30/01/2011

புதுக்கவிதைகளில் நம்பிக்கை - சி. அருண்மொழிச் செல்வி

வாழ்க்கையில் ஏற்படும் இடர்கள் இடந்தெரியாமல் போக ஒவ்வொரு மனிதனுக்கும் ஊன்றுகோலாக இருப்பது நம்பிக்கையே. வாழ்வின் வளர்ச்சிப்பயிருக்கு நம்பிக்கையே வேர்; முயற்சியே நீர். துன்பம் ஏற்படும்போது துவண்டுவிடாமல் நம்மைக்காப்பது நம்பிக்கை. வாழ்வின் வெற்றிக்குக் காரணமான நம்பிக்கை பற்றி புதுக்கவிதைகள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன என்றும், மனிதகுலத்தை மேம்படுத்துகின்றன என்று ஆராய்ந்தறிதலே இக்கட்டுரையின் குறிக்கோளாகும். அப்துல்ரகுமான், மு.மேத்தா, வைரமுத்து ஆகிய மூன்று கவிஞர்கள் கூறும் கருத்துக்கள் இதில் மூலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. மனிதனுக்குள் இருக்கும் நம்பிக்கை என்ற சுடர் அவனை வழிநடத்துகையில் அவனது பாதை தெளிவாக அமைகின்றது. மனிதனிடமுள்ள இரு பண்புகளான தன்னைச் சுற்றியிருப்போரை நம்புதல், தன்னைத்தானே நம்புதல், என்பவை அன்பின் சாரமாகவே அமைகின்றன.

துன்பத்திலும் இன்பம்:

வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இணைந்த தொடர்பயணம். அதை உணர்ந்து நம்பிக்கையோடு வாழ்தலே வாழ்வின் வெற்றியாகும் எனக் கவிஞர் வைரமுத்து குறிப்பிடுகின்றார். சேற்றுக்குள் சிக்கிச் சிதையாமல் அழகாகக் காட்சி தரும் தாமரை மலரின் மூலம் வாழ்வினைக் கவிஞர் உணர்த்துகிறார் அதனை,

''கீழே சேறு

மேலே பாசி

தன்னைச் சுற்றிலும் தவளையர் கீதம்

ஆனாலும்

தண்­ர்த் தீயாய் பூத்திருக்கும்

தாமரைக்குத்தான்

என்னவொரு சௌந்தர்ய கம்பீரம்''

என்ற அடிகளினால் அறிய முடிகிறது.

தோல்வியின் மூலமே மனிதன் தனது குறைகளைக் களைந்து உண்மை வாழ்வின் போக்கினை உணர்ந்துகொள்கிறான். தோல்வியின் எல்லையில் வெற்றிகிட்டும் என்றும், அது மனிதனைச் சீர்ப்படுத்துவது என்றும் அப்துல்ரகுமான் குறிப்பிடுகிறார். மனிதனைப் பண்படுத்துவது தோல்விதான் என்பதை,

''தோல்வியே! நீ பரிணாமச் சிற்பி

மனிதனைச் செதுக்குவது

நீயல்லவா?

தோல்வியே!

நீ சுட்டுத் தொலைத்ததால் அல்லவா

நான் புல்லாங்குழல் ஆனேன்''

என்ற அடிகள் தெளிவுறுத்துகின்றன. வாழ்வில் ஏற்படும் காயங்கள்தான் வாழ்வை அணிவிக்கும் ''பதக்கங்கள்'' எனக் கவிஞர் அப்துல்ரகுமான் குறிப்பிடுகின்றார். கல் சிலையாவதும் மூங்கில் கானம் பாடுவதும் காயத்தால்தான் எனக்கூறித் துன்பத்தைக் கடத்தலே இன்பம் என நம்பிக்கையூட்டுகிறார்.

ஊக்கமே ஆக்கம்:

வாழ்வில் ஏற்படும் இறந்தகாலத் துயரங்களை எண்ணி வேதனையுறுதல் வளர்ச்சியைத் தடைசெய்வதாகும். நிலவில் தோன்றும் இருளும், ஒளியும் போல துன்பமும் இன்பமும் கலந்த முரண்பட்ட போக்கே வாழ்வு. அதை கவிஞர் மு.மேத்தா ''வாழ்க்கை'' என்ற கவிதையில் குறிப்பிடுகிறார். கவிஞர் வைரமுத்து வாழ்க்கையில் சங்கீதம் மட்டுமல்ல, கண்­ரும், அழுகையும் நிரம்பியிருக்கிறது என்ற கருத்தின் வாயிலாக வாழ்வு முரண்பட்டது எனக் குறிப்பிடுகின்றார். இத்தகைய நிலையில் நம்பிக்கையே சிக்கலைப் போக்கி, வளர்ச்சிக்கு வழிகோலும் தன்னம்பிக்கை பல்வேறு இன்னல்களையும் கடந்து வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்பதை ''போட்டி'' என்ற கவிதையில் அப்துல்ரகுமான் குறிப்பிடுகிறார். வானத்திற்கும் மனிதனுக்கும் போட்டி ஏற்படுகிறது. இறுதியில் மனிதனின் முயற்சி வென்று விடுவதை,

''இறுதியில் நான்

புதுப்புது இலட்சியங்களை

நோக்கி நடக்கும்

என் பாதங்களை எடுத்து வைத்தேன்

வானம் தோற்றது''

என்ற வரிகளினால் வெளிப்படுத்துகிறார். பகவத்கீதையில் கூறப்படும், மனிதன் அவனுடைய நம்பிக்கையாலே உருவாகின்றான். எதை நம்புகிறானோ அதுவாகவே மாறுகிறான் என்ற கருத்து ஈண்டு ஒப்புநோக்கத்தக்கது.

போராட்டத்தில் வெற்றி:

வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற துணிவும், நம்பிக்கையும் தேவை. அத்தகு ஊக்கம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் காணப்படுகிறது. விதை ஒன்றின் செயல் மூலம் வைரமுத்து மனித மனத்திற்கு நம்பிக்கையூட்டுகிறார். ''நம்பிக்கை விதை'' என்ற கவிதையில் பல இன்னல்களுக்கு ஆட்பட்ட விதை முட்டிமோதி வெளிவருவது நம்பிக்கையால்தான் என்பதை,

''மரணம்போல் ஒன்று வந்தும்

மரிக்காதிருந்தேன்

உயிரில் நம்பிக்கை

ஊற்றி வைத்தேன்

நம்பிக்கையில் உயிரை

ஊற வைத்தேன்''

என்ற அடிகளினால் கவிஞர் சுட்டிக்காட்டுகின்றார். மனிதனுக்குள் மறைந்திருக்கும் நம்பிக்கையின் தன்மை பற்றி தத்துவச் சிந்தனையாளரான ஓஷோ, ''வாழ்விற்குத் துணிவே தேவை; துணிவு ஒவ்வொருவருள்ளும் விதையைப் போல் மறைந்துள்ளது'' எனக் கூறும் கருத்து பொருத்தமாக அமைகிறது.

விளக்குகளின் ஒளியையும், பயன்பாட்டையும் பற்றிக் கவிஞர் அப்துல்ரகுமான் ''விளக்குகளே'' என்ற கவிதையில் குறிப்பிடுகின்றார்.

''இருட்டு என்ற ராட்சஸ எதிரியை

அஞ்சாமல் எதிர்த்துப் போராடும்

சின்னஞ்சிறு வீரர்களே!

உங்கள் போராட்டக் குணத்தை

எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள்''

எனக் கூறி துன்ப இருளைப் போக்கும் முயற்சி நம்மிடையே வேண்டும். எனச் சுட்டிக்காட்டுகின்றார். எமர்சன் என்ற அறிஞர், ''நாம் நம்பிக்கையுடனேயே பிறந்திருக்கிறோம். மரம் கனிகளைச் சுமப்பதைப் போல மனிதன் நம்பிக்கைகளைச் சுமக்கிறான்'' எனக் கூறும் கருத்து எண்ணத்தக்கதாகும்.

நம்பிக்கையே வாழ்க்கை:

மாண்புடைய மனிதப்பிறவியை சோர்வுடன் கழிக்காமல், நம்பிக்கையோடு துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும்; அவற்றை நீக்கவும் வழிகாண வேண்டும். காலத்தினை வென்று வாழ வழிகாட்டுவது நம்பிக்கை என்பதைப் பற்றிக் கவிஞர் மு.மேத்தா,

''காலக் குதிரையின்

கடிவாளத்தைக் கொண்டுவந்து

நம் கையில் கொடுக்கும்

நம்பிக்கை''

என்பதன் வாயிலாக ஊக்கப்படுத்துகிறார். கவிஞர் வைரமுத்து ''புதிய ஏற்பாடு'' என்ற கவிதையில் இழிந்தவர்க்கும் பணிவு காட்டுதல் துயரத்திலும் நன்மை காணுதல், நலிந்தபோதும் நம்பிக்கைக் கொள்ளுதல், அடக்கமான அறிவு, ஆசை துறந்த மனம், சுயமாக நிற்கும் வாழ்வு, இலக்கைத் தொடும் முயற்சி, சிரமம் தாங்கும் தோள் முதலிய வாழ்வியல் கூறுகளைக் குறிப்பிடுகின்றார். முயற்சியில் வெற்றிபெறும் வரை துவண்டு விடக்கூடாது என்ற நம்பிக்கையை,

''முயற்சியே!

இலட்சியத்தோடு

இலக்கு தொடு

பயணத்தின் இறுதிவரை

கூடு துறந்துவிடாத

நத்தையைப் போல''

என்பதனால் அறியமுடியாது கவிஞரின் இக்கருத்து ஆங்கிலக் கவிஞர் டென்னிசனின் ''டபுலிசிஸ்'' கவிதையில் இடம்பெறும் எத்தகைய துன்பத்தையும் எதிர்கொண்டு தான் எண்ணியதை விடாமுயற்சியோடு தேடி, அதை அடையும்வரை மனந்தளராமல் இருக்கவேண்டும். என்ற சிந்தனையோடு ஒப்புநோக்கத்தக்கது. கவிஞர் மு.மேத்தாவும் இதே முயற்சியின் தன்மையைப் பற்றி ''படகுக்காரன்பாட்டு''

''கடல்நடுவே துடுப்பிழந்தால்

கையிரண்டும் துடுப்பாகும்!

கரை எனது கண்அருகே

காலமும் என் கையருகே''

என்பன பாடல் அடிகள் டால்ஸ்டாய் கூறும், ''நம்பிக்கையே வாழ்வின் உந்துசக்தி'' என்ற கருத்து கவிஞர் தம் கருத்தில் நிறைந்திருக்கிறது.

பயனே வாழ்வின் சிறப்பு:

''உன்னைக் கேட்பவர்களுக்கு

உன்னை முழுமையாகத்தர

ஒப்புக்கொள்

நீயும் மழையாவாய்''

என்ற அடிகளின் மூலம் பிறருக்குப் பயன்படுதலே வாழ்வின் சிறப்பு என்கிறார். துன்பத்திலும் அதைத் தாங்கி அன்புணர்வோடு மற்றவர்க்குத் துணையாக வேண்டும் என்பதை,

''தோளே!

இன்னும் இன்னும் சிரமம் தாங்கு

ஊருக்கு நிழல் வழங்க

தன் தலையில் வெயில் தாங்கும்

விருட்சம் போல''

என்ற அடிகளின் வழி கவிஞர் வைரமுத்து எடுத்துக் காட்டியுள்ளார்.

இக்கட்டுரையின் மூலம் பெறப்பட்ட வாழ்வின் கூறுகள்:

மனித வாழ்வு செம்மையுடையதாக அமைய அன்பு, நம்பிக்கை, ஒழுக்கம், பணிவு, இன்னா செய்தார்க்கும் இனியன செய்யும் இயல்பு போன்ற இனிய பண்புகளை மனிதன் பெற்றிருக்க வேண்டும். நம்பிக்கையே மனிதனின் உந்துசக்தியாக விளங்கி இப்பண்புகளை ஒளிரச் செய்கிறது. மனதி வாழ்வு இன்பமும், துன்பமும் இணைந்த ஒன்று என்பதை அறிந்து துன்பத்தில் துவண்டுவிடாத உள்ளத்தை மனிதன் பெறவேண்டும். முரண்பட்ட போராட்ட வாழ்வில் வெற்றி பெற ஊக்கமே துணையாகின்றது. மனிதமனம் பண்படுவது துன்பத்தினால்தான்; அதையறிந்து அத்துன்பத்தைக் கடந்து முயற்சியோடு முன்னேறுதலே வாழ்வின் சிறப்பாகும். வாழ்வின் பாதையில் ஏற்படும் இடர்களைப்போக்கத் தன்னம்பிக்கை இன்றியமையாததாகும். இத்தகு நம்பிக்கை உணர்வோடு செல்லும் வாழ்க்கையின் பயன் பிறருக்குத் துணைநின்று வளம்சேர்ப்பதே ஆகும்.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்

 

கருத்துகள் இல்லை: