நாட்டுப்புறவியல் ஓர் இலக்கிய வகையைச் சாரும், அவ்வாறு நாட்டுப்புறத்தில் வாழுகின்ற மக்கள் தாங்கள் வாழ்ந்த கால இடம், சூழ்நிலைக்கேற்ப நாட்டுப்புறவியல்கள் படைத்தனர். மானுடப் பெண்கள் வளருமொரு காதலினால் ஊனுருகப் பாடுதலிலும், வாரியம் ஏற்ற நீர்ப்பாட்டின் இசையினிலும், நெல்லிடிக்கும் கோற்றடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினும், சுண்ணமிடிப்பார் சுவைமிகுந்த பண்களிலும், பண்ணை மடவார் பழகு பல பாட்டினிலும் வட்டமிட்டும் பெண்கள் வினைக்கரங்கள் தாமொலிக்க கெட்டினத் திருமோர் கூட்டமுதப் பாட்டினிலும் வேயின் குழலோடு வினை முதலான மனிதர் வாயினுங் கையாலும் வாசிக்கும் பல்கருவியாலும் எழுந்து மனித உள்ளத்தை மகிழச் செய்வதே நாட்டுப்புறவியல் ஆகும். அத்தகைய நாட்டுப்புறவியலில் கூத்து (நாடகம்) என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
கூத்து இலக்கிய உலகில் நாடகம் Drama எனப் பெயர் பெற்று வந்தது. Drama என்பது ஆங்கிலச் சொல்லா, அதன் அடிப்படையில் இப்பெயர் வந்தது. இச்சொல், ஐரோப்பியச் சொல் இறுமா என்னும் சொல்லின் அடிப்படையிலிருந்து மருவி Drema என்னும் சொல் ஆங்கிலத்தில் எழுந்தது என கணபதியாபிள்ளை கூறியுள்ளார். நாடகம் இதனை நாடு+அகம் என்று பிரிக்கலாம். அகம் உள்ளம். வெளியில் தோன்றாது உள்ளில் அதாவது உள்ளத்திலிருந்து எழுவது. அகம் உள்ளத்தில் எழுகின்ற காதல் (அன்பு நிலை ஊடுதல், கூடுதல், விரிதல், ஆற்றியிருத்தல் இவற்றின் நிகழ்ச்சி, துன்பநிலை, ஐவகை நிலத்திலேயும் நிலைத்து நிற்கின்றன. இத்தகைய அகத்தை நாடு நாடுகின்றது. அகத்தை நாடு நாடிச்சென்று ஒன்றாகி நிற்கின்றதெனவே நாடகம் என்று பெயர். மற்றொரு பொருள் அகம் ஒவ்வொன்றும் இன்பம், துன்பம் இரண்டிலேயும் பங்கு கொண்டு இந்த அகங்கள் நாட்டினைச் சார்ந்து நாட்டில் நிலவுகின்றது. ஆண் உள்ளம், பெண் உள்ளம் அற உள்ளம், மற உள்ளம் இன்புள்ளம், அன்புள்ளம், அளிவுள்ளம், அழகுள்ளம், தாயுள்ளம், சேயுள்ளம், பாசவுள்ளம், பாழுள்ளம், வாகை உள்ளம், வஞ்சனை உள்ளம் அத்தகைய உள்ளங்களெல்லாம் நாட்டில் ஒவ்வொரு நிகழ்ச்சியை உணர்த்துவதால் இஃது நாட்டைச் சார்வதால் நாடகம் என்று பெயர் வந்தது. அதனடிப்படையிலும் பாடலும் சேர்ந்து நிகழ்வதால் நாடகம் என்று வந்திருக்கலாம். இத்தகைய நிகழ்ச்சிகளை இலக்கிய அறிஞர்கள் கூத்து என்ற சொல் மருவி கூற்று என்று கூறுவர். எடுத்துக்காட்டாக நற்றாய், செவிலி, தோழி தலைவன், பாணன் விறலி இத்தகையோர் கூற்றுக்கள் பல தொல்காப்பியர் காலத்தில் வந்துள்ளன. கூத்து அடிப்படையில் பெயர்கள் அழைக்கப்பட்டன. சான்றாக மன்மதன் கூத்து அரிச்சந்திரன் கூத்து வள்ளிக்கூத்து, சிலப்பதிகாரத்திலும் வரும் குரவைக்கூத்து என்பன.
இக்கூத்து முன்பு, நிகழ்ச்சியை ஆள் மூலம் நடித்துக் காட்டாமல் இசையால் பாடப்பெற்றன எனப் பாரதம் என்ற தமிழீகலிலும் கதாகாலட்சேபம் என்று சமஸ்கிருதத்திலும் கூறுவர். மூவர் அல்லது ஐவர் அமர்ந்து பாடுவர். ஒருவர் பாடிக் கதையைக் கூறி ஏனையோர் இயைந்து பாடுவார்கள். இதையே வடநாட்டில் வியாக்கியானம், பிரசங்கம், உபவீநியாசம் என்று கூறுவர். பாண்டவர் கதை, இராமாயணக் கதை, மாரியம்மன் கதை இவற்றைப் பாரதமாகப் பாடினர். இவற்றின் பின்பு இவற்றுடன் நடிப்புக் கலந்து உடல் அசைவுகள் சேர்ந்து கூத்தாக மாறியது. முதன் முதலில் மன்னனின் பிறந்த நாள் அல்லது வெற்றியடைந்த நாள் அல்லது விழா நாள் இவற்றில் கூத்தாடினார்கள். மன்னன் வெற்றியடைந்த பிறகு கொற்றவையை வணங்கி, துடி கொட்டி மகிழ்ச்சியில் ஆடினார்கள். இவ் ஆட்டம் கூத்துக்கு அடிப்படை. இறைவனை வழங்கும் போதும் விழவுசெய்து கூத்தாடினர். இக்கூத்து களம் அமைத்து நடைபெற்றது.
நாடக வளர்ச்சியின் முதல் நிலை (First Stage):-
தெருவில் கூத்து நடைபெற்றதால் தெருக்கூத்து என்றார்கள். இத்தெருக்கூத்து ஊரின் பொதுவிடத்தில் கோயில் அல்லது குளத்தின் அருகில் மரத்தடியில் தீபக்கோலை (தீவட்டி) ஒளியாகக் கொண்டு, மேனிமேல் பாத்திரத்திற்கேற்ற வண்ணம் பூசிக்கொண்டு துவியைத் திசைச்சிலையாக இருவர் கையால் பிடித்துக்கொண்டு, துடி (பம்பை) தாளம், முழவு இவற்றை இசைக்கருவியாகக் கொண்டு பின்பு ஊதுகுழல் சேர்த்து அங்க அசைவுகளைக் காட்டி இக்கூத்து நடைபெற்று வந்தது. இக்காலத்தில் எல்லாப் பக்கமும் சுற்றிச் சுற்றி வந்து ஆடும் வட்ட அரங்கு இருந்தது என்றும் கூத்துபார்க்கச் செல்வோர் கட்டணமில்லாமையால் கலயத்தில் எண்ணெய் கொண்டு சென்று ஒளிபெறச் செய்து கூத்து ஆடினார்கள் என்றும் கணபதியாபிள்ளை கூறுவர்.
இரண்டாம் நிலை (Second Stage):-
இதன்பிறகு களம் அமைத்தார்கள். களத்திற்கு உயரம், நீளம், அளவுகளை அமைத்துக் களம் உருவாக்கி, காற்றின் ஒளி விளக்குக் கொண்டு நிழல் விழாதபடி அமைத்து, தூண் அமைத்து, அங்க அசைவுகளைக் காட்டி நடித்து வந்தார்கள். இக்காலத்தில் தான் அணிகள், மேகலை, கடி சூத்திரம் இவைகளை அணிந்து நடித்தார்கள். இக்காலத்தில் இசைக்கருவி, யாழ், வீணை முதலியன பயன்படுத்தப்பட்டன. பொதுவாக இவ்வளர்ச்சி சிலப்பதிகாரம் எழுந்த காலத்தில் தோன்றியிருக்கலாம். சான்று தூண் அமைப்பு, கள அமைப்பு, மாதவி மேகலை அணிந்து நாட்டியம் அரங்கேறுதல், மாதவி யாழ் வாசித்தல், கள அளவு விதிமுறைகள் இவைகள் கூறப்பட்டுள்ளன.
மூன்றாவது நிலை (Third State):-
பிறகு எல்லா இசைக்கருவிகளும் பயன்படுத்தப்பட்டன. பாடுவோரும் ஆடுவோரும் ஒருவரே நிகழ்த்துதல், பலவகையான வண்ணம், அணி, மணி முடி, ஆடை ஆகியனவும் ஆண் உறுப்பு, பொன்ணுறுப்பு ஆகியனவும் பயன்படுத்தப்பட்டன. நடிப்போர் மீது வண்ண ஒளி விழும்படி செய்தல் (Focus Light) முதலியன நாடகத்துடன் சேர்ந்து நாடகத்தைச் சிறக்கச் செய்தன.
நான்காம் நிலை (Fouth Stage):-
நாடகம் நீண்டிருந்தால் எல்லோராலும் மனதை ஒருமுகப்படுத்திக் கவனம் செலுத்த இயலாத காரணத்தால் ஓரங்க நாடகம் தோன்றியது. இதில் ஒரே காட்சி அமையும் கிளைக்கதை இருக்காது. எதிர் இன்ப உணர்ச்சியோ அல்லது துன்ப உணர்ச்சியோ தோன்றும். இன்பம் (Comedy) அல்லது துன்பமாக (Treagdy) முடியும். குறுகிய காலத்தில் முடியும்.
ஐந்தாம் நிலை (Fifth Stage):-
இக்காலத்தில் காலம், ஒப்பனை செலவு, கள அமைப்பு இவற்றை வீணென்று கருதி இவையில்லாமல் சுருக்கமாகக் குறுகிய கால எல்லைக்குள் எல்லா மக்களும் கேட்கும்படி வானொலி நாடகம் தோன்றியது. இவ்வானொலி நாடகத்தில் பயிலாத மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் வழக்குச் சொற்கள், பழமொழிகள் புகுத்தப்பட்டுப் பயன்பட்டு வருகின்றன. இருப்பினும் வானொலி நாடகத்தில் சுவை தோன்றவில்லை. காரணம் நேரில் காண்பதுபோல் காட்சி உருவக அமைப்புத் தோன்றுவதுபோல் இன்பம் காட்டுவதில்லை, செவியால் மட்டுமே உணர வேண்டியுள்ளது.
ஏனைய நாடகம்:-
ஓரங்க நாடகம் தவிர ஏனைய நாடகத்தில் கிளைக்கதை உறுப்பினர் காட்சிகள் பல உண்டு. உரு ஒன்றாகவே இருக்கும் மர்மம் (Suspence) இருக்கும். இந்நாடகம் கண்டுகளிப்பவர்க்கு விருப்பூட்டுவனவாக இருத்தல் வேண்டும்.
நாடகம்:-
ஓரங்க நாடகம் தவிர ஏனைய நாடகத்தின் கிளைக்கதை உறுப்பினர் காட்சிகள் பல உண்டு. கரு ஒன்றாகவே இருக்கும், மர்மம் இருக்கும். இந்நாடகம் கண்டுகளிப்பவர்க்கு விருப்பூட்டுவனவாக இருத்தல் வேண்டும்.
நாடகம்:-
1. ஓரங்க நாடகம், 2. ஏனைய நாடகம்.
1. ஓரங்க நாடகம்:-
1. இன்பியல் நாடகம், 2. துன்பியல் நாடகம், 3. நகைச்சுவை நாடகம்.
2. ஏனைய நாடகம்:-
1. சமுதாய நாடகம், 2. வரலாற்று நாடகம், 3. சீர்திருத்த நாடகம், 4. கவிதை நாடகம் 5. பக்தி நாடகம் (அ) புராண நாடகம்.
எள்ளல் நாடகம் எனப் பகுக்கலாம். மேலும், பேராசிரியர்கள் சுவாமி விபுலானந்தரின் - மதங்க சூளாமனி நாடகம், மறைமலையடிகளின் சாகுந்தல நாடக ஆராய்ச்சி, பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகத் தமிழ் என்னும் ஆராய்ச்சி நூல் இவைகளே எஞ்சிநின்று நாடகத்தின் இயல்பை உணர்த்துகின்றன.
நடிக்கப்பெறுவது நாடகம், தனிப்பாடல்கள், சிறுசிறு நிகழ்ச்சிகள், முழுக்கதைகள் ஆகியவற்றை நீண்ட நேரம் ஆடியும், பாடியும், நடித்தும் காட்டுவது நாடகம். ஆடல், கூத்து இரண்டையும் நாடகம் என்றே கூறலாம். இசை நாடகங்களாகத் தமிழகத்தில் பள்ளு, குறவஞ்சி, குளுவம், நாட்டார் கூத்து அல்லது நாட்டார் நாடகம் ஆகிய நான்கும் முதன்மையாகக் கருதத்தக்கவை எனலாம். தனிமனித வாழ்வின் பகுதியைத் தொடர்புபடுத்தி நீண்ட நேரம் நடிக்கும் நாடகமும் சேர்ந்து அவற்றுடன் நாட்டுப்புறக்கலை நாடகங்களை ஐந்தாகப் பகுக்கலாம்.
பள்ளு நாடகம்:-
பதினாறாம் நூற்றாண்டிலிருந்து பள்ளு நாடகம் தமிழ் மக்களால் நடிக்கப் பெற்றது. பயிர்த்தொழில் செய்து வாழும் பள்ளர், பள்ளியரைப் பாத்திரங்களாகக் கொண்டு உழவர், உழவு அவர்தம் வாழ்க்கை முறைகளை நடித்துக் காட்டப்பெறும் நாடகமிது.
குறவஞ்சி நாடகம்:-
17,18,19 - ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் மக்களால் இந்நாடகம் விரும்பி காணப்பட்டது. மலையிடங்களில் வாழும் குறவர் குல மக்கள் குறிப்பாகக் குறத்தியின் வளர்ச்சியாக நடிக்க உருவாக்கப்பட்ட நாடகமிது. இனிய காட்சிகள், சுவையான பாடல்கள் எளிய ஆடல்களாக மக்கள்முன் நடித்துக்காட்டப்படும் நாடகம் இது.
குளுவ நாடகம்:-
18 ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம், நெல்லை மாவட்டங்களின் சில பகுதிகளில் நடிக்கப்பெறும் ஒரு வகை நாடக இனமாகும். மலைவாழ் கருவரின் தொழிலை விளக்கிக்காட்டும் நாடகம் இது. குளுவர், சிங்கீ, சிங்கன் என்னும் மூன்று பாத்திரங்கள் மட்டுமே நடிக்கப்பெறும் நாடகமாகும். குறவஞ்சி நாடகம் போன்று உள்ளது எனலாம்.
நாட்டார் நாடகம் (தெருக்கூத்து):-
மேடை அலங்காரம் ஏதுமின்றி தெருவில் ஒரு வெள்ளைத் துணியை இருவர் தூக்கிப் பிடிக்க, தீப்பந்தங்கள் ஒளிகாட்ட ஆடை ஒப்பனை ஏதும் இல்லாத நடிகர் முன்னால் வந்த ஆடியும் பாடியும் தெருக்களில் நடித்துக் காட்டும் நாடகங்களை மக்கள் தெருக் கூத்து என்று அழைத்தனர். மக்களுக்கு உரிய நாடகங்கள் என்னும் சிறப்புப் பொருள் தோன்ற நாட்டார் நாடகங்கள் என உயர்வாக அழைக்கப்பட்டது.
தனிமனித நாடகம்:-
17,18 - ஆம் நூற்றாண்டுகளில் ஒரு நொண்டியின் அவல வாழ்வு நொண்டி நாடகமாக நாட்டுப்புற மக்களை மகிழ்வித்தது. தீய இளைஞன் திருட்டுத்தொழிலில் ஈடுபட்டு பணம் திரட்டி, காம நாட்டம் கொண்டு, திருடி, கால் வெட்டுப்பெற்று இறைவனை வேண்டிப்பாடுவதாக அமைந்த நாடகமிது.
நாடகமேடை இலக்கணம்:-
பண்டைக்காலத்தில் நாடகமேடை வட்டமாக அமைந்து இருக்கிறது. சுற்றிச் சுற்றி வந்து ஆடினார்கள். திரைச்சீலைகளை கைகளால் பிடித்துக் கொண்டு ஆடிவந்தார்கள். நாடகமேடை பிறகு வளர்ச்சி அடைந்தது. நாடக மேடையின் அமைப்புப் பற்றிச் சிலப்பதிகாரம்,
''நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும்
......................................
தோற்றிய அரங்கு''
என்ற பாடல் மூலம் மேடையின் அமைப்பினை அறியமுடிகிறது.
''ஊரகத்தாகி உளைமான்பூண்ட
தேரகத்தோடும் தெருவுமுக நோக்கி
கோடல் வேண்டும் ஆடரங்கதவே''
என்ற பாடல் மூலம் ஊரின் நடுவே தேரோடும் வீதியில் ஆடல் அரங்கு அமைந்திருந்தது என்று அறிய முடிகிறது.
''கொடியும் மலரும் கொள்வழி எழுதிப்
பிடியுங்களிறும் பிறவும் இன்னவை
வடிமான் சோலையொடு வகைபெற வரைந்து''
என்ற திரைச்சீலை பற்றிப் பெருங்கதை உஞ்சைக் காண்டம் கூறுகின்றது. இவ்வாறு நாடக இலக்கண நூல்கள் நாடக மேடைக்கு இலக்கணம் கூறுகின்றன.
நடிகனின் இலக்கணம்:-
நவீன நல்ல உடல் நலமும் குரல் வளமும், பேச்சுத் தெளிவும் நினைவாற்றலும் தோற்றப் பொலிவும், இசை, நடனப் பயிற்சியும் பெற்றிருந்தால்தான் நன்றாக நடிக்க முடியும். உடல், கை, கால் அசைவுகளைவிட உணர்ச்சியை வெளிப்படுத்தும் கண்நோக்கும் ஒருங்கே அமையப் பெறுதல் இன்றியமையாதது என்பர் அவ்வை சண்முகம். நடிகர்களுக்கு அழகுணர்வு இன்றிமையாதது. வார்த்தைகளில் ஏற்றத்தாழ்வு இருக்க வேண்டும். அழுகை, உணர்ச்சியுடன் பேசக்கூடிய குரல் வளம் அவசியம். தெளிவான பேச்சு வேண்டும். இல்லையெனில் பொருள் மாறிவிடும். சபையின் நகைப்பிற்கு ஆளாவார். பேச்சுக்களை இடமறிந்து பேச வேண்டும். பாத்திரத்தைக் கவனித்து மற்ற பாத்திரம் முடிக்கும் சொல்லுக்குத் தகுந்தபடி வார்த்தைகளை அழுத்தமாகவும், திருத்தமாகவும் கூற வேண்டும். நடிப்பது உண்மையாகவே நிகழ்வதுபோல் தோன்ற வேண்டும். எடுத்துக்காட்டாக ரத்தகண்ர் நாடகத்தில் தலைவன் தொழுநோய் கொண்டவனாகவே காணப்படுகின்றான். நாடகத்தைக் காண்போர் உண்மையென நம்பித் தன்னையறியாமலேயே கண்ர் விடுவர். ஒரு நாடகத்தில் கொலை செய்யும் காட்சியின் பொழுது உண்மையாகவே கொலை செய்வதாக எண்ணி ஐயோ ஐயோ என்று அலறுவர். ஒரு நடிகன் உணர்ச்சிவசப்பட்டுத் தன்னை மறந்த நிலையில் நடிக்ககூடாது.
நடிகனுக்கு ஒருமுகப்பட்ட சிந்தனை தேவை. மேடையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. எப்போதும் சபையைப் பொது நோக்காகவே பார்க்க வேண்டும். நடிகன் தான் நடிக்கும் பொழுது குறிப்பிட்ட எவரையும் பார்த்தல் கூடாது. அவ்வாறு பார்த்தால் தன் சிந்தனையைக் கெடுக்கும், மேடை, சபை, நடிக்கும் பாத்திரம் இவற்றைவிட்டு வெளியே போகாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நாட்டுப்புறவியலில், கிராமத்துக் காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்து காட்டி கலைப்பற்ற உள்ளங்களைக் களிக்கச் செய்வது நாடகங்களே எனக்கூறு, இவ்வாய்ப்பினைத்தந்த தமிழியல்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நன்றியைத் தெரிவித்து இவ்வாய்வுக் கட்டுரையை நிறைவுச் செய்கின்றேன்.
நன்றி: வேர்களைத்தேடி
ليست هناك تعليقات:
إرسال تعليق