இருந்திருப்பார் என்பதை ஊகிக்க முடியும். இந்தப் பொலிவுக்கும், வலிவுக்குமான ஒரே காரணம் இவர் மருந்து போல சாப்பிடுவது உணவைத்தான். 50 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடிக்கு நேருஜி வந்திருந்த போது நேரில் சந்தித்த இவரிடம், நேருஜி என்ன கேட்டார் தெரியுமா? எல்லா மொழிகளிலும் எழுத்து, சொல் மட்டும்தானே இருக்கின்றன. அது என்ன உங்கள் தமிழ் மொழியில் பொருள் என்று தனிப் பிரிவு. அது என்ன? என்றாராம்.

நேருஜி கேட்ட கேள்வி தொல்காப்பியத்தில் உள்ள பொருள். வியந்துபோன பேராசிரியர் இராமநாதன், சரியான விளக்கம் தந்து நேருஜியை வியப்பில் ஆழ்த்தினார்.

பாவேந்தர் பாரதிதாசனோடு இவர் பழகியவர் மட்டுமல்ல, உடனுறைந்தவர். தி.வ. மெய்கண்டாரின் கவிதா மண்டலத்தில் பாவேந்தரோடு வாழ்ந்தது பற்றிய இவருடைய அனுபவங்கள் தொடர் கட்டுரைகளாக வெளிவந்துள்ளன.

காரைக்குடி என்றாலே கம்பன் அடிப்பொடி சா. கணேசன் அவர்களின் கம்பன் கழகம்தான் தமிழ்கூறு நல்லுலகத்திற்குத் தெரியும். அதே காரைக்குடியில், மறைந்த தன் அன்பு மனைவியின் திருப்பெயரில் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, பத்தினி கண்ணகியைப் பார்போற்றும் தெய்வமாகப் பரப்பும் சிலப்பதிகாரத் தொண்டு செய்யத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளவர் பேரா. இராமநாதன் அவர்கள்.
கம்பன் அடிப்பொடி போல இவர் இளங்கோ அடிப்பொடி. காரைக்கால் அம்மையாரைப் போல, கண்ணகியும் தெய்வம் என்பது இளங்கோவடிகளுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்! இதைத் தெரிந்து கொண்ட இரண்டாவது புலவர் பேராசிரியர்தான்.

கைகுவித்துத் தொழும் தெய்வமாகக் கண்ணகியைக் கண்டுகொண்ட பிறகு, அந்தத் தெய்வ மாக்கதையைத் தேசம் முழுவதிலும் ஏன் தேசம் கடந்தும் பரப்புரைக்கும் பணியினைத் தொடங்கித் தொய்வில்லாமல் செய்து வருகிறவர்.

கண்ணகித் தெய்வம் கன்னித் தமிழின் உன்னதமான அடையாளம். கடலுக்குள் கால்கோள் போட்டுக் கட்டப்பட்ட பாம்பன் பாலம் போல, பேராசிரியரின் இக்கட்டுரை இலக்கியக் கடலுக்குள் கால்கோள் போட்டுக் கட்டப்பட்ட பைந்தமிழ்ப் பாலம்.

(பொ&ஆர்.)

நன்றி - ஓம் சக்தி டிசம்பர் 2011