‏إظهار الرسائل ذات التسميات முன்னைத் தமிழிலக்கியம். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات முன்னைத் தமிழிலக்கியம். إظهار كافة الرسائل

கலித்தொகை காட்டும் மகளிர் - அ. கீதாரமணி

சங்க காலத்தில் மகளிர் ஆடவருக்கு நிகராக விளையாட்டிலும், திருவிழாக்களில் கலந்து கொள்வதிலும் உரிமைப் பெற்றிருந்தனர் என்ற செய்தியைக் கலித்தொகை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. சங்ககால மகளிர் இல்லற வாழ்க்கையில் சிறந்தும் விளங்கியிருக்கின்றனர். ஆடவரைப் போலவே மகளிரும் கடற்கரைச் சோலைகளுக்கும் ஆற்றின் எக்கரைக்கும் சென்று விளையாட உரிமை பெற்றிருந்தனர். கோயில் திருவிழாக்களிலும் கலந்து கொண்டனர் என்று எம்.ஆரோக்கியசாமி குறிப்பிடுவர்.

விளையாட்டு:-

அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்து மாலையாகத் தொடுத்தும், பல இலைகளைக் கோர்த்தும் விளையாடினர் என்று மருதக்கலி மூலம் அறியமுடிகிறது. ''மடக்குறு மாக்களோடு ஓரை அயரும்'' (82.5) எனச் சிறுமியர் கோரைப் பொம்மை செய்து விளையாடியச் செய்தியை மருதநில நாகனார் கூறியுள்ளார். மகளிர் தழைகளைக் கொய்து விளையாடியதைக் ''கொய்குழை அகை காஞ்சிதத் துறை அணி'' என்றும் குறிப்பிட்டுள்ளார். ஊசல் ஊர்ந்தாடல் மகளிர்க்குரிய இனிய பொழுதுபோக்குகளாகும். இச்செய்தியினை நெய்தல்கலி குறிப்பிடுகிறது. தாழையின் விழுது கயிறாகவும், நெய்தல் மாலை அக்கயிற்றில் கட்டிய மாலையாகவும், சுறாவினது மருப்புக் கோத்த பலகை அமரும் பலகையாகவும் அமைக்கப்பெற்ற ஊசலில் மகளிர் ஊசலாடுவர். ஊசலாடும் போது மகளிர் பாடவும் செய்வர். இக்கருத்தமைந்த பாடல் பின்வருமாறு.

''இனமீன் இகன்மாற வென்ற சினமீன்

எறிசுறா வான்மருப்புக் கோத்து நெறிசெய்த

நெய்தல் நெடுநார்ப் பிணித்து யாத்துக் கையுளர்வின்

யாழிசை கொண்ட இனவண்டு இமிர்ந்து ஆர்ப்பத்

தாழாது உறைக்கும் தடமலர்த் தண்தாழை

வீழ்ஊசல் தூங்கப் பெறின்

மாழை மடமான் பிணைஇயல் வென்றாய் நின்ஊசல்

கடைஇயான் இகுப்ப நீடுஊங்காய் தடமென்தோள்

நீத்தான் திறங்கள் பகர்ந்து (131. 6-14)

பழக்க வழக்கம்:-

பழக்கம் என்பது தனிமனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வாழ்க்கைக்குத் தேவையானதாகக் கருதப்படுகிறது. அவரவர்க்கு விரும்பிய மனநிறைவையும் அது தருகிறது. பழக்கத்தின் தொடர்நிலை வழக்கம் எனப்படுகிறது. இது சமூகம் சார்ந்த ஒன்று. பழக்கமாகிவிட்ட செயல்களைச் சமூகத்தில் வழக்கம் என்கிறோம். வழக்கம் என்ற சொல் பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் சமூகச் செயல்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொல்காப்பியம் வழக்கம் பற்றிக் குறிப்பிடுகையில், ''முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை'' என்று கூறுகின்றது. பண்டை மகளிரின் பழக்கவழக்கங்களைச் சில முல்லைக்கலிப் பாடல்கள் காட்டுகிறது.

ஆயமகளிர் புனத்தில் கன்றுகளை மேய்த்துக் கட்டுவர். ஆநிரை மேய்க்கும் தந்தைக்கும் தமர்க்கும் உணவும், பாலும் கொண்டு செல்வர். தாம் மணக்க விரும்பிய காதலன் மாலையைக் கூந்தலுக்குள் மறைவாகச் சூடிக்கொள்வர். கூந்தலில் வெண்ணெய் தேய்த்துக் கொள்வர். சிற்றூரிலும், பேரூரிலும் மோர் விற்பர். மோருக்கு மாறாக மாங்காயை ஊறுகாயாகக் கூட்டி நுகர்வர். தெய்வங்களுக்கும் பால்மடை கொடுப்பது வழக்கம். மேலும், குறமகளிர் பாறை உரலிலும் சந்தன உரலிலும் யானைக் கொம்பிலான உலக்கை கொண்டு தினை, மூங்கில்நெல் ஆகியவைகளைக் குத்தும்போது வள்ளைப்பாட்டுப் பாடுவர். சேம்பின் இலையை முறமாகவும் பயன்படுத்தினர். இவ்வள்ளைப் பாட்டு முருகனைப் பாடுவதுபோலக் காதலனைப் பாடுவதாகவும் அமையும். திருமணம் கைகூடின் தெய்வத்திற்குப் பலியிடுவர். இதனை,

''சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால்

ஐவன வெண்நெல் அறை உரலுள் பெய்து இருவாம்

ஐயனை ஏத்துவாம் போல'' (43. 5-7) என்றும்

''நிலை உயர் கடவுட்குக் கடம்பூண்டு, தன்மாட்டுப்

பலசூழும் மனத்தோடு பைதலேன் யான்'' (46.15-17)

என்றும் பாடல் வரிகளால் அறியலாம்.

திருமணம்:-

அக்கால மகளிர் தமக்கு வாய்க்கும் கணவன் வீரம் உடையவனாகவும், அஞ்சாநெஞ்சினனாகவும் இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்தனர். இக்குறிப்பு கலித்தொகையில் காணமுடிகிறது. காளையை அடக்கிய ஆடவனைக் கைப்பிடிக்கும் ஆயமகளின் திருமணம் கலித்தொகையில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்றினைத் தழுவிய பொதுவனுக்கே தலைமகளை தமர்கொடை நேர்வர். மணத்தைக் கூட்டுவிப்பது தெய்வம் என்று கருதப்பட்டது. பூவாலூட்டிய இல்லின் முற்றத்தில் மணம் தாழப்பரப்பி எருமைக்கொம்பை நட்டு வழிபாடாற்றி ஆயமகளின் திருமணம் நடைபெறும். ஆனால் காளையை அடக்காத வீரர்களை மகளிர் ஒருபோதும் மணந்ததில்லை. இக்கருத்தினை,

''நேரிழாய் கோள் அரிதாக நிறுத்த கொலை ஏற்றுக்

காரிகதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே

ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார்'' (104, 73-76)

என்ற பாடல்வரிகள் உணர்த்துகின்றன.

நம்பிக்கை:-

நாளும் கோளும் பார்த்தாலும் நன்மை தீமைக்கான நிமித்தம் பார்த்தாலும் குறிகேட்டலும் மக்கள் வாழ்வோடு ஒன்றி போய்விட்டன எனலாம். நம்பிக்கை நம் நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் இருந்தன. இன்றும் இருக்கின்றன. கபிலர் பாடல்கள் அவர் காலத்திலிருந்த சில நம்பிக்கைகளை உணர்த்துகின்றன. கற்புடைய மகளிர் தம் மன ஒருமைப்பாட்டால் மழையையும் வரவழைக்க முடியும் என நம்பினர். குறிஞ்சிக் கலியில் தலைவியின் பெருமையைக் குறிக்கும் போது, அவள் உலகிற்கு மழை வேண்டுமெனின் அதனை வருவித்துப் பெய்விக்கும் ஆற்றல் சான்ற பெருமையள் என்று கூறப்படுகின்றது. ''அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே'' இக்கருத்தினை ''வான்தரும் கற்பின் மனையுறை மகளிர்'' என மணிமேகலையில் கூறியிருத்தலைக் காணலாம்.

''அறம் பிறழ்ந்து அல்லவை செய்பவன் வாழும் நாட்டில் வளம் குன்றும்'' என்பது சான்றோர் நம்பிக்கை. வள்ளுவரும்.

''வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்'' (குறள். 23-9) என்பார்.

அல்லல் புரிந்தொழுகும் குடிமக்கள் வாழும் மலைநாட்டில் வள்ளிக்கொடியும் நிலத்தடியில் கிழங்கு இடாது, மலைமேல் தேனீக்களும் கூடுகட்டாது கொல்லையில் திணையும் கதிர்விட்டுப் பயன் விளைவிக்காது என்றுரைப்பர்.

''வள்ளி கீழ்விழா, வரைமிசைத் தேன்தொடா

கொல்லை குரல்வாங்கி ஈனா மலை வாழ்நர்

அல்ல புரிந்தொழுக லான்'' (36. 12-14)

மலைப்பக்கத்து வாழும் குறவர்தம் மடந்தைமார் தவறாது தம் கணவரைத் தொழுதெழுவதால் அக்குறவர் தொடுக்கும் அம்புகள் குறிதவறிச் செல்லாதாம். ஒருவர் செய்யும் நல்வினை அவரைச் சேர்ந்தோர்க்கும் பயன் விளைவிக்கும் என்ற நம்பிக்கை,

''வாங்கமை மென்தோள் குறமட மகளிர்

தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலால் தம்மையரும்

தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்''

என்னும் பாடலடிகளால் புலனாகிறது.

முடிவுகள்:-

கலித்தொகையில் காணக்கூடிய மகளிர் ஆடவர்களுக்கு நிகராக உரிமை பெற்றிருந்தனர். அக்கால மகளிர் பொம்மையை வைத்தும் பூக்களைக் கொய்தும் விளையாடினர். ஊசல் விளையாட்டில் சுறாவினது எலும்பை அமரும் பலகையாக மேற்கொண்டனர். மகளிர் சந்தன மரத்தாலான உரலில் யானைக் கொம்பாலான உலக்கையைக் கொண்டு நெல் குத்தினர் என்று தெரியவருகிறது. சங்க மகளிர் வீரம் உடைய ஆண்மகனை மணந்ததாக முல்லைக்கலி கொண்டு அறியமுடிகிறது. கற்புடைய மகளிரால் மழை வரவழைக்க முடியும் எனக் கலித்தொகை குறிப்பிடுகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

பிள்ளைத்தமிழில் பருவ வரையறையில் நிகழ்ந்த மாற்றங்கள் - க. தமிழரசி

கடவுள் அல்லது மனிதர்களுள் சிறந்தவரைக் குழந்தையாகப் பாவித்துப் போற்றிப் பாடுவதே பிள்ளைத்தமிழின் சிறப்பாகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான பல்வேறு பருவங்களில் மிகவும் இனிய பருவமாக எல்லோராலும் போற்றப்படுவது குழந்தை பருவமாகும். எனவே இறைவனையும், மனிதரையும் குழந்தையாகக் கற்பனை செய்து பாடி அதனால் கிடைக்கும் பொருளையும் புகழையும் பெற்று புலவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த பிள்ளைத்தமிழ் பருவ வரையறையில் எவ்வாறு மாற்றமடைந்துள்ளது என்பதை ஆராய்கின்றது.

பிள்ளைத்தமிழின் தோற்றம்:

பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகை தமிழில் மட்டுமே காணப்படும் இலக்கிய வகையாகும் என்று மு. வரதராசனார் கூறியுள்ளார். பெரியாழ்வாரின் திருமொழியில் கண்ணனின் பிள்ளைத் பருவத்தைப் போற்றிப் பாடியுள்ளார். அழகிய பாடல்களே பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகை தோன்றக் காரணமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆண்டாளின் நாச்சியார் திருமொழியில் சிற்றில் பருவச் செய்தியும், குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழியில் தாலப்பருவச் செய்தியும் இடம் பெற்றுள்ளன. பிள்ளைத்தமிழ் பருவங்களில் கூறப்படுகின்ற பல கூறுகள் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. இப்பிள்ளைத் தமிழக் கூறுகளெல்லால் வளர்ச்சி பெற்றுப் பின் தனி இலக்கிய வகையாக உருப்பெற்றிருக்கலாம்.

தொல்காப்பியமும் பிள்ளைத் தமிழும்:

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே பிள்ளைத்தமிழ் இருந்திருக்கலாம். இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் செய்தல் மரபாகும். எனவே, தொல்காப்பியர் பிள்ளைத்தமிழுக்குரிய இலக்கணக் கூறுகளைச் சுட்டிச் செல்கிறார்.

''குழவி மருங்கினும் கிழவதாகம் (தொல்.புறம் 24)

என்னும் நூற்பாவிற்கு ''குழவியைப் பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலானும் பாராட்டும் இடத்துச் செங்கீரையும், தாலும், சப்பாணியும், முத்தமும், வரவுரைத்தலும், அம்புலியும், சிற்றிலும், சிறுதேரும், சிறுபறையும் எனப் பெயரிட்டு வழங்குதலாலும் என்பது'' என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியுள்ளார். எனவே, மேற்கூறிய நூற்பாவால் பிற்காலத்தில் தோன்றி வளர்ச்சி பெற்ற பிள்ளைத்தமிழுக்கு உரிய இலக்கணத்தை ஒரளவு தொல்காப்பியம் கூறுவதாகக் கொள்ளலாம்.

பிள்ளைத்தமிழின் யாப்பமைதி:

பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்திலேயே அமைந்துள்ளன. ஆசிரிய விருத்தம் என்பது ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை, தொடை முதலியன ஒருங்கே, பெற்று நான்கு அடிகளுக்கு மிகாமலும், ஓர் அடியில் எத்தனை சீர்கள் வேண்டுமானாலும் கொண்டிருப்பதாகும், பிற அடிகளும் முதலடியில் வந்த சீர்களின் எண்ணிக்கையினையே பெற வேண்டும். பிள்ளைத்தமிழுக்குரிய யாப்பு ஆசிரிய விருத்தம் என்பதைச் சுவாமிநாதமும், இலக்கண விளக்கப் பாட்டியலும் குறிப்பிடுகின்றன. மேலும் பன்னிரு பாட்டியல் ஆசிரிய விருத்தம், கட்டளைக் கலிப்பா, கலிவிருத்தம் ஆகியவற்றாலும் பிள்ளைத்தமிழ் பாடலாம் என்று கூறுகின்றது. ஆனால் பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆசிரிய விருத்தத்திலேயே பாடப் பெற்றுள்ளன.

பிள்ளைத்தமிழில் பாடப்பெறும் பருவங்கள்:

பிள்ளைத்தமிழில் பாடப்பெறும் பருவங்கள் பத்து. அவற்றுள் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் உரிய பொதுவான நிலைப் பருவங்களாகும். இந்த ஏழு பருவங்களுடன் சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்ற மூன்று பருவங்களையும் சேர்த்துப் பத்துப் பருவங்களாக ஆண்பாற் பிள்ளைத்தமிழ் பாடப் பெறும் என்று பன்னிருபாட்டியல் கூறுகிறது. பெண்பாற் பிள்ளைத்தமிழில் முதல் ஏழு பருவங்களை அடுத்து கழங்கு, அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்கள், இறுதியாகப் பாட வேண்டும் என்று இலக்கண விளக்கப் பாட்டியல் கூறுகிறது. இப்பாட்டியல் நூல் கூறும் கழங்கு, அம்மானை போன்ற பருவங்களைப் பன்னிரு பாட்டியல் கூறவில்லை. மாறாக, சிற்றில் இழைத்தல், சிறு சோறாக்கல், ஊசல், காமன் நோன்பு, போன்ற பருவங்களைக் கூறுகிறது. இதன் மூலம் பிள்ளைத்தமிழில் பாடப்பெறும் பருவங்களைக் கூறுவதில் பாட்டியல் நூல்கள் சிற்சில வேறுபாடுகள் உடையனவாக இருக்கின்றன என்பதை அறியலாம். பாட்டியல் நூல்கள் கூறிய பருவ அமைப்பையும், யாப்பமைதியையும் பெற்று குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ் முதல் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் தோன்றி வளர்ச்சியுற்றன.

பருவ வரையறையில் நிகழ்ந்த மாற்றங்கள்:

ஆண்பாற் பிள்ளைத்தமிழாக இருந்தாலும், பெண்பாற் பிள்ளைத்தமிழாக இருந்தாலும் பத்துப் பருவங்களைக் கொண்டமைத்தே பிள்ளைத்தமிழ் பாட வேண்டும் என்று பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. பாட்டியல் நூல்கள் குறிப்பிட்ட பருவ அமைப்பில் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் தோன்றி வளர்ச்சியுற்றாலும் ஒரு சில பிள்ளைத்தமிழ் நூல்கள் பருவ அமைப்பில் மாற்றியமைக்கப் பெற்றுள்ளன. காப்புப் பருவத்திற்கு அடுத்து செங்கீரைப் பருவம் பாடிய பின்னரே தாலப்பருவம் பாடப் பெற வேண்டும். கண்ணப்ப முதலியார் இயற்றிய சேக்கிழர் பிள்ளைத்தமிழில் காப்புப் பருவத்திற்குப் பிறகு தாலப்பருவமும் அதற்கு அடுத்து செங்கீரைப் பருவமும் பாடப் பெற்றுள்ளன. சில பிள்ளைத் தமிழ் நூல்களில் உள்ள பத்துப் பருவங்களையும் வெவ்வேறு ஆசிரியர்கள் பாட அதனை ஒருவர் தொகுத்த போக்கினையும் காணமுடிகிறது. கம்பன் பிள்ளைத்தமிழில் பத்துப் பருவங்களையும் முறையே கம்பராமன், சித்தன், தங்கவல்லி, தமிழ்வேள், சிவனடியான், இரா. திருமுருகன், அப்துல்காதர், சொ.சொ.மீ.சுந்தரம், இளந்தேவன், மரியதாசு போன்றோர் பாடியிருக்க புலவர் அ. அருணகிரி இப்பருவங்களைத் தொகுத்துள்ளார். திருவள்ளுவர் பிள்ளைத்தமிழில் பத்துப் பருவங்களையும் முறையே க.இரோசேந்திரன், சவகர்லால், சு.சண்முகசுந்தரம், கருப்பட்டிக் கவிராயர், பூமிநாதன், தலைச்செல்வி, சாரதா, சபாபதி சிதம்பரம் வ. கலியமூர்த்தி, க.நாராயணசாமி, அரு. சோமசுந்தரம் போன்ற பத்து ஆசிரியர்கள் பாடியிருக்க இறுதிப் பருவமாகிய சிறுதேர்ப் பருவத்தைப் பாடிய அரு. சோமசுந்தரம் இப்பருவங்களைத் தொகுத்துள்ளார். இதனைப் பருவ அமைப்பில் நேர்ந்த புதிய மாற்றமாகக் கருதலாம்.

இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய சில பிள்ளைத் தமிழ்நூல்கள் பாட்டியல் நூல்கள் குறிப்பிடாத புதிய பருவங்களைக் கொண்டமைத்துப் பாடப் பெற்றுள்ளன. சொ.சொ.மீ. சுந்தரம் இயற்றிய பண்டிதமணி பிள்ளைத்தமிழில் சிற்றில், சிறுதேர், சிறுபறை என்ற இறுதி மூன்று பருவத்திற்கு மாறாகத் தீருநீற்றுப் பருவம், திருவாசகப் பருவம், சன்மார்க்க சபை பருவம் என்ற புதிய மூன்று பருவங்கள் பாடப் பெற்றுள்ளன. பத்துப் பருவங்களுக்கு மேற்பட்ட பருவங்களும் ஒரு சில பிள்ளைத்தமிழ் நூல்களில் பாடப் பெற்றள்ளன. ஆண்டாள் பிள்ளைத்தமிழ் பதினொரு பருவங்கள் கொண்டதாகவும், தில்லை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் பன்னிரெண்டு பருவங்கள் கொண்டதாகவும் பாடப்பெற்றுள்ளன. காவை முருகன் பிள்ளைத்தமிழில் ஆண்பாற்குரிய பத்துப் பருவங்களோடு, துயிலெழல், தகர் அடக்குதல், வேலோச்சுதல் ஆகிய மூன்று பருவங்களோடு பதிமூன்று பருவங்கள் இடம் பெற்றுள்ளன. புலவர் மாவண்ணா தேவராசன் எழுதிய பெரியார் பிள்ளைத்தமிழ் ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்களையும் பெற்று மேலும், வாழ்த்துப் பருவம், கூர்ந்துணர் பருவம், வினாவுறுபருவம், கதை கேள் பருவம் என்னும் நான்கு பருவங்களையும் சேர்த்து மொத்தம் பதினான்கு பருவங்கள் பாடப் பெற்றுள்ளன. மேலும் இப்பிள்ளைத்தமிழில் செங்கீரைப் பருவம் முதலாகச் சிறுதேர்ப் பருவம் ஈறாக உள்ள பருவங்கள் அனைத்திலும் வரலாறு, பொன்மொழி, புகழ்மொழி, இயற்கை எழில், பருவத்து இயல் என்ற உட்தலைப்புகளும் இடம் பெறுகின்றன. மேற்கூறிய அமைப்புகளைப் பிள்ளைத்தமிழில் பருவ வரையறையில் நிகழ்ந்த நல்ல மாற்றங்கள் என்று கருதலாம்.

சிற்றிலங்கிய வகைகளுள் சிறந்ததெனப் போற்றப்படும் பிள்ளைத்தமிழ், தொடக்க காலத்தில பாட்டியல் நூல்கள் கூறிய இலக்கணப்படி தோன்றி வளர்ச்சியுற்றன. இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய பிள்ளைத்தமிழ் நூல்கள் சில, பருவ அமைப்பில் மாற்றமடைந்தன. ஆசிரியர்களின் மனப்பாங்கிற்கு ஏற்ப புதிய பருவங்கள் தோன்றல், சில பிள்ளைத்தமிழ் நூல்கள் பத்துப் பருவங்கள் என்ற எண்ணிக்கையிலிருந்து மாறுபட்டு 11,12, 13, 14 என்ற பருவ எண்ணிக்கையைப் பெறல், ஒவ்வொரு பருவத்தையும் வெவ்வேறு ஆசிரியர்கள் பாடியிருத்தல் போன்றவற்றைப் பிள்ளைத்தமிழில் பருவ வரையறையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று கருதலாம்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்.

 

புறநானூற்றில் பெண்பாற் புலவர்கள் நோக்கில் சமுதாயம் - ர. தமிழரசி

தாய்மொழியில் மிக சிறந்து விளங்கிய சங்கச் சான்றோர் பலராவர். அவர்களுள் பெண்பாற் புலவர்கள் முப்பதின்மரும் அடங்குவர். சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் புறநானூற்றுப் பாடல்களைப் பற்றி பெண்பாற் புலவர்கள் பற்றி சமூகநோக்கு இங்கு கூறப்படுகின்றது. புறநானூற்றில் வரும் பெண்பாற் புலவர்களுள் அதிகப் பாடல்கள் பாடியவர்கள் ஒளவையாரும் மாறோகத்து நப்பசலையாரும் ஆவர்.

சமுதாயம்:

ஒரு சிறிய நிலப்பரப்பில் ஒரு பொது வாழ்க்கை வழியைப் பின்பற்றக் கூட்டமாக வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் எனப்படும். தனிமனிதர்கள் குடும்பமாகவும் பல குடும்பங்கள் சேர்ந்து சமுதாயமாகவும் உருவாகின்றன. தனிமனிதர்களின் எண்ணம், ஒழுக்கம், போக்கு தெய்வ நம்பிக்கை, குறிக்கோள் முதலியன சமுதாயம் ஒன்றுபட்டு வளர்ச்சி எய்தி விளங்கும் வகையில் அமைகின்றன. சங்ககால மக்கள் வாழிடங்களாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களாக பாகுபாடு செய்துள்ளனர். ஒழுக்கத்தை அகம், புறம் எனப் பிரித்துள்ளனர். காதல், நட்பு, வீரம், கொடை, ஈகை, விருந்தோம்பல் பற்றிய செய்திகள் சங்க இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன.

அரசு செலுத்தும் முறை:

அரசு செலுத்தும் முறை என்பது நாடாளும் அரசன் திட்டமிட்டுப் புரிந்திடும் செயல்பாட்டைக் கூறலாம். குடிகளைக் காக்கவேண்டியது அரசனின் கடமையாக உள்ளது.

''குடிதழீஇக் கோலாச்சும் மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு''

அரசு செங்கோல் செலுத்தும் முறையை இவ்வடிகள் உணர்த்தும். அரசுரிமை வழிவழியாக வந்துள்ளது. தந்தைக்குப் பிறகு மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றல் இங்கு குறிப்பிடத்தக்கது. அதியனின் மகன் பொருட்டெழினி அரசு கட்டில் ஏறியதை ஒளவையார் குறிப்பிடுகிறார்.

புலவர் போரில் பங்கேற்றல்:

போர் நிகழும் காலத்தில் புலவர்களும் அவற்றில் பங்கு கொண்டனர். போர் நிகழும் காலத்து மன்னர்க்கு வீரவுணர்வூட்டிப் புலவர்கள் ஊக்கமளித்துள்ளனர். பகைகொண்ட மன்னர்களைச் சேர்த்தும் வைத்துள்ளனர். அதியமான் சார்பாக ஒளவையார் தொண்டைமானிடம் தூது சென்றதைச் சிறப்பாகக் கூறலாம். அதியனின் படையைப் பழிப்பதுபோல் புகழ்ந்தும் தொண்டைமானின் படையைப் புகழ்வது போலப் பழித்தும் கூறிப்போரைத் தடுத்ததைக் கூறலாம்.

''இவ்வே, பீலியணிந்து மாலைசூட்டிக்

கண்டிர ணோன் காழ் திருத்தி ணாய் யணிந்து

பகைவர்க் குத்திக் கோடுனுதி சிதைந்து

கொற்றறைக் குற்றில மாதோ வென்றும்''

பழக்க வழக்கங்கள்:

பழக்கம் என்பது தனிமனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிக்கிறது எனலாம். பழக்க வழக்கம் என்ற சொற்களோடு, மரபு என்ற சொல்லும் தொடர்புடையதாகும். மரபு என்பது வழக்கமாகத் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்படுகிறது.

கலந்தொடா மகளிர்:

பெண்கள் பூப்புற்றிருக்கும் காலங்களில் தூய்மையற்றவர்களாகக் கருதப்படுவர். அவர்கள் பூப்புற்றிருக்கும் காலங்களில் வீட்டுப் பண்டங்களைத் தொடாமல் ஒதுங்கி வாழ்ந்தமையால் அவர்கள் கலந்தொடா மகளிர் எனப்பட்டனர் என்று கூறுவர். பொன் முடியார் கலந்தொடா மகளிர் பற்றிக் குறிப்பிடுதலைக் காணலாம்.

''உழுத்த தருண்ட வோய்நடைப் புரவி

கடன்மண்டு தோணியிற் படைமுகம் போழ

நெய்ம்மிதி யருந்திய கொய்சுவ லெருத்தின்

அணங்குடை முருகன் கோட்டத்துக்

கலந்தொடா மகளிரி னிகழ்ந்து நின்றவ்வே''

மாதவிலக்கு கொண்ட பெண் ஒருத்தி இனிய பழம் தரும் மரத்தடியில் நின்றால், அம்மரத்துப் பழத்தினுடைய இனிப்பு கொடிய கசப்பாக மாறிவிடும். அவள் தானியத்தைத் தொட்டால் அத்தானியம் விதைப்பதற்கு உதவாது, முளைக்கும் சக்தியையும் இழந்துவிடும்.

கைம்மை மகளிர்:

கணவனை இழந்த மகளிர், ''கைம்மை மகளிர்'' எனப்படுவர். இத்தகையோரை விதவை என்றழைக்கின்றனர். இவர்கள் ''கழிகல மகளிர்'', ''உயவற் வெண்மர்'', ''பருத்தி பெண்டிர்'', என்றும் அழைக்கப்படுகின்றனர். பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு, அவள் கணவன் இறந்துவிட்டதால் அதனை ஆற்றாது தீயில் பாய்ந்து உயிரிழக்க, முற்பட்டபோது அவளைச் சான்றோர்கள் தடுத்தபோது, கைம்மை நோன்பினைப் பற்றிக் கூறுகிறார், இதனை,

''அடையினைக் கிடந்த கைமிழி பிண்டம்

வேளை வெந்தை வல்சி யாகப்

பரந்பெய் பள்ளிப் பாயின்று வதியும்

உயவற் பெண்டிரே மல்லே மாதோ''

என வரும் செய்யுட் பகுதியால் அறிந்து கொள்ளலாம். தொல்காப்பியர் மனைவியை இழந்த கணவன் நிலையைத் தபுதார நிலை என்றும் சுட்டுகின்றனார். தாயங்கண்ணியார் கணவனை இழந்த கைப்பெண்கள் கூந்தலைக் கொய்து, வளையல்களை நீக்கி, அல்லி அரிசியினை உணவாக உட்கொண்ட நிலையினை,

''கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

அல்லி யுணவின் மனைவியோ டினியே''

என வரும் செய்யுட் பகுதிகளால் அறியலாம்.

விரும்தோம்பல்:

பழந்தமிழர் விருந்தோம்புதலையே சிறந்த பண்பாடாகக் கொண்டனர். திருவள்ளுவர் விருந்தோம்பல் என்று தனி அதிகாரத்தையே வைத்துள்ளார்.

''விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று''

அள்ளூர் நம்முல்லையார், மறப்பெண் ஒருத்தி நாளும் விருந்தினர் தன் இல்லத்திற்கு வரப்பெறுதல் வேண்டும் என்று வழிபட்டதாகக் கூறுகிறார்.

''நடுகற் கைதொழுவு பரவு மொடியாது

விருந்தெதிர் பெறுகதில் யானே''

சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையில் கண்ணகி கோவலனிடம் விருந்தோம்பற் பணியைச் செய்ய இயலாது வாழ்ந்த நிலையினை நினைத்து வருந்திக்கூறுவதைக் காணலாம்.

''அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்

துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை''

இதிலிருந்து விருந்தோம்பலை இல்லறத்திற்குரிய சிறந்த பணியாகக் கொண்டதனை அறிய முடிகிறது.

மகளிரின் வீரவுணர்வு:

சங்ககால மகளிர் மிகவும் நாட்டுப்பற்றுடையவர்களாக விளங்கினர் என்று கூறலாம். பகைவர்களிடமிருந்து தாய்நாட்டைக் காப்பதற்கு தங்கள் கணவர், மக்கள் ஆகியோரைத் தியாகம் செய்வதைப் பெருமையாகக் கருதினார்கள். இது அவர்களுடைய வீரவுணர்வைப் புலப்படுத்துகிறது. மகனின் மார்பில் புண்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாக இருந்த நிகழ்ச்சி, ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் என வள்ளுவம் கூறுவதுபோல் காக்கைபாடினியார், நச்செள்ளையார்,

''செங்களத் துழவுவோள் சிதைந்துவே றாகிய

படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தணளே''

எனப் பாடியிருக்கின்றனர்.

நரைத்த கூந்தலையுடைய முதியோள் மகன் போர்க்களத்தில் பகைவர் யானைகளைக் கொன்று தானும் விழுப்புண்பட்டு இறந்துவிடுகிறான். அதனைச் சான்றோர் வாயிலாகக் கேட்ட அம்முதியோள் அவன் பிறந்தபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைக் காட்டிலும் பேருவகை கொண்டதாகப் பூங்கணுத்திரையார் கூறுகின்றார்.

''களிறெறிந்து பட்டன னென்று முவகை

ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்­ர்

நோன்கழை துயல்வரும் வெதிரத்து''

இவ்வடிகள் போரில் இறத்தலையே சிறப்பாகக் கருதிய சங்ககால மகளிரின் வீரவுணர்வைப் புலப்படுத்துகின்றன. அக்காலத்தில் பெண்கள் தங்கள் மகன் சிறந்த வீரனாக விளங்க வேண்டும். பகைவர்களோடு போர் செய்து நாட்டைக் காக்க வேண்டும் என்று விரும்பினார். இதிலிருந்து அவர்கள் உயர்ந்த பண்புள்ளம் கொண்டவராக இருந்தனர் என்பது அறியலாகும்.

துறவு:

உலகில் யாக்கை, இளமை, செல்வம் முதலியன நிலையில்லாமல் கழிவது கண்டு நிலைத்த வாழ்வு பெறவிரும்புவோர் இவற்றைத் துறந்து செல்லுதலே தகுதி எனக் கருதுவர். ஆகவே துறவு பூண்டு துறவுக்குரிய நெறிகளை ஒழுகுவர். மாற்பித்தியார் தலைமகன் ஒருவன் துறவு பூண்ட நிலையினைக் கூறுகின்றார். இதனை,

''கழைக்கண் நெடுவரை அருவி யாடிக்

கான யானை தந்த விறகின்

கடுந்தெறல் செந்தீ வேட்டுப்

புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே''

எனவரும் செய்யுளால் அறியலாம்.

சங்ககாலத்தில் போரில் இறத்தலையே வீரமாகக் கொண்டனர். இறந்தவர்களைச் சுடுகாட்டில் தீமூட்டி எரித்தல் அக்காலத்திலேயே இருந்துள்ளது. இறந்த வீரர்களுக்குக் கல்நட்டு வழிபாடு செய்யும் வழக்கத்தையும் பண்டைய தமிழர் கொண்டிருந்தனர். பாடை கட்டுதலும் உண்டு. இதனை ஒளவையார் பாடல் மூலம் அறியலாம் பாடையைக் கால்வழி கட்டில் என்று குறிப்பிடுகிறார்.

''கால்வழிக் கட்டிலிற் கிடத்

தூவெள் ளுறுவை போர்ப்பித் திலதே''

தொழில்:

சங்க காலத்தில் மக்கள் தங்கள் வாழ்க்கையை நாகரீகமாக அமைத்துக் கொள்ளத் தொழில் இன்றியமையாததாக இருந்தது எனலாம். மக்களை அவரவர் தொழிலுக்கு ஏற்ப உழவர், ஆயர், வேட்டுவர், உமணர், வண்ணார், கொல்லர், தச்சர், வணிகர் என்று பெயரிட்டு அழைத்தனர், சங்க காலத்தில் வாணிகம் சிறந்து விளங்கியது. கடல் வாணிகம் பண்டு தொட்டே சிறந்து விளங்குகிறது. உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம் என்ற தொடரே சான்றாகிறது என்பர்.

உப்பு வாணிகம்:

உணவுப் பொருள்களுள் மிகச்சிறந்தது உப்பு. உப்பு வணிகர் உமணர் எனப்பட்டனர். உப்பு வணிகர் பலர் ஒன்றுகூடியே செல்வர் என்று குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

''உமணர் சேர்ந்து கழிந்த மருங்கி னகன்றலை

கொடுங்கோ லுமணர் பகடுதொழி தென்விளி

நெடும்பெருங் குன்றத் திமிழ்கொள் இயம்பும்''

நக்கண்ணையார் போர்வைக் கோப்பெருநற்கிள்ளியின் வீரத்திற்கு உமணர் செயலை ஒப்புமையாகக் கூறுகிறார். புலத்தி என்ற சொல் வண்ணாத்தி என்ற பொருளைக் குறிக்கும். அழுக்குத் துணிகளைப் புலத்தி எடுத்துச் சென்று வெளுத்துவருபவள் ஆவாள். இதனை ஒளவையார்

''களர்ப்படு கூவற் தோண்டி நாளும்

புலைத்தி கழிஇய தூவெள் ளறுவை

தாதெரு மருகின் மாகன விருந்து'' எனக் குறிப்பிடுகிறார்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

தலைவியின் வாழ்வில் செவிலியின் பங்கு - அ. ஜோஸ்பின் புனிதா

தொல்காப்பியர் கூறும் அகத்திணை மாந்தர்களுள் சிறப்பாகக் கருதத்தக்கவள் செவிலியாவாள். நற்றாயை விடச் செவிலித் தாயும் தோழியும் தலைவியின் காதல் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செவிலி பற்றித் தொல்காப்பியம் மற்றும் சங்க அக இலக்கியங்கள் வழி ஆராயப்படுகின்றது.

தொல்காப்பியத்தில் செவிலி:

தொல்காப்பியர் களவியல், கற்பியல் ஆகிய இரு இயல்களில் செவிலியின் சிறப்பியல்புகளை எடுத்துரைக்கின்றார்.

''ஆய்பெருஞ்சிறப்பின் அருமறை கிளத்தலின்

தாயெனப்படுவாள் செவிலியாகும்'' (தொல்.பொருள்களவு-112)

என்கிறார். நல்ல பெரிய சிறப்பினையுடைய அறிதற்குரிய மறைப்பொருள் யாவற்றையும் கூறும் கட்டுப்பாடு உடையவளாதலின் தாய் எனப்படுவாள் செவிலி என்று கூறுகின்றார்.

தலைவன் தலைவியின் ஒழுகலாறு அயலாருக்குப் புலனாகி அவர் தூற்றப்பட்டவிடத்தும் தலைவிமாட்டு உள்ளதாகிய வேட்கை அளவிற்கு அதிகமாக இருக்கும் பொழுதும் புணர்ச்சியால் தலைவியின் உடல் மாறுபாடு அடைந்தவிடத்தும், தலைவனோடு தலைவியைத் தலைப்பெய்து காணினும், கட்டு வைப்பித்த வழியும், செவிலியும், நற்றாயும் தலைவியின் நிலை கண்டு வெறியாட்டு மேற்கொண்ட பொழுதும், காதல் மிகுதியால் தலைவனை எள்ளிக் கனவின்கண் அரற்று தற்கண்ணும், இவை நிமித்தமாகத் தோழியை வினாதலும், தெய்வத்தை வேண்டியும், தலைவன் வரையாது பிரிந்தவழி ஒழிந்த தலைமகள் அலராடுதலும் இன்றி, வேறுபாடும் இன்றி, ஒரு மனப்பட்டிருந்த உள்ளக் கருத்தை அறிந்த வழியும், தலைவன் குடிமை தன் குடிமையோடு ஒக்குமென அறைதற் கண்ணும் என்று இவ்வாறாக பதின்மூன்று நிலைகளில் செவிலி கூற்று நிகழும் என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். (தொல். பொருள் களவு:113)

''கிழவோன் அறியா அறிவினள் இவளென

மையாறு சிறப்பின் உயர்ந்தோர் பாங்கின்

ஐயக் கிழவியின் அறிதலும் உரித்தே'' (தொல். பொருள். களவு:115)

என்று நற்றாய் - செவிலித்தாய் பற்றித் தொல்காப்பியர் எடுத்துரைக்கின்றார்.

''தாய் அறிவுறுத்தல் செவிலியோ டொக்கும்'' (தொல் பொருள்.களவு:136)

நற்றாய் களவொழுக்கம் அறிவுறுத்தல் செவிலியோடு ஒக்கும் என்றும் எடுத்துரைக்கிறார்.

''கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழிகொள

நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும்

செவிலிக்குரிய ஆகும் என்ப'' (தொல். பொருள். கற்பு:151)

என்பதனால் இறந்த காலத்தினும் நிகழ்காலத்தினும் எதிர்காலத்தினும் நல்லவை கூறுதலும் அல்லவை கடிதலும் செவிலிக்கு உரியவை என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

அறத்தொடு நிற்றல்:

தலைவியின் செயல்பாடுகளில் மாற்றத்தினைத் தமது நுண்ணுனர்வினால் அறிந்த செவிலித்தாய் நற்றாயிடம் அறத்தொடு நிற்கின்றாள்.

''பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு

தொல்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய

நால்ஊர்க் கோசர் நல்மொழி போல

வாய்ஆ கின்றே தோழி ஆய்கழல்

செயலை வெள்வேல் விடலையொடு

தொடுவளை முன்கை மடந்தை நட்பே'' (குறுந்தொகை - 15)

இப்பாடலில் தலைவி உடன் போக்கு போன பிறகு தோழி செவிலித்தாயிடம் அறத்தொடு நிற்கின்றாள். பிறகு செவிலித்தாய் நற்றாயிடம் அறத்தொடு நிற்கின்றாள். பின் வரும் பாடல் செவிலி அறத்தொடு நிற்றலுக்கும் சான்றாகக் காட்டத்தக்கதாகும்.

இற்செறிப்பு:

தலைவி தலைவனோடு களவொழுக்கம் புரிதலை அறிந்த செவிலி தலைவியை மறைமுகமாக இற்செறிக்கின்றாள். ஊரில் அலர் தூற்றப்படுவதாலும் தலைவியிடத்து காண்பதாலும் இந்நிகழ்வினைச் செவிலி செய்விக்கின்றாள்.

''அன்னையு மறிந்தன அலரும் ஆயிற்று

நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்''

என்ற இப்பாடலில் எங்கள் தாயும் நமது களவொழுக்கத்தை அறிந்து கொண்டாள். ஊர் முழுவதும் பழிச்சொல்லும் பரவுகிறது. இதுகாறும் இன்பமாக இருந்த எங்கள் வீடும், நாங்களும் தனிமைத் துயரத்தை அனுபவிக்க ஏற்றதாகிவிட்டது என்று தலைவி தலைவனிடம் புலம்புகின்றாள்.

''புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை

தான் அறிந்தன்றோ இலளே பானாள

சேரிஅம் பெண்டிர் சிறுசொல் நம்பி

கடுவான் போல நோக்கும்

அடுபால் அன்னஎன் பசலை மெய்யே''

என்னும் இப்பாடலில் தலைவனோடு கொண்ட உறவை இதுவரை அன்னை அறியவில்லை. எனினும் பாதிநாள் இரவில் சேரியின் அழகிய பெண்டிர் சிறுசொல்லாகிய அலரை நம்பிக் காய்ச்சிய பால் போன்ற என் பசலை படர்ந்த உடலைச் சுடுதல் போல அவள் நோக்குவாள். இவ்வாறு அலர் காரணமாகவும், பசலைக் காரணமாகவும், தாய் தலைவியின் களவிளை உணர்கின்றாள் என்பது கூறப்படுகின்றது.

வெறியாட்டு:

தலைவி தினைபுனம்காக்கச் செல்கின்றாள். சென்ற இடத்தில் தலைவனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் களவு நிகழ்கின்றது. ஆனால் தாய் சென்ற இடத்தில் தலைவிக்கு அணங்கு ஏறப்பெற்றாள் என்று எண்ணி வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துகின்றாள்.

''..............தோழி வேறு உணர்ந்து

அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி

வெறிஎன உணர்ந்த உள்ளமொடு மறிஅறுத்து

பொன்நேர் பசலைக்கு உதவா யாறே'' (நற் - 47.7 -11)

என்னும் இப்பாடலில் தாய் தலைவியின் நிலையினை அறிந்து வேலனை அழைத்து வெறியாட்டு நடத்துவது கூறப்படுகின்றது.

குழந்தை பராமரிப்பு:

செவிலி தலைவியை அரவணைத்து வளர்த்ததோடு மட்டுமல்லாமல் தலைவியின் குழந்தையையும் அரவணைத்து அன்பு காட்டி வளர்க்கும் நிலையினையும் கீழ்வரும் பாடலடிகள் புலப்படுத்துகின்றன.

''வெறிஉற விரிந்த அறுவை மெல்அணைப்

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசுநெய் கூர்த்த மென்மை யாக்கைச்

சீர்கெழுமடந்தை ஈர் இமை பொருத்த'' (நற் - 40, 5-9)

இப்பாடலில் நறுமணம் உண்டாக விரிந்திருந்த நூலாடையுடைய மெல்லிய படுக்கையில் அண்மையிற் பிறந்த புதல்வன் செவிலி அருகில் உறங்குகிறான். சிறப்பு மிக்க தலைவி வெண்சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அண்மைக்காலத்தில் பசிய நெய் விளக்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கிக் கிடந்தான் என்று தலைவியின் மகன் செவிலித்தாய் அருகில் உறங்கியதாகக் கூறப்படுகின்றது.

உடன்போக்கு:

தலைவன் தலைவி ஆகிய இரு குடும்பத்தார்களும் திருமணத்திற்கு உடன்படாதபோது உடன்போக்கு நிகழும். உடன்போகிய தலைவியை நினைந்து மனையிலிருந்து புலம்புதல் தாய்க்குரியதாகவும் மனையிலிருந்து புலம்புதல் மட்டுமின்றிப் பின்சென்று தேடுதல் செவிலிக்குரியதாகவும் அமைகின்றன.

''ஏமப் பேரூர்ச் சேரியும் சுரத்தும்

தாமே செல்லும் தாயரும் உளரே'' (தொல். அகத்திணை. 37)

நற்றாய் செவிலி இருவரது செயல்களும் உணர்வால் ஒன்றுபட்ட படைப்பில் செயலால் வேறுபடும் தொல்காப்பியர் தாயர் எனப் பன்மைப்படுத்திக் கூறியமை மனைப்புறத்துச் சென்று தேடிய தாயைச் செவிலி எனப் பாகுபடுத்தக் காரணமாய் இருந்திருக்கலாம். வீதிகளில் சென்று தேடியவள் செவிலி, இருந்து புலம்பியவள் தாய் என்று விளக்கம் தருகின்றனர்.

தலைவன் தலைவியிடம் பொய் சொல்லியும் பாராட்டியும் மயக்கிக் கொண்டு சென்றுள்ளான் என்று தாய் கூறுகின்றாள். தலைவனைப் பொய்யன் என்றே கூறுவதைக் காணமுடிகிறது.

''ஏதிலன் பொய்மொழி நம்பி''

''கூர்வேல் விடலை பொய்ப்போகி

சேக்குவள கொல் லாதானே''

''மையணல் காளை பொய்புகலாக

அருஞ்சுரம் இறந்தனள்''

என்று செவிலித்தாய் தலைவி தலைவனின் பொய்யுரைகளையும் இன்சொல்லினையும் நம்பிப் பாலை வழியில் சென்று விட்டாள் என்று தலைவனை இடித்துரைத்துத் தலைவியின் எதிர்கால வாழ்வினை எண்ணி வருந்தும் நிலையை அறியமுடிகிறது.

செவிலி - தோழி:

தலைவியின் செவிலித்தாய் தான் தோழியின் தாயாவாள். செவிலியின் சிறப்பைப் போற்றும் முறையில் தொல்காப்பியர் தாய் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவள் செவிலியே ஆகும் என்று கூறி அதற்குரிய காரணத்தையும் குறிப்பிடுவார்.

''தோழிதானே செவிலியது மகளே'' (தொல்.பொருள். களவு-123)

செவிலி தோழியின் நற்றாயாகவும் தலைவியின் வளர்ப்புத் தாயாகவும் நிகழ்கிறாள். தோழி - செவிலி ஆகியோரின் சொந்த வாழ்வியல் நிகழ்வுகள் இலக்கியத்தில் இடம் பெறாமல் உள்ளது. தலைவிக்கு அமைந்த தோழியைப் போன்றே நற்றாய்க்குத் தோழியாகச் செவிலி படைக்கப்பட்டுள்ளாள். செவிலியின் கணவனைப் பற்றிய குறிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. தலைவிக்குள்ள உரிமைகள் அனைத்தும் தோழிக்குத் தருவதைப் போன்று நற்றாய்க்குள்ள உரிமைகள் அனைத்தும் செவிலிக்கும் வழங்கப்படுகின்றன.

ஒரு குடும்பத்தில் பிறந்த இருதலைமுறையினர் தலைமக்கள் வாழ்வில் பெரும்பங்கு கொண்டு அவர்களுக்காகத் தொண்டாற்றும் சிறப்பைப் பெறுகின்றனர். அவர்கள் செவிலியும் தோழியும் ஆவார்.

''அரிநகைக் கூந்தல் செம்முது செவிலியர்

பரிமெலிந் தொழியச் பந்தர் ஓடி

ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி'' (நற்.110 6-8)

என்னும் இப்பாடலில் தோழியை எவ்வாறெல்லாம் செவிலித்தாய் வளர்த்தாள் என்னும் குறிப்பு இல்லை. செவிலி தலைவியின் நலனில் அக்கறைக்கொண்டு அவளின் வாழ்வுக்காகவே வாழ்ந்த இயல்பினளாக விளங்குகிறாள்.

செவிலியின் உயர்பண்புகள்:

தலைவியின் களவினைத் தோழி கூறுவதற்கு முன்பு செவிலித்தாய் தமது நுண்ணறிவினால் அறிந்து கொள்ளும் மனநிலை கொண்டவளாக இருப்பதனை அறிய முடிகிறது. பின்னர் இற்செறிப்பின் மூலம் செவிலி தமது குலப்பெருமையும், குடிப்பெருமையும் காக்கும் கடமை உணர்வு மிக்கவளாகக் காணப்படுகிறாள். வெறியாட்டு பற்றிய செயல்களைக் காணும் போது தலைவி மீது கொண்டுள்ள பாச உணர்வு வெளிப்படுகிறது.

தலைவி உடன்போக்குச் சென்ற பிறகு செவிலி நற்றாயிடம் அறத்தொடு நின்று தமரின் உடன்பாட்டுடன் நாடறிய நல்மணம் செய்விக்க விழைகின்றாள். இவற்றால் செவிலியின் மனஉணர்வும், கடமையுணர்வும், பொறுப்புணர்வும் வெளிப்படுவதனை அறிய முடிகிறது.

சங்ககாலச் சமுதாயத்தில் பெண்ணின் உணர்வுகள் பெண்களால் மதிப்பளித்தும் போற்றியும் காக்கும் நிலையைச் சங்க அக இலக்கியங்களில் காணப்படும் பெண் பாத்திரங்களான நற்றாய் - செவிலி, தலைவி - தோழி மூலம் அறியலாம்.

இன்றைக்கும் கிராமப்புற சமுதாயங்களில் ஒரு தாயின் குழந்தையை மற்றொரு தாய் பராமரித்தலும், பாலூட்டி வளர்த்தலும் போன்ற நிகழ்வுகளைக் காண முடிகிறது. இவற்றையெல்லாம் காணும் பொழுது ஒரே கணத்தினைச் சார்ந்தவர்களால் மட்டுமே இவ்வாறு உள்ளத்து உணர்வுடன் செய்ல்பட முடியும் என்பதை கண்டு கொள்ள முடிகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

குறுந்தொகையில் எண்வகை மெய்ப்பாடுகள் - பா. கவிதா

பண்டைத் தமிழ் மக்களது அன்பும் அறிவும் நிறைந்த இன்ப வாழ்வின் இயல்பினைப் புலப்படுத்துவன பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும், தமிழரின் அக, புற வாழ்வினை வகைப்படுத்தி விளக்கிக் கூறும் இனிய நூல்களாகும். ஒத்த அன்புடைய தலைவன், தலைவியின் அன்பினை எட்டே வரிக்குள் எடுத்துக் கூறுவது. தொல்காப்பியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியலில் எண்வகை மெய்ப்பாடுகளையும் அவற்றின் வகைகளையும் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். எண்வகை மெய்ப்பாடுகள் மற்றும் 32 பொருண்மைகள் குறுந்தொகையில் சில பாடல்களில் பயின்று வந்துள்ளதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தொல்காப்பியர் கூறும் எண் வகை மெய்ப்பாடுகளாவன:

''நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப'' (தொல். மெய்ப். 3)

நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் வெகுளி உவகை என்பன எண் வகை மெய்ப்பாடுகளாகும். எண்வகை, மெய்ப்பாடுகளின் வகைகளான 32 பொருண்மை பற்றியும் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

நகை (மடன்) :

நகை இகழ்ச்சியிற் பிறப்பது, எள்ளல், இளமை, பேதமை, மடன் என்ற நான்கும் நகைப் பொருளாகும். இதனை நூற்பாவின் வாயிலாக அறியலாம்.

''எள்ளல் இளமை பேதைமை மடன்என்று

உள்ளப்பட்ட நகை நான்கு என்ப'' (தொல். மெய்ப். 4)

முறுவலோடு வரும் மகிழ்ச்சியில் நகை பிறக்கும். எள்ளல், இளமை பொதுப்படையாகத் தன்னிடத்தும் பிறரிடத்தும் நிகழும், நகையின் வகையான மடன் என்னும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடலில் வெளிப்படுவதைக் காணலாம்.

''மன்றஅரா அத்த பேஎம்முதிர் கடவுள்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . .

கொடியர் அல்லர்எம் குன்றுகெழு நாடர்

பசைஇப் பசந்தன்று நுதலே

ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தடமென் தோளே'' (குறுந். 87)

தலைவியின் மன வருத்தத்தினால் நுதலில் பசப்பு, தோள் நெகிழ்பு ஏற்பட்டன. அறியாமை உடைய மக்கள் தலைவியின் நோய்க்குத் தலைவனே காரணம் என்று கூறினர். மக்கள் அறியாமையுடைய மடன் நெஞ்சை உடையவர்கள் எனக் கூறும் நிலையில் மடன் என்ற மெய்ப்பாடு இப்பாடலில் இடம் பெற்றுள்ளது.

அழுகை (அசை):

அழுகை, இளிவு, இழவு, அசை, வறுமை என்னும் நான்கு வகைப் பொருண்மையான் பிறக்கும். இதனைத் தொல்காப்பியர்,

''இளிவே இழவே அசையே வறுமையென

விளிவுஇல் கொள்ளை அழுகை நான்கே'' (தொல். மெய். 5)

என்கிறார். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்நிலையிற் தாழ்தல், நல்குரவு என்ற பொருண்மையும் தோன்றும். கீழ்வரும் அடிகளில் அசை என்ற மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.

''இவளே நின்சொற் கொண்ட என்சொல்தேறி

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

புதுநலன் இழந்த புலம்புமார் உடையள்

மடல்தாழ் பெண்ணை எம்சிறு நல்ஊரே'' (குறுந். 81)

தோழி தன் நிலையில் இருந்து தாழ்ந்து தலைவனைப் பற்றிப் பலவாறாக நல்ல சொற்களைக் கூறினமையினால், தலைவி நலமிழந்து, விரும்பி ஏற்றுக் கொண்டாள். இப்பாடல் கருத்தில் தோழி தன் நிலையில் தாழ்தல் என்ற மெய்ப்பாடு காணப்படுகிறது

இளிவரல் (வருத்தம்):

மூப்பு, பிணி, வருத்தம், மென்மை முதலிய நான்கும் இளிவரல் மெய்ப்பாட்டின் வழித் தோன்றும்.

''முப்பே பிணியே வருத்தம், மென்மையோடு

யாப்புற வந்த இளிவரல் நான்கே'' (தொல். மெய்ப். 6)

இழிப்பு தன் மாட்டும் பிறர் மாட்டும் உளதாகிய வருத்தத்தினால் பிறக்கும் தலைவன் பிரிவால் தலைவி வருத்தம் அடைவதைப் பாடல் வழி அறியலாம்.

''அதுகொல் தோழி காம நோயே

. . . . . . . . . . . . . . . . . . .

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

பல்இதழ் உண்கண் பாடுஒல் லாவே'' (குறுந். 5)

தலைவன் பிரிவால் காமநோய் உற்று, தலைவியின் தாமரைமலர் போன்ற மெல்லிய கண்கள் இரவு, பகல் உறங்காமல் வருந்தின. இந்த வருத்தம் தன்மாட்டுப் பிறந்த வருத்தம் என்ற மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

மருட்கை (பெருமை):

மருட்கை வியப்பால் தோன்றுவது. புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் என்ற நால்வகைப் பொருண்மையான் பிறக்கும்

''புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

மதிமை சாலா மருட்கை நான்கே.'' (தொல். மெய். 7)

பெருமை தான் கண்ட பெருமையின் வியப்பு, பிறர் கண்ட பெருமையின் வியப்பு என்ற இருவகையும் குறுந்தொகையில் பயின்று வருவதனைக் காணலாம்.

''நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆர்அள வின்றே சாரல்

. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

பெருந்தே னிழைக்கும் நாடனொடு நட்பே (குறுந். 3)

தலைவனுடன் தலைவி கொண்ட நட்பானது நிலத்தின் அகலம் போலவும், வானின் உயரம் போலவும், கடலின் ஆழம் போலவும் பெரிது என்றமையின் தான் கண்ட பெருமை பற்றிய வியப்பு, தலைவன் நட்புப் பெருகியது கொண்டதால் பிறர் கொண்ட பெருமை பற்றிய வியப்பு என இரண்டு வகையான பொருண்மையின் வாயிலாகப் பெருமை என்ற மெய்ப்பாடு வெளிப்படுவதை அறிய முடிகிறது.

அச்சம்:

பிறராலும், பிற பொருளாலும் தோன்றும். நான்கு வகைப் பொருண்மையான் அச்சம் பிறக்கும்.

''அணங்கே விலங்கே கள்வர்தம் இறையெனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே'' (தொல், மெய்ப். 8)

பிறரால் அச்சம் பிறக்கும் என்ற வழிப் பின்வரும் பாடலில் அச்சம் மெய்ப்பாடு வெளிப்படுவதைக் காணலாம்.

''கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம்மில் பெருமொழி கூறித் தம்இல்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல'' (குறுந். 8)

தலைவன் பரத்தையாரிடத்துப் பெரிய மொழிகளைக் கூறிப் பின்னர் மனைவியிடத்துத் தம் கையையும் காலையும் தூக்கத் தானும் தூக்குகின்ற கண்ணாடியுள் தோன்றுகிற பாவையைப் போலத் தன் மனைவிக்கு அஞ்சி நடக்கும் இயல்பினன் என்ற இக்கருத்தின் வாயிலாக அச்சம் என்ற மெய்ப்பாடு வெளிப்படுகிறது.

பெருமிதம் (இசைமை):

பெருமிதம் கல்வி, தறுகண், இசைமை, கொடை என்ற நான்கு வகைப் பொருண்மையான் பிறக்கும்.

''கல்வி தறுகண் இசைமை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே.'' (தொல். மெய்ப். 9)

இன்பமும் பொருளும் மிகுதியாக உண்டாயினும் பழியொடு வருவதை செய்யாமை என்ற இசைமை மெய்ப்பாடு கீழ்வரும் பாடலில் அமைவதை அறியலாம்.

''காலையும் பகலும் கையறு மாலையும்

மாஎன மடலொடு மறுகில் தோன்றித்

தெற்றெனத் தூற்றலும் பழியே'' (குறுந். 32)

தலைவன் தலைவியை விட்டுச் சிறிது காலம் பிரிந்து வாழ்ந்தாலும் தலைவியை ஊரார் பழிக்காத வண்ணம் தலைவன் மடல் ஏறாது வாழ்ந்தான். தலைவி பிரிவை ஏற்றுப் பழியொடு வருவதைச் செய்யாது வாழ்ந்தான். இப்பாடல் வாயிலாக இசைமை மெய்ப்பாடு வெளிப்படுகிறது.

வெகுளி:

வெகுளி வெறுப்பினால் பிறப்பது. உறுப்பறை, குடிக்கோள், அலை, கொலை என்ற நால்வகைப் பொருண்மையான் தோன்றும்.

''உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற

வெறுப்பின் வந்த வெகுளி நான்கே'' (தொல். மெய்ப். 10)

தலைவன் வரையாமை நீடித்தவழித் தலைவி சினந்து உரைக்கிறான்.

''முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்

. . . . . . . . . . . . . . . . . . . . . . .

அலமரல் அசைவளி அலைப்பஎன்

உயவுநோய் அறியாது துஞ்சம் ஊர்க்கே'' (குறுந். 28)

இது தலைவியின் துன்பத்தை அறியாது தலைவன் வரைவினை நீடித்தமையினால் தலைவி தலைவனைச் சினந்து உரைத்தது. குறுந்தொகைப் பாடலில் தலைவி சினந்து கூறும் களவு குறைவு.

உவகை (புலன்):

உவகை மகிழ்ச்சியில் பிறப்பது. செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நால்வகைப் பொருண்மையான் உவகை தோன்றும்.

''செல்வம் புலனே புணர்வு விளையாட்டென

அல்லல் நீத்த உவகை நான்கே'' (தொல். மெய்ப். 11)

கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்றறியும் ஐம்புலன்களால் நுகர்தல் எனும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடலடிகளில் அமைதல் காணலாம்.

''ஒடுங்குஈர் ஓதி ஒள்நுதற் குறுமகள்

. . . . . . . . . . . . . . . . . . . . .

சிலமெல் லியவே கிளவி

அணைமெல் லியள்யான் முயங்குங் காலே'' (குறுந். 70)

தலைவன் தலைவியுடன் இன்புற்று, அவளது மென்மையை அறிந்து, இளமையைப் புணர்ந்து, நறுமணத்தை நுகர்ந்து, குளிர்ச்சியை உண்டு அவளது அழகினை உயிர்த்து, வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனத் தலைவன் தலைவியை ஐம்புலன்களால் உய்த்து உணர்ந்து வெளிப்படுவதினால் புலன் என்ற மெய்ப்பாடு தோன்றுவதை அறியமுடிகின்றது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்.

 

சங்ககால மகளிர் - சோ.பெ. ஜெயந்திகலா

சங்க காலம் தமிழ் இலக்கிய வரலாற்றின் பொற்காலம். பழந்தமிழ்ப் பண்பாட்டின் நிலைக்களனாய் அமைந்தவை சங்ககால மகளிரின் அரும்பண்புகள். ஆணும், பெண்ணும் இணைந்து நடத்துகின்ற இல்லற வாழ்வே முழுமையான வாழ்வு என மேற்கொள்ளப்பட்டது. மகளிருக்குத் தொல்காப்பியர் பின்வரும் பண்புகள் இன்றியமையாதன என எடுத்தோதுகின்றார்.

''உயிரினும் சிறந்தன்ற நாணே நாணினும்

செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று'' (தொல், களவியல் - 23)

''அச்சமும் நாணும் மடனுமுந் துறதல்

நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப'' (தொல், களவியல் - 8)

இதன் வழி ஆண்களுக்குப் பெருமையும் வீரமும் வேண்டப்படுவன போல பெண்களுக்கு அச்சமும் நாணமும் சிறந்தது என்று குறிப்பிடுகிறார். எனவே சங்ககால மகளிரின் செயற்பாடுகளையும் அவர்களுடைய பண்புகளையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

அழகு:-

பெண்ணொருத்தியின் அழகினை மதுரை எழுத்தாளன் சேந்தன்பூதன் என்ற புலவர்

''பூவொடு புரையுங் கண்ணும் பேயென

விறல்வனப் பெய்திய தோளும் பிறையென

மதிமயக் குறூஉ நுதலும்'' (குறுந். 226 1-3) என வருணித்துள்ளார்.

மென்மையான உடலமைப்பு:

மகளிர் மென்மையான உடமைப்பிற்குரியவர். புறவுலகின் பொய்மையும் சூதும் அறியாதவர். உலகின் இடையூறு நிலைகளையும் விலங்கு முதலியவற்றால் நேர்ந்திடும் இடுக்கண்களையும் உணராதவர். ஆனால் உள்ளத் திண்மையால் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொண்டு இல்லறத்தினை நல்லறமாக ஒம்பும் ஆற்றல் உடையவர்கள் அவர்களேயாவர். இவ்வாறு மகளிர்பாற் காணத்தகும் மென்னீர்மையினைச் சாயல் என்ற சொல்லால் நந்தமிழர் வழங்கினார்.

''நீரோ ரன்ன சாயல்

தீயோ ரன்னவென் னுரனலித் தன்றே'' (குறந். 95. 4-5)

என்ற குறுந்தொகைப் பாடலின் அடிகள் இக்கருத்து நுட்பத்தினைப் புலப்படுத்துகிறது.

இசை:

பெண்களுக்கு குரல் இயற்கையாகவே இனிமை நிரம்பியிருந்தது. எனவே, இசைத்தமிழ், மகளிர் வழிப் பெரிதும் வளர்ந்தது. தாலாட்டுப் பாடல் தாய்மார் வளர்த்த இயலிசைத் தமிழ் இலக்கியம் ஆகும். யானை முதலிய காட்டு விலங்குகளும் மற்றவர்களும் அவர்தம் இசைக்கு வயப்பட்டுத் தம் கொடூரத்தன்மை மறந்து நின்றமையைச் சங்க இலக்கியங்கள் நன்கு புலப்படுத்துகின்றன.

''ஆறலை கள்வர் படைவிட அருளின்

மாறுதலை பெயர்க்கும் கருவின் பாலை'' (பொருநர் - 11-12) என்ற பொருநராற்றுப்படை குறிப்பிடுகின்றது.

விளையாட்டு:

மலைவாழ் மகளிர் தினைப் புனங்களில் கிளியோட்டி தினைப் புனத்தினில் விளைந்த முற்றிய தினைக் கதிர்களைக் காத்தனர் என்பது சங்க இலக்கியத்தில் பலவிடங்களில் பேசப்படுகின்றது.

''களைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்

புனக்கிளி படியும் பூங்கட் பேதை'' (குறுந். 141 1-2)

களைப்பூவினைப் பறித்து மாலைதொடுத்தாலும், தினைப் புனத்தில் கிளி ஓட்டுதலும் மலைவாணர் மகளிரின் விளையாட்டுகள் எனக் குறிப்பிடப்படுகின்றது. பொதுவாக இளமகளிர் அக்காலத்தே கவலையில் தோயாமல் எப்பொழுதும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர் என்பதனை நற்றினைப் பாடல் கொண்டு அறியலாம்.

''விளையா டாயமொடு ஓரை யாடாது

இளையோர் இல்லிடத்திற் சென்றிருத்தல்

அறனும் அன்றே ஆக்கமும் தேயமெனப்

குறுநுரை சுமந்து நறுமலர் உந்திப்

பொங்கிவரு புதுநீர் நெஞ்சுண ஆடுகம்'' (நற் 68. 1-5)

இந்நற்றிணைப் பகுதி கொண்டு மகளிர் வீட்டின் வெளியே சென்று விளையாடமலிருப்பது அறமாகாது என்பதும் அதனால் செல்வமும் தேய்ந்துவிடும் என்பதும் தெரியவருகின்றன. விளையாடும் மகளிர் கூட்டத்தினைக் குறிப்பிடும் பொழுதெல்லாம் சங்க காலப் புலவர்கள் ''ஒரையாமம்'' என்றும் ''பொய்தன் மகளிர்'' என்றும் குறிப்பிடுகின்றனர். பஞ்சாயக் கோணுப்பல் கொண்டு செய்யப்பட்ட பாவை கொண்டு மகளிர் அந்நாளில் விளையாடிய விளையாட்டு ஓரை எனப்பட்டது. வண்டலயர்தல், சிற்றில் இழைத்தல், துணங்கையாடுதல், குரவையாடுதல் முதலிய விளையாட்டுகள் மகளிர் விளையாட்டுகளாகக் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பெறுகின்றன.

''பாசவ லிடித்த கருங்கா ழுலக்கை

ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி

ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் (குறுந். 239. 1-3)

என்ற குறுந்தொகைப் பாடற்பகுதியும்,

''அவலெறிந்த உலக்கை வாழைச் சேர்த்தி

வளைக்கை மகளிர் வள்ளை கொய்யும்

முடந்தை நெல்லின் விளைவயல்'' (பதிற். 2. 1-3)

என்ற பதிற்றுப்பத்து பாடற்பகுதியும், மகளிர் விளையாட்டினைக் குறிப்பிடுகின்றது. சிலம்பும், வளையும் அணிந்த இளமகளிர் பொன்னாற் செய்த கழற்காய் கொண்டு மணல் மேடுகளிலே இருந்து விளையாடினர் என்பதனை,

''செறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்

பொலஞ்செய் கழங்கின் தொற்றி ஆடும்'' (புறம். 312 5.6)

என்ற புறநானூற்றுப் பாடற்பகுதி கொண்டு அறியலாம். சிறுமகளிர் வீட்டின் முற்றத்தில் கழங்காடுகின்றதை,

''கூரை நல்மலைக் குறுந்தொடி

மகளிர் மணலொடு கழங்கு''

பருவ வயது வந்துற்ற பெண்கள் தங்களுக்கேற்ற காளைகள் மீது காதல் கொண்டனர். அக்கால ஆடவனுக்கு வீரமே வாழ்வாக விளங்கியது. பொன்முடியார் என்ற பெண்பாற் புலவர் வயது நிறைந்த இளைஞன் ஒருவனைக் குறிப்பிடுகின்ற பொழுது,

''ஒளிறுவாள் அருஞ்சாம முருக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே (புறம். 312. 5-6) என்று கூறியுள்ளார்.

முல்லை நில மகளிர் தம்மால் விரும்பி வளர்க்கப்பெற்ற வலிய எருதுகளைப் பிடித்து அடக்கும் அஞ்சா நெஞ்சமும் ஆற்றலுமுடைய காளையரையே மணக்க விரும்பினர். இதனை,

''கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்

புல்லாளே ஆய மகள்'' (கலி. 103. 63-64)

என்று முல்லைக்கலி குறிக்கின்றது. இந்நாளைப் போல் அல்லாமல், அக்காலத்தே மகளிரை மணந்துகொள்ள ஆடவரே மகளிர்தம் அணிகலன்களுக்கெனப் பெரும் பொருளினைப் பரிசமாகத் தந்தார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்து போற்றுகின்றோம். ஆனால் அதற்காகத் தகுதியில்லாதவன் ஒருவன் பெரும் பரிசுப் பொருளைக் கொணர்ந்து தந்தாலும் தங்கள் மகளைப் பழந்தமிழ்ப் பெருமக்கள் மணஞ்செய்து கொடுத்தார்களில்லை. இதற்குப் பின்வரும் புறநானூற்றுப் பகுதி சான்று கூறும்.

''முழங்கு கடன் முழவின் யன்ன

நலஞ்சால் விழுப்பொருள் பணிந்துவந்து கொடுப்பினும்

புரையர் அல்லோர் வரையலள் இவளெனத்

தந்தையும் கொடா அன்'' (புறம்.334. 10-13)

இறை நம்பிக்கை:

சங்ககால மகளிர், இறை நம்பிக்கை உடையவர்கள், மணமாகாத மகளிர், முருகனை நோக்கி, யாம் எம் நெஞ்சமர்ந்த காதலரைக் கனவிற் கூடியுள்ளோம். அது பொய்யாகாமல் நனவின் கண்ணும் எம் திருமணத்தை முடித்து வைக்க வேண்டும் என வேண்டினர். மணமான மகளிரோ, தமக்கு நல்ல பிள்ளைகள் பிறக்க வேண்டும் என் நோன்பிருந்தனர். மேலும், தம் கணவர் மேற்கொண்ட செயல்கள் செம்மை பெறவும், போரில் வெற்றி கிட்டவும் வரம் அருள வேண்டும் என்றும் திருமுருகனை ஒருமனமாக இறைஞ்சி நிற்கின்றனர். திருப்பரங்குன்றத்திலே நடைபெறும் வழிபாடு இது.

''அருவரைச் சேரத் தொழுநர்

கனவிற் றொட்டது கைபிழை யாகாது

நனவிற்சே எப்பநின் னளிபுனல் வையை

வரு புனலணிலென வரங் கொள்வோரும்

கருவ யிறுறுகெனக் கடம் பட வோரும்

செய்பொருள் வாய்க்கெனச் செவி சார்த்துவோரும்

ஐய மடுகென வருச்சிப போரும்'' (பரி. 8.102-108)

சங்க கால மகளிர் உயிரை விடவும், நாணத்தை விடவும் கற்புடைய மகளிராக விளங்கினர். மகளிர் பொழுதுபோக்காவும் மனம் மகிழ்ச்சியாகவும் விளையாடி மகிழ்ந்தனர். சங்க கால மகளிர் வீரமுடைய ஆண்மகனை மணந்தனர். சங்க காலத்தில் மகளிருக்கு இறை நம்பிக்கை மிகுந்திருந்தது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

பத்துப்பாட்டில் பாலை வருணனை - ச.பொ. சீனிவாசன்

சங்க அகப்பாடல்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைப் பாகுபாட்டில் அமைந்தவை. இவற்றில் நடுவண் திணையாகிய பாலைத்திணையைத் தவிர்த்த ஏனைய திணைகள், தனித்தனி நிலங்களைப் பெற்றவை, பாலையின் நிலம் பற்றித் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிடாத நிலையில் இளங்கோவடிகள் குறிஞ்சியும் முல்லையும் திரிந்த வறண்ட பகுதியினை (சிலம்பு. காடு. 64-66) பாலையின் நிலமாகக் குறிப்பிட்டுள்ளார். தனியான நில அமைப்பைப் பெறாத நிலையிலும் சங்க அகப்பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களே மிகுதியாகப் புலவர்களால் பாடப்பட்டுள்ளதிலிருந்து இதன் தனித்துவமான இலக்கியத் தன்மையை உணரலாம்.

பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நான்கு அகநூல்களில் பட்டினப்பாலை மட்டுமே பாலைத்திணையில் அமைந்தது. நெடுநல்வாடையை மறைமலையடிகள் பாலைத்திணை என்று குறிப்பிட்டுள்ள போதிலும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் முப்பொருளும் முல்லைத்திணை அமைப்பிலேயே உள்ளதெனலாம், பட்டினப்பாலையாகிய அகப்பாட்டோடு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி மலைபடுகடாம் ஆகிய புறப்பாடல்களில் காணலாகும். பாலை வருணைகளில் குறித்த செய்திகள் இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றன.

பாலைநில வருணனைப் பகுப்பாய்வு:-

பட்டினப் பாலையில் பாலைத்திணையின் உரிப்பொருளான பிரிதலும் பிரிதல் நிமித்தமும் செம்மையாக வருணிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஏனைய முதற்பொருளும் கருப்பொருளும் முற்றிலும் மாறுபட்டு, நெய்தல் திணையின் முதற்பொருளும் கருப்பொருளும் வருணிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு மாறாக புறப்பாட்டுகளான பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்கஞ்சி, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களிலும் பாலையின் முதற்பொருளும் கரும்பொருளும் செம்மையாக வருணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பத்துப்பாட்டில் அகம், புறம் இருதிணைகளிலும் இடம்பெறும் பாலைநில வருணனைகள், (1) முதற்பொருள் வருணனை (2) கருப்பெருள் வருணனை (3) உரிப்பொருள் வருணனை என்று பகுத்துரைக்கப்பட்டுள்ளன.

முதற்பொருள் வருணனை:-

நிலமும் பொழுதும் முதற்பொருள் என வழங்கப்படுவதால், பாலைநிலமும், அதன் சிறு, பெரும் பொழுதுகளும் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. பத்துப்பாட்டில் இடம்பெறும் பாலை நிலக் காட்சி வருணனைகள், குறிஞ்சியும், முல்லையும் முறைமையிற் திரிந்து பாலைநிலமாக உருக்கொள்ளும் என்ற இளங்கோவடிகளின் கூற்றினை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளன. இதனை அடியொற்றி, குறிஞ்சி நிலம் மட்டும் தனியே பாலையாதலும், முல்லை நிலம் மட்டும் தனியே பாலையதாலும் உண்டென்கிறார் இராசமாணிக்கனார் (பத்துப்பாட்டு ஆராய்ச்சி பக். 91) பத்துப்பாட்டில் குறிஞ்சி, முல்லை என்ற இரு நிலங்களின் திரிபாகவே புனையப்பட்டுள்ள பாலைநிலம், சுரம், கானம், காடு, கடறு, களர் செந்நிலம், சிலம்பு, குன்றம் போன்ற பல பெயர்களால் சுட்டப்பட்டுள்ளது. இப்பாலை நிலக் காட்சி அதன் வண்ணம், வெம்மை, பரல், உயிரினச் சுழற்சி, பயிரின வாட்டம், வறட்சி, எயினக் குடியிருப்புகள் ஆகிய வருணனைக் கூறுகளுடன் புனையப்பட்டுள்ளது.

பாலைநிலம், கடும் வெம்மையுடையதாகக் காட்டப்படுவது பட்டினப்பாலையில் தலைவனின் செலவழுங்கலுக்கான காரணியாகிவிடுகின்றது. ஆனால், புறநூல்களில் கடுமையாகக் காட்டப்பட்டுள்ள போதிலும், அவ்வழிச் செல்வாக்குப் பாதுகாப்பானதாகவும் நல்லுணவு கிட்டுவதாகவும் குறிப்பிடுவது ஆற்றுப்படையில் தலைவனின் வளம் சுட்டும் ஓர் உத்தியாகிவிடுகின்றது. தொல்காப்புயர், பாலையின் பெரும்பொழுதினை, இளவேனில், முதுவேனில் என்று தனித்தனியே குறிப்பிடாமல் வேனில் என்ற சொல்லாலேயே (தொல். அகம் 9) குறிப்பிட்டுள்ளார்.

பத்துப்பாட்டில் சுட்டப்படும் மூன்றிடங்களிலும் (சிறுபான் 9, பெரும்பாண் 3, மதுரைக் 313) வேனில் என்ற சொல்லாலேயே சுட்டப்பட்டுள்ளது. பாலையின் சிறுபொழுதாகிய நண்பகல் (பொரு. 46) காலை (சிறுபாண் 9-10) பகல் (பெரும்பான் 2, 111) என்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, பொழுது வருணனைகள், பாலையின் கடுமையையும் கொடுமையையும் தீவிரமாகக் காட்டுவதற்கும், அதன்மூலம் புகழ்ந்துரைக்கும் வள்ளலின் ஆட்சிக் சிறப்பினை விளக்குவதற்கும் உரிய கருவியாக புலவர்களுக்கு அமைந்துள்ளன.

கருப்பொருள் வருணனை:-

முதற் பொருட்களான நிலம், காலம் ஆகிய இரண்டின் தன்மைகளும் கருப்பொருட்களின் வழியே பிரதிபலிக்கப்படுகின்றன. தெய்வம், மக்கள், உணவு, தொழில், விலங்கு, பறவை, மரம், பூ ஊர், நீர் பறை, யாழ், பண் ஆகியவற்றைக் கருப்பொருட்களாகத் தொல்காப்பியரும் பிறரும் (தொல்.அகம்.20 நம்பி. அகம்.19) குறிப்பிட்டுள்ளனர்.

பாலைக்குரிய தெய்வம் கொற்றவை. இத்தெய்வம் பற்றிய செய்தி, பாலை வருணனையில் ஓரிடத்தில் மட்டுமே காடுறை கடவுள் (பொருநர் 52) என்று சுட்டப்பட்டுள்ள்து. இது தவிர, பெரும்பாணாற்றுப்படையிலும் (458-459), திருமுருகாற்றுப்படையிலும் (258), நெடுநல்வாடையிலும் (168) கொற்றவை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்காட்சிகள், கொற்றவையின் காடுறைவு, துணங்கைக் கூத்து, முருகனைப் பெற்ற செல்வி, போர்க்குரிய தெய்வம் போன்ற கூறுகளுடன் வருணிக்கப்பட்டுள்ளன. பாலை வருண€யில் ஓரிடத்தில் முருகன் பற்றிய குறிப்பும் (பெரும்பான். 75) உவமையாக வந்துள்ளது

இலக்கண நூலார் பாலை நில மக்களாக விடலை, காளை, மீளி, எயிற்றிர், எயினர், மறவர் போன்றோரைக் குறிப்பிட்டுள்ளனர். பத்துப்பாட்டில், எயினர், எயிற்றியர், கானவர் என்ற சிறப்புப் பெயர்களாலும், ஆறலைக் கள்வர், கொடியோர், வம்பலர், வன்சொல் இளைஞர் என்று பொதுப்பெயர்களாலும் பாலை நில மக்கள் சுட்டப்பட்டுள்ளனர். இம் மக்கள் வருணனை, அவர்களின் தொழிலோடும் செயலோடும் இயைவு பெற்று வந்துள்ளது. இலக்கண நூல்கள் பாலையின் உணவாக வழிப்பறித்தல், கொள்ளையடித்தல் மூலம் கிடைக்கும் பொருட்களையே குறிப்பிடுகின்றன. ஆனால் பாலை வருணனைப் பகுதியில் இன்புளி வெந்சோறு + ஆமான் சூட்டிறைச்சி, புல்லரிச்சோறு + வாடுஊன் பன்றி, முயல் இறைச்சி, நெல்லின், செவ்வவிழ்ச் சொன்றி + உடும்பின் வறை ஆகிய இனிய உணவு வகைகளைப் பாலை நில மக்கள் விருந்தினர்களுக்குப் படைத்த செய்தி பேசப்பட்டுள்ளது. இவை, பாலையின் மேட்டு நிலங்களில் விவசாயம் நடைபெற்றதனை உறுதிப்படுத்துகின்றன. மேலும், ஆற்றுப்படை நூல்களில் மட்டுமே உணவு வருணனைகள் மிகுதியாக இடம்பெறுவது, வள்ளல்களின் வளம் சுட்டும் நோக்கமுடையது.

ஆறலைக்களவே பாலையின் முக்கியத் தொழிலாக எடுத்து மொழியப்படுகின்ற போதிலும் (1) வேட்டையாடுதல் (2) பெருவழிக் கவலைக் காவல் (3) போர்த் தொழில் (4) புல்லரிச எடுத்தல் போன்ற வேறுபல தொழில்களும் பத்துப்பாட்டின் பாலை வருணனையில் காட்சியுருப் பெற்று வந்துள்ளன. இவற்றுள் ஆடவர், ஆறலைக்களவு, வேட்டையாடுதல், கவலைக்காவல், போர் செய்தல் போன்ற தொழிலையும், பெண்டிர், புல்லரிசி எடுத்தல், உணவடுதல் தொழிலையும் செய்துள்ளனர்.

பாலை நில விலங்கின வருணனையில் பாலையின் விலங்குகளும் பறவைகளும் இடம்பெற்றள்ளன. இப்பகுதியில், யானை, மான், எய்ப்பன்றி, நமலி, கழுதை, முயல், அணில், எலி, உடும்பு, பாம்பு, போன்ற விலங்குகள் வருணனை செய்யப்பட்டுள்ளன. இவ்விலங்குகளின் சுழற்சி, பாலை நிலத்தின் வறட்சியைப் படம்பிடிப்பது போல் விளக்கப்பட்டுள்ளது. பாலை நிலத்தில் நீரின்மையால் பறவைகள் அருகிலேயே காணப்படும் என்பர். இதனைப் பத்துப்பாட்டில் இடம்பெறும் பாலைக்காட்சியிலும் காண முடிகின்றது. பாலையில் பருந்து, குயில் என்றும் இரண்டு பறவைகள் மட்டுமே ஓரோரிடத்தில் (பெரும் 117 - 118) காட்சி பெற்று வந்துள்ளன. ஓன்னாத் தெவ்வரைக் குத்தி மாய்த்த பிணத்தினைத் தின்னவரும் பறவையாக பருந்துச் சுட்டப்பட்டுள்ளது. கொல்கரை நறும் பொழிவில் பூவினைக் குடைந்து உதிர்க்கும் குயில், கான்போர் வியக்கும் காட்சியோடு இணைவு பெற்றுள்ளது.

தாவர வருணனையில் பாலை நில மரங்கள், புற்கள், கொடிகள் ஆகியவை காட்சி பெற்றுள்ளன. இக்காட்சிகளில், மராஅமரம், ஈந்தமரம், பலா, மூங்கில், இலவம், விள்வம், தேக்கு, கடுமரம் அகத்தி, அரக்கு, தேமா ஆகிய மரங்களும் ஊகம்புல், நெல், புதல், நுண்புல் ஆகிய புற்களும், மிளகு, தாமரை ஆகிய கொடிகளும் வருணனையாக்கம் பெற்றுள்ளன. இவற்றில் பலா, அகத்தி, இலவம், அரக்கு, தேமா, தாமரை போன்றவை உவமையாக வந்தவை. இத்தாவர வருணனையில் இடம்பெறும் மரங்களும், புற்களும் கொடிகளும் பல்வேறு உயிரினங்களின் இயங்குகளப் பின்னணியாக அமைவதோடு பாலை நிலத்தின் இயல்பினைக் காட்டும் கருவிகளாகவும் அமைந்துள்ளன.

பாலைத்திணையின் யாழ், பறை, பண் போன்றவற்றை முறையே பாலையாழ், துடிப்பறை, பாலைப்பண் (பஞ்சுமரம்) என நம்பியகப்பொருள் (அகம். 21) குறிப்பிட்டுள்ளது. பத்துப்பாட்டின் பாலை வருணனையில் பாலையாழும் (பொருநா. 4-24), சிறுபாணா, 34 - 37), துடி (பெரும்பாண 234), தட்டை (மதுரைக். 304 -305) ஆகிய பறைகளும் பாலைப்பண்ணும் (பொருநர். 21-22) சிறுபாண. 36-37, (பெரும்பாண. 179-180) இடம்பெற்றுள்ளன. பாலையின் ஊர்கள், வில்லுடை வைப்பு, கொடுவில் எயினக் குறும்பு என்றும் நீர்நிலைகள், நெடுங்கிணற்று வல்ஊற்று, அகழ்சூல் பயம்பு எனவும் காட்டப்பெற்றுள்ளன.

உரிப்பொருள் வருணனை:-

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலைத்திணையின் உரிப்பொருளாகும், பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை மட்டுமே பாலையின் உரிப்பொருள் அமைவினைப் பேசுகின்றது. இந்நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் புதுமை படைத்துள்ளார். 301 அடிகளில் விரிந்து கிடக்கும் நூலில் நான்கு அடிகளில் (219-220. 300-301) மட்டுமே உரிப்பொருளை வருணித்துள்ளார். மீதமுள்ள 218 அடிகளில் (பட்டினப் 1-218) காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பினையும் 79 அடிகளில் (221-229) கரிகாலனின் வெற்றிச் சிறப்பினையும் பாடியுள்ளார். பட்டினப்பாலையில் பாலையின் கருப்பொருள் பற்றி ஓரிடத்தில் கூடச் சொல்லாத உருத்திருங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் பாலையின் முதற்பொருளையும், கருப்பொருளையும் ஏறத்தாழ 73 அடிகளில் (39-41, 23-24, 67-133, 179-180) விரிவாகப் பேசியுள்ளமை அவருடைய புதுமை முயற்சியின் வெளிப்பாடெனலாம். உரிப்பொருள் வருணனையில் தலைவனின் செலவழுங்கலுக்குக் கானத்தின் வெம்பையும், தலைவியின் தடமென்தோளின் தண்மையும் காரணங்களாகச் சுட்டப்பட்டுள்ளன.

பாலைநிலக் காட்சிப் புனைவின் நோக்கம்:-

கவித்துவமிக்க காட்சிகளைப் புனையும் ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொரு உயிரினையும் பொருளினையும் புனைவதில் ஓர் உள்நோக்கம் உண்டு. இந்நோக்கமும் கவித்துவமும் இயற்கையானதாகவும், சமூகத்தின் பிரதிபலிபாகவும் அமையும்போது புனையப்பட்ட பாட்டு சாகாவரம் பெற்றுவிடுகிறது. பத்துப்பாட்டின் பாலை நிலக்காட்சிப் புனைவின் நோக்கமும் கவித்துவமும் சமூகப் பிரதிபலிப்பும் கீழ்க்கண்டவாறு நிரல்படுத்தப்படுகின்றன.

1) பாலைத்திணை பற்றிய வருணனை, பத்துப்பாட்டின் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய நான்கு ஆற்றுப்படை நூல்களிலும் வள்ளல்கள் புகழ்ந்துரைக்கும் விதமாக இடம்பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியும் பாண்டியன் நெடுஞ்செழியனின் ஐந்நிலச் சிறப்புக் கூறி அவனுக்கு நிலையாமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. பட்டினப்பாலை அகநூலானாலும் அதிலும் கரிகாலனின் சிறப்பே முன்னிறுத்தப்பட்டுள்ளது.

2) பத்துப்பாட்டில் அகத்தினை மரபுகளும் புறத்திணை மரபுகளும் ஒன்றையொன்று பின்னிப்பிணைந்து காணப்படுவதாலும், பெரும்பான்மையான நூல்கள் வள்ளல்களை மன்னர்களைப் புகழ்ந்துரைப்பதாலும் இவற்றில் ஐந்நிலங்களின் வளம் சுட்டுவது தவிர்க்க இயலாத கூறாக அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலை நிலத்தின் வளம் சுட்டுவது பாலை வருணனையின் முதன்மையான நோக்கமாக உள்ளது.

3) எல்லாப் புலவர்களும் பாலை நிலத்தைக் கடுமையான வறட்சியுடன் காட்டினாலும் ஆற்றுப்படை பாடிய புலவர்கள் மட்டும் பாலை நிலத்தின் வறட்சியோடு அங்கு கிடைக்கும் உணவு வகைகளையும் அம்மக்களின் விருந்தோம்பல் சிறப்பினையும் வருணித்திருப்பது ஆற்றுப்படை துறைப்பொருளோடும் வள்ளலின் ஆட்சிச் சிறப்போடும் புலவர்களுக்கிருந்த நோக்கத்தினைப் புலப்படுத்துவதாகும்.

4) பாலை வருணனையில் அர்த்தம் சொல்வோரை அலறத் தாக்கிக் கைப்பொருள் வெளவும் களவு ஏர் வாழ்க்கைக் கொடியோரும், இடுக்கண் செய்யாது இயங்குநரைப் பேணும் தகைமை உடையவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இக்காட்சிகளும் வள்ளல்களைச் சிறப்பிக்கும் புலவர்களின் உள்நோக்கங்களைப் பிரதிபலித்துள்ளன.

5. முதற்பொருள்களான நிலம், பொழுது ஆகிய இயற்கைப் பின்னணியும் கருப்பொருள்களான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இயங்குகளப் பின்னணியும் புலவர்களுக்குப் பாலை நிலத்தின் இயல்பினைக் காட்டும் கருவியாக அமைந்துள்ளன.

6) பத்துப்பாட்டில் பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை என்னும் இரண்டு நூல்களைப் படைத்துள்ள கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலையில் பாலைத்தினையின் உரிப்பொருளை மட்டும் வருணித்து, முதற்பொருளையும் கருப்பொருளையும் நெய்தல் திணைப் பொருளாய்யாத்துள்ளார். புறப்பொருளை - ஆற்றுப்படைப் பொருளைப் பாட வந்த அவரே பெரும்பாணாற்றுப்படையில், அகத்திணையாகிய பாலையின் முதற்பொருளையும், கருப்பொருளையும் வருணித்து, இலக்கிய மரபிலும், வள்ளல்களைப் புகழும் வாழ்த்து மரபிலும் புதுமை படைத்து தனது தனித்தன்மையை நிலைநாட்டியுள்ளார்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

சங்க இலக்கியத்தில் போரும் அமைதியும் - இரா. சிங்கராஜா

இயற்கைத் தன்மை:-

சங்க காலத்தை வீரயுகக்காலம் எனக் குறிப்பிடுகின்றார் க. கைலாசபதி (Tamil Heroic Poetry. p.4), ஒருவனோடு ஒருவன் போரிடுதலும் அழிதலும் உலகத்து இயற்கை என்கின்றது புறநானூறு.

''ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை'' (புறம்.70)

சங்ககால வீரர்கள் என்றும் போர் வேட்கை உடையவர்களாய் இருந்தனர். ''போரெனிற் புகலும் புனைகழல் மறவர்'' (புறம்.31) பொதுவாகப் போர் என்பது இரு வேந்தர்களுக்கிடையே நடைபெறும் செயலாகும். மற்போர், வாட்போர் என இரு தனிமனிதர்களுக்கிடையே நடைபெறுவதை அது குறிப்பதில்லை.

போர் வகை:

வெட்சிப்போர், வஞ்சிப்போர், உழிஞைப்போர், தும்பைப்போர் என்று நான்கு வகையாகப் போர் மரபுகளைப் பகுத்தார் தொல்காப்பியர். போரில் படைமறவர்கள் அழிவர்; யானை, குதிரை, தேர் விளைநிலம், அரண் ஆகியவற்றோடு மக்களும் அழிவர்; வேந்தர்களும் மடிவர். சேரமான் நெடுஞ்சேரலாதனும், சோழன் பெருவிறற்கிள்ளியும் போரிட்டு மடிந்ததைப் புறநானூறு கூறுகின்றது.

''எடுத்தேறி யனந்தற் பறைச்சீர் தூங்கப்

பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்து

அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்

தாமாய்ந் தனரே'' (புறம்.62)

புதல்வன் கடமை:

போரிடுதலே புதல்வன் கடமை என்பதை,

''ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே'' (புறம்.312)

''தோன்றுவன் மாதோ போர்களத் தானே'' (புறம்.86)

எனவும் வரும் பாடற்பகுதிகள் உணர்த்துகின்றன.

மறக்குடி மகளிர்:

தனக்குத் துணையாய் இருக்க வேண்டிய ஒரே மகனையும் போருக்கனுப்பிய தாயின் மறப்பண்பை,

''ஒரு மகன் அல்லது இல்லோள்

செருமுகம் நோக்கிச் செல்கென'' (புறம்.279)

விடுத்தாள் எனப் பாடினார் ஒக்கூர் மாசாத்தியார். தன் மகன் புறப்புண்பட்டு மாய்ந்தான் எனக் கேட்ட ஒரு தாய்,

''மண்டு அமர்க்கு உடைந்தனனாயின் உண்டஎன்

முலையறுத் திடுவென் யான்எனச் சினைஇ'' (புறம்.278)

என்று சூளுரைத்தாள்.

விழுமங்கள்:

மறத்தினும் அறம் திறம்பாதவர் தமிழர் என்னும் உண்மையை,

''வேந்துவிடு முனைஞர் வேற்றுபுலக் களவின்

ஆதந்து ஓம்பல் மேவற் றாகும்'' (தொல்.1003)

எனவும்,

''ஆவும் ஆணியற் பார்ப்பன மாக்களும்

பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்

தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போற் புதல்வற் பெறாஅ தீரும்

எம்அம்பு கடிவிடுதூஉம் நும்மரண் சேர்மின் (புறம்.9)

எனவும் வரும் சான்றுகள் உணர்த்தும்.

போரின் விளைவுகள்:

போரில் மடிந்துபோன சேரமானுடைய நாட்டில் தோன்றிய அவலத்தைக் கழாத்தலையார் சுட்டியுள்ளார். ''முழவு மண் (மெழுகு) இடுதலை மறந்தது. பெரிய பானை கவிழ்ந்து வெண்ணையை மறந்தது. சுற்றம் தேறல் மறந்தது; உழவர் ஓசையை மறந்தனர்; சிற்றூர், விழாவை மறந்தது (புறம்.65) என்கின்றார். எழினி என்ற அரசன் தகடூரில் நிகழ்ந்த போரில் மாண்டபோது அரிசில்கிழார். ''தாயை இழந்த குழந்தையைப் போல அவனுடைய சுற்றம் வருந்தியது; உலகம் இடும்பைகூர் நெஞ்சமொடு வருந்தியது'' (புறம்230) என்று பாடினார். வீரர்கள் மாண்டால் அவ்வீரர்தம் மனைவிமார்கள் தங்கள் கூந்தலைக் களைந்துவிட்டுக் கைம்மைக்கோலம் பூணுவர். மகளிர் களைந்த தலைமுடியைக் கயிறாகத் திரிந்து, பழையன் மாறனின் காவல் மரத்தை வெட்டித் துண்டுகளாக்கி வண்டியில் ஏற்றி யானைகளைப் பூட்டி ஒட்டிவந்தான். வேட்டுவன் எனப் பரணர் பாடியுள்ளார். (பதிற்.44).

கரிகாலன், பகைவர் ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்தினான் (புறம்.7) வளமிக்க வயல்களை அழித்தான் என உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார் (பட்டினப்.240-245) கழுதை ஏர் பூட்டி விளைந்த நெல் வயல்களை அழித்து, கொள்ளும் கவடியும் விதைத்துவிட்டுச் செங்குட்டுவன் திரும்பினான் என்ற செய்தியையும் தெரிகின்றோம் (சிலம்பு, நீர்ப்படை, 226-230) முதுகுடுமிப் பெருவழுதி பகைவருடைய தேர்வழங்கு தெருக்களைக் கழுதை ஏர்பூட்டி உழுதான். புள்ளினங்கள் மேயும்படியான விளைந்த வயல்களைத் தேர்களை விட்டு அழித்தான். நீர்நிலைகளை யானைப் படையினை விடுத்துக் கலக்கிச் சேறாக்கினான் (புறம்.15). இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பகைவர்களுடைய நெல்விளை கழனிகளைக் கொள்ளையடித்தான். பனை மரத்தை விறகுக்காக வெட்டினான். மாந்தர் நீராடவும் உயிரினங்கள் பருகவும் உதவுகின்ற பொய்கைகளில் யானைகளைப் படியவைத்துச் சேறாக்கினான்; ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினான் (புறம்.16). இச்செய்திகள் போரினால் ஏற்படும் பொருளாதாரச் சீரழிவுகளையும் இன்னபிற கொடுமைகளையும் உணர்த்துகின்றன. இத்தகைய கொடிய தீமைகளை உளங்கொண்ட சான்றோர் அமைதி ஏற்படுத்த முயன்றனர்.

அமைதி முயற்சி:

அதிகாரவர்க்கத்தினர் முனைப்பு, போருக்குக் காரணமாக இருந்தாலும் சான்றோரும் பெண்களும் குழந்தைகளும் முதியோரும் தொழிலாளர்களும் அமைதியை நாடிச்செல்லும் இயல்பினர். சான்றோர் போரைத் தவிர்க்கப் பல்லாற்றாலும் முயன்றார். கோப்பெருஞ்சோழன் தம் மக்களோடு போரிட முயன்றபொழுது எயிற்றியனார் அவனை அமைதிப்படுத்தினார் என அறிய முடிகின்றது (புறம்.213). பாரி வள்ளலுக்கும் மூவேந்தருக்கும் நிகழ்ந்த போரில் அமைதி ஏற்படுத்த முயன்ற கபிலர் தோற்றார் (புறம்.110). அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் இடையே தூது சென்று அமைதியை ஏற்படுத்தி வென்றார் ஒளவையார் (புறம்.95).

நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் பகை உண்டாயிற்று. அதனைக் கண்ட புலவர் கோவூர்கிழார் இருவருக்கும் அறிவுரை வழங்கினார். உங்கள் இருவருடைய மாலையும் ஆத்திமாலையாகும்; நம்முள் ஒருவர் தோற்பினும் சோழர் தோல்வி எய்தினர் என்றே குடிப்பெயரால் பழிவரும்; இருவரும் வெற்றியடைதல் இயற்கையுமன்று; ஆதலால் உங்கள் மாறுபாட்டினை விடுதல் உமக்கு நல்லது என்றார் (புறம்.45), மன்னர்கள் பகை மறந்தனர்; சோழநாடு அமைதிப்பூங்காவாயிற்று. சோழர்களுக்குள் உட்பகை ஒழிந்து அவர்கள் சிறப்புற்றனர். அதனால் சேர, பாண்டியரின் குடைகள் சோழர் குடையினும் தாழப்பறந்தன எனக் குறிப்பிடுகின்றார் கோவூர்கிழார்:

''சிறப்புடைய மரபிற் பொருளும் இன்பமும்

அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல

இருகுடை பின்பட வோங்கிய ஒருகுடை

உருகெழு மரபின் நிவந்தசேண் விளங்க'' (புறம்.30)

மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சி, காண்டற்கரிய காட்சியாக இருந்தது என்றார் காரிக்கண்ணனார்.

''நல்ல போலவும் நயவ போலவும்

தொல்லோர் சென்ற நெறிய போலவும்

காதல் நெஞ்சில் நும்இடைபுகல் கலமரும்

ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது

இன்றே போல்க நும் புணர்ச்சி'' (புறம்.58)

உக்கிரபெருவழுதி, மாரிவெண்கோ, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சியைக் கண்ட ஒளவையார்,

''ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்

முத்தீப் புரையக் காண்டக இருந்த

கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்'' (புறம்.367) என்று பாராட்டினார்.

சிலப்பதிகாரத்தில் அமைதியை வேண்டிச் சேரன் செங்குட்டுவனுக்கு அறிவுரை கூறினான் மாடலமறையவன். தோல்வியுற்ற ஆரிய அரசர்களைப் பிடித்து அவர்களுடைய தலையில் கல்லை ஏற்றி வருதல் பெருமைக்கூரிய செயலன்று என்று சோழனும் பாண்டியனும் சொல்லக் கேட்டதாக நீலன் கூறினான். அதைக் கேட்டுச் சினங்கொண்ட செங்குட்டுவன் அவர்கள் மீது போர் தொடுக்க நினைத்தான். அப்பொழுது மாடலன் எழுந்து ''மறக்கள வேள்வி வேண்டாம்; அறக்கள வேள்வி செய்வாயாக'' (சிலம்பு. நடுக்கல்.132-133) என்று சொல் அமைதிப்படுத்தினான்.

முடிவுகள்:

தொல்காப்பியப் புறத்திணையியல், தமிழர் போரியல் (Warfare) பற்றியதாகும். வீரயுகப் பாடல்கள் வெறும் வெற்றிகளை மட்டும் பாடாமல், போரினால் ஏற்பட்ட அழிவுகளையும், அவலங்களையும் சுட்டியுள்ளன. சங்க காலத்தில் போரினால் வரும் தீமைகளும் உணரப்பட்டன.

போரைத் தவிர்க்கவேண்டி அமைதி முயற்சியில் ஈடுபட்ட ஒளவையார், கபிலர், எயிற்றியனார், கோவூர்கிழார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அத்தமிழ்ச் சான்றோர்கள் வேந்தர்கள் புறப்பகையும் உட்பகையும் இன்றி அமைதியாக நட்புறவுடன் வாழ வழிகூறினர்; முயன்றனர். இக்காலத்தில் வேண்டப்படும் உலக அமைதிக்கு அச்சான்றோர்கள் வித்திட்டுச் சென்றுள்ளனர் என்பது செம்மையான கருதுகோளாகும்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

தொல்காப்பியம், நம்பியகப் பொருள் கூறும் திணைப்பொருள்கள் - அ. செல்வக்குமாரி

தமிழ் இலக்கண உலகில் அகப்பொருள் இலக்கணத்தை முழுமையாகக் கூறும் நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். இத் தொல்காப்பியத்திலும் அதன் பின்னர் வந்த அகப்பொருள் இலக்கண நூலான நம்பியகம் பொருளிலும் உள்ள அகத்திணையியலில் கூறப்பட்டுள்ள ஐந்திணைப்பொருட்களான முதல், கரு, உரி என்ற மூன்று பொருள்கள் பற்றிய செய்திகளை எடுத்துக்காட்டி ஒப்பீட்டு நிலையில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

திணைப்பொருள்கள்:

தொல்காப்பியம் ஐந்திணைகளுக்குரிய பொருள்களாக முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் (தொல் பொருள் 3) என்ற மூன்றினைக் கூறுகின்றது. இதைப் பின்பற்றியே நம்பியகப் பொருளும் ஐந்திணைப்பொருள்களாக இம்மூன்றையும் கூறுகின்றது. (நம்பி.7).

முதற்பொருள்:

மேற்கூறிய மூன்று திணைப்பொருள்களுள் முதற்பொருள் என்பது நிலம், பொழுது என்ற இருவகையினை இயல்பாகக் கொண்டுள்ளது (தொல், பொருள் 4.19) எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. நம்பியகப்பொருளும் முதற்பொருளாக இவ்விரண்டையும் கூறுகின்றது. (நம்பி.8) தொல்காப்பியமும், நம்பியகப் பொருளும் மேற்கூறியவாறு ஒன்றுபட்ட கருத்துக்களுடன் காணப்பட்டாலும் ஒரு சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன என்பதை பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்.

நிலம்:

முதற்பொருள்களுள் ஒன்றாகிய நிலம் பற்றித் தொல்காப்பியம், மாயோன் மேய காடுறை உலகமும் சேயேன் மேய மை வரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச், சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (தொல்.பொருள் - 5) எனக் கூறுகின்றது. தொல்காப்பியம் காடு, வரை, தீம்புணல், பெருமணல் என நிலம் பற்றி மட்டும் இங்கு கூறாது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற திணைகள் பற்றியும் கூறுகிறது. காரணம் முன்பு கூறப்படும் ஏழு திணைகளுள் நிலம் பெறுவன ''நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய'' எனக் கூறுப்பட்டுள்ளதே தவிர அத்திணைகளுக்குரிய பெயர்கள் சுட்டப்படவில்லை. எனவே இங்கு நிலங்கள் பற்றிக் கூறுகையில் அந்நிலங்களுக்குரிய திணைப்பெயர்களும் சுட்டப்பட்டன எனலாம். மேலும் பாலைத் திணைக்கு நிலமில்லை என்று முற்கூறப்பட்டதால் பெயரும் இங்கு சுட்டப்படவில்லை எனக் கருதலாம்.

தொல்காப்பியம் முதற்பொருளாகிய நிலத்தை மட்டுமல்லாது கருப்பொருள்களுள் ஒன்றாகிய தெய்வம் பற்றியும் சுட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் என்னவெனில் தொல்காப்பியம் கருப்பொருள்கள் பற்றிக் கூறுகையில் பொதுவாகக் கூறியுள்ளதே தவிர ஒவ்வொரு திணைக்குரிய கருப்பொருள்கள் பற்றிக் கூறவில்லை. எனவே கருப்பொருள்களுள் தெய்வம் முதன்மையாகக் கருதப்படுவதால் இங்கு நிலங்களைப் பற்றிக் கூறுகையில் அந்நிலங்களைக் காக்கும் தெய்வங்கள் பற்றியும் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது எனலாம். மேலும் பாலை நிலம் இன்னதென்று சுட்டப்படாமையால் தெய்வமும் சுட்டப்படவில்லை எனக் கருத இடமுண்டு.

நம்பியகப்பொருள் பற்றிக் கூறுகையில் வரை, சுரம், புறவு, பழனம், திரை அவற்றின் நிமித்தம் எனப் பத்து வகைப்படும் என்று கூறுகின்றது (நம்பி 9). இவ்வாறு நிலம் பற்றிக் கூறுவதற்கு முன்பே நம்பியகப் பொருள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி. 6) என ஐந்திணைகளுக்குரிய பெயர்களைக் கூறியுள்ளமையால் தொல்காப்பியம் போன்று இங்கு திணைப்பெயர்கள் சுட்டப்படவில்லை எனலாம்.

தொல்காப்பியர் காடு, தீம்புனல், பெருமணல் என்று கூறியுள்ளதை நாற்கவிராசர் புறவு, பழனம், திரை என்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளார். காலத்திற்கு ஏற்ப சொற்களும் மாறுபட்டுள்ளது எனலாம். ஆனால் நம்பியகப் பொருள் பாலைத் திணைக்குறிய நிலமாகச் சுரத்தைக் கூறியுள்ளது. பத்துப்பாட்டுள் ''பாலை சான்ற சுரஞ் சார்ந்ததொரு சார்'' (மதுரைக் காஞ்சி) எனக் கூறியுள்ளமையாலும் பிறவற்றாலும் இவ்வாறு நம்பியகப் பொருள் பாலைத்திணைக்குரிய நிலமாக சுரத்தைக் குறிப்பிட்டுள்ளது எனலாம்.

பொழுதுகள்:

தொல்காப்பியம், காரும், மாலையும் முல்லை (தொல். பொருள்.6) கூதிரும் யாமமும் முன்பனியும் குறிஞ்சி (தொல். பொருள். 7,8), வைகறை விடியல் மருதம் (தொல். பொருள். 9) ஏற்பாடு நெய்தல் (தொல். பொருள். 10), நண்பகல், வேனில் பின்பனி பாலை (தொல். பொருள். 11) என ஒவ்வொரு திணைக்குரிய பெரும்பொழுது சிறுபொழுதுகள் பற்றிக் கூறுகின்றது. நம்பியகப்பொருள் பெரும்பொழுதுகள் ஆறு (நம்பி.11) என்றும், சிறுபொழுதுகள் ஐந்து (நம்பி 12) என்றும் வகைப்படுத்திக் கூறிவிட்டுப் பின்பு தொல்காப்பியம் போன்று குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி 13-17) என ஒவ்வொரு திணைக்குரிய பெரும் பொழுது, சிறுபொழுது பற்றிக் கூறுகின்றது.

தொல்காப்பியர் சிறுபொழுது ஆறு எனக் கொண்டதை நாற்கவிராசர் ஐந்தாகக் கொள்கின்றார். வைகறை விடியல் என்று தொல்காப்பியம் தனியாகக் கூறியுள்ளதை நாற்கவிராசர் வைகறை என்பது விடியல் காலத்தைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். தொல்காப்பியம் மருதம், நெய்தல் ஆகிய இரண்டு திணைகளுக்கும் உரிய பெரும் பொழுதுகள் பற்றி நூற்பாவின் வழி சுட்டவில்லை என்றாலும் இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் அறுவகைப் பெரும்பொழுதுகளும் இவ்விரு திணைகளுக்கும் உரியன (தொல். பொருள் பக் 11) எனக் கூறியுள்ளார். இவ்வுரையாசிரியரின் கருத்துப்படி நம்பியகப்பொருள் இவ்விரு திணைகளுக்கும் ஆறு பெரும்பொழுதுகளுக்கும் உரியன (நம்பி, 18) என நூற்பாவில் கூறி விளக்குகின்றது. இவ்வாற முதற்பொருள் பற்றிய கருத்துக்களில் இரு நூல்களும் ஒரு சிலவற்றில் வேறுபடுகின்றன.

கருப்பொருள்கள்:

தொல்காப்பியம் ஐந்திணைக்குரிய கருப்பொருள்களாகத் தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, செய்தி, யாழ் போன்ற எட்டு வகைகளோடு ''அவ்வகை பிறவும் கருவென மொழிப'' (தொல். பொருள் 20) எனக் கூறுகின்றது. தொல்காப்பியர் கூறிய ''அவ்வகை பிறவும்'' என்பதற்கு, அத்தன்மைய பிறவும் கருப்பொருள் என்று கூறுவதோடு, எந்நில மருங்கிற் பூவும், புள்ளும், அந்நிலம் பொழுதோடு வாரா வாயினும் (தொல். பொருள்.21) எனக் கூறியுள்ளதால் நிலமும் காலமும் பற்றி வருவன கருப்பொருள் என்று உணர்க என்று இயம்பூணார் தம் உரையில் கூறுகின்றார்.

நச்சினார்க்கினியர், இன்னும் பிறவு மென்றதனாலே இங்கு கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. அவை பெயரும் வினையும் (தொல். பொருள்.22) என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதோடு பிறவுமென்றதனால் கொள்வன சிறுபான்மை திரிவுபடுதலின் பிறவுமென்று அடக்கினார் என்றும் கூறுகின்றார். நம்பியகப்பொருள் பிற என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறிய கருத்துக்களைத் தழுவி ஐந்திணைக்குரிய கருப்பொருள்களாக ஆரணங்கு, உயர்ந்தோர், உயர்ந்தோரல்லாதவர், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் எனப் பதினான்கினைக் கூறுகின்றது. மேலும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி 20 - 24) என ஒவ்வொரு திணைக்குரிய கருப்பொருள்களையும் தனித்தனியாக நூற்பாக்களின் மூலம் விளக்கிச் செல்கின்றது. இவ்வாறு கருப்பொருள்கள் பற்றிய கருத்து வளர்ச்சியை நம்பியகப்பொருளில் காணலாம்.

உரிப்பொருள்கள்:

தொல்காப்பியம் திணைக்குரிய உரிப்பொருள்கள் பற்றிக் கூறுகையில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங்காலைத் திணைக்குரிப்பொருளே எனக் கூறுகின்றது. இதற்கு இளம்பூரணர் ஏனைய மொழிந்த பொருளோடொன்ற வைத்தல் (மரபு.110) என்னும் தந்திர உத்தியால் புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முல்லைக்கும், இரங்கல் என்பது நெய்தலுக்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரியதாகவும் சிறுபான்மை எல்லாப் பொருளும் எல்லாத் திணைக்கும் உரியதாகவும் கொள்ளப்படும் என்று கூறுகின்றார் (தொல். பொருள், பக். 16). இக்கருத்து உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல்.பொருள். 15) என்ற தொல்காப்பியரின் கருத்திற்கு மாறுபட்டதாக உள்ளது. இந்நூற்பாவில் தேருங்காலை எனக் கூறியிருப்பதால் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்கு பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தலுக்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வவ்நிமித்தங்களுக்கும் உரியதென்று ஆராய்ந்துணர வேண்டும் என நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.

தொல்காப்பியக் கருத்தைப் பின்பற்றி நம்பியகப்பொருளும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கள் அவற்றின் நிமித்தம் என உரிப்பொருள்கள் பத்து வகைப்படும் எனறு கூறுகின்றது (நம்பி 25). உரிப்பொருள்களின் வைப்பு முறையில் மாற்றமுள்ளதே தவிர வேறு மாற்றங்கள் இல்லை எனினும், முத்திறப் பொருளும் தத்தம் திணையோடு, மரபின் வராது மயங்கலும் உரிய (நம்பி 251) என நம்பியகப் பொருள் கூறியிருப்பதன் மூலம் தொல்காப்பியரின் உரிப்பொருள் மயங்கி வராது என்ற கருத்தோடு மாறுபட்டிருந்தாலும் இளம்பூரணர் கூறிய கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

தொல்காப்பியம், நம்பியகப் பொருள் கூறியுள்ள திணைப்பொருள்களின் கருத்துக்களை ஒப்பு நோக்குகையில் முதல் நூலாகிய தொல்காப்பியத்தின் கருத்துக்களை நம்பிகப்பொருள் பின்பற்றியிருந்தாலும் ஒரு சில இடங்களில் மாறுபட்டும் காணப்படுகின்றது. மேலும் தொல்காப்பியர் கருத்துக்களை மட்டுமல்லாது தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்துக்களையும் நம்பியகப் பொருள் பின்பற்றியுள்ளது என்பதை அறியமுடிகிறது.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

சங்க மகளிரின் கற்பும் கைம்மையும் - முனைவர் இரா. ரெங்கம்மாள்

தமிழ் நிலம் தொன்மையானது. தமிழ்மொழி தொன்மைமிக்கது. மூவாயிரம் ஆண்டுப் பழமைச் சிறப்புடையது சங்க இலக்கியம். இந்திய இலக்கியங்களில் தனித்தன்மை வாய்ந்தன என்பதை எடுத்து விளக்குவன சங்க இலக்கியங்கள். உலக இலக்கியங்களோடு வைத்து எண்ணத்தக்க செவ்வியல் இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள். தமிழை உயர்தனிச் செம்மொழி என உலகுக்கு உணர்த்துவன சங்க இலக்கியங்கள். சங்ககால மகளிர் கல்வி, ஞானம் முதலியவற்றில் சிறந்து விளங்கினர். கவிபாடும் வல்லமை பெற்றுத் திகழ்ந்தனர். புலமைமுற்றிய பூவையராகப் பல பெண்கள் திகழ்ந்திருக்கின்றனர். அத்தகைய சங்க மகளிரின் கற்பும் கைம்மையும் குறித்து ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க இலக்கியத்தில் மகளிர்:

சங்க இலக்கியத்தில் கற்பு என்பது ஆணுக்கு அடங்கி அவன் சொற்படி நடக்கும் அடக்கக் கோட்பாடாக அமைந்தமையையும், கைம்மை என்பது பெண்ணுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதையும் காணலாம். அச்சம், நாணம், மடம் ஆகிய இப்பண்புகள் பெண்ணுக்குச் சமூக எதிர்ப்பார்ப்புக்களாக விளங்கின.

திருமண முறையும் குடும்பம்:

குடும்பம் என்பது சமூகத்தில் ஒரு சிறிய அலகாகும். சங்க மகளிரின் திருமண முறை பற்றிச் சங்க இலக்கிய அகநானூற்றுப் பாடல்களில் தெளிவான செய்திகள் காணப்படுகின்றன (அகம்.86,136) சங்க இலக்கியக் குடும்ப அமைப்பு தனிக்குடும்பம் வகையைச் சார்ந்ததாகும். திருமணம் என்பது பாலின நிறைவுக்கு அப்பாற்பட்ட குடும்ப வாழ்க்கையைக் குறிப்பது என்ற கருத்து சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றது. உடன்போக்கு, களவு மணம் ஆகியவற்றில் மட்டுமே பெண் தன் உரிமையை நிலைநாட்டியமை புலப்படுகின்றது. திருமணத்திற்குப்பின் பெண்கள் பிறந்த வீட்டில் உடனுறைந்து வாழவில்லை. சங்க இலக்கிய மகளிர் கணவரைப் பேணும் பண்புடையவர்களாகக் காணப்படுகின்றனர்.

''கற்பு'' பண்பாட்டு விளக்கம்:

''தமிழ்ச்சமுதாயத்தின் தொடர்வரலாற்றில் பெண் நான்கு நிலைகளில் விளங்குகிறாள்.'' 1. கன்னி, 2. குடும்பத் தலைவி 3. விதவை, 4. பரத்தமை என்பனவாகும். முற்கூறப்பட்ட நான்கு பிரிவினரும் சங்க இலக்கியத்தில் காட்டப்படுகின்றனர். பெண்ணை நான்கு நிலைகளிலும் வேறுவேறாகப் பிரித்துப் பார்க்க வைப்பது கற்பு என்னும் கோட்பாடு தான். தந்தைவழிச் சமுதாயம் கற்புக் கோட்பாட்டில் வலுவடைகிறது. பரத்தமை, கைம்மை, இரண்டும் கற்பின் அடிப்படையில் ஆதிக்கம் பெறுகின்றன. ''ஒரு தார மணம் உருவாகிய கால கட்டத்தில் பலதார மணமும், பரத்தமையும் ஆணுக்கு மட்டுமே உள்ளனவாக ஆயின. பெண் மட்டுமே கற்புடன் இருக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. பெண் தன்னைப் பொறுத்தவரைக் கற்புடனும் தாம்பத்திய ஒழுக்கத்துடனும் இருக்க வேண்டும்'' (ஏங்கெல்ஸ், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், ப.103) ''கற்பு'' என்பது ஒருவருடைய நடவடிக்கையில் பால் உறவில் தன்னைக் கட்டுப்படுத்துவதைக் குறிப்பதாகும். உடல் தூய்மை என்பது திருமணப் பிணைப்பிற்கும் வெளியே பாலுறவு நடவடிக்கையில் கட்டுப்பாடுடன் செயல்படுவதைக் குறிக்கும்'' என்றும் குறிப்பிடுகின்றது கலைக்களஞ்சியம்.(The Encyclopedia of Religion Volume-3, p.228)

சங்க இலக்கியத்தில் ''கற்பு'' என்ற சொல்:

மாசில் கற்பு, முல்லை சான்ற கற்பு, கடவுட் கற்பு, நகரடங்கிய கற்பு, மறுவறு கற்பு, நிலைஇய கற்பு, மனைமாண் கற்பு, அடங்கிய கற்பு, உவர்நீங்கு கற்பு, மறுவில் கற்பு, அருந்ததி அனைய கற்பு போன்ற பல தொடரமைப்புக்கள் கற்பின் மேம்பாட்டை உணர்த்துகின்றன.

கற்பு, கைம்மைக்குரிய தோற்றம்:

இந்து மதத்தில், தமிழ்ச் சமுதாயத்தில் கற்புக்கு ஒரு தோற்றம், கைம்மைக்கு ஒரு தோற்றம் என்பது இன்றும் காணப்படக்கூடிய காட்சியாகும். பெண்களின் ஒப்பனை கணவன் இறந்த நிலையில் சிதைவு பெற்று கைம்மைக்குரிய தோற்றத்தை உருவாக்குகிறது.

கற்பிற்குரிய அடையாளங்கள்:

கற்பிற்குரிய தோற்றப் பொலிவாக மங்கல அணி இடம்பெறுகின்றது. மங்கலப் பொருட்களாகப் பொட்டு, தாலி, மிஞ்சி, மஞ்சள் ஆகியன கருதப்படுகின்றன. இவற்றில்கூட இன்றும் பொட்டும் தாலியும் பெண்ணுடன் இணைந்தனவாகக் காட்சியளிக்கின்றன.

சங்க மகளிரின் திருமண நிகழ்வுச் செய்திகள்:

அ) வாகையிலை, அறுகின் கிழங்கில் உள்ள அரும்புகளோடு சேர்த்துக்கட்டப்பட்ட வெண்ணூலாகிய காப்பு.

ஆ) தூய உடை

இ) இழை அணிகள் அணிதல் (அகம். 136).

ஈ) தலைமகன் தலைமகளுக்குப் பின்னிருங் கூந்தலில் மாலை அணிவித்தல் (ஐங்.294).

உ) மக்களைப் பெற்ற வாலிழை மகளிர் கற்பு நெறியினின்று வழாமல், தமர் தர ஓர் இல் கூடுதல் (அகம்.86) ஆகியவற்றைத் திருமண நிகழ்வுச் செய்திகளாகக் காண முடிகிறது.

கைம்மை பற்றிய செய்திகள்:

அ) வளைநீக்கல் (புறம்.237:7-14)

ஆ) தொடி கழிதல் (புறம்.238: 6-7, புறம்.280:4-9)

இ) இழை களைதல் (புறம்.224:10-11)

ஈ) கூந்தல் களைதல் (புறம்.25:10-14, 250:3-4, 262,280)

உ) இன்னாப் பொழுதில் உண்ணல் (புறம். 248:3-4)

ஊ) பச்சைக்கீரை உண்ணல் (புறம். 246)

எ) பாயின்றி வதிதல் (புறம். 246) ஆகியன குறிக்கப்பட்டு உள்ளன.

சங்க மகளிரின் திருமணத்தில் இழை அணிகள் அணியப்பட்டன. கைம்மையில் இழை, வளை, தொடி களையப்பட்டன. கைம்மை வாழ்க்கையில் கூந்தல் களைதலில் மலர் நீக்கம் தானாகவே நடக்கிறது. திருமணத்தில் மங்கல மகளிர் வாழ்த்துகின்றனர். சங்க காலத்தில் கைம்மை மகளிர் வாழ்த்தியதாகவோ, நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகவோ செய்திகள் இல்லை. கற்பு வாழ்க்கையில் விருந்தோம்பல் பண்பு சிறப்பாகப் போற்றப்பட்டது. இன்னாப்பொழுதில் பசலைக்கீரை, புல்லரிசி, வெள்ளைச்சாந்து, பழஞ்சோறு உண்பது கைம்மைக்குரியதாக உள்ளது.

கைம்மையின் மூன்று நிலைகள்:

கைம்மையில் ஒப்பனை நீக்கம், உணவு நீக்கம், பழக்கநீக்கம் என்ற மூன்று நிலைகள் காணப்படுகின்றன. வளை, தொடி, இழை ஆகியன கணவன் துஞ்சிய நிலையில் களையப்பட்டிருக்கின்றன. பெருஞ்சித்திரனார், வெளிமான் என்னும் வள்ளல் துஞ்சிய போது, வருந்திப் பாடிய பாடலில் இச்செய்தி வெளிப்படுகின்றது. அறனில்லாத கூற்றம் வெளிமான் உயிரைக் கவர்ந்தமையால் அவனது மகளிர் தம் மார்பில் அறைந்து கொள்வதையும் கைம்மைக் கோலத்தின் அறிகுறியாக அவர் கைவளைகளை உடைப்பதையும் அவை வாழைப் பூப்போல சிதறிக்கிடப்பதையும் பாடியுள்ளார் (புறம். 237: 7-14). கைம்மை மகளிர் தம் கூந்தலை நீக்கிய செய்தியைப் புறநானூற்றில் நான்கு பாடல்கள் எடுத்து இயம்புகின்றன (புறம். 25,250,261,280). திருமணத்திற்கு முன்பும், மணநிலையிலும், பெண்கள் பூச்சூடியிருக்கின்றனர். கைம்மையில் கூந்தல் நீக்கத்துடன் மலர் நீக்கமும் இயல்பாகவே நிகழ்ந்துள்ளது.

கைம்மை - சமூகப்பண்பாட்டு விளக்கம்:

தமிழகத்தில் கணவனை இழந்த பெண்டிர் கைம்மை மகளிர் என அழைக்கப்பட்டனர். கைம்மை நிலை என்பது தந்தைவழிச் சமுதாயத்தின் ஒருதார மணமுறை என்ற சமூக அமைப்பில் உருவாக்கப்பட்டது. கணவர் இறந்தால் மனைவி இறக்க வேண்டும். ஆனால் மனைவி இறந்தால் கணவர் இறக்க வேண்டியதில்லை. நற்றிணை, புறநானூறு ஆகிய நூல்களில் மட்டுமே கைம்மை பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. கணவனை இழந்த நிலையில் இப்பெண்டிரது வாழ்க்கைமுறை, தொழில் தோற்றம் ஆகியவற்றின் அடிப்படையில்,

1. ஆளில் பெண்டிர் (நற்.353)

2. கழிகல மகளிர் (புறம்,280)

3. பருத்திப்பெண்டிர் (புறம்.125)

4. தொடிகழி மகளிர் (புறம்.238)

5. கைம்மை (புறம்.125, 261)

6. படிவமகளிர் (நற்.273)

7. உயவற்மகளிர் (புறம்.246)

என அழைக்கப்பட்டனர்.

மணிமேகலை கூறும் மூன்று நிலைகள்:

கணவனை இழந்த கைம்மை மகளிர் நிலையை இன்னுயிர் ஈதல், நளிமூயெரிபுகுதல், நோற்றுடம்படுதல் என்று மூன்றாக வகைப்படுத்திக் கூறுகிறது. மணிமேகலை, கைம்மை மகளிர் அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் தலைக்கற்பினர், இடைக்கற்பினர், கடைக்கற்பினர் என மூன்று வகைப்படுத்துகின்றனர். (எம்.கே.எம். அப்துல்காதீறு ராவுத்தர், செந்தமிழ்ச்செல்வி, தொகுதி ஆறு, பக். 356-359)

தலை, இடை, கடையாய கற்பு:

தலையாய கற்பு என்பது கணவன் உயிர் துறந்த செய்தி கேட்டு உயிர் விடுதலாகும். புறம். 62 ஆம் பாடல் தலைக்கற்பினைக் கூறுகின்றது. கணவனுடன் உயிர் விடுதலைத் தலையாய கற்புடையவர் என்பார் உ.வே.சா. (உ.வே.சா.உரை, புறம். 62.ப.151).

கடைக்கற்பு என்பது கணவனுடன் தானும் உயிர்மடிதலாகும். இதனைப் பெண்டிர் கணவரின் சிதையிலோ அல்லது தீவளர்த்தோ, தீப்புகுந்தோ அல்லது உயர்ந்த மலையில் ஏறிக்குதித்து உயிரை மாய்த்தலாகிய வரைபாய்தல் ஆகியவற்றின் மூலம் நிறைவேற்றுவர். இடைக்கற்பாகிய உடன்கட்டை ஏறுதலை புறம். 240 பாடல் உணர்த்துகிறது. ஆய் ஆண்டிரன் இறந்தபோது அவன் உரிமை மனைவியர் உடன் உயிர் நீத்த செய்தியை இப்பாடல் காட்டுகின்றது.

கணவன் இறந்த பின் உயிர்மேல் பற்றுக்கொண்டோ அல்லது சந்ததியினைக் காக்கவோ, கைம்பெண்டிர்க்குரிய சில நடைமுறைக் கட்டுப்பாடுகளைக் கொண்டு உயிர் வாழ்தலாகும். சங்க இலக்கியத்தில் இக்கைம்கை நோன்புமுறை தங்களை வருத்திக் கொண்டு வாழும் நிலையினைதாகக் காட்டப்படுகின்றது. கைம்மை நோன்பு ஐந்து நிலைகளில் அமைந்துள்ளது. அவை 1. அணிகலன்களைக் களைதல், 2. கூந்தல் கொய்தல், 3. பாயின்றிவதிதல், 4. கட்டுப்பாடான உணவு உண்ணுதல், 5. குறிப்பிட்ட தொழிலை மேற்கொள்ளுதல் ஆகும்.

முடிவுகள்:

சங்க இலக்கியத்தில் ''கற்பு'' என்பது ஆணுக்கு அடங்கி அவன் சொற்படி நடக்கும் அடக்கக் கோட்பாடாக உள்ளது. ''கைம்மை'' என்பது பெண்ணுக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. தாய் வழிச் சமுதாயம் என்பது சங்க இலக்கியத்தில் இல்லை. பெண்களை ஒடுக்கி வைப்பதற்கான இலக்கியக் குறியீடு ஒருதார மணமுறை. சங்க இலக்கியத்தில் ''கற்பு'' என்ற சொல்லைத் ''தூய்மை'' என்ற பொதுப்பொருளில் குறித்துள்ளனர்.

நன்றி: முன்னைத்தமிழ் இலக்கியம்.

 

சங்க இலக்கியத்தில் உணவு வகைகள் - த. தவமணி

உயிர்வாழ இன்றியமையாத பொருள் உணவு ஆகும். அனைத்து உயிரினங்களும் உயிர்வாழ உணவையே சார்ந்திருக்கின்றன. ஆகவே அவற்றின் செயல்பாடுகள் உணவு தேடுவதையே அடிப்படையாக கொண்டுள்ளன. பண்டைத் தமிழர்கள் சுவைமிக்க உணவுப் பொருள்களை சமைப்பதில் தேர்ந்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. அவரவர் வாழ்ந்த நிலத்திற்கேற்ப உணவு வகைகளும் உணவு முறைகளும் வேறுபட்டு இருந்தன. அவரவரின் பொருளாதார நிலையை ஒட்டியும் உணவின் தரம் வேறுபட்டிருந்தது. சங்கத் தமிழர் மரக்கறி உணவைக் காட்டிலும் புலால் உணவையும் விரும்பியுண்டனர் என்பதை இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. சங்கத்தமிழர் பலவகையான மதுவகைகளையும் பருகுநீர் வகைகளையும் விரும்பிப் பருகும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தனர். சங்க இலக்கியங்கள் உணவின் தேவையை எடுத்து விளக்குவதோடு அந்த உணவை மற்றவர்களுக்கும் கொடுத்து வாழ்வது இன்றியமையாத செயல் என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்துகின்றன. உண்ணும் உணவினைப் பல்வேறு பகுதிகளாக பிரித்துக் சுவைபடச் சமைத்து உண்பதில் அறிவையும் உணர்வையும் தமிழர்கள் ஒருசேரப் பயன்படுத்தியுள்ளனர்.

சங்க இலக்கிய உணவு வகைகள்:

இயற்கையாக அமைந்த நிலப்பாகுபாடுகளில் ஆங்காங்கு கிடைக்கப்பெற்ற பொருள்களையும் தங்கள் முயற்சியால் தட்பவெட்ப நிலைக்கேற்ப உற்பத்தி செய்த பொருள்களையும் கொண்டு பண்டைத்தமிழர்கள் தங்கள் உணவு வகைகளைத் தயாரித்துக் கொண்டனர் என்பதற்குச் சங்க இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன. உணவுப் பொருள்களை நல்ல முறையில் பக்குவம் செய்து சுவையேற்றி உண்டும் மகிழ்ந்திருக்கிறார்கள். இத்தகைய உணவு வகைகள் வருமாறு. 1. மரக்கறி உணவு 2. கனி உணவு 3. இறைச்சி உணவு 4. அரிசி உணவு 5. பிற உணவு 6. பருகுநீர் 7. மது.

மரக்கறி உணவு:

சங்ககால தமிழர்கள் காய், கிழங்கு, கீரை, பருப்பு போன்ற தாவரங்களிலிருந்து கிடைக்கக் கூடிய உணவுப்பொருள்களை உண்டு வாழ்ந்திருக்கின்றனர் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் தருகின்றன. பண்டைத் தமிழர்கள் நண்டுக் கறியுடன் பீர்க்கங்காயை இணைத்து உண்டுள்ளனர் என்ற செய்தியை சிறுபாணாற்றுப்படை கூறுகிறது. பொதுவாக மரக்கறி உணவோடு இறைச்சி உணவைச் சேர்த்து உண்ணும் வழக்கம் இல்லை. ஆனால் மருத நிலத்து மக்கள் பீர்க்கங்காயோடு நண்டுக்கறியையும் இணைத்து உண்ட செய்தி புதுமையானதாகும். இப்புதிய உணவுப் பழக்கம் பற்றி சிறுபாணாற்றுப்படையின் பின்வரும் பாடலடி குறிப்பிடுகிறது.

கவைத்தா ளலவன் கலவையொரு பெறுகுவீர் (சிறுபாண 195)

இதற்கு கவைத்த காலினையுடைய நண்டும், பீர்க்கங்காயும் கலந்த கலப்புடனே பெறுகுவீர் என்று நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார். இதன் மூலம் பண்டைத் தமிழர் நண்டுக்கறியுடன் பீர்க்கங்காயையும் சேர்த்து உண்டுள்ளனர் என்ற செய்தியைத் தெரிந்து கொள்ள முடிகிறது. பீர்க்கங்காயையும் நண்டையும் கலந்து செய்யும் சமையற் குறிப்பினை நச்சினார்க்கினியர் உரையின் வாயிலாகவே அறிய முடிகின்றது. மேலும் மாதுளங்காய், மாங்காய், வெள்ளரிக்காய் போன்ற பல காய்களையும் உண்டுள்ள செய்தி சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது.

கனி உணவு:-

சங்க இலக்கியங்களில் ஆசினிப்பழம், களாம்பழம், காரைப்பழம், துடரிப்பழம், நாவற்பழம், நெல்லிக்கனி, பலாப்பழம் போன்ற பழங்களைச் சங்ககால மக்கள் பெரிதும் விரும்பியுண்டனர் என்ற செய்தியை அறியமுடிகிறது. பெரும்பெயர் ஆதி என்ற மன்னனுடைய நாட்டிலுள்ள மக்கள் மணல் குவிந்து கிடக்கும் மணல் மேட்டில் ஏறி நின்று நாவற்பழத்தை கொய்து உண்டனர் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடலடிகள் தருகின்றன.

''கருங்கனி நாவலி லிருந்து கொய் துண்ணும்

பெரும்பெய ராதி பிணங்களிற் குட நாட்

டெயினர்....................................'' (புறம் 177 11-3)

உண்டவரை நீண்டநாள் வாழவைக்கும் ஆற்றல் கொண்டது நெல்லிக்கனி என்ற செய்தியை

''சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா

தாத னின்னகத் தடக்கிக்

சாத னீங்க வெமக்கீந் தனையே (புறம் 91 9-11)

எனவரும் ஒளவையார் பாடிய புறப்பாடல் வழி அறியலாம்.

இறைச்சி உணவு:

சங்ககால மக்கள் புலால் உணவை விரும்பியுண்டனர். போரும் வீரமும் பேணுவதற்கு இப்புலால் உணவு ஊக்கமளிக்கும் உணவு ஆகும். போரெனின் உவக்கும் சங்ககால இயல்புக்குப் புலால் உணவே பொருத்தமான உணவாயிற்று.

மான் இறைச்சி:

கோப்பெருநற்கிள்ளி தீக்கடைக்கோலால் தீயை உண்டாக்கி அதில் கொழுத்த மானின் இறைச்சியைக் சுட்டுப் பதப்படுத்தி வழி தப்பிச் சென்ற மறவர்கள் வந்து கூடுவதற்கு முன் உண்க எனப் புலவர்களுக்குக் கொடுத்தான் என்றும், அதனை உண்டு புலவர்கள் பசி தீர்ந்தனர் என்றும் பின்வரும் புறநானூற்றுப் பாடலடிகள் காட்டுகின்றன.

இழுதினன்ன வானினக் கொழுங்குறை

அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி'' (புறம் 150)

அம் மன்னன் தான் வேட்டையாடிய மான் தசையைப் புழுக்கி அதனை நெய்போன்ற மதுவுடன் புலவர்களுக்குக் கொடுத்தான். இச் செய்தியை

''தானுயிர் செகுந்த மானினப் புழுக்கோ

டானுவருக் கன்ன வேரியை நல்கி'' (புறம் 152)

என்ற புறப்பாடல் வழி அறியலாம். மேலும் மானிறைச்சி மட்டுமின்றி ஆட்டிறைச்சி, உடும்பு, இறைச்சி, பன்றி இறைச்சி, பறவை இறைச்சி, போன்ற பல்வேறு இறைச்சிகளையும் உண்டதாகச் சங்க இலக்கியக் குறிப்புகள் கூறுகின்றன.

அரிசி உணவு:

சங்க காலத் தமிழர் சுவையும் பயனும் கெடாவண்ணம் இருக்கக் கைக்குற்றல் அரிசியையே பயன்படுத்தியுள்ளனர். இது தொடிமாண் உலக்கைப் பருஊக் குற்றரிசி (புறம் 399 2) என்று அழைக்கப்பட்டது. கொழுத்த ஊன் துண்டங்களைத் தீயிலிட்டுச் சுட்டு அவற்றுடன் தினைச் சோற்றைச் சொரிந்து பாணர்கள் உண்டனர்.

''செந்தீ அணங்கிய கொழுநிணக் கொழுங்குறை

மென் நினைப் புன்கம் உதிர்ந்த மண்டையொரு

................... பருக்கும் .................... '' (அகம் 237.9.13)

பிறஉணவு:

பலவகையான சுவையையுடைய பொருட்களைச் சேர்த்து பலவகைத் திண்பண்டங்களைச் சங்ககால மக்கள் உண்டுள்ளனர். அவை அப்பம், பண்ணியம், மோதகம், துவையல், மீன்குழம்பு, தயிர்க்குழம்பு போன்றவையாகும். நெல்மாவில் இனிப்புச் சுவையான பொருட்களைச் சேர்த்து ஆக்கப்படும் ஒரு வகை சிற்றுண்டி பண்ணியம் எனப்படும். ஊனையும் சோற்றையும் உண்டு வெறுத்த மக்கள் அவ்வெறுப்பை மாற்றுவதற்கு வெல்லப்பாகையும் பாலையும் அளவாகக் கலந்து செய்யப்பட்ட பண்ணியங்களைத் தின்றனர் என்பதை.

''உனு மூணு முனையி னினிதெனப்

பாலிற்பெயதவும் பாகிற் கொண்டனவும்''

என்ற புறப்பாடல் தெரிவிக்கிறது.

பருகுநீர்:

இளநீர், கரும்புச்சாறு, அருவிநீர், சுனைநீர், பால், தயிர், மோர் போன்றவற்றை சங்க கால மக்கள் பருகியுள்ளனர்.

அருவிநீர்:

பலவகையான உணவுகளை உண்டபின்னர், மலையுச்சியில் இருந்து கீழே பாய்ந்து வரும் குளிர்ச்சியான அருவிநீரை குறிஞ்சி நில மக்கள் அருந்தினர்.

''அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி

நன்மர னளிய நறுந்தண் சாரற்

கன்மிசை யருவி தண்ணெனப் பருகி'' (புறம் 150 14-16)

கரும்புச்சாறு:

இனிமையான சுவை நீர்களில் கரும்பின் சாறும் அடங்கும். அதியமான் நெடுமான் அஞ்சி (கரும்பை விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகத்திற்குக் கொணர்ந்து கொடுத்தான் என்பது ஒரு தொன்மச் செய்தியாகும் இதனை,

''அறபெரன் மரபிற் கரும்பி வட்டந்தும்'' (புறம் 99 2)

ஆலை இயந்திரங்களில் கரும்பை இட்டு ஆட்டினர் என்ற செய்தியை கரும்பி னெந்திரங் கட்டினோதே என்று மதுரைக் காஞ்சி புலப்படுத்துகிறது.

மது:

வீரநிலைக் காலத்தில் மதுவும் கள்ளும் உண்ணல் சமுதாயத் தகுதியாகத் கருதப்பட்டன. மதுவும் கள்ளும் ஆற்றல் பானங்களாகப் போற்றப்பட்டன. ஒளவையார் தம்மைப் போற்றிச் சிறப்பு செய்த அதியமான நெடுமான் அஞ்சி இறந்தபோது அவர் தமக்குச் செய்த சிறப்புகளுள் இக்கள்ளினைத் தமக்குக் கொடுத்துக் தானும் உண்ட செயலைப் பாராட்டிக் கையறுநிலையாகப் பாடியுள்ளார்.

சிறியகட் பெறினே எமக்கீயு மன்னே

பெரியகட் பெறினே

யாம்பாடத் தாம் மகிழ்ந்துண்ணும் மன்னே - (புறம் 23 1-3)

மேலும் சங்ககால மக்கள் மயக்கமும் உற்சாகமும் கொடுக்கக்கூடிய பானங்கள் பலவற்றை உண்டு மகிழ்ந்திருக்கின்றனர் என்பதை சங்க இலக்கியங்கள் தெளிவாகச் சுட்டுகின்றன. அவைகள் நறவு, மது மட்டு, தேறல் போன்றவையாகும்.

முடிவுரை:-

பண்டைத்தமிழர்களால் பலவகை உணவுகள் தயாரிக்கப்பட்டன. அவர்களால் தயார் செய்யப்பட்ட அனைத்து உணவு வகைகளும் அவர்களால் விரும்பி உண்ணப்பட்டன. தினையரிசியும் பாலும் கலந்து பால்சோறு, அவரைப்பருப்பும் அரிசியும் கலந்த பருப்புச் சோறு, இறைச்சியும் அரிசியும் கலந்து ஊன்துவை அடிசில், புளியும் மோரும் மூங்கிலரிசியோடு கலந்து ஆக்கப்பட்ட புளியங்கூழ் ஆகியன சங்ககால உணவு வகைகளுள் குறிப்பிடத்தக்கவை.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

பாலைக்கலி முதலாக உள்ளமை - முனைவர் வ. உமாபார்வதி

பாவின் பெயர் பெற்ற எட்டுத்தொகை நூல்கள் கலித்தொகையும் பரிபாடலும் ஆகும். இவ்விரண்டும் ஐந்தினை அகப்பொருள் செய்திகளைப் பாடுதற்கு உரிமை வாய்ந்தவை என்பர் தொல்காப்பியர். பாவமைப்பிலும் இவ்விரண்டும் ஒப்புமையுடையன. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தம் என்னும் உறுப்புக்கள் இவ்விரண்டும் பாவிற்கும் பொதுமையானவை. இரண்டுமே இசைப்பாடல்கள் என உரையாசிரியர்கள் குறிப்பர். இனி அன்பினது தன்மையைச் செய்யுளாக வடிக்கும் புலவர்கள் பாலைத்திணையையே விரும்பிப்பாடினர். சங்க அகப்பாடல்களில் பாலைச் செய்யுட்களே சாலப்பல. ஐந்திணைகளுக்குப் பொதுவான அகநானூற்றில் பாலைக்கு மட்டும் 200 செய்யுட்கள் உள்ளன. எஞ்சிய நான்கு திணைகளும் 200 செய்யுட்களே பெற்றுள்ளன.

கற்றறிந்தோர் ஏத்துக் கலித்தொகையில், 150 பாடல்களில் பாலைக் கலிப்பாடல்கள் 35 ஆகும். இந்நூல் புறச்செய்தி சார்ந்த சில பெயர்கள் ''தென்னவன் கடல் வையை'' என இடம் பெறுகின்றன. கதை தழுவிய புராணச் செய்திகள் சுமார் 20 பாடல்களில் இடம் பெறுகின்றன. இந்நூலில் ''பாலைத்திணை'' முதலிடம் பெறுவதனால் சிறப்புறுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற இந்த வைப்பு முறைப்படி இக்கலித்தொகையில் குறிஞ்சி ஏன் முதலிடம் பெறவில்லை என்ற வினா எழுகிறது. பாலைத்திணை முதலிடம் பெறுதற்குச் சிறப்பான காரணங்கள் பல உள்ளன. அறிஞர் பலர் இதனை ஆ€ராய்ந்து தத்தம் கருத்துக்களைத் தந்துள்ளனர்.

நச்சினார்க்கினியர் இதுபற்றிக் கூறுமிடத்து, ''முல்லை, குறிஞ்சி, மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே என்புழிச் சொல்லாத முறையாற் சொல்லவும்படும் என்றலின் இத்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என இம்முறையே கோத்தார் நல்லந்துவனார்'' என்பதாம். நச்சினார்க்கினியர் கூறும் கருத்து நிறைவு அளிக்கவில்லை. இன்னும் சிறப்பான காரணம் இருந்திருக்க வேண்டும்.

பாலைத்திணை பிரிதல், பிரிதல் நிமித்தம் என்ற உரிப்பொருளுடைத்து, இன்பமிகவுடைய அன்புடைக் காதல் வாழ்வை என்புருக மேற்கொள்ளும் தலைமக்களின் அக வாழ்க்கையில் அன்புமழை வளர்க்கும் இன்பப் பயிர்தானே சுவையுடைத்து, சுகமுடைந்து. அப்படி இருக்கையில் அதற்கு மறுதலையாய் துன்பம் என்னும் ஊற்றெடுக்கும் பிரிவுப் பேராற்றை பாலைத்திணையை ஏன் முதல் அமைத்தனர் ஆசிரியர்? என்னும் வினா எழுகிறது.

உலக, வாழ்வில் கண்கூடாக நாம் காண்பன பல பல. பொதுவாகவே இன்பத்தைவிடத் துன்பமே மனிதனை உலுக்குகிறது. இன்பம் மனிதனைத் தென்றலாய்த் தழுவுகிறது. அதில் கவர்ச்சி உண்டு கவினும் உண்டு. துன்பம்? அது இன்பத்தைப் போல் கவர்ச்சி உடைத்தன்று. ஆனால் மனித மனத்தில் ஆழப்பதிவதும் அழுந்திப் பதிவதும் இத்துன்ப உணர்வே. மனித மனக்கேணியில் மிதக்கும் சருகுகள் இன்பங்கள் என்றால் அதில் நிலைக்கும் கற்கள், பாறைகள் துன்பங்களாகவே இருக்கின்றன. இன்பத்தில் மனிதன் தன்னை மறந்த லயம் தன்னில் வாழ்கின்றான். துன்பத்திலோ அவன் சுடச்சுட ஒளிரும் பொன்போலத் தன்னை உணர்ந்த தகைமை பெறுகின்றான். அனுபவங்கள், உண்மைகள், குறிக்கோள்கள், உறுதிகள் என்ற முத்துக்களை ஈன்றெடுக்கும் சிப்பியாய்த் துன்பம் திகழ்கின்றது.

இத்தகைய துன்பத்தைக் காதலர் வாழ்வில் பெற்றுத் தருவது பிரிவு காதலி தன் இல்ல தலைவனை நெஞ்சு நெகிழ்ந்து கண்­ரால் நனைந்து துன்ப வலை வளைந்து இருப்பது அவள் இயல்வு. கல்லும், முள்ளும், புள்ளும் மாவும் கலந்து புலம்பும் இயல்புடைய பாலை நிலத்தை வெயில் என்ற துணையுடன் கடந்து செல்கின்றான் தலைவன்; அது அவன் இயல்பு.

இப்படித் தலைமகன் தன்னுடைய வயின்போற் தொழுதேத்த வயங்கிய கற்பினளாம் தலைவியைப் பிரிந்து போதல் யாது பற்றி என்ற ஐயம் எழுகிறது. தலைவன் சில காரணங்களால் தலைவியைப் பிரிந்து செல்லற்குரியன். அவை

''ஓதல் காவல் பகைதனி வினையே

வேந்தர்க்குற்றழி பொருட்பிணி பரத்தையென்று

ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே''

என்கிறது இறையனார் அகப்பொருள் நூற்பா 35.

இன்ப துன்பம் கலந்ததே மானுட வாழ்க்கை காதலும், பிரிவும் அதன் இரு பக்கங்களாகும். கை என்பது அகங்கையை மட்டும் குறிப்பதன்று புறங்கையையும் சேர்த்துத்தான். மனிதனுக்குக் காதல் இன்பமே மட்டும் நிறைவளிக்காது. அவன் பிரிவையும் சம அளவில் விரும்புபவன். எனவே பிரிவு என்பதும் அவனுக்குரிய ஒரு கடமையாகின்றது. அவன் பிரிந்த காலத்தில் தலைவியின் நிலை, அவன் நிலை உணர்ந்து அவன் வரும்வரை பிரிவுத்துயரை ஆற்றியிருத்தல் அவள் கடமை. இதனைப் பெருங்கதையும்

''ஆண்கடன் அகறல் அதுநோன்று ஒழுகுதல்

மாண்பொடு புணர்ந்த மாசறு திருநுதல்

கற்புடை மகளிர் கடன்''

என்கிறது. எனவே ''வாழ்த லுண்கண்ண ளாயிழை சாதலதற்கன்ன ­ங்குமிடத்து'' என்று காதல் இன்பக்கடல் களித்துரைக்கும் தலைவனும் தன்முன் நீளும் பிரிவுப் பாலத்தில் நடக்கத் துணிகின்றான். தலைவியும் அப்பிரிவுப் பாலத்தில் தன் துன்பத்தைத் தூது விடுக்கின்றாள்.

தலைவனின் பிரிவு:

பொருள் - பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை. உள்ளது சிதைப்போர் ஊரெனப் படார்.

ஓதல் - நில்லா நிலையுடை உலகினில் கல்லாதிருத்தல் சிறப்பன்று, அஃதொன்றே மாடு; செல்வம்.

தூது - நாட்டுக் குடிமகன் என்ற பொறுப்பால் அதன் விருப்பால் ஆற்றும் பணி.

காவல் - தன்னலம் போற்றாது பிறர்நலம் காணத் துணை புரிவது காவற்பிரிவு.

பரத்தை - அவன் மனநிலை வழி நிகழ்வது.

இவற்றுள் ஈண்டு பரத்தையிற் பிரிவு சிறப்புடைத்தன்று; இவண் பேசப்படுவது அறமுடைப் பிரிவே; அஃதாவது பொருள்வயிற் பிரிவே என்பது பொருந்தும்.

''எல்லாம் பொருளில் பிறந்துவிடும்'' என்பதனைக் கல்லாதவரும் நன்கறிவர். எனவே அறம், இன்பம் என்ற இருகரை உடைய ஒரு பெருங்கடலாம் வாழ்வைச் கடக்க உதவும் கலமாய்த் திகழ்வது பொருளாம். அப்பொருள் இலதாயின் வாழ்வு என்ற சொல்லிற்கே வனப்பு இராது; வளம் பெருகாது.

தலைவன் பல காரணம் கருதியே பிரிவை எண்ணுகிறான். ''அரிதாய அறனெய்தி அருளியோர்க்களித்தலும் பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும், புரிவமர் காதற் புணர்ச்சியும் தரும்'' என்ற பல காரணங்களால்தான் அவன் பொருள்வயிற் கருத்தூண்றிப் பிரிந்து செல்கிறான். எனவே ''ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை'' என்றும், ''இனியான் உண்ணலும் உண்ணேன், வாழலும் வாழேன்'' என்றும், துன்புறும் தலைவியும் இதுபோன்ற காரணம் கூறி ''வருவர் கொல்'' என்று தோழி ஆற்றுவித்ததும் தன்துயர் ஆற்றுகிறாள்.

பாலைக்கலி துன்பச் சாற்றைப் பிழிந்து தருகிறது. அத்துன்பச் சாற்றின் சுவையோ உயர்ந்தோங்கும் இன்பமாய்த் திகழ்கிறது. இந்த வித்தை நிகழிடம் இலக்கியம் ஒன்றிலேயேதான். அன்பால் பிணைந்த அக வாழ்வை நினைந்து தலைவி உருகிப்பாடும் பாடல்கள் கற்போரையும் உருக்கி அவர் மனத்தில் பதிவனவாகும். எனவே கற்போர்க்குக் கழிபேரின்பம் அளிக்கவல்ல இப்பாலைத்திணை முதலிடம் பெற்றது.

அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாம். பிரிவற்ற காதல் செறிவற்று நிற்கும். அதில் காதல் நெருக்கம் இருக்காது. உருக்கம் பிறக்காது காதலர்தம் உள்ளங்கள் பிணைந்திட நாளும் இணைத்திடப் பிரிவு உற்ற நண்பனாய்த் திகழ்கிறது. நிழலின் அருமை வெயிலில்! நீரின் அருமை தாகத்தில்! அதைபோல் அன்பின் அருமை பெருமை எல்லாம் பிரிவிலேயாம்.

மனிதனின் வாழ்க்கையில் இளமைப்பருவம் சிறப்பானது. அவனது பெருமை, ஊக்கம், முயற்சி, குறிக்கோள் எல்லாவற்றையும் செயல்படுத்த வாகாய் இருப்பது அவ்விளமைப் பருவமே. எனவே தான் பிரிவும் இத்தகு இளமையில் நிகழ்கிறது. இளமையில் பொருள் வளமை கொள் வாழ்வளிக்கும் வாழ்வின் பொருளை உணர்ந்த தலைவன் வாழ்க்கைக்குப் பொருளீட்டத் தலைவியைப் பிரிகிறான்.

இந்நூலின் இலக்கியச் சுவைக்கும் கற்பனை வளத்திற்கும் தலைவனின் பிரிவுநிலைப் பாடல்களைச் சான்றாகக் காட்டலாம். தலைவனும் பிரிவுக்கு வருந்தியுரைக்கும்போது, பதநீர் குடித்த ஓலையும், பழகிய மக்கள் விட்டுப்போன பாழடைந்த ஊரும், சூடி உலர்ந்ததும் வீழ்த்திய பூவும் போலத் தன் நிலைமை ஆயினமையைத் தலைவி குறிக்கின்றாள்.

''தோணல முண்டு துறக்கப் பட்டோர்

வே­ ருண்ட குடையோ ரன்னர்

நல்குநல் புரிந்து நலனுணப் பட்டோர்

அல்குநர் போகிய வூரோ ரன்னர்

கூடினர் புரிந்து குணனுணப் பட்டோர்

சூடின ரிட்ட பூவோ ரன்னர்'' (பாலைக்க. 23)

மற்றொரு பாடல், தலைவி தலைவனுடன் உடன்போக்கு நயந்து சென்றுவிட்டாள். செவிலி தேடிச்சென்று இடைச்சுரத்தில் முக்கோல் பகைவரைக் கண்டு தன் வருத்தத்தைக் கூறி வழியில் அவர்களைக் கண்டீர்களா? என வினவுகிறாள். அப்போது அவர்கள், ''ஒரு பெண் தனக்குத்

தகுந்தவனைத் தேர்ந்து காதலித்து மணங்கூடுவது குற்றமன்று'' என்று எடுத்துக்கூறி அத்தாயைத் தேற்றுகின்றனர்.

''பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை

மலையுளே பிறப்பினு மலைக்கவைதா மென்செய்யும்

. . . . . . . . . . . . . . . . . .

புழுங்கால் நும்மகள் நுமக்குமாங் கனையளே'' (பாலைக்க. 9)

தலைவன் பிரிந்த கொடிய பாலையின் வெம்மையைப் பொருத்தமான உவமையால் சுவை கூட்டுகிறார் புலவர். தலைவன் பிரிந்து செல்லும் பாலை நிலத்தின் வெம்மை மேகம் விளக்கமாக இருக்கிறது. ஒண் கதிர், தன் சக்தியையெல்லாம் ஒருங்கிணைத்த பாலை நிலத்தை வெம்மையாக்குவதால் நிறைவு கொண்டிருக்கின்றான். அவனது வெம்மையைக் காட்டுமிடத்து, முப்புரம் எரித்த விரிசடைக் கடவுளின் தோற்றத்தை உவமித்துக் கூறியுள்ளார். அமரர்கள் அவுணர்களை அடக்கித் தங்களைக் காக்குமாறு இறைவனிடம் இரக்கின்றனர். யாவராலும் அடக்கவியலா மடங்கற்போர் செய்யும் மாயம் பல கூட்டும் அவுணர்பால் சினம் கிளர்ந்தெழப் புறப்படுகின்றார் திங்கள் தங்கு சடையான். இப்பொருள் தரும் பாடலடியாவது,

''முக்கண்ணன் மூவெயிலும்

உடன்றக்கால் முகம் போல''

என்பதாம். பிரிவு கருதிய தலைவனுக்குத் தோழியும், தலைவியும் கூறுகினற அறிவுரைகள், மனிதருக்கு யாக்கை, இளமை, செல்வம், நிலையாமைகளை அறிவுறுத்தி மெய்யறிவு புகட்டுகின்றன. இவ்வகையில் இப்பாலைக்கலி ஒரு மெய்ஞ்ஞான நூலாகவேத் திகழ்கிறது. மக்கட் பிறப்பின் பயனைக் கூறியதாலே ஆசிரியர் நல்லந்துவனார் இப்பாலைக்கலியை, கலித்தொகையின் முன்னிறுத்தினார் போலும். மேலும் தமிழ் அகப்பொருள் மரபும், வாழ்க்கைச் சிறப்பும், தலைவி தலைவனிடம் நிகழும் தூய்மையான காதலும் அவர்தம் பண்பட்ட உள்ள வளர்ச்சியும் பாலைக்கலியில் தெற்றெனப் புலனாகிறது.

பிரிவுப் பொருள் கருதும் பாலைக்கலி, கலித்தொகையில் முதலாவதாக வைக்கப்பெற்றிருப்பதற்கு அதன் உருக்கம் நிறைந்த பாடல்கள், அப்பாடல்கள் தரும் பிரிவுத் துன்பத்தால் வரும் கலையின்பம், இளமையின் சிறப்பு, இலக்கிய நயம், நலம் நிறைந்த பாங்கு முதலியன காரணங்கள் எனக் கூறலாம்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

குறுந்தொகையில் உவமை நலம் - எம்.ஆர். தேவகி

முன்னுரை:-

சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகை நான்கடி முதல் எட்டடி வரையிலான பாடல் வரிகளைக் கொண்டது. இந்நூலின் சிறப்புக் கருதி இதனை நல்ல குறுந்தொகை என்ற அடைமொழியோடு சிறப்பித்துள்ளனர். குறுந்தொகைப் பாடல்களைப் பலரும் பெருமளவு மேற்கோள்களாகப் பயன்படுத்தியுள்ளமை இதன் சிறப்பிற்கு மற்றொரு சான்றாகும். குறுந்தொகை ஓர் உவமைக் களஞ்சியம் என்று கூறுமளவுக்குப் பெருமளவு உவமைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் மக்களின் எண்ண நினைவுகளையும், புலவர்களின் மனநிலைகளையும் புலப்படுத்துகின்றன. இவ்வுவமைகளின் பொருள் மரபுகளை இக்கட்டுரை ஆய்கின்றது.

உவமை - வரையறை:-

புலவர்கள் தாம் கூறு விழையும் பொருளை மக்களுக்கு உணர்த்த, அவர்கள் அறிந்த ஒன்றை ஒப்புமைப்படுத்திக் கூறுவது உவமையாகும். உவமைகள் மூலம் விளக்கப்பெறும் கருத்துக்கள் மக்கள் மனத்தில் எளிதில் விரைவாகச் சென்று சேர்வது தனிச்சிறப்பாகும். இத்தகைய உவமைகளை இடத்திற்கேற்ற வகையில் பயன்படுத்துவதில் சங்ககாலப் புலவர்கள் சிறந்து விளங்கினர் என்பதற்குக் குறுந்தொகையே மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

உவமை - வகைகள்:-

உவமை தோன்றும் இடங்கள் என்ற வகையில் உவமையை நான்காக வகைப்படுத்தியுள்ளார் தொல்காப்பியர்.

''வினைபயன் மெய்உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமைத் தோற்றம்'' (தொல். 272)

ஆனால் தண்டியலங்கார ஆசிரியர் இந்நான்கினையும் சுருக்கி பண்பு, தொழில், பயன் என்ற மூன்று வகையுள் அடக்குவார்.

''பண்பும் தொழிலும் பயனுமென் றிவற்றின்

ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்புணர்ந்து

ஒப்புமைத் தோன்றச் செப்புவது உவமை.'' (தண்டி. 31)

உவமையின் இயற்கை:-

உள்ளதை உள்ளபடி உரைத்தல் இயல்பு உவமையாகும். கயமனார் என்னும் சங்கப்புலவர் தம் பாடலில் ஓர் இயற்கைக் காட்சியினைத் தம் கற்பனைத் திறத்தால் வளப்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது.

''பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்

இனமீன் இரும்கழி ஒதம் மல்குதொறும்

கயம்மூழ்கு மகளிர் கண்ணின் மானும்'' (குறுந். 9)

என்னும் பாடல் வரிகளில் திரண்ட காம்புகளை உடைய நெய்தல் மலரானது பசுமையான இலைகளுக்கு மேல் உயர்ந்து காணப்படுகிறது. மிகுந்த மீன்களும் காணப்படும் இக்குளத்தில் வெள்ளம் பெருகும்போதெல்லாம் பெரிய நீர்ச்சுழியில் சிக்கும் நெய்தல் மலர்கள் வெள்ளத்தில் மூழ்கி மூழ்கி எழுந்திருக்கின்றன. இக்காட்சியானது குளங்களிலே மூழ்கி விளையாடும் பெண்களின் கண்களைப் போன்று இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய,

''தாரைப் பூத்த தடாகத்திலே - முகத்

தாமரை தோன்ற மூழ்கிடுவாள்''

என்றப் பாடல் வரிகளும் இங்கு நினைவுகூரத்தக்கன. இயற்கைக் காட்சியினை விளக்கும் மற்றொரு பாடல் குறுந்தொகையின் முதற்பாடலாகும். தலைவியின் கூட்டத்தைப் பெற விளையும் தலைவன் தோழியை உதவுமாறு வேண்டி செங்காந்தன் மலரைத் தோழிக்குப் பரிசளிக்க முற்படுகையில் தோழியின் கூற்றாக அப்பாடல் அமைந்துள்ளது.

''செங்களம் படக்கென்று அவுணர்த் தேய்த்த

செங்கோல் அம்பிற் செங்கோட்டு யானைக்

கழல்தொடிச் சேஎய் குன்றம்

குறுதிப் பூவின் குலைக்காந் தட்டே'' (குறுந். 1)

தலைவனே நீ கொண்டு வந்திருக்கும் சிவந்த நிறமுடைய இச்செங்காந்தள் மலர் எங்களுக்கு அரிதான பொருள் இல்லை எளிதில் கிடைக்ககூடியது. மேலும் அவுணர்களைக் கொன்று குவித்ததால் போர்க்களம் முழுவதும் சிவப்புறுமாறு செய்வதன் முருகன் - பகைவரைக் குத்திக் கொன்றதால் அவனது வேலும், களிற்றின் கோடுகளும் சிவப்புற்றன. இத்தகைய சிறப்புடைய முருகன் குடிகொண்டிருக்கும் இம்மலையில் சிவந்த நிறமுடைய காந்தள் மலர்கள் எங்கும் மலர்ந்து காணப்படுகின்றன. இந்த நிலையில் இச்சிறிய பொருளைக் கொடுத்து தலைவியாகிய பெரிய பொருளை அடைய எண்ணுவது அறிவீனம். அதனால் நின் கையுறையாகிய இம்மலரை, யாம் ஏற்பதற்கு இல்லை என்று கூறுகிறாள். தோழியின் கூற்றாக அமையும் திப்புத்தோளார் இயற்றிய இப்பாடல் மூலம் எங்கும் காந்தள் மலர்கள் பூத்துச் சிவந்து கிடக்கும் மலைக் காட்சியினை நம் கண்முன் நிலைநிறுத்துவதாக அமைகிறது.

உவமையில் உளவியல்:-

உளவியல் எனப்படுவது உள்ளத்தின் இயல்புகளைக் கூறுவது. உளம்+இயல் எனப் பிரித்தால், உள்ளத்தின் இயல்புகளைக் கூறுவது அல்லது ஆராய்வது எனப் பொருள்படும்

''Psychology is concerned with understanding the mind and the

behaviour of man''

என்ற கூற்றினை நோக்கும் போது உளவியல் மனித உள்ளத்தையும் நடத்தையையும் ஆராயும் துறையாகத் திகழ்கிறது. சங்கத் தலைவி ஒருத்தியின் உள்ளத்தினைப் படம் பிடித்துக் காட்டுவதாய் விளக்கும் பின்வரும் பாடல் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தன் உள்ளம்படும்பாட்டைத் தோழிக்குக் கூறுவதாக அமைகிறது.

''அது கொல் தோழி காமநோயே!

வதிகுறு உறங்கும் இன்நிழல் புன்னை

உடை திரைத் திவலை அரும்பும் தீநீர்

மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவே'' (குறுந். 5)

தோழி! இந்நோய் குறித்து இதுவரை யான் அறிந்தது இல்லை. இப்போது புரிந்து கொண்டு விட்டேன். கடற்கரையில் நிழல்தரும் புன்னை மரங்களில் தங்கியிருக்கும் நாரைகள் கவலையின்றி உறங்குகின்றன. கடல் அலைகள் மோதுவதனால் புன்னை மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அத்தகைய கடற்கரையை உடையவன் தலைவன். நம்மைப் பிரிந்து சென்ற தலைவன், சென்ற இடத்தில் நன்கு உறங்குவார். நான் மட்டும் தூக்கமின்றித் தவிக்கிறேன் என்ற தலைவியின் உள்ளத்தினை, ''வதிகுருகு உறங்கும் இன் நிழல் புன்னை'' என்ற அடியால் விளக்குகிறார் நரிவெரூஉத்தலையார் எனும் புலவர்.

உவமையில் அகப்பொருள்:-

அகப்பொருளாவது ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் அனுபவிக்கும் இன்பம் இத்தகையது என்று பிறரிடம் கூற இயலாததாய் அமைவது. குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள பின்வரும் பாடல் பண்டைத் தமிழர் நாகரீகத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஒரு சிறந்த பாடலாகத் திகழ்கிறது.

''யாயும் ஞாயும் யார் ஆகியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே''

செந்நிலத்திலே பெய்யக்கூடிய மழைநீரானது நிலத்தின் சுவையை, நிறத்தை இயற்கையைப் பெற்றதுபோல், தலைவனும் தலைவியும் மனத்தால் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டனர் என்று விளக்குகிறார்.

''காலையும் பகலும் கையறு மாலையும்

ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்றுஇப்

பொழுதுஇடைத் தெரியின் பொய்யே காமம்'' (குறுந். 32)

இத்தகைய அகப்பொருள் பாடல்கள் பண்டைத் தமிழர் வரலாற்றை, பண்பாட்டை, நாகரிகத்தை நமக்குத் தெரிவிக்கும் அரிய பெட்டகமாக விளங்குகின்றன.

உவமையில் அழகுணர்வு:-

உவமையில் அழகுணர்வு என்பது புலவனின் மனநிலையை இரசிக்கும் தன்மையைப் பொறுத்தது. சங்ககாலப் புலவர்களின் கற்பனைத் திறத்திற்குச் சான்றாக அமைகிறது பின்வரும் பாடல்,

. . . . . . . . . . . . . . . . . ஆரியர்

கயிறாடு பறையின் கால்பொரக் கலக்கி

வாகை வெண்நெற்ற ஒலிக்கும்

வேய்பயில் அழுவம் முன்னி யோரே'' (குறுந். 7)

இப்பாடலில் வாகை மரங்களில் உள்ள காய்ந்த நெற்றுக்கள் காற்றினால் கலகலவென்று ஒலிக்கின்றன. இக்காட்சி ஆரியர் கயிற்றின் மேல் நின்று கூத்தாடுகின்ற போது அடிக்கின்ற பறையொலி போல் ஆசிரியருக்குத் தோன்றுகிறதாம். வாகை மரங்களில் காய்ந்த நெற்றுக்கள் எழும்பும் கலகல ஒலி, ஆரியர் கூத்தாடும் போது எழுப்பும் பறையொலி இவை இரண்டும் புலவர் இரண்டு வேறுபட்ட காலங்களில் கண்டதும் கேட்டதும் ஆகும். இருப்பினும் இவை இரண்டினையும் இணைத்து ஓர் அழகிய கவிதையாக்கி காலத்தால் அழியாத கருத்துப் பெட்டகமாக மாற்றியது புலவரின் கைவண்ணமாகும்.

கொங்குதேர் வாழ்க்கை எனத் தொடங்கும் இறையனார் பாடிய குறுந்தொகையின் இரண்டாவது பாடல் அழகுணர்ச்சிக்கு மற்றொரு சான்று. இந்நூலின் தனிப் பெருமைக்கு இப்பாடலும் ஒரு காரணமாகும். கூட்டத்தின் போது தலைவியின் கூந்தலை நுகர்ந்த தலைவன் இன்ப வெள்ளத்தில் மிதந்தான். அந்தக் கூந்தல் மணம் இதுவரை அவன் அறியாதது. உன் கூந்தல் மணம் ஒப்பற்றது என்று புகழ நினைத்தான். அப்படி நேரடியாக கூறுவது அழகல்ல என்று எண்ணி வண்டிடம் கேட்பதாக அமைந்தது இப்பாடல்.

''கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ'' (குறுந். 2)

தலைவன் வண்டிடம் ஒவ்வொரு மலராகச் சென்று தேன் உண்டு திரிவது உன் தொழில். உனக்கு எத்தனை அழகான சிறகுகள்! உன்னைக் கேட்கிறேன். நீ என் கேள்விக்கு மனம் மகிழும் வண்ணம் விடைகூற வேண்டிய அவசியம் இல்லை; என் விருப்பத்திற்கிணங்கவும் விடைகூற வேண்டாம்; ஒரு நிலையாக நின்று பதில் சொல். என்னோடு நெருங்கிய நட்புடையவளும், மயில் போன்ற மெல்லிய தன்மையுடையவளும், நெருங்கிய அழகிய பற்களையும் உயர்ந்த பண்பையும் சிறந்த வனப்பையும் உடையவளுமான இவளுடைய கூந்தலைப் போல நறுமணம் கமழும் மலர்கள் உண்டா? நீ கண்டறிந்த பூக்களிலே ஏதாவது இப்படி மணமுள்ளதாக இருந்தால் சொல் என்கிறான்.

முடிவுரை:-

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள உவமைகள் வழி அக்கால மக்களின் பண்பு நலன்களும், புலவர்தம் கற்பனைத்திறனும் தெற்றென விளக்குவதை இக்கட்டுரை வாயிலாக அறியப் பெறுகிறோம்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்.