இறைவனின் யோக நிலையை தம் பாசுரங்களால் சிறப்பித்தவர் நம்மாழ்வார். தன்னை நாயகியாகவும் பாற்கடல்வாசனை நாயகனாகவும் பாவித்து, ஆழ்வார் தம் ஆற்றாமையை திருவாய்மொழியில் மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். அக இலக்கியத்துக்கே சிறப்புச் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது இவரது பாசுரங்கள்.
நம்மாழ்வார் தன் துன்பத்தை அழகுற வரிசைப்படுத்துகிறார். அந்தச் சூரியன் நினைத்திருந்தால் தன்னைக் காப்பாற்றி இருக்கக் கூடும். பெண்ணின் தவிப்பைச் சகிக்க முடியாதபடி அந்தச் சூரியன் மறைந்துகொண்டது. உலகத்தைத் தன் திருவடிகளால் அளந்தவன் அந்த வாமனமூர்த்தி. அவனாவது இரக்கம் காட்டியிருக்கலாம், அவனோ வரவில்லை. தலைவிக்கு ஊடல் எல்லை மிகுகிறது. அந்தப் பெரிய கண்கள், சிவந்த வாய் இவை இரண்டும் நம்மாழ்வாராகிய காதலியைப் படாதபாடு படுத்துகிறது.
அவன் நிறமோ கருமேகத்தை ஒத்தது. அவன் இளைஞன், காளை, வாலிபன், உள்ளம் கவர் கள்வன். ஆதலால், பெரிய பாய்ச்சலில் ஒரே மூச்சில் வந்து அக் காளை தலைவியின் கவலையைத் தீர்த்திருக்கலாம். காதல் நோய் தந்தவன் அல்லால் பிறிதொருவன் அதற்கு மருந்து தர இயலுமா? என்ற கேள்வி எழுகிறது நம்மாழ்வாராகிய தலைவிக்கு. அவர் மனத்திடை உற்ற பெருந்துயருக்கு உபாயம் யார்? எனப் பலமுறை கேட்டுப்பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். உலகத்தவரால் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. அவர்களால் என்ன செய்ய முடியும் பாவம்! நோய் தந்தவனே அந் நோய்க்கு மருந்து, பிறிதொன்றில்லை என்பதைக் காட்டும் கருத்தாழமிக்க பாசுரம் இது:
""பெண் பிறந்தார் எய்தும் பெருந்துயர் காண்கிலேன் என்று,
ஒண் சுடரோன் வாராது ஒளித்தான்; இம்மண்ணளந்த
கண் பெரிய செவ்வாய் எம் கார்ஏறு வாரானால்
எண் பெரிய சிந்தை நோய் தீர்ப்பார் ஆர் என்னையே?''
(தி.மொ. 5:10:4-3153)
நம்மாழ்வாராகிய தலைவியைக் காதல் நோய் வாட்டுகிறது; வருத்துகிறது; விடாமல் பின் தொடர்ந்து வருகிறது. இரவாகிய ஊழியும் படாதபாடு படுத்துகிறது. நாயகியின் நிலையை அதுவும் (இரவும்) புரிந்துகொண்ட பாடில்லை. கண்களின் ஒளி மறையும் விதமாய் நடந்துகொள்கிறது. காதலன் வந்தால்தான் தெம்பு ஊரும். அவன் மாயன். அவனும் அவ்வளவு சுலபமாய் வருவதுபோல் தெரியவில்லை. இந்தச் சூழலில் நாயகியின் உயிரைக் காக்கவல்ல வல்லமை உடையவர்தான் யார்? அவனன்றி யாரும் இருப்பதாகத் தோன்றவில்லை தலைவிக்கு.
""பின்நின்ற காதல் நோய் நெஞ்சம் பெரிது அடுமால்
முன்னின்று இரா - ஊழி கண் புதைய மூடிற்றால்;
மன்நின்ற சக்கரத்து எம் மாயவனும் வாரானால்
இன்நின்ற நீள் ஆவி காப்பார் ஆர் இவ்விடத்தே?''
(தி.மொ.5:10:4-3155)
என்கிறார். தலைவனின்றி தலைவியால் வாழமுடியவில்லை. இரவின் நீட்சி உயிரைத் தாக்குகிறது. உடம்பை மேன்மேலும் மெலிவுறச் செய்கிறது. தெய்வங்களிடம் விண்ணப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லாத நிலை ஏற்படுகிறது. உயிர் வருந்தும் சூழலில், உயிருக்கு உயிரான சக்கரக்கையன் வந்தால் தேவலாம் என்று தோன்றுகிறது. அவனோ வராமல் இருப்பதிலேயே உறுதியாய் இருக்கிறான். தென்றல் தரும் துன்பம் ஒருபுறம். பிறருக்கு இன்ப வர்ணம் பூசிக்கொண்டும் தனக்குக் கொடிய தீயினும் கூடுதலாய் வெப்பத்தை வாரி இறைத்துக் கொண்டும் இருக்கிறது தென்றல். அவனில்லை என்கிற துணிச்சலில் சுடுகிறது. இது முற்றிலும் உண்மை. காதலில் வயப்பட்டதால் பொய்யோ என எண்ணிவிட வேண்டாம். சக்கரக்கையன் தீண்டல்தானே தான் உற்ற காதல் நோய்க்கு மருந்து எனும் விதமாய் அமைந்த பாசுரம் இதுதான்:
""தெய்வங்காள்! என் செய்கேன்? ஓர் இரவு ஏழ் ஊழியாய்
மெய்வந்து நின்று, எனது ஆவி மெலிவிக்கும்;
கைவந்த சக்கரத்து என் கண்ணனும் வாரானால்
தைவந்த தண்தென்றல் வெஞ்சுடரில் தான் அடுமே''
(தி.மொ. 5:10:4-3157)
பாற்கடல்வாசனின் சிறப்புகள் இப்பாசுரங்கள் மூலம் எடுத்துரைக்கப்பபட்டுள்ளன. இவற்றைப் பயின்றால் வைகுண்டம் அடைதல் உறுதி என்கிறார் நம்மாழ்வார்.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக