தமிழர் பண்பாட்டில் வழிபாட்டினை தெய்வங்கள், அவற்றின் இயல்வுகளின் அடிப்டையில் குலதெய்வ வழிபாடு, ஊர்த்தெய்வவழிபாடு சிறுதெய்வ வழிபாடு , பெருந்தெய்வழிபாடு என நான்கு நிலைகளில் வகைப்படுத்தலாம், குலதெய்வமாக வழிபடப்பட்ட ஒரு தெய்வம் காலப்போக்கில் ஊர் தெய்வமாகவோ சிறு தெய்வமாகவோ பெருந்தெய்வமாகவோ வழிபடப்படும் வளர்ச்சிப் பரிணாமத்தை ஆய்வுப்பூர்வமாக நிறுவலாம். சிறு தெய்வங்கள் என்பவை ஒரு கிராமத்தாராலோ பல கிராமத்தாராவோ அம்மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் பண்பாட்டுக் கூறுகளுடன் வழிபடப்படுபவையாகும். ஒரு சில ஊர்த்தெய்வமாக வளரலாம். பல சிறு தெய்வங்களாகப் பரிணாமம் பெறலாம். ஆயினும் இவை உள்ளீடு அடிப்படையில் ஒரே இயல்புடையவை எனவே இம்மூவகைத் தெய்வங்களும் சிறு தெய்வங்கள் என்றே வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேல் சிறு தெய்வங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர், இத் தெய்வங்களில் அம்மன், ஐயனார், சுடலைமாடன், பிரம்மசக்தி பத்திரகாளி, இசக்கியம்மன் முதலியவை தென்மாவட்டப் பகுதிகளில் பெரும்பான்மையாக வழிபடப்படுகின்றன. இக்கோயில்களில் நிகழ்த்தப்படும் சிறப்பு வழிபாடுகளில் திருக்கார்த்திகை தீபவிழாவும் ஒன்று. இவ்விழாவில் பல நம்பிக்கை அடிப்படைச் சடங்குகளை மேற்கொள்வதைக் கள ஆய்வின் மூலம் அறியலாம். அகல் விளக்கு தீபமேற்றி பல்வேறு பொருட்களைப் படைத்து, பகுத்துண்டு மகிழ்கின்றனர். இத்தகைய தீப வழிபாடும் சடங்களும் ''வளமை நோக்க அடிப்படை நிகழ்வுகளாகும். இவை காலம் காலமாகத் தொடர்ந்து மக்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பதிவு பெறாத வழக்காறுகளின் சாசனங்கள் ஆகும். பொதுவாக இவ்வழிபாடு அவரவர் வீடுகளிலும் நிகழ்த்துவதுண்டு. கோயில்களிலும் சிறப்பு வழிபாடாக அமைவதுண்டு. எனவே கார்த்திகை தீப வழிபாடு சிறுதெய்வக் கோயில்களில் பெறும் இடம் யாது? இதில் வளமை நோக்கச் சடங்குகள் எவ்வாறு பரிணமிக்கின்றன? மக்கள் பண்பாட்டை அவை எவ்வாறு உணர்த்துகின்றன? என்பவற்றை ஆராய்வதே இக்கட்டுறையின் நோக்கம்.
இந்து சமயத்திற்கும் தீபத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ''தீ''பமே இவ்விழா வழிபாட்டிற்கும் அடிப்படையாக அமைகிறது . கார்த்திகை மாதமும் அதில் வரும் கார்த்திகை நட்சத்திரமும் இந்து சமயக் கடவுளான முருக வழிபாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன. முருகன் ஆறு குழந்தைகளாக இருந்த நிலையில் கார்த்திகைப் பெண்களே அவனை வளர்த்தனர் என்றும் பின்பு அவர்கள் விண்மீன்களாக மாறி ஒளி கொடுத்தனர் என்றும் சுந்தரபுராணம் கூறுகிறது. எனவே தமிழ்க்கடவுளாக முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்ணை குறிக்கும் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்ததிரத்தன்று நோன்பும், சிறந்த வழிபாடும் கொண்டாட்டமும் நிகழ்த்தப்படுகின்றன. பெண்கள் அவரவர் வீடுகளில் விரதமிருந்து வழிபாடு செய்து விரதத்தை முறிக்கின்றனர். மேலும் அயனும் மாலும் அறியமுடியாதவாறு சிவபெருமான் நெருப்புத்தூணாக நீண்டு நின்ற நாள் அது. இந்நெருப்பை உணர்த்தும் குறியீடாக தீபம் எடுத்தாளப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியிலேயே தமிழர்கள் கார்த்திகை தீபத்தை ''திரு'' அடைமொழியாக சேர்த்து மிகச் சிறந்த வழிபாடாகக் கொண்டாடி வருகின்றனர்
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் என்று முழுவதும் தென் மாவட்டத்து மக்கள் குறிப்பாகப் பெண்கள் உண்ணாநோன்புவிருக்கின்றனர். நீர்ம உணவை மட்டுமே உட்கொள்கின்றனர். வீடுகளைக் சுத்தம் செய்து மஞ்சள், பச்சரிசி ஆகியவற்றை இடிததுத் தயாரித்த கலவையில் நிலை, கதவு, ஜன்னல் மற்றும் படிக்கட்டுகளில் நட்சத்திரங்கள் பொறித்து குங்குமம் வைக்கின்றனா. இதற்காக ஆமணக்கு, பப்பாளி ஆகிய தாவரங்களின் இலையை பயன்படுத்துவர். இலை தண்டோடு இணைத்துள்ள நரம்புகள தன்மைக்கேற்ப நட்சத்திரங்கள் அமைகின்றன. மாலை மயங்கும் நேரத்தில் மண்ணால் செய்யப்பட்ட சியி அகல்விளக்குகளில் எண்ணெய் திரியிட்டு தீபம் ஏற்றி வாயில்களிலும் சுற்றுப்புறங்களிலும் மதிற்சுவர்களிலும் வைத்து அழகுபடுத்துகின்றனர். பலர் அகல்விளக்குக்குப் பதிலாக மெழுகுவர்த்திகளை ஏற்றி அழுகுபடுத்தும் வழக்கம் காணப்படுகிறது. தற்காலத்தில் பொருளாதார நிலைக்கேற்ப சிறிய அலங்கார சரமின்விளக்குகளைப் போட்டு அழகுபடுத்துவதும் உண்டு. பின், பச்சரிசி, பாசிப்பயறு, தேங்காய், வெல்லம், ஏலக்காய், முந்திரி ஆகியவை கொண்டு பனை ஓலை ''கொழுக்கட்டை தயாரித்து அதனைப் கடவுளர்களுக்குப் படைத்து தீபம் ஏற்றி வழிபட்டு பகுத்துண்டு மகிழும் வழககம் காணப்படுகிறது 10 முதல் 15செ.மீ நீளம் கொண்டதாக மாவை உருட்டி பனை ஓலையில் வைத்து நீராவியில் வேகவைப்பதால் ''பனை ஓலை கொழுக்கட்டை எனப்படுகிறது.
கொழுக்கட்டைக்கான பொருட்கள் பெரும்பாலும் அவரவர் விளை நிலங்களில் கிடைத்த பொருளாக அமைய வேண்டும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயருக்குக் கொழுக்கட்டை மிகவும் பிடித்த பொருள் என்பதனால் அது விரும்பிப் படைக்கப்படுகிறது. ஆயின் உளவியல் அணுகுமுறையில் பார்க்கும்பொழுது இது ஒரு வளமைக் குறியூடு ஆகும். ஒலைக் கொழுக்கட்டையின் அமைப்பையும் அதன உருவாக்கச் சூழலையும் பின்புலத்தையும் ஆராயும் பொழுது அது அவர்கள் அடிமனத்தில் பதிந்திருக்கும் பாலியல் உணர்வுகளின் பிரதிபலிப்புக்ள் என்று கொள்ள வாய்ப்பேற்படுகிறது. அதோடு தங்கள் நிலத்தில் கிடைத்த விளைபொருட்களை கொழுக்கட்டையாக செய்து படைப்பதும் பகுத்து உண்பதும் முழுமையான வளமைச் சடங்கின் வழி வந்த வழக்காறு என்று கொள்ளலாம்.
அதோடு நோன்பு மேற்கொள்வதும் மஞ்சள், பச்சரிசி கலவையினால் நட்சத்திரக்குறி பொறித்து குங்குமம் இடுவதும் அகல் விளக்கினால் அலங்கரிப்பதும் தீபம் ஏற்றி அதை வழிபடுவதும் முழுமையான வளமைச் சடங்குகள் ஆகும். இவை அம்மக்களின் வளமை நோக்கச் சிந்தனைகளின் பிரதிபலிப்பே எனலாம்.
மேலும் சிறுவர்கள் சூரிய அஸ்தமத்திற்குப் பின், காய்ந்த பனை தென்னை ஆகியவற்றின் ஓலை வாழை சருகு ஆயிவற்றினால் செய்த தீப்பந்தங்களைக் கையில் ஏந்தி தெருக்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர். இதனால் இருளில் பதுங்கியிருக்ககும் பேய்கள் விலகி ஒடுகின்றன என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஊரைச் சுற்றிலும் உள்ள எல்லைப்புற சிறு தெய்வங்களான அம்மன், ஐயனார், பத்திரக்காளி, பிரம்மசக்தி, கடலைமாடன், இசக்கியம்மன் முதவியவற்றின் கோயில்களின் முன் தீப்பந்தங்களை நட்டு பாடி, ஆடி குரலையிட்டு அரவாரம் செய்து மகிழ்வதுண்டு.
சூவே....சூ
கார்த்திகை மாதம் வந்தது
கான மழை பொழிஞ்சது
கார்த்திகை தீபம் வந்தது
காத்து கருப்பு ஒழிஞ்சது
கழனி விதைச்சி முடிஞ்சது
காடு மேடும் விளைஞ்சது
சூவே....சூ
(ஆறுமுகம் : முதுமொத்தன் மொழி)
என்ற பாடல் அடிகள் மூலம், வளம் பெறுவதையும் பேய்கள் விலகுவதையும் விரும்பிச் செய்யும் சடங்கு இது என்பது புலனாகிறது. தீப்பந்தத்தை ''சூ..'' என்று அழைக்கும் மரபு காணப்படுகிறது. ''சூ..'' என்பது ஒரு உயிரினத்தை விரட்டி ஓட்டுவதற்குத் தென்பகுதி மக்கள் பயன்படுத்தும் ஒலிவடிவம் ஆகும். இங்கு இருளையும் அதற்குக் குறியீடாக உள்ள பேய்களையும் விரட்டும் நோக்கிலேயே ''சூ'' என்ற ஒலி வடிவம் பயன்படுத்தப்டுகிது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வழக்காறு முழுமையான வளமைச் சடங்கு என்பதை மேற்குறித்த பாடல் தெளிவாக்குகிறது. இவ்வாறு வழிபடப்படும் தெய்வங்களும் வளமைத் தெய்வங்களே. இத் தீப்பந்த நடுதல் வழிபாடு சங்கககாலவழக்காறுகளான நடுகல், வேல் மற்றும் கேடயங்களை நிறுத்துதல், கழுவேற்றுதல், வெற்றி மரங்களை நாட்டல் முதலிய பண்பாட்டு மரபுகளோடு தொடர்புடையது. இவ்வழக்காறுகள் அனைத்தும் ஒன்றிருந்து பரிணமித்ததாகவே இருக்கவேண்டும்.
''பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுதல்''
வேலூன்றி பலகை வேற்றுமுனை கடுக்கும்'' என்னும்
அகநானுற்று (131) அடிகளும்
''பல்லான் கோவலர் படலை சூட்டக்
கல்லாயினையே கடுமான் தோற்றல்'' என்னும் புறநானுற்று (264)
அடிகளும் நடுகல் வழக்காற்றை உணர்த்தும் சான்றுகள் ஆகும். தீப்பந்தங்களை ஏந்துவது யா‘? என்ற போட்டி நிலவுவதும் இதன் பொருட் பல நாட்களுக்கு முன்பே தீப்பந்தம் தயாரிக்கத் தொடங்கிவிடுவதும் மேற்குறிப்பிட்ட கருத்தை உறுதி செய்கின்றன. தற்காலத்தில் தீப்பந்தங்களுக்குப் பதிலாக சைக்கிள் டயர், டியூப்களைக் கொழுத்தும் வழக்கு பெருகி வருகிறது. பயன்படு பொருட்கள் மாறினும் ''தீ'' என்னும் மையப் பொருள் மாறவில்லை. எனவே நெருப்பை கார்த்திகை தீபத்தின் மையப் பொருளாகக் கொண்டு வழிபடும் பண்பாட்டு மரபை இனம் காணமுடிகிறது. சில கிராமங்களில் சிறுவர்கள் கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் இவ்வழிபாட்டை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு தெய்வத்திற்குத் தீப்பந்தம் நட்டு வழிபாடு செய்கின்றனர். கார்த்திகை தீபநாள் மட்டும் எல்லா கோயில்களையும் வழிபட வேண்டும் என்பது நியதி. இரவு அடர்ந்திருக்கும் இருளை அகற்றி ஒளியைக் கொடுக்கும் இவ்வழக்காறு பசியையும் பஞ்சத்தையும் போக்கி வறுமையை விரட்டி வளத்தை நிலை நாட்டும் மக்களின் அடிமன உணர்வின் வெளிப்பாடகவே இருக்க முடியும். இச்சடங்கின் போது தீப்பந்தம் ஏந்தும் இளைஞர்களின் அகமும் முகமும் சுடர் போன்று பிரகாசமாக இருப்பதை உளவியல் ரீதியாக ஆராய்ந்தால் அவர்கள் உள்ளம் ஒளியை விரும்புகிறது. வளத்தை நாடுகிறது என்ற உண்மையை இனம் காணமுடியும்.
மேலும் சிறுதெய்வக் கோயில்களின் முன்போ ஊரின் பொதுஇடத்திலோ ''சொக்கப்பனை'' என்னும் ஒருவகை மிகப்பெரிய தீப்பந்தத்தை நாட்டி அதற்கு மாலையிட்டு தோங்காய் பழம் படையலிட்டு பூசை செய்து தீயிட்டு மகிழும் வழக்காறு இன்னும் காணப்படுகிறது. இதில் இடம் பெறும் சடங்குகள் அம்மக்களின் வாழ்வியலையும் வலிமை நோக்கப் படிமங்களையும் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கின்றன. எனவே விநோதமான இச்சடங்கினைப் பதிவு செய்தும் அதில் ஊடுருவியிருக்கும் நம்பிக்கைகளை ஆராய்வதும் மிக இன்றியமையாதது தமிழர்களின் சிறுதெய்வ வழிபாட்டில் மிகப் பெரிய அங்கமான மர வழிபாட்டை இங்கு ஒப்பு நோக்குவது அவசியம். அரசு, ஆல், வேம்பு, பனை, பூவரசு, வேங்கை, அத்தி, வில்வம், வன்னி உள்ளிட்ட பல மரங்களைத் தெய்வம் உறைந்திருக்கும் இடமாக கொண்டு மாலையிட்டு படையல் வைத்து பூசிக்கும் மரபை இன்றும் காணமுடிகிறது. மேலும் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சி மரத்தையும் நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கநிற மலர்களைத் தரும் குடைப்பனை மரத்தையும் மிகவும் புனிதமான மரங்களாக எண்ணி வழிபடும் வழக்காறை இங்கு பொருத்திப் பார்ப்பது அவசியம். குடைப்பனை மரம் பூத்துக்குலுங்குவதைக் காண்பது மிக அரிது என்பதால் அது சிறப்பிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு பெருந்தெய்வக் கோயில்களில் கொடிமரம் ஒன்று வைத்து கொடியேற்றப் படுவதும் சிறுதெய்வக் கோயில்களில் ''பந்தல்கால் நடுதல்'' என்று ஒரு மூங்கில் களையில் வேப்பிலை மாவிலை, மஞ்சள், பூ ஆகியவற்றைக் கட்டி அதனை விழா முடியும் வரைப் பாதுகாப்பதும் யாவரும் அறிந்த வழக்காறுகள் ஆகும். திருமண வீடுகளிலும் முகூர்த்தக் கால் என்ற பெயரிலும் புதிய வீடு அமைப்போர் கால் நடுதல், நிலையிடுதல் என்ற பெயரிலும் மரங்களை நாட்டி அதனைப் புனிதமாக எண்ணி வழிபட்டு வருகின்றனர் எனவே மரம் நடுவதும் அதனை வழிபடுவதும் தமிழர் பண்பாட்டில் சமய நம்பிக்கை அடிப்படைச் சடங்காக இருந்து வருகிறது. இந்த பின்னணியிலேயே திருக்கார்த்திகை தீபநாள் அன்று கோயில்களின் முன் பொது இடத்தில் ''சொக்கப்பனை'' என்ற மிக உயர்ந்த தீப்பந்தத்தை நாட்டி வழிபடுவதை எண்ணிப் பார்க்க முடிகிறது.
சொக்கப்பனை என்பது உயரமான பப்பாளி மரத்தை வெட்டியெடுத்து அதனைச்சுற்றி பனை, தென்னை ஆகியவற்றின் காய்ந்த ஓலை, வாழை சருகுகளால் அடர்த்தியாகக் கட்டப்படுவதாகும். இதனைக் கோயில் முன்னோ, ஊர் பொது இடத்திலோ நாட்டி அதற்குரிய வழிபாட்டுச் சடங்குகளை மேற்கொண்டு நுனிப்பகுதியில் தீ வைத்து எரிய விடுவர். தீ எரியத் தொடங்கியவுடன் ஏற்படும் ஒளியுடன் மக்கள் முகத்தில் தோன்றும் ஒளி ஒப்பு நோக்கத் தக்கது. இது மக்களின் வளர்ச்சிப் படிநிலை மன ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாகும். இது உயரமாகப் பனைபோன்று காணப்படுவதால் இதற்குச் ''சொக்கப்பனை'' என்று பெயர் வந்திருக்கலாம். எரிந்த முடிந்தபின் எஞ்சிநிற்கும் பப்பாளி மரத்தின் அடிப்பகுதியில் சுற்றிலும் வெட்டுகின்றனர். இந்நிலையில் மக்கள் தெய்வங்களை நினைத்து வணங்கி கன்னத்தில் போட்டுக்கொள்வதைக் காணலாம். வெட்டப்பட்ட பப்பாளிமரம் எந்தத் திசையில் விழுகிறது? என்பதைப் பொறுத்து அந்த ஆண்டு நன்மையோ, தீமையோ, இன்பமோ, துன்பமோ, வளமோ, வறுமையோ ஏற்படும் என்று நம்பிக்கையே அதற்கு காரணம். வெட்டப்ட்ட பப்பாளிமரம் கிழக்கு திசையில் விழுந்தால்மிகவும் நல்லது. அவ்வாண்டு நல்ல மழையும் விளைச்சலும் கிடைக்கும். வடக்கு திசையில் விழுந்தால் வறுமையும் மேற்குத் திசையில் விழுந்தால் குறைவான மழையும், தெற்குத் திசையில் விழுந்தால் நல்ல மீன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. எனவே பெரும்பாலும் கிழக்கு திசையில் சொக்கப்பனை விழ வேண்டும் என்றே விரும்புகின்றனர். தெற்குத் திசையில் விழுவதை மீனவர்கள் தவிர பிறர் விரும்புவதில்லை. பொதுவாகவே கிழக்கு திசையை எல்லா சிறு தெய்வ வழிபாட்டோடும், சூரிய உதயத்தோடும் வளமை நோக்கில் சிறப்பித்துக் கூறும் மரபைக் காணமுடிகிறது. கோயில்கள் கட்டிடங்கள் வீடுகள் அனைத்தும் கிழக்கு நோக்கி இருப்பதே சிறப்பு என்று மனையடி சாஸ்த்திரம் கூறுகிறது. கிழக்கு திசை வளர்ச்சி வளம் முதலிய கருத்தோட்டங்களின் பின்னணியில் சிறப்பிக்கப்படுவதால் சொக்கப்பனையும் கிழக்கு திசை நோக்கி விழுவதையே சிறப்பாகக் கருதுகின்றனர். இவ்வாறு விழுந்தால் மக்கள் மனம் பூரிப்போடும் பிற திசைகளில் விழுந்தால் மனச்சஞ்சலத்தோடு மாறி தெய்வக்குறையே இதற்குக் காரணம் என்றும் நம்புகின்றனர்
சொக்கப்பனை எரியும் பொழுது கிராமம் முழுமையும் மண்டியிருக்கும் இருள் அகன்று ஒளி கிடைக்கிறது. துன்பம் நீங்கி இன்பம் தளைக்கிறது. எங்கும் வளம் பெருகும் உயர்ந்த சிந்தனை குடிகொள்கிறது சிவபெருமான் நெருப்புத்து‘ணாக உயர்ந்த நின்ற தன்மையை உணர்த்த சொக்கப்பனை எடுத்தாளப்படுகிறது. எனவே சொக்கப்பனை சிவபெருமான் நெருப்பத்து‘ணாக உயர்ந்து நின்று தொன்மத்தின் படிமமாக வெளிப்படுவதை அறியலாம். சிவபெருமான் அதன் மூலம் இந்த உலகிற்கே ஒளி கொடுப்பதும் சொக்கப்பனை அந்த ஊருக்கே ஒளி கொடுப்பதும் உள்ளீடு அடிப்படையில் ஒரே இயல்புடையவை என்பது அறியத்தக்கது.
எனவே சிறுதெய்வக் கோயில்களில் நிகழ்த்தப் பெறும் திருக்கார்த்திகை தீப வழிபாடும் நம்பிக்கைகளும், சடங்குகளும் முற்றிலும் வளமையை அடிப்படையாகக் கொண்டு, மக்களைப் பற்றி மக்களால் வெளிப்படுத்தப்படும் பண்பாட்டுச் சின்னங்களே ஆகும். இவ்விழாவில் வழிபடப்படும் தெய்வங்கள், வழிபாட்டு முறைகள், பயன்படு பொருட்கள், பண்பாட்டு மரபுகள், வழக்காறுகள் அனைத்தும் ஏதாவது ஒரு வகையில் வளமைப் படிமங்களோடு தொடர்புடையவையே. எனவே கார்த்திகை தீபம் ஒரு முழுமையான வளமைச் சடங்கு விழாவாகும். அதனால் அவற்றில் மக்களின் பண்பாட்டு மரபுகளையும் வாழ்வியல் யதார்த்தங்களையும் இனம் காண முடிகிறது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக