30/01/2011

பாரதி உருவாக்கம் - சமூக அரசியல் பின்புலம் - செல்லம்மாள்

கவிதையிலும் உரைநடையிலும் பரீட்சார்த்த முறைகளின் முன்னோடியாக இருந்தவர் சுப்பிரமணிய பாரதியார். 1882 டிசம்பர் 11-ஆம் நாள் எட்டயபுரத்தில் நடுத்தர பிராமணக் குடும்பத்தில் பிறந்து 1921 - இல் 39 வயது பூர்த்தியாயவதற்குள் இவ்வுலக வாழ்வை முடித்துக் கொண்டவர். 1904 ஆம் ஆண்டு ''விவேகபாநு'' இதழில் பாரதியின் முதல் பாடல் வெளியாகியது. அதே ஆண்டு நவம்பர் மாதம் ''சுதேசமித்திரனி''ல் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றார். இதிலிருந்தே அவரது உரைநடை எழுத்துப்பணி தொடங்கியது.

1885 - இல் ஏற்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்திற்குப் பிறகு இந்தியாவில் சுதந்திர போராட்ட முயற்சிகள் ஏற்பட்டாலும், 1905- இல் நடைபெற்ற வங்கப்பிரிவினைக்குப் பிறகு புரட்சி இயக்கங்களாலேயே ஆங்கிலேய எதிர்ப்பு தீவிரமடைந்தது. இந்தியா முழுவதும் பலரைத் தீவிரவாதியாக்கிய இச்சம்பவமே பாரதியின் புரட்சிப் போக்கிற்கும் அடித்தளமிட்டது. இதன் மூலமே பாரதி அரசியலில் நுழைத்தார். ''வங்கப் பிரிவினைக் காலத்திற்குச் சிறிது முன்பும் அதை ஒட்டியும் பாரதியின் தேசபத்தி தீவிரமாகத் துடித்தெழுந்தது, ''சுதேசமித்திர''னின் மிதவாதக் கொள்கைக்குள் சிறைப்பட்டுக் கிடக்க பாரதியின் மனம் இசையவில்லை. எனவே ''மித்திரனை''விட்டு விலக்கி கொண்டார்'' 1906 -இல் கல்கத்தா காங்கிரசுக்குச் சென்று வரும் வழியில் ஸ்ரீமதி நிவேதிதா தேவியைச் சந்தித்தார். இதே கால கட்டத்தில்தான் இரஷ்ய - ஜப்பானிய யுத்தம் (1904-1905), முதல் இரஷ்யப் பிரட்சி (1905-1907) போன்றவையும் நிகழ்ந்தன.

இதைத்தவிர வைதிகப் பிராமணக் குடும்பத்தின் வளர்ப்பு முறை, காசிவாசம், ஆங்கிலக் கல்வி, ஷெல்லி, பைரன், விட்மன் போன்றோரின் புரட்சிகரமான கவிதைகள், சமஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ள பத்தி இலக்கியங்கள், சங்ககாலச் சான்றோர், உபநிடத முனிவர்கள், வள்ளுவர், இளங்கோ, கம்பர், மாஜினி, நிவேதிதா தேவி, திலகர், லெனின் என்னும் தாக்கங்களோடு பாரதியின் அவ்வப்போதைய மனநிலை, சூழ்நிலை, வாழ்க்கை நிலைமைகள் போன்றவற்றையும் அவரின் எழுத்துக்களில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கவிதை சில குறிப்பட்ட பாடு பொருளை மட்டுமே ஏற்கும். பாரதி கவிதையில் பேச முடியாத பல கனமாக விஷயங்களையும், கட்டுரைகளில் அனாயசமாகக் கையாள்கிறார், அவரது கட்டுரைகள் அனைத்துமே ஆழ்ந்தசமூகப் பொறுப்பின் மீது பிறந்தவை. ''பாரதி சுயமாக வலைபின்னிய சிலந்திப்பூச்சி என்பதை விட, கோடிக்கணக்கான பூக்களிலிருந்து தேனைத் திரட்டிய தேனீ என்றே கூறல் வேண்டும். பாரதி ஒரு கூட்டு மேதை (Synthetic Genius), பொருத்தமாகக் குருநாதர்களைப் பொறுக்கி எடுத்த புனிதன்'' என்ற ஜ“வாவின் கூற்று முழுக்க உண்மை.

மகாகவி பாரதியின் பெருமை இன்று தமிழ்நாடு நெடுகிலும் - தமிழர் வசிக்கும் இடமெல்லாம் - தமிழ் மொழியின் சிறப்பினால் வசீகரிக்கப்பட்டு, தமிழ் கற்ற அன்பர்கள் வாழும் அயல்நாடுகள் பலவற்றிலும் பேசப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டினருக்கே பாரதியின் ஆற்றலையும் பாரதி பாடல்களின் தனிச்சிறப்பையும் எடுத்துக் கூறி, அந்த மகாகவிக்காகப் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமை நீடித்திருந்தது வெகுகாலம் வரை. ஒரு நாள் இரவில் மாற்றம் பெற்றதல்ல இந்நிலை. இதனைப் புரிந்துகொள்ள தமிழகத்தின் எண்பது ஆண்டுகால சமூக அரசியல், சமய வரலாற்றை ஆராய வேண்டும்.

பாரதி உயிரோடு இருந்த காலம் வரையிலும் அதாவது, 1920 ஆம் ஆண்டு வரையில் வெளிவந்த பாரதி நூல்கள் மொத்தம் 19 மட்டுமே. பாரதி மறைவுக்குப்பின் செல்லம்மாள்பாரதி நூல் வெளியீட்டுப்பணியை மேற்கொண்டார். ஆனால் அவரால் சுதேச கீதங்கள் 2 பாகங்கள் மட்டுமே கொண்டு வர முடிந்தது. பின்னர் பாரதியின் இளவல் சி.விசுவநாதன் அந்தப் பணியை ஏற்றுக் கொண்டார். 1922 முதல் 1949 ஆம் ஆண்டு பாரதி நூல்கள் அரசுடைமையாகும் வரை வெளிவந்த நூல்களின் எண்ணிக்கை மொத்தம் 33 மட்டுமே. மந்த கதியில் சென்று கொண்டிருந்த பாரதியின் நூல் வெளியீட்டுப் பணிகள் 1950 -களுக்குப் பின் மாற்றமடைகிறது. 1982 -இல் பாரதிக்கு தமிழக அரசும், புதுக்சேரி அரசும் நூற்றாண்டு விழா எடுத்துச் சிறப்பித்தன. 1949 - இல் பாரதி நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு, 1982 வரையிலும் புற்றீசல் போல நூற்றுக்கணக்கான நூல்கள் வெளிவந்தன. இது எப்படி சாத்தியாமாயிற்று என்பது ஆய்வுக்குரியது. பாரதியின் எழுத்துக்கள் கவனிப்புப் பெறாமல் போனதற்கு, மக்கள் அதன் தரத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாதது மட்டுமின்றி இன்னுமொரு முக்கிய காரணமும் உண்டு. பாரதி என்கிற மிகப்பெரிய ஆளுமை, அச்சு இயந்திரம் அறிமுகமாகி நூறாண்டுகள் ஆகியிருந்த போதும் கூட புத்தக வெளியீடு என்பது ஒரு தொழிலாக இல்லாத சூழலில், புத்தகங்களை அதிக அளவில் வெளியிடுவதற்கும் அதனை விற்பனை செய்து இலாபம் ஈட்டுவதற்குமான சாத்தியக்கூறுகள் குறைவாகவே இருந்தன. இதைப் பற்றிய ஆதங்கம் பாரதிக்கும் இருந்திருக்கிறது. இதோடு கூடவே அன்னியர் ஆட்சி.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட பல மாற்றங்களில் பதிப்பகத் தொழிலும் ஒன்று. கூடவே தமிழகத்தின் சமூக, அரசியல் கூறுகளும், பல தலைகீழான மாற்றங்களுக்கு உட்பட்டன. ''பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேராசிரியர் பெ.சுந்தரம்பிள்ளை, வி.கனக சபைப்பிள்ளை, ஜே.எம். நல்லசாமிப் பிள்ளை போன்ற சைவ அறிஞர்களின் ஆய்வுகளாலும் அறிவுலகச் செயற்பாடுகளாலும் முகிழ்த்த பார்ப்பனரல்லாதார் இயக்கம், 1916 - இல் ஜஸ்டில் கட்சியின் உருவாக்கத்தோடு அரசியல் அமைப்பு ஒன்றினையும் பெற்றது. 1927 - இல் பெரியார் தலைமையேற்ற பின் சுயமரியாதை இயக்கமாக உருமாறியது. சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் நிறைந்திருந்த பார்ப்பனரை அரியணையிலிருந்து இறக்கி அந்த இடத்தைத் தாம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இன்று பிற்படுத்தப்பட்டோர் என்று சொல்லப்படும் இன மக்களிடையே ஏற்பட்டது. ஆங்கிலேயரின் கொடையான ஆங்கிலக்கல்வி இதில் முக்கிய பங்காற்றியது. தொடர்ந்து திராவிட இயக்கம் ஏற்படுத்தித்தந்த மேடைப் பேச்சின் புதிய பரிணாமம் மூலம் பல விஷயங்களை மக்களிடம் கொண்ட செல்ல முடிந்தது.

இது மட்டுமல்ல பாரதியால் வசீகரிக்கப்பட்டு, பாரதி புகழ்பாடி, அம்மகாகவியின் பெருமையை நாட்டு மக்களிடையே பரப்புவதில் ஆர்வத்தோடு பலர் உழைத்தனர். பாரதியின் புகழைப் பரப்புவதையே தம் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்தவர் வ.ரா. அவர்கள். தீரர் சத்தியமூர்த்தி, கல்கி கிருஷ்ணமூர்த்தி, பரலி சு. நெல்லையப்பர், சுதேசமித்திரன் சீனிவாசன், ப, ஜ“வானந்தம், சங்கு சுப்பிரமணியம், திருலோக சீதாராம், ரா.ஆ. பத்மநாபன், குமரி மலர் ஏ.கே. செட்டியார், பெரியசாமித்தூரன், பாரதிக்கு எதிர் அணியில் இருந்த வி. கிருஷ்ணசாமி ஐயர் என்று எத்தனையோ பேர் பாரதியின் புகழைப்பரப்பி இருக்கிறார்கள். இதில் பாரதிதாசனுக்குரிய பங்கும் கணிசமானது. திரு.வி.க. வின் தேசபக்தன், நவசக்தி, சுதேசமித்திரன், தினமணி, காந்தி, சுதந்திரச் சங்கு, திரு எஸ்.எஸ். வாசனின் ஆனந்த விகடன், மணிக்கொடி முதலிய இதழ்களின் ஆசிரியர்கள், அதில் பணியாற்றிய எழுத்தாளர்கள் பலரும் பாரதியின் புகழைப் பரப்பி உள்ளனர். பார்ப்பனர்களை அரியணையிலிருந்து இறக்க வேண்டும் என்ற எண்ணமுடைய சமூகத்தில் ஒரு பார்ப்பன கவி முன்னெடுக்கப்பட்டதும், அரசே அவருக்கு ஓராண்டு காலம் நூற்றாண்டு விழா எடுத்ததும் பிற்படுத்தப்பட்டோர் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றமடைந்திருந்த கால கட்டத்தில் நிகழ்ந்தது கவனத்துக்குரியது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மேலோங்கியிருந்த தமிழ்இன உணர்வும் கூட இதற்குக் காரணமாயிருக்கலாம்.

1935 - இல் வ.ரா.வுக்கும் கல்கிக்கும் ''பாரதி மகாகவியா இல்லையா?'' என்னும் கருத்தில் எழுந்த விவாதத்திலிருந்து பாரதி அதிக கவனிப்புக்கு உள்ளானார் என்றே தோன்றுகிறது. ஆயினும் ஆனந்த விகடனில் 1931 முதலிலேயே கட்டுகரைகளிலும் பாரதியாரின் கவிதைகள், உரைநடையில் இருந்தும் மேற்கோள்களை விரிவாக எடுத்தாண்டு பாரதியாரை தமிழ்நாட்டில் ஊரறியச் செய்தவர் கல்வி. ''மகாகவி பாரதியாரை சோஷலிஸ்டாக வருணித்து முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ஜ“வா அவர்கள்'' வகுப்புவாத, இனவாத, பிரிவினைவாதக் கண்ணோட்டத்தில் பாரதியைத் தூற்ற வந்தவர்களை இடிமுழக்கக் குரலில் ஆவேசப் பேச்சால் தூக்கி எறிந்தவர் ஜ“வா, ம,பொ.சி.யின் பங்கும் பெருமைக்குரியது சென்னை மகாஜன சபையும், திருவல்லிக்கேனி பாரதி பிரசுராலயமும் மட்டுமே, காங்கிரஸ் பாணியில் வெறும் கட்சி விழாவாகக் கொண்டாடிவந்த பாரதி விழாவினை, கட்சிச் சார்பின்றித் தேசிய விழாவாகக் கொண்டாட முதன் முயற்சி எடுத்தவர் ம.பொ.சி. ''1938 - ஆம் ஆண்டில் முதன் முதலாகச் செப்டம்டர் 11 தொடங்கி ஒரு வாரகாலம் சென்னை நகரம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் பாரதி விழாவைக் கொண்டாடச் செய்தேன்... ஆம்; தமிழ்க் கவிஞரின் திருநாளிலே தமிழினத் தலைவர்கள் எல்லாம் - அவர்கள் எந்த கட்சியினராயினும் ஒன்றுபடச் செய்தேன்'' என்று கூறுகிறார் ம.பொ.சி.

பாரதிக்கான ஆதரவுக் குரல்களோடு எதிர்ப்புக் குரல்களும் இருந்தன. அவற்றையும் இணைத்துப் பார்த்தால்தான் கட்டுரை முழுமையடையும். எதிர்ப்போர் பெரும்பாலும் அவரது ஆன்மீகப் பக்கத்தையே கையிலெடுப்பர். அவரை ஒரு இந்துத்துவவாதியாக இன்று வரை பலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதற்கு இந்த நூற்றாண்டின் சமூகப் பின்புலத்தோடு கூடிய சமய வரலாற்றை முழுமையாக, அறிய வேண்டும். எது எப்படியாயினும், இம்மண்ணை விட்டு மறைந்து 82 ஆண்டுகள் ஆன நிலையிலும் கூட, ''பாரதியியல்'' மிக முக்கியமான ஆய்வுப் பொருளாக இருப்பது கவனத்துக்குரியது. வேறுபட்ட கொள்கையைச் சார்ந்தவர்களும், பலவகையான வாசிப்பு நிலையிலுள்ளோரும், தத்தம் நிலையிலிருந்து விரித்துப் பொருள் கொள்ளும்படியான மிகப்பெரிய வாசிப்பு அனுபவமாகத் திகழ்கிறார் பாரதி.

நன்றி: தமிழ்ப் புத்திலக்கியம்

கருத்துகள் இல்லை: