30/01/2011

பத்துப்பாட்டில் பாலை வருணனை - ச.பொ. சீனிவாசன்

சங்க அகப்பாடல்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்திணைப் பாகுபாட்டில் அமைந்தவை. இவற்றில் நடுவண் திணையாகிய பாலைத்திணையைத் தவிர்த்த ஏனைய திணைகள், தனித்தனி நிலங்களைப் பெற்றவை, பாலையின் நிலம் பற்றித் தொல்காப்பியர் தெளிவாகக் குறிப்பிடாத நிலையில் இளங்கோவடிகள் குறிஞ்சியும் முல்லையும் திரிந்த வறண்ட பகுதியினை (சிலம்பு. காடு. 64-66) பாலையின் நிலமாகக் குறிப்பிட்டுள்ளார். தனியான நில அமைப்பைப் பெறாத நிலையிலும் சங்க அகப்பாடல்களில் பாலைத்திணைப் பாடல்களே மிகுதியாகப் புலவர்களால் பாடப்பட்டுள்ளதிலிருந்து இதன் தனித்துவமான இலக்கியத் தன்மையை உணரலாம்.

பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நான்கு அகநூல்களில் பட்டினப்பாலை மட்டுமே பாலைத்திணையில் அமைந்தது. நெடுநல்வாடையை மறைமலையடிகள் பாலைத்திணை என்று குறிப்பிட்டுள்ள போதிலும், முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்னும் முப்பொருளும் முல்லைத்திணை அமைப்பிலேயே உள்ளதெனலாம், பட்டினப்பாலையாகிய அகப்பாட்டோடு, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி மலைபடுகடாம் ஆகிய புறப்பாடல்களில் காணலாகும். பாலை வருணைகளில் குறித்த செய்திகள் இங்கு எடுத்துக் காட்டப்படுகின்றன.

பாலைநில வருணனைப் பகுப்பாய்வு:-

பட்டினப் பாலையில் பாலைத்திணையின் உரிப்பொருளான பிரிதலும் பிரிதல் நிமித்தமும் செம்மையாக வருணிக்கப்பட்டுள்ளது. இந்நூலில் ஏனைய முதற்பொருளும் கருப்பொருளும் முற்றிலும் மாறுபட்டு, நெய்தல் திணையின் முதற்பொருளும் கருப்பொருளும் வருணிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு மாறாக புறப்பாட்டுகளான பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மதுரைக்கஞ்சி, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களிலும் பாலையின் முதற்பொருளும் கரும்பொருளும் செம்மையாக வருணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பத்துப்பாட்டில் அகம், புறம் இருதிணைகளிலும் இடம்பெறும் பாலைநில வருணனைகள், (1) முதற்பொருள் வருணனை (2) கருப்பெருள் வருணனை (3) உரிப்பொருள் வருணனை என்று பகுத்துரைக்கப்பட்டுள்ளன.

முதற்பொருள் வருணனை:-

நிலமும் பொழுதும் முதற்பொருள் என வழங்கப்படுவதால், பாலைநிலமும், அதன் சிறு, பெரும் பொழுதுகளும் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளன. பத்துப்பாட்டில் இடம்பெறும் பாலை நிலக் காட்சி வருணனைகள், குறிஞ்சியும், முல்லையும் முறைமையிற் திரிந்து பாலைநிலமாக உருக்கொள்ளும் என்ற இளங்கோவடிகளின் கூற்றினை மெய்ப்பிப்பதாக அமைந்துள்ளன. இதனை அடியொற்றி, குறிஞ்சி நிலம் மட்டும் தனியே பாலையாதலும், முல்லை நிலம் மட்டும் தனியே பாலையதாலும் உண்டென்கிறார் இராசமாணிக்கனார் (பத்துப்பாட்டு ஆராய்ச்சி பக். 91) பத்துப்பாட்டில் குறிஞ்சி, முல்லை என்ற இரு நிலங்களின் திரிபாகவே புனையப்பட்டுள்ள பாலைநிலம், சுரம், கானம், காடு, கடறு, களர் செந்நிலம், சிலம்பு, குன்றம் போன்ற பல பெயர்களால் சுட்டப்பட்டுள்ளது. இப்பாலை நிலக் காட்சி அதன் வண்ணம், வெம்மை, பரல், உயிரினச் சுழற்சி, பயிரின வாட்டம், வறட்சி, எயினக் குடியிருப்புகள் ஆகிய வருணனைக் கூறுகளுடன் புனையப்பட்டுள்ளது.

பாலைநிலம், கடும் வெம்மையுடையதாகக் காட்டப்படுவது பட்டினப்பாலையில் தலைவனின் செலவழுங்கலுக்கான காரணியாகிவிடுகின்றது. ஆனால், புறநூல்களில் கடுமையாகக் காட்டப்பட்டுள்ள போதிலும், அவ்வழிச் செல்வாக்குப் பாதுகாப்பானதாகவும் நல்லுணவு கிட்டுவதாகவும் குறிப்பிடுவது ஆற்றுப்படையில் தலைவனின் வளம் சுட்டும் ஓர் உத்தியாகிவிடுகின்றது. தொல்காப்புயர், பாலையின் பெரும்பொழுதினை, இளவேனில், முதுவேனில் என்று தனித்தனியே குறிப்பிடாமல் வேனில் என்ற சொல்லாலேயே (தொல். அகம் 9) குறிப்பிட்டுள்ளார்.

பத்துப்பாட்டில் சுட்டப்படும் மூன்றிடங்களிலும் (சிறுபான் 9, பெரும்பாண் 3, மதுரைக் 313) வேனில் என்ற சொல்லாலேயே சுட்டப்பட்டுள்ளது. பாலையின் சிறுபொழுதாகிய நண்பகல் (பொரு. 46) காலை (சிறுபாண் 9-10) பகல் (பெரும்பான் 2, 111) என்ற பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு, பொழுது வருணனைகள், பாலையின் கடுமையையும் கொடுமையையும் தீவிரமாகக் காட்டுவதற்கும், அதன்மூலம் புகழ்ந்துரைக்கும் வள்ளலின் ஆட்சிக் சிறப்பினை விளக்குவதற்கும் உரிய கருவியாக புலவர்களுக்கு அமைந்துள்ளன.

கருப்பொருள் வருணனை:-

முதற் பொருட்களான நிலம், காலம் ஆகிய இரண்டின் தன்மைகளும் கருப்பொருட்களின் வழியே பிரதிபலிக்கப்படுகின்றன. தெய்வம், மக்கள், உணவு, தொழில், விலங்கு, பறவை, மரம், பூ ஊர், நீர் பறை, யாழ், பண் ஆகியவற்றைக் கருப்பொருட்களாகத் தொல்காப்பியரும் பிறரும் (தொல்.அகம்.20 நம்பி. அகம்.19) குறிப்பிட்டுள்ளனர்.

பாலைக்குரிய தெய்வம் கொற்றவை. இத்தெய்வம் பற்றிய செய்தி, பாலை வருணனையில் ஓரிடத்தில் மட்டுமே காடுறை கடவுள் (பொருநர் 52) என்று சுட்டப்பட்டுள்ள்து. இது தவிர, பெரும்பாணாற்றுப்படையிலும் (458-459), திருமுருகாற்றுப்படையிலும் (258), நெடுநல்வாடையிலும் (168) கொற்றவை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்காட்சிகள், கொற்றவையின் காடுறைவு, துணங்கைக் கூத்து, முருகனைப் பெற்ற செல்வி, போர்க்குரிய தெய்வம் போன்ற கூறுகளுடன் வருணிக்கப்பட்டுள்ளன. பாலை வருண€யில் ஓரிடத்தில் முருகன் பற்றிய குறிப்பும் (பெரும்பான். 75) உவமையாக வந்துள்ளது

இலக்கண நூலார் பாலை நில மக்களாக விடலை, காளை, மீளி, எயிற்றிர், எயினர், மறவர் போன்றோரைக் குறிப்பிட்டுள்ளனர். பத்துப்பாட்டில், எயினர், எயிற்றியர், கானவர் என்ற சிறப்புப் பெயர்களாலும், ஆறலைக் கள்வர், கொடியோர், வம்பலர், வன்சொல் இளைஞர் என்று பொதுப்பெயர்களாலும் பாலை நில மக்கள் சுட்டப்பட்டுள்ளனர். இம் மக்கள் வருணனை, அவர்களின் தொழிலோடும் செயலோடும் இயைவு பெற்று வந்துள்ளது. இலக்கண நூல்கள் பாலையின் உணவாக வழிப்பறித்தல், கொள்ளையடித்தல் மூலம் கிடைக்கும் பொருட்களையே குறிப்பிடுகின்றன. ஆனால் பாலை வருணனைப் பகுதியில் இன்புளி வெந்சோறு + ஆமான் சூட்டிறைச்சி, புல்லரிச்சோறு + வாடுஊன் பன்றி, முயல் இறைச்சி, நெல்லின், செவ்வவிழ்ச் சொன்றி + உடும்பின் வறை ஆகிய இனிய உணவு வகைகளைப் பாலை நில மக்கள் விருந்தினர்களுக்குப் படைத்த செய்தி பேசப்பட்டுள்ளது. இவை, பாலையின் மேட்டு நிலங்களில் விவசாயம் நடைபெற்றதனை உறுதிப்படுத்துகின்றன. மேலும், ஆற்றுப்படை நூல்களில் மட்டுமே உணவு வருணனைகள் மிகுதியாக இடம்பெறுவது, வள்ளல்களின் வளம் சுட்டும் நோக்கமுடையது.

ஆறலைக்களவே பாலையின் முக்கியத் தொழிலாக எடுத்து மொழியப்படுகின்ற போதிலும் (1) வேட்டையாடுதல் (2) பெருவழிக் கவலைக் காவல் (3) போர்த் தொழில் (4) புல்லரிச எடுத்தல் போன்ற வேறுபல தொழில்களும் பத்துப்பாட்டின் பாலை வருணனையில் காட்சியுருப் பெற்று வந்துள்ளன. இவற்றுள் ஆடவர், ஆறலைக்களவு, வேட்டையாடுதல், கவலைக்காவல், போர் செய்தல் போன்ற தொழிலையும், பெண்டிர், புல்லரிசி எடுத்தல், உணவடுதல் தொழிலையும் செய்துள்ளனர்.

பாலை நில விலங்கின வருணனையில் பாலையின் விலங்குகளும் பறவைகளும் இடம்பெற்றள்ளன. இப்பகுதியில், யானை, மான், எய்ப்பன்றி, நமலி, கழுதை, முயல், அணில், எலி, உடும்பு, பாம்பு, போன்ற விலங்குகள் வருணனை செய்யப்பட்டுள்ளன. இவ்விலங்குகளின் சுழற்சி, பாலை நிலத்தின் வறட்சியைப் படம்பிடிப்பது போல் விளக்கப்பட்டுள்ளது. பாலை நிலத்தில் நீரின்மையால் பறவைகள் அருகிலேயே காணப்படும் என்பர். இதனைப் பத்துப்பாட்டில் இடம்பெறும் பாலைக்காட்சியிலும் காண முடிகின்றது. பாலையில் பருந்து, குயில் என்றும் இரண்டு பறவைகள் மட்டுமே ஓரோரிடத்தில் (பெரும் 117 - 118) காட்சி பெற்று வந்துள்ளன. ஓன்னாத் தெவ்வரைக் குத்தி மாய்த்த பிணத்தினைத் தின்னவரும் பறவையாக பருந்துச் சுட்டப்பட்டுள்ளது. கொல்கரை நறும் பொழிவில் பூவினைக் குடைந்து உதிர்க்கும் குயில், கான்போர் வியக்கும் காட்சியோடு இணைவு பெற்றுள்ளது.

தாவர வருணனையில் பாலை நில மரங்கள், புற்கள், கொடிகள் ஆகியவை காட்சி பெற்றுள்ளன. இக்காட்சிகளில், மராஅமரம், ஈந்தமரம், பலா, மூங்கில், இலவம், விள்வம், தேக்கு, கடுமரம் அகத்தி, அரக்கு, தேமா ஆகிய மரங்களும் ஊகம்புல், நெல், புதல், நுண்புல் ஆகிய புற்களும், மிளகு, தாமரை ஆகிய கொடிகளும் வருணனையாக்கம் பெற்றுள்ளன. இவற்றில் பலா, அகத்தி, இலவம், அரக்கு, தேமா, தாமரை போன்றவை உவமையாக வந்தவை. இத்தாவர வருணனையில் இடம்பெறும் மரங்களும், புற்களும் கொடிகளும் பல்வேறு உயிரினங்களின் இயங்குகளப் பின்னணியாக அமைவதோடு பாலை நிலத்தின் இயல்பினைக் காட்டும் கருவிகளாகவும் அமைந்துள்ளன.

பாலைத்திணையின் யாழ், பறை, பண் போன்றவற்றை முறையே பாலையாழ், துடிப்பறை, பாலைப்பண் (பஞ்சுமரம்) என நம்பியகப்பொருள் (அகம். 21) குறிப்பிட்டுள்ளது. பத்துப்பாட்டின் பாலை வருணனையில் பாலையாழும் (பொருநா. 4-24), சிறுபாணா, 34 - 37), துடி (பெரும்பாண 234), தட்டை (மதுரைக். 304 -305) ஆகிய பறைகளும் பாலைப்பண்ணும் (பொருநர். 21-22) சிறுபாண. 36-37, (பெரும்பாண. 179-180) இடம்பெற்றுள்ளன. பாலையின் ஊர்கள், வில்லுடை வைப்பு, கொடுவில் எயினக் குறும்பு என்றும் நீர்நிலைகள், நெடுங்கிணற்று வல்ஊற்று, அகழ்சூல் பயம்பு எனவும் காட்டப்பெற்றுள்ளன.

உரிப்பொருள் வருணனை:-

பிரிதலும் பிரிதல் நிமித்தமும் பாலைத்திணையின் உரிப்பொருளாகும், பத்துப்பாட்டில் பட்டிணப்பாலை மட்டுமே பாலையின் உரிப்பொருள் அமைவினைப் பேசுகின்றது. இந்நூலாசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் புதுமை படைத்துள்ளார். 301 அடிகளில் விரிந்து கிடக்கும் நூலில் நான்கு அடிகளில் (219-220. 300-301) மட்டுமே உரிப்பொருளை வருணித்துள்ளார். மீதமுள்ள 218 அடிகளில் (பட்டினப் 1-218) காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பினையும் 79 அடிகளில் (221-229) கரிகாலனின் வெற்றிச் சிறப்பினையும் பாடியுள்ளார். பட்டினப்பாலையில் பாலையின் கருப்பொருள் பற்றி ஓரிடத்தில் கூடச் சொல்லாத உருத்திருங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையில் பாலையின் முதற்பொருளையும், கருப்பொருளையும் ஏறத்தாழ 73 அடிகளில் (39-41, 23-24, 67-133, 179-180) விரிவாகப் பேசியுள்ளமை அவருடைய புதுமை முயற்சியின் வெளிப்பாடெனலாம். உரிப்பொருள் வருணனையில் தலைவனின் செலவழுங்கலுக்குக் கானத்தின் வெம்பையும், தலைவியின் தடமென்தோளின் தண்மையும் காரணங்களாகச் சுட்டப்பட்டுள்ளன.

பாலைநிலக் காட்சிப் புனைவின் நோக்கம்:-

கவித்துவமிக்க காட்சிகளைப் புனையும் ஒவ்வொரு புலவர்க்கும் ஒவ்வொரு உயிரினையும் பொருளினையும் புனைவதில் ஓர் உள்நோக்கம் உண்டு. இந்நோக்கமும் கவித்துவமும் இயற்கையானதாகவும், சமூகத்தின் பிரதிபலிபாகவும் அமையும்போது புனையப்பட்ட பாட்டு சாகாவரம் பெற்றுவிடுகிறது. பத்துப்பாட்டின் பாலை நிலக்காட்சிப் புனைவின் நோக்கமும் கவித்துவமும் சமூகப் பிரதிபலிப்பும் கீழ்க்கண்டவாறு நிரல்படுத்தப்படுகின்றன.

1) பாலைத்திணை பற்றிய வருணனை, பத்துப்பாட்டின் பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய நான்கு ஆற்றுப்படை நூல்களிலும் வள்ளல்கள் புகழ்ந்துரைக்கும் விதமாக இடம்பெற்றுள்ளது. மதுரைக்காஞ்சியும் பாண்டியன் நெடுஞ்செழியனின் ஐந்நிலச் சிறப்புக் கூறி அவனுக்கு நிலையாமையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. பட்டினப்பாலை அகநூலானாலும் அதிலும் கரிகாலனின் சிறப்பே முன்னிறுத்தப்பட்டுள்ளது.

2) பத்துப்பாட்டில் அகத்தினை மரபுகளும் புறத்திணை மரபுகளும் ஒன்றையொன்று பின்னிப்பிணைந்து காணப்படுவதாலும், பெரும்பான்மையான நூல்கள் வள்ளல்களை மன்னர்களைப் புகழ்ந்துரைப்பதாலும் இவற்றில் ஐந்நிலங்களின் வளம் சுட்டுவது தவிர்க்க இயலாத கூறாக அமைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பாலை நிலத்தின் வளம் சுட்டுவது பாலை வருணனையின் முதன்மையான நோக்கமாக உள்ளது.

3) எல்லாப் புலவர்களும் பாலை நிலத்தைக் கடுமையான வறட்சியுடன் காட்டினாலும் ஆற்றுப்படை பாடிய புலவர்கள் மட்டும் பாலை நிலத்தின் வறட்சியோடு அங்கு கிடைக்கும் உணவு வகைகளையும் அம்மக்களின் விருந்தோம்பல் சிறப்பினையும் வருணித்திருப்பது ஆற்றுப்படை துறைப்பொருளோடும் வள்ளலின் ஆட்சிச் சிறப்போடும் புலவர்களுக்கிருந்த நோக்கத்தினைப் புலப்படுத்துவதாகும்.

4) பாலை வருணனையில் அர்த்தம் சொல்வோரை அலறத் தாக்கிக் கைப்பொருள் வெளவும் களவு ஏர் வாழ்க்கைக் கொடியோரும், இடுக்கண் செய்யாது இயங்குநரைப் பேணும் தகைமை உடையவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். இக்காட்சிகளும் வள்ளல்களைச் சிறப்பிக்கும் புலவர்களின் உள்நோக்கங்களைப் பிரதிபலித்துள்ளன.

5. முதற்பொருள்களான நிலம், பொழுது ஆகிய இயற்கைப் பின்னணியும் கருப்பொருள்களான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இயங்குகளப் பின்னணியும் புலவர்களுக்குப் பாலை நிலத்தின் இயல்பினைக் காட்டும் கருவியாக அமைந்துள்ளன.

6) பத்துப்பாட்டில் பட்டினப்பாலை, பெரும்பாணாற்றுப்படை என்னும் இரண்டு நூல்களைப் படைத்துள்ள கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப்பாலையில் பாலைத்தினையின் உரிப்பொருளை மட்டும் வருணித்து, முதற்பொருளையும் கருப்பொருளையும் நெய்தல் திணைப் பொருளாய்யாத்துள்ளார். புறப்பொருளை - ஆற்றுப்படைப் பொருளைப் பாட வந்த அவரே பெரும்பாணாற்றுப்படையில், அகத்திணையாகிய பாலையின் முதற்பொருளையும், கருப்பொருளையும் வருணித்து, இலக்கிய மரபிலும், வள்ளல்களைப் புகழும் வாழ்த்து மரபிலும் புதுமை படைத்து தனது தனித்தன்மையை நிலைநாட்டியுள்ளார்.

நன்றி: முன்னைத் தமிழிலக்கியம்

 

கருத்துகள் இல்லை: