04/03/2012

தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை - மணி.மாறன்

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

 ""இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
 பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
 மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28)


 இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்களில் சேமித்து அவற்றைத் தக்க முறையில் பயன்படுத்தி, நாட்டை வளம்பெறச் செய்யும் மன்னன் இவன் என்பதாகும்.

 இதே போல மழை நீரைச் சேமித்து வைப்பதற்கு ஏற்ற நீர் நிலைகளை அமைப்பது ஒரு மன்னனின் தலையாய கடமை என்பதைப் புறநானூற்றுப் பாடலில்,

 ""நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
 தட்டோரம்ம இவன் தட்டோரே
 தள்ளாதோர் இவண் தள்ளாதோரே'' (புறம்-18,28-30)

என்று புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பார்த்துப் பாடியுள்ளார். இதன் பொருள், நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும்.

 ""அறையும் பொறையும் மணந்த தலைய
 எண்நாள் திங்கள் அணைய கொடுங்கரைத்
 தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ'' (புறம்.118)

எனக் குறிப்பிடுவதன் மூலம் ஏரி எந்த வடிவில் இருக்க வேண்டும் என்பதைப் புறநானூறு வழி அறிய முடிகிறது. ஏரிக்கரை நீளம் குறைவாகவும் ஆனால், அதிகநீர் கொள்ளளவு கொண்டதுமான அமைப்பு எட்டாம் பிறை வடிவில் ஏரி இருக்கும்போது ஏற்படும். இது ஏரி வடிவமைப்பில் மிகவும் சிக்கனமான வடிவமைப்பாகும்.

சிறுபஞ்ச மூலத்தில் குளம் அமைக்கும் முறை பற்றி காரியாசான் கூறியுள்ளார். அதில், பொதுக்கிணறு அமைத்தல், வரத்துக்கால், மதகுகள், மிகைநீர் வெளியேறும் கலிங்கு, தூம்பு போன்றவைகளை அமைப்பவர் சொர்க்கத்துக்குப் போவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில், நீர் வரும் வரத்துக்கால் நன்கு அமையாத குளம் இருப்பின் அதனால் பயன் குறையும் என்ற செய்தியை,

 ""வாய்நன் கமையாக் குளனும் வயிறாரத்
 தாய்முலை யுண்ணாக் குழவியும் சேய்மரபில்
 கல்விமாண் பில்லாத மாந்தரும் இம்மூவர்
 நல்குரவு சேரப்பட்டார்'' (83)


என்று, தாய்ப்பால் அருந்தாத குழந்தையும், கல்வி அற்ற நிலையில் உள்ளவர்களும் எப்படி சிறக்க முடியாதோ, அதுபோல் வாய் நன்கு அமையாத குளமும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிகுதியாக வரும் ஆற்று வெள்ளநீரை தம்முள் அடக்கிக் கொள்ளக்கூடிய பெரும் ஏரிகள் இருப்பது ஒரு நாட்டுக்குச் சிறப்புத் தரும் என்பதை, "யாறுள் அடங்குங் குளமுள வீறுசால்' என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் ஆறு உள் அடங்கும் குளம் என்ற சொற்றொடர், நீர் மேலாண்மைத் திறத்தின் ஒரு முக்கிய வெளிப்பாடாகும். பெரு வெள்ளம் ஏற்படும் காலங்களில் அந்நீரை உரிய முறையில் சேமித்து, நீர் இல்லாத காலங்களில் பயன்படுத்தக்கூடிய நிகழ்வை இச்சொற்றொடர் எடுத்துக்காட்டுகிறது. கண்மாய்களையும், குளங்களையும் காத்து நின்ற அதாவது, முறையாகப் பராமரித்த செய்தியை அகநானூற்றுப் பாடல்,

""பெருங்குளக் காவலன் போல
 அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே'' (25)
 என்கிறது. அதாவது, பனியிலும், மழையிலும், அடர்ந்த இருள் சூழ்ந்த நள்ளிரவிலும் ஏரியைக் காக்கும் காவலன்போல, குழந்தையைப் பாதுகாக்க அன்னை தன் தூக்கத்தை மறந்தாள் என்பது இப்பாடலின் பொருள். சிறு குழந்தையைத் தாயானவள் கண்ணை இமை காப்பதுபோல் காத்த செயலும், நீர் நிலைகளைக் காக்கும் செயலும் ஒன்றாகவே எண்ணப்பட்டு வந்துள்ளது.

பழந்தமிழ் நூல்களில் இத்தகு நீர்நிலைகளிலிருந்து மிகு நீரை வெளியேற்ற "கலிங்கு' என்ற அமைப்பை ஏற்படுத்தியிருந்தனர். இக்கலிங்கு குறித்த தகவல்கள் மிகுதியாக இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றன. இத்தகு தொழில் நுட்பம் நம் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.


மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான "அறவணர் தொழுத காதை' என்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

""பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
 இரும்பெரு நீத்தம் புகுவது போல
 அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
 உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்'' (1384-87)

 என்கிறார். "சுருங்கை' என்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள்.

 1,600 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் ஏரிகளிலும், குளங்களிலும் இருந்து நீர் வெளியேற்றும் மதகு அமைப்பு சுருங்கைகளாக இருந்தன. இந்த மதகு அமைப்பே "குமிழித்தூம்பு' என்பதாகும். பழந்தமிழர்களின் நீர் மேலாண்மைச் செயல்பாட்டில் இந்தக் "குமிழித்தூம்பு' அறிவியல் சார்ந்த மிக நுட்பமான, நேர்த்தியான பயன்பாடுடைய படைப்பாகும்.

இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை "கற்சிறை' எனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், "பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வெள்ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது' (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர்.

தமிழ் இலக்கியங்கள் சுட்டும் நீர் மேலாண்மைச் செய்திகள் ஏதோ கற்பனையான ஒன்று என்று யாரும் எண்ணிவிட முடியாது. அதில் கூறப்படும் செய்திகள், அறிவியல் சார்ந்தவையாக இருப்பதை கல்வெட்டுச் சான்றுகள் கொண்டு உறுதி செய்ய முடிகிறது. பழைய தொழில்நுட்பங்களுடன் புதியவைகளையும் இணைத்து நீரைச் சேமித்தால் எதிர்காலத்தில் கவலைப்படும் அவசியம் இருக்காது.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: