ஆன்மீகமும் அறிவியலும் கண்ணுக்குப் புலனாகாத ஓர் இழையால் நெருங்கிப் பிணைக்கப்பட்டிருப்பதை அவற்றை ஆழ்ந்து படிப்போர் உணரலாம். ஆன்மீகத்திலிருந்து கிளைக்கும் அறிவியல் மீண்டும் ஆன்மீகத்திலேயே நிறைவு பெறுவதைக் காணமுடிகின்றது. வானியல், உடலியல் தொடர்பான செய்திகள் ஆழ்வார்களின் அருளிச் செயலில் காணலாகும் தன்மையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அணுக்கொள்கை:
அணுவினை ஆக்கவோ, அழிக்கவோ இயலாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகையாக மாற்ற இயலும் என்று அறிவியலார் கூறுவர். ஆழ்வார்களும் இறைவனை அத்தகைய அணுவிற்கு இணையாகக் கூறுகின்றனர். திருமால் உலகப் பொருட்கள் அனைத்திற்கும் வித்தாக அமைபவன். அவனில் இருந்து தான் உலகப் பொருட்கள் தோன்றுகின்றன. ஆயினும் இறைவனை தன்தன்மை நீங்காமல் நிலை பெற்று விளங்குகின்றான் என்பதனை நம்மாழ்வாரின் ''தானோர் உருவே தனிவித்தாய்'' (திருவாய்மொழி, 1.5.4) என்ற பாசுர அடிகள் விளக்குகின்றன.
வானியல்:
ஆகாயத்தை நோக்கினால் நட்சத்திரங்கள் எல்லாம் நாலா பக்கங்களிலும் ஒரு நியதி இல்லாமல் சிதறிக் கிடப்பது போல் தோற்றமளிக்கிறது. ஆனால் விஞ்ஞானிகளின் மிகச் சமீப காலக் கண்டுபிடிப்பு அவை எல்லாமே ஓர் ஒழுங்கான முறையில், நூலில் கோர்க்கப்பட்ட மணிகள் போல சரஞ்சரமாகத் தான் இருக்கின்றனவாம். இதனை ''Unified String Theroy'' மகா இழைத் தத்துவம் என்கிறார்கள். இஃது இன்னும் முழுமையாக விளங்கிக் கொள்ளப்படவில்லை. இவை போன்றே வானில் உள்ள கோள்கள் அனைத்தும் ஒரு சீரான பாதையை அமைத்துக் கொண்டு சுற்றி வருகின்றன. இதனை,
''மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும் சூழ் பரி வேடமுமாய்
பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும்
மின்னிற் பொலிந்ததோர் கார்முகில் போலக் கழுத்தினில் காறையொடும்
தன்னிற் பொலிந்த இருடீகேசன் தளர்நடை நடவானோ (பெரியாழ்வார் திருமொழி. 1.8.3)
என்கிறார் பெரியாழ்வார். இப்பாடலில் பெரியாழ்வார் மின்னல், சந்திரன் அதைச்சுற்றியுள்ள கோள் மண்டலம் இவை முறையே கண்ணன் அணிந்துள்ள பொற்பின்னல், அதைச் சேர்ந்த அரசிலைப்பணி என்னும் ஆபரணம் இவ்விரண்டையும் சூழ்ந்து விளங்கும் பொன்னாடை ஆகியவற்றை ஒத்திருக்கும் என்கிறார். இஃது ஒரு குறிப்பிட்ட வரைமுறையில் வானில் கோள்கள் அமைந்திருக்கும் தன்மையைச் சுட்டுகிறது எனலாம்.
மழைக்காட்சி:
மழை உருவாகும் தன்மையை ஆண்டாள் கீழ்வரும் அழகிய பாடலாக வடித்துக் காட்டியுள்ளார்.
''ஆழி மழைக் கண்ணா ஒன்று நீகைகரவேல்
ஆழியுள் புக்கு, முகந்து கொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைய பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
வாழ உலகினில் செய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்'' (திருப்பாவை - 4)
வருண தேவனை, கடல் ஆழத்தில் சென்று நீரை முகந்து வானவெளியில் பரவி திருமாலின் கருநிற மேனியைப் போல விளங்கி, அவன் வலக்கரத்தில் திகழும் சக்கராயுதத்தைப் போல ஒளியுடனும் இடக்கையிலுள்ள வலம்புரிச் சங்கின் நாதத்தை ஒத்த முழக்கத்துடனும் அவன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து பாயும் அம்பு மழை போல் தாமதமின்றி மழை கொட்டும்படி வேண்டுகிறார். இதனை ஒத்த கருத்தைப் பெரியாழ்வாரிடம் காணமுடிகிறது.
''கடல்வாய்ச் சென்று மேகம் கவிந்திறங்கிக்
கதுவாய்ப் படநீர் முகந்தேறி எங்கும்
குடவாய்ப் படநின்று மழை பொழியும் கோவர்த்தன
மென்னும் கொற்றக் குடையே'' (பெரியாழ்வார் திருமொழி 3.5.4)
என்பது அப்பாசுரம்.
உடலியல்:
நம்முடைய உடலானது ஐம்பூதங்களால் ஆனது எனும் கருத்தினை
''மண்ணாய் நீர் எரிகால் மஞ்சுலாவும் ஆகாசமுமாம்
புண்ணாராக்கை'' (பெரிய திருமொழி, 1.9.6)
என்ற பாசுர அடிகள் விளக்குகின்றன. நம்முடைய உடலாகிய சுவருக்கு எலும்புகளே தூணாக விளங்குகின்றன எனவும் நமது உடலில் ஒன்பது துவாரங்கள் உள்ளன என்பதனையும்
''ஊனிடைச் சுவர்வைத் துஎன்பு தூண்நாட்டி
உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்'' (பெரிய திருமொழி, 1.6.9)
என்ற அடிகளில் திருமங்கையாழ்வார் சுட்டுகிறார்.
பஞ்ச பூதங்களின் குணங்கள்:
பஞ்ச பூதங்கள் என்று கூறப்படும் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஒவ்வொன்றிற்கும் உள்ளதான தனிப்பட்ட குணங்களைத் திருமழிசையாழ்வார் கீழ்வரும் பாசுரத்தில் விளக்கிக் காட்டுகிறார்.
''பூநிலாய வைந்துமாய்ப் புனல்கண் நின்ற நான்குமாய்த்
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த கால் இரண்டுமாய்
மீநிலாய தொன்று மாகி வேறுவேறு தன்மையாய்
நீநிலாய வண்ண நின்னை யார் நினைக்க வல்லரே?'' (திருச்சந்த விருத்தம் -1)
பூமிக்கு உள்ள குணங்கள் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் எனும் ஐந்து. நீரில் உள்ள குணங்கள் சுவை, ஒளி, ஊறு, ஓசை எனும் நான்கு. நெருப்பில் உள்ள குணங்கள் ஓசை, ஊறு, ஒளி எனும் மூன்று. காற்றில் உள்ள குணங்கள் ஓசை, ஊறு எனும் இரண்டு. ஆகாயத்தில் உள்ள குணங்கள் ஓசை எனும் ஒன்று என்பதனையே இப்பாசுரம் விளக்கிக் காட்டுகிறது.
ஆதிமூலம்:
உலகப் பொருட்கள் அனைத்தையும் தோற்றுவிக்கும் முன்னர் திருமால் தான் ஒருவனாகவே நின்று உலகைத் தோற்றுவித்தான் என்பதனை ஆழ்வார்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்டிபன் ஹாக்கிங்கின் ஒரு கட்டுரையில் (The origin of the Universe). Although Science may solve the problem of how the universe began, it cannot answer the question why does the universe bother to exist என்கிறார். அதற்கு ஆதிகாரணனாக ஒரு கடவுள் தேவைப்படுகிறார் என்பதை அறிவியலாளர்கள் தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள். எதுவுமே இல்லாத காலம் கூடத் துலங்காத அந்த முதற்கணத்திற்கு முற்பட்ட நிலையைப் பற்றி இயற்பியல் (Singularily) என்கிறது. இதனையே நம்மாழ்வாரும்
''என்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமில்லா அன்று
நான்முகன் தன்னொடு தேவர் உலகோடு உயிர்படைத்தான்'' (திருவாய்மொழி 4.10.1)
என்று குறிப்பிடுகிறார்.
உலக ஒடுக்கம்:
உலகம் விரிவடைந்து கொண்டே போகிறது என்றாலும் அதே சமயம் கருத்துளைகள் என்று குறிப்பிடும் சில இடங்களில் எல்லாம் சுருங்கிக் கொண்டே இருக்கிறது. அதன் எல்லைக்குள் எது அகப்பட்டாலும் உறிஞ்சப்பட்டு விடும். ஒளி கூட தப்ப முடியாது என்று சொல்கிறார்கள். மிகப் பெரிய விண்மீன்கள் பல திடீரென்று சுருங்கியதால் தான் கருந்துளைகள் உண்டாகி இருக்கின்றன. பிரபஞ்சத்திலேயே செறிவு மிக்கவை இவைதான். அவை விரிவடைந்து கொண்டே போகின்றன. கருந்துளைக்குள் என்ன இருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை அக்கம் பக்கத்திலுள்ள விண்மீன்களை அடிக்கடி விழுங்கிக் கொண்டே இருக்கின்றன. பிரபஞ்சத்தில் 10 ஆயிரத்தில் ஒரு பகுதியை ஏற்கனவே விழுங்கிவிட்டன. இப்பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களும் கூட ஒரு நாள் விழுங்கப்பட்டு விடலாம். இதனைத் திருமால் உலகை உண்டு உமிழ்ந்ததாகக் கூறும் கருத்துடன் ஒப்பிடலாம்.
''உய்ய உலகு படைத் துண்ட மணிவயிறா'' (பெரியாழ்வார் திருமொழி. 1.6.1)
''உண்டிட்டி உலகினை ஏழும் ஒரால் இலையில் துயில் கொண்டாய்'' (பெரியாழ்வார் திருமொழி. 2.7.9)
தசாவதாரக் கொள்கை:
உலகில் தோன்றிய முதல் உயிர் நீரிலேயே தோன்றியிருக்க வேண்டும் என்பது அறிவியல் கண்டுபிடிப்பு. பரிணாமக் கொள்கையின் அடிப்படையிலேயே அவை வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதும் அவர்கள் கருத்து. திருமாலின் அவதாரம் பற்றிய கொள்கைகளும் அவற்றிற்கு ஏற்றாற் போன்றே அமைந்துள்ளன. திருமாலின் அவதாரங்கள் மொத்தம் 21 என்று குறிப்பிடுவர். ஓம் பகவதே நம :/ புருஷாய நம :/ குமாராய நம :/ வராஹாய / நாராதாய / நர நாராயணாய / கபிலாய / தத்தாத்ரேயாய / யக்ஞாய / ரிஷ’பாய / பருதவே / மத்ஸ்யாய / கமடாய / தன்வந்தரயே / மோஹ’ன்யை / நருஸ’ஹ்மாய / வாமனாய / பரசுராமாய / வ்யாஸாய / ரகுராமாய / பலராமாய / க்ருஷ்ணாய / புத்தாய / ஓம் கல்கயே நம :/ என்று பாகவதம் குறிப்பிடும். ஆயினும் குறிப்பிட்ட மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், ராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி ஆகிய பத்து அவதாரங்களை மட்டும் தசாவதாரம் என்று குறிப்பிடும் வழக்கம் காணப்படுகின்றது. இது பரிணாம வளர்ச்சியைக் சுட்டுகிறது எனலாம்.
முதலில் தோன்றிய உயிர் நீரிலேயே தோன்றியிருக்க வேண்டும் என்பதனைக் காட்டுவது மச்ச அவதாரம். அதற்கடுத்து உயிர்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் தன்மை படைத்ததாக வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் அமைவது கூர்ம அவதாரம். பாலூட்டி நிலையில் உயிர்கள் காலெடுத்து வைப்பதைக் குறிப்பது வராக அவதாரம். விலங்கு இனத்திலிருந்து மனித உயிர்கள் தோற்றம் பெற்றமையைக் குறிப்பிடுவது வாமன அவதாரம். உலோகங்கள் கண்டறிந்து வேட்டையாடும் நிலையைக் குறிப்பது கையில் கோடாரி ஏந்திய பரசுராம அவதாரம். மனிதன் நாகரீகத்தில் மனதளவில் பக்குவமடைந்தமையைக் காட்டுவது ராம அவதாரம்,. வேளாண் நாகரீகம் உருவாகியமையை பலராம, கிருஷ்ண அவதாரங்கள் காட்டும். பூமியில் அதர்மம் தலைதூக்கும் நிலையில் கொடியவர்களை அழிக்க மீண்டும் பகவான் அவதாரம் எடுப்பர் என்பதனைக் கரத்தில் வாளுடன் தோன்றும் கல்கி அவதாரம் குறிப்பிடும்.
இத்தகைய அவதாரச் சிறப்பு குறித்து அருளிச் செயல் முழுமையிலும் காணமுடிகின்றது.
இவை தவிர திருமாலின் திரு உருவத்திற்கும் அறிவியல் ரீதியான பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆன்மீகம் உள்ளத்தைப் பண்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அறிவு ரீதியான செய்திகள் பலவும் கொண்டு விளங்குகிறது. அவற்றை ஆழ்ந்து படிப்பதன் வாயிலாகவே நாம் அவற்றை உணர முடியும்.
நன்றி: பிறதுறைத் தமிழியல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக