‏إظهار الرسائل ذات التسميات பாரதி. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات பாரதி. إظهار كافة الرسائل

பொன்வால் நரி - எஸ். தோதாத்ரி

மகாகவி பாரதியை இன்று பெரும்பாலும் மறந்துவிட்டனர். பாரதி பற்றிப் பேசுவது எழுதுவது ஆகியன வெகுவாகக் குறைந்துவிட்டது. பின் நவீனத்துவத்தின் வருகையானது செவ்வியல் இலக்கியங்களை அறவே பின்னுக்குத் தள்ளிவிட்டது. இதனடிப்படையில் நிகழும் ஆய்வுகளில் ‘வாசிப்பு' என்ற பெயரால் பல அகவயமான விளக்கங்கள் இடம் பெறுகின்றன. மூல நூல் புறக்கணிக்கப்படுகிறது, படைப்பாளி பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், பாரதியார் எழுதியவற்றில் ஆங்கிலத்தில் அந்தக் காலத்தில் வெளியான ஒரு சிறு நூலைப் பற்றிப் பேசுவது சற்று மிகையாகக் கூடப் படலாம்.

பாரதியின் ஆங்கில எழுத்துகள் பற்றி அநேகமாகப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். அவற்றில் ஒன்று "THE FOX WITH THE GOLDEN TAIL'' என்பது. இது ஒரு உருவகக் கதை. இதன் உட்பொருள் அன்னிபெசன்ட் அம்மையாரின் செயல்கள் ஆகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அன்னிபெசன்ட் அம்மையார் பங்கெடுத்துக் கொண்டது எல்லோருக்கும் தெரியும். அத்துடன் நில்லாமல், அவர் பிரம்மஞான இயக்கத்திலும் தீவிரமாகச் செயல் புரிந்தார். இதனைத்தான் பாரதி இங்கு கேலி செய்கிறார். மேற்பார்வைக்கு இது கதை போன்று இருந்தாலும், இது பாரதி காலத்தில் இருந்த மேல்தட்டு வர்க்கத்தினரைப் பற்றிய விமர்சனமாகவும் அமைந்துள்ளது. இந்தக் கதையில் "பொன்வால் உள்ள நரி' என்பது அன்னிபெசன்ட் அம்மையாரைக் குறிக்கும். நரிகளின் நாடு  என்பது இங்கிலாந்தைக் குறிக்கும். கழுதைகள், மனிதக் குரங்குகள் ஆகியவற்றின் நாடு என்பது இந்தியாவைக் குறிக்கும். இந்தக் குறிப்புகளை மனதில் வைத்துக்கொண்டு இந்தக் கதையைக் காணவேண்டும்.

நரிகளின் நாட்டில் ஒரு கிழட்டுப் பெண் நரி இருந்தது. அந்த நாட்டு சக நரிகள் அதனை வெறுத்தன. ஏனென்றால் அந்த நரி கர்வம் மிகுந்தது. எனவே, அந்த நரியின் வாலை வெட்டிவிட்டன. அந்தப் பெண் நரி தங்க முலாம் பூசப்பட்ட ஒரு செயற்கை வாலை வாங்கிப் பொருத்திக் கொண்டது. தாய் நாட்டிலிருந்து கழுதைகள், குரங்குகள் ஆகியவற்றின் நாட்டிற்குச் (இந்தியா) சென்றது.

அந்தப் புதிய நாட்டுக் கழுதைகளிடம் தன் தாய்நாட்டு (இங்கிலாந்து) நரிகள் புத்தி குறைந்தவை என்றும், கழுதைகளுக்குத்தான் ஞானம் அதிகம் என்றும் கூறியது. இதைக் கேட்ட கழுதைகள் மகிழ்ச்சியடைந்தன. இதைக் கண்ட குரங்குகளும் மகிழ்ச்சியடைந்தன. ஒரு சில குரங்குகள் மட்டும் தங்கள் நாட்டின் பெருமை என்னவாகும் என்று கேள்வி எழுப்பின. ஆனால், பொன்வால் நரி (அன்னிபெசன்ட்)யின் தலைமையிலான சுயாட்சி இயக்கம் பிரபலமடைந்தது. பொன்வால் நரியானது எல்லாக் கழுதைகளுக்கும் பொன்வால் உருவாக்குவதாக வாக்களித்தது. இது கேட்ட கழுதைகளும், குரங்குகளும் மகிழ்ச்சியடைந்தன. ஆனால், இதற்காக இரு இளம் கழுதைகளை தனது வசம் ஒப்படைக்கும்படி பொன்வால் நரி கேட்டுக்கொண்டது. இந்த இளம் கழுதைகளுக்கு புதிய மார்க்கத்தில் பயிற்சியளிக்க வேண்டும் என்று கூறியது. இரு இளம் கழுதைகள் பொன்வால் நரியிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த இளம் கழுதைகளின் வாலை பொன்வால் நரி வெட்டியது. இவற்றை நரிகள் நாட்டிற்கு அழைத்துச் சென்றது. அங்கு நரிகள் நாகரிகத்தைக் கற்றுக் கொடுத்தது. இதுகண்ட சநாதனக் கழுதைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இந்த எதிர்ப்பை பொன்வால் நரி எதிர்பார்க்கவில்லை. அதேசமயத்தில், பொன்வால் நரியின் வாலை ஒரு வேலையாள் திருடிச் சென்றுவிட்டான். பொன்வால் நரி நரிகள் நாட்டிற்குச் சென்றது. அங்கு ஒருவாறு சமரசம் ஏற்பட்டு கழுதைகள் நாட்டிற்கு மறுபடியும் வந்தது. கழுதைகள் நாட்டில் உள்ள குரங்குகளை சமாதானப்படுத்த முயன்றது. ஆனால் குரங்குகள் அதனை நம்பவில்லை. இதற்கிடையில் இளம் கழுதைகளை நரிகள் நாட்டிலிருந்து கொண்டு வரவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதனை நிறைவேற்ற முடியாமல் பொன்வால் நரி தேனீக்கள், எறும்புகள் ஆகியவற்றின் குடியரசுக்குத் தப்பிச் சென்றது. அங்கு தனது பிரசாரத்தைத் தொடங்கியது.

இந்தச் சிறு உருவகக் கதையில் பாரதியார் அவரது சமகாலப் பிரச்னைகள் சிலவற்றை விமர்சனத்திற்குள்ளாக்குகிறார். இதில் முதலாவது இந்திய விடுதலைப் போராட்டம். அவர் ஒரு தீவிரவாதி. அவர் காலத்தில் மிதவாதிகள் வலுப்பெறத் தொடங்கினர். இவர்கள் பக்கத்தில் வேலை செய்யும் ஓர் அந்நியப் பெண்மணியாக அன்னிபெசன்ட் அம்மையார் வந்தார். அவர் சுயாட்சி இயக்கம் என்ற ஒன்றை ஆரம்பித்தார். இது குழப்பமான ஒன்றாக இருந்தது. இது தீவிரவாதியான பாரதிக்குப் பிடிக்கவில்லை. எனவே, பெசன்ட் அம்மையாரை அவர் வெள்ளை உளவாளி என்றே சந்தேகப்பட்டார். எனவேதான் அவரது கவனம் அன்னிபெசன்ட் மீது திரும்பியது. அன்னிபெசன்ட்டை தாய்நாட்டில் மதிப்பிழந்த பொன்வால் நரியாக உருவகப்படுத்துகிறார். இங்கிலாந்தை நரிகள் நாடாகக் கற்பனை செய்கிறார். இது வெள்ளையர்களது தந்திரமான நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகிறது.

அன்னிபெசன்ட் அரசியலோடு நிற்கவில்லை. பிரம்மஞான சபையின் முக்கியஸ்தராகவும் விளங்கினார். இதன்மூலம் அவர் இந்திய ஆன்மிகத்திலும் கால் பதித்தார். பிரம்மஞான சபையில் இன்றும் ஈடுபாடு உள்ளவர்கள் சநாதனவாதிகளே ஆவர். இங்கு இருக்கிற தத்துவங்கள் போதாது என்று பிரம்மஞான சபை மூலம் ஆன்மிக வாதம் பேசப்பட்டது. இதில் பாரதிக்கு உடன்பாடு இல்லை. இதில்தான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ற பிராமண இளைஞனை அன்னிபெசன்ட் சுவீகாரம் எடுத்து இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்ச்சி இடம் பெற்றது. இது அந்தக் காலத்தில் பிராமணர்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கியது. 

கிருஷ்ணமூர்த்தியின் தந்தை அன்னிபெசன்ட் மேல் வழக்குத் தொடர்ந்தது வரலாற்று நிகழ்ச்சியாகும். இதையும் பாரதி இங்கு கேலி செய்கிறார். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி இளம் கழுதையாக வர்ணிக்கப்படுகிறார்.

இதுபற்றி சம காலத்து விமர்சனங்களும் உண்டு. இதனை அரவிந்தரிடம் பாரதி படித்துக் காட்டினாராம். அரவிந்தருக்கு சிரிப்புத் தாங்க முடியவில்லை. அவர் கூறினாராம் "பாரதியார் எவ்வளவு அருமையான இங்கிலீஷில் ஒரு அதிசயமான கட்டுக்கதை எழுதியிருக்கிறார். அதை அவரே படித்துக் காட்டும்பொழுது நீங்கள் கவனிக்காமலும் கேட்காமலும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறீர்கள்'' என்று அங்குள்ளவர்களைப் பார்த்துக் கூறினாராம்.

இதனைப் பாராட்டி ஆங்கிலப் பட்டம் பெற்றவர்கள் பலர் பாரதிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், பாரதிக்கு இப் பாராட்டு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. இது ஓர் அரசியல் அங்கதம் அவ்வளவே. எனவே, அந்தக் கடிதங்கள் பற்றி குவளைக் கண்ணனிடம் பின் வருமாறு கூறினாராம்.

"போகச்சொல்லு விதவைப் பசங்களை! நான் என்னுடைய சொந்த பாஷையில் என் முழு மூளையையும் கசக்கிப் பிழிந்து ‘பாஞ்சாலி சபதம்' என்னும் புஸ்தகம் எழுதியிருக்கிறேன். அது நன்றாக இருக்கிறதென்று ஒருவனும் எனக்குக் கடிதம் எழுதவில்லை’'.

பாரதியின் உள்ளக் குமுறல் இதில் வெளிப்பட்டாலும், "பொன்வால் நரி'' என்ற இந்த உருவகக் கதை பாரதியின் ஆங்கிலப் புலமைக்கு ஒரு சான்றாக உள்ளது. இதில் மொழி நடையானது அக்காலத்திய ஆங்கில எழுத்தாளர்களுக்கு இணையாகவே உள்ளது. இதில் சார்ல்ஸ் டிக்கன்ஸ், பெர்னாட்ஷா, ஜான் கால்ஸ்வொர்தி
ஆகியோரின் சாயலைக் காண முடியும். தமிழ் மொழியில் புகுந்து விளையாடிய அந்த மகாகவி ஆங்கிலத்திலும் திறம்படவே இங்கு செயல்பட்டுள்ளதைக் காண முடியும்.

நன்றி - தமிழ்மணி 9 9 12

மகாகவி சுப்ரமணிய பாரதியின் இந்த உருவகக்கதையை இந்த சுட்டியில் படிக்கலாம்

பாரதியார் நடத்திய பட்டி மண்டபம் - கிருங்கை சேதுபதி

1917-ஆம் ஆண்டு, ஜூன் 2-ஆவது வாரம். திங்கள்கிழமை மாலையில், புதுச்சேரியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் நடந்த ஒரு நிகழ்வுதான் இந்தக் கட்டுரைக்கான களம்.

தனக்கு, காளிதாசன் என்று பெயர்சூட்டிக்கொண்டு "செய்கை' என்னும் கதை புனைந்த பாரதி, புதுச்சேரியை, வேதபுரம் என்று சுட்டி கதை தொடங்குகிறார்: ""வேதபுரத்தில் வேதபுரீஸ்வரர் ஆலயம் என்ற சிவன் கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியக் கடவுளுக்கு சந்தனாபிஷேகம் நடக்கும் சமயத்தில் நான் சந்நிதிக்குப் போய்ச் சேர்ந்தேன்'' என வளர்கிறது கதை.

அதுசமயம், அக்கோயிலுக்கு வந்திருந்த பாரதியின் நண்பர் பிரமராய ஐயர், அக்கோயிலின் தர்மகர்த்தா, வீரப்பமுதலியார் ஆகியோருடன் பாரதியும் அக்கோயில் திருக்குளத்தில் அமர்ந்து பொதுவாகப் பேசத்தொடங்குகின்றார்.

அப்போது, கோவில் பணிவிடைக்காரன் ஒருவன் கையிலே மஞ்சள் காயிதங்கள் கொண்டுவந்து ஆளுக்கொன்று வீதம் கொடுத்தான். அதென்ன காயிதமென்றால், அன்று மாலை கோயிலில் நடக்கப்போகிற பெரிய பாளையம் மடாதிபதியின் உபந்யாசத்துக்கு எல்லாரும் வந்து சிறப்பிக்க வேண்டும் என்ற அழைப்புக் காயிதம். அந்தக்காயிதத்தின் மகுடத்தில் ஒரு விருத்தம் எழுதியிருந்தது. அவ்விருத்தத்தின் பின்னிரண்டடிகள் பின்வருமாறு:

தோகைமேல் உலவும் கந்தன்
சுடர்க்கரத்திருக்கும் வெற்றி
வாகையே சுமக்கும் வேலை
வணங்குவ தெமக்கு வேலை

(மயிலின் மேலே உலவுகின்ற கந்தனுடைய கையில் வெற்றிமாலை சூடிநிற்கும் வேலாயுதத்தை வணங்குவதே எம்முடைய தொழில்)

இவ்விரண்டு பதங்களையும் படித்துப் பார்த்துவிட்டு பிரமராய ஐயர் நல்ல பாட்டு என்றார். பின்னர், இப்பாடலை முன்வைத்து ஒரு பட்டிமண்டபமே நடத்திவிடுகிறார் பாரதியார்.

முதல்உரை - வீரப்பமுதலியார்:- "கேளும் காளிதாசரே, பிரமராயரே நீரும் கேளும். தெய்வத்தைப் போற்றுவதே நம்முடைய வேலையென்றும், அதைத்தவிர, நமக்கு வேறு எவ்விதமான தொழிலும் கிடையாதென்றும் சொல்லிக் கொண்டிருப்போர் சோம்பரில் முழுகிப்போய்த் தம்முடைய வாணாளையும் வீணாகச் செய்து பிறரையும் கெடுக்கின்றார்கள். செய்கை பிரதானம். செய்கையை விடுதல் பாவம். கடவுள் நமக்கு ஐம்புலன்களையும், அறிவையும் கொடுத்து எப்போதும் உழைப்பினாலே நமக்கும் பிறர்க்கும் நன்மை தேடும்படி ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்கு மாறாகச் செய்கையற்றுச் சும்மா இருப்பதை இன்பமென்று நினைப்போர் நாசத்தை அடைவார்கள். தெய்வம், கிய்வம் - எல்லாம் வீண் பேச்சு. வேலை செய்தவன் பிழைப்பான்; வேலை செய்யாதவன் செத்துப்போவான்’'.

மறுப்பவர் - பிரமராய ஐயர்:- "சோம்பேறி தெய்வத்தின் பெயரை ஒரு முகாந்திரமாகக் காட்டித் தன்னுடைய சோம்பரை ஆதரிப்பதாகச் சொன்னீர்கள். இருக்கலாம். அதனாலே தெய்வத்தை நம்பிச் செய்கைப் பொறுப்பில்லாமல் இருப்போரெல்லாம் சோம்பேறிகளென்று நினைப்பது குற்றம். உண்மை அப்படியில்லை. இயற்கையின் வலிமையாலே இயற்கையின் கொள்கைப்படி, இயற்கையே மனிதரின் செயல்களையெல்லாம் நடத்துகிறாள். இது மறுக்கமுடியாத சத்தியம். இதை உணர்ந்தவன் ஞானி. இந்த ஞானமுண்டாகித் தான் செய்யும் செய்கைகளுக்குத் தான் பொறுப்பில்லையென்றும், தெய்வமே பொறுப்பென்றும் தெரிந்துகொண்டு நடக்கும் பெரியோர் சோம்பரிலே முழுகிக் கிடப்பதில்லை. அவர்கள் அக்கினியைப்போலே தொழில் செய்வார்கள். எப்போதும் ஆனந்தத்திலே இருப்பதனால் அவர்களிடம் அற்புதமான சக்திகள் பிறக்கும். அந்தச் சக்திகளைக்கண்டு அவர்கள் செய்யும் தொழில் உலகத்தாருக்குக் கணக்கிடமுடியாத நன்மைகளைச் செய்யும். பகவான் கீதையிலே என்ன சொல்லுகிறார்... "தெய்வமே செய்கிறது. தான் செய்வதாக நினைப்பவன் மூடன். ஆதலாலே முன்பின் யோசனை செய்யாமல் அப்போதப்போது நேரிடும் தர்மத்தை அனல்போலே செய்ய வேண்டும். ஆதலால், ஹே அர்ஜுனா, வில்லினை எடடா, கையில் வில்லினை யெடடா(பாடுகிறார்)'' என்று பகவான் சொல்லுகிறார். ஆதலால், பக்தனுக்குத் தொழிலிலே பொறுப்பில்லை. ஆனால், தொழில் உண்டு. அது தெய்வத்தாலே கொடுக்கப்படும். உண்மையான தெய்வபக்தியுடையவர்கள் செய்யும் செய்கையினால் கிருதயுகம் விளையும். அவர்கள் எவ்விதமான செய்கையும் தமக்கு வேண்டியதில்லையென்று உதறிவிட்டவுடனே பகவான் அவர்களைக் கருவியாகக்கொண்டு மகத்தான செய்கைகளைச்
செய்வான்.

வீரப்ப முதலியார் (காளிதாசனை நோக்கி) "உமது கருத்தென்ன?’'

காளிதாசன்:- ""எனக்கென செயல் யாதொன்றுமில்லை என்ற முன்னோர் பாடலை எடுத்துச் சொல்லி சக்தி நாமத்தைக் கூறி நான் செய்கையற்று நிற்கின்றேன். பராசக்தி என்மூலமாக ஏது செய்வித்தாலும் அவளுடைய இஷ்டமேயன்றி என்னுடைய இஷ்டமில்லை’'.

இதன் வாயிலாக பாரதியார் சொல்லவருவது யாது? இதற்கு, செய்கை என்ற கதைத்தலைப்பே பதில். புரியவில்லையெனில், பராசக்தி என்ற பாரதியின் கவிதையைப் படிக்கலாம்.

"நாட்டுமக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தவர் மேனிலை எய்தவும்'' என வருகிறது அக்கவிதை. அது பாரதியின் கவிதைதான் ஆனால், இக்கதையில் வருகிற, எமக்கு வேலை என்னும் கவிதை, பாரதியார் கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருந்தாலும், உண்மையில் பாரதி எழுதியது இல்லை. சைவ எல்லப்ப நாவலர் பாடிய செவ்வந்திபுராணத்தில் இடம்பெறும்,

"ஓகையால் திரைமுன் னாளில்
உழக்கும்மாவினையால் வாட்டும் ‘'


- என்ற அடிகளைத் தொடர்ந்து வருவதாகும். இவ்வுண்மையை, பாரதி ஆய்வாளர் சீனி.விசுவநாதன் தொடர்ந்து வலியுறுத்திவந்தபோதும் பலரும் கவனிக்கத் தவறியிருக்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.

நன்றி - தமிழ்மணி 9 9 12

காலம் அரங்கேற்றிய புரட்சி நாடகம்: பாரதி - பேராசிரியர் கு.சுந்தரமூர்த்தி

மானுடத்தை வாழ்விக்க வந்த நம் மகாகவி பாரதிக்கு டிசம்பர் 11-ல் 130 வயது. அந்தக் கவிதைப் புலவனின் இலக்கியப் பயணம், சகல திசைகளிலும் புரட்சி வெளிச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எரிமலைக் குழம்பைத் தொட்டுத் தொட்டு கவிதை எழுதிய பாரதி, மலர்ச்சாறு கொண்டும் மனதுக்கு இதமாக மாகவிதைகள் தந்தவன். கவிதை, பாடல், சிறுகதை, கட்டுரை, வசன கவிதை என புதுப்பாய்ச்சல் நடத்திய பாரதி, நாடகக் களத்தை மட்டும் விட்டுவைப்பானா என்ன? நிறைய நாடகங்களை அவன் எழுதிக்குவிக்கவில்லை. எனினும் நாடக முயற்சியிலும் களமிறங்கி, சிலம்பம் சுற்றிப்பார்த்திருக்கிறான். பாரதியின் ஏனைய படைப்புகளின் மீது ஆய்வாளர்கள் பார்வை செலுத்திய அளவிற்கு அவனது நாடகப் படைப்புகளின் மீது பெரிதாக யாரும் பார்வை செலுத்தவில்லை. 

அந்தக் குறை என்னுள் நீண்டநாளாய் நெருடியதால் நான், பாரதியின் நாடகத் தமிழன்பால் ஆர்வம் கொண்டு அவற்றை அலசினேன்.

பாரதி, சொற்ப வயதிற்குள் சில நூற்றாண்டுகளுக்கான வாழ்க்கையை வாழ்ந்தவன். அவன் அக்கிரஹாரத்தில் இருந்து முளைத்து வந்த புரட்சி விருட்சம். சடங்கு சம்பிரதாய வலைகளில் சிக்க மறுத்த வீறுமிகும் விலாங்குமீன். அவன் சமூகத்திற்காக உதடு திறந்தவன். விடுதலைக்காக எழுதுகோல் பிடித்தவன். அச்சங்கள் அறியா அடர்நெருப்பு பாரதி. அவனது எழுத்துக்களின் வெம்மையும் கதகதப்பும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும். அவன், காலம் அரங்கேற்றிய புரட்சி நாடகம், நவரசங்களாலும் நிரம்பி வழிந்த நாடகம். 

""கலை என்பது சமூக - அழகியல் நிகழ்வு  ஆகும். அது சமூகத்தின் பண்பாட்டினுள் நிலை கொண்டு நிற்பது. பண்பாடு என்பது (அச்) சமூகத்தின் வாழ்க்கை முறைமையாகும். அதற்குள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் யாவும் (மதம், உணவு, சூழல், மனித உறவு முறைமை, 

பொருளாதார நடவடிக்கைகள், சமூக ஒருங்கமைப்பு, வாழ்க்கை நோக்கு முதலியன) இடம் பெறும்'' என்னும் கா.சிவத்தம்பியின் கூற்றுடன் பொருத்தப்பாடு உடையதாக மகாகவி பாரதியின் படைப்புகளைக் காணமுடிகிறது.

பாரதி வாழ்ந்த காலம் குறைவானது என்றாலும் தன் படைப்பின் மூலம் சிகரங்களைத் தொட்டவன். கவிதையாளனாக இதழாசிரியனாக, கட்டுரை யாளனாக, சிறுகதை ஆசிரியனாக, எல்லாவற்றிலும் புதுமைச் சிந்தனை கொண்டவனாக வெளிப்பட்ட பாரதி நாடகப் படைப்பாக்க முயற்சியிலும் கவனத் திற்கு உரியவனாகத் திகழ்கிறான்.

தமிழ் நாடகத் தொடக்கமும் பாரதியும்

19-ஆம் நூற்றாண்டின் இறுதி தமிழ் நாடக வரலாற்றில் குறிப்பிடத் தகுந்ததாகும். இக்காலத்தில் தோன்றிய சங்கரதாஸ் சுவாமிகள் (1867-1922), பம்மல் சம்பந்த முதலியார் (1873-1964), பரிதிமாற் கலைஞர் (1870-1903) ஆகியோர் தமிழ் நாடகத்தின் முன்னோடி களாவர். இவர்களில் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகம் இந்துத்துவத் தன்மை கொண்டது. புராண இதிகாசக் கதைகளைக் கூத்து வடிவில் அரங்கேற்றம் செய்தது. பம்பல் சம்பந்த முதலியாரின் நாடகமோ இந்தியத் தன்மை கொண்டதாக இருந்தாலும் மேனாட்டு நாடக வடிவமைப்பை உள்ளடக்கியதாக விளங்கியது. ரூபாவதி, கலாவதி, மானவிஜயம் ஆகியன படைத்த பரிதிமாற் கலைஞரின் நாடகங்கள் படித்தவர்களால் கற்கப் பட்டனவே அன்றி நடிக்கப் பெறவில்லை.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயேருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்தது. விடுதலை உணர்வை ஊட்டும் வகையில் நாடகங்கள் நிகழ்த்தப் பெற்றன. இதனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த,""வெள்ளையர்களுக்கு அடிமையாகி வாழ்ந்த சூழலில் நாடகம் எதிர்ப்பு உணர்வின் குரலாக மாறியது. நாடகமேடை அரசியல் தளமானது. பாடல்களும் வசனங்களும் உருமாறின. நடிகர்கள் மேடையில் கைது செய்யப்படுவதும் பிரதிகள் தடை செய்யப்படுவதும் தொடர, நாடகம் எதிர்ப்பின் விளைநிலமாகி விட்டது... நாடகம் ஓர் எதிர்ப்புக் குரல் என்றே அறியப்பட்டது''  என்னும் எஸ்.இராமகிருஷ்ணனின் கூற்று விடுதலைப் போராட்டக் கால இயங்குநிலையை வெளிப்படுத்துகிறது.

இதே காலகட்டத்தைச் சேர்ந்த பாரதியின் (1882-1921) நாடகப் படைப்பாக்க முயற்சி புதிய தன்மை உடையதாய்க் காணமுடிகிறது. ஆங்கிலேயேரை எதிர்த்து விடுதலைப் பாடல்கள் இயற்றி வந்த பாரதி 1912-ல் வியாச பாரதத்தின் ஒரு பகுதியாகிய "பாஞ்சாலி சபத'த்தை "மறுவாசிப்புத் தன்மையில் படைத்தான். பாரத தேவியாக உருவகம் செய்து படைக்கப்பட்ட பாஞ்சாலியின் உரையாடல்கள் அடிமைப்பட்டிருந்த இந்திய மக்களின் அவல நிலையை எடுத்து இயம்பின. பொறுப்பற்ற பொறுமையைச் சாடின. இவைகள் விடுதலை வேண்டிப் போராடிய மக்களினை மேலும் தீவிரமாகப் போராடத் தூண்டின. ஆனால் பாஞ்சாலி சபதத்தின் வடிவம் நாடகப் படைப்பாக்கம் என்று கூறுவதற்கான சாத்தியக் கூறுகள் ஏதுமின்றி காவிய வடிவம் கொண்டதாக அமைந்து இருந்தது. இதன்பிறகு இயற்றப்பட்ட ஜகத் சித்திரம், விடுதலை ஆகியன புதிய நோக்கிலான நாடக முயற்சியாய்க் காணமுடிகிறது. 

ஜகத் சித்திரம்-தோற்றுவாய்

1919 -ல் புதுவையிலிருந்து தன் தாய்மண்ணான தமிழ் நாட்டிற்குள் பாரதி வருகிறான். ஆங்கிலேயர்கள் அவனைக் கைது செய்து தனிமைச் சிறையில் அடைக்கின்றனர். ஏறக் குறைய ஒருமாதத் தனிமைச் சிறைவாசமும் புதுவை குள்ளச்சாமியின் மூலம் ஏற்பட்ட "கஞ்சா' பழக்கமும் அவன் மனதைப் பல்வேறு குழப்பங்களுக்கு உள்ளாக்குகிறது. சிறையிலிருந்து வெளிவரும் பாரதி அப்பழக்கத்திலிருந்து மீண்டாலும் குடும்பச் சூழலும் பொருளாதாரமும் அவன் வாழ்க்கையில் பெரும் நெருக்குதலை உண்டாக்குகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் "ஜகத் சித்திரம்' நாடகம் பிறக்கிறது. அந்நாடகத்தில் அவனது மன உளைச்சல், குழப்பம், பொருளாதாரச் சிக்கல்கள், பசி, அதனை எதிர்கொள்ளல் ஆகியன தெளிவாக வெளிப்படுகின்றன.

ஜகத் சித்திரம்- நாடகம்

காட்சி, இடம், நேரம், இடம்பெறும் பாத்திரங்கள் என அனைத்தும் நாடக வடிவ முறைப்படி எழுதும் பாரதி, பாத்திரங்களாக காக்கையரசன், தேவேந்திரன், தேவசேவகன், நாரதர், கிளி, குயில், குருவிகள், நாகணவாய், காக்கை, அணில், பசுமாடு, எருமை எனப் பலவற்றைப் படைத்துள்ளார்.  காளி கோவில், வானுலகம், கடற்கரை என மூவிடங்களில் நாடகம் பயணம் செய்கிறது. மொத்தம் ஐந்து காட்சிகளைக் கொண்டதாக ஜகத் சித்திரம் விளங்குகிறது.

நாடகம் உயிர் பெறுவதென்பது பாத்திரங்கள் மூலம்தான். படைக்கும் பாத்திரங்கள் சரியான வகையில் அமைய விட்டால் அதன் உயிர்த்தன்மை கெட்டுப் போகும். மேலும் அப்பாத்திரங்களுக்கான வசனமும் அவை வெளிப்படுத்தும் மௌனமும் கூட நாடகத்தை வலுவறச் செய்யும். இவ்வகையில் பாரதி பாத்திரப்படைப்பினை, உரையாடலை மிகத் திறமையாகவே கையாண்டுள்ளான்.

முதல் காட்சியில் காக்கையரசன் காளிக் கோவிலின் தெப்பக்குள மண்டபத்தின் மையப் பகுதியில் அமர்ந்தபடி, இந்த உலகத்தில் எல்லாம் இனியன. புட்கள் பூங்குரலுடையன. 

ஆனால் மனித குலத்தின் உள்ளத்தில்தான் இன்பம் இல்லை என்கிறது. 

அதற்குக் காரணமாக, 

""மனம்தான் சத்துரு. வேறு பகை நமக்குக் கிடையாது. மனந்தான் நமக்குள்ளேயே உட்பகையாக இருந்துகொண்டு நம்மை வேரறுக்கிறது. அடுத்துக் கெடுக்கிறது. மனந்தான் பகை'' (ப-267)

எனக் கூறும் காக்கையரசன் மேலும்,

""அதைக் கொத்துவோம் வாருங்கள். அதைக் கிழிப்போம் வாருங்கள். அதை வேட்டையாடுவோம் வாருங்கள்''  (பக்-268) என்றும் கூறுவதாகக் காட்சி அமைகிறது.

இதில் கொத்துவோம், கிழிப்போம், வேட்டையாடுவோம் என்னும் பாரதியின் எழுத்துக்களில் ஒரு புதிய ஒளி வீசுகிறது. எங்கு வாழ்ந்தால் என்ன? எந்தச் சூழ்நிலை இருந்தால் என்ன? மனம்தான் சூழ்நிலைகளைத் தாங்கிக் கொள்ள மறுக்கிறது. அதுதான் பகை. அதைக் கிழிப்போம், கொத்துவோம், வேட்டையாடுவோம் எனக் கூறுவது போல் அமையும் இக்காட்சி தமிழகத்திலிருந்து புதுவைக்கும் புதுவையிலிருந்து தமிழகத்திற்கும் இடம் பெயர்ந்து வாழ்ந்தும் அங்கு கிடைத்த அனுபவங்களும் சிறை அனுபவமும் ஏற்படுத்திய மனக் குழப்பங்களின் வெளிப்பாடாகும். 

பசிப்பிணி

பாரதியின் இத்தகைய வாழ்க்கைச் சூழல் அவனை இறைவன் உள்ளானா? எனத் தனக் குள்ளாகக் கேட்கும் துணிவை ஏற்படுத்துகிறது. ஓர் அத்வைதியாக வாழ்ந்தவன் "தத்வமஸி' என்று கவிதையில் உரைத்தவன், நாராயணன் எங்கிருக்கிறான்?  என்கிற வினாவை எழுப்புகிறான். பின்னர் ஏதோ ஒரு வகையில் தெளிவு பெற்றவனாக,""இந்திரன் : உங்களுடைய நாராயண ஸித்தாந்தத்தின் துணிவு யாது?

நாரதர் :     எல்லா வஸ்துக்களும் எல்லா லோகங்களும் எல்லா நிலைமைகளும் எல்லாத் தன்மைகளும் எல்லா சக்திகளும் எல்லா சூழல்களும் எல்லாம் ஒன்றுக் கொன்று சமானம்'' 

என்ற உரையாடல்கள் மூலம் தன்னைச் சமாதானப்படுத்திக் கொள்வதனைக் காணமுடிகிறது. ஆனாலும் கூட வாழ்க்கையில் ஏற்படும் நெருக்கடி இறைவன் இருக்கிறான் என்பதனையும் ஒன்றுக்கொண்று சமானம் என்பதனையும் மறக்கடிக்கிறது. மனம் சோர்வடைகிறது. தைரியம் அற்றுப் போகிறது. கவலை வளர்கிறது. தற்கொலைக்கு முனைகிறது. இதற்கு அடிப்படையாகப் "பசி' அமைகிறது. மனிதர்களுக்கு எப்போதும் துன்பம் தரும் பசியினால் ஏற்படும் விளைவு பற்றி நாடகத்தின் மூன்றாவது காட்சியில்,""எங்களுக்கு உடம்பு சிறிது; ஆதலால் தீனி சொற்பம் .அதைச் சிறிது சிறிதாக நெடுநேரம் தின்கிறோம் ஆதலால் எங்களுக்கு உணவின்பம் அதிகம். மிருக மனித ஜாதியார்களுக்குள் இருப்பதைக் காட்டிலும் எங்களுக்குள்ளே காதலின்பம் அதிகம்''

என நாகணவாய் என்னும் பாத்திரம் கூறுவதாகத் தன் கருத்தினைப் பதிவு செய்கிறான் பாரதி. பசி மனிதர்களுக்கு ஏற்படுத்தும் மிகப் பெரிய துன்பம் அவர்களுக்குள்ளாக காதலின்பத்தை (அன்பினை) அழிப்பதேயாகும். அதனால்தான் பாரதி, "தனியொரு மனிதனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாடுகிறான். மேலும் அவனின் "பசி' அனுபவமே இங்கு "ஜகத் சித்திரமாய்' எல்லோருக்குமானதாய் வடிவங் கொள்கிறது.

விடுதலை - நாடகம்

பசியிலிருந்தும் உலக ஏற்றத் தாழ்வுகளிலிருந்தும் விடுபடும் வழிதான் எது? என எண்ணும் பாரதியை ருஷ்யாவின் சோசலிசம் கவர்கிறது. எல்லாம் எல்லார்க்கும் உடைமை என்னும் தத்துவம் அவனுக்குள்ளாக மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இது அவனுடைய இரண்டாவது நாடகமான "விடுதலை'யில் வெளிப்படுகிறது. இரண்டு காட்சிகளை மட்டும் கொண்டு முழுமையற்ற நிலையில் இந்நாடகம் காணப்படுகிறது. பாத்திரங்களாக இந்திரனும் அவன் ஏவலுக்கு உரியவர்களும் வசுபதி என்னும் கற்பனை (!) பாத்திரமும் படைக்கப்பட்டுள்ளன.

இந்நாடகத்தில் தேவர்களின் தலைவனான இந்திரன் தனக்குக் கீழேயுள்ள ஏவலாள்களான பிற தேவர்களைத் "தோழர்' என்றே விளிக்கிறான். அவர்களும் இந்திரனைத் "தோழர்' என்றே அழைக்கின்றனர். இது பாரதிக்குள்ளே ஏற்பட்டு இருக்கும் சோசலிசப் பொதுவுடைமை சித்தாந்தத் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைகிறது. நாடகத்தினுள் காணும் உரையாடல்கள் அதனை உறுதிப்படுத்துகின்றன. அதற்கு, தேவர்களுக்குப் பிரம்மன் இட்ட பணியாக வரும், 

""மண்ணுலகத்து மானுடன் தன்னைக்
கட்டிய தளையெலாம் சிதறுக''

என்னும் உரையாடலை இந்திரன் வழி கூறுவதும் அதனைத் தொடர்ந்து வேற்றுமைகளைத் தவிர்ப்பதற்காக அனைவரும் அமிழ்தம் உண்போம் அது அனைவரையும் சமமாக்கும் என்றும் கூறுவது போல உரையாடலை வளர்த்துச் செல்வதும் மேலும் மேலும் உறுதி செய்வதாக அமைகிறது. 

சுதேசமித்திரனில் பாரதி படைத்த கட்டுரைகளில் ஒன்று "செல்வம்' என்பதாகும். இதில் ருஷ்யாவில் சோசலிசக் கொள்கையால் ஏற்பட்ட மாற்றம் குறித்து எழுதியுள்ளார். மேலும் இந்தியாவில் அக்கொள்கையைப் பரவலாக்கம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் நிலவுடைமைச் சமுதாயமான இந்தியாவில் அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை அலசுகிறான். அதற்கான முக்கியக் காரணமாக,""கோடிக் கணக்கான ஜனங்கள் வயிறு நிறைய உணவு கிடைக்குமென்ற நிச்சயமில்லாமலும் லஷக்கணக்கான ஜனங்கள் ஒருவேளை கஞ்சி கிடைக்காமலேயே சுத்தப் பட்டினியால் மரணம் எய்தும்படியாகவும் நேர்ந்திருக்கும் தற்கால நிலையை நாம் ஒரு ஷணங் கூட சகித்திருப்பது நியாயமில்லை'' (பக்-509) என்று இந்தியப் பொருளாதாரச் சூழ்நிலையைக் குறித்துக் கட்டுரைக்கிறான். இதே கருத்தினை மையமாகக் கொண்டுதான் அவனுடைய இறுதிக் காலப் படைப்பான நாடகங்கள் அமைவதனை விளங்கிக்கொள்ள முடிகிறது. 

முடிவு

நாடகம் முக்கிய இடத்தினைப் பெற்ற காலத்தில் வாழ்ந்த பாரதியின் படைப்பில் இரண்டு நாடகங்களை மட்டுமே காண முடிகின்றது. அவையும் முழுமையற்று மிகச்சிறிய அளவில் எழுதப்பட்டுள்ளன. இது பாரதி நாடகம் எழுத முயன்றதின் தொடக்கமாக அறிய முடிகின்றது. 

நாடகங்கள் தொடக்க காலத்தில் புராண இதிகாசப் பாத்திரங்களைக் கொண்டு இந்துத்துவத் தத்துவங்களை விளங்கும் வகையில் அமைய, பாரதியின் நாடகத்திலோ அவை மட்டுமின்றி அஃறிணை உயிர்களும் மானுட குலத்தின் நன்மை நோக்கியே படைக்கப்பட்டன. அவ்வகையில் தன்னைச் சார்ந்தும் தன் வாழ்நிலை, குடும்பச் சூழல், சமுதாயச் சூழல் சார்ந்தும் உலகம் தழுவிய பார்வையோடு பாரதி நாடகம் படைத்திருப்பதனை உணரமுடிகிறது.

மேலும் விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நிகழ்ந்த காலத்தில் உலகப்போரின் விளைவில் தாமதமானாலும் நிச்சயமாய் தேசத்திற்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவனை முன்னதாகவே "விடுதலைக்கும்மி' பாட வைத்தது. அதன் தொடர்ச்சியாகவே அடுத்த தளத்திற்கு நகரும் வகையில் மனிதனைத் துன்பத்தில் உழல வைக்கும் வறுமை, பசி, பொருளாதாரச் சிக்கல், மனக்கவலை, காதலற்ற நிலை, மரண பயம் போன்றன நீங்க வேண்டியும் சமத்துவ சமுதாயம் காண வேண்டியும் நாடக வடிவத்தைப் பாரதி பயன்படுத்த முயன்றிருக்கலாம் என்பதாக ஊகிக்க சாத்தியக் கூறுகள் இருக்கவே செய்கின்றன.

நன்றி - இனிய உதயம் 2012

ஆத்திச்சூடிகள் - ஓர் ஒப்பீடு - அ.ப.பாலையன்

தமிழுக்குத் தொண்டு செய்த பாரதிக்குப் பிடித்த செந்தமிழ்ப் புலவர்கள் வள்ளுவர், கம்பன், இளங்கோவடிகள், ஔவையார் ஆவர். இவர்களில் பெண்பாற்புலவராகிய, இடைக்காலத்தில் வாழ்ந்த ஔவையாரே அவருக்கு  மிகவும் பிடித்தவர். "தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா? என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், மற்ற செல்வங்களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மீட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஔவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மீட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப்பெருஞ்செல்வம் என்று மறுமொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். என்னும் பாரதியார் கூற்று அவர் ஔவைமீது கொண்ட பேரன்பைக் காட்டும். (பாரதியார் கட்டுரைகள் பக்-.161).

பாரதி, ஔவைமீது வைத்திருந்த மதிப்பே அவரை ஔவையின் ஆத்திசூடியைப் பின்பற்றி புதிய ஆத்திசூடியை எழுதத் தூண்டியது. ஔவையின் ஆத்திடிசூடியைத் தழுவிச் செய்தாலும் அதிலிருந்து தன்னுடையது பாடுபொருளில் மாறுபட்டது என்பதற்காகவே அதற்குப் புதிய ஆத்திசூடி எனப் பெயரிட்டார் பாரதி.

ஔவை- பாரதியார் காலம்:

கி.பி.11-ஆம் நூற்றாண்டில் எழுந்த யாப்பருங்கல விருத்தியுரை, "கொன்றை வேந்தன்' எனும் ஔவையின் கடவுள் வாழ்த்தை செந்துறை வெள்ளைப்பா (சூத் 63) என எடுத்துக்காட்டுகிறது. தமிழண்ணல். ஔவையார். (பக்-56, 57)

இதனால் ஔவையின் காலம் கி.பி.10 -ஆம் நூற்றாண்டு (பிற்காலச் சோழர் காலம்) எனலாம்.

பாரதியார் 1908 முதல் 1918 வரை புதுச்சேரியில் வாழ்ந்தார். அப்போது புதிய ஆத்திசூடி எழுதப்பட்டு 1914-ல் அச்சாகி வெளிவந்தாகத் தெரிகிறது. (பன்முகப் பார்வையில் பாரதி. தொகுப்பு மு.சாயபு மரைக்காயர். பக்-367).

அமைப்பு முறை:

செழுமை நிறை நம் மொழி இலக்கண வளமும் இலக்கியப் பெருக்கமும் உடையது. இவ்வளவு இலக்கியக் குவியல்கள் இருந்தும் சோழர் காலத்தில் இருந்த ஔவையார் ஒருவர் தான் தமிழ்க்கல்வியையும், சிறார்க்கு அகர வரிசையில் கற்பித்தலையும் இலக்காகக் கொண்டு ஆத்திசூடி   நூலைச் செய்துள்ளார்.

ஔவை, ஆத்திசூடியை உயிர் எழுத்தில் பன்னிரண்டும் ஆய்த எழுத்தில் ஒன்றும் அகரம் ஏறிய மெய்யெழுத்தில் பதினெட்டும் உயிர்மெய்யில் ககர வரிசையில் பன்னிரண்டும் ச, த, ந, ப, ம, வ ஆகிய வரிசையில் ஔகாரம் நீக்கிப் பதினொன்றுமாக 109 வரிகளில் பாடியுள்ளார்.

ங, ஞ, ய ஆகிய மூன்று உயிர்மெய்யும் சில இடங்களில் மட்டுமே மொழிக்கு முதலில் வருவதால் அவற்றை விட்டுவிட்டார். 

ஏனைய உயிர்மெய் மொழிக்கு முதலில் வாரா. 

ஔவை பாடிய ஆத்திசூடி பெரும்பாலான பதிப்புகளின் 109 என எண்ணிக்கை இருக்கவும் முனைவர் தமிழண்ணல் 108 எனக்கொள்கிறார். அவர் அங்ஙனம் கொள்வதற்குரிய காரணமும் விளங்கவில்லை. (ஔவையார், பக்- 60) 

பாரதியார் செய்த புதிய ஆத்திசூடி எண்ணிக்கையிலும் கருத்துகளிலும் வேறுபடுகிறது.

பாரதி தம் நூலில் உயிர் எழுத்தில் பன்னிரண்டும் உயிர் மெய்யில் க, ச, த வரிசையில் ஒவ்வொன்றிலும் பன்னிரண்டும் "ஞ' கரத்தில் ஐந்தும் நகரத்தில் பதினொன்றும் "ப'கரத்தில் பத்தும் மகரத்தில் பதினொன்றும் "ய'கரத்தில் மூன்றும் "ர'கரத்தில் எட்டும் "ல'கரத்தில் ஆறும் வகரத்தில் எட்டும் என 110 வரிகளை எழுதியுள்ளார்.

உயிர் ஏறிய மெய்யெழுத்திலும் ஆய்த எழுத்திலும் பாரதி எழுதவில்லை. ஆனால் ஔவை ஒதுக்கிய "ர'கரத்திலும் "ல'கரத்திலும் கூடுதலாகவே எழுதியுள்ளார்.

ஔவை அகரம் ஏறிய பதினெட்டு மெய்யெழுத்தில் ஆத்திசூடி செய்தது அவருக்கே எழுதிய பிறகு பிடிக்கவில்லை போலும்! பின்னர் எழுதிய கொன்றை வேந்தனில் அகரம் ஏறிய மெய்யெழுத்தில் அவர் எழுதவில்லை!

ஒற்றுமையும் வேற்றுமையும்

தமிழகத்தில் ஆங்காங்கே இருந்த குறுநில அரசுகள் மங்கி சோழப் பேரரசு தோன்றிய காலத்தில் ஔவை வாழ்ந்தார்.

விடுதலை தவறி, கெட்டு பாரத நாடு பரங்கியரிடம் பாழ்பட்டு நின்றபோது நாட்டு மக்களுக்கு "நாமிருக்கும் நாடு நமதென்று' உணர்த்தி விடுதலை வேட்கையை ஊட்ட வந்தவர் பாரதியார்.

ஆகவே இவர்கள் கருத்துகளில் ஒற்றுமையைவிட வேற்றுமைகளே மிகுந்திருப்பது இயற்கை.

கால இடைவெளி இருப்பினும் இருவர் கருத்துகளிலும் காணப்படும் ஒத்த கருத்துகள் நம்மைப் பெரிதும் வியப்பில் ஆழ்த்துகின்றன.

முடியரசு காலத்தில் வாழ்ந்த ஔவை, 
    கைவினை கரவேல் 
    பொருள்தனைப் போற்றிவாழ் 
    பூமி திருத்தி உண்' 

என கைத்தொழிலின் மேன்மையையும் பொருள் தேடலின் இன்றியமை யாமையையும் உழுதுண்டு வாழ்பவரின் உயர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அடிமைக் காலத்தில் வாழ்ந்த பாரதியாரும்

    கைத்தொழில் போற்று 
    பணத்தினைப் பெருக்கு 
    மேழி போற்று

என ஔவை கூறியதையே வேறுசொற்களில் அறிவுறுத்தி யிருப்பதை நோக்கும்போது சான்றோர்கள் இடம் வேறுபட் டாலும் காலம் வேறுபட்டாலும் ஒத்த கருத்தையே கொண்டிருப்பர் எனும் கருத்தே நினைவுக்கு வருகிறது.

இருவரும் முரண்பட்ட இடங்களும் உண்டு.

"தையல்சொல் கேளல்' என அவ்வையே கூறியுள்ளது நியாயம்தானா? அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமூகத்தில் பெண்ணடிமைத் தனம்  வேரூன்றி இருந்தது. பெண்ணுக்குக் கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்ட காலம் அது. "நுண்ணறிவுடையோர் நூலொடு பழகினும் பெண்ணறிவென்பது பெரும்பே தைமைத்தே.' எனும் கருத்து கோலோச்சிய காலமாதலால் ஔவை இப்படிச் சொல்ல நேர்ந்தது.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை, வடலூர் வள்ளலார் போன்ற பெருமக்கள் பெண்ணுரி மைக்குக் குரல்கொடுத்த பிறகு அவர்கள் வழியில் வந்தவர் பாரதியார். அதனால் தான் தெளிவோடும் துணிவோடும்"தையலை உயர்வுசெய்' எனப் பாடினார். 

தமிழர்கள் எப்பொழுதும் போரையும் காதலையும் இருகண் எனப் போற்றியவர்கள்.

விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள் 
வைக்கும் தன் நாளை எடுத்து. (குறள்-776) 

என்பது தான் சங்ககால மக்கள் கடைப் பிடித்த போர் நெறி. 

அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ் வுலகத் தியற்கை (புறம்-76) 

எனும் குரலே அன்று வீரர்கள் எழுப்பிய குரல்.

"பழந்தமிழ்ப் புலவர்களில் பெரும்பான்மையா, 

அரசனுக்காகப் போரிடும் படி வீரர்கள் நடுவிலும் அரசனுக்கு இணங்கித் திறை செலுத்தும்படியாக எதிரி மன்னர்களிடத்தும் அரசனைத் தெய்வத்துக்கு இணையாகப் புகழ்ந்து மக்கள் நடுவிலும் பிரசாரம் செய்தவர்கள்' என்கிறார் பேராசிரியர் கோ. கேசவன் (மண்ணும் மனித உயிர்களும் பக்-80)

சோழப் பேரரசு காலத்திலும் இரவலர்களின் நிலை இப்படித்தான் இருந்தது. இக்காலத்தில் ஔவையார் நடைமுறையில் இருந்த கருத்துக்கு மாறான கருத்துகளை முன்வைத்துள்ளார்.

    போர்த்தொழில் புரியேல்
    முனைமுகத்து நில்லேல்

என்பன ஔவை போருக்கும் அரசர்க்கும் வீரர்க்கும் எதிராகக் கூறும் கருத்துகள்.

ஏன் இங்ஙனம் கூறினார்? போர் மலிந்திருந்த காலத்தில் நூற்றுக்கணக்கான கைம்பெண்களும் குழந்தைகளும் குடும்பத் தலைவனைப் போரிலே இழந்து, பட்ட பாட்டை நேரிலே கண்டு, கசிந்து கண்ணீர் மல்கி, போரே வேண்டா, எங்கும் அமைதி நிலவவேண்டும் என நினைத்து இப்படி எழுதினாரா?

நாடுபிடிச் சண்டையில் நேரிடும் ஊர் அழிவு, விளை நிலங்கள் பாழ்படல், வீடுகள் எரிப்பு, மக்கள் சொத்தை வீரர்கள் கொள்ளையிடல் போன்ற பேரழிவு களைக் கண்டு நைந்துருகிப் போருக்கு எதிராக இப்படி எழுதியிருப்பாரோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

"களிறு எறிதல் காளைக்குக் கடனே' -(புறம் 312) என்று பொன்முடியார் பாடிய பாடலுக்கும் "போர்த்தொழில் புரியேல்' எனும் ஔவையின் கருத்துக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ளளவு வேறுபாடு தெரிகிறது. 

ஆனால் நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலாவாகிய பாரதி தமிழரின் வீரத்தைக் காட்டும் மரபிலே நின்று, 

    போர்த்தொழில் பழகு
    முனையிலே முகத்து நில்

 என்றே எழுதினார்.

இப்படி எழுதிய பாரதிக்கு வன்முறை, குண்டு எறிதல், ஆயுதந்தாங்கிப் போரிடல் ஆகியவை உடன்பாடன்று. அவரே எழுதுவதைப் பார்ப்போம்.

"இந்த முறைமை (ருஷ்யாவில் லெனின் தலைமையில் ஏற்பட்ட சோசலிஸ்ட் முறை) போர், கொலை, பலாத் காரங்களின் மூலமாக உலகத்தில் பரவி வருவது எனக் குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக்கூடாதென்பது என்னுடைய கருத்து?' (பாரதியார் கட்டுரைகள். பக்- 383)

28-11-1917-ல் சுதேசமித்திரன் இதழில் இப்படி எழுதிய பாரதி, 1914-ல் வெளியான புதிய ஆத்திசூடியில் "முனைமுகத்து நில்' என எழுதியது முரண்பாடு போலத் தோன்றுகிறது.

பாரதிக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என்பது ஒருபக்கப் பார்வை ஆகும். அவருக்கே இன்னொரு பக்கமும் உண்டு. அதனையும் பார்ப்போம். 

"ஆங்கிலேயரிடம் சமாதான வழியில் விடுதலை கேட்கும் பிச்சைக்காரத்தனத்தை விட்டுவிட்டு சரீரப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் இந்நாட்டிலே விருத்தியடையுமாறு பிரயத்தனப் படுவோமாக'. (இந்தியா- 13-10-1906) மேற்கோள். தொ.மு.சி.ரகுநாதன். பாரதி காலமும் கருத்தும் பக்-329) என்றும் எழுதியவர் பாரதி.

அதனால் புதிய ஆத்திசூடியில் பாரதி கூறியவை அவருக்கு உடன்பாடானவையே என உள்ளங்கை நெல்லிக் கனியெனத் தெரியக்காணலாம்.

ஔவையும் பாரதியும்:

ஔவை தன் நூலில் ஞ, ய எனும் உயிரிமெய் எழுத்துகளை விட்டமை சரியெனப்படவில்லை. 

எனினும் வு, வூ, வொ, வோ எனும் மொழி முதலாகா நான்கெழுத்தையும் உயிரைச் சேர்த்து

    உத்தமனாய் இரு
    ஊருடன் கூடிவாழ்
    ஒன்னாரைத் தேறேல்
    ஓரம் சொல்லேல்.

எனக் கூறியிருப்பது அவரது மொழிப்புலமையைக் காட்டுகிறது. 

ஔவை ஏற்ற ஆய்த எழுத்தை பாரதி ஒதுக்கிவிட்டார். அவர் ஏற்காத "ஞ'கரத்தையும் "ய'கரத்தையும் பாரதி சேர்த்துக்கொண்டார். ஆனால் பாரதி மொழி முதலாகா ரகரத்திலும் "ல'கரத்திலும் புதுவதாகப் பதினான்கு வரிகளை எழுதியுள்ளார். அவற்றில் ஒன்றுகூட தமிழ்ச்சொல் இல்லை. இவற்றை அவர் எழுதாமலே இருந்திருக்கலாம்.

ஔவையைப் போலவே பாரதியும் மொழிமுதலாகச் சொற்களோடு உயிர் எழுத்தைச் சேர்த்தும் எழுதியுள்ளார்.

(உ) லுத்தரை இகழ்
(உ) லோகநூல் கற்றுணர் 

    எனும் தொடர்களே சான்று.

பாரதியின் தனிச்சிறப்பு

பாரதி வாழ்ந்த காலம் தொழிற்புரட்சி ஏற்பட்டு பல்தொழில்களும் நவீனக் கல்விமுறையும் வளர்ந்த காலம். அதனால் ஔவை சொல்ல நினைக்காத புதுமைக் கருத்துகளையும் பாரதி கூறியுள்ளார்.

"சரித்திரத் தேர்ச்சிகொள்'

என நாட்டு வரலாறு, மக்கள் வரலாறு போன்றவற்றை ஊன்றிக் கற்கவேண்டியதன் நிலையையும்
"ரேகையில் களிகொள்'

எனப் புவியியல் பாடம் படிக்கவேண்டிய தேவையையும்

"வானநூற் பயிற்சிகொள்'

என வானியலில் உள்ள அனைத்துக் கூறுகளையும் அறியவேண்டிய அவசியத்தையும் கூறியுள்ளமை பாரதியின் தொலைநோக்கைக் காட்டுவன ஆகும்.

ஆத்திசூடி, புதிய ஆத்திசூடி இரண்டையும் தமிழ்க் குழந்தைகளுக்குக் கசடறக் கற்பித்தால் அவர்கள் எதிர்காலத்தில் நாட்டையும் மொழியையும் காக்கும் நல்ல குடிகளாக உருவெடுப்பர் என்பது உறுதி.


நன்றி - இனிய உதயம்

ரயில்வே ஸ்தானம் - சுப்ரமணியபாரதி


ஒரு சிறிய கதை

வஸந்த காலம். காலை நேரம். தென்காசிஸ்டேஷன். இது பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்தது. இதற்கு மேற்கேயுள்ள அடுத்த ஸ்டேஷன் செங்கோட்டை. இது திருவாங்கூர் ஸமஸ்தானத்தைச் சேர்ந்தது. தெற்கே இரண்டு மைல் தூரத்தில் மிகக் கீர்த்திபெற்ற குற்றாலத்தருவி விழுகிறது. பக்கமெல்லாம் மலைய கிரிச் சாரல். கொஞ்சம்மேற்கே போனால், செங்கோட்டை ஸ்டேஷன் முதல்திருவனந்தபுரம் வரை பாதையிலே பத்து ஸ்டேஷன் மட்டும்.இரண்டு பக்கங்களிலும், செங்குத்தான மலைகளும், ஆழமானபள்ளங்களும், மலையை உடைத்து ரயில் வண்டி ஊடுருவிச்செல்லும் பொருட்டாக ஏற்படுத்தப்பட்ட நீண்ட மலைப்புழைகளும் இருபாரிசத்திலும் இயற்கையாய்ப் பச்சை உடுத்து,சால மிகப் பெருஞ் செழிப்புடனே களிகொண்டு நிற்கும்பலவகைப்பட்ட வனக்காட்சிகளும் ஒரு முறை பார்த்தால்பிறகு எக்காலத்திலும் மறக்கமுடியாதன.

இந்தத் தென்காசி ஸ்டேஷன் வெளி முற்றத்தில்காலை நேரத்திலே திருநெல்வேலிப் பக்கம் கிழக்கே போகும்ரயில் வரப்போகிற சமயத்தில் சுமார் நூறு பிரயாணிகள் வந்து கூடியிருக்கிறார்கள்.

இவர்களிலே சிலர் பிராமண வைதீகர். நீர்க்காவிஅழுக்கு நிறமாக ஏறிப்போன மிகப் பழைய வெள்ளைத்துணி உடுத்து உடல் வேர்க்க உட்கார்ந்து கொண்டு, இன்னஊரில், இன்ன தேதி, இன்னாருக்குச் சீமந்தம் என்ற விஷயங்களைப் பற்றி சம்பாஷணை செய்து கொண்டிருக்கிறார்கள்.
பிராமண விதவைகள் பலர் ஒரு புறத்திலேயிருந்து தமக்குள் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். சுமங்கலிப் பிராமணத்திகள் ஒரு பக்கத்தில் தலைகுனிந்துநின்று கொண்டு, போவார் வருவோரை கடைக்கண்ணால்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு சில உத்தியோகஸ்தர்கள் தலைப்பாகை, கோட்டு, கெடிகாரச் சங்கிலிசகிதமாக உலாவுகிறார்கள். சில போலீஸ்காரர்கள் சக்கரவர்த்திகளைப் போல தலைநிமிர்ந்து நடக்கிறார்கள்.சில முகம்மதிய ஸ்திரீகள் முட்டாக்குப் போட்டு தலையையும் முகத்தையும் மூடிக்கொண்டு திசைக்கொருத்தியாகப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிலை, பாக்கு, புகையிலை. சுருட்டு, பீடி, பொடிப்பட்டை, முறுக்கு, தேன்குழல், சுகியன், காப்பி முதலியனவியாபாரம் செய்யும் ஓரிரண்டு பிராமணரும் சூத்திரமும்பகற் கொள்ளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவதுகாசு பெறாத சாமான்களுக்கு மும்மடங்கு நான்கு மடங்குவிலைவைத்து விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் வண்டி அன்றைக்கு ஒரு மணிநேரம் தாமஸமாக வந்தது. எனக்குப் பொழுது போகவில்லை. தண்டவாளத்தின் ஓரமாகச் சிறிதுதூரம் உலாவி வரலாமென்று கருதித் தென்புறமாகக்கூப்பிடு தூரம் போனேன். அங்கு ஒரு மரத்தடியிலேமிகவும் அழகுள்ள ஒரு மகம்மதிய கனவான் உட்கார்ந்திருக்கக் கண்டேன். சரிகைத் தொப்பி, சரிகைக் கரைகள் தைத்த மஸ்லீன் சட்டை. சரிகைக்கரை போட்ட நிஜார், சரிகை போட்ட செருப்பு, பூர்ணச் சந்திரன் போன்ற முகம், செழித்து வளர்ந்தமீசை. அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவன் பிரபுக் குலத்தில் பிறந்தவனென்று எனக்கு நிச்சயமாகிவிட்டது. அவன் கண்களினின்றும் தாரை தாரையாகக்கண்ணீர் ஊற்றுகிறது. இதைப் பார்த்து எனக்கு மிகவும்பரிதாப முண்டாயிற்று. நான் போய் அவனை ஏன்அழுகிறாய் என்று கேட்டால், அதினின்றும் அவனுக்குஒரு வேளை கோபம் உண்டாகுமோ என்பதைக்கூடயோசனை செய்யாமல் சரேலென்று அவன் முன்னேபோய் நின்றுகொண்டு:-  ''தம்பி, ஏன் அழுகிறாய்?''என்று கேட்டேன்.

அவன் என்னை ஏற இறங்க ஒருமுறைபார்த்தான். அவனுக்கு 25 வயதுக்குமேல் இராது. அவன் தலையைக் குனிந்து அழுது கொண்டிருந்தபோதே மிகவும் சுந்தர புருஷனாகக் காணப்பட்டான்.பிறகு அவன் என்னைப் பார்த்தவுடன் கண்ணைந்துடைத்துக்கொண்டு என் இரண்டு கண்களுடனே அவனிரண்டு கண்களும் பொருந்த நோக்கிய காலத்தில அவன் ரூபம் எனக்கு சாட்சாத் மன்மத ரூபமாகவேதென்பட்டது.

என்னை உற்று நோக்கியதினின்றும் அவனுக்கு எப்படியோ என்னிடத்தில் நல்லெண்ணம்உண்டாய் விட்டது. சற்றேனும் என்னிடம் கோபம்கொள்ளாமல் ''ரயில் எப்போது வரப்போகிறது?'' என்றுகேட்டான்.

''இன்றைக்கு ஒரு மணி நேரம் ரயில்தாமதித்து வரப்போவதாக ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்'' என்றேன்.

எனக்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது பாஷை நன்றாகத் தெரியும். ஆதலால் நான் அவனிடம்உருது பாஷையிலே ஆரம்ப முதல் பேசினேன். ?உங்களுக்கு உருது எப்படித் தெரியும்?  

உங்களைப்பார்த்தால் ஹிந்துக்கள் போலத் தோன்றுகிறதே? என்றுகேட்டான்.

அதற்கு நான்:-  ''சிறு பிராயத்திலேயேநான் காசிப் பட்டணத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தேன். அங்கு எனக்கு ஹிந்துஸ்தானி பாஷை பழக்கமாயிற்று'' என்றேன்.

''காசியில் ஹிந்தி பாஷை அன்றோ பேசுகிறார்கள்?''  என்று அந்த முஸல்மான் கேட்டான்.

அதற்கு நான்:-  ''ஹிந்தி, உருது, ஹிந்துஸ்தானி எல்லாம் ஒரே பாஷைதான். முகலாயராஜாக்கள் பாரசீக பாஷையிலே தான் பெரும்பாலும்ஆரம்பத்தில் விவகாரம் நடத்திவந்தார்கள். பின்னிட்டுஅவர்கள் தமக்கும் தம்முடைய பரிவாரங்களுக்கும் இந்ததேசத்துப் பாஷையாகிய ஹிந்தியைப் பொது பாஷையாகக்கைக்கொண்டார்கள். ஹிந்தி பாஷை ஸம்ஸ்கிருதத்திலிருந்து பிறந்தது. அது ஸம்ஸ்கிருத பாஷை சிதைவு. அதைஹிந்துக்கள் தேவ நாகரியில் எழுதி ஸ்வம்யம்புவாகப்பேசுகிறார்கள். அதையே பார்ஸி லிபியில் எழுதிக் கொண்டுபல பார்ஸி அரபி மொழிகளைக் கலந்து முஸல்மான்கள்பேசியபோது அதற்கு ஹிந்துஸ்தானி அல்லது உருது என்றுபெயர் வழங்கினார்கள். உருது என்றால் கூடார பாஷை யென்று அர்த்தம். அதாவது, மொகலாய ராஜ்யத்தின் சேனைகள் கூடாரம் அடித்துக்கொண்டு பல தேசத்துப் போர்வீரர்கள் கலந்திருக்கையில் அங்கு தோன்றிய கலப்பு பாஷைஎன்று பொருள். எனக்கு ஹிந்தி தான் மிகவும் நன்றாகத் தெரியும். எனிலும் ஹிந்துஸ்தானி அல்லது உருது மேற்படிஹிந்தி பாஷையில் பார்ஸி அரபிச் சொற்கள் சேர்ந்ததேயாகுமாதலால் தான் இதிலும் நல்ல பழக்கமுடையவனானேன். 

இது நிற்க. ''நீ வருத்தப்பட்டுக்கொண்டிருந்த காரணம் யாது?''என்று மறுபடியும் என்னை அறியாமலே கேட்டேன். இதுகேட்டு அந்த முகம்மதியப் பிரபு சொல்லுகிறான்:-

''சுவாமி, உங்களைப் பார்த்த மாத்திரத்திலேயேஎனக்கு உங்களிடம் விசுவாசம் உண்டாகிறது. உங்களிடம்சொன்னால் என் துக்கத்திற்கு நிவர்த்தி உண்டாகுமென்று என்மனதில் ஒருவித நிச்சயம் தோன்றுகிறது. என் துயரம் சாதாரணமாக மற்றவர்களிடம் சொல்லக்கூடியதன்று. எனினும் உங்களிடம் சொல்லலாமென்று நினைத்துச் சொல்லுகிறேன். என் துயரத்தைத் தீர்த்து விட்டால் உங்களுக்கு மிகுந்தபுண்ணிய முண்டு. இந்த உபகாரத்தை நான் இறந்து போகும்வரை மறக்க மாட்டேன்'' என்றான்.

''முதலாவது உம்முடைய கஷ்டத்தைச் சொல்லும்.தீர்க்க வழி கிடைத்தால் தீர்த்து விடுகிறேன்'' என்றேன்.

அப்போது அம் முகம்மதியப் பிரபு பின்வருமாறு சொல்லத் தொடங்கினார்:

''எங்கள் ஜாதியில் சிறிய தகப்பனார்,பெரிய தகப்பனார் மக்களை விவாகம் செய்து கொள்ளலாமென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும்.நான் பிறந்தது வடக்கே ஹைதராபாத் நகரம். சிந்துமாகாணத்து ராஜதானியாகிய ஹைதராபாத் அன்று. நிஜாம்அரசரின் ராஜதானியாகிய ஹைதராபாத் நகரம். நான் என்பிதாவுக்கு ஒரே பிள்ளை. நான் பிறக்கும் போது என் பிதாமிகவும் ஏழையாக இருந்தார். நான் பிறந்து சில வருஷங்களுக்குப் பின் எங்கள் ராஜ்யத்தில் ஒரு பெரிய 'லாட்டரி' ஏலச் சீட்டுப் போட்டார்கள். அந்தச் சீட்டுக்கு என் பிதா யாரிடமிருந்தோ 10 ரூபாய் "கடன் வாங்கி அனுப்பினார். அதிர்ஷ்டம் அவருக்கிருந்தது. அவருடையதரித்திரத்தை நாசம் பண்ணிவிட வேண்டுமென்று அல்லாதிருவுளம் பற்றினார். ஒரு கோடி ரூபாய் சீட்டு அவருக்குவிழுந்தது. பிறகு அவர் அதைக் கொண்டு சில வியாபாரங்கள் நடத்தினார். அந்த வியாபாரங்களிலும் அவருக்கு மிதமிஞ்சிய லாபம் கிடைக்கத் தொடங்கி சிலவருஷங்களுக்குள்ளே ஏழெட்டுக் கோடிக்கு அதிபதியாய் விட்டார். அப்பால் சற்றே நஷ்டம் வரத்தொடங்கிற்று. என்பிதா நல்ல புத்திமான். நஷ்டம் வரத்தொடங்கிய மாத்திரத்திலேதிடீரென்று வியாபாரங்களை யெல்லாம் நிறுத்திக்கொண்டு,பணங்களைத் திரட்டி ஏராளமான பூஸ்திதிகள் வாங்கி அவற்றினிடையே மாளிகை கட்டிக்கொண்டு தம்மால் இயன்றவரை பரோபகாரத்தில் ஈடுபட்டவராய் வாழ்ந்து வந்தார். நான்பதினைந்து வயதாக இருந்தபொழுது அவர் இறந்து போய்விட்டார். நான் ஒரே பிள்ளையாதலால் அவர் சொத்தெல்லாம்எனக்கு வந்து சேர்ந்தது. என் வீட்டு மேற்பார்வை செய்யஎனது சிறிய தகப்பனார் நியமிக்கப்பட்டிருந்தார். என் தந்தைஇறக்குந் தறுவாயில் சிறிய தகப்பனாருக்குச் சில லக்ஷங்கள்பெறக்கூடிய பூமி இனாம் கொடுத்தது அன்றி, என்னைப்பராமரித்து வரும் கடமையையும் அவருக்கே சார்த்தி விட்டுப் போனார். எனது சிறிய தகப்பனார், முதலாவது வேலையாக, தம்முடைய குமாரத்திகளை எனக்கே மணம்புரிவித்தார். என் பிதா இறந்து இரண்டு வருஷங்கள் ஆகுமுன்னரே, மேற்படி விவாகம் நடைபெற்றது. என் சிறியதகப்பனாருக்கு ஆண் குழந்தை கிடையாது. மூன்று பெண்பிரஜை தான் அவருக்குண்டு. ஆகவே என்னுடைய சொத்துவெளிக் குடும்பங்களுக்குப் போய்விடக்கூடாதென்று உத்தேசித்து அவர் இங்ஙனம் செய்தார். இந்த விவாகம் "என்தாயாருக்குச் சம்மதமில்லை. அவள் தன்னுடைய வகையில் ஒரு அழகான பெண்ணை எனக்கு மணம் புரிவிக்க விரும்பினாள். அதை விட்டு நான் சிறிய தகப்பனாரின் பெண்களை விவாகம் செய்துகொண்டாலும் அவர்களில் யாரேனும் ஒரு பெண்ணை மாத்திரம் மணம் செய்து கொல்வதே சரியென்றும் ஒரேயடியாக மூவரையும் மணம்புரிவது கூடாதென்றும் என் தாய் வற்புறுத்தினாள். இதினின்றும் என் தாயாருக்கும் சிறிய தகப்பனாருக்கும் மனஸ்தாபம் மிகுதியாக ஏற்பட்டது. சிறிய தகப்பனார் என்னைத் தனியாக வேறே ஊருக்கு அழைத்துக்கொண்டுபோய் அங்கு என் தாயாருடைய அனுமதியில்லாமலேவிவாகத்தை முடித்து வைத்து விட்டார். சிறிது காலத்துக்கெல்லாம் என் தாயார் என் செய்கையாலே ஏற்பட்ட துக்கத்தைப் பொறுக்க மாட்டாமலே உயிர் துறந்து விட்டாள்.சிறிய தகப்பனார் இட்டதே என் வீட்டில் சட்டமாய் விட்டது.சொத்து விஷயங்களை நான் கவனிப்பதே கிடையாது.எல்லாம் அவர் வசத்தில் விட்டு விட்டேன். அவரும் என்சொத்தில் தம்மால் இயன்றவரை இரண்டு மூன்று வருஷங்களுக்குள்ளே அறுபத்தேழு லக்ஷம் - கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை - தாஸிகளின் விஷயத்திலும்குடியிலும் நாசம் பண்ணிவிட்டு கடைசியில் குடி மிகுதியால்குடல் வெடித்துச் செத்துப்போனார். பிறகு என் சொத்தை யெல்லாம் நிர்வகிக்க வேண்டிய கடமை என்னைப் பொறுத்ததாயிற்று. சரி. இந்த விஷயத்தை விஷ்தாரமாகச் சொல்வது என்னுடைய நோக்கமன்று. சொத்துக் கொஞ்சம்நஷ்டமானதில் எனக்கு அதிகக் கஷ்டமில்லை. இதனிடையேஎன்னுடைய மூன்று மனைவிகளால் நான் படும் பாடு சொல்லுந் தரமன்று. அதோ - பார்த்தீர்களா?  ஸ்டேஷனுக்குப்பக்கத்தில் முகம்மதிய ஸ்திரீகள் உட்கார்ந்திருக்கும் "கூட்டம்தெரிகிறதன்றோ?  நடுவே யிருக்கும் மூன்று பேரும் என்னுடைய பத்தினிமார். சுற்றி உட்கார்ந்திருப்போர் வேலைக்காரிகள். அந்த மூன்று பேரும் மூலைக் கொருத்தியாகமுகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தமாத்திரத்திலேயே அவர்களுக்குள்ளே மனவொற்றுமை யில்லையென்பது பிரத்யக்ஷமாக விளங்கவில்லையா?  இவர்களில்மூத்தவள் பெயர் ரோஷன். அவளுக்கு வயது இருபத்திரண்டு.அடுத்தவள் பெயர் குலாப் பீவி. அவளுக்கு வயது பத்தொன்பது. அதற்கடுத்தவள் பெயர் ஆயிஷா பீவி. அவளுக்கு வயது பதினாறு. ரோஷனிடத்தில் நான் பேசினால்குலாப் என்னை வெட்டலாமென்று கருதுகிறாள். குலாபிடம்வார்த்தை பேசுவது ஆயிஷாவுக்குச் சம்மதியில்லை. அவளுக்கு ஒரு நகை வாங்கிக் கொடுத்தால் இவள் ஒரு நகையை உடைத்தெறிகிறாள். இவளுக்கொரு பட்டுச் சட்டை வாங்கிக் கொடுத்தால் அவளொரு சட்டையை கிழித்தெறிகிறாள். இங்ஙனம் ஒவ்வொரு விஷயத்திலும் அம்மூவரும் முரண்பட்டு என் பிராணனை வாங்குகிறார்கள். ஒரு நாளா, இரண்டு நாளா, ஒரு வருஷமா, இரண்டு வருஷமா, என் வாழ்நாள் முழுவதும் இவர்களால் நரகமாக்கப்படுகிறது. நான் என்ன செய்வேன், இதனிடையே நேற்றிரவு ஒரு கனாக் கண்டேன். அதில் முகம்மது நபி வந்து என்னை நோக்கி, அடே இஸ்மேல்கான் நீ உன் பத்தினிமார் மூவராலே மிகவும் கஷ்டப்படுகிறாய். யாரேனும் இருவரைத் தள்ளி வேறு விவாகம் செய்து கொள்ள விட்டுவிடு. ஒருத்தியை மாத்திரம் வைத்துக்கொள். உன் துக்கம் தீரும் என்றார். நான் அந்தக் கனவைத் தெய்வ சாசனமாகவே நம்புகிறேன். நம்முடைய மனதில் தோன்றுவது தான் கனவாக வருகிறதென்பதை நான் அறிவேன். ஆனாலும் நம்முடைய ஆத்மாவிலும் அல்லாவே இருக்கிறாராதலால் இந்தக் கனவை அல்லாவின் கட்டளையென்று நான் கருதுகிறேன். ஆனால் இந்த மூன்று ஸ்திரீகளிடமும் ஸமானமான பிரியம் இருக்கிறது. அவர்களும் என்னிடத்தில் சமமான காதல் கொண்டிருக்கிறார்களென்றும் நினைக்கிறேன். யாரைத் தள்ளுவது யாரை வைத்திருப்பது  என்று என் புத்திக்கு தென்படவில்லை. அதற்காகத் துக்கப்படுகிறேன் என்று மகம்மதிய பிரபுவாகிய இஸ்மேல்கான் சொன்னான்.

இதற்குள் ரயில் ஸ்டேஷனுக்குள் வருகிற சத்தம் கேட்டது. அவர் திடுக்கென்றெழுந்து ஸலாம் ஸலாம் என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனை நோக்கி ஓடினான். நானும் நல்லவேளை இந்த கடினமான விவகாரத்துக்குத் தீர்ப்புச் சொல்லுமுன் ரயில் வந்ததே என்று மகிழ்ச்சி கொண்டு ரயிலிலேறப் போய் விட்டேன். மகம்மது நபி கனவில் செய்த கட்டளைப்படியே அவன் நடந்து கொள்வானென்று நம்புகிறேன்.

அருளாளர்கள் சுட்டும் அகவுழவு

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்குச் செய்ய வேண்டிய தொழில்கள் பலவுண்டு. மெய்வருத்தக் கூலி தரும் புறத்தொழில்கள் புரிந்து அறவழியில் பொருளீட்டல் வாழ்வுக்கு இன்றியமையாதது. அத்தகு பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை. இம்மை வாழ்வும் செம்மையாகாது. எனவே, பொருள் சேர்க்கும் புறவாழ்விற்காகப் புரிய வேண்டியது தொழில்.

இந்தியத் திருநாட்டில் எத்தனையோ தொழில்கள் இருந்தாலும், அவற்றுள் இன்றியமையாத தொழில், உழவு. ஏனைய தொழில்கள் அனைத்தும் இதன் பின்னர்தான் வந்தாக வேண்டும் என்ற கருத்தில்,

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழன்றும் உழவே தலை

என்று வள்ளுவம் மொழிகிறது. தனக்கு மட்டுமன்றி, பல்லுயிர்க்கும் உணவளிக்கும் அருள்தொழில் உழவு. இதனைப் புறத்தொழிலாக மட்டும் கருதாமல் அகத்தொழிலாகவும் ஆக்கிப் பார்த்தது, தமிழ் இலக்கியம்.
வாழ்வின் இலக்கு இன்பம். இம்மைக்காயினும், மறுமைக்காயினும் இன்பம் வேண்டும். அது, துன்பம் ஒன்றில்லாத் தூய இன்பம். எல்லாவுயிர்க்கும், இன்பம் விழைதல் இயல்பு. அவற்றுள் மானுட உயிர்க்கு இவ்வின்பம் சிற்றெல்லை கடந்து பேரின்பமாகத் தேடக்கிடைக்கிறது. அதற்குச் செய்ய வேண்டிய அகப் புறத் தொழிலாக உழவை முன்வைக்கிறார்கள் இரு அருளாளர்கள்

காடாகவும், மேடாகவும் கரடுமுரடாகவும் கிடக்கும் நிலத்தைக் கொத்திப் பண்படுத்தி, கலப்பை கொண்டு உழுது நீர் பாய்ச்சி, விதை விதைத்துக் களைபறித்து, வேலியிட்டுக் காத்து நிறைவில் விளைபயனை அடைதல் வேளாண் தொழிலுக்கு உரிய ஒழுங்குகள். இந்தப் புறவொழுங்குகளை, அகவொழுங்குகளாக அமைத்து உடலாகிய நிலத்தைப் பக்குவப்படுத்தி உழவுத்தொழில் நிகழ்த்தி, உரியன செய்து உயிரை மேம்படுத்திக் கொள்ளும் அகவுழவை ஆழமாகவும், அகலமாகவும் வலியுறுத்தும் அருளாளர்கள் மூவரின் சிந்தனைகளை இங்கு நோக்கலாம்.

அப்பர் சுட்டும் அருள் உழவு:

சிவகதி எய்தத் தவநெறி நின்று தொண்டாற்றிய அருளாளர் அப்பரடிகள், உழவாரப்படை ஏந்தித் திருத்தொண்டு புரிந்த உயர்ந்த சீலர். அவர் சிவகதியாகிய விளைவினை, அனைத்து உயிர்களும் எய்தச் செய்யவேண்டிய ஞான உழவினைப் பின்வரும் பாடலில் இனிது புகட்டுகிறார்.

மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்
பொய்ம்மையாம் களையை வாங்கிப்
பொறையெனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்ப ராகில்
சிவகதி விளையு மாறே!
(திருநாவுக்கரசர் தேவாரம்- 4-76:2)

பற்றற்றான் பற்றினைப் பற்றும் பற்றாகிய விருப்பம் என்பது இப்பாடலில் வித்தாகிறது. வெட்ட வெட்ட முளைக்கும் களையாகிய பொய்ம்மையை முற்ற வாங்கி, பொறை என்னும் நீர் பாய்ச்சுதலோடு, தம்மையும் நோக்கிக் கண்டு, தகவெனும் வேலி இட்டுக் காத்தல் என்பது இன்றியமையாதது. தம்நிலை கண்டு அதற்குத் தகுதியான நிலையில் வேலி அமைத்துக் காத்துச் செம்மையுள் நிற்பவர் நிச்சயம், சிவகதியை விளைவாகப் பெறுவார் என்கிறார் அப்பர். இப்பாடலில், "தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டு' என்ற அடி கவனத்திற்குரியது. ""சிவபோதத்தால் ஆன்ம தரிசனம். சிவ தரிசனத்தால் ஆன்ம சுத்தி. தகவு என்பது கொல்லாமை. கடவுள் உடலுக்குள் புகுந்து நின்று ஆட்டுவிக்கிறான். பின் பக்குவம் வந்து அவனுக்குள்ளேயே ஒளிந்து கொள்கிறான். முன்னையது சிவபோதம். பின்னையது சிவபோகம்'' என்று சித்தாந்த விளக்கம் தந்து ஞானவுழவின் மேன்மையை விளக்குவார் தவத்திரு குன்றக்குடி அடிகளார்.

பாரதியார் சுட்டும் பயிர்த்தொழில்:

இருபதாம் நூற்றாண்டில், உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து பாடிய சொல்லேர் உழவர், மகாகவி பாரதியார். நமக்குத் தொழில் கவிதை என்று தம்மனத்திற்கு உரைத்த அவர், அகவுழவு பற்றியும் தம் கவிதையில் குறிப்பிடுகிறார்.

அன்புநீர் பாய்ச்சி, அறிவெனும் ஏருழுது
சாத்திரக் களைபோக்கி, வேதப் பயிர் செய்து
இன்பப் பயனறிந்து தின்பதற்கு மஹாசக்தியின்
வேண்டுகின்றோம் அதனை அவள் தருக!
(பாரதியார், வசனகவிதைகள்-சக்தி-3)

அன்பினை நீராகப்பாய்ச்சி, அறிவினை ஏராகக்கொண்டு செய்யும் உழவுத்தொழிலில் முளைக்கும், பொய்ம்மைச் சாத்திரங்களாகிய களைகளைப் போக்கி, மெய்யறிவாகிய வேதத்தை வித்திட்டுப் பேணி வளர்த்து இன்பப்பயன் அறிந்து உண்டு மகிழுதற்கு மகாசக்தியின் துணையை வேண்டுகிறது, பாரதியார் பாடல்.

வஞ்சகம், பொறாமை முதலான கானல்நீர் பாய்ச்சி, அறிவுக்கூர் மழுங்கிய கலப்பை கொண்டு உழுத சாலிலேயே உழுவதாகப் பெயர் பண்ணி, பொய்ச்சாத்திரங்களாகிய களைகளையே பயிர்கள் எனக் கருதிக் காட்டி, மிகவிளைத்த சொல்லேர் உழவர்கள் எனப் பெயர் பண்ணிக்கொண்டு திரிந்த கலியுகப் புலவர்களின் வறட்சிப் போக்கில் இருந்து  தம்நாட்டையும், தமிழ் இலக்கியத்தையும் மீட்க வேண்டிக் களம் இறங்கிய பாரதியார், "பொய்க்கும் கலியைக் கொன்று பூலோகத்தார் கண்முன்னே மெய்க்கும் கிருதயுகத்தினைக் கேடின்றி நிறுவ விரதம்' கொண்டு புரிந்த வேளாண்தொழில், வேதப்பயிர் செய்தல். "எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்க' ஏற்ற தொழில், இந்த ஞான உழவுத்தொழில் என்று நுட்பமாய் உரைக்கும் இப்பாடல்.

உயிர் தங்கும் வீடான உடலுக்கு மிகவும் இன்றியமையாத, உணவு. அதனை விளைக்கும் அறத்தொழில், உழவு. அருள்வடிவான இறையை எங்கும் நிறைந்த பரம்பொருளைத் துணைக்கொள்ள, உயிரும் தொழில் பண்ண வேண்டியிருக்கிறது. அதற்காகப் புலங்களை உடல் உழுவதுபோல, புலன்களை உயிர் உழுதல் வேண்டும். புறவுழவு உணவு விளைக்க; அகவுழவு நல்லுணர்வு படைக்க. இம்மையிலும் மறுமையிலும்  தடையிலாப் பேரின்பம் நின்று நிலைக்கத் தொழில் இன்றிமையாதது. அனைத்துத் தொழில்களிலும் அறத் தொழிலாக உயர்ந்து நிற்பது உழவுத்தொழிலே!
தன்னேரிலாத நற்றொழிலாகிய உழவு அகத்தும் புறத்தும் நின்று நிகழ்த்தப் பெறும்போது எல்லாவுயிர்களும் இன்புற்று வாழ்தல் இயல்பாகும். அதுவே இந்த அருளாளர்களின் விழைவும் ஆகும்.

நன்றி - தமிழ்மணி