28/03/2012

யாரும் இழுக்காமல் தானாக... - வண்ணதாசன்

சொப்பனத்தில் அப்பா வந்திருக்கிறார்.

எழுந்திருக்கும்போதே நீலாவுக்குச் சந்தோஷமாக இருந்தது.

பச்சைக் கட்டம் போட்ட போர்வையை ஒரு தடவை கசக்கினாற்போலப் பிடித்து, முகத்தோடு ஒத்திக்கொண்டாள். பட்டாசலில் கிடக்கிற அப்பா போட்டோவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.

அப்பாவுக்கு ஜெமினி கணேசன் மாதிரி ஜாடை. ஜாடை என்றால் மூக்கு, முழி எல்லாம் இல்லை. சுருட்டை சுருட்டையாகத் தலைமுடி அப்படி. மீசையை வைத்திருப்பதும் வட்டக் கழுத்து ஜிப்பா போடுவதும் அப்படி. அம்மாவின் தோளைப் பிடித்துக்கொண்டு அப்பா நிலாவைப் பார்க்கிறது மாதிரியான பக்கவாட்டுப் புகைப்படம் ஒன்று உண்டு. ரொம்ப அழகாக இருக்கும். ஸ்டுடியோக்காரர் வரைந்த ஜன்னல் திரையும் முழு நிலவும் நிஜம் மாதிரி தெரியும்.

அம்மா அதைக் கழற்றிவைத்துவிட்டாள். 'எங்களைப் பார்க்கவே ஆளைக் காணோம். நிலா பார்க்கிறது ஒண்ணுதான் குறைச்சல்' என்று அம்மா அதை டிரங்குப் பெட்டியில் வைத்த நாள் ஞாபகம் இருக்கிறது. சேலை முந்தானை அப்போதும் கண்ணாடி தூசியைத் துடைத்துக்கொண்டுதான் இருந்தது.

'அதை'த் தூக்கித் தூரப் போடுதியா இல்லையா?' என்று மந்திரத்து மாமா சந்தம் போட்டானே தவிர, அவனுக்கும் அழுகைதான் வந்தது.

மாமாவும் அப்பாவும்தான் ஜோடி. எங்கே போனாலும் ஒன்றாகப் போவார்கள்; வருவார்கள். சொல்லப்போனால், கொஞ்சம் இப்படி அப்படியாக அலைந்தது எல்லாம் இரண்டு பேரும் சேர்ந்துதான். குற்றாலம் சீஸனை ஒட்டி, கொஞ்ச நாள் யார்கூடவோ அப்பா குடித்தனம் நடத்தியபோது மந்திர மாமாவுக்கும் தெரியும் என்று சொல்வார்கள். '... நீ பேசாதடே. கூட்டுக் களவாணித்தனம் பண்ணிட்டு வந்துட்டு யோக்கியன் போலப் பேசுதான்' என்று முருகையா தாத்தா திட்டிய சமயம், மந்திரத்து மாமாவுடன் அப்பா ஒரு சிவப்புத் துண்டைத் தலையில் முறுக்கிக் கட்டிக்கொண்டு பேசாமல் நின்றிருக்கிறார்.

'ஏதாவது தகவல் உண்டா?' என்று மாமா வந்து அம்மாவிடம் கேட்கும்போது, 'நீயில்லா எனக்குச் சொல்லணும். அதை விட்டுட்டு என்கிட்டே தகவல் கேட்டா எப்படி?' என்று வாரியலை உள்ளங்கையில் தட்டி, மறுபடியும் அம்மா குனிந்து பெருக்க ஆரம்பிப்பாள்.

அம்மாவுக்குச் சுத்தம் முக்கியம். அடுப்படியில் ஈருள்ளித் தொலியோ, தேங்காய் நாரோ,வெண்டைக் காய் காம்போ கிடக்காது. பீரோவில் இருக்கிறதும் சரி... கொடியில் கிடக்கிறதும் சரி... ஒவ்வொரு உருப்படியும் பெட்டி போட்டுத் தேய்த்தது மாதிரி இருக்கும். விளக்குக்கு முன்னால் போட்ட கோலத் தைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விடலாம். 'எப்படி மூதி. இதை அழிச்சிட்டு இன்னொண்ணு போட மனசு வருது?' என்று சாலா பெரியம்மை, அம்மாவின் கையில் கிடக்கிற ரப்பர் வளையல்களை ஒதுக்கிக்கொண்டே தலைமுடியை நீவிவிடுவாள். கை தலையில் இருந்து பிடரி, முதுகு, இடுப்பு என்று தடவி இறங்கும்போது அம்மாவுக்கு சொடுக்கும். கோலப்பொடி மினுங்கலைப் பார்த்துக் குனிந்தபடி சற்று அப்படியே இருப்பாள்.

'எங்கேயிருந்து புடிச்சுக்கிட்டு வந்தாங்க உன்னை?' என்று சாலா பெரியம்மை லேசாக அம்மா மீது சரியும்போது, அம்மா விலகுவாள். 'இங்கே என்ன, இன்னொரு பூனைக்குட்டி உட்கார்ந்துக்கிட்டிருக்கு' என்று பெரியம்மை அப்போது தன்னுடைய கன்னத்தைக் கிள்ளியது நீலாவுக்கு ஞாபகம் வந்தது. நீலா கன்னத்தைத் தடவிக்கொண்டாள்.

அப்பா இப்படியெல்லாம் கன்னத்தைக் கிள்ளியது இல்லை. இந்த 10 வருஷங்களாக அப்பாவைக் காணோம். அதற்கு முந்திகூட அப்பா கொஞ்சினதாக ஞாபகம் இல்லை. அப்பா கொஞ்ச மாட்டார். அவர் பிரியம் வேறு மாதிரி. பொம்மையும் சாமானுமாக வாங்கிக்கொண்டு குவிப்பார். அம்பாசமுத்திரத்துக்கு ஏதோ ஒரு ஜோலியாகப் போனவர், ஒரு மரக் குதிரையை வாங்கி வந்து, மறுநாள் பூராவும் நீலாவை அதில் வைத்து ஆட்டினார். கடைக்குக்கூடப் போகவில்லை. 'வேலை என்றைக்கும் இருக்கு' என்று அப்பா சொல்லும்போது, அம்மாவுக்கு என்ன சொல்ல முடியும்?

ஓங்கிக் குட்டப்போவது போல வந்து, பட்டும் படாமல் அப்பா தலையில் விரல் கணுவை அழுத்திவிட்டு, 'இரண்டு பேருக்கும் வந்திருக்கிற பவுசு' என்று சொல்லியபடி அம்மியைக் கழுவிவிடுவாள். தண்ணீர் விழ விழ, கன்னங்கரேர் என்று குழவிக் கல் மினுங்கும். 'அபிஷேகம் பண்ணுற மாதிரி இருக்கு!' அப்பா இங்கே இருந்து சொல்வார். அப்புறம் எப்படி அப்பாவுக்கு அந்த அம்மிக் கல்லை, மரக் குதிரையை, மூணு கால் சைக்கிளை, அம்மாவை, என்னை எல்லாம் விட்டுவிட்டுப் போக முடிந்தது என்று நீலாவுக்குத் தோன்றும்.

மந்திரத்து மாமா செத்ததுக்குக் கண்டிப்பாக அப்பா வந்துவிடுவார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். 'பேப்பர் படிக்காமலா இருப்பான்? போட்டோவைப் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா? காசியில இருந்துன்னாலும் ஓடியாந்திர மாட்டானா என்ன?' என்று சொல்லி, முழுதாக ஒருநாள் தாண்டி மறுநாள் ரயில் வரும் வரை போட்டிருந்தார்கள். கட்டத்தலத்தில் எரு எல்லாம் அடுக்கின கிருஷ்ணன், 'கொஞ்சம் பொறுத்துப் பாக்கலாம்யா. எப்படியும் முகம் முழிக்கவாவது ஐயா வந்திரும்னு தோணுது. ஒண்ணா கழுத்தைக் கட்டிட்டு அலைஞ்ச உசுரு' என்று சொல்லித் தாக்காட்டினதைச் சொல்லி, 'அவனுக்குத் தெரிஞ்ச அருமைகூட இந்தக் கிறுக்கனுக்குத் தெரியாமப்போச்சே' என்று அப்பாவைப்பற்றி பாவூர்த் தாத்தா வருத்தப்பட்டது உண்டு.

அம்மா யார் என்ன சொன்னாலும் ஒன்றும் சொல்வதில்லை. பேசாமல் கேட்டுக்கொண்டாள். ஐந்து மாதம், ஆறு மாதம் சத்தமில்லாமல் நடமாடிக்கொண்டு இருந்தாள். 'இப்படி நீ... கீ கொடுத்த பொம்மை மாதிரி எதுலேயும் பட்டுக்கிடாமல் இருந்தால் எப்படி?' என்று யாராவது கேட்பார்கள்.

'மனுஷி இல்லை... பொம்மைன்னு தீர்மானம் பண்ணியாச்சு. அப்புறம் எங்கே பட்டுக்கிடறதும் தொட்டுக்கிடறதும்'-அம்மா தையல் மெஷினுக்கு அங்கங்கே சொட்டுச் சொட்டாக எண்ணெய்விட்டுக்கொண்டே சொல்வாள். வட்டம் அமுங்கி நாசி வழியாக எண்ணெய் இறங்குகையில் டொப் டொப் என்று கேட்கிற தகரச் சத்தம் நீலாவுக்குப் பிடிக்கும்.

நீலா படுக்கையில் இருந்து எழுந்திருந்தபடியே அந்தச் சத்தத்தை இன்றைக்கும் கேட்பது போலக் கற்பனை செய்துகொண்டாள். நாக்கை மேல் அண்ணத்தில் ஒட்டி விலக்கிச் சத்தம் உண்டாக்கினாள். சிரிப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. சொப்பனத்தில் அப்பா வந்த சந்தோஷம் மாதிரி, இது இன்னொரு சந்தோஷம். இத்தனை வருஷத்துக்கு அப்புறம் முதல் தடவையாகக் கனவில் வருகிறவர், தான் மட்டும் வரலாம் இல்லையா. இதில் சபாபதி எங்கே வந்தான்?

சபாபதியை அப்பா பார்த்திருக்கவே முடியாது. சபாபதியைத் தான் பார்த்ததே ஆரெம்கேவி புதுக் கடைக்கு வேலைக்குப் போன பிறகுதான். அதற்கு எத்தனையோ வருஷத்துக்கு முந்தியே அப்பா கண் காணாமல் போயாயிற்று. திருவிழாக் கூட்டத்தில் தொலைந்தது போல, ஆள் இருக்கிறதும் இல்லாததும் இன்றைக்கு வரைக்கும் பிடிபடவில்லை.

சொப்பனத்தில் அப்பா வந்ததுகூடத் திருவிழா சமயம் மாதிரிதான் தெரிகிறது. கசகச என்று நெரிகிற கூட்டம். தேரோட்டம்தான் போல. ஆனித் திருவிழாத் தேர் இல்லை. ஏதோ வடக்கத்தித் தேர். பாயும் குதிரை, வாழைமரம், நகரா, நெல்லையப்பர் எல்லாம் இல்லாமல் வேறு மாதிரி இருக்கிறது. வெள்ளை சாக்பீஸ் மாதிரி, குழல் விளக்கு மாதிரி தூண் தூணாக அசைகிறது. யாரும் இழுக்காமல் தானாக நகர்ந்து வருகிற மாதிரி இருக்கிறது. அப்பா கையிலும் சபாபதி கையிலும் மயிலிறகு விசிறி இருக்கிறது. விசிறிக்கொண்டே நடக்கிறார்கள்.

முன்னே பின்னே பார்த்திருக்காத சபாபதியுடன் அப்பாவுக்கு அப்படி என்ன சிரித்துச் சிரித்துப் பேசுவதற்கு இருக்கும் என்று தெரியவில்லை. சொல்ல முடியாது. 'நீலாவைக் கட்டிக்கிடலாம்னு நினைக்கேன். என்ன சொல்லுதீங்க?' என்று சபாபதி அப்பாவிடம் கேட்டாலும் கேட்டு இருப்பான். அப்படிக் கேட்கக்கூடியவன்தான். 'உனக்குத் தைரியம் இல்லைன்னா சொல்லு... உங்க அம்மைகிட்டே நான் வேணும்னா கேட்கேன். இதுக்கு என்ன பயம் வேண்டிக்கிடக்கு?' என்று நீலாவிடம் சபாபதி ஏற்கெனவே சொல்லியிருக்கிறான்.

அப்படியே சபாபதி அப்பாவைக் கேட்டு இருப்பான் என்றாலும், அதற்கு அப்பா கோபம்தானேபட்டிருப்பார். இப்படிச் சிரிக்கவா செய்வார்?

நீலாவுக்கு இப்போது ஒரு சந்தேகம் வந்தது. சொப்பனத்தில் தேர் வந்தால் நல்லதா, கெட்டதா? இழுக்கிற தேர் இல்லை. தானாக நகர்கிற தேர். அம்மாவிடம் தேரைப்பற்றிச் சொல்ல வேண்டுமா, கூடாதா? ஒன்றைப்பற்றிச் சொல்லும்போது அடுத்ததை எப்படிச் சொல்லாமல்விட? எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்று கணக்கா என்ன? அப்பா வந்ததைச் சொல்லும்போது சபாபதி வந்ததைச் சொல்லாமல்விட்டால், அம்மாவுக்கு என்ன தெரியவா போகிறது?

அம்மாவுக்கு ஏற்கெனவே கொஞ்சம் தெரிந்துதான் இருந்தது. எப்படி இந்தக் கல்லத்தி முடுக்குத் தெருவுக்குள் இருந்துகொண்டே அம்மா எல்லாவற்றையும் தெரிந்துகொள்கிறாளோ? போஸ்ட் ஆபீஸில் போட்டால் பேங்கில் போடுவதைவிட வட்டி எவ்வளவு கூடுதல் என்று தெரிகிறது. ரேஷன் கடையில் துவரம் பருப்பு என்றைக்குப் போடுவார்கள் என்பதைச் சொல்கிறாள். 'பை பாஸ் ரோட்டில் பாலம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்களாம். இத்தனை கோடியில யார் யார் பைக்கு எவ்வளவு போகுதோ?' என்கிற கணக்கையும், 'அந்த கம்ப்யூட்டர் கம்பெனிக்காரன் எல்லாத்தையும் ஏமாத்தினதும் இல்லாம, எத்தனையோ பேர் வேலையையும் தொலைச்சு வெளியே அனுப்பிட்டானாமில்லே' என்ற வருத்தத்தையும் அம்மா பேச்சோடு பேச்சாகப் பகிர்ந்துகொள்கிறாள்.

இன்றைக்கு ஒருநாள் ராத்திரி இப்படித்தான். சாப்பாடு வைக்கிற நேரம். குழம்பு ஊற்றி நீலா சாப்பிட்டு முடிக்கிற வரை ஒன்றும் சொல்லவில்லை. 'காய் வைக்கட்டுமா?' என்று பையக் கேட்கிறபோது அம்மாவின் பார்வை மொத்தமாக நீலாவின் முகத்தில் இருக்கிறது. 'என்ன தட்டு முன்னால உட்கார்ந்து கொறிச்சுக்கிட்டு இருக்கே? ஆள் சரி இல்லையே, என்ன விஷயம்?' என்று அம்மா கேட்கும்போதுகூட நீலா பெரிதாக ஒன்றும் நினைக்கவில்லை.

'அது என்னது? ஊக்கும் கறுப்பு ரிப்பனும்? ரெண்டு நாளா மேஜையில கிடக்கு?' - இதைக் கேட்டுக்கொண்டே சாதம் வைத்தாள். 'சேர்த்துப் பிசை' என்று மோர் ஊற்றினாள். 'எலுமிச்சங்காய் ஒரு துண்டு போடவா?' என்று கரண்டிக் காம்பினால் ஊறுகாய் ஜாடியைக் கிளறினாள். கடைசியாகத்தான், 'அது யாருடி சபாபதி?' என்று கேட்டாள்.

நீலா அன்றைக்குத்தான்அம்மா விடம் சபாபதியைப்பற்றிச் சொன்னாள். சபாபதியைப்பற்றிக்கூட அல்ல. முத்துக்குமார் தீக்குக்குளித்தது பற்றியும், சபாபதி கொடுத்துப் படிக்கச் சொன்ன முத்துக்குமாரின் கடித நகலைப் பற்றியும், கறுப்பு ரிப்பனைப் பற்றியும் சொன்னாள். தட்டு, டம்ளரை எல்லாம் எடுத்து அங்கணக்குழியில் போட்டு முடித்துவிட்டு, நீலாவைப் பார்க்காமல் 'நானும் படிச்சேன்' என்று அம்மா சொன்னாள். கொஞ்ச நேரம் அம்மா, நீலா இரண்டு பேருமே எதுவும் பேசவில்லை.

இந்த வீட்டில் வெளிச் சத்தம் வராமல் எல்லா ஜன்னலையும் அடைத்தது போல இருந்தது. படக் காலண்டர் தொங்கும் இந்த சுவர், டேபிள் ஃபேன், மண்பானைக்குப் பின்னால் வளர்கிற மஞ்சள் கிழங்கு, அடுக்களைச் சருவச் சட்டியில் வைத்திருக்கிற வாழைப் பூ எல்லாம் காணாமல் போய்விட்ட மாதிரி இருந்தது.

அம்மா மூக்கை உறிஞ்சுவது கேட்டது.

கறுப்பு ரிப்பனைத் தன் ஆள் காட்டி விரலில் சுற்றியும் தளர்த்தியும் நிற்கிற நீலாவிடம் கண்ணைத் துடைத்துக்கொண்டே அம்மா வந்து, 'அந்தப் பையன் சபாபதிக்கு எந்த ஊருடி?' என்றாள்.

'தெரியாதும்மா' என்ற நீலாவிடம் 'தெரிஞ்சுக்கிடணும்' என்று சொன்னாள்.

சாதாரணமாகச் சொன்ன மாதிரிதான் இருந்தது. எது எல்லாம் முக்கியமானதோ அதை எல்லாம்பற்றி இப்படிச் சாதாரணமாகச் சொல்ல அம்மா பழகி இருந்தாள். மற்றவைக்கு ஏழெட்டு வார்த்தைகள் என்றால், இதற்கு இரண்டே இரண்டு மட்டும். சில சமயம் அதுவே அதிகம் என்பது போல அம்மா கையைப் பிடிப்பாள். தோளைத் தடவுவாள். அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போய்விடுவாள்.

இன்றைக்கு அம்மா எங்கே போனாள் என்று நீலாவுக்குத் தெரியவில்லை. வாயில் பிரஷ்ஷை வைத்துக்கொண்டே அடுப்படிக்குள் எட்டிப் பார்த்தாள். காபி கொதித்துக்கொண்டு இருந்தது. மரப்பொடி அடுப்பு இருக்கும்போதும் சரி, இப்போதும் சரி, அம்மாவுக்கு இந்த வெங்கல உருளியில்தான் காபி கொதிக்க வைக்க வேண்டும்.

'சட்டி சூடாகிறதுக்கே பத்து நிமிஷம் ஆகும்'மா என்று நீலா சொல்லிஇருக்கிறாள்.

அம்மா உடனடியாக அதற்குப் பதில் சொல்வது இல்லை. எல்லா பாத்திரத்தையும் கழுவிக் காயவைத்து உள்ளே அடுக்கும்போது, 'நீலா, இங்கே வந்துட்டுப் போ' என்றாள். அம்மா கையில் அந்த உருளி இருந்தது. நீலா முகத்துக்குப் பக்கம் அதை உயர்த்தி 'இதைப் பாரு' என்றாள்.

காட்டின இடத்தில், '.தெ' என்று பெயர் வெட்டியிருந்தது. 'எங்க அம்மையோட அம்மை பேரு' என்று சொன்னதோடு சரி. மேற்கொண்டு எந்தப் பேச்சும் கிடையாது.

அம்மாவை நினைத்து நீலா சிரித்துக்கொண்டாள். கன்னம் ஒதுங்கியதில் பிரஷ் பிடி வழியாக பற்பசை வழிந்து சொட்டியது. காபி கொதிக்கிற வாசனையும் பற்பசை வாசனையுமாக நீலா கண்ணாடி தொங்குகிற இடத்துக்குப் போய் முகத்தைப் பார்த்தாள். வெளிச்சம் போதாது. முகம் சரியாகத் தெரியவில்லை. வேறு என்னென்னவோ தெரிந்ததற்கு மத்தியில் தன்னுடைய முகத்தை யூகித்துக்கொண்டாள். தன் முகத்துக்குப் பின்னால் சொப்பனத்தில் வந்த அப்பா முகம், சபாபதி முகம் எல்லாம் தெரிகிறதா என்று உற்றுப் பார்த்தாள். எதுவும் தெரியாவிட்டாலும் எல்லோரும் தெரிவதாக நினைத்துக்கொண்டாள்.

'எங்கே போனா அம்மா?' - நீலா அங்கணத்தில் முகம்கழுவும் போது, சுற்றிப் பதித்திருந்த பட்டியல் கல்லின் குளிர்ச்சியில் கொஞ்ச நேரம் நின்றாள். ஜன்னல் வலையில் தொங்கி அசைந்த பனங்கிழங்கு நாரை தெருப் பக்கம் தள்ளிவிட்டாள். கைவிரல் அப்பின வலைத் துருவைப் பார்க்கப் பிடித்தது அவளுக்கு.

ஏதோ பச்சை வாசம் வந்தது. விறகு வெட்டுகிற வாசம் இல்லை. மரம் முறிந்துகிடக்கிற வாசனை. இலை ஒடிந்த ஈரமும், நசுங்குகிற இலை தழையும் உண்டாக்குகிற வாசனை.

நீலா இன்னொரு ஜன்னல் கதவையும் திறந்து எட்டிப் பார்த்தாள். எதிர்த்த வளவில், கண்ணாடிச் சில் குத்தின சுவர்ப்பக்கம் சாய்ந்து வளர்ந்திருத முருங்கை மரம் அப்படியே ஒடிந்து தெருவில் கிடந்தது. ராத்திரி மழை தாங்கவில்லை போல. சைக்கிள் போகலாம். ஒரு ஆள் ஒருச்சாய்ந்து இந்தப் பக்கத்துச் சுவரோடு சுவராக நடக்கலாம். அவ்வளவுதான் இடம். மீதி பூராவும் பூவும் பிஞ்சும் இலையும்.

எல்லோரும் ஒரு மாதிரியாக சந்தோஷத்தில் இருந்தார்கள். முக்கியமாக எதிர்த்த வீட்டு சுப்பக்கா முகத்தை இப்படிப் பார்த்தது இல்லை. அப்போதுதான் தாலி கட்டி முடிந்தது போலவும், 'எல்லாரும் இருந்து சாப்பிட்டுவிட்டுப் போகணும். பந்தி போட்டாச்சு' என்று உபசாரம் செய்வது போல ஒவ்வொரு முகமும் இருந்தது.

எல்லோர் கையிலும் கொத்துக் கொத்தாக முருங்கைக் கீரை இருந்தது. நனைந்துகிடக்கிற தெரு. இன்னும் சரியாக வெயில் வராத ஓர் இடத்தில் நின்று அம்மாவும் காய்கறிக் கடை பாஸ்கரப் பெரியப்பாவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

பாஸ்கர பெரியப்பாவை, அம்மா 'பாசு அத்தான்' என்று தான் சொல்வாள். பெரியப்பா முதலில் சோடா கம்பெனி வைத்திருந்தாராம். கொஞ்ச நாள் வொர்க் ஷாப். அப்புறம் தையல் மெஷின் கடை. இப்போது காய்கறிக் கடை. 'ஒரு புத்தி நிலையா கிடையாது. அவனுக்கு எப்படி பொண்ணைக் கொடுக்க?' என்று அம்மாவைக் கொடுக்கவில்லையாம். அம்மா சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறாள். முன்னால் அடிக்கடி வந்து அப்பாவுடன் பேசிவிட்டுப் போவார். இப்போது வருகிறதே இல்லை. 'நான்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்' - அம்மா சொல்லும்போது நீலாவுக்கு என்னவோ மாதிரிதான் இருந்தது.

இன்றைக்கு எப்படி வந்தார் என்று தெரியவில்லை. சில சமயம் இப்படி ஆகும் போல. பாஸ்கரப் பெரியப்பாவும் அம்மாவும் இப்படிப் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்க்க நீலாவுக்கு நன்றாக இருந்தது. ஒரு கார் அல்லது கோயில் யானை இப்போது வந்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று நீலா நினைத்தாள்.

அம்மா சற்று அளவுக்கு அதிகமான முருங்கைக் கீரையை நெஞ்சோடு அணைத்தபடி வர, பெரியப்பா சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வீட்டைப் பார்க்க நகர்ந்து வருவது தெரிந்தது. பாஸ்கரப் பெரியப்பா கையில் இருந்து சாவிக்கொத்தோ எதுவோ கீழே விழுந்தது. அம்மா குனிந்து அதை எடுத்துக் கொடுத்தாள். ஏதோ ஒன்று கைதவறிக் கீழே விழுவதும் அதை இன்னொருவர் எடுத்துக் கொடுப்பதும் சாதாரண விஷயம்தான். ஆனால், ஒடிந்து விழுந்துகிடக்கிற முருங்கை மரமோ அல்லது முந்தின இரவு கண்ட சொப்பனமோ, ஏதோ ஒன்று அதை நீலாவுக்கு அபூர்வமானதாக்கிற்று.

'நீலா இன்னும் எழுந்திருக்கலை', 'காபி கொதிச்சிருக்கும்,' 'வீடு திறந்துகிடக்கு, பூட்டலை' என்று அம்மா ஏதாவது சொன்னாளோ என்னவோ, பாஸ்கரப் பெரியப்பா இந்த ஜன்னலை ஏறிட்டுப் பார்த்தார். ரொம்ப நாளைக்குப் பிறகு நீலாவைப் பார்க்கிற சிரிப்புடன் மீசை விரிந்தது. கையை உயரத் தூக்கி வீசி வீசி அசைத்தார்.

நீலா பதிலுக்கு அசைத்தாள். இரண்டு பேரும் வரும் வரை இங்கே ஜன்னலுக்குப் பக்கத்திலேயே நிற்பதா, வாசலுக்குப் போவதா என்று முடிவு செய்ய முடியாமல் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

சொப்பனத்தில் அப்பா கையிலும் சபாபதி கையிலும் இருந்த மயிலிறகு விசிறிகளை அம்மா கையிலும் பாஸ்கரப் பெரியப்பா கையிலும் கொடுத்தால் எப்படி இருக்கும் என்று அவளுக்குத் தோன்றியது.

நன்றி - விகடன்

கருத்துகள் இல்லை: