03/03/2012

கோட்டி – ஜெயமோகன்

ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் டிவிஎஸ் 50  உறுமிக்கொண்டு நின்றுவிட்டது. காலால் எற்றிக்கோண்டே சென்று ஓரமாக நிறுத்தினேன். சங்கிலி கழன்றுவிட்டது. சள்ளையாக இருந்தது. அதை கழட்டிமாட்டினால் கையெல்லாம் கறையாகிவிடும். என்னதான் கவனமாக இருந்தாலும் பாண்ட் சட்டையில் கறைபடியாமல் இருக்காது. சட்டை வெள்ளை நிறத்தில் போட்டுக்கொண்டிருந்தேன். என்னிடமிருக்கும் நல்ல சட்டை எல்லாமே வெள்ளை என்பது ஒருபக்கம்.நான் போகும் விஷயமும் அப்படிப்பட்டது. அப்பா கிளம்பும்போதுகூட சொல்லிக்கொண்டே பின்னால் வந்தார். ‘லே, மக்கா உனக்க கோட்டித்தனத்த காட்டீரப்பிடாது கேட்டியா? அவ்வோ பெரிய ஆளுகளாக்கும். நாராயணன் சொன்னதனாலயாக்கும் அவ்வோ ஒருமாதிரி எறங்கி வந்திருக்கது. பிள்ள பாக்கதுக்கு செவ்வே இருக்கும். நல்லா செய்வாவ. இது அமைஞ்ச்சாச்சுண்ணு சென்னா நீ ஒருமாதிரி ரெட்சப்பட்டே பாத்துக்க…’


இரவெல்லாம் அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தார். நான் பெண்பார்க்கசெல்கிறேன். இல்லை, அவர்கள் என்னைப் பையன்பார்க்கச்செல்கிறேன். சென்று அவர்கள் வீட்டில் இருக்கும் ஒருசெவலைப் பசுவை விலைபேசுவதுபோல நடிக்கவேண்டும். அவர்களுக்கும் விஷயம் தெரியும், இரு தரப்புமே காட்டிக்கொள்ளக்கூடாது. அவர்களுக்கு என்னுடையநடப்பும் பெருமாற்றமும்பிடித்திருந்தால் பசுவுக்கு தவிடுபோடுவதுபோலவோ கழுநீர் ஊற்றுவதுபோலவோ பெண் வந்து முகம் காட்டுவாள். அவர்களெல்லாம் பழைய மகாராஜா காலத்திலேயே தலைக்கட்டும் நிலவரியும் கொடுத்துவந்த பெருவட்டர் குடும்பம். இப்போதும் தோப்பும் வயலும் குறைவில்லாமல் இருக்கிறது. படித்த பையன் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் வீட்டில் அன்னிய ஆண் நுழைந்து பெண்ணைப்பார்க்கும் வழக்கமே கிடையாது.

நான் பி..பி.எல் முடித்துவிட்டு சுப்ரமணியநாடாரிடம் ஜூனியராக இருக்கிறேன். அவருக்கே வருடத்துக்கு நான்கு கேஸ் வந்தால் கொண்டாட்டம். அவ்வப்போது என்னிடமே டீச்செலவுக்கு சில்லறைக் காசு கேட்கக்கூடியவர். ஆனால் வேறு வழியில்லை. ஜூனியராகச் சேர்வதற்கே ஒரு போராட்டம் வேண்டியிருக்கிறது. மிகப்பெரிய வக்கீல்களுக்கு அவர்களின் சொந்தக்காரர்கள் மட்டும்தான் ஜூனியராக முடியும், அதிகமும் மனைவி வழி. அப்பா நான்குவருடம் முன்பு பெரிய ஆசைகளுடன் அவரே லீமேன் டெய்லர்ஸில் எனக்கு கோட்டு தைத்துக்கொண்டுவந்தார். இப்போது அதில் நம்பிக்கை போய்விட்டது போல.

சங்கிலியை மாட்டிவிட்டு கையைப் புல்தரையில் நன்றாகத்தேய்த்து துடைத்தேன். கறை ஏதும் இல்லை. கொஞ்சம் தண்ணீர் இருந்தால் கையை சுத்தமாக கழுவிவிடலாம். கையை விலாவிலிருந்து தூக்கி வைத்துக்கொண்டு தொலைவில் இருந்த பெட்டிக்கடைக்குச் சென்று கொஞ்சம் தண்ணீர் கேட்டேன். அங்கிருந்த குண்டு அக்கா அவளே செம்பில் மொண்டு ஊற்றினாள். போகவில்லை. ’பெப்சி ஊத்து பிள்ள, போயுடும் கேட்டியாஎன்றாள். அவளே ஒன்றை உடைத்து ஊற்றினாள். சுத்தமாகப் போய்விட்டது. கையைக் கழுவி துடைத்துவிட்டு பார்த்தால் முழுவெள்ளைச்சட்டையின் முழங்கையில் என் விரல்கறை. எப்போது எப்படி பட்டது என்பது பிரமிப்பாக இருந்தது.

மீண்டும் டிவிஎஸ் 50க்கு வந்து அதைக் கோபத்துடன் உதைத்தபோது நரைத்த குடையுடன் ஒருவர் தள்ளாடி நடப்பதை கண்டேன். மாணிக்கம் மாமாவா என்று தோன்றியது. அவரில்லை. ஏறி அவரைத் தாண்டிச் சென்றபோது ஏன் அவரை மாணிக்கம் மாமா என்று நினைத்தேன் என்ற சந்தேகம் வந்தது. மணிக்கம் மாமாவின் தோற்றமே வேறு. அவர் ஈசாந்திமங்கலத்தில் இருக்கிறார். திடீரென்று ஒன்று தோன்றி நின்றேன். ஆமாம், அவர்தான், பூமேடை. அவரையும் மாணிக்கம் மாமாவையும் இணைத்தே எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.

இத்தனைக்கும் இருவருக்கும் நடுவே எந்த சம்பந்தமும் இல்லை. மாணிக்கம் மாமா நல்ல தாட்டியான கருப்பு உருவம். சதுர முகத்தில் பெரிய மீசை வைத்திருப்பார். கண்களைச் சுருக்கிக்கொண்டு கீழே பார்த்து பேசுவார். பேச்சு என்ன, சில சொற்கள். அதுவும் குழறலாக வெளிவரும். எப்போதும் ஒரே நலம் விசாரிப்புமாப்ள எப்டி இருக்கே சொம்மாருக்கியா?’ அவருக்கு அவரது வாழைகள், எருமைகள் தவிர எதைப்பற்றியும் எதுவும் தெரியாது.

பூமேடை நேர் எதிர். ஒல்லியான உயரமில்லாத உடலில் நீளவாட்டு முகம். மீசை கிடையாது. மாநிறம். எப்போதும் சிரிக்கும் கண்கள். தலையில் வெள்ளை நிறமான கதர் காந்தித்தொப்பி. கதர் ஜிப்பா வேட்டி. ஜிப்பா பைக்குள் போட்ட டைரி முதலிய பொருட்களினால் அது ஒருபக்கமாக இழுத்துக்கொண்டு தொங்கியிருக்கும். வழக்கத்துக்கு மாறாக இவரது ஜிப்பாவின் பை மார்பில் இருக்கும். அதில் நாலைந்து ஃபௌண்டன்பேனாக்கள் குறிப்பேடு , கண்ணாடிக்கூடு, பர்ஸ்.

காந்தி தொப்பி வைத்த ஒரே ஒருவரைத்தான் நான் உயிருடன் பார்த்திருக்கிறேன். அதனால்தான் அவர் முதல்பார்வையிலேயே என்னைக் கவர்ந்து இன்றும் நினைவில் நிற்கிறார் போல. எப்போதும் ஒரு துருசைக்கிள்தான் துணையாக வரும். அவர் நடந்து வருவதைப்பார்க்க ஆச்சரியமாக இருந்தது. அவர்தானா? அவர் மிகமெல்ல, கிட்டத்தட்ட கால்களை ஒவ்வொரு அடியாக தூக்கி வைத்து, நகர்ந்து வந்தார்.

என்னருகே அவர் வந்ததும் உறுதிப்படுத்திக்கொண்டேன், அவரேதான். ஆனால் வழக்கமான துருதுருப்பான பாவனைகளோ சிரிப்போ இல்லை. முகம் நன்றாக வீங்கி கன்னங்கள் பளபளவென்றிருந்தன. கண்கள் பிதுங்கிச்சிறுத்திருந்தன. நான்வணக்கம்என்றதும்வந்தேமாதரம்என்றார். ‘என்ன செய்யுது?’ என்றேன். ‘காலிலே நல்ல வீக்கம்என்றார். ‘ஆஸ்பத்திரியிலே காட்டலாம்ணாக்கும் கெளம்பினேன். முகத்தில இப்பம்தான் குடும்பத்திலப் பிறந்த பிள்ளைமார் லெச்சணம் வந்திருக்குன்னாக்கும் ஊரிலே பேச்சு

நான்ஏறிக்கிடும் வேய்என்றேன். ‘பரவாயில்லை. தம்பி ஜோலியா போறீக போல. போங்க…’ என்றார். ‘இல்லைய்யா ஏறிக்கிடுங்கஎன்றேன். ‘நமக்கிது பழக்கமில்லை பாத்துக்கிடுங்கஎன்று சிரமப்பட்டு ஏறிக்கொண்டார். வண்டி இழுக்குமா என்ற சந்தேகம் வந்தது. பழைய வண்டி. அவர் பழக்கமில்லாமல் ஒருபக்கமாக எடை இழுக்க அமர்ந்திருந்தார். ‘ஒருமாதிரி இரும்புக்களுதை இது, என்னெங்கிறீய?’ என்றார். நான் சிரித்தேன். ‘ஆனா களுதை குதிரையக்காட்டிலும் எடை சுமக்கும்என்றார்

கிளம்பியதும்தம்பிக்கு நம்மள தெரியுதே, பேச்செல்லாம் கேப்பீகளோ?’ என்றார். ‘அதிகம் கேட்டதில்லைஒண்ணுரெண்டுஎன்றேன். அவர்அதானே பாத்தேன். அதிகம் கேட்டா நம்மள தூண்ணு துப்பிட்டுல்லா போவான் ஹெஹெஹெஎன்றார். எனக்கும் சிரிப்பு வந்தது.’தம்பிக்கு என்ன தொழிலு?’ . ‘வக்கீலு. ‘சிவிலா கிரிமினலா?’ ’அது கேசு வந்தம்பொறவு தீர்மானிக்க வேண்டிய விஷயம்லா?’ என்றேன்.’பலே பாண்டியாஎன்று பகபகவென சிரிக்க ஆரம்பித்தார். ‘வெள்ளையும் சொள்ளையுமா போறத பாத்தா மங்கல காரியம்னு தோணுதேமிக நுட்பமானவர் என்று தெரிந்தது. ‘ இப்பம் பாதி மங்கலம்தான்.மிச்சம் அவ்வோ தீர்மானிக்கணும். மங்கலத்துக்கு இப்பம் ரேட்டு கூடுதலாக்கும் பாத்துக்கிடுங்கோஎன்றேன்.

அதற்கும் சிரித்தார். ‘புக்கு படிப்பிகளோ தம்பி?’ நான்ஆமாஎன்றேன். ’என்ன புக்கு படிப்பீக?’. ’கதை…’. ‘ஆரு எழுதுற கதை கல்கியா?.’ நான்கல்கில்லாம் பழசுல்லா. நான் படிக்கிறது சுந்தர ராமசாமிஎன்றேன்சுதர்சன் கடை அய்யிருதானே. அவரு கம்மூனிஸ்டுல்லா?’ . ‘ஆமாஎன்றேன். ‘படியுங்க படிப்பிலே மட்டும் ஒரு வழிதான் எது படிச்சாலும் எங்கபோகணுமோ அங்க போயிடலாம். இன்னைக்குப் பாத்து நம்ம பத்திரிக்கை கையிலே கொண்டாரல்லை. மெய்முரசு இருபத்தேட்டாம் லெக்கம் வந்துட்டுதுஒளிவழிபாடு பத்தி ஒண்ணு எழுதியிருக்கேன். படிச்சுப்பாருங்கநான் அந்த இதழை வாசித்ததில்லை. அதைப்பற்றி போஸ்டர் ஒட்டியிருந்ததைப் பார்த்திருக்கிறேன். ‘சமூக அநீதிகளுக்குச் சாட்டை, சர்வ தேசியவாதிகளுக்கு வேட்டை! நடுநிலை மாத இதழ்

நான் சிரித்தபடிமாத இதழுல்லா?’ என்றேன். ‘அப்டித்தான். ஆனா மதர் பிரஸ்ஸு வச்சிருக்கப்பட்ட சம்முவநாடார் ஒரு சமுட்டு சமுட்டினா மாசம் அப்டியே சப்பி அம்பதுநாள் அறுவது நாள்னு நீண்டிரும் பாத்துக்கிடுங்க. ‘உடம்புக்கு என்ன செய்யுது?’ என்றேன். ‘என்ன, மேலபோக்குக்கான தீனம்தான். வயசு எளுவத்து ரெண்டு. ரெண்டு போராட்டத்திலயும் நல்ல சவிட்டு பட்டிருக்கேன். நம்ம டீக்கடைகளிலே நல்ல சத்துள்ள டீ குடுக்கான். அதனால உடம்புல இன்னும் தெம்பு இருக்கு. பாப்போம். ஓவராயிலிங்கோட போச்சுண்ணா செரி. இல்ல கண்டம்தாண்ணு பெரியமெக்கானிக்கு நினைச்சான்னாக்க அப்டி…’

நான் அவரை முதன் முதலில் பார்த்ததை நினைவுகூர்ந்தேன். கொட்டாரம் பிள்ளையார்கோயில் முன்னால் ஒரு வீட்டில் நாங்கள் குடியிருந்த காலம். நான் அப்போது ஒன்றாம் வகுப்பு. அப்பா ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர். அந்த வீடு நடுவே முற்றமும் முன்பக்கம் படிப்புரையும் பின்பக்கம் தாய்வீடும் உடைய பழையபாணி ஓட்டுக் கட்டிடம். ஆனால் மிகப்பெரியது. அது பூமேடைக்குச் சொந்தம். முன்னால் ஒரே ஒரு அறையை மட்டும் தான் வைத்துக்கொண்டு இரு குடியிருப்புகளாக்கி வாடகைக்கு விட்டிருந்தார். ஆனால் மிக அபூர்வமாகத்தான் அங்கே வருவார்.

ஒருநாள் அவர் என் அப்பாவிடம் கையசைத்து தலையாட்டி சைகையால் பேசுவதைக் கவனித்தேன். கதகளி மாதிரி சிரிப்பாக இருந்தது பார்க்க. மறுநாள் அவர் காந்தி தொப்பி வைத்துக்கொண்டு சைக்கிளில் கிளம்பிச்சென்றார். தலையில் துண்டை மடித்து வைத்திருக்கிறார் என்றுதான் முதலில் நினைத்தேன். பிள்ளைகள் எல்லாம் பூமேடை பூமேடை என்று கூவிக்கொண்டே பின்னால் ஓடினார்கள். அவர் இரு கைகளையும் விரித்து, ‘எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு! நாம் எல்லாரும் சமம் என்பது உறுதியாச்சு!’ என்று உரக்க பாடியபடி சுற்றி வந்து விழித்து நின்ற என்னை நோக்கிஉறுதியாச்சு! என்ன? உறுதி- ஆச்சுஎன்றார். நான் பயந்து கோனார் கடை வராந்தாவில் ஏறிக்கொண்டேன்

கோனார்என்ன பூமேட, சின்னப்புள்ளைகள பயமுறுத்துதே? போவமாட்டியா? போவும் வேஎன்றார். என்னிடம்வாத்தியார் மவனாலே? அவன் கோட்டிக்காரம்லா? அளுவாதே. இஞ்சி மிட்டாய் இருக்கு. திங்குதியா? பைசா இருக்கா?’ என்றார். பூமேடை அன்று ஏன் சைகை செய்தார் என்று அம்மாவிடம் கேட்டேன். ‘அது கெடக்கு போக்கத்த சவம். அப்பனம்மைமாரு உண்டாக்கி வச்ச சொத்த எல்லாம் தீவாளி குளிச்சிட்டு கிறுக்கு எடுத்து அலையுது. அதுக்கு மாசத்தில ஒரு வெள்ளிக்கிளமை மௌனவெரதமாம். அந்தால போக்கொளிஞ்சு போவமாட்டானா?’ என்றாள்.

பேச்சில் இருந்து பூமேடைக்கு கொட்டாரம், நாகர்கோயில், இலந்தையடி போன்ற பல ஊர்களில் நிலபுலன்களும் வீடுகளும் இருந்ததாகச் சொன்னார்கள். அந்தக்காலத்தில் பிஏ படிக்கத் திருவனந்தபுரம் போனவர் காந்தி குல்லாயுடன் திரும்பி வந்திருக்கிறார். அதன்பின் சத்தியாக்கிரகம், போலீஸ்தேடல், சிறை, பிரசங்கம் என்று வாழ்க்கை வேறுபக்கமாகச் சென்றுவிட்டது. ‘பெற்ற தாயும் தந்தையும் கடைசியிலே சங்குபொட்டியில்லா செத்தாவ. அந்த சாபம் இந்த நாய சும்மா விடுமா? சவம் சும்மாவா கோட்டி புடிச்சு அலையுது…’

அதன்பின்னர் நான் அவரை பார்த்தது நாகர்கோயிலில். நான் ஸ்காட் கிறித்தவக்கல்லூரியில் படிக்கும்போது. பிக்சர்பாலஸில் சினிமாபார்க்கச்சென்றவழியில் ஒன்றுக்கடிக்க டைடஸ் டூட்டோரியல் சந்துக்குள் சென்றபோது அவர் ஒரு சிறிய கள்ளிப்பெட்டி மேஜையை கரியசிறுநீர் குழம்புத்தேங்கலில் நாட்டி அதன் மேல் ஏறி சுவரில் எதையோ ஒட்டிக்கொண்டிருந்தார். முதுகைப்பார்த்து எதுவும் தோன்றவில்லை. வெள்ளைத்தாளில் சிவப்பு எழுத்துக்களில் வார்த்தைகள். ‘திடீர் கழுத்தறுப்பு விழா!’ சட்டென்று சிரிப்பு வந்தது. ‘அரசன் கைவிட்ட நாடு வாழும். தோட்டி கைவிட்ட நாடு நாறும். குட்டித் தம்புரான்களுக்கு எச்சரிக்கை. பூமேடை [நடுநிலைவாதி ] முழங்குகிறார்நகர்மன்றத்திடலில் மாலை ஆறு மணிக்கு. ‘மனசாட்சிகள் வாரீர். பொய்சாட்சிகள் ஓடீர்

அவர் இறங்கி காந்தி தொப்பியை பையில் இருந்து எடுத்து வைத்துக்கொண்டதும் நான் ஆளை அடையாளம் கண்டுகொண்டேன். என்னிடம் சிரித்தபடிதொப்பிய களட்டி வச்சிடறது. சாக்கடைய சுத்தப்படுத்தறப்ப காந்தி தொப்பி இருக்கப்பட்டது நல்லதாக்கும். ஆனா அது சாக்கடையிலே விளுந்திரவும்பிடாதுஎன்று கண்ணடித்தார் .‘ஆமாஎன்று சிரித்துஆனா அதுதான் சீக்கிரம் சாக்கடையிலே விளுந்துடுதுஎன்றேன். ‘ஓகோகோஎன்று பயங்கரமாக சத்தம் போட்டு அவர் சிரித்தது என்னை அதிரச்செய்தது. சைக்கிளில் பசைவாளி, போஸ்டர்ச்சுருள் தவிர ஒரு கட்டுக் கீரையும் ஒரு வாழைப்பூவும் இருந்தது. காந்திய உணவு போல.

என்னத்துக்கு இந்தால கொண்டாந்து ஒட்டுறிய? அந்தால மெயின் ரோட்டிலே ஒட்டினா நாலஞ்சாளு பாப்பானே?’ என்றேன். ‘தம்பி நான் இத ஒட்ட ஆரம்பிச்சு இப்பம் முப்பத்தேளு வருசமாச்சு. நான் நடத்தப்பட்ட நாலாயிரத்தி எண்ணூற்றி பதினெட்டாமத்த கூட்டமாக்கும் இது. இதெல்லாம் டிரயல் ஆண்ட் எர்ரரிலே கண்டுபிடிச்ச வளிகளாக்கும். ரோட்டிலே போறவன் எவன் நிதானமா போறான். இவன் போறதுக்குள்ள குபேரன் கஜானாவ இளுத்து மூடிப்பிட்டான்னா? ஓடல்லா செய்யுகான்? ஆனா, இங்கண்ணா மனுஷன் ஒரு நிமிஷம் நிண்ணுதான் ஆகணும். ஓடிட்டே மோள இன்னும் மனுஷன் பழகல்லைல்லா?’ என்றார். சைக்கிளை ஸ்டாண்ட் விடுவித்தபடிஅதுக்கும் அமேரிக்காவிலே வெள்ளக்காரன் வேலைசெய்யுகான்னு பேச்சு. வண்டிக்காளைக்க சாமான எடுத்து மனுஷனுக்கு வச்சா ஈஸிஜி கோடு போட்டுட்டே போலாம்ல?’என்று கிளம்பினார்.

நான் அந்தகூட்டத்துக்கு போக முடிவெடுத்தேன். சனிக்கிழமை தனியாக என் சைக்கிளில் முனிசிப்பல் மைதானத்துக்குச் சென்றேன். ஐந்தே முக்காலுக்கு அங்கே யாருமே இல்லை. மேடை, விளக்கு எதுவும். நாலைந்து கிழவிகள் அமர்ந்து வாழைப்பழம் விற்றார்கள். நிறைய சைக்கிள்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். கூட்டம் இல்லை போல. வந்ததற்கு இருக்கட்டுமே என்று நான் பக்கிசங்கரன் கடையில் ஒரு சுக்கு காப்பியும் பருப்புத்தட்டையும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது மணிமேடைபக்கமிருந்து பூமேடை சைக்கிளை உருட்டிக்கொண்டு வருவதை கவனித்தேன்.

அதே சைக்கிள், அதே ஜிப்பா, அதே தொப்பி. ஆனால் நன்றாகத் துவைத்து கஞ்சிபோட்டு நீவப்பட்டு முடமுடப்பாக வெள்ளையாக இருந்தன அவை. சைக்கிளின் பின்பக்கம் ஒரு அகலமான கள்ளிப்பெட்டி மேஜை. சைக்கிளின் முன்பக்கம் வலது கைப்பிடியில் ஒரு சிறு கோளாம்பி ஒலிப்பெருக்கி கட்டப்பட்டிருந்தது. இடது கைப்பிடியில் ஒரு பழைய கியாஸ்லைட். இதைத்தவிர இரு பெரிய பைகள் தொங்கின. சிரித்துக்கொண்டு, பலரிடம் தலையசைத்து வணக்கம் சொல்லியபடி, ஒட்டுமொத்த சைக்கிளின் எடையால் தள்ளாடிச் சரிந்து நடந்து வந்தார். என்னை தாண்டிச்சென்றபோது எனக்கும் சிரிப்புடன் தலையசைத்தார். ஆனால் என்னை அடையாளம் காணவில்லை என்று தெரிந்தது.

சைக்கிளை அவர் நிறுத்தியபோது அது அபாயகரமாகச் சரிந்தது. அதைத் தள்ளி நிமிர்த்தி வைத்தார். ஸ்டேண்ட் போட்டுவிட்டு மேஜையை கயிறை அவிழ்த்து எடுத்து தூக்கிக்கொண்டுசென்று முனிசிப்பாலிட்டி மைதானத்தின் வடக்கு ஓரமாகபோட்டார். அவரே கல் பொறுக்கி வைத்து அதன் ஆட்டத்தை சரி செய்தார். பத்துப்பதினைந்துபேர் கூடி விட்டார்கள். சிலர் அவரைநோக்கி சிரித்து கிண்டல் செய்தார்கள். ‘என்ன பூமேடை, இப்பம் தோட்டிச்சியாக்குமா வைப்பு?’ என்றான் ஒருவன். அவர் அதை கேட்டதாகவே தெரியவில்லை. அவரே ஒயரை இழுத்து பக்கத்து பெட்டிக்கடையில் கொண்டுபோய்ச் செருகினார். மைதானத்தில் நின்ற வேப்ப மரத்தில் ஒலிப்பெருக்கியை கட்டியிருந்த கயிற்றுடன் தொற்றி ஏறி அதை தூக்கி வைத்து கட்டினார்.

இறங்கி வந்து கையை தட்டிக்கொண்டு ஒரு குண்டுபல்பை மேஜை அருகே இருந்த மரக்கிளையில் தொங்கவிட்டு எரியவைத்தார். ஒலிப்பெருக்கிக்கு இணைப்பு கொடுத்த்தார். கேஸ்விளக்கை கொளுத்தி கொஞ்ச நேரம் செந்தழல் எரியவிட்டு புஸ் புஸ் என்று அடித்து வெண்ணிறமாக்கினார். இப்போது ஐம்பது அறுபது பேர்வரை கூட்டம் இருந்தது. ஆங்காங்கே கூடி நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். பெட்டிக்கடைவாசலிலும் டீக்கடை முன்னாலும் நின்ற கும்பலையும் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. எவரும் அவருக்கு உதவவில்லை. அப்படி ஒருவழக்கமே இல்லை போலிருந்தது.

ஆறரை மணிக்குத்தான் அவரால் ஆரம்பிக்க முடிந்தது. மைக்கை எடுத்து கண்ணைமூடி சில கணங்கள் நின்றபின் பெருமூச்சுபோலவந்தே மாதரம்!’ என்றார். அதன்பின்னர் உரக்கவந்தேமாதரம்! வந்தே மாதரம்!’ என்று நாலைந்துமுறை கூவினார். அதன்பின் ஒரு பாடலை ஆரம்பித்தார். நல்ல கணீர்க்குரல். தெளிவான உச்சரிப்பு.

நாடெல்லாம் செழிக்கவேணும் நல்லவர் வாழவேணும்.
வீடெல்லாம் வளரவேணும் வீரம் விளையவேணும்

ஓம் ஓம் ஒம்என்று சொல்லி கண்ணைமூடி நின்றபின் திறந்து ஒரு சிரிப்புடன் நான்கு பக்கங்களையும் பார்த்தார். சட்டென்று கையை தட்டியபடி உரத்தகுரலில் அடுத்தபாட்டை ஆரம்பித்தார்

சிந்திச்சு பாருங்கையா சீமான்களே-
ஐயா சீமான்களேஐயா சீமான்களே-
அய்யய்யோ சீமான்களே- நாம
மந்தையிலே மாடில்ல மனுஷப் பயக்கண்ணு
சிந்திச்சு பாருங்கையா சீமான்களே!’

பாட்டு முடிந்ததும் இயல்பாக அவர் பாட்டுக்கு உரையாடுவதுபோல பேச ஆரம்பித்தார். ‘அது என்னதுண்ணாக்க இப்பம் ஒரு சட்டம் வந்திருக்குய்யா. நம்ம வடசேரி சந்தையிலே கூட்டிப்பெருக்கிக் குப்பைய அள்ளப்பட்ட சோலிக்கு இனிமே தோட்டிக மட்டுமில்லாம மத்த சனங்களும் அப்ளை பண்ணலாம்னு ஆடர் வந்திருக்கு. நல்லதுதானே? நாட்டிலே சமத்துவம் வந்தாக்க நல்லதுதானே? அய்யா, நல்ல விஷயமுல்லா? தொண்டமானும் தோட்டி வேல செய்யணும்னுல்லா அந்த மகராசன் காந்தியும் சொல்லிட்டுப்போனாரு. செரீ. அய்யா, அப்ப தோட்டி என்ன செய்வான்? அய்யா,நாம அவனுகளுக்கு உசந்த படிப்பு குடுத்திருக்கோம்லியா? தாஷ் பூஷ் தலைக்குமேலே மோஷ்ணு இங்கிலீஷிலே இல்லா இப்பம் அவனுக பேசுதானுக? நல்ல வீடுல்லா கட்டி குடுத்திருக்கோம். அங்க அவன் சேர் மேலே இருந்து ரேடீயோல பாட்டு கேக்கான்லா? அப்பம் அவனுக்கு நாம வேற வேல குடுப்போம். முனிசிப்ப்பாலிட்டி கம்மீஷணரா ஆக்கிப்போடுவோம். இல்லேண்ணா தனிச்செயலரா ஆக்கிப்போடுவோம். கவுன்சிலரா ஆக்கிருவோம்என்னா? செய்வமா?’

அவர் சொன்ன தர்க்கம் எனக்கு உவப்பாக இருந்தது. விரிவாகப் பேசிக்கொண்டே சென்றார். சாக்கடை அள்ளுவதும் சந்தையை அள்ளுவதும் துப்புரவுவேலைதான். ஆனால் சந்தை வேலைக்கு மட்டும் எல்லா சாதியினரும் வருகிறார்கள். ஆகவே அங்கே தோட்டிகளுக்கு வேலை கிடைப்பதில்லை.காரணம், சந்தையின் எல்லா குப்பையும் காசுதான். சந்தையில் பலவகையான பக்க வருமானங்களும் உண்டு. அந்த வருமானங்களை எடுத்துக்கொண்டு அங்கேயும் சாக்கடையை அள்ள தோட்டிகளைத்தான் அமர்த்தப்போகிறார்கள் அந்த ஊழியர்கள்.

அவர் பேசி முடித்ததும் கேள்விகள் எழுந்தன. ‘பூமேட, அப்பம் சந்தையிலே தோட்டி மட்டும் வேல பாத்தா போரும்னு சொல்லுதியா?’ என்றார் ஒருவர். ‘தோட்டியும் வேல செய்யட்டும். ஆளு பத்தல்லைண்ணா மத்தவன் வரட்டும்என்றார் பூமேடை. சிவப்பு துண்டு போட்ட ஒருவர்வே, அப்ப பாரமபரியமா செய்ற தொளில அவனவன் செய்யணும்னு சொல்லுதீரா? அதுதானே காந்தி சொன்னாரு?’ என்றார். பூமேடை அசராமல்ஆமா தோளரே. காந்தி கக்கூஸ களுவி பீய சொமந்தாரு. ஏனுண்ணாக்க அவரு தோட்டி சாதியிலே பொறந்தவருல்ல்லா? ஆருவே நீரு? என்று அரை நிமிடம் அவரை நோக்கி கையை நீட்டிக்கொண்டு கோணல் சிரிப்புடன் நின்றார். எல்லாரும் தோழரை திரும்பி பார்த்தனர். சிலர் சிரித்தனர்

வே, தோட்டி அந்தவேலைய விடணுமானா அதைவிட நல்ல வேலைய அவனுக்குக் குடும். இல்லாம அதையும் விட்டுப்போட்டு அவன் தெருவிலே உக்காந்து உம்மை மாதிரி பிச்சைய எடுக்கணுமா? நீரு செவப்பு தாளு அச்சடிச்சு வச்சு சிந்தாபாதுண்ணு சொன்னா முதலாளிமாரு பிச்ச போடுவானுக. தோட்டிக்கு அதுவும் கெடைக்காதுவேஒருவன் உரக்கலே பூமேடை பீய அள்ள நீரு போவும்வேஎன்றார். பூமேடை அதி கோபத்துடன் அவனை நோக்கி திரும்பிஆமாலே, தினம் என் பீய நான் அள்ளிட்டுதாண்டே இருக்கேன். தன் பீய அள்ள இன்னொருத்தன வச்சிருக்கப்பட்டவன் அடுத்த ஜென்மத்திலே பீயத்திண்ணு வாழுற பண்ணியாக்கும். இத நான் உங்கிட்ட சொல்லல்ல. உனக்க அடுத்த ஜென்மத்துக்கிட்டயாக்கும் சொல்லுதேன்போபிலே பண்ணிஎன்றார். கேள்வி கேட்டவன் உட்பட அனைவருமே சிரித்தார்கள்.

அவரை ஒரு கோமாளியாகத்தான் அனைவரும் பார்த்தார்கள். அவர் தீவிரமாகச் சொன்னதற்கெல்லாம் சிரித்தார்கள். அவரும் எங்கே நகைச்சுவையாக பேசுகிறார் எங்கே தீவிரமாகப் பேசுகிறார் என்று கண்டுபிடிக்க முடியாமல்தான் பேசினார். பேச்சு எட்டுமணிக்கெல்லாம் முடிந்ததும் அவர் இறங்கி தன் பொருட்களை தானே சேகரிக்க ஆரம்பித்தார். நான் அவருக்கு உதவலாமா என்று சிந்தனை செய்தேன். பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று தோன்றியது. அவர் பெட்டிக்கடையில் ஒரு சோடா குடித்து, அங்கே எடுத்துக்கொண்ட மின்சாரத்துக்கும் பணம் கொடுத்துவிட்டு சைக்கிளை உந்தியபடி செல்லும்போது டீக்கடையில் நின்ற என்னை நோக்கி ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு போனார், அடையாளம் காணாமலேயே.

அதன்பின் நான் ஒரு இருபது முப்பது தடவையாவது அவர் பேச்சை கேட்டிருப்பேன். ஆரம்பத்தில் தீவிரமாக பேசுகிறார் என்று தோன்றியது. பின்னர் அவர் வெறும் கோமாளி என்று தோன்றியது. காற்றாலையுடன் சண்டை போடுபவர். கொஞ்சநாளில் அப்படி அல்ல என்று தெரிந்தது. அவருக்கு நகரம் எங்கோ மௌனமாக எதிர்வினையாற்றிக்கொண்டுதான் இருந்தது. பெரும்பாலான மக்கள் பிரச்சினைகளை அவர்தான் ஆரம்பித்து வைக்கிறார். தவறுகளை அவர்தான் முதலில் சுட்டிக்காட்டுகிறார். அதை பாதிக்கப்பட்ட மனிதர்கள் எடுத்துக்கொண்டு அவர்கள் தளங்களில் செயல்பட ஆரம்பிக்கிறார்கள். எல்லாம் அவற்றுக்குரிய சாத்தியங்களுடன் வேகம்பிடித்து ஏதேனும் முடிவை நோக்கிச் செல்கின்றன.

இரண்டு வருடம் முன்பு விரைவு நீதிமன்றத்தில் கனகம் என்று ஒரு நீதிபதி வந்தார். ‘கடவுள் எனக்க கையிலே ஒரு பேனாவை கொடுத்திருக்காரு.நான் எளுதினதுதான் சட்டம். அதுக்கு நான் சொல்லுகதுதான் வெலைஎன்று ஒருமுறை நீதிமன்றத்திலேயே சொன்னவர். பெரிய அரசியல் தொடர்புகள் உள்ளவர். வலுவான சாதிப்பின்புலமும் உண்டு. பாதி வக்கீல்கள் அந்தம்மாவுடன் பேரம் பேசினார்கள். மிச்ச பேர் குமுறினார்கள். தன்னை எவராலும் அசைக்க முடியாது என்று எந்த பேரத்திலும் அவர் சொல்லிக்கொள்வார். பூமேடை காதுக்குச் சென்றதும் அவரைப்பற்றி தெருவெல்லாம் போஸ்டர் ஒட்டி ஒரு கூட்டம்போட்டு கிழிகிழி என கிழித்தார். அந்த நாள் வரை ஒரு அந்தரங்கப்பேச்சாக இருந்த விஷயம் டீக்கடை அரட்டையாக ஆகியது. ஊரே பேச ஆரம்பித்தது. அந்த அம்மையார் தெருவிலே நடக்க கூசினார். நான்கே மாதங்களில் அந்த அம்மையாரை உயர்நீதிமன்றம் முக்கியமற்ற இடத்துக்கு தூக்கியடித்தது.

நான் ஆஸ்பத்திரி கேட் முன்னால் வண்டியை நிறுத்தினேன். ‘ஒரு டீ சாப்பிட்டுட்டு உள்ள போலாமே…’ என்றேன். ‘இல்ல வேண்டாம் தம்பி. செய்ததுக்கு உபகாரம். நான் இங்கியே எறங்கிருதேன். மொள்ளமா போயிடுவேன்என்றார் பூமேடை. ‘நான் கொண்டு போயி விடுதேன்.ஒரு டீ குடிச்சுட்டு போலாம்பூமேடைசெரி உங்க ஆசை. ஆனா நீங்க வாங்கி குடுத்தா நான் குடிக்கமாட்டேன். எனக்க டீக்கு நான் பைசா குடுப்பேன்என்றார். நான் தயங்கி நாவெடுக்க பூமேடை மறித்துஅது பூமேடை பைலோவிலே இருக்கு. பாருங்க, ரூல்நம்பர் எட்டுஎன்று ஒரு காகிதத்தை பையில் இருந்து எடுத்து நீட்டினார்.

அச்சிடப்பட்ட கசங்கிய கெட்டிதாள். ‘பூமேடை அமைப்புச்சட்ட விதிகள்என்ற தலைப்புக்கு கீழே ஒன்று இரண்டு என எண்ணிட்டு வினோத வரிகள். 1. தொண்டு செய், குண்டு வீசு. 2. தேர்வு கொள், சோர்வு கொள்ளாதே 3. தோட்டிக்கும் கோட்டிக்கும் நண்பனாக இருஎன்று போயிற்று. எட்டாவது வரிவாங்கி உண்ணாதே விற்று உண். மொத்தம் இருபது விதிகள். கீழே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 1948 அக்டோபர் இரண்டாம் தேதி. பூமேடையின் கையெழுத்தும் இருந்தது. சாட்சிக்கு இரு கட்டைவிரல் மைஒப்பங்கள். சுண்டன், குணமணி என யாரோ இருவர் நான் சிரிப்பை அடக்க வேறு பக்கம் பார்த்தேன். அவர்ஆனா உங்களுக்கு டீ வாங்கிக்குடுக்கதுக்கு எங்கிட்ட காசு இல்லைஎன்றார்.

கடைக்குள் நுழைந்து நான் இரண்டு டீ என்றேன். பூமேடைநீர்க்க தண்ணிவிடு தாயிஎன்றபடி அமர்ந்தார். அவர் இளைப்பதுபோல மூச்சு விடுவதை கவனித்தேன்.’வித்து தின்னது சரி, இனிமே விக்கிறதுக்கு என்னமாம் இருக்கா?’ என்றேன். ‘இருக்கு. சைக்கிள்..ஓல்ட் மாடல். சூரத்தனமான ஐட்டம். ரெண்டாம் உலகப்போருக்கு போயிருக்கு…’என்றார். ‘மைக்கு?’ அதெல்லாம் போனமாசமே காலி. அது இப்பம் நாளைக்குலுக்கல் நாளைக்குலுக்கல்ணுல்லா கத்துது. நான் கேட்டுட்டு சொன்னேன். வே, குலுங்கணுமானா இண்ணைக்கே குலுங்கணும். நாளைக்கு நீ இருப்பேண்ணு என்ன கண்டேன்னு . நான்அப்ப இனிமே கூட்டம் போடறதா இல்ல?’ என்றேன் . பூமேடைவிட்டிருவோமா? ஒரு மெகபோன் இருக்கு. மணிமேடையிலே நின்னுட்டு நான் பேசினா கேக்கறதுக்கு கலைவாணர் நின்னுட்டிருக்காரு. கைய பின்னால கட்டிகிட்டு நிக்கதனால கல்லவிட்டெறிய மாட்டாருஎவன் தடுக்கதுக்கு?’ என்றார்

அப்பனம்மை சேத்தத திங்கிறதுல்லாம் ஒரு பொளைப்பு. இல்ல?’ என்றேன். ‘தம்பி அவுக என்ன உளைச்சா சேத்தாங்க? பாவப்பட்ட புலையனையும் சாம்பானையும் வேலவாங்கி ஏச்சு சேத்ததுதானே? வெயிலிலே சம்பாரிச்சது மளையிலே போறதுதானே நியாயம்? ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல்னுல்லா வள்ளுவன் சொல்லுகான்?’ என்றார். நான் எரிச்சல்கொண்டுஅந்த குறளுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?’ என்றேன். ‘சம்பந்தம் இருக்குண்ணா குறளை எல்லாரும் சொல்லுகானுக ? குறள்னாக்க ஞாபகம் வாற எடத்தில சும்மா எடுத்து போடுறதுக்குண்டான ஒண்ணாக்கும். எனக்க கிட்ட கேக்கேரே கருணாநிதிட்ட கேப்பேராவே?’

டீ வந்தது. அவர் சத்தமாக உறிஞ்சி குடித்தார். ’தியாகிப் பென்ஷன் இருக்குமே?’ என்றேன். ‘எங்க?’என்று சிரித்தார். ‘நாப்பத்தியாறிலயாக்கும் நான் முதல்ல ஜெயிலுக்கு போனது. யூணிவர்சிட்டிக்காலேஜிலே படிக்கிற காலம். ஒருநாளைக்கு காலம்பர போதேஸ்வரன் வந்தாரு. கேட்டிருப்பீக, நம்ம கவி சுகதகுமாரிக்க அப்பா. அவரு சட்டம்பி சாமிக்க சிஷ்யராக்கும். நல்ல வெளுத்த தாடி, நீளமான கதர்சட்டை வேட்டி. காலேஜ் முன்னால நின்னுட்டு பிரசங்கம் பண்ணுதாரு. அனல் கக்குத பிரசங்கம்லா. நாங்க ஒரு முந்நூறுநாநூறு பயக்க கூடீட்டோம். ’லே பெத்த அம்மை துணியில்லாம நிக்கா உனக்கெதுக்குடே படிப்புங்கிற தலைப்பாகை?’ன்னுல்லா கேட்டாரு. அப்ப எறங்கினவந்தான். பின்ன பல எடங்களிலே போராட்டம். நாகர்கோயிலிலே சத்தியாக்ரகம் பண்ணினதுக்கு நானும்,தேரூர் சிவன்பிள்ளையும், ஈத்தவிளை அர்ஜுனன்நாடாரும் எல்லாம் சேந்தாக்கும் அரெஸ்ட் ஆனோம்.

அவர் தொடர்ந்தார்அப்ப இப்ப உள்ள ஜெயிலு இல்லை. இப்ப முத்துதியேட்டர் பக்கத்தில உள்ள தீயணைப்பு ஆப்பீசாக்கும் அன்னைக்கு போலீஸ் ஆப்பீஸும் கோர்ட்டும்.அதுக்கு பக்கத்திலே உள்ள ஷெட்டுகளாக்கும் ஜெயிலு. என்னையும் எட்டுபேரையும் கையத் துணிவச்சு கெட்டி நடக்க வச்சு கொண்டு போறானுக. அப்பம் எங்க கூட வந்தவரு ஒரு இன்ஸ்பெகடர், அவருக்க பேரு நாராயணன் நாயருன்னாக்கும், பிறவு அவரு சுதந்திர தமிழ்நாட்டிலே போலீஸிலே எஸ்பியா ஆகி ரிட்டயரானாரு. என்னை எங்கபாத்தாலும்டே, பூமேடை! என்னடே, மரியாதையா இருந்நா தாயளி நினக்கு கொள்ளாம்னு சொல்லுவாரு. ‘காந்தி பேச்சை கேட்டு அப்பமே மரியாதய அவுத்தாச்சே ஏமானேண்ணு நான் சொல்லுவேன்.

அவரு என்ன பண்ணினாருண்ணா ஒரு மாட்டுச்சாட்டைய வச்சு போறவாற ஆளுகளை அடிச்சுட்டே வாறாரு. ஒண்ணும்செய்யாம சும்மா சந்தைக்கு போறவனை. எதுத்தாப்பிலே ஒரு மீன்கார கெளவி வாறா. இவரு அடிக்கப்போறாரு. என்னால சும்மா இருக்க முடியல்லை. ‘வே, எதுக்குவே அடிக்கேரு, அடிக்கணுமானா என்னைய மாதிரி அதுக்குண்ணு வந்தவன அடியும்வேண்ணு சொன்னேன். ‘அடிச்சா நீ என்னடா செய்வேண்ணாரு. ‘அடிச்சுபாரும்வேண்ணேன். கெளவிய அடிக்க போனாரு. கெளவி ஓண்ணு சத்தம்போட்டா. நான் மாட்டுக்காரன் மாதிரிஹை ஹை ஹைன்னு சத்தம் குடுத்தேன். ரெண்டு மட்டம் ஓங்கினாரு. நான் மறுபடியும் ஹைஹைன்னு சத்தம் குடுத்தேன். ரெண்டு மட்டம் ஓங்கினாரு. நான் ஹைஹைஹைன்னு சொன்னதைக்கேட்டு மத்தவங்க சிரிச்சப்ப வெறயல் கேறிட்டுது. குலநாயராக்குமே, வண்டிக்காரன்னு சொன்னா எப்டி?

சாட்டைய தூக்கி போட்டுட்டு அப்டியே என்னைய நடுத்தெரு மண்ணில போட்டு மிதிக்க ஆரம்பிச்சிட்டாரு. அடிச்சு கையப்பிடிச்சு மண்ணிலே இளுத்துக்கிட்டே போறாரு. வேட்டியும் கோமணமும் உருவிபோச்சு. துணியில்லாம போறேன். அப்பம் நான் சட்டையெல்லாம் போடுகதில்லை. கொண்டுபோயி தெருவிலே திருடின பிச்சைக்காரன்னு எளுதி உள்ள தள்ளிப்போட்டாரு. கோர்ட்டு முற்றத்திலே நான் சிவன்பிள்ள பக்கத்திலதான் கெடந்தேன். உடம்பெல்லாம் மண்ணும் சாக்கடையும். அவருக்கு நம்மள அடையாளம் தெரியல்ல. நான் போதம் வந்து எந்திரிச்சு இருக்க ஒரு நாள் ஆயிப்போட்டுது.

நாலஞ்சுநாள் கழிஞ்சுதான் சிவன்பிள்ள என்னைப் பாத்தாரு. எம்.வி.நாயுடு வந்து பேசினாரு. பொலிட்டிக்கல் செல்லுக்கு மாத்திடலாம்னு சொன்னாங்க. அவங்க மனு சொல்லி நம்மள ஒருத்தரு வந்து விசாரிச்சாரு. நல்ல பழுத்த பிள்ளைவாள். நெத்தியிலே விபூதி குங்குமம். ஆளு வேற ஆருமில்லை, நம்ம அணைஞ்சபெருமாள் டாக்டருக்க அப்பா மந்திரம்பிள்ளைதான். எல்லாம் கேட்டு எளுதிட்டு எதுக்கும் உறுதிபண்ணிக்கிடலாமேண்ணு மெள்ளமாநீரு என்னவே ஆளு? புள்ளமாரா?’ என்றார். நம்ம நாக்கிலே சனி இருக்கே. அது சும்மா கெடக்குமா. ‘இல்ல, போனமாசம் பணம்கெட்டி மாத்தியாச்சு. இப்பம் தோட்டியாக்கும்னு சொன்னேன். நீட்டி எளுதிட்டு போய்ட்டாரு. அப்டி ஒரு பிக்பாக்கெட் திருடனா எட்டுமாசம் ஜெயிலிலே கெடந்துட்டு வந்தேன்

முதல் தப்பு இதுதான்கேனத்தனம்என்றேன். ‘ஒரு காரியம் பண்ணினா அதுக்கு முறையான ரெக்கார்டு வேணும். இப்ப நீரு பிக்பாக்கெட்டா தியாகியாண்ணு ஆருவே சொல்லுகது?’ என்றேன். ‘ஆரு சொல்லணும்? அண்ணைக்குள்ள தியாகியெல்லாம் இண்ணைக்கு பிக்பாக்கெட்டாக்கும். அப்ப அண்ணைக்குள்ள பிக்பாக்கெட் இண்ணைக்கு தியாகிதானே?’ என்றார். ‘உமக்கு கிறுக்கு…’ என்றேன். ‘ அதுதான் ஊருக்கே தெரியுமே..எனக்க அம்மையாக்கும் அத முதல்ல கண்டுபிடிச்சவஒருநாள் ரகசியமா கேக்கா, ஏலே உனக்க காந்திக்கும் தலைக்கு வட்டாலேண்ணு ஹெஹெஹெநான் அவரை பரிதாபமாகப் பார்த்துஉம்ம நிலமையிலே சிரிப்பு..என்ன?’ என்றேன். ‘நான் சிரிச்சது அதுக்காட்டுல்ல. ஜெயிலிலே நம்மள பாத்தாக்க வார்டர்மாரு சட்டைய ஒரு தடவ ஜாகிரதையா தொட்டுட்டுதான் போவானுக ஹ்ஹே ஹ்ஹெ

நான்செரி, சிவன் பிள்ளை சொன்னா பென்ஷன் குடுக்க மாட்டாங்களா?’ என்றேன். ‘நீரு ஒண்ணு. சுதந்திரம் கெடைச்சம்புறவு சிவன்பிள்ளைக்கே ஏண்ணு கேக்க ஆளில்லாம ஆச்சு. பிறவு அம்பத்திமூணிலே நேசமணி, தாணுலிங்கநாடார்கூட சேர்ந்துட்டு தாய்த்தமிழக போராட்டத்தில குதிச்சேன். அப்பமும் மறியல். சந்தோசமான விஷயம் என்னாண்ணா அதே நாராயணன் நாயராக்கும் என்னைய அடிச்சது. அவருக்கு புரமோஷன். அடிச்சு இளுத்து வேனிலே போட்டார். செரி, பளைய ஆளாக்குமே, ஒரு மரியாதை நல்லதாக்குமேண்ணு நான் அவரிட்டஎன்னவே நல்லா இருக்கேராண்ணு கேட்டேன். அதுக்கும் அடிச்சாரு

நேரா கோர்ட்டிலே கொண்டாந்து நிப்பாட்டினாங்க. இது நம்ம சுதேசி கோர்ட்டு. மேலே சீலிங் ஃபேனெல்லாம் உண்டு. காந்திபடம் இருக்கு. மண்ணு தின்னுறப்ப பிடிபட்ட பிள்ளை மாதிரி சிரிக்காருமத்தபடி அதே டவாலி. அதே பளைய பேப்பரு. அதே சட்டம். ஒரு அய்யராக்கும் ஜட்ஜு. பழைய தண்டனைய பாக்காரு. பிரிட்டிஷ் சர்க்காரு நடைமுறைகளை அப்ப்டியே ஃபாலோ பண்ணணுமுன்னுல்லா சுதேசி சர்க்காருக்க சட்டம்? செரீண்ணு இவரும் வழிப்பறிமுயற்சின்னு போட்டு போடான்னுட்டாரு. சும்மா சொல்லப்பிடாது. அரசியல்ணு உள்ள போறதவிட வழிப்பறீண்ணு உள்ள போனா அங்க உள்ள பிரஜைகளிட்ட ஒரு தனி மதிப்புண்டு. சாம்பாரிலே உள்ள காயெல்லாம் பொறுக்கி நம்ம தட்டிலே போட்டுதின்னும் வேய்ண்ணு சொல்லுவானுக. எடலாக்குடி கசாப்புக்கடை காதருக்க அப்பன் மொய்தீன்கண்ணு நம்ம ஜெயில் தோஸ்தாக்கும். எரட்டக்கொலை. சாவது வரை வந்து நம்மகிட்ட நல்லது கெட்டது பேசி டீகுடிச்சிட்டுதான் போவாரு. நல்ல மனுஷன்…’

நேசமணி சொன்னா மொழிப்போர் பென்ஷன் வருமே. ‘அவரு சொன்னா வந்திருமா? நான் சொல்ல வேண்டாமா? ஒருநாளைக்கு சிதம்பரநாதன் கொட்டாரத்தில வந்து என்னை பாத்தாரு. ‘வே, ஆனது ஆச்சு. நீரு தெருவில கெடந்துசெத்தா எங்களுக்காக்கும் மானக்கேடு. ஒரு பென்ஷனுக்கு மட்டும் கையெளுத்த போடும். மிச்சத்த பெரியவரு பாத்துக்கிடுவாருண்ணாரு. ‘பெரியவரு இப்பம் ஆனைமேலே கேறியாச்சே. ஆனைக்க அடியில கண்ணு தெரியுதாண்ணு கேட்டேன். ‘செரி, அரசியல விடும். இது உம்ம சர்க்காரு குடுக்கப்பட்ட காசுவேய்ண்ணாரு . நான்சர்க்காரு காசு வாங்குறவனெல்லாம் லஞ்சம் வாங்குறான். இந்த சர்க்கார் காச வாங்கினா நானும் லஞ்சம் வாங்கலாமா வேய்?’ண்ணு கேட்டேன். வாங்கலாம்ணு ஒரு லெட்டர் எளுதி குடுத்தா கையெளுத்து போடுறேன்னேன். பாரபட்சம் இருக்கப்பிடாதுல்லா? சர்க்கார் பியூனுக்கு நாம கொறைஞ்சு போனா பிறவு காந்தித்தொப்பிக்கு என்ன மரியாத? தலையில அடிச்சு, ‘நாசமாபோவும்வேய்ணு சொல்லிட்டு எந்திரிச்சு போனாரு..’

கொளுப்பு வேய் உமக்குஎன்றேன். ‘உம்ம மேலே மரியாத இருக்கதனாலத்தானே வந்து கேக்கறாருஅத நீரு மதிக்கணும்லா? அந்த தப்புக்காகத்தான் இண்ணைக்கு இப்டி தெருவும் திண்ணையுமா நிக்கிறீருஎன்றேன். ’ தம்பீ இது பட்டினத்தாரு நிண்ண தெருவுல்லா?’ நான்இல்ல தெரியாம கேக்கேன், நேசமணி உமக்கு பெரியவருல்லா, ஒருநடை அவரை போயி பாத்திருக்கணும் நீருபூமேடைநாம வேற ஆளு. காந்தியிலே ரெண்டுகாந்தி உண்டு. ஒண்ணு சர்க்கார் காந்தி இன்னொண்ணு தோட்டி காந்தி. நம்மாளு தோட்டிகாந்தியாக்கும். அடுத்தவாரம் கோர்ட்டுவாசலிலே ஒரு கூட்டத்தப் போட்டு நேசமணிய ஒருமணி நேரம் சாத்து சாத்துண்ணு சாத்தினேன்விடமுடியாதுல்ல, என்ன?’

மொத்ததிலே பென்ஷன் விசயம் வாயிமண்ணுஎன்றேன். ‘அது செத்தவனுக்கு போடுற வாய்க்கரிசில்லா? நான் இப்பமும் சீவனோட இருக்கிறவனாக்கும். வே, காந்திக்கு பென்ஷன்குடுத்தா வாங்கிட்டிருப்பாரா?’என்றார். எனக்கு அது புரியவில்லை. ‘வேய், வேலைய நிப்பாட்டிட்டு ஓய்வு பெற்றாத்தானே பென்ஷன்? நாம இப்பமும் சர்வீஸிலே இருக்குதவனாக்குமே. ‘இப்பம் காங்கிரஸ்காரங்க எப்டி? உம்ம டிரீட்மெண்டுக்கு சில்லறை வல்லதும் குடுப்பானுகளாஎன்றேன். ‘வே, கன்னியாகுமரி காங்கிரஸ அடக்கி ஆண்ட நேசமணிக்க வாரிசுகள் இண்ணைக்கும் நடந்தாக்கும் போறானுக. இப்ப உள்ள காங்கிரஸ் ஆப்பீசிலே தரையைத் துடைச்சவன் கண்டசா பிளசர் காரிலே போறான்…’ என்றபின்டீ என்னா வெலை?’ என்றார் பூமேடை. ‘ஒண்ணார் ரூவாகொறைக்க மாட்டியோ?’ என்றபடி ஒண்ணரை ரூபாயை எடுத்து கொடுத்தார். நான் என் பணத்தை கொடுத்தேன். வெளியே வந்ததும்செரி அப்ப பாப்பம். அடுத்த வாரம் ஒரு கூட்டம் இருக்கு. இந்த கன்னியாஸ்திரீகள் அளுகிப்போன காயிகறிகள வாங்கிட்டுபோயி அனாதைப்பிள்ளைகளுக்கு குடுக்க்காளுக. கேக்க நாதியில்ல நாட்டிலேஎன்றார்

நான்நான் உள்ள கொண்டுவந்து விடுறேன்..’ என்றேன். ‘என்னத்துக்கு, நீங்க ஜோலியா போறீகஎன்றார். ‘இல்லைவந்து என்னண்ணு பாத்துட்டு போலாமேஎன்று சொல்லிஏறுங்கஎன்றேன். ஏறிக்கொண்டார். ‘கடைசியா எப்ப ஜெயிலுக்கு போனீங்க?’ என்றேன். ‘ஜெயிலுக்குண்ணா, சும்மா புடிச்சிட்டு போறது கணக்கில்லை. சில கான்ஸ்டபிள்களுக்கு என்னைய புடிக்காது. எங்கபாத்தாலும் கெட்டவார்த்தை சொல்லுவானுக. சிலசமயம் ஒரு அடி போடுவானுக. எஸ்ஸை ஸ்டீபன் ஞானராஜ் இருந்தப்ப இடைக்கிடை கொண்டு போயி ஸ்டேஷனிலே இருக்க வச்சுட்டு கேஸு போடாம நாலஞ்சு அடி அடிச்சு அனுப்பிருவான். மத்தபடி நல்ல பையனாக்கும். சரியா கேஸாகி ஜெயிலுக்கு போனதுண்ணா எம்பத்தொம்பதிலே காந்திஜெயந்தி அண்ணைக்குதான்

சத்யாக்கிரகம் பண்ணினீரோ?’ என்றேன். ‘சேச்சே இல்ல. அண்ணைக்கு காலம்பற முதல் காந்தி செலைக்கு மாலையா போட்டிட்டிருந்தானுக. நான் ஒரு ஸ்டைலா இருக்கட்டுமேண்ணு ஒரு தொப்பிய கொண்டாந்து ஸ்டேடியத்திலே இருக்கப்பட்ட காந்தி செலை தலையிலே வச்சேன்பத்திரிகைக்காரன் போட்டோ எடுத்து போட்டான். புடிச்சு கேஸு போட்டானுக. ‘என்ன தொப்பி?’ என்றேன். ‘செவப்பு குல்லா. நல்ல வெல்வெட்டுல்லா? களுதச்சந்த மைதானத்திலே ஒரு சர்க்கஸுக்கான நோட்டீஸ பாத்தேன். அதில ஒரு கோமாளி வச்சிருந்தான். செரீண்ணு நானே சொந்தமா துணி வாங்கி அம்சமாட்டு ஒண்ணை தச்சு கொண்டாந்து காந்திக்கு போட்டுவிட்டேன். வெளையாட்டுல்லவே, பாக்க நல்ல லெச்சணமா ஐஸ்வரியமா இருந்தது. காந்திக்கும் அது பிடிச்சிருந்தது போல. ஒரு நமுட்டு சிரிப்பு நம்மள பாத்து. அதுக்கு என்னைய புடிச்சு ஆறுமாசம் உள்ள போட்டுட்டானுக. என்ன தப்புண்ணு போலீஸிலே கேட்டேன். கோர்ட்டிலே கேட்டேன். சொல்ல மாட்டேன்னுட்டானுக…’

உமக்கு வாய்க்கொளுப்பும் குண்டிக்கொளுக்கும் ஜாஸ்தி வேய்என்றேன்இல்லேண்ணா அடிவாங்கணும்ணே அலைவானா மனுஷன்?’ பூமேடை, ‘தம்பி அடிவாங்குறதில ஒரு சொகம் இருக்கு பாத்துக்கிடுங்க. பல பெஞ்சாதிகளுக்கு புருசன்கிட்ட நாலஞ்சு சாத்து வாங்கல்லேண்ணாக்க ராத்திரி ஒறக்கம் வராதுல்லா, அதுமாதிரிசெரி என்ன எளவோ செய்தீரு.போட்டும். இப்பம் நான் வந்து ஒளுங்கா டாக்டர பாத்து என்ன ஏதுண்ணு கேக்கேன். உம்ம வாய வச்சுகிட்டு பேசாம வரணும்என்ன?’ என்றேன். ‘பாப்போம். நமக்கும் இப்ப முடியல்லை. சத்தியமாச்சொன்னா நாலஞ்சுநாளா மூத்திரம் சொட்டுச் சொட்டாத்தான் போவுது. போறது மூத்திரமா ஆசிட்டாண்ணு ஒரு நெனைப்பு வந்து கையால தொட்டுக்கூட பாத்தேன்வலிண்ணா நல்ல வலி..’

நான் வண்டியை ஆஸ்பத்திரி முன்னால் நிறுத்தி அவரை மெல்ல பிடித்து படி ஏறச்செய்தேன். அரசு ஆஸ்பத்திரிக்கு நான் நாலைந்துமுறை வந்திருக்கிறேன், வழக்கு விஷயமாக. ஆனால் காலையில் அவ்வளவு கூட்டம் இருக்கும் என்று தெரியவில்லை. பெரிய வராந்தா முழுக்க நிரைநிரையாக கிழவர்களும் கிழவிகளும் குழந்தைகளும் பெண்களும் வெறும்தரையில் படுத்துக்கிடந்தார்கள். சுவரிலும் தூண்களிலும் சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். இருமி இருமி எட்டி துப்பி அப்பகுதி முழுக்க எச்சிலாகக் கிடந்தது. புண்நாற்றமும் மருந்து வாடையும் கலந்து வீசியது. வளாகம் முழுக்க நிறையத் தெருநாய்கள். அலையும் பசுக்கள்.

பூமேடை தூணில் சாய்ந்து அமர்ந்தார். ‘நீங்க போங்க தம்பிபரவாயில்லை. நான் மொள்ளமா உள்ள போயிக்கறேன்என்றார். ‘செரி வந்தாச்சு, டாக்டரை பாத்துட்டு வாறேன்என்று எழுந்தேன். ‘ஒரு நிமிசம்என்றார் அவர் .அவரது கோபமான முகத்தை அப்போதுதான் பார்த்தேன். ‘எல்லாரும் நிக்குத விரிசையிலே நிண்ணு போனாப்போரும் எனக்கு. தெரியுதா?’ நான் அயர்ந்துசெரிஎன்றேன். சட்டென்று சிரித்து கண்ணடித்தார். ‘ஜனநாயகம்ணா வரிசையாக்குமேநகராத வரிசைண்ணாக்க ஜனநாயகம் ஒளுங்கா நடக்குதுண்ணு அர்த்தம்என்றார். நான்நீரு அங்க இருந்துக்கிடும். நான் வரியிலே நிக்கேன்அது செய்லாமில்ல?’ என்றேன். ‘அது செரி. ஆனா எருமைக்காரன் வந்து விளிக்கிறப்ப அந்த வரிசயிலயும் நீரு முன்னால போயி நிண்ணுக்க்கிடப்பிடாதுஎன்றார் சிரித்தபடி. ஒரு பெரிய பசு வாயில் வலைபோட்ட கன்றுடன் வந்து பூமேடையை முகர்ந்து பார்த்தது. அவர் அதன் நெற்றியை வருடினார்.

வரிசையில் இருநூறு முந்நூறு பேர் இருப்பார்கள். கம்பிச் சன்னலுக்குப் பின் வெள்ளைச் சீருடை அணிந்த ஒரு நடுவயதுப்பெண் குனிந்த தலை நிமிராமல் சீட்டு எழுதிக்கொண்டிருந்தாள். உள்ளே ரேக்குகளில் ஃபைல்கள். மேலே பழைய மின்விசிறி. நடுவே நிறுத்திவிட்டு எழுந்து எங்கோ போய் பத்து நிமிடம் கழித்து வந்தாள். வரிசை நகரும் வேகம் எனக்கு பொறுமையை சோதித்தது. வரிசையிலேயே இரு கிழவர்கள் தரையில் குந்தி அமர்ந்து தலையில் கையை வைத்துக்கொண்டிருந்தார்கள். அப்படி உட்கார்ந்தபடியே மெல்ல நகர்ந்தார்கள். முன்னால் ஒரு கிழவி சீட்டை வாங்கிக்கொண்டு அந்த நர்ஸிடம் ஏதோ சொன்னதும் கெளவி, அதில எளுதியிருக்குல்லா? போபோ அந்தாலஎன்று அந்தப்பெண் சீறினாள். கிழவி சத்தமில்லாமல் ஏதோ புலம்பிவிட்டு கூனிய நடையுடன் சென்றாள்

தூரத்தில் ஏட்டு முத்துசாமி வருவதைக் கண்டேன். தெரிந்தவர்தான். பூமேடை இருந்த தூணருகே வந்ததும் ஏட்டு அவரை அடையாளம் கண்டு கொண்டார். பூமேடை தூங்கியபடி தூணில் சாய்ந்திருந்தார். ஏட்டு பூட்ஸால் பூமேடையின் தொடையை ஓங்கி எத்திவே, என்னவே? வேய்என்றார். பூமேடை மறுபக்கம் விழப்போய் தூணை பிடித்துக்கொண்டார். ஒருகணம் என் கைகால் எல்லாம் எரிவது போலிருந்தது. ஆனால் பல்லைக் கடித்து கண்களை பலமுறை மூடித்திறந்து அமைதியானேன். ஏட்டு அவரிடம்இங்க என்னவே செய்றீரு?’ என்றார். பூமேடை சிவந்த கண்களால் பார்த்தார். அவர் மனம் இன்னும் தெளிவடையவில்லை என்று தெரிந்தது

நான் உரக்கஏட்டையாஎன்றேன். ‘ஆருவே நீரா? நீரு இங்க எங்க?’ என்றார். ‘நான்தான்பூமேடைய கூட்டிட்டு வந்தேன். எங்க சீனியரு சொன்னாருஎன்றேன். ‘உமக்க சீனியருக்கு என்ன வே கிறுக்கா? இவன் கோட்டிக்காரன்லா? தீனிபோடுற கைய கடிக்குற நாயாக்கும் இவன். ஆளு இப்டி இருக்கான்னு பாக்காதீருவெஷப்பார்ட்டியாக்கும். இவனால வேலை போன நம்ம பாஸ்கரன் எஸ்ஸை இப்பம் ரைஸ்மில்லுலே மாவரைக்குதாரு.. தெரியுமா?’ என்றார். ‘செரிசீனியரு சொன்னாருஎன்றேன். ஏட்டு முகம் மாறி ரகசியமாகமத்த காஞ்சாம்பறம் கேஸு என்னாச்சு? படியறுமா?’ என்றார். நான்எங்க? வாய்தால கெடக்கு. அவனிட்ட பைசா இல்ல…’ ஏட்டுஅதும் செரிதான். பைசா இருந்தா உங்ககிட்ட ஏன்வே வாறான்?’ என்றபின்வாறன்..ஒரு கேசு கெடக்குகைவெட்டாக்கும்என்று போனார்.

ஜன்னல் பெண்மணியிடம்ஒரு சீட்டுஎன்றேன். ‘ம்?’ என்றாள். ‘சீட்டுஎன்றேன். அவள் என்னை சிலகணங்கள் பார்த்துவிட்டுஆருக்கு?’ என்றாள். ‘அந்தா இருக்காரு..பூமேடை ராமையாண்ணு பேருஎன்றேன். ‘அவரு வந்து கியூவிலே நிக்கட்டு..அந்தால மாறுங்கஎன்றாள் என்னை பார்க்காமல். என் தலையில் ரத்தம் பாய்ந்தது. ‘அவரால நிக்க முடியாதேஎன்றேன். ‘முடியல்லைண்ணா அங்க கெடக்கட்டு. செத்தாக்க நாங்க எடுத்து உள்ள போடுவம்வெலகும்வேஎன்றாள். நான் ஒரு பெண் அத்தனை கடினமாகபேசமுடியும் என்பதையே நம்பாதவனாக அவளைப் பார்த்தேன். சில நொடிகள் மனதை அமைதிப்படுத்திவிட்டுசெரி அவரை கூப்பிடுதேன்என்றேன். ‘அவருக்கு வேணுமானா அவரு கியூவிலே நின்னு வரட்டும்.. நீரு வெலகும்.

நான் ஏதோ கேட்பதற்குள் என் பின்னால் நின்ற கிழவர் மெல்லஅஞ்சுரூபா குடும்அதாக்கும் இங்க உள்ள சட்டம்என்றார். நான் என் உடலால் ஜன்னலை பூமேடையிடம் இருந்து மறைத்து ஐந்து ரூபாய் எடுத்து அவள் முன் வைத்தேன். அவள் அதை ஒரு டிராயருக்குள் போட்டபின் மேலே எதுவுமே பேசாமல்பேரு?’ ‘வயசு?’ என்றாள். சொல்லி சீட்டு எடுத்துவிட்டு பூமேடையிடம் வந்தேன். அவரை மெல்ல தூக்கி எழுப்பினேன். ‘பதிமூணாம் நம்பர் ரூமுஎன்றேன். ‘மங்கலமான நம்பர்லாஎன்றார், ‘நல்லா கேட்டேரா? மார்ச்சுவரியா இருக்கப்போவுது. நான்மார்ச்சுவரிக்குண்ணா நம்மள போவச்சொல்லமாட்டாங்க. அவங்களே கொண்டு போவாங்களாம்என்றேன் . அவர்அவ்ளவு அந்தஸ்தான எடம் ,என்ன?’என்றார், ‘ஏஸியும் பண்ணிவச்சிருப்பான்

பதிமூன்றாம் அறைமுன் பெஞ்சு ஏதும் இல்லை. ஐம்பது நோயாளிகள் வரிசையாக நின்றிருந்தார்கள். ஒரு இருபதுபேர் அமர்ந்திருந்தார்கள். நாலைந்துபேர் அங்கேயே படுத்திருந்தார்கள். நான் பூமேடையை அமரச்சொல்லிவிட்டு வரிசையில் நின்றேன். உள்ளே போனவர்கள் சரசரவென்று அதே வேகத்தில் வெளியே செல்வதை கவனித்தபோது ஆறுதலாக இருந்தது. வாட்சைப்பார்த்தேன். எனக்காக அங்கே காத்திருப்பார்கள் மாடும் பெண்ணும். பெண் எப்படி இருப்பாள்? பெருவட்டர் வீட்டுக்குட்டிக்கு கண்டிப்பாக திமிர் இருக்கும். ஆனால் பணமுள்ளவர்களுக்கு திமிர் ஓர் அழகு. ஒருமணிநேரத்தில் என் இடம் வந்தது. நான் பூமேடையை பார்த்தேன். தூங்கிக்கொண்டிருந்தார். சட்டென்று உள்ளே சென்றேன்

டாக்டர் என்னிடம் சந்தேகமாகஎஸ்?’ என்றார். வரிவரியாக மயிர் சீவி ஒட்டிவைக்கப்பட்ட வழுக்கைத்தலையும் கனத்த கண்ணாடியும் கொண்ட ஐம்பதுவயதான ஆள். தொளதொள சட்டை பாண்ட். ‘என்பேரு கணேசன். லாயர்.’ என்றேன். அவரது கண்கள் மாறுவதை திருப்தியுடன் கவனித்துநமக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு உடம்புசரியில்லை. கூட்டிவந்திருக்கேன்என்றேன். ‘கேஸா?’ என்றார் பின்னால் சாய்ந்து. ‘இல்லை. தெரிஞ்சவரு. வயசானவரு. வேற ஆதரவுக்கு யாரும் கெடையாது. தனியார் ஆஸ்பத்திரிக்குன்னா வரமாட்டார். இங்க வேணுங்கிறத பாத்து பண்ணுங்க. நான் செலவ பாத்துக்கிடுதேன். அவருக்கு அது தெரிய வேண்டாம்டாக்டர் என்னை சாய்வாக பார்த்துஉங்களுக்கு அவரு என்ன ஒறவு?’ என்றார். ‘சின்னவயசிலே இருந்து பழக்கம்அவர் தலையசைத்துகொண்டுட்டு வாங்கஎன்றார்

பூமேடையை உள்ளே கொண்டு வந்தேன். டாக்டர் பக்கத்து அறைக்குள் கொண்டு சென்று படுக்கவைத்து பரிசோதனை செய்தார். நான் வெளியே காத்திருந்தேன். கைகழுவிவிட்டு வந்து என்னை தனியாக அழைத்துகிட்னி அவிஞ்சு போயிருக்குண்ணு நினைக்கேன். ரொம்ப கிரிட்டிக்கல். எப்டி இவ்ளவுதூரம் எந்திரிச்சு நிக்கிறார்னே தெரியேல்ல…’ என்றார். ‘நல்ல உடம்புஎன்றேன். ‘வயசும் ஆயாச்சுமெதுவா என்னோட கிளினிக்குக்கு கொண்டுவர முடியுமா?’ என்றார். ‘வரமாட்டாரு. கிளினிக்குல செய்றத இங்க செய்யுங்க. அதுக்கு உண்டானதை குடுத்திடறேன்

நீங்க அவருக்கு உறவு கெடையாதுன்னு சொன்னீங்கநெறைய செலவாகும். நெறையன்னா உடனே எப்டியும் ஒரு அஞ்சாயிரம் வேணும். மேக்கொண்டு அது இதுன்னு ஆயிடும்..’ நான் மூச்சை கொஞ்சம் சிரமபப்ட்டு விட்டுசரிஅவருக்குன்னு கேட்டா குடுக்க ஆளிருப்பாங்கநீங்க அட்மிட் பண்ணுங்கஎன்றேன். ‘செரிஎன்று அவர் எழுதினார். பிறகு யோசித்துகொஞ்சநேரம் வெயிட் பண்ணுங்க. நான் வார்டில கூப்பிட்டுச் சொல்லிடறேன்.’ என்றார். நன்றாகக் குரலை தாழ்த்திஅதுக்குள்ள பணம் கிடைச்சா நல்லா இருக்கும்என்றார்.

என் கண்களும் அவர் கண்களும் சந்தித்தன. அவர் என்ன சொல்கிறார் என்று புரிந்தது. நான் மீண்டும் சிரமப்பட்டு என் கனலை அணைத்தேன். ‘டாக்டர் அவரு இப்ப ரொம்ப முடியாம கண்டிஷன்ல இருக்கார்னு நீங்கதான் சொன்னீங்க. அட்மிட் பண்ணுங்கநான் ஒருமணி நேரத்திலே பணத்தோட வந்திருதேன்என்றேன். என் குரலில் என்னை அறியாமலேயே கோபம் வந்திருந்தது. டாக்டர் மெல்ல சிரித்துநீங்க அவருக்கு சொந்தமெல்லாம் இல்லல்ல? போனா நீங்க வரலேன்னு வைங்கஇல்ல ஒரு பேச்சுக்குச் சொன்னேன். ஸ்பெஷல்வார்டுக்குன்னு ஒரு முறை இருக்கு இங்கஅந்த வழியா சும்மா நடந்துபோற ஸ்டாஃப் கூட கைய நீட்டுவாங்க. நான் வாங்கலேண்ணா யாரும் நம்பமாட்டாங்க. என் கையிலே இருந்து குடுக்க முடியாதுல்ல?’

அவர் எதையும் கேட்கமாட்டார் என அவரது மெல்லிய சிரிப்பே சொல்லியது. நான் பெருமூச்சு விட்டேன். ‘செரி.. நான் போய் பணத்தோட வாறேன். அதற்குள் இன்னொரு நோயாளி உள்ளே வந்தாள். கிழவி. கை கால்கள் எல்லாம் தனித்தனியாக ஆட வெடவெடவென நடுங்கிக்கொண்டிருந்தாள். ‘பொன்னுஸாறேஎன்று அவள் சொல்ல ஆரம்பிக்க அவளை ஏறிட்டும் பார்க்காமல் ஏதோ எழுதி அவளிடம் கொடுத்துவிட்டு என்னிடம்செரிஎன்றார். கிழவிநாலு மாசமாச்சு இந்த காச்சலு வந்துஇப்பம்என்று முனகிக்கொண்டிருக்க நான்அப்ப எங்க படுக்க வைக்க?’ என்றேன். ‘வெளியே திண்ணையிலே இருக்கட்டும்நான்அவரு ரொம்ப..’ என ஆரம்பிக்கசார், இங்க வாற கேஸிலே முக்காவாசிப்பேர் இந்த கண்டிஷன்லதான் இருக்காங்கஇங்க இதெல்லாம் பாத்தா ஒண்ணும் நடக்காது…’ என்றபின் முக்கி முக்கி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்த கிழவியிடம், சீட்டு எளுதியாச்சுல்ல, போம்மாஎன்று அதட்டி விட்டு அடுத்த நோயாளிக்காக மணி அடித்தார்.

நான் பூமேடையை எழுப்பினேன். ‘என்ன சொல்லுகாரு டாக்டர்? அவருக்க அபிப்பிராயம் என்ன? பொதைக்கலாமா எரிக்கலாமா?’ என்றார். ‘முதல்ல போஸ்ட்மார்ட்டத்த பண்ணுறேன்னாருவாரும் வேய்என்று கூட்டிச்சென்றேன். ‘அட்மிட் பண்ணணும்னு சொல்லுதாரு..அதுக்கு முன்னால இன்னொருவாட்டி டெஸ்டெல்லாம் எடுக்கணும். நீரு இங்கிண திண்னையிலே கொஞ்ச நேரம் இரும்…’ என்றேன். ‘நீங்க எங்க போறீங்க? மலர்வளையமெல்லாம் எனக்கு பிடிக்காதுஎன்றார் பூமேடை. ‘செரி நாலுமொழம் மல்லியப்பூ வாங்கி போடுறேன் போருமா? சும்மா இரும்வேஒரு சின்ன சோலி. முடிச்சிட்டு பத்து நிமிசத்துக்குள்ள வந்திருவேன்

அவர் தூணருகே படுத்துக்கொண்டார். நான் என் டிவிஎஸ் ஃபிஃப்டியை முடிந்தவரை வேகமாக ஓட்டினேன். ஐயாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது? எனக்குத்தெரிந்து ஐயாயிரம் ரூபாய் கொடுக்கும் அளவுக்கு கையில் பண ஓட்டம் உள்ள எவரும் இல்லை. பூமேடை பெயரைச் சொல்லி யாரிடம் கேட்பது? அரசியல் கட்சிகளிடமா? உடனடியாக ஐயாயிரம் ரூபாய்!

எங்கே செல்வது என்று என் உள் மனம் அறிந்திருந்தது. நான் அந்த பெண்வீட்டுக்குத்தான் சென்றேன். என்னை எதிர்பார்த்திருந்தார்கள் போல. திண்ணையில் மூன்று பெரியவர்கள் இருந்தார்கள். ஒருவர் மபொசி போல மீசை வைத்து காமராஜ் சாயலில் இருந்தார். வெடியோசைபோல பேசிக்கொண்டிருந்தவர் என்னை பார்த்ததும் மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். பேச்சு நின்றது. என்னை கவனித்தார்கள். நான் என் வண்டியை நிறுத்திவிட்டு அவசரமாக படி ஏறினேன். சட்டை போடாமல் சாயவேட்டியுடன் வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தவர்தான் வீட்டுக்காரப் பெருவட்டர் என்று தெரிந்தது.

நானாக்கும் கணேசன்.லாயர்என்றேன். ‘வாங்க…’ என்றார் அவர். என் உடைகள் முழுக்க கறைகளும் அழுக்குமாக இருப்பதை அப்போதுதான் கவனித்தேன். ‘ஒரு அவசர வேலையா வந்தேன். அப்பனுக்கு நல்ல தேகசுகமில்லை. ஆஸ்பத்திரியிலே இருக்காருஒரு சகாயம் செய்யணும்என்றேன். அவரை சிந்திக்க விடாமல் மேலே தொடர்ந்தேன்ஒரு ஐயாயிரம் ரூபா இப்பம் வேணும். அப்பன் இங்கவந்து கேக்கச்சொன்னாரு. இங்க மட்டும்தாம்லே நாம கேக்கமுடியும்ணு சொன்னாருஅவர் மற்ற இருவரையும் பார்த்து ஏதோ சொல்ல வந்து தத்தளித்தார். அப்படி அப்பட்டமாக பிறர் முன் பணம்கேட்டால் அவரால் மறுக்க முடியாது, அந்தமாதிரி தருணத்தையே சந்தித்திருக்கமாட்டார்.

நேரமில்லைநான் ஒரு அஞ்சுமணிக்கு திரும்பி கொண்டுவந்து குடுக்கேன்..உடனேஅவர் வெற்றிலையை துப்பிவிட்டுஇருங்கஎன்று சொல்ல ஆரம்பித்ததுமே நான்வலிய உபகாரம்என்று கும்பிட்டேன். அவர் மேலும் ஒருகணம் தவித்தபின் உள்ளே சென்று ரூபாயை எண்ணிக்கொண்டே வந்தார். நான்ரொம்ப உபகாரம்நான் வாறேன்என்று பணத்தை எண்ணாமல் வாங்கிக்கொண்டு வண்டியை எடுத்து வேகமாகக் கிளம்பிச்சென்றேன்.

ஆஸ்பத்திரியில் டாக்டரின் அறைக்குச் செல்லும்போதே ஏதோ நடந்திருக்கிறதென தெரிந்துவிட்டது. அங்கே கூட்டமாக இருந்தது. யாரோ கத்திக்கொண்டிருந்தார்கள். நான் கூட்டத்தை விலக்கினேன். டாக்டர்தான் சாமியாடிக்கொண்டிருந்தார். என்னைக்கண்டதும் திரும்பிஓய் உம்மாலதான் எல்லாம்..கூட்டிட்டுப்போவும்வே இவனைஇப்பம் கூட்டிட்டு போகலைண்ணா தூக்கி வெளிய போட்டிருவேன்என்ன ஓய், என்னை என்ன கேனைக்கூமுட்டைண்ணு நெனைச்சேரா? நானும் பல ஊரு தண்ணி பாத்துத்தான் இங்க வந்திருக்கேன்..’என்று மூச்சிரைக்க கத்தினார்.

என்ன, என்ன ஆச்சு?’ என்றேன். ‘ஒரு அடி அடிச்சேன்னாக்க பொணம் விளுந்திருக்கும். அது நடக்காதது உம்ம யோகம்எடுத்திட்டு போவும் ஓய் இந்த பார எளவஇப்பம் இந்த நிமிசம் எடுத்திட்டு போயாகணும்..’ என்றார் டாக்டர். அவருடைய உடம்பெல்லாம் வியர்வை நாறியது . ‘டாக்டர், இருங்க நான் சொல்லுதேன்நீங்க சொன்ன மாதிரி…’ பணத்தை சைகை காட்டினேன். ‘இனி இந்தியாவுக்க ஜனாதிபதி வந்து சொன்னாலும் இந்தாள இங்க அட்மிட் போடமுடியாதுஇந்த காம்பவுண்டிலே இவரு இருக்கப்பிடாதுஇப்ப கெளம்பி போயாகணும்..’

வே, இவரு என்ன சொல்லுகாரு? சர்க்காராஸுபத்திரிண்ணாக்க அனாதைகளுக்கு நிம்மதியா வந்து சாவுகதுக்குண்டான எடமாக்கும்என்றார் பூமேடை. ‘டேய், கோட்டிக்கார தாயளி..’ என்று டாக்டர் நிலைமறந்து பாயப்போனார். நான் அவரை பிடித்து சுழற்றி இழுத்து நிறுத்தினேன். என் கட்டுப்பாடு பறந்தது. ‘என்னவே? நீரு என்ன நினைச்சிருக்கேரு? அடிச்சிருவேரா? அடியும்வே பாப்போம்என்று கத்தினேன். டாக்டர் சட்டென்று தணிந்துஎன் சீவன் இருக்கிற வரை இந்த ஆஸ்பத்திரியிலே இவன் நுழையமாட்டான்பாத்திருதேன்என சொல்லிக்கொண்டு உள்ளே சென்றார்.

என்னவே அப்பிடிச் சொன்னீரு?’ என்றேன் பூமேடையிடம். ஆனால் அவரால் தலை தூக்க முடியவில்லை. அப்படியே சுருண்டு படுத்துவிட்டார். சீருடை அணிந்த ஒரு ஆஸ்பத்திரி சிப்பந்தி என்னிடம்சாரு இவருக்க ஆளா? இது நம்ம பூமேடையில்லா?’ என்றார். ‘ஆமாஅவரு நம்ம கட்சிக்காரராக்கும். நான் வக்கீலுஎன்றேன்என்ன வே சங்கதி? என்ன இங்க இவ்ளவு பிரச்சினை?’

அவர் குரலைத்தாழ்த்திஒண்ணுமில்லை, நம்ம தேவசகாயமும் கருணாகரனும் வந்தாவ. காங்கிரஸுக்க ஆளுகளாக்கும். எங்கயோ நாலு கீறு கீறியிருப்பானுவ. நேரா இங்க வந்திட்டானுவ. பிரி டேட்டு போட்டு அட்மிட் ஆகணுமுண்ணு சொல்லுகானுக. அது இங்க எப்பமும் உள்ள ரீதியில்லா? அவனுக கியூவிலே நிக்கல்லை. சல்யூட அடிச்சுட்டு நேரா உள்ள போயிட்டானுக. டாக்டரு அவனுகள சிரிச்சு உபசரிச்சு அட்மிஷன் போட்டுட்டாரு. அத இவரு பாத்திருக்காரு. எந்திரிச்சு போயி டாக்டர்கிட்ட இங்க கியூ ஒண்ணும் இல்லியா? நாப்பதுபேரு வரிசையிலே காலம்பற முதல் நிக்கானுகளேன்னு கேட்டிருக்காரு. அதுக்கு டாக்டர் இவங்க ரெண்டுபேரும் காங்கிரஸ்காரங்க. ஆளும்கட்சி. அதனால கியூ இல்லேன்னு சொல்லியிருக்காரு

நான் பெருமூச்சு விட்டேன். சிப்பந்தி சிரித்துக்கொண்டுஅதுக்கும்பிறவுதான் கோட்டிக்கார மனுஷன் அவன் புத்திய காட்டியிருக்காரு. நேரா கீள எறங்கி மேஞ்சுகிட்டு நின்ன பசுவையும் கண்ணுக்குட்டியையும் கூட்டிக்கிட்டு நேராட்டு டாக்டர் ரூமுக்குள்ள போயிட்டாரு. டாக்டர் பதறியடிச்சு மேச மேலே கேறிட்டாரு. ‘காங்கிரஸ் கட்சிக்க சின்னமுல்லா பசுவும் கண்ணும். அதுக்கும் கியூ வேண்டாமேன்னு இவர் சொல்லுகாரு. பசு உள்ள போயி எல்லாத்தையும் தட்டிப்போட்டுட்டு அந்தால ஓட டாக்டர் அய்யோ ஆத்தான்னு சத்தம்போட கொஞ்சநேரம் இங்க ஒரே சினிமாக்கூத்தா போச்சு

எல்லாரும் சிரித்தார்கள். ‘இவரு அவராக்கும் இல்லியா? மூஞ்சி வீங்கினதனால கண்டுபிடிக்க முடியல்லைஎன்றார் ஒருவர். ‘ ஒரு காலத்திலே பெரிய சொத்துள்ள கையாக்கும் . பிரசங்கம் பண்ணிப்பண்ணி அம்பிடுத்தையும் அளிச்சான்லாகோட்டிபுடிச்சா இப்பிடி உண்டுமா?’ ‘தெருவும் திண்ணையுமா கெடக்கணும்ணு தலையிலே எளுதியிருக்குபெஞ்சாதி பிள்ளைய இல்லியோ?’ ‘பிள்ளிய இல்ல. பெஞ்சாதி முன்னால போயிட்டாஅப்பம் எங்க கெடந்து செத்தா என்ன? ஐசரியமா இப்பிடியே செத்தா அந்தமட்டுக்கும் நல்லது

நான் பேச்சுக்குரல்கள் நடுவே குனிந்து அவரைப் பார்த்தேன். முகம் வெளிறி மஞ்சளோடிப்போயிருந்தது. நான் அமர்ந்த சத்தம் கேட்டு கண் திறந்தார். சிரித்து, ‘ஒரு தப்பு பண்ணிப்போட்டேன்கடைசித்தப்புண்ணு நெனைக்கேன்என்றார். ‘ஆமா இப்ப சொல்லும்என்று சொல்லவந்த நாக்கை மடித்துக்கொண்டேன். ‘….எளுவத்தெட்டிலே காங்கிரஸுக்க சின்னம் மாறியாச்சுல்லா? இப்பம் கையாக்குமேநான் அதை மறந்துட்டேன்மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். எனக்கு அந்நேரத்திலும் சிரிப்பு வந்தது.

அதுதான் கடைசிப் பேச்சு. ஆட்டோ பிடித்து அவரை வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோன வழியிலேயே இறந்துவிட்டார். என் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிய அந்த ஐயாயிரம் ரூபாயில் இருந்துதான் அவருக்கு சவ அடக்கம். தடபுடலாகத்தான். மூவண்ண கொடியும் மூவண்ண மலர்வளையமும் எல்லாம் உண்டு. சாவுக்கு வந்த அனைவருக்கும் ஆளுக்கொரு காந்தித்தொப்பியும் அளிக்கப்பட்டதுஅதில் வாய்க்கரிசியுடன்.

கருத்துகள் இல்லை: