22/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 11

 தொ.ரா.பத்மநாபய்யர்

தமிழ், ஹிந்தி, செராஷ்டிரம், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளிலும் புலமை பெற்றவர் தொ.ரா.பத்மநாபய்யர். இவர், ஸ்ரீவிளம்பி ஆண்டு பங்குனி 23-ஆம் தேதி (4.4.1899) பிறந்தவர். செüராஷ்டிரரான இவர் பல தெய்வீக நூல்களை எளிய செந்தமிழ் நடையில் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய "கீதை வெண்பா' மிகவும் சிறப்பான நூலாகப் போற்றப்படுகிறது. இவரை கீதை அஷ்டாவதானி, வெண்பாப் புலி என்றும் போற்றுவர். இப்புலவர் இயற்றிய 15 வெண்பாக்கள் கொண்ட - அந்தாதித் தொடையில் அமைந்த "தமிழின் பெருமை' என்ற இப்பாடல்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷமாகும். இப்பாடல் வெளிவந்த ஆண்டு 1949.


எண்ணுமெழுத் தென்னுமிவை ஏற்றமுற மாந்தர்க்குக்
கண்ணிரண் டாகுமிவை கல்லாதார் - புண்ணிரண்டு
தம்முகத்தே கொண்டவராய்த் தாங்கணிக்கப் பட்டுள்ளதை எம்மகத்தே கொள்வோம் இனிது.
இனிமை பழைமை எழில்யாவும் கொண்ட
தனிமொழித் தண்டமிழே தக்கோர் - உனுமொழி
தென்மொழி மேலாஞ் சிவன் தந்த செல்வமாம்
நன்மொழி கொண்டதிந் நாடு
நாட்டி லுயர்ந்ததெந் நாட்டின் பெருமையினை
ஏட்டில் வரையத்தான் ஏலுமோ - மேட்டிமையாய்
மூவேந்தர் ஆட்சி முறையாகத் தானடத்திப்
பாவேந்தர்க் கீந்தார் பரிசு
பரிசுகள் பொன்மழையாய்ப் பாவேந்தர்க் கீய
வரிசையாய் நூலியற்றி வந்தார் - துரிசிலா
நூற்களும் கூடினவால் நுண்பொருள் கொண்டனவாய்
மேற்கணக்குங் கீழ்கணக்கு மே
மேவுமே ழேழ்புலவர் வித்தகமாய் வீற்றிருக்கக்
காவலனும் அங்கு கலந்திருந்து - நாவலர்கோன்
நற்கீரர் போன்றவர்கள் நற்றலைமை தன்னிலே
பொற்பீடத் துற்றாள் புகழ்
புகழ்பரவு பொற்றா மரைத்தடந் தன்னில்
திகழ்பலகைப் பண்பதனைச் செப்பின் - நிகழுருவம்
கூட்டக் குறைக்கத் தகுதியுள தெய்வீகம்
நாட்டியநாள் அந்நாள் நவில்
நவிலுந் தமிழ்மணம் நாடெங்கும் வீசக்
கவலைதான் இன்றிக் கவிஞர் - நுவலுந்தம்
நோக்கம் நுடங்காது நுண்மையாய் நூலுக்கே
ஆக்கியநாள் அந்நாளே யாம்
ஆமந்த நாளை அடைவாகக் காண்பதற்கே
நாமும் உழைத்திடுவோம் நண்பர்காள் - காமனைக்
கண்ணழலார் காய்ந்தோன் கலசமுனிக் கேயருள
மண்ணிடை வந்தவள்தன் மாண்பு
மாண்புடனே நல்ல வடமொழியைப் பாணினிக்குச்
சேண்பரவத் தந்த சிவன்றானே - ஈண்டிதற்குந்
தந்தையாமென்பார் தரணிமிசை இம்மொழிக்குச்
சொந்தமிலார் யாரிதனைச் சொல்
சொல்லிற் சுருங்கச் சுவைத்திடச் சொல்லுதலால்
கல்லுங் கரையுங் கனிமொழியால் - வல்லதமிழ்
பாடை தனக்குநிகர் பாடை மிகச்சிலவே
ஈடுசொல் வாய்க்குமால் இங்கு
இங்கிதஞ் செய்வாள் இயலிசை நாடகமென்
றெங்கும் புகழோ டிருப்பாளே - எங்கள்
அருந்தமி ழன்னை அனவரதந் தேடு
மருந்தனாள் மானிலத்தே மற்று
மற்றுந் தொடர்பாடு மங்கையர் மண்பொருள்மேல்
சற்றும் பொருந்தாத சற்சனர்கள் - கற்றும்
தெளிந்தும் இதன் சுவையைத் தீரவா ராய்ந்தும்
உளந்தனிற் கொள்வார் உவப்பு
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரியும்
புவிப்பொறை பூண்ட புனிதர் - தவப்பேறாய்த்
தாமடையவெண்ணும் தனித்தமிழின் இன்சுவையை
நாமடைய வேண்டும் நனிது
நனிதே துதியுரைகள் நாயகனுக் காக்கில்
இனிதே மகிழ்வார் இறையும் - புனிதமாம்
பேறெல்லாந் தந்து பிறப்பிறப் பற்றதொரு
ஈறில் பதமளிப்பார் ஈண்டு
ஈண்டறம் வீடளிக்கும் இன்பம் பொருளளிக்கும்
வேண்டுவன யாவும் மிகவளிக்கும் - மீண்டும்
எலும்பையும் பெண்ணாக்கும் ஈசனைத்தூ தாக்கும்
நலம்பலவுங் கொண்டதென நாடு.

நன்றி - தமிழ்மணி

1 கருத்து:

மார்கண்டேயன் சொன்னது…

மதிப்பிற்குரிய ஐயா, மிக உபயோகமான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி, ஸௌராஷ்ட்ர மொழி தாய்மொழியானாலும், தமிழ் எங்களை தாலாட்டிய, தாலாட்டிக் கொண்டிருக்கும் மொழி, இது ஸௌந்தர்ய ஸௌராஷ்ட்றரின் தமிழ் தாய்க்கான வணக்கம், நட்புடன்,

மார்கண்டேயன்.