30/01/2011

சிலப்பதிகாரம் சுட்டும் மாறும் வழிபாட்டு மரபுகள் - இரா. மனோகரன்

முன்னுரை:

சிலப்பதிகாரம் ஓர் அரிய பெருஞ் சுரங்கம். தோண்டத் தோண்ட புதிய புதிய உண்மைகளைக் கொடுக்கும் கலைக்களஞ்சியம். இது தன் காலத்து நிகழ்வுகளோடு தொல்கால மக்களின் பழக்க வழக்கங்களையும் பதிவு செய்துள்ளது. சமயப் போர்கள் தமிழகத்தில் நிகழ்ந்த காலத்தில் சிலப்பதிகாரம் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும். வைதீக சமயத்தைப் பரப்ப முயலும் தன்மையும் அது தென்பகுதியில் நிலைகொண்ட தன்மையும் சிலப்பதிகாரம் தன்னுள் பொதிந்துள்ளது. இக்கருத்துக்களை மானிடவியல் நோக்கில் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

தொல் சமயம் வரையறை:

சமயம் என்பது புனிதமான ஒன்றைப் பற்றிய நம்பிக்கைகளும் செயல்முறைகளும் அடங்கிய ஓர் ஒழுங்கமைந்த முறை என்பர் மானிடவியலார் (பக்தவத்சல பாரதி 1999 ப.189). மனித வாழ்வில் சமயத்தின் வயது அறுதியிட முடியாதது. நியான்டர்தால் மனிதனின் காலத்திலேயே சமய நம்பிக்கை ஏற்பட்டுவிட்டதாகக் கருதுவர். தொல்காலத்தில் பின்பற்றப்ட்ட சமயங்களைத் தொல்பழம் சமயம் என்ற சொல்லின் வரையறைக்குள் அடக்குவர். தொல் மக்களின் குறிக்கோள் நிகழ்கால வாழ்வினை வாழ்வதேயாகும். எனவே மனிதன் வாழ்வதற்குத் தேவையான உணவு முதலான தேவைகளை நிறைவேற்றவும், இயற்கையின் அபரிவிதமான ஆற்றலைத் தன் வயப்படுத்தவும் மனிதன் சமய நம்பிக்கைகளைக் கைக்கொள்ளலாயினான். இச்சமயங்கள் காலப்போக்கில் பல மாற்றங்களைப் பெற்று நிறுவனமாகியது. இதன் வளர்ச்சி நிலையினை இன்றுள்ள சமயக் கூறுகளில் காணலாம். இதனடிப்படையில் சமயங்களைத் தொல்பழஞ்சமயம், நிறுவனமாக்கப்பட்ட சமயம் எனும் இருவகைகளில் பிரிக்கலாம்.

தொல்பழஞ்சமயத்திற்கும், நிறுவனமாக்கப்பட்ட சமயத்திற்கும் அடிப்படையில் சில தொடர்புகளும் பல வேறுபாடுகளும் உண்டு. தொல்பழஞ்சமயவாதி தனிமனிதக் கண்ணோட்டத்தோடு சமூகத்தைப் பார்க்கிறான். நிறுவனமாக்கப்பட்ட சமயங்களில் தனிமனித உணர்வுகள் பதம் பார்க்கப்படுகின்றன. ஆவி வழிபாட்டில் தொடங்கி இன்றைய ஒரு கடவுள் கோட்பாடு வரை நிகழ்ந்துள்ள மாற்றங்களைப் படிமலர்ச்சி (Evelvation) என்ற சொல்லால் குறிப்பர். இங்குப் படிமலர்ச்சியென்பது தொடர்ச்சியான மாற்றம் என்பதையே பிரதிபலிக்கும். எந்த ஒன்றையும் தாழ்ந்தது, உயர்ந்தது என்பதைப் பிரதிபலிக்காது (பக்தவத்சல பாரதி 1999. ப.189) இந்தத் தொடர்ச்சியான மாற்றம் சிலப்பதிகாரத்திலும் பிரதிபலிக்கக் காணலாம். புகார்க் காண்டத்தில் காணப்படும் பூதங்களின் வழிபாடும் வேட்டுவரி சுட்டும் கொற்றவை வழிபாடும் வஞ்சிக் காண்டம் சுட்டும் வைதிக வழிபாடும் எனப் பல்வேறு வழிபாட்டுச் சூழல்களைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். ஆய்விற்காகச் சமயத்தினை நாட்டார் சமயங்கள், வைதிகம் சார்ந்த சமயங்கள் எனப்பகுக்கலாம்.

சிலப்பதிகாரத்தில் நாட்டார் வழிபாடு:

சிலப்பதிகார வேட்டுவரியில் நாட்டார் வழிபாட்டு மரபுகள் சுட்டப்பட்டுள்ளன. இப்பகுதி பாலைநில மக்களான எயினர்களின் வழிபாட்டு மரபினைக் கூறுகிறது. இக்காதையின் தொடக்கப்பகுதியே மக்களை அறக்குடியினர், மறக்குடியினர் என இரண்டாகப் பகுக்கிறது. (சிலப்.ப.180) இதிலும் மறக்குடியினரின் அடுதல் வாழ்வு சுட்டப்பட்டுள்ளது.

மட்டுஉண் வாழ்க்கை வேண்டுதீர் ஆயின் எனும் வரி போரின் விளைவாய் எழும் கொள்ளைப் பொருட்களைப் பெற விரும்புவீராயின் உடனடியாகக் கொற்றவைக்குப் பலி கொடுத்து அவளைத் திருப்தி செய்தல் அவசியம் எனக் கூறுகிறது. வேட்டுவ வரியின் இப்பகுதியை லெவிஸ்ட்ராசின் அமைப்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்ந்தால் இயற்கை பண்பாடு எனும் எதிரிணை செயல்பட்டிருப்பதை அறியலாம் இங்கு உணவுத் தேவையும் வாழ்வியல் போராட்டங்களுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. வெட்சி மலர்சூடி ஆநிரை கவர முற்படுதல் கல் விலை கொடுக்க இயலாத தலைவன் போருக்குச் செல்ல கொற்றவை துணையிருத்தல். அதனால் ஏற்படும் போர்விளைவுகள், பலன்கள் கொற்றவையால் ஏற்படல் எனும் கருத்துக்கள் செல்வ வளம் பெறல் எனும் பண்பு மட்டுமன்றி தனது நிகழ்கால வாழ்க்கையை நல்லமுறையில் நடத்த எண்ணும் எண்ணமே வெளிப்படக் காணலாம்.

வேட்டுவ வரியில் பலி:

இயற்கையின் தன்மையிலிருந்து விடுபட்டுப் பண்பாட்டின் தன்மையைப் பெறுவது என்பது பலி படையிடுதல் என்னும் தளத்தோடு உறவுகொண்டுள்ளது. (பக்தவத்சல பாரதி 2002, ப.244) சிலப்பதிகாரத்தில் கொற்றவை பலிகேட்கும் நிலையும் எயினர்கள் தாங்களாகவே தங்களைப் பலிகொடுக்கும் நிலையும் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது. இந்நிலை இயற்கை பண்பாடு எனும் தளத்தில் இயற்கை விழைவிற்கான உணர்வாகக் கருதலாம். தாவரப் பலி கொடுத்தல் என்பது பண்பாட்டு விழைவின் பாற்பட்டது எனும் கருத்தாக்கம் உள்ளது. பலிபீடத்தைச் சுற்றி மலர்ப்பலி கொடுக்கும் எயினர்களின் செயல் இதனைக் குறிக்கின்றது. புன்னை, நரந்தை, ஆச்சா, சந்தனம், வேங்கை (மலர்), இலவம்பூக்கள், வெண்கடம்பம், பாதிரி, புன்னை, குரவம், கோங்கம் முதலியன பலிபீடத்தின் முன்றிலில் நிறைந்துள்ளன (சிலப்.ப.185) எனும் பகுதி பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதைக் காணலாம். வேட்டைச் சமூகத்தில் உயிர்ப்பலி என்பது ஒன்று வாழ மற்றொன்றைக் கொல்லுதல் (பக்தவத்சல பாரதி 2002. ப.245) எனும் செயலின் அடிப்படையில் அமைந்துள்ளது. கொற்றவை தந்த வெற்றியின் விலையாகத் தங்களையே பலிகொடுக்கும் தன்மை எயினர்களிடம் காணப்படுகிறது என அறியலாம்.

''அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது

மிடறு உகு குருதிகொள்தரு விறல்தரு விலையே''

''கணநிறை பெறுவிறல் எயின் இரு கடன் இது

நிணன் உகு குருதி கொள்நிகர் அடு விலையே''

வேட்டுவ வரி சுட்டும் வழிபாட்டுச் சடங்கு முறைகள்:

நாட்டார் தெய்வங்கள் நிறையற்ற இடத்தைக் கொண்டுள்ளன. இத்தெய்வங்களின் இருப்பு நிலையற்றது எங்கும் தோன்றுவதும் (பக்தவத்சல பாரதி 2002 ப.242). ஊரின் நடு மன்றத்தில் சாமியாடிக் கொற்றவைக்குப் பலி வேண்டும் எனக் கேட்கின்றாள். அதனைத் தொடர்ந்து வழிபாட்டுச் சடங்குகள் தொடங்குகின்றன. சாமியாடிகளின் இத்தகைய நிலையின் அடிப்படையில் நாட்டார் சமயத்தில் இயல்பினைக் கட்டமைக்கிறார். நாட்டார் தெய்வங்களை வழிபடும் எயினர்களின் சடங்கினைப் பிரித்தல் சடங்கின்வழி விளங்கலாம். வேட்டுவ வரியில் பெண் ஒருத்திக்குத் தெய்வ வேடமிடுதலைப் பிரித்தல் சடங்காகக் கொள்ளலாம். தொல்குடிக்குமரி ஒருத்திக்கு கொற்றவையின் வேடம் அமைக்கும் முறையாகத் தலைமுடியைப் பாம்புபோல் பிரித்துக்கட்டுதல், பண்றியின் வெண்பல்லைத் தலையில் கட்டுதல், புலிப்பல் தாலி அணிவித்தல், புலித்தோலை இடையில் மேகலையாய் உடுத்துதல், வில்லைக் கையில் கொடுத்தல், கலைமானின் மேல் அமர வைத்தல் முதலான சடங்குச் செயல்கள் எல்லாம் பிரித்தல் சடங்கு (Seperation rites) எனும் செயலாகக் கருதலாம். இதன் தொடர்ச்சியாக நிகழும் சாலினி கொற்றவையாய் மாறலும், கொற்றவை கூறுதலும் நிலைமாற்றுச் சடங்கு (Transitional rites) எனும் பிரிவில் அடக்கலாம். இத்தகையச் சடங்கு நிகழ்வுகளே உலகப் பொதுமையானது என்பர்.

வைதீக வழிபாடுகள்:

வஞ்சிக்காண்டத்தில் கண்ணகியின் வழிபாட்டு நிலை வைதீக வழிபாடுகளாக நிகழ்த்தப்படுகின்றன. கால்கோட்காதை, நீர்ப்படைக்காதை, நடுகற்காதை, வாழ்த்துக்காதை எனும் 4 காதைகளில் வைதீகச் சடங்கு முறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போக்கினைக் காணலாம். கோட்டம் அமைத்தல், தெய்வப்படிவம் சமைத்தல், பூப்பலி கொடுத்தல், காப்புக்கடை நிறுத்தல், வேள்வியும் விழாவும் செய்தல் எனும் இவை வைதீகம் சார்ந்தனவாகக் காணப்படுகிறது. வரந்தரு காதையின் இறுதிப்பகுதியில்,

''பரிவும் இடுக்கணும் பாங்குறநீங்குமின்''

எனும் பகுதிகளில் சமண சமயக் கருத்துக்களோடு வைதீகக் கருத்துக்கள் இணைக்கப்படுவதைக் காணலாம்.

மாறும் மரபு:

ஆரியர் தென்னிந்தியாவிற்கு வந்தபோது இங்கே வழக்கில் இருந்த தொல்பழம் தெய்வ வழிபாடு பண்பட்ட சமயத்தின் கூறுகளுடன் இணைவதற்கேற்ற தன்மையுடையதாக இருந்திருக்க வேண்டும். (அ.கா. பெருமாள் 1990 ப.17) சமய பௌத்தக் கொள்கைகளால் இயற்கையைக் கொண்டிருந்த நாட்டார் சமயம் பண்பாட்டின் அவாவும் தன்மைக்கும் மாற்றம் பெற்றிருந்தது. இந்நிலையில் வைதீகம் பண்பாட்டினைப் பழைய இயற்கையோடு மரபோடு இணைத்து வெளிப்படுத்தும் முறையை மேற்கொண்டது. சிலப்பதிகார வஞ்சிக்காண்டம் முழுவதும் இத்தகைய மரபு மாற்றமே காணப்படுவதாகக் கருதுவார் ராஜ் கௌதமன் (ராஜ் கௌதமன் 1997 ப. 113). மாங்காட்டு மறையோன் பாத்திரம் இதற்காகவே படைக்கப்பட்டிருத்தல் வேண்டும் எனக் கருதுவர் பஞ்சாங்கம் (பஞ்சாங்கம் 2002 ப.63) இம்மாற்றத்திற்கான அடிப்படைக் காரணத்தை இயற்கை, பண்பாடு எனும் எதிரிணைகளின் மூலமாகப் புரிந்துகொள்ளலாம்.

இயற்கை X பண்பாடு:

இன்றைய கோட்பாடுகளில் லெவிஸ்ட்ராஸ் கூறும் எதிரிணைகளின் ஒற்றுமை (Bionary opposition) சமூகப்பண்பாட்டுத் தளத்தில் ஆழ்ந்த புரிதல்களை ஏற்படுத்துகிறது. இதன் அடிப்படையில் வைதீக, நாட்டார் சமயங்களைப் பகுத்துக் காணலாம். இயற்கையை அவாவும் தெய்வங்கள் நிலையில்லாத இடத்தைக் கொண்டனவாக உள்ளன. மனிதர்களோடு தொடர்பு கொண்டனவாக உள்ளன. மனிதரின் வழியே வெளிப்படுகின்றன. இயற்கைப் பொருட்களையே (பயன்படுத்தப்படாத) பலியாகக் கேட்கின்றன. நிலையான உருவங்களில் அடங்காதன நன்மை தீமை இரண்டும் செய்வன எனப்பகுப்பர். மாறாக வைதீகக் கடவுளர்கள், நிலைத்த படிமங்களில் உறைகின்றன. மனிதர்களைவிட உயர்ந்த இடத்தில் (தேவலோகம்) வசிப்பன. மனிதர்களின் குறிக்கோள் கடவுளாக விளங்குவன. பண்படுத்தப்பட்ட (சமைக்கப்பட்ட) உணவினைப் பலியாகக் கொள்வன. உயிர்ப்பலி தவிர்ப்பன. நன்மை மட்டுமே செய்வன எனப் பகுக்கின்றனர். இந்த எதிர்பாடுகளின் அடிப்படையில் நாட்டார் தெய்வங்களை இயற்கையின் பாற்பட்டன என்னும், வைதீகத் தெய்வங்களைப் பண்பாட்டுவயப்பட்டன எனவும் கருதலாம்.

தொகுப்புரை:

சிலப்பதிகாரம் சுட்டும் சமய வழிபாட்டு நெறிமுறைகளில் இயற்கை விழைவும், பண்பாடு விழைவும் காணப்படுகின்றன. நாட்டார் சமயம் அமைப்புக்குட்பட்ட சமயமாகும் தன்மையைச் சிலப்பதிகாரம் தன்னுள் கொண்டுள்ளது. இன்றைய அமைப்பியலின் வழியும், மானிடவியலின் வழியும் இக்கருத்துக்கள் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

நன்றி: கட்டுரை மாலை

 

கருத்துகள் இல்லை: