06/03/2012

மை பூசும் மகளிர் பொய்யும் பேசுவரோ?

களவொழுக்கத்தில் பல்வேறு இடையூறுகளால் தலைவி தலைவனைக் காணாமல் ஆற்றாமை உடையவளாய் விளங்கினாள். அவளது வருத்தத்தைக் கண்ட செவிலித்தாய், பெரிதும் வருந்தித் தோழியை நோக்கி, தலைவியின் உடல் வேறுபாட்டுக்குக் காரணம் யாது என அறிவாயோ? என வினவுகிறாள்.

தோழி விடை கூறுகிறாள். ""உன் மகள் பாலும் உண்ணாள், பழமும் வேண்டாள். பசலை நோயால் துன்பமுறுகிறாள். அநேகமாக அதற்கு இதுவே காரணமாக இருக்கும். என்னவென்றால், ஒரு நாள் உன் மகள் தோழியருடன் மலர்கள் நிறைந்த மலைச்சாரலில் மலர் கொய்யச் சென்றாள்.


உயர்ந்து வளர்ந்து தழைத்த கிளைகளுடைய வேங்கையின் மலர்களைக் கண்டு, அவற்றைக் கொய்ய வேண்டுமென்று விரும்பினாள். ஆனால், அம்மரத்தின் மீது அவளால் ஏற முடியாதல்லா? ஆனால், வேங்கை மலர்களோ அவளுடைய ஆவலைத் தூண்டின.

அந்நிலையில் அவளுக்குத் திடீரென்று ஓர் எண்ணம் தோன்றியது. உடனே, அச்சம் கொண்டவள் போல், ""புலி புலி'' என்று உரத்த குரல் எழுப்பினாள். அவளது குரல் கேட்ட கானவன் ஒருவன் கையில் வில்லும் கணையும் கொண்டு விரைந்து வந்து, ""எங்கே புலி? அப்புலி சென்ற வழி யாது?'' என வினவினான். அவளோ, வேங்கை மரத்திலுள்ள பூக்களைச் சுட்டிக் காட்டியவாறு நாணி நின்றாள்.

அவள் வேங்கை மலர் பறிப்பதற்காகப் பொய் கூறியுள்ளாள் என்பதை உணர்ந்துகொண்ட  அவன், ""நீங்களும் பொய் பேசுவீர்களோ?'' என்று கூறியவாறு, வேங்கை மரத்தில் ஏறி, அதன் கிளையை வளைத்துக் கொடுத்து, வேண்டிய பூக்களைக் கொய்து கொள்ளச் செய்தான். மலர் கொய்யச் சென்ற உன் மகளின் மனம் கொய்து சென்றுவிட்டான் போலும் அந்த வேடுவன்.

மலைநாட்டுக்குரிய அவன், குதிரைகளின் வேகத்தை அடக்கி மெல்லெனச் செலுத்தும் தேரில் அமர்ந்து, உன் மகளின் மையுண்ட கண்கள் அவனை நோக்குங்கால் தான் நோக்காது இருந்தும், அவள் நோக்காமல் நிலத்தை நோக்குங்கால் தான் நோக்கியும் இங்ஙனம் ஒருவரையொருவர் மாறிமாறிப் பலமுறை நோக்கியபின் செல்லலாயினர்.

அவன் மறைந்திடும் திசையை நோக்கி, ""தோழியே, இவன் ஓர் ஆடவன்'' என்று ஒன்றும் அறியாதவள்போல் கூறினாள். இதனையன்றி வேறு ஏதும் காரணம் நான் அறியேன்; ஆராய்ந்து பார்ப்பதற்கு அதில் அறிந்து கொள்ளக்கூடிய செய்தி ஏதாவது  இருக்கலாம்'' என்றாள் தோழி.

""மலிபூஞ் சாரல், என் தோழிமாரோடு
ஒலிசினை, வேங்கை கொய்குவம் சென்றுழி
"புலி புலி' என்னும் பூசல் தோன்ற-
ஒண் செங்கழுநீர்க் கண்போல் ஆய் இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்
குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி
வரிபுனை வில்லன், ஒரு கணை தெரிந்துகொண்டு
"யாதோ, மற்று அம் மா திறம் படர்?' என
வினவி நிற்றந்தோனே அவற் கண்டு
எம்முள் எம்முள் மெய் மறைபு ஒடுங்கி
நாணி நின்றெனமாக பேணி
"ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல்
மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய்ப்
பொய்யும் உளவோ' என்றனன்''
(அகநானூறு.பா.48:5-19)

மை பூசும் மகளிர், பொய்யும் பேசுவார்களோ? என்ற தலைவனின் வியப்பு, இந்த அகநானூற்றுப் பாடலின் சிறப்பு!

கருத்துகள் இல்லை: