06/03/2012

நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும் - முனைவர் ச.சுப்புரெத்தினம்

தமிழ்மொழியில் லட்சக்கணக்கான சொற்கள் உள்ளன. இச்சொற்களில் பல, காலந்தோறும் மருவியுள்ளன அல்லது சொற்கள் தத்தமக்குரிய பொருள்களிலிருந்து மாற்றம் பெற்றுள்ளன. இச்சொற்பொருள் மாற்றம் என்பது எல்லா மொழிகளிலும் உண்டு என்பதால், தமிழ் மொழியும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொருள் மாற்றம்

""சொற்கள் இடம், காலம் என்ற இரு நிலைகளில் பொருள் மாற்றம் பெறுகின்றன. சொற்கள் இடந்தோறும் வேறுபடல் மிக்குறைந்த வழக்கு என்றும், காலந்தோறும் வேறுபடல் பெருவழக்காகும்'' என்றும் கூறுவார் அறிஞர் ரா.சீனிவாசன். (மொழி ஒப்பியலும் வரலாறும், 1999: பக்.194) இத்தகைய மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. ஏனெனில், சொற்கள் என்பன பல்வேறு மக்களின் எண்ணத்துக்கும் பேச்சாற்றலுக்கும் உள்பட்டனவாகும்சொற்கள், தம்மையும் பொருளையும் உணர்த்தவல்லன என்பதைத் தொல்காப்பியர், பெயரியலில் (நூ.2) குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதேவேளை சொல்லுக்கும் பொருளுக்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்ற நியதியில்லை என்பதை உயிரியலில் (நூ.98) குறிப்பிட்டுள்ளார். ஒரு சொல்லுக்கும் அது உணர்த்தும் பொருளுக்கும் தொடர்பு இருப்பின் அதனைக் "காரணப்பெயர்' என்றும், அத்தகைய தொடர்பைக் கருதாத நிலையில் "இடுகுறிப்பெயர்' என்றும் அழைப்பர்.


சொற்பொருள் மாற்றம்

காலமும், இடமும்

ஒரு சொல்லுக்கு ஓரிடத்தில் ஒரு பொருளும் வேறொரு இடத்தில் வேறொரு பொருளும் வழங்கப்படுவதுண்டு. அல்லது ஓரிடத்தில் ஒரு பொருளும் வேறொரு இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களும் வழங்கப்படுவதுண்டு.

சான்றாக, "கொசு' என்ற சொல் தமிழகம் எங்கும் வழக்கத்தில் உள்ளது. "கொசுகு' என்பது பழஞ்சொல்லாகும். இதைச் சில இடங்களில் "சுள்ளான்' என வழங்குகின்றனர். இன்னும் சில இடங்களில் இரண்டையும் வேறுபடுத்தி உருவில் மிகச் சிறியதாக உள்ளனவற்றைக் "கொசு' என்றும், வலிக்கும் அளவுக்குக் கடிக்கும் அதே இனத்தைச் "சுள்ளான்' என்றும் வழங்குகின்றனர். இந்த இரு வழக்கும் அவ்வளவாக இல்லாமல், இலங்கையில் கொசுவை "நுளம்பு' என்று வழங்குகின்றனர்.

சொற்பொருள் இடத்துக்கு இடம் மாறுபடுவது போன்றே, காலத்துக்குக் காலம் மாறுபடுவதுண்டு. காலத்துக்குக் காலம் மாற்றம் என்பது சொல்லாராய்ச்சியைப் பொருள் உள்ளதாக ஆக்குகிறது. சொற்களின் பொருள் மாறுபாட்டின் தன்மை சிறப்புப் பொருட்பேறு, பொதுப்பொருட்பேறு, இழிபொருட்பேறு, உணர்பொருட்பேறு, நுண்பொருட்பேறு, பருப்பொருட்பேறு என்று பல நிலைபெறும்.

சிறப்புப் பொருட்பேறு

பல பொருள்களைக் குறிக்கப் பொதுவாக வழங்கப்படும் ஒரு சொல் காலப்போக்கில் ஒரு பொருளையே சிறப்பாகக் குறித்தலும் உண்டு. இதனைச் சிறப்புப் பொருட்பேறு என்பர். சான்றாக, "புல்' என்ற சொல், மூங்கில் உள்ளிட்ட புல்லினங்களுக்குப் பொதுவாக வழங்கியது. அகக்காழ் (அதாவது "வயிரம்') உடையன மரம் என்றும், புறக்காழ் உடையன "புல்' என்றும் தொல்காப்பியர் காலத்தில் வழங்கப்பட்டது. பின்னர், அருகம்புல், கோரைப்புல் என்று சிலவற்றுக்குச் சிறப்புப் பெயராக மாறியது. பிற்காலத்தில் அது "மரம்' என்று வழங்கப்பட்டது.

பொதுப் பொருட்பேறு

முதலில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் சிறப்பாக உணர்த்திப் பின் காலப்போக்கில் பல பொருள்களை உணர்த்திப் பொதுச் சொல்லாதலைப் பொதுப் பொருட்பேறு என்பர்.

எள்ளிலிருந்து எடுக்கப்படும் திரவப் பொருளை எண்ணெய் என்று தொடக்கக் காலத்தில் வழங்கி, பின் அவ் "எண்ணெய்' என்பதே பொதுப் பெயரால் நின்று தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், கடலை எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் எனத் திரவப் பொருளுக்குப் பொதுவாய் நின்று, அடைபெற்று வெவ்வேறு வகை குறித்து நின்றது. பூமியிலிருந்து பிற்காலத்தே தோண்டி எடுக்கப்பட்ட எரிபொருளாகிய திரவம் "மண்ணெண்ணெய்' எனப் பெயர் பெற்றதையும் சிந்திக்க வேண்டும். பெட்ரோலியப் பொருள்களுள் ஒன்றான "பெட்ரோல்' என்பதைத் தனித்தமிழ் இயக்கத்தினர் கல்நெய், கன்னெய் எனக் குறிக்கத் தொடங்கினர்.

உயர் பொருட்பேறு

அஃறிணையைக் குறிக்கும் சொல் பின்பு உயர்திணைக்கு வழங்கப்படுமானால், அது உயர்பொருட்பேறு எனப்படும். கீரிப்பிள்ளை, அணிப்பிள்ளை என்பன அஃறிணை இனங்கட்குச் சிறப்பாகப் பேசப்பட்டுப் பின், "பிள்ளை' என்ற சொல் உயர்திணையான "குழந்தை'யையும் உணர்த்த நின்றது. இதே பெயர் மக்களின் ஜாதிப் பெயரையும் குறித்தமை சிந்திக்கத்தக்கது.

அதுபோல, தென்தமிழ் நாட்டுப் பகுதிகளில் தாயேலி, தாயேழி, தாயேளி என்று கோபத்தில் ஒருவரை நோக்கி வசைபாடுவதுண்டு. தாயினை இழந்த குழந்தையைத் "தாயிலி' என்பர். இதுவே பிற்காலத்து "தாயேலி' என்று வழங்கலாயிற்று.

இழிபொருட்பேறு

உயர்ந்த பொருளில் வழங்கப்பட்ட சொற்கள் காலப்போக்கில் இழிந்த பொருளுக்கு வழங்கப்படுதல் இழிபொருட்பேறு ஆகும். "நாற்றம்' என்ற சொல் முற்காலத்தில் "நன்மணம்' என்ற பொருளில் வழங்கியது. ஆனால், பிற்காலத்திலோ அது துர்நாற்றத்தைக் குறித்தது.

பயன்பெறாது, உழைக்காது திரியும் ஆண்மகனை "உண்டக்கட்டி' என்று இழிந்த பொருளில் சாடுவது தமிழர் வழக்கு. இப்பெயர் மருவியது சுவையான மாற்றமாகும். முற்காலத்து அரண்மனைகளில் ஒவ்வொரு வேளையும் அரசர் சாப்பிடுமுன் அவருக்காகச் சமைக்கப்பட்ட உணவு வகைகள் நச்சுத்தன்மை இன்றி உள்ளதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதுண்டு. அச்சோதனை, அவ்வரண்மனையில் நியமிக்கப்பட்ட இரு (சாப்பாட்டு ராமர்) ஆடவர்களை உண்ண வைத்து மேற்கொள்ளப்படும். சாப்பிட்டபின் அவர்களுக்கு விபரீதம் ஏதும் நேரவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அவ்வுணவு வகைகள் அரசருக்குப் பரிமாறப்படும். அவ்வாறு சோதனைக்காகச் சாப்பிட்டுக் காட்டுபவர்களுக்கு "உண்டு காட்டிகள்' என்று பெயர். இத்தகைய "உண்டு காட்டி' என்ற பெயரே பிற்காலத்தில் "தண்டச்சோறு' என்றும் வழங்கலாயிற்று. கோயில்களில் வழங்கப்படும் கோயில் பணியாளர்களுக்கான உணவுத் தொகுதியும் "உண்டக்கட்டி' எனப்பட்டது.

நுண்பொருட்பேறு

ஒரு காலத்தில் பருப்பொருளை உணர்த்திய சொற்கள் பிற்காலத்தில் நுண் பொருளை உணர்த்துமானால் அந்நிலை நுண்பொருட்பேறு ஆகும். "தலை' என்று ஓர் உறுப்பைத் தெரிவித்த அச்சொல், பிற்காலத்தில் "தலைமை' என்ற பொருளையும் - அதாவது நுண்பொருளையும் உணர்த்தியமை குறிக்கத்தக்கது. அதேபோன்று, "இடுப்பு' என்பதை உணர்த்திய "அரை' என்ற சொல், "பாதி' என்னும் நுண்பொருளையும் உணர்த்த உயர்ந்தமை இதற்குச் சான்றாகும். மாவுப் பொருளைக் குறிக்கும் "தூள்' என்ற சொல் சிறப்பு எனப் பொருள்தரும் "தூள்' என்றானது நவீன காலத்தில்தான்.

பருப்பொருட்பேறு

நுண்பொருளை உணர்த்திய சொற்கள், பின்னாளில் பருப்பொருளை உணர்த்துமானால் அது பருப்பொருட்பேறு ஆகும். "மனம்' என்ற நுண்பொருள் "உள்ளே' அல்லது "அகம்' என்ற பருப்பொருளையும், "புறம்பானது' என்பதைக் குறித்த "புறம்' என்ற சொல், "வெளியே' என்ற பொருளையும் பருப்பொருட்பேறு பெற்றமை குறிக்கத்தக்கது. எனவே, சொற்பொருள் மாற்றம் என்பது தவிர்க்கவியலாத ஒன்றாகிறது.

தமிழில் உள்ள சொற்களின் பொருளை உணர்ந்து படித்தால், தமிழ்மொழியின்மீது எல்லோருக்கும் பற்றுவரும். தமிழ் "என்றுமுள தென்றமிழாய்' இனிக்கும். எனவே, மொழித்தூய்மை பேணுவோம். தமிழ்த்தாயைக் காப்போம்.


நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: