உலகத் தோற்றம்:
நிலம், நீர், காற்று, விண், வளியென கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. மயக்கமான நிலை நாளடைவில் மங்கத் தொடங்கியது. சிறிது சிறிதாய் உலகத்தின் வெளிப்புறத் தோற்றம் பரிமாணங்கள் பெற்றுத் தெளிவு பெறத் துவங்கியது என்கிறார் தொல்காப்பியர் இதனை,
நிலம் தீ நீர்வளி விசும் பொடைந்துங்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத்
திரிவில் சொல்லோடு தழாஅல் வேண்டும்
என்கிறார்.
உயிரினப் பாகுபாடு:
புலன்களின் எண்ணிக்கை, செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உணர்வுகள் படிப்படியே உண்டாகும் வளர்ச்சி நிலையினை நுட்பமாக அணுகி ஆராய்ந்து உயிரினப் பாகுபாட்டை வகுத்துள்ளது ஆராயத்தக்கது.
''நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே''
என்று புலன்களின் அடிப்படையில் உயிரினங்களை வகைப்படுத்துவர். உயிர் வகைகளைத் தொல்காப்பியர் ஆறு வகைகளாகப் பாகுபாடு செய்கின்றார்.
ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
இரண்டறி வதுவே யதனொடு நாவே
மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
ஆறறி வதுவே யவற்றொடு மனனே
நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே என்கிறார்.
ஓரறிவுயிர்:
புல்லும் மரனு மோரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மெய்யினால் உணரும் உணர்வுடைய புல், மரம் முதலியவற்றை ஓரறிவு உயிர்களாகக் கூறுவர். ஓரறிவு உயிர்களைத் தொல்காப்பியர் இரண்டாகப் பகுத்துக் காண்கின்றார்.
''புறக்கா ழனவே புல்வென மொழிப''
வெளியே சதைப்பற்று உடையனவாய் உள்ளே சதைப்பற்று அற்றனவாய் உள்ளனவற்றைப் புல் என்பர் புல்லின் உறுப்புக்களாக,
தோடே மடலே யோலை யென்றா
ஏடே யிதழே பாளை யென்றா
ஈர்க்கே குலையடின நேர்ந்தன பிறவும்
புல்வொடு வருமெனச் சொல்லினர் புலவர்
என்கிறார்.
''அகக்காழனவே மரமென மொழிப''
உள்ளே சதைப்பற்று உடையனவாய் வெளியே அற்றனவய் உள்ளனவற்றை மரம் என்பர். மரத்தின் உறுப்புக்களாக,
இலையே தளிரே முறியே தோடே
சினையே இழையே பூவே யரும்பே
என்கிறார்.
ஒருவித்திலை மற்றும் இருவித்திலை தாவரங்களுக்குப் பொதுவாக,
காயே பழமே தோலே சுவையும் செதிளே
வீழோ டென்றாங் சுவையும் அன்ன
என்கிறார்.
ஈரறிவுயிர்:
மெய்யினால் உணர்ந்து கொள்வதுடன் வாயினால் உணரும் சுவை உணர்வுடையவைகள் ஈரறிவு உயிர்களாகும்.
நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
என்கிறார். நந்தும் முரளும் ஈரறிவுடைய உயிர்களாகும். சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பனவும் கொள்ளலாம் என்பது இளம்பூரணர் கருத்து.
மூவறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல் என்ற இரண்டு உணர்வுடன் மூக்கினால் உணர்ந்து கொள்ளும் திறன் படைத்தவைகள் மூவறிவு உயிர்களாகும்
சிதலு மெறும்பு மூவறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
சிதலும் எறும்பும் உற்றுணர்வும் நாவுணர்வும் மூக்குமுடையனவாதலால் மூவறிவுயிராகும். இவற்றின் கிளைகளாவன ஈயன் மூதாய் போல்வன.
நான்கறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல், நுகர்தல் என்ற மூன்று உணர்வுடன் பார்த்தல் திறன் படைத்தவைகள் நான்கறிவுயிர்களாகும்.
நண்டுந் தும்பியு நான்கறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
நண்டிற்கும் தும்பிக்கும் செவியுணர்வு ஒழித்து ஒழிந்த நான்கு உணர்வுகளும் உள. பிறவும் என்றதனால் ஞ’மிறும் சுரும்பும் எனக் கொள்க என்பார் இளம்பூரணர்.
ஐயறிவுயிர்:
தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் என்ற நான்கு உணர்வுடன் கேட்டல் திறன் படைத்தவைகள் ஐயறிவுயிர்களாகும்.
மாவும் மாக்களும் ஐயறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
மாவென்பன நாற்கால் விலங்கு. மாக்களெனப்படுவார் மனவுணர்ச்சியில்லாதவர். கிளையென்பன எண்கால் வருடையும் குரங்கும் போல்வன.
ஆறறிவுயிர்:
ஐந்து அறிவோடு பகுத்தறிவும் திறன் படைத்தவன் மக்கள் பகுத்தறியும் திறன் அற்றவர்களை மாக்கள் என்று அழைப்பர்.
மக்கள் தாமே யாறறி வுயிரே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே
என்பதன் மூலம் ஆறறிவு படைத்த மாந்தருடன் பிற உயிரினங்களையும் இணைத்துக் கூறுவதன் மூலம் அறியலாம்.
தொல்காப்பியர் மரபியலுள் ஒன்று முதல் ஆறறிவு படைத்த உயிரினங்களின் இயல்பையும் அவ்வுயிரினங்கள் தொடர்பான மரபு வழிப்பட்ட பெயரினங்களையும் ஆராய்ந்து பல அரிய உண்மைகளைக் கூறுகிறார். இச்செய்திகள் மூலம் தொல்காப்பியரின் உயிரியல் அறிவு தொடர்பான சிந்தனைகளை விளங்கிக் கொள்ள முடிகிறது.
தொடு உணர்வு கொண்ட உயிரே முதல் உயிர் என்றும் ஓரறிவு உயிர் என்றும் அவற்றிலிருந்தே ஈரறிவு உயிர், மூவறிவு உயிர், நான்கறிவு உயிர், ஐந்தறிவு உயிர் முதலான அனைத்தும் உருவாயின என்பர். இதனைத் தொல்காப்பியர்,
ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே
என்கிறார்.
அறிவியல் வளராத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர்களின் இனம், பெயர், பாகுபாடு, அறிவு போன்றவை குறித்து ஆராய்ந்து தெளிவாக உணர்த்திய தொல்காப்பியனாரின் புலமை வியப்புக்குரியது.
தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் இலக்கணங்கள் அனைத்தையும் முன்னோர் வழங்கிய மரபு பிறழாமல் கூறியுள்ளார். முன்னைய ஆசிரியர்களைத் தொல்காப்பியர், என்மனார் புலவர், என்ப என்ற தொடர்களால் குறிப்பிடுவதும்,
மரபு நிலை திரியா மாட்சிய ஆகி
விரவும் பொருளும் விரவும் என்ப
என்றும்,
மரபுநிலை திரியற் பிறிது பிறிதாகும் போன்ற நூற்பாக்களை அமைத்திருத்தலை உற்று நோக்குவதன் மூலம் அறியலாம்.
உயிர்களின் தோற்றம் வளர்ச்சி பற்றிய டார்வினின் கருத்துக்களும் தொல்காப்பியரின் கருத்துக்களும் ஒன்றுபட்டும் வேறுபட்டும் காணப்படுகின்றன. அறிவுரைகளைக் கொண்டு உயிர்களைப் பிரிக்கும் நிலைதான் தொலகாப்பியரின் முறை. தொல்காப்பியரின் எண்ணப்படி அறிவுரைகளின் வளர்ச்சிக்கு எல்லையேனும் குறிக்கப் பெறவில்லை.
டார்வினுடைய கொள்கைப்படி உயிர் பெருக்கத்திற்கு இன வேறுபாடு அவசியம். தசைக் குழம்பான நிலையிலேயே இன உறுப்புகள் இருந்தன. அவற்றின் உதவியுடன் உயிரினம் பெருகியது. நாளடைவில் பல்வேறு மாற்றங்களுடன் இன்று மனிதன் வளர்ச்சி நிலையை அடைந்திருக்கிறான் என்பது டார்வினின் பரிணாமக் கொள்ளை உணர்த்துகின்ற உண்மை.
தொல்காப்பியர் கூறும் மனித இனத்தோற்றம் பற்றிய ஆராய்ச்சி பெரும்பாலும் அறிவியல் முறைகளுடன் ஒத்துள்ளது. அவ்வாறு பார்க்கும் நிலையில் டார்வினின் விளக்கம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது.
உணர்வுகள் படிப்படியே தோன்றும் வளர்ச்சி நிலை பற்றி உயிர்களை ஆறு பிரிவாகத் தொல்காப்பியர் பகுத்துள்ளார்.
நன்றி: ஆய்வுக் கோவை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக