27/01/2011

அழியாச்சுடர் - மெளனி

வழக்கமாகக் காலையில் அவனைப் பார்க்கப் போவது போல நான் அன்று செல்லவில்லை. உதயத்திலிருந்தே உக்கிரமாக வெய்யில் அடித்தது. தெளிவுற விளங்காத ஒருவித அலுப்பு மேலிட்டதனால் நான் வீட்டை விட்டே வெளிக்கிளம்பவில்லை. மாலையில் சென்று அவனைப் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி, மிக உஷ்ணமான அன்று பகலை, என் வீட்டிலேயே கழித்தேன்.

நேற்று முன்தினம் இது நிகழ்ந்தது. மாலை நாலரை மணி சுமாருக்கு நான் அவன் வீட்டை அடைந்தேன். அவன் என் பாலிய சிநேகிதன். நான் சென்றபோது, தன் வீட்டின் முன் அறையில், அவன் வழக்கம்போல் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான். திறந்த ஜன்னலுக்கு எதிரே உட்கார்ந்து இருந்த அவன் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருப்பதாக எண்ணித் திடீரென உட்புகச் சிறிது தயங்கினபடியே ரேழியில் நின்றேன். என் பக்கம் பாராமலே, என்னை அவன் உள்ளே அழைத்தது திடுக்கிடத்தான் செய்தது. அவனுடைய அப்போதைத் தோற்றமும் கொஞ்சம் ஆச்சரியமளிப்பதாகவே இருந்தது. உள்ளே ஒரே நாற்காலியும் அதன் அருகில் ஒரு மேஜையும் இருந்தன. மற்றும் எதிரில் வீதிப் பக்கம் ஜன்னல் திறந்திருந்தது.

`காபி சாப்பிட்டாகிவிட்டதா?’ என்று கேட்டுக்-கொண்டே நான் உள்ளே நுழைத்தேன்.

`இல்லை’ என்றான்.

`என்ன?’

`ஆமாம். காலை முதல் இங்கே உட்கார்ந்தபடிதான் இருக்கிறேன் _ யோசனைகள்_’ எனக் கொஞ்சம் சிரித்தபடி கூறினான்.

என் நண்பன் சிரிப்பதை மறந்து விட்டான் என்பதும், எனக்குத் தெரிந்து சமீப காலத்தில் சிரித்ததே இல்லை என்பதும் உண்மை. அப்போது அவன் சிரித்ததும் உணர்ச்சி இழந்த நகைப்பின் ஒலியாகத்தான் கேட்டது. அவன் பேசின தொனியும், என்னைப் பாராது வெளியே வெறித்துப் பார்க்கும் பார்வையும் எனக்கு என்னவோ போல் இருந்தன. மேலே நான் யோசிக்க ஆரம்பிக்குமுன் அவன் பேச ஆரம்பித்தான். அவன் சமீப காலமாக ஒருவித மனிதனாக மாறிவிட்டான்.

`இங்கே வாப்பா; இங்கே இப்படி உட்காரு; எதிரிலே பார்’ என்று சொல்லிக்கொண்டே எழுந்து மேஜையின் மீது அவன் உட்கார்ந்து கொண்டான்; நான் நாற்காலியில் அமர்ந்தேன்.

`நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து அதோ அங்கே என்ன தெரிகிறது பார்’ என்றான்.

இலையுதிர்ந்து நின்ற ஒரு பெரிய மரம், பட்ட மரம் போன்ற தோற்றத்தை அளித்துக்கொண்டு எனக்கு எதிரே இருந்தது. வேறு ஒன்றும் திடீரென என் பார்வையில் படவில்லை. தனிப்பட்டு, தலைவிரிகோலத்தில் நின்று, மௌனமாகப் புலம்புவது போன்று அம்மரம் எனக்குத் தோன்றியது. ஆகாயத்தில் பறந்து திடீரென அம்மரக் கிளைகளில் உட்காரும் பட்சிகள், உயிர் நீத்தவையேபோல் கிளைகளில் அமைந்து ஒன்றாகும். அவற்றின் குரல்கள் மரண ஒலியாக விட்டுவிட்டுக் கேட்டுக் கொண்டிருந்தன. சிறிது சென்று, ஒன்றிரண்டாகப் புத்துயிர் பெற்றுக் கிளைகளை விட்டு ஜிவ்வெனப் பறந்து சென்றன. அதிக நேரம் அம்மரத்தின் தோற்றத்தைப் பற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கவில்லை. காலையிலிருந்து உக்கிரமான வெய்யிலில் பாதி மூடிய கண்களுடனும், வெற்று வெளிப்பார்வையுடனும் கண்ட தோற்றங்கள் என் நண்பனுக்கு எவ்வெவ்வகை மனக் கிளர்ச்சிக்குக் காரணமாயினவோ என்பதை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.

`என்ன?’ என்று அவன் கேட்டது என்னைத் தூக்கிவாரிப் போடும்படி இருந்தது.

`அதோ, அந்த மரந்தான்’ என்றேன்.

`என்ன? மரமா? சரி’ என்று சொல்லிக்கொண்டே உட்கார்ந்தபடியே சிறிது குனிந்து அதைப் பார்த்துவிட்டு அவன் பேசலானான்.

`ஆமாம்; அதுதான்; ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடிக் கை விரித்துத் தேடத் துழாவுவதைப் பார்த்தாயா? ஆடி அசைந்து நிற்கிறது அது; ஆட்டம் ஓய்ந்து நிற்கவில்லை….. மெல்லெனக் காற்று மேற்கிலிருந்து அடிக்கும். காதல் முகந்த மேகங்கள், கனத்து மிதந்து வந்து அதன்மேல் தங்கும்…… தாங்காது தளர்ந்து ஆடும்…… விரிக்கப்பட்ட சாமரம் போன்று ஆகாய வீதியை மேகங்களிலிருந்து சுத்தப்படுத்துவதா அது….? அல்லது தளிர்க்கும் பொருட்டு மழைத்துளிகளுக்கு ஏங்கியா நிற்கிறது…? எதற்காக…?’

`என்ன நீ பெரிய கவியாகிவிட்டாயே! ஏன் உனக்கு இவ்வளவு வேகமும் வெறுப்பும்…..!’ என்றேன். அவன் பேச்சும் வார்த்தைகளும் எனக்குப் பிடிக்கவில்லை.

`சொல்லுகிறேன் கேள்: நேற்று நேற்று என்று காலத்தைப் பின்கடத்தி மனம் ஒன்பது வருஷத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்திற்குச் சென்று நின்றது. அந்த நிகழ்ச்சியை நினைப்பூட்டிக் கொண்ட பிறகு என் நிலை தடுமாறிப் போய்விட்டது. என்னவெல்லாமோ என் மனம் சொல்ல முடியாத வகையில் அடித்துக்கொள்ளுகிறது. அவ்வளவுதான்…’ எனச் சொல்லி நிறுத்தினான். அவன் கண்கள், காண முடியாத அசரீரியான ஏதோ வஸ்துவைப் பார்க்கத் துடிப்பதுபோல என்றுமில்லாதபடி ஜொலித்தன. என்னிடம் சொல்லுவதற்கு அல்ல என்பதை அவன் பேசும் வகை உணர்த்தியது.

`ஆம், ஒன்பது வருஷத்துக்கு முன்பு நான் கல்லூரி மாணவன். எனக்கு அப்போது வயது பதினெட்டு, அக்கால நிகழ்ச்சி ஒன்றே இன்று காலை முதல் பல்லவியாகப் பலவிதமான கற்பனையில் தோன்றுகிறது. அப்போது நான் பார்ப்பதற்கு எப்படி இருப்பேன் என்பது உனக்கு ஞாபகம் இருக்கலாம்…’

`நன்றாக… நீ…’

`சரி, சரி, என் நீண்ட மூக்கு, முகத்திற்கு வெகு முன்பாக நீண்டு செல்லுபவர்களைத் திருப்பி இழுப்பது போல வளைந்திருக்கும். அதன் கீழ் மெல்லிய உதடுகள் மிருதுவாகப் பளீரென்ற பல் வரிசைகளைப் பிறர் கண்கூசச் சிறிது காண்பிக்கும். அப்போதுதான் நான் கிராப் புதிதாகச் செய்து கொண்டேன். நீண்டு கறுத்துத் தழைத்திருந்த என் கூந்தலைப் பறிகொடுத்ததாகவே பிறர் நினைக்கும்படி, படியாத என் முன் குடுமியை, என் கையால் நான் அடிக்கடி தடவிக்கொள்ளுவேன். குறுகுறுவென்ற கண்களோடு என் அழகிலேயே நான் ஈடுபட்டு மதிப்பும் கொண்டிருந்தேன். அப்போது என்னை அநேகர் பார்த்திருக்கலாம். என்னைப் பற்றிய அவர்களுடைய எண்ணங்களை நான் கண்டுகொள்ளவில்லை. இப்போதோவெனின் நான் பார்ப்பது வறட்டுப் பார்வைதான். என்னுடைய கண்கள் வறண்டவை தாமே! என் அழகு இளமையிலேயே முடிவடைந்து விட்டது போலும். ஆனால், என் வாழ்க்கை இளமையில் முடியவில்லையே. அவளும் என்னைப் பார்த்தது உண்டு.’

`அவள் யார்?’ என்றேன் நான்.

`ஆமாம், அவளும்: சொல்லுவதைக் கேள். நான் கோவிலுக்குப் போய் எத்தனை வருஷமாகிறது? அந்தத் தினத்திற்குப் பின்பு, நேற்று வரையில் நான் கோவிலுக்குப் போனதில்லை. அதற்கு முன் அடிக்கடி போய்க்கொண்டு இருந்தேன். நீயும் என்னோடு வருவதுண்டே. நான் சொல்லும் அன்றிரவிலும் நீ என் பக்கத்தில் இருந்தாய்.

`அது திருவிழா நாள் அல்ல… அவளும் வந்திருந்தாள். அவள் வருவது எனக்குத் தெரியாது. நாம் கோவிலை விட்டு வெளி வந்தபோது உள்ளே போய்க் கொண்டிருந்த அவளை இருவரும் கோவில் வாயிலில் சந்தித்தோம். அவளுக்கு அப்போது வயது பதின்மூன்று இருக்கலாம். அவள் சட்டென்று என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையைத் திருப்பியது நானாக இருக்கலாம். ஆனால் திரும்பி, உன்னையும் கூட்டிக்கொண்டு அவள் பின்னோடு உள் செல்ல என்னை இழுத்தது எது? எனக்குத் தெரியவில்லை. அப்போதைய சிறு பிள்ளைத்தனமாக இருக்கலாம். காதல், அது, இது என்று காரணம் காட்டாதே. காரணமற்றது என்றாலும் மனக்குறைவு உண்டாகிறது. கர்வந்தான் காரணம் என்று வைத்துக் கொள்.

`அவள் பின்னோடு நான் சென்றேன். அநேகந்தரம் அவளைத் தொடக்கூடிய அளவு அவ்வளவு சமீபம் நான் நெருங்கியதும் உண்டு. என் வாய் அடிக்கடி ஏதோ முணுமுணுத்ததும் உண்டு. அது எதையும் சொல்வதற்கல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை.

`ஈசுவர சந்நிதியில் நின்று தலை குனிந்து அவள் தியானத்தில் இருந்தாள். அவளுக்குப் பின் வெகு சமீபத்தில் நான் நின்றிருந்தேன். அவளுடைய கூப்பிய கரங்களின் இடை வழியாகக் கர்ப்பக்கிருகச் சரவிளக்குகள் மங்கி வெகு தூரத்திற்கு அப்பாலே பிரகாசிப்பதாகக் கண்டேன். அவன் கண்கள், விக்கிரகத்திற்குப்பின் சென்று வாழ்க்கையின் ஆரம்ப இறுதி எல்லைகளைத் தாண்டி இன்ப மயத்தைக் கண்டுகளித்தனபோலும்! எவ்வளவு நேரம் அப்படி இருந்தனவோ தெரியாது. `காலம்’ அவள் உருவில், அந்தச் சந்நிதியில் ஓடாமல் சமைந்து நின்றுவிட்டது.

`தியானத்தினின்றும் விடுபட்டு என் பக்கம் அவள் திரும்பிய போது ஒரு பரவசம் கொண்டவனேபோல என்னையும் அறியாதே `உனக்காக நான் எது செய்யவும் காத்து இருக்கிறேன்; எதையும் செய்ய முடியும்’ என்று சொல்லி விட்டேன்! நீயும், அவளுடன் வந்தவர்களும் சிறிது எட்டி நின்றிருந்தீர்கள். உங்கள் காதுகளில் அவ்வார்த்தைகள் விழவில்லை. ஆனால் அவள் காதில் விழுந்தன என்பது நிச்சயம். அவள் சிரித்தாள்.

`அவளுக்கு மட்டுந்தானா நான் சொன்னது கேட்டது என்பதில் எனக்கு அப்போதே சந்தேகம். உள்ளிருந்த விக்கிரகம் எதிர்த் தூணில் ஒன்றி நின்ற யாளி அவையும் கேட்டு நின்றன என்று எண்ணினேன். எதிரே லிங்கத்தைப் பார்த்தபோது கீற்றுக்குமேலே சந்தனப் பொட்டுடன் விபூதி அணிந்த அந்த விக்கிரகம், உருக்கொண்டு புருவஞ் சுழித்துச் சினங்கொண்டது. தூணில் ஒன்றி நின்ற யாளியும் மிகமருண்டு பயந்து கோபித்து முகம் சுழித்தது; பின்கால்களில் எழுந்து நின்று பயமூட்டியது. அவளைப் பார்த்தேன். அவள் மறுபக்கம் திரும்பி இருந்தாள். பின்னிய ஜடை பின்தொங்க, மெதுவாகத் தன்னோடு வந்தவர்களுடன் சென்றாள். நான் அவளைச் சிறிது தொடர்ந்து நோக்கி நின்றேன். ஆழ்ந்து அமுங்கிய உலக நிசப்தத்தைக் குலைக்க அவளுடைய சதங்கைகள் ஒலிக்கும் ஒலி அவசியம் போலும்! வந்தவர்களுடன் குதூகலமாகப் பேசி, வார்த்தைகளாடிக்-கொண்டே கால் சதங்கைகள் கணீரென்று ஒலிக்கப்போய் விட்டாள். சந்நிதியின் மௌனம் அவளால் உண்டான சப்தத்தின் எதிரொலியில் சிதைவுற்றது. வௌவால்கள் கிரீச்சிட்டுக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாகப் பறந்தன.’

என் நண்பன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் மனம் ஓடியது. அது கட்டுக்கடங்காமல் சித்திரம் வரைய ஆரம்பித்தது _ கோவில், சந்நிதானம், ஆம். பகலிலும் பறக்கும் வௌவால்கள் பகலென்பதையே அறியாதுதான் கோவிலில் உலாவுகின்றன.

பகல் ஒளி பாதிக்குமேல் உட்புகத் தயங்கும். உள்ளே, இரவின் மங்கிய வெளிச்சத்தில் சிலைகள் ஜீவ களைகொண்டு நிற்கின்றன. ஆழ்ந்த அனுபவத்திலும் அந்தரங்கத்திலும் மௌனமாகக் கொள்ளும் கூடமான பேரின்ப உணர்ச்சியை வளர்க்கச் சிறப்பித்ததுதானா கோவில்? கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும். அதன் பிரகாசத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத திகைப்பைக் கொடுக்கும். அச்சந்நிதானம் எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள்தாமா…..? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?_என்பன போன்ற பிரச்னைகளை என் மனம் எழுப்பியபோது, ஒரு தரம் என் தேகம் முழுவதும் மயிர்க்கூச்செறிந்தது.

என் நண்பனின் பார்வை மகத்தானதாக இருந்தது. ஏதோ ஒரு வகையில், ஒரு ரகசியத்தை உணர்ந்த அவன் பேச்சுக்கள் உன்னதமாக என் காதில் ஒலித்துக்-கொண்டிருந்தன. பேச்சினால் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாது என நினைக்கும்போது அவன் சிறிது தயங்கி நிற்பான். அப்போது அவன் கண்கள் பிரகாசத்தோடு ஜொலிக்கும்.

`அவள் சென்றாள், பிராகாரத்தைச் சுற்றிவர. பின்னப்பட்டிருந்த அவள் கூந்தல் மெதுவாக அசைந்து ஆடியது. அவள் நடை அமுத்தலாக அவளை முன் செலுத்தியது. `பின்தொடர் பின்தொடர்’ என என் மனத்தில் மறுக்க முடியாதபடி ஓர் எண்ணம் தோன்றியது. வெளியில் நான் வாய்விட்டுச் சொல்லவில்லை. பிராகார ஆரம்பத்தில் ஒரு வில்வ மரம் இருந்தது. அதன் இலைகளின் ஊடே நிலவு தெளிக்கப்பட்டு வெண்மைத் திட்டுகளாகப் படிந்து தெரிந்தது. `பிரியமானவளே என்னைப் பார்’ என்று மனத்தில் நான் சொல்லிக் கொண்டேன். அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். அவளும் `பின்தொடர்’ என்று சொல்லுவதைத்தான் அவள் பார்வையில் கண்டேன். ஏதோ ஒரு சப்தம் கேட்டது. அது தலைகீழாகத் தொங்கும் ஒரு வௌவாலின் சப்தம்; காதில் சிரித்து மனத்தில் மரண பயத்தைக் கொடுக்கும் சப்தம். வில்வ மரத்தடியிலிருந்து அவளைத் தொடர்ந்து நோக்கி நின்றேன். பிறகு அவள் பின்தொடரச் சென்றுகொண்டு இருந்தேன்.

`பகல் போன்று நிலவு காய்ந்தது. பின் நீண்டு தொடர்ந்த அவள் நிழலேபோன்று நானும் அவளைத் தொடர்ந்தேன். மூலைத் திருப்பத்திற்குச் சிறிது முன்பு அவள் என்னைப் பார்க்கத் திரும்பினாள். நான் சொன்ன வார்த்தைகளைத் திருப்பிக்கொள்ளும்படிக் கேட்டுக் கெஞ்சுவது போல அவள் பார்வை இருந்தது. அவள் வருத்தத்திலும் வசீகரமாகத் தோன்றினாள். அருகில் நெருங்கிய நான் மறுபடியும் ஒரு தரம் `என்ன வேண்டுமானாலும் உனக்காக_’ என்று ஆரம்பித்தவன் முழுவதும் சொல்லி முடிக்கவில்லை. நான் திரும்பி வேகமாக வந்துவிட்டேன். அவளும் கீழ்ப் பிராகாரத்திற்குச் சென்றுவிட்டாள். வில்வ மரத்தடியில் நின்றிருந்த உன்னை அடைந்தேன். இருவரும் பேசாது வீடு சேர்ந்தோம்.’

அவன் பேச்சைக் கொஞ்சம் நிறுத்தியபோது, `யார் அவள்? எனக்கு ஞாபகமில்லையே?’ என்று கேட்டேன். என்னுடைய கேள்வி அவன் மனத்திலேபடவில்லை. அவன் மேலே பேச ஆரம்பித்தான். எனக்கு ஆத்திரம் மூண்டது.

`அன்று முதல் நான் கோவிலுக்குப் போவதை நிறுத்திவிட்டேன்; எதற்காக நின்றேன் என்பது எனக்குத் தெரியாது. சுபாவமாகத்தான் போவது நின்றுவிட்டது என்று நினைத்தேன்.

`நேற்று இரவு என் மனம் நிம்மதி கொண்டு இருக்கவில்லை. எங்கேயோ அலையத் தொடங்கியது. கோவிலுக்குச் சென்று ஈசுவர தரிசனம் செய்து வரலாமெனப் புறப்பட்டேன். இரவின் நாழிகை கழித்தே சென்றேன். அதிகக் கூட்டமில்லாமல் இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய எண்ணம். பெரிய கோபுர வாயிலைக் கடக்கும்போதே, சுவாமியின் கர்ப்பக்கிருகம் தெரியும்.

`வெகு காலமாக, ஜோதி கொண்டு ஜொலிப்பது போன்று நிசப்தத்தில் தனிமையாக ஒரு பெரிய சுடர் விளக்கு லிங்கத்தருகில் எரிந்து கொண்டிருக்கும். அது திடீரெனச் சிறிது மறைந்து பழையபடியே அமைதியில் தெரிந்தது. யாரோ ஒரு பக்தன் கடவுளை வழிபட உள்ளே சென்றான் போலும். நான் மெதுவாகப் போய்க்-கொண்டிருந்தேன். உலகின் கடைசி மனிதன் வழிபாட்டை முடித்துக் கொண்டு அநந்தத்திலும் உலகின் அவியாத ஒளியை உலகில்விட்டுச் சென்றதுபோலத் தோன்றின அந்தத் தீபத்தின் மறைவும் தோற்றமும். தூண்டப்படாது என்னுள் எரிந்த ஒளி நிமிர்ந்து ஜொலிக்கத்தான் நேற்று இது நிகழ்ந்தது. கோவிலில் நான் நினைத்தபடி ஒருவரும் இல்லாமல் இல்லை.

`அவளுக்கு இப்போது இருபத்திரண்டு வயது இருக்கலாம். நாகரிகப் பாங்கில் அவள் இருந்தாள். அவளை இப்போது கோவிலில் கண்டதும், என் மனம் வேதனை கொண்டது. எதிர்பாராது நேர்ந்த இந்தச் சந்திப்பினால் அவளிடம் நான் ஒருவகை வெறுப்புக் கொள்ளலானேன். அவள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைத்தேன். இப்போது என்னுடைய நாகரிகப் போக்கு எண்ணங்கள் தடுமாறி, மனமாற்றம் கொள்ளும் நிலைமையில் இருப்பதால், அவளுடைய அமுத்தலும் நாகரிக நாசுக்கும் எனக்குச் சிறிது ஆறுதலைக் கொடுத்தன. நான், முன்பு அவள் காது கேட்கச் சொன்னவற்றை நினைத்துக் கொண்டபோது, என்னையே நான் வெறுத்துக் கொள்ளாதபடி, அவள் புதுத் தோற்றம் ஆறுதல் கொடுத்தது. முழு வேகத்தோடு அவளை வெறுத்தேன். ஆனால் அவள் கடவுளின் முன்பு தியானத்தில் நிற்கும்போது தன்னுடைய மேற்பூச்சை அறவே அழித்து விட்டாள். கடவுளின் முன்பு மனிதர்கள் எவ்வளவு எழில் கொள்ள முடிகிறது, எத்தகைய மனக்கிளர்ச்சிக்கு உடன்படுதல் முடிகிறது என்பதை அப்போது நான் உணர்ந்தேன்.

`அவள் தியானத்தின் மகிமை என்னைப் பைத்தியமாக்கிவிட்டது. வெறித்து வெறுமனே நிற்கச் செய்தது; ஓர் இன்ப மயம், ஒரு பரவசம். திரும்பிய அவள் என்னைக் கண்டுகொண்டுவிட்டாள். எதிரில் நின்ற தூணை அவள் சிறிது நேரம் ஊன்றிப் பார்த்தாள். என் வாக்கின் அழியாத சாட்சியாக அமைந்து நின்ற அந்த யாளியும் எழுந்து நின்று கூத்தாடியதைத்தான் நான் பார்த்தேன். மேலே உற்று நோக்கியபோது ஐயோ! மற்றொரு யாளி வெகுண்டு குனிந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. அவள் பார்க்குமிடத்தைப் பார்த்து நின்ற என் மனம் பதைத்துவிட்டது. என்னை நோக்கி ஆணை இடுபவளாகத் தோன்றினாள். அவள் பார்வை என்னை ஊடுருவித் துளைத்துச் சென்றது. ஒருவன், தன் உள்ளூற உறைந்த ரகசியத்தை, ஒரு பைத்தியத்தின் பகற்கனாவில் பாதி சொல்லிவிட்டு மறைவது போல அவள் பார்வை என்னை விட்டு அகன்றது. உணர்ச்சிகள் எண்ணங்களாக மாறுமுன், அவள் சொன்னது என்ன என்பதை மனம் புரிந்து கொள்ளுமுன், அவள் போய்விட்டாள். குனிந்த என் தலை நிமிர்ந்தபோது அவள் மறுபடியும் என் பக்கம் திரும்பியதை நான் பார்த்தேன். ஆழமான இருண்ட சுரங்கத்தினின்றும் இருமணிகள் மின்னுவதுபோல இரு சொட்டுக் கண்ணீர் அவள் கண்களினின்றும் உதிர்ந்தது.

`நான் விதியின் நிழல். என்னிடம் காதலின் முழு வசீகரக் கடுமையை நீ காணப்போகிறாய்.

`அவள் என்ன சொன்னாள்? அவள் என்ன செய்யச் சொன்னாள்? நான் என்ன செய்ய இருக்கிறது? எல்லாம் ஒரு கனவுதானா? அவள் பேசவில்லை. சத்தத்தில் என்ன இருக்கிறது; பேச்சில்? உருவில் _ சீ சீ! எல்லாம் அர்த்தமற்றவை_உண்மையை உணர்த்த முடியாதவை; எல்லாம் இருளடைகின்றன. இறுகிய பிடிப்பிலும் துவண்டு புகை போன்று நழுவுகின்றன. ஆனால் எல்லாம் மாயை என்பதை மட்டும் உணர்த்தாது `மேலே அதோ’ என்று காட்டியும் நாம் பார்த்து அதன் வழியே போகத் தெரிந்துகொள்ளுமுன் மறையவுந்தான் இந்தச் சுட்டு விரல்கள் இருக்கின்றன. இருண்ட வழியில் அடையும் தடுமாற்றத்தில் அகஸ்மாத்தாகத் தாண்டிக் குதித்தாவது சரியான வழியை அடைய மாட்டோமா என்ற நம்பிக்கைதான் நமக்கு இருப்பது.

`அதோ மரத்தைப் பார். அதன் விரிக்கப்பட்ட கோடுகள், அதன் ஒவ்வொரு ஜீவ அணுவும் வான நிறத்தில் கலப்பது தெரியவில்லையா? மெல்லென ஆடும்போது அது வான வெளியில் தேடுகிறது. அது குருட்டுத்தனமாகத்தானே அங்கே தேடுகிறது…..?’

நன்றாக இருட்டிவிட்டது. அவன் வெளியில் வெறித்துப்பார்த்துக் கொண்டு இருக்கும்போது, நான் சொல்லிக் கொள்ளாமலே வெளிக் கிளம்பிவிட்டேன்.

வீதியில் வந்ததும் உயரே உற்று நோக்கினேன். இரவின் வளைந்த வானத்திலே கற்பலகையில் குழந்தைகள் புள்ளியிட்டதுபோல எண்ணிலா நட்சத்திரங்கள் தெரிந்தன. தத்தம் பிரகாசத்தை மினுக்கி மினுக்கி எவ்வளவுதான் கொட்டினும், உருகி மடிந்துபடும் அழிவே கிடையாது போல அவைகள் ஜொலித்தன. மேலே இருப்பதை அறிய முடியாத தளர்ச்சியுடன் ஒரு பெருமூச்செறிந்தேன். நடந்து நடந்து வீட்டை அடைந்தேன்.

இன்று காலையில் அவனை வீட்டில் காணோம். அவன் எங்கே எதற்காகச் சென்றானோ எனக்குத் தெரியாது. அவனுக்குத் தெரியுமோ என்பதும் தெரியாது. எல்லாம் `அவனுக்கு’த் தெரியும் என்ற எண்ணந்தான் அவன் என்பது இருந்தால்.

கருத்துகள் இல்லை: