‏إظهار الرسائل ذات التسميات தமிழர் பண்பாடு. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات தமிழர் பண்பாடு. إظهار كافة الرسائل

மதுரை மாநகரம் – தொ.பரமசிவன்

பட்டணந்தான் போகலாமடி பொம்பள, பணம் காசு தேடலாமடி என்பது ஒரு பழைய திரைப்படப்பாடல். இந்த பாட்டின் உண்மையான பொருள் என்ன? நகரங்களில் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, தொழிலாளர் பெருக்கம், போக்குவரத்து வசதிகள், பணப்புழக்கம் எல்லாம் இருக்கும். அங்கே வாழ்க்கைக்கு எல்லாவிதமான உத்திரவாதமும் உண்டு என்பதுதான். பல ஊர்கள் இணைந்து நாடுகள் உண்டாகிறபோதே நகரங்கள் பிறந்து விடுகின்றன. எனவே உலகெங்கிலும் உள்ள நகரங்களைப் பற்றிய அறிவு என்பது மனிதனின் பொது அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்கின்றது.
மனித நாகரிக வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த ஒரு கட்டம் நகரங்களை உருவாக்கியது ஆகும். வாணிகத்திற்கான நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடங்களில் அரசியல் தலைமைகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தும் இடங்களாக நகரங்கள் உருவாயின. நீர் ஊர்திகள் வளர்ச்சி பெற்று கடல் வாணிகம் வளர்ந்த போது துறைமுக நகரங்கள் உருவாயின. உலகெங்கிலும் நகரங்கள் உருவான கதை இதுதான்.

உலகின் பழைய நகரங்களையெல்லாம் பாருங்கள் அவை ஏதேனுமொரு ஆற்றங்கரையில் அல்லது கடற்கரையில் அல்லது குன்றுகள் சூழ அமைந்திருக்கும். உலகின் பழைய நகரங்களில் ஒன்றான மதுரையும் அப்படித்தான். பரங்குன்றம் மலை, பசுமலை, சமணமலை, நாகமலை, அழகர்மலை, ஆனைமலை என்று குன்றுகள் சூழ வைகை ஆற்றங்கரையில் உருவான கோட்டை நகரந்தான் மதுரை.

காலப்போக்கில் பழைய நகரங்கள் அழிந்துபோகப் புதிய நகரங்கள் உருவாயின. காலவெள்ளத்தில் கரைந்து போகாமல் தம்மை இன்றளவும் நிலை நிறுத்திக்கொண்ட நகரங்கள் மிகச் சிலவே. தமிழ்நாட்டில் மதுரை, காஞ்சிபுரம் ஆகிய இரண்டு நகரங்களும் குறைந்தது 25 நூற்றாண்டுக் கால வரலாறு உடையனவாக இன்றளவும் வாழ்ந்து வருகின்றன. இவை இரண்டிலும் மதுரை தனிச்சிறப்புகள் பல உடைய நகரமாகும்.
தமிழ்நாட்டின் பழையகால நெடுஞ்சாலைகளும் புதிய நெடுஞ்சாலைகளும் சந்திக்கும் மையப் புள்ளியாக தென்தமிழ்நாட்டின் மதுரை அமைந்திருக்கின்றது. வரலாற்றுக்கு முற்பட்ட மனிதன் வாழ்ந்த தடயங்கள் மதுரைக்கருகில் உள்ள சிவரக்கோட்டையிலும், துவரிமானிலும் கற்கருவிகளாக இன்றும் கிடைக்கின்றன. கற்காலத்தைத் தாண்டி வந்த நாகரிக மனிதர் வாழ்ந்த அடையாளங்களான ஈமத் தாழிகள் மதுரை நகரத்திற்கு உள்ளேயே கோவலன்பொட்டல், பழங்காநத்தம், அனுப்பானடி, தத்தனேரி ஆகிய இடங்களில் கிடைக்கின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத் தமிழிக் கல்வெட்டுக்கள் தமிழ்நாட்டிலேயே மதுரையைச் சுற்றித்தான் திருப்பரங்குன்றம், கொங்கர்புளியங்குளம், திருவாதவூர், அழகர்கோயில், அரிட்டாபட்டி, ஆனைமலை ஆகிய இடங்களில் அதிகமாகக் கிடைக்கின்றன. இவையெல்லாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே தமிழர்கள் நாகரிகம் கண்ட பகுதிகளில் ஒன்றாக மதுரை இருந்ததற்கான சான்றுகள் ஆகும்.

மதுரை நகரத்தின் பழைய பெயர் குறித்து ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கருத்துகளைச் சொல்கிறார்கள். புராணங்கள் பல கதைகளைச் சொல்கின்றன. கிறித்துவுக்கு முற்பட்டகாலக் கல்வெட்டுகளில்மத்திரைஎன்ற பெயர் காணப்படுகிறது. கி.பி.750 முதல் 900 வரை உள்ள கல்வெட்டுகளில் மதுரை என்பதற்குப் பதிலாகமதிரைஎன்ற பெயரே காணப்படுகிறது. பாமர மக்கள் வழக்கிலோ இதுமருதைஆகும். குதிரை, பேச்சு வழக்கில் குருதை ஆனது போல மதிரையே பேச்சு வழக்கில் மருதை ஆனது என்று கூறுகின்றனர். இந்தக் கருத்துதான் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்கிறது.

உலகில் பழைய நகரங்கள் எல்லாம் திட்டமிட்டு அமைக்கப்பட்டவையே. ரோம், வெனீசு, மொகஞ்சதரோ ஆகியவற்றைப் போல மதுரையும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஒரு நகரமாகும். ‘மதுரை நகரம் தாமரை பூப்போன்றது. அதன் தெருக்கள் தாமரைப்பூவின் இதழ்களைப் போன்றவை. இதழ்களுக்கு நடுவே அமைந்திருக்கும் பொகுட்டினைப் போலக் கோயில் அமைந்திருக்கிறதுஎனப் பரிபாடல் இலக்கியம் பாராட்டுகின்றது மாசி வீதிகளின் சந்திப்பில் மிகப்பெரிய தேரினைத் திருப்புவதற்கு வசதியாக வடம்போக்கித் தெருக்கள் அமைக்கப்பட்டிருப்பதும் தேர்வடங்களில் ஒன்றிரண்டை அத்தெருக்களுக்குள் கொண்டு சென்று மக்கள் இழுப்பதும் இன்றளவும் காணக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகும். 90°யில் நேராக அமைந்த மொகஞ்சதாரோ தெருக்களைப் போல அல்லாமல் மதுரை நகரத்துத் தெருக்கள் சற்றே வளைந்தவையாகும்.

தமிழ்நாட்டின் கோட்டை நகரங்கள் எல்லாமே நிறைய நீர் வசதிகளைக் கொண்டதாக இருக்கும். மதுரைக் கோட்டையும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. வடபுறத்தில் வைகை ஆற்றை எல்லையாகக் கொண்டிருந்தது. அதன் மேற்குப் புறத்தில் மாடக்குளம் என்னும் மிகப்பெரிய குளம் இருந்தது. வைகையாற்றில் இருந்து ஒரு நீர்க்கால் பிரிக்கப்பட்டுகிருதமாலைஎன்னும் பெயரோடு கோட்டையின் மேற்கு, தெற்குச் சுவர்களை ஒட்டி ஓடிக்கொண்டிருந்தது. கோட்டையின் வெளிப்புறத்தில் கிழக்கு வாசலை ஒட்டியும் வடக்கு வாசலை ஒட்டியும் இரண்டு தெப்பக்குளங்கள் இருந்தன. கோட்டையின் உள்ளே மேற்குப் புறத்தில் ஒரு தெப்பக்குளமும் கோட்டையின் நடுவில் அமைந்த கோவிலுக்குள் ஒரு தெப்பக்குளமும் ஆக இரண்டு இருந்தன. இவை தவிரப் பல கிணறுகளும் இருந்திருக்கின்றன. கோட்டையின் மழைநீர் வடிகாலாக கிருதமாலை நதியும் வைகை ஆறும் பயன்பட்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியம் காலந்தோறும் தவறாது பாடும் நகரம் மதுரையாகும். இலக்கியங்கள் பாடும் பழையாறை, பூம்புகார் போன்ற பழைய நகரங்கள் அழிந்து போயின. தஞ்சை, கருவூர்(கரூர்), காஞ்சி போன்ற நகரங்கள் சிதைந்து அளவில் சுருங்கிப் போயின. மதுரை நகரம் மட்டும் சித்திரத்துப் பூப்போல வாடாமல் இருக்கிறது.

அரசர்களாலும் பக்தர்களாலும் இலக்கியங்களாலும் கொண்டாடப்பட்ட நகரங்களில் மதுரையும் ஒன்று. இத்தோடு எளிய மக்களின் நாவில் அன்றாடம் ஒலிக்கின்ற தாலாட்டு, ஒப்பாரி, ஆட்டப்பாடல்கள், பழமொழி, விடுகதை கதைகள் ஆகியவற்றிலும் தவறாது பேசப்படும் நகரம் மதுரையாகும். இந்தப் பெருமை தமிழ்நாட்டின் பிற நகரங்களுக்குக் கிடைத்ததில்லை.

நகரத்தின் தலைமைத் தெய்வமான மீனாட்சி மதுரைக்கு அரசி என்பது நாட்டு மக்களின் நம்பிக்கை. இன்றளவும் சித்திரைத் திருவிழாவில் மீனாட்சித் தெய்வம் திருமணத்திற்குமுன் பட்டாபிஷேகம் செய்யப்பெற்று, செங்கோல் ஏந்தி மதுரை நகரத்து வீதிகளில் திக்குவிசயம் செய்கின்றது. திருமணம் நடந்த பின்னரும் சுந்தரேசர் இராணியின் கணவராகவே கருதப்படுகிறார். அரசராகக் கருதப்படுவதில்லை. இந்திய வரலாற்றில் எந்தப் பெண் தெய்வமும் இப்படியொரு தனிச் சிறப்பைப் பெற்றது இல்லை. புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட திருவிழாவாக இது இருந்தாலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் திராவிட நாகரிகத்தில் பெண்களும் முடிசூடி ஆண்ட நிகழ்வினை இது நமக்கு நினைப்பூட்டுகிறுது.

தமிழ்மொழி வளர்ச்சியில் மதுரை நகரம் தொடர்ந்து கணிசமான பங்கு வகித்துவந்துள்ளது. தமிழ்நாட்டு அரச மரபினரில் பாண்டியரே பழைய மரபினர் என்பது வரலாற்று அறிஞர் கொள்கை. பாண்டியர் சங்கம் வைத்துத் தமிழ் மொழியினை வளர்த்தனர் என்று செப்பேடுகளும் இலக்கியங்களும் கூறுகின்றன. சங்க இலக்கியப் புலவர்களில் மதுரையைச் சேர்ந்தவர்களே அதிகமாகக் காணப்படுகின்றனர். பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சி மதுரை நகரத்தை மட்டுமே பாடுகின்றது. எட்டுத்தொகையில் ஒன்றான பரிபாடல் மதுரையினையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் பாடுகின்றது. சிலப்பதிகாரக் காப்பியம் மதுரை நகரத்தை மிக விரிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. தேவார மூவரும் ஆழ்வார்களும் மதுரை நகரத்தைப் பாடியுள்ளனர். திருவாசகமோ சிவபெருமான் கூலியாளாக வந்துமதுரைமண் சுமந்து பாண்டிய மன்னனிடம் பிரம்படி பட்ட கதையைப் பாடுகின்றது. சிவபெருமான் மதுரையில் 64 திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டியதனை திருவிளையாடற் புராணம் பேசுகிறது. மதுரை நகரத்தின் மீது எழுந்த சிற்றிலக்கியங்கள் நூற்றுக் கணக்கானவை.
சங்க இலக்கியப் புலவர்களில் கணிசமானோர் மதுரை நகரத்துப் புலவர்களாகவே இருந்திருக்கிறார்கள் என்பதும் வரலாற்று உண்மையாகும். இருபதாம் நூற்றாண்டிலும் தமிழாராய்ச்சிக்குக் களமான தமிழ்ச்சங்கம் மதுரையில்தான் பாண்டித்துரைத் தேவரால் தொடங்கப்பெற்றது.
மதுரை நகரத்துத் தெருப்பெயர்கள் இன்னமும் இவ்வூரின் பழமையினையும் நகர அமைப்பினையும் தெளிவாகக் காட்டுகின்றன. வாழைக்காய்ப்பேட்டை, நெல்பேட்டை, தவிட்டுச்சந்தை, வெற்றிலைப்பேட்டை என வணிகப் பெருமைகாட்டும் இடப்பெயர்களைக் காண்பதோடு  சித்திரக்காரர், எழுத்தாணிக்காரர், தென்னோலைக்காரர் எனக் கலைஞர்கள் வாழ்ந்த இடங்களையும் பெருமையோடு நம்மால் இந்நகரத்தில் காணமுடிகிறது.
பழந்தமிழரின் கலைத் திறனையும், நீர் மேலாண்மைத் திறனையும் தெளிவாகக் காட்டும் நகரம் மதுரை. 1000 அடி நீளம், 980 அடி அகலம் 20அடி ஆழம் உடைய மாரியம்மன் தெப்பக்குளத்தின் அலைகற்களோடு கூடிய கற்சுவர்களும், படிக்கட்டுகளும் தமிழர்களின் பொறியியல் நுண்ணறிவுக்கு அடையாளமாகும். அதன் சுற்றுச்சுவர்களும் சுவரில் அமைந்த சிலைகளும் மையமண்டபமும் தமிழர்களின் கலைத்திறனுக்குச் சான்றாகும்.
100 ஆண்டுகளுக்கு முன்புவரை மதுரை நகரம் தன் நீர்வளத்தைப் பாதுகாத்தற்கான அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. பழைய கல்வெட்டுக்களில்மாடக்குளக்கீழ் மதுரைஎன்றே குறிப்பிடப்படுகின்றது. மதுரையைச் சுற்றி இருந்த பெரிய குளங்கள் மட்டும் அல்ல. மதுரையின் வடதிசையில் ஓடிய வைகை நதியும், தென்திசையில் ஓடிய கிருதமாலை நதியும் ஊருக்கு கிழக்கே ஓடிய கால்வாய்களும் மதுரையின் வடதிசையில் ஓடிய வைகை நதியும், தென்திசையில் ஓடிய கிருதமாலை நதியும் ஊருக்கு கிழக்கே ஓடிய கால்வாய்களும் மதுரையின் நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாத்தன. மதுரை நகரத்துக்குள் குடிநீர் வழங்கும் மூலங்களாக பெருமாள் தெப்பக்குளம், எழுகடல் தெப்பக்குளம், கிருஷ்ணராயர் தெப்பக்குளம், மைனாத் தெப்பக்குளம் ஆகியவை இருந்தன. இவையன்றி கோயிலுக்குள்ளும் குளம் இருந்தது. ஆற்று நீராலும் மழை நீராலும் இவை எல்லாம் நிரம்பி இருந்தன.

இன்று சுற்றுக்சூழல் சீர்கேட்டிலும், நீருக்கான மூலவளங்களை அழித்ததிலும் மதுரைநகரம் தன் பொலிவினை இழந்து நிற்கிறது ஊருக்குள் இருந்த குளங்கள் மூடப்பட்டுள்ளன. நீரைச் சேமித்து வைக்கும் ஆதாரங்கள் எதும் இல்லை. வாணிகக் கழிவுகளும் மருத்துவமனைக் கழிவுகளும் வைகை ஆற்றைக் கூவமாக்கி விட்டன. மதுரை நகரத்தின் காற்றும் எண்ணெய் புகையினால் மாசுபட்டு விட்டது.

நமது முன்னோர்கள் அரிய கலைச் செல்வங்களையும் இலக்கியங்களையும் மட்டும் நமக்குச் சொத்தாக விட்டுவிட்டுப் போகவில்லை. தூய்மையான காற்றையும், நீரையும், நெடிய மரங்களையும் வளங்களை உருவாக்கும் மூல வளங்களாக நமக்குத் தந்து சென்றனர். நாளைய தலைமுறையினை மறந்து நம் தலைமுறையினை மட்டும் நினைத்தால் இயற்கை நம்மைப் பழிவாங்கும் என்பதற்கு இன்றைய மதுரை நகரம் ஒரு உதாரணம் ஆகும்.

இன்றளவும் மதுரையே தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமாகக் கருதப்படுகிறது. மதுரையைக் காப்பாற்றுவது நம் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகும்.

நாள் மலர்கள், பாவை பப்ளிகேஷன்ஸ்

நன்றி - சித்திரவீதிக்காரன்

உலகமயமாக்க பின்னணியில் பண்பாடும், வாசிப்பும் - தொ.பரமசிவன்

 ‘’பேசுகிற இடம் மதுரை. பேசப்படுகிற விசயம் புத்தகம். எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டில் எந்த ஊரில் அதிகமாக புத்தகங்கள் பிறந்தது என்றால் மதுரையில் தான் அதிக புத்தகங்கள் தோன்றியுள்ளன. கலித்தொகை என்ற செவ்விலக்கியம் பாண்டியநாட்டு இலக்கியம் என்றே அழைக்கப்படுகிறது. பரிபாடல் என்ற செவ்விலக்கியத்துக்கு பெயரே மதுரை இலக்கியம். அப்பேற்பட்ட ஊரிலே நின்று பேசுகிறேன் என்ற உணர்வு எனக்கு தன்னியல்பாகவே உண்டு. இந்த ஊரின் நீரும், நெருப்பும் கூட தமிழ்ச்சுவை அறியும் என்கிறது ஒரு நூல்.
உலகமயமாக்கலில் பண்பாடும், வாசிப்பும்என்ற தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல. அதற்குள் எழுதியவனின் ஆன்மா இருக்கிறது. ஒரு செடியில் வேருக்கும் விழதுக்கும் உள்ள தொடர்பு போன்றது புத்தகங்களுக்கும் வாசிப்பவனுக்கும் உள்ள தொடர்பு.

புத்தகங்களின் மீது சமூகம் நடந்து போகிறது. நடந்து போவது என்றால் எழுதியவனின் மனநிலையை நாம் உணர்ந்து கொள்வது. எனக்கு இங்கு வந்து பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. சில ஊர்களில் சந்தை என்று போட்டிருப்பார்கள். இங்கு புத்தகத்திருவிழா என்று போட்டிருக்கிறார்கள். “திருவிழா என்பது கொண்டாடப்பட வேண்டியது. அதே போல் புத்தகங்களும் கொண்டாடப் பட வேண்டியவை”.

உலகமயமாக்கல் என்ற சொல்லே எனக்கு புரியவில்லை. உலகை எப்படி உலகமயமாக்குவது? மதுரையை எப்படி மதுரை மயமாக்குவது? மதுரையை வண்ணமயமாக்கவேண்டும், ஒளிமயமாக்கவேண்டும் என்று சொல்லுங்கள். புரிகிறது. ஆனால், உலகமயமாக்கம் என்ற சொல்லே நமக்கு புரியவில்லை. நம் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த நன்கொடையிது. இவர்கள் ஏதோ சொல்ல வருகிறார்கள். அதில் ஒரு நுண் அரசியல் இருக்கிறது. நான் கட்சி அரசியலை சொல்லவில்லை.

உலகமயமாக்குவது என்றால் உலகையே சந்தையாக மாற்றுவது. உலகிலே சந்தை மட்டும் இருந்தால் போதுமா? இம்மதுரையிலே சந்தையும் இருக்கும், தமுக்கமும் இருக்கும், மீனாட்சிகோயிலும் இருக்கும், மனநோயாளிகளுக்கான மருத்துவ மனையும் இருக்கும். சந்தையில் ஐந்து வயது சிறுவர், சிறுமிகளுக்கு இடம் இருக்க முடியுமா? அல்லது கம்பூன்றி நடக்கும் வயதானவர்களுக்கு இடம் இருக்குமா? வயதானவரை தெருவில் பார்த்தால் ஒதுங்கி நடப்போம். ஆனால் சந்தையில்சந்தையில இடிக்கிறதெல்லாம் சகஜம்என்று போய் விடுவார்கள். பாக்கெட்டில் பணமில்லாதவனுக்கு சந்தையில் இடமிருக்குமா? கன்னி பெண்களுக்கு அங்கு இடமிருக்குமா?

சந்தை என்பது வாங்குவதற்கான இடமே தவிர அங்கு மனித உறவுகள் மலராது. சிறைச்சாலைகளில் கூட மனித உறவுகள் மலரும். மருத்துவ மனைகளில் கூட மனித உறவுகள் மலரும். நான் ஒரு மாதம் மருத்துவ மனையில் இருந்தேன். பக்கத்து அறையில் இருந்தவர்களெல்லாம் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். ஆனால் சந்தையில்அஞ்சால் விற்றால் லாபம் என்றால் அஞ்சால் விற்போம். நஞ்சை விற்றால் லாபம் என்றால் நஞ்சை விற்போம்”. இது சந்தையின் தன்மை.

உலகமயமாக்கலை இடதுசாரிகள் எதிர்க்கிறார்கள். அறிஞர்கள் எதிர்க்கிறார்கள். என்னைப் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்களும் எதிர்க்கிறோம். ஏனென்றால் இது ஒரு பண்பாட்டு படையெடுப்பு. நமது பண்பாட்டை குலைப்பதற்கான முயற்சி. இதை பண்பாட்டுத் தாக்குதல் என்றும் கூறலாம்.

பண்பாடு என்பது பொருள் உற்பத்தியில் தொடங்குகிறது. ஒரு குழந்தை இலையில் தனக்கான பீப்பியை செய்து கொள்கிறது. தனக்கான வண்டியை செய்து கொள்கிறது. தனக்கான காகிதப்பையை செய்து கொள்கிறது. இப்படி தனக்காக செய்து கொள்கிறபோது தான் கலாச்சாரம் பிறக்கிறது. பொருள் உற்பத்தியில் தான் உறவுகள் மலரும். பொருள் உற்பத்தி செய்கிற போது மனிதன் கலாசாரம் உடையவன் ஆகிறான். அது வாடுகிற போது கலாச்சாரமும் செத்து போய் விடுகிறது. உலகமயமாக்கம் என்ற பெயரில் இவர்கள் உலகையே சந்தையாக்க முயல்கிறார்கள். சந்தையில் எதைவிற்றால் லாபம் கிடைக்கும் என்பதை தான் பார்ப்பார்கள். அங்கு மனிதர்களின் உணர்வுகளுக்கு இடமிருக்காது.

மரபு வழியான அறிவுச்செல்வத்தை திட்டமிட்டு கொள்ளையடிப்பது உலகமயமாக்கம். இதை தான் மார்க்ஸ் ‘’தொகுக்கப்படாத விஞ்ஞானம்’’ என்றார். நம்முடைய பாரம்பரிய மருத்துவ அறிவுகளை கொள்ளையடிப்பது உலகமயமாக்கம். கால்ல புண்ணு வந்தா மஞ்சளையும் வெங்காயத்தையும் அரைச்சு போடுவோம். இனி எதாவது ப்ரெஞ்ச் கம்பெனியோ, கனடா கம்பெனியோ மஞ்சள், வெங்காயத்தையெல்லாம் நான் தான் கண்டுபிடிச்சேன்னு காப்பிரைட் வாங்கி வச்சுகிருவான். அப்புறம் வெங்காயம், மஞ்சள பயன்படுத்த நாம அவன்ட்ட அனுமதி கேட்கனும். பணம் கட்டணும். இப்படி மரபுரீதியான அறிவுச் செல்வத்தை திட்டமிட்டே கொள்ளை யடிக்கிறார்கள். அறிவு என்பது 19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தொழிற்புரட்சியில் கண்டுபிடிக்கப் பட்டதல்ல. நமக்கு அறிவு பற்றிய சரியான பார்வை இல்லை.

பி.எஸ்.சி ரசாயணம் படிக்கும் மாணவனை பார்த்து ரசாயணம் எப்போது கண்டுபிடிக்கப் பட்டது என கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை. சொல்லிக் கொடுத்தால் தானே அவன் சொல்வான். மனிதன் வேட்டையாடிய போது உணவு மீதம் ஆகி டிஹைட்ரேட் ஆகி நாளை பயன்படுத்தலாம் என்ற போதே ரசாயணம் தொடங்கிவிட்டது. அதில் உப்பை சேர்க்கும் போது இன்னும் கொஞ்சநாள் பயன்படுத்தலாம் என்ற போது ரசாயணம் வளரத்தொடங்கியது.
மனிதகுல வரலாறு தெரியாத கல்வி முறையில் வளரும் இன்றைய தலைமுறையில் பண்பாடு பற்றி பேசுவதெல்லாம் பைத்தியகாரத்தனம். உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்று சொல்லிச்சொல்லியே நம்மை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.

‘’ஒன்றே குலம், ஒருவனே தேவன்’’ என்று கேட்கும் போது மகிழ்ச்சியாகத்  தான் இருக்கும். அதை ஒரு தலைவர் சொன்ன போது ஊரே திரண்டது. ‘’ஒன்றே குலம், ஒருவனே தேவன்’’ என்று சொன்னால் சைவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். இது திருமூலரின் திருமந்திரம். ஒன்றே குலம், ஒருவனே தேவன், அவன் தான் இராமன் என்னும் போது தான் பிரச்சனை வெடிக்கிறது. “எல்லா பிரம்மாண்டங்களும் மனித விரோதமானவை. ஜனங்களின் வாழ்வுக்கு பிரமாண்டம் தேவையில்லை. பிரமாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும்”. 60 மாடி, 70 மாடின்னு கட்டடம் கட்ற போது தானே பின்லேடன் வர்றான். உலகின் அறிவு செல்வங்களை கொள்ளையடிக்கவே உலகமயமாக்கம் பயன்படுகிறது. ஆப்ரிக்காவில் உள்ள காடுகளிலும், கடற்கரையோரங்களிலும் இருந்த தாதுக்களை கண்டு பிடித்து கொள்ளையடிக்கிறாங்களே அது தான் இன்பஃர்மேசன். இது தான் இன்பஃர்மேசன் டெக்னாலஜி. எதற்கும் பயன்படாத தேரிக்காடு. அங்கே கல்லுமுள்ளும் ஒனானும் குடிகொண்டு இருக்கும்.அங்கே தோரியம் இருக்குன்னு சொல்றானே அது இன்பஃர்மேசன். அங்கே பெரிய கம்பெனிக்காரன் வர்றானே அது உலகமயமாக்கம்.

எல்லா இடத்திலும் கையவச்சுட்டு இப்ப சமையலுக்குள்ளயே வந்து கையவச்சுட்டாங்க. பீட்ஸான்னு ஒரு இத இப்ப திங்க கொடுக்கிறாங்க. அதுல என்னா இருக்குன்னு நமக்கு தெரியுமா? நம்ம வீட்ல செய்த பண்டத்துல என்னா இருக்குன்னு நமக்கு தெரியும். “உணவெனப்படுவது விலக்கொடு உயிரே”. நம்ம உணவுச்செல்வங்களை இன்னொருத்தன் கொள்ளை யடிக்கிறானே அது உலகமயமாக்கம். நிலத்தையும் உணவையும் கூட காக்க முடியாத சமுதாயம் வாழ்வதற்கு லாயக்கில்லாதது. திருமலைநாயக்கர் மகாலும், மீனாட்சியம்மன் கோயிலும் மட்டும் நமது முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்து அல்ல. தூய நீரும், காற்றும் நமது சொத்தில்லையா? எதை வேண்டுமானாலும் விற்கலாம் என்பது தான் உலகமயமாக்கம். விற்க முடியாத பொருள் மனிதனிடம் இருக்கிறது.

நாம் இங்கு திருவள்ளுவரையே விற்றுக் கொண்டிருக்கிறோம். திருவள்ளுவர் ‘’எட்டுக்குரியர் கயவர்’’ என்கிறார். திருக்குறளுக்கு உயிர் இருக்கிறது. அதை எழுதியவனுக்கு ஆன்மா இருக்கிறது. அதனால் தான் எழுதியவனுக்கு சாவு இல்லை என்கிறோம். வடநாட்டில் வியாசர் மகாபாரதத்தை சொல்ல அதை விநாயகர் தன் கொம்பை உடைத்து எழுதியதாக மரபு இருக்கிறது. ஆனால், இதை விட சீரிய மரபு தென்னாட்டில் இருக்கிறது. விநாயகருடைய அப்பா சிவனே திருவாசகம் எழுதியதாக கூறப்படுகிறது. திருவாசகம் காணாமல் போய் அனைவரும் தேடுகிறார்கள். காணவில்லை. ஒரு புத்தகத்தை காணாமல் ஆக்குவது தேசத்துரோகம். அதை தொலைத்தவர்களுக்கு தான் தெரியும். திருவாசகம் இறுதியில் சிதம்பரத்தில் இருந்தது. சிவபெருமான் கையிலே இருந்தது. சிவபெருமானிடம் கேட்டால் இது என் பெர்சனல் காப்பி என்கிறார். என்னவென்றால் அந்த புத்தகத்தில் திருவாதவூர் மாணிக்கவாசகன் சொல்ல உடையார் திருசிற்றமுடையார் எழுத்து என்று அதில் இருக்கிறது. இதை ஏன் சிவன் வைத்திருந்த்தார் என பின்னால் வந்த அறிவியலாளர் தத்துவ பேராசிரியர் சுந்தரம்பிள்ளை சொல்கிறார் ‘’உலகை படைத்து காத்து அழித்து பிறகு மீண்டும் உலகை படைக்கும் முன் உள்ள ஒரு லன்ச் பிரேக்கில் படிக்க ஒரு புத்தகம் வேண்டும் அல்லவா? அதற்கு தான் போரடிக்காமல் இருக்க சிவன் திருவாசகத்தை வைத்திருந்தார்’’ என கூறுகிறார் தன் மனோன்மணியத்தில். இவ்வாறு கடவுளே ஸ்க்ரைப்பாக இருந்திருக்கிறார் நம் நாட்டில்.

ஒன்றை திட்டமிட்டே பழசாக்குவது உலகமயமாக்கம். இந்த வருடம் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினால் அடுத்த வருடம் ஒரு சின்ன மாற்றத்துடன் புதிதாக ஒன்று வரும். இப்படி திட்டமிட்டு பழசாக்கி அடுத்த பொருளை விற்பது தான் உலகமாக்கம். எல்லாவற்றையும் சந்தை படுத்திகொண்டிருக்கும் போது நாம் இந்த ஏமாளிகளிடம் பண்பாடு பற்றி பேசுவது எல்லாம் முட்டாள்தனம். பண்பாடு பற்றி பேசுவதே நாம் ஏமாளித்தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

உலகமயமாக்கம் எழுத்து உலகத்தில் என்ன மாற்றம் ஏற்படுத்தியிருக்கிறது என பார்ப்போம். சென்னை புத்தக திருவிழாவில் 10 லட்சம் புத்தகம் வித்திருக்கிறது என சொன்னார்கள். மகிழ்ச்சி. மனிதன் வாசிக்க தொடங்கிவிட்டான். வாசிக்கும் மனிதன் தான் யோசிக்கிறான். சமூகம் மாற்றம் அடையத்தொடங்கியதா எனப்பார்த்தால் மாற்றம் ஏதுமில்லை. ஏனென்றால் பாதிக்கு பாதி வாஸ்து புத்தகங்கள் தான் வித்திருக்கிறது. இங்கு இப்பொழுது விற்கும் புத்தகங்களைவிட பல மடங்கு குருபெயர்ச்சி பலன் புத்தகம் வித்திருக்கும். குருவே வருசம் வருசம் இடம் பெயர்றார்ன்னா நீ உன் சிந்தனையில் இடம் பெயர கூடாதா?

மாறுதல் ஒன்றே மாறாதது. 15 வருசமா அப்படியே இருக்கீங்கன்னு சொன்னா அது உண்மையில்ல. முடி லேசா நரைச்சுருக்கும். வழுக்கை கூடியிருக்கனும். அப்படியே எதுவும் இருக்க முடியாது. மாற்றங்களை உருவாக்குவது புத்தகங்கள். மார்க்சிம் கார்க்கியுடைய தாய் காவியம் போன்ற புத்தகங்கள் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தியவை. அறிந்தும் அறியாமலும் படித்த புத்தகங்கள் தான் நமக்குள் ஒரு மாற்றம் ஏற்பட உதவுகிறது. அதென்ன அறியாமல் படித்த புத்தகம்? கொல்லைப்பக்கம் போட்ட தக்காளி திடீர்ன்னு செடியா முளைப்பது போல. நாம் தெரியாமல் இப்படி வாசித்த புத்தகங்கள் தான் அறியாமல் படித்த புத்தகங்கள்.

மனித மனத்திலும் விழும் விதைகள் முளைக்கத் தவறுவதே இல்லை. நான் எங்க ஊர் மாவட்ட நூலகத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒரு புத்தகம் எடுத்தேன். அது சரித்திரத்தை மாற்றியஅங்கிள் டாம்புத்தகம் என்று தெரியாமல் அதன் குழந்தை பதிப்பின் தலைப்பை பார்த்து எடுத்தேன். தாமு மாமாவின் கதை. இந்த புத்தகத்தை இப்பொழுது காணவே முடியவில்லை. நாம் அடிமையாகவே இருக்க சம்மதித்துவிட்டோம் என்பதைதான் இது காட்டுகிறது. “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்ற வள்ளுவரின் வரியை படிக்கும் போது அங்கிள் டாம் புத்தகம் ஞாபகம் வரும். மேல்மண் கீழ்மண் ஆவதும்,கீழ்மண் மேல்மண் ஆவதும் வரலாறு. புரட்சியை ஒரு புத்தகம் எப்பொழுதும் ஏற்படுத்தி கொண்டுதானிருக்கிறது.

இப்பொழுது சிலர் தினமும் ஒரு புத்தகம் எழுதுகிறான். என்ன செய்யிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என ஒரே வரியில் அப்போதிருந்த சாதிகோட்பாடுகளை உடைத்த வள்ளுவரிடம் இருந்த கலகக்குரலை விடவா இனி எழுத முடியும். எழுத்துல எதிர்ப்பு இருக்கலாம். கலகக்குரலாய் எழுதலாம். ஆனால், வெறுப்பு இருக்க கூடாது. இப்ப எழுதும் சிலரின் எழுத்த வாசிச்சா வெறுப்பு தான் முழுமையாய் வெளிப்படும். கோவம் வரலைன்னா அவன் மனுசனே இல்ல. கடவுள் பற்றி இருக்காரா, இல்லையான்னு எழுதலாம். பேசலாம். எதிர்ப்பை வெளிப்படுத்துவது தவறல்ல. வெறுப்பு என்பது இரு காரணத்தினால் வெளிப்படுவது. ஒன்று இயலாமை மற்றொன்று பொறாமை. இதற்கு மருந்தே கிடையாது.

எதை வேண்டுமானாலும் எழுதலாம். யாரை பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்ற தைரியத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது? உலகமயமாக்கம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்த முயல்கிறது. என்னிடம் வந்து ஒரு இளங்கவிஞர் மழை பற்றிய கவிதை தொகுப்புக்கு தலைப்பு கேட்டார். ‘’தீங்கின்றி நாடெல்லாம்’’ என்று சொன்னேன். மழையை பார்த்தால் ஒவ்வொரு சமயமும் ஒரு வித்தியாசம் காட்டும். ஒரிசா வெள்ளத்தை பார்த்தால் புரியும் ‘’தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி’’ என்ற வரி. அதை போல தண்ணீர் இல்லாம தவிக்கிறப்ப தெரியும் ‘’நீரின்றி அமையாது’’ என்ற வரி.

வாசிப்பது மூலம் யோசிக்கிறான். யோசிப்பதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துகிறான். உலகமயமாக்கலில் எல்லாவற்றையும் சந்தை படுத்துகிறோம். திருக்குறளை மட்டுமல்ல. திருவள்ளுவரையே சந்தைப்படுத்துகிறோம். இன்று எல்லாவற்றையும் விற்க தொடங்கிவிட்டோம். நுகர்வு கலாசாரம் ரொம்ப பெருகிவிட்டது. முன்பெல்லாம் வீட்டில் ஒரு சோப்பு இருந்தது. இப்ப ஆறு பேர் இருக்கிற வீட்ல ஏழு சோப்பு இருக்குது. வெளிநாட்டு கம்பெனி எல்லாம் ஒனக்கு ஒன்னுந்தெரியாது நான் குடுக்கிறேன் இத சாப்புடுன்னு சொல்றான். அதுவும் நம்ம மதுரைல சொல்லலாம்மாங்க. தினம் ஒரு கண்டு பிடிப்பா புடிக்கிற ஊரு. போன்டாக்குள்ள முட்டைய வைச்சு கண்டுபுடிச்ச ஊரு. கென்டகி சிக்கன்னு ஒரு கம்பெனி நான் கோழிக்கறி தர்றேன். அத சமைன்னு சொல்றான். நம்ம ஊருல நம்ம பொண்ணுகளுக்கு கோழிக்கறி சமைக்க தெரியாதா?

மருத்துவ சம்மந்தமான அறிவுச் செல்வங்களை திட்டமிட்டு பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்கின்றன. இதற்காகவே ஆராய்ச்சி பண்ண ரொம்ப பேர் இங்கு வந்து இருக்காங்க. இதற்கெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் பணங்கொடுக்கிறார்கள்.

உலகமயமாக்கம், உலகமயமாக்கம் என்ற சொல்லிலேயே நாம் ஏமாந்து போகிறோம். ‘’மெய்ப்பொருள் காண்பது அறிவு’’ யார் என்ன சொன்னாலும் இந்த நுகர்வு கலாச்சாரத்திலிருந்து நாம் விடுபட வேண்டும். இப்ப கடன் திருவிழா, லோன் மேளா எல்லாம் நடத்துறாங்க. இந்த திருவிழாவிற்கு எப்ப கொடி ஏத்துவாங்க? எப்ப இறக்குவாங்கன்னு தெரியல. எந்த நாடும் உலக வங்கியிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுத்ததாக வரலாறு இல்லை.

மாற்ற முடியாதது எதுவோ அது அறம். மாற்றம் வந்தாலும் அதிக மாறுதல் வராதது பண்பாடு”. உலகமயமாக்கல் என்ற ஆரவாரத்திற்கு நாம் ஏமாந்து போகிறோம். நாம் தினமும் பங்கு சந்தை பார்க்கிறோம். எனக்கு என்னவென்றே புரியவில்லை. இப்பதான் தெரிந்தது அது இரண்டு சதவீத மக்களுக்கான செய்தியென்று. நாம் பிரம்மாண்டங்களுக்கு எதிரான கலாசாரத்தை உண்டு பண்ண வேண்டும். நாயகம் ஜனங்களின் நாயகமாக இருந்தால் அது ஊடகங்களின் நாயகமாக இருக்க முடியாது. ஒரு நாள் அறிஞனை முட்டாளாக காட்டும்.

பண்பாடு பற்றியெல்லாம் வாசிக்கிறவங்க கொறச்சல். இதப்பத்தி யோசிக்கிறவங்க ரொம்ப கொறச்சல். பேசுறவங்க கொறச்சல். எழுதுறவங்க ரொம்ப கொறச்சல். எனக்கு ஒரு இங்கிலீஸ் படம் ஞாபகத்துக்கு வருது. ஆண்டவர் கொடுத்த பல கட்டளைகளை மோசஸ் தொலைத்து விட்டு கடைசியாக உள்ளவற்றை தான் கடவுள் கொடுத்தார் என சாதிப்பார். அது போல நாம் எதை இழந்தோம் என்பதைகூட மறந்து விட்டோம். ‘’இழந்தோம் என்பதை விட இழக்கப் படுகிறோம் என்ற உணர்வே இல்லாமல் இருக்கிறோம்’’ என வருத்தப்படுகிறார் ஆழ்வார். இதை பாரதி ‘’கஞ்சி குடிப்பதற்கு வழிஇலார், அதன் காரணம் ஏதுமென்று அறியிலார்’’ என்கிறார். நாம் எப்போதும் மேற்கேதான் பார்ப்போம். கிழக்கே சீனா, ஜப்பானை எல்லாம் பார்க்க மாட்டோம். எத்தனை பேருக்கு ஹோட்டிஸ் என்ற அறிஞரை தெரியும்?
இறுதியாக வாசிப்பு என்பது யோசிப்பை தரும். யோசிப்பது மூலம் சமூக மாற்றம் ஏற்படுத்த வேண்டும். நாம் யோசிப்பதன் மூலம் ஜனங்களின் நிலையை மாற்ற வேண்டும். பாரம்பரியமான அறிவுச் செல்வத்தை நாம் தக்க வைத்துக்கொள்ள போராட வேண்டும். எதையும் விற்கலாம், ஒன்றை திட்டமிட்டு பழசாக்கி புதியதை சந்தைப்படுத்தலாம் என்பது போன்ற பிரம்மாண்டங்களுக்கு எதிராக சிந்திக்கும் கலகக்குரல் நமக்கு வேண்டும். பண்பாடு என்பதைப் பற்றிய விழிப்புணர்வு நமக்கு வேண்டும். நன்றி’’

மதுரை மூன்றாவது புத்தகத்திருவிழாவில் தொ.பரமசிவன் அய்யா பேசிய உரைத்தொகுப்பு – சித்திரவீதிக்காரன்

நன்றி - சித்திரவீதிக்காரன்