விஞ்ஞானத்துக்கோ, தர்க்கத்துக்கோ அப்பாற்பட்ட பல நம்பிக்கைகள் - சகுனம் பார்த்தல், குறிகேட்டல், இடதுகண் துடித்தல், பல்லி சப்தம் போன்றவை மக்களை இயக்குகின்றன என்பது மறுக்க இயலாத உண்மை.
கம்பராமாயணத்தில் ஒரு காட்சி. அசோகவனத்தில் வருத்தத்துடன் இருந்த சீதையைப் பார்த்து ராவணன் பணியுமாறு மிரட்டிவிட்டு, ""இவளை எப்படியாவது என் வசப்படுத்து'' என்று திரிசடையிடம்
ஆணையிட்டுச் செல்கிறான். அப்போது சீதைக்கு இடது கண் துடிக்கிறது. சீதை மனம் நடுங்கி, உடல் தளர்ந்து திரிசடையிடம் தன் வருத்தத்தைக் கூறுகிறாள்.
""முனியொடு மிதிலையில் முதல்வன் முந்துநாள்
துனி அறு புருவமும் தோளும் நாட்டமும்
இனியன துடித்தன; ஈண்டும் ஆண்டு என
நனி துடிக்கின்றன; ஆய்ந்து நல்குவாய்'' (5101)
ராமரை முதலில் பார்ப்பதற்கு முன்தினம் சீதைக்கு இதேபோல் இடது கண் துடித்ததாம். திரிசடை சீதைக்கு இவ்வாறு ஆறுதல் கூறித் தேற்றுகிறாள்.
""ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்;
தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம்; என்
வாயது கேள்' என மறித்துக் கூறுவாள்'' (5100)
வீட்டில் பல்லியின் சப்தம் கேட்டாலே அது ஏதோ செய்தியை அல்லது
வருங்கால நிகழ்வை உணர்த்துகிறது என்பது மற்றொரு நம்பிக்கை.
தலைவனைப் பிரிந்த தலைவி, மாலை நேரத்தில் வீட்டில் சோர்ந்து கிடக்கையில் எங்கோ ஒரு பல்லியின் சப்தம் ஒலிக்கிறது. அதைக்கேட்டு தலைவி திடுக்கிட்டு, ஒலி வந்த திசையை நோக்கித் தொழுகிறாள். ""என் தலைவன் குறித்து நல்ல செய்தியாகச் சொல்'' என நடுங்கி வேண்டுகிறாள்.
அகநானூற்றுப் பாடல் ஒன்று இதைத் தெரிவிக்கிறது.
""மையல் கொண்ட மதனழி இருக்கையள்
பகுவாய்ப் பல்லி படுதோறும் பரவி,
நல்ல கூறு என நடுங்கிப்
புல்லென் மாலையொடு பெருங்கால் தானே''
பல்லி இந்த திசையில் ஒலித்தால், நன்மை என்றும், வேறு திசையில் வேறு விதமாக ஒலி எழுப்பினால் தீமை என்றும் பழந்தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் என்ற அத்வைத ஞானி பல நூல்களை இயற்றியுள்ளார். ஆண்டாளின் பாடலை அடியொற்றி (கனாக் கண்டேன் தோழி) "பல்லிப் பாட்டு' பாடியிருக்கிறார்.
""ஓடும் மனம் நம்மினுடன் உறவு செய்யுமாகில்
உள்ள நிலை மெல்ல உணர்வாகி வருமாகில்
நாடும் இடம் எங்கும் அறிவாகி விடுமாகி,
நல்ல குரல் நல்ல திசை சொல்லு சிறுபல்லி''
சின்னச் சின்ன ஊர்களில், கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இதுபோன்ற சில நம்பிக்கைகள் ஓர் உந்து சக்தியாக இருக்கின்றன. குறிப்பாக தன் குழந்தைக்கு ஏதேனும் ஊறு நேராமலிருக்க வேண்டுமே என்று அச்சமடையும்போது மக்கள் சில நம்பிக்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். இதை நெல்லை மாவட்ட நாட்டுப்புறப் பாடல் ஒன்று எளிமையாக
விளக்குகிறது.
இதேபோல பிறந்த குழந்தையின் அழகைக்கண்டு ரசித்து விட்டால், அதற்கு நோய் வருமென்று தாய்மார்கள் நம்புகிறார்கள். காது குத்தினால், ஆயுளுக்குப் பாதுகாப்பு என நம்புகிறாளாம் தாய். இந்த நம்பிக்கை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மத்திய ஆசியாவிலும் மற்றும் உலகெங்குமே இருக்கிறதாம். இதை நா.வானமாமலையின் நாட்டுப்புறப் பாடல் மூலம் படித்து மகிழலாம்.
மேற்சொன்ன இடதுகண் துடிப்பது, பல்லி சொல்வது, சகுனம் பார்ப்பது போன்றவைகளில் சிலருக்கு இன்றுவரை நம்பிக்கை இருந்து வருவதை மாற்றமுடியவில்லை.
நன்றி - தமிழ்மணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக