30/01/2011

தமிழில் மேலை இலக்கியக் கவிதை வடிவங்கள் - வி. அருள்

தமிழ்க்கவிதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றை உடையது. சங்கக்கவிதை வரையிலான வரலாற்றில் யாப்பின் நெறியில் கவிதைகள் பல வடிவங்களைப் பெற்றுள்ளன. தமிழ்க்கவிதைகளைப் பொதுவாக. மரபான யாப்பு வடிவக் கவிதைகள் - யாப்பு மீறிய புதுக் கவிதைகள் - பிறமொழி யாப்பு வடிவங்களைப் பின்பற்றிய கவிதைகள் என மூன்றின் அடிப்படையில் பகுத்துக்கொள்ளலாம். இவற்றில் பிறமொழிக் கவிதை வடிவங்களைத் தமிழ்க்கவிஞர்கள் உள்வாங்கிய முறையைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

தமிழில் பிறமொழிக் கவிதை வடிவங்கள்: மனிதன் வணிக நோக்கிலும், பிற சூழ்நிலை காரணமாகவும் இடம் பெயரும் போது அங்குக் கலாச்சாரப் பகிர்தல்கள் இடம் பெறுவது தவிர்க்க இயலாதது. அதன்படி அங்குள்ள சில கூறுகள் நமக்குப் புதுவரவாக அமைகின்றது. இதைப் பாரதி

''சென்றிடுவீர் எட்டுத்திக்கும்

கலைச் செல்வங்கள்யாவும்

கொணர்ந்திங்கு சேர்ப்பீர்''

எனக் கூறியதோடு நில்லாமல் சானெட், ஐக்கூ முதலிய கவிதை வடிவங்களையும் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார்.

1. சானெட்: மேல்நாட்டுக் கவிதைகளில் சானெட் என்பது புகழ்மிக்க யாப்பு வகைக்கு உட்பட்ட கவிதையாகத் திகழ்கிறது. இதைப் பாரதி 1904இல் சுதேசமித்திரன் இதழ்வழித் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறார். பதினான்கு அடி எனும் வடிவ அமைப்பை மட்டுமே பின்பற்றி எழுதப்படும் இக்கவிதையைப் பரிதிமாற்கலைஞரும் ''தனிப்பாசுரத்தொகை'' எனும் குறுநூலில் படைத்துள்ளார். பெ.தூரன் மின்னல் பூ எனும் கவிதைத் தொகுதியில் வடிவ மாற்றங்களுடன் சானெட் கவிதை படைத்துள்ளதையும் காணமுடிகிறது.

2. ஐக்கூ: தமிழ்க்கவிதை வடிவமைப்பில் குறுகிய வடிவங்களாகத் திருக்குறளும் ஒளவையாரின் ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன் முதலிய படைப்புகளும் காணப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக ஐக்கூ சென்ரியு, லிமெரிக், லிமரைக்கூ போன்ற குறும்படைப்புகள் தமிழுலகிற்கு வருகைபுரிந்துள்ளன. ஜப்பானில் இயற்கை சார்ந்த சூழலோடு ஜென் தத்துவத்தைப் பின்னணியாகக் கொண்ட சில ஐக்கூ கவிதைகளைத் தமிழில் சி.மணி எழுத்து இதழில் முதலில் மொழிப்பெயர்த்துத் தருகிறார்.

கிளைக்குத் திரும்பும்

சருகா

பட்டுப்பூச்சி

போன்ற கவிதையின் பால் ஈர்ப்புக் கொண்டு, தமிழ் முன்னணிக் கவிஞர்களும் இத்தகைய முயற்சியில் ஈடுபடுகின்றனர். தமிழில் முதல் ஐக்கூட தொகுதியாக அமுத பாரதியின் ''காற்றின் கைகள்'' திகழ்கிறது. இந்நூலில் பேராசிரியர் இளவரசுவின் ஐக்கூட குறித்து விரிவான அணிந்துரையுடன் வெளிவருகிறது.

''இந்தக்காட்டில்

எந்த மூங்கில்

புல்லாங்குழல்''1

''வரிகள் குறைந்து இருப்பதால் வாசகன் கவனம் கவிதையில் குவியும் வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் அவன் நின்று நிதானிக்கவும் நேர்கிறது''2 என்னும் தமிழன்பனின் கூற்றின்படி இக்கவிதையின் பின்னணியில் விரியும் படிமங்கள் வாசகனை ஆழ்ந்த சிந்தனைத் தளத்திற்கு அழைத்துச் செல்வதை உணரமுடிகிறது.

3. சென்ரியு: ஐக்கூவைப் போன்றே மூன்றடி வடிவமைப்பைக் கொண்டே சென்ரியு ஐக்கூவின் இறுகிய தன்மையிலிருந்து சற்றே வேறுபட்டு மானுடம் சார்ந்த நிகழ்வுகளின் மீது. கவனம் செலுத்தத் தொடங்கிற்று. அதாவது ஐக்கூவை இயற்கைக்கவிதை என்றும் சென்ரியுவை இயற்கை சாரா மானுட ஐக்கூ என்றும் கூறலாம்.

சென்ரியுவின் அமைப்பு:

1. ஐக்கூ போன்றே மூன்றடி எல்லையைக் கொண்டது.

2. பெரும்பான்மை சென்ரியுக் கவிதைகள் இருசீர் அடியமைப்பைக் கொண்டவையாகும்.

3. ஒருசில கவிதைகளில் மட்டும் இடையடி சற்று நீண்டிருப்பதையும் காணமுடிகிறது.

4. ஈற்றடி, ஒரு புதிர்த் தன்மையுடனும் காணப்படுகிறது.

அன்றாட நிகழ்வுகளையும், சமூகச் சீர்கேடுகளையும் கேலிக்கு உட்படுத்தி நகைச்சுவை தோன்ற உரைப்பது சென்ரியு கவிதையின் பண்பாகும். இப்பண்புகளுடன் தமிழின் முதல் சென்ரியு நூலாகத் தமிழன்பனின் ''ஒரு வண்டி சென்ரியு'' எனும் நூல் திகழ்கிறது.

''மழைநாள் கவலை

காளான்களை எண்ணுவதா

கட்சிகளை எண்ணுவதா''

''ஆயிரம் பேரோடு

வேட்பு மனுத்தாக்கல்

ஐம்பது வாக்குகள்''3

எனும் கவிதைகள் இன்றைய அரசியல் நிகழ்வுகளைக் கிண்டல் தன்மையுடன் சுட்டிக்காட்டுவதைக் காணமுடிகிறது.

4. லீமெரிக்: ஆங்கிலத்தில் ஐந்து அடிகளில், யாப்பு முறையில் செய்யப்பட்ட கவிதையை லிமெரிக் என்று அழைப்பர். தாமசுமூர் என்பவரால் 18 ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது இக்கவிதை. பாலியல் சார்ந்த நிகழ்வுகளைக் கிண்டலாய் விரசமாய்க் கூறுவதே இக்கவிதையின் பண்பாகக் கொண்டனர். தமிழில் முதலில் இவ்வடிவத்தை ஈழத்து மகாகன் என்பவர் குறும்பா எனும் பெயரால் அறிமுகப்படுத்துகிறார். இவர் ஆங்கிலத்தில் உள்ள வடிவமைப்பையும் ஓசை ஒழங்கையும் பின்பற்றியுள்ளார். ''குறும்பாவால் தமிழ்க்கவிதை நகைச்சுவை ஆழமும் அகலமும் இறுக்கமும் இலகுவும் பெற்று ஒரு புதிய உச்சத்தை அடைய வழிப்பிறக்கின்றது''4 என்று எஸ்.பொன்னுதுரை குறிப்பிடுகிறார்.

''முத்தெடுக்க மூழ்குகின்றான் காலன்

சத்தமின்றி வந்தவனின்

கைத்தலத்தில பத்து முகத்தைப்

பொத்தி வைத்தான் போனான் முச்சூலன்''5

மகாகவியைத் தொடர்ந்து கோவேந்தன் என்பவரம் குறும்பாக்களைப் படைத்துள்ளார். இவர் வடிவமைப்பில் சில மாற்றம் செய்து ஆறடிக்குறும்பாக்களையும் எழுதியுள்ளார். தமிழ்க்கவிஞர்கள் ஐக்கூ சென்ரியு எனும் இலக்கிய வகைமைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தியது போல் குறும்பாக்களின் மீது கவனத்தைச் செலுத்தவில்லை என்றே கூறலாம்.

5. லிமரைக்கூ: தமிழ்க் கவிதையுலகில் இன்றைய புதிய வகையாக வடிவமாக லிமரைக்கூ விளங்குகிறது. லிமெரிக்+ஐக்கூ=லிமரைக்கூ, ஆங்கில இலக்கிய லிமெரிக்கூம், ஜப்பானிய இலக்கிய ஐக்கூவும் சேர்ந்த கலப்பினக் கவிதையே லிமரைக்கூ ஆகும். ஆங்கிலத்தில் இம்முயற்சியை டெட்பாக்கர் என்பவர் மேற்கொண்டார். தமிழில் இத்தகைய கவிதை வடிவத்தை அறிமுகம் செய்த பெருமை தமிழன்பனுக்குரியதாகும். இவரது ''சென்னிமலை கிளியோபாத்ராக்கள்'' தமிழில் முதல் லிமரைக்கூ நூலாகும்.

அமைப்பு: 1. ஐக்கூவைப் போன்றே மூன்றடி எல்லையைக் கொண்டது. 2. லிமெரிக்கின் ஓசை நயத்தையும் கொண்டு விளங்குகிறது. 3. முதலடியும், ஈற்றடியும் ஒத்துக்காணப்படுகின்றன. அதாவது மூன்று சீர்களால் ஆன சீந்தடி அமைப்பினைக் கொண்டதாகும். 4. முதலடியிலும் ஈற்றடியிலும் இயைபுத்தொடை பொருந்தி வருகிறது. ''பயணம் முடிந்து போச்சு இன்னும் என்ன படகினோடு கொஞ்சிக்குலாவிப் பேச்சு''6. 5. இடையடி மற்ற அடிகளைவிடச் சற்று நீண்டு காணப்படுகிறது. அளவடி அமைப்புக் கொண்டவை ஒருசில கவிதைகளில் இருசீர்(குறளடி) அமைப்பினையும் காணமுடிகிறது. ''வரும் போகும் வரும் போகும் நாள்கள் வறியவரை மட்டுமே கொட்டிப்போகும் தேள்கள்''7. இத்தகைய அமைப்பில் அனைத்துத்தள நிகழ்வுகளையும் பாடுபொருளாகக் கொண்டு ஓசை நயத்தோடும் நகைச்சுவைத் தோனியோடும் கூறுவதே லிமரைக்கூவின் தனிச்சிறப்பாகும்.

பிறமொழி கவிதை வடிவங்களில் தமிழ்யாப்புநெறிகள்: தமிழ்க்கவிதை மரபு சார்ந்த கூறுகளிலிருந்து விடுபட்டு நெடுந்தொலைவு வந்திருந்தாலும் இன்றைய நவீனக் கவிதைகள் உள்ளிட்ட மேற்கண்ட கவிதை வடிவங்களிலும் யாப்பியல் கூறுகள் தன்னிச்சையாக இடம் பெற்றிருப்பதைக் காணமுடிகிறது. பொதுவாக மேற்கண்ட கவிதை வடிவங்களைத் தொல்காப்பியர் கூறும் எண்வகை வனப்பினுள் அம்மை, விருந்து எனும் யாப்பியல் கூறுகளுக்குள் பொருந்திப் பார்க்கமுடிகிறது.

''சின்மென் மொழியால் தாய பனுவலொடு

அம்மைதானே அடி நிமிர்புஇன்றே''(தொல்-1491)

ஐக்கூ, சென்ரியு, லிமெரிக், லிமரைக்கூ முதலிய கவிதை வடிவங்கள் இத்தகைய வரம்பிற்கும் உட்பட்டவையாகும்.

''எழுகின்ற கதிருக்கு

எத்தனை எத்தனை ரசிகர்கள்

புல்வெளியெங்கும் பனி''8

இந்த ஐக்கூவின் முதலிரு அடிகளில் அடிமோனையும் இரண்டாமடியில் சீர்மோனையும் இடம்பெறுவதைக் காணலாம். மற்றும் குறும்பாக்கள் அனைத்திலும் யாப்பியல் கூறுகள் செறிவாகக் கையாளப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

''நம்பிக்கை நீ வைத்திடடி என்றான்

நம்பிக்கையை வைத்த அவளைவென்றான்

நம்பிக்கையை வைத்தவன் பால்

நாலாறு திங்களாக்கி

நல்வயிற்றுக்குள் அவனே நின்றான்''9

இக்குறும்பாவில் அடிதோறும் மோனையும் முதலிரு அடிகளிலும், ஈற்றடியிலும் இயைபுத்தொடையும் செறிவான ஓசை நயத்தோடும் விளங்குகிறது. லிமரைக்கூ கவிதையிலும் அடிமோனை, சீர்மோனை, இயைபுத்தொடை போன்ற கூறுகளை காணமுடிகிறது.

''திண்டுக்கல்லுப்பூட்டை

திறக்க முடியவில்லை திருடன்

திருடிப்போனான் வீட்டை''10

''அத்தனை மீன்கள் வலைகளில்

அடுத்த நாள் கடலிலே

அத்தனை அழகை அலைகளில்''11

என மேற்கண்ட கவிதைகளில் தமிழ் யாப்பியல் கூறுகள் சில நெகிழ்வுத் தன்மையுடனும், புதுப்பொலிவுடனும் பல்வேறு புதிய பா வகைகளின் வழி தமிழுக்கு அணிசெய்பனவாக உள்ளன.

அடிக்குறிப்பு:

1. அமுதபாரதி, காற்றின் கைகள்

2. தமிழன்பன், சூரியப்பிறைகள், முன்னுரை

3. தமிழன்பன், ஒரு வண்டி சென்ரியு

4. எஸ்.பொன்னுதுரை, மகாகவி குறும்பா முன்னுரை

5. மகாகவி, குறும்பா

6. தமிழன்பன், சென்னிமலை கிளியோபாத்ராக்கள்

7. மேலது.

8. அமுதபாரதி, காற்றின் கைகள்

9. த.கோவிந்தன், குறும்பா

10.தமிழன்பன், சென்னிமலை கிளியோபாத்ராக்கள்

11.மேலது.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்.

 

1 கருத்து:

கிளமண்ட் சொன்னது…

சிறப்பு அன்பரே........வாழ்த்துக்கள் தங்கள் தமிழ் பணி தொடர ......வாழ்க வளமுடன்